Showing posts with label ஃபேஸ்புக். Show all posts
Showing posts with label ஃபேஸ்புக். Show all posts

Wednesday, July 1, 2026

சரித்திர நாயகர்களும் சதம் கண்ட சங்கமும் - நாகூர் அப்துல் கையூம்

நாகூர் கௌதிய்யா சங்கத்தின் நூற்றாண்டு விழா *மலரில் நண்பர் அப்துல் கையூம் எழுதிய கட்டுரை நன்றியுடன் பகிர்கிறேன். - AB

*


சரித்திர நாயகர்களும் சதம் கண்ட சங்கமும்

-        நாகூர் அப்துல் கையூம்

 

 

ஒரு நூற்றாண்டைத் தாண்டி வீறுநடை போடும் கெளதிய்யா சங்கத்தின் உன்னதங்களை ஒருசில பக்கங்களில் அடைத்துவிட இயலாது. BETTER LATE THAN NEVER என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. தாமதமாக கொண்டாடினாலும்  தகுந்த நேரத்தில் இச்சங்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தனித்துவமிக்க தரமான ஒரு ஓர் அற்புத நிகழ்வு. 

 



நாகூர் கெளதியா சங்கம் இதுவரை ஏராளமான பிரமுகர்களுக்கு வரவேற்பு அளித்து கெளரவித்திருக்கிறது. பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தலைவராக விளங்கிய  பனாத்வாலா - இப்படியாக எத்தனையோ முக்கியப் புள்ளிகள். இவ்வரவேற்புகளில் மிக முக்கியமானது நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பதில் சற்றும் ஐயமில்லை.  

 

காரணம் என்னவெனில் நாகூர் மண்ணின் மைந்தர் ஒருவர்  தமிழ்நாடு ஆளுநர் எனும் உயர்பதவியை ஏற்று சொந்த ஊருக்கு அடியெடுத்து வருகையில் அவர் பிறந்த மண்ணில் கொடுக்கப்படும் வரவேற்பு ஒரு சரித்திர நிகழ்வன்றோ?

 

பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிகத் தமிழக ஆளுநராக  நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்கள் நியமிக்கப்படுகிறார். 1980-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 27ஆம் நாள் அவர் பதவியேற்ற நன்னாள். பதவியேற்றபின்பு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நாகூர் கெளதிய்யா சங்கத்தில் அவருக்கு பிரமாண்டமான  வரவேற்பு அளிக்கப்படுகிறது.. 

 

பள்ளிப்பருவம் 

 

நாகூர்  மீயான்தெரு முனிசிபல் முகம்மதிய ஆண்கள் ஆரம்பநிலைப் பள்ளி. இப்பள்ளிக்கூடம்தான் இஸ்மாயீல் எனும் இலக்கிய இமயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த பாசறை. 

 

சிறுவன் இஸ்மாயீல் அப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரமது. தமிழ்நாடு மாநிலம்மெட்ராஸ் பிரஸிடென்ஸிஎன்று அழைக்கப்பட்ட காலம். ஒரு காலைப் பொழுதில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், வீதியில் பலத்த ஆரவாரம் ஒலிக்கின்றது. வாகனங்களின் அணிவகுப்பு சீராக வந்துக் கொண்டிருந்ததைக் கண்டு, பாடத்தை நிறுத்திவிட்டு, ஆசிரியர்களும் மாணவர்களை வேடிக்கை பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் செல்கின்றனர். திண்ணை மீதிருந்தும், சுற்றுச் சுவர் மீது ஏறி நின்றும், அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டு களிக்கின்றனர் மாணவர்கள்.

 

படோபகரமான வாகன அணிவகுப்புக்கிடையே ஒருமெர்ஸிடீஸ்படகுக்கார் பவனி வருகிறது. அதில் அட்டகாசமான தோரணையில் ஆங்கிலேய கவர்னர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். ஊர்வலம் பள்ளியின் வழியாக கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. உற்சாகம் மேலிட, வாகனங்கள் சென்ற வழியே, வைத்த பார்வை தீராது, வழிமேல் விழி வைத்து; கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருக்கிறான் சிறுவன் இஸ்மாயீல்.

 

இஸ்மாயீல் மீது பேரபிமானம் வைத்திருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐயர்டேய் பசங்களா! நம்ம இஸ்மாயீலும் ஒருநாள் இந்த மாதிரி கவர்னர் ஆகி அட்டகாசமாக ஊர்வலம் வருவான். பார்த்துக்கொண்டே இருங்க!என்று விளையாட்டாகச் சொன்னது அந்தச் சிறுவனின் காதில் அசரீரியாய்  ஒலித்துக் கொண்டிருக்கிறது. அன்பிற்குரிய ஆசிரியர் அகமகிழ்ந்து அளித்த நல்வாக்கு, ஒருநாள் உண்மையிலேயே பலிக்கும் என்று யாரும் ஊகித்திருக்க மாட்டார்கள். அந்த நல்வாக்கு பலித்து இப்போது நிறைவேறி இருந்தது. கெளதிய்யா சங்கம் அம்மாமனிதருக்கு அளித்த வரவேற்பு இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டு.

 

விளையும் பயிர் 

 

சிறுவன் இஸ்மாயீலுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. நாகூரில் நபிகள் நாயகத்தின் மீலாது விழாகொண்டாட்டம். அவ்விழாவில் இஸ்மாயீலுக்கு சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.  மடை திறந்த வெள்ளமென பேசி கேட்போரை வியப்பில் ஆழ்த்துகிறான் அச்சிறுவன்.விளையும் பயிர் முளையில் தெரியும்என்பார்களே, அதுபோல.

 

அதுமட்டுமன்றி, சிறுவயதில் அரபி மதரசா சென்று அரபி மொழியில் பயிற்சி பெற்று முறையாக முதிர்ச்சி பெற்றிருந்தான் அச்சிறுவன். பிற்காலத்தில் தமிழ்மொழியில் அபார பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், தொடக்க வயதில் அரபி மதரஸாவில் அடிப்படை மார்க்கக் கல்வி பயின்ற காரணத்தால் அதன்பின் ஆரம்பப் பள்ளியில் அடியெடுத்து வைத்த காலத்தில் அவனோடு படித்த மாணவர்களில் இவன்தான் வயதில் மூப்பு. இவன் வயதையொத்த பிற மாணவர்கள் மேல்வகுப்பில் இருந்ததைப் பார்த்து இவனுக்குள் ஒரு தீராத ஏக்கம். வாழ்க்கையில் ஏனோ பின்தங்கி விட்டதைப் போன்ற ஒரு திக்பிரமை. அதிகப்படியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம், தன் வயதையொத்த மாணவர்களுடன் தானும் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற உந்துதல், கல்வியில் இச்சிறுவன் காட்டிய பேரார்வம் இவையாவும் பள்ளி ஆசிரியர்களை இவன்பால் கவனத்தை ஈர்த்தது. 

 

இளமையில் சோகம் 

 

இஸ்மாயீலின் இளமைக் காலத்து வாழ்க்கைப் பாதையில் பூக்கள் விரித்திருக்கப் படவில்லை. அவன் கரடு முரடான முட்பாதையைக் கடக்க வேண்டியிருந்தது.  பி.முஹம்மது காசிம் மரைக்காயர், ருகையா பீவி இருவருக்கும் செல்வப்புதல்வானாய் வந்து பிறந்தவர்தான் நம் நாகூர் நாயகன். உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவரின் பெயர் ஜக்கரியா மரைக்காயர். இன்னொருவர் உம்மு ஹனிமா என்றழைக்கப்படும் சகோதரி ஆவார். நாகூர் லுக்மான் ஆலிம் சாயபு என்பவரின் வாழ்க்கைத் துணைவியார்.

 

ஒன்பதாவது வயதில், பெற்ற தாயையும், பதிமூன்றாவது வயதில் தந்தையையும் பறிகொடுத்த சிறுவன் இஸ்மாயீலுக்கு உலகமே இருண்டு போகிறது. ஆறுதல் தேடும் வயதில், ஆதரவு வேண்டும் பருவத்தில், அனாதையாய் ஆகிவிடுவது அளப்பரிய கொடுமையன்றோ? இருந்த போதிலும் உறவினர்கள் அவனைக் கைவிடவில்லை; கண்ணுங் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள்.

 

மேல்நிலைக்கல்வி 

 

இஸ்மாயீலுக்கு தமிழ்மொழி மீது ஓர் அதீத ஈடுபாடு ஏற்பட்டது நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான். ஆசிரியர் என்.ஆராவமுதன் ஐயங்கார் அவனுக்கு அளித்த உற்சாகமும், ஊக்குவிப்பும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்.  இந்த ஆராவமுதன் யாரென்றால்  பாடகர்  ஏ.வி.ரமணனின் தந்தை, பாடகி உமா ரமணணின் மாமனார். எஸ்.எஸ்.எல்.சி. வரை இஸ்மாயீலின் ஆசிரியராக இருந்து அவன் ஆற்றலை வளர்த்தவர்,

 

இஸ்மாயீல் மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பை எட்டியபோது தமிழிலக்கியத்தில் மென்மேலும் தேர்ச்சி பெறக்கூடிய அரிய  வாய்ப்பு கிடைக்கிறது.  சங்க இலக்கியத்தில் பெருந்திறன் வாய்ந்த சந்தானம் ஐயர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் போன்றவர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பு அவர் செய்த பெரும்பேறு எனலாம்.

 

பிறர் நோக்கு

 

மனவியல் நிபுணர் பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்கப் பெண்மணி எழுதி, ஆக்ஸ்ஃபோர்ட் பதிப்பகம் வெளியிட்ட, “Questioning of Ramayanas” என்ற ஆய்வுநூல் பெரும் சர்ச்சையை கிளப்பிய நூல். இதில் இந்து சமயத்தவரின் மனதை புண்படுத்தும் வகையில் தகவல்கள் அடங்கி இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு எழுந்து, இந்நூலை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

 

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தின் சமய விரிவாளராக பணியாற்றும் பேராசிரியை வாசுதா நாராயணன் எழுதிய  “The Ramayana and its Muslim Interpreters” என்ற ஆய்வுக்கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அதில் அவர் நீதிபதி இஸ்மாயீல் அவர்களை வானளவப் புகழ்ந்திருந்தார். 

 

திருக்குறளின் மேன்மையை எடுத்துச்சொல்ல கானடாவில் பிறந்த ஒரு ஜி.யு.போப் தேவைப்பட்டதைப் போன்று, நாகூர்க்காரரின் மகிமையை எடுத்துச் சொல்ல நமக்கொரு அமெரிக்கா பேராசிரியை தேவைப்படுகிறது. இதைப் படித்த உள்ளூர்க்காரனான நான் இவரின் மகிமையை இதுநாள்வரை உணரவில்லையே  என வெட்கித்துப் போனேன்.

 

படிப்படி முன்னேற்றம்

 

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய அவர் வகிக்காத பதவிகளே இல்லை எனலாம். வழக்குரைஞராக, சென்னை விவேகானந்தா மற்றும் சட்டக் கல்லூரியில் பகுதிநேரப் பேராசிரியராக, தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக. தில்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக, சென்னை உயர்மன்ற நீதிபதியாக, பிறகு தலைமை நீதிபதியாக, தற்காலிக கவர்னராக, இடையே கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, சட்டக் கமிஷன் தலைவராக, தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் கமிட்டியின் தலைவராக, இப்படியாக அவர் வகித்த அனைத்துப் பதவிகளிலும் அக்மார்க் முத்திரை பதித்தார்.

 

சென்னை  கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவராக இருந்த அவர், தொடக்ககால முதல் தனது மரணம்வரை அவ்வமைப்பின் தலைவராக நீடித்து சாதனை புரிந்தவர் .  

 

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் உறவுக்காரப் பிள்ளைகள் அவரைஜட்ஜப்பாஎன்றுதான் பாசத்துடன் அழைப்பார்கள்.உங்களுக்கு ஜட்ஜப்பா பிடிக்கும். அவருக்கோ கவிக்கம்பனுடைய விருத்தப்பா பிடிக்கும்என்று நான் அவர் உறவினர் ஒருவரிடம் நகைச்சுவையாக கூறுவதுண்டு.

 

தவறான கண்ணோட்டம்

 

காலம் முழுதும் அவர் கம்பராமாயணத்தின் புகழைப் பரப்புவதிலும், பட்டிமன்றங்களில் இராமபிரானுக்கு வக்காலத்து வாங்குவதில் தன் காலத்தை செலவிட்டார் என்ற விமர்சனம் பரவலாகவே உண்டு. பெரும்பாலும் அவர் பிறாமணச் சகோதர்களுக்கிடையே வாழ்ந்து வந்ததால், அவருடைய உணவு முறைகூட சுத்த சைவமாகவே மாறிவிட்டிருந்தது. கம்பனின் எழுத்தாற்றலில் அவர் தன் மனதைப் பறிகொடுத்ததென்னவோ உண்மை. அதற்காக அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளிலிருந்து விலகிப்போய் விட்டார் என்பது அர்த்தமல்ல. 

 

இஸ்லாமிய இலக்கியம்

 

நீதியரசர் எழுதிய முதல் நூல் மெளலானா ஆஜாத் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு. அப்போது அவருக்கு வெறும் 24 வயது. இந்நூலுக்கு முன்னுரை வழங்கியவர் யார் தெரியுமா? மூதறிஞர் ராஜாஜி.

 

அவரெழுதிய இஸ்லாமிய நூல்களில்அல்லாவுக்கு ஆயிரம் திருநாமங்கள்என்ற முத்தமிழ் நூல், இஸ்லாமிய எழுத்துலகில் முத்திரை பதித்த தித்திக்கும் படைப்பு. அரபுமொழியில்அஸ்மாவுல் ஹுஸ்னாஎன்றால் அழகிய திருநாமங்கள் என்று அர்த்தம். இந்நூலில் அவர் மார்க்க அறிஞர்களே வியக்கக் கூடிய அளவுக்கு பல நுட்பமான விஷயங்களை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். அரபு மொழியிலும்தமிழ் மொழியிலும் வல்லமை பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய ஓர் அறிவுபூர்வமான ஒரு நூலை வெளிக்கொணர இயலும் என்பது வெள்ளிடைமலை 

 

நபிகள் நாயகத்தின் நிறைவான வாழ்க்கை உமறுப்புலவருக்கு 'சீறப்புராணம்' என்ற காப்பியத்தை வடிக்க காரணமாக அமைந்தது. இப்றாஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் சேகுனாப் புலவருக்குதிரமணிமாலைஎன்னும் இலக்கியத்தைப்  படைக்க  உந்துதலாக இருந்தது. அதேபோன்று சுலைமான் நபியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வண்ணக் களஞ்சியப் புலவருக்குஇராஜநாயகம்என்னும் இலக்கியக் காப்பியம் வடிக்கத் தூண்டியது. யூசுப் நபியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் சாரணபாஸ்கரனாருக்கு "யூசுப்-ஜுலைகாஎன்ற காப்பியத்தை வடிக்க காரணமாயிருந்தது

 

சீறாப்புராணம்”, “யூசுப்-ஜுலைகா காவியம்”, “இராஜ நாயகம்போன்ற இலக்கியச் சுவைமிக்க இஸ்லாமியப்  படைப்புகள் அத்தனையும் அவர் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்துள்ளார்.  அந்த அற்புதமான திறனாய்வுகளை கட்டுரைகள்நூல்கள்சொற்பொழிவு  வாயிலாக தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு தரமானதாய் வார்த்தும் இருக்கிறார். சாரணபாஸ்கரனாரின்யூசுப்-ஜுலைகாகாப்பியத்திற்கு அணிந்துரை வழங்கியவர் நீதியரசர் மு.மு.இஸ்மாயீல்.

 

வண்ணக்களஞ்சியப் புலவரின்இராஜநாயகம்என்ற காப்பியத்தை திறனாய்வு செய்து நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் எழுதியஇனிக்கும் இராஜ நாயகம்என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

 

8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணக்களஞ்சியப் புலவரின் இயற்பெயர் செய்யது ஹமீது இப்ராஹிம் என்பதாகும். வண்ணம் என்னும் சந்தச் செய்யுள் பாடுவதில் வல்லவரான இவரை வண்ணக்களஞ்சியப் புலவர் என்ற பெயரைச்சூட்டி இவரைச் சிறப்பித்தனர். வண்ணக்களஞ்சியப் புலவர் மீசல் என்னும் ஊரில் பிறந்தார். அவர்  நாகூருக்கு அருகில் உள்ள பொறையார் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பதாயி மரைக்காயர் எனும் செல்வந்தரின் மகளை மணமுடித்துக் கொண்ட இவர், தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை நாகூரிலேயே கழித்தார்.  இவர் நாகூர்க்காரராகவே அறியப்பட்டார்.புலவர் கோட்டைஎன்றழைக்கப்பட்ட நாகூரில் செயலாற்றிய புலவர்கள் சபை இவருக்குவண்ணக்களஞ்சியப் புலவர்என்ற சிறப்பு பட்டத்தை அளித்து கெளரவித்தது.


காந்தியவாதி

2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம் வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைக் கண்ணால் காண்பதற்கு திருச்சி மாநகருக்கு  ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய் மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரமது.

 

இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்திஜீயின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்தவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன். புகழ் பெற்ற காந்தியவாதியான அவர் மகாத்மா காந்தியின் நூல்களைத் தொகுத்தவர். நீதியரசர் காந்தியச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். 

 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயீலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற்திறனும் சுவாமிநாதனை மிகவும் ஈர்த்தது. தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீல்  அவரைத் தன் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் போற்றினார்.

 

ஒரு பேட்டியின் போதுதங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்என்று கூறினார். அவரது நினைவாகபேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசுஎன்ற ஒன்றையும் நிறுவினார். 

 

இளம் வயதிலிருந்தே காந்தியின்ஹரிஜன்இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.

 

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச் சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்

 

கம்ப இராமாயணம் 

 

திருக்குறள் விளக்கத்திற்கு திருக்குறள் முனுசாமியைப் போன்று, சிலம்பதிகார விளக்கத்திற்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யைப் போன்று, கம்ப ராமாயணத்திற்குஅத்தாரிட்டியார் என்றால் எல்லோருடைய  நினைவிலும் உதிப்பது  நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுடைய  பெயர்தான். இன்றளவும் மதநல்லிணக்கத்திற்கு நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களைத்தான் எல்லோரும் உதாரணம் காட்டுகிறார்கள். 

 

1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணினார். அதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டபோது அவர் கலந்தாலோசனை செய்தது நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம்தான். இசையரசிக்கு இஸ்மாயில் சொன்ன யோசனை இதுதான். கம்பராமாயணப் பாடல்களை முதலில் மனனம் செய்து, அதன் பொருளுணர்ந்து அதன் பின்னர் பாடல் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் ஒரு பவ்யமான சிஷ்யையைப் போன்று அவ்வப்போது கம்பராமாயணத்தைப் பற்றிய சந்தேகங்களையும் அதன் அருஞ்சொற்பொருளையும் அவ்வப்போது ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

 

இலக்கியச் செல்வரும் எம்.ஜி.ஆரும்

 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாம் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சி 1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம்தேதி பகல் 12 மணிக்கு நடைந்தேறியது.  பதவியேற்பு சம்பிரதாயங்கள் முடிந்ததும் எம்.ஜி.ஆரும், கவர்னர் பட்வாரியும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொண்டனர். பதவியேற்ற 17 அமைச்சர்களும் எம்.ஜி.ஆர். காலைத் தொட்டு வணங்கினார்கள்.

 

மேடையிலிருந்து வேகமாக கீழிறங்கி வந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். முன் வரிசையில் அமர்ந்திருந்த நீதியரசரின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பவ்யமாக வணங்கி வாழ்த்துப் பெற்றார். நீதியரசர் மீது மற்றவர்கள் கொண்டிருந்த மரியாதைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

 

கெளதிய்யா பைத்து சபா

 

"கெளதிய்யா சங்கம்" என்பது  ஓர் ஆலமரம். கெளதிய்யா பள்ளிக்கூடம், கெளதிய்யா பைத்துசபா, கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் இவையாவும் அதன் விழுதுகளாக பரவிய அமைப்புகள். கெளதிய்யா பைத்துசபா, புலவர் ஆபிதீன் போன்ற இலக்கிய ஆளுமைகளையும், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா போன்ற இசை மேதைகளையும் உருவாக்கியது என்ற விவரம் மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும். இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக, நாகூருக்கு வருகை தந்த சரித்திர நாயகர்களுக்கு தந்த வரவேற்பைப் பற்றிய விவரங்கள் இன்றைய இளந்தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.

 

நான் சிறுவனாக இருக்கையில் என் தந்தைவழி பாட்டி அதை ஒரு சுவையான நிகழ்வாக விவரித்துச் சொல்ல நான் கேட்டு களித்திருக்கின்றேன்.

 

இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கிலாஃபத் இயக்கத்தின் தலைவர்களாக விளங்கிய அலி சகோதரர்கள் குறித்து உலகமே நன்கறியும். ஆங்கில ஏகாதிபத்திய காலனிய அரசுடன் ஒத்துழைக்க மறுத்து ஆங்கிலேயர்களை  கதிகலங்க வைத்தவர்கள் இந்த அலி சகோதரர்கள்.

 

இதில் மெளலானா முஹம்மது அலி ஜவஹர் இளைய சகோதரர். மெளலானா சௌகத் அலி கான் மூத்த சகோதரர்.  இவர்களின் தாயார் பீ அம்மா (Bi Ammaa) என்று அன்புடன் அழைக்கப்படும் ஹாஜியா ஆலாஜி பானு பேகம் அவர்களும் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட மகத்தான பெண்மணி ஆவார். கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்குகதர்என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்குகதர் ஆடைஎன்ற பெயர் வந்தது.

 

கெளதிய்யா சங்க கட்டடம் எழும்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அலி சகோதரர்கள் தங்கள் தாயார் பீ அம்மாவுடன் 1921ஆம் ஆண்டு எப்ரல் மாதம்  நாகூர் வருகை தந்தனர். ‘பைத்துபாடி  தப்ஸ்முழக்கத்துடன் கெளதிய்யா சங்கத்தாரும், நாகூர் முஸ்லிம் சங்கம் ஜமாத்தாரும் ஒன்றுகூடி தந்த பிரமாண்டமான வரவேற்பு நாகூரில் நடைபெற்ற ஒரு சரித்திர நிகழ்வு.

 

மெளலானா முகமது அலி அவர்கள் ஈரோட்டில் நடந்த உலமாக்கள் மாநாட்டுக்கு வருகை தந்தபோது ஈ.வெ.ரா பெரியார் இப்படிச் சொன்னார்.இந்த தேசம் காந்தியிடம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ இதோ இந்த மெளலானா முகமது அலி அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்" என்றார். அந்த அளவுக்கு இந்திய சுதந்திர வேள்வியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மெளலானா முகமது அலி. இந்த அலி  சகோதரர்களைப் பற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, “என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றனஎன்று காந்திஜி பெருமையாகச் சொன்னார். 

 

1930-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பற்றி கலந்துபேச லண்டனில் வட்டமேசை மாநாட்டுக்கு மெளலானா முகமது அலி அழைக்கப்பட்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணி நேரம் முழங்கினார்.

 

எனது நாட்டுக்கு சுதந்திரம் கொடுங்கள். அல்லது உங்கள் மண்ணில் அடக்கமாக எனக்கு கல்லறையில் இடம் கொடுங்கள்" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். சுதந்திரம் தரப்படவில்லை. ஆனால் இறைவன் அவரது நாட்டத்தை நிறைவேற்றினான். லண்டன் வட்டமேசை மாநாட்டில் உடல்நலக் குறைவோடு முழங்கிய அவர் 04-01-1931–ல் லண்டன் மாநகரிலேயே உயிர் பிரிந்தார்.

 

அவரது ஜனாஸாவை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த 22 நாடுகள் அந்தப் புனித மகானின் உடலைத் தங்களது மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்று கோரி வரிசையில் நின்றன. இறுதியில் ஜெருசலத்தின் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் உள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

அலி சகோதரர்களுக்கு பைத்து பாடி தப்ஸ்முழக்கத்துடன் நாகூர் மக்கள் அலி சகோதர்களுக்கும், அவர்களுடைய தாயார் பீ அம்மாவுக்கும் வரவேற்பு அளித்தனர் என்று பார்த்தோம் அல்லவா?  அந்த வரவேற்பு தந்த உற்சாகத்தின் பேரில் சொந்தமாக பைத்து சபா ஒன்றை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது.  கெளதிய்யா பைத்து சபாஅமைய இந்நிகழ்வு அடித்தளம் கண்டது.

 

முற்றும்

*



நன்றி : அப்துல் கையூம்

* Download the Malar (pdf)

Wednesday, July 23, 2025

நண்பர் தாஜ் - அழியா நினைவுகள்...


 

நாகூர்ரூமி, தாஜ், ஜஃபருல்லாவுடன்...(2006). ஃபோட்டோவைப் பார்த்ததுமே, ’ஹை, மூணு புத்திசாலிங்க’ என்றாள் அஸ்மா!

- என்றெழுதி பேஸ்புக்கில் சென்றவாரம் இந்தப் போட்டோவைப் பகிர்ந்திருந்தேன். அப்போது நண்பர்கள் எழுதியதை இங்கே பகிர்கிறேன்.

***

பி.கே. சிவகுமார் :

தாஜ் மரணம் ஓர் எதிர்பாராத, தொடர்ந்து இலக்கிய தளத்தில் ஏதோ ஒருவிதத்தில் எழுதியும் வாசித்தும் இயங்கி வந்த ஒருவரின் அதிர்ச்சிகரமான மரணம். அவருடைய ஒரு கதையை - அதன் நீளம் காரணமாக, அதனால் கதையில் தொய்வு விழுகிறது என நினைத்த காரணத்தால் என்னால் வார்த்தையில் வெளியிட இயலவில்லை. ஆனால் அதையெல்லாம் மீறி எப்போதும் என் மீது வாஞ்சையும் பிரியமும் கொண்டிருந்தார். சுந்தர ராமசாமியுடனான அவர் உரையாடலில் சு.ரா என் எழுத்துகள் குறித்து நான் ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொன்னார் என அவர் தான் திண்ணை இணைய இதழில் பதிவு செய்தார். அவருடன் மின்னஞ்சல், பேஸ்புக் தாண்டி, பெரிய தொடர்பில்லை. ஆனால் நல்ல புரிதல் இருந்தது இருவருக்கும்.

---------------------------------

’பதிவுகள்’ ஆசிரியர் வ.ந. கிரிதரன் :

நண்பர் தாஜ் மறக்க முடியாத ஆளுமை. 

22nd Jan 2019 Facebook

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ்  மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தேன்!

இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை 'அன்பு  கிரி' என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கதம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை.

நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை  அளவிட வார்த்தைகளேதுமில்லை.

சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

'பதிவுகள்' இதழில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் நண்பர் தாஜிம் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியினையே தந்தது. அச்செய்தினைக் கனவில் கூட எதிர்பார்த்திராத நிலையில் அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியினைத் தந்தது. கூடவே அளவிட முடியாத துயரையும் தந்தது. 

நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியின அண்மையில்தான் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி. 

சீர்காழி தாஜ் கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். http://tamilpukkal.blogspot.ca/

எழுத்தாளர் தாஜ் அவர்களின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் (முகநூல் நண்பர்களுட்பட) அனைவருக்கு எனது மற்றும் பதிவுகளின் ஆழ்ந்த இரங்கல்கள். கூடவே பதிவுகளில் , முகநூலில் வெளியான அவர் பற்றிய குறிப்புகளையும் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.


கட்டுரையை முழுமையாக வாசிக்க :

https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56/4918-2019-01-22-06-16-48

---------------------

Aug 2023 - Facebook

சீர்காழி தாஜின்  "தங்ஙள் அமீர்'! 

அமரர் சீர்காழி தாஜ் என்னைப்பொறுத்தவரையில் மறக்க முடியாத ஓர் இலக்கிய ஆளுமை.  அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் போய் விடுவார் என்பதை நான் நினைத்தும் பார்த்ததில்லை. தொடர்ந்தும் எழுத்தில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நினைத்திருந்த வேளையில் அவர் மறைந்து விட்டார்.  2019இல் அவர் மறைந்த போது அவர் மறைவதற்கு முதல் நாளும் முகநூலில் எழுதிக்கொண்டிருந்தார்.  மறுநாள் அவர் மறைவுச் செய்தியை அறிந்தபோது நம்புவதற்கே முடியாமலிருந்தது. அவரை நான் ஒருபோதும் சந்திக்கவேயில்லை. அது இன்னும் துயரைத்தந்தது. 

மீண்டுமொரு தடவை சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது.  நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வந்தார்.

 நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியொன்றை  'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் அவரது மறைவுக்குப் பின்னர் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி. 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன். 

எழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:

"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.

இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர்."


குறுநாவலை வாசிக்க -  https://www.geotamil.com/index.php/2021-02-14-02-59-48/2075-2014-04-23-09-43-08

Wednesday, April 10, 2024

ஓணான் மார்க்கம் (சிறுகதை) - ஆபிதீன்


கைலிக்குள் இருந்த பழைய கதை இது! ஆமாம், நிஜமாகவே பீரோவிலிருந்த கைலிகளுக்குள் எப்படியோ புகுந்திருந்தது. தன்னைப் பற்றிய கதை என்று தெரிந்துகொண்டு சரியான இடத்தில் மறைந்துகொண்ட அதன் புத்திசாலித்தனத்தை என்னென்பது! 

நேற்று அதை உருவும்போது, ’உருப்படாத கதை’ என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் தூக்கியெறிந்து இலக்கியத்தை நிலைநாட்டிய கவிஞர் ஒருவரின் நினைப்பும் வந்தது. நல்ல மனுசன். மவுத்தாகிவிட்டார். 

'கொஞ்சம் மாத்துனா ஓரளவு தேறும்’ என்று அவர் சொன்ன யோசனையை முடிந்தால் பிறகு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ். நல்லவேளையாக எழுதிய என் பெயர் அப்படியே இருக்கட்டும் என்றார். அல்ஹம்துலில்லாஹ். ஏனெனில், சும்மா தமாஷாக பேசிக்கொண்டிருந்தாலே நம் அனுபவம் இன்னொருவரின் பெயரில் அடுத்த நாள் வந்துவிடுகிறது.

சரி, கதையின் தலைப்பு : ஓணான் மார்க்கம்

இனி படிக்கலாம்.
***
X வடிவத்தில் இருக்கும் 'ரொஹையான் கட்டை' மாதிரி யஹ்யா மரைக்காயரின் கைகள் பின்னியிருந்தன. தாடை , மேல் விரியும் புள்ளியில் கவலையோடு உட்கார்ந்திருந்தது. முழங்கை மூட்டுக்கள் கணக்குப்பிள்ளை மேஜை போல இருக்கும் ’கல்லா’வில் ஊன்றியிருக்க, கடைத் தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார் அவர் . 

வெயிலை மறைக்கப் போட்டிருந்த மரப்புதான் அசைந்து கொண்டிருந்தது.
 
ஒரு ’கைநேஞ்சி’ கூட விற்றபாடில்லை. 'ஓணான் மார்க்' என்கிற பெயரே சரியில்லையே முதலில். சாயம் போகாதது -அல்லது - போனாலும் அடுத்த வண்ணம் வந்துவிடும் என்பதை symbolicஆக உணர்த்தத்தான் அந்த ஓணான் என்று மரைக்காயர் சொன்னார் எல்லோரிடமும். அது பச்சோந்தியல்லவா என்று கடைத்தெருவில் கேட்டபோதுதான் அவருக்குத் தன் தவறு புரிந்தது. ஆனால் அதற்குள்ளாக 'ச்சாப்பு' குத்தப்பட்டு  லேபிளும் ஒட்டப்பட்ட கைலி பண்டல்கள் வந்து இறங்கி விட்டன. உருவம் கூடுமா கூடாதா எனும் வாதங்களுக்கு காது கொடுக்காமல் 'விசில் மார்க்' லேபிள்களுக்கு தன்னுடைய ஓணான் எவ்வளவோ பரவாயில்லை என்று மரைக்காயர் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார். உண்மைதான். விசில், silhouetteல் இருக்கும்போது அசப்பில் அது தரும் உருவமும் உணர்வுமே வேறு...! வட நாட்டில் எங்கோ ஒரு கோசா (அலி) கூட  தான் விரும்பிப் பெற்ற அந்த சின்னத்தில் தேர்தலில் நின்று ஜெயித்தாள்/ர். மத்திய மந்திரியாகவும் ஆகியிருக்கக் கூடும்.

இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கடை போர்டு கூட ரெடியாகி விட்டது. விலை உயர்ந்த பிளாஸ்டிக் சைன் போர்டு அல்லதான். ஆனால் அதை விடப் பளபளப்பாக மிட்டாய் ரோஸ் கலரில் ஆர்டிஸ்ட் சையதுவாப்பா செய்து கொடுத்த தகர போர்டு. ஓணான் ஒன்பது கலரில் இருந்தது - வரைந்தவனுக்கு காசு கேட்டுக் கொண்டு.

'வுடு! எனக்கு கிடைக்கிம்டு இருந்தா நான் பண்டி பிராண்ட் போட்டு வித்தாலும் பறந்து போயிடும்' என்றார் மரைக்காயர். 

'அதுக்கு பண்டியையே வித்துக்கிட்டு இருக்க வேண்டியதுதானெ..பஜார்லே வந்து ஏன் நாத்தம் பண்ணிக்கிட்டு இரிக்கனும்? இந்தோ இக்கிது பள்ளிவாசல். அதுக்கு போவாம கடை முன்னாலேயே ஒண்ணுக்கு இருந்தா எவனாவது வருவானா வாங்க , அட, பார்க்க?' என்றார்கள் பாவா பஜாரில்.

அதற்குத்தான் அ·ப்ஜலை வேலைக்கு வைத்திருக்கிறாரே மரைக்காயர்! labelஇல் உள்ள ஓணானையும் மரைக்காரரின் ஓணானையும் அவன் ஒப்பிட்டு நோக்க ஒரு அரிய வாய்ப்பு.

அதையாவது பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் அந்த குடலைப் பிடுங்கும் மூத்திர நாற்றம்... அ·ப்ஜலுக்கு அது கொடுமையாக இருந்தது. ஏதோ பெரிய வியாதி பிடித்த உடம்பிலிருந்து வெளியாகும் மூத்திரத்தின் நாற்றம்...

வேறு கடையில் வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால் 'சொல்லு கேக்காத புள்ளெ' என்றுஅவன் உம்மாவுக்கு கோபம் வருகிறது. மரைக்காயர் அவன் வாப்பாவுக்கு தூரத்து சொந்தக்காரராம். 'என்னா ஒரு ஓணான் தாண்டுற அளவுக்கு தூரம் இக்கிமா?' என்று அ·ப்ஜல் வெடைத்தான். கோலாலம்பூரில் உள்ள அவன் வாப்பாவுக்கு கேட்டு விட்டது!

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு எல்லா நல்ல முஸ்லீம் பிள்ளைகளையும் போல அ·ப்ஜல் அரபு நாடு போவதற்காக காத்துக் கொண்டிருக்கும்போது அவன் வாப்பாவின் தற்காலிக முடிவு , சம்பளம் சரியாகக் கொடுக்கும் மரைக்காயரின் கைலிக் கடல். 

நாளுக்கு ஒன்றாய் கைலிக் கடைகள் நாவூரில் முளைக்கின்றன. கைலி மலைகளின் நடுவே ஊர் கணவாய் போல ஓடுகிறது என்று சொல்லலாம். சென்னையில் உள்ள பெரும்பெரும் கைலிக் கம்பெனிகளுக்கு ஏஜெண்டாக மாறிக் கொண்டு கண்ணை அள்ளும் வண்ணத்திலும் டிசைனிலும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கம்பெனி சின்னங்கள் கவர்ச்சிகரமாக இருந்தால் கைலிகளில் பெயர்களோ நேற்றுதான் seal உடைக்கப்பட்ட நடிகைகளின் பெயர்களில் மனதை அள்ளுகின்றன. அல்லது லேட்டஸ்ட் ஹிட் படங்களில் பெயர்கள். கம்பெனி பெயருக்கு ஒன்றும் கைலி பெயருக்கு ஒன்றுமாக ஜனங்கள் வாங்குகிறார்கள். ஒன்று இடுப்புக்கு கீழும் மற்றொன்று இடுப்புக்கு மேலுமாக இருக்கலாம். வெறும் கைலிகள் மட்டுமின்றி பனியன்கள் , ஜட்டிகள் , பெண்களுக்கான பத்தாய் கைலிகளும் வேறு... கூட்டம் நிரம்பி வழிகிறது அந்தக் கடைகளில்.

மரைக்காயரோ  விலை மலிவு என்று எங்கிருந்தோ மெஷின் தறியிலிருந்து வாங்கிவந்து கைலிக்குள் ஓணானை விடுகிறார். வியாபார மூளையாம். ஆமாம், ஓணானுக்கு மூளை இருக்கிறதா? 'ஓணானை அடித்தால் ஒன்பது நன்மை' என்று பையன்கள் சொல்வது அதற்குத் தெரியுமா ?

'அது எப்படிங்கனி அறுவதுக்கு நாப்பதும் எம்பதுக்கு எம்பதும் இருவதுக்கு இருவது மாதிரியே இக்கிது?!' என்று மரைக்காயரின் நண்பர் கேட்டார் . 'பாயடி'யும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்த அ·ப்ஜல் , மரைக்காயரின் கோபத்தைப் பார்த்து அடக்கிக் கொண்டான்.

மரைக்காயர், 'என்னட size சரியா இக்கிம்ங்கனி!' என்றார்.

'உம்மட size ஆ? 'உமர் ஹத்தாப்’ட மாதிரிலெ ஒன்றரை முழம் இக்கிம்!'

நண்பரின் கேலியை மரைக்காயர் பொருட்படுத்தவில்லை. ' XXX787 கம்பெனியை அடிக்க முடியாது' என்று சொன்ன நண்பரின் மூக்கை அறுக்க XXX787 கடையெலேர்ந்து ஒரு 54 இஞ்ச் ஒண்ணு எடுத்து வா தம்பி' என்றார் மரைக்காயர். எடுத்து வந்து ஓணான் மார்க்கோடு அளந்ததில் ஒணானின் நீளம் அதிகமாக இருந்தது. 'இல்லே... அதுக்குப் போட்டியா இக்கிற XXX785தான் சரியா இக்கிம் ' என்றார் நண்பர் விட்டுக் கொடுக்காமல் . 'அப்போ XXX785 லெ ஒண்ணு எடுத்து வா' என்றார் மரைக்காயர். அதுவும் ஓணானை விட கம்மிதான்!

நண்பருக்கு அவமானமாகப் போய்விட்டது. 'சரிதான் ரெண்டு பேருமே ஒரு சாமானுக்கு பொறந்தவனுவதானே' என்றார்.

மரைக்காயருக்கு எதையோ நிரூபித்து விட்ட திருப்தி! அவரது கைலி ஓணானுக்குப் பிறந்ததாக்கும்..

திருப்தி , எதையாவது விற்று கிடைப்பதில் வரும் லாபத்தில் அல்லவா வர வேண்டும் ? 

அ·ப்ஜலுக்கு முன்னால் கால்மாட்டு சந்திலிருந்து ஒரு சின்ன பையன் வேலைக்கு வந்தான். கடை ஆரம்பித்த புதிது. கடை ஆரம்பிக்கவே ஒரு வருடம் ஆகியிருக்கிறது. மரைக்காயர் இலேசில் யாராலும் அணுக முடியாத மனாம் சாபுவை  அணுகி , கடை திறக்கச் சொல்லும் உத்தரவு வரும் கனவுக்காக அலைந்து , கடைசியில் மனாம்சாபுவுக்கு அந்த கனவு வந்ததும்தான் கடையைத் திறந்தார். மனாம்சாபுவுக்கு உத்தரவு கொடுத்தது கூட ஓணாணாகத்தான் இருக்கும். கனவின் மூலமாக மனாம்சாபு கைலியையும் விற்க முடியுமா? அதை மரைக்காயர்தான் செய்ய வேண்டும்.

மரைக்காயர் கைலி விற்க வேண்டும் என்று கடையில் உட்காராமல் தர்காவில் உட்கார்ந்தார் நேர்ந்து கொண்டு!

அவ்வப்போது கடைக்கு வந்து பையனிடம் விசாரணை: 'என்னாங்கனி .. ஏதாவது வித்தியுமா?'

'இல்லே மாமா'

'ஹைர் !.. நடக்கும்; பாவா நடத்திக் காட்டுவாஹா!'

பத்து நாளைக்குப் பிறகு நடந்தது. 

பையன் இரண்டு ரூபாய்க்கு 'போனி’ பண்ணியிருந்தான்! அது கடை சாமானல்ல. பக்கத்து சிங்கப்பூர்க் கடை ஆள் , விற்ற பிறகு காசு தரச் சொல்லியிருக்கும் சின்னப் பிள்ளைகள் ஜட்டி. made as china ! . இதில் மரைக்காயருக்கு பாதி லாபம் இருக்கிறது என்றாலும் பக்கத்து கடைக்காரனின் வியாபார சாமர்த்தியத்தை அவரும் காட்டியிருந்தால் இடம் மாறிய சந்தோஷத்திலாவது ஓணான் ஒன்று விற்றுப் போயிருக்கும். சாமர்த்தியம் சுத்தமாகக் கிடையாது மரைக்காயருக்கு. இருந்திருந்தால் மற்ற கடைக்காரர்கள் செய்வது மாதிரி  கூரையை கடைத்தெரு பாதிவரை இழுத்து கைலிகளை தொங்கவிட்டு , கூரை நிழலின் சுகத்துக்காக ஏங்கும் டைல்ஸ் தரையும் போட்டிருப்பாரே ! எப்படியோ அவர் கல்லாவும் காசை பார்த்து விட்டது.

மரைக்காயருக்கு சந்தோசம். அதிர்ஷ்டத்தை வாங்கும் தகுதி நமக்கு இருக்கிறதா இல்லையா  என்று check பண்ணிக் கொண்டுதான் அதிர்ஷ்டம் வரும். இப்போது மரைக்காயருக்கு தகுதி வந்து விட்டது. இனிமேல் கடைக்கு முன் தேங்கியுள்ள மூத்திரக் குட்டை ஓடி மறைகிற மாதிரி ஒரு பெரிய மழை வரத்தான் போகிறது.

கல்லாவில் முதன் முதலாக காசை பார்த்து சந்தோஷத்தில் 'என்னடா வித்தே..?' என்றார் பையனிடம் செல்லமாக. கெட்டிக்கார பையன். ஆனால் அநியாய மறதி. 

'ம்..ம்... ஒண்ணு வித்தேன் மாமா..' என்றான்.

'அதுதான் எதுண்டு கேக்குறேன்'

'இல்லே மாமா...ஒரு பொம்பளை வந்தாஹா.. 'பாபா செட்' இக்கிதாண்டு கேட்டாஹா.. இல்லேண்டேன்.. அப்புறம் வெறெ என்னமோ ஒண்ணு கேட்டாஹா. அதை வித்தேன். அது.. அது...'

'பரவாயில்லே.. ரெண்டு ரூவாயா இந்தாலும் கணக்குலே எளுதனும்லே நான்?. இப்படி இஞ்சிப் பேயன் மாதிரி இரிக்கக் கூடாது. யோசிச்சி வை. நான் தொழுவிட்டு வந்துடுறேன்..'

அசருக்கு போன மரைக்காயர் இஷாவையெல்லாம் முடித்து விட்டு கடை கட்டுகிற நேரத்தில் வந்து சேர்ந்தார். பையனிடம் கேட்டார் : 'நினைப்புக்கு வந்திச்சிலே ? சொல்லு..என்ன வித்தா ?'

'ஒண்ணு வித்தேன் மாமா ரெண்டு ரூவாய்க்கி. அது.. அது என்னாண்டுதான்..' - பையன் இழுத்தான் எச்சிலை விழுங்கிக் கொண்டே.

'செல்லக்கனி சாபுட்டெ கணக்கு போட்டு பாக்கனுமோ?'

'இல்லே மாமா..ஒண்ணு வித்...'

'சரி ! நீ எழுது. நான் சொல்றேன் என்னா சாமாண்டு..' - கணக்கு புத்தகத்தைத் தூக்கி பையன் முன் போட்டார் மரைக்காயர்.

'ம்... எழுது... உம்மாட பப்பான் - ரெண்டு ரூவா!'

பையன் எப்படி இருப்பான் ?

அப்படி ஏதாவது ஏடாகூடாமாக சொல்லி விடுவாரோ என்று அ·ப்ஜலுக்கும் பயமாக இருந்தது. தவிர எதையாவது விற்றால் அல்லவா சம்பளம் கொடுப்பார்? அல்லது கைலி ஒன்றை சம்பளமாகக் கொடுத்து விடுவாரா?
 கடை இந்த வள்ளலில் இருக்கும்போது அ·ப்ஜலின் புரட்சிக்கார சென்னை நண்பன் ஒரு நாள் வந்தான். மரைக்காயர் , ஒரு பார்வைக்கு வேலைக்காரன் மாதிரிதான் இருப்பார். அதற்காக தன் நண்பனுடன் உட்கார்ந்திருப்பவர் யார், என்ன என்று கூட யோசிக்காமலா கணேஷ் பேசுவது?

'திருடனும் ! நாம எடுக்கப் போற art filmக்கு இந்த கடையிலிருந்து வர்ற சம்பளம் மட்டும் சரி வராது.  தெரியுமா, மெஸ்னியாவ்ஸ்யாகி கூட கேமராவை திருடித்தான்டா படம் எடுத்தான்..'

கெடுத்தானே பாவி!

மரைக்காயரின் முகம் மூத்திரம் குடித்த ஓணான் மாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சந்தோசம் இருக்கும் என்பது அ·ப்ஜலின் அனுமானம். ஏதோ ஒன்று கடையில் இருக்கப் போய்தானே திருடச் சொல்கிறான் ?

ஒரு சல்லி கூட விற்காத கடையில் ஓணானைத்தான் திருட வேண்டும் - 'அல்லாஹும்ம சல்லி வ சல்லி' என்று சொல்லிக் கொண்டு. 
ஒரே ஒரு முறை கைலி விற்றதுதான். ஆனால் காசு வரவில்லை. வீட்டிலிருந்து கொண்டு அனுப்பச் சொன்னார் ஒரு மேலத்தெரு காக்கா. அவர் ·போனில் சொன்னபடியே ஒரு ரெட்டை மூட்டுக் கைலியை , கடனுக்கு தைத்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அ·ப்ஜல் காசுக்கு நின்றான். 'நாளைக்கி கடைத்தெரு வரும்போது 'பச்சை' (டாலர்)ஐ மாத்தி தரேங்கனி... யஹ்யாட்டெ சொல்லும்..' என்றார் அவர். அடுத்த நாள் அவருடைய மைய்யத்துதான் 'கலிமா..ஷஹாதா.!' என்று மூமின் certificate வாங்கியபடி பஜாரில் கடந்து போனது. போனது எளிமையான 'சந்துக்'. மரப்பெட்டி அல்ல. டாலர் இன்னும் மாற்றப் படவில்லை போலும்...

விற்ற ஒரே கைலிக்கும் காசு கிடைக்காத வருத்தத்தை விட 'ஓணானைக் கட்டியதால்தான் அவர் மெளத்..' என்று XXX785 கைலி கடைக்காரன் கிளப்பிய பிஸாது யஹ்யா மரைக்காயரை ரொம்பவும் பாதித்தது. 'எந்த நேரத்துலே இதை சொல்றான் பாரு...! ஒரு தொழுவாளியெ மனம் கசங்க வைச்சவனை அல்லாஹ் சும்மா வுட மாட்டான்.. பாத்துக்கிட்டே இரு..' என்றார் அ·ப்ஜலிடம். பிஸாதை மாற்ற ,  மெளத்தானவர் எப்போதும் ஓணானைத்தான் கட்டுவார் பிரியமாக என்று சலாம் கொடுக்க வந்த அத்தனை பேரிடமும் சொல்லிக் மரைக்காயர் புலம்பிக் கொண்டிருந்தில் வேறு எல்லோருக்கும் தெரிந்து போனது !

அன்றிலிருந்து வாடிக்கையாளின் வருகைக்காக மரைக்காயரின் முகம் வானத்தை வானத்தைப் பார்த்துக் கொண்டு ஓணான் போலவே இருந்தது.  நாக்கு திடீரெரென்று நீண்டு ஒருநாள் கிராக்கியைப் பிடித்தே விட்டது - தெரிந்த ஒரு சாபு மூலம். ஜியாரத்திற்கு வந்த பாம்பேகாரன். 'க்யா தாம் ஹே?' என்று கேட்டான் ஒரு கைலியைப் பார்த்து. 'தாம்' (dhaam) என்றால் விலை என்று சாபுக்கு தெரியவில்லை. அவருக்குத் தெரிந்தது அடுத்து கிராக்கியை முடி இறக்கக் கூட்டிக் கொண்டு போவதுதான். அ·ப்ஜலுக்கும் தெரியவில்லை. செளதி போகும் ஏற்பாட்டிற்காக பாம்பே சென்று திரும்பி வரும்போது ரயிலில் ஒரு கிழவி அவனிடம் கேட்டாள். 'பாம்பே கயா?'. அர்த்தம் தெரியாமல் பேமுழி முழித்துக் கொண்டு காது செவிடானவன் போல நடித்தவன் அவன். 'தாம்' தெரியுமா இப்போது ? மரைக்காயர்தான் உதவிக்கு வந்தார். கைலி பாஷையில் 'டாம்' என்றால் கட்டம் என்று அர்த்தம். ஹ, இது தெரியாதா அவருக்கு?

'யே படா படா டாம் ஹை !'.

பாம்பேகாரன் ஏற இறங்க அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு ஓடினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

மரைக்காயரின் சோகத்தைப் போக்க அவர் வீட்டு மனுஷர்கள் கைலி வாங்கினால்தான் உண்டு. ஆனால் அவர் வீட்டுப் பெண்களோ 'கைலிண்டா ஒரு ’ஜீமத்’ இக்கெ வாணாம்? இஹல்ட்டெ கைலி வாங்கி உடுத்துனா பேண்டவன் கூட எந்திரிக்க மாட்டான் பாத்து!' என்கிறார்கள். பேலுபவன் முன்னால் இவர்கள் ஏன் போக வேண்டும் ? 

நம் மதிப்பு நமக்கு எப்போதுமே தெரிவதில்லை. மனசெல்லாம் வெளியில்தான் பெருமை காண்கிறது. 

மனாம் சாபுக்கும் இந்த கதிதான். வெளியூர் ஜனங்கள் அவர் கனவு கண்டு சொல்லும் உத்தரவுக்காக மண்டுகிறார்கள். ஆனால் அவர் வீட்டு பெண்களோ தன் வீட்டு பையன் அரபுநாடு போவானா என்று கணக்கு போட்டுப் பார்க்க குஞ்சுக்கொல்லை ஹஜ்ரத்தைப் பார்க்கப் போகிறார்கள் . சமயத்தில் அரபுநாடே போய் விடுகிறார்கள்!

உள்ளூர் என்றாலே உதவாதது என்று பார்த்தால் வெளியூர் ஆட்கள் வந்து நாவூர் ஓணானைப் பிடித்துக் கொண்டு போக வேண்டுமே.. ஏன் வாங்கவில்லை? எப்படிப் பார்த்தாலும் கைலி டிசைன்கள் நாவூரில் கிடைப்பதுபோல அவர்கள் ஊரில் கிடைக்குமா? ஒவ்வொரு வருடமும் கைலிகளுக்கு புது டிசைன் அறிமுகப்படுத்துவதே நாவூர் கந்தூரியில்தானே.. என்னென்ன வகை கட்டங்கள்..! சட்டைத் துணியாகக் கூட உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் மரைக்காயரோ புதுமை என்று 'கம்பம்' இல்லாத கைலிகளை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறார். ' கைலிட பின்பக்கம்டு தெரிய ஒரு டிசைனா ? அட..போங்கப்பா' என்கிறார் பெருமை வழிய.

'இது என்ன பெரிய நூதனமா ?' என்று பஜாரில் கேட்டார்கள். அவர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. பட்டுப் புடவைகளுக்கு வருகிற மாதிரி அடியில் பார்டர் போட்டெல்லாம் புதுமைகள் வருகிறபோது மரைக்காயரின் புதுமை தூசு அல்லவா?

'அப்ப முன்னாலேயும் பின்னாலேயும் ஒட்டை போட்டுத்தான் விக்கெனும்..' என்றார் மரைக்காயர்.

நினைத்துப் பார்த்தாலே சிரிப்பாக இருந்தது அ·ப்ஜலுக்கு. 'இவர்களுக்கு மட்டும் தடை இல்லை என்றால்..' என்று டி.வியில் இரட்டைத்தொப்பி மார்க் கைலி விளம்பரம் வரும். வக்கீல், டிரா·பிக் போலீஸ், டாக்டர் எல்லோரும் கைலிகளோடுதான் அலைவார்கள் டூட்டி நேரத்தில். அவர்கள் எல்லாரும் மரைக்காயர் சொன்ன யோசனை படி கைலி கட்டியிருந்தால் ஜோராக இருக்கும் இல்லையா ? 'நல்ல வேளை ஜனாதிபதியை வுட்டுப்புட்டானுவ!..' என்று கிண்டல் செய்தாலும் 'விளம்பரம் நல்லாத்தான் இக்கிது..' என்று சொன்ன மரைக்காயரை அசத்த, 'படிச்ச புள்ளெ'யான அ·ப்ஜலும் ஒரு caption போட்டான். ஆறுமுகம் பிரெஸ்ஸில் 1000 நோட்டிஸ் அடித்தார்கள்.

கைலிகளை வாங்காதீர்கள் !

அசத்தலாக இல்லை ? அதாவது தரமில்லாத கைலிகளை வாங்காதீர்கள்; ஓணான் மார்க் கைலிகளையே வாங்குங்கள் ! இது நோட்டிஸ் அடியில் சின்ன எழுத்தில் வரும். ஆனால் யாருக்கு அவனது விளம்பர யுக்தியையெல்லாம் கவனிக்க நேரமிருக்கிறது ? ஜும்ஆ தொழுதுவிட்டு ஓடிவருபவர்கள் , நேர்ந்துகொண்டு பவுருவதற்கு காத்திருக்கும் பாலைப் பார்ப்பார்களா அல்லது பிரயோஜனமில்லாத நோட்டிஸ்களையா ? முதல் வரியில் மட்டும் கண்ணை ஒட்டி வேறு ஏதாவது படம் தெரிகிறதா என்று பார்த்து விட்டு ஓணானைப் பார்த்ததும் கசக்கி கீழே எறிந்து விடுகிறார்கள்.

மரைக்காயர் அதற்கப்புறம் விளம்பரம் பற்றி ஏதும் அவனிடம் பேசுவதில்லை.

பக்கத்து கிராமங்களுக்கு சைக்கிளில் சரக்கை எடுத்துச் சென்று கடனில் கொடுத்து வாங்கும் முறை பற்றி அவன் சொன்னதையும் காதில் வாங்கவில்லை. ஒரு விளம்பரத்திலேயே திறமையைப் பார்த்து விட்டார்.

பிரபலமாக இருக்கிற XXX பிராண்டுகளில் கொஞ்சம் வாங்கிப் போடலாம் கூடவே. ஆனால் அவர்கள் கடனுக்கு கொடுக்க மாட்டார்கள். பணத்திற்கு மரைக்காயர் எங்கே போவார் ? குவைத்தில் இருக்கிற அவர் மகன் , மலேயா சபரை முடித்துவிட்டு ஊருக்கு வந்த தன் வாப்பாவுக்காக இரக்கப்பட்டு அனுப்பிய பணத்தில் இந்த சரக்கு வாங்கவே அவருக்கு மூச்சு வாங்கி விட்டது.  தர்கா கடையாக இருப்பதால் வாடகை கம்மியாக இருப்பதாலும் ஓணான் எப்படியோ ஓடுகிறது. ஓடுகிறது என்று சொல்வது கூட தப்புதான். 

ஒன்றிரண்டாவது விற்க கந்தூரி சமயத்தில்தான் கடையை திறந்திருக்க வேண்டும். ஆனால் சார்மினார், தாஜ்மஹால் போன்ற பிரமாண்டமான வடிவங்களில் ஸ்டால் போட்டு கூடவே பிளாஸ்டிக் வாளிகளும் இனாமாகத் தந்து பெரிய கம்பெனிகள் தூள் பறத்தும் போது மரைக்காயரின் ஓணான் என்ன செய்து விட முடியும்? அந்தக் காலத்தில் பீடி கம்பெனிகள் விளம்பரத்திற்காக பெரிய பெரிய ஆட்டக்காரிகளையெல்லாம் கொண்டு வந்து தங்களின் vanக்கு மேல் குட்டைப் பாவாடையோடு ஆட விடுவார்கள் - கீழிருந்து பார்ப்பவர்களின் பீடி நன்றாக புகைவதற்காக. அது போல் செய்தால்தான் உண்டு. அப்போதும் ஓணான் விற்குமா என்று சந்தேகம்தான்

பேசாமல் இந்த கைலிகளை யாரிடமாவது தள்ளி விட்டுவிட்டு சிங்கப்பூர் கடையாக மாற்றி விடவேண்டும். அந்த காலம் மாதிரியா கஸ்டம்ஸ் பிரச்சனை எல்லாம்? விற்பவர்களை ஓட ஓட  விரட்டி அடித்து, பூட்ஸால் மிதித்த அதே கஸ்டம்ஸ் ஆபீஸர்கள்தானே  வகை வகையாய் ·பாரின் சாமான்களுக்கு தேடி வருகிறார்கள் இப்போதெல்லாம். அரசாங்கம் மாதிரியே சட்டமும் வேடிக்கையானது.  யோசித்த அ·ப்ஜல், மரைக்காரரிடம் சொன்னான்.

'அட, நல்ல ஐடியாதாங்கனி..!' என்று அவனை ஆச்சரியமாக பார்த்தார். தன் நண்பனின் மகனா புத்திசாலித்தனமாக பேசுவது !

'வைக்கலாம்தான்... ஆனா யஹ்யாவுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்றார் பொன்னம்பலம். தையற்காரர். தமாஷானவர். பக்கத்து கடை வாசலில்அவரது மெஷின் இருக்கிறது. அது எந்நேரமும் கைலி தைப்பதில் பிஸியாக இருப்பதால் மரைக்காயருக்கு பொறாமை உண்டு.

'ஏன் அண்ணே..' என்று கேட்டான் அ·ப்ஜல்.

'விக்கெ வர்ற பொம்பளைட்டே 'ஐட்டத்தைக் காட்டுங்க..' ண்டு சொல்லனுமே !'  

கைலிக்கடைகாரர்களும் சாதாரணமானவர்களா ? ஆண்கள் இல்லா வீட்டிலிருந்து கைலி எடுக்க வரும் பெண்களிடம் அலாதியான கரிசனத்துடன் 'விரிக்கவா?' என்று சொல்வார்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே. கையில் கைலிகள் ஆடும், எச்சரிக்கையாக.

அருவருப்பாக பேசுகிறார் என்று பொன்னம்பலத்தை தள்ளி விட்டுவிடவும்  முடியாது. அவர் வேறொரு கைலிக்கடை பக்கம் மெஷினை கொண்டு போனால் கைலியை தைக்க வருபர்களின் கருணைப் பார்வையையும் இழந்து விட வேண்டியிருக்கும். பஜாரில் இரண்டு தையற்காரர்கள் இருந்தாலும் பொன்னம்பலத்தின் தையல்தான் பிரபலம். 

கைலிகள் ஏன் தைக்கப்பட்டே கம்பெனிகளிலிருந்து வருவதில்லை என்பது ஒரு புதிர். கைலியை வாங்கி , பிறகு தைப்பதற்கு என்று 3 ரூபாய் ஏன் கொடுக்க வேண்டும்? ஒருவேளை கைலிக்கடைக்காரர்களே இப்படி ஒரு ஏற்பாடு செய்து கொண்டு கமிஷன் அடித்துக் கொள்கிறார்களா? இந்த வியாபார நுணுக்கங்கள் இருக்கட்டும். பொன்னம்பலம் , வேட்டிபோல பிரிந்தே வரும் கைலியை மூட்டும்போது பட்டியின் அகலம் அத்தனை மெல்லிசாக - கைலியின் அகலம் மோசமாகக் கெடாமல் -இருக்கும். உடுத்தும்போது குப்புறக் கவிழ்த்த V மாதிரி அமைந்து எதுவும் தனியாக முன்னால் தூக்கிக் கொண்டு வராது. விஷேசமான தையல். ஏதோ கோட்டு சூட்டு தைப்பவன் மாதிரி 'தையற் கலைஞர்' என்று அவர் போர்டு வைத்திருப்பதை இதற்காக மன்னித்து விடலாம்.

ஆனால் கைலிகளை தைத்து பிழைப்பை ஓட்டும் இவருக்கு கைலி கட்டுவது பிடிக்காது ! அதுதான் வேடிக்கை. 'வழிப்பதற்கு எது வாகானது?' என்று பட்டிமன்றமே நடக்கும் அவருக்கும் மரைக்காயருக்கும்.

நடக்கும்போது விலகி விலகி தொடைகளில் காற்று படவைக்கும் வேட்டிதான் தமிழன் பொன்னம்பலத்திற்கு உயர்வு. அது அவர் கம்கட்டு அழுக்கு மாதிரி மஞ்சள் பிடித்துப் போயிருந்தாலும் வேட்டி வேட்டிதான்.

பக்கத்து மோகப்பட்டினத்தில் உள்ள வங்கிகள், அரசாங்க அலுவலகங்கள் போவதற்கு வேட்டிதான் கண்ணியம். கைலியை உடுத்திக் கொண்டு போனாலே 'பதினொன்னு' (11) என்று நாவூர் பெண்கள் கேலி செய்யும் இந்த பேண்ட் போட்ட ஊழியர்களின் பார்வையே மாறி விடுகிறது - 'வந்துட்டானா மடமரைக்கான் நாவூர்லேர்ந்து' என்று. என்னதான் அரைக் கலரோ அல்லது வெள்ளைக் கைலியோ கட்டினாலும் வேட்டிக்கு ஈடாகுமா ?  அதனால்தான் இப்போது நாவூரின் பணக்கார காக்காக்களெல்லாம் எல்லாம் எளிமையின் சின்னமாம் கதர் வேட்டி கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். கருநீல வண்ண வெல்வெட் தொப்பியைப் போட்டுக் கொண்டு ஒரு வெள்ளை வேஷ்டியையும் கட்டி, கையில் ஒரு விரிக்காத குடையுடன் வலம் வருவது  நன்றாகத்தான் இருக்கிறது! வெள்ளைத் துப்பட்டிகள், கறுப்பு புர்காவாக மாறி வருவதைப் போல இதுவும் ஒரு மாற்றம்தான். சில ஊர்களில் 4 முழ வெள்ளை வேஷ்டியையே புர்காவாக பயன் படுத்துகிறார்களே அழகாக!  நாவூரிலோ அது தம்பலத்தனம்..

'அட போடா!' என்றார் மரைக்காயர். செல்லமாக அப்படி கூப்பிடுவார். அ·ப்ஜலும் செல்லம் காட்டலாம்தான். ஆனால் வாப்பாவுக்கு தெரிந்து விடும். செளதி போக பணம் கிடைக்காது.

' வெளங்காதவந்தான் அப்படி உடுத்துவான். தொப்பிக்கு கைலிதான் கரெக்ட். அதான் இஸ்லாமானவன் மாதிரி இக்கிம். அதோட ஒரு கோட்டும் மாட்டிக்கிட்டுப் போனா எப்படி இக்கிம் ?!' என்று கற்பனை தந்த பரவசத்தில் மரைக்காயர் சொன்னார்.

துருக்கி தொப்பி போட்டுக் கொண்டு கோட்டு-கைலி- மிதிரிக்கட்டை சகிதமாக பெருநாள் தினங்களில் காட்சி தந்து பிள்ளைகளுக்கு 25 பைசாவுக்கு மேல் கொடுக்காத அந்த காலத்து குடும்பத்துப் பெரியவர்கள் அவனது நினைவில் வந்தார்கள். சகிக்கவில்லை.

ஆனால் உண்மையை சொல்ல முடியுமா ஒரு முதலாளியிடம்? 

'நல்லாயிக்கிம் மாமா!' என்றான்

'கைலி நம்ம ஓணான்தான் . அதுதான் எடுப்பு. 'டர்ர்'ண்டு கட்டு உடாது சீக்கிரத்துலெ!'

'பின்னே ?'

'அப்படிச் சொல்லு. ஆனா நம்ம ஓணானைப் பத்தி எவனுக்கும் தெரியமாட்டேங்குதே...'

'தெரியும். கொஞ்சம் சபுர் செய்யனும்'

'இல்லே.. கடையை XXX787 காரண்டெ கொடுத்துட்டேன் - சரக்கோட..'

'எப்ப மாமா ?' - அதிர்ச்சியுடன் கேட்டான் அவன். அல்லாஹ் மரைக்காயரையும் சும்மா விடவில்லை போலிருக்கிறதே...

'ஹொத்துவா பள்ளிலெ பேசி முடிச்சாச்சுப்பா. எல்லாத்தையும் வித்த பொறவு எனக்கு காசு கொடுப்பான் , இன்ஷா அல்லாஹ்.'

'நான் ?' 

'இந்த கடையிலேயே வேலை பாரு...சம்பளம் கொடுக்குற முதலாளி வந்தா நல்லதுதானே..? வாப்பாவுக்கு எழுதிப் போடு...' - யஹ்யா மரைக்காயர் வேதனையுடன் சொல்லிவிட்டு வீட்டிற்குப் போனார். இரவு , கடை வாசல் சுத்தமாகக் கழுவப்பட்டு  மணத்தது. மரைக்காயர் இனி பஜார் பக்கம் வருவார் என்று தோன்றவில்லை.

அடுத்த நாள்  காலை அ·ப்ஜல் தன் புது முதலாளி வீட்டிற்குப் போய் சாவி வாங்கி விட்டு கடை திறக்கப் போகும்போது ஷட்டரை இழுக்கும் பிடியில் ஒரு செத்த ஓணான் மாட்டியிருந்ததைப் பார்த்தான். எந்த ஹராமி செய்த வேலை இது ? ஓணான் எதனாலோ கொடூரமாக பலமுறை அடித்து நசுக்கப்பட்டு குடல் கும்பியெல்லாம் வெளியேறி இருந்தது. 'க·பன்' போல அதன் மேல் ஒரு கிழிந்த துணி வேறு. துணி மூத்திர நாற்றம் அடித்தது. ஏதோ பெரிய வியாதி பிடித்த உடம்பிலிருந்து வெளியாகும் மூத்திரத்தின் நாற்றம்...

(முடிந்தது)

எங்கே முடிந்தது? கொஞ்சம் டீடெய்ல் சேர்க்கனுமாம். இப்போதெல்லாம் மூட்டியே வரும் கைலிகளின் உட்புறத் தையல், வெளியில் தெரிகிறது. கன்றாவி! ‘உடுத்தத் தெரியாதவன்’ என்று நாவூரில் சொல்வார்கள்; பனியன் ஜட்டியைத் திருப்பிப் போடுவது மாதிரியான செயல். இதைக் குறிப்பிடலாமா என்றால் கவிஞர் ஒத்துக்கொள்ளவில்லை. சினிஃபீல்டில் நுழைய முயற்சி செய்துகொண்டிருக்கிறவர் ஏதாச்சும் புதுமையா சொல்வார். பார்க்கலாம்.

சொன்னார் : இப்படிச் செய்யும். அந்தப் புது முதலாளி பெரும் கோடீஸ்வரரா ஆயிட்டதா.

எப்படீ? 

யாரையோ புடிச்சி (ஏதோ ஒரு இயக்கத்தின் பெயர் சொன்னார்; ஞாபகமில்லை) ’கல்ஃபு’க்கு கைலி எக்ஸ்போர்ட் செய்றாரு, அவராலேயே நம்பமுடியாம பயங்கர சேல்ஸ்.

நெசமாவா!

கேளும். லேபிள்ல ஒரு சின்ன மிஸ்டேக். ’ஓணான் மார்க்’ங்குறது ‘ஓலான் மார்க்’ன்னு பிரிண்ட் ஆயிருக்கு!
(end)
*
அருஞ்சொற் பொருள்:

ரொஹையான் கட்டை -  திருக் குர்ஆன் வைத்து ஓத உதவும் பலகை
60x60 , 80x80, பாயடி, மூட்டு  - கைலி வகைகள்
அஸர் , இஷா - தொழுகை நேரங்கள்
பிஸாது - புறம் பேசுவது
ஜியாரத் - இறை நேசர்களின் சமாதியை வழி படுவது
ஜீமத் - அழகு
ஜூம்ஆ - வெள்ளியன்று நடக்கும் கூட்டுத் தொழுகை
சபர் - பிரயாணம்
சபுர் -பொறுமை
க·பன் - இறந்த உடலின் மேல் போடப்படும் துணி

Thursday, March 3, 2022

இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? - கே. சச்சிதானந்தன் கவிதை

கவிதை : கே. சச்சிதானந்தன்

(தமிழில் இரவிக்குமார் எம்.பி)

"அதிர்ஷ்டம் இல்லாதவர்களைக் கொல்வதற்காக தகுதி இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்டு நன்றி இல்லாதவர்களின் நலனுக்காக விருப்பமில்லாமல் இறந்து போனவர்கள் நாங்கள்" - வியட்நாம் யுத்தத்தில் இறந்துபோன அமெரிக்க வீரர் ஒருவரின் கல்லறையில் எழுதப்பட்டிருந்த வாசகம் எனது கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது எதிரியின் ரத்தம் என்கிறது நாடு அது மனிதனின் ரத்தம் என்கிறேன் நான் அவன் வீழ்ந்தது இப்போதும் எனது பார்வையை விரட்டிக் கொண்டே இருக்கிறது நான் அவனைத் தழுவிக் கொள்ள விரும்பினேன் அவனது குடும்பத்தைப் பற்றி குழந்தைகளைப் பற்றி கேட்க விரும்பினேன் ஆனால் அவனைப் பற்றி எனக்குள் பயம் அதுபோலவே என்னைப்பற்றி அவனுக்குள்ளும் பயம் இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? எல்லைக்கோடுகளை உருவாக்கியவர்கள். அவர்களே நமது மெய்யான எதிரிகள். நான் அவனது உறவினர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் குழந்தைகளின் முன்னால் மண்டியிடுகிறேன் அவனைச் சுடுவதற்கு முன் அவனது கண்களைப் பார்த்தேன் அதில் குரூரம் தென்பட்டிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் நான் பார்த்தது தோழமை, துயரம், கருணை அவன் விழுந்து கிடந்த போது மார்பின் மேல் கைகளை வைத்துக் கொண்டு எதை நினைவு கூர்ந்திருப்பான்? பள்ளிக்குச் செல்லும் வழியில் பறித்துத் தின்ற புளியம் பழங்களையா? இளமைப் பருவத்தில் நண்பர்களோடு சேர்ந்து பாடிய பாடலையா? தனது அன்புக்குரியவளுக்கு எழுதிய கடைசி கடிதத்தையா? கிராமத்தின் குறுகிய சந்தில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் தாயின் மங்கிய விழிகளையா? கோதுமை வயலில் வீசிய குளிர்ந்த காற்றையா? வேனிலிருந்து இறக்கப்படும் தனது சவப்பெட்டியைப் பார்த்துக் கதறும் தனது சகோதரியின் அலறலையா? வீரர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது. பாலைவனத்தில் நடக்கும்போது முளைவிடும் போதே கேள்விகளெல்லாம் கருகிப் போய் விடும். அமைதியாக இருக்கும் ஆடுகளின் செவியில் மேய்ப்பவனின் கட்டளைகள் மட்டுமே கேட்கும். கழுத்தை அறுக்கும் போது காளையின் வேதனையும் கவலையும்தான் வெளிப்படும். வீரம் செறிந்த பாடல்களுக்கு விடை கொடுங்கள் எனக்காக எந்த சொர்க்கமும் காத்திருக்கவில்லை. நரகத்தில் ஒரே கோப்பையில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நஞ்சை அருந்துவோம் ஒரே முள் படுக்கையில் படுத்துறங்குவோம் எல்லைகளே இல்லாத உலகம் குறித்து கைவரப் பெறாத கனவைப் பகிர்ந்தபடி ஒன்றாகச் சேர்ந்து அழுவோம்.... போர் வீரன் ஒருவன் தனக்குள் பேசிக்கொண்டது.

*

Thanks to Kanagu Kanagraj & Sadik

*

தொடர்புடைய பதிவு : கே. சச்சிதானந்தன் நேர்காணல்




Monday, January 24, 2022

திக் நியத் ஹான்

நண்பர் கார்த்திக் ஃபேஸ்புக்கில் எழுதிய அஞ்சலி...

இன்று காலை (22 Jan 2022) கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே விடிந்தது . விடுமுறை முடிந்தும் முடியாதது போன்ற ஒரு மனநிலை . ஜென் மாஸ்டர் திக் நியத் ஹான் சமாதி அடைந்த செய்தி அறிந்ததும் மனம் முற்றிலும் வேறோரு  உணர்வு நிலைக்கு சென்று விட்டது. இதை வருத்தம் என்று சொல்வதற்கில்லை  மீண்டும் அவரை அணுக்கமாக நினைவுகூறும்   தருணமாகவே இதை உணர்ந்தேன்  

திக் நியத் ஹான் , உலகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஜென் மாஸ்டர் , வியட்நாமில் பிறந்தவர் . இவரை நீங்கள் நேரடியாக கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் இவரின் எளிமையும் தெளிவும்  பொதிந்த வாசகங்களை எங்காவது பார்க்கவோ கேட்கவோ செய்திருக்கலாம் . ஆன்மீக தளத்தில் மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல்  சமூகத்தில் அமைதி போக்கிற்கான தேவையை  முன்வைத்து தொடர்ந்து பேசி வந்தவர்.

1926 ல் பிறந்த திக் நியத் ஹான் , பதினாறு வயதிலேயே பெளத்த மடலாயம் ஒன்றில் சேர்ந்து துறவறம் பெற்றுக்கொள்கிறார் .அவரின் பெயரில் உள்ள  திக் (Thich) என்பது புத்தரின் குலத்தில் வந்தவர் என்பதை சுட்டும் வார்த்தை . 1960 களில்  வியட்நாம்  போர் உச்சத்தில் இருந்த சமயம் இவரின் போருக்கு எதிரான கருத்துக்களினால் வியட்நாம் அரசு இவரை மீண்டும் வியட்நாமுக்குள் நுழைய அனுமதி மறுத்தது ( அப்போது பிரான்சில் இருந்தார் ) . 

அதன் பிறகான தனது பெரும்பாலான நாட்களை அமெரிக்காவிலும் பிரான்சிலும் கழித்தார்  . அமெரிக்க கருப்பின தலைவரான மார்ட்டின் லூதத் கிங் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த எதிர்ப்பின் ஆரம்பப் புள்ளி திக் நியத் ஹான் அவர்களில் இருந்து ஆரம்பித்தது எனலாம் , அதை மார்ட்டின் லூதர் கிங் மேலும் முன்னெடுத்துச் சென்றார். திக் நியத் ஹான் இறுதிவரை தொடர்ந்து எல்லா விதமான போர்களுக்கும் ,  வன்முறைக்கும் எதிராகவே பேசிவந்திருக்கிறார்

திக் நியத்  ஹான் அவர்கள் எனக்கு முதலில் அவரின் புகைப்படத்தின் மூலமே அறிமுகமானார் . சில வருடங்களுக்கு என் மனைவி பணி நிமித்தமாக கலந்துகொண்டிருந்த கான்பிரன்ஸ் ஒன்றில் மனநலம் குறித்த ஒரு விவாத்தத்தில்  'இக்கணத்தில் இருத்தல்' (minufulness ) என்ற அணுகுமுறையை விளக்கும் விதமாக திக் நியத் ஹான் அவர்களின் சிந்தனைகளும் புத்தகங்களும் முன் வைத்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

கருத்தரங்கில் இருந்து  அவர் வாங்கி வந்த  புத்தகத்தில் இருந்த  திக் நியத் ஹான் அவர்களின்  புகைப்படத்தை  பார்த்ததுமே  எனக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உருவாகியது .அவர் முகத்தின் தெரிந்தது ஒரு புன்னகை என்று கூட சொல்லிவிட முடியாது .அதை ஒரு நிறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம், மேலதிகமாக வேறெதுவும் தேவையிருக்காத ஒரு பூரணம். 

அதன் பின் அவரை வாசிக்க ஆரம்பித்த போது அவரின் இருப்புக்கும்  அவர் சொல்வதற்கும் இடையே  வித்தியாசமே இல்லை என்பதை உணர முடிந்தது . பின்னர் அவரின்  உரைகளையும்   கேட்டேன் - அந்த ஒருமை உணர்வு முழுமை அடைந்தது . சில விஷயங்களை அறிதல்களாக  ஆலோசனைகளாக, வழிகாட்டல்களாக ஒருவர் முன்வைப்பது  வேறு ஆனால் அந்த தன்மையில் இருந்து கொண்டே அதை ஒருவர் அதைச் சொல்வது என்பது நம்மை  அந்தரங்கமாகத் தொடுவது. 

மகிழ்ச்சி என்பது எதிலிருந்தோ ,எதன் மூலமாகவோ , எதை அடைந்தோ பெறும் ஒன்றல்ல . மகிழ்ச்சி அல்லது ஆனந்தத்தில்  (joy ) இருந்து தான் அனைத்தும் துவங்குகிறது . Mindfulness practice எனப்படும் 'இக்கணத்தில் இருத்தல்' என்பது எதனோடும் பிணைத்துக்கொள்ளாத , எதையும் நிபந்தனையாக்கிக்கொள்ளாத  "அடிப்படையான  மகிழ்ந்திருக்கும் நிலையை" அடைவதே  என்கிறார் . 

மனதும் உடம்பும் இக்கணத்தில் இங்கு இருக்கும்போது, அதை நாம் கவனிக்கும் போது , நமக்குள் நாம் குவியும் போது, வாழ்வெனும் மலர் இயல்பாகவே நமக்குள் மலர ஆரம்பிக்கிறது . உயிர்த்திருத்தல் என்பதே  ஒரு அற்புதமாகிறது .  மகிழ்ந்திருக்க அல்லது ஆனந்தித்திருக்க தேவையான அத்தனை சாத்தியங்களும் அந்தந்த கணத்திலேயே பொதிந்துள்ளது என்பதை அறியும் தருணமது .

இக்கணம் என்பது நிறையும் போது , நிறைந்து ததும்பும்போது , மனதுக்கு   எங்கோ , எதுவோ என்று பரபரக்கும் தேவை எழுவதில்லை. கடந்த காலம் குறித்த ஏக்கங்களோ, எதிர்காலம் குறித்த  பயங்களோ , நிகழ்காலம் குறித்த போதாமைகளோ நம்முள்  படர்ந்து நம்மை திணற அடிப்பதில்லை  . இப்படி குவிந்த ஒரு  புள்ளியில் உருவாகும் தெளிவு  ஞானத்தின் முதற்படி ஆகிறது .

இந்த தெளிவு உருவாக்கும்  மனவிரிவு கொண்டே நாம் மற்றவர்களையும் புரிந்துகொள்ளவும் அன்பு செய்யவும் முடியும் என்கிறார் . அதிலிருந்தே பிறர் மீதான முற்றான compassion பிறக்கும் என்கிறார் . நம்மை நாம் அன்பு செய்யாமல் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது  .அந்த புள்ளியிலேயே நீ அல்லது நான் என்றும் பிரிவும் மறைய ஆரம்பிக்கிறது.  இந்த இடத்தில்  நான் வள்ளலாரையும் நினைவுறுத்திக்கொண்டேன் .இந்த மனநிலை தான்  'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொல்லும்   இல்லையா ?

திக் நியத் ஹான் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒன்று உண்டு 'Bring your mind home, to your body ' என்று .இதுவே ஆரம்பம் , இதுவே பயிற்சி , இங்கிருந்தே அனைத்தும் ஆரம்பிக்கிறது.

ஞானியர் மரணம் என்றுமே வருத்தம் அளிப்பதல்ல . அவர்களுடனான நம் தொடர்பு என்றைக்குமானது (eternal ). அவர்கள் உணர்த்தும் விஷயமும் என்றைக்குமானவை. மரணம் என்ற சுழற்சியை வெகு இயல்பாக கடந்து செல்லும் வாழ்க்கையை அவர்கள் முன்னரே அமைத்துக்கொண்டு விடுகிறார்கள் .  இந்த தருணம்  நாம்  அவர்களையும் , அவர்கள் அளித்துச்சென்ற ஞானத்தையும் நெருங்கி உணர இன்னுமொரு வாய்ப்பு. 

*


நன்றி : கார்த்திக்