Saturday, December 15, 2018

ஆலிஸ் வாக்கரின் The Color Purple - அழகு தமிழில் : ஷஹிதா

ஆலிஸ் வாக்கரின் புகழ்பெற்ற புதினம் The Color Purple - அன்புள்ள ஏவாளுக்கு என்னும் பெயரில் தமிழில் 2019 சென்னை புத்தகக் கண்காட்சியில் எதிர் பதிப்பகம் வெளியிடவுள்ளது. வாழ்த்துகள் ஷஹிதா
------------
 
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

பஷீரின் பாத்துமாவின் ஆடு நாவலில் ஒருகாட்சி, ஊதல் இசைக்கும் பிச்சைக்காரனைப்பார்த்துவிட்டு குழந்தையொன்று வீட்டுக்குள் ஓடி வந்து “பீப்ளி பீச்சண மிஸ்கீன்” வந்திருப்பதாக அறிவிக்கிறது. குழந்தையின் மழலையும் கீச்சுக்குரலும் மலையாளத்தின் கொச்சையும் தேனாய் வழியும் இந்த வாசகத்தை எப்படி மொழிபெயர்ப்பது? ஆலிஸ் வாக்கரின் இந்த நாவலின் மொழியும் அப்படிப்பட்டது தான். எளிமையான இனிமையான மழலைமொழி போன்ற கறுப்பர்களின் இந்த ஆங்கிலத்தை( கறுப்பினத்தவருக்கு மட்டுமே சரியாகப் புரியும்படியான) அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்ப்பது கிட்டத்தட்ட அசாத்தியமாகவே இருந்தது.

அமெரிக்காவுக்கு அடிமைகளாய் இழுத்து வரப்பட்டு ஆங்கிலம் கற்றுத்தரப்படாத/கற்றுக்கொள்ளயியலாத ( வெள்ளைத்தாளோ, எழுதுகோலோ    அவர்கள்  கையிலிருப்பது கடுங்குற்றமாக பார்க்கப்பட்டது) நிலையில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் அவர்களாகவே அவர்களுக்கென சமைத்துக்கொண்ட பாஷை இது. கொச்சையான அந்த மொழியையே அவர்கள் பல தலைமுறைகளாகப்    பேசிவந்திருக்கின்றனர்.

//I DON’T NEVER GIT USED TO IT//

//HE SAY, NAW, CANT SAY I IS//

Flawed English என்றே சொல்லப்படும் இப்படியான குறைபட்ட ஆங்கிலத்தை அச்சொட்டாய் தமிழுக்குப் பெயர்ப்பது உண்மையில் சிக்கலானது. சீலியும் ஷுக்கும் கடவுளைப் பற்றி பேசிக்கொள்ளும் அத்தியாயத்தை மொழிபெயர்த்தபோது தான் என் மொழிப்புலமையின் போதாமையையும் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்ப்பதிலுள்ள உச்சபட்ச சவாலையும் முழுமையாக உணர்ந்தேன்.

பர்பிள் எனும் கருஊதா வண்ணத்துக்கான ஒரு சொல்லும் தமிழில் இன்றுவரையிலும் உருவாக்கப்படவில்லை என்றே அறிகிறேன். கத்திரிப்பூவண்ணம், நாவற்பழநிறம் என்றெல்லாம் தான் நாம் இட்டு நிரப்ப வேண்டியிருக்கிறது. தி கலர் பர்பிள் எனும் தலைப்பை அப்படியே மொழிபெயர்க்க இயலாமல், “கடவுளின் கைப்புண்” “சீலியின் கடிதங்கள்” என்றும் இன்னும் என்னவெல்லாமோ வும் எழுதிப்பார்த்து “அன்புள்ள ஏவாளுக்கு” என்பதில் தொனிக்கும் நாவலில்பயிலும் கடிதத்தன்மையில், கறுப்பினப் பெண்களின் வாழ்கையையும், அவர்களுக்குள் நிலவும் சகோதரத்துவமும் நட்பும் அவர்களின் துயர் துடைத்து நிமிர்ந்து நிற்க உதவுவதில் இருக்கும் உலகளாவிய (universal) தன்மையை ஏவாளின் பெயர் உணர்த்துவதில் நிறைகிறேன்.

உங்களால் முடியும் ஷஹிதா என்று ஊக்கம் கொடுத்து, ஆப்ரிக்கக் கொச்சையை பேச்சுவழக்கில் எழுதவிருந்த எனக்கு, “அது மரபில்லை” என்று சரியான நேரத்தில் அறிவுறுத்தி உதவிய மொழிபெயர்ப்பாளர் திரு.ஆர்.சிவகுமார் அவர்களுக்கும் என்னுடைய நச்சரிப்புகளுக்கு முகம் சுளிக்காமல் நாவல் மொழிபெயர்ப்புப் பயணத்தில் கூடவே இருந்து உதவிய நண்பர்கள் எழுத்தாளர்கள்: தூயன், த.ராஜன், ராகவன் சாம்யெல் ஆகியோருக்கும், மெய்ப்புத்திருத்துவதிலும், மொழிபெயர்ப்புப் பணியின் கடுமையில் நான் சோர்ந்தபோதெல்லாம் மீண்டெழ உதவிய கவிஞர் பரமேசுவரிக்கும் என் நன்றியும் அன்பும்.

தன் தோழியான கறுப்பினப்பெண்மணி ஒருவரிடம், நான் குறுஞ்செய்தியில் அனுப்பும் கேள்விகளைக் கேட்டு, அவருடைய பதில்களையும் உடனுக்குடன் திருப்பியனுப்பி உதவிய( டெக்ஸாஸில் வசிக்கும் ) என் பள்ளித்தோழி சுபாஷிணியின் உதவியில்லாவிட்டால் என்ன செய்திருப்பேன் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாகயிருக்கிறது.

பெரும்பான்மையான நேரங்களில் கணிணித்திரையிலிருந்து கண்ணெடுக்காமலே அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த என்னை இத்தனைக்காலம் பொறுத்துக்கொண்ட கணவருக்கும் குழந்தைகளுக்கும் முத்தம்.

மொழிபெயர்ப்புப் புத்தகங்களை சமர்ப்பணம் செய்வது மரபில்லையென்றாலும் நான் எழுதுவதில் தானே எழுதுவதாக மகிழும் மகன் அர்ஷதுக்கு இந்த புத்தகத்துக்காக மாதக்கணக்கில் நான் உழைத்த மணித்துளிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
                                                         
ஷஹிதா 
டிசம்பர் 10 2018
புதுக்கோட்டை

*
அட்டை வடிவமைப்பு : சந்தோஷ் நாராயணன்
Thanks : Shahida , Asif & Karthigai Pandian


Wednesday, December 12, 2018

Dam Dam Karo Fareed

Dam Dam Karo Fareed - Ustad Nusrat Fateh Ali Khan

**
Thanks : MrSaimbutt

Saturday, November 17, 2018

மாநபி காட்டிய மனித வாழ்க்கை

மர்ஹூம் இஜட். ஜபருல்லாஹ்வின் மீலாது உரையை தளர்ச்சியின்றி தட்டச்சு செய்து அனுப்பிய அண்ணன் ஹமீதுஜாஃபருக்கு நன்றி சொல்லிப் பகிர்கிறேன்.
*

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் என் வார்த்தைகளை ஆரம்பம் செய்கின்றேன். ரம்மியமான சூழலில் மனதை நிம்மதி ஆக்கிவைக்கின்ற ஒரு இடத்தில்,  ஒரு நிறைவான வாழ்க்கையைக் கொண்டுள்ள அந்த வாழ்க்கையை இறைவன்  வார்த்தைகளில் தந்துள்ள ரசூல் (சல்)
அவர்களின் திருப்பொருத்தத்தையும் அல்லாஹ்வின் பேரருள் பெற்றுள்ள மஜ்லிஸாக இருக்கிற இடத்தில் கூடி இருக்கின்ற அன்பிக்கினியோர்களே, தலைமைத் தாங்கி நடத்திக்கொண்டிருக்கின்ற கலிஃபா அவர்களே, முன்னிலையில் அமர்ந்திருக்கின்ற பெரியோர்களே, எனக்கு பின்னால் சிறப்புரை ஆற்ற இருக்கின்ற சகோதரர்களே, எனக்கு முன்னால் பேசி அமர்ந்திருக்கின்ற நண்பர்களே, தாய்மார்களே உங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த சலாத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

நம்ம கலிஃபா அவர்கள் என்னை பேச அழைக்கும்போது ஒரு ஹதீஸ் ஞாபகம் வந்தது. “உங்களோடு எவ்வளவு நெருங்கிப் பழகியவராக இருந்தாலும் ஒரு சபையில் அவர்களை அழைக்கும்போது மரியாதையுடன் விளியுங்கள்,” ரசூலுல்லாஹ் சொல்றாங்க. நீங்களும் அவரும் வாடாப்போடா பேசுறவர்களாக இருக்கலாம், ரொம்ப நெருங்கிய நண்பர்களாக இருக்கலாம் என்றாலும்கூட மஜ்லீசில் ஒரு பேச்சாளர் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு ஜஃபருல்லா வரும்போது என் ஃப்ரண்டு ஜஃபருல்லா பேசுவான், எல்லோரும் கேளுங்கள் அப்டீன்னா ஜஃபருல்லா பெரிய ஆளு மாதிரி ரெண்டுமூனு பேர் நெனச்சிக்கிட்டிருந்தால், அது அவர்களுக்கு கசப்பாயிருக்கும். அதான் ரசூல்(சல்) சொல்றாங்க எவ்வளவு நெருங்கிய ஆளாக இருந்தாலும் அவர்களை ஒரு சபையில் விளிக்கும்போது அவர்களுக்கே உரிய மரியாதையுடன் விளியுங்கள். எதுக்கு சொல்றேன்னா, என் தலைப்பு, “மாநபி காட்டிய மனித வாழ்க்கை” நாலு வார்த்தை இருக்கு, இதுலேஒன்னு மாநபி அடுத்தது காட்டிய அடுத்தது வாழ்க்கை, அது என்ன வாழ்க்கையென்றால் மனித வாழ்க்கை.

ஏன்னா ரசூல்(சல்) அவர்கள் நமக்கு மட்டும் நபியா வரலை ஜின் வர்க்கத்துக்கும் நபியா வந்திருக்காக என்று அல்லா சொல்றான். ஜின் வர்க்கத்தை எப்படி வழிகாட்டினாங்க என்பது நமக்கு தெரியாது; நாம ஜின்னல்ல. அதனாலெ நமக்கு வழிகாட்டிருக்காங்க நாம மனிதர்கள்.அல்லது மனிதர்கள் என்று நம்பப்பட்டு வருகிறவர்கள். இப்படி சொல்றதுதான் சரியா இருக்கும், ஏன்னா ஒரு கவிஞர் சொல்றாரு, “நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் - மனிதர்களாக அல்ல, மனிதர்களைப் போல..” அப்டீன்னு. என்ன காரணம் அப்டீன்னா மனிதப் பண்புகள் என்று பெரிய பெரிய சான்றோர்களாலெ சொல்லப்பட்ட பண்புகளெல்லாம் நம்மடத்தில் இருக்கிதா என்று பார்த்தால் எதோ கொஞ்சங்கொஞ்சம் ஒட்டிக்கிட்டிருக்குதே தவிர நான் ஒரு full fledged man, நான் ஒரு முழுமையான மனிதன் என்று என்னை என்னாலெ சொல்லிக்கொள்ளமுடியாதக் காரணம் எனக்கும் இருட்டான பக்கங்கள் இருக்கின்றன. அந்த இருட்டான பக்கங்களுக்கு அல்லாவிடத்திலே 'தவ்பா' செய்துகொண்டிருக்கிறேன். அந்த இருட்டான பக்கங்கள் என்ன என்பதை நான் உங்களுக்கு தெரியப்படுத்தினால் நீங்கள் என்னை கண்ணியப்படுத்த  முடியாது.ஆனால் அந்த இருட்டான பக்கங்களையும் தெளிவாக அறிந்தவனாக அல்லாஹ் இருக்கிறான்.எந்த அளவுக்கு என்றால், ஒரு நபி – இங்கு பெயர் தேவையில்லை என்று நினைக்கிறேன், அந்த கருத்தை மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள்.ஒரு நபி அவர்களைப் பின்பற்றாத ஒரு சமுதாயத்தைப் பார்த்து, அவர்களை அழித்துவிடுங்கள் என்று அல்லாஹ்விடத்தில் கேட்கும்போது அல்லாஹ் அழிக்கவில்லை.அப்புறம் ஏன் அவர்களை அழிக்கவில்லை என்று அல்லாஹ்விடத்தில் கேட்டபோது, அல்லாஹ் சொல்கிறான் உங்களுடைய அந்த துவா வருவதற்கு முன்னாலேயே அவர்களுடைய 'தவ்பா' வந்துவிட்டது. நீங்கள் துவா கேட்பதற்கு முன்னாலேயே அவர்கள் தாங்கள் செய்த தீமைகளை எல்லாம்  உணர்ந்து 'தவ்பா' செய்துவிட்டார்கள். அதனாலெ உங்கள் கட்டளையை ஏற்றுகொள்ளமுடியவில்லை நபியே, நான் அந்த மக்களின் 'தவ்பா'வை ஏற்றுகொண்டு அவர்களை மன்னித்துவிட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக – அல்லாஹ் எதில் கூறுவானோ அதில் - இருக்கிறது.

நான் எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், மாநபி காட்டிய மனித வாழ்க்கை.நபி என்பதற்கும் மாநபி என்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. நிறைய நபிமார்கள் வந்திருக்கிறார்கள், - அந்த எண்ணிக்கை எல்லாம் எனக்கு தெரியாது. அந்த நபிமார்களெல்லாம் அல்லாஹ்வுடைய வேதத்தைத்தான் கொண்டுவந்திருக்கிறார்கள், அல்லாஹ்வின் செய்தியைதான் கொடுத்திருக்கிறார்கள், மக்களை
பண்படுத்தத்தான் வந்திருக்கிறார்கள் ஆனால் அதிலெ வெற்றி கிடைத்ததா என்றால் இல்லை. ஒரு நபி மகனைப் பார்த்து கப்பலிலே ஏறு என்கிறார், அவன் ஏறமாட்டேன் என்கிறான், அல்லாஹ் சொல்றான் அவன் மவனே இல்லை நீங்க படகை ஓட்டுங்க அப்டீண்டுட்டான். உண்மையா இல்லையா அது? அவர் காட்டிய வாழ்க்கையை அவர் மகனே ஏற்றுகொள்ளவில்லை. இன்னொரு நபி என்ன செய்கிறாரென்றால் அவர் மனைவியே அந்த நபிக்கு எதிராக இருக்கிறார் – அது ஒரு நபி, அந்த நபியுடைய மனைவியே அவருக்கு பின்னால் வரவில்லை.அதாவது நபிமார்களிலேயே நேர்படுத்தி காட்டாதவர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பேசாதீர்கள் என்று இருக்கிறது. ஆனால் நான் தாழ்த்திப் பேசவில்லை, நடந்த சம்பவங்களை - அல்லாஹ் குர்ஆனில் எந்த சம்பவத்தைக் கூறுகிறானோ அந்த சம்பவத்தை - வேறு நோக்கிலே எடுத்துக்கூறுகிறேன்.

இன்னொரு நபி , யாருக்காக மூசா (அலை) அவர்கள் வந்தார்களோ அவர்களுடைய உம்மத்தாக இருந்தவர்களின் வழிவார்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் இன்றைக்கு இந்த உலகத்திலே. ஆனால் அவர்கள் வாழ்க்கையிலே மூஸா(அலை) இல்லை. அதற்கு பிறகு ஈஸா (அலை) வந்தார்கள். தூதராக வந்தவர்களை தேவகுமாரனாக்கி ஈஸா(அலை) அவர்களின் பெயரைச் சொல்லியே குழப்பிவிட்டு வாழ்ந்து கொண்டிருப்பதாக - நான் சொல்லவில்லை, அல்லாஹ் சொல்கிறான். .எனவே யாரும் என்மீது கோபப்படக்கூடாது.

இப்படிப் பார்க்கும்போது நபிமார்கள் நிறைய இருந்தார்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கையின்போதும் சரி வாழ்க்கைக்குப் பின்னாலும் சரி அவர்களுடய வார்த்தைகள் வாழ்க்கையில் பேணப்படவில்லை. இது சரித்திரம், வரலாறு. தூர்சினா மலைக்கு போய்ட்டுவரங்காட்டியும் மாட்டை தூக்கிட்டான், கொஞ்ச நேரம் பேசிட்டு வரங்காட்டியும் அவன் மாட்டை செஞ்சு தூக்கிட்டு கூத்தாட ஆரம்பிச்சுட்டான். ஆனால் நம்முடைய ரசூல்(சல்) அவர்களை நான் உவந்து தேர்ந்தெடுத்துக்கொண்ட நபி என்று அல்லாஹ் பெருமையுடன் சொல்கிறான். அதாவது பாருங்க, எனக்கு நீங்க வந்து கத்துக்கொடுங்க கலிஃபா சார், தம்பி நீங்க உசேனை வந்து பாத்துக்கிட்டு அவர் என்னென்ன சொல்றாரோ அதையெல்லாம் கேட்டு பின்பத்துங்க அப்டீன்னு சொன்னா நான் வேறே அவங்க வேறேதானே. ரெண்டுபேரை போட்டு ஒரே வெர்பை போட்டா என்னங்க அர்த்தம்?எனக்கும் என் ரசூலுக்கும் வழிபடுங்கள். இதன் அர்த்தம் எனக்கு தெரியலே, இதெல்லாம் பெரிய பெரிய ஞானமுள்ளவர்கள்தான் சொல்லமுடியும்.நேரடியாக அர்த்தம் பார்த்தால் என் வார்த்தைக்கும் கட்டுப்படுங்க ரசூல் வார்த்தைக்கும் கட்டுப்படுங்கன்னுதான் அர்த்தம்.ரெண்டுக்கும் டிஃபரன்ஸ் சொல்லலெ. ஏன் டிஃபரன்ஸ் சொல்லைலை அப்டீன்னா நான் ரெண்டு நாளைக்கு முன்னே சொன்னேனே அதான் காரணம். ரசூல்(சல்) அவர்கள் பேசியது வஹியைத் தவிர வேறல்லன்னு அல்லாஹ் சொல்றான்.

பின்னாடி வருவோம்,  அப்பொ நபி என்பதற்கும் மாநபி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று சொன்னால், நபி என்றால் நபித்துவத்தை அவர்கள் பெற்றார்கள், நபித்துவத்துக்காக அவர்கள் உழைத்தார்கள், பாடுபட்டார்கள் ஆனால் பயன் சரியாக இல்ல, அதுதானே வரலாறு. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் நபித்துவத்தைப் பெற்றார்கள், பாடுபட்டார்கள், உழைத்தார்கள் ஆனால் அவர்களுடைய நபித்துவம் பரிபூரணப்படுத்தப்பட்டது. அதற்கு பின்னால் நபி தேவையில்லை என்று அல்லாஹ் தீர்மானித்துவிட்டான்.இல்லையா?எல்லா நபிமார்களுக்குப் பின்னாலும் ஓவ்வொரு நபிமார்கள் வந்துகொண்டிருந்தார்கள்.ஆனால் ரசுலுல்லாஹ்வுக்குப் பிறகு நபிமார்கள் வரவில்லை.ஆனால் யார் வந்தார்கள்?இறைநேசச் செல்வர்கள் வந்தார்கள்.

நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும், ரசூல்(சல்) அவர்களுடைய வாழ்க்கை என்பது பலகூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது, அதில் மனிதர்கள் என்று சொல்லக்கூடியவர்களாகிய நமக்கு அதாவது சாதாரண மனிதர்களுக்குரிய வாழ்க்கையும் அவர்களிடத்தில் இருந்தது. அதை எப்படி பார்க்கிறது?இப்ப மாநபி அப்டீங்கறதை தெளிவா நீங்க தெரிஞ்சிருப்பீங்க இல்லையா?மாநபி! ஒத்துக்குறீங்களா இந்த கருத்தை? நபிமார்களுக்கு மாநபி என்று– பெரிய நபி என்று ரசூலுல்லாஹ்வை சொல்றதுக்கு டிஃப்ரன்ஸை ஒத்துக்கிறீங்களா இல்லையா? ஏன்னா நான் சில சேதியெ பேசும்போது நான் எதோ பெரிய அறிவாளி மாதிரியும் நீங்கள்லாம் ஒன்னுந்தெரியதவங்க மாதிரி நினைக்கிற அளவுக்கு நான் முட்டாளல்ல. அதாவது, கேட்கிற ஆட்கள் இருக்காங்களே ரொம்ப தெளிவானவங்க - பேசுற ஆளைவிட. ஆனால் எதுக்கு இங்கே பேச வந்திருக்கிறேனென்றால் சில கருத்துக்களைச் சொல்லி உங்களுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்குதான்.ஏ ன்னு கேட்டா இஸ்லாத்திலெ மட்டும்தான் அங்கீகாரம் தேவைப்படுது. நீங்க தெளிவா வச்சிருக்கணும்.கலிமா சொல்றீங்களா, நீங்க சொன்னா மட்டும் பத்தாது அது உங்க நடத்தையிலெ பரிணமிக்கணும்.அப்பதான் அல்லஹ்வுடைய அங்கீகாரத்தைப் பெறமுடியும்.தொழுவுறீங்களா, தொழுகை அல்லாஹ்வுடைய அங்கீகாரத்தைப் பெற்றதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாது.ஆனால் அது அங்கீகாரம் பெற்ற தொழுகைதான் என்று நீங்கள் அறிந்துகொள்வதற்கு அல்லாஹ் ஒரு தராசை கொடுத்திருக்கிறான்.எப்படி தொழுதுக்கிட்டே இருக்கிறோம்.அதை அல்லாஹ் ஏத்துக்கிட்டானா இல்லையா என்பதற்கு ஒரு அழகான அங்கீகாரம்.அல்லாஹ் என்ன சொல்றான், “நிச்சயமாக தொழுகை உங்களை கண்ணியவான்களாக மாற்றிவிடும், உங்களை பாவத்தின் பக்கமிருந்து நீக்கிவிடும்” என்று சொல்றான்.நாமெல்லாம் பலவீனப்பட்டவர்கள். பெரும் பாவங்களைச் செய்யவில்லை என்றாலும் சிறு பாவங்களைச் செய்தவர்கள் செய்துகொண்டிருப்பவர்கள், இன்ஷா அல்லா எதிர்காலத்திலெ செய்யாமல் அல்லாஹ் ஆக்கிவச்சான்னா - நாம இந்த யுகத்துலெ ஆவுறமாதிரி நம்பிக்கை எனக்கில்லை - அல்லாஹ் ஆக்கிவச்சா நடக்கும். அப்படி அந்த பாவத்திலிருந்து நீக்கிவிடுமென்றால் தொழும்போதே தொழுதுவந்த பிறகு ஒரு மாசம் ரெண்டு மாதம் ஒருவருசம் ரெண்டு வருசம் ஆனதற்குப் பிறகு எந்த பாவத்தையாவது நீக்கியிருக்கிறோமா இல்லையா என்பது நமக்குத்தான் தெரியும். ஏன்னா நாம என்ன பாவம் செஞ்சோம்னு நமக்குத்தானே தெரியும்? அப்படி நீங்கியிருக்கிறதென்றால் நீங்கள் தொழுத தொழுகையை அல்லாஹ் அங்கீகரித்திருக்கிறான் என்று பொருள்.இல்லை தொழுதுகொண்டிருக்கிறோம் அந்த தொழுகையுடன் பாவமும்
வளர்ந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் தொழுகொண்டிருப்பதும் பொய்.அல்லாஹ் அதை அங்கீகரிக்கவில்லை என்றுதான் பொருள்.ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான் அதற்கு பயன்பாடு கொடுக்கிறான்.அதைப் போலத்தான் ஒவ்வொன்றுக்கும்.எல்லாவற்றிற்கும் அங்கீகரிப்பு உண்டு. அதை வெளிப்படையாகக் கேட்கக்கூடிய ஃபர்ளு ஹஜ்ஜு, இறைவா! என்னுடைய ஹஜ்ஜை அங்கீகரித்தருள்வாயாக என்று கேட்கிறோம். அங்கீகரிப்பு அதாவது ஆங்கிலத்தில் சொல்கிறான் Registration is one but the Recognition is different அப்டீம்பான். பதிவு செய்துக்கொள்வது என்பது ஒன்று, நான் பெரிய தலைவர்னு பதிவு செஞ்சிக்கலாம், அது லட்டர்பேடு தலைவர்.நான் ஒரு பெரிய பேச்சாளர்னு நானே சொல்லிக்கலாம், அது நானா சொல்லிக்கிறது.ஆனால் நீங்கள் என்னை பேச்சாளர் என்று ஏற்றுகொண்டால்தான் நீங்கள் என்னை பேச்சாளர் என்று சொல்லமுடியும்.எனவே உங்களுடைய அங்கீகரிப்பு வேண்டும், நான் சொல்கிற கருத்துக்கு உங்களுடைய அங்கீகரிப்பைப் பெற்றதாக இருக்கவேண்டும்.அப்படி இல்லை என்றால் அது பேச்சு அல்ல. அப்படி பார்க்கப்போகும்போது நபி, நம்முடைய நபி ரசூல்(சல்) அவர்கள் மாநபியாக வாழ்ந்தார்கள், வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள், வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள்.


அடுத்தது, 'மாநபி காட்டிய',

ஒரு பெரிய சீர்திருத்தவாதி, இந்த உலகத்தில் தோன்றிய பெரிய சீர்திருத்தவாதிகளிலெல்லாம் முதலாவதாக உள்ளவர் ரசூல்(சல்)தான், நபிகள் நாயகம்தான், முஹம்மதுதான் என்று ஒரு பெரிய சீர்திருத்தவாதிகளின்  பட்டியலைப் போட்டு The Hundred னு ஒரு புஸ்தகத்தை எழுதியிருக்காங்க. 100 பேரு, அதுலே முதன்முதலில் ரசூலுல்லாஹ்வின் பெயரைப் போட்டு ரசூலுல்லாஹ்வை பத்தி
எழுதியிருக்காங்க, பெருமையா இருக்கு நமக்கு.அது தமிழ்லெகூட வந்திருக்கு.அதை தமிழ்லெ எழுதிய ஆசிரியர் என்னோட பேசிக்கிட்டிருந்தாங்க; நானும் பேசிக்கிட்டிருந்தேன். என் புக்கை படிச்சிங்களான்னு கேட்டாங்க படிச்சேன் நல்ல ட்ரான்ஸ்லேஷன் அப்டீன்னேன் என்ன அப்படி சொல்றீங்க அப்டீன்னாங்க. இந்த புத்தகத்தைப் பத்தி ஒரு பெரிய புத்தகம்ங்கிற எண்ணம் ஒன்னும் கிடையாது அப்டீன்னேன். என்ன சொல்றீங்க ரசூலுல்லாஹ்வை மொதல்லெ போட்டிருக்கான் பாத்திங்களா அதுலெ.ரசூலுல்லாஹ் என்பது ஒரு incomparable personality, அவர்களுக்கு இணையாக யாரையுமே சொல்லமுடியாது.அதை நூத்துலெ ஒன்னாப்போட்டு மொதல்லெ போட்டா சரியாபோய்டுமா?அதெப்படி நா ஏத்துக்கமுடியும்?மொதல்லெ ரசூலுல்லாவை வச்சிட்டதனாலெ ரசூலுல்லாஹ்வுக்கு என்ன சிறப்பு?அப்பொ அல்லாஹ் ஏன் இறுதியா வச்சான்?அல்லாஹ் இறுதியாக வைத்தது சிறப்பா அல்லது அந்த எழுத்தாளர் முதல்லெ தூக்கி வச்சிருக்கானே அது சிறப்பா?என்ன சார்?இறுதியா வச்சதுதான்.வச்சது மட்டுமல்லாமல் நபித்துவத்துக்கே ஃபுல்ஸ்டாப் ஆக்கிட்டான்.அடுத்து நபி தேவை இல்லை.வேணான்னு சொன்னா என்னங்க அர்த்தம்?ஒரு நபி வேணாம் அப்டீன்னு அல்லாஹ் சொல்லிட்டா என்ன அர்த்தம்?இனி நபிக்கு தேவையில்லைன்னுதானே அர்த்தம்.அப்பொ பரிபூரணப்பட்டது எது?குர்ஆன் மட்டுமல்ல அதோடு சேர்ந்து நபித்துவமும். நபித்துவத்துக்கான வேறு வேலை இல்லைன்னுட்டான், அதனாலெதான் வேறு நபி வந்து சொல்லவேண்டியதில்லை. நபிகள் நாயகம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம், நம்பிக்கொண்டிருக்கிறோம், அந்த நம்பிக்கையில் இன்பம் காண்கிறோம், அந்த நம்பிக்கைய அனுபவிக்கிறோம். அனுபவிக்க 'நசீபு' இல்லாதவர்கள் வேறுஎதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம், வார்த்தைகளால் சொல்லலாம் அதெல்லாம் நமக்கு தேவை இல்லாத ஒன்று அது அவர்கள் கருத்து.ஏன்னா சிந்தனைவாதிகள் நிறைய இருக்கிறார்கள்.கடவுள் இல்லை என்று சொல்பவர்கள்கூட சிந்தனைவாதிகள்தான் நம்பிக்கையாளர்களே என்று அல்லாஹ் சொல்கிறான் நம்மைப்பார்த்து.கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நம்பிக்கையாளர்களல்லவா?என்னங்க நம்பிக்கையாளரா இல்லையா?கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்கிறார்கள் அவர்கள் நம்பிக்கையாளர்களா இல்லையா என்றால் அவர்களும் நம்பிக்கையாளர்கள்தான்.அவர்கள் நெகட்டிவா இருக்கிற நம்பிக்கையாளர்கள், நாம் பாஸிட்டிவா இருக்கிற நம்பிக்கையாளர்கள்.இந்த நம்பிக்கை வாழ்க்கையை நடத்திவைக்கிறது அந்த நம்பிக்கை அவர்கள் வாழ்க்கையை தடுத்துவைத்திருக்கிறது.

எதுக்காக அல்லா இருக்கிறானா இல்லைண்டு சொன்னாலும் ஒரே ஒரு விஷயத்துக்கு அல்லா இருக்கிறான் என்று நம்பணும்னு சொல்லிட்டு இந்த கடவுள் இல்லை என்று பேசுகிற மேடையில்

மீலாதைப் பேசினேன், சீர்காழியில் ஏறக்குறைய பதினாறு வருடங்களுக்கு முன்னால். கடவுள் இல்லை என்பதில் நம்பிக்கைக் கொண்ட பெரிய ஆள், அந்த கொள்கையை கொண்டுவந்தவருடைய பிரதம சீடர், “நாங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?கடவுளை மற மனிதனை நினை, நாங்கள் நபிகள் நாயகத்தை ஏன் புகழ்கிறோம் தெரியுமா? அல்லாவை அவன் இவன் என்று சொல்லுகிறார்கள் ரசூலுல்லாவை சொல்லும்போது அவர்கள் இவர்கள் என்று சொல்லுகிறார்கள், எனவே இசுலாம் மனிதனை மதிக்கிற மார்க்கம் அதனாலே இசுலாத்தை விரும்புகிறோம் என்ற ஒரு காரணத்தைக் காட்டினார். நான் சொன்னேன், அடுத்து நானும் பேசவிருக்கிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு போங்களேன் என்றேன், இல்லை உடனே புறப்படுகிறேன் என்றார். ஆனால் அல்லா பாருங்க ஒரு தொண்டனை வைத்து, காலையில் என் கல்யாணம் இருக்கிறது அதுக்கு நீங்க இல்லையென்றால் உங்க கார் முன்னாலெ விழுந்து உயிரை விட்டுவிடுவேன் என்று மாப்பிள்ளை சொல்கிறான். இருந்தாகவேண்டிய ஒரு கட்டாயத்தை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.மேடையில் வந்து அமருகிறார். நான் சொன்னேன், அன்பிற்குரிய ஐயா அவர்களே!, நீங்கள் மனிதனை நினை கடவுளை மற என்று சொன்னீர்களே எங்களிடத்திலே அந்த பலவீனம் இல்லை. காரணம் கடவுளை மறந்தால்தான் மனிதனை நினைக்கமுடியும் என்ற பலவீனம் எங்களிடத்தில் கிடையாது.நாங்கள் கடவுளையும் நினைப்போம், அந்த கடவுள் படைத்த மனிதனையும் நினைப்போம், அந்த சக்தி எங்களிடத்திலே இருக்கிறது.நீங்கள் கடவுளை மறந்தால்தான் மனிதனை நினைக்கமுடியுமா?ஒரு சரியான வார்த்தையில் கேட்டால் பெற்றுக்கொடுத்த உங்கள் மனைவியை மறந்தால்தான் நீங்கள்உங்கள் பிள்ளையை நினைக்கமுடியுமா?நாங்கள் படைத்தவனை மறந்துவிட்டு படைப்பைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல. நாங்கள் படைத்தவனையும் நினைக்கிறோம்.அதை எப்படி நினைக்கச் சொல்கிறான் எங்கள் அல்லாஹ் தெரியுமா?நீ என்னை டைரக்டாக ஒன்னும் சிந்தனைப் பண்ணாதே குழப்பவாதியாகி விடுவாய், என்னுடைய படைப்பினங்களைப் பார்த்து என்னை அறிந்துகொள் என்கிறான். எனவே படைப்பினங்களைப் பார்த்துதான் படைத்தவனை அறிகிறோம், அந்த அறிவு எங்களுக்கு வேறு ஒரு இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறது நாங்களாக எங்கள் மூளையிலிருந்து வரவழைக்கக்கூடிய அறிவு அல்ல என்று சொன்னேன்.அதுக்கு கதை ஒன்னு சொன்னேன், பெரிய விஞ்ஞானி ஆனால் நல்ல கடவுள் பக்தர். அவர் என்ன பண்றார் அப்டீன்னா அந்த விஞ்ஞான சம்பந்தமா பார்த்திக்கிட்டிருக்காரு, அவருக்கு ஒரு நண்பர் அவர் நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்பவர், ‘என்னப்பா இவ்வளவு பெரிய உலகம் படைச்சிருக்கான் இறைவன் நீ அதைப்போய் இல்லேன்னு சொல்றியே அது எப்படிப்பா?’

‘அது தானா உண்டானுச்சுப்பா’

‘வானம்?’

‘அது தானா உண்டானுச்சு’

‘சரி ஆறு மலையெல்லாம் இருக்குதேப்பா யாரும் உண்டாக்கமுடியுமா?

‘தானா உண்டானுச்சுப்பா, இயற்கை, நேச்சர்’ அப்டீங்கிறார்.

ஆறேழு நாள் சொல்லிப்பார்த்தார் ஒன்னுமில்லை.அடுத்து நாலைஞ்சு நாள் கழிச்சு வந்தார்.யாரு எல்லாம் தானா உண்டானுச்சுன்னு சொன்னவர்.மேலே ஒரு டேபிள் லாம்ப் இருந்துச்சு அப்போ, என்னப்பா நேத்து முந்தாநாள்லாம் வந்தேன் அந்த டேபிள் லாம்ப் இல்லை, இதை எங்கே வாங்குனே எவ்வளவு விலை அப்டீன்னாரு.

‘அடெ, நா எங்கே வாங்குனெ, உன்னை மாதிரிதான் நான் வெளியூர் போய்ட்டு வந்தேன் பார்க்கிறேன் தானா உண்டாயிருக்கு.’

‘என்னப்பா கேலிபண்றியா நீ, டேபிள் லாம்ப் தானா உண்டானுச்சா?யாருக்கு காது குத்துறே நீ.’

என்னப்பா நீ இந்த உலகமே தானா உண்டானுச்சுன்னு நம்புறே, ஒரு டேபிள் லாம்ப் உண்டானுச்சுன்னா நம்பமாட்டேங்கிறியே, நம்பிக்கையிலே இவ்வளவு சின்னதா இருக்கு அப்டீன்னாரு.

எதற்கு சொல்கிறேன் என்றால், நம்பிக்கை என்பது இந்த பக்கமும் உண்டு அந்த பக்கமும் உண்டு.ஆனால் எந்த பக்கமுள்ளது மனிதருக்கு வழிகாட்டுகிறது. அந்த நம்பிக்கைத்தான் ரசூல்(சல்) அவர்கள் நமக்கு திணித்த நம்பிக்கை.

நான் மறுபடியும் தலைப்புக்கு வருகிறேன், மாநபி காட்டிய வாழ்வு.அது என்ன காட்டிய வாழ்வு?என்னவென்றால் வாழ்ந்து காட்டிய வாழ்வு. இந்த நாட்டில் வந்தவர்களெல்லாம் நிறைய அறிவாளிகள் வந்திருக்கிறார்கள், நிறைய அறிஞர்கள் வந்திருக்கிறார்கள், சீர்திருத்தவாதிகள் வந்திருக்கிறார்கள், நிறைய இஸங்களைப் பேசுபவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் அறிவாளிப் பட்டியலில் இருக்கிறார்கள், ஆனால் அவர்களெல்லாம் சொன்னதாகத்தான் இருக்கிறதே ஒழிய வாழ்ந்ததாக இல்லை.

சொல்லுக சொல்லின் பயனுடைய அஃதிலார்
சொல்லலின் சொல்லாமை நன்று

என்று வள்ளுவர் சொன்னார்.அவர் சொல்கிறார், “சினமென்னு சேர்ந்தாரைக் கொல்லின்…” என்று சொல்றார்.சினம் யாரைச் சேருதோ அவரைக் கொல்லும் அப்டீங்கிறார்.ஆனால் அவருடைய வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சம்பவம் இருக்கிறது. தன்னுடைய மனைவியை வாசுகீ…….. என்று கூப்பிட்டவுடனே தண்ணி இறைச்சிக்கிட்டிருந்த மனைவி கயித்தை விட்டுட்டு அப்படியே விர்ர்ர்றுன்னு வந்துட்டாங்களாம், அந்த கயிறு அப்படியே நின்னுச்சாம். அது  நின்னுச்சா இல்லை கிணத்துலெ விழுந்துச்சாங்கிறதல்ல பிரச்சினை. எவ்வளவு பயம் இருந்தா வள்ளுவரோட கோபத்துக்கு தண்ணியை எடுத்துக்கூட வைக்காம ஓடிவரணும்.புரியுதா உங்களுக்கு?எவ்வளவு பயம் அந்த கணவர் மேலே இருந்தா…… வரலேன்னா அடிச்சு கொன்னுடுவாரு போல இருக்கு.இல்லேன்னா தண்ணியெகூட எடுத்து வைக்காமெ ஏங்க திடீருன்னு ஓடிவரணும்?அச்சம் இருக்கு இல்லையா?அப்பொ அச்சம் எதிலிருந்து வரும்?இவர் சினம் கொள்வார் அந்த அளவுக்கு.“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லின்…” என்கிற வார்த்தைக்கு பின்னாடி இவ்வளவு சினம் இருந்துச்சுன்னா என்னாகும்? எனவே சொல்லியிருக்கிறார்கள் நிறைய ஆனால் வாழ்ந்துகாட்டியதில்லை.ரசூலுல்லாஹ்வுடைய வாழ்க்கை என்பது அவர்கள் வாழ்ந்துகாட்டியதைப் பற்றி சொல்லிக்கொண்டே போவதில் பிரச்சினையே கிடையாது.அவர்கள் வாழ்ந்துதான் காட்டவேண்டும்.வாழ்ந்து காட்டவேண்டியதின் முன்மாதிரி அவர்களிடத்திலே இருந்தது.காரணம் அவர்களை மனிதர்களுக்கெல்லாம். முன்மாதிரி ஆக்கிவிட்டான் அல்லாஹ்.எதை ஆக்கினானோ அதை வைத்துத் தான் அல்லாஹ் அனுப்புவான்.அதை மாற்றி அனுப்பமாட்டான். பெற்றோர்களைக் காட்டிலும் ரசூலுல்லாஹ் மேலே அன்பை வைக்கணும்னு அல்லாஹ் சொல்லிட்டான்னா, அ இருக்கா இல்லையா நம்மள்ட்ட?, நம்மளை ஏசுனா பொருத்துக்கிறோமே  நிலை தவறி போதை வஸ்துக்கள் உண்ணுபவர்கள் கிட்டே ரசூலுல்லாஹ்வைப் பற்றி தவறாக

சொல்லிப்பாருங்கள். அவர்கள் தாய் தந்தையரைப் பற்றி சொல்லிப்பாருங்கள் எப்போது கோபம் வருகிறதென்று.என்ன காரணம்?எதை நம்மிடத்திலிருந்து வெளிப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறானோ அதற்குள்ள வித்தை அங்கே வைத்துவிடுவான் அதிலே நீங்கள் நம்பிக்கைக் கொள்ளுங்கள்.

அப்பொ ரசூல்(சல்) அவர்கள் யார்? நம் தாய் தந்தையர்களைவிட மிகவும் உயர்ந்தவர்கள். அந்த ரசூல்(சல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் ஆனால் அவர்கள் வாழ்ந்து காட்டியது என்பது அவர்களுடைய நபித்துவத்தின் ஒரு பாகமாக ஆகிவிட்டது. வாழ்ந்துகாட்டியேதான் ஆகவேண்டும்.ஏனென்றால் முன்னால் வந்தவர்களுக்கெல்லாம் வாழ்ந்து காட்டமுடியாத ஒரு சூழலை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்தான். இன்னும் சொல்லப்போனால்கூட ரசூல்(சல்) அவர்களுக்கு இந்தப்புகழை ஆக்கவேண்டும் என்பதற்காகக்கூட அல்லாஹ் அந்த நாடகத்தை நடத்தியிருக்கமுடியும்.அப்படித்தான் இருக்கமுடியும். ஏனென்றால் உவந்து தேர்ந்தெடுத்துக்கொண்ட நபி.ஆனால் ரசூலுல்லாஹ் வாழ்ந்த வாழ்க்கை அவர்களுக்கு பின்னால் எந்தமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை நீங்கள் பார்க்கவேண்டும்.அதுதான் வாழ்ந்து காட்டிய வாழ்க்கைக்கான ரிவார்டு, இந்த சமுதாயத்துக்கு கிடைத்தப் பரிசு.ரசூலுல்லாஹ் வாழ்ந்து காட்டியதைப் பற்றி ஒருவாரமல்ல ஒரு மாசமல்ல ஒரு வருடமல்ல உங்கள் ஆயுள்முழுவதும் பேசிக்கொண்டிருக்கலாம்.அவர்கள் வாழ்ந்து காட்டியதிலே வாழ்ந்ததிலே என்ன அதிசியம் இருக்கிறது, அவர்கள் நபி.நமக்கு, நம்முடைய வர்க்கத்துக்கு முன்மாதிரியாக வந்தவர்கள்.ஆனால் அந்த வாழ்க்கை நம்மைப் போல சாதாரண மனிதனாகவே இல்லாத அவாம்கள் என்று சொல்வார்களே, பீஸ்ட் என்று சொல்வார்களே.. மிருகங்களைப் போல; தயவு செய்து மன்னிக்கவேண்டும். நான் மிருகங்கள் என்று சொல்வது மிருகங்களைக் கேவளப்படுத்துவதற்காக அல்ல. அப்படி பார்த்தால் அந்த வாழ்க்கையின் பரிணாமங்களெல்லாம் பின்னால் வந்த மக்களிடத்தில் பரிணமித்து இருக்கிறதென்றால் அதுவல்லவா வெற்றி. இப்ப நம்ம எப்படி இருக்கிறோம்?

வாழ்க்கை இப்ப நபி காட்டிய வந்தாச்சு, மாநபி காட்டிய, சொன்ன அல்ல காட்டிய வாழ்க்கை.இப்படித்தான் வாழவேண்டும்.இப்படி நீங்கள் வாழுங்கள் என்று அவர்கள் மாத்திரம் சொல்லவில்லை அல்லாஹ் அதை அங்கீகரித்து முன்மாதிரியை ரசூலிடத்திலே தேடிக்கொள்ளுங்கள் என்று சொல்றான்.இதிலேகூட அல்லாவுடைய கருணை எவ்வளவு இருக்கு என்று பாருங்கள்.இப்ப என்னை எடுத்துக்கிட்டிங்கன்னா அரபு சுத்தமா தெரியாது.அலிஃ பே எத்தனை எழுத்து இருக்குன்னு சுத்தமா தெரியாது.இது ஹக்கு, அலிஃ பே வரிசையாக சொல்லுங்கன்னு யாராவது கேட்டிங்கனா சத்தியமா தெரியாதுன்னு சொல்லிடுவேன். அப்படிப்பட்ட  சாதாரண ஒரு அவாம்தானே நம்ம. மத்தவங்களை உட்டுடுங்க நீங்கள்லாம் ஆலிம்களாக இருக்கலாம், நான் அவாமு, எனக்குப்போயி முன்மாதிரியெ யார்ட்டெங்க வச்சிருக்கான் அல்லா? என்ன கவிதை கிவிதை எழுதிக்கிட்டிருக்கேன், எனக்குப் போயி முன்மாதிரியெ ரசூலுல்லாவுட்டெ வச்சிருக்கான்னா என்மேலே எவ்வளவு பெரிய கருணை அல்லா வச்சிருக்காங்க. நான் பின்பற்றுறேனா இல்லையா என்கிறது பின்னாலெ இருக்கட்டும் உன் முன்மாதிரியை ரசூலிடத்திலே தேடிக்கொள்ளுங்கள் அப்டீன்னா ஒரு சாதாரண, சராசரி மனிதனை, கோபங்களுக்கு ஆட்பட்டவனை, செல்வங்களுக்காக வார்த்தை மாறுபவனை, பணத்தை வைத்து பித்தலாட்டம் செய்பவனை, பங்காளித் துரோகம் செய்பவனை இவையெல்லாம் மனிதனுடைய கூறுபாடுகள். சார் சொன்னாங்களே “பேங்கிலெ டெப்பாசிட் செய்துவைக்கிற மாதிரி” என்று.டெப்பாசிட் செய்தால் எடுக்கமுடியாது.ரசூலுல்லாஹ்வின் வார்த்தைகளையும் ரசூலுல்லாஹ்வின் வாழ்க்கையையும் டெப்பாஸிட் செய்யக்கூடாது செலவழித்துக்கொண்டே இருக்கவேண்டு.வாழ்க்கையில் செலவழிக்கவேண்டும்.அப்பதான் நீங்க உரிமை கொண்டாடுறீங்கன்னு அர்த்தம்.ஜோப்புலெ இருக்கிற காசு நீங்க செலவழிக்கலேன்னா என் காசுன்னு சொன்னா என்ன உங்க காசுன்னு சொன்னா என்ன?நீங்களும் செலவு பண்றதில்லெ நானும் செலவு பண்ணமுடியாது யார் காசுன்னு சொன்ன என்ன?அப்பொ செலவு பண்ணவேண்டும்.ரசூலுல்லாவுடைய வாழ்க்கையிலே முன்மாதிரி இருக்குன்னு என்னைப் பார்த்து சொல்றான் அல்லாஹ்.அப்பொ அது அல்லாஹ்வுடைய அங்கீகரிக்கப்பைப் பெற்ற வாழ்க்கையாகிவிட்டது.அந்த அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை காட்டிய வாழ்க்கை.

அடுத்தது வாழ்க்கைக்கு வருவோம்.மாநபி காட்டிய வாழ்க்கை.வாழ்க்கைன்னா என்ன?வாழ்க்கைன்னா வாழ்வது அந்த வாழ்க்கைக்கு Definition என்ன?இப்பொ எல்லோரும்
வாழ்ந்துக்கிட்டிருக்கோம். வாழ்க்கை என்ற வார்த்தைக்கு விளக்கம் என்ன?அது இஸ்லாமான விளக்கமா மத்த விளக்கமான்னு பின்னாடி பார்ப்போம்.வாழ்க்கை என்கிறதுக்கு விளக்கம் என்ன?ஒருத்தர் சொல்றார், “Life is what we make it” நாம எதை தயார்பண்ணிக்கிறோமோ அதுதான் வாழ்க்கை என்கிறார்.அவர் ஒரு பெரிய அறிஞர்.இதை ஒத்துக்கமுடியுமா?ஒரு முஸ்லிம் ஒத்துக்கமுடியுமா?நம்ம என்ன ஏற்படுத்திக்கிறோமோ அதுதான் வாழ்க்கைங்கிறதை ஒத்துக்க முடியுமா?முடியாது.ஏன்னா நமக்கு என்ன வாழ்க்கைன்னு நிர்ணயிக்கப்பட்டிருக்கு, இப்படித்தான் வாழவேண்டுமென்று ஒரு பாட்டை போடப்பட்டிருக்கு, அது ராஜபாட்டை.அந்த பாட்டையிலே இவர்களைத்தான் பின்பற்றவேண்டும் இந்த முன்மாதியைத்தான் கொண்டுசெல்ல வேண்டுமென்று அல்லாஹ் வலியுறுத்தியிருக்கிறான். எனவே Life is what we make it என்பது நமக்கு ஆகாது, எனவே அது வாழ்க்கை அல்ல. இன்னொரு வாழ்க்கை என்ன இருக்கிறதென்றால் Life, it matters not how long we live, but how அப்டீன்னு ஒருத்தன் சொன்னான். இது ஒரு அளவுக்கு பொருந்துது.வாழ்க்கை என்பது எத்தனை நாள் நாம் வாழ்கிறோம் என்பதல்ல எப்படி வாழ்கிறோன் என்பது.அப்பொ வாழ்க்கைக்கு ஒரு தலம் கொடுக்கிறான் இந்த அறிஞன். அப்படி பார்த்தால் நினைத்துப் பார்க்கக்கூடிய வாழ்க்கையாக, ஏன்னா வாழுகிற நாம் வாழுகிற நாட்களிலேயே சிலபேர்கள் மறக்கப்படுகிறார்கள், இறந்தபின்னாலும் சிலபேர்கள் நினைக்கப்படுகிறார்கள். இப்பொ என் மகனிடம்போய் உன் பாட்டனார் பேர் என்னன்னு கேட்டால் ஜெக்கரியான்னு சொல்லிடுவான், ஏன்னா சொல்லிகொடுத்து வச்சிருக்கேன்.ஜெக்கரியாட பாட்டனார் பேர் என்னன்னு கேட்டா?தெரியுமா அவனுக்கு தெரியாது.ஜெக்கரியாட பாட்டனார்ட பாட்டனார் பேர் கேட்டா தெரியுமா?நிச்சயமா தெரியாது.ஆனால் இந்த மனிதனுடைய பெயர்கள் அவனுடைய நடத்தைகள் அவனுடைய முன்னோர்களெல்லாம் மறக்கப்பட்டுகொண்டு வருகிறது.அனால் நன்றாக சிந்தித்துப்பாருங்கள், இந்த நாட்டிலே சீதக்காதின்னு சொன்னா யாருக்காவது மறந்திடுமா?சீதக்காதின்னா எல்லாருக்கும் தெரியுதுல்ல, எப்படி தெரிஞ்சிச்சு?எல்லாம் சொல்றாங்க கொடைவள்ளல் அப்டீங்கிறாங்க. கொடை வள்ளால் அப்டீன்னா கொடைக் கொடுத்தவர்களெல்லாம் கொடைவள்ளலாக ஆகமுடியாது.கொடை என்கிற வார்த்தை…. இதிலேகூட ரசூலுல்லாஹ்வுடைய மகத்துவம் இருக்கிறது பாருங்கள். கொடை வள்ளல் என்று சொல்கிறோமே கொடையாக கொடை கொடை என்று சொல்பவர்களெல்லாம் எதை கொடுத்தார்கள் என்றால் பணத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள், வரலாற்றில் அதைதான் பார்க்கிரார்கள் வேறு எது இருக்கா? கொடை வள்ளல்னா யாருங்க?பணம் கொடுக்கிறது. ஆனால் பணமே இல்லாத ரசுலுல்லாவுக்கு வள்ளல் பெருமான் என்ற பெயர் இருக்கின்றது..எப்படி?பணமே அவர்களிடம் கிடையாது, வள்ளல் பெருமான் என்ற பெயர் அவர்களுக்கு எப்படி வந்தது?ஆக அவர்கள் கொடுத்திருக்கிறார்கள், எதை கொடுத்திருக்கிறார்கள்?வாழ்க்கையையே கொடுத்திருக்கிறார்கள்.

சீதக்காதியைப் பற்றி சொல்லும்போது கொடையிலெ ஒரு சிறப்பான..அதாவது இது ஹதீஸை அடிப்படையாக வைத்தது. அல்லாஹ்கூட சொல்றான் நீங்க யாருக்காவுக்கு உதவி செஞ்சிங்கன்னு சொன்னா அந்த கொடையை எடுத்து சொல்லி பகிரங்கமாக்கி அவர்களை துன்புறுத்தாதீர்கள்னு ஆயத்து இருக்கு.. நான் அன்னைக்குதான் சொன்னேன் நூறு ரூபா கடன் வாங்கினாலே துன்புறுத்துறான்.கடன் வாங்குனா, பாருங்க நேத்துதான் வாங்கிட்டுப் போனான் அவன் பாட்லெ போறான், சலாம்கூட சொல்லாமெ போறான். வட்டிகூட வாணாம்ங்கிறான்.ஆனால் சலாம் மட்டும் சொல்லுங்க என்கிறான்.ஆனால் சீதக்காதி கொடை கொடுத்ததைப் பற்றி எழுதுகிறார்கள், நம்ம ஆளல்ல சார், சீதக்காதி ஒரு முஸ்லிம்.அந்த கொடை சிறப்பைப் பற்றி எழுதியது முஸ்லிம் அல்ல இது.ஒரு பிராமணர் எழுதுகிறார்.

அவர் எப்படி கொடை கொடுத்தாராம், ராமநாதபுறம் பஞ்சத்தாலெ பீடிக்கப் பட்டிருந்தது.சீதக்காதி என்ன பண்ணுவாங்களாம், காலையிலே சுபுஹு தொழுததோட அல்லது சுபுஹுக்கு முன்னாடி வைகறை நேரத்துலெ காட்டு உள்ளக்கப் போவாங்களாம்.அங்கு ஆமணக்குச் செடிகளெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா?அப்படியே கையை விரிச்சிக்கிட்டு அல்லாட்டெ கேட்கிறமாதிரி அந்த இலை இருக்கும்.அதிலெ ஒவ்வொரு பொற்காசுகளை, வெள்ளிக்காசுகளை வைத்துவிட்டு சீதக்காதி வந்துடுவாங்களாம்.அங்கே சுல்லிகளைப் பொறுக்கி அதை விற்று ஜீவனத்தை நடத்துவதற்காக தாய்மார்கள் பெண்கள் போவார்கள், அப்பொழுது தலையிலெ தட்டி அந்த காசுகள் கீழே விழும்.அதை எடுத்துக்கொண்டு அவர்கள் வருவார்கள்., சீதக்காதியும் போவார். ஆனால் தான் வைத்த காசை இவர்கள்தான் எடுத்தார்கள் என்று சீதக்காதிக்குத் தெரியாது, தான் எடுத்தக் காசை வைத்தவர் அவர்தான் என்று இவர்களுக்குத் தெரியாது, ஆனால் கொடைக்குள்ள பயன்பாடு, தர்மத்துக்குள்ள பயன்பாடு அங்கே solve ஆயிடுது. எந்த பஞ்சத்தைத் தீர்க்க வேண்டுமென்று காசை வைத்தாரோ அந்த காசு பஞ்சத்தைத் தீர்க்கப்போகிறது, ஆனால் இவர்தான் கொடுத்தார் என்பது அவருக்கு தெரியாத காரணத்தினால் அவர்களுக்கு தாழ்வு மனப்பாண்மை வராது, அவர்தான் எடுத்தார் என்பதினாலே அவரை பார்க்கும்பொழுது இவருக்கு வருகிற உயர்வு மனப்பாண்மை, நாம கொடுத்துதான் சாப்பிடப்போறான் என்ற சுப்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இவருக்கு வராது. இதுதான் தர்மம்.எத்தனையோ பேர் தர்மம் பண்ணியிருக்காங்க, சீதக்காதிக்கு பிறகு வேறு யாருமே தர்மம் பண்ணலையா இந்த தமிழ்நாட்டிலே?யாருமே
கொடை கொடுக்கலையா?ஆனால் சீதக்காதி என்று சொல்லும்போது வரக்கூடிய ஒரு கொடைத்தன்மை மற்றவர்கள் பேரை சொல்லும்போது உண்மையிலே வருகிறதா?ஏன் வரவில்லை என்றால் அந்தக் கொடையை அல்லாஹ் பொருத்திக்கொண்டான்.காரணம் அந்த கொடை அல்லாஹ் சொன்ன வழியிலே கொடுக்கப்பட்டதால்தான்.இவர் கொடுத்தது அவர்களுக்கு தெரியாது அவர்கள் எடுத்தது இவருக்கு தெரியாது. அல்லாஹ் நமக்கு கொடை கொடுத்தான்.என்ன கொடை அது?அகிலத்துக்கெல்லாம் அருட்கொடையாக அன்றி ரசூலுல்லாஹ்வை அனுப்பலை.

திருநெல்வேலிலே ரஹ்மத்புரம், முன்னாடி மீனாச்சிபுரமாக இருந்தது இன்றைக்கு ரஹ்மத்புரமாக ஆனிச்சு, அங்கே ஓராண்டு கழித்துதான் மாநாடு போட்டார்கள்.அங்கே நானும் பேசினேன், பணத்தால்தான் மாறினார்கள், பணத்தால்தான் மாற்றிவிட்டார்கள் என்றெல்லாம் பேசினார்கள். நான் சொன்னேன், பணத்தால் மாற்றக்கூடிய அளவு அல்ல, ஒரு மனிதனை மாற்றக்கூடிய சக்தியே மனுசனுக்கு அது இஸ்லாத்துலெ வந்து முஸ்லிம் ஆனவனுக்கு அல்லாவை நம்புனவனுக்கு அல்லா கொடுக்கலெ, ஏன்னா எந்த நன்மையும் என்னுடைய அருளில்லாமல் நீ செய்யமுடியாதுன்னு அல்லாஹ் சொல்றான். குர்ஆன் ஆயத்து.மாத்துறதெல்லாம் நம்மாலெ முடியாது.இப்பக்கூட கட்டாய மத மாற்ற சட்டம்னு போட்டுருக்காங்க. இஸ்லாத்தில் வற்புறுத்தல் இல்லைன்னு நம்ம அல்லா சொல்றான்.நம்ம புள்ளையையே கட்டாயமா மாத்தமுடியலே வெளியே போய் எங்கே நாம மாத்துறது?அவனா மாறுனாதான்.இப்பொ நம்ம வாப்பா இருக்கும்போது நம்ம மாறுனோமா?

நா அப்பொ ஆறாவது படிச்சிக்கிட்டிருக்கேன், மௌலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாக்கவி எங்க ஹஜரத்து, அஹல்டெ போய் எல்லாரும் சொல்ற மாதிரி இவரை கொஞ்சம் தர்பியத்து பண்ணுங்கன்னு சொன்னா பரவாயில்லை. எங்க வாப்பா எப்படி கொண்டுபோய் சேர்த்தாங்க தெரியுமா,? ஹஜரத், இந்த கையெ புடிங்க அப்டீன்னாங்க, ஏன் நாநா அப்டீன்னு ஹஜரத்து கேட்டாங்க, எம் மவன்…. தெரியுமே ஜஃபருல்லாவை தெரியுமே, அவரு நல்லபுள்ளையாச்சே’ ‘நல்ல புள்ளையா?மொதல்லெ இவன் கையெ புடிங்க’ கையை புடிச்சாங்க உடனே சொன்னாக ‘இவனை கொஞ்சம் இஸ்லாத்துலெ ஆக்கி அனுப்புங்க’ அப்டீன்னாக. ம்ம்ம்….... இது நடப்பு, உண்மையானது. “இஸ்லாத்துலெ ஆக்கி அனுப்புங்க…. உடனே ஹஜரத்துட்டெ சேந்தாச்சு. ஹஜரத்துட்டெ சேந்தவுடனேயே மொதல்லெ நான் கேட்ட கேள்வி.ஹஜரத்தை சாபு நானான்னும் கூப்பிடுவாங்க.

ஏன் சாபு நானா, குர்ஆன்லெ இடைச்சொருகல் எதாவது இருக்கான்னு கேட்டேன் சேர்ந்த அடுத்த நாள்.

‘சரிதான் ஜெக்கரியா சொன்னது சரியாதான் இருக்கு போலயிருக்கு, குர்ஆன்லெ ஏதுப்பா இடைச்சொருகல் அல்லா சொன்னதுலெ ஒரு ஜேரு ஜெபருக்கூட அதுலெ மாத்தம் கெடையாதே நீ என்ன குர்ஆன்லெபோய் இடைச்சொருகல்னு கேட்கிறே.’

‘அப்ப எல்லாம் அல்லா சொன்னதுதானே’?’

‘ஒரு வார்த்தைக்கூட இல்லாமெ எல்லாம் அல்லா சொன்னதுதான்.’

‘அப்ப அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பிக்கிறேன்னு சொல்றீங்களே அதையும் அல்லா சொல்லிருந்தான்னா அந்த அல்லாக்கு அல்லா யாரு, அவன் எந்த அல்லா பெயரால் ஆரம்பிக்கிறான்?னு கேட்டேன். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் பெயரால் ஆரம்பிக்கிறேன்கிறது அல்லா  சொன்னதுதான்னா இப்பொ நம்ம ஆரம்பிக்கிறது இந்த ஆயத்தை சொன்ன அல்லா பேராலெ ஆரம்பிக்கறதா அல்லா ஒரு ஆள் பேராலெ ஆரம்பிக்கிறானே அல்லாக்கு அல்லா பில் அல்லா பேராலெ ஆரம்பிக்கிறதா?' அப்டீன்னு கேட்டேன். எல்லார்ட்டையும் கேட்டப்பொ 'வலா ஹவ்ல வலா கூவ்வத்த'ன்னுதான் சொன்னாஹ. 'நல்ல கேள்விப்பா இது, சரி குர்ஆன்லெ எத்தினை அத்தியாயம் இருக்குன்னு உனக்கு தெரியுமா?' அப்டீன்னாங்க. நான் சொன்னேன் '114 அத்தியாயம் இருக்கு'. அப்பொ சொன்னாங்க 'ஒரு அத்தியாயத்துக்கு 'பிஸ்மி' கிடையாது அப்பொ எத்தனை பிஸ்மி இருக்கணும்?' 'ஒன்னு கொறச்சலா இருக்கணும்'. 'இல்லைப்பா அதேமாதிரி கூடவே இருக்கு!' ‘அது எங்கே இருக்கு? ’அதைதான் நீ கண்டுபிடிக்கணும், அறிவு தானாவா வரும்?குர்ஆனை தமிழ்லெ எடுத்து ஓது, ஆனால் எனக்கு உறுதிமொழி தரணும், நீ ஃபுல்லா ஒதிக்கிட்டே வந்தா அஞ்சாவுதுலேயோ பத்தாவதுலேயோ நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சுடும்.ஆனால் அதோட மூடிடக்கூடாது, முழுசா நீ படிச்சுப்பாரு குர்ஆனை' அப்டீன்னாங்க.

முதன் முதலில் நான் 9th standard படிக்கும்போதுதான் முழு தர்ஜுமாவையும் படிச்சுப்பார்த்தேன் இந்த கேள்விக்காகத்தான்.அப்புறம் விடை கிடைச்சுடுச்சு.அதற்கப்புறம் இதுவரை குர்ஆனை படிக்காமல்
இருக்கவே முடியவில்லை. ஏன்னா, அல்லா வந்து நாம புரிஞ்சிக்கிட்டு வாழ்றதற்காக மட்டுமல்ல ஓதுறதிலும் ஒருபடி, ஏன்னா ஓதுறது சிலபேர் எதுக்குன்னு கேட்கிறாங்க. ஓதுகிறது என்பது இருக்கிறதே ஒரு வார்த்தையைத் திரும்பத்திரும்ப சொல்கிறபோது அந்த வார்த்தைக்கு சக்தி திரள்கிறது என்று டெப்த் சைக்கலஜியில் சொல்கிறான், அந்த சக்தி நம் மேலே பரிபூரணமாகப் படருகிறது என்று சொல்கிறான். ஒருத்தர் கேட்டார் ஓதிப்பாத்து சிலபேர் சொல்றாங்களே அதுலெ என்ன பவரு இருக்கிது? எதாச்சும் பவர் வரமுடியுமான்னு கேட்டாங்க. நா சொன்னேன் இருக்கலாங்க ஏன்னு கேட்டால் இப்ப நீங்க உட்கார்ந்திருக்கீங்க, திடீரென்று உங்களுக்கு அறிவு இருக்கா? மனுசானாயா நீ?அறிவுகெட்டத்தனமா கேள்வியெல்லாம் கேட்கிறியே?உனக்கு எவன் ஞானவான்னு பட்டத்தை கொடுத்தார்?அப்டீன்னு கேட்டால் அவருக்கு கோபம் வரும். கோபம் வந்தவுடன் என்னங்க நீங்க மரியாதையா பேசுங்க ஜஃபருல்லா, இதெல்லாம் நல்லாஇல்லே நீங்க நாகரீகமா பேசுற ஆளு இப்படியெல்லாம் பேசாதீங்க…. சரிதான் நிறுத்தையா உன்னை தெரியும், கேள்வி கேட்க வந்துட்டான் அப்டீன்னவுடன், அதெல்லாம் நல்லா இருக்காதுன்னு அடிக்கிற நிலைக்கு வந்துடுவார். அப்பொ அவர்ட்டெ கேட்டேன், ஏங்க இப்ப பேசினது என்ன ரஹ்மத்தான வார்த்தையா?அறிவு இருக்கா?உனக்கு எவண்டா பட்டம் கொடுத்தான்?நீ எப்படி மனுசனா வாழ்றே?இதெல்லாம் ரஹ்மத்தான பேச்சா?ஷைத்தான்டெ பேச்சுதானே? ஷைத்தான்டெ நெகட்டிவான பேச்சே உங்க ரத்தத்தை சூடுபண்ணி என்னை அடிக்கக்கூடிய அளவுக்கு ஒரு இயக்கத்தை ஏ’ற்படுத்தும் அப்டீன்னா அல்லாவுடைய ரஹ்மத்தான சொல் ஏற்படுத்தாதா? நீ அடிக்க வந்தே அது என்னான்னா கெட்ட வார்த்தையினால் வரக்கூடிய கெட்ட விளைவு, நல்ல வார்த்தையை திரும்பத் திரும்பச் சொன்னால் நல்ல விளைவுகள் ஏற்படும்.இது வேறு ஒன்றுமில்லை அவங்கதான் ஓதனும் இவங்கதான் ஓதனும் என்றல்ல எல்லோரும் ஓதலாம், எல்லாவற்றையும் ஓதலாம்.ஆனால் ஓதுவதற்கு மட்டும் அல்லாஹ் குர்ஆனை அனுப்பவில்லை, குர்ஆனை தெரிந்துக்கொண்டு வாழ்வதற்காகவும் அனுப்பியிருக்கிறான்.அப்படிங்கிறதை நாம் முதலில் உணரவேண்டும்.

இப்பொ மாநபி காட்டிய மனிதவாழ்க்கை என்று சொல்லும்போது மனிதன் இன்றைக்கு இருக்கிறானா அப்டீன்னு பார்த்தா….. நீங்களே சொல்லுங்க நா ஒரு சேதி சொல்றேன் அதை வச்சு மனிதனாக நாம் இருக்கிறோமா என்பதை நீங்க சொல்லணும். எப்படி… எல்லாருமே ஒரு வார்த்தை சொல்றாங்க, எல்லாரும் சொல்ற வார்த்தை இந்த பாருங்க நான் ஒன்னு பெரிய ஆளு இல்லைங்க, நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்னு எல்லோரும் சொல்றாங்களா இல்லையா? இது நல்ல பண்புதானே.ஆனால் ஒரு மாடு இருக்குன்னு வச்சுக்குவோம், அதுக்கு புல்லைப் போட்டா கொம்பு இருந்தாகூட கிட்டவந்து வாலைஆட்டும், அப்படியே அன்போடு வந்து உரசும்.ஒரு நாய் அதுக்கு பிஸ்கட்டைப் போட்டுட்டு வந்தீங்கன்னா குரைக்கிறதை விட்டுட்டு கிட்டவந்து வாலை ஆட்டும்.அது என்ன செய்யுது?நல்லதுக்கு நல்லது செய்யுது.நாயை கல்லெடுத்து அடிங்க, என்ன செய்யும்?கொலைச்சிக்கிட்டு பாயும்.மாட்டை விளாரெடுத்துக்கிட்டு அடிச்சிங்கன்னா முட்டவரும் கொம்பாலெ.அப்பொ கெட்டது செய்யும்போது என்ன செய்யுது கெட்டது செய்யுது.நல்லதுக்கு நல்லது செய்வதும் கெட்டதுக்கு கெட்டது செய்வதும் மனுசனா மிருகமா?அப்பொ நம்ம சொல்றோமே நம்ம யாரு?நம்மல்டேந்து அது கத்துக்கிடுச்சா அல்லது அதுட்டேந்து நம்ம கத்துக்கிட்டோமா? 'மாட்டுக்குப் புல்லைக் காட்டினால் கிட்டவரும் அன்றி அடித்தாலே முட்டவரும்.ஆறறிவு படைத்த மனிதன் சொல்கிறான் “நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன்” என்று!.இது ஆறறிவுள்ள மனிதனின் குணமா ஐந்தறிவு உள்ள மிருகத்தின் குணமா?அப்பொ மனிதர்கள்னா என்ன, ரசூலுல்லாஹ் சொல்றாங்க, இரண்டு விசயம் சொல்றாங்க, நீங்க உதவு செய்யாமல் இருந்தாலும் உபத்திரவம் செய்யாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களாலெ ஒரு கெடுதி வந்திடக்கூடாது.ஆக மனிதனாக
இருப்பதற்குள்ள அடிப்படையானத் தகுதி. அடுத்தது என்ன, இதை வள்ளுவர்கூட சொல்கிறார்.“இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு” அப்டீங்கிறார்.கெட்டது செய்தவனுக்கு நல்லதை செய்யலைன்னா மனிதப் பண்பு எங்கேயா இருக்கு?கெட்டது செய்தவனுக்கும் நல்லது செய்யணும் அதுக்கு பேர்தான் மனிதப் பண்பு.இதை பார்த்தவுடன் எனக்கு ஒரு யோசனை
வந்துச்சு கவிதை எழுதினேன்.

“நன்மைக்கு நன்மை, தீமைக்குத் தீமை – இது மிருக குணம்
தீமைக்குத் தீமை, நன்மைக்குத் தீமை – இது பேய்க் குணம்
நன்மைக்கு நன்மை, தீமைக்கும் நன்மை - -இது மனித குணம்
நல்லவேளை மனிதர்கள் பேய்களாக வாழவில்லை
மிருகங்களாகத்தான் வாழுகிறார்கள்.”

நல்லதுக்கு நல்லது, கெட்டதுக்குக் கெட்டது – அப்படிப்பட்ட மனிதர்களுடைய அறியாமை எனும் இருண்ட காலத்தில்தானே ரசூல்(சல்) அவர்கள் வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த அந்த வாழ்க்கை அவர்கள் வாழ்ந்ததல்ல, அந்த வாழ்க்கை மற்ற மக்களை எப்படி மாற்றி அந்த சாயலைக் கொண்டுவந்தது.ரசூலுல்லாவுடைய வாழ்க்கை எப்படி கொண்டுவந்தது, அல்லாவுடைய அங்கீகரித்த வாழ்க்கை எப்படி கொண்டுவந்தது அந்த மாற்றத்தைப் பார்ப்போம்.

உமர்(ரலி) மொதல்லெ ரசூலுல்லாவை கொல்ல வந்தாங்க, ஒரு வாள். அதே வாள் எப்படி மாறுனுச்சுன்னா, ரசூலுல்லாஹ் இறந்துபோனாங்கன்னு யாராவது சொன்னாங்கன்னா அவங்களை கொன்னுடுவேன்னு மாறுனுச்சு.இல்லையா?ஒரே வாள்தான், இது கலிமாவுக்கு முன்பு, கலிமாவுக்குப் பின்பு.கலிமாவுக்கு முன்பு வந்த வாள் ரசூலுல்லாவை கொல்ல வந்த வாள்.கலிமாவை ஏற்றுக்கொண்டபின்பு வந்த வாள் ரசூலுல்லா இறந்துவிட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களை வெட்டிவிடுவேன் என்று சொன்ன வாள். நான் எதுக்கு சொல்கிறேனென்றால் இரண்டு இடத்திலேயும் உமர்(ரலி) அவர்களுக்கு சினம்தான் வெளிப்பட்டது. ரசூலுல்லாவை கொல்லவந்த பொழுதும் உமரிடத்திலே இருந்தது எது? சினம். ரசூலுல்லாஹ் இறந்துவிட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களை கொன்றுவிடுவேன் என்று சொன்னபோது அவர்களிடத்திலே இருந்தது என்ன?அதுவும் சினம்தான் ஆனால் இது முஹப்பத்தின் அடிப்படையிலே இருந்த சினம், அது பகையின் அடிப்படையிலே இருந்த சினம்.அதே உமர் கலிஃபாவாக இருக்கிறார், சினம்கொண்ட உமர்.அவரிடம் சினம் போகாத நிலைதான், சினம் இருந்துகொண்டிருந்தது, நன்மைக்காக இருந்தது, நன்மைக்காக சினம் கொண்டார்.அல்லாஹ் நன்மைக்காக சினம் கொள்ளவில்லையா?ரசூலுல்லாஹ்வுக்கு சொல்லும்பொழுது என்ன சொன்னான்.நன்மாராயம் கூறுங்கள், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் என்று சொல்லவில்லையா?அச்சமூட்டுவது என்பது என்ன பயம்காட்டுவது அல்லவா?பயம் என்பது சினத்தினுடைய மற்றொரு பாகம்.கோபக்காரர்களை பார்த்து நாம் பயப்படுகிறோமா இல்லையா?அப்பொ சினமும் கோபமும் அக்காள் தங்கச்சி மாதிரி.அப்படி இருக்கும்பொழுது, கலிஃபாவாக உமர் இருக்கிறார்.எந்த மாற்றத்தை ரசூலுல்லாஹ்வுடைய வாழ்க்கை ஏற்படுத்துகின்றது என்று பாருங்கள். கலிஃபாவாக இருக்கும்போது ஜும்ஆ தொழுகைக்கு உமர் அவர்கள் மிம்பரில் ஏறி பிரசங்கம் செய்வதற்காக போகும்பொழுது, ஒரு சாதாரண குடிமகன் உமரை பிடித்து இழுக்குறார்.‘உமரே சற்று நில்லுங்கள், யா அமீருல் முஃமினீன் தாங்கள் தயவு செய்து நில்லுங்கள்’ எப்படிங்க இருக்கும்?மேடையிலே ஏறப்போற வட்ட செயலாளரை இழுத்தாலே அடுத்தாப்போல ஆட்டோ படையை அனுப்பிச்சுடுவான் இப்பொ. மேடையிலெ பேசறதுக்கு ஏறப்போற ஒரு வட்டச்செயலாளரை தெரியாமெ இழுத்துப்பாருங்க ராத்திரி 12 மணிக்கெல்லாம் ஆட்டோ வந்துடும் ஒரு ஏழெட்டு ஆயுதங்களோட, இது இன்னைக்கு நடப்பு. ஒரு ஜனாதிபதியை மிம்பர்லெ ஏறி குத்பா பிரசங்கம் செய்யப்போகிறார் அவரை பிடித்து இழுக்கிறான்.ஏன்?

‘இந்த ஜிப்பா போட்டிருக்கிறீர்களே அது எதில் தைத்தது?’

‘போரில் கிடைத்த துணியை எடுத்து தைத்தது.”

‘எங்களுக்கு கிடைத்த துணி ஜிப்பா தைக்கும் அளவுக்கு இல்லையே, உங்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய துணி எப்படி கிடைத்தது? இரண்டு பங்கு எடுத்துக்கொண்டீர்களா?’ அப்படி எங்களுக்கு மட்டும் ஒரு பங்கு கொடுத்துவிட்டு நீங்க இரண்டு பங்கு எடுத்திருந்தீர்களென்றால்  நீங்கள் மிம்பரில் ஏற தகுதி கிடையாது.’ யார் சொல்றார்?சாதாரண குடிமகன். உமருக்கு கோபம் எப்படி வந்திருக்கணும்?.சினம் வராமலில்லை கலிஃபாவாக இருக்கும்போது சினம் வந்தது.மகனாரைக் கூப்பிட்டு சொல்லுங்க அப்டீங்கிறாங்க.  ‘நானும் போருக்கு வந்திருந்தேன் எனக்கும் ஒரு பாகம் துண்டு கிடைச்சது. கலிஃபாவுடைய ஜிப்பா போடுற நிலையிலெ இல்லை, என்னுடைய துணியையும் தந்தைக்கு அன்பளிப்பா கொடுத்து ரெண்டையும் சேர்த்துதான் ஒரு ஜிப்பாவா தச்சு போட்டிருக்காங்க.’

‘அப்படியா?அப்ப நீங்க உரை நிகழ்த்தலாம். உங்களுக்கு தகுதி இருக்கு..’ யார் சொல்றார்? அந்த குடிமகன்.

ஜனாதிபதியைப் பார்த்து இப்படி கேட்கக்கூடிய உரிமையும் தகுதியும் அந்த குடிமகனுக்கு வந்ததென்றால் அவன் அல்லாவைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாத என்பதினால்தான் வந்திருக்கமுடியும். அதை பொருந்திக்கொள்கிற எளிமை உமருக்கு வந்ததென்றால் ரசூலுல்லாஹ் காட்டி வைத்த மாற்றமல்லவா.அந்த வாழ்க்கைதான் இந்த நாட்டிலே நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் உமர்(ரலி) மிம்பரில் ஏறியவுடன் கேட்ட பிரார்த்தனை, யா அல்லாஹ், இன்றைக்கு ஒரு அருமையான சம்பவத்தை எனக்கு காட்டினாய், நான் உன்னுடைய அச்சத்தை நெஞ்சிலேயே வைத்திருக்கிறேன், நான் வழிதவற மாட்டேன், ரசூல்(சல்) அவர்கள் காட்டிய அன்பும் ஆதரவும் அவர்களுடைய அருகாமையும் அவர்களுடைய வாழ்க்கையும் என்னுடனே இருந்துகொண்டிருக்கிறது. ஆகவே அது என்னை வழிதவற வைக்காது என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒரு வேளை நான் கொஞ்சமாவது வழிதவறினால்கூட அதை திருத்துவதற்கு தைரியமுள்ள உன் பக்கம் இருக்கிற நாட்டு மகனை எனக்கு கொடுத்திருக்கிறாயே, ஒரு பொதுமக்களிலே தைரியமுள்ள உன்னுடைய சக்தியை எடுத்து சொல்கிற அளவுக்கு என்னை திருத்துகிற அளவுக்கு ஒரு குடிமகனை கொடுத்திருக்கிறாயே அதற்காக உனக்கு நன்றி செலுத்துகிறேன். இறைவா நீ எவ்வளவு பெரிய கருணைக்காரன், நான் வழிதவறிப் போகக்கூடாதென்பதற்கு எப்படிஎப்படியெல்லம் ஏற்பாடு செய்திருக்கிறாய் என்று கேட்டார்கள்.அந்த சினம்கொண்ட உமரை இப்படி துஆ கேட்கவைத்தது யார் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை.

அதே உமர் சினம் கொள்கிறார் எப்போது? ஆதமின் மக்கள் சோதரர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது, அபசிகளைவிட குரைஷிகள் உயர்ந்தவர்களல்ல. குரைஷிகளைவிட அபசிகள் தாழ்ந்தவர்களல்ல என்று கொண்டுவந்த ரசூல்(சல்) அவர்கள் கொண்டு வந்த ஈகுவாலிட்டி என்று சொல்லுவார்களே சமதர்மம் மனிதர்கள் யாவரும் ஒன்றுதான் என்று சொல்வார்களே அந்த தர்மம் கொஞ்சம் ஆட்டம் கண்டபோது சினம் கொண்டார்கள்.

ரசூல்(சல்) அவர்கள் வாழ்ந்து காட்டி கொண்டுவந்த மார்க்கத்தின் பின்னாலே இங்கே தீண்டாமை அல்ல, ஜாதி அல்ல, வேற்றுமை அல்ல எல்லாமே அழிந்துவிட்டது என்று நினைத்துகொண்டிருந்தேன், அதனுடைய தூசி, துரும்பு, எதாவது யாருடைய சட்டையிலாவது அந்த திமிர்  ஒட்டிக்கொண்டிருந்தால் அதை களைவதற்கு என்னுடைய சவுக்கை நான் எடுக்கவேண்டுமென்றால் அதை எடுப்பதற்கும் நான் தயார் என்று சொன்னார்கள்.அங்கே சினம் வந்ததா இல்லையா?வந்தது. சினம் கொள்ள வேண்டிய நேரத்திலே சினம்.சினத்தை கொல்லவேண்டிய நேரத்திலே சினம் கொல்லுதல், இந்த பண்பாடு எப்படி வந்தது? ரசூல்(சல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையினாலே. தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

உங்களுக்கெல்லாம் தெரியும் 'குளோரியஸ் குரான்' என்ற முதன் முதலிலே வந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வெற்றி பெற்ற குரான் மர்மடியுக் பிக்தால் என்பவர், மர்மடியுக் என்பது அவருடைய ஃபாதருடைய பெயர். ஃபாதர்னா அவர் பிஷப்பாக இருந்தபோது, அவர் எப்படி அந்த குர்ஆனை எழுதினார் என்பதை அவர் முன்னுரையிலே எழுதுகிறார், மிக அழகான ஒரு சம்பவம். அவர் எதற்கு அனுப்பினார் என்றால் அல்லாஹ் சொல்கிறான், “இந்த குர்ஆன் பொய்யானது என்று நிரூபிப்பதாக இருந்தால் இதிலே வருவதுபோல ஒரே ஒரு வசனத்தை யாராவது மனித சக்தியை வைத்து நீங்கள் எழுதிக் காண்பியுங்கள்.” இன்றைக்கு சொல்கிறார்கள் The standing challenge என்று சொல்கிறார்களே என்றும் நின்றுகொண்டிருக்கிற சவால் அல்லாஹ்வுடைய சவால் அன்னலெம் பெருமானார்(சல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நிரூபிக்கப்படவில்லை. அந்த காலத்தில் இருக்கின்ற சிலைகளை எல்லாம் வருணித்து கவிதைகள் எழுதி அந்த கவிதைகளை கஃபாவுக்கு முன்னாலே தொங்கவிட்டு அதிலே சிறந்த கவிதைகளை எடுத்து பரிசு கொடுத்துக் கொண்டிருந்த காலத்திலே ஒரு ஆயத்தை “இன்னா அஃதைனா கல் கவ்தர் என்ற ஆயத் அதை  எடுத்துக்கொண்டுபோய் ஒருத்தர் மாட்டிவிட்டார். அந்த ஊரிலே ஒருத்தர் இருந்தார் அவருடைய பெயர் எனக்கு தெரியாது மறந்துவிட்டேன். அவர்ட்டெ கொண்டுபோயி எந்த கவிதையெ கொடுத்தாலும் அதுலெ ஒரு குறை கண்டுபிடிச்சுடுவார் கரெக்டா, எந்த மாதிரியான கவிதையெ கொடுத்தாலும் சரிதான் அடுத்த நாளு இந்த வார்த்தை இந்த இலக்கணத்துலெ கொஞ்சம் தவறா இருக்கு இதுக்கு வேறொரு பொருள் வரும் அப்டீண்டுவார்.

அந்த வாரம் என்னான்னா யார் எழுதுனதுன்னு சொன்னவுடன், கொண்டு வந்து மாட்டுனவர் நான்தான் கொண்டுவந்து மாட்டினேன் எழுதுனது யாருன்னு சொல்லலை, அதை கொறை சொல்ற ஆள்ட்டெ கொடுக்குறார். இவர் நாளைக்கு வாங்க சொல்றேன்கிறார்.. அடுத்த நாள் போறார், ஒன்னும் குறை சொல்லலே, என்னங்க கொறை சொல்ல… ம் நாளைக்கு வாங்க… அடுத்த நாள் வாராரு இவரால் ஒன்னும் கொறை சொல்லமுடியலே, அப்ப அவர் சொன்னாராம் இந்தாப்பா மனுசனாலெ எழுதப்பட்ட எந்த கவிதையானாலும் கொண்டுவா நான் கொறை கண்டுபிடிச்சுடுறேன், இது மனுசன் எழுதுனதுமாதிரி தெரியலெ வேறு எதோ ஒரு சக்திக்கிட்டேந்து வந்திருக்கு அப்டீன்னாராம்.

அதற்கு இணையாக ஒரு வசனம் எழுதவேண்டும் என்பதற்காக இந்த மர்மடியூக்கை எகிப்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கிறார்கள்.அவர் எதுக்கு போறார்னா அரபி கத்துக்கிட்டு அந்த அரபியிலெ குர்ஆனை படிச்சு அதுக்கு இணையாக அல்லாஹ்வுடைய சேலன்ஜை மீட் பண்றதுக்காக அவர் போறார்.படிக்கிறதுக்குப் போற இண்டென்ஷனை அல்லாவுடைய குர்ஆனிலே அல்லா சொல்ற சவாலை எதிர்கொள்வதற்காக நல்லா கவனிக்கணும். அப்பொ ஹாஸ்டல்லெ தங்கியிருக்கிறார், மாடியிலேந்து கீழே பார்க்கிறார், கீழே ஒரு சம்பவம் நடந்துக்கிட்டிருக்கு, ஒரு பெரிய ஆளு, பயில்வான் மாதிரி இருக்கிற ஆளு அவன் கழுத்துலெ ஒருத்தன் என்ன பண்ணுறான் ஒரு சின்ன துண்டெ போட்டு இழுத்து கண்ணாபின்னான்னு ஏசிக்கிட்டிருக்கான், இவருக்கு ஆச்சரியமா இருக்கு, ஃபூன்னு ஊதுனாலெ அவன் விழுந்துடுவான், அவன் பாட்லெ பேச்சை கேட்டுக்கிட்டே நிக்கிறான் என்னமோ ஏசுறது கேட்குது, கீழே இறங்கிப்போய் பார்த்தா அது இன்னும் தொடருது, அப்பொ கேட்கிறாரு நீ ஏன் பேசாம நிக்கிறே அவன் உன் கழுத்துலெ துண்டை போட்டுக்கிட்டு ஏசுறான் நீ பேசாம எதிர்வார்த்தை சொல்லாமெ இருக்கிறியே, நான் எப்படிங்க பேசுவேன், நான் அந்த ஆள்டெ கடன் வாங்கியிருந்தேன், கடனை ரெண்டு மூணு தவணையிலெ தாறேன்னு சொல்லிருந்தேன், மூணு தவணையா அதை காப்பாத்த முடியலே அதுக்கு மேலே பதில் சொல்லமுடியாது அவர் ஏசுற ஏச்செல்லாம் வாங்கித்தானாகணும். எதுக்காக வாங்கணும்? எங்க ரசூலுல்லாஹ் அப்படிதான் சொல்லிருக்காங்க, அப்பதான் கேக்குறாரு என்னது என்னதான் சொல்லிருக்காங்க அதுக்கு பிறகுதான் 'ப்ராஃபெட் சேயிங்ஸ்' எடுத்துப் படிக்க ஆரம்பிக்கிறார். படிக்கப் படிக்க என்னவாகுதுன்னா மர்மடியூக்கா இருந்தவரை அப்படியே கொண்டுவந்து இஸ்லாத்திலெ சேர்த்துடுது.எந்த குர்ஆனுடைய ஆயத்துக்கு எதிராக எழுதப்போனாரோ அந்த குர்ஆனையே முதன் முதலாக இன்றைக்கு அதிக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகமாக இருக்கிற குளோரியஸ் குர்ஆன் என்று அவர் எழுதுகிறார்.எது மாற்றியது? ரசூலுல்லாவுடைய வாழ்க்கை, அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நான் எதுக்கு சொல்றேன்னா அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை எப்படி பின்னால் வந்த சந்ததிகளை, பின்னால் வந்த மனிதர்களை மாற்றியது.

சாதாரணமானதல்ல, “அடுத்தவீட்டுக்காரன் பசித்திருக்கும்போது நீ சாப்பிட்டால் நீ என்னை சார்ந்தவனல்ல.” என்னைச் சார்ந்தவனல்லன்னா என்னா அர்த்தம்?நீ முஸ்லிம் இல்லைன்னுதானே அர்த்தம்?அதானே அர்த்தம்?ஏன் அடுத்தவீட்டுக்காரனைப் பற்றி யாருமே சொல்லலையா?தர்மம் கொடுக்குறதைப் பற்றி யாருமே சொல்லலையா?அடுத்தவீட்டுக் காரன் பசித்திருக்கும்போது பசியோடு இருக்கிறவனுக்கு சோறு போடணும், அதானே?வள்ளுவன்கிட்டெபோய் ஒருத்தன் கேட்கிறான்.பணத்தை சேர்த்து வைக்கிறதைப் பற்றி கேட்கிறான், அப்பொ பேங்கெல்லாம் கிடையாது, அதை எங்கே சேர்த்துவைக்கிறது?கேட்கிறான்.அதுக்கு வள்ளுவர் சொல்றாரு ஒரு இடம் இருக்குப்பா.அது என்ன இடம்?

“அற்றார்அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி”

பசிச்சிக்கிட்டிருக்கன் பாரு ஒருத்தன், அவன் வயிறுதான் உன் பணத்தை சேர்த்து வைக்கிறதுக்கு அழகான இடம்..நீ அவனுக்கு சாப்பாடை வாங்கி கொடுத்திட்டின்ன பத்திரமா போய் அந்த காசு அவன் வயித்துலெ அந்த காசு சேர்ந்திடும், அதான் தெளிவான இடம்.திரும்ப நீ எப்படி எடுக்கணும்?அவன் வயித்துலேந்து நீ எடுக்கமுடியாது அல்லா கொடுப்பான், இறைவன் தருவான் என்கிறார்.

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”

என்று சொன்னவர், அவர் சொல்றார், பசியெ பத்திதான் சொல்றாரு. பாரதியார் என்ன இன்னும் டைரக்டா அடிச்சு சொல்றாரு, “இனி ஒரு விதி செய்வோம், அதை என்னாளும் காப்போம்…” என்னா விதி அது? “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” ன்னார். ஒருத்தன் மட்டும் இங்கு சாப்பிடாமல் உயிர்வாழ்ந்திக்கிட்டிருக்கான், மத்த எல்லா பயலும் சாப்பிட்டுக்கிட்டிருக்கான் அப்டீன்னா ஒருத்தன் என்ன இந்த உலகத்தையே அழிச்சிடனும். காரணம் அவன் சாப்பிடாமெ பட்டினி போட்டதுக்கு இந்த உலகம் இந்த சமுதாயம் காரணம், அவனை பூரா அழி அப்டீன்னுட்டார்.ஒருத்தன் பிச்சை எடுத்துக்கிட்டு போறான், அதை பார்க்கிறார் வள்ளுவர்.இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்- பிச்சை எடுத்து ஒருத்தன் வாழ்றமாதிரி ஒரு நிலை வந்துடுச்சுன்னா, அப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்தின கடவுள் இருக்கிறான் பாரு அவன் எல்லா எடத்திலும் போய் பிச்சை எடுக்கட்டும் அப்டீங்கிறார்.

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பறந்துகெடுக உலகற்றி யான்” –

எல்லா இடத்திலும் போய்..கடவுள்தான் நிறைய உருவம் எடுக்கமுடியுமே அவன் எல்லா இடத்திலும்போய் பிச்சை எடுக்கட்டுமே என்று கடவுளை ஏசுகிறார்.இதுலெ என்ன வேடிக்கைன்னா தனி ஒரு மனிதனுக்கு உணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்னா – ஜெகத்தினை அழிச்சிறதாலே தனி ஒரு மனிதனுக்கு உணவு வந்திடுமா?வருமாங்க?வராது. சரி ஒருத்தன் பிச்சை எடுத்துக்கிட்டிருக்கான் அதுக்காக  கடவுள் போய் பிச்சை எடுன்னா கடவுள்போய் பிச்சை எடுத்து இவருக்கு கொடுப்பாரா? அப்பொ பிச்சை எடுக்கிறது நின்னுடுமா?இதுலெ என்ன
வெளிப்படுகிறதென்றால் கோபம் வெளிப்படுகிறது இல்லையா?தீர்வு வெளிப்படவில்லை.ஒரு மனிதனுடைய பசியைப் போக்குவதற்கான தீர்வு வெளிப்படவில்லை.

ரசூல்(சல்) அவர்கள் ரொம்ப சாதாரணமாக சொன்னாரங்க. எப்படி,  அடுத்தவூட்டுக்காரன் பசிச்சிக்கிட்டிருக்கும்போது நீ சாப்டாதே, அப்படி சாப்ட்டீன்னா  நீ என்னை சார்ந்தவன் அல்ல. ஒவ்வொருத்தரும் இப்படி அடுத்தவூட்டுக்காரனைப் பார்த்துக்கிட்டான்னு வச்சுக்குவோம் பசிச்சவன்னு ஒருத்தன் இருக்கமுடியுமா?

அதாவது மனித வாழ்க்கையிலெ இப்பொ நாகரீங்கல்லாம் நிறைய பண்பைதொலைச்சிக்கிட்டே வருது. முன்னெல்லாம் பெரிய திண்ணை கட்டி வச்சிருப்பாங்க வாச கதவை மூடிடுவாங்க திண்ணைக்கு யாரும் கேட்டு போடமாட்டாங்க, யாரும் பார்த்திருக்கோமா திண்ணைக்கு கேட்டுப்போட்டு, அங்கே ஆடுமாடுகளும் தூங்கும், மனிதர்கள் வெளியூர்லேந்து வர்றவங்க படுத்து தூங்குவாங்க காலையிலெ எந்திரிச்சவுடனெ சுபுஹு நேரத்துலெ திண்ணையெ கழுவி விடறதும், அந்த காலத்து பெரிய மனுசர்களெல்லாம் கழுவிவுடுவாங்க. நான் பார்த்திருக்கிறேன். நாலரை மணிக்கெல்லாம் வாளியிலெ தண்ணியெ வச்சு ஊத்திக்கிட்டிருப்பாக ரொம்ப பெரிய மனுசரெல்லாம்.இதெல்லாம் எப்படி தெரியும்?இதெல்லாம் பார்த்துட்டுதான் ஜஃபருல்லா தூங்குவான்.இது யுனிவர்ஸல் ட்ருத்! என்ன காரணம், அசிங்கப்படுத்திட்டாங்களேன்னு கழுவிவுடுவது அல்ல அடுத்த நாள் வர்றவங்க படுக்க சுத்தமா இருக்கட்டுமேங்கிற காரணத்துக்காக..இப்பொ என்ன பண்ணிட்டான் திண்ணையும் சேர்த்து ரூம் எடுத்துட்டான்.ஒருத்தரும் படுக்கமுடியலே. அடுத்தது ஃபிரிஜ்ஜுன்னு ஒன்னு வந்துச்சு, கூலா ஆக்குறதுக்கு, வச்சுகொடுத்தா ஜில்லுன்னு இருக்கும், தண்ணி வச்சுக்கலாம் கூல் டிரிங்ஸ் வச்சுக்கலாம்.செவ்வா கெளமை சட்னி, புதன் கெளமை ஆனம், வெள்ளிக்கிளமை வச்ச சாம்பாரு, சனிக்கிளமை கும்பளமாஸு அவ்வளைவையும் சேர்த்து வச்சு திங்கிறோம். ராத்திரி மிச்சப்படுறதை மறுநாள் காலையிலெ தர்மம் போட்டு தர்மம் போட்டு பழக்கம், அந்த பழக்கமே இங்கே இல்லை போயிடுச்சா இல்லையா கொஞ்சம் உண்மையெ சொல்லுங்க, பிரிஜ்ஜை தொறந்தா என்ன வாசம் வரணும். ஐஸு வாசம் வரணும், பழங்கள் இருந்தா பழ வாசம் வரலாம். தொறந்தத்தோட வச்ச தண்ணி.இஞ்சி வாசனை அடிக்கிது.இப்பொ யாருமே டெய்லி இஞ்சி அரைக்கிறதே கிடையாது.திங்கக்கிளமை இஞ்சி அரைக்கிற நாள், செவ்வா கிளமை பூண்டு அரைக்கிற நாள், புதன்கிளமை தேங்கா அரைக்கிற நாள், அவ்வளவும் சேர்ந்து ஒரு வாசமா அடிக்கிது. என்னா ஆச்சு? .அப்பொ இந்த நாகரீகத்தில் வரக்கூடியதெல்லாம் இந்த பண்புகளை நம்மை எங்கேயே கொண்டுபோய் தள்ளிக்கொண்டிருக்கிறது.. நம்ம கையில்தாங்க இருக்கு..

எனவே ரசூல்(சல்) அவர்கள் என்ன சொன்னார்கள் பசியைத் தீருங்கள் என்று சொல்லும்போது அடுத்தவீட்டுக்காரன் பசியை ஒவ்வொரு அடுத்த வீட்டுக்காரன் தீர்த்தானென்றால் பசித்துன்பமே இந்த உலகத்திலேயே இல்லாததற்கு ஒரு தீர்வு வரும். இதை வேறு யாரும் சொல்லிருக்காங்களா?ஆனால் அதை நாம் பின்பற்றுகிறோமா? ஒருத்தன் நல்ல வூட்டுலெ இருந்துக்கிட்டிருந்தாங்க, பெரிய வூடு, நாலு தாவாரம், பெரிய முத்தம், ஆறு  அறை, வாடகை வெறும் 450 ரூபாதான். இருந்திக்கிட்டிருக்கிறவன் திடீரென்று மாத்திக்கிட்டுப் போயி ஒன்றரை தாவாரம் நால்ரை அறை வாடகை 1400 ரூபாவுலெ போய் குடியேறி இருக்கான்.மொத இருந்த வீடு நல்லா இருந்துச்சே அதெ விட்டுட்டு இங்கே வந்து குடியேறியிருக்கேயேன்னேன், எல்லாம் 'சுன்னத்'தைப் பேணுறதுதான் அப்டீனான்.என்ன சுன்னத்து? ஆமா பெரிய வீட்டுலெ இந்தேம்பா.. பக்கத்துலெ ரெண்டுபேரும் சரியான பரம ஏழையா இருக்கானுவ. நாம வாங்குற அரை கிலோ கோழியிலெ அவனுக்கு ரெண்டு இவனுக்கு ரெண்டு கொடுக்கவேண்டியிருக்கு நம்மலாலே தாங்கமுடியலே. இப்ப இங்கே வந்துட்டேன் வாடகை ஜாஸ்தியா இருந்தாலும் பக்கத்திலே ரெண்டு வூடும் பெரிய பணக்காரங்க, இப்பொ அவங்தான் நமக்கு கொடுக்கணும், அதனாலெ சுன்னத்தெ பேணுதற்காக இங்கே வந்துட்டேன் அப்டீன்னான். இப்படி சுன்னத்தை பேணுக்கிட்டு இருக்கிற ஆளும் இருக்கான்.ஏன்னு சொன்னா, எல்லாம் அல்லா பாத்துக்குவான்.அல்லா என்னா சொல்றான்.நீங்க எதை செய்றீங்க என்கிறதை பார்க்கிறதில்லை.நீங்க எந்த இண்டென்ஷனோட செய்றீங்க என்கிறதைதான் பார்க்கிறான்.யக்கீன்தான், ஒன்னுக்கு சொன்னான்னா அதை எல்லாத்துக்கும் வச்சு பார்க்கணும். “நீங்க அனுப்புற சதையோ கறியோ எதுவும் வருவதில்லை, உங்களுடைய நம்பிக்கைதான் வருகிறது என்று சொல்லும்போதே, நீங்க செய்யிற உடற்பயிற்சியோ, குனிஞ்சு நிமிறதோ எனக்கு வருவதில்லை தொழுகைங்கிற பேர்லெ நீங்க எப்படி நின்னு தொழுறீங்களோ உள்ளம்தான் என்னை நோக்கி  வருது. ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க ஆரம்பத்திலே கஃபத்துல்லாஹ்வை நோங்கி உங்கள் முகத்தை திரும்பும்போது உள்ளத்தையும் திருப்பிக்கொள்ளுங்கள்.அப்படி திருப்பவில்லை என்றால் அது தொழுகையாக ஆகியிருக்காது எக்சர்ஸைஸா இருக்கும்.இப்பொ ஒன்னுவேணாங்க ரொம்ப ஈஸியா நாம சொல்றோம், அல்லஹ் குர்ஆனிலெ தொழுகை… தொழுகை என்கிறது ரசூலுல்லாஹ் வாழ்ந்துகாட்டிய வாழ்க்கைதான்.

சப்ஜக்டை விட்டு எங்கேயும் போயிடமுடியாது.தொழுகைன்னு எடுத்துக்கிட்டிங்கன்னா மூணு நிலையை சொல்றான்ல நிக்கிறது, குனியிறது, சஜ்தா போவது. இதுலே முக்கியமானது அப்டீங்கிறது என்னான்னா நிக்கிம்போது எந்த எண்ணப்பாடோட நிக்கணும், குனியும்போது எந்த எண்ணப்பாடோட குனியணும், சஜ்தாக்கு போகும்போது யாராகப் போகணும். அல்லாஹ் பாத்துக்கிட்டே இருக்கிறான் என்கிற மாதிரியாவது தொழுவணும் இல்லேநீ அல்லாஹ் பார்க்கிறநிலையிலாவது தொழுவணும் உன்னாலெ பார்க்கமுடியலேன்னா அல்லாஹ் உன்னைபார்த்திக்கிட்டிருக்கான் என்ற பயத்தோடவாவது தொழணும்னு சொன்னாங்க. என்னா செய்யுறோம் பொதுவா சொல்லுங்க அல்லா சொன்ன இந்த மூன்று நிலையிலெ நிக்கிற இடத்துலெதான் கொஞ்ச நேரம் நல்லா நிக்கிறோம், இந்த ருக்குவு சஜ்தா நிலையிலே 'டப்புடப்பு'ன்னு போயிட்டு வாறோம்.பாத்திருக்கிங்களா நீங்க, ரொம்ப சீக்கிரமா செய்யுறது அதுதான்.உட்கார்ந்திருக்கிறதுலெ நல்லா உட்கார்ந்து ரொம்ப நேரம் அத்தஹாயத்தெல்லாம் ஓதி சலாம் கொடுப்போம்.ஆனால் சஜ்தாவுலெ அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அப்டி போயிட்டு அப்டிவந்து அல்லாஹு அக்பர் சொல்றோம்.ருக்வுலேயும் அப்டிதான் செய்றோம்.ஆனால் ருக்வு என்கிறது மிகப்பெரிய செய்தியை அல்லாஹ் சொல்றான்.என்ன செய்யுறோம்னா நின்னுக்கிட்டு அந்த முதுகுதண்டை அப்டியே வளைச்சு நேரா கொண்டுபோறோம்.அதுக்கு வந்து டெஃபினிஷன் என்ன? சிலபேரை பார்க்கிறோம், இவர் வந்து முதுகெலும்பே இல்லாத ஆளுங்க அப்டீங்குறோம்.சொல்றோமா இல்லையா?முதுகெலும்பே இல்லாதா ஆள்னா என்ன அர்த்தம்? 'வில் பவர்' இல்லாதவர் என்று அர்த்தம், வீரமா கொடையா இல்லை தானாமா அதெல்லாம் இல்லை.இந்திரா காந்தி இருந்தாங்க பிரதமரா, அவர் வில்பவர் உள்ள ஆளுங்க முதுகெலும்பு உள்ள ஆளுங்க அப்டீங்கிறோம்.அப்பொ வில்பவர், அல்லாகிட்டே போகும்போது அந்த வில்பவரை ஒடைக்கணும்னு அர்த்தம்.என்னா வில்பவர்? நாம ஹாஜி, நமக்கு ஏழு வூடு இருக்குது டொயாட்டா கார்லெ ஆறு காரு வச்சிருக்கோம் பேங்க் பேலன்ஸ் எக்கச்சக்கமா இருக்குது அதனாலெ நம்மை பார்த்தா அல்லாஹ் மகிழ்ச்சி அடைவான். இப்படி நம்மை சுத்தியிருக்கிற வில்பவரை உடைக்கிறதுதான் ருக்குவு.அந்த எண்ணத்தோட இருந்தாதான் நீங்க சஜ்தாவுக்குப் போகமுடியும்.சஜ்தா என்கிறது என்னவென்றால் உங்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணங்களையும் தட்டிவிட்டு முழுமுதற் அடிமையாக அல்லாஹ்விடத்தில் உங்களை ஒப்படைப்பது. உன்னைத் தவிர வேறு யாருமில்லை, நான் யாருக்கும் அடிமை இல்லை, உன்பேச்சைத் தவிர வேறு யார் பேச்சையும் நான் கேட்கமாட்டேன், உன்னைத் தவிர வேறு
யாருக்கும் கீழ்படியமாட்டேன். நீ சொல்வதைதான் செய்வேன் இது சத்தியம் என்று பரிபூரணமாக உன்னுடைய மனம், வாக்கு, சிந்தனை, செயல், உடல் அத்தனையும் ஒப்படைப்பதுதான் சஜ்தாவே தவிர நெத்தியை கொண்டுபோய் நிலத்தில் வைப்பது சஜ்தா என்று யாராவது சொன்னால் யாரும் குப்புற படுத்தே தூங்க முடியாது!.அப்புறம் தூங்குறவனெல்லாம் சஜ்தா செய்தவன் ஆகிவிடுவான்.காலில் விழலாமா?ஆ காலில் விழக்கூடாது.காலில் விழுவது சஜ்தா செய்யிறமாதிரி. மனிதருக்கு மனிதர் சஜ்தா செய்வதாக இருந்தால் கணவன் காலில் மனைவி சஜ்தா செய்யுமாறு நான் சொல்லியிருப்பேன் என்று ஹதீஸ் இருப்பதாக சொல்றாங்க. ஆனால் அப்படி இல்லை, சஜ்தா என்ற வார்த்தை வரும்போது காலில் விழுவதைப் பற்றியல்ல அங்கு இருக்கவேண்டிய மனப்பண்புதான் பேசப்படுகிறது. என்ன அது?கலிஃபா சார் இருக்காரு, நான் அவர்தான் எனக்கு அல்லான்னு நெனச்சு காலில் விழுந்தால் என்ன அது?ஷிர்க்கா?அப்பொ கையைப் பிடிச்சுகிட்டு அல்லான்னு நெனச்சால் என்ன அது? அப்பொ கையும் காலும் ஒன்னுதானே, அப்பொ அல்லான்னு நெனச்சுக்கிட்டு எதை தொட்டாலும் ஷிர்க்குதானெங்க. அப்பொ கால்லெ விழறதுன்னா என்ன?நீங்க கால்லெ விழுவிங்களான்னு என்னை ஒருத்தன் கேட்டான்.விழுவேன்னேன். அது எப்படி, அல்லா…. அல்லாவுக்குதான் கால் கிடையாதே கால் இருக்கும்போது அவன் அல்லா அல்லன்னுதானே அர்த்தம்..இப்பொ கலிஃபா சார் கால்லெ விழுறேன், ஒரு மரியாதை காமிக்கிற ஒரு சமிக்ஞை, அவர் அல்லான்னு ஏத்துகிறதல்ல. அவர் எனக்கு வாத்தியாரா இருந்தாரு நல்லபடியா சொல்லிகொடுத்தார்.தமிழ் நாட்டில் பழக்கவழக்கங்களில் காலில் விழுவது ஒரு சமிக்ஞை.நான் அல்லான்னு விழுறேனா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாது. ஆனால் நான் அல்லான்னு விழுந்தாலும் தப்பு கிடையாது.ஏன்னா காலு இருக்கும்போது அவன் மனுசன்தானேங்க அல்லா அல்லவே.மனப்பண்புசரியா இருக்கணும். என்னா கொடுக்குறோம்………………

ஒரு அருமையான செய்தி, வெளியூருக்குப் போயி….. இதை 'டெப்த் சைக்காலஜி'யில் பார்க்கலாம்.இல்லஸ்ட்ரேடட் வீக்லியிலே போட்டிருந்தான்.முஹம்மது நபி என்ற தீர்க்கதரசி அவருடைய போதனைகளில் சொல்லுகிறார்  இது எவ்வளவு பெரிய விளைவுகளை மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது, அவர் சொன்னது இதுதான் என்று எழுதிக்காட்டுகிறான்.அவ்வளவு பெரிய புக்கு.என்ன சைக்காலஜி என்றால் டெப்த் சைக்காலஜி ஆழ்மனதைப் பற்றிய ஓர் உளவியல் நூல். அவன் என்ன சொல்கிறான், ஒரு ஹதீஸை எடுத்து கோட் பண்ணுறான், வெளியூருக்கு நீங்க போய்ட்டுவரும்போது வசதி இருந்துச்சுன்னா உங்க வீட்டு பிள்ளைங்களுக்கு எதாவது திண்பண்டம் வாங்கிட்டு வாங்க, கொஞ்சம் கூட காசு இருந்துச்சுன்னா அடுத்தவீட்டு பிள்ளைங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டுவாங்க அப்படி இல்லையென்றால் உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் வாங்கிவரும் திண்பண்டங்களைஉங்கள் வீட்டின் உள்ளேயே அவர்களுக்கு கொடுத்து அந்த வாசம் தெரியாதவாறு அவர்களின் முகத்தையும் உதடுகளையும் துடைத்து வெளியே அனுப்புங்கள். என்ன  டீடைலான எவ்வளவு டீப்பான செய்தி இது. அவன் என்ன சொல்கிறானென்றால், அப்படி அனுப்பவில்லை என்றால், அடுத்தவீட்டு பிள்ளை இருக்கும்போது.. பிள்ளைகளின் குணம் என்னவென்றால் நான் சாப்புடுகிறேனே என்று காட்டிக்கொண்டு சாப்பிடும். வலுப்பம் காட்டுறேன்னு சொல்வாங்கல்ல, வலுப்பம் காட்டும்போது இதுவரை நட்பா இருந்த பிள்ளைக்கு ஆங்காரம் வரும், சிறுவர்கள் மத்தியிலே ஒரு பகை உணர்வு வரும்.அடுத்தது இன்னொரு பெரிய விசயம் தெரியுமா? அடுத்தவீட்டு வாப்பா மட்டும் வரும்போதெல்லாம் வாங்கிட்டு வாராக நம்ம வாப்பா மட்டும் ஒருதடவைகூட வாங்கிட்டு வரமாட்டேங்ராக என்ற ஆதங்கம் வந்து அந்த பேரண்ட்டல் அஃபெக்ஷனில் ஒரு தூரமான தடையை ஏற்படுத்திவிடும். அடுத்தவீட்டுப் பிள்ளை அவன் வீட்டு வாசல்லெ அது சாப்பிட்டுச்சுன்னா அதை பார்க்கிற அது கிடைக்காத இன்னொரு வீட்டுப் பிள்ளைக்கு தன் தகப்பானார்மீது ஒரு வெறுப்பு வந்துடும் என்கிறான்.அப்பொ எதை ரசூல்(சல்)அவர்கள் சொன்னார்கள்.

வாப்பா வாங்கிகிட்டுகொண்டுவந்து கொடுக்கறதோடு நிறுத்திடுவார்.பிள்ளைக்கு கொடுப்பது யாரு?யார் கொடுக்கிறா?தாய்மார்கள்தான்.நம்ம தாய்மார்களுக்கு பெரிய பெருமை. “மாதாவின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்று ரசூல்(சல்) அவர்கள் சொன்னார்கள். இதை ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்கணும், தாய்மார்களை பெருமைப் படுத்துவதற்காக சொல்லலை.ரசூலுல்லா கொடுத்திருக்கிற மிகப் பெரிய எச்சரிக்கை.இதை ரொம்பப்பேர் உணர்றதில்லை.என்னன்னா மாதாவின் காலடியில் சொர்க்கம் இருக்குதுன்னா பிள்ளைகள் பெற்றோருக்கு பணிஞ்சு நடக்கிறதைப் பத்தி அல்லா சொல்றான் குர்ஆன்லெ இதை சொல்லும்போது நடுவுலெ ஒரு சின்ன விசயம் வருது, “யாரொருவர் என்னையே முழுக்க முழுக்க எல்லாவற்றிற்கும் எதிர்நோக்கி நின்றார்களோ அவர்களுடைய தடம்பற்றி நடந்துவா..” அதோட சேர்ந்த ஆயத்து ஒன்னு இருக்கு, நான்கூட நெனச்சுப்பார்த்தேன் அப்பக்கூட,அப்படி அல்லா சொல்றானே ரசூலுல்லாவுடைய வாழ்க்கையிலெ முன்மாதிரி இருக்கும் யாரொருவர் என்னையே முன்வச்சு அதாவது தவுக்கல் வச்சு வாழ்ந்தார்களோ அவர்களுடைய அடி ஒட்டி பின்பற்றி வான்னு அல்லா சொல்றான் அந்த இடத்திலெ அப்படி பார்த்தேன் அப்படி எல்லாவற்றுற்கும் அல்லாவையே முன்வச்சு நடந்துவான்னா இறைநேச செல்வர்களைதான் பார்க்கமுடியும்.நாம யாரையோ முன்வச்சுக்கிட்டுதான் இருக்கோம்.எல்லாவற்றுக்கும் அல்லாவையே முன்வைத்தவர்கள் இறைநேசர்களாகத்தான் இருக்கமுடியும்.இது ஒரு டாப்பிக்.இது அப்படியே இருக்கட்டும்.

நம்ம சப்ஜக்ட்டு,  மாநபி காட்டிய மனித வாழ்க்கை. அப்படி பார்த்தீங்கன்னா மாதாவின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்கிற ஹதீஸ் இருக்கு, வாஸ்தவம்தான்.ஆனால் அல்லா சொல்றான் சொர்க்கம் என்பது என்கையில் இருக்கிறது.நான் நாடியவர்களுக்கு சொர்க்கம் கொடுப்பேன், நாடியவர்களுக்கு நரகம் கொடுப்பேன்.என்று சொல்லும்போது மாதாவின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று ரசூலுல்லாஹ் சொல்லியிருக்கிறார்கள் என்றால்அல்லாவின் கையில் இருப்பது மாதாவின் காலடியில் இருக்கிறது என்று அர்த்தம் வராதா? வருமா வராதா சார்.அப்பொ என்ன அர்த்தம் வரமுடியும்?அதுதான் சிந்தியுங்கள்.சிந்திச்சுப் பார்த்தோம்னா ரொம்ப தெளிவான அர்த்தத்தை எது சொல்லுதுன்னா, அதை அழகாக சினிமா பாட்டிலெ எழுதியிருந்தான். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலெ, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கயிலெ” ரசூலுல்லாஹ் என்ன சொல்றாங்க, உங்களுடைய பிள்ளை சொர்க்கத்துக்குரியவராவதும், நரகத்துக்குரியவராவதும் உங்களுடைய ஆளுகையில்தான் இருக்கிறது. காலடியில் இருக்கிறது என்றால் ஆளுகை என்றுதான் அங்கு அர்த்தம்.என்னங்க அவன்போய் அவர் கால்லெ விழுந்து கிடக்கிறான்னு சொன்னால் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறான் என்று அர்த்தம்.அப்படி கட்டுப்பட்டு இருக்கும்போது நீங்கள் புகட்டுகிற தாய்ப்பாலிலிருந்து அந்த தௌஹீது புகட்டப்படவேண்டும்.உங்களுடைய குழந்தை ஒருவன் நரகத்துக்குப் போகிறவனாக ஆகிவிட்டால் அதை பற்றி ங்களிடத்திலேயும் கேட்கப்படும்.காரணம் உங்கள் காலடியில் சொர்க்கம் இருக்கிறது
என்று ரசூலுல்லாஹ் சொல்லியிருக்கிறார்கள்.அல்லா சும்மா வுட்டுட மாட்டான் அப்பவே என்னுடைய ரசூல் சொன்னாங்களே, நீ சொர்க்கத்துக்குரிய ஆளா வளர்த்தியான்னு கேட்பான். தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையே தவிர தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்ட பாராட்டுதல் அல்ல. ஒரு பொறுப்பு சாட்டியிருக்கிறார்கள், உங்கள் குழந்தைகளை சொர்க்கத்துக்கு அருகதையுள்ளவர்களாக நீங்கள் ஆக்கவேண்டும்.

முன்னடியெல்லாம் ஒரு பழக்கம் இருந்துச்சுங்க, யாருக்காவது ஒரு பிரச்சினை வந்துச்சுன்னா பெரியவர்கள் நான்கு தலைமுறை ஐந்து தலைமுறை முந்தியவர்கள் ரொம்ப பெரிய பிரச்சனை, தீர்வு தெரியலெ, என்ன செய்வாங்களாம் ஒளு செஞ்சிட்டு ரெண்டு ரக்காத் நஃபில் தொழுதுட்டு குர்ஆனை அப்படி விரிப்பாங்களாம், விரிச்சவுடனே மொதல்லெ கண் எந்த ஆயத்துலெ படுதோ அதை ஓதினா அதில் தீர்வு இருக்கும், அந்த பிரச்சனைக்கு தீர்வு இருக்கும்னு நிறையபேர் சொல்லிக்கிட்டிருந்தாங்க. அப்ப அந்த நேரம், என்னை இஸ்லாமாக்கிவிடுங்கன்னு சொன்ன நேரம், எனக்கு நம்பிக்கை இல்லை, என்ன புருடாவா இருக்கு, எந்த பக்கத்தை திறந்தாலும் தீர்வு இருக்கு, இது என்ன மாயா ஜாலாமாவுல இருக்கு அப்டீன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். அதை ஒரு நாள் ஹஜ்ரத்துட்டெ கேட்டேன்,

என்ன சாபுநானா இதுமாதிரி எல்லாம் நடக்கமுடியுமா?அப்டீன்னுட்டு. இங்கே வா அப்டீன்னு சொல்லிட்டு 1957 மணிவிளக்கு, அதை என் கையிலெ கொடுத்து இதுலெ நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கேன் படிச்சுப்பாரு “மாமறை வழங்கிய தீர்ப்பு” அதை படிச்சுப்பாருன்னு கொடுத்தாங்க. ஒரு அருமையான செய்தியை அதில் வடித்திருந்தார்கள். என்னன்னா, அரபு நாட்டிலே இரண்டு சகோதரர்களுக்கு ஒரே இரவில் குழந்தை பிறக்கிறது, புறத்தாட்டிய அந்த செவிலி, யாருக்கு எந்த குழந்தை என்று தெரியாமல் புறத்தாட்டிவிட்டாள்.ஒன்று ஆண் குழந்தை, ஒன்று பெண் குழந்தை. தம்பிக்காரர் சொல்கிறார் ஆண் குழந்தை என்னுடையது என்று, அண்ணன்காரர் சொல்கிறார் ஆண் குழந்தை என்னதுதான் என்று, இந்த கேஸு எங்கே வருகிறதென்றால் அலி(ரலி) அவர்களிடம் வருது. அலியார் சொல்றாங்க, நாளைக்கு வாங்க இன்ஷா அல்லாஹ் இதற்கு தீர்வு நான் சொல்றேன்.

அவர்கள் என்ன செய்கிறார்கள், ஒளு செய்துவிட்டு நஃபில் தொழுதுவிட்டு குர்ஆனை பிரிக்கிறார்கள், ஒரே ஒரு ஆயத்து முதலில் கண்ணில் படுகிறது, “நிச்சயமாக ஆண்களை பெண்களின் பாதுகாவலர்களாகப் படைத்தோம்.”மூடிவிடுகிறார்கள். சிந்தனை அதாவது சிந்தனை சிலபேர் சொல்றாங்க சிந்தனை செய்ங்க, சிந்தனை செய்ங்க அப்டீங்கிறாங்க. ஆனால் நாம மூக்கை மட்டும்தான் சிந்துறாங்க வேறு எதையும் சிந்திக்கிறது கிடையாது. சிந்தனை என்பதற்கு டெஃபினிஷன் யார்ட்டெ வேணும்னாலும் கேட்டுப்பாருங்க, விளக்கம் என்னன்னா யோசிக்கிறதல்ல, ஞாபகப் படுத்திக்கிறதல்ல அதெல்லாம் வேறே.இதுக்கு சரியான விளக்கம் இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள்தான் கொடுத்தார்கள்.என்ன கொடுத்தார்களென்றால் “தெரிந்த ஒன்றை வைத்துக்கொண்டு தெரியாத ஒன்றை நோக்கி முன்னேறுவது, அறிவளவில், மனத்தளவில், ஞானத்தளவில்.” இதற்கு பெயர்தான் சிந்தனை.

நிச்சயமாக ஆண்களை பெண்களின் பாதுகாவலர்களாகப் படைத்தோம்னு இருக்கு.ஏன் சார் இந்த ஒரே ஒரு வசனத்தை வச்சுக்கொண்டு முன்னால் வந்த அந்த வழக்குக்கு யாராவது தீர்ப்பு சொல்வீங்களா?அந்த கட்டுரையை படிச்சிருந்தா எல்லாரும் சொல்லலாம். படிக்காமல்..அடுத்த நாள் வந்தவுடன் என்ன பண்றாங்க, யோசனை செய்தது இப்படி.ஆண்களை பெண்களின் பாதுகாவலர்களாக படைத்தோம்னு சொன்னா பாதுகாக்கிறவர்கள் வலிமை உள்ளவர்களாக இருக்கவேண்டும். பாதுகாக்கப்படுபவர்கள் அவர்களைவிட கொஞ்சம் வலிமை குறைந்தவர்களாக இருக்கவேண்டும். ஆண்கள் பாதுகாப்பவர்களாக இருக்கவேண்டுமென்றால் தாய்ப்பாலில் நிச்சயமாக எதாவது வேற்றுமை இருக்கும் என்று எண்ணி இரண்டு ஒரே அளவுள்ள ஒரே ஒரே எடையுள்ள கிண்ணங்களை அண்ணன் தம்பிகளிடம் கொடுத்து உங்கள் உங்கள் மனைவிமார்களிடமிருந்து தாய்ப்பாலை எடுத்துவாருங்கள் என்று சொன்னார்கள். அந்த தாய்ப்பாலை எடுத்துவந்தவுடன் ஒரே எடை ஒரே கொள்ளளவு ஒரே அளவு தாய்ப்பால். அதை வைத்து தராசில் நிறுக்கும்பொழுது தம்பி என்று அடையாளம்போட்ட பால் கொஞ்சம் தாழ்கிறது, வெயிட் அதிகமாக இருக்கிறது, அண்ணன் கொண்டுவந்த பால் டென்சிட்டி இல்லை வெயிட் கொஞ்சம் குறைச்சலாக இருக்கிறது.அலியார் அவர்கள் தீர்ப்பு சொல்கிறார்கள் தம்பியின் குழந்தைதான் ஆண் குழந்தை, அண்ணனின் குழந்தை பெண் குழந்தை.காரணம் இதிலேதான் சத்து அதிகமாக இருக்கிறது அதில் சத்து குறைவாக இருக்கிறது.இதை 1969 வது வருசம் இதை கண்டுபிடிச்சு சயின்ஸ் ரிப்போர்டரோ எதோ ஒன்று அதில் போட்டிருந்தான்.

இதைதான் சிராஜ் பாக்கவி அவர்கள் அழகாக சொன்னார்கள் ஒரு கவிதையில் “நோக்குவார் நோக்குக்கெல்லாம் நுண்பொருள் வாய்க்கும் வண்ணம் ஆக்கியே இறைவன் செய்த அருள்மறை குர்ஆன் நெஞ்சே” . நோக்குவார் நோக்குக்கெல்லாம் நுண்பொருள் வாய்க்கும்… மேலோட்டமானது அல்ல, அதைதான் ஆங்கிலத்தில் சொல்வான் Reading the lines, reading between the lines என்று. அப்படி பார்க்கப்போனால் ரசூல்(சல்) அவர்களுடைய ஒவ்வொரு ஹதீஸிலும் வாழ்க்கையைத் தவிர வேறேதும் இருந்ததே கிடையாது. ஆனால் ரசூலுல்லாஹ்வுக்கு என்ன தெரியும் என்பதை பற்றி மிக அழகாக எனது அன்பிற்குரிய சகோதரர்  கலந்தர் மஸ்தான் ஹஜரத் அவர்கள் என்ன சொன்னார்கள்..ரசூலுல்லாவுக்கு  எல்லாம் தெரியும்.எல்லாம் என்பதில் எவ்வளவு அடங்கியிருக்கிறது என்பதுகூட நமக்கு தெரியாது எல்லாம் தெரியும்.பெருமையாக இருந்தது, ஆனால் தூரதிருஷ்டம் என்னவென்றால் ரசூலுல்லாஹ்வை நமக்கு தெரியாது.தெரிஞ்சிருந்தா வாழ்ந்திருப்போமே. ரசூலுல்லாஹ் சொன்னாங்க அதை மட்டும் நாம் சிந்திச்சு பார்க்கணும் “எந்த விருந்து பசித்த ஏழைகளுக்கு பங்கு கொடுக்கவில்லையோ அந்த விருந்து நான் வெறுக்கிற விருந்து” என்று சொன்னார்கள். நம்மில் எத்தனையோ விருந்து நடக்கிறது அது ரசூலுல்லாஹ்வுக்கு விருப்பத்திற்குரிய விருந்தா அல்லது வெறுப்புக்குறிய விருந்தா என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.

இந்த உலகத்துடைய இயக்கத்துக்கு என்ன காரணம்?அப்டீன்னு கேட்டா சில சைக்காலஜிஸ்ட் சொன்னாங்க செக்ஸ்தான் காரணம்னாங்க, அதுக்கு பின்னால் வந்தவங்க இல்லை மதம்தான் காரணம்னாங்க. ஆனால் இமாம் கஜ்ஜாலி (ரஹ்) சொல்றாங்க உலக இயக்கத்துக்கே காரணம் பசிதான். பசி இல்லாட்டி இந்த உலக இயக்கம் எதுவுமே கிடையாது.அதுக்கு பின்னாடி சிலபேர் விளக்கம் சொன்னாங்க. பசியிலே எல்லாம் அடங்கிடும். உடல் பசி, எழுத்துப் பசி, கருத்துப் பசி, புகழ் பசி, பணப்பசி எல்லாமே பசிதான்.அது உருவகம். உண்மையானப்  பசி வந்துடுச்சுன்னா நாம எதைங்க சொல்றோம். பசி வந்துடுச்சுன்னா எதைங்க சொல்றோம். வயித்துப் பசிதான். வயித்துப் பசியை பத்தி ரசூலுல்லாஹ் நெறைய சொன்னாங்க.. நாம வயித்துப் பசியை தீர்த்துக்கிட்டிருக்கோம் விருந்து போட்டு, ஆனால் பசியேப்பம் உள்ளவர்களுக்கு நாம் விருந்து போடுவதே இல்லை, புளிச்சேப்பம் கொண்டவர்களுக்குதான் போட்டுக்கொண்டிருக்கிறோம். விருந்துக்கு வருகிறவர்களிலே ஏறத்தாழ 99 விழுக்காடு அவரவர்களுக்கு அவரவர்கள் வீட்டிலே பகல் உணவு தயாராக இருக்கிற வீட்டிலிருந்துதான்தான் வருகிறார்களே தவிர பகல் உணவு இல்லை என்ற நிலையோடுயாரும் வருவதில்லை. எனவே தயவு செய்து கூறுகிறேன், நீங்கள் போடுங்கள் அதோடு பசித்த ஏழைகளையும் அதில் பங்குகொள்ளச் செய்யுங்கள்.அப்பொழுது நல்ல விருந்தாகிவிடும். ரசூலுல்லாஹ் என்ன சொன்னார்கள், உங்கள் உற்றார்களுக்கு உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு விருந்தே போடவேண்டாம் என்று சொல்லவில்லை, போடுங்கள் ஆனால் அதில் பசித்த வயிறுகளுக்கு  பங்குகொடுங்கள். மிஞ்சினால் கடைசிலே தாறேன் என்று சொல்லிவிட்டு நாலரை மணிவரை நிப்பாட்டி வச்சு சோறுமில்லை ஒன்றுமில்லை போடா என்று சொல்லாதீங்க. எனவே பசித்த வயிறுகளுக்கும் கொடுத்து நல்ல விருந்தாக நல்ல விருந்தாக ஆக்கிக்கொள்வது நம்முடைய வாழ்க்கை இல்லையா? சாதாரண விஷயத்துக்கு நாம வருவோம்.

நான் என்ன சொல்றேன் அப்டீன்னா மனித வாழ்க்கையிலெ இரண்டு பெரிய வாழ்க்கை இருக்கிது இல்லற வாழ்க்கை துறவற வாழ்க்கை..துறவற வாக்கை நமக்கு கிடையாது. ரசூல்(சல்) அவர்கள் சொல்ற வழி இல்லற வாழ்க்கைதான் இல்லற வாழ்க்கையில்கூட நாம என்ன பண்றோம் அப்டீன்னா பணத்தை பெருசா நெனச்சிக்கிட்டிருக்கின்றோம். ஆனால் பணத்தைப் பற்றிய செய்திகளெல்லாம்  ரசூலுல்லாஹ் சொன்னதை பார்த்தோம் அப்டீன்னா நாம செஞ்சிக்கிட்டிருக்கிறதை பார்த்தால்... அதாவது, அல்லாவுடைய தீவிரமான தண்டனைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம் ஏற்படுகிறது.

பணத்தை வைத்துக்கொண்டு - பணத்தை வைத்துதான் இன்றைக்கு வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கும்பொழுது ஒ- ன்னும்வேணாம் நாளைக்கு அல்லாவை நம்புறியா பணத்தை நம்புறியான்னு கேட்டால் பேங்கிலுள்ள பணத்தைதான் நம்புறேன்னு சொல்றவங்கதான் ரொம்பபேர் இருப்பாங்க மனசார அல்ல, உள்ளுக்குள்ள அந்த எண்ணம்தான் இருக்கும். ஏன்னா நான் அல்லாவைதான் நம்புறேன் அப்டீம்பாங்க. அவன் செக்யூரிட்டி என்று நினைத்துக்கொண்டிருப்பது அல்லாவுடைய 'தவுக்கு'லை அல்ல. ரசூல்(சல்) அவர்கள் சேமித்துவைத்ததாக எதாவது வரலாறு இருக்கிறதா? பண்புகளை சேமித்து வைத்திருந்தார்கள், நடைமுறைகளை சேமித்துவைத்திருந்தார்கள், வழிமுறைகளை சேமித்து வைத்திருந்தார்கள், குர்ஆனுடைய வஹியை சேமித்துவைத்திருந்தார்கள், நாம் பணத்தை மட்டுமே சேமித்து வைத்திருக்கிறோம்.

ஒன்னை தெளிவா தெரிஞ்சுக்குங்க, பணக்காரன்னா பணத்தை வச்சிருப்பவன் பணக்காரன், பணம் இல்லாதவன் ஏழை என்ற அர்த்தமல்ல. ஒருத்தர் நூறு ரூபா வச்சிருக்கார் ஜோப்புலெ வச்சிக்கிட்டு நேரா ஒரு தெரிஞ்ச டீ கடைக்குப் போய் டீ குடிக்கிறார். ஒரு டீயை குடிச்சிட்டு நூறு ரூபாயை நீட்டுறார் சில்லரை இல்லை, பணத்தை ஜோப்புலெ வச்சிக்கிறார்.இன்னொருத்தர் வாராரு பத்து ரூபாய் வச்சிருக்கிறார்.அவரு ஒரு டீ குடிக்கிறார் பின்னால் வருகிற ரெண்டு பேருக்கு டீ வாங்கி கொடுத்துட்டு அந்த பத்து ரூபாயெ குடுத்துட்டு வெறுங்கையோடு போறாரு.இந்த ரெண்டுபேர்லெ யாருங்க பணக்காரர்?யாரு?அல்லா பாருங்க , நூறு ரூபா கொண்டுவந்தவரை கடன்காரனா அனுப்புறான்.அந்த நூறு ரூபாய்க்கு மதிப்பே இல்லாமல் அல்லா ஆக்கிவிடுறான்.இவரு பத்து ரூபாயை கொண்டுவந்து அல்லா விரும்பும்படி செலவு செஞ்சிட்டு போறார்.எப்படிஒன்னுக்கு எழுபதா அல்லா நாளைக்குத்தருவான் என்று போறார்.

பணக்காரன் என்பது இருக்கின்ற பணத்தினால் அல்ல சுரக்கின்ற குணத்தினால்.

நான் இன்னும் கேட்கிறேன் அல்லாஹ் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் கொடுக்கிறான் என்று வச்சுக்குவோம்.அந்த ஐயாயிரத்தை எனக்காகவே செலவு செய்துகொள்ளமுடியும் என்ற தைரியம் யாருக்காவது இருக்கிறதா?இருக்கமுடியாது.ஆனால் அல்லாஹ் சொல்கிறான் அல்லாவின் வழியிலே செலவிடுங்கள் அப்படி செலவிடுவீர்களென்றால் நிச்சயமாக அதற்கு நற்கிருபை உண்டு.ரசூலுல்லாஹ்வின் வாழ்க்கையிலே மிகப்பெரிய ஆழமான எத்தனையோ விசயங்கள் இருக்கிறது. ஆனால் சாதாரண வாழ்க்கையிலேயே ரசுலுல்லாவை பின்பற்ற முடியவில்லை என்கிறபொழுது அவர்கள் எப்படி தொழுதார்கள், எந்ததெந்த சமயத்திலே என்னென்ன ஆயத்துகள் ஓதினார்கள் அவர்கள் மிஹ்ராஜ் போகும்போது எந்த மனநிலையில் இருந்தார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில் நாம் இல்லை. காரணம் ரசுலுல்லாவை நாமெல்லாம் பின்பற்றுவது எதெற்காகவேண்டி என்னுடைய கருத்தென்றால் தயவு செய்து சாதாரண மனிதனாவதற்காவது ரசூலுல்லாவை பின்பற்றவேண்டும். மனிதனானதற்கு பின் மேம்பட்ட மனிதன் புனிதன் என்ற நிலை அடைவதற்கும் அவர்களிடத்திலே வாழ்க்கை இருக்கிறது அதை பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.அதை முற்றும் முழுக்க பெற முடியவில்லையென்றாலும் கொஞ்சங்கொஞ்சமாக வாழ்க்கையிலே பொருத்திப்பார்க்கிற அறிவு நமக்கு வேண்டும். அப்படிப்பட்ட அறிவையும், அப்படிப்பட்ட நிலையையும், அதை பொருந்திகொள்கிற மனப்பாண்மையையும் மனிதனாக வாழ்கிற ஒரு நல்ல வாழ்க்கையையும் அல்லாஹ் தருவான், தரவேண்டும் என்ற ஆவலோடு ஒரே ஒரு பிரார்த்தனையை மட்டும் சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

ஒருவர் கேட்கிறார் கேளுங்கள். 'இறைவா.. யா அல்லாஹ்,  நீ என்னை ஒரு வெற்றி பெற்ற மாவீரனுடைய வாளாக ஒளிவீச செய்யவேண்டாம், ஒரு குருடனுடைய ஊன்றுகோலாகாவது என்னை ஆக்கு; இறைவா, என்னை ஒரு பெரிய மாடமாளிகையாக ஆக்கவேண்டாம் ஆனால் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோருக்கும் காற்றும் நிழலும் தருகிற மரமாகவாவது என்னை மாற்றிவிடு'. ஏற்றத்தாழ்வு இன்னும் இருக்கிதா இல்லையா?

இணை வச்சா என்னுடைய மன்னிப்பும் கிடையாது யாருடைய சிபாரிசும் கிடையாதுன்னு அல்லாஹ் சொல்லிட்டான், இணை வைக்கிறதுக்கு மட்டும் அதாவது வணங்குறதிலெ மட்டும் அல்லான்னு வேறு யாரையும் வணங்கக்கூடாது. ஆனால் அந்த வணக்கம் என்கிறது அல்லா முன்னாடி எவ்வளவு பெரிய காரியம். அந்த வணக்கத்திலெ நமக்கு எப்படி ஈக்குவாலிட்டி கொடுத்திருக்கான்னா... அரபே தெரியாத எனக்கும் சுபுஹுக்கு இரண்டு ரக்கஅத்தான், பெரிய வலி பாதுஷா நாயகத்துக்கும் சுபுஹுக்கு இரண்டு ரக்கஅத்தான், ரசூலுல்லாவுக்கும் இரண்டு ரக்கஅத்துதான்இதுலெ எப்படி சமநிலை கொடுத்திருக்கான் பாருங்க… வணக்கத்தில் சமநிலை கொடுத்த அல்லாஹ் அந்த அல்லாஹ்வை ஏற்றுகொள்கிற நாம், ரசூலுல்லாவை பின்பற்றுகிற நாம், வாழ்க்கையில் நாம் சமமாக இருப்பதில்லை. ஒரு டிரைவரை கூட்டிக்கொண்டு விருந்துக்குச் சென்றாலும்கூட டிரைவர் அந்த வண்டியிலேதான் படுத்துக்கொள்கிறார், விருந்து அவருக்கு தனியாகத்தான் கொடுக்கப்படுகிறது. அவர் மனிதரல்லவா!

அடுத்தது அந்த பிரார்த்தனையில் சொல்கிறார்கள்,  சுவனத்தின் சுகத்துக்காக நான் உன்னை வணங்கினேனென்றால், அப்படி நீ நினைத்தாயானால், அந்த சுவனத்தின் கதவுகளை எல்லாம் நீ மூடிவிடு, நரகத்தின் அந்த நெருப்புக்கு பயந்துதான் நான் வணங்கினேனென்றால் இப்போதே அந்த நரகத்தில் என்னை போட்டு பொசுக்கிவிடு.உன்னை வணங்குவது உனக்காகத்தான்.உனக்காக மட்டுமே உன்னை
வணங்குகிறேன்.நீ சுவன சுகம் தருகிறாய் என்பதற்காக அல்ல, நரகத்துக்கு பயந்து என்பதற்காக அல்ல, ஆனால் நீ உன் தரிசனத்தை மட்டும் காட்ட மட்டும் மறுத்துவிடாதே என்று சொல்கிறார்கள்.யார் கேட்ட பிரார்த்தனை தெரியுமா இது?ராபியத்துல் பஸரியா கேட்ட பிரார்த்தனை. தாய்மார்கள் இதனை உணரவேண்டும்.சுவர்க்கத்துக்காக நரகத்துக்காக அல்ல, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறுவதற்கு உங்கள் வாழ்க்கை அமையவேண்டும் அந்த திருப்பொருத்தத்தை பெற்ற வாழ்க்கையாக வாழ்க்கை இருக்கிறது என்பதை முதலிலே உங்களுக்கு நீங்கள் நிரூபித்துக்கொள்ளவேண்டும். உங்களுக்குள்ளே நீங்கள் மூன்றாவது மனிதனாக இருந்து பார்க்க கற்றுகொள்ளவேண்டும். ஒவ்வொரு இரவும் இன்று காலையிலிருந்து யாரிடம் நாம் பேசியிருக்கிறோம், என்ன பேசியிருக்கிறோம், எப்படி பேசியிருக்கிறோம் யாருக்கு தவறு இழைத்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்க்கிற மனப்பாண்மை வேண்டும். காலையிலிருந்து மாலை வரை வியாபரத்தை எப்படி நடத்தியிருக்கிறோம், வந்திருக்கிற செல்வம் ஹலாலாக வந்திருக்கிறது என்று நீங்கள் யோசிக்கவேண்டும்.அப்படியெல்லாம் யோசித்து வாழ்க்கை நடத்தினால்தான் அது சாதாரண மனிதனின் வாழ்க்கை.ஏனென்றால் இமாம் கஜ்ஜாலி (ரஹ்) சொல்கிறார்கள் சாதாரண மனிதனுடைய வாழ்க்கை என்னவென்றால் 'மஃரிபா'வுடைய வாழ்க்கையாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். சாதாரண மனிதனுடைய வாழ்க்கையே மஃரிபாவுடைய வாழ்க்கையாக இருக்கவேண்டும் என்று இமாம் அவர்கள் சொல்லும்பொழுது, ஆனால் சாதாரண மனிதனுடைய வாழ்க்கை நாம் வாழ்கிறோமென்ற - அதை நிலைநிறுத்திக்கொள்கிற, அதை நமக்குள் நிரூபித்துக்கொள்கிற , அல்லாஹ்வுடைய பேரருளையும் பெருமான் ரசூல்(சல்) அவர்களுடைய ஆன்ம ஆசியையும் எஜமானுடைய ஃபைஜியும் கொண்டு அல்லாஹ் தருவானென்ற நம்பிக்கையோடு என்னுடைய வார்த்தையை நிறைவு செய்துகொள்கிறேன், அஸ்ஸலாமு அலைக்கும்.

*

நன்றி:
ஹமீதுஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com
*
Bonus! :
Aa Gaya Mere Hothon - Ustad Nusrat Fateh Ali Khan


Monday, September 17, 2018

ஒண ஸத்ய - ஆசிப் மீரான் சிறுகதை


திருவோணப் பண்டிகையாயிற்றே, மக்களைப் பார்க்க மாவேலி மன்னன் வருவாரே!' என்ற எண்ணமெல்லாம் இல்லாமல்இன்றும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெயில். 

சனிக்கிழமை விடுமுறை நாள்தானென்றபோதும் சில அலுவல்களைச் செய்து முடிக்க ஜெபல் அலி வரை போக வேண்டியிருந்தது. திருவோணப் பண்டிகை தினம் வரும்போதெல்லாம் திருவனந்தபுரத்தில் கட்டடக்கலை வகுப்புகளுக்குச் சென்ற நாட்களும், விடுதியில் தங்கியிருந்து 'ஓண ஸத்ய' உண்ட நாட்களும் நினைவுக்கு வரும். 

கல்லூரி காலங்களில் மலையாள நண்பர்கள் ஓணம் பற்றிச் சொல்லும் கதைகளை விடவும் விடுதியில் தலை வாழையிலையில் முப்பதிற்கும் அதிகமான காய்கறி பதார்த்தங்களுடன் வழங்கப்பட்ட 'ஓண ஸத்ய' வின் சுவைக்கு நாக்கு அடிமைப்பட்டுப் போனதால் மலையாளிகளை விடவும் ஓணப்பண்டிகைக்காக நான் அதிகம் எதிர்பார்ப்போடு காத்திருப்பதாக நண்பர்கள் கேலி செய்ததென்னவோ உண்மைதான்.. ஓணத்தின் போது எல்லோரும் வீடுகளுக்குச் சென்று விடுவதால் ஓண விடுமுறை முடிந்து விடுதியில் ஓணக்கொண்டாட்டம் ஓண ஸத்யவோடு கோலாகலம் பெறும்.

கொல்லத்தில் நாங்கள் தங்கியிருந்த போது, வாடகை வீட்டின் உடைமையாளரான பணிக்கரின் வீட்டில்தான் எல்லா வருடங்களிலும்  ஓண விருந்து எங்களுக்கு. பணிக்கரின் மனைவி,  ' இல நெறச்சு கறி வைக்கேண்ட திவஸமானு மக்களே! பக்‌ஷே அம்மய்க்கு வய்யா!' என்று சொல்லிக் கொண்டே இலை நிறைய ஏராளமாகச் சமைத்து,  சாப்பிட அழைத்து மகிழ்வார். 

படிப்பு முடிந்து சென்னையில் பணிபுரிந்த காலங்களில் ஓணமோ, 'ஸத்ய'யோ இல்லாத சோகம் துபாயில் பணிக்காக வந்ததும் மாறி விட்டது.

கேரளியர்களுக்கு வளைகுடாநாடுகள் புகுந்த வீடென்பதால் ஏர் இந்தியா மூலம் டன் கணக்கில் காய்கறிகளைக் கொண்டு வந்து 'ஓண ஸத்ய' ஒரு குறையுமில்லாமல் நடத்துவதில் அவர்கள் தேர்ந்திருந்தார்கள்.

துபாய் வந்த ஆரம்ப காலங்களில் குறிப்பிட்ட சில கேரள உணவகங்களில் மட்டுமே ஸத்ய கிடைக்குமென்பதால் பெரும் கூட்டமும் ஆரவாரவுமாக இருக்கும். 

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது 'டேஸ்ட் பட்' உணவகத்தில் அவரே விளம்பியதால் துபாயின் கராமாவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த வரலாறும் உண்டு இந்த 'ஸத்ய'க்கு.

பின்னாட்களில் ஓண ஸத்ய பெரும் வியாபாரமாகி விட்டதால் 'சரவண பவனிலும் ஓண ஸத்ய என்று அறிவிப்பு வைக்குமளவுக்கு நிலைமை போய் விட்டது. தலப்பாகட்டி பிரியாணியில் கூட ஒண ஸத்ய அடுத்த ஆண்டு கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

'ஓண ஸத்ய'வில் இலை நிறைந்து பல வண்ணங்களில் உணவு நிறைவது ஓரழகென்றால் கஸவு செட்டணிந்து 'முல்லப்பூ' சூடி சேர நன்னாட்டிளம் நங்கையர் நீள்கூந்தலை உலரவிட்டு நடந்து வருவதைக் காண்பது பேரழகு. 

எல்லா வருடமும் ஓணம் வரும்போதும் 'ஓண ஸத்ய' எங்கே சாப்பிடுவது என்ற குழப்பமே வரும். முப்பதில் தொடங்கி நூறு திர்ஹாம் வரை ஏராளமான வகைகளில் ஓண ஸத்ய இருந்தாலும் தனி 'நாடன்' கேரள உணவகங்களில் சாப்பிடுவதுதான் என் வழக்கம்.  இதற்காகவே எந்த உணவகத்தில் என்ன கிடைக்குமென்ற தகவலைச் சேகரித்து வைப்பதும்.

ஜெபல் அலி சென்றிருந்ததால் திரும்பி வருகையில் 'டிஸ்கவரி கார்டனில்' வைட் ரேஞ் உணவகம் போனால் கூட்டம் இல்லை. ஆனால் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் கதையாக வண்டி நிறுத்த இடமில்லை. இந்த மடமில்லையென்றால் சந்தை மடமென்று அங்கிருந்து  'நெல்லற' உணவகம் வந்தால்  மதியம் இரண்டரை மணியாகியிருந்தும் அந்தக் கால ரஜனி படத்தின் முதல் நாள் காட்சி போல பெரும் கூட்டம். காத்திருந்தாலும் சாப்பாடு கிடைக்குமென்ற உறுதி இல்லாததால் தப்பித்து ஓடி 'ரெட் பெப்பர்' போனால் சமீபத்து ரஜனி பட முதல் நாள் மாதிரி காத்தாடியது. 'என்ன விசயம்?' என்று கேட்டால் 'ஸத்ய கழிஞ்ஞு'ன்னு படத்தைத் தூக்கிட்டோம்குற மாதிரியே சொன்னானுங்க.. 

'போயும் போயும் நாக்குக்கு அடிமையாகி விட்டாயே அற்பப் பதரே!' என்று மனசு ஒரு பக்கம் சொன்னாலும் 'ஸத்ய'யில் விளம்பப்படும் இஞ்சிப்புளியை நினைத்ததும் அரசியல்வாதிகாலைப் போல மனசாட்சியைக் குழி தோண்டி மூடி விட்டு அருகிலிருந்த உணவகம் நோக்கி வண்டி தன்னால் நகர்ந்தது.

அருகில் நிலா உணவகம் தென்பட்டது. இங்கும் சாப்பாடு இல்லையென்றால் இந்தப் பழம் புளிக்குமென்று நடையைக் கட்டி விட வேண்டியதுதான் என எண்ணியவாறே உணவகத்திற்குள் நுழைந்தால் ஒரு மேசை மட்டும் ஆளில்லாமல் இருந்தது. 

மணி மூன்றாகி இருந்ததால் ஸத்ய கிடைக்குமோ என்றொரு ஐயம். பணியாளர் ஒருவரிடம் நம்பிகை தளர மெல்ல விசாரித்தேன்

"சார் இரிக்கு. ஸத்ய உண்டு" என்று சொன்னதும் 'செந்தமிழ் நாடெனும்போதிலே' என்று கேட்டது போலானது எனக்கு.

வாழையிலையில் பரிமாறப் போகும் உணவுக்காகக் காத்திருந்த போது பர்தா அணிந்த பெண்கள் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தார்கள். 

நான்கு பேர் அமரும் மேசையில் நான் மட்டுமே அமர்ந்திருந்தேன். என்னைப் போலவே உண்பதற்குத் தாமதமாக வந்த மூன்று சேட்டன்மார்கள் "இவிடெ இரிக்காமோ? வேற ஆளுண்டோ?" என்று கேட்டு நான்,  "இல்லை"யென்றதும் எனது மேசையில் அமர்ந்தார்கள்

நேரமாகி விட்டதால் கூட்டம் குறைந்து போயிருந்தது. நிதானமாக அமர்ந்து நிதானமாக ரசித்து ருசித்துச் சாப்பிட. முடிந்தது. மாம்பழ புளிஸ்ஸேரியும், இஞ்சிப்புளியும், அன்னாசி பச்சடியும், அடப்பிரதமனுமாக... அடடா!! நல்லவேளையாக சொத்தெதுவும் எனக்கில்லை. இருந்தால் எழுதிக் கொடுத்திருப்பேன்.

கூட்டமில்லாததால் விளம்புதலும் ஸத்யவுக்கான ஒழுங்கோடு நடந்தது. இலையின் இடது ஓரத்தில் உப்பு, மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்கள் சர்க்கர வரட்டி என்று அதன் ஒழுங்கோடு ஒவ்வொரு பதார்த்தங்களாக வந்தன. வழக்கமாகக் கூட்டுகறியில் கொஞ்சம் சொதப்புவார்கள். இங்கே அதுவும் அமர்க்களம். நாவின் சுவை மொட்டுக்களெல்லாம் உயிர்த்தெழுந்து நர்த்தனமாடின. 
'ஆவஸ்ய்முள்ளது வாங்ஙிச்சு கழிக்கு' என்று சொன்னதால் வெட்கம் மறந்து திரும்பத் திரும்ப மாம்பழ புளிஸ்ஸேரியில் மையம் கொண்டேன்.

என் மேசையில் உடனிருந்த சேட்டன்மார்களும் உண்டு கொண்டிருந்தார்கள். கேரளம் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பது குறித்து பேச்சு தொடர்ந்தது. அதில் ஒருவர் ஓணம் ஊரில் கொண்டாட வேண்டியவரென்பதும், கொச்சி விமான நிலையம் மூடப்பட்டதால் கோயம்புத்தூர் வந்து சார்ஜா வழி அவசரமாக வந்திருக்கிறார் என்பதும் பேச்சு வழியாகப் புரிந்தது.

இயற்கையை மனிதர்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்துவதும் இயற்கை பெருங்கோபம் கொண்டு திருப்பி அடிப்பதும் தெரிந்தும் மனிதர்கள் ஏன் தொடர்ந்து அதே தவறைத் திரும்ப செய்கிறார்கள் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

"இம்முறை ஊரில் ஓணம் களையிழந்து விடும். முகாம்களில் கோடித்துணி இல்லாமல் கொண்டாடும் நிலையை நினைக்க முடியவில்லை" என்றார் சேட்டன்களில் ஒருவர்

"வீட்டுக்கு போன் செஞ்சேன். 'எங்களாலதான் கொண்டாட முடியல. நீயாவது எங்களுக்கும் சேர்த்து கொண்டாடு'ன்னு அம்மா சொன்னாங்க. அதான் உங்க கூட வந்தேன். இல்லாட்டி நமக்கென்ன ஓணம்?" என்றார் இன்னொரு சேட்டன். சொல்லும்போதே கண்கள் லேசாகக் கலங்கி விட்டது அவருக்கு.

"கழிக்கடோ! எல்லாம் செரியாகும்" ஆறுதலாகச் சொன்னார் அவர்களில் மூத்தவரைப் போலத் தோன்றியவர்.

சட்டென்று ஓர் அமைதி. எனக்குமே கூட 'ஓண ஸத்ய' சட்டென்று சுவை குன்றிப் போய் விட்டதைப் போல் ஓர் உணர்வு.

உள்ளுக்குள் உறையும் சோகங்களைச் சுமந்து கொண்டுதான் பலரும் வாழ்க்கையைக் கொண்டாடுவதாக பாவனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது போல.

'பாலட ப்ரதமன்' நான் விரும்பிச் சுவைக்கும் பாயாசம். ஆனாலும் அது பரிமாறப்பட்டும் குடிக்கும் மனநிலையில் இப்போது நானில்லை. நான் இலையை என் பக்கமாக மூடிய அதே நேரம் அவர்களும் உணவருந்தி விட்டு இலையை எதிர்ப்பக்கமாக மடித்தார்கள். நான் அவர்களைப் பார்த்த அதே நேரம் அவர்கள் என்னையும் பார்த்தார்கள்.

நான் உடனே, " எனக்குப் புரிகிறது. இது சோகமான ஓணம் என்பதால் இலையை அப்படி மடித்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் நாங்கள் இப்படித்தான் மடிப்போம் என்பதால் நான் இப்படி மடித்து விட்டேன் " என்றேன் தெரியாமல் செய்து விட்ட உணர்வுடன்.

"ஓ!! நீங்க தமிழ் நாடா? நான் கேரளான்னு நெனச்சேன். நல்லா மலையாளம் பேசுது நீங்க" என்று உடைந்த தமிழில் சிரித்து விட்டு கூடவே " நீங்க செஞ்சது தப்பில்ல. இது எங்க ஊர்ப்பழக்கம். நாங்க இப்படித்தான் எப்பவும் மடிப்போம்" என்றார் அந்த மூத்த சேட்டன். 

நான்  தமிழ்நாட்டில் இலையை எப்படி மடிப்பது என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தபோது  நாங்கள் நால்வரும் ஒன்றாக வந்திருப்பதாக எண்ணி, அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக 'பில்' கொண்டு வந்து விட்டார் உணவக ஊழியர்.

நான் பதறிப் போய், எனக்கான தொகையைக் கொடுக்க முன்வந்ததும் அறிமுகமில்லாத அந்த சேட்டன், " எங்க ஊர்ல மழை வெள்ளம் வந்து ஓணத்தோட வெளிச்சமே இல்லாமப் போயிடுச்சு. ஆனா, தமிழ்நாட்டுல இருந்து நீங்கல்லாம் எவ்வளவு உதவி உடனே செஞ்சிருக்கீங்க? அத நெனச்சா ரொம்ப  சந்தோசமா இருக்கு. கஷ்டத்துல கைகொடுக்குறவன் தான் மனுசன். ஊரு விட்டு ஊரு வந்து உங்க நாட்டுக்காரங்க செஞ்ச உதவி சாதாரணமானதில்ல. தயவு செஞ்சு அதுக்கு நாங்க செய்ற சின்ன உபகாரமா இது இருக்கட்டும். தெய்வமாகத் தந்த வாய்ப்பா நெனச்சுக்கிறேன். தயவுசெஞ்சு மறுக்காதீங்க" என்று சொல்லி விட்டு அவரே பணம் கொடுத்து விட்டார்.

"ஓண ஆஸம்ஷகள் சேட்டா!!" என்றேன்.

"நன்றி" என்றார் சேட்டன் அழகுத் தமிழில்.

**Friday, July 27, 2018

சும்மா இருத்தலே சுகம் - ராஜ சுந்தரராஜன்


சும்மா இருத்தலே சுகம் - ராஜ சுந்தரராஜன்
_______________________________

‘காலம் என்றொன்று இல்லை’ என்பது சில ஞானியர் கூற்று. அதன் வழி அவர்கள் உணர்த்த முயல்வது, ‘காலமே துன்பத்திற்குக் காரணம்’ என்பதை.

“ஓரிடத்தில் சும்மா இருக்கிறீர்கள். அதுவழியே ஒரு கார் போகிறது. அழகிய கார். அதுபோல் ஒரு கார் வாங்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். பணம் இல்லை. பாடுபட்டுச் சேர்க்கிறீர்கள். வாங்கப் போகும் போது, அங்கே அதைவிட அழகிய கார்கள் விற்பனைக்கு நிற்கின்றன. முந்திப் பார்த்த காரும், வாங்கிய பிறகு, முன்பு நாடிய திருப்தியைத் தருமா என்பதும் ஐயம்.”

இது ஜித்து கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே.) அவர்களின் சொற்பொழிவுகள் ஒன்றில் நான் கேட்டது.

அவர் மேலும் சொன்னார், “கண்ணில் தெரிகிறதே அது நிகழ்காலம்; அதுவே, மூளையில், அழகிய கார் எனப் பதிவாகுகையில், இறந்தகாலம்; அதை வாங்க வேண்டும் என விரும்புவதிலிருந்து பின் எல்லாமே எதிர்காலம்.”

||ஆசையே துன்பத்திற்குக் காரணம்|| என்று கண்டுரைத்த புத்தர் ஆனால் ‘ஆசை என்றால் என்ன?’ என்று விளக்கினார் இல்லையாம். அது இன்னதென்று காட்டியவர் ஜே.கே. என்கிறார்கள்.

ஜே.கே. என் செவி கேட்க மேலும் சொல்லுவார்: “நிகழ்காலத்தை இறந்தகாலம் ஆக்கி அதை எதிர்காலத்தின் மீது சுமத்துவதே ஆசை.”

அதாவது, ‘நிகழ்காலத்தில் வாழ்வோம் எனில் துக்கம் இல்லை,’ என்கிறார். இயேசுவும்: “வானத்துப் பறவைகள் தங்களுக்காக விதைப்பதில்லை, அறுப்பதில்லை, சேமிப்பதில்லை... ” (மத். 6:26)

ஆனால் பிழைப்புக்கு உழைக்கிற நமக்குக் ‘காலநீட்சி’ உண்டுதானே? அதன் அடிப்படையிலேயே (காலம் = தூரம் / வேகம்), கார் உருவாக்கப் படுகிறது; வேளாண்மை முயலப்படுகிறது.

‘காலநீட்சி’ இன்னதென்று காண்பிக்கும் அமெரிக்கப் பெண்கவி ஒருவரின் ஒரு கவிதை அடி: Rain is the lake stretched in time.

யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றுஓர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இறங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆர்உயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 
 

எல்லாம் நம்ம ஊருதான்; எல்லாரும் நம்ம சொக்கார சொந்தக்காரங்கதாம்; நல்லது கெட்டது மற்றவங்களால வர்றது இல்லை; நோய்நொடி படுறதும் தணியுறதும் அதுபோல ஒன்னுதான்; சாவுறதும் புதுசு இல்லை; செயலா வாழ்றதுதான் இன்பம், விட்டுவிலகுறது துன்பம்னு சொல்றதும் இல்லை; ‘மின்னலோடு வானம் துளித்துளியாப் பெய்தது, பெருகி, மலையோடு மோதி இறங்குமே அந்த வேகமான பேராற்று நீர்ல சிக்குன படகு போல, உயிரும் கட்டுண்டு ஊழ்வழிப் போகும்’கிறது, ரிஷிகள் கண்டுசொல்லித் தெளிவானதுனாலே, ‘மாண்புமிகு’க்களைப் பாராட்டவும் மாட்டோம்; எளியவர்களை எடுத்தெறிஞ்சு பேசவும் மாட்டோம்.

ஊழ் = உதிர்தல். துளி என உதிர்ந்து பெருகி ஆறெனப் பாய்கிறதாக உவமம். ‘பிறர்தர வாரா’ என்றதினால், அவை நாமே உதிர்த்தவைதாம். மின்னல் = பகட்டு, ஆர்ப்பாட்டம். கல்பொருது = நிறுவப்பட்ட கருத்துகள், மரபுகளோடு மோதி. ‘புணை’ என்றதினால், ‘ஆர் உயிர்’ = அரிய உயிர் என்று ரொமான்ற்றிசைஸ் ஆகாமல் ‘கட்டப்பட்ட உயிர்’ (உயிர்வளர்த்தல்) என்று பொருள்படும்.

இதில், காரிய பலாபலனைத் தருவதற்கு ஒரு கடவுள் இல்லை பாருங்கள்! இதுதான், இந்த மனநிலையோடு கூடிய வாழ்க்கைதான் நமக்குத் தமிழ் மூதாதையர் பரிந்துரைத்தது. ஆனால் இங்கிருந்த அரசர்களும் மக்களும் சண்டை போட்டுக்கொண்டுதான் கிடந்தார்கள். கிடக்கிறோம். நம்மால் துளி தலைவதே ஊழ். ஆகவே, உணவுக்கு உழைப்பதற்கு மேல், எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், சும்மா இருங்கள்!

The time you enjoy wasting is not wasted time.
- Bertrand Russell

*

July 25, 2014

நன்றி : ராஜ சுந்தர ராஜன் (G+)

Sunday, June 3, 2018

'கனிவான என் தலைவா , கல்பில் ஒளி ஏற்றிவைப்பாய்'

குவைத்தில் ஹிஜ்ரீ 1434 / இஸ்லாமியப் புத்தாண்டு (15/11/2012) சிறப்பு நிகழ்ச்சியில் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் பாடிய இஸ்லாமிய கீதம்.

Thanks to : Asif Meeran & Arif Maricar


Tuesday, May 22, 2018

“ சான் ராத் " - கனவுப் பிரியன்

“ சான் ராத் "


நிலம், பண்பாடு மற்றும் அரசியல் காரணங்களால் ' பழைய உலகம் ' எனப் பெயர் பெற்ற புவியின் கிழக்கு அரைக்கோளத்தில் இளவேனிற்க்காலம் குடி வந்து அமர்ந்த நேரம் அது.

அதனால் வெயிலுக்கும் குளிருக்கும் வாக்கப்படாத, உடலுக்கு உகந்த ஒரு இளம் காற்று ஊர் முழுக்க ஏகாந்தமாய் ஊடுருவிப் பரவி இருந்தது.

வரலாற்றுப் பாரம்பரிய அரேபிய மெக்காவின், உம்முல் குரா (நகரங்களின் தாய்) பல்கலைக் கழகத்தின் கார் பார்க்கிங்கில், வந்த வேலை முடிந்த சந்தோசத்தில் சோம்பல் முறித்தபடி நின்றிருந்தான் அனீஸ்.

பகல் பனிரெண்டு மணிக்கெல்லாம் வந்த வேலை முடிந்து விட்டது. இனி சாயங்காலம் கிளம்பினாலும் நாளைக்காலை ரியாத் சென்று சேர்ந்து விடலாம் என்ற எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

கூடு திரும்புதல் தான் எத்தனை சுகமானது.

பயணக் காதலர்களாக இருந்தாலுமே அவர்கள் என்ன அல்பட்ரோஸ் பறவையா…? தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் எல்லாம் தூங்கியபடியும் சாப்பிட்டபடியும் வானில் தொடர்ச்சியாக பறக்க.

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில ஊரில் இருந்து பாலை வந்த சாதாரண கடற்காகம் அவன். அதனால் வீடடைதல் என்பது அவனளவில் ஆசுவாசம்.

லேப்டாப், டூல் பேக் எல்லாம் காரில் போட்டுவிட்டு, மூன்று தினம் முன்பு அவனுடன் ரியாதில் இருந்து வந்த அலுவலக பாகிஸ்தானி டிரைவர் ஜலால் சாச்சாவுக்கு (சித்தப்பூ) போன் செய்தான்.

அவரும் டெலிவெரி வேலையை முடித்திருப்பாரா என்ற எண்ணங்களுடன்.

“ வந்த வேலை முடிஞ்சிருச்சு, நீங்க எங்க இருக்கீங்க சாச்சா "

“ இஸாரா இப்ராஹீம் (இப்ராஹீம் தெரு) ல இருக்கிற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஸ்டோரில் நிற்கிறேன் "

“ அப்படியா, நான் சாந்திரம் ரியாத் கிளம்பலாம்ன்னு இருக்கேன் "

“ எனக்கும் இன்னைக்கு வேலை முடிஞ்சிரும், ஆனா நான் நாளைக்குத் தான் ரியாத் கிளம்புவேன் "

“ தங்கப் போறீங்களா, ஏன், என்ன விசேஷம் "

“ இன்னைக்கு சான் ராத் (பௌர்ணமி). கொண்டாட வேணாமா "

“ ஓ .....என்ன பிளான் "

ஜலால் சாச்சா சொன்ன பிளான் கேட்டு ஆர்வமாய் அவனும் ரியாத் திரும்பும் பயணத்தை மறுநாள் என மாற்றி, அவருடன் சேர்ந்து கொள்வதாக தெரிவித்தான்.

யுனிவெர்சிட்டி கார் பார்கிங்கில் இருந்து வண்டி எடுத்து, தங்கி இருக்கும் ஹோட்டல் போகும் வழியில் இருந்த மலையாளி கடை சென்று மோட்டா ரைசும் மத்தி மீன் குழம்பும் கேரட் பொரியலுமாக வெளுத்து கட்டிவிட்டு அறைக்கு வந்து நல்ல மதிய தூக்கத்துடன் கலந்துரையாடி விட்டு ஆறு மணி வாக்கில் எழுந்து ஹோட்டலில் இருந்து நடந்தே வந்து சற்று அருகில் இருந்த ரெஸ்டாரண்டில் “ ஏட்டா ஒரு லிப்டன் சாய் " என்றபடி ஒரு பழம்புரியை (வாழைக்காயைகடலை மாவில் முக்கி எடுத்து விற்றால் அது பஜ்ஜி. அதையே வாழைப்பழத்தை கடலை மாவில் முக்கி எடுத்து விற்றால் அது பழம்புரி) பேப்பரில் வைத்து பண்டைய முன்னோர்கள் செய்தது போலே எண்ணையை பிழிந்து எடுத்து விட்டு கையில் மிஞ்சிய எண்ணையைக் கண்டு பொருட்படுத்தாது ரோட்டின் வெளி ஆட்களை வேடிக்கை பார்த்தபடி சாப்பிடத் துவங்கினான்.

எப்பொழுதுமே வெளிநாட்டு ஆட்களை தன்னகத்தே கொண்ட, இன்னமும் தன் அடையாளத்தை மாற்றாத பண்டைய மெக்கா நகரத்து நிலம் சூடும் இல்லாது குளிரும் இல்லாது சமநிலையில் இருப்பது கூட வெளிவாழ் மக்களுக்கு ஒரு வகை இயற்கை கொடை.

அண்டைய தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு மெக்காவில் வாழும் ஒவ்வொரு நாளும் முடிந்த மட்டும் அதிகபட்ச அமல்களை (பிராத்தனைகளை) செய்துவிட வேண்டும் என்ற தேட்டம் இருந்தபடியே இருக்கும். தன்னை மறந்து சிந்தனை வயப்பட்டு இஹ்ராம் எனும் இரண்டு தைக்கப்படாத துணியை உடலில் சுற்றியபடி கடந்து செல்லும் வித விதமான அதிலும் கூடுதலாய் வயதான ஆட்களை பார்த்தபடியே டீ குடித்து விட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தான் அனீஸ்.

பலவித வெளிநாட்டவர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் ஹோட்டலின் வரவேற்ப்பு அறையில் ஒவ்வொரு நாட்டின் நேரத்தையும் காட்டும் கடிகாரங்கள் ஏழு எட்டு வித விதமான நேரத்துடன் காட்சி அளித்தன உள்ளூர் நேரம் மணி 6.30 ஆனதையும் காட்டியபடி.

அனீசின், ரியாத் அலுவலகத்தில் ஸ்ப்ளிட் டூட்டி என்பதால் இந்நேரம் மேனேஜர் வந்திருப்பான் என்று எண்ணியபடி ரூம் வந்து டிவியின் சத்தத்தை குறைத்து விட்டு மொபைலை கையில் எடுத்தான்.

“ சார், நான் நாளைக்குத் தான் கிளம்புறேன் "

மறுமுனையில் மேனேஜர் “ போன வேலை முடிஞ்சிருச்சா "

“ ஆமா"

“ நான் செக் வாங்க அடுத்தவாரம் அப்துர்ரஹ்மானை அனுப்பலாமா "

“ ம்ம்"

போன் துண்டிக்கப்பட்டது. வரவு வரப்போகிறது என அறிந்தால் மேற்கொண்டு மேனேஜர் எதையும் யாரைப் பற்றியும் துருவிக் கேட்பதில்லை.

இரவு மிதமான உணவை எடுத்துக் கொண்டு ஹோட்டலிலே தொழுது விட்டு மனதிற்குள் லேசான பயம் கலந்த புது ஆர்வம் சூழ்ந்திருக்க காரை எடுத்துக் கொண்டு மெக்கா நகரில் இருந்து சாலியல் கபீர் ஊர் போகும் வழி நோக்கி வண்டியை செலுத்தினான்.

அது ரியாத் செல்லும் ஹைவே ரோடு என்பதால் இரவும் வண்டிகளின் போக்குவரத்து அதிகமாகத்தான் இருந்தது. வீசும் லேசான இளம் காற்றுக்கும் ரோட்டின் நடுவில் இருந்த பேரிச்சை மரங்கள் தேர்வுக்கு படிக்கும் குழந்தைகள் போல மெல்லமாய் ஆனால் தொடர்ச்சியாய் உடல் அசைத்தபடி இருக்க ஹைவேயில் யு-டர்ன் எடுத்து அந்த ஒற்றையடி ரோட்டின் பக்கம் அனீஸ் வந்து சேர்ந்த போது மணி இரவு 9.

மருதாணி வைத்த மணப்பெண்ணின் கை போல திட்டு திட்டாய் சில குன்றுகளின் நிழல்கள் பூமியில் படிந்திருக்க பதினான்காம் முழு நிலவின் வெளிச்சப் பிரவாகம் பூமி எங்கும் வழிந்து பெருக்கெடுத்து ஓடியது.

பகலுக்குப் போட்டியான ஒரு வெளிச்ச இரவின் ஒளி மழையில் நனைந்தபடி அந்த இடம் காட்சி அளித்தது. எப்பொழுதும் விளக்குகள் அதிகம் இல்லாத இடத்தில் தான் நிலா வெளிச்சத்தின் முழு வீச்சையும் காண இயலும்.

சுற்றிலும் மஞ்சள் நிற மூன்றடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் கொஞ்சம் கடைகளுக்கு நடுவே அந்த ஒற்றையடி சிமென்ட் பாதை மேல் நோக்கிச் சென்றது.

ஏற்கனவே நான்கு ஐந்து கார்கள் அந்த இடத்தில் நின்றிருந்தன. அதனுடன் சேர்த்து தனது காரையும் நிறுத்திவிட்டு வெளியே வந்து தலையை உயர்த்தி அண்ணாந்து அதைப் பார்த்தான்.

' ஜபல் அல் நூர் ' (ஒளி மலை)

முதன் முதலாக அல் குர்ஆன், நபிகள் பெருமானார்க்கு முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அருளப்பட்ட ஹீரா குகையை தன்னகத்தே கொண்ட 2100 அடி உயரம் கொண்ட ஜபல் அல் நூர் மலை பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் சாந்தமான கம்பீரத்துடன் காட்சி அளித்தது.

சின்ன சின்னதாய் ஆங்காங்கே மேலே ஏறும் ஆட்கள் குட்டி குட்டியாய் சிறிய வெள்ளைப் புள்ளிகளாய் தெரிந்தார்கள்.

கரடுமுரடான ஒரு ஒழுங்கு இல்லாத புருட் சாலட்டின் மீது மெலிதாய் உருகி வழிந்து ஓடும் வெண்ணிலா ஐஸ்கிரீம் போல அந்த மலை மீது நிலவின் ஒளி பரவி உருகி வழிந்துக் கொண்டிருந்தது.

மரங்கள் செடி கொடிகள் இல்லாத வெறும் பாறைகளை மட்டும் தன்னகத்தே கொண்ட பொட்டல் மலை என்பதால் உச்சி வரை நிலவின் வெளிச்சத்தில் தெளிவாய் காண முடிந்தது.

ரமலான் மாதத்தின் ஒரு இரவில் தான் இந்த மலையில் அல் குர்ஆன் அருளப்பட்டது. அதனால் ஒரு இரவின் மடியில் இந்த மலையில் ஹீரா குகையை காண்பதென்பது ஒரு அபரிமிதமான சுகம்.

அதைத் தேடியே இந்த நள்ளிரவுப் பயணம்.

ஜலால் சாச்சாவுக்கு போன் செய்தான். “ நான் வந்திட்டேன், நீங்க எங்க இருக்கீங்க "

“ கீழயா இருக்க "

“ ஆமா, கடைகள் இருக்குல்ல அது பக்கத்துல வண்டியை நிறுத்திட்டு நிக்கிறேன் "

“ வண்டிய பூட்டிட்டு மேல வா. நாங்க மலை ஆரம்பிக்க இடத்துல நிக்கிறோம். "

“ சரி" என்றபடி ஆரம்பத்தில் இருந்த ஒரு பக்காலாவில்(பெட்டிக்கடை) ஏறி ஒரு தண்ணீர் பாட்டிலும் ஒரு ஸ்பிரைட் பாட்டிலும் வாங்கி பேன்ட் பாக்கெட்டின் இருமருங்கிலும் சொருகிக் கொண்டு சற்று வேகமாக மேல் நோக்கி நடக்கத் துவங்கினான்.

மலைக்குச் செல்லும் ஆரம்ப பாதை சற்று நேர்செங்குத்தாக இருக்கும். அத்தனை எளிதாக யாரும் காரை ஓட்டிக் கொண்டு மலையின் ஆரம்பப் பாதைவரை செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிமென்ட் ஒற்றைப் பாதை ரோடு செங்குத்தாகப் போடப்பட்டுள்ளது போலத் தோன்றியது.

ஜலால் சாச்சாவும் மற்றும் சிலரும் காத்திருக்கிறார்களே என்ற உந்துதலில் சற்று ஓட்டமும் நடையுமாக செங்குத்துப் பாதையில் ஏற அவர்களை அடையும் போது மூச்சிரைக்க ஆரம்பித்து விட்டது அனீசுக்கு.

ஜலால் சாச்சாவுடன் நடுத்தர வயது நான்கு பேர் வெள்ளை நிற சேர்வானி (ஒரு வகையான ஜுப்பா) உடை அணிந்து மெல்லிய ரம்யமான ' ஊத்' வாசனைத் திரவியத்தின் வாடை சூழ்ந்திருக்க நின்றிருந்தனர்.

சிறிய அறிமுகத்திற்குப் பின் அனைவரும் மலை மீது இருக்கும் ' ஹீரா குகை ' நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

பௌர்ணமியாக இருப்பதனால் குளிர் நிலவின் வெளிச்சப் பிரவாகத்தில் மலையின் மேலே செல்லும் பாதை துல்லியமாகத் தெரிய அனைவராலும் ஏற முடிகிறது. மற்ற நாட்களில் மலை உச்சியில் உள்ள ஹீரா குகை அருகே சிறிய வெளிச்சம் தெரியும் மேலே செல்லும் பாதை எல்லாம் கறுத்த இருட்டுக்குள் காணவே இயலாது.

மலைக்கு மேலே செல்லும் பாதையும் கோர்வையாக இல்லாமல் எங்கெங்கோ மேலும் கீழுமாக கரடுமுரடாக செல்வதால் பகலில் வேண்டுமானால் செல்லலாம். மற்றபடி இரவு நேரத்தில் பௌர்ணமி நாளில் செல்வது சாத்தியப்படும் ஒரு அதீத சுகம்.

பகலில் வெயில் பட்டு சுள் என கோபக்கனல் வீசும் கூரிய கரும் பாறைகள், நிலவின் ஒளி வெள்ளத்தில் மினுமினுக்கும் ஒரு யோகியின் முகம் போல தீர்க்கமான அதே சமயம் மெல்லிய புன்னகையுடன் கூடிய சாந்த முகம் போல காட்சி அளித்தன.

கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற ஏற நன்கு மூச்சிரைத்தது அனீசுக்கு.

அவர்கள் பேசிக்கொண்டே ஒருவர் பின் ஒருவராக குறுகியமலைப் பாதையில் நடக்க, அனீஸ் பேசாமல் தண்ணீர் கொஞ்சம் குடித்து விட்டு அந்த பாட்டிலை ஏன் சுமந்தபடி நடக்கவேண்டும் என்று எண்ணி தண்ணீர் பாட்டிலை ஒரு ஓரமாக பாறையில் வைத்து விட்டு நடந்தான். ஆங்காங்கே நிலவின் வெளிச்சத்தில் சிலர் மேலே ஏறுவது காண முடிந்தது. அதை பார்க்க பார்க்க மனதிற்குள் மலைப்பாக இருந்தது. இன்னமும் நீண்ட தூரம் ஏற வேண்டுமே என்று மூன்றில் ஒரு பாகம் ஏறியதும், கிடைத்த ஒரு சிறிய சமதளமான பாறையில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். கீழே மஞ்சள் வெளிச்ச ஹைவேயில் வண்டிகள் கடந்தபடியேதான் உள்ளன.

மனிதன் பயணித்தபடியே உள்ளான்.

நகர்வு என்பது இந்த பிரபஞ்சத்தின் முக்கிய நிகழ்வாக உள்ளது. யாரோ எதற்காகவோ எங்கோ நகர்ந்தபடியே உள்ளார்கள்.

அரபா போகும் பாதையில் உள்ள வீடுகள் வெளிச்சத்தில் மூழ்கி இருந்தன.

அனீஸ் மொபைலில் மணி பார்த்தான்,9.50 என்றது. சற்று திரும்பி மேலே ஏறி வந்தப் பாதையை அவன் திரும்பி நோக்கியபோது தலை சுற்றுவது போலத் தோன்றியது.

இடை இடையே மிகவும் கடினமான வளைவு பாதையில் இரும்புக் கம்பிகள் போட்டிருந்ததால் அதை பிடித்தபடி மேலே ஏறினார்கள்.

அதிகம் போனால் அங்கிருந்து கால் மணி நேரம் கடந்திருக்கும். அனீசுக்கு நன்கு தலை சுற்ற ஆரம்பித்தது. கால்கள் உதறத் துவங்கின. வீசும் மெல்லிய காற்றைத் தாண்டி உடல் வியர்க்கத் துவங்கியது.

மூச்சு முட்டியது.

தனது கட்டுப்பாட்டுக்குள் தான் இல்லை என்பதை உணரும் தருவாயில் அவனையும் அறியாமல் “ சாச்சா" என அழைக்க அவன் முன்னே சற்று அழைக்கும் தொலைவில் சென்று கொண்டிருந்தவர்கள் ஐவரும் கீழே வந்து அவனை நடுவில் நிறுத்தி முன்னும் பின்னுமாக நடக்க துவங்கினர். இரண்டு நிமிடத்தில் மீண்டும் ஒரு சமதளம் வந்தது அதில் ஒரு மர பெஞ்சும் அதன் மேல் மரக்கூரையும் இருந்தது.

(மதிய நேரம் வெயில் காலத்தில் யாரேனும் ஏறினால் இளைப்பாற வசதியாக ஆங்காங்கே சமதளப் பகுதியில் இதைப் போன்ற மர பெஞ்சும் வெயில் விழாது இருக்க மரக் கூரையும் காணலாம்) மர பெஞ்சில்,சாச்சாவாலும் உடன் வந்தவர்களாலும் கைத்தாங்கலாக உட்கார வைக்கப்பட்டான்.

ராட்டினத்தில் சுற்றுவது போல இருந்தது அவனுக்கு. கண்களை இறுக்க மூடினாலும் நிற்பதாக இல்லை. சுயபலம் இழப்பதை உணர்ந்து அவர்கள் வருத்தத்துடன் விசாரிக்க அவன் சாச்சாவிடம் சைகையில் “ நீங்க போங்க. என்னால முடியல " எனக் கூற “ ஒத்தையில எப்படி இங்க தனியா இருப்ப " என்று கேட்டவர்களிடம் “ எனக்கு ஒன்னும் ஆகாது நீங்க போங்க " என்றபடி தன்னையும் மீறி மரபெஞ்சில் கண் மூடி சாய்ந்தான்.

ஏதேனும் பெரிய கிரேன் கொண்டு அவனை அப்படியே தூக்கி தரையில் வண்டியின் அருகில் சேர்த்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது அவனுக்கு. வந்திருக்கக் கூடாதோ ரியாத் சென்றிருக்க வேண்டுமோ என்ற எண்ணம் எல்லாம் தலைத்தூக்கத் துவங்கியது.

எந்த வித உடல் சுளிவும் இன்றி சுலபமாக மேலே ஏறும் தன்னைவிட வயது மூத்த சாச்சாவும் மற்றவர்களும் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் ஓடத் துவங்கியது.

சில காரியங்களை செய்ய இயலாதபோது உங்கள் உடலே உங்களுக்கு ஒத்துழைக்காத போது அதுவும் பக்தி சார்ந்த விஷயமாக இருந்தால் உங்கள் இயலாமை, நீங்கள் நிராகரிக்கப் படுகிறீர்கள் என்ற பிம்பத்தை உண்டாக்குவதால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என வதைக்கும் எண்ணங்களுக்குள் உங்களை நீங்களே தள்ளும்போது இன்னும் பலஹீனமாவீர்கள். அவன் தன்னை பலஹீனமாக உணர்ந்தான்.

காலத்தை திட்டாதீர்கள். காலம் நானாக இருக்கிறேன் என்றான் இறைவன். இந்த காலம் தான் எல்லாவற்றிக்கும் மருந்து.

அந்த வெளிச்ச இரவில் அனீஸ் மீண்டும் கண் விழித்த போது முக்கால் மணி நேரம் கடந்திருந்தது.

படுத்தபடியே கண் விழித்து சுற்றிலும் நோட்டம் இட்டான். இரண்டு காலி வாட்டர் பாட்டில் சரிந்து தரையில் கிடந்திருந்தன. ஓரமாய் அவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து வைத்த ஸ்பிரைட் பாட்டிலும் அதே மர பெஞ்சில் அமர்ந்திருந்தது.

தலை சுற்றுகிறதா தன்னை தானே கேட்டுக் கொண்டான். சுற்றுவது போலவும் இருந்தது சுற்றாதது போலவும் இருந்தது அவனுக்கு. வாய் கசப்பிற்கு ஸ்பிரைட் குடிப்போம் என மெல்லமாய் எழுந்து அமர்ந்து அருகில் இருந்த பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

அந்த புளிப்பு, அப்போதைய உடனடி தேவை போல இருந்தது. ஆர்வத்துடன் நன்கு கண் விழித்து குடிக்கத் துவங்கினான்.

சற்று நேரம் கழித்து அவனுக்கு எதிரே இருந்த பாதையில் ஒரு வயதான பெரியவர் கைத்தடி ஊன்றி மலையில் இருந்து மெதுவாக கீழே இறங்கிக் கொண்டிருந்தார். முழுக்க வெள்ளை ஆடை அணிந்திருந்தார். பளீர் வெள்ளை தாடி. பளிச் முகம். கையில் பழுப்பு நிற தடிமனான ஊன்றுகோல். அனீஸை பார்த்து மெலிதாக சிரித்தார்.

அனீசுக்கு பதினான்கு வருடங்கள் முன் இறந்துவிட்ட அவன் தந்தையை பார்ப்பது போல இருந்தது அவரின் முகம் உடல்வாகு எல்லாம். அவனும் அவரைப் பார்த்து மெலிதாக சிரித்தான்.

“ ஸலவாத் ஓது " என்று அனீஸை பார்த்துச் சொல்லியவர் மீண்டும் மலைப் பாதையின் படிகளை நோக்கி கைத்தடி அழுத்தி ஊன்றி கீழே இறங்கத் துவங்கினார்.

“ அல்லாஹும்ம ஸல்லி அலா நூரிக்க செய்யதினா முஹம்மதின் நபியில் உம்மி வஅலா ஆலிஹி வஸஹபிஹி வஸல்லிம்" அவனுக்கு பரிசயமான ரிதத்தில் சொல்லிப் பார்த்தான் ஸலவாத்தை.

உடலில் ஏதோ பரவுவது போல இருந்தது.

மூன்று நாள் காய்ச்சலில் படுத்தவன் காய்ச்சல் சரியானதும் தளர்ந்த ஆனாலும் வலி இல்லாத உடலை காண்பது போல அனீஸ் தன்னை உணர அப்பாவின் ஞாபகம் சூழ்ந்தவனாக மெலிதாய் ஸலவாத் ஓதியபடி தனியாய் மேலே ஏறத் துவங்கினான்.

வாயில் மீதம் இருந்த, குடித்த ஸ்பிரைட் சுவை இதமாக இருந்தது அவனுக்கு. யார் அந்த பெரியவர் இன்னும் பேசி இருக்கலாமோ. ஒருவேளை அப்பாவோ. இல்லை அப்பா இவ்வளவு வெள்ளையாக இருக்க மாட்டார்கள். எப்படி மயங்கினேன்..? என்ன ஆச்சு எனக்கு...?. இவ்வாறு பலவாறான சிந்தனைகள் சூழ்ந்து கொள்ள ஸலவாத் ஓதியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தான் அனீஸ்.

' நவிரம்' என்று அழைக்கிறது மலை உச்சியை தமிழ் மொழி. ஜபல் அல் நூர் மலையின் உச்சியை அடைந்து ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மீண்டும் இறக்கம் வரும் அதில் உட்கார வசதியாக பாறைத் திட்டுகள் உள்ளன. இங்கு மட்டும் மஞ்சள் விளக்குகளின் வெளிச்சம் உள்ளது. அதன் வலப்பக்கம் தொழுவதற்கு வசதியாக இரும்பு கிராதிகள் சூழ்ந்த ஓர் சமதளம் உள்ளது. அதற்கு நேர் எதிரே இரண்டு பாறைகளுக்கு இடையே ஒரு சாதாரண உடல் கொண்ட ஆள் நுழைவதற்கான பாதை அதை கடந்தால் சின்னஞ்சிறிய ஹீரா குகை.

குகைக்கு எதிரே இருக்கும் பாறை திட்டுக்களில் அமர்ந்து கொண்டு பார்த்தால் மலை உச்சியில் வந்து நிற்கும் ஆள் அடையாளம் தெரியும்.

நீண்டநேர இடைவெளிக்குப் பின் மலை உச்சியில் வந்து நிற்கும் அனீஸை பார்த்த ஜலால் சாச்சா சந்தோஷ முகத்துடன் பாறை திட்டில் இருந்து அவனை நோக்கி வேகமாக வந்தார். ஜலால்

சாச்சாவை பார்த்த சந்தோஷத்தில் அனீசும் வேகமாக அவரை நோக்கி இறங்கி வந்தான்.

வந்து விட்டான் என்ற சந்தோசமும் அடைந்து விட்டேன் என்ற சந்தோசமும் சங்கமித்துக் கொண்டன. அனீஸை கட்டி அணைத்தவர் “ நாரே தக்பீர் அல்லாஹு அக்பர். நாரே ரிஸாலத் யா ரசூலல்லாஹ் " என்றார் சந்தோஷ பூரிப்பில்.

அனீஸ் கண்களில் நீர் கோர்க்கத் துவங்கியது. சாச்சாவின் கண்களிலும்.

குகைக்கு செல்லும் வழியை காட்டி “ ஜாவ் பேட்டா...” என்றார் ஜலால் சாச்சா மனம் குளிர.

மெதுவாக இறங்கி இரு பாறை இடுக்கின் வழியாக அந்த சிறிய குகைக்குள் அனீஸ் நுழைந்தான்.

ஏற்கனவே அங்கு இருவர் இடமில்லாத காரணத்தால் ஓட்டி அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் அனீசும் போய் அமர்ந்து கொண்டான்.

குகையில் அமர்ந்து பார்த்தால் அதன் பாறை இடுக்கின் வழியாக தூரத்தில் உலகின் முதல் பள்ளி “ காபா“ தெரிகிறது. இன்று விஞ்ஞான தொழில் நுட்பத்தின் காரணமாக வெளிச்சத்தில் மூழ்கி வெள்ளை பளிங்கு துண்டு போல அந்த இடமே காட்சி அளிக்கிறது.

1439 வருடங்கள் ஆகி விட்ட இந்த ஹிஜ்ரி எனும் கால வெள்ளம் வரும் முன்னமே, தனது நபித்துவம் வரும் காலத்திற்கும் முன் இங்கு அமர்ந்திருந்து நபிகள் பெருமான் தியானம் செய்த இடம்.

அவர்கள் காபாவையே பார்த்துக் கொண்டிருந்த அதே பாறை இடுக்கு இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது அதனிடத்தில் தான் இப்போது உள்ளோம் என்பதே அனீஸ்க்கு மட்டுமல்ல அங்கிருக்கும் அனைவருக்கும் ஒரு பரவச நிலையை உண்டாக்கி இருந்தது.

பெருமானாரை பற்றி நினைக்க நினைக்க அனீஸ்க்கு அழுகை வரத் துவங்கியது.

எத்தனை இன்னல்கள். இதோ வெகு அருகில் இருக்கும் தாயிப் ஊரில் உள்ளவர்கள் கல்லால் எறிந்தது முதல் சொந்த ஊரான மெக்காவில் உறவினர்களால் பட்ட கஷ்டங்கள் மட்டுமல்ல இத்தனை வருடங்கள் தாண்டியும் இன்னமும் முஸ்லிம் 'பெயர்தாங்கிகள்' கூட பெருமானார் பற்றி திரித்தும் முறித்தும் பேசுவதை எழுதுவதை நினைத்து அழுகை வந்தது.

பெருமானாரைப் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் இஸ்லாம் அறிய நினைப்பதால் விளையும் கேடு இது. பெருமானார் பற்றியும் அவரின் வாழ்வுநிலை பற்றியுமல்லவா இஸ்லாமிய சமூகம் பேசி இருக்கவேண்டும்.

குகைக்கு வெளியே சிலர் காத்திருப்பதைக் கண்டு அவர்களும் வர எண்ணி அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான் அனீஸ்.

ஜலால் சாச்சாவும் உடன் வந்த மற்றவர்களும் தனித்தனியாய் ஏதோ ஓதியபடி அமர்ந்திருக்க அனீஸும் தனியாய் நிலவின் வெளிச்சத்தில் லேசான காற்றில் குளிர்ந்த பாறையில் சாய்ந்தபடி கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.

கி.பி 610 ஆகஸ்ட் 10ஆம் தேதி (ரமலான் பிறை 21) இரவு இதே இடத்தில் தான் அல் குர்ஆன் முதன் முதலாக அருளப் பட்டது.

வானவர் ஜிப்ரீல் நபிகள் பெருமானாரை நோக்கி “ இக்ர (ஓதுவீராக) " என்றார்.

“ நான் ஓதி அறிந்திலேன் (உம்மி நபி / பள்ளி செல்லாதவர்) " என்றார்கள் பெருமானார்.

மீண்டும் ஜிப்ரீல் “ ஓதுவீராக" என்றார்.

மீண்டும் பெருமானார் “ நான் ஓதி அறிந்திலேன் “ என்றார்கள்.

மூன்று முறை இங்ஙனம் நிகழ்ந்த பின் “ இக்ர பிஸ்மி ரப்பிகல்லதீ (உங்கள் இறைவனின் திருப்பெயரைக் கொண்டு நீர் ஓதுவீராக)....... மனிதனை ரத்தக்கட்டியில் இருந்து அவன் படைத்தான். எழுதுகோலைக் கொண்டு அவன் கற்றுக் கொடுத்தான் " என்பதாக அது தொடர்ந்து 22 வருடங்கள் 5 மாதங்கள் 14 நாட்கள் ஆயின முழு அல் குர்ஆனும் பூரணமாய் அருளப்பட.

எதுகை மோனை சந்தம் லயம் மற்றும் அனைத்து கல்யாண குணங்களையும் கொண்ட அழகிய கவிதை வடிவம் தானே ' அல் குர்ஆன்'

பிற்காலத்தில் யாரேனும் " முஹம்மது நபி எங்காவது படித்திருப்பார் " என்ற புரட்டுக் கதையை கட்டிவிடக்கூடாதே என்பதற்காக நிகழ்த்தப்பட்ட சம்பவம் போலத் தோன்றும் " வானவர் ஜிப்ரீல் அவர்கள் ஓதுவீராக என்பதும் நான் ஓதி அறிந்திலேன் என்பதும் " காண.

அந்த புனிதமிகு அல் குர்ஆனின் முதல் தோற்றுவாய் இந்த இடமே.

அதுவும் ஒரு ரமலான் இரவில் நிகழ்ந்தது. இன்றும் இரவு அதே குகை அருகில் என்பதே அனீஸ்க்கு எதையோ அடைந்து விட்ட சந்தோசம்.

“ அல்லாஹ்வின் சின்னங்களை நினைவு கூறுங்கள் " என்கிறான் இறைவன்.

இதையே சலபிகள் / வஹாபிகள் அப்படி ஒன்றும் போக வேண்டிய அவசியமில்லை என்பார்கள் இந்த இடத்திற்கு. அவர்களைப் பொறுத்தவரை மதினாவிற்கே போகவேண்டிய அவசியமில்லை. அது ஏன் பெருமானாரே அவசியமில்லை என்பார்கள்.

20 நவம்பர் 1979 ல் மக்காவிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து அதை கைப்பற்றியவர்கள் தானே இந்த வஹாபிகள்.

முஸ்லீம்கள் பற்றி தவறான அப்பிராயம் உலகில் பரவச் செய்ய அவர்களின் ஒற்றுமையை சிதறடிக்க உண்டாக்கப் பட்டது தானே வஹாபியிசமே.

இஸ்லாத்திற்கு எதிரானவர்களுக்கு பெருமானார் மீது பாசம் எப்படி வரும்.

அனீஸின் எண்ணங்கள் பெருமானாரைச் சுற்றியே வந்தது. ஒவ்வொரு நபிக்கும் தரப்பட்டது போல பெருமானாருக்கு கிடைத்த அற்புதம் ' அல் குர்ஆன் ' என எண்ணினான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் (ஏசுநாதர்) அவர்கள் வியாதியஸ்தர்களை குணப்படுத்தும் அற்புதம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் (உம்மத்தார்கள்) சமூகத்தார்கள் மருத்துவத் துறையில் இன்று நிரம்பி வழிகிறார்கள்.

அதைப் போல இஸ்லாமியர்கள், இறைவன் குர்ஆன் வழங்கியதையே ஆதாரமாக வைத்து அவர்கள் கல்வியின் பக்கம் முழுவதுமாக முகம் திருப்பி இருக்கவேண்டும்.

உலகின் கடைசி நாள் வரைக்கும், புத்தகங்கள் தான் இனி வழி நடத்தும் என்பதை உணர்ந்து அறிவின் பாதையை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் வெற்றி என்பது அவர்களின் கல்வியை சார்ந்தது என சுட்டிக்காட்டியும் பாராமுகமாக இருக்கும் நிலை மாற வேண்டாமா.

குறைந்த பட்சம் தன் மொழியில் ஹீரா குகையைப் பற்றியாவது, அது என்ன உயரம்...? என்ன தன்மையில் அதன் பாறைகள் உள்ளன....? அதற்காக பயணிப்பது பற்றியெல்லாம் நாமாவது எழுதவேண்டும் என எண்ணியபடி சற்று வலது பக்கம் முகம் திருப்ப

சற்று தள்ளி ஒரு பாறையில் கண்கள் மற்றும் முதுகு பக்கம் கருப்பு நிறம் கொண்ட வெள்ளை நிற இளம் ஆட்டுக் குட்டி நின்று கொண்டிருந்தது.

இது எப்படி இங்கு வந்தது. அதுவும் ஆட்கள் அந்த பக்கம் சென்று விடக் கூடாது என போடப்பட்ட இரும்பு கிராதிகளைத் தாண்டி.

அதுவும் 'காபா ' வை நோக்கி முகம் காட்டிய படி நின்றிருந்தது. சிறிது நேரம் கழித்து முகம் திருப்பி அனிசை பார்த்தது பின் சற்று தலை உதறியபடி மீண்டும் காபாவை பார்த்துக் கொண்டிருந்தது.

அனீஸ் அதைப் பார்த்தான். அதுவும் அனீஸை பார்த்தது. அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டதற்கு பால் நிலா சாட்சியாக இருந்தது.

அனீஸூக்கு அந்த இரவில் அங்கு நிற்கும் அந்த ஆடு அதிசயமாகத் தோன்றியது. மயங்கிக் கிடந்த அனீஸ் மேலே வந்து சேர்ந்தது ஜலால் சாச்சாவுக்கு அதிசயமாகத் தோன்றியது. அதிசயங்களின் கண்ணி தொடர்ந்தபடி தான் உள்ளது

“ லகது குன்து கப்லல் யவ்மி
உன்கிரு சாஹிபி
இதா லம்யகூன் தீனி
இலா தீனிஹி தானி
வகது சாரா கல்பி
காபிலன் குல்ல சூரத்தின்
..............................................அரபி கஸீதா "

*

நன்றி : முஹம்மது யூசுப்