Showing posts with label ஆபிதீன். Show all posts
Showing posts with label ஆபிதீன். Show all posts

Wednesday, April 10, 2024

ஓணான் மார்க்கம் (சிறுகதை) - ஆபிதீன்


கைலிக்குள் இருந்த பழைய கதை இது! ஆமாம், நிஜமாகவே பீரோவிலிருந்த கைலிகளுக்குள் எப்படியோ புகுந்திருந்தது. தன்னைப் பற்றிய கதை என்று தெரிந்துகொண்டு சரியான இடத்தில் மறைந்துகொண்ட அதன் புத்திசாலித்தனத்தை என்னென்பது! 

நேற்று அதை உருவும்போது, ’உருப்படாத கதை’ என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் தூக்கியெறிந்து இலக்கியத்தை நிலைநாட்டிய கவிஞர் ஒருவரின் நினைப்பும் வந்தது. நல்ல மனுசன். மவுத்தாகிவிட்டார். 

'கொஞ்சம் மாத்துனா ஓரளவு தேறும்’ என்று அவர் சொன்ன யோசனையை முடிந்தால் பிறகு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ். நல்லவேளையாக எழுதிய என் பெயர் அப்படியே இருக்கட்டும் என்றார். அல்ஹம்துலில்லாஹ். ஏனெனில், சும்மா தமாஷாக பேசிக்கொண்டிருந்தாலே நம் அனுபவம் இன்னொருவரின் பெயரில் அடுத்த நாள் வந்துவிடுகிறது.

சரி, கதையின் தலைப்பு : ஓணான் மார்க்கம்

இனி படிக்கலாம்.
***
X வடிவத்தில் இருக்கும் 'ரொஹையான் கட்டை' மாதிரி யஹ்யா மரைக்காயரின் கைகள் பின்னியிருந்தன. தாடை , மேல் விரியும் புள்ளியில் கவலையோடு உட்கார்ந்திருந்தது. முழங்கை மூட்டுக்கள் கணக்குப்பிள்ளை மேஜை போல இருக்கும் ’கல்லா’வில் ஊன்றியிருக்க, கடைத் தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார் அவர் . 

வெயிலை மறைக்கப் போட்டிருந்த மரப்புதான் அசைந்து கொண்டிருந்தது.
 
ஒரு ’கைநேஞ்சி’ கூட விற்றபாடில்லை. 'ஓணான் மார்க்' என்கிற பெயரே சரியில்லையே முதலில். சாயம் போகாதது -அல்லது - போனாலும் அடுத்த வண்ணம் வந்துவிடும் என்பதை symbolicஆக உணர்த்தத்தான் அந்த ஓணான் என்று மரைக்காயர் சொன்னார் எல்லோரிடமும். அது பச்சோந்தியல்லவா என்று கடைத்தெருவில் கேட்டபோதுதான் அவருக்குத் தன் தவறு புரிந்தது. ஆனால் அதற்குள்ளாக 'ச்சாப்பு' குத்தப்பட்டு  லேபிளும் ஒட்டப்பட்ட கைலி பண்டல்கள் வந்து இறங்கி விட்டன. உருவம் கூடுமா கூடாதா எனும் வாதங்களுக்கு காது கொடுக்காமல் 'விசில் மார்க்' லேபிள்களுக்கு தன்னுடைய ஓணான் எவ்வளவோ பரவாயில்லை என்று மரைக்காயர் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார். உண்மைதான். விசில், silhouetteல் இருக்கும்போது அசப்பில் அது தரும் உருவமும் உணர்வுமே வேறு...! வட நாட்டில் எங்கோ ஒரு கோசா (அலி) கூட  தான் விரும்பிப் பெற்ற அந்த சின்னத்தில் தேர்தலில் நின்று ஜெயித்தாள்/ர். மத்திய மந்திரியாகவும் ஆகியிருக்கக் கூடும்.

இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கடை போர்டு கூட ரெடியாகி விட்டது. விலை உயர்ந்த பிளாஸ்டிக் சைன் போர்டு அல்லதான். ஆனால் அதை விடப் பளபளப்பாக மிட்டாய் ரோஸ் கலரில் ஆர்டிஸ்ட் சையதுவாப்பா செய்து கொடுத்த தகர போர்டு. ஓணான் ஒன்பது கலரில் இருந்தது - வரைந்தவனுக்கு காசு கேட்டுக் கொண்டு.

'வுடு! எனக்கு கிடைக்கிம்டு இருந்தா நான் பண்டி பிராண்ட் போட்டு வித்தாலும் பறந்து போயிடும்' என்றார் மரைக்காயர். 

'அதுக்கு பண்டியையே வித்துக்கிட்டு இருக்க வேண்டியதுதானெ..பஜார்லே வந்து ஏன் நாத்தம் பண்ணிக்கிட்டு இரிக்கனும்? இந்தோ இக்கிது பள்ளிவாசல். அதுக்கு போவாம கடை முன்னாலேயே ஒண்ணுக்கு இருந்தா எவனாவது வருவானா வாங்க , அட, பார்க்க?' என்றார்கள் பாவா பஜாரில்.

அதற்குத்தான் அ·ப்ஜலை வேலைக்கு வைத்திருக்கிறாரே மரைக்காயர்! labelஇல் உள்ள ஓணானையும் மரைக்காரரின் ஓணானையும் அவன் ஒப்பிட்டு நோக்க ஒரு அரிய வாய்ப்பு.

அதையாவது பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் அந்த குடலைப் பிடுங்கும் மூத்திர நாற்றம்... அ·ப்ஜலுக்கு அது கொடுமையாக இருந்தது. ஏதோ பெரிய வியாதி பிடித்த உடம்பிலிருந்து வெளியாகும் மூத்திரத்தின் நாற்றம்...

வேறு கடையில் வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால் 'சொல்லு கேக்காத புள்ளெ' என்றுஅவன் உம்மாவுக்கு கோபம் வருகிறது. மரைக்காயர் அவன் வாப்பாவுக்கு தூரத்து சொந்தக்காரராம். 'என்னா ஒரு ஓணான் தாண்டுற அளவுக்கு தூரம் இக்கிமா?' என்று அ·ப்ஜல் வெடைத்தான். கோலாலம்பூரில் உள்ள அவன் வாப்பாவுக்கு கேட்டு விட்டது!

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு எல்லா நல்ல முஸ்லீம் பிள்ளைகளையும் போல அ·ப்ஜல் அரபு நாடு போவதற்காக காத்துக் கொண்டிருக்கும்போது அவன் வாப்பாவின் தற்காலிக முடிவு , சம்பளம் சரியாகக் கொடுக்கும் மரைக்காயரின் கைலிக் கடல். 

நாளுக்கு ஒன்றாய் கைலிக் கடைகள் நாவூரில் முளைக்கின்றன. கைலி மலைகளின் நடுவே ஊர் கணவாய் போல ஓடுகிறது என்று சொல்லலாம். சென்னையில் உள்ள பெரும்பெரும் கைலிக் கம்பெனிகளுக்கு ஏஜெண்டாக மாறிக் கொண்டு கண்ணை அள்ளும் வண்ணத்திலும் டிசைனிலும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கம்பெனி சின்னங்கள் கவர்ச்சிகரமாக இருந்தால் கைலிகளில் பெயர்களோ நேற்றுதான் seal உடைக்கப்பட்ட நடிகைகளின் பெயர்களில் மனதை அள்ளுகின்றன. அல்லது லேட்டஸ்ட் ஹிட் படங்களில் பெயர்கள். கம்பெனி பெயருக்கு ஒன்றும் கைலி பெயருக்கு ஒன்றுமாக ஜனங்கள் வாங்குகிறார்கள். ஒன்று இடுப்புக்கு கீழும் மற்றொன்று இடுப்புக்கு மேலுமாக இருக்கலாம். வெறும் கைலிகள் மட்டுமின்றி பனியன்கள் , ஜட்டிகள் , பெண்களுக்கான பத்தாய் கைலிகளும் வேறு... கூட்டம் நிரம்பி வழிகிறது அந்தக் கடைகளில்.

மரைக்காயரோ  விலை மலிவு என்று எங்கிருந்தோ மெஷின் தறியிலிருந்து வாங்கிவந்து கைலிக்குள் ஓணானை விடுகிறார். வியாபார மூளையாம். ஆமாம், ஓணானுக்கு மூளை இருக்கிறதா? 'ஓணானை அடித்தால் ஒன்பது நன்மை' என்று பையன்கள் சொல்வது அதற்குத் தெரியுமா ?

'அது எப்படிங்கனி அறுவதுக்கு நாப்பதும் எம்பதுக்கு எம்பதும் இருவதுக்கு இருவது மாதிரியே இக்கிது?!' என்று மரைக்காயரின் நண்பர் கேட்டார் . 'பாயடி'யும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்த அ·ப்ஜல் , மரைக்காயரின் கோபத்தைப் பார்த்து அடக்கிக் கொண்டான்.

மரைக்காயர், 'என்னட size சரியா இக்கிம்ங்கனி!' என்றார்.

'உம்மட size ஆ? 'உமர் ஹத்தாப்’ட மாதிரிலெ ஒன்றரை முழம் இக்கிம்!'

நண்பரின் கேலியை மரைக்காயர் பொருட்படுத்தவில்லை. ' XXX787 கம்பெனியை அடிக்க முடியாது' என்று சொன்ன நண்பரின் மூக்கை அறுக்க XXX787 கடையெலேர்ந்து ஒரு 54 இஞ்ச் ஒண்ணு எடுத்து வா தம்பி' என்றார் மரைக்காயர். எடுத்து வந்து ஓணான் மார்க்கோடு அளந்ததில் ஒணானின் நீளம் அதிகமாக இருந்தது. 'இல்லே... அதுக்குப் போட்டியா இக்கிற XXX785தான் சரியா இக்கிம் ' என்றார் நண்பர் விட்டுக் கொடுக்காமல் . 'அப்போ XXX785 லெ ஒண்ணு எடுத்து வா' என்றார் மரைக்காயர். அதுவும் ஓணானை விட கம்மிதான்!

நண்பருக்கு அவமானமாகப் போய்விட்டது. 'சரிதான் ரெண்டு பேருமே ஒரு சாமானுக்கு பொறந்தவனுவதானே' என்றார்.

மரைக்காயருக்கு எதையோ நிரூபித்து விட்ட திருப்தி! அவரது கைலி ஓணானுக்குப் பிறந்ததாக்கும்..

திருப்தி , எதையாவது விற்று கிடைப்பதில் வரும் லாபத்தில் அல்லவா வர வேண்டும் ? 

அ·ப்ஜலுக்கு முன்னால் கால்மாட்டு சந்திலிருந்து ஒரு சின்ன பையன் வேலைக்கு வந்தான். கடை ஆரம்பித்த புதிது. கடை ஆரம்பிக்கவே ஒரு வருடம் ஆகியிருக்கிறது. மரைக்காயர் இலேசில் யாராலும் அணுக முடியாத மனாம் சாபுவை  அணுகி , கடை திறக்கச் சொல்லும் உத்தரவு வரும் கனவுக்காக அலைந்து , கடைசியில் மனாம்சாபுவுக்கு அந்த கனவு வந்ததும்தான் கடையைத் திறந்தார். மனாம்சாபுவுக்கு உத்தரவு கொடுத்தது கூட ஓணாணாகத்தான் இருக்கும். கனவின் மூலமாக மனாம்சாபு கைலியையும் விற்க முடியுமா? அதை மரைக்காயர்தான் செய்ய வேண்டும்.

மரைக்காயர் கைலி விற்க வேண்டும் என்று கடையில் உட்காராமல் தர்காவில் உட்கார்ந்தார் நேர்ந்து கொண்டு!

அவ்வப்போது கடைக்கு வந்து பையனிடம் விசாரணை: 'என்னாங்கனி .. ஏதாவது வித்தியுமா?'

'இல்லே மாமா'

'ஹைர் !.. நடக்கும்; பாவா நடத்திக் காட்டுவாஹா!'

பத்து நாளைக்குப் பிறகு நடந்தது. 

பையன் இரண்டு ரூபாய்க்கு 'போனி’ பண்ணியிருந்தான்! அது கடை சாமானல்ல. பக்கத்து சிங்கப்பூர்க் கடை ஆள் , விற்ற பிறகு காசு தரச் சொல்லியிருக்கும் சின்னப் பிள்ளைகள் ஜட்டி. made as china ! . இதில் மரைக்காயருக்கு பாதி லாபம் இருக்கிறது என்றாலும் பக்கத்து கடைக்காரனின் வியாபார சாமர்த்தியத்தை அவரும் காட்டியிருந்தால் இடம் மாறிய சந்தோஷத்திலாவது ஓணான் ஒன்று விற்றுப் போயிருக்கும். சாமர்த்தியம் சுத்தமாகக் கிடையாது மரைக்காயருக்கு. இருந்திருந்தால் மற்ற கடைக்காரர்கள் செய்வது மாதிரி  கூரையை கடைத்தெரு பாதிவரை இழுத்து கைலிகளை தொங்கவிட்டு , கூரை நிழலின் சுகத்துக்காக ஏங்கும் டைல்ஸ் தரையும் போட்டிருப்பாரே ! எப்படியோ அவர் கல்லாவும் காசை பார்த்து விட்டது.

மரைக்காயருக்கு சந்தோசம். அதிர்ஷ்டத்தை வாங்கும் தகுதி நமக்கு இருக்கிறதா இல்லையா  என்று check பண்ணிக் கொண்டுதான் அதிர்ஷ்டம் வரும். இப்போது மரைக்காயருக்கு தகுதி வந்து விட்டது. இனிமேல் கடைக்கு முன் தேங்கியுள்ள மூத்திரக் குட்டை ஓடி மறைகிற மாதிரி ஒரு பெரிய மழை வரத்தான் போகிறது.

கல்லாவில் முதன் முதலாக காசை பார்த்து சந்தோஷத்தில் 'என்னடா வித்தே..?' என்றார் பையனிடம் செல்லமாக. கெட்டிக்கார பையன். ஆனால் அநியாய மறதி. 

'ம்..ம்... ஒண்ணு வித்தேன் மாமா..' என்றான்.

'அதுதான் எதுண்டு கேக்குறேன்'

'இல்லே மாமா...ஒரு பொம்பளை வந்தாஹா.. 'பாபா செட்' இக்கிதாண்டு கேட்டாஹா.. இல்லேண்டேன்.. அப்புறம் வெறெ என்னமோ ஒண்ணு கேட்டாஹா. அதை வித்தேன். அது.. அது...'

'பரவாயில்லே.. ரெண்டு ரூவாயா இந்தாலும் கணக்குலே எளுதனும்லே நான்?. இப்படி இஞ்சிப் பேயன் மாதிரி இரிக்கக் கூடாது. யோசிச்சி வை. நான் தொழுவிட்டு வந்துடுறேன்..'

அசருக்கு போன மரைக்காயர் இஷாவையெல்லாம் முடித்து விட்டு கடை கட்டுகிற நேரத்தில் வந்து சேர்ந்தார். பையனிடம் கேட்டார் : 'நினைப்புக்கு வந்திச்சிலே ? சொல்லு..என்ன வித்தா ?'

'ஒண்ணு வித்தேன் மாமா ரெண்டு ரூவாய்க்கி. அது.. அது என்னாண்டுதான்..' - பையன் இழுத்தான் எச்சிலை விழுங்கிக் கொண்டே.

'செல்லக்கனி சாபுட்டெ கணக்கு போட்டு பாக்கனுமோ?'

'இல்லே மாமா..ஒண்ணு வித்...'

'சரி ! நீ எழுது. நான் சொல்றேன் என்னா சாமாண்டு..' - கணக்கு புத்தகத்தைத் தூக்கி பையன் முன் போட்டார் மரைக்காயர்.

'ம்... எழுது... உம்மாட பப்பான் - ரெண்டு ரூவா!'

பையன் எப்படி இருப்பான் ?

அப்படி ஏதாவது ஏடாகூடாமாக சொல்லி விடுவாரோ என்று அ·ப்ஜலுக்கும் பயமாக இருந்தது. தவிர எதையாவது விற்றால் அல்லவா சம்பளம் கொடுப்பார்? அல்லது கைலி ஒன்றை சம்பளமாகக் கொடுத்து விடுவாரா?
 கடை இந்த வள்ளலில் இருக்கும்போது அ·ப்ஜலின் புரட்சிக்கார சென்னை நண்பன் ஒரு நாள் வந்தான். மரைக்காயர் , ஒரு பார்வைக்கு வேலைக்காரன் மாதிரிதான் இருப்பார். அதற்காக தன் நண்பனுடன் உட்கார்ந்திருப்பவர் யார், என்ன என்று கூட யோசிக்காமலா கணேஷ் பேசுவது?

'திருடனும் ! நாம எடுக்கப் போற art filmக்கு இந்த கடையிலிருந்து வர்ற சம்பளம் மட்டும் சரி வராது.  தெரியுமா, மெஸ்னியாவ்ஸ்யாகி கூட கேமராவை திருடித்தான்டா படம் எடுத்தான்..'

கெடுத்தானே பாவி!

மரைக்காயரின் முகம் மூத்திரம் குடித்த ஓணான் மாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சந்தோசம் இருக்கும் என்பது அ·ப்ஜலின் அனுமானம். ஏதோ ஒன்று கடையில் இருக்கப் போய்தானே திருடச் சொல்கிறான் ?

ஒரு சல்லி கூட விற்காத கடையில் ஓணானைத்தான் திருட வேண்டும் - 'அல்லாஹும்ம சல்லி வ சல்லி' என்று சொல்லிக் கொண்டு. 
ஒரே ஒரு முறை கைலி விற்றதுதான். ஆனால் காசு வரவில்லை. வீட்டிலிருந்து கொண்டு அனுப்பச் சொன்னார் ஒரு மேலத்தெரு காக்கா. அவர் ·போனில் சொன்னபடியே ஒரு ரெட்டை மூட்டுக் கைலியை , கடனுக்கு தைத்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அ·ப்ஜல் காசுக்கு நின்றான். 'நாளைக்கி கடைத்தெரு வரும்போது 'பச்சை' (டாலர்)ஐ மாத்தி தரேங்கனி... யஹ்யாட்டெ சொல்லும்..' என்றார் அவர். அடுத்த நாள் அவருடைய மைய்யத்துதான் 'கலிமா..ஷஹாதா.!' என்று மூமின் certificate வாங்கியபடி பஜாரில் கடந்து போனது. போனது எளிமையான 'சந்துக்'. மரப்பெட்டி அல்ல. டாலர் இன்னும் மாற்றப் படவில்லை போலும்...

விற்ற ஒரே கைலிக்கும் காசு கிடைக்காத வருத்தத்தை விட 'ஓணானைக் கட்டியதால்தான் அவர் மெளத்..' என்று XXX785 கைலி கடைக்காரன் கிளப்பிய பிஸாது யஹ்யா மரைக்காயரை ரொம்பவும் பாதித்தது. 'எந்த நேரத்துலே இதை சொல்றான் பாரு...! ஒரு தொழுவாளியெ மனம் கசங்க வைச்சவனை அல்லாஹ் சும்மா வுட மாட்டான்.. பாத்துக்கிட்டே இரு..' என்றார் அ·ப்ஜலிடம். பிஸாதை மாற்ற ,  மெளத்தானவர் எப்போதும் ஓணானைத்தான் கட்டுவார் பிரியமாக என்று சலாம் கொடுக்க வந்த அத்தனை பேரிடமும் சொல்லிக் மரைக்காயர் புலம்பிக் கொண்டிருந்தில் வேறு எல்லோருக்கும் தெரிந்து போனது !

அன்றிலிருந்து வாடிக்கையாளின் வருகைக்காக மரைக்காயரின் முகம் வானத்தை வானத்தைப் பார்த்துக் கொண்டு ஓணான் போலவே இருந்தது.  நாக்கு திடீரெரென்று நீண்டு ஒருநாள் கிராக்கியைப் பிடித்தே விட்டது - தெரிந்த ஒரு சாபு மூலம். ஜியாரத்திற்கு வந்த பாம்பேகாரன். 'க்யா தாம் ஹே?' என்று கேட்டான் ஒரு கைலியைப் பார்த்து. 'தாம்' (dhaam) என்றால் விலை என்று சாபுக்கு தெரியவில்லை. அவருக்குத் தெரிந்தது அடுத்து கிராக்கியை முடி இறக்கக் கூட்டிக் கொண்டு போவதுதான். அ·ப்ஜலுக்கும் தெரியவில்லை. செளதி போகும் ஏற்பாட்டிற்காக பாம்பே சென்று திரும்பி வரும்போது ரயிலில் ஒரு கிழவி அவனிடம் கேட்டாள். 'பாம்பே கயா?'. அர்த்தம் தெரியாமல் பேமுழி முழித்துக் கொண்டு காது செவிடானவன் போல நடித்தவன் அவன். 'தாம்' தெரியுமா இப்போது ? மரைக்காயர்தான் உதவிக்கு வந்தார். கைலி பாஷையில் 'டாம்' என்றால் கட்டம் என்று அர்த்தம். ஹ, இது தெரியாதா அவருக்கு?

'யே படா படா டாம் ஹை !'.

பாம்பேகாரன் ஏற இறங்க அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு ஓடினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

மரைக்காயரின் சோகத்தைப் போக்க அவர் வீட்டு மனுஷர்கள் கைலி வாங்கினால்தான் உண்டு. ஆனால் அவர் வீட்டுப் பெண்களோ 'கைலிண்டா ஒரு ’ஜீமத்’ இக்கெ வாணாம்? இஹல்ட்டெ கைலி வாங்கி உடுத்துனா பேண்டவன் கூட எந்திரிக்க மாட்டான் பாத்து!' என்கிறார்கள். பேலுபவன் முன்னால் இவர்கள் ஏன் போக வேண்டும் ? 

நம் மதிப்பு நமக்கு எப்போதுமே தெரிவதில்லை. மனசெல்லாம் வெளியில்தான் பெருமை காண்கிறது. 

மனாம் சாபுக்கும் இந்த கதிதான். வெளியூர் ஜனங்கள் அவர் கனவு கண்டு சொல்லும் உத்தரவுக்காக மண்டுகிறார்கள். ஆனால் அவர் வீட்டு பெண்களோ தன் வீட்டு பையன் அரபுநாடு போவானா என்று கணக்கு போட்டுப் பார்க்க குஞ்சுக்கொல்லை ஹஜ்ரத்தைப் பார்க்கப் போகிறார்கள் . சமயத்தில் அரபுநாடே போய் விடுகிறார்கள்!

உள்ளூர் என்றாலே உதவாதது என்று பார்த்தால் வெளியூர் ஆட்கள் வந்து நாவூர் ஓணானைப் பிடித்துக் கொண்டு போக வேண்டுமே.. ஏன் வாங்கவில்லை? எப்படிப் பார்த்தாலும் கைலி டிசைன்கள் நாவூரில் கிடைப்பதுபோல அவர்கள் ஊரில் கிடைக்குமா? ஒவ்வொரு வருடமும் கைலிகளுக்கு புது டிசைன் அறிமுகப்படுத்துவதே நாவூர் கந்தூரியில்தானே.. என்னென்ன வகை கட்டங்கள்..! சட்டைத் துணியாகக் கூட உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் மரைக்காயரோ புதுமை என்று 'கம்பம்' இல்லாத கைலிகளை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறார். ' கைலிட பின்பக்கம்டு தெரிய ஒரு டிசைனா ? அட..போங்கப்பா' என்கிறார் பெருமை வழிய.

'இது என்ன பெரிய நூதனமா ?' என்று பஜாரில் கேட்டார்கள். அவர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. பட்டுப் புடவைகளுக்கு வருகிற மாதிரி அடியில் பார்டர் போட்டெல்லாம் புதுமைகள் வருகிறபோது மரைக்காயரின் புதுமை தூசு அல்லவா?

'அப்ப முன்னாலேயும் பின்னாலேயும் ஒட்டை போட்டுத்தான் விக்கெனும்..' என்றார் மரைக்காயர்.

நினைத்துப் பார்த்தாலே சிரிப்பாக இருந்தது அ·ப்ஜலுக்கு. 'இவர்களுக்கு மட்டும் தடை இல்லை என்றால்..' என்று டி.வியில் இரட்டைத்தொப்பி மார்க் கைலி விளம்பரம் வரும். வக்கீல், டிரா·பிக் போலீஸ், டாக்டர் எல்லோரும் கைலிகளோடுதான் அலைவார்கள் டூட்டி நேரத்தில். அவர்கள் எல்லாரும் மரைக்காயர் சொன்ன யோசனை படி கைலி கட்டியிருந்தால் ஜோராக இருக்கும் இல்லையா ? 'நல்ல வேளை ஜனாதிபதியை வுட்டுப்புட்டானுவ!..' என்று கிண்டல் செய்தாலும் 'விளம்பரம் நல்லாத்தான் இக்கிது..' என்று சொன்ன மரைக்காயரை அசத்த, 'படிச்ச புள்ளெ'யான அ·ப்ஜலும் ஒரு caption போட்டான். ஆறுமுகம் பிரெஸ்ஸில் 1000 நோட்டிஸ் அடித்தார்கள்.

கைலிகளை வாங்காதீர்கள் !

அசத்தலாக இல்லை ? அதாவது தரமில்லாத கைலிகளை வாங்காதீர்கள்; ஓணான் மார்க் கைலிகளையே வாங்குங்கள் ! இது நோட்டிஸ் அடியில் சின்ன எழுத்தில் வரும். ஆனால் யாருக்கு அவனது விளம்பர யுக்தியையெல்லாம் கவனிக்க நேரமிருக்கிறது ? ஜும்ஆ தொழுதுவிட்டு ஓடிவருபவர்கள் , நேர்ந்துகொண்டு பவுருவதற்கு காத்திருக்கும் பாலைப் பார்ப்பார்களா அல்லது பிரயோஜனமில்லாத நோட்டிஸ்களையா ? முதல் வரியில் மட்டும் கண்ணை ஒட்டி வேறு ஏதாவது படம் தெரிகிறதா என்று பார்த்து விட்டு ஓணானைப் பார்த்ததும் கசக்கி கீழே எறிந்து விடுகிறார்கள்.

மரைக்காயர் அதற்கப்புறம் விளம்பரம் பற்றி ஏதும் அவனிடம் பேசுவதில்லை.

பக்கத்து கிராமங்களுக்கு சைக்கிளில் சரக்கை எடுத்துச் சென்று கடனில் கொடுத்து வாங்கும் முறை பற்றி அவன் சொன்னதையும் காதில் வாங்கவில்லை. ஒரு விளம்பரத்திலேயே திறமையைப் பார்த்து விட்டார்.

பிரபலமாக இருக்கிற XXX பிராண்டுகளில் கொஞ்சம் வாங்கிப் போடலாம் கூடவே. ஆனால் அவர்கள் கடனுக்கு கொடுக்க மாட்டார்கள். பணத்திற்கு மரைக்காயர் எங்கே போவார் ? குவைத்தில் இருக்கிற அவர் மகன் , மலேயா சபரை முடித்துவிட்டு ஊருக்கு வந்த தன் வாப்பாவுக்காக இரக்கப்பட்டு அனுப்பிய பணத்தில் இந்த சரக்கு வாங்கவே அவருக்கு மூச்சு வாங்கி விட்டது.  தர்கா கடையாக இருப்பதால் வாடகை கம்மியாக இருப்பதாலும் ஓணான் எப்படியோ ஓடுகிறது. ஓடுகிறது என்று சொல்வது கூட தப்புதான். 

ஒன்றிரண்டாவது விற்க கந்தூரி சமயத்தில்தான் கடையை திறந்திருக்க வேண்டும். ஆனால் சார்மினார், தாஜ்மஹால் போன்ற பிரமாண்டமான வடிவங்களில் ஸ்டால் போட்டு கூடவே பிளாஸ்டிக் வாளிகளும் இனாமாகத் தந்து பெரிய கம்பெனிகள் தூள் பறத்தும் போது மரைக்காயரின் ஓணான் என்ன செய்து விட முடியும்? அந்தக் காலத்தில் பீடி கம்பெனிகள் விளம்பரத்திற்காக பெரிய பெரிய ஆட்டக்காரிகளையெல்லாம் கொண்டு வந்து தங்களின் vanக்கு மேல் குட்டைப் பாவாடையோடு ஆட விடுவார்கள் - கீழிருந்து பார்ப்பவர்களின் பீடி நன்றாக புகைவதற்காக. அது போல் செய்தால்தான் உண்டு. அப்போதும் ஓணான் விற்குமா என்று சந்தேகம்தான்

பேசாமல் இந்த கைலிகளை யாரிடமாவது தள்ளி விட்டுவிட்டு சிங்கப்பூர் கடையாக மாற்றி விடவேண்டும். அந்த காலம் மாதிரியா கஸ்டம்ஸ் பிரச்சனை எல்லாம்? விற்பவர்களை ஓட ஓட  விரட்டி அடித்து, பூட்ஸால் மிதித்த அதே கஸ்டம்ஸ் ஆபீஸர்கள்தானே  வகை வகையாய் ·பாரின் சாமான்களுக்கு தேடி வருகிறார்கள் இப்போதெல்லாம். அரசாங்கம் மாதிரியே சட்டமும் வேடிக்கையானது.  யோசித்த அ·ப்ஜல், மரைக்காரரிடம் சொன்னான்.

'அட, நல்ல ஐடியாதாங்கனி..!' என்று அவனை ஆச்சரியமாக பார்த்தார். தன் நண்பனின் மகனா புத்திசாலித்தனமாக பேசுவது !

'வைக்கலாம்தான்... ஆனா யஹ்யாவுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்றார் பொன்னம்பலம். தையற்காரர். தமாஷானவர். பக்கத்து கடை வாசலில்அவரது மெஷின் இருக்கிறது. அது எந்நேரமும் கைலி தைப்பதில் பிஸியாக இருப்பதால் மரைக்காயருக்கு பொறாமை உண்டு.

'ஏன் அண்ணே..' என்று கேட்டான் அ·ப்ஜல்.

'விக்கெ வர்ற பொம்பளைட்டே 'ஐட்டத்தைக் காட்டுங்க..' ண்டு சொல்லனுமே !'  

கைலிக்கடைகாரர்களும் சாதாரணமானவர்களா ? ஆண்கள் இல்லா வீட்டிலிருந்து கைலி எடுக்க வரும் பெண்களிடம் அலாதியான கரிசனத்துடன் 'விரிக்கவா?' என்று சொல்வார்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே. கையில் கைலிகள் ஆடும், எச்சரிக்கையாக.

அருவருப்பாக பேசுகிறார் என்று பொன்னம்பலத்தை தள்ளி விட்டுவிடவும்  முடியாது. அவர் வேறொரு கைலிக்கடை பக்கம் மெஷினை கொண்டு போனால் கைலியை தைக்க வருபர்களின் கருணைப் பார்வையையும் இழந்து விட வேண்டியிருக்கும். பஜாரில் இரண்டு தையற்காரர்கள் இருந்தாலும் பொன்னம்பலத்தின் தையல்தான் பிரபலம். 

கைலிகள் ஏன் தைக்கப்பட்டே கம்பெனிகளிலிருந்து வருவதில்லை என்பது ஒரு புதிர். கைலியை வாங்கி , பிறகு தைப்பதற்கு என்று 3 ரூபாய் ஏன் கொடுக்க வேண்டும்? ஒருவேளை கைலிக்கடைக்காரர்களே இப்படி ஒரு ஏற்பாடு செய்து கொண்டு கமிஷன் அடித்துக் கொள்கிறார்களா? இந்த வியாபார நுணுக்கங்கள் இருக்கட்டும். பொன்னம்பலம் , வேட்டிபோல பிரிந்தே வரும் கைலியை மூட்டும்போது பட்டியின் அகலம் அத்தனை மெல்லிசாக - கைலியின் அகலம் மோசமாகக் கெடாமல் -இருக்கும். உடுத்தும்போது குப்புறக் கவிழ்த்த V மாதிரி அமைந்து எதுவும் தனியாக முன்னால் தூக்கிக் கொண்டு வராது. விஷேசமான தையல். ஏதோ கோட்டு சூட்டு தைப்பவன் மாதிரி 'தையற் கலைஞர்' என்று அவர் போர்டு வைத்திருப்பதை இதற்காக மன்னித்து விடலாம்.

ஆனால் கைலிகளை தைத்து பிழைப்பை ஓட்டும் இவருக்கு கைலி கட்டுவது பிடிக்காது ! அதுதான் வேடிக்கை. 'வழிப்பதற்கு எது வாகானது?' என்று பட்டிமன்றமே நடக்கும் அவருக்கும் மரைக்காயருக்கும்.

நடக்கும்போது விலகி விலகி தொடைகளில் காற்று படவைக்கும் வேட்டிதான் தமிழன் பொன்னம்பலத்திற்கு உயர்வு. அது அவர் கம்கட்டு அழுக்கு மாதிரி மஞ்சள் பிடித்துப் போயிருந்தாலும் வேட்டி வேட்டிதான்.

பக்கத்து மோகப்பட்டினத்தில் உள்ள வங்கிகள், அரசாங்க அலுவலகங்கள் போவதற்கு வேட்டிதான் கண்ணியம். கைலியை உடுத்திக் கொண்டு போனாலே 'பதினொன்னு' (11) என்று நாவூர் பெண்கள் கேலி செய்யும் இந்த பேண்ட் போட்ட ஊழியர்களின் பார்வையே மாறி விடுகிறது - 'வந்துட்டானா மடமரைக்கான் நாவூர்லேர்ந்து' என்று. என்னதான் அரைக் கலரோ அல்லது வெள்ளைக் கைலியோ கட்டினாலும் வேட்டிக்கு ஈடாகுமா ?  அதனால்தான் இப்போது நாவூரின் பணக்கார காக்காக்களெல்லாம் எல்லாம் எளிமையின் சின்னமாம் கதர் வேட்டி கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். கருநீல வண்ண வெல்வெட் தொப்பியைப் போட்டுக் கொண்டு ஒரு வெள்ளை வேஷ்டியையும் கட்டி, கையில் ஒரு விரிக்காத குடையுடன் வலம் வருவது  நன்றாகத்தான் இருக்கிறது! வெள்ளைத் துப்பட்டிகள், கறுப்பு புர்காவாக மாறி வருவதைப் போல இதுவும் ஒரு மாற்றம்தான். சில ஊர்களில் 4 முழ வெள்ளை வேஷ்டியையே புர்காவாக பயன் படுத்துகிறார்களே அழகாக!  நாவூரிலோ அது தம்பலத்தனம்..

'அட போடா!' என்றார் மரைக்காயர். செல்லமாக அப்படி கூப்பிடுவார். அ·ப்ஜலும் செல்லம் காட்டலாம்தான். ஆனால் வாப்பாவுக்கு தெரிந்து விடும். செளதி போக பணம் கிடைக்காது.

' வெளங்காதவந்தான் அப்படி உடுத்துவான். தொப்பிக்கு கைலிதான் கரெக்ட். அதான் இஸ்லாமானவன் மாதிரி இக்கிம். அதோட ஒரு கோட்டும் மாட்டிக்கிட்டுப் போனா எப்படி இக்கிம் ?!' என்று கற்பனை தந்த பரவசத்தில் மரைக்காயர் சொன்னார்.

துருக்கி தொப்பி போட்டுக் கொண்டு கோட்டு-கைலி- மிதிரிக்கட்டை சகிதமாக பெருநாள் தினங்களில் காட்சி தந்து பிள்ளைகளுக்கு 25 பைசாவுக்கு மேல் கொடுக்காத அந்த காலத்து குடும்பத்துப் பெரியவர்கள் அவனது நினைவில் வந்தார்கள். சகிக்கவில்லை.

ஆனால் உண்மையை சொல்ல முடியுமா ஒரு முதலாளியிடம்? 

'நல்லாயிக்கிம் மாமா!' என்றான்

'கைலி நம்ம ஓணான்தான் . அதுதான் எடுப்பு. 'டர்ர்'ண்டு கட்டு உடாது சீக்கிரத்துலெ!'

'பின்னே ?'

'அப்படிச் சொல்லு. ஆனா நம்ம ஓணானைப் பத்தி எவனுக்கும் தெரியமாட்டேங்குதே...'

'தெரியும். கொஞ்சம் சபுர் செய்யனும்'

'இல்லே.. கடையை XXX787 காரண்டெ கொடுத்துட்டேன் - சரக்கோட..'

'எப்ப மாமா ?' - அதிர்ச்சியுடன் கேட்டான் அவன். அல்லாஹ் மரைக்காயரையும் சும்மா விடவில்லை போலிருக்கிறதே...

'ஹொத்துவா பள்ளிலெ பேசி முடிச்சாச்சுப்பா. எல்லாத்தையும் வித்த பொறவு எனக்கு காசு கொடுப்பான் , இன்ஷா அல்லாஹ்.'

'நான் ?' 

'இந்த கடையிலேயே வேலை பாரு...சம்பளம் கொடுக்குற முதலாளி வந்தா நல்லதுதானே..? வாப்பாவுக்கு எழுதிப் போடு...' - யஹ்யா மரைக்காயர் வேதனையுடன் சொல்லிவிட்டு வீட்டிற்குப் போனார். இரவு , கடை வாசல் சுத்தமாகக் கழுவப்பட்டு  மணத்தது. மரைக்காயர் இனி பஜார் பக்கம் வருவார் என்று தோன்றவில்லை.

அடுத்த நாள்  காலை அ·ப்ஜல் தன் புது முதலாளி வீட்டிற்குப் போய் சாவி வாங்கி விட்டு கடை திறக்கப் போகும்போது ஷட்டரை இழுக்கும் பிடியில் ஒரு செத்த ஓணான் மாட்டியிருந்ததைப் பார்த்தான். எந்த ஹராமி செய்த வேலை இது ? ஓணான் எதனாலோ கொடூரமாக பலமுறை அடித்து நசுக்கப்பட்டு குடல் கும்பியெல்லாம் வெளியேறி இருந்தது. 'க·பன்' போல அதன் மேல் ஒரு கிழிந்த துணி வேறு. துணி மூத்திர நாற்றம் அடித்தது. ஏதோ பெரிய வியாதி பிடித்த உடம்பிலிருந்து வெளியாகும் மூத்திரத்தின் நாற்றம்...

(முடிந்தது)

எங்கே முடிந்தது? கொஞ்சம் டீடெய்ல் சேர்க்கனுமாம். இப்போதெல்லாம் மூட்டியே வரும் கைலிகளின் உட்புறத் தையல், வெளியில் தெரிகிறது. கன்றாவி! ‘உடுத்தத் தெரியாதவன்’ என்று நாவூரில் சொல்வார்கள்; பனியன் ஜட்டியைத் திருப்பிப் போடுவது மாதிரியான செயல். இதைக் குறிப்பிடலாமா என்றால் கவிஞர் ஒத்துக்கொள்ளவில்லை. சினிஃபீல்டில் நுழைய முயற்சி செய்துகொண்டிருக்கிறவர் ஏதாச்சும் புதுமையா சொல்வார். பார்க்கலாம்.

சொன்னார் : இப்படிச் செய்யும். அந்தப் புது முதலாளி பெரும் கோடீஸ்வரரா ஆயிட்டதா.

எப்படீ? 

யாரையோ புடிச்சி (ஏதோ ஒரு இயக்கத்தின் பெயர் சொன்னார்; ஞாபகமில்லை) ’கல்ஃபு’க்கு கைலி எக்ஸ்போர்ட் செய்றாரு, அவராலேயே நம்பமுடியாம பயங்கர சேல்ஸ்.

நெசமாவா!

கேளும். லேபிள்ல ஒரு சின்ன மிஸ்டேக். ’ஓணான் மார்க்’ங்குறது ‘ஓலான் மார்க்’ன்னு பிரிண்ட் ஆயிருக்கு!
(end)
*
அருஞ்சொற் பொருள்:

ரொஹையான் கட்டை -  திருக் குர்ஆன் வைத்து ஓத உதவும் பலகை
60x60 , 80x80, பாயடி, மூட்டு  - கைலி வகைகள்
அஸர் , இஷா - தொழுகை நேரங்கள்
பிஸாது - புறம் பேசுவது
ஜியாரத் - இறை நேசர்களின் சமாதியை வழி படுவது
ஜீமத் - அழகு
ஜூம்ஆ - வெள்ளியன்று நடக்கும் கூட்டுத் தொழுகை
சபர் - பிரயாணம்
சபுர் -பொறுமை
க·பன் - இறந்த உடலின் மேல் போடப்படும் துணி

Tuesday, March 30, 2021

'கிரணம்’ எழுதிய ஓவியன் - பிரேம்

முகநூலில் நண்பர் பிரேம் எழுதிய பதிவு, நன்றியுடன்...

*


கிரணம் எழுதிய ஓவியன்

'கிரணம்'  காலாண்டிதழ் எனப் பெயரிடப்பட்டு 1987-இல் சாரு நிவேதிதா-சம்யுத்தா (அமரந்தா) இருவரால் வெளியிடப்பட்டது, தில்லி முகவரியில் இருந்து.

அச்சகத்தின் பெயர் அதில் இருக்காது என்பது ஒப்பந்தம்.

அச்சுக்கு வரக்கூடாத எழுத்து என்பது அச்சிட்ட கலைஞரின் கருத்து. 

எப்படியோ அச்சாயின நான்கு இதழ்கள். என் எழுத்துக்காகவே அதனை வெளிக்கொணர்ந்தார் அன்று என் மீது பாசம் கொண்டிருந்த சாரு நிவேதிதா. 

கிரணம் என் வாழ்வின் மருந்தா நஞ்சா என இன்று வரை முடிவுசெய்ய இயலாமல்தான் இருக்கிறேன்.

வாழ்வின் ஒரு பகுதியை இழந்து மனதின் ஒரு பகுதியால் மட்டும் வாழ்ந்து பித்தின் தெளிவோடு பிரதிகளின் பெருங்காட்டில் அலைந்து மீண்டு வர அக்காலம் விதிக்கப்பட்டது.

ஆனாலும் அக்காலம் அன்பால் நிறைந்திருந்தது. அதைவிட பல அன்புகளை விலக்கியும் இருந்தது.

கிரணம் எழுத்து வடிவை இன்று உற்றுப் பார்த்திருந்தேன். கிரணம்-எழுத்து அமைப்பு: ஆபிதீன்.

ஆம், அவர் என்னைப் பொருத்தவரை எழுத்து வடிவம் மட்டுமே. 

கடிதங்கள், கடிதங்கள், ஒரு நாவல்; அரபி எழுத்தின் வரைவு போல கவரும் கையெழுத்து. 

அவரது கடிதங்கள் என ஒரு கட்டுத் தாள்கள். அவற்றைப் படித்து பக்கங்களைக் கலைத்து அடுக்கி குறைத்தும் சிதைத்தும் இரண்டு மூன்று நாட்களில் ஒரு நாவலை தொகுத்து 

"அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு" எனப் பெயரிட்டு ஒரு முன்னுரையும் எழுதினேன். அச்சுக்குப் போகலாம் என்ற நிலையில் இருந்தது. அது தடைபட்டது. ஆபிதீன் அதுபற்றி அதிகம் பொருட்படுத்தவில்லை. அதன் முன்னுரை பற்றி "ஏதேதோ சொல்கிறார், அப்படித்தானா" என்பது போல ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக நினைவு.

"எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியன்களும்" அதற்குள் உருவாகி இருந்தது. அதற்கும் முன்னுரை எழுதி இருந்தேன். கி.பி என இக்காலத்தைக் குறிப்பிடலாம் "கிரணத்திற்குப் பின்". 

இயங்கியல் எல்லாவற்றையும் வழி நடத்தியது. கிரணத்திலிருந்து "நிறப்பிரிகைக்கு" நகர்ந்த  வாழ்வு. இப்போது எல்லாம் நாவலின் பக்கங்கள்தான் ஆனால் நிகழும் போது அப்படியில்லை. அது ஒருபக்கம் இருக்கட்டும், சாரு நிவேதிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு சந்திப்பே இல்லாமல்  தொலைதூர நண்பர்களில் ஒருவராக இருந்த ஆபீதீனை நண்பர் ஜமாலன் 'புது இல்ல விழா' வில்தான் நேரில் சந்தித்தேன். அதற்குப் பிறகு எழுத்து வழி மட்டுமே. மாயநடப்பியல் போலத்தான் உள்ளது கிரணம் எழுத்து அமைப்பு அளித்த ஓவியர் ஆபிதீன் தொடர்பு. சுயசரிதம் எழுதவே போவதில்லை என்பதால் நாவல் ஒன்றில் வருவார் ஆபிதீன். அந்த நாவலுக்கு அவரிடமே எழுத்து அமைப்பு கேட்கலாம் எனவும் இருக்கிறேன்.

*

நன்றி : பிரேம்

தொடர்புடைய ஒரு பதிவுகள் :

கடிதங்கள் இலக்கியமாகுமா? - முகநூலில் பிரேம்

Monday, October 30, 2017

நாகூர் ரூமிக்கு ஒரு கடிதம் (Dec'1995)

அமைதியாக எழுதும்போது ஆபிதீன் கையெழுத்து எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சான்று ! 'ரியாலத்' (ஆன்மீகப் பயிற்சி) சம்பந்தமாக நண்பர் ரஃபிக்கு - டிசம்பர் 1995-ல் எழுதியது. கடிதத்தின் பின்னணி ஓவியமாக இருப்பது - நான் வரைந்திருப்பது - எங்கள் ஹஜ்ரத். 'மீண்ட பொக்கிஷம்' என்ற தலைப்பில் ஒரு பதிவாக ரஃபி அவருடைய வலைப்பக்கத்தில் முன்பு இதைப் பகிர்ந்திருந்தார். எதற்கும் இங்கேயும் போடுகிறேன் :) - AB

இமேஜைப் பெரிதாக்க இங்கே 'க்ளிக்' செய்யவும்

தொடர்புடைய பதிவு :
நாகூர் ரூமியின் கடிதம் (2000)

Thursday, September 28, 2017

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (14)


அத்தியாயம் 14

ஆபிதீன்

*
25/5/1996

Relaxation-1 கேஸட்டிலிருந்து. ('SS'ன் ஆரம்பம் 25 வருடங்களுக்கு முன்பு இருக்கிறது..!)

சர்க்கார் :
'சங்கடப்பட்ட, வேதனையான சூழல்லெ நான் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டிக்கிறேன். நான் பண்ணுனது எதுக்குண்டா சக்தியை வளர்க்குறதுக்குலாம் அல்ல, என் வேதனையை குறைக்கிறதுக்கு. எனக்கு அப்ப leisurely time நிறைய கிடைச்சிச்சி..காரணம் எனக்கு வேலை எதுவும் கிடையாது. ஃபுல் டைமும் leisure-லெ இருந்த காரணத்துனாலே அது தூக்கத்துக்கு வந்திச்சி.. என்னாலே தூங்க முடியலே.. 24 Hours..ப்யூர் நெகடிவிடி... லைஃப்லெ எனக்கு ஏற்பட்ட வேதனை, ஆக்ஸிடெண்ட்...  இதை மாத்துறதுக்கு நான் ரிலாக்சேஷன் பண்ண ஆரம்பிச்சேன். சக்தியை திரட்ட அல்ல. திரட்ட முடியலே என்னால. ஏன்னா, ரிலாக்சேஷனுக்கு ஒரு purpose வேணுமில்லே? அது என்னெட்டெ இல்லே. என்னை மறந்தா போதும். குடிச்சா மறந்துடுலாம். ஆனா அதுக்கு நான் ரெடியா இல்லே. தப்புத்தவறு செய்யவும் நான் ரெடியா இல்லெ. அந்த வகையிலெ ஆரம்பிச்சதுதான் இந்த சிகரெட். அது ஒரு சின்ன பழக்கம். அதே சமயத்துலே அது ஒரு பயங்கரமான பழக்கம். அப்ப... அந்த ரிலாக்சேஷன் பயிற்சி பண்ணுறேன். பண்ணிப்பண்ணிப் பாக்குறேன், வரலே. அந்த Devine Force அப்ப work பண்ணுனிச்சி. எனக்கு காட்டுது. அந்தக் கனவை நான் அப்புறம் சொல்றேன். அந்த still small voice என்னெட்ட பேசுது.. 'நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்க, ஒரு மாத்திரை வேண்டும்டா போட்டுக்க'ங்குது.. நான் நினைக்கலே; அது சொல்லுது. நெனைப்பு வேறே அது சொல்லுற சொல்லு வேறேண்டு அனுபவத்துலேதான் தெரியும். நல்லா தெரியும், ரொம்பத் தெளிவா தெரியும். தான் பெத்த புள்ளைய என்னா டிரெஸ் மாத்திப் போட்டாலும் எப்படி அப்பனுக்கு தெரியுமோ அப்படி. தூங்கினாபோதும் நல்லதுங்குது. தூக்கம் வரமாட்டேங்குது ஆனா..இப்படியே ரெண்டுமாசம் செய்றேன். இந்த அவதிக்கு மத்தியிலே , திடீர்ண்டு ஒரு நாளு கனவு காணுறேன். ரிலாக்சேஷனுக்கு அரபிலெ 'துமானி நிய்யத்'துண்டு பேரு. அங்கே பாரு.. 'துமானி நிய்யத்' இக்கிதுண்டு என் உஸ்தாதுமார்கள்  காட்டுறாங்க. அதாவது அவங்க குரல் அப்படி கேட்குது..

ஒரு ஆறு ஓடுதுங்க.. ரொம்ப தெளிவான ஆறு.. ஓடுற ஓட்டம் கூடக் குறைவில்லாம , ஒரேமாதிரி ஓடுது. ஒரேமாதிரி சத்தம்.. சலசலங்கிற சத்தம்.. உள்ளே மீனுடைய எத்துக்குத்தான ஓட்டம் கிடையாது.. கண்ணாடி..ப்யூர் கண்ணாடி.. கிரிஸ்டல் க்ளீயர்..! ரொம்ப ஆழமா தெரியுது.. அதுல குளிக்க வாய்ப்பு வசதி இருக்குது.. 'தோண்டி' இருக்குது..குடம் இருக்குது, ஒரு வாளி இருக்குது..ஆனா யாருமே குளிக்கலே.. குளிச்சா அவங்க அசைவாலே எனக்கு டென்சன் ஏற்படலாம். அதுக்குப் பின்னாலே ஒரு மலை இருக்கு.. பசுமையான மலை.. அதே நேரத்துலே மலைக்குப் பின்னாலே சூரியன் உதயமாயிக்கிட்டு இருக்குது.. அந்த still small voice அப்ப சொல்லுது.. 'உனக்கு காலையிலே குளிச்சாலும் குளிராது..!' . அது என் வாய்ஸ்தானே, என்னட்ட உள்ளதுதானே.? நான் காலையிலே குளிக்க மாட்டேன்லெ, பகல்லெதானே? , அதுக்கு வேற காரணம் , அதுக்கு சொல்லுது அப்படி! நான் போயி குளிக்கிறேன். மெதுவா இறங்கி - 'கை காலு எல்லாம் புண்ணாயிருந்தா எப்படி அசைவியோ அப்படி அசைச்சிக்கிட்டு குளத்துலே இறங்கு'ங்குது. முக்குளி போடுறேன். தலையைத் தூக்கி சூரியனைப் பாக்குறேன். அது கிராஜுவலா உயரமா போவுது. 'மலையைவிட்டு ஒரு ஜான் உயரம் அது வந்த உடனேயே கரையேறிடு'ண்டு அவங்க சொல்றாங்க.. கனவுதான் எல்லாம். ப்யூர் கனவு. கனவு முடியிற வரைக்கும் க்ளீயரா தூக்கம் கலையாம இருந்ததுக்கு நான் பாக்கியம் செஞ்சதாத்தான் நான் நினைக்கிறேன். உடம்புலெ ஜில்லாப்பு.. சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறிக்கிட்டு வருது. ஒரு ஜான் வந்துடிச்சி.. அப்ப அந்த ஆர்டர் வந்துடிச்சி..

இது கனவுதான்..ஆனா இதெ கனவாக நான் சொல்லலே.. ஆர்டராகத்தான் சொல்லுறேன். ஆர்டர் ஆக ஏற்றுக்கொண்டேன். ஆர்டர்தான் இது, எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்கு அனுபவம் வரும்போது இது கனவல்ல, ஆர்டர்தாங்குறது தெரியும். தூக்கமும் விழிப்புமில்லாத நடுநிலையிலே பேசப்பட்ட தெய்வவாக்கு இது..

'ஒரு முக்குளி போட்டுட்டு கரையேறு'ங்குது.. ஏறுன உடனே முழிப்பு வந்திடிச்சி..நான் என்னெத்த தேடுனேன் தெரியுமா? தலையைத் துவட்டுறதுக்கு துவாலையைத் தேடுறேன் நான்..!

என்னெப்பொறுத்தவரைக்கும் கனவுலெ ஒரு காட்சி வந்தா நான் லைஃபாகவே நெனைப்பேன் நான். கனவுலெ ஒரு பொருளைப்பார்க்க ஆசைப்பட்டேண்டு சொன்னா அந்த இடத்துக்கு கனவுண்டு தெரிஞ்சிக்கிட்டே போவேன் நான், என் அனுபவத்துலே..! கனவுண்டு நெனைச்சா உங்களுக்குலாம் கலையும். எனக்கு கலையாது. இது கனவுதான் , இப்ப முழிக்கனும்டு நெனைச்சா என்னாலே முழிக்க முடியும். கனவுலேயே எந்திரிச்சி வந்து அப்படியே மணி பார்க்க முடியும் என்னாலே..அங்கேர்ந்து நாவப்பட்டினம் வந்து நீங்க என்னா செய்யிறீங்கண்டு என்னாலே பார்க்க முடியும்.. அமெரிக்கா போவனும்டா அமெரிக்கா போவலாம். கனவுண்டு புரிஞ்சிக்கிட்டோமுலெ?! எனக்கு கலையாது.. கண்டினியூ ஆவும்.

ம்.. துவாலையைத் தேடுறேன் நான்! கனவா நான் காணலே. Actually மேலுலாம் ஜில்லுங்குது.. இன்ஸ்ட்ரக்சன் எப்படி கிடைக்கிதுண்டு பாருங்க! எனக்கு எந்த கதியும் கிடையாது, நிர்க்கதியா உள்ளவன், நான் அனாதை. எங்க உஸ்தாதுமார்கள் கொடுத்ததை வச்சித்தான் நாங்க செய்யமுடியுமே தவிர நான் சொல்றமாதிரி எங்களுக்கு அவங்க சொல்லலே. கனவுதான் எங்களுக்கு அஸ்திவாரம். அதனாலேதான் தூங்குற இடத்துலே நான் யாரையும் நெருங்க விடுறதில்லே..ஆங்.. இந்த கனவு.. கிரிஸ்டல் க்ளீயரா தெரியுது. முழிச்ச உடனேயே ..., 12 மணிக்குதான் குளிப்பேன்.. மனசு வரமாட்டேங்குது - அதுதான் காத்தால குளிச்சிடோமேண்டு நெனைப்பு வருது.. ரிலாக்சேஷன் தேவையில்லேங்குற மாதிரி Body அவ்வளவு லேசா, ரிலாக்ஸ்டா இருக்குது..அப்ப என் கூட்டாளிலுவ சொன்னானுவ.. 'என்னா சர்க்கார்.. முகம் ஒரு மாதிரியா தெளிவா இக்கிது?!' ண்டு. ஒரு சந்தோஷமும் இல்லே, இந்த கனவுதான் காரணம்! அப்புறம் அடுத்த தடவை டென்சன் வந்தப்ப ரிலாக்சேஷன் பண்ணும்போது இந்த காட்சி வந்துச்சி ' இதெ பண்ணுடா'ண்டு. படுத்துக்கிட்டேன். தன்னை மறந்தேன், காலை மறந்தேன், கையை மறந்தேன், கம்ப்ளீட்டா என்னையே மறந்தேன். நான் அல்ல இப்ப, என் Body.. என்னை வுட்டு வெளிலே வந்து தனியா என் Bodyயை உத்துப்பாத்தேன். 'தூங்குனானா அப்துல் வாஹிது?' நானே பாக்குறேன்.. ரிலாக்ஸ்டா இக்கிறான்.. மறுபடியும் bodyயிலே நானே புகுந்துடுறேன். புகுந்த உடனே அந்த ஆறு வருது.. மெதுவா தண்ணிக்குள்ளே இறங்குறேன்.. காலுலேர்ந்து எனக்கு ஜில்லாப்பு ஏறுது.. முழங்கால்.. அப்புறம் இடுப்பு.. நெஞ்சுக்கு ஏறுது.. அப்புறம் கையை நனைக்கிறேன். முக்குளிவிட்டு ,மெதுவா எந்திரிச்சி , கண்ணை தொறந்து பாக்குறேன்.. பச்சை பசுமையான மலை தெரியுது.. சூரியன் உதயமாயிக்கிட்டிக்கிது..எப்படி கனவுலெ கண்டேனோ அதை கற்பனை பண்ணிக்கிட்டேன்.. Immediate ரிஸல்ட் கிடைச்சிச்சி எனக்கு. இந்த செய்தியை டைரிலெ குறிச்சி வச்சிக்குங்க.. ஒரு டைம்லெ நான் சொல்லுவேன் ரிலாக்சேஷனுக்கு. இத யூஸ் பண்ணுங்கம்பேன்..' - 'S'
*

'மனுஷன்ட்டெதான் நெகடிவிடி இக்கிதுண்டு நெனைக்காதீங்க நீங்க. ஒவ்வொரு பொருளிலுமே நெகடிவிடி இக்கிது. ஆத்துலெ உள்ள நெகடிவிடி வேற. மிருகம் குடியிருந்த கொட்டாயின் நெகடிவிடி வேற.. தப்புத்தவறு செய்யிற மனுஷன் குடியிருந்த வீட்டோட நெகடிவிடி வேற.. ஞானிகள் அடக்கமான ஸ்தலத்தினுடைய பாசிடிவிடி வேறே.. அப்படி பார்க்கப்போனா எல்லாப் பொருள்களிலேயுமே வைப்ரேசன் இக்கிதுண்டு நான் சொல்ல வர்றேன். சூரியனிலுள்ள வைப்ரேசன், பச்சைப் பசுமையான மலையிலுள்ள வைப்ரேசன், நீரிலுள்ள வைப்ரேசன் அனைத்துக்கும் மேலே எங்க குருமார்கள் கொடுத்த ஃபோர்ஸ்.. எல்லாம் சேர்ந்து வொர்க் பண்ணும்' - 'S'
*
27.05.1996

நாளை இந்திய அரசு கவிழும் என்கிறது சேன்னல்33. பி.ஜே.பி கவிழும். ஹாங்காங்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களின் ஊடுருவல்களை ஆஸ்திரேலிய அரசு துவம்சம் செய்கிறது.. சோதனைகளின் தொடர்ச்சியாக நாளைய டி.வியில் முக்தார் அப்பாஸ் கவிழ்ந்ததையும் காட்டுவார்களா? அல்லது கம்பெனி அந்த ஹாங்காக் படகுகள் மாதிரி திசைதெரியாமல் இருத்தலில் வாழுமா? நான்கு முதலாளிகளும் ஒரு வருடப் பிரிவிற்குப் பிறகு இன்று ஒன்றுகூடினார்கள். தலை யாருக்குப் போகும், கை கால்கள் யாருக்குப் போகும் என்பது புரியவில்லை - அந்த சூடான பலுச்சி பாஷையில் . நான் பேசாமல் இறங்கி வந்துவிட்டேன். ஏழரை மணிக்கு. மொயீன்சாஹிப் இருந்தார் மேலே. அனைவருக்கு 'சஹி பாத்ஹை' சொல்ல அவர்தான் சரியான ஆள். அதனால்தான் மேனேஜர்? கிழே வந்தபிறகுதான் நினைப்பு வந்தது. 'அடடா..தண்ணீர் பாட்டிலை ஆஃபிஸ் கிச்சனிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டோமே.. மறுபடி மேலேபோனால் அந்த கூட்டத்திடம் மாட்டிக்கொள்வோமே' என்று நினைத்த அடுத்த நொடியில் டிரைவர் ஜாவித் வந்தான். ஸ்க்ரேப் எடுக்க நாளை அபுதாபி அவன் போகிறானாம். நாங்கள் பஸ்ஸில் 'தேரா' போய் வந்து கொள்ளவாம். இதைச் சொல்லத்தான் வந்தானாம். 'ஜாவேத்.. மேலே ஃப்ரிட்ஜில் தண்ணீர் பாட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்' - தயங்கிச் சொன்னேன். ஜாவேதும் பட்டான்தான். ஒரு அடிமை மாதிரி பவ்யத்துடன் மேலே ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து என் கையில் கொடுத்துவிட்டு மறைந்தான். தண்ணீர் பாட்டிலுக்கு முன் , ஆசைப்பட்ட ஒரு கேமராவும் கிடைத்தது. சென்றமுறை ஊர்போகும்போது 'Canon' வாங்கிப்போயிருந்தேன். அதன் ஆட்டோஃபோகஸ் திறனும் Mutiple Explosure வசதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் லென்ஸுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலும். ஊரில் பழிவாங்கிவிட்டது , செலவு வைத்து. ஒரு Full Manual Camera வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். Canon ரிப்பேர் செய்தவர் , நான் சொன்ன pentax K1000ம் குப்பைதான் என்றார். Nikon FM2 உட்பட இப்போது - முக்கியமாக துபாயில் - China Makeதான் கிடைக்கிறதாம். இதற்கு கொள்ளை மலிவாக Zenith வாங்கிவிடலாம் பேசாமல். அதுபாட்டுக்கு கிடக்கும். அனீஸின் பேரன்கூட யூஸ் பண்ணிக்கொள்ளலாம் ஊரில். அல்லது பூவூர் மாமாவிடம் எடைக்குக்கூட விற்றுவிடலாம். ஆனால் திரும்பி வந்துபார்த்தால் ரஷ்யர்கள் உஷாராகி இருந்தார்கள். தம்பி ஹலால்தீனிடம் ஒன்று இருந்தது. கேட்டேன். கொடுக்கவில்லை. இது இந்த மாதத்திற்குள் என் ரூமில் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இன்று ஹலால்தீன் ஃபோன் செய்து அந்த Zenithஐ எடுத்துக்கொள்ளச் சொன்னான். அவன் வேறு ஒரு நல்ல கேமராவாங்கப்போகிறானாம். Hasslebladஐ எல்லாம் அவனுக்கு சொல்லமுடியாது. Minolta X700 வாங்கு என்று சொன்னேன்.

'சரி, Zenithக்கு 100 திர்ஹம் கூட என் கையில் இல்லையப்பா..'

'வச்சிக்குங்க நானா!'

அது என் பொருள் ஹலால்தீன், நான் பார்த்து ஆசைப்பட்ட மாத்திரத்திலேயே! அந மர்கஜ் உல்.....

Canonஐ கொடுத்துவிட்டு அவனது கம்ப்யூட்டரை வாங்கிக்கொள்ளலாமா?! - என் புது யோசனை!
*

28.05.1996

முஸ்லீம்களுக்குத்தான் எவ்வளவு கொண்டாட்டம், வாஜ்பாய் ராஜினாமா கொடுத்ததில்! பர்துபாய் டெக்ஸ்டைல் பஜாரின் சிந்திகள், பாப்ரிமஸ்ஜித் இடிக்கப்பட்டபோது பகிர்ந்துகொண்ட லட்டை நினைத்துக்கொள்ளலாம் இப்போது. அவர்களும் அப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொள்ள வேண்டியதில்லை. அரசுதானே மாறியிருக்கிறது. அரசியல் அல்லவே! ஆகவே சகோதரர்களே... அடுத்த செங்கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த முஸ்லீம்களுக்கும் ரசனை உணர்ச்சியே கிடையாது. ராமருக்கு தொப்பி வைத்தால் நன்றாகத்தானே இருக்கிறது! மாற்றங்கள் இந்தியாவில் வரலாம், முக்தார் அப்பாஸில் வராது. நேற்றைய கூட்டம் ஊரின் விசாரணைக் கமிஷன்கள் மாதிரி ஆகிவிட்டது. முடிவு இல்லை. அதனால்? கம்பெனி 
அப்படியே ஓடும்.

'எதுவரைக்கிம் மொயீன்சாஹிப்?'

' பஸ்..குதா ஜான்த்தாஹை!'

அல்லா , அறிந்தவன்தான். 'அல்லா இல்லை' என்று சொல்லிக்கொண்டிருந்தவன் - சௌதியில் பட்ட அடியில் மாறி, துபாய் விசா பிரச்சனையில் தொழ ஆரம்பித்த என்னை அறிந்தவன். 'நான் திருந்திவிட்டேன்' என்று சொல்லும் சர்க்காரையும் அறிந்தவன். ஆனால் சர்க்கார் யாரையும் தொழவேண்டாம் என்று சொன்னதில்லை. தானாக திருந்தட்டும் என்று அல்ல! சர்க்காரின் ரியாலத்துகளில் இருந்துகொண்டு அதற்கு நாலுமடங்கு குறைவாக மனசைக் கூராக்கும் தொழுகையைக் கண்டு சில நாட்களாகக் குழப்பம். இன்று பகல் ரிலாக்சேஷன்-2 கேஸட்டைக் கேட்டு தெளிவடைந்தது மனசு.

இபாதத் :

'மனுஷன் செய்ற எல்லா செயலும் 'இபாதத்'தான். அல்லாஹூத்தஆலா சொல்றான்,' என்னை வணங்குவதற்காகவே மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்'ண்டு. ஜின்னைப் பற்றி நமக்குத் தெரியாது, சின்ன ராவுத்தரைப்பற்றித்தான் நமக்கு தெரியும். நாம மனுஷனைப்பத்தி பேசுவோம். அவன் தப்பு செய்ய முடியாதுல்ல? முடியுமா முடியாதா? அவன் ஏமாறுவானா?' - 'S'

'ஏமாற மாட்டான்'

'இப்ப நான் கேட்குறேன். வணங்குவதற்காக மனிதனைப் படைத்தேண்டு அல்லாஹுத்தஆலா சொன்னபிறகு மனுசன் வணங்காம போனா எதுக்காக படைச்சானோ அந்த purpose நிறைவேறவில்லைண்டுதானே அர்த்தம் ? எந்த நோக்கத்துக்காக படைச்சானோ அந்த நோக்கத்துலே அவன் ஏமாந்துட்டான்னுதானே அர்த்தம்ங்க?'

'அவன் ஏமாந்தாண்டு சொல்ல முடியாது. இவன் ஏமாத்துறான்'

'அப்ப, அல்லா ஏமாந்துட்டான்லெ?! அமைதியா யோசனை பண்ணிப்பாருங்க. அப்ப என்னா அர்த்தம்? அவன் திறமைசாலிண்டா எவனாலேயும் ஏமாத்தமுடியக்கூடாதே? ஏமாத்துனாலும் உடனே தண்டனை வந்துடுனுமே!'
'இவன் தன்னைத்தானே ஏமாத்திக்கிறான்'

சர்க்கார் கிண்டலாக சிரிக்கிறார்கள்.

'லாஜிக் பிரகாரம் பார்த்தா நீங்க சொல்றது சரிதான். ஆனால்...' - சீடர். ஆனா? 'அப்ப, ஏமாளிப்பையன் ஆண்டவங்குறீங்க!' - சர்க்காரின் சிரிப்பு தொடர்கிறது.'நான் என்னா சொல்ல வர்றேன்..., மனிதன் செய்யிற எந்த செயலும் சரி, 'இபாதத்'துக்கு அப்பாற்பட்டதல்லங்கிறேன். பாம்பு உங்களை கடிக்குதா? கடிபடுறது இபாத்துங்குறேன். பண்டியை அடிக்கிறீங்களா? அது இபாதத்துங்குறேன். வெளிக்கி உக்காந்திருக்கீங்களா? இபாதத்துங்குறேன் நான். பொண்டாட்டிகூட படுக்குறிங்களா? இபாதத்துங்குறேன் நான். தொழுவுறீங்களா? அது இபாதத்தே அல்லங்க! உலகத்துலே இபாதத் பண்ணுறதுக்குள்ள டிரைனிங் அது! அத கண்டிப்பாக செய்யத்தான் வேணும். இது செய்யலேண்டா சோத்துல உள்ள இபாதத் கட் ஆயிடும். பொண்டாட்டிய முச்சம் வுடும்போது ஏற்படுற இபாதத் கட் ஆயிடும். புள்ளய கொஞ்சும்போது படுற இபாதத் கட் ஆயிடும்.. பிசினஸ் சேர்லெ உட்கார்ந்து டெலிஃபோன் புடிக்கிம்போது பன்னுற இபாதத் கட் ஆயிடும். எனவே, தொழுகை கடமை - உங்களுக்கு! தொழுகைங்கிறது டிரைனிங். நினைப்புல வச்சுக்குங்க. அது இபாதத்தே அல்ல அது. அதனாலதான் ஹஜ்ரத் இமாம் கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி சொல்றாஹா..'யாருடைய இபாதத், யாருடைய தொழுகை அவங்க வாழ்க்கையிலே, எண்ணத்துலே மாறுதலை ஏற்படுத்தவில்லையோ அவங்க தொழவே இல்லை!'ண்டு. என்னங்க, ஆண்டவன்ற 'ரஹ்மானியத்' நம்ம நெஞ்சிலே இக்கிது, நம்ம ஏங்க தொழுவனும்? நாம் செய்யிற செயலெல்லாம் இபாத்தா இருக்கும்போது எதுக்குங்க தொழுவனும்? அப்படியான இபாதத் நம்மள்ட்டெ இல்லை. நம்மள்ட்டெ 'ஷைத்தானியத்' கலந்து நிக்கிது. 'ரஹ்மானியத்'ட ஒரு பிட் இக்கிது. நம்ம லைஃப்லெ வரக்கூடிய சீக்குக்கெல்லாம் பெரும்பான்மையான காரணம் 'நஃப்சானியத்' மனசுலெ நிக்கிறதனாலேயும் 'ஷைத்தானியத்' மிகைச்சி நிக்கிறதுனாலேயும்தான் வருது. 'ரஹ்மானியத்' மிகைச்சி நிக்கிற சமயத்துலே மனுஷன் செய்யிற எல்லா செயலுக்கும் இபாத்துண்டுதான் பேரு. அப்படி பார்க்கப்போனா மனுஷன்ற எந்த அசைவுலேயும் இபாதத் இல்லாம இல்லே.. அப்ப ஆண்டவன் ஏமாற இல்லை!' - 'S'
*

29.05.1996

Mind Wandering (from Relaxation II கேஸட்) :

'எப்ப Body ரிலாக்ஸா இக்கிம்? Mindஐ அலைய வுடுறீங்கள்லெ? அலையிறதை செக் பண்ணுனீங்கண்டு சொன்னா! எப்ப நீங்க செக் பண்ணுறீங்களோ செக் பண்ணுன காரணத்துனாலேயே அது ஒரு டிரைனிங்கா மாறிடும். இதுக்கும் , பொதுமக்கள் மனசை அலையவுடுறதுக்கும் வித்யாஸம் இக்கிது. ஜனங்க வேண்டுமென்றே கற்பனை பண்ணலே; மனசு தானா அலையுது. இப்ப நாம வேணும்டே மனசை அலையவுடுறோம். ரெண்டுக்கும் வித்யாஸத்தைப் பாருங்க. குதிரை தானா ஓடுறதுக்கும் நீங்க லகானை புடிச்சிக்கிட்டு தானா அலையவுடுறதுக்கும் வித்யாஸம் இக்கிது. எறும்பை உள்ளங்கையிலே வுட்டுக்கிட்டு எங்கே ஓடுது பார்க்கலாம்டு பார்க்குறதுக்கும், நாம தொழுவிக்கிட்டிக்கிம்போது காலு கையிலே ஏறி அது நம்ம கொட்டையிலே கடிக்கிறதுக்கும் வித்யாஸம் இக்கிதுல்ல? இதே மாதிரி வித்யாஸம்!' - 'S'
*

ஜெதபு :

'அல்லாஹ்வைப் பத்தி நெனைக்கிம்போது - 'திக்ரு' பண்ணும்போது- 'அல்லாஹூ ஹாழிர் அல்லாஹூ நாழிர்' - ஆண்டவன் 'ஹாழிர்'-ஆ இருக்கிறான், ஆண்டவன் பாத்துக்கிட்டே இக்கிறான் - இப்படி சொல்லும்போது அல்லா இருக்குறதாக கற்பனை பண்ணுங்க. பார்த்துக்கிட்டிக்கிறாண்டு கற்பனை பண்ணுங்க. கற்பனை பண்ணி கொஞ்சநேரம் ஆயிடிச்சிண்டு சொன்னா, இல்லே பக்குவம் பத்தாம கொஞ்ச நாள் ஆயிடுச்சிண்டு சொன்னா , அவன் இருக்குறதாகவே உங்களுக்கு நம்பிக்கை வந்துடும். அவன் இருந்தா Body எப்படி நடுங்குமோ அவ்வளவு நடுங்கும் உடம்பு. உதறும் அப்படியே.. என்னாங்க, ஒரு மினிஸ்டர் ரூமுலெ நமக்கு உட்கார தைரியம் இல்லே, அல்லா வந்து நிக்கிறான் , பாக்குறாண்டு சொன்னா?! எப்படி இக்கிம் நமக்கு?' - 'S'

'கற்பனை பண்ணும்போது அவனை உருவகப்படுத்திக்குனுமா?' - சீடர்

'நல்ல கேள்வி. அப்படி அல்ல. நாம ரேடியோ ஸ்டேசன்லெ பேசிக்கிட்டிக்கிம்போது நம்ம பேச்சை எத்தனை பேரு கேட்குறாங்க? தெரியுதுலெ? அதேமாதிரி , நான் டெலிஃபோன்லெ பேசறேண்டு வைங்க. அதை ஒரு ஆளு கேட்குறாங்கண்டு புரியுதுலெ? அதே மாதிரி நம்மளை பாக்குறாண்டு நெனைச்சிக்குங்கண்டு சொல்றேன். அவனை நீங்க பார்க்க சொல்லலே. அவன் உங்களை பாக்குறதா நெனைக்கலாமுல்லே? அவன் எப்படி இக்கிறாங்குற கதை வேறே. அவன் யாரு மாதிரி இருந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. ஆனா அவன் உங்களை பாக்குறான்.. Present!. நாம பேசுற பேச்சுலாம் ரிகார்ட் ஆவுது, உலகம் பூரா பரவுதுண்டா உங்களுக்கு எப்படி இக்கிம்? எவ்வளவு கரெக்டா இருப்பீங்க? அப்ப, எப்படி உட்கார்ந்திருந்திங்களோ அப்படியேதான் இருப்பீங்க. மரத்துப் பொய்டும் அப்படியே.. அசைவே இருக்காது. நீங்க நீங்களா இருக்க மாட்டீங்க. வேறொரு பொருளா இருப்பீங்க. இந்த கட்டத்துலெதான் 'ஜெதபு' வர்றது. இந்தக் கட்டத்துலெதான் காட்சிகள் தெரியிறது. முதல்லெ வட்டம் தெரியும். whole universeண்டு அர்த்தம். அப்புறம் புள்ளி தெரியும். வட்டத்துக்கு பிறகு புள்ளியும் தெரியும். நடுவே முக்கோணமும் தெரியும். தெய்வத்தன்மை materialise ஆகி- உலகுக்கு வந்து - இந்த கட்டுப்பட்ட உலக வாழ்க்கையிலே , இந்த அடிமை வாழ்க்கையிலே.. - ஆயிரக்கணக்கான பொருள்களுக்கில்ல நாம அடிமை! காத்துக்கு அடிமை, தண்ணிக்கு அடிமை, சோத்துக்கு அடிமை, சூத்துக்கு அடிமை..! - இந்த வாழ்க்கையிலே வளர்ந்து இம்ப்ரூவ்மெண்ட் ஆன உடனேயே, ஒரு குறிப்பிட்ட தகுதி வந்த உடனேயே , இது பிக்அப் பண்ணுது - மேலே உள்ளது. 'இங்கே வாடா.. நீ வளர்ந்துட்டா!'ண்டு கூப்பிடுது. 'இல்லே..எனக்குப் பத்தலே..நான் அங்கே வரப்போறேன்'டு இவன் போறான். ரெண்டும் ஒண்ணுதான். காந்தத்தை இரும்பு கூப்பிட்டாலும் சரிதான், இரும்பை காந்தம் கூப்பிட்டாலும் சரிதான். ஃபைனல் ரிஸல்ட், இணைப்பு. இரண்டறக் கலத்தல். எங்கிருந்து வந்தோமோ அங்கே இணையிறோம்..' - 'S'
*

'ஷரீஅத்' எந்தப் பாதையை காட்டுனிச்சோ , எந்த கதவைக் காட்டுனிச்சோ , அந்தக் கதவுக்கு உள்ளே உள்ள செய்தி இது.. அது கதவை காட்டுனிச்சி.. இவன் அதுல சாஞ்சிக்கிட்டு தூங்குறான்! நாம இப்ப கதவை திறந்துகிட்டு உள்ளெ போயி பாக்குறோம். அதனாலெ , பாமரர்கள்ட்டெ இந்த செய்திகள பேசிட வாணாம். பேசுனா ஒண்ணும் ஆகப்போறதில்லே.. என்னைப்பத்தி தப்பா நெனைப்பாங்க.. உங்களைப்பத்தி தப்பா நெனைப்பாங்க.. நான் பேசுறபேச்சு பூரா - எனக்கு ஒரு கடமை இக்கிது, பொறுப்பு இக்கிது, அதை எவ்வளவு சீக்கிரம் நிறைவேத்தனுமோ அதை நிறைவேத்தனும். நிறைவேத்திடுவேன் நான். அது என் கடமை. அதை நீங்க பாதுகாக்கனும். அப்பதான் அது பரக்கத் செய்யிம். 'பரக்கத் செய்யிம்'டு பொண்டுவ சொல்றமாதிரி நான் சொல்லலே. நான் உணர்ந்து சொல்றேன். ஷெய்குமார்கள் யாரும் இப்படி காட்ட (சொல்ல) மாட்டாங்க. நான் ஏன் இப்படி காட்டுறேண்டு கேட்டா நான் நம்புறேன். இப்படி விளக்கி சொல்லுவதற்கு எனக்கு அதிகாரம் இருக்குண்டு நம்புறேன். ஷெய்குமார்கள் சொல்லமாட்டாங்க; செஞ்சிப் பாருங்கண்டுதான் சொல்லுவாங்க. 'ஓதிப்பாருங்க'ம்பாங்க. 'என்னா லாபம்?'டு கேட்டா 'உனக்கு கொடுத்த 'இபாதத்' 'கட்'டுண்டு சொல்லிடுவாங்க. சோத்தைக் கொடுத்து , 'உண்ணு'ம்பாங்க. 'உண்டு என்னா லாபம்'டு கேட்டா சோத்தை புடுங்கிக்குவாங்க! பயமும் காட்டுவாஹா. 'திக்ரு' பண்ணு, கொஞ்சநாள்லெ அறிவு மழுங்கிடும்'ம்பாஹா! இந்த பயங்கரமான அவஸ்தையிலாம் உங்களுக்கு இல்லே இப்ப. நான் உரிச்சி, சுளை சுளையா தர்றேன். இப்பதான் 'கோபாலா எங்கே போறா.?' கதை வந்துடுச்சே! காலத்தோட நஸீபு, இத பத்தி சொல்ல முடியாது. உங்களுக்கு அப்படி சிரமம் இல்லே' - 'S'
*

25 வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சு. குரலில் இளமை துள்ளுகிறது. இப்போதும் அறிவின் ஆட்சிதான் என்றாலும் வயதின் நடுக்கம். ஆனால் தீராத பழத்தின் விளைந்துகொண்டேயிருக்கும் சுளைகளிலிருந்து உரித்து உரித்துக்கொடுக்கும் களைப்பற்ற தன்மை ஆச்சரியம். இதற்கு பசி காரணமா, பழம் காரணமா?
*

31.05.1996 வெள்ளி செஷன் முடிந்து.

இன்றுகாலை மஸ்தான் மரைக்கானின் ரூம் போனவுடன் 'ஜெப்பார்நானா ரெண்டுதடவை ஃபோன் பண்ணுனாஹா' என்ற செய்தி. ஏதோ சாமான் இருக்கிறது என்று சொன்னார்களாம். சர்க்காரின் புதிய கேஸட்கள் வந்திருக்குமோ, அல்லது, ரவூஃப்தான் materials அனுப்பி வைத்திருப்பானா அல்லது சர்க்கார் ஏதாவது செய்தி சொல்லியிருப்பார்களா..? போனால் , ஒருமாதத்திற்கு முன்பு ஜெப்பார்நானாவிடம் யூசுஃப் அலியின் Quran translation வேண்டும் என்று சொன்னதற்குப் பரிசு காத்திருந்தது. யூசுஃப் அலியும் வேண்டும், காசும் கொடுக்கக்கூடாது என்றால் பரிசுதானே? ஹம்ரியாவிலுள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்திலிருந்து -எனக்காகச் சொல்லி , வாங்கி வைத்திருந்து - அன்பளிப்பாகக் கொடுத்தார். இன்று இரவு சௌதி சென்றிருக்கும் ஃபரீதுக்கு ஃபோன் செய்து அங்கிருந்து கொண்டுவரச் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் யூசுஃப் அலிக்கு என் மேல் உண்மையிலேயே பிரியம் போலும். பெரியார், மார்க்ஸ், சார்த்தர் to யூசுஃப் அலி! மாற்றம்தான்! ஆசைப்பட்டது சரி, எதற்காக வேண்டும் என்று நினைத்தோம்? யூசுஃப் அலி பெரிய ஸ்காலர் என்றா? இந்த ஸ்காலர்கள்! இவர்கள் மேலுள்ள ஆச்சரியம் ஏன் மறையமாட்டேன் என்கிறது? தெய்வத்தின் குரல் சாமானியர்களுக்குப் புரியும் அளவு ஸ்காலர்களுக்குக்ப் புரியுமா? தெய்வம்தான் யாருக்கு? ஏன் 1810 பக்க சுமையை நான் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டலாம் என்றா? குழப்பத்துடன் வந்து செஷனில் அமர்ந்து சர்க்காரின் 8-12.12.95 கேஸட் கேட்டபோது சர்க்கார் பேசினார்கள்:

'எந்த பணக்காரனுக்கும் நீங்க மதிப்பு கொடுக்கக்கூடாது. எந்த ஸ்காலருக்கும் மரியாதை கொடுக்கக்கூடாது. நீங்க மதிக்க வேண்டிய ஒரே ஆள் நானாகத்தான் இருக்கனும். ஏன் அதுவும்? அப்பதான் நான் சொல்றது உங்க மனசுல இறங்கும். நான் சொல்றதுதான் தெய்வவாக்கு. அல்லா ரசூல் எல்லாம் எனக்குப் பின்னால்தான். ஏன்? அல்லாஹ் யாரு, ரசூல் யாருண்டு நான்தானே காட்டுவேன். என்னா, 'நஜாத்' மாதிரி இக்கிதுண்டு பாக்குறீங்களோ? 'நஜாத்'ஐ விட ரொம்ப ரொம்ப மேலே இது. அல்லது ரொம்ப ரொம்ப கீழே. இது 'ஷரீஅத்' அல்ல. 'தரீக்கா'. 'தரீக்கா'வும் அல்ல. 'மஹ்ரிபா'. 'ஹகீகத்' இது. உண்மை இதுதான்'
*

வியாழன் காலை ஆஃபீஸிலுள்ள 486 கம்ப்யூட்டரில் வைரஸ். மூளையால் கம்ப்யூட்டரை உருவாக்கலாம். அழிக்கவும் செய்யலாம் . பின் எதற்கு கம்ப்யூட்டர்? எனக்கு வேலை கொடுக்கவா? என்னிடம் Solomon Toolkit புது வெர்ஷன் இருந்தது. virus remover. அதில் வைரஸ் புகுந்திருந்தது! நான் பதட்டப்படாமல் முயற்சித்துக்கொண்டிருந்தேன். clean boot செய்து, A Driveல் முயற்சித்தாலும் பலனில்லாமல் இருந்தது. திடீரென்று, இதை மாலையில் செய்தால் என்ன என்று என்னுள் கேட்டது. மாலை ஆஃ·பீஸ் வந்ததும் உடனே ஆரம்பிக்காமல் 'அஸர்' தொழுதுவிட்டு, ஒரு டீ குடித்துவிட்டு , சிகரெட் குடித்துவிட்டு, பத்து நிமிடம் மொயீன்சாஹிபிடம் பாகிஸ்தான் 'பச்சை'களை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு உட்கார்ந்துபாரேன் என்றது. அதன்படியே உட்கார்ந்தேன். வைரஸ் போச்சு. Virus நான்தான் போலும்!
*

'எது செய்கிறதோ அது நமக்குள்தான் இருக்கிறது, நம்மில் ஒரு பகுதியாக இருக்கிறது, அதனுடைய ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். இதுதான் நம்ம பிரின்ஸிபிள்' - 'S'

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் - தமிழ் குர்ஆன்.
'Praise be to God. The Cherisher and Sustainer of the *Worlds' - யூசு·ப் அலி.

*
20-27.10.95 கேஸட் :

'மெமரி வீக்கா இக்கிது, அவர்ட்டெ கேட்டுக்கலாம், இவர்ட்டெ கேட்டுக்கலாம்டு இக்கிறது சரியல்ல. இது எப்படீண்டா நீங்க பீயை பேண்டுட்டு அவரை சூத்து கழுவ சொல்றது. நீங்கதான் கழுவனும்!' - 'S'
*

'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!'.. எந்த முட்டாப் பயலோ சொல்லிப்புட்டான். அந்த மனசை நீங்க லைஃப்லெ வச்சீங்க..ஒண்ணுமே செய்ய முடியாது. ஒரு மயிரையும் புடுங்க முடியாது. இப்ப ஆண்டவன் வந்து கேக்குறான், என்ன வேணும்டு. என்னா கேப்பீங்க?'

'நீயே வேணும்டு கேட்பேன்' - ஒருவர்

'ஹை, இது என்னை வெடைக்கிறது! ஒழுங்கா சொல்லுங்க'

'தீர்க்கமான தெளிவான முடிவை எடுக்கும்...'

'அதாவது உண்மையை உண்மையாகக் காட்டு, பொய்யை பொய்யாகக் காட்டு? பரவாயில்லை; பரவாத்தான் இல்லை'

'நாமும் வாழ்ந்து மத்தவங்களையும் வாழவைக்..'

'அந்த தியாக மனப்பான்மையிலாம் வாணாம். நீங்க நல்லா வாழுங்க. உங்களைப்பார்த்து அவன் காப்பியடிப்பான். இப்படிச் சொன்னஹ எத்தனையோ பேரு காணாப்பொய்ட்டாஹா. நீங்க நல்லா வாழுங்க. அந்த வாழ்க்கையோட brightness மத்தவங்களை கவரட்டும். ஆனா மத்தவங்களை கவர வாழாதீங்க; கீழே பொய்டுவீங்க. நீங்க மெழுகுவத்தியாக இருக்க வாணாம். டார்ச்லைட்டா இரிங்க. வெளிச்சத்தைக் கொடுத்துட்டு அழிஞ்சிடாதீங்கங்குறேன். நபிமார்கள் அப்படி இருந்திக்கலாம். குத்புமார்கள் அப்படியிருந்திருக்கலாம். நீங்க குத்பும் அல்ல, நபியும் அல்ல. 'யான் பெற்ற இன்பம் இவ்வையகம் முழுதும் பரவுக'. இதே தப்புங்கிறேன். 'யான் பெற்ற இன்பம்' சரி, அந்த இன்பத்தை பரப்புவதற்காகவே வாழுறோம்லெ? அங்கெதான் தப்பு வருது. அது பொய். அப்படி வாழ்ந்தா முட்டாள்தனம். இப்படி சொல்றது இஸ்லாமிக் பிரின்ஸிபிளை உடைக்கிறமாதிரி இருக்கும். நீங்க சரியா புரிஞ்சிக்கலை. 'Misunderstood Religion' அப்படீண்டு ஒரு புக் வந்திக்கிது. அதை படிச்சிப்பாரு -சும்மா சொல்றேன், படிக்காதே! - எது இஸ்லாம் அல்லண்டு நெனைச்சிக்கிட்டிக்கிறோமோ அதுதான் உண்மையான இஸ்லாம்! என்னா காரணம்? மத்த மதத்துலே ஞானத்தை அடிப்படையா போதிச்சாங்க. நாம் அதைவிட அரசியலையும் சமுதாய வாழ்க்கையையும்தான் போதிச்சோம். அப்ப ஞானம் யாருக்காக? சமுதாயத்துலெ கலந்து கலந்து போதிய அளவு டைம் உள்ளவன் ஞானத்துலெ பூரட்டும். அவன்ட்டெ சக்தி திரளும்போது , அந்த வெளிச்சத்துனாலே மத்தவங்க கவரப்பட்டு வரட்டும். அதனாலெ ஞானமார்க்கத்துலெ போறவங்க வைரக்கல்லு மாதிரி இரிப்பாங்க, கொஞ்சக்கோனு. 'டேலா' (கட்டிக்கல்) மாதிரி நிறைய இருக்க மாட்டாங்க. ஆக மொத்ததுலெ, லைஃப்லெ ஒரு குழந்தைட்டெ கேட்டா சொல்லும், கமர்கட் முட்டாய் வேண்டும்டு. அட்லீஸ்ட் அன்னக்கி உள்ளது. கிழிஞ்சி போன பட்டம் வச்சிக்கிற புள்ள நல்ல பட்டம் கேட்கும். ஒரு பிசினஸ்மேன் டாப் 1, நம்பர் 1 கம்பெனியாகனும்டு சொல்லுவான். உங்களுக்கோ பதில் சொல்லத் தெரியலே. அல்லா வேணும்டு ஞானம் பேசுறீங்க! வேதாந்தம் பேசுறீங்க. எந்த ஒண்ணுக்காக கொட்டை அரிக்கும்போதுகூட சொறியாம இக்கிறீங்களோ அதுக்காகத்தான் நீங்க வாழுறீங்கண்டு அர்த்தம். ஷோக்கான 'க்ளூ' - glue அல்ல! - குறிப்பு! பெரிய பெரிய இன்பங்களையெல்லாம் எந்த ஒண்ணுக்காக தியாகம் பண்ணுறீங்களோ அந்த ஒண்ணுக்காகத்தான் வாழுறீங்க. எந்த ஒண்ணு அது? அது இன்றைக்கு வந்து நாளைக்கி அழியக்கூடியதாக இருக்கக்கூடாது. permanentஆ இருக்கனும். ஒரு பிரச்சனையை எடுக்கனும், அது பூரா life long வந்துக்கிட்டே இருக்கனும். இருக்கா இல்லையா?'

'நிம்மதி' - ஆரி·ப்.

'ஹூம்.. என்னா ஆரிஃப்..கீழே கீழே போறீங்க..' - சர்க்கார் அலுத்துக் கொள்கிறார்கள். 'ஆறுலேயும் வரலாம் அறுபதிலேயும் வரலாம் சாவு. நிம்மதி, கையிலே வெறுமையா இருந்தாலும் வரலாம். நிறைய காசிருந்தாலும் வரலாம். நிம்மதியை சொல்லாதீங்க, எனக்கு நிம்மதியா இக்கிம்!.. என்னாங்க.. வாழ்க்கையைப் பத்தி புரிஞ்சிக்கிடாம எது வேணும்டு கேட்கத் தெரியாம, புரியாம இக்கிறீங்கண்டா நான் என்னா செய்யிறது?'

'கிடைச்ச அறிவை இழக்காம..'

'ஷர்புன் நியமத்' கூடாதுங்கிறீங்களா? நல்ல பதில்தான். நான் உங்க லைஃப்லெ மேஜர் Aim என்னாங்குறேன். சிம்பிளான கேள்வி. ஒன்னும் இதுவரைக்கிம் ஃபார்ம் ஆவலேண்டு சொல்லுங்க, how to liveங்குறதுக்கு பதில் சொல்ல முடியலேண்டாவது சொல்லித் தொலைங்க'

'எனக்கு பணம் வேணும்' - ரவூஃப்

'.... ..... .... '

'வேற ஒண்ணும் வாணாம். ஏண்டா மத்த எல்லாத்தையும் நான் கொண்டு வந்துவிட முடியும்' - தொடர்ந்தான் ரவூஃப்.

'இது உன் மனசுல ஏற்பட்டிருக்கிற காயத்தினாலே ஏற்பட்ட விளைவு. இது பதிலே அல்ல. எந்தப் பயலும் - பிசினஸ்மேன் உட்பட - பணம் கேட்க மாட்டான். பணத்தாலே ஆகக்கூடிய காரியத்தைத்தான் கேட்பான். இது பதில் அல்ல. அட்லீஸ்ட் இப்படியாச்சும் சொல்லலாமுல்லெ? 'லைஃப்லெ அப்பப்ப எனக்கு தேவைகள் இருந்துக்கிட்டிக்கிம். இன்னக்கி தேவையில்லாதது நாளைக்கு தேவையா இக்கிம். எதையும் அடையிற சக்தி எனக்கு வேணும். நினைச்சதை முடிக்கிற சக்தி எனக்கு வரணும். அதுவும் , சிரமமில்லாம நினைச்ச உடனே நடக்கனும். விரலசைச்சா அண்ட சராசரமும் அசையிற மாதிரி சக்தி வரணும்'. இதைக்கூட நான் சொல்லிக் கொடுக்கனுமா?! Specific-ஆ 'What we want'டுண்டு புரியாத வரைக்கிம் நடக்காது எதுவும். ஆண்டவன்உங்களைப்பார்த்துப்புட்டு specificஆ கேக்குறவன்ட்டெ பொய்டுவான்!' - 'S'
*

'தாஜ்மஹால் பீடி இருக்குதா?'
'இல்லே'
'Wills சிகரெட்?'
'இல்லே'
'Charminar சிகரெட் இருக்குதா, ஹைதராபாத் சின்னம் போட்டிருப்பான்லெ அது'
'இல்லே'
'மான் மார்க் சுருட்டு?'
'இல்லே' - கடைக்காரர் பரிதாபப்பட்டு ஒரு 50 பைசா சாக்லெட்டை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் போன பிறகு சிரித்தாரம் ஒரு சிரிப்பு. 'இப்படியிருக்கானுவ மனுஷனுவ!' என்றாராம்.

இந்தப் பழைய சம்பவத்தை சொல்லிவிட்டு சர்க்கார் சொன்னார்கள் : 'நீங்க அவன்மாதிரிதான் இரிக்கிறீங்க!'. 'know thyself. உன்னை உணர். இதை லட்சியமா வைக்கலாமுல்லே? அல்லாவை கட்டியணைக்கனும்குறதைவிட அழகான வார்த்தையில்லையா இது?' - 'S'
*

'உலகத்தை நாடுறவன் பொம்பளை, அவன் எல்லைக்குள்ளேயேதான் அவன் சந்தோஷப்பட்டுக்குவான். மறுமையை நாடுறவன் கோஷா. அவன் அதை அடையறதுக்கு 'குப்பி'தான் கொடுக்கனும், அதுல இன்பம் இக்கிதா இல்லையாண்டு பிறகு கேட்டுப் பார்த்துக்கலாம், இவன் இன்னக்கி இருக்குற ரொட்டியை வுட்டுப்புட்டு நாளைக்குள்ள ரொட்டியை நினைக்கிறவன். ஒரு சின்ன மிஸ்டேக்கால அது கிடைக்காமகூட பொய்டலாம். அப்ப.. ஆம்பள சிங்கம் யாரு? அல்லாஹ்வை நாடுறவண்டு ஒரு சூஃபி சொன்னாஹா. உங்க பொண்டாட்டி , 'நாளைக்கி பெருநாள் வருது, காசு தாங்க'ண்டு கேக்குறா.. 'அல்லாஹூ ஜல்ல ஜலாலஹுத்தஆலா தான் நாடிய நேரத்தில் கொடுப்பான்'டு அங்கே வேதாந்தம் பேசிப்பாருங்களேன்.! சோத்துல உப்பை அள்ளிபோட்டு விரட்டி வுட்டுடுவா!' - 'S'
*

'உன்னை உணர்'ந்த பிறகு ஆண்டவனை நீ வாண்டு கூப்பிட வேண்டியதில்லை. அவந்தான் இருக்கிறானே. கூப்பிட என்ன இருக்கு?' இதை லட்சியமா வைக்கலாமுல்லே?' - 'S'

வைக்கலாமா?

(தொடரும்)

குறிப்புகள் :
ரியாலத் - பயிற்சி
இபாதத் - இறைவனைப் பற்றிய சிந்தனை
ரஹ்மானியத் - நல்லசக்தி, இறைசக்தி
ஷைத்தானியத் - தீயசக்தி, ஷைத்தானின் குணம்
நஃப்சானியத் - பேராசை
திக்ரு - தியானம்
ஜெதபு - பரவசம்
ஷெய்கு - குரு
நஸீபு - தலைவிதி
ரசூல் - முகமது நபி (ஸல்)
நஜாத் - இஸ்லாத்தின் 'தூய்மை'வாதிகள்
ஷரீஅத் - மார்க்கச் சட்டம்
தரீக்கா - ஞானப்பாதை
மஹ்ரிபா - மெய்ஞ்ஞான நிலைகளுள் ஒன்று
ஹகீகத் - உண்மை
அஸர் - மாலைநேரத் தொழுகை
குத்பு - மெய்ஞ்ஞானிகளின் தலைவர்
குப்பி - ஓரினப்புணர்ச்சி

Thursday, July 6, 2017

சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள் (02)

சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள்

அத்தியாயம் 01

அத்தியாயம் 02

ஆபிதீன்

*

சென்ற வருடப் பிறப்பன்று (01.01.95, 01:30 am) சர்க்கார் பேசியதிலிருந்து:

இந்த வருடத்தில் நீ என்ன செய்வாய் என்று கேட்கிறார்கள். குழம்பிக் குழப்பவே சீடர்கள் இருக்கிறார்கள். 'Specificஆ என்ன வேணும்டு தெரியினும்பா' என்று சொல்லிவிட்டுச் சொல்கிறார்கள்: 'Financial Security - First & Best. Most Important. அது இல்லாம ஞானம் பலிக்காது. நாம சந்தோஷமா இருக்கனும்; நாலு பேருக்கு உதவனும்; கடன் இருக்கக்கூடாது. ஒரு 50 பவுன் நகை, குறைஞ்சது. ஆனா அது பேங்க்லெ அடமானத்துக்கு போயிடக்கூடாது' என்று சொல்லி , 'சரி, நீ என்னா செய்வா' - ஒருவரைக் கேட்கிறார்கள். 

'வூடு கட்டுவேன் சர்க்கார்'. 

'எது? இந்த குஸ்திலெ கட்டுவாஹலே... அந்த வூடுதானே? எட்டுவூடு பத்துவூடுண்டுலெ கட்டுவாஹா அதுலெ. நீ எவ்வளவு கட்டப்போறா?'

'நாலு அஸ்திவாரம் போட்டு ஒரு வூடு கட்டுவேன் சர்க்கார்'. '

அட , என்னெட்ட உள்ள ஒரு கெட்ட குணத்தை நீக்குவேன், ஒரு நல்ல குணத்தை உண்டாக்குவேண்டு சொல்லேம்பா! ஏன் பணத்தைப் பத்திப் பேசுறேண்டா அதுதான் எல்லாருக்கும் மெயின் பிரச்சனையா இக்கிது'

*

'எதைபத்தி உங்களாலெ கற்பனை பண்ணமுடியலையே அதை அடைய முடியாது. தூங்கப்போகும்போது வரும் எண்ணம் விழிக்கும்போதும் வந்து, அந்த எண்ணம் Dominating Forceஆகவும் அது Businessஆகவும் இருந்தால் - Businessman ஆகலாம் -  இந்த Burning Desireஐக் கொண்டு. What a Human mind can conceive and believe it can surely achieve. When you are ready for a thing it is sure to happen. 

பணம் மட்டும் போதுமா? பத்தாது. செல்வாக்கு வேணும். மொதல்ல பொண்டாட்டி மதிக்கனும் நம்மளை. அவளை சந்தோஷப்படுத்தனும். அப்பத்தான் புள்ளையிலுவ நல்லா இக்கிம். பொண்டாட்டிய அரவணைச்சிக்கிட்டே போவனும். பொஞ்சாதி 'துஆ பரக்கத்' ஸ்ட்ராங்கா இருக்கனும். 'Backing force' அவதான். 

செல்வம் நமக்காகத்தானே தவிர செல்வத்துக்காக நாமல்ல. பணத்தை வேலைக்காரனா மதி. அப்ப செல்வம் தானா வரும். 

Something for Nothing என்று எதுவும் கிடையாது. 

சமுதாயத்தோடு கலந்து பேசும்போது நடியுங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுங்கள். நம் Philosophyஐ வெளியில் சொல்ல வேண்டாம். கல்லால் அடிபட வேண்டிவரும். அதாவது , இரண்டு வாழ்க்கை தேவை. சமுதாய வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை. சமுதாய வாழ்க்கைக்கு செல்வாக்கு கொடுப்பதே அந்தரங்க வாழ்க்கைதான். 

Cigarett Lighterஐ கொளுத்தாம இருந்தா வீணாப் போவுது. கார் ஓடலைன்னா சக்கரம் வீணாப் போவுது. மனசு அப்படியல்ல. சும்மா இருந்தா நெகடிவ் விஷ வித்துக்கள் வளரும். அதனால்தான் திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும் - மேன்மையாக. 

ஆண்டவன் ஒருவன் என்று பெயர். எத்தனை கோடி இதயங்கள் உண்டோ அத்தனை கோடி ஆண்டவன் இருக்கிறான். 

ஆசை ஸ்ட்ராங்கா இருந்தா தனக்குத்தானகவே காரியம் நடக்கும் - இதை உருப்போடுங்க. 

Succes Philosophyல் Dependable Memory அவசியம். இதற்கு  Subconsciousஐ Strengthen பண்ணனும். அதுக்கு திரும்பத் திரும்ப பழைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டும் - இரவு படுக்கப்போகும்போது. Dependable Memoryயும் வரும். Subconscious-ம் ஸ்ட்ராங்கா ஆகும். 

அவசியமா அது? இப்ப அவசியமா? இவ்வளவுக்குத்தான் செய்யனுமா? என்று 3 முறை கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்று நெகடிவ்வாக இருந்தாலும் அந்தக் காரியம் செய்ய வேண்டாம். (பணம் செலவு செய்வது பற்றி). 

நானும் ஹோம்வொர்க் பண்ணிக்கிட்டுத்தான் இக்கிறேன். நான் இப்ப சொல்றது அஞ்சாம் கிளாஸ் பையன் நாலாங்கிளாஸ் பையனுக்கு சொல்ற மாதிரி. இப்படித்தான் வாழனும். ஒரு கை , மேலேயுள்ள அறிவைப் பெற. மறு கை, கீழே உள்ளவனை தூக்கி விட. இரண்டு கையையும் மேலே தூக்குனா சுயநலம். ரெண்டு கையையும் கீழே கொண்டுவந்தா இழுத்துப் போட்டுடுவான், ஜாக்கிரதை. இதுதான் லைஃப். 

பெரும் பணக்காரனுக்கு நோய்வர என்ன காரணம்? பணம் பணம் பணம்டு பொய்ட்டான். பணத்தோட சேர்த்து லைஃபையும் சேத்து நெனைச்சிருந்தாக்கா பணம் பணமா இருக்கும். செல்வாக்கு செல்வாக்கா இருக்கும். உடல் ஆரோக்கியமா இருக்கும். 

என் Principleஐ வச்சித்தான் நீங்க வளர முடியும். என் Principle என் Principle அல்ல, பெரிய தலைகள் எல்லாம் வளர்ந்தது இந்த Principleஐ வச்சித்தான்'

*

1995 புதுவருடப் பேச்சு கேஸட் இன்று - 19.01.1996  - மஞ்சனூர் ஜெப்பார்நானா மூலம் காலையில் கிடைத்தது. 

வெள்ளி 'செஷனுக்கு' உட்காரும் சமயத்தில் இதைக் கேட்டேன், எழுத. பழசை எத்தனை முறைதான் கேட்பது என்று புதுசு. இந்தக் கேஸட்கள் ஒரு காலத்தில் கனவாகப் பேசப்பட்டு வந்தன. என்னால் நினைக்கப்பட்டும் வந்தன. அவர்களை விமர்சித்த காலங்களில் அவர்களின் 'Business' பற்றிய கேஸட்டைப் பெற நாடினேன். ஆனால் முடியவில்லை. இப்போது சர்க்காரை நாடிவிட்டபோது முயல நினைத்தாலே போதுமானது. 'இதெயே போன வருஷம் கேட்டிந்தா கொடுத்திருக்க மாட்டேன். இப்ப செட்டுலெ இருக்கீங்க. பொண்டாட்டிட்ட கூட கொடுக்காதது இந்த கேஸட்கள்.. எடுத்துட்டுப்போயி கேளுங்க ' என்று சொல்லியே ஜெப்பார்நானா கொடுத்தார்.

'நானா.. அந்த பிசினஸ், ஹிப்னாடிஸம் பத்தின கேஸட்..'

'அது ஊருலெ இக்கிது. போய் எடுத்துட்டு வர்றேன்'

கிடைக்கும். ஆனால் செஷன்-ன் தொடர்ச்சிதான் கிடைக்கவில்லை. துபாய் வந்து ஒன்றரை மாதமாகிறது. ரவூஃப், என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறாய்? அனுப்பினாயா? யாருக்கு?

*

அடுத்த கேஸட் 29 to Jan 95 என்று போட்டிருக்கிறது. டிசம்பர் 94ஐச் சொல்கிறதா ஜனவரி 95ஐ சொல்கிறதா?

'மேலே வர்ற Improvement எல்லாம் கீழே வரனும் முதல்லெ. கீழே வர்ற Improvement-லாம் மனசுல வரனும். மனசுல வந்தாத்தான் செயலே மாறும். அதனாலே , நீங்க தொழுதுகிட்டே இக்கிறீங்க, உங்க லைஃப்லெ மாத்தம் வரலைண்டா ஒண்ணு நீங்க தொழவே இல்லே, இல்லே உங்க 'நெகடிவிடி' , தொழுகையினால வர்ற இம்ப்ரூவ்மெண்ட்டை விட ஸ்ட்ராங்கா இருக்கு. அதனாலெ நாலு நாள் அல்ல, நாப்பது நாள் தொழுவுங்க. 

இப்பவும் சொல்றேன், அப்பவும் சொல்றேன், எப்பவும் சொல்றேன், சுடுகாடு சுவனமா மாறுவதற்கு நாப்பது நாள். பிச்சைக்காரன் கோடீஸ்வரனாக நாப்பது நாள். நாப்பது நாள்தான். இப்பவும் சொல்றேன்.  Only நாப்பது நாள். 

எந்தப் பயிற்சியும் செய்ய முடியும். ஆனா, நீங்க ரெடியா இருக்கனும்..எல்லாத்தையும் control  பண்ணனும். எதை? சின்னச் சின்ன செயல்களை Control பண்ணுங்க. Control ஆவுதா? Mind திரளுதுண்டு அர்த்தம்'


அரேபியா :

'அரேபியாவுக்கு ஏன் போவ வாணாங்குறேன்? உங்க இளமை, உங்க ஆரோக்கியம், உங்க மகிழ்ச்சி, நீங்க கொஞ்சுறது, வெளையாடுறது...எல்லாத்துக்கும் மேலே ஆண்மை... அந்த சூட்டுலெ ஆண்மை பொய்டும்! எல்லாத்தையும் உட்டுப்புட்டு ஒரு ஈஸி சேர், ரெண்டு கட்டு சுருட்டு, மூணு காராபூந்தி பொட்டலம்; சும்மா 'கூல்' பண்ணி உட்டுடுலாம். இதுக்குப் போயி மாஞ்சி மாஞ்சி வுழுவுது ஜனங்க!'

ஊர் :

'மனுஷன் நல்லவனா கெட்டவனா என்பது முக்கியமல்ல. திறமைசாலியா என்பதுதான் முக்கியம். தெருவுக்கு ஒரு தலைவன் தேர்ந்தெடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த உலமாக்கள் ஊருக்கு அவசியம்' - போலீஸ் ஸ்டேஷன் இல்லாத நிலைவர என்று பேசும்போது.

வாய்:

'நான் ஏன் (டிவி'யில்) சினிமா போடுறேண்டு கேட்டா படம் பாக்குறதுக்கு அல்ல, நீங்கள்லாம் கேள்வி கேட்காம இருக்குறதுக்கு!'

பீ :

சர்க்கார் கொடுக்கும் பயிற்சிகளைக் கடைப்பிடித்து வந்தால்? சர்க்கார் சொல்கிறார்கள்:

'நடக்குற முறை, அசையிற முறை, 'ஸ்மோக்' பண்ணுற முறை , ஏன் - தண்ணி குடிக்கிற முறை.. (எல்லாம் மாறும்)- பீ பேலுற முறையை நாம பாக்க முடியாது, பேண்ட பீயை வேண்டா பாக்கலாம் - நம்ம வூட்டுலெ முடியாது, FlushOutஆ இல்லாம இருந்தா பாக்கலாம் - அதுல பெஸ்ட் பீ பேலுறது சிஹாபு நானாதான். கரெக்டா குழா மாதிரி பேலுவாஹா. லேசா அமுக்கி வுட்டுடுவாஹாண்டு நெனைக்கிறேன். லேசா, ரிலாக்ஸ்டா பேலனும். சுஹமா பீ பேலனும்.'

நான்:

சர்க்கார் , என் பத்துவருட அரபுநாட்டு வாழ்க்கையில் ரெண்டு சுருட்டு கட்டு வாங்கிவிட்டேன். அஸ்மா, தன் நகையை அடகுவைத்து எப்படியும் முன்று காராபூந்தி பொட்டலம் வாங்கிவிடக்கூடும். அந்த ஈஸி சேர், அதற்குத்தான் இந்த துபாய் அல்லது வரவிருக்கிற லண்டன் அல்லது பாரீஸ்! சிங்கப்பூரில் வாங்குவதும் நல்லதுதான், சீக்கிரம் ஊருக்கு கொண்டு வந்து விடலாம். அங்கே போகவா?

*

'எண்ணத்துல மாத்தம் வந்திச்சின்னா செயல் மாறும். Thought Habit மாறும்போது எதையும் செய்யலாம். முடியாதுண்டு தோணுதா? லேசா படுத்துக்கிட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க. அதை திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப நெனைச்சிக்கிட்டே இருங்க. அப்படியே பயம் தெளிஞ்சிக்கிட்டு வந்து, சாத்தியம்தான் இதுவரைக்கிம் சாத்தியம்தாண்டு தோணும். Positivity வந்திடுச்சிண்டு அர்த்தம். அப்புறம் at the reach of our hand என்று தெரிய ஆரம்பிக்கும். அப்ப.. reachக்கே வந்துடும். நீங்க செய்ய வேண்டியது என்னா? மனசை சுத்தமாக்கி வைங்க. எப்படி சுத்தப்படுத்துறது? இரண்டு வழி இருக்கு. அமைதியை உண்டாக்கிவிட்டு வாழ்வது ஒரு வழி. அமைதி உள்ள மாதிரி நடிக்கிறது மறு வழி. ஊருக்கு நடிக்கிறதுக்கு அல்ல, உங்களுக்கு நீங்களே நடிச்சிக்கனும்.' 

'நிற்கும்போது கோவம் வந்தா உக்காந்துக்க. பெரிய வேலையை செய்யாதே..உட்கார்ந்திருக்கும்போது கோவம் வந்தா படுத்துக்க, ஹதீஸ் இது. கோவம் வரும்போது நம் மாற்றுவழி போல நடிக்க வேண்டும் (உட்கார்ந்து->படுப்பது) அதாவது எண்ணத்துல மாற்றம் உண்டாக்கிட்டு செயலில் உண்டு பண்ணலாம்- ஒரு வழி. செயலில் வேண்டுமென்றே மாற்றம் ஏற்படுத்துவதால் எண்ணம் மாற ஆரம்பிக்கும், மறு வழி'.

*

சர்க்காரின் மச்சான் தாவுதுவாப்பா ஒரு கேள்வி கேட்டார்களாம்: 'ஏன் மச்சான், நீங்க காலேஜிலேயே கால் வைக்காத ஆளு. நான் M.Aலெ டபுள் டிகிரி. உங்களுக்கு Grasping Force அதிகம்!'

'நீங்க வந்தது என்ன காரணம்ட்டு.. நீங்களா எப்படி முடிவுக்கு வந்தீங்க? நீங்க புஸ்தகத்தை பொரட்டிக்கிட்டு இக்கிறீங்க. நான் புஸ்தகம் எழுதுனவன்ற மண்டைய பொரட்டிக்கிட்டிக்கிறேன்' - சர்க்காரின் பதில்.

*

'படிப்பு வேறே மரியாதை வேற அந்தஸ்து வேற Mental Force வேற. ஒரு பரப்பயலுக்கு வரட்டும் - பரப்பயல்ண்டு பொருளாதாரத்திலே 'வீக்'குண்டு அர்த்தத்துல சொல்றேன் , மனுஷனை குறை சொல்லலே - அந்த Mental Force வந்தா Top Class Peopleலோட மேலே பொய்டுவான்.' 

'என்ன வேண்டும் கேள் , உடனே தருகிறேன்' என்று அல்லா கேட்டபோது ஒருவன் கேட்டானாம், 'என்னுடைய பேரனுடைய பேரன் என் பரம்பரைக்கே சொந்தமா மூணு அடுக்கு மாளிகையில் ஓடி விளையாடுவதை என் கண்களால் பார்த்து நான் ஓடிக்கொண்டே ரசிக்க வேண்டும்!' இப்படி 'துஆ' கேட்கனும். அப்படி கேட்க தெரியலையா? கேட்காதே, சும்மா இரி. பிறகு என்னா செய்யிறது? சக்தியை வளர்த்துக்கிட்டே இரி. கத்தியை கூராக்கிட்டே இரி. உபயோகிக்கிற சந்தர்ப்பம் தானா வரும். எப்படிண்டு மட்டும் கேட்க வாணாம்'

*. 

நல்ல செய்தி பேசக்கூடியதும் சொர்க்கலோகத்து தோட்டங்களில் ஒன்று - ஹதீஸ்.

*

'ஒத்திப் போடுறதுக்கு காரணம் Inferiority Complex. எங்கே வளர்ந்துடுவோமோங்கற பயம் காரணம். வெற்றியைப் பார்த்து பயப்படுற குணம் காரணம். தாழ்வு மனப்பான்மையுடைய காரணம் Past Failures.'

'ஞானப்பாதை என்ன கொடுவா கருவாடா? கஷ்டப்படனும்.. உஸ்தாதுமார்களை Daily  பார்க்கனும், 'துல்லிபிரியாணி' சாப்பிட அல்ல. பாக்கனும், அவ்வளவுதான். 'தொழுவுங்க வாப்பா, நோம்பு புடிங்க வாப்பா'ண்டு சொல்றவனுக்கு போய் கொட்டுறானுவ.. ஒரு மயக்கத்துலெ, Hypnotic Forceலெ வாழுறான் மனுஷன்.. Illusion.. பாரபைத்தியம். எனக்கு என்னா, என்னை நம்பிக்கிட்டிக்கிற புள்ளையிலுவள தூக்கி வுட்டுடனும். இல்லேண்டா ஆத்மா சாந்தியடையாது. அட தூக்கி வுடுறதுக்கு மாத்தமா அமுக்கிக்கிட்டே ஒக்காந்திருந்தா என்னா செய்யிறது?'

ஒரு சீடனுக்கு திட்டு : 'எத்தனை தடவை சொல்லியிக்கிறேன், பத்திரிக்கை படிக்காதே, வெளிப்பேச்சு கேட்காதேண்டு! குறள்-ஐ refer பண்ணுறான்.. 'யேய்.. என் புஸ்தகத்தையே படிக்காதேங்குறேன்.. குறளை சொல்றியே'ண்டு அடிச்சா அதுக்கு ஒரு மறு குறள் சொல்லுறான் டக்குண்டு! புரியலை, புரியிற 'நியமத்' இல்லே.. யாருக்கு ஆண்டவனின் முத்திரை நெஞ்சில் இல்லையோ , அல்லது யாருடைய முத்திரையை உடைக்க முடியுமோ , அல்லது யாருடைய முத்திரையை சூடு காமிச்சி - இதயத்துக்கு பழுதில்லாம - கரைக்க முடியுமோ அவங்களுக்குத்தான் நான் ஹெல்ப் பண்ண முடியும்.'

சர்க்காரின் 'ஸ்டார்' சின்னம்: 

'தெய்வத்தன்மை கீழே வந்து, வளர்ந்து, ஞானப் பாதையிலெ மறுபடி cross பண்ணி , அங்கே சமுதாயத்துக்கு தொண்டு செஞ்சிட்டு, அப்புறம் தெய்வத்தன்மைக்கே மேலே பொய்டுது. அதுதான் 'ஸ்டார்'ண்டு Symbolஆ பேர் வச்சிக்கிறோம். வட்டம் என்பது அண்ட சராசரம். அண்ட சராசரத்தை துளைச்சிக்கிட்டு போற 'ஸ்டார்'. சக்தி படைச்சது இந்த 'ஸ்டார்'. அதனாலதான் கூம்பை முன்னாலெ போட்டேன்!.

*

பேசாதே : 

சர்க்காரிடம் ஏச்சு வாங்காமல் தப்பிப்பது கடினம். முக்கால்வாசி ஏச்சு நம் முந்திரித்தனத்தால் கிடைக்கும். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் நமக்கு ஆயிரத்தெட்டு சந்தேகம் வந்தாலும் கேட்கக்கூடாது. 'Flaw வச்சித்தான் ஒவ்வொண்ணையும் சொல்றேன். நீங்க கேட்கனும்' என்று சொல்வது , அவர்கள் பேசி முடித்த பிறகு. 'ஒவ்வொரு செய்கையையும் உணர்ந்து, ரசித்து செய்ய வேண்டும் - அந்த செயலைச் செய்கிற பிரக்ஞையோடு - உதாரணமாக டீ குடிப்பதை இந்த அளவு நிதானத்தோடு...' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடையில் நான் பாய்ந்தேன் பொறுக்கமாட்டாமல் . 'ஜப்பானில்கூட தேநீர் வைபவம் ஒன்று இருக்கிறதாம்..அங்கே ஒரு டீயை குடிக்க 3 மணி நேரம் ஆகுமாம்' என்று புகுந்தேன். ஜானகிராமனின் பயணக்கட்டுரை ஒன்றில் அவர் வியந்து - வழக்கம்போல- பேசுவார். அந்த ஞாபகம்.

'ஹராம்! நீங்க இப்படி பேசுறது ஹராம். வுட்டுடுங்க இதை'

'சர்க்கார், வந்து...'

'ஆக்கபூர்வமான, சரியான உதாரணம்தான். ஆனா அத நான் பேசி முடிச்சபொறவு சொல்லனும். இப்படி குறுக்கே விழக்கூடாது. நான் சொல்லும்போது உங்களுக்கு பலதையும் சொல்லத்தோணும். ஆசை கொப்பளிச்சிக்கிட்டு வரும். அடக்குங்க'

சரி, பேசாமலும் இருக்கலாமா? 'நான் பேசுற பாணியே கேள்வி கேக்குறமாதிரிதான் இருக்கும். நீங்க உங்க பதிலை சொல்லி என்னையும் எல்லோரயும் குழப்பி வுட்டுடாதீங்க' என்பார்களே என்று பிள்ளைகள் பேசாமல் இருந்தாலும் தொலைந்தது.

'நீங்கள்லாம் அவுலியா மாதிரி.. எது சொன்னாலும் பேசாம இருப்பீங்க' என்பார்கள்.

எப்படியோ சர்க்கார் வாயால் 'அவுலியா' பட்டம் என்று பிள்ளைகள் சந்தோஷப்படலாமோ?

'அவுலியாவெல்லாம் கழுதை மாதிரி!' - சர்க்கார் சரியாகவே முடிப்பார்கள் எப்போதும்.

கேள் : 

'பேசும்போது கேட்கனும்..அதுதான் நம்ம பிரின்ஸிபிள். சம்பந்தப்பட்டவர்கள்தான் கேட்கலாம். உங்களுக்கு ஞாபகம் வர்றதையெல்லாம் சொல்லக்கூடாது என்னெட்ட. உங்களுக்கு வரக்கூடிய எந்தக் கேள்வியும் சரி, எனக்கு வந்ததுதான். எல்லாரையும் 'அனலைஸ்' பண்ணிப்பார்த்த பிறகுதான் நான் பேசுறேன். எந்த தராசுலேயும் நிக்கிம் என் பேச்சு. படிக்கிற காலத்துலெ என் ஹஜ்ரத் என்னெட்ட ஒண்ணு சொல்லிக்கிட்டிருக்கும்போது 'இதுதானே ஹஜ்ரத் அல்லா சொல்றான் குர்ஆன்லெ' என்று நான் சொன்னதுக்காக மூணு மாசம் என்னோட பேசலை அஹ. இதை சொன்னப்போ 'டக்'குண்டு பதில் சொன்னாஹா, 'இதை அல்லா சொன்னபோது நான் வெளிலே போயிருந்தேன்பா'ண்டு. மூணு மாசம்.. உருக்கி உருக்கிப் பாத்துக்கிட்டு சும்மா இருக்காஹா! என் முகத்தைப் பாக்கவே இல்லை.. கதறுனேன். அப்ப என்னா சொன்னாஹா தெரியுமா, 'அல்லா இதெத்தான சொல்றாண்டு கேக்குறியே.. அல்லா யாருண்டு தெரியுமா? அல்லா யாரு, ரசூல் யாருண்டு தெரியாமதான என்னெட்டெ வந்திக்கிறா நீ? என் தோள் மேலேயா கை போடுறா? என் கூட்டாளியா நீ? என்ன, கலந்தா உரையோடுறோம்? பேச்சு கேட்க உட்கார்ந்திரிக்கிறியா, இல்லே, கலந்து உரையாடவா?' . அப்பத்தான் என் தப்பு தெரிஞ்சது.

'நான் சொல்லும்போது நீங்க ஒண்ணு சொன்னா கேட்கிற இன்னொருவருக்கு மனசுல ரெண்டு செய்தியும் ஒண்ணா ரிகார்ட் ஆகும். நாளைக்கி அவர் 'ரிபீட்' பண்ணும்போது என் செய்தியாக அவர் செய்தி வெளிவரும். நான் , பேசனுமே என்கிறதுக்காக கொஞ்சம் சும்மா இருப்பேன்..அவர் 'சர்க்கார் ஆமோதிச்சிட்டாஹா' என்பார். பேச்சுல எவ்வளவு Difficulties இக்கிதுண்டு சொல்றேன். ஒரு தனி ஸ்கூல் இது, மொத்தத்திலே. பத்தாயிரம் தடவை சொன்ன செய்தியை உங்கள்ட்ட சொல்றேன். ஒரு உஸ்தாது கிட்டே சிஷ்யப்பிள்ளை கேட்டாராம். 'நான் எங்கே போவ?'

'சிரியாவுக்கு போ'

'ஏஃபில் மஷூக் ஹூனாக்?' (எப்படி வாழுறது அங்கே?). சரிதானே? அறிமுகம் இல்லை. பழக்க வழக்கம் இல்லை.

'சந்தேகம் வந்துவிட்டது. என் அட்வைஸ் வேலை செய்யாது' - உஸ்தாத் சொன்ன பதில்.

ஆக , சொன்னா செஞ்சிடனும். அவ்வளவுதான். Geometryலெ ஒரு புள்ளி வச்சா One Dimension. பக்கத்துலெ இன்னொரு புள்ளி வச்சா Two Dimension. அதுக்கு மேலே ஒரு புள்ளி வச்சா 3 Dimension. இதை நம்பனும் முதல்லே. எப்படிண்டு கேக்கக்கூடாது. ஒத்துக்கிட்டா கால்குலேசன் பூரா கம்ப்ளிட்டா இருக்கும். அதனால்தான் Open Heartness & Open Mindnessஓடு இங்கெ வரணும். நீங்க பெத்துகிட்ட அறிவு பூரா கரைஞ்சி போறத கண்ணால பாக்கலாம். அதுக்காக , முன்னாடி தூக்கி வைக்கக்கூடாது - கரைச்சி வுடுங்கண்டு. உங்க அறிவு அறிவே அல்ல. அறிவுக்கு பேரு Knowledge. நாங்க சொல்றதுக்கு பேரு Wisdom. ஞானம். இது 'இர்ஃபான்', இது 'மஅரிஃபா'. இது ஜெனெரலா கொடுக்குற 'Talk' அல்ல. சோறல்ல. நோய்க்கு கொடுக்குற மருந்து. ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு மாதிரியா இருக்கும். இங்கே ஒவ்வொரு ஆளும் அப்பப்ப சில கேள்விகள் கேட்டு அதை உங்களுக்கு சூட்டபிளா அமைச்சிக்கனும். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு மாதிரி கொடுப்பேன், ஆளோட நோய்க்கு தகுந்தமாதிரி. ஆனா எல்லா மாத்திரையையும் கொடுத்துடுவேன், அதுதானே முறை!' - 'S'

*

03-08.01.95 கேஸட் :

'ஜனங்கள்ட்டெ வேதாந்தம் மாறனும். 'இது ஆகாது , இதோட விளைவுதான் அது' என்று நம்புற மனப்பான்மை மாறனும். மனசை சுத்தமாக்கி வச்சிக்கிட்டு டெஸ்ட் பண்ணி பாக்கனும்டு பாத்தா லைஃப் பத்தாது. எனவே டெஸ்ட் பண்ணி அதுக்காகவே லைஃபை அர்ப்பணிச்சிக்கிறவங்க பேச்சைக் கேட்கனும். அவ்வளவுதான்.'

ஒரு செட்டியாருக்கு ஒரு சாபு கடன் கொடுத்திருக்கிறார் (அப்படியும் நடக்குமா?!). இப்போது சாபுவுக்கு பயங்கரமான பணமுடை. செட்டியாரைப் போட்டு நெருக்கினார்.' இந்தோ அந்தோண்டு இழுத்தடிக்கிறியும்.. ரெண்டுல ஒண்ணு ; எப்போ தரப்போறியும்?'

அவர் ஆத்திரம் செட்டியாரின் பதிலால் உடனே வடிந்து விட்டது.

'நாளைக்கு சத்தியமா நிச்சயமா தந்துடுவேன் சாபு. உங்க வேலைதான் முதல்லெ'

சாபு இதைநம்பி மறுகடன் வாங்கி , சோறுகறி ஆக்கி தின்றுவிட்டு , அடுத்தநாள் செட்டியார் வீட்டிற்குப் போனால் செட்டியார் குந்திக்கொண்டு உட்கார்ந்து என்னமோ செய்துகொண்டிருக்கிறார். 'உங்க வேலையைத்தான் பாத்துக்கிருக்காரு' - செட்டியார் மனைவியும் சாபுக்கு குஷி ஏற்படுத்தினாள். 

'உங்க வேலதான்'- செட்டியார் ஒரு எலந்தக்கொட்டையை ஒரு குவளையில் தண்ணீரில் போட்டு அமுக்கிக்கொண்டே சொன்னாராம்.

'என்னா பன்னுறியும் செட்டியாரே.. என்ன இது?' - உற்றுப் பார்த்திருக்கிறார் சாபு.

'வாங்க சாபு, பாருங்க! இது வளர்ந்து, மரமாகி, பழம் வச்சி, பறிச்சி வெட்டுன உடனேயே ஃபர்ஸ்ட் காசு உங்களுக்குதான்'

சாபு விரக்தி சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தாராம்.

'ஏன் சிரிக்க மாட்டீங்க...கடனுக்கு வழி பொறந்திடுச்சில்ல..!' - செட்டியார். செட்டியாரா கொக்கா?

*

'ஜம்' :

'ஜம்' ரொம்ப சிம்பிள். ரொம்ப ஈஸி. அதாவது , தங்க பஸ்பம் மாதிரி. வேற ஒன்னும் வாணாம். அதைமட்டும் கரெக்டா செஞ்சிட்டு வந்தா போதும். நான் இருக்கும்போது என் முன்னால எந்த வேலை செய்யக்கூடாதோ 'ஜம்'முலெ செய்யக்கூடாது. நீங்க என்னை நினைக்கிறதுதான் 'ஜம்'. 'ஜம்' செய்ய முடியலைண்டு சொன்னா எனக்குப் பிடிக்காத வேலையை செஞ்சிக்கிட்டிக்கிறதா அர்த்தம்.'

*

'ஒரு குழந்தைக்கு ஒரு பட்டம் வாங்குறதுக்கு எவ்வளவு கவலைப்படுமோ எவ்வளவு அக்கறைப்படுமோ அதே அக்கறைதான் தஞ்சாவூர் ஜில்லாவை விலைக்கு வாங்குறதுக்கும். அந்தப் பட்டத்தோட மதிப்புதான் இதுவும்டு உங்களால நம்ப முடியனும்'.

*

சாய்பாபாவைப் பற்றிய ஒரு புத்தகம். The Miracle Man என்று. அதைப் படித்த நாகை வக்கீல் ஒருவர் சர்க்காரிடம் கேட்டாராம். 'சாபு, அந்தப் புக்கை ரசிச்சிப் படிச்சிங்களா?' 

'Understand what has not been written.. understand what has been written between the lines' அதாங்க எனக்குப் புடிக்கும். நான் எல்லாத்தையும் ரசிப்பேன். Paralysed attack ஆன ஒரு ஆளை சாய்பாபா குணப்படுத்துறான். அவன் கொண்டு வந்த காணிக்கையா கொட்டும்போது ஒரு வார்த்தை - சாய்பாபா சொல்றான் - 'It is  not me. It is you that cure yourself. இத நான் ரொம்ப மதிக்கிறேன்'
*

நோன்பின் மாண்பு : 

'நோன்பு புடிச்சு பட்டினி கெடந்து இறைவணக்கம்ங்குற பேருல செய்றீங்க. ஏங்க, பெருநாளன்னிக்கு முகம் வாடிப்போயி, வத்திப்போயிலெ இருக்கனும்? control பண்ணுனாதால முகம் தெளிவாவுல இருக்கனும்? ஏங்க உப்பிப்போய் இருக்கீங்க? காலைப்பசியாற, பகலுக்கு சாப்பாடு, நைட்டு சாப்பாடு.. 'சஹரு'க்கு போட்டு வெட்டுறது , நோன்பு தொறந்த உடனே மறுவெட்டு. இதுக்குப்பேரு நோன்புண்டா சொல்றது? நம்ம நோன்புல 'ஒலு'வோட இருக்கனும். Fully concious of yourself. Next, எதுல ஆசை வருதோ, அத திங்கக்கூடாது. அதுதான் நம்ம நோன்பு. இத மாதிரி இருக்க ஆரம்பிச்சா ஊர் ரொம்ப அலஹா இக்கெ ஆரம்பிக்கும்.'

ஒரு Training (1972ல் நடந்தது):

'லைஃப்லெ தவிர்க்க முடிஞ்சது, தவிர்க்க முடியாததுண்டு ரெண்டு இருக்கு. தவிர்க்க முடிஞ்சதை உயிரைவிட்டு தடுக்கனும். தவிர்க்க முடியாததை accept பண்ணிக்கனும். Acceptance  of inevitable is the first step to conquire Happiness.

இதுக்கு ஒரு டிரைனிங். எல்லாரும் 15, 15 ரூவா போட்டு சோறாக்க வேண்டியது. சோறுண்டா டாப் கிளாஸ் மொகல் பிரியாணி. சீட்டுக் குலுக்கிப் போட வேண்டியது. யாரோட பேர் வருதோ அஹலுக்கு சோறு கிடையாது. அவந்தான் பரிமாறனும். சாப்புடுற ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தியா சொல்லனும், அவன் நாக்குல தண்ணி வர்ற மாதிரி. அப்புறம் ஒரு ஆணம் கூட கொடுக்க மாட்டோம். வெறும் தோசை வாங்கித் தருவோம். ஹமீது சாபு சொன்னான்: 'அடுத்த வெள்ளிக்கிழமைதானே? அன்னக்கி எனக்கு காய்ச்சல் வரும் சர்க்கார்!'

*

'பெர்னார்ட் ஷா 200 ரூவா களவு கொடுத்துட்டான். பெர்னார்ட்ஷா தெரியுமுலெ? கை, காலு, நகம், மயிரு, மண்டை எல்லா இடத்துலேயும் மூளை உள்ளவன்.Great Man. 'ஏன் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாமே' என்று அவன் கூட்டாளி கேட்டதுக்கு 'மறு 200 ரூவா செலவாவுறதுக்கா?'ண்டான் அவன். ' ஏன் களவு போனிச்சி? நான் சரியா லாக்கர்லெ வைக்கலே. இனிமேல் சரியா லாக்கர்லெ வச்சிடுவேன்'ண்டான். எவ்வளவு அளஹா சொல்றான் அவன்!' 'எது எது எந்தெந்த காலத்துல எப்படி எப்படி நடக்கனும்டு ஆசைப்பட்டாங்களோ அது அது அந்த அந்த காலத்துலெ அப்படி அப்படி நடக்குறதப் பார்த்து வெறுப்படையிறாங்க' - பெர்னார்ட்ஷா சொன்னது. ஆனால் லைஃபை அளஹாக்குறதுக்கு பெர்னார்ட்ஷா தேவையில்ல'

*

'Becoming & Being' - நாம் தெய்வமாக இருக்கலாம், தெய்வமாக மாற முடியாது'

*

'எந்த அளவுக்கு எதுலெ செலவு பன்றதுண்டு சரியா தெரியனும். சக்திவிலாஸ் பஸ் ஓனர் எவ்வளவு பெரிய பணமுள்ளவன். தூசி மாதிரி பறந்து பொய்ட்டான். கேயார் சரோஜாட்ட போனதுனால தப்பு இல்லே. முழு கவனத்தையும் அவ மேல வச்சதுதான் தப்பு. கடைசில கெடச்சது என்ன அவனுக்கு? ஒரு பொந்தும் ரெண்டு பந்தும்! விந்தை சேமியுங்க , அதுதான் 'ரூஹானியத்' 

*

அக்டோபர்-நவம்பர்'95ல் நான் எடுத்த குறிப்புகள் :

போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்துண்டு நெனைச்சா மயிரைத்தான் புடுங்க முடியும்.

வாழ்க்கை பிரியாணி மசாலா போல (அறிவு, செல்வம், Controlling Force, Understanding etc சேர்த்த மசாலா)

மெழுகுவர்த்தியாக இருக்காதே. TorchLightஆக இரு

சின்ன வெற்றிகளே பெரிய வெற்றியை அடையும் வலிமையைத் தரும் (Similarity)

எண்ணுவதைச் செய், செய்வதை எண்ணு. 

பணத்துக்கு ரோஷம் உண்டு. ரிலாக்ஸ்டாக இருப்பவனிடதான் பணம் வரும். (பணம் வந்ததால் ரிலாக்ஸ்டு Mood என்பது தப்பு)

கோபப்படும்போது கோபப்படுகிறோம் என்று நினைத்தால் சிரிப்பு வரும்.

வெளிக்கிருக்கும்போது எடுக்கும் Decision  சரியாக இருக்கும் (முதுகுத்தண்டு நேராக இருப்பதால்).

காணிக்கைக்கும் அன்பளிப்புக்கும் உள்ள வித்யாஸம் : காணிக்கை : கொடுக்கும் கை தாழும். வாங்கும் கை மேலே இருக்கும். அன்பளிப்பு : வாங்கும் கை தாழும்; கொடுக்கும் கை மேலே இருக்கும். 

அடைவதற்கு முன் இருந்த Personality அடைந்த பின்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் 'Thought Habit' டெவலப் ஆகும். பொருள் மீண்டும் மீண்டும் தேடி வரும்.

ஆண்டவனின் கஜானாவில் பட்டத்துக்கும் RollsRoyce காருக்கும் வித்யாஸமில்லை.

Don't think past Failures. Think Success in the Past.

அவசரம் ஆத்திரம் பொறாமை இந்த மூன்றும் ஹராம்.

***

26.01.1996 வெள்ளி 'செஷன்'

'Secret Symbol'க்கான முன்னோட்டமாக இந்தப்பேச்சு வருகிறது என்று சொல்லி காலையில் ஜெப்பார்நானா கொடுத்த மூன்று கேஸட்களில் முதலாவதை (19.01.95 to 04.02.95) எடுத்துக்கொண்டு உட்காருகிறேன்.

'நாம சுத்தமா இருக்கனும். மத்ததுலாம் தானா துலங்கும். துலங்கிக்கிட்டே வரும்போது துலங்குறனாலத்தான் நாம சுத்தமா இருக்கிறோம் என்று தப்பா நெனைச்சிக்கக் கூடாது. சுத்தம்தான் துலங்க வைக்கிது. அதனால் 'ரியாலத்'ங்குறது உயிர் மாதிரி. 

'சிரமம்ங்குறது நன்மைக்கு First Step.'

''Problem வந்தால் அதே நிமிடத்தில் தீர்ப்பது சிரமம். ஒத்திவைத்து, Focus பண்ணுங்க. ஒத்தி வைக்கிறது, ஒத்திப் போடுறதல்ல. ஒத்தி வச்சா செஞ்சாவனும்'

'லைஃப்ல மல்லாக்கொட்டை மாதிரி இக்கினும். எந்த அளவுக்கு ஆர்ப்பரிச்சி கூத்து போடுவீங்களோ அந்த அளவு Power வீக் ஆகும். வாழ்க்கையைப் பத்தித்தான் 75% நெனைக்கனும், இடையூறுகளை நீக்குறதப் பத்தி 25%தான் நெனைக்கனும்'

'உலகத்துல வர்ற துன்பத்துலெ பெரும்பகுதி எதிர்பாக்குறதுனால வர்றதுதான்.'

'நான் வழிசொல்லித் தர்றேன். இந்த வழியை நீங்க எந்த வழியிலேயும் கண்டுபிடிக்க இயலாது. நான் நெனைக்கிறேன், அல்லாஹூ ஆலம் எப்படியோ, திடீரென்று 'எஜமானுக்கு' அக்கறை வந்து, சியாந்தெருவுக்கு வந்து, 'ஸ்ச்சூ'ண்டு ஓதி ஊதி வுட்டுட்டாஹாண்டா பேச்சு வேற, அப்படி வர்றதுக்கும் வாய்ப்பிருக்குது, வரலாம். நீங்க அதை எதிர்பார்க்கிறதா இருந்தா பாத்துக்கிட்டே இரிங்க. ஆனா 'எஜமானுக்கு' நெறயா வேலை இருக்கு. முதல்லெ, 'எஜமானை' எதிர்பார்க்கிற அளவு உங்களுக்கு பக்குவம் இருக்கா? அதையிலெ பாக்கனும்! கடன் கொடுத்த பக்கிரிசாமியே கனவுலெ வரமாட்டேங்குறான், 'எஜமானா' வருவாஹா? நீங்களா போட்டு உங்கள ஏமாத்திக்கிட்டு அலையிறீங்களே.. ஒண்ணுமில்லே, மௌலுது சபை, ரோஜாப்பூ, கொஞ்சம் பன்னீர் தெளிச்சி வச்சாக்கா ஜனங்க என் காலை நக்கிட்டு அலைஞ்சிக்கிடிருப்பானுவ'

'இந்த அல்லாஹ்வும் ரசூலும் குத்புமார்களும் என்ன சொன்னாங்க? நல்லா வாழச் சொன்னாங்க, நீங்க செய்றதுலாம் அவங்களை வெடைக்கிறதுதான்!'

'கோட்டையைக் கட்டப்போறீங்களா, கோட்டையை யோசனை பண்ண வாணாம். கோட்டையைக் கட்டவுடாம எந்த சின்ன செயல் தடுக்குதுன்னு பாருங்க. successfulஆ வாழுறதுக்கு மிக மிக மிக சிறிய சக்திதான் தேவை. தோல்வியடையத்தான் பெரிய சக்தி தேவை. சிரிக்கிறதுக்கு உள்ள சக்தியைவிட தும்முறதுக்கு, அழுவுறதுக்கு அதிக சக்தி தேவை. மேலே போறவன் செழிப்பா தெரியிறதுக்கு காரணம் மேலே போனதால அல்ல, செழிப்பா இருந்ததுனாலத்தான் மேலே போனான் என்று தெரியனும்'

'எடுத்தா முடிச்சிடனும், இல்லேன்னா எடுக்கக்கூடாது'

'அடையிறதைவிட பாதுகாக்குறதுதான் சிரமம்'

'மருதாணி விசேசம், பாப்பர விளையாட்டு விசேஷம். இதெல்லாம் பொம்பளைங்க விளையாடுவாளுவ. நமக்கும் வெளையாட்டு இக்கிது. But, if.., as if... !'

*

பக்கத்திலுள்ள பள்ளியில் தொழாமல் தூரமாக சென்று தொழுவது சிறப்பு. (Ex. சியாந்தெரு to ஜோலனா பள்ளி) . என்ன காரணம்? சர்க்கார் சொல்கிறார்கள் : 'சுக்கு கண்ட இடத்திலெ புள்ளைய பெக்கக்கூடாதுண்டு அர்த்தம். தொழுகையை நெனைச்சிக்கிட்டு அதுக்காக முயற்சி எடுத்துக்கிட்டு போ, பக்கத்துலேயே முட்டிக்காதே'

*.

'ஆண்டவன் மனுஷனை டெஸ்ட் பண்ண ஒரு வழி கண்டுபுடிச்சான். How to test him-ங்கிறதுக்கு.. காதை ஓபனாவச்சிட்டான். வுளுவத்தான் செய்யிம். நீ controlஆ இரி பாக்கலாம்டு'

'ஒவ்வொரு drawbackம் ஒரு நன்மையை கூடவே வச்சிக்கிட்டிருக்கு. அந்த நன்மை நிச்சயமாக equalஆகவோ greaterஆகவோதான் இக்கிம்' - சர்க்கார் தன் தனிமையைப் பத்தி.

*


'நாக்கூரையே வளைச்சிப் போடுறதுக்குள்ள வழி தெரியும் எனக்கு. ஒரு தாடி, ரெண்டு மாஷா அல்லாஹ், அரைக்கண் மூடுன பார்வை.. போதும்!

'சட்டை மட்டும்தான் நல்லா போட்டுக்குறானுவ.. நல்லா Neatஆ டிரெஸ் பண்ணிக்கிறான். ஷேவ் பண்ணிக்கிறான். ஸ்டேஜ்ல நடக்கிறான், இங்கிலீஸ் வார்த்தையைப் போட்டு பேசிக்கிறான். Actual Lifeலெ பழகும்போது காட்டுமிராண்டிப் பயலுவ. அவனுவள விட மோசம் இவனுவ. மிருகம் தேவலை. ஏன் தெரியலே வெளியிலே? எல்லோரும் மிருகமா இக்கிறானுவல்ல! மாறி நடக்குறவனை பைத்தியம்டு ஒதுக்கி வச்சிடுறானுவ'. (நம் மனிதர்கள் பற்றி)

'What we are today is the result of what we were in the Pastண்டு புரிஞ்சிக்கிறது First Golden Time. இது Practicalityக்கு வரனும். அப்ப, இன்னக்கி நெனைக்கிறது நாளைக்கு நடக்குது, இன்னக்கி நெனைக்கிறதை நாளன்னிக்கு நடத்தி வைக்கலாம் என்று எப்ப Dynamic Belief வருமோ அது  Second Golden Time.. அப்பதான் லைஃப். இதுக்கு பல தியாகங்கள் பண்ணனும்'

'ஒவ்வொருத்தன் கையிலேயும் AK47 வேணும். மத்தவனை சுட அல்ல. நம்மள சுடாம இருக்க. பாரபைத்தியமா ஒத்தவன் இக்கிறானா பைத்தியம் அவண்டு உணர்ந்துக்குங்க. அவன் ஒங்களை அட்டாக் பண்ணாக்கா நீங்க பைத்தியம்டு அர்த்தம், அவனைவிட'. (Self Defence.)

'கெட்டது, நமக்கு மாறுபட்டது, எதிரானது, நம்மள மோதி சிதைக்காத அளவாவது பாத்துக்கனும். இது முக்கியம். Self Defence முக்கியம்.

'Common sense-ஐ  வச்சிப்பாத்தா பலவிஷயம் புரியும். அதெ use பண்ணுறதில்லே. ஏன்? அது துருப்பிடிச்சிரிச்சி, இல்லே, அது இல்லை! இந்தியமூளை ஒசத்திண்டு ஒருத்தன் சொன்னானாம். Use பண்ணலைண்டு அர்த்தம்! '

*

சர்க்கார் , முனீரின் common senseஐ சிலாகிக்கிறார்கள் உயர்வாக இங்கே. Senseஐ விட அவரது பேச்சை. கொத்துப் புராட்டா வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு முட்டை போட்டு, நல்லவிதமாக கைமா போட்டு. முனீர் அதோடு சேர்த்து இரண்டு சிகரெட் பாக்கெட்டும் வாங்கி வருகிறார். 'அப்ப , நூறு ரூவா கொடுத்தா நூறு ரூவாய்க்கும் செலவு பண்ணிப்புடுவீங்களோ?' - சர்க்கார்

'அப்படி இல்லே சர்க்கார், அடுத்து நீங்க என்னா சொல்லுவீங்களோ அதெ வாங்கிட்டு வந்தேன்'

'நான் என்னா சொன்னேனோ அதைச் செய்யனும். ஓஹோ, என்னைய அளக்குறீங்களோ நீங்க?' - சர்க்காருக்கு கோபம்.

'ரொம்ப அளஹா அதுக்கு பதில் சொன்னான் பாருங்க முனீரு....' என்று சொல்லும் சர்க்கார் , முனீர் சொன்னதைச் சொல்கிறார்கள்: ' 'சர்க்கார்.. ஒங்களெ எப்படி சர்க்கார் அளக்க முடியும்? நான் என்னெயெ அளந்துகிட்டேன். அடுத்து நான் என்னா செய்யவேண்டி வரும்டு என்னையெ அளந்துகிட்டேன்'

*

மீராமெய்தீனுக்கும் முனீருக்கும் ஒரு வாக்குவாதம்.

'முனீரு.. அதிகம் பேசாதிங்க.. கற்றது கைமண் அளவு'

'உண்மைதான் மீராமெய்தீன்! நான் கற்றதுலெ உங்களுக்குத் தெரிஞ்சது என் கைமண் அளவு!'

*

'என்மேலே பலபேரு எரிச்சல்படுறான்.. நாம எல்லாருக்கும் சலாம் சொல்றோம், குனியிறோம், சிங்கப்பூருக்கு குண்டாவ தூக்கிட்டுப் போறோம்.. இவன் அலையாம உக்காந்துகிட்டே செஞ்சிடுறாண்டு எரிச்சல்படுறான். இங்கே என்னா பண்ணுறேண்டு தெரியுமா உனக்கு? சேத்தான்பாவா வாஞ்சூருக்குபோனான். தியானம் பண்ணவாம். நான் எண்ணிப்பாக்கலே, ஒரு 250 பருவாச்சும் இக்கிம் மூஞ்சிலே. அங்கே இந்துகிட்டு மனாரடி பொம்பளைய சைட் அடிச்சிக்கிட்டிந்திக்கிறான். உடம்பு எங்கே இக்கிதுங்குறது முக்கியம் அல்ல'

'நஷ்டம்ங்குறது சீக்கு. தோல்விங்குறது சீக்கு. அவமானம். வெட்கக்கேடு. அதனாலெ தலைவலிச்சா 'வலிக்குது'ண்டு சொல்றதுக்கு வெட்கப்படுறமாதிரி படிச்சிக்குங்க'

*

Similarity (ஒரு தோசை சட்னி உதாரணம். சட்னி பிடிக்காதவர்கள் ஆணம் என்று வைத்துக் கொள்க) :

'தோசையை திங்கிறவன் கடைசி தோசையோட சட்டினியும் சரியாக முடிவதுபோல சாப்பிட்டா லைஃப் நார்மலாக இருக்கும். சட்டினியெ முதல் தோசையோடு காலி பண்ணிட்டா லைஃப்லெ ஏங்குவாண்டு அர்த்தம். சட்டினியை மீதி வைக்கிறானா , எல்லா தோசையையும் சாப்பிட்டுப்புட்டு? அவன் வளர்வாண்டு அர்த்தம். இதெ Large Scaleலிலே பாத்தா ஒரு பெரிய பில்டிங் ஆரம்பிச்சி பாதியிலேயே நிப்பான். ஏன்? தோசையெ திண்ட முறைதான் காரணம்!'

'எவன் வாழலையோ - proper execuse இல்லேண்டா - சுட்டுடனும் அவனை. இருந்தால் பத்துபேரை கெடுப்பான் அவன். சமுதாயம் குட்டிச்சுவராகும் - இது தியரி. ப்ராக்டிகலா சரியா வராது. Passport காணோம்டு அலைஞ்சிக்கிட்டு இருக்கும்போதுகூட ஒரு மூட்டைப்பூச்சி ஒரு எலியைப் பார்த்து எப்படி பயப்படுதுண்டு பாக்கனும். இப்படித்தான் வாழனும்' 

'உங்களை உத்துப்பாருங்க. அப்ப தாழ்வு மனப்பான்மை வராது. clarity கிடைக்கும்'

**. 

அந்தக் காலம்... சர்க்காரின் மேல் 'பலாத்தண்ணி'யை (கழிவுநீர்) தவறுதலாக ஊற்றிய பெண்மணியிடம், 'என்னம்மா.. இப்படி செஞ்சிட்டியே.. என்னெட்டெ இக்கிறதே ஒரு சட்டைதானே...இப்ப நான் வெளிலே கிளம்பிக்கிட்டிக்கிறேன். அந்த சைடுலெ ஊத்தியிருக்கலாமே' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே , நடந்த தவறில் அவர்களின் பங்கும் புரிகிறது...தான் வேறொரு பக்கம் போயிருக்கலாமே..!

சர்க்காருக்கு இப்போது நூற்றுக்கணக்கான சட்டைகள், கைக்குட்டைகள்.. ஆனால் , உபயோகிக்கிறார்களா? சட்டையை அவர்கள் உபயோகிப்பது 'புர்தாஷரீஃப்' அன்று, 'பட்டை'க்கு, பிறகு வெளியூர் போகும்போது.. மற்ற சமயங்களில் சட்டை கிடையாது. அவர்கள் ரூமில் அடுக்கி வைத்துள்ள கைக்குட்டைகளைப் பார்த்து அவர்களின் மருமகன், 'மாமா.. மினாரா அளவுக்கு ஒசரமா இக்கிது மாமா' என்றானாம். 'இவருக்கு கைநேஞ்சி ஒண்ணு வேணுமாம், இவர் 'ஹிக்மத்'தை என்னெட்ட காமிக்கிறாரு!' - சர்க்கார். மனதைப் படிப்பது சர்க்காருக்கு மிகவும் சுலபம். ஆனால் இன்று பஸ்ஸில் கூடவந்த நண்பன் பளவூட்டுத்தம்பி (இவனும் சர்க்காரின் சீடன்), சில தகவல்களைச் சொன்னான். மருமகன் தாவுதுகுட்டி அப்படிப்பட்டவரா? அவரை சர்க்கார் படிக்கவில்லையா? ஆனால் மருமகனின் தப்புக்கு மாமா எப்படி பொறுப்பேற்க முடியும்? ஆமாம், எதனால் சர்க்காரின் பழைய சீடர்களில் மிக முக்கியமானவர்களாக இருந்த ஷிட்டகாங்மாலிம், அபுபக்கர் ஆகியோர் இப்போது வருவதேயில்லை?அப்படி அவர்கள் முன்னேறிவிடவும் இல்லைதான். வராமலிருப்பதே முன்னேற்றம் என்று நினைத்துவிட்டார்களா அவர்கள்? யாருக்கு?

(தொடரும்)

http://abedheen.wordpress.com/

குறிப்புகள் :

துஆ பரக்கத் - பிரார்த்தனையின் வலிமை
உலமாக்கள் - ஆலிம்கள் (படித்தவர்கள்)
நியமத் - அருள்
ஹராம் - விலக்கப்பட்டது
அவுலியா - இறைஞானி
இர்ஃபான், மஅரிஃபா - மெய்ஞான நிலைகள்
சாபு - சாஹிப் (சகோதரர்). 'பெரிய எஜமானின்' சந்ததியினரை இப்படி அழைப்பார்கள்
எஜமான், பெரிய எஜமான் - இறைநேசர் ஷாஹூல் ஹமீது பாதுஷா
ஆணம் - குழம்பு
ரூஹானியத் - ஆன்மீக சக்தி
ரியாலத் - பயிற்சி
மௌலுது - புகழ்மாலை
ரசூல் - முகமது நபி (சல்)
குத்புமார்கள் - இறைஞானிகள்
வெடைக்கிறது - கிண்டல் செய்வது
புர்தாஷரீஃப் - பூஷரி இமாம் இயற்றிய பாடல்களை ஓதுதல்
பட்டை - யந்திரம்
கைநேஞ்சி - கைக்குட்டை
ஹிக்மத் - சூழ்ச்சி