Wednesday, August 21, 2019

Tere Nainon Ke Main Deep Jalaoonga

சும்மா ஒரு மூடு :)
Singes: Mohammed Rafi, Lata Mangeshkar ; Music: S. D. Burman
*

*
Thanks to : Bollywood Classics

Thursday, August 15, 2019

சுனாமி - ஹமீதுஜாஃபர் மெயில்

சங்கடப்படுத்திய ஜாஃபர் நானாவின் மெயில் இது :
ஆபிதீன், படித்து சங்கடப் படாதீர்கள். எல்லா சங்கடங்களும் நான் பட்டுவிட்டேன். எதுவும் சொல்லக்கூடாது என்றுதான் நினைத்தேன் ஆனால் "எழுதுங்கள் நானா" என்று உங்கள் தூண்டுதலால் மனம் கசிந்தே எழுதியுள்ளேன். இதெல்லாம் ஏன் என்ற கேள்வி இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது. விதி என்று சொல்வதா இல்லை இதையும் நீ கடந்துபோகவேண்டும் என்ற இறை கட்டளை என்று சொல்வதா எதுவும் புரியவில்லை. எதோ காரணத்தால் நடந்துவிட்டது. இனி அதையே நினைத்து இடிந்துபோய்விடாமல் இருப்பதே புத்திசாலித்தனம். வாழ்க்கையின் சரிவைப் பார்த்தாகிவிட்டது. பட்ட காயங்களை துடைத்துக்கொண்டு மீண்டும் மேல் நோக்கி பயணிக்கிறேன். ஹஜரத் சொன்னதுபோல்,  காரணமில்லாமல் காரியமில்லை எதோ ஒரு காரணம் நம்மை ஆட்டிப்படைக்கும் இறைவனே அறிவான். படித்துவிட்டு மனதை தேற்றிக்கொண்டு பதிவைப் போடுங்கள்.
*


சுனாமி
 
உங்களுக்கெல்லாம் தெரியும் சில வருடங்களுக்கு முன் வந்த THE SWORD OF TIPPU SULTAN என்ற டிவி தொடர். அதை தொடங்குவதற்கு முன் "இது ஒரு கற்பனைக் கதை" என்ற குறும் அறிக்கை வரும்.. அதுபோல் இதுவும் கற்பனையே.  – ஹமீதுஜாஃபர்

*
இது எப்படி நடந்தது? ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? காரணம்தான் என்ன? எதுவுமே புரியாமல் குழம்பிப்போய் தத்தளித்துக்கொண்டிருந்த இளவரசனை சுமந்துகொண்டு கருப்புத்தங்கம் கொழிக்கும் நாட்டிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடு நிசியின் இருட்டைக் கிழித்துக்கொண்டு மும்பையை நோக்கிப் பறந்துக்கொண்டிருந்தது. அதைவிட அவன் மனம் வேகமாக பறந்துகொண்டிருந்தது. வாழ்க்கையே இருண்டுபோனது போலிருந்தது. மனம் கொஞ்சம் ஆசுவாசமடைய எதையாவது ரசிக்கவேண்டும் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்த ஏர் ஹோஸ்டஸையாவது ரசிக்கும்படியாவது  இருக்கவேண்டும்.அதுவும் இல்லை. ரிடயர்மெண்ட் எதுவும் அங்கு கிடையாது போலும்.

கடைசி சீட்டில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்திருந்த அவனது எதிர்காலம் வெளியில் தெரிந்த இருட்டைப் போலிருந்தது. வெகு தொலைவில் கண் சிமிட்டிக்கொண்டிருந்த நட்சத்திரங்களைப் போல வாழ்க்கையும் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. இது இப்படி இருந்தால் உட்கார்ந்திருந்த சீட் ஒருகாலத்தில் மாட்டு வண்டியில் வைக்கோலைப் பரப்பி  ஜமக்காளத்தை விரித்து அதில் உட்கார்ந்து பயணித்ததை நினைவைபடுத்தியது. முன் சீட்டின் பின்னாலுள்ள ’சர்விங்ட்ரே’ அடிக்கடி நிலை கொள்ளாமல் நாட்டியம் ஆடியது.

இரண்டு தர்பூஸ் பழ சைஸில் பிதுங்கிய பிட்டத்துடன் அங்கு வந்த  சுமார் ஐம்பது வயது ஏர் ஹோஸ்டஸ் (அஹதான் அதில் ரொம்ப அழகானவக) பறிமாறிய உணவை பசி மயக்கத்தில் சுவை அறியாமல் உண்டு முடித்தான்   கரண்ட் பில்லை கட்டுப்படுத்த விமானத்தின் லைட்டை ஆஃப் செய்தான் கேப்டன். ஸ்பாட் லைட்டைப் போட்டால் அதுவும் எரியவில்லை. எல்லாம் சிக்கனம் போலும். இல்லை புதிய இந்தியாவில் இப்படிதான் இருக்குமோ?

சாப்பிட்டு முடிந்ததும் கண் அயர நினைத்தாலும் தூக்கம் வரவில்லை. மனம் குத்தாட்டம் போட்டது. மும்பை இறங்கியதும் சாந்தாகுரூஸ் ஏர்போர்ட் போய் சென்னைக்கோ அல்லது திருச்சிக்கோ டிக்கட் புக் பண்ணலாமா இல்லை இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டிலேயே டிக்கட் புக் பண்ணலாமா என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

விமானி வேகத்தை குறைத்து உயரத்தை குறைத்துக்கொண்டிருந்தான். உள்ளே ஏற்பட்ட ஏர் ப்ரஷர் குறைவு காதை அடைக்கத் தொடங்கியது. கையில் கட்டிருந்த வாட்சில் இந்திய நேரத்துக்கு மாற்றி பார்த்தபோது காலை மணி ஐந்தை காட்டியது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது தொடுவானத்தில் லேசான சிகப்புக் கீறல், வெளிச்சம் இருளை விழுங்க முதல் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தது. மனத்தின் விரக்தியை விழுங்க வெளிச்சம் வருமோ வராதோ தெரியவில்லை, ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் மின்னலாய் வெட்டி மறைந்தது.

சற்று நேரத்தில் விமானம் தரை இறங்கியதும் இரண்டுமூன்று ட்ரஸ் அடங்கிய சிறிய பையை எடுத்துகொண்டு கூட்டத்தோடு இமிக்ரேஷனில் எக்ஸிட் ஸ்டாம்ப் அடித்துகொண்டு வெளியே வந்து சாந்தா குரூஸ் எப்படி போவது என்ற யோசனையுடன் திரும்பியபோது எதிரே தெரிந்த ஜெட் ஏர்வேஸ் போர்டு...... அதன் ஆபீஸை அணுகி சென்னைக்குச் செல்லும் முதல் விமானத்தின் நேரம் டிக்கட் விலை இரண்டையும் விசாரித்தான். காலை எட்டு மணிக்கு முதல் விமானம் என்றாலும் டிக்கட் விலை எகிறியிருந்தது. ஏற்கனவே அவனது ரூம் நண்பர் சொல்லிருந்தார் திருச்சிக்குதான் விலை குறைவு ஆனால் மதியம் இரண்டு மணிக்குதான் விமானம், ஆகவே அவசரமில்லாமல் மெதுவாகச் செல்லலாம் என்று.. எனவே கையிலிருந்த இந்திய ரூபாயை கொடுத்து திருச்சிக்கு டிக்கட் எடுத்துக்கொண்டு உள்நாட்டு விமானத்துக்கு சாந்தாகுரூஸ் போக நீங்கள் ட்ரான்ஸ்போர்ட் அரேன்ஜ் பண்ணுவீர்களா இல்லை நான் டாக்ஸியைப் பிடித்துப் போகவேண்டுமா என்று கேட்டான்.

அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சார், நீங்கள் மும்பைக்கு புதுசா, வந்ததில்லையா? என்றாள் டிக்கட் கவுண்டரிலிருந்த பெண்.

"இல்லை மேடம் நான் இங்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன"

"நீங்கள் எங்கும் போகவேண்டாம், இப்படியே நேரே போய் இடதுபக்கம் திரும்பி எஸ்கலேட்டரில் ஏறி மேலே போங்க, பின் உங்களுக்கே வழி தெரிந்துவிடும்" என்று போகவேண்டிய திசையைக் காட்டினாள்.

அவள் சொன்னபடி மேலே சென்று பார்த்தபோது பெரிய டெப்பார்ச்சர் ஏரியா தெரிந்தது. அங்கேயே பன்னாட்டு, உள்நாட்டு டெப்பார்சர்கள் இருந்தன, நேரத்தைப் பார்த்தபோது காலை ஆறு மணி பொழுது விடியத்தொடங்கியது, பறவைகளின் கிரீச் கிரீச் குரல், புறப்பட ஒருபாடு(நிறைய) சமயம் இருந்தது. அங்கே ஒரு பெஞ்சில் உட்கார்ந்து விமான நிலையத்தின் நான்கு திசைகளிலும் கண்ணைச் சுழலவிட்டான் பின் மெதுவாக நடந்து எல்லா பகுதிகளையும் பார்த்தான். அழகிய கட்டிடக்கலை, பிரமிக்கத்தக்கவகையில் இருந்தது. என்னவோ எங்கள் விமான நிலையம்தான் உலகில் சிறந்த கட்டிட அமைப்புக் கொண்டது உலகத்தரம் வாய்ந்தது என்று பீற்றிக்கொள்ளும் அரபு நாடுகளுக்கு மும்பை விமான நிலையத்திற்கு முன்னால் ஒன்றுமில்லை. நாற்பதாண்டுகளுக்கு முன்பு பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்? எத்தனை மாற்றம்? எத்தனை அழகு!

அத்தகைய அழகு ஆனால் ரசிக்கத்தான் மனம் ஒப்பவில்லை. அவனுடைய வெறுமை அடைந்த மனம், மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது கவனத்தை வேறுபக்கம் திருப்பினாலும் மனம் மட்டும் அதையே சுற்றிகொண்டிருந்தது. மும்பையிலுள்ள நண்பன் கதிருக்கு போன் செய்து பார்த்தான், அவர் 200 கிமீ அப்பால் கிராமத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு நீ இங்கே வா என்றார். நடக்காத காரியம்.

வாட்சைப் பார்த்தான் மணி எட்டை காட்டியது. பசி வயிற்றைக் கிள்ளியது அங்குள்ள கேண்டீனில் ரூ250 க்கு ஒரு தோசையும் வடையும் ஆர்டர் செய்துவிட்டு அங்குள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்தான். சற்று நேரத்தில் சுடச்சுட தோசையும், வடையும் கூடவே ஆவி பறக்க சாம்பாரும், இரண்டு வகையான சட்னியும் வந்தது. அவற்றை விழுங்கிவிட்டு திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரை வரச்சொல்லி ஊருக்கு தகவல் சொல்லிவிட்டு காலை நீட்டி ஆசுவாசமாக அமர்ந்து கண்ணை மூடியபோது நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கூத்தாடின.

ஆம்,  கடந்த வாரத்தின் வியாழக்கிழமை, தன் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு டெக்னிசியனின் விசா அடிக்க எல்லா பேப்பர்களையும் டைப்பிங் செண்டரில் வழக்கமாக கொடுத்துவிட்டு ஆபிஸ் திரும்பியபோது கைபேசி அலறியது. மறு முனையில் தன் தங்கை மகனின் மனைவி தழுதழுத்த குரலிம் மாமா உடனே வீட்டுக்கு வாங்க.

"ஏ மா?"

"இல்லை போனில் சொல்ல முடியாது எவ்வளவு சீக்கரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வாங்க நேரில் தெளிவா சொல்றேன். எனக்கு என்னவோ பயமா  இருக்கு.."

"பயப்படாதே உடனே வாரேன்," என்று சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குத் தன் காரைத் திருப்பினான், ஆபீஸ் செல்லாமல் அங்கே தன் வாழ்க்கையே தலைகீழாகப் புரளப்போகிறது என்று தெரியாமல்.

தன் கணவனை ஏர்போர்ட்டில் அரஸ்ட் செய்துவிட்டதாகவும் இங்கே வீட்டிற்கு வந்து ரெய்டு நடத்தியதாகவும் உன் கணவர் மாலை வந்துவிடுவார் என்று சொன்னதாகவும் சொல்லிவிட்டு "எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது பிள்ளைகள் விபரம் அறியாமல் பயந்துபோய் இருக்கிறார்கள், எதாச்சும் செய்ங்க மாமா" என்றாள்.

"கவலைப் படாதே, இன்று வரவில்லையென்றால் நாளை போலீஸில் விசாரிப்போம்" என்று ஆறுதல் சொல்லிவிட்டு அவர்கள் வசித்திருந்த பில்டிங்கைவிட்டு கீழே இறங்கி தன் காரை ஸ்டார்ட் செய்தான்.

அவ்வளவுதான் எங்கிருந்தோ நான்கைந்து பேர் வந்தார்கள் அனைவரும் 20க்கும் 25க்கும் இடைப்பட்ட அரபி இளைஞர்கள், பேண்ட் பணியனில் இருந்தார்கள். கார் சாவியைப் பிடுங்கி அவனை வெளியே வரும்படி சொன்னார்கள், கையில் வைத்திருந்த மொபைலையும் பாக்கெட்டிலிருந்த பர்ஸ் மற்றும் சில்லரை காசுகளையும் பறித்தார்கள், நீங்கள் யார்? எதற்காக என்னை இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது, தங்கள் அடையாள அட்டையை காண்பித்து சிஐடி என்று சொல்லிவிட்டு எதுவும் எங்களிடம் பேசக்கூடாது நாங்கள் சொல்வதை கேட்கவேண்டும் இல்லையென்றால் ட்ரீட்மெண்ட் கடுமையாக இருக்கும் என்று மிரட்டினர். இதற்கிடையில் ஒருத்தன் எங்கோ டெலிபோன் செய்துகொண்டே அவனை அவர்கள் கொண்டுவந்த காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி வேகமாகப் புறப்பட்டார்கள்.

எங்கே செல்வது என்று புரியாமல் அல்லது வழி தெரியாமல் போனில் பேசிக்கொண்டே சுற்றி சுற்றிவந்து ஒரு வழியாக சிஐடி ஹெட்குவார்டர் முன் நிறுத்தினர். அந்த இடத்தைப் பார்த்தவுடன் அவன் புரிந்துகொண்டான் எந்த இடம் என்று, அந்த வழியாக பலமுறை அவன் சென்றிருக்கிறான். என்றாலும் உள்ளே சென்றதில்லை அதன் அவசியமும் ஏற்பட்டதில்லை. ஆனால் காரில் அழைத்துவரும்போது அவர்கள் பேசிக்கொண்ட முறையும், செயலும் நிலமை சீரியஸ் என்பதை உணர்ந்தான் என்றாலும் எந்த கலக்கமோ பயமோ இல்லை. எந்தவொரு குற்றமும் செய்யாதபோது எதற்கு பயம்?

சற்று நேரத்தில் கட்டிடத்தின் முன்புறம் நின்றிருந்த காரை பின் வாசலுக்கு கொண்டு சென்றனர். ஒரு அரபி வந்தார் அவரிடத்தில் அவனையும் அவனிடம் பிடுங்கிய பொருளையும் ஒப்படைத்துவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களின் வேலை முடிந்துவிட்டது போலும்.

காரிலிருந்து இறக்கிய அவனை ஒரு அறையில் உட்கார வைத்தனர். சிறிது நேரத்தில் ஒரு அரபி வந்தார், தன் கையில் கொண்டுவந்த எழுதிவைத்திருந்த கேள்விகளைக் கேட்டார், எல்லாவற்றிற்கும் பதிலைச் சொல்லிவிட்டு ஏன் எதற்காக என்னை இங்கே கொண்டுவந்து இப்படி செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். இன்னும் சற்று நேரத்தில் வேறொருவர் வந்தார் அவரும் அதே கேள்விகளைக் கேட்டார். முன் சொன்ன பதிலையே அவன் சொன்னான்.  பின் அவரும் சென்றுவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் வந்தார் அவரும் அதே கேள்விகளைக் கேட்டார் பதிலை சொல்லிவிட்டு "இதோ பார் நீங்கள் எத்தனைபேர் வந்து கேட்டாலும் பதில் ஒன்றுதான், நான் என்ன தவறு செய்திருந்தேன், அதை சொல், குற்றம் செய்திருந்தால் எனக்கு தண்டனை கொடு, ஜெயிலில் போடு, அதை விட்டுவிட்டு இப்படி டார்ச்சர் கொடுக்காதே" என்று சற்று கோபமாகவே சொன்னான்.

"உன்மீது எந்த தப்புமில்லை, நீ சாப்பிடுகிறாயா?" என்று கேட்டார்.

"இல்லை, எனக்கு பசியில்லை".

"எதுவும் குடிக்கிறாயா?"

"எதுவும் வேண்டாம் என்னை போகவிடு."

"பொறு," அவர் சொன்ன பதிலிலிருந்து தன்னை விடுவித்துவிடுவார்கள் என்று மன அமைதியடைந்து, இன்னும் சற்று நேரத்தில் போய்விடலாம் என்றிருந்தபோது நாங்கைந்து பேர் திமுதிமுவென்று வந்து அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்று அவர்கள் கொண்டுவந்த வேறொரு காரில் ஏற்றினர். உன் கார் எங்கே இருக்கிறது என்று கேட்டுவிட்டு அவன் கார் நிறுத்திருந்த இடத்தை அடைந்து அவனது காரை பரிசோதித்தனர்,

அவர்கள் பேசிய விதம் நடந்த முறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. சுருங்கச் சொன்னால் மனிதாபிமானத்தை அங்கே காண முடியவில்லை.
பின் அவனை வேறொரு காரில் ஏற்றினர். அவர்கள் கொண்டுவந்த கார்கள் அனைத்தும் 4வீல் ட்ரைவ், 7 சீட்டர் பெரியகார். இப்போது அவனை ஏற்றிய கார் அமெரிக்க ஜிஎம்சி, 4வீல் 7 சீட்டர் ஸ்டேஷன் வேகன், உள்ளே அமர்ந்தபிறகுதான் தெரிகிறது, அது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜெயில் கார், பின் சீட் ஒருவர் மட்டும் அமரக்கூடிய வகையில் இரண்டாக பார்டிசியன் செய்யப்பட்டு நான்கு பக்கமும் கருப்பு மேட்டால் மூடப்பட்டு உள்ளிருந்து வெளியேயும் வெளியிலிருந்து உள்ளேயும் பார்க்க முடியாதபடியும் உள்ளிருந்து திறக்கமுடியாதபடியும் அமைத்து, அடைக்கப்பட்டவன் என்ன செய்கிறான் என்பதை கண்காணிக்க நைட் விஷன் cctv கேமரா பொருத்தப்பட்டு தேவைப் பட்டால் மாட்டுவதற்கு கால் விலங்கும் இருந்தது. புழுக்கம் தெரியாமலிருக்க ஏசி மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

அதிக நேரம் உட்காரமுடியாத அந்த ஒற்றை சீட்டில் இருண்ட இடத்தில் கூனிக்குறுகி அமர்ந்திருந்தான், ஏனிந்த நிலை? இறைவா என்ன தவறு செய்தேன்? மனம் வெம்பி வெடித்தது, கண்ணீர் வர மறுத்தது. கார் எங்கெங்கோ சுற்றிக்கொண்டே இருந்தது. நேரம் தெரியவில்லை. அவனை ஏற்றும்போது மதியம் 3 மணி இருக்கலாம். பசி வயிற்றைக் கிள்ளியது கூடவே தாகமும். இரண்டும் சேர்ந்து குமட்டல் எடுத்தது, வயிற்றில் எதாவது இருந்தால்தானே வாந்தி வர? இடையிடையே லைட்டை போட்டு பின் ஆஃப் செய்துவிடுவார்கள். அது அவனை கண்காணிப்பதற்காக.

இரவு சுமார் 7 மணி இருக்கும் எதோ ஓரிடத்தில் நிறுத்தி கை நீட்டும் அளவுக்கு கதவை லேசாகத் திறந்து ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தார்கள். அவன் பசிக்கிறது எதாவது சாண்ட்விச் கொடு என்று கேட்டான். இங்கு தண்ணீர் மட்டும்தான் கிடைக்கும் வேறு எதுவும் கிடைக்காது என்றார்கள். பின்பு கூகுல் மேப்பைப் போட்டு அவன் ரூம் இருக்கும் லொக்கேஷனை கேட்டார்கள். சொன்னான். பின் அங்கிருந்து புறப்பட்டு எங்கெங்கோ சுற்றித்திரிந்து சுமார் இரவு 9 மணிக்கு அவன் தங்கிருந்த பில்டிங்கின் அருகில் காரை நிறுத்தி அவனை ரூமுக்கு அழைத்து சென்றனர்.

அவனை அழைத்துவந்த விதம் எதோ வித்தியாசமாக இருந்தது. ஆம், நான்கைந்து பேர் அதில் இரண்டு பேர் கமாண்டோ ட்ரஸில், கையில் ஏகே47, ஸ்டன் கன், மற்றவர்கள் கையில் பிஸ்டல் இருந்திருக்கலாம், மற்றவர்கள் சிவில் ட்ரஸில். ட்ராஃபிக்கை கட்டுப்படுத்தினர், நடைபாதையில் யாரையும் நடக்கவிடவில்லை. அவனிருந்த பில்டிங்கின் சிசிடிவியை ஆஃப் செய்தனர். உள்ளே அவன் தங்கிருந்த இரண்டு ரூம் ஃப்ளாட்டுக்கு சென்று ஒரு ரூமில் தங்கிருந்த அனைவரை இருக்கச் செய்தனர். அவன் உடமைகள் அனைத்தையும், அனைத்தையும் என்றால் லேப்டாப், பழைய மொபைல், மெமரி கார்டு ஃப்ளாப்பி டிஸ்க், சிடி, புத்தகங்கள், டைப் செய்து வைத்திருந்த ஆர்டிகள்ஸ், எழுதி வைத்திருந்த குறிப்புகள், எக்ஸ்டர்னல் ட்ரைவ் இத்தியாதி இத்தியாதி இப்படி எல்லாவற்றையும் கையில் கொண்டுவந்திருந்த ப்ளாஸ்டிக் பைகளில் திணித்தனர், பாஸ்போர்ட்டை கைப்பற்றினர், மொத்தத்தில் கட்டில், மெத்தை, ட்ரஸ்ஸை தவிர மற்ற எல்லவற்றையும் எடுத்துக்கொண்டு அவனையும் அழைத்துகொண்டு புறப்பட்டனர்.

அவர்கள் கண்ணில் அவை எல்லாம் பயங்கர ஆயுதங்களாகப் பட்டிருக்கும். லேப்டாப்பை வைத்து டார்கட்டை பிக்ஸ் பண்ணி மொபைல் மூலமாக வெடிக்கச்செய்து பெரும் அழிவை ஏற்படுத்திவிடலாம் என்று எண்ணிக்கொண்டார்களோ என்னவோ? ஒருவேலை அவை நியூக்ளர் டிவைஸாக இருந்திருக்குமோ அவர்கள் பார்வைக்கு...?

சிறிது நேரத்துக்குள் அந்த இடத்தை எதோ புயலில் அடிபட்டதுபோல் அலங்கோலப்படுத்திவிட்டனர், எல்லாம் இறைந்துகிடந்தன, மொத்தத்தில் சொல்லப்போனால் எதோ தேசத்துரோகி அல்லது உலகம் பறைசாற்றும் தீவிரவாதியை பிடித்துக்கொண்டு போவதுபோல் அவனை கையாண்டனர்.
எந்த வேகத்தில் வந்தனரோ அதே வேகத்தில் அவனை அதே காரில் ஏற்றி பறந்தனர். ட்ராஃபிக் ஜாமாகும் இடத்தில் சைரனைத் தட்டிவிட்டு நடை பாதையில் ஏற்றியிறக்கி புயல்வேகத்தில் பறந்தனர். சொல்லப்போனால் அவர்கள் அடையக்கூடிய அந்த இலக்கை ஒரு மணிநேரத்துக்குள் அடைந்துவிடலாம். ஆனால் இல்லை, எங்கெங்கோ சுற்றினார்கள். உள்ளே இருந்த இளவரசனுக்கு அனுமானிக்கமுடியவில்லை. கார் நிற்காமல் பறந்துகொண்டிருந்தது. கடைசியாக சுமார் 11 அல்லது 12 மணிக்கு ஒரு கட்டிடத்தின் பின் புறத்தில் காரை நிறுத்தி அவன் கண்களை மறைத்து இறக்கினர். அந்த இடத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் லைட் எல்லாம் ஆஃப் செய்யப்பட்டு இருள் சூழ்ந்திருந்தது.

அங்கு ஒரு சிலரின் நடமாட்டம் தெரிந்தது. எனவே இறக்கிய வேகத்தில் யாரும் காணும் முன்பே அவனை அருகிலிருந்த கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்தனர். அது சிறைச்சாலை.

எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பதை உணரமுடியவில்லை, பசி வயிற்றை கிள்ளிக்கிள்ளி விளையாடியதால் அங்கிருந்த ஒரு அரபியிடம் சாப்பிட எதாவது கிடைக்குமா என்று கேட்டான். தருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு உலர்ந்த குபுஸும் கொஞ்சம் கெட்டுப்போன பருப்பு சால்னாவும் கொடுத்தான். சால்னாவை ஒதுக்கிவிட்டு தண்ணீரைத் தொட்டு குபுஸை விழுங்கினான். தொண்டை மறுத்தது, பசி ஏற்றது. முடிவில் பசி வென்றது.

உயிர்களை இயக்குவது பசி தானே அனைத்து உயிரினங்களும் பசியை அடக்கத்தானே அலைகின்றன, மிருகங்கள் வேட்டையாடி பசியை தீர்த்துக்கொள்கின்றன, தாவர வர்க்கம் மண்ணைக் குடைந்து பசியை தீர்த்துக்கொள்கிறது, ஆனால் மனிதன் மட்டும் எல்லா திகிடுதத்தமும் செய்து சம்பாதிப்பான் பசியை அடக்க மட்டுமா..?. அந்த பசி மட்டும் இல்லையென்றால் எவன்  வேலை செய்வான்? எவைதான் இயங்கும்? உயிர் இயக்கத்திற்கே பசிதான் காரணம் என்கிறார்கள் அறிஞர்கள்.

ஏசியின் குளிர் கூடவே கழிப்பறையின் நறுமணம், இரண்டையும் சுகித்தவாறு அங்கிருந்த யாரோ முந்தையக் கைதி உபயோகித்த போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு கண் அயர்ந்தவன்தான்.. காலையில் யாரோ கம்பியைத் தட்டும்போது உணர்ந்தான். காலை உணவு வந்திருந்தது, அதே குபுஸ் அதே சால்னா, ஆனால் புதியது. வேறு வழியில்லை. அரேபிய மாமியார் வீடு.

முன்தினத்தின் அசதி மீண்டும் உறங்கினான், அன்று வெள்ளிக்கிழமை நேரம் தெரியவில்லை. மீண்டும் ஒரு குரல். எழுந்துவா என்ற உத்திரவு, கூடவே சென்றான் அப்போதுதான் தெரிந்தது ஏர்போர்ட்டில் அரஸ்ட் செய்த அவனின் மருமகனையும் அங்கேதான் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று. கூப்பிட்ட அரபி, அடுத்த பில்டிங்கிற்கு அழைத்துச் சென்றபோதுதான் தெரிந்தது நேற்றைய தினம் எங்கே கொண்டுவந்தார்களோ அதே இடத்தில் இரவு விட்டுவிட்டு போயிருக்கிறார்கள் என்று.

கூட்டிச்சென்ற அரபி அவனை ஓர் அரையில் இருக்கவைத்து கதவை அடைத்துவிட்டு சென்றார். நேரம் கடந்துக்கொண்டிருந்தது எதாவது சீக்ரட் கேமரா வைத்திருக்கிறார்களா என்று நோட்டம் விட்டான் அப்படி எதுவும் தெரியவில்லை. அரை மணி நேரம் கழித்து ஒருவர் வந்து நேற்றய தினம் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டார். பொறுமையுடன் பதில் சொன்னான். சற்று நேரத்தில் இன்னும் இரண்டுபேர் வந்து அவர்களுக்குள் அரபியில் பேசிக்கொண்டனர்.

அவர்கள் பேசியது அவனுக்கு விளங்கியது ஆனாலும் தெரியாததுபோல் காட்டிக்கொண்டான். என்ன பேசினார்கள்? இவன் பதில் ஒழுங்காக சொல்கிறானா இல்லை முன்னுக்குப்பின் முரனாக.... என்றார் ஒருவர். இவனது போனில் லேப்டாப்பில் பலானா படம் இருக்குமே அப்படி எதுவும்..... என்று இழுத்தார். அப்படி எதுவுமில்லை என்றவுடன் அவனை அனுப்பிவிடு என்றார் மூன்றாமவர். அனுப்பிவிடு என்றால் வீட்டுக்கல்ல மீண்டும் அதே செல்லுக்கு.

இவன்களது புத்தி பூராவும் அந்த குழிப் பணியாரத்துக்குள்தான் இருக்கும் போலிருக்கு. இதுக்கு வயது வித்தியாசமில்லை. ஆம் அவனை முதலில் பிடித்த அந்த இளம் சிஐடிகளும் அதைதான் கேட்டார்கள், "ஃபீ சூரா தாகுள் மொபைல்" என்றான் ஒருவன், மற்றொருவன் "கம் மர்ர இன்த ஜிக் ஜிக்" என்றான்.

உன் அப்பன் வயசு இருக்கும் என்னைப் பார்த்து கேட்கும் கேள்வியாடா இது என்று நினைத்துக்கொண்டு எதுவும் சொல்லாமல் என்னை எங்கே அழைத்துக்கொண்டு போகிறாய் என்று கேட்டவுடன் மவுனமாகிவிட்டனர்.

ஆம், பத்து பிலிப்பைனிகளை விளையாடி இருந்தால் சிஐடி போஸ்ட், ஐரோப்பியக்காரிகளை விளையாடியிருந்தால் ஆபிஸர் போஸ்ட் போலும். எந்த நேரமும் கம்பு விளையாட்டு. ஒரு பிலிப்பைனி பெண்ணை நெல் குத்திவிட்டு வேறு உலக்கை போகக்கூடாது என்று உரலில் சூப்பர் குளூவை ஊத்திவிட்டு சென்ற ஜாதிதானே இந்த ஜாதி.

முன்பு அவன்கூட வேலை செய்த அரபி ஒருவன் ஒரு நாள் நொண்டி நொண்டி வேலைக்கு வந்தான் ஏன் என்று கேட்டதற்கு வீட்டில் தடுக்கி விழுந்துவிட்டேன் முழங்காலில் அடிபட்டு விட்டது, என் அப்பன் என்ன சொல்கிறான் தெரியுமா? "நீ செய்யும் போது நல்ல மெத்தையில் படுக்கப்போட்டு செய், தரையில் செய்தால் இப்படிதான் அடிபடும்" என்கிறான் என்றான். ஆக எப்படி இருந்தாலும் அந்த கரம் தவ்வா (Garam Thavva) அதுலெ மொகத்தை வைக்கணும்.

அதுக்காகத்தானே நாலு கல்யாணம் பண்ணிக்குறதுக்கு அனுமதி இருந்தாலும் இவன்களுக்கு திருப்தியே கிடையாது. இவன்களுக்கு நாலல்ல நாற்பது பண்ணினாலும் பத்தாது.

இப்படி நான்கைந்து தடவை அழைத்து விசாரித்துவிட்டு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை கடைசியாக இரவு பத்து மணிக்கு அழைத்து "நீ இப்போது வீட்டுக்குப் போகிறாயா இல்லை நாளை காலையில் போகிறாயா? ஆனால் ஒரு கண்டிசன் நாங்கள் கூப்பிடும்போது நீ இங்கு வரவேண்டும் தவிர இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது எழுதிக்கொடுத்துவிட்டு போ" என்றார்கள் இரண்டு ஆபிஸர்.

"இப்போதே போகிறேன், ஆனால் என்னிடம் காசில்லை என் பர்ஸையும் மொபைல் போனையும் தந்தால் போகிறேன்"

"நாங்கள் எதுவும் தரமாட்டோம், நீ போவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம், உன் ஆபிஸ் போன் நம்பரை கொடு" என்று சொல்லிவிட்டு 100 ஐ கையில் கொடுத்து போ என்றனர்.

தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்று நன்றி சொல்லிவிட்டு மெயின் ரோட்டுக்கு நடந்து ஒரு பட்டான் டாக்ஸியைப் பிடித்து தன் ரூமுக்கு வந்தான்.

இரவு 12.00 மணி ரூம் கதவைத் தட்டியதும் அவனுக்காக காத்திருந்ததுபோல் உடனே திறந்து விசாரிக்க ஆரம்பித்தனர். எல்லோர் முகத்திலும் கவலையும் பீதியும் படர்ந்திருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற திகிலில் இருந்தனர்.

"இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை, ஒன்றும் பதட்டப்படவேண்டாம் எல்லாம் நன்மைக்கே நான் வந்துவிட்டேன் இனி ஒன்றும் நடக்காது என்று நம்புவோம் மற்றதை காலையில் பேசிக்கொள்ளலாம்",
ரூம் நண்பர்களை சமாதானப்படுத்தினானே ஒழிய அவன் மனம் சமாதானமாக இல்லை உடலில் சிறிது நடுக்கம் இருந்துகொண்டே இருந்தது.

எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை மறு நாள் காலை விழித்தபோதுதான் தெரிந்தது காலை ஒன்பது மணி என்று. ஆபிஸுக்கு போன் செய்து தான் வந்திருக்கும் செய்தியை சொல்லி காரை வரவழைத்து ஆபீஸ் போனான்.

ஆபிஸிற்கு எதுவும் தெரியாது, டைப்பிங் செண்டர் போனவன் திரும்பிவரவில்லை, ஏன் என்று தெரியாமல் தேடி இருக்கிறார்கள். டைபிங் செண்டர் cctv யை போட்டு பார்த்தபோது இளவரசன் வந்ததும் பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு போனதும் ரிக்கார்டாயிருக்கிறது. மற்றது எதுவும் தெரியவில்லை. எதோ சம்திங் ராங் என்று மட்டும் ஊகித்திருக்கிறார்கள். அவன் ரூமிலிருந்து போன் பண்ணி சொன்னபிறகுதான் தெரிந்தது.

ஸ்பேர் சாவியை எடுத்துகொண்டுபோய் தான் நிறுத்திய இடத்திலிருந்து காரை எடுத்து ஆபீஸில் ஒப்படைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் யாரிடம் ஆலோசனை கேட்கலாம், வக்கீலை வைக்கலாமா, அப்படியே வக்கீலை வைத்தாலும் அகாத பீஸ் கொடுக்கமுடியுமா? 

இந்தியாவாயிருந்தால் அரசியல் செல்வாக்கை வைத்து விளையாடிப் பார்க்கலாம், இது வேறு நாடாச்சே இப்படி பல சிந்தனைகள் அவனை வாட்டியது.

இருந்தாலும் ஒரு சமூக ஆர்வலரை ஆபிஸுக்கு வரவழைத்து நடந்ததை சொல்லி எதாவது உதவி செய்யமுடியுமா என்று கேட்டபோது, இது குடியரசு நாடல்ல, நாம் ஒன்றும் செய்யமுடியாது இருந்தாலும் சட்டப்படி குற்றம் செய்திருந்தால் கைது செய்த மறுநாளே கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று கேஸ் புக் பண்ணவேண்டும். ஆனால் உங்களை விட்டுவிட்டார்கள், இன்று(சனிக்கிழமை) விடுமுறை என்பதால் ஒன்றும் செய்ய இயலாது. நாளை அங்கிருந்து எதாவது தகவல் வருகிறதா என்று பாருங்கள், இன்று மாலை எனக்குத் தெரிந்த வக்கீலை கலந்தாலோசிக்கிறேன் என்று ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

இளவரசனுக்கோ ஒன்றும் பிடிபடவில்லை அழுவதா சிரிப்பதா என்றுகூட தெரியவில்லை. எடுத்துச்சென்ற சாமான்கள் எப்போது கிடைக்கும்? என்னவாகும்? என்றுகூட கணிக்க முடியவில்லை. எது நடக்கவேண்டுமோ நடக்கட்டும் என்று அசட்டுத்துணிச்சலுடன் அன்று இரவு கழிந்தது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஒரு ஃபோன் வந்தது நாங்கள் டிப்பார்ட்மெண்டிலிருந்து பேசுகிறோம் மதியம் வந்து உங்களது சாமான்களை எடுத்துச் செல்லுங்கள் என்று. எதோ விடுதலை கிடைத்ததுபோல ஒரு நிம்மதி அவனுக்கு. அனால் அவன் தலைவிதி தலைகீழ்விதியாக மாறப்போகிறது என்று தெரியாமல் அந்த நேரத்துக்காக காத்துக்கொண்டிருந்தான். நேரம் மெதுவாக ஊறுகிறதோ என்றுகூட தோன்றியது.

அந்த நேரமும் வந்தது, சாமான்கள் அதிகமாக இருந்ததால் உதவிக்கு கூடவே தன் நண்பரையும் அழைத்துக்கொண்டு அவர்கள் சொன்ன இடத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலகத்திற்கு சென்றபோது எதோ அவனுக்காக காத்திருந்ததுபோல் வரவேற்று இருக்கையில் அமரச்செய்து கணிவாகப் பேசி அரபியில் டைப் செய்யப்பட்ட சில பேப்பர்களை கொடுத்து சாமான்களைப் பெற்றுக்கொண்டேன் என்பதாக கையெழுத்து இடு என்று சொல்லி எல்லா சாமான்களையும் திரும்பக் கொடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள் என்று கையெப்பாம வாங்கிக்கொண்டனர், இரண்டு பொருளைத் தவிர. ஒன்று பாஸ்போர்ட், இன்னொன்று அடையாள அட்டை..

ஐயா, எனது பாஸ்போர்ட், ஐடி இரண்டையும் தரவில்லையே அவைகளை எப்போது தருவீர்கள் என்று கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் அவனை நிலைகுலையச் செய்தது, உலகமே இருண்டு காணப்பட்டது, முடிவுநாள் இப்போது வந்துவிடக்கூடாதா, பூகம்பம் வரக்கூடாதா, அழிந்துவிடக்கூடாதா என்று தோன்றியது.

ஆமாம், அவர்கள் சொன்னது இதுதான், நாங்கள் உன் விசாவைக் கேன்ஸல் செய்துவிட்டோம், இனி நீ இந்த நாட்டில் இருக்க அருகதை இல்லை, உன் நாட்டுக்குத் திருப்பி அனுப்புகிறோம், இப்போது உன்னை சிறைக்கு அனுப்புகிறோம் என்றார்கள்.

ஒரு நிமிடத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு ஐயா, உங்கள் நாட்டு சட்டப்படி எதுவேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு கால அவகாசம் கொடுங்கள், என் பெயரில் ’ட்ரேட் லைசென்ஸ்’ இருக்கிறது, ’டெனன்சி காண்ட்ராக்ட்’ இருக்கிறது, டெலிபோன், பேங்க் அக்கவுண்ட் இன்னும் பல காரியங்கள் செய்யவேண்டும் அவற்றைக் கேன்ஸல் செய்ய இரண்டுமூன்று நாள் பிடிக்கும், அதை முடித்தபிறகு நானே போய்விடுகிறேன் எனக்கு அனுமதி கொடுங்கள், அதுவரை என் பாஸ்போர்ட் இங்கேயே இருக்கட்டும் வேண்டுமானால் வேறொருவர் பாஸ்போர்ட்டை ஜாமின் தருகிறேன் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். அவர்களுக்கு ஈவிரக்கம் என்பது எதுவுமே கிடையாதுபோலும், முடியாது என்ற ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு அங்கிருந்த போலிஸின் கையில் ஒப்படைத்துவிட்டனர்.

பின்பென்ன,  அடுத்த நிமிஷம் அங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் பிரத்தியேகமாக கட்டப்பட்டிருந்த அவுட் ஜெயிலில் அடைத்துவிட்டார்கள்.

(அவுட் ஜெயிலென்றால் பல்வேறு குற்றத்துக்காகப் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டோ அல்லது தண்டிக்கப்படாமலோ அவரவர் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்காக அடைத்துவைக்கப்படும் ஜெயில்.)
அங்கே அவன் மட்டுமல்ல ஏறக்குறைய நூறு நூற்றைம்பதுக்கு மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருந்தனர், ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒவ்வொரு கதை, அதில் விசா இல்லாதவர்கள் சிலர், விசா காலாவதியனவர்கள் சிலர், வேலை செய்த கம்பெனி அடைத்துப் பூட்டியதால் விசா புதுப்பிக்கமுடியாமல் வயிற்றைக் கழுவ வேறு இடங்களில் வேலை செய்ததால் பிடிபட்டவர்கள் சிலர், அவனைப் போன்று எந்த காரணமில்லாமல் சந்தேகத்தில் பிடிக்கப்பட்டவர்கள் சிலர், விதியை நினைத்து அழுதவர் சிலர், தன் குடும்பத்தை நினைத்து அழுதவர் சிலர், முசீபத் நீங்கி தாய்நாடு போகிறோம் என்ற மகிழ்ச்சியிலிருந்தவர் சிலர்.
இப்படி பல்வேறு நிலையிலிருந்தவர்களை புரளக்கூட இடமில்லாமல் இரண்டுமூன்று அறைகளில் அடைத்துவைத்து வேளாவேளைக்கு சாப்பாடு கொடுத்துப் பாதுகாத்தனர்.

நிலமையை எடுத்துச்சொல்லி எதாவது உதவி செய் என்று கேட்டால், இதோ பார்,  உங்களுக்கு மூன்று வேலையும் சாப்பாடு கொடுத்து எதுவும் நேராமல் பாதுகாப்பது மட்டும்தான் எங்கள் வேலை, மற்றது எல்லாம் காலையில் எங்க ஆபிஸர் கவனித்துக்கொள்வார், அவர் காலையில் வருவார் பேசிக்கொள். இந்த ஒற்றை பதில் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஒரு வசதி  போன் பேச அனுமதித்தனர்.

அந்த ஒரு வசதி இருந்ததினால் ஆபிஸுக்கு போன் பண்ணி பார்ட்னரிடம் தன்னை ஜாமினில் எடுக்க ஏற்பாடு செய்யச் சொன்னான். ஆனால் வக்கீலை கன்சல்ட் பண்ணியதில் ஜாமினில் எடுக்கமுடியாது எனவே உன் காரியங்கள் அனைத்தையும் முடிக்க யாருக்காவது பவர் கொடுக்கவேண்டும் எனவே பவர் ஆப் அட்டர்னி தயார் செய்துகொண்டிருக்கிறோம் நாளை நீ கோர்ட்டுக்கு வந்து கையெழுத்திடவேண்டும், நான் உன்னை பார்க்கலாமென்று அங்கு வந்திருந்தேன், அனுமதிக்கவில்லை எனவே நாளை கோர்ட்டில் சந்திக்கலாம் என்றார் அவனது பிஸினஸ் பார்ட்னர்.

கோர்ட் என்றால் வழக்காடும் இடமல்ல, கோர்ட் வளாகத்தில் அமைந்திருந்த அட்டர்னி ஆபிஸ். இதுபோன்று பவர் கொடுப்பவர்கள் அங்கே சென்று அவர்கள் கணணி தொடு திரையில் கையொப்பம் இடவேண்டும். இது வழக்கம் போலும்.

மறுநாள் காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கேயும் இருக்கிறது ஜெயில் அறை, அதில் ஒன்றில் அடைத்துப் பூட்டிவிட்டு எல்லாம் ரெடி என்ற நிலை வந்தவுடன் அந்த குறிப்பிட்ட ஆபிஸுக்கு அழைத்துச்சென்றனர். எதாவது கருத்து சொல்லவேண்டுமானால் அங்கே அட்டர்னி முன் சொல்லலாம் இல்லையென்றால் கையெழுத்து இடலாம்.

சொல்வதற்கு எல்லாம் முடிந்துவிட்டது அப்படியே எதாவது சொன்னால் நிலமை சிக்கலாகும் எனவே பேசாது கையெழுத்து போட்டுவிட்டு அங்கே வந்திருந்த தனது பார்ட்னருடன் சற்று பேச வேண்டும் என்ற அனுமதியுடன் பேச வாயெடுத்தான், பேச்சு வரவில்லை பீறிட்டுக்கொண்டு வந்தது அழுகை, ஓ வென்று அழுதேவிட்டான், அங்கே வந்திருந்தவர்களெல்லாம் வேடிக்கைப் பார்த்தனர், இவனுக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று நினைத்திருக்கவேண்டும்.

ஆம், 43 ஆண்டுகால கல்ஃப் வாழ்க்கை அதில் 21 ஆண்டுகால சொந்த கம்பெனி எல்லாவற்றையும் ஒரே நாளில் இழந்து நிர்கதியாக்கப்படும் நிலை ஏற்படுத்தப்பட்டால் எத்தகைய மன உறுதியுள்ளவனும் நிலைகுலைந்துதான் போவான். அவன் மட்டும் என்ன விதிவிலக்கா? செய்யாத தவறுக்காக இப்படி ஒரு மாபெரும் தண்டனை உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் யார்தான் என்ன செய்யமுடியும்? விதி என்று நினைப்பதா? இல்லை சதி என்று நினைப்பதா? இல்லை நீதி தவறிவிட்டது என்று நினைப்பதா? இல்லை இறைவன் கண்ணை மூடிக்கொண்டான் என்று நினைப்பதா? மன்னர்கள் நினைத்தால் யாரையும் எதுவும் செய்யலாம் போலும்.

ஒரு நிமிடத்தில் தன்னைத் தேற்றிக்கொண்டு அழைத்துவந்த காவலர்கள் வசம் தன்னை ஒப்படைத்துக்கொண்டான். அவர்கள் மீண்டும் ஜெயிலுக்கே அழைத்துச் சென்றனர். அது அவர்கள் கடமை.

அங்கு சென்றதும், இனி என்ன நினைத்தாலும் வெளியில் வரமுடியாது என்று நிச்சயமாகிவிட்டபோது அடுத்துள்ள வேலை தாயகத்துக்கு திரும்புவது. அதற்கான ஏற்பாட்டை செய்யும்படி அங்கிருந்த ஆபிஸரிடம் வேண்டுகோள் வைத்தான், தன்னைச் சென்னைக்கு அனுப்பும்படியும் அதற்கான டிக்கட் தொகையைத் தருவதாகவும் சொன்னான். ஆனால் அவர்களுக்கு இந்தியா என்றால் மும்பை மட்டும்தான் தெரியும் போலிருக்கு மும்பைக்கு டிக்கட் எடுத்தனர். ஒரு மணிநேரத்துக்கு முன்பாக நீ புறப்படு என்று அவசரப்படுத்தினர். அங்கே பறித்துவைத்திருந்த உடைமைகளையும் அந்த நாட்டு நாணயத்தையும் பெற்றுகொண்டு சிறைச்சாலை வண்டியில் புறப்பட்டான்.

விடிவு வந்துவிட்டது ஏர்போர்ட் சென்று பிள்ளைகளுக்கு எதாவது சாக்லெட், பிஸ்கட் வாங்கிக்கொள்ளலாம் என்ற கற்பனையில் மிதந்தது முட்டாள்தனம் என்று பின்புதான் விளங்கியது. ஆம், அந்த ஜெயில் கார் நேராக ஏர்போர்ட் டார்மாக்கில் சென்று நின்றது. அங்கும் ஒரு ஜெயில் இருக்கிறது, அந்த ஜெயிலரிடம் அவனையும் அவனது பாஸ்போர்ட் டிக்கட்டையும் ஒப்படைத்துவிட்டு அந்த கார் மறைந்தது. ஃப்ளைட் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ஒரு ஏர்போர்ட் ஸ்டாப் வந்து அவனை அழைத்துக்கொண்டுபோய் ஃபைனல் செக்கின் கவுண்டர் ஸ்டாஃப்பிடம் ஒப்படைத்து விட்டு அவனும் சென்றுவிட்டான். அது அவனுடைய டூட்டி. அதுக்குமேல் எதுவும் செய்தால் அவன் வேலை போய்விடும். முடிவில் ஃபைனல் வெரிஃபிகேசன் முடிந்ததும் பாஸ்போர்ட் போர்டிங் கார்டை பெற்றுகொண்டு ஆசுவாசமாக இருக்கையில் அமர்ந்து ரூம் நண்பர்கள், தனது கம்பெனி நண்பர்களுக்கு செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஃபைனல் கால் வந்ததும் அந்த பாழாய்ப்போன ஏர் இந்தியா விமானத்தின் பெரிய தர்பூஸ் சைஸ் பிட்டமும் நம்மூர் டீக்கடை தேத்தண்ணி பைக்கு எந்தவிதத்திலும் குறை சொல்ல முடியாத கட்டிவைத்த கொங்கைகளையும் உடைய உம்மூமாவின் நமட்டுச் சிரிப்புக்கு நமஸ்தே சொல்லிவிட்டு மர நாற்காலியைவிடக் கேவலமான அந்த சீட்டில் அமர்ந்து நீண்டதொரு பெருமூச்சை விட்டது வரை ஒவ்வொன்றாக ஃப்ளாஷ் பேக் ஆகிக்கொண்டிருந்தது.

பயணிகளின் இரைச்சலும் காக்கைகளின் கரைச்சலும் இடையே அருகில் அமர்ந்திருந்த ஒரு பயணியின் குழந்தையின் அழுகை சப்தம் கேட்டு தன்னுணர்வு பெற்றவன் கடிகாரத்தைப் பார்த்தபோது மணி 12 ஐ காட்டியது. இனி இங்கிருந்தால் ஃப்ளைட் டாட்டா காட்டிவிடும் என்று உள்நாட்டுப் புறப்பாடு நோக்கி நடந்தான். சொன்னபடி சரியாக இரண்டு மணிக்கு புறப்பட்ட விமானம் திருச்சியை அடைந்து வெளியே வரும்போதுதான் அங்கிருந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தபோது அது தான் தானா என்று நம்பமுடியவில்லை.

வெறும் நான்கே நாட்கள் நொந்து நூடுல்ஸாகி பத்து கிலோ குறைந்த எடையுடன் தனக்காக காத்திருந்த காரை நோக்கி நடந்தான்.

எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான் என்ற விவேக்கின் டயலாக் ரீங்காரமிட்டது. ஏன் இப்படி நடந்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமலே அவனை சுமந்துகொண்டு ஊரை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது..
*
நன்றி: ஹமீதுஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/