Thursday, September 17, 2015

ரஸூல் மேஸ்திரி - பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதை

ரஸூல் மேஸ்திரி - பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதை (தமிழாக்கம் : டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்)

மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அந்தச் சிற்றூரில்தான் எத்தனை மாறுதல்கள்! நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு - தேவைக்கு அதிகமான மாறுதல்கள் என்று கூடச் சொல்லலாம். அதோ உயர்ந்து நிற்கிறது பள்ளிக் கட்டிடமும், மாணவர் விடுதியும் அவற்றின் முந்தைய உருவம் கற்பனைக்கும் எட்டாதது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் பள்ளியின் வகுப்புகள் பெரும்பாலும் ஆலமரத்தடியில்தான் நடந்தன என்றால் நீங்கள் நம்புவீர்களா? நல்ல மழைக்கால இரவுகளில் அந்தப் பக்கமாக நடந்தால் ஹாஸ்டல் மாணவர்கள் - 'கொட்டுதையோ வானம்,, சொட்டுதையோ விடுதி' என்று இரவெல்லாம் உச்சஸ்தாயியில் பாடுவதைக் கேட்கலாம்.

ஊர்ச்சனங்கள் குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இன்று விசாலமான டவுன்ஹால், கிளப், நூல்நிலையம் என்று வரிசையாக எழும்பியுள்ளன அழகழகான கட்டிடங்கள்.

கஃபூர் மியான் தோல் பதனிடும் கொட்டடி சினிமாக் கொட்டைகையாகி விட்டது. முன்பெல்லாம் அந்த வழியாகப் போகும்போது துப்புரவுத் தொழிலாளி பகியா கூட வாயைக் கோணிக் கொண்டு மூக்கை முந்தானையால் மூடிக்கொள்வாள். இன்றோ, சென்ட் வாசனை கமழ அங்கு நடைபயிலும் மிஸ்.சாயாதேவியின் உதடுகளில் மெல்லிய பாட்டு தவழுகிறது - 'சிங்காரத்தெருவிலே சுற்றி வர ஆசை!'

கலீஃபா பரீத்மியானின் கடையில் பழைய சிங்கர் தையல் மெஷின் கடபுடா என்று ஓடும் காலம் மலையேறிவிட்டது. 'பரக் பரக்' என்று துணியைக் கிழிக்கும் அவருடைய பழைய கத்தரியும் பழங்கதையாகி 
விட்டது. இப்போதெல்லாம் 'மாடர்ன் கட்ஃபிட் ' லத்தூ மாஸ்டர் போன்ற டிப்டாப் டெய்லர்களுக்குத்தான் காலம்.

'ரெஸ்டாரெண்டு'கள், 'டீஸ்டால்'கள் காய்கறிக் கடைகளைவிட அதிகமாகப் பெருகிவிட்டன. உலகப்போர் காரணமாக அகவிலை ஏகமாக ஏறிவிட்டாலும் தினமும் புதிய புதிய திட்டங்கள் உருவாகின்றன. உருக்குலைகின்றன. மொத்தத்தில் பட்டணமும், கடைத்தெருவும் அடையாள காண முடியாதபடி மாறிவிட்டன.

ஆனால் சதர் சாலையில் பழைய அரசமரத்தின் அருகே ரஸூல் மியானின் ரிப்பேர் கடை மட்டும் காலம் மாறியதை உணரவே இல்லை போலும்! கடுகளவாவது மாறுதல் வேண்டுமே, ஊஹூம், கிடையாது. ஒரு 
புதுமையும் வரவில்லை. இந்தக் கடையில் முன்போலவே ரஸூலும், அவரது மகன் ரஹீமும் பழைய சமுக்காளத்தில் அமர்ந்து ரிப்பேர் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உட்காரும் இடம்கூட மாறவில்லை. அவர்களைச் சுற்றி மானாவாரியாகக் கிடக்கின்றன ரிப்பேருக்காக வந்த சாமான்கள் - பழைய சைக்கிள் சக்கரம், டியூப், சீட், பெடல், செயின், ப்ரேக், பெட்ரோமாக்ஸ் விளக்கு, ஸ்டவ், ஹார்மோனியம், கிராமஃபோன் இத்யாதிகள். இவற்றைச் சுற்றிலும் பணிக்கருவிகள், ஆயுதங்கள், திருகப்புளி, ஒரு பழைய மரப்பெட்டியில் பற்பல கருவிகளின் பகுதிகள், ரிஞ்ச், சின்ன ரம்பம், உளி, சுத்தியல், ஸ்க்ரூடிரைவர், உடைந்த ஸ்பிரிங்குகள், பக்கத்திலுள்ள சிறிய அலமாரியில் பழைய புதிய மாடல்களில் பழுதடைந்த கடிகாரங்கள், இரண்டு மூன்று காலி டன்லப்-ட்யூப் டப்பாக்கள், சிறிதும் பெரிதுமாக ஏதேதோ தட்டுமுட்டுச் சாமான்கள், ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை. எல்லாம் ஓட்டை உடைசல். அலமாரிக்கு மேலே ஒரு பழைய கிராமஃபோனின் துருத்தி போன்ற ஒலிபெருக்கி கவிழ்த்தியபடிக்கு இருக்கிறது. சுவரில் டன்லப், குட்இயர் மற்றும் வாட்ச் கம்பெனிகளின் 1934, 36, 38ஆம் வருடத்திய பழைய காலண்டர்கள், சினிமா நடிகை மிஸ். கஜ்ஜனின் கிழிந்த கலர்ப்படம் தொங்குகிறது. இரண்டு சுவர்க்கடிகாரங்கள் - ஒன்றில் டயல் இல்லை, மற்றதில் பெண்டுலம் இல்லை. பெண்டுலம் இல்லாத கடிகாரம் எத்தனையோ நாளாக மூன்று மணியையே காட்டுகிறது. இன்னொன்று எக்ஸ்ரே படம்போல தன்னுடைய உள்ளுறுப்புகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. அதனுடைய 
ஸ்பிரிங்குக்கு அருகே சிலந்தியொன்று ஆனந்தமாக லைபின்னிக்கொண்டு குடும்பத்துடன் குடியிருக்கிறது. 

ரஹீம் இன்னொரு பக்கம் உட்கார்ந்து பேசாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். தகர நாற்காலியில் அமர்ந்து வாடிக்கையாளர் தம்முடைய சாமான் பழுதுபார்க்கப்படுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

எதிரில் அரசமரத்தின்மேல் தினமும் புதிய கடைகளின் விளம்பரங்கள், டாக்டர் மற்றும் மருந்து விளம்பரங்கள், போர் அணிகளின் கோஷங்கள், சினிமா போஸ்டர்கள் எல்லாம் மாறி மாறி ஒட்டப்படுகின்றன. ஒரு தகரத் தகட்டின்மீது எழுதி மாட்டிய ஒரு விளம்பரம் மட்டும் எத்தனையோ வருடங்களாக அப்படியே தொங்குகிறது. அதில் கோணல் மாணலாக இவ்வாறு எழுதியிருக்கிறது - 'ரஸூல் மேஸ்திரி - இங்கு ரிப்பேர் செய்யப்படும்'. இந்த விளம்பரப்பலகை பலமுறை நகரத்துப் படிப்பாளிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவர்கள் 
இதைப்பற்றி நையாண்டி செய்திருக்கிறார்கள். ரஸூல் மேஸ்திரி முன்னிலையில் எத்தனையோ முறை திருத்த மசோதாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இன்றளவும் அது சற்றேனும் மாறாமல் அப்படியே தொங்குகிறது. அண்மையில், ஏதோ ஒரு பொல்லாத சிறுவன் இந்த விளம்பரத் தகட்டில் தன் கையால் ஒரு வாசகத்தை எழுதிச் சேர்த்திருக்கிறான். 'இங்கு முதுகும் ரிப்பேர் செய்யப்படும்' - ஆனால் அப்படி விஷமத்தனமாக எழுதிய வாசகத்தை அழிக்க வேண்டிய அவசியத்தையும் யாரும் உணரவில்லை போலும்.

ரஸூல் மேஸ்திரி
நடுத்தர உயரம், தொழிலாளிகளுக்கே உரித்தான உடற்கட்டு, நீண்ட கூர்மையான முகத்தில் கைப்பிடியளவு தாடி - கறுப்பு மயிரும் வெள்ளை மயிரும், எள்ளும் அரிசியும்போல கலந்த தாடி. அறுபது வயதை அடைந்த தளர்ச்சி உடலில் காணப்படவில்லை. என்ன சுறுசுறுப்பு, வேகம்! வாலிபர்கள் பிச்சை வாங்கவேண்டும். எளிமை என்றால் இதல்லவா எளிமை - கனமான துணியில் ஒரு லுங்கி, அதேபோல காடாத் துணியில் ஒரு ஜிப்பா. வெற்றிலை-பாக்கு, டீ, பீடி இத்யாதிகளின் புரவலர். நிமிட நேரமாவது கை சும்மா இராது. துருதுருவென்று ஏதோ வேலை செய்துகொண்டிருக்கும். 'சரடு' விடுவதில் மன்னன். அவர் 'ரீல்' விடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால் வாய்ச்சவடால் அல்ல. நாணயமானவர். பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார். கை வேலை 
செய்து கொண்டே இருக்கும். வாய் உலக நடப்புகளை அளந்து கொண்டிருக்கும்.

'டக்..டக்..டக..டக்.. டக்..டக..டக்..டக்..'

'அப்ப தெரிஞ்சுக்குங்க அண்ணே, 'தோஜக்- பஹிஸ்து! அதாவது சொர்க்கம் நரகம் எல்லாம் இங்கேயே இருக்கு. ஆமா, இங்கேதான் இருக்கு. நாம செய்யற நன்மை, தீமைங்களுக்கு இங்கேயே கூலி கிடைக்க்குது. நம்ம 
ராமச்சந்தர் பாபு இல்லை? - ஏ ரஹீம்! அந்த ஸ்க்ரூ டிரைவரை இந்தப் பக்கமா கடாசு.. அதான் ராமச்சந்தர் பாபு.. ஆமாம் தம்பி!.. அந்தக் குட்டையன்தான்.. கெட்டிக்கார ஆளு.. ஆமா, இதைத்தான் கேட்டேன்!"

ரஹீம்!
ரஸூல் மேஸ்திரியின் ஒரே மகன். மாநிறத்துக்கும் கொஞ்சம் கம்மி. கொழுகொழுவென்று இருப்பான். 'வாப்பாவிடம் ரொம்பவும் மரியாதை உள்ள பையன். அவசியத்துக்கு அதிகமாகவே பணிவும், அடக்கமும் 
உடையவன்.

அவன் தன்னுடைய தந்தையின் முன்னால் உரக்கப் பேசிச் சிரித்ததை யாருமே பார்த்ததில்லை. ரிப்பேருக்காக பழைய சாமான்களுடன் மூன்று நான்கு பேர் வந்துவிட்டால் போதும், ஆரம்பித்த்துவிடும் ரஹீமுக்கு சோதனைக் காலம்! சின்னச்சின்ன தவறுகளுக்குக்கூட ரஸூல்மியான் மகனைக் கடிந்துகொள்வார். பகல்பூராவும் குனிந்த தலைநிமிராமல் வேலை பார்த்தாலும்கூட 'சோம்பேறி, உதவாக்கரைப் பையன், ஊர்சுற்றிக் கழுதை' போன்ற வசவுமொழிகள் விழுந்துகொண்டே இருக்கும். ஆனால் ரஹீமின் முகம் கொஞ்சமாவது மாற வேண்டுமே! 

ரஸூல் மியான் பிதற்றிக்கொண்டே இருப்பார். ரஹீமோ அமைதியாக வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருப்பான் - "பாருங்க, இதனோட ஸ்பிரிங் உடைஞ்சுபோச்சு.. அப்புறம் ஹோல்டிங் நட்டு.." ரஸூல்மியான் வாயைவைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். குறுக்கே புகுந்துவிடுவார், "கொண்டு வா இங்கே.. என்ன ஆச்சுன்னு நானும் பாக்குறேன். ஓஹோ, போடா சின்னப்பயலே! ஸ்பிரிங் மட்டும்தானா 
போயிருக்கு. இதப்பாரு.. ஸ்பிரிங் மாத்திட்டேன்.. நீ சொன்னமாதிரி ஹோல்டிங் நட்டையும் பொருத்திட்டேன்.. எங்கே, மெஹினை ஓட்டி ரிகார்டைப் பாட வை பார்க்கலாம்! அப்பத்தான் நீ பக்கா மேஸ்திரின்னு 
சொல்லுவேன்.. அட மண்ணாந்தைப் பயலே! பாலன்ஸைப் பாத்தியா? பாலன்சு இல்லாமல் எப்படிடா ஓடும்?.." 

ரஹீம் சற்றே வெட்கம் கலந்த புன்னகையுடன் தரையைப் பார்த்துக்கொண்டே நிற்பான்.

ஊருக்குக் கிழக்கே இரண்டுமைல் தொலைவில் ஒரு சிறிய கிராமம். அங்கேதான் மேஸ்திரியின் வீடு இருக்கிறது. மேஸ்திரியின் மூதாதையர்கள் ஒரு காலத்தில் நிலம், நீச்சு என்று செழிப்பாக வாழ்ந்தவர்கள். இன்று மாடு, மனை, சொத்து, சுகம் என்ற பெயரில் எஞ்சியிருப்பது மூன்று குடிசைகளும், நாலைந்து ஆடுகளும், ஒரு 
சில சேவல் கோழிகளும் மட்டுமே. வருவாயைப் பற்றிக் கேட்டால், ரிப்பேர்க் கடை இல்லாத நாட்களில் வயிற்றுக்கும் விடுமுறை. செலவோ, நவாப் கணக்குதான்! மாதம் முப்பதுநாளும் சமையலில் கறி, ஈரல், 
ஹல்வா சேமியா இவை இடம்பெறாமல் இருக்காது. மகனும் மருமகளும் வாயே திறக்க மாட்டார்கள். கிழவி இருக்கிறாளே, அதான் ரஸூலின் பீபி, தன்னுடைய நல்லாகாலத்தில் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டாள் - 
வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி நாலு காசு மிச்சம் வைக்க வேண்டும் என்று. ரஸூல்மியான் விட்டால்தானே! 

இப்போது அதெல்லாம் ஒன்றும் பிரயோசனம் இல்லை என்று விட்டுவிட்டாள். ரஸூல்மியான் உமர்கயாம்போல தத்துவம் பேசி அவள் வாயை அடக்கி விடுவார். ஆக, அவள் சொன்னது ஒருநாளும் எடுபட்டதில்லை. இருந்தாலும் , இன்றும், அவள் தன் கருத்தைச் சொல்லாமல் விடுவதில்லை. ரஹீமின் கையில் பொட்டலத்தைப் 
பார்த்துக் கேட்பாள் - "அந்தப் பொட்டலத்திலே என்னது ரஹீம்?"

"ஈரல்.." - ரஹீம் குழந்துகொண்டே பதில் கூறுவான்.

"எம்புட்டு இருக்கும்? ஒரு சேர் இருக்கும் போலிருக்குதே..என்ன விலை? ஏ அல்லா..! ரெண்டு ரூபா சேரா? இப்படித் துன்னாட்டி என்னா? அந்த நாக்கிலே தீயை வைக்க! ரெண்டு ரூபா சேர் ஈரலாம்! ரஹீம் உன்னைத்தான் கேக்குறேன் - அல்லாமியான் ஊருக்கெல்லாம் புத்தியும், அறிவும் குடுத்த நேரத்திலே எங்கேடா போய்த் தொலைஞ்சே? உங்க வாப்பா தலையிலே சைத்தான்தான் பிடிச்சிருக்கு! உன் வாயிலேயோ அல்லா பூட்டைப்போட்டு பூட்டி வெச்சிருக்காரு" கிழவி ரஸூல் மியானின் ஈரல் தின்னும் ஆசையை ஆசைதீரத் திட்டி 
நொறுக்குவாள். ரஹீம் அங்கிருந்து மெதுவாக நழுவிவிடுவான். கிழவியின் மடியில் உட்கார்ந்திருக்கும் பேரல் ஈரல் பொட்டலத்தைத் தாவித்தாவி எடுக்கப்பார்ப்பான். கிழவி குழந்தையைத் தடுப்பாள் - "அய்யோ ஆண்டவனே, என்னதான் செய்வேன், ஒண்ணும் புரிய மாட்டேங்குதே.." அங்கலாய்த்துக்கொண்டே அவள் முணுமுணுப்பாள், மணிக்கணக்காக..." அப்பன் , மகன் இரண்டு பேருக்கும் புத்தி மேயத்தான் போயிருக்கு. இப்படி வக்கணையாத் தின்னுக்கிட்டிருந்தா.. என்னைக்கும் இப்படியே நடக்குமான்னு யோசனை பண்ண வேண்டாம்?"

நாவின் ருசிக்கு அடிமையாகி நொடித்துப்போன சில குடும்பங்களின் கதைகளை எடுத்துக்காட்டி இவங்க செத்தா சவக்கோடிக்குக்கூட வக்கு இருக்காது என்பாள். இப்படி அவள் தன் விதியை நொந்துகொண்டிருக்கையில் ரஸூல்மியான் வந்து சேருவார். முதலில் ஈரல் பொட்டலம் பிரிக்கப்படாமல் ஏன் அப்படியே கிடக்கிறது 
என்பதற்கான காரணம் கேட்பார். கிழவியோ வாய்திறவாமல் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொள்வாள். 

ரஸூல்மியான் மேலங்கியைக் கழற்றி மாட்டிவிட்டு திண்ணையில் சென்று உட்கார்ந்துவிடுவார். மருமகள் ஹூக்கா தயாரித்து அவர் முன்னால் வைப்பாள். இரண்டு வயதுப் பேரன், சுட்டிப்பயல் கரீம் பாட்டியின் மடியை விட்டிறங்கி தாத்தாவின் மடியில் ஏறி அமர்ந்து கொள்வான். பிறகு பாட்டியை விரலாம் சுட்டிக்காட்டி மழலை மொழியில் கூறுவான் - "தொண.. தொண.. பாத்தி" தாத்தாவிடமிருந்து லெமன் மிட்டாயும், பிஸ்கட்டும் கிடைக்கும். இன்னும் உரத்த குரலில் பாட்டியை எரிச்சலூட்டுவான் - தொண தொண பாத்தி, தொண தொண பாத்தி."

ரஸூல் மேஸ்திரி ஹூக்கா புகையை இழுப்பார். முகத்தில் எப்போதும் காணும் இயல்பான சாந்தம் மாறும். 

சற்றே சினந்த குரலில் மனைவியிடம் கேட்பார். "உன்னைத்தான் கேக்குறேன் புள்ளே, நித்தநித்தம் தொணதொணக்குற இந்தக் குணம் இருக்கே, எப்ப மாறப்போகுது? எப்பப்பாரு இதே பாட்டுதான், எப்பக்கேளு 
இதே ராகம்தான். உனக்குக் கொஞ்சமாவது வெக்.."

"என்னோட வெக்கம், மானம் பத்தி இங்கே யாரும் பேச வேண்டியதில்லே" - கிழவி படபடப்பாள்.

ரஸூல்மியானுக்கும் சூடு ஏறும் - "இப்படிப் பேசினா என் வாயை அடக்கிடலாம்னு நெனப்பா? ஒருதரம் இல்லே, ஆயிரம் தரம் சொல்லுவேன், உனக்கு வெக்கம், மானம் இல்லேன்னு. எல்லாத்தையும் காத்திலே விட்ட்டாச்சு. 

உன்னால் மட்டும் முடிஞ்சா எங்க எல்லாரையும் பட்டினி போட்டே கொன்னிருப்பே. ஏதோ ஆசைப்பட்டு வாங்கிட்டு வந்திருக்கோம். தொணதொணக்காட்டி உனக்குப் பொழுது போகாது."

"தொண..தொண.. பாத்தி" - கரீம் பிஸ்கட்டைத் தின்றுகொண்டே கையைத் தட்டி ஆரவாரம் செய்வான். பாவம், கிழவி அழுது விடுவாள். அல்லா சீக்கிரம் தன்னை அழைத்துக்கொள்ளக்கூடாதா, என்ன சுகத்தைக் காண இப்படி என்ற பொல்லாப்பையும் கட்டிக்கொண்டேனே.. என்றெல்லாம் எண்ணமிடுவாள். மருமகள், ஈரலை எடுத்துக்கொண்டுபோய் அரியத் தொடங்குவாள். ரஹீம் மெதுவாக அறையிலிருந்து எங்கேயாவது 
போய்விடுவான். கிழவி உட்கார்ந்து விசும்பிக் கொண்டிருப்பாள்.

"ரஸூல் காக்கா இருக்காங்களா", வெளியிலிருந்து வருகிறது ஒரு குரல்.

"யாரு? ஃபக்ருதீனா? வாய்யா வா. சொல்லு. என்ன சேதி." ரஸூல்மியான் புகைக் குழாயிலிருந்து வாயை அகற்றியவாறு கேட்பார்.

"காக்கா, ரஷீதுக்கு இரண்டு நாளா வாந்தி, வயிற்றுப்போக்கு, மருந்து கேக்கவே இல்லே, உடம்பு வேறே சில்லிட்டுகிடக்கு.."

"எங்கேயோ எருமைமாட்டு மேலே எண்ணெய் மழை பெய்யுதுன்னு சும்மா இருந்தியாக்கும் ரெண்டுநாளா?" ரஸூல்மியான் இடைமறித்துக் கேட்டவாறு எழுந்து விடுவார்! "பார்க்கலாம் வா. பயப்படாதே ஒண்ணும் ஆகாது. கண்டதை கடியதைத் தின்னிருக்கும். எல்லாம் சரியாப்போகும்" என்றவாறு உள்ளே போவார்.

"இஸ்மைலு எப்படி இருக்கு ஃபக்ரு" கிழவி கேட்பாள்.

"உங்க ஆசியிலே இப்ப நல்லா இருக்கிறான், காக்கி. நீங்கதான் அந்தப் பக்கம் வர்றதே இல்லே. இஸ்மைலு அம்மா கேக்குது.. காக்கிக்கு ஏதானும் கோபமா நம்ம மேலே?" அப்படீன்னு."

"போடா பைத்தியக்காரா! நா எதுக்குக் கோவிச்சுக்குறேன்? இந்த துக்கிரி கரீமைப் பார்த்துக்கவே நேரம் சரியாப்போகுது."

ரஸூல்மியான் பையில் சிறியதும் பெரியதுமாக மருந்து சீசாக்களை அடைத்துக்கொண்டு கிளம்புவார் - "வா போகலாம்." கிழவி சொல்லுவாள் - "நல்லா ஆற அமர கவனிங்க. கையிலே இல்லாத மருந்துன்னா 
பட்டணத்திலேருந்து வாங்கிவரச் சொல்லுங்க."

தாத்தா புறப்பட்டுப்போனதும் கரீம் மெதுவாக பாட்டியின் அருகே வந்து சேருவான், அர்த்தமில்லாமல் சும்மா சிரித்துக்கொண்டு, சமாதான உடன்படிக்கைக்கு பேச வருவதுபோல. ஏதேதோ பேசி பாட்டியின் கோபத்தைத் தணிக்க முயலுவான். தான் பாதி தின்ற பிஸ்கட்டை பாட்டி தின்னால்தான் ஆயிற்று என்று அடம் பிடிப்பான்.

"போடா போக்கிரிப்பயலே, சைத்தான்! இங்கே ஒண்ணும் வர வேண்டாம். உங்க தாத்தாகிட்டேயே போ. பெரிசா வந்துட்டான் பிஸ்கட்டை எடுத்துக்கிட்டு சமாதானத்துக்கு போ போ. நான் தொண தொண பாட்டிதானே!" என்று சொல்லி கோபத்தைவிடாமல் நடிப்பாள். ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கரீம்மியானுக்கு நன்றாகத் தெரியும். பலவந்தமாக பாட்டி மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு தாத்தாவைக் குற்றம் சொலத் தொடங்குவான் - "தாத்தா பக்கி(ரி).. சட்டோ(ர்)" - (தாத்தா பக்கிரி - தாத்தா சப்புக்கொட்டி). 

அப்போது பாட்டியின் உதடுகளில் தவழும் புன்னகையைக் கவனித்துக் கொள்வான். பிறகு தனக்கே உரிய வினோதமான மழலை மொழியில் ஏதேதோ பேசி பாட்டியை வசப்படுத்துவான். மழலைப் பேச்சில் அவன் 
கூறுவதன் சாராம்சம் இப்படித்தான் இருக்க வேண்டும் - 'தாத்தா எப்பவாவதுதானே வூட்டுகு வர்றாரு. நான் அவருகிட்டே போறதெல்லாம் பிஸ்கெட் வாங்கிக் கொள்ளத்தான். அதுக்கு மட்டும்தான் அவருகிட்டெ சிநேகிதம். அவரை ஏமாத்தி எப்படி பிஸ்கெட் வாங்கினேன் பாத்தியா? இதுதான் பாட்டி நம்ம ராஜ தந்திரம்!"

ஈரலை அரிந்துகொண்டே கரீமின் அம்மா கண்களை உருட்டி அவனிடம் கூறுவாள் - "அப்படியா சேதி! தாத்தா வரட்டும். உன்னோட வண்டவாளம் எல்லாம் வெளியாகப் போவுதுபாரு."

கரீம் மியான் தன் தாயின் சொல்லை எப்படிப் பொறுத்துக்
கொண்டு சும்மா இருப்பான்? அம்மாதான் வீட்டிலேயே பலவீனமான பிராணி, வாயில்லாப் பூச்சி. கரீம் மியான் அம்மாவை ஒருபோதும் காக்காய் பிடித்ததில்லை; பிடிக்கவும் போவதில்லை. என்னைப் பயமுறுத்த அவளுக்கு இத்தனை துணிச்சலா? சிறிதுநேரம் மௌனமாக இருப்பான். அம்மா புன்னகை புரிவாள். உடனே அவளை ஏசுவான் - "பேசாம கிட.."

"தாத்தா வரட்டும் சொல்றேன்" - அம்மா மீண்டும் பயமுறுத்துவாள். இதைக்கேட்டு கரீம்மியான் வெகுண்டு எழுவான். அருகில் அடிக்க லாயக்காக ஏதாவது பொருள் கிடைக்குமா என்று நோட்டம் விடுவான். பெரிய தடிக்கம்பைத் தூக்க வலுவிருக்காது. வெறுங்கையை ஓங்கிக்கொண்டு அம்மாவை ஆக்கிரமிப்பான். தலைமுடியைப் பிடித்து இழுப்பான். அம்மா ஓலமிடுவாள் - "விடுடா சைத்தான், என்னை விட்டுடு. தாத்தாகிட்டெ சொல்ல மாட்டேன். விடுப்பா கண்ணு."

பாட்டி சிரித்துக்கொண்டே போய் அவனைப் பிடித்துக்கொண்டு வருவாள். கரீம்மியான் தன்னுடைய மொழியில் பயமுறுத்துவான் - "பக்கிரித் தாத்தாவையும் அப்பாவையும், உன்னையும் அடித்து துரத்திடுவேன், வீட்டைவிட்டு."

அம்மா திரும்பவும் கோபமடைந்தால் போர்க்களத்தில் இறங்கி விடுவான். ஆனால் பாட்டி தடுப்பாள். பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு விறைப்பாக உட்காருவான். பாட்டிக்கும், அம்மாவுக்கும் இந்த சங்கேத மொழி தெரியும். பாட்டி சொல்லுவாள் - "இன்னிக்கு பால்குடிக்கும்போது உன்னை அழவிட்டுத்தான் மறுவேலை. உண்டு இல்லைன்னு பண்ணிடுவான். கவனமா இருந்துக்க."

கரீம் சில நாட்களாக ஒரு புது உத்தியைக் கண்டுபிடித்திருக்கிறான். பால் குடிக்கும்போது அதைக் கையாளுவான். தாய், 'அம்மாடீ' என்று கத்துவாள். அப்போது தன்னுடைய வெற்றியில் கரீம் பெருமிதம் கொள்ளுவான்.

சமையலறையில் மருமகள் ஈரல் கறி சமைத்துக்கொண்டிருப்பாள். அப்போது கிழவி உரக்கக் குரல் கொடுப்பாள் - "பாரும்மா, பதமாக இருக்கட்டும், இல்லேன்னா புயலைக் கிளப்பிடுவாரு." உப்பு, உறைப்பு, மசாலா போடுவதைப் பற்றி வெளியிலிருந்து ஓரிருமுறை எச்சரிக்கை விடுத்த பிறகு தானே சமையலறையில் புகுந்துவிடுவாள். 

மருமகள் மடியில் குழந்தையை விட்டவாறு கூறுவாள் - "கொஞ்சம் அம்மாகிட்டெ இரு, நான் போய்க் குழம்பைக் கவனிக்கிறேன்." மருமகள் முறுவலித்துக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியே வருவாள். 

அதற்குள் கிராமத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு ரஹீம் திரும்பி வருவான். அப்பா, அம்மா, குழந்தை மூன்றுபேரும் சேர்ந்து பழைய ஜப்பானிய கிராமஃபோனில் கமலா ஜரியாவின் பாட்டைப்போட்டு ரசிப்பார்கள் - 'அதாஸே ஆயா கரோ பனகட் பர், ஜப்தக் ரஹே ஜிகர் மே தம்' (வந்திடுவாய் ஒயிலாக ஆற்றுது துறைப்பக்கம், அதுவரை துடிக்கட்டும் என் இதயம்).

ரஸூல்மியான் திரும்பும்போது கள்ளுக்குவளையும் இருக்கும். அடுத்த காட்சி - சாப்பாட்டுக்காக முற்றத்தில் விரிப்பு விரித்தல். கொட்டாவி விட்டுக்கொண்டே கரீம்மியானும் சாப்பிட எழுந்திருப்பான். தட்டு, கிண்ணம், கிளாஸ் இவற்றை ஒவ்வொன்றாக மெல்லத் தூக்கிக்கொண்டு தாத்தா பக்கத்தில் வருவான். மூன்று பேரும் சேர்ந்து திருப்தியாக சப்பாத்தி - ஈரல் கறியை ஒருகை பார்ப்பார்கள். நடுநடுவே மதுபானமும் நடக்கும். கிழவி பக்கத்தில் உட்கார்ந்து பரிமாறுவாள். "வாஹ், இன்னிக்கு குழம்பு வெகுஜோர்" என்று சொல்லிவிட்டால் போதும், உச்சி குளிர்ந்துவிடும் கிழவிக்கு.

கரீம் மியானும் ஒரு மிடறு குடித்துவிட்டு களியாட்டம் போடுவான். குவளையில் மீந்திருக்கும் கள்ளை கிழவியிடம் கொடுத்தவாறு ரஸூல்மியான் கூறுவார் - "ஒரு கிளாஸ் போல இருக்கும், மருமகளுக்குக் கொடு, உடம்பு வவ்வால் கணக்கா வத்திக்கிடக்கு. தினமும் ஒரு கிளாஸ் குடிச்சா, மதமதன்னு பழைய உடம்பு வரும். கள்ளாக்கும், சாராயம் இல்லே தெரிஞ்சுக்கோ. நீதான் குடிச்சதே இல்லையே.. உனக்கு எங்க தெரியப்போகுது!".

சற்று நேரத்துக்கெல்லாம் குடிசைகளில் நித்திரைக்கன்னி கோலோச்சுவாள். யாராவது வந்து கூப்பிட்டால் ரஸூல்மியான் இரவிலும் ஏதாவது நோயாளியைப் பார்க்கப் போய்விடுவார். ஒவ்வொரு சமயம் இரவெல்லாம் வைத்தியம் செய்யப்போக வேண்டியிருக்கும்.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு ரஸூல்மியான் பட்டணத்துக்குப் புறப்பட்டுவிடுவார். மதியச் சாப்பாட்டை ரஹீம் எடுத்துச் செல்வான். ரஸூல் மியான் காலையில் சரியான நேரத்துக்குக் கிளம்பிச் சென்றாலும், சாப்பாட்டை எடுத்துச் செலும் ரஹீம்தான் அநேகமாக முதலில் கடைக்குப் போய்ச்சேருவான். வீட்டிலிருந்து புறப்பட்ட பிறகு நாலெட்டுக்கு ஒருமுறை நின்று ஊர்க்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டே போவார். எத்தனை விதமான பிரச்சினைகள்... திருமணம், அடிதடி, சண்டை, வழக்கு, பஞ்சாயத்து, வியாதி - வெட்டை, மருந்து - பத்தியம் என்று தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஆலோசனை கூறியவாறு கிராமத்திலிருந்து வெளிவரும்போதே மணி பன்னிரெண்டு அடித்துவிடும். பிறகு வயல் வரப்பு வழியாக நடக்கும்போது வயலில் வேலை செய்பவர்களிடம் 'விவசாய சம்பந்தமாக' இரண்டு வார்த்தை பேசாமல் நகர முடியுமா?

"அடே மஹங்கூ, நீ திருவிழாச் சந்தையிலே வாங்கினேல்ல, ஒரு கன்னுக்குட்டி, எங்கே அது?"
"என்னத்தைச் சொல்ல மாமா, ரெண்டு நாளா அது புல்லும் தின்னலே, தண்ணியும் குடிக்கலே, அதுக்கு என்ன ஆச்சோ, ஏதோ.. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!"

அவ்வளவுதான், ரஸூல்மியான் திரும்பிவிடுவார். கன்றுக் குட்டியைப் பார்த்து. என்ன நோய் என்று நிதானித்து. அதற்கு என்ன பச்சிலை மருந்து கொடுக்கவேண்டும், அந்தப் பச்சிலை யார் தோட்டத்தில், எந்த மரத்தடியில் கிடைக்கும் என்பதையும் விளக்குவார். அல்லது தானே போய்க் கொண்டுவருவார்.

கடைக்குப்போய் இருக்கையில் அமர்ந்ததும் சொல்லுவார் - "ஓ, இன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சி." பிறகு ரஹீம் செய்யும் வேலையை சிறிதுநேரம் உன்னிப்பாகக் கவனித்துவிட்டு, "இங்கே கொடு அதை, நான் பார்க்கிறேன். அது வரையிலும் நீ போலாவின் கடிகாரத்தைப் பாரு" என்பார்.

பழைய நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆள், "யாரந்த போலா?" என்று கேட்டால் போதும் ஆரம்பித்து விடுவார் போலா புராணம்.. "அதாங்கறேன், அந்த போலாதான்.. தெரியலையா? காங்கிரஸ்காரன். இப்ப புரிஞ்சுதா? 
ஜெயில்லேயே பி.ஏ பரீட்சை தேறினான். பெயருக்கு ஏத்த மாதிரி நல்ல பையன்.. போலா..! இதப் பாருங்க, உங்க கடிகாரத்தின் இயர்ஸ்பிரிங் எவ்வளவு லோலமா இருக்கு. அதனாலேதான் சொல்றாங்க, மலிவாக்கிடைக்குதுன்னு வாங்கினா அடிக்க அழ வேண்டியதுதான்.. ஆனால், இந்த போலா இருக்கிறானே, கருத்தானவன், எதை 
நினைச்சாலும் செஞ்சு முடிப்பான். நானும்தான் எத்தனையோ பையன்களைப் பார்த்திருக்கிறேன்.."

கதை கேட்பவர், தனக்கு அறிமுகமில்லாத போலாவைப் பற்றிய கதையின் முகவுரை நீளுவதைக் கண்டு குறுக்குக் கேள்வி கேட்பார்.. "மியான், எந்த போலாவைப்பத்தி இவ்வளவு உசத்திப் பேசறீங்க? நீளமா தலைமுடியை வளர்த்திக்கிட்டிருக்கிறானே, அவன்தானே.."

"இல்லய்யா.. அவன் இல்லை.." ரஸூல் இடைமறிப்பார்.. "நீளமா தலைமுடி வளர்த்துக்கிட்டிருக்கிறது அவனிந்தர். அவன் போலாவுக்குச் சேக்காளிதான். அவனும் அமைதியான பையன். பாக்குறதுக்கு ஊர்சுற்றிப் பயல்போல தெரிகிறான், ஆனால்.."

"ஓ ரஸூல் காக்கா! இங்கே கொஞ்சம் வாங்க..பாருங்க இதை.." பால்காரப்பெண் விசும்பிக் கொண்டே வந்து நிற்பாள்.. "பாருங்க ரஸூல் காக்கா, பானையை உடைச்சுட்டு.. கையைப் பிடிச்சு இளுக்குறான்.."

"யார் அவன்?"

"சதீஷ்பாபு மகன்."

"சதீஸ்பாபுகிட்ட சொல்லலியா நீ?"

"சொன்னேன் காக்கா, அவரு, பையனைக் கண்டிக்கறதுக்குப் பதிலா என்னை விரட்டறாரு.. கெட்ட வார்த்தை சொல்லி திட்டறாரு" இதைக் கேட்டதும் ரஸூல்மியான் புருவத்தை நெரித்துக்கொண்டு எழுந்துவிடுவார். வேலையை 'அம்போ' என்று விட்டுவிட்டு கோபத்தில் கத்த ஆரம்பிப்பாரு.. :எவ்வளவு பெரிய பணக்காரனோ அவன்கிட்ட அந்த அளவுக்கு சின்னத்தனம் இருக்கும். ஒண்ணாம் நம்பர் சோட்டா, நீ போயி, சௌதாகர் சிங்கைக் கூட்டியா, சுதாமியா." பால்காரி சுதாமியா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு போவாள். ரஸூல்மியான் விடாமல் படபடப்பார்.. "காசு கொழுத்துப் போச்சு.. இவனுங்க பொம்பிளை கற்பிலேயே கையை வைக்கிறான் பிசாசு!.."

"மேஸ்திரி, இந்தப் பொம்பளைங்களை லேசுப்பட்டதுன்னு நினைக்காதீங்க. பலே கைகாரிங்க. ஆளைச் சொக்கவச்சு வம்புக்கிழுக்கும். ஆமா, இந்த மாதிரி வயசுப் பொண்ணுங்களை பட்டணத்துலே பால்விக்க அனுப்பாட்டி என்ன?"

"சும்மா இருங்க, நீங்க ஒண்ணு!" இந்தப் புள்ளே என் மகளைப் போல. கிராமத்துப் புள்ளங்களுக்குக் கள்ளம் கிடையாது, தெரிஞ்சுக்குங்க. உங்க பட்டணத்துப் பெண்களைப்போல இல்லே. பால் வித்துத்தான் சீவனம் நடக்கணும். இவ வீட்டிலே இந்தப் புள்ளையைத் தவிர எல்லாருக்கும் சீக்கு. வைத்தியரைக் கூப்பிடவும் பால் விக்கவும் இவ போகலேன்னா யார் போறது? சொல்லுங்க! பெண்களுடைய உண்மை நிலையை உணராமல் 
இந்த கயவாளிங்க அவளுடைய கஷ்ட நிலைமையத் தன்னுடைய சுயநலத்துக்குப் பயன்படுத்தறாங்க."

சுதாமியா வந்து கூறுவாள்.. "சௌதாகர் காக்கா வீட்டிலே இல்லே." ரஸூல் மியான் சுதாமியாகூஉட தனியாகவே கிளம்பிவிடுவார்.

பொழுது சாயத்தொடங்கும்போது கடைக்கு வந்துசேருவார். அப்போதும் படபடத்துக்கொண்டே வருவார்.. "நீயும் ஒரு நாளைக்குக் கிராமத்துப்பக்கம் வராமலா போவே? நடுரோட்டிலே நிக்க வச்சு உன் தோலை உரிக்காட்டி என் பேரு ரஸூலு இல்லே, ஆமா..."

பிறகுக் கடையில் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் கறிக்காரிகளை நோக்கிக் கேட்பார்.. "என்ன அப்துல்லா அம்மா, இப்பத்தான் பொழுது விடிஞ்சுதா?" இதைக் கேட்டதும் காய்கறிக்காரிகள் எல்லாரும் 
கோரஸ்போல ஒரே குரலில் பதில் சொல்லுவார்கள் "எப்பப் புடிச்சி காத்துக்கிட்டு கிடக்கோம்? கொஞ்சம் கணக்குப் பண்ணிச் சொல்ல்லுங்களேன்."

"பொறுங்க, பொறுங்க, ஒவ்வொருவரா வாங்க.. உங்கிட்டே எவ்வளவு பாவக்காய் இருந்திச்சு? ஹமீதன்..? பதிமூணு சேர்.. என்ன விலைக்கு வித்தே..? நாலணாவா..? ஆமா, பதிமூணு நாலு அய்ம்பத்தி ரெண்டு.. 
அய்ம்பத்திரெண்டு அணான்னு சொன்னா மூணேகால் ரூபா.. பைசா எங்கே? ஆங் சரிதான். அப்புறம்.. நீ கொண்டுபோனது என்ன பரவலா..? இந்தாயா, உள்ளே ரஹீம் கிட்டே போய்க் காட்டுங்க. பார்த்தா தெரியலையா? எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை இப்போ."

கணக்கு பார்த்து செல்லாக்காசா, நல்லதா என்று சோதித்து முடிக்கும்போது பொழுது சாய்ந்துவிடும். ரஹீம் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போகத் தயாராகிவிடுவான். "இவங்களுக்குத் துணையாப் போயிட்டிரு, ரஹீம், இருட்டுதுல்லே? நான் கொஞ்சம் அந்தப் பக்கமா போய்விட்டு வர்றேன்" என்பார். காய்கறிக்காரிகள் கூட ரஹீம் நடப்பான். காய்கறிக்காரப் பெண்மணிகள் தேனுஷாவின் மிட்டாய்க் கடையைப் பார்த்ததும் இரண்டு பைசாவுக்கு ஜிலேபியும், சீனிப்பாராவும் வாங்குவதிலேயே ஒருமணி நேரத்தைக் கடத்தி விடுவார்கள். ரஹீம் எல்லாரும் வரும் வரையில் சாலையோரத்தில் பொறுமையாக நின்று கொண்டிருப்பான்.

என்ன சொன்னாலும் ரஸூல் மியான் கடையில் பழுது பார்க்கப்பட்ட பொருள் உறுதியாக இருக்கும். எல்லாரும் தங்கள் பொருள்களை ரஸூல்மியான்தான் ரிப்பேர் செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் எல்லாரும் பொதுவாகச் சொல்லக்கூடிஅய் குறை இதுத்தான்.."ஆனா அவரு கடையிலே அடங்கி உட்காருவது எங்கே? 
அப்படியே உட்கார்ந்தாலும் பாதி வேலையை மகன் தலைலே கட்டிட்டி ஓடிப்போயிடுவாரு." ரஸூல்மியானின் நாக்குக்குக் காரம் அதிகம். மனசுக்குத் தோன்றுவதைப் பட்பட்டென்று பேசி விடுவார். அதனால் 
வாடிக்கையாளர்கள் அவர் கடைக்கு அதிகம் வருவதில்லை. ரஸூல்மியான் கடையில் வேலைக்கு இருந்த ரகு இப்பொழுது சொந்தமாகப் பட்டறை வைத்து நூற்றுக்கணக்கில் சம்பாதிக்கிறான். ஆனால் ரஸூல்மியான் உலகம் அன்று போலவே இப்போழுதும் மாறாமல் இருக்கிறது.

பதினோரு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். ஸ்டவ் ரிப்பேர் செய்ய ரஸூல் மியான் கடைக்குப் போனேன். ஸ்டவ்வைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கிராமத்து ஆசாமி, நடுத்தர வயது இருக்கும். வந்து தொண்டை இடற முறையிட்டான்.. "நகையைத் திருப்பிக் கொடுக்க மாட்டேங்குறான்... இன்னும் வட்டி வேணுமாம்.."

இதைக் கேட்டதுமே ரஸூல்மியான் வேலையை பாதியில் விட்டுவிட்டு எழுந்தார். நான் இடைமறித்தேம்.. "அப்ப, ஸ்டவ்?"

"நாளைக்குப் பார்க்கிறேன்."

"அப்படீன்னா நான் ஸ்டவை எடுத்திட்டுப்போகிறேன்" - சற்றே சினத்துடன் கூறினேன். "கொண்டுபோ தாராளமா!" ரஸூல் வெடுக்கென்று பதிலளித்தார். "இங்கே ஒரு மனுசனுடைய மானம் கப்பலேறிக்கிட்டிருக்கு. இன்னொருவருக்கு தன் வேலைதான் பெரிசுன்னு படுது. இவருடைய பெண்ணுக்கு இன்னிக்கு கௌனா (முதலிரவு) நடக்கணும். நகை பணத்திலே நிற்கிறது. லேவா தேவிக்காரன் நகையைக் கொடுக்க 
மாட்டேங்குறான்.. நீ என்னடான்னா.."

நான் என்னுடைய ஸ்டவ்வைக் கையில் எடுத்துக்கொண்டேன். இனிமேல் ரஸூல் கடைக்கு வருவதில்லை என்று சபதமும் எடுத்துக்கொண்டேன். நானும் வரமாட்டேன், என் தோழர்களையும் வரவிட மாட்டேன், ஆமாம்!ஆனால் இன்று ரஸூல்மியானை நான் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளேன். சின்ன வயதில் நான் செய்த தவறான சபதத்துக்காக வருந்துகிறேன். இப்போது ஒரு பழைய சைக்கிளை பழுதுபார்க்கக் கொடுத்திருக்கிறேன். பதினைந்து நாளைக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்பி வந்தேன். ஆனால், ரஸூல்மியானைக் காணவே முடிவதில்லை, அவர் வந்தால்தான் நடக்கும் என்று ரஹீம் சொல்லிவிட்டான். எப்பொழுதாவது ரஸூலைச் சந்திக்கிறேன். என் சைக்கிளை ரிப்பேர் செய்வதைவிட முக்கியமான எத்தனையோ வேலைகள் அவர் கையில் இருக்கின்றன என்பதையும் கவனிக்கிறேன்.

"பாவம் இந்த ஏழைப் பெண்கள் க்யூவிலே நின்னு துணி கிடைக்காமெ திண்டாடுது. இதுங்களுக்கு உதவ வேண்டும்" என்பார்.

இன்னொரு நாள் செல்கிறேன், ரஸூலைக் காணவில்லை. விபரம் தெரிய வருகிறது - கிராமத்தில் மலேரியா பரவி இருக்கிறது. குனைன் கிடைப்பதில்லை. மேஸ்திரி பச்சிலை மருந்தைக்கொண்டு கஷாயம் வைத்து கிராமத்தில் எல்லாருக்கும் கொடுக்கிறார்.

தினமும் இந்த மாதிரி சால்ஜாப்புகளைக் கேட்டுக்கொண்டு மௌனமாகத் திரும்புகிறேன். தினமும் அரச மரத்தில் அந்த விளம்பரப் பலகையைப் படிக்கிறேன் - 'ரஸூல் மேஸ்திரி - இங்கே பழுது பார்க்கப்படும்'. சாக்கட்டியினால் யாரோ ஒரு பொல்லாத சிறுவன் அதன் கீழே எழுதிய வாசகமும் கண்ணில் படுகிறது - 'இங்கே முதுகும் ரிப்பேர் செய்யப்படும்!' இந்த வாக்கியத்தை முழுமனதுடன் வழிமொழிந்தவாறு வீடு திரும்புகிறேன். சைக்கிள் இல்லாமல் எனக்கு எவ்வளவு இடைஞ்சல் என்பதையும் மறந்துவிடுகிறேன்.

(1946)

*

'பணீஷ்வர்நாத் ரேணு கதைகள்' தொகுப்பிலிருந்து.. 
தட்டச்சு ஆபிதீன்
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Sunday, September 6, 2015

நான் அறியாதவனென்றா நினைக்கிறீர்? - இஸ்லாமிய நீதிக் கதை!

அற்புதமான கதை இது . போர்வை பாயிஸ் ஜிப்ரி எழுதிய 'இஸ்லாமிய நீதிக் கதைகள்' என்ற நூலிலிருந்து பகிர்கிறேன். நம்ம ஊர் ஆலிம்ஷாக்கள் இம்மாதிரி கதைகளைச் சொல்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
*
முதியவருக்கு தாகத்துக்கு நீர் கொடுத்த கதை :

நபி இபுராஹிம் (அலை) அவர்கள் பாலைவனத்தில் தனது கூடாரத்தில் பரிவாரங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். அப்போது கடும் வெய்யிலில் மேனியெல்லாம் புழுதி படிந்த நிலையில் ஒரு வயோதிகர் ஒட்டகத்தில் அமர்ந்தவராக கூடாரத்தை நெருங்கி, குடிப்பதற்கு நீர் கேட்கிறார். நபி இபுறாஹிம் அவர்கள் ஒரு குவளையில் நீர் கொடுக்கிறார்.

நீரைப் பெற்றுக்கொண்ட முதியவர் முதலில் தனது ஒட்டகத்திற்கு நீர் புகட்டிவிட்டு,  சூரியனை வணங்கும் மதத்தவரான அவர் தண்ணீரை கைகளில் ஊற்றி சூரியனுக்கு அபிஷேகம் செய்கிறார். இதனைக் கண்ட நபி இபுறாஹிம் அவர்கள் வயோதிகர் கையிலிருந்த தண்ணீர் குவளையைப் பறித்தெடுக்கிறார். அத்தோடு சூரியனுக்கு அபிஷேகம் பண்ணவா உனக்கு நீர் கொடுத்தேன் என அந்தக் கிழவரையும் கடிந்து கொள்கிறார்.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் வயோதிகர் மனம் வெதும்புகிறார்.

அவ்வேளை அல்லா(ஹ்) வானவர் மீக்காயீல் மூலம் நபி இபுறாஹிமை கடிந்து கொள்கிறான்: 'ஏ! இபுறாஹிமே! உமது செயலை நான் கண்டிக்கிறேன். இத்தனை வருட காலமாக நான் உணவும், நீரும், அந்த மனிதருக்கு கொடுத்து வருகிறேனே, அந்த மனிதர் சூரியனை வணங்குபவர் என்பதை நான் அறியாதவனென்றா நினைக்கிறீர்? 
எனது அருட்கொடைகளிலிருந்து அந்த மனிதருக்கு உம்மால் ஒரு மிடறு தண்ணீர் கொடுக்க முடியவில்லையே. அந்த மனிதரின் தயாள குணத்தைப் பார்த்தீரா? தான் தாகத்துடன் இருந்தும் முதலில் தன் ஒட்டகைக்கல்லவா நீர் புகட்டினார்' என இறைவன் அறிவித்தான். உடன் நபி இபுறாஹிம் அவர்கள் அந்த மனிதரிடம் மன்னிப்புக்கோரி போதிய உணவும், நீரும் கொடுத்து வழியனுப்பிவைத்தார்கள்.

தன்னை வணங்குபவர்களுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாரபட்சம் காட்டாது உணவு வழங்கும் வல்ல இறைவனிடம் நபியவர்கள் மன்னிப்பை வேண்டி நின்றார்கள்.
*
*
நன்றி : போர்வை பாயிஸ் ஜிப்ரி & நூலகம்