Showing posts with label கீரனூர் ஜாகிர்ராஜா. Show all posts
Showing posts with label கீரனூர் ஜாகிர்ராஜா. Show all posts

Saturday, January 28, 2012

கீரனூர் ஜாகிர்ராஜா கட்டுரையும் ஒரு புதிரும்

’ஆச்சிமா’ என்று நாங்கள் அழைத்த சித்தி ஜூனைதா பேகம் குறித்து சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார் பிரபல எழுத்தாள நண்பர் கீரனூர் ஜாகிர்ராஜா. சுட்டி : http://jakirraja.blogspot.com/2012/01/1917-1998.html . பழைய ஆபிதீன் பக்கங்களில் ஆச்சிமா பற்றி நிறைய பதிவேற்றியிருக்கிறேன். ’ஆச்சிமா ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில்  நண்பர் நாகூர் ரூமியின் கட்டுரையோடு (இவரை கவிஞர் நாகூர் ரூமி என்று அழைக்கிறார் ஜாகிர்ராஜா. எப்படி  விடுவது மூச்சை என்று (மூச்சை மட்டும்) எளிமையாக  சொல்லித் தரும் A1 ஆன்மீகவாதியல்லவா நாகூர் ரூமி? )’காதலா கடமையா’ நாவலின் சுட்டி,  ஆச்சிமாவின் ’மண்ணில் மறைவது சில்லடியா ?’ கட்டுரை , நா.கண்ணனின் ’சித்தி ஜூனைதா பேகமும் முதுசொம் இலக்கியக் கூடமும்’ கட்டுரை மற்றும் ஆச்சிமாவின் அபூர்வமான நேர்காணல் இருக்கிறது. அ. வெண்ணிலாவின் ’கனவுலகும் படைப்புலகும்’ கட்டுரைரையை  தனியே பதிவேற்றியிருக்கிறேன். ’சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும் என்று நான் வைத்த தலைப்புடன் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களின் கட்டுரையும் (‘சித்தி ஜூனைதா – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ ) அங்கே உண்டு. இதெல்லாம் எத்தனை நாள் வேர்ட்பிரஸ்ஸில் இருக்கும் என்று தெரியவில்லை. காப்பி செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஆபிதீனுக்கும் தேவைப்படலாம். இங்கே சொல்ல வந்தது... நண்பர் ஜாகிர்ராஜாவால் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிர் பற்றி...


‘‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.’ என்கிறார் ஜாகிர்ராஜா.

என்ன புதிர், ஆச்சிமாவின் பேரன்பும், மன்னிக்கும் பெருந்தன்மையும்தான் மௌனத்திற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.


’இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் என் ஆலோசனையைக் கேட்க விரும்பினால் நான் கூற விரும்புவது இதுதான்; நீங்கள் உங்களுக்காக மட்டிலும் வாழ விரும்பாதீர்கள். உங்கள் நாட்டிற்காக – உங்கள் இனத்திற்காக – உங்கள் சமுதாயத்திற்காக – உங்கள் மக்கட்காக வாழுங்கள். பிறர் நலத்திற்காக வாழுங்கள். உங்கள் நலத்திற்காக மட்டிலும் வாழாதீர்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான். தனக்கென வாழாப் பிறர்க்குரியவராகத் திகழுங்கள்.’ என்று சொன்ன ஆச்சிமாவால்  அப்படித்தான் இருக்க இயலும்.

என்ன சொல்கிறீர்கள்?

***

நன்றி :  கீரனூர் ஜாகிர்ராஜா