Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, June 25, 2026

பை (கவிதை) - ஜெயபாஸ்கரன்

பை - கவிஞர் ஜெயபாஸ்கரன்

கண்ணிமைக்கும் நேரத்தில் ,

என் கைப்பையைக் களவாடி கொண்டு போனவனைக் குறித்து கவலைப்படுகிறேன் நான்

யூகிக்க முடியாத ஏதோ ஒரு இடத்தில் வைத்து அதை பிரித்த அவன் 

எப்படியெல்லாம் குழம்பி இருப்பான்?

அவனையும் அழைக்கின்ற இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்களை என்ன செய்யப் போகிறான்?

கொடுத்த கடனை கேட்டு என்னை மிரட்டிக் கொண்டிருக்கும் மனோகரனின் கடிதத்திற்கு என்ன பதில் எழுத முடியும் அவனால்?

இப்போதைக்கு தர இயலாது என்பதற்கான எல்லா காரணங்களையும் மனோகரனுக்கு எழுதி அனுப்பி விட்டதை எப்படி அறிவான் அவன்?

அதை விடுங்கள்,

மதிப்புரைக்கு வந்திருந்த அந்த இரு நூல்களை பாராட்டித் தொலைப்பானா ஒரு வேளை?


எக்கேடோ  கெடட்டும்

இனி கைப்பையை களவு கொடுத்தது குறித்து எனக்கு ஒரு மகிழ்ச்சியும் அதை களவாடியது குறித்து அவனுக்கு ஒரு துயரமும் என்றைக்கும் எஞ்சி இருக்கும்

இனி அவன் எந்த பையை திருடினாலும் என் பையாக இருக்குமோ என அஞ்சுவான்.

*

Thanks to Yazhini

Visit : https://www.youtube.com/shorts/amXzT8CascI


Thursday, March 3, 2022

இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? - கே. சச்சிதானந்தன் கவிதை

கவிதை : கே. சச்சிதானந்தன்

(தமிழில் இரவிக்குமார் எம்.பி)

"அதிர்ஷ்டம் இல்லாதவர்களைக் கொல்வதற்காக தகுதி இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்டு நன்றி இல்லாதவர்களின் நலனுக்காக விருப்பமில்லாமல் இறந்து போனவர்கள் நாங்கள்" - வியட்நாம் யுத்தத்தில் இறந்துபோன அமெரிக்க வீரர் ஒருவரின் கல்லறையில் எழுதப்பட்டிருந்த வாசகம் எனது கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது எதிரியின் ரத்தம் என்கிறது நாடு அது மனிதனின் ரத்தம் என்கிறேன் நான் அவன் வீழ்ந்தது இப்போதும் எனது பார்வையை விரட்டிக் கொண்டே இருக்கிறது நான் அவனைத் தழுவிக் கொள்ள விரும்பினேன் அவனது குடும்பத்தைப் பற்றி குழந்தைகளைப் பற்றி கேட்க விரும்பினேன் ஆனால் அவனைப் பற்றி எனக்குள் பயம் அதுபோலவே என்னைப்பற்றி அவனுக்குள்ளும் பயம் இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? எல்லைக்கோடுகளை உருவாக்கியவர்கள். அவர்களே நமது மெய்யான எதிரிகள். நான் அவனது உறவினர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் குழந்தைகளின் முன்னால் மண்டியிடுகிறேன் அவனைச் சுடுவதற்கு முன் அவனது கண்களைப் பார்த்தேன் அதில் குரூரம் தென்பட்டிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் நான் பார்த்தது தோழமை, துயரம், கருணை அவன் விழுந்து கிடந்த போது மார்பின் மேல் கைகளை வைத்துக் கொண்டு எதை நினைவு கூர்ந்திருப்பான்? பள்ளிக்குச் செல்லும் வழியில் பறித்துத் தின்ற புளியம் பழங்களையா? இளமைப் பருவத்தில் நண்பர்களோடு சேர்ந்து பாடிய பாடலையா? தனது அன்புக்குரியவளுக்கு எழுதிய கடைசி கடிதத்தையா? கிராமத்தின் குறுகிய சந்தில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் தாயின் மங்கிய விழிகளையா? கோதுமை வயலில் வீசிய குளிர்ந்த காற்றையா? வேனிலிருந்து இறக்கப்படும் தனது சவப்பெட்டியைப் பார்த்துக் கதறும் தனது சகோதரியின் அலறலையா? வீரர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது. பாலைவனத்தில் நடக்கும்போது முளைவிடும் போதே கேள்விகளெல்லாம் கருகிப் போய் விடும். அமைதியாக இருக்கும் ஆடுகளின் செவியில் மேய்ப்பவனின் கட்டளைகள் மட்டுமே கேட்கும். கழுத்தை அறுக்கும் போது காளையின் வேதனையும் கவலையும்தான் வெளிப்படும். வீரம் செறிந்த பாடல்களுக்கு விடை கொடுங்கள் எனக்காக எந்த சொர்க்கமும் காத்திருக்கவில்லை. நரகத்தில் ஒரே கோப்பையில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நஞ்சை அருந்துவோம் ஒரே முள் படுக்கையில் படுத்துறங்குவோம் எல்லைகளே இல்லாத உலகம் குறித்து கைவரப் பெறாத கனவைப் பகிர்ந்தபடி ஒன்றாகச் சேர்ந்து அழுவோம்.... போர் வீரன் ஒருவன் தனக்குள் பேசிக்கொண்டது.

*

Thanks to Kanagu Kanagraj & Sadik

*

தொடர்புடைய பதிவு : கே. சச்சிதானந்தன் நேர்காணல்




Thursday, December 16, 2021

சாபங்களின் மோகனம் - கென்

கென்’ன் கவிதைத் தொகுப்பு. (எச்சரிக்கை : ஆசிப்மீரான் முன்னுரையும் உண்டு!). Click 'pop-out' to Download.
*

 

Monday, December 30, 2019

நல்லம்மாவின் நெருப்புச் சட்டி - அ. யேசுராசா


'அறியப்படாதவர்கள் நினைவாக...!' கவிதைத் தொகுப்பிலிருந்து, நன்றியுடன்
*


நல்லம்மாவின் நெருப்புச் சட்டி
யேசுராசா


இன்றுமிந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்த நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிட்டுக் கேட்கிறது...!

"எழும்பு பிள்ள...!
மணி அடிச்சுப் போட்டு...து;
நேரம் போகு...து"

தட்டிவிட
எழுந்த மகள்,
பின் தொடரத்
தான் நடந்து
குசினிக்குப் போகின்றாள்.

"சிரட்டை உடை
அடுப்பு மூட்டு;
தேங்காயுடை
பாலைப் பிழி
மணி,
இரண்டடிச்சுப் போட்டு...து.
சந்திக்கடை ராசதுரை
கடைதிறக்க நாலுமணி
ஆகும்; அதுக்கு முன்னம்
அப்பஞ் சுட்டுப் போடோணும்."

பால் பிழிஞ்சு
மாக்கரைச்சு,
அடுப்பூட்டி முடிச்ச மகள்
தூங்கிவிழ, போய்ப்படுக்கச்
சொல்லியவள் --தனியிருந்து
அப்பம்,
சுடுகின்றாள்.

பற்றியொி சிரட்டைத்தணல்
காிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெரு வெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.

ஓம்...!
பின்னிரவின் இரண்டுமணிப்
போதிருந்து முற்பகலின்
எட்டுமணிப் பொழுதுவரை,
அவள் அப்பம் சுடவேண்டும்.

மூத்தமகன் பள்ளியில்
பத்துப் படிக்கிறாள்;
சின்னவனும் இன்னும் இரண்டு
பிள்ளைகளும் கூட,
பள்ளிக்குப் போகின்றார்.

கடலுக்குப் போற அவள்
புருஷன் பின்னேரம்,
கொண்டுவரும் நாலைந்து
ரூபாய்கள்...?

பற்றியொி,
ஆறு வயிறுகளின்
நெருப்பணைக்கக் காணாது;
பள்ளிச் செலவுக்கும்
வழிகாண ஏலாது...

ஆதலினால்,
வாழ்வு திணித்த அந்த
சுமைச்சட்டி நெருப்பேந்தி...
பற்றியொி சிரட்டைத்தணல்
காிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெருவெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்;
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.

நாளைக்கும்
மீண்டு மந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்து நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிடுங்
குரல் கேட்கும்...!
(7.8.69)

*
நன்றி : அ. யேசுராசா , க்ரியா , நூலகம், றஷ்மி

தொடர்புடைய பதிவுகள் :
1. நேர்காணல் யேசுராசா
2. ‘நல்லம்மா’ – அ.யேசுராசா தாய் நினைவாக வெளியான ‘இலக்கிய மலர்’ பற்றி .. Dr.M.K.Muruganandan

Saturday, June 1, 2019

அபியின் கவிதை (கவனம்: ஆங்கிலம்!)

சகோதரர் ஆசிஃப் மீரானின் மகன் அபி (அப்துல் ஜெப்பார்) எங்கள் செல்லப்பிள்ளையும் கூட. எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்ட அவன் நலமுடன் மீண்டுவர நாளும் எங்களின் பிரார்த்தனைகள் உண்டு.

அவன் எழுதிய ஆங்கிலக் கவிதையை ஆசிப் நேற்று அனுப்பினார்.

'அருமையா இருக்கு. தமிழில் எழுதினால் கொஞ்சம் எனக்குப் புரியும்' என்றேன்.

'அல்ஹம்துலில்லாஹ்!! எழுத மாட்டாண்ணே!!'

'அப்பாடா!'

*

தன்னம்பிக்கையும் பாசமும் பொங்கும் அந்தக் கவிதை இது :


The Start


Some nights, I stay up late and wonder,
Of a different life instead of this blunder.
A moment was all it took for this mishap,
It happened just as quickly as saying ASAP.

The last vision I saw, slowly became blurry,
I woke up to flashes of light, all quite swirly.
I kept hearing people talking, but in a distorted sound,
Though, despite my efforts, I didn't know what was happening all around.

I open my eyes, slowly, after God knows when,
To see a man standing beside me, taking notes with a pen.
It didn't dawn on me, what had taken place within that period due to the stress,
I felt so tired and fatigued that all I could do at the moment was rest.

I awoke to my father right in front of me with tears in his eyes,
The seriousness set in when I found out that I was paralyzed.
All I could do was reassure him and smile, regardless of the circumstance,
My only hope? To pray to the Most Merciful, to make me recover soon and advance.

*
ஆங்கிலத்திலிருந்து
தமிழாக்கம் - மதுமிதா

ஆரம்பம் -    அபி (அப்துல் ஜப்பார்)

-----------------------------------------------------------

இந்த பிழையான வாழ்க்கைக்கு
மாற்றான வாழ்க்கையை விரும்பி
உறங்காமல் சில இரவுகள் 
நீண்டநேரம் விழித்திருப்பேன்.

நொடிப் பொழுதில்
இந்த விபத்து
நிகழ்ந்து விட்டது

கணநேரத்தில்
அத்தனை விரைவாக
அனைத்தையும் தவறாக
மாற்றிப்போட்டு விட்டது.

நான் கண்ட கடைசிக் காட்சி
மெல்ல மெல்ல மங்கலானது

சுழன்று கொண்டிருந்த
ஒளியின் பளிச்சிடல்களுக்கிடையில்
கண் விழித்தேன்.

நம்பிக்கையிழந்த ஒலியில்
சிலர் பேசுவதை
கேட்டுக்கொண்டிருந்தேன்

எத்தனை முயன்ற போதும்
என்னைச் சுற்றிலும்
என்ன நடக்கிறதென்று தெரியவில்லை.

கடவுள் நிச்சயித்த நாளொன்றில் 
கண்களை நான் மெதுவாகத் திறந்தேன்

ஒருவர் கையில் பேனாவுடன்
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

மன அழுத்தத்தின் காரணமாக
அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தது எதுவும்
என்னில் பதியவில்லை

நான் மிகவும் சோர்ந்துபோய்
அதீத களைப்புடன் இருந்தேன்

அந்த தருணத்தில்
என்னால் செய்யமுடிந்தது
ஓய்வெடுத்தல் மட்டுமே

என் எதிரில்
கண்ணீருடன் நின்றிருந்த தந்தையைப் பார்த்தபடி
கண்விழித்தேன்

நான் உடலை அசைக்க முடியாமல்
முடங்கிப் போய் இருக்கிறேன் என்று அறிந்தபோது
நிலமையின் தீவிரத்தை உணர்ந்தேன்

இந்த சூழலை கருத்தில் கொள்ளாமல்
என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
அவருக்கு உத்தரவாதம் அளிக்கும் புன்னகை

எனது ஒரே நம்பிக்கை
நான் விரைவில் எழுந்து
நடமாடவும் நலம்பெறவும்
பெருங்கருணையாளனை
பிரார்த்தனை செய்வதே

நன்றி: "இனிய திசைகள்"
-------------------------------------------------------


அபியின் இன்னொரு சிந்தனை இது :

The View

We are now at a point where black screens always face us,
In our homes, our place of work or even on the local bus.
What they all display varies from person to person,
The content is almost endless that it's so hard to reach a conclusion.

A single letter to an entire sculpture in just one screen,
To infinite lines of code on another, which can make an amateur coder scream.
It doesn't matter if it's small, large, tall or wide,
All those who stare into them seem to be in a daze or hypnotized.

Some say it's a hazard, some say it's fine,
What happens when, even little kids, watch YouTube for hours at a time?
Some may give excuses like, "Look at this video, this cat is mixing the pudding!"
Heck, some of us take our phones to the bathroom! To whom are we kidding?

Yes, I'll admit that I'm a hypocrite and I've done some of these crimes,
Yet, I've never cut myself, staring at the TV, while trying to slice some limes.
I say, let's start changing ourselves by choosing to stay offline,
To spend time with family and friends so that we don't get disconnected and whine.

*

Thanks : Asif Meeran

Sunday, February 11, 2018

வயதாக மறுக்கும் ஆண்கள் - தமிழ்நதி

இன்று ரசித்த கவிதை இது. ஃபேஸ்புக்கில் சகோதரி தமிழ்நதி எழுதியதை G+ல் தோழி பிரபா பகிர்ந்திருந்தார். இருவருக்கும் நன்றி - இளம் வழுக்கையோடு. அடியில் கொடுத்த சுட்டி மூலம் மறுமொழிகளையும் அவசியம் பாருங்கள். ஓர் எழுத்தாளக் கிழம் வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லி நகைத்திருக்கிறது! - AB
---

வயதாக மறுக்கும் ஆண்கள் - தமிழ்நதி

பெருந்தொப்பைக்காரர்களாகிவிட்ட
முன்னாள் இளைஞர்களெல்லோருக்கும் வேண்டியிருக்கிறது
சிற்றிடையும் சிற்ப மார்பும் கொண்ட காதலிகள்
வழுக்கையைத் துயரத்தோடு தடவுமவர்கள்
வாசனை வீசும்
அடர் கூந்தலுள் முகம் புதைக்கவே விரும்புகிறார்கள்
கனத்த கண்ணாடிகளுக்குப் பதிலாக
கண்வில்லைகளை அணிந்துகொள்ளுமவர்கள்
கனவுகளின் நீர்மை நிறைந்த நீள் விழிகளை
கூட்டங்களில் தேடியலைகிறார்கள்
அவர்களுக்கு வயதாகிவிட்டதென்று
படுக்கையில் யாரோ ஒரு பெண்ணால்
அறிவுறுத்தப்படுத்தும் நொடியில்
பல்லாண்டுகளை மூச்சிரைக்க ஓடிக்கடந்து
இளமையின் பந்தயத்தை
துக்கத்தோடு நிறைவுசெய்கிறார்கள்.
*


Thanks to : Thamizhnathy Nathy
https://www.facebook.com/thamizhnathy/posts/10154883785460834

Wednesday, June 29, 2016

பாவத்தைக் கழுவுகின்ற வழியைப் பாரும்! - அஷ்ரஃப் சிஹாப்தீன் கவிதை


உனக்கு வேறா?
----------------------
கடைத் தெருவில் அபாயாக்கள் அலையுதென்றும்
குமருகளும் குழந்தைகளும் திரியுதென்றும்
கடைசிதினப் பெருங்கருணை பிறழ்ந்தாரென்றும்
கடைவாயோ கிழிந்துவிடக் கத்துகின்றீர்
உடையொன்றைப் பெருநாளில் உடுக்க எண்ணும்
உம்தாயும் சோதரியும் மனையாள் மற்றும்
முடையில்லா உம்குடும்பப் பெண்டிர்க்கெல்லாம்
மலக்குகளோ தருகின்றார் புதிய ஆடை?
தொழிலிடத்துத் தோழனொரு கடையைச் சொன்னால்
தோதாகக் கிளம்புதற்கு வேளை பார்ப்பீர்
தொழுகைக்குப் போகின்ற வேளை கூட
திறந்திருக்கும் கடைக்குள்ளே ஆடை பார்ப்பீர்
அழகாகப் பொருந்தி வரும் உடையைத் தேடி
ஆனமட்டும் பகலெல்லாம் அலைவீர் மற்ற
ஆளுடைய பெண்டிரொடு ஆடைக்காக
அங்காடி செல்வதைநீர் அசிங்கம் என்பீர்!
பகலெல்லாம் வீடுணவு, ஆடைதோய்த்தல்
பிள்ளைகளின் தேவைகள் பெருக்கல் கூட்டல்
அகமுடையான் குடும்பத்தை ஆதரித்தல்
ஆயிரமாய் வரும் குடும்பச் சிக்கலெல்லாம்
அகங்கொள்ளும் முகங்கொள்ளும் குடும்பமாது
ஆடையொன்றைப் பெறுவதற்குக் கடைக்குச் சென்றால்
முகங்கோணி மனங்கோணி முஸ்லிம் மானம்
முடிந்ததெனச் சொல்வதென்ன முட்டாளேநீ!
வெளிநாட்டில் பணிசெய்யும் கணவன் கொண்ட
வனிதையரும் குழந்தைகளும் ஆடை வாங்க
வெளியாகிக் கடைகளுக்குச செல்வதன்றி
வேறுவழி இருக்கிறதா? அவர்க்கு மட்டும்
வெளிச்செல்லும் சட்டங்கள் வேறு உண்டோ?
வீட்டுக்கே நீர் கொண்டோ கொடுப்பீர் ஆடை?
பழிசொல்லும் பாவத்தை விட்டு உந்தன்
பாவத்தைக் கழுவுகின்ற வழியைப் பாரும்!

*
நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன்
https://www.facebook.com/ashroff.shihabdeen/posts/10209681380982103


Sunday, February 28, 2016

கடைசி ஆசை... - தாஜ்

தாஜ் : அன்பு ஆபிதீன்... இது சமீபத்திய தலைவலி பிரசவம். முழுசா ஒன்பது நாள் - சுமந்தேன். ஆனாலும், ஆயுதப் பிரசவம்தான்! லாப் டாப் - குமுறல் எனக்கே கஷ்டமாகிப் போனது.

ஆபிதீன் : நல்லது. வாசகர்களின் கஷ்டம் உணர்ந்த கவிதை :)

**

கடைசி ஆசை... - தாஜ்

தூக்கு மேடை ஏறி நின்ற தருணம்
என் கடைசி ஆசை கேட்கப்பட்டது,
'யாரும் எழுதாததோர் கவிதையை
எழுத ஆசை' என்றேன்...!
'நீ கவிதைகள் எழுதப் போய்
வாசித்த வாசகர்களது
சித்தம் பேதலிப்பு நிதர்சனமாக
அவர்களது தற்கொலைகளுக்கும் கூட நீயே
ஆளாகிப் போனதும் ருசுவாக
வழக்கின் தண்டனயை வேண்டி ஒப்புக் கொண்டு
இன்றைக்கு மேடையேறிய நாழியிலும்
கவிதையெழுத ஆசையென்கிறாய்!'
வியந்த அவர்கள்
தட்டாது அனுமதியும் தந்து காத்தார்கள்
நேரம் கடந்தும்
இதோ நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன்
யாரும் எழுதாத இக் கவிதையை....!!

*

நன்றி : தூக்குமேடைக்கு !

Sunday, January 17, 2016

கடவுளுடன் விளையாடுதல் - சென்ஷி


என் இருக்கைக்கு எதிரே
கடவுளின் அமர்வு
மிகு சுவாரசிய ஆட்டமெனக்கூறி
காய்களை அடுக்கினேன்
கடவுளின் முணுமுணுத்தல்கள்
செவியிலேறவில்லை

காய் வெட்டுதல் குறி தப்பித்தல்
ரத்தம் சிந்துதல் வெட்டி எரித்தல்
என் ஆட்ட முறைகளை
விதிகளாக்கினேன்.
முணுமுணுத்துக் கொண்டிருந்தார் கடவுள்

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்
காடு புகுந்து வெற்றிக் களிப்பில்
குடித்துக் குடித்துக்
கூத்தாடிக் கொண்டிருந்தான் சாத்தான்
கடவுளின் முணுமுணுப்பு கேட்டிருக்க வாய்ப்பில்லை

விதிகளை மீறிய ஆட்டமென்று
தெரிந்தபின்பும்
நான் எனது வெற்றிக்காக
கடவுளின் காய்களை வெட்டிக்கொண்டிருந்தேன்
கடவுளின் முணுமுணுத்தல் அடங்கவில்லை

ஏவாளுக்காக ஆதாமுக்காக கோவிலுக்காக
மதத்திற்காக குழந்தைக்காக
இயற்கைக்காக
கடைசியாய்
சாத்தானை எனக்குக் கொடுத்ததற்காக
சுவாரசியமாய் இருந்தது ஆட்டம்

வெட்டுப்பட்ட காய்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தாம் விளையாடியது கடவுளுக்காகவென்று

என்னுடைய ஆட்டத்தில்
கடவுளைத் தோற்கடித்தப்பின்
வரமோ சாபமோ
முணுமுணுத்தலில் கிடைக்குமென்று
சப்தமாய் சொல்லச் சொன்னேன்

அவரவர் கண்கள்
அவரவர் மனது
என்றுச் சென்றார். 

***
நன்றி : சென்ஷி, யாழினி
குறிப்பு : கடவுளின் புகைப்படத்தை எடுத்தவர் ஷை.., இல்லை, ஆசிப்மீரான்!