Showing posts with label புலவர் மாமா கதைகள். Show all posts
Showing posts with label புலவர் மாமா கதைகள். Show all posts

Monday, February 25, 2013

நாய்ப் புணையலுக்குச் சோறூட்டிய கதை


வெளில தெரியிற வாலப்பழம் இவ்ளோ பெருசுன்னா உள்ள இரிக்கிறது எவ்ளோ பெருசா இரிக்கும்? கடைக்கி உள்ளே இரிக்கிறத சொல்றேன் காக்கா...! - ஆபிதீன்


***

அன்புள்ள ஆபிதீன்,

இங்கே புலவர் மாமாவின் அருமை மகனாரின் படத்தை அனுப்புகிறேன். எண்பத்து ஏழு வயதில் வபாத்தாப்போன புலவர் மாமாவுக்கு ஏழு பிள்ளைகள், நாலு பெண்களும் மூன்று ஆண்களும். புலவர் மாமா போல் ஞானவான்கள் ரொம்பக் குறைவுதான். புலவர் மாமாவின் முழுப்பெயர் அஹமது லெப்பை மரைகார் இப்ரா லெப்பை. இங்கே புலவர் மாமாவின் மகன் உமர் லெப்பை இப்பொழுது வாழைப்பழ வியாபாரியாக இருக்கிறார். ஒரு காலத்தில் வாப்பாவுக்கு நிகராக பகிடி விட்டவர். இப்பொழுது வாயே திறக்க மாட்டேன் என்கிறான். அன்று வாப்பாவின் வாளை எலிக்குச் சாப்பிடக் கொடுத்த அருமை மைந்தன் உமர் லெப்பை இன்று வாழைப்பழத்தை எலிக்குச் சாப்பிடக் கொடுக்கிறார்.

எஸ்.எல்.எம். ஹனிபா

***

நாய்ப் புணையலுக்குச் சோறூட்டிய கதை

மாமா சோளக்காட்டுச் சேனைக்கு காவலுக்காக இரண்டு கடுவன் நாய்க்குட்டிகளைப் பிடித்து வளர்த்தார். நாய்க்குட்டிகள் இரண்டு மாதப் பருவமடைந்ததும் மாமாவின் வாடிக்குப் பக்கத்திலிருந்த குறவர் இனத்தைச் சேர்ந்தவரைக் கொண்டு நாய்க்குட்டிகளின் விதைகளை அகற்றி விட்டார். (அந்தக் காலத்தில் இளவரசிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆண்களுக்கு நடந்த அதே கதிதான்)

இந்த நாய்கள் இரண்டுக்கும் எவ்வளவு சாப்பாடு கொடுத்தாலும் எப்பொழுதும் மாமாவைப் பார்த்து அழுது கொண்டே கிடக்குமாம். இதுகளின் பசியைப் போக்க வேண்டுமென்று நினைத்த மாமா, ஒரு நாள், பழைய சோற்றுடன் நன்றாகத் தயிரையும் குழைத்து ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு நாய்களை அவிழ்த்துக் கொண்டு அவருடைய வாடியின் மேற்குப் புறமாக இருந்த ஆற்றங்கரைக்குச் சென்றார்.

ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு சிறிய பானையளவு குழியை தோண்டி நீர் மெதுவாக ஊறி வரும் வேளையில் சோற்று வாளியைக் கொட்டினார். நீர் ஊறிக் கொண்டே இருந்தது. நாய்கள் இரண்டும் தயிரும் சோறும் கலந்த குழையலை நீருடன் சேர்த்துக் குடித்துக் கொண்டேயிருந்தன. தயிர், சோறு, ஊறும் நீர் என்று வயிறு முட்ட வயிறு முட்ட அன்றெல்லாம் எழுந்து நின்றும் படுத்துக் கிடந்தும் நாய்கள் குடித்துக் கொண்டேயிருந்தன.

இதிலுள்ள சங்கதியென்னவென்றால், ஊறும் நீரில் தயிரும் மெதுவாக மெதுவாக மணத்துக் கொண்டே இருந்ததுதான். அந்த மணத்தின் மயக்கத்தில் நாய்கள் குடித்து குடித்துக் களைத்துப் போனதுதான் கண்ட பலன். நாய்க்கு மாமாவால் சாப்பாடு கொடுக்க முடியவில்லை. நாய்தான் மாமாவை ஏமாற்றிப் போட்டது.

***


நன்றி : பலாப்பழத்துக்கு...

Sunday, February 10, 2013

புலவர் மாமா பட்டாசு வறுத்த கதை

எனக்கென்னமோ ஹனீபாக்காதான் புலவர்மாமாவாக வருகிறார் என்று படுகிறது... என்று கெளப்பினேன் , டவுட்ட. ’டே  தம்பி , சத்தியமா புலவர் மாமாட கூத்துத்தான்டா இதெல்லாம். அடுத்த கதை புலவர் மாமா நாய்க்குத் தயிரும் சோறும் ஊட்டிய கதை’ என்று பதில் தந்திருக்கிறார் காக்கா. தமாஷ் செய்வதெல்லாம் சரி..  ஸ்கைப்-ல் என்னுடன் உரையாட ஆசைப்பட்டவரிடம் ‘அதெல்லாம் முடியாது.. தினம் அஸ்மாவ பார்த்து ஓடுவதோடு சரி.. நேரில்தான் இந்த வருடத்திற்குள் உங்களை பார்க்கப்போகிறேனே..’ என்று எழுதியதற்கு,  ’உனக்காக உசிரைப் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்’ என்று.பதில் தந்து அழவும் வைக்கிறார்....   டாக்டர் முருகானந்தம் அவர்களின் புகழுரையை இங்கே பாருங்கள்.. எவ்வளவு பெரியவர் நம்ம காக்கா!  இவர் என் மேல் வைத்திருக்கும் பிரியத்தைப் பார்த்தால் நல்லவனாக மாறினாலும் மாறிவிடுவேன் போலிருக்கிறது! - ஆபிதீன்
***

புலவர் மாமா பட்டாசு வறுத்த கதை

அப்பொழுது புலவர் மாமாவுக்கு ஐம்பது வயதிருக்கும். ஆனை வணங்கி எனுமிடத்தில் ஐந்து ஏக்கர் மேட்டு நிலத்தில் மாமா சேனைப்பயிர் செய்தார். சோளன், குரக்கன், இறுங்கு, நிலக்கடலை என்று சேனைப்பயிர் செழித்துக் கிடந்தது. குடலைப் பருவத்தில் பன்றிகள், ஆனைகளின் தொல்லை மாமாவைக் கலங்கடித்தது. இரவு பகல் விழித்திருந்து காவல் காத்தார். மாமாவுக்குத் துணையாக எலிக்கு உணவாக வாளை வழங்கிய மாமாவின் தவப்புதல்வன் முகம்மது இஸ்மாயிலும் துணைக்கு நின்றான்.

மாமாவினதும் மகனினதும் கூக்குரலுக்கு பன்றியும் ஆனையும் மசியவில்லை. ஊருக்கு வந்த மாமா நான்கு பெட்டி சீனப் பட்டாசுகளுடன் வாடிக்குச் சென்றார். வரும் வழியில் பட்டாசுப் பெட்டிகள் மழையில் நனைந்து விட்டன. அன்றிரவு ஆனை, பன்றிகள் வரும் திக்கில் பட்டாசைக் கொழுத்திக் கொழுத்தி வீச ஒரு பட்டாசும் வெடிக்காமல் அடம் பிடித்தது. அந்த நேரம் பார்த்து மாமாவின் ஞானம் ஏடா கூடமாக செயல் படத் தொடங்கியது. மகனை அழைத்து, ரொட்டி சுடும் மண்ணோட்டை அடுப்பில் வைத்து நெருப்பு மூட்டச் சொன்னார். பட்டாசுப் பெட்டியை ஓட்டில் கொட்டி அகப்பையை எடுத்து வறுக்கத் தொடங்கினார். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டாசு ஓட்டில் கிடந்து வெடிக்கத் தொடங்கியது. மாமாவும் மகனும் அலறியடித்துக் கொண்டு சோளக்காட்டுக்குள் ஓடி விட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின் வந்தால், பட்டாசு அனைத்தும் பற்றி, வாடியில் கிடந்த பொருட்களும் பற்றி எல்லாமே புகைக் காடாகவும் கரிக்காடாகவும் கிடந்தன.

மாமாவின் ஞானத்தை என்னவென்பது?

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா | மின்னஞ்சல் : slmhanifa22@gmail.com

***

முந்தைய புலவர்மாமா கதைகள் :

குழந்தப் பிள்ள போல..!

வண்டிச் சில்லுக்குக் காத்துப் பத்தாது!

புலவர் மாமா கதைகள்

Saturday, February 2, 2013

குழந்தப் பிள்ள போல..! - புலவர் மாமா கதைகள்

ஹனீபாக்காவின் உடல்நிலை கவலை தருகிறது. ’உடல் நலம் இன்னும் சரிப்பட்டு வரவில்லை. மனத்தோடு ஒத்துழைக்க உடல் மறுக்கிறது. கிழடு தட்டிப் போன இயந்திரம்...’ என்று மெயில் அனுப்பியிருக்கிறார். பார்த்து ஒரு மாதிரியாகிவிட்டது.. இறைவன் அவருக்கு உடல் சுகத்தைத் தரட்டும் - இந்நிலையிலும் ‘குழந்த புள்ள’யை அனுப்பி சிரிக்க வைத்ததற்காக. ஆமா, கதையில் சொல்கிற மாதிரி ’அதைப்’ பார்த்த மாமிகளெல்லாம் அலறி ஓடுவார்களா என்ன? நம்ப முடியவில்லை! - ஆபிதீன்

**

குழந்தப் பிள்ள போல...

வீட்டில் பிள்ளைகள் யாருமில்லை.
புலவர் மாமாவும் பொண்டியும் ஹாயாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
மாமாவுக்கு உற்சாகம் தலைக்கேறி, மாமியைக் குஷிப்படுத்திக் கொண்டிருந்தார்.
மாமி திடீரென்று மாமாவைப் பார்த்து -
"இஞ்செ குழந்தப் பிள்ள போல அந்த வெத்தில வட்டாவை எடுத்திட்டு வாங்க ராசா" என்றார்.
மாமாக்கு இன்னும் ரெண்டு அங்குலம் கூடிப் பெய்த்து.
உடனே மாமா மறுபேச்சில்லாமல், போட்டிருந்த பெனியனையும் உடுத்திருந்த சாரனையும் களைந்தெறிந்தார். மாமா முழு நிர்வாணம். ஆறு மாத ஆண் குழந்தை போல.
வெத்தில வட்டாவத் தேடித் தேடி தவழத் தொடங்கினார். மாமியோ முகத்தில் சீலையை வாரிப் போட்டு அலறி அடித்துக் கொண்டே முற்றத்திற்கு ஓடி வந்தார்.

**

நன்றி : பெரிய குழந்தைக்கு...

Saturday, January 26, 2013

வண்டிச் சில்லுக்குக் காத்துப் பத்தாது!

புலவர் மாமாவின்  இன்னொரு வேடிக்கை - ஹனீபாக்காவின் எழுத்தில். ஓவியம் வரைந்தவர் -ஆதிமூலத்தை விரும்பும்  இளைஞர் நளீம். ஆதிமூலத்தின் கோட்டோவியங்களின் பெரும் தொகுப்பு நூல் அவரிடம் இருக்கிறதாம். அமுக்கிட வேண்டியதுதான்! . ’இப்ப வரைந்திருப்பது யாரை? ’கம்பின்’ சைஸையும் அதைப் பிடித்திருக்கும் விதத்தையும் பார்த்தால் நம்ம காக்கா மாதிரி இருக்கிறதே என்று கேட்டேன் . அவரை இப்படியெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது என்று உத்தரவு வந்துவிட்டதால் அதற்கு மேல் கேட்கவும் முடியாது.. ‘சாச்சா இளமையில் செய்ததையெல்லாம் என்னாலோ, அரபாத்தாலோ செய்யமுடியாமல் போயிட்டு’ என்று சொல்லும் வருத்தப்படும் நளீம் , புலவர் மாமாவைத்தான் வரைந்தாராம் -  ஒரு நரைத்த, கறுத்த முதியவர் என்பது மட்டும் நினைவில் இருப்பதால். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி. - ஆபிதீன்

***



ஊரிலிருந்து பத்து மைல்களுக்கு அப்பால் புலவர் மாமாவின் வயல் வாடி. ஒரு நாள் கருக்கலில் மாமா வாடியிலிருந்து ஊருக்குக் கிளம்பினார். வரும் வழியில் சைக்கிள் முன்ரோதைக்குக் காத்துப் போய் விட்டது. எங்கள் வயல் நிலங்களில் நாலாம் முச்சந்தி பிரபல்யமானது. மாலை வேளையில் ரொம்பக் களைகட்டும். போடிமார்களும் கமக்காரர்களும் கூடும் சிறியதோர் தேநீர்க்கடை அங்குண்டு. சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்த மாமா கடையின் சுவரில் சாய்த்து விட்டு ஒரு பிளேன் ரீ குடித்துக் கொண்டிருக்கும் பொழுது, மர்ஹூம் அபூபக்கர் ஹாஜியார் அவருடைய ட்ரக்டர் வண்டியில் வாடிச் சாமான்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ட்ரக்டருக்குக் கை போட்ட மாமா என்னையும் எனது சைக்கிளையும் ஏற்றிக் கொள்ளுங்கள் என்றார். போடியாரோ பெருமனது கொண்டு, "மாமா பெட்டியில் இடமில்லை" என்று சொன்னார்.

ஒரு வருடம் கழித்து, அதே இடத்தில் மாமாவின் வண்டில் ஊருக்குப் போக வந்து கொண்டிருந்தது. ஹோட்டலின் முன்னால் ட்ரக்டரின் பென்னம்பெரிய டயருடன் மர்ஹூம் அபூபக்கர் ஹாஜியார் நின்று கொண்டிருந்தார். மாமாவிடம் சென்று மிகப் பவ்யமாக, "மாமா, டயர் உடைந்து போய் விட்டது. எப்படியாவது ஊருக்குக் கொண்டு வந்து தாருங்கள். அதற்குரிய சம்பளத்தை நான் தருவேன்" என்றார்.

வண்டிலை விட்டுக் கீழே இறங்கிய மாமா, மெதுவாக நடந்து போய் வண்டிச் சில்லை பெருவிரலைக் கொண்டு நசித்துப் பார்க்கிறார். "ஹாஜியார், மனம் பொறுக்கணும், சில்லுக்குக் காத்துப் பத்தாது" என்றார்.

மாமாவின் காளை விட்டு வண்டில் ஜல்ஜல்லென்று அந்த வீதியால் போவதை போடியார் வெறித்துக் கொண்டு நின்றார்.

**
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள்

Saturday, January 19, 2013

புலவர் மாமா கதைகள் - எஸ்.எல்.எம். ஹனிபா

ஜாஃபர்நானாவுடயத பாத்துட்டு நம்ம ஹனீபாக்காவுக்கும் ரொம்ப சின்னதாயிடுச்சி.. எல்லாம் வயசுதான் காரணம்டு நெனைக்கிறேன். அல்லா போதுமானவன். இன்று காக்கா அனுப்பியிருக்கும் கதைகள் இவை. என்ஜாய்!

***

அன்புள்ள ஆபிதீன்,

நலமாக இருக்கிறீர்களா?

ஜாஃபர் நானாவின் கதைகளைப் படித்த போது ஊரில் உலா வரும் புலவர் மாமாவின் கதைகள் ஞாபகத்திற்கு வந்தன. எனது ஊர் மீராவோடையில் புலவர் மாமாவைத் தெரியாதவர்கள் யாருமில்லை. கருங்காலி போல் உடம்பு வாகு. கட்டை மனிதர். எண்பது வயது வரையிலும் வாழ்ந்தார். அவ்வப்போது அவர் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் எங்களூரில் எல்லோர் மனத்திலும் ஈரங்காயாமல் இன்னும் ஒட்டிக் கிடக்கிறது. அப்படி ஏராளம் கதைகள். இதோ இப்போதைக்கு இரண்டு கதைகள்:

கதை 01:

எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த புலவர் மாமாவுக்கு இடது கால் ஓயாத தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மூட்டு வலி. டாக்டரைப் பார்க்க மாமா போனார். காலைப் பரிசோதித்த டாக்டர், "வயசு போற காலத்தில இப்படியெல்லாம் காலுக்கு வருத்தம் வரும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது" என்றார். உடனே மாமா, "நீங்க சொல்வது பொய், என்ட இடது காலுக்கும் வலது காலுக்கும் ஒரே வயசுதானே" என்றார்.

நான் நம்புகிறேன், சிரித்துக் கொண்டு பதில் சொன்ன நோயாளியை தன் வாழ்நாளில் டாக்டர் அன்றுதான் பார்த்திருப்பார் போலும்.

கதை 02:

புலவர் மாமாவின் வீட்டு முற்றத்தில் தென்னைகள் குலை குலையாய்க் காய்த்துத் தொங்கின. கவனித்திருந்த யாரோ இரவோடிரவாக தேங்காய்களைப் பறித்துப் போய்விட்டார்கள். சுப்ஹு தொழுது விட்டு கடைக்கு சீனி, தேயிலை வாங்கப் போன மாமாவின் முகத்தைப் பார்த்த கடைக்காரர், "என்ன புலவரின் முகம் இப்படிக் கிடக்கிறது?" என்றார். "டே தம்பி, ராவு யாரோ வந்து தேங்காயெல்லாம் ஆஞ்சிட்டுப் பெய்த்தானுகள்". கடைக்காரர், "உங்கட தோட்டத்திலதான் நாலு நாய்கள் கிடக்கிற எண்டு கதைக்கானுகளே" என்று கேட்டார். "கள்ளன் வந்த நேரம் நாய்கள் எங்க போன? தேங்கா பறிக்க உயரம் பத்தாத போது, குறட்டை விட்டுத் தூங்கிய எனது நாய்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி நாய்க்கு மேல் ஏறி நின்று தேங்காயைப் பறித்துக் கொண்டு போயிருக்கான்" என்றார் புலவர்.

கடைக்காரர் வயிறு குலுங்கச் சிரித்திருப்பார் போலும்.


அன்புடன்
ஹனீபாக்கா (E-Mail : slmhanifa22@gmail.com)