'எல்லைகளற்ற பிரார்த்தனையே வாழ்க்கை' என்று சொன்ன பெரும் எழுத்தாளர் பஷீரை எழிலோடு வரைந்திருக்கிறார் Murali Nagapuzha . ரசித்தேன். முகநூலில் பகிர்ந்த கவிஞர் சேரனுக்கு நன்றி. Thanks also to : DC Books Thiruvananthapuram.
Showing posts with label வைக்கம் முஹம்மது பஷீர். Show all posts
Showing posts with label வைக்கம் முஹம்மது பஷீர். Show all posts
Saturday, July 6, 2019
Saturday, November 16, 2013
முகமது பஷீரின் 'சப்தங்கள்' - குளச்சல் மு. யூசுஃப் முன்னுரை
வைக்கம் முகமது பஷீர் வாசகர்கள் (fb) குழுமத்திற்கு நன்றியுடன்...
**
நன்றி : குளச்சல் மு. யூசுஃப் , காலச்சுவடு பதிப்பகம்
***
ஒரே ஒரு சுட்டி : உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்
**
முன்னுரை (சப்தங்கள்)
குளச்சல் மு. யூசுஃப்
பிரபஞ்சம் பின்னிட்ட கோடானுகோடி தினங்களின் நிலவு போர்த்திய ஓரிரவு. அதன் ஒரு பகுதி முகமிழந்த மனிதர்களை வெறும் ‘சப்தங்க’ளால் சித்திரப்படுத்தியிருக்கிறார் பஷீர். மொழியின் வெறும் ஓசைகளே இதில் மானுட உன்னதங்களைக் குலைத்துப் போடுகின் றன.
விலைமாதர்களையும் பாலியல் நோய்களையும் ஓரின சேர்க்கை யாளர்களையும் கருவாகக் கொண்ட 12 அத்தியாயம் நீண்ட இந்தச் சிறுகதை அல்லது சிறு நாவலின் அர்த்தப்பாடுகள் மானுட விழுமியங்களை மட்டுமல்ல மனிதனின் இருப்பையே நிலைகுலைய வைக்கிறது. அதுவரையிலான இலக்கிய மரபியல் அறிஞர்களையும் கௌரவமான கதைச்சொல்லிகளையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும்புலவர்களும் பேரிலக்கியவாதிகளும் தேவலோகக் காரிகைகளின் அங்க லாவண்யங்களை உவகையுடன் எழுதிக் குவித்துக்கொண்டிருந்த போது காற்றுப் பிரிவது உள்ளிட்ட இயற்கை உபாதைகள் தசையுள்ள தாஜ்மகால்களுக்கும் உண்டு என்று சொன்னவர் பஷீர்.
காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடிய அதே காலகட்டத்தில் தான் பஷீர் பாம்பையும் பூரானையும் நரியையும் பிற உயிரினங்களையும் பூமியின் வாரிசுதாரர்கள் என்றார். நேரடியான வாழ்க்கையனுபவங்களிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் படைப்பையும் வெகுசன இரசனையையும் தீவிரமான வாசக அனுபவத்தையும் ஒன்றிணைவாகப் பயணிக்கச் செய்கிற இந்தத் திசையறிவுதான் பஷீரின் மிகப்பெரிய பலம். கலாச்சாரத்தை வாசனையால் புரிந்துகொள்ள முடியுமென்றால் ஓரினப் புணர்ச்சியாளர்களின் கலாச்சாரத் தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியுமென்பதை மக்களின் மொழியில் சொன்னவர் பஷீர். வார்த்தைகளுக்கு இலக்கணரீதியிலான அழுத்தம் தந்து மனித வாழ்க்கையை வர்ணனை செய்ய முற்படுகிற, சமூகத்தின் வெளியில் நிற்கும் ஒரு பார்வையாளனின் கதைச்சொல் முறையும், இலக்கிய வகை மாதிரி பூடகங்களின் அர்த்தத் தளங்களுக்குள் பயணிக்கும் திறன்படைத்த நுண்மான் நுழைபுலன்கொண்ட வாசகன் பயணிக்கும் திசையும் இதிலிருந்து அடிப்படையாகவும் முற்றிலும் மாறுபாடானதுமாகும்.
புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மொழியின் இலக்கணத் தினுள் வகைப்படுத்தியும் மரபார்ந்த இலக்கிய வடிவத்தை விட்டு விலகி விடாமலும் எழுதும் டேபிள் ஒர்க் பஷீரைப் பொறுத்த வரை அன்னியமானது.
‘உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ எனும் அவரது குறுநாவலின் நாயகி பாடுகிற பாடலின் முதல் வரியே இப்படித்தான் தொடங்கும்: ‘குத்தினி ஹாலிக்க லித்தாப்போ...’ இதற்கான அர்த்தம் உலகிலுள்ள எந்த ஒரு மொழியிலும் கிடையாது.
ஆனால் எழுத்து வடிவிலான இந்த ‘சப்தங்’களுக்கு மலையாள நாட்டின் அரசியலில் அர்த்தமிருக்கிறது. ஆசிரியராக பணியாற்றுகிற அவரது இளைய சகோதரன் அண்ணனுக்கு இலக்கண இத்தியாதிகளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதால், “காக்கா, எதற்கும் கொஞ்சம் இலக்கணம் படிப்பது நல்லது” என்கிறார். பஷீருக்குக் கோபம் வந்தாலுமே இதற்காக அவர், தமையனுடன் இலக்கணம் பற்றிய சர்ச்சைக்குள் இறங்கிவிடவில்லை. “போடா, நீ. வீட்டிலிருந்த நெய்யை எல்லாம் திருடித் தின்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லித் திரிந்தவன்தானே நீ. உன்னுடைய இலக்கணத்தின் இலட்சணம் எனக்கா தெரியாது” என்று பதில் சொல்கிறார். தன்னுடைய படைப்புகள் ஆங்கில நாவல்களிருந்து தழுவப்பட்டவை என்ற விமர்சனத்தையும் பஷீர் இவ்வாறே எதிர்கொண்டார்: “வாய் வழியே சாப்பிடுவதாலும் வட்ட முகமும் ஒரு ஜோடி கை கால்களும் இரண்டு கண் களுமிருப்பதாலும் மேற்படியானை சர்ச்சிலின் மகனென்று சொல்லி விட முடியுமா?”
எழுதுகோலைத் தீட்டி காகிதங்களை எழுதுவதற்குப் பத்திரப்படுத்தி விட்டு அனுபவங் களைத் தேடிப் புறப்பட்டவரில்லை பஷீர். அவர் பயணங்களை நோக்கி துரத்தியடிக்கப் பட்டவர். யாரால் துரத்தப் படுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. மனித மனத்தின் இனம்காண முடியாத சூட்சுமப் பகுதி அது. வாழ்க்கை சுகப்படவில்லையென்பதற்காக பஷீர் யாரை நோக்கியும் தனது சுட்டுவிரலைத் தூண்டவில்லை. ஆகவேதான் தோட்டத்தில் நுழைந்த பாம்பு மனைவி பார்ப்பதற்குள் போய் விட்டால் நல்லது என்று அவர் பதைபதைப்பதுவும் அவரால் எதையுமே வெறுக்க இயலாமல் போனதுவும். வைக்கம் முகம்மது பஷீரின் கனவில் திருச்சூரில் உறையும் வடக்கும் நாதர் வந்து சொல்கிறார்: நன்றாகப் பழுத்தப் பாக்கு கிடைக்காமல் வாயெல்லாம் என்னவோ போலிருக்கிறது என்று. மறுநாள் பாக்குகளை வாங்கிப் பொட்டலமிட்டு கோயில் சுவர்களுக்குள் வீசி யெறிகிறார் பஷீர். மனம் பிறழ்வுபட்ட நிலையில் தான் எதிர்பாராமல் வந்துகிடைத்த இதுபோன்ற ஓராயிரம் அனுபவங்கள். இதைத்தான் மலையாள எழுத்தாளர் எம்.பி. போள், வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிய்த்தெடுத்ததும் ஓரங்களில் இரத்தம் துளிர்த்து நிற்பதுமான படைப்புகள் என்று வர்ணித்திருந்தார்.
பஷீரின் அதிஅற்புதப் படைப்புகளான பாத்துமாவின் ஆடு, பால்யகால தோழி, உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்ததுபோன்ற கதைகளை ஒருவேளை திறமையான கதாசிரியர்கள் யாராவது எப்போதாவது எழுதி விடுவார்களாக இருக்கலாம். ஆனால் மனிதனின் ஈனஸ்வரத்திலான இந்தப் பேரோசையை பஷீரைத் தவிர வேறு யாராலுமே எழுப்ப இயலாது. தமிழ்ச்சூழலில் அண்மைக்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரலை நாற்பதுகளிலேயே பிரதிபலித்து விட்டவர் பஷீர். அன்றுவரை யாரும் சொல்லாததும் அதற்குப் பின்னாலும் யாரும் சொல்லாததுமான ஹூருலீன் (சுவர்க்கலோகத் தாரகை) பெண்ணொருத்தி குசு விடுவதைப் பற்றிய சிறுகதையான பர்ர்ர்... ஐ பஷீர் எழுதி நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.
மலையாளத்தில் ‘பஷீரியம்’ எனும் இலக்கியக் கோட்பாட்டை மொழிசார்ந்தும் வடிவம் சார்ந்தும் ஏற்றுக்கொண்ட மலையாள வாசகர்களில் பெரும்பான்மையினரும் இன்று பஷீரைப் பற்றிய நினைவுபடுத்துதல்களைக்கூட இலக்கியத்தின் மற்றொரு முகமாக வரவேற்கிறார்கள். வாழும்போது மாந்திரீக கதாசிரியராகப் போற்றப் பட்டவரின் ஞாபகங்கள்கூட மாந்திரீகத் தன்மையுடனிருப்பதை அவரது வாழ்க்கையின் அதிசயமாகவே கருதவேண்டியதிருக்கிறது.
***பிரபஞ்சம் பின்னிட்ட கோடானுகோடி தினங்களின் நிலவு போர்த்திய ஓரிரவு. அதன் ஒரு பகுதி முகமிழந்த மனிதர்களை வெறும் ‘சப்தங்க’ளால் சித்திரப்படுத்தியிருக்கிறார் பஷீர். மொழியின் வெறும் ஓசைகளே இதில் மானுட உன்னதங்களைக் குலைத்துப் போடுகின் றன.
விலைமாதர்களையும் பாலியல் நோய்களையும் ஓரின சேர்க்கை யாளர்களையும் கருவாகக் கொண்ட 12 அத்தியாயம் நீண்ட இந்தச் சிறுகதை அல்லது சிறு நாவலின் அர்த்தப்பாடுகள் மானுட விழுமியங்களை மட்டுமல்ல மனிதனின் இருப்பையே நிலைகுலைய வைக்கிறது. அதுவரையிலான இலக்கிய மரபியல் அறிஞர்களையும் கௌரவமான கதைச்சொல்லிகளையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும்புலவர்களும் பேரிலக்கியவாதிகளும் தேவலோகக் காரிகைகளின் அங்க லாவண்யங்களை உவகையுடன் எழுதிக் குவித்துக்கொண்டிருந்த போது காற்றுப் பிரிவது உள்ளிட்ட இயற்கை உபாதைகள் தசையுள்ள தாஜ்மகால்களுக்கும் உண்டு என்று சொன்னவர் பஷீர்.
காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடிய அதே காலகட்டத்தில் தான் பஷீர் பாம்பையும் பூரானையும் நரியையும் பிற உயிரினங்களையும் பூமியின் வாரிசுதாரர்கள் என்றார். நேரடியான வாழ்க்கையனுபவங்களிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் படைப்பையும் வெகுசன இரசனையையும் தீவிரமான வாசக அனுபவத்தையும் ஒன்றிணைவாகப் பயணிக்கச் செய்கிற இந்தத் திசையறிவுதான் பஷீரின் மிகப்பெரிய பலம். கலாச்சாரத்தை வாசனையால் புரிந்துகொள்ள முடியுமென்றால் ஓரினப் புணர்ச்சியாளர்களின் கலாச்சாரத் தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியுமென்பதை மக்களின் மொழியில் சொன்னவர் பஷீர். வார்த்தைகளுக்கு இலக்கணரீதியிலான அழுத்தம் தந்து மனித வாழ்க்கையை வர்ணனை செய்ய முற்படுகிற, சமூகத்தின் வெளியில் நிற்கும் ஒரு பார்வையாளனின் கதைச்சொல் முறையும், இலக்கிய வகை மாதிரி பூடகங்களின் அர்த்தத் தளங்களுக்குள் பயணிக்கும் திறன்படைத்த நுண்மான் நுழைபுலன்கொண்ட வாசகன் பயணிக்கும் திசையும் இதிலிருந்து அடிப்படையாகவும் முற்றிலும் மாறுபாடானதுமாகும்.
புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மொழியின் இலக்கணத் தினுள் வகைப்படுத்தியும் மரபார்ந்த இலக்கிய வடிவத்தை விட்டு விலகி விடாமலும் எழுதும் டேபிள் ஒர்க் பஷீரைப் பொறுத்த வரை அன்னியமானது.
‘உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ எனும் அவரது குறுநாவலின் நாயகி பாடுகிற பாடலின் முதல் வரியே இப்படித்தான் தொடங்கும்: ‘குத்தினி ஹாலிக்க லித்தாப்போ...’ இதற்கான அர்த்தம் உலகிலுள்ள எந்த ஒரு மொழியிலும் கிடையாது.
ஆனால் எழுத்து வடிவிலான இந்த ‘சப்தங்’களுக்கு மலையாள நாட்டின் அரசியலில் அர்த்தமிருக்கிறது. ஆசிரியராக பணியாற்றுகிற அவரது இளைய சகோதரன் அண்ணனுக்கு இலக்கண இத்தியாதிகளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதால், “காக்கா, எதற்கும் கொஞ்சம் இலக்கணம் படிப்பது நல்லது” என்கிறார். பஷீருக்குக் கோபம் வந்தாலுமே இதற்காக அவர், தமையனுடன் இலக்கணம் பற்றிய சர்ச்சைக்குள் இறங்கிவிடவில்லை. “போடா, நீ. வீட்டிலிருந்த நெய்யை எல்லாம் திருடித் தின்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லித் திரிந்தவன்தானே நீ. உன்னுடைய இலக்கணத்தின் இலட்சணம் எனக்கா தெரியாது” என்று பதில் சொல்கிறார். தன்னுடைய படைப்புகள் ஆங்கில நாவல்களிருந்து தழுவப்பட்டவை என்ற விமர்சனத்தையும் பஷீர் இவ்வாறே எதிர்கொண்டார்: “வாய் வழியே சாப்பிடுவதாலும் வட்ட முகமும் ஒரு ஜோடி கை கால்களும் இரண்டு கண் களுமிருப்பதாலும் மேற்படியானை சர்ச்சிலின் மகனென்று சொல்லி விட முடியுமா?”
எழுதுகோலைத் தீட்டி காகிதங்களை எழுதுவதற்குப் பத்திரப்படுத்தி விட்டு அனுபவங் களைத் தேடிப் புறப்பட்டவரில்லை பஷீர். அவர் பயணங்களை நோக்கி துரத்தியடிக்கப் பட்டவர். யாரால் துரத்தப் படுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. மனித மனத்தின் இனம்காண முடியாத சூட்சுமப் பகுதி அது. வாழ்க்கை சுகப்படவில்லையென்பதற்காக பஷீர் யாரை நோக்கியும் தனது சுட்டுவிரலைத் தூண்டவில்லை. ஆகவேதான் தோட்டத்தில் நுழைந்த பாம்பு மனைவி பார்ப்பதற்குள் போய் விட்டால் நல்லது என்று அவர் பதைபதைப்பதுவும் அவரால் எதையுமே வெறுக்க இயலாமல் போனதுவும். வைக்கம் முகம்மது பஷீரின் கனவில் திருச்சூரில் உறையும் வடக்கும் நாதர் வந்து சொல்கிறார்: நன்றாகப் பழுத்தப் பாக்கு கிடைக்காமல் வாயெல்லாம் என்னவோ போலிருக்கிறது என்று. மறுநாள் பாக்குகளை வாங்கிப் பொட்டலமிட்டு கோயில் சுவர்களுக்குள் வீசி யெறிகிறார் பஷீர். மனம் பிறழ்வுபட்ட நிலையில் தான் எதிர்பாராமல் வந்துகிடைத்த இதுபோன்ற ஓராயிரம் அனுபவங்கள். இதைத்தான் மலையாள எழுத்தாளர் எம்.பி. போள், வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிய்த்தெடுத்ததும் ஓரங்களில் இரத்தம் துளிர்த்து நிற்பதுமான படைப்புகள் என்று வர்ணித்திருந்தார்.
பஷீரின் அதிஅற்புதப் படைப்புகளான பாத்துமாவின் ஆடு, பால்யகால தோழி, உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்ததுபோன்ற கதைகளை ஒருவேளை திறமையான கதாசிரியர்கள் யாராவது எப்போதாவது எழுதி விடுவார்களாக இருக்கலாம். ஆனால் மனிதனின் ஈனஸ்வரத்திலான இந்தப் பேரோசையை பஷீரைத் தவிர வேறு யாராலுமே எழுப்ப இயலாது. தமிழ்ச்சூழலில் அண்மைக்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரலை நாற்பதுகளிலேயே பிரதிபலித்து விட்டவர் பஷீர். அன்றுவரை யாரும் சொல்லாததும் அதற்குப் பின்னாலும் யாரும் சொல்லாததுமான ஹூருலீன் (சுவர்க்கலோகத் தாரகை) பெண்ணொருத்தி குசு விடுவதைப் பற்றிய சிறுகதையான பர்ர்ர்... ஐ பஷீர் எழுதி நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.
மலையாளத்தில் ‘பஷீரியம்’ எனும் இலக்கியக் கோட்பாட்டை மொழிசார்ந்தும் வடிவம் சார்ந்தும் ஏற்றுக்கொண்ட மலையாள வாசகர்களில் பெரும்பான்மையினரும் இன்று பஷீரைப் பற்றிய நினைவுபடுத்துதல்களைக்கூட இலக்கியத்தின் மற்றொரு முகமாக வரவேற்கிறார்கள். வாழும்போது மாந்திரீக கதாசிரியராகப் போற்றப் பட்டவரின் ஞாபகங்கள்கூட மாந்திரீகத் தன்மையுடனிருப்பதை அவரது வாழ்க்கையின் அதிசயமாகவே கருதவேண்டியதிருக்கிறது.
நன்றி : குளச்சல் மு. யூசுஃப் , காலச்சுவடு பதிப்பகம்
***
ஒரே ஒரு சுட்டி : உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்
Posted by
ஆபிதீன்
at
11:26 AM
4 comments:
Labels:
காலச்சுவடு,
குளச்சல் மு. யூசுப்,
வைக்கம் முஹம்மது பஷீர்
Sunday, February 3, 2013
'வைக்கம்' அறைந்த அறை - தாஜ்
வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை படித்துவிட்டு நண்பர் தாஜ் நேற்று எனக்கு அனுப்பிய மெயில் இது. 'என்ன மயிர் எழுத்து எழுதுகிறேன் நான்!' என்று தனக்குள் புழுங்கிக்கொள்கிறார் நண்பர். என்னை நான் கேட்பது போலவே இருக்கிறது! - ஆபிதீன்
***
’குளச்சல்’
மொழிமாற்றத்தில் வந்துள்ள
வைக்கம் முகம்மது பஷீரின்
'உலகப் புகழ்பெற்ற மூக்கு' எனும்
சிறுகதைத் தொகுப்பை
சில நாட்களாக
வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
வாசிப்பிலான என் வேகம்
நீங்கள் அறியாததல்ல.
சாதாரண வேகமா அது!
ஆமையின் வேகம்!
வாசிப்புக்கு
ஏதோவோர் வேகம்
வேண்டித்தானே இருக்கிறது!?
முன்பெல்லாம்...
தேர்ந்த படைப்பாளிகளின்
படைப்புகளை வாசிக்க,
எனக்கு
ரூல்தடியும் பென்சிலும்
இன்றியமையாதது.
இஷ்டமான வரிகளையும்
சிலாகிக்க வைக்கும்
நுட்பமான கிளர்ச்சிகளையும்
அடிக்கோடிட்டுக் கொண்டே
வாசிப்பவன் நான்!
வாசிப்பில்,
வாசிப்பைவிட
அதுவே முக்கியமெனக்கு!.
குறிப்பிடத் தகுந்த
சில படைப்பாளிகளின்
படைப்புகளை வாசிக்கும் போது
அப் புத்தகத்தின் வரிகள் பூராவும்
நான் கிழிக்கும் அடிக்கோடுகள்
தவிர்க்க முடியாமல் போனதுண்டு!
நன்றாக ஞாபகம் இருக்கிறது
80 - களில் வெளிவந்த,
ஒன்றை விரல் அளவிலான
தடிமனே கொண்ட
சுந்தர ராமசாமியின்
'ஜே.ஜே. சில குறிப்புகள்'
மூன்று விரல் அளவில்
தடிமனாகிப் போனதை
மறக்கவே முடியாது!
நாவலான படைப்பு
காவிய தடிமனாகிப் போனதில்
பல நேரம் சிரித்திருக்கிறேன்.
வாசிப்பில் என் குணாதிசயம்
அடிக் கோடோடு நின்றுவிடுவதில்லை.
படைப்பின் வரிகளினூடே
அதன் அர்த்தபாவ சுவடுகளைப் பிடித்து
அடிமேல் அடியெடுத்தபடிக்கு
வாசிப்பவன் நான்.
என் வாசிப்பின்
இத்தனை வினோத அழகையும்
நீங்கள் அறிவீர்கள்.
சிரித்து,
முகம் சுளித்தும் இருக்கின்றீர்கள்.
அந்தச் சிரிப்பும், அந்த முகச்சுளிப்பும்
அடிக்கோடிடும்
என் சிறுப்பிள்ளைத் தனத்திற்காக மட்டுமல்ல
புதிய புத்தகத்தை இன்னும் புதிசாக
வைத்துக் கொள்ள வேண்டாமா? என்கிற
பரிசுத்த
அழகியல் சார்ந்ததென அறிவேன்.
நாமெல்லாம் கல்யாணமாகி
ஒன்றுக்கு இரண்டு
குழந்தை பெற்றவர்கள் என்பது
நினைவுக்கு வந்து தொலைய
எனக்குள் நான்...
சிரித்து கொள்வேன்.
இப்போது
என் வாசிப்பில் சிறிது முன்னேற்றம்.
அந்த வேகத்தை
குறைக்கவில்லையென்றாலும்
அடிக்கோடிடும் கவித்துவத்தை
தொடராது நான் விட்டுவிட்டேன்.
இது,
என் வாசிப்பின் முன்னேற்றமென்றோ,
கதை நெளிவுகளின் நுட்பங்களும்
புரியாமை வரிகளும்
இப்போதெல்லாம்,
உடனே புரிந்துவிடுகிறதென்றோ அர்த்தமல்ல.
அடிக் கோடிடுவதை
அழகு குறையாமல் செய்யும்
காலத்தை விழுங்கும் நேரம்...
இப்போது கஷ்டமாகிப் போனது.
வாழ்வோடான
எதிரோட்டக் குடைச்சலுக்கு
ஒரு தலை காணமாட்டேன் என்கிறது.
ஆபிதீன்...
அங்கே எங்காவது
எனக்கு பொருந்துகிற மாதிரி
எக்ஸ்ட்ரா தலை கிடைக்குமா?
எங்கே மறந்துவிட்டேனோவென
வருடா வருடம் வயதுவேறு
என்னை வருத்தி நினைவுறுத்துகிறது,
அந்த அடிக் கோடுகள்
என்னதான் கவிதையென்றாலும்
ரூல் தடியும் பென்சிலும்
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறதென்றாலும்
சாதுர்யம் பிசகாமல்
இயக்க வேண்டிய ஒன்று!
அது ஆவதில்லை இப்போது.
சிரிப்பீர்கள், சிரித்துவிட்டுப் போங்கள்.
ஆனால்...
மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
இந்தக் கழிவை
இங்கே கொட்ட
எழுதப்படுகிற கடிதமல்ல இது!
பேத்தல் எப்பவும்
நம்மை மீறிவிடும் ஒன்று!
அதுவாகவே ஆஜர் கொடுத்துவிட்டது.
வைக்கம் முகம்மதுவின்
1945 -ம், வருடத்தின்
இரண்டு கதைகளை
இந்தத் தொகுப்பில்
தீர வாசித்தேன்.
ஒன்று. 'உலகப் புகழ்பெற்ற மூக்கு'
இரண்டு. 'ஜென்ம தினம்'
தவிர, அந்தத் தொகுப்பை
இன்னும் முடிக்கவில்லை என்பது
வேறு செய்தி.
அந்த இரண்டு சிறுகதைகளின் ஊடே...
இத்தனை நாளும்...
நான் எழுதிக் கொண்டிருக்கிற
என் 'பீத்த' எழுத்திற்காக
வைக்கம் அறைந்த அறை
வலுவானது!
ஒருவகையில் சரியானது!
1945 - மகரம் (தை) மாதத்தின்
ஓர் நாளிலிருந்து
இந்த 2013 - தை மாதத்தின் ஓர் நாளில்...
என்னை பதம்பார்த்த அந்த அறை...
எதிர்பாராத சுளீர்......!
68 - வருடம் நீண்ட
அந்தக் கரம்...
இன்னும் என் வியப்பில்!
எழுத்தாளராக மட்டுமல்லாது
ஒரு கால கட்டத்தில்
குஸ்தி பயில்வானகவும் அறியப்படும்
வைக்கத்தின் அறை
அத்தனை வலு
கொண்டிருந்திருந்ததோ என்னவோ!
வீசப்பட்டு தூர விழுந்த
இடத்திலிருந்து யோசித்தேன்.
அவர் அறைந்ததில் கொஞ்சம் வருத்தமில்லை.
இன்னும் கூட அவர் என்னை
பொறிகலங்க அறைந்திருக்கலாம்.
கன்னம் சிவந்ததெல்லாம் போதாது
மூளைப் பழுதிருக்க வேண்டும்.
'என்ன மயிர் எழுத்து எழுதுகிறேன் நான்!'
அவர் அப்படி அறைந்து
வீசியெறிந்தப் பிறகேதானே
யோசிக்கிறேன் நான்!
இனியேனும் திருந்துவேனா!
இயலுமா...?
முயன்றாலும்
சாத்தியப்படக் கூடியதா எழுத்து?
வேண்டுமானால்...
நாய் வாலை நிமிர்த்தலாம்.
இயலவும் இயலும்!
இந்த இரண்டு கதைகளில்
ஜென்ம தினம்
அறைந்த அறைதான்
வலுவான வலி கொண்டது!
அந்தக் கதையில்
நிறையவும் கவிதைவரிகள் இருப்பது
நினைவுக்கு வர...
குளச்சலுக்கு போன் போட்டேன்.
''நான்...
வைக்கம் முகம்மது பசீரின்
சிறுகதைத் தொகுப்புகள் இரண்டும்
நாவல் இரண்டும்
இருபது வருடங்களுக்கு முன்னமே
படித்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மொழிமாற்றச் சேவையில்
நீங்கள் ஈடுபட நினைத்தே இருக்காத நேரம்!
அன்றைய அந்த மொழி பெயர்ப்பாளர்கள்
ஆக்கித் தந்த வைக்கமின் மொழி
இன்னொரு சாதாரண மொழி!
படித்தேன்...,
வைக்கமை படித்தாகிவிட்டது
என்பதோடு
மறந்தேன்... அவ்வளவுதான்.
இன்றைக்கு
சிலாகிக்கும் இந்தக் கதைகளைக் கூட
முன்பு நான் வாசித்திருக்கக் கூடும்!
அன்றைக்கில்லாது
இன்றைக்கு இப்படி
இந்த இரண்டு கதைகளும்
என்னை வசீகரிக்க
என்ன காரணமாக இருக்கும்?
உங்களது மொழிபெயர்ப்பில்
இன்றைய
உங்களது மொழி
கூடுதல் வித்தைக் காண்பித்திருக்கிறதா?"
வெளிப்படையாகவே கேட்டேன்.
குளச்சல் சிரித்தார்..
"கேரளா முழுமைக்கும்
இன்றைக்கும் கூட வைக்கமை
தூக்கிவைத்துக் கொண்டாடுவது
இதனால்தான் தாஜ்!" என்றார்.
நம் இஸ்லாமிய படைப்பாளிகளில்
உண்மையை
பெரும் அளவில் முன்வைக்கும் எழுத்தை
உங்களிடம்தான்
நான் அதிகமும் வாசித்திருக்கிறேன்.
இப்போது
இன்னொருவராய்
வைக்கம் முகம்மது பஷீர்!
நீங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
கோலமிடுவீர்கள் என்றால்...
அவர் அதே கோலத்தை
விரிந்த எல்லையில்
அசாத்திய லாவகதோடு
வரைந்தெடுப்பவராக தெரிகிறார்!
1945 - கேரளத்து
அரசியல் மாய்மாலங்களை...
'உலக புகழ்ப் பெற்ற மூக்கு'இல்
பின் நவீனத்துவப் பின்னலில்
அதிகத்திற்கும்
அதிரடித்திருக்கிறார்!
சுதந்திரத்துக்கு முன்னாலான
காலம் அது!
அனேகமாக
இடைக்கால அரசு
அங்கே நடந்தேறியிருக்கலாம்.
அப்பவே தொடங்கிவிட்டதாக
அறிய முடிகிறது
மலையாளிகளின் இன்றைய அரசியல்!
அந்த மக்கள்
கெட்டிக்காரர்கள் என்பது
திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கப்படுகிறது!
அதே ஆண்டில் எழுதப்பட்டிருக்கும்
'ஜென்ம தினம்'
ஒரு நாள் சம்பவமாக....
வலுவான
சிறுகதையாகியிருக்கிறது!
ஜென்ம தினமென்றால்...
பிறந்த நாளாம்
அவரது பிறந்த நாளில்
அவர் எதிர்கொள்ளும்
யதார்த்த,
வாழ்வின் எதிர்மறையான நிகழ்வுகளை...
விழிப்பில் இருந்து
தூங்கப் போகும்வரையிலான
அந்த அரைநாளின் சம்பவ அடுக்குகளை
சரளமாகப் பதிவு செய்திருக்கிறார்.
வாழ்க்கை / நண்பர்கள்/ இல்லாமை / பசி/
அரசியல்/ புரட்சி குறித்த விமர்சனம்/
நாகரீக முரண்/ கடன்பட நேரிடும் இறுக்கம்/
கழிவிரக்கம் கொள்ளவைக்கும் களவு/
கவிதை தாக்கம்...
இப்படி
அத்தனை வளையத்திற்குள்ளும்
வளைய வந்து
அரிய எழுத்தாக
இக்கதையினைப் பதிவு செய்திருக்கிறார்!
1945-ல்
தமிழக இலக்கிய வட்டத்தில்
மணிக்கொடி காலம் பிரசித்தம்.
மௌனியும், புதுமைப் பித்தனும்
ஆட்சி செய்த தருணம்.
மௌனி பெருமளவில்
மனவெளியைப் பதிவு செய்பரென்றால்...
புதுமைப்பித்தன்
மேலை நாட்டை கீழை நாட்டிற்கு
இறக்குமதி செய்து பெயர் போட்டவர்!
இன்னுமான
தனித்துவமிக்கப்
புதுமைகளையும் காண்பித்தவர்.
இவர்கள் இருவருமே
அரசியல் தொட்டு
எழுதியதாக நினைவில்லை.
அந்த ஆண்டுகளில்..
இன்றைக்கும் காணும்
வாழும் அரசியல் மாய்மாலத்தை
'உலகப் புகழ்ப் பெற்ற மூக்கு'-ல்
1945 - வாக்கிலேயே
பின்னியெடுத்திருக்கிறார் வைக்கம்!
இங்கே நான் சுட்டும்...
'ஜென்ம தினம்' ஒட்டிய
சரளமான கதையும் கூட
அன்றைக்கு
தமிழில்
அபூர்வமாகத்தான் இருந்திருக்க முடியும்.
இரண்டாயிரத்தாண்டு
வெளிவந்து பார்த்த
'பாரதி'யில்
ஓர் வசனம்
என்னால் மறக்க முடியாதது.
வெளியில் தங்கியிருக்கும் பாரதிக்கு
குடும்பதிலிருந்து ஒரு செய்தி வரும்...
'குழந்தைக்கு உடல் நலமில்லை
வைத்தியத்திற்கு பணம் வேண்டும்' என்று
பாரதி கையிழந்த நிலையில் புலம்புவார்
'காலையிலேயே
இன்றைக்கு...,
இல்லாமை கஷ்டம்
தலைவிரித்தாடுகிறது' என்பார்
அந்த இல்லாமை தரும்
விவரிக்க முடியாத வருத்தத்தை
நான் பலமுறை
எதிர்கொண்டதாலோ என்னவோ
அதையே
வேறொரு மண்ணில் பேசும்
வைக்கம் முகம்மது பஷீரின்
இந்தக் கதை
பெரிதினும் பெரிதாகத் தெரிகிறது.
தவிர,
வைக்கம் முகம்மது பஷீர்
குளச்சல் மு. யூசூப் கூட்டணி
என் இலக்கிய மனதையும்
பேதலிக்க வைத்துவிட்டார்கள்!
-தாஜ்
***
நன்றி: தாஜ், குளச்சல் மு. யூசூப் , காலச்சுவடு பதிப்பகம்
***
சிறுகதைகள்...
ஜென்ம தினம் - பஷீர் (மொழிபெயர்ப்பு : குளச்சல் மு.யூசுப்)
உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு - பஷீர் (மொழிபெயர்ப்பு : நாகூர் ரூமி), வேறு சில முக்கியமான இணைப்புகளுடன்...
மற்றும்..
ஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணலும் சில பத்திகளும்
வறட்டுச் சொறி - பஷீரின் கடிதம்
பஷீரின் உண்மையும் பொய்யும் (கேள்வி பதில்)
Posted by
ஆபிதீன்
at
11:11 AM
No comments:
Labels:
குளச்சல் மு. யூசுப்,
தாஜ்,
வைக்கம் முஹம்மது பஷீர்
Monday, February 13, 2012
ஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணலும் சில பத்திகளும்
(டிட் ஃபார் டாட் நடத்திய ஒரு நேர்காணல் - 1984)
தார்மீகமின்மையும் அக்கிரமமும் அநீதியும் இந்தளவுக்கு வெகுசாதாரணமாகி விட்டதற்கான காரணம், சமூகத்தின் மத உன்னதங்களின் வீழ்ச்சிதானே?
"நிச்சயமாக! மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி மனிதத்தன்மைக்கு உயர்த்துவது மதங்கள்தான். மதங்களில் மிகவும் இயல்பானதும் எளிமையானதும் இஸ்லாம்தான்.
கலாச்சாரச் சீரழிவில் இன்றைய இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் பங்கிருக்கிறதல்லவா?
இருக்கிறது. இங்கே ஏராளமான வெளிநாட்டுப் படைப்புகள் இறக்குமதியாகின்றன. இணைசேர்வதைக் கற்றுக் கொடுப்பவைதான் இதில் அதிகம். ஆண்-பெண் போகமும் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் பல போகிப்பதும் எப்படி என்பதை அவை கற்றுத் தருகின்றன. அதையெல்லாம் வாசித்து விட்டு இங்கிருப்பவர்கள் எழுதத் தொடங்கினால்தான் ஆபத்து. இறக்குமதி செய்யப்படுபவைகளில் நல்லவைகளும் இருக்கக் கூடும். அப்புறம் திரைப்படங்கள். அவை மனிதனுக்கு நல்லவற்றைப் போதிப்பதும் ரசிக்க வைப்பதுமாக இருக்க வேண்டும்.
முஸ்லிம்களின் பிரச்சினை பற்றித் தங்களது கருத்தென்ன?
முகம்மது நபிக்குப் பிறகு 5-6 நூற்றாண்டுகள் வரை, பொற்காலமாக இருந்தது. அதற்குப் பிறகு முஸ்லிம்கள் துயில் கொள்ள ஆரம்பித்தார்கள். 1000 வருடத் துயில். மெதுவாகச் சிலர் விழித்துக் கொண்டு எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சொல்லிப் பவுசு கொண்டாடுகிறார்கள். அறிவியல் சாஸ்திரத் துறைகளில் முதன் முதலாக உலகிற்கு அர்ப்பணிப்புச் செய்தவர்கள் முஸ்லிம்கள்தான். இதை நானாகச் சொல்லவில்லை. வரலாற்றாய்வாளர்களாகிய பென்சும், டோயன்பியும் சொன்னதுதான். அதெல்லாம் பழங்கதைகள். முஸ்லிம்கள் இப்போது தங்க வாசல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஹோனலூலு - நகரும் அரண்மனை சௌதி அரேபியாவில் பஹத் மன்னரின் கப்பல், ஆறு மாடிகள் உட்பட ஒரு ஹெலிபேடும் மருத்துவமனையும் அதிலிருக்கின்றன. ஆக மதிப்பு வெறும் 45 கோடி ரூபாய்தான். இங்கிலாந்தில் வைத்து இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்தினார்கள். 21 கோடி ரூபா செலவில். ஆக மொத்தம் 66 கோடி.
மாத்ருபூமி, மனோரமா போன்ற பத்திரிகைகளில் படித்த செய்தியில், பஹத் மன்னரின் சில கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்தைப் பற்றியும் அறிய முடிந்தது. ரியாத், மக்கா, மதீனா, ஜித்தா ஆகிய நகரங்களில் கோடி கோடியாக செலவு செய்து அரண்மனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இப்போது கடலில் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான அரண்மனைகள் எழும்பும்.
இறைத்தூதர் முஹம்மது நபியைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். முஹம்மது நபிக்குச் சொந்தமாக ஒரு படுக்கை கூட கிடையாது. காலையில் எழுந்திருக்கும் போது ஈச்சமரத்தின் கீற்றுகளால் முடையப்பட்ட பாயின் அடையாளங்கள் அவரின் உடலெங்கும் பதிந்திருக்கும். நான் வேணுமென்றேதான் "(ஸல்)" சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன். இங்கு அதை எதற்காகக் குறிப்பிட வேண்டும்?
இறைவனின் தூதராக முஹம்மது பிறந்து வளர்ந்து மரணமடைந்த நாடு சௌதி அரேபியா. திருக்குர்ஆன் அருளப்பட்ட நாடு, குர்ஆனின் முதல் வார்த்தையே வாசிப்பீராக என்பதுதான். உங்களுக்குத் தெரியுமோ என்னவோ, 82 விழுக்காடு மனிதர்கள் எழுத்து வாசனை அறியாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் சொல்வதையெல்லாம் டிட்ஃபார் டாட் பிரசுரிக்குமென்றால், இந்தப் பத்திரிகையை சில முஸ்லிம் தேசங்கள் தடை செய்யக்கூடும். இப்போது 50 முஸ்லிம் தேசங்கள் இருக்கின்றன. சுமார் 100 கோடி முஸ்லிம்களும் இருக்கிறார்கள். சுன்னி, முஜாஹித், ஜமாஅதே இஸ்லாமிய, காதியானி, அலி அல்லாஹ் முதல் 22 பிரிவு ஷீஆக்கள், மைதஸீன், துருசி, ஷாஃபி, ஹனஃபி, ஹம்பலி, மாலிக், அஃலே
ஹதீஸ், அஃலே குர்ஆன் இப்படிப் போகின்றன அவை. இதில் உண்மையான முஸ்லிம்கள் யார்? இஸ்லாத்துக்குள் அரசாட்சி இருக்கிறதா? மன்னர்களும் சுல்தான்களும் சக்கரவர்த்திகளும் முஸ்லிம் தேசங்களில் ஏன் இப்படி இராணுவ ஆட்சி. அப்புறம் இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகள். இந்தியப் பிரிவினைக்குப் பின் மேலும் தீவிரமடைந்திருக்கிறது. இந்தியாவை இரண்டாகப் பிளந்து விடக் கூடாது என்று மௌலானா அபுல்கலாம் ஆசாத்கான், அப்துல்கபூர் கான், ஷேக்
முகம்மது அப்துல்லாஹ், மௌலானா அபுல் அஃலா மௌதூதி போன்ற ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் சொன்னார்கள். யார் கேட்டார்கள்? அப்படியாக இந்தியா பிளவுபட்டது? பிறகு என்ன நடந்தது? முஸ்லிம்களுக்கென்று பிடிவாதமாக நின்று அடைந்த பாக்கிஸ்தானில் இஸ்லாமிய நடைமுறைகள் இருக்கின்றதா? உலகளவில் முஸ்லிம்கள் மிக அதிகமாக வாழும் முஸ்லிம் தேசம், இந்தப் பாரத தேசம்தான். முஸ்லிம்களின் வீரம் அழிக்கப்பட்டு, இறைவா, என்னென்ன
அனர்த்தங்கள். பாக்கிஸ்தானில் ஆறரைக் கோடி முஸ்லிம்கள். பங்களாதேஷில் ஏழரைக்கோடி முஸ்லிம்கள். கொஞ்சம் பழைய கணக்குத்தான். தேசம் பிரிக்கப்பட்டதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது? முன்பு இராணுவம் காவல்துறை இரண்டிலுமே சரிபாதிக்கு மேலாக முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்தார்கள். இப்போது?
இராணுவத்திலும் காவல்துறையிலும் இப்போது யார் இருக்கிறார்கள்? காக்காமார்களே, காக்காத்திமார்களே! இறைவா, அறிவைப் பயன்படுத்தாத இந்த இஸ்லாமிய மக்களைக் காப்பாற்ற யாரிருக்கிறார்கள்?
மத-இறை மறுப்பாளர்களைக் குறித்தும் வெறும் உலகாயத வாதம் குறித்தும் என்ன சொல்கிறீர்கள்?
அது சரி இப்போதைய பெரும் பிரச்சினை கடவுள்தான் இல்லையா? கடவுளோ மதமோ இல்லாத ரஷ்யாவிலும் சீனாவிலும் காவல்துறையும் சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் கிடையாதா? தூக்குமரங்கள் கிடையாதா? சீனாவும் ரஷ்யாவும் இராணுவத்தை எதிரெதிராக அணிவகுத்து நிறுத்தியிருக்கிறதல்லவா? அவர்களுக்குத்தான் மதமோ கடவுளோ கிடையாதே.
விமர்சனம் என்ற பெயரில் குர்ஆனைக் குறை கூறும் போக்கைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
குர்ஆனில் விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. மொழிபெயர்ப்பை நான் சொல்ல வரவில்லை. அப்புறம் விமர்சிப்பதற்கான இடங்களை குர்ஆனின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் உருவாக்கிக் கொடுக்கிறார்கள். குர்ஆனில் சொல்லப்பட்டவைகளுக்கு எதிராகவே அவர்களின் வாழ்க்கையையும் போதனைகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மற்றொரு விஷயம், குர்ஆனை வெறும் மொழிமாற்றம் மட்டும் செய்தால் போதாது. குர்ஆன் என்பது அருளப்பட்ட வேதம். அது உலகத்தின் இறுதி நாளை வரை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் ஒரு மார்க்க தரிசனம். எல்லா மொழிகளுக்கும் காலமாற்றங்களுக்கேற்ப மொழியிலும் லிபியிலும் அர்த்த வேறுபாடுகள் நிகழும். அப்படி நிகழ்ந்துமிருக்கிறது. எனவே குர்ஆன் அருளப்பட்ட காலத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அக்கால கட்டம் சார்ந்து சொல்லப்பட்ட பொருள் எதுவோ அதைப் படித்து புரிந்து கொண்டுதான் மொழிமாற்றம் செய்ய வேண்டும். இது மிகச் சிரமமான ஒரு விஷயமும் கூட. டாக்டர் மோரீஸ் புக்காய் இந்த விஷயத்தில் பல முயற்சிகளைச் செய்து மிருக்கிறார். இவரது பைபிள், குர்ஆன் சாஸ்திரம் படித்திருக்கிறீர்களா? இதில் நான் பத்துப் பிரதிகளை வாங்கி
விநியோகித்திருக்கிறேன். சரி நான் கேட்கிறேனே, இந்த விமர்சகர்களால் எதைத்தான் விமர்சிக்க முடியாது? குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த அல்லாமா யூசுப் அலி, லண்டன் தெருவொன்றில் குடித்து விட்டு விழுந்து கிடந்ததாகச் சொல்லி பிரச்சாரம் செய்தார்களே சிலர். யூசுப் அலி குடிப்பதற்காகவென்றே லண்டனுக்குப் போயிருக்கிறார். சிறி நகரிலோ, டெல்லியிலோ, பம்பாயிலோ கல்கத்தாவிலோ அவருக்கு அது கிடைக்கவில்லை போலிருக்கிறது. லண்டன் தெருவொன்றில் யூசுப் அலி தளர்ந்து விழுந்ததும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுமான சம்பவம் உண்மைதான். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். தளர்வாதமோ எதுவோ, அவரை எனக்குத் தெரியும். காஷ்மீரின்
அடிவாரக் கிராமமொன்றில் ஒரு கூடாரம் அமைத்து அதில் வைத்து குர்ஆனை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் போது, நான் அங்கே போயிருந்தேன். அவர் மொழிபெயர்த்த குர்ஆனின் ஒரு ஜுஸ்உவின் காப்பியை எனக்குத் தந்துமிருக்கிறார். அக்காலகட்டத்தில் நான் முகம்மது அசதுடன் பரிச்சயமாகிறேன். "ரோடு டு மெக்கா", "இஸ்லாம் ஆன் த க்ரோஸ் ரோடு" போன்ற நூல்களின் ஆசிரியர் இந்த முகம்மது அசத். இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு யூதர். லியோபோல்ட் வெயிஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அரேபியாவுக்குச் சென்று அரபு மொழியைப் படித்து விட்டு, காஷ்மீருக்கு வந்து சிறி நகரில் தங்கியிருந்தார். ஹதீஸ்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் அப்போது. துணைக்கு கண்பார்வையற்ற ஒரு அரபுப் பண்டிதரும் இருந்தார். இஸ்லாம் ஆன் த க்ரோஸ் ரோடு என்ற நூலையும் ஹதீஸின் முதற் தொகுப்பையும் எனக்குத் தந்தார். அப்போது நான் ஷெக் அப்துல்லாவின் விருந்தினனாக இருந்தேன். ஷெக் அப்துல்லாவுடையவும் அசத், மௌதிகளுடையவும் ஆன்மாவுக்கு அல்லாஹ் நித்திய சாந்தி அருள்வானாக. இஸ்லாமிய மக்கள் அறிவைப் பிரயோகித்து சிந்தனை செய்வதில் அல்லாஹ் நாட்டம் செலுத்தி அருள் புரிவானாகட்டும்.
தமாம்
***
மர்ஹூம் பஷீர் அவர்களின் ’ஆனைவாரியும் பொன்குருசும்’ எனும் நூலில் 1992ல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் அவராற்றிய செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை சொற்பொழிவிலிருந்து ஐந்து பத்திகள் - ஆபிதீன் பக்க வாசகர்களுக்கு போனஸாக...(அனுப்பி உதவியது : ஹனீபாக்கா)
பகல் முழுவதும் சங்கீதத்தில் மூழ்கி மர நிழலில் அமர்ந்திருப்பேன். தனியாக இருக்கும் போது, எதிர்ப்புறம் இருக்கும் காலியான நாற்காலிகளை கவனித்துப் பார்ப்பேன். எனக்கு பாட்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும். மனதின் சமநிலை தவறியிருந்ததால், கோபம் வருவதற்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. கூட்டு வாழ்க்கையில் கோபம் வருவதற்கான காரணங்களும் நிறையவே இருக்குமல்லவா? எழுதுவோன் என்ற நிலையிலும் மனதிற்கு அமைதி
தேவைப்பட்டது. என் மனதை சாந்தப்படுத்துவதற்கு இசை எப்போதுமே உதவியாக இருக்கும். சிறு வயது முதலே எனக்கு சங்கீதம் என்றால் மிகவும் பிடிக்கும். 60 வருடங்களுக்கு முன் இறந்து போன ஒரு பெண்மணியின் இனிமையான பாடலை இப்போது நான் கேட்கிறேன். இசைத்தட்டிலிருந்த பெயர் அழிந்து போய் விட்டது. அந்தப் பெண்மணி பாடுகிறாள். தங்கமே நீ இப்போது எங்கே இருக்கிறாய்? முடிவளர்த்த சூனிய வெளியிலா? எனக்கு லேசான அழுகை வரும்
போலிருக்கிறது.
கொஞ்ச நாட்களுக்கு முன் எங்களுடைய அதாவது என் மனைவியுடைய கோழிக்கூண்டில் ஒரு பெரிய ராஜநாகம் நுழைந்து நான்கு வெள்ளை லகான் கோழிகளைக் கொன்று விட்டது. அப்போது இரவு 2மணி. கோழிகளின் கூச்சல் கேட்டு வீடே விழித்துக் கொண்டது. நான் போய் பார்க்கும் போது, விளக்குகளையெல்லாம் போட்டுக் கொண்டு மாதர் குல மாணிக்கங்கள் ராஜநாகக் கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கம்புகளுடன் வேலிகளைப் பொத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரும் வந்திருந்தார்கள். கல்யாணியின் மேற்பார்வையில் ஐந்தாறு பெண்கள் நானுட்பட இரண்டு ஆண்கள்,ஆட்சிப் பொறுப்பை அழகிகள் ஏற்றெடுத்திருக்கிறார்கள். மண்ணெண்ணெய் டப்பாவிலிருந்து உறிஞ்செடுக்கும் சிறிஞ்சி போன்ற ஒரு கருவியால் தட்சகனின் முகத்திலடித்தார்கள். ரொட்டி சுடுவது போல், சுற்றி மூன்று புறமும் கல். வெளியே பலகை அடுக்கி ஒரு புறம் கம்பி வலை. முன்புறம் வாசல். கம்பி வலையினூடேதான் தட்சக வதம் நடந்தது. அழகிகள் அரசு செய்வதை நானொரு பதினைந்து நிமிடம் கவனத்தேன். பாம்புக்கு பரம சுகம். அது மண்ணெண்ணெயில் குளித்துக் கொண்டிருந்தது. அழகாக சீறிக் கொண்டுமிருந்தது.
என் தகப்பனார் நிலத்தில் மேற்கோரமாக முடைந்த தென்னங்கீற்றுகளால் சின்னதாக ஒரு குடிசை கட்டினார். குடிசை கட்டுவதற்கு காலியான இடம் அங்கேதான் இருந்தது. அந்தச் சிறு குடிசையின் வடக்குப்புறம், சுத்தமாக தண்ணீருள்ள ஒரு பெரிய குளம் இருந்தது. குளக்கரையில் ஒரு பெரிய மாமரம். அந்த மரம் நிறைய சிவப்பு நிறத்திலான மாங்காய்கள். அந்த எட்டு ஒன்பது ஏக்கர் நிலத்தில் ஏராளம் மரங்களிருந்தன. தென்னை, மா, பலா ஐனி பாக்குமரங்கள் அப்புறம் வாழை முருங்கை பப்பாளி எனப் பல வகை மரங்கள். ஆற்றோடு சேர்ந்து நெடுநிலத்தில் நூறு நூற்றைம்பது அடி அகலத்தில் தோட்டத்திலிருந்து நான்கைந்தடியில் பள்ளமான ஒரு பகுதி. நாயின் கண்ணம் எனப்படும் பாய் முடைவதற்கான கோரை - ஆற்றைத் தொட்டு நீளமாக வேலி போல் நாயின்கண்ணத்தில் பூத்த வெள்ளை மலர்கள், மழைக் காலங்களில் அந்தப் பள்ளமான பகுதி, மழை வெள்ளத்தில் மூழ்கி விடும். நீர் வற்றிய பிறகு, அதில் நிறைய வண்டல் மண் படியும். நல்ல உரச்சத்துள்ள புது மண். அங்கு மானாவாரியாக நல்ல விவசாயம் நடக்கும். வெண்டக்காய், பாகற்காய், மிளகாய், பயறு வகைகள், புடலங்காய், வெள்ளரி, பீக்கங்காய், பூசணி, சேனைக்கிழங்கு, இஞ்சி, கும்பழங்காய், கரும்பு வகை வகையான காய்கறிகள்.
அது ஒரு மோசமான காலகட்டமாக இருந்தது. முஸ்லிம்களுக்கு அரபு மட்டுமே படிக்கலாம். மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி எல்லாம் நரகவாசிகளான காபிர்களின் மொழிகள். அவற்றைப் படிக்கவோ படிக்க வைக்கவோ கூடாது. என் பெற்றோர்கள் முதல் என்னை அரபு படிக்க வைத்தார்கள். குர்ஆன் முழுவதும் படித்தேன். இறை வசனங்கள்தான் குர்ஆன். அதன் தொடக்கமே வாசிப்பீராக. மனித குலத்தை எழுதுகோலால் எழுதக் கற்றுத் தந்த கருணாமயனான உன் இறைவனின் திருநாமத்தால் வாசிப்பீராக. மனித குலத்துக்கு எழுதக் கற்றுத் தந்தது அரபு மொழி மட்டுமல்லவே. மொழிகள் மனிதர்களிடையே ஏராளமாக இருக்கிறதல்லவா? எழுதவும் வாசிக்கவும் பயில வேண்டும். எவ்வளவோ
காலமாற்றங்கள் நிகழ்ந்த பிறகும் முஸ்லிம் சமூகம் ஏன் இதைப் புரிந்து கொள்ளவே இல்லை இறைவா?
ஒரு நாள் சில பேர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஆள் வந்து கொஞ்சத் தூரத்தில் தென்னை மரத்தில் சாய்ந்து நின்றார். மூன்று நான்கு தடவைகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஒரு திருடன்.
மற்றவர்கள் அனைவரும் போன பிறகு திருட்டு நண்பன் பக்கத்தில் வந்தான். நான் நாற்காலியைச் சுட்டிக்காட்டி உட்காரும்படி சொன்னேன். ஆனால் அவன் உட்காரவில்லை. தேநீர் கொடுத்தேன். அதை வாங்கிக் குடித்து விட்டு, தூரத்தில் குழாயடியில் சென்று தம்ளரை கழுவிக் கொண்டு வந்து ஸ்டூலில் வைத்தான். நான் கேட்டேன், "சௌக்கியந்தானே?"
"குருவைப் போன்றவர்களின் ஆசீர்வாதத்தால்"
நான் கேட்டேன், "அப்புறம் என்ன விசேஷங்கள்?"
"குருவின் ஆசீர்வாதத்துடன் எனக்கு ஒரு ரூபாய் வேண்டும். நான் ஒரு இடம் வரை போகப் போகிறேன். குரு, கை நீட்டம் தர வேண்டும்".
நான் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு, திருட்டு மங்களகரமாக வெற்றி பெற வாழ்த்தினேன்.
***
நன்றி: காலச்சுவடு பதிப்பகம் , குளச்சல் மு. யூசுப், எஸ்.எல்.எம். ஹனீபா (slmhanifa22@gmail.com ) , நளீம்
Tuesday, February 7, 2012
வறட்டுச் சொறி - பஷீரின் கடிதம்
சொறிந்துகொள்ள சுகமான பதிவு...! கண் அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கும் ஹனிபாக்கா, 'பள்ளிப்பருவத்தில் பார்த்த பாவங்களெல்லாம் பழுத்த பருவத்தில் பதம் பார்க்கிறது' என்கிறார். இந்த நிலையிலும் - ஆபிதீன் பக்கங்களூக்காக - பஷீரின் கடிதத்தை கஷ்டப்பட்டு அனுப்பியிருக்கிறார் - தம்பி ஸபீரின் உதவியுடன். எனக்கும்தான் வலது புருவத்தில் பெரிய கட்டி வந்து வலி தாங்க இயலவில்லை. (ஏற்கனவே மொகம் ’கட்டி’ லட்சணம்!). ’இதுக்குத்தான் ரொம்ப உத்துப் பார்க்கக்கூடாதுங்குறது...’ என்கிறாள் என் அஸ்மா. அதாவது, கம்ப்யூட்டரை. எல்லா வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு நண்பர்களுக்காக அவ்வப்போது பதிவிடுகிறேன். ஆமாம், இதெல்லாம் எதற்கு? மேலும் சில பாவங்களைப் பார்க்கத்தான்! - ஆபிதீன்
***
அருமை ஆபிதீன்,
வைக்கம் முகம்மது பஷீரின் ’உண்மையும் பொய்யும்’ நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏன், ஒவ்வொரு எழுத்திலும் பஷீரின் விஸ்வரூபம் நம்மை ஆட்கொள்ளும் விந்தை அலாதியானது. பஷீருடைய கதைகளைப் போலவே அவரின் கடிதங்களையும் வேகத்துடனும் சுவாரசியங்குன்றாமலும் நம்மால் வாசிக்க முடிகிறது. எட்டுத் தினங்களில் மூன்று தடவைகள் இந்நூலைப் படித்து சாதனை படைத்திருக்கிறேன்.
பேப்பூர் சுல்தான், சூபி ஹஸரத் தமது கடிதங்களின் மூலமாக துயரம் சூழ்ந்த காரிருளில் நம்மைத் தள்ளிவிட்டு கைகொட்டிச் சிரிக்கிறார். அவரின் சிரிப்பில் நமது துயரம் கானல் நீராகிறது. நாமும் களிகொண்டாடுகிறோம். நாளை மறுமையில் அவரைக் காணும் பாக்கியத்தை ஏக இறைவன் எழுத்தாளராகக் கோலம் போடும் நம்மனைவருக்கும் நசீபாக்குவானாக.
அன்புடன் ஹனீபா காக்கா.
***
வறட்டுச் சொறி
எரணாகுளம்
09.08.1955
பத்திரிகை அதிபர் கே. பாலகிருஷ்ணன்
கௌமுதி
திருவனந்தபுரம்
மரியாதைக்குரிய தலைவரே!
ஒரு நிம்மதியுமில்லை. காய்ச்சல், ஜலதோஷம், பெருண்ண தாமஸ், எம்.பி. கிருஷ்ணபிள்ளை, தங்களுடைய கடிதங்கள், பால்யகால சகி, ராமு காரியாத், ஆண்டவா, இனி என்னவெல்லாம் வியாதிகள் ஒரு மனிதனுக்கு வரவேண்டும். போதாக்குறைக்கு அந்த வறட்டுச்சொறியும் வந்து விடுமோ என்ற பயமும் வந்துவிடுமோ என்ற பயம் வேறு! என்னைத் தொந்தரவு செய்வதற்கு தங்களது நிரந்தர ஊழியரான பெருண்ண தாமஸ் மட்டும் போதாது. எதற்குத் தாங்கள் ராமு காரியாத்தையும் எம்.பி. கிருஷ்ணபிள்ளையையும் அனுப்பி வைத்தீர்கள்?
எனக்கு இப்போதும் புக் ஸ்டால் பக்கம் போகவே முடியவில்லை. அங்கே எம்.பி கிருஷ்ணபிள்ளை இருக்கிறார். "எழுதியனுப்பி விட்டீர்களா?" நான் தங்கியிருக்கும் இடத்தில் நிரந்தரமாகவே ராமு காரியாத் தங்கியிருக்கிறார். "எழுதி அனுப்பி விட்டீர்களா?" எதை எழுதி அனுப்பச் சொல்கிறார்களோ? கதை, கவிதை போன்றவற்றின் காலம் முடிந்து விட்டதாக ஞானிகள் ஸ்தாபிதம் செய்து சொல்லி விட்டார்கள். உண்மையின் காலம் முடிவடைந்து போய்விட்டதாக ஏதாவது ஞானிகள் சொல்லியிருக்கிறார்களா? சொல்லவில்லையென்றால், இங்கே இரண்டு உண்மைகளையும் போட்டு உடைத்து விடலாம் என்று நினைக்கிறேன். அப்படியாக இருக்கும் வேளையில், எனக்கு உடல் பூராவும் பயங்கரமாக ஊரல் எடுப்பது போல் தோன்றும். கைவிரல்களின் இடையில்தான் அதிகமான உணர்வு. ஆனால் சொறிந்து கொள்ளத் தேவைப்படாது. உண்மையில் அரிப்பே கிடையாது. வெறும் நமைச்சல், சும்மா தோன்றுகிறது.
இது எப்படி வந்தது என்பதையும் சொல்லிவிடுகிறேன். நூற்றாண்டு காலப் பழக்கம் உள்ளதும், பயங்கர அரிப்பெடுப்பதுமான வறட்டுச்சொறியுடன் கொல்லத்திலிருந்து ஒரு கம்யூனிஸ்ட் நாயர் என்னைத் தேடி வந்தார். தங்களைப் போல், ஒரு விசேஷ பதிப்பு வெளியிடுபவர். தங்களைப் போன்ற ஒரு பத்திரிகை அதிபர். பத்திரிகையின் பெயர் ஜனயுகம் என்று நினைக்கிறேன். அவரது பெயர், வைக்கம் சந்திரசேகரன் நாயர். உடல் முழுவதையும் ரசனையுடன் சொறிந்து கொண்டே வந்தேறினார். நான் அப்போது பஷீர் புக்ஸ்டாலில் உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் புத்தகங்களெல்லாம் விற்ற பணத்துடன் அப்படியே ஸ்டைலாக உட்கார்ந்திருந்தேன். உலகத்தில் யாரோடும் எந்தப் பிணக்கமும் இல்லை. ஆனால், மேற்சொன்ன சந்திரசேகரன் நாயரைக் கண்டதும் லேசான பதற்றம் என்னைத் தொற்றிக் கொண்டது.
ஒரு, இரண்டோ மூன்று கடிதங்களை மேற்படி வறட்டுச் சொறியன் எனக்கு அனுப்பி வைத்ததாக நினைவு வந்தது. கதை சம்பந்தமாகத்தான். நான் பதிலெதுவும் அனுப்பவில்லை. இப்போது ஐயா நேரடியாகவே வந்து விட்டார். நான் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். வ.சொ.ச. நாயர் (வறட்டுச் சொறியன் சந்திரசேகரன் நாயர்) முதலில் சிரித்தார். பிறகொரு காகிதத்தை விரித்து புக் ஸ்டாலின் நட்டநடுவில் திண்ணையில் அமர்ந்து பொதியை அவிழ்த்து, வெற்றிலை போடுவதற்கான ஆயத்தத்தில் இறங்கினார். நான் சொன்னேன். "கண்ட கண்ட நாயர்கள் வந்திருந்து வெற்றிலை போடுவதற்கான மடம் ஒன்றுமில்லை இது".
"நாயர் ஒரு புத்தகம் வாங்க நினைத்திருக்கிறார்"
நான் சொன்னேன். "இருக்கட்டும். ஆனாலும் இங்கே உட்காரக் கூடாது".
வறட்டுச் சொரியன் சந்திரசேகரன் நாயர் அசைந்து கொடுக்கவில்லை. அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. புக் ஸ்டாலின் பக்கத்தில் நான்கைந்து தொலைபேசிகள் இருக்கின்றன. நான் தங்கியிருக்கும் இடத்திலும் தொலைபேசி வசதி இருக்கிறது. இதெல்லாம் இருப்பதால், வாழ்க்கை கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருந்தது. வறட்டுச் சொரியன் சந்திரசேகரன் நாயரிடம் சொன்னேன்;
"இப்பொ வந்துர்ரேன்"
தொலைபேசி அழைப்பு பிரபாத் புக் ஸ்டாலிலிருந்து. கம்யூனிஸ்ட் தலைமையகம். அங்கேயுள்ள உன்னிராஜாவாக இருக்குமென்று தோன்றுகின்றது. அவர் சொன்னார் : "வைக்கம் சந்திரசேகரன் நாயர் எனும் பெயரில் கொல்லத்திலிருந்து ஒரு வறட்டுச் சொறியன் பஷீரைத் தொந்தரவு செய்வதற்காக அங்கே புறப்பட்டிருக்கிறார். கதை எழுதிக் கேட்பதற்காக இருக்குமென்று நினைக்கிறேன். வேண்டுமென்றால் தலைமறைவாகி விடுங்கள்"
நான் சொன்னேன் : "அந்த வறட்டுச் சொறியன் நாயர், ஒரு பேப்பரை விரித்து புக் ஸ்டால் திண்ணையில் குந்தியிருக்கிறார். என்ன செய்யலாம்? அடித்துக் கொன்று வண்டியில் போட்டு ஆற்றில் கொண்டு தள்ளிவிடவா?"
"எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இங்கே ஒரு கயிற்றுப் பாயில் உட்கார்ந்து உடல் முழுவதும் வறட்டுச் சொறியுடன் பல்லிளித்துக் கொண்டிருப்பார். நாங்கள் யாருமே அவரைத் தொடுவதில்லை"
"தொடாமல் எப்படிக் கொல்வது?"
நான் திரும்பி வரும் போது, தோழர் வறட்டுச் சொறியன் சந்திரசேகரன் நாயர் ஒரு சேரை எங்கிருந்தோ தேடியெடுத்துக் கொண்டு வந்து, மேஜையின் பக்கத்தில் போட்டு அமர்ந்திருந்தார். கடையின் முன்புறம் எங்கும் வெற்றிலையைத் துப்பிச் சிவப்பாக்கியிருந்தார்.
"ஒரு யோக்கியன் இப்போது இங்கே வந்திருப்பதாக ஆட்கள் புரிந்து கொள்வார்கள்" வறட்டுச் சொறியன் சந்திரசேகரன் நாயர் சொல்கிறார்.
நான் சொன்னேன்: "எனக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது. கே.பாலகிருஷ்ணன், பெருண்ண தாமஸ், எம்.பி. கிருஷ்ணபிள்ளை, ராமு காரியாத், பால்ய காலத் தோழியின் ஸ்கிரீன் பிளே, இப்படியாகப் பல நோய்கள்" பிறகு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னேன்.
வறட்டுச் சொறியன் நாயர், "நான் தொந்தரவு செய்ய மாட்டேன். உடனடியாக இடத்தைக் காலி செய்து விடுகிறேன். அந்த இரண்டு பக்கங்களுக்கான இடத்தை மட்டும் எழுதித் தந்து விடுங்கள். போதும்"
நான், "நேரமில்லை"
"ஏதாவது எழுதுங்கள் பஷீர்" என்றபடி வறட்டுச் சொறியன் நாயர் என்னைத் தொட்டு விட்டார்.
தொட்டார் என்று கூடச் சொல்லிவிட முடியாது. தாடையைப் பிடித்துத் தடவி விட்டார். பல தடவைகள். வறட்டுச் சொறியன் நாயர் என்னை விடுவதாக இல்லை. சாப்பாடும் தூக்கமும் எல்லாமே என்னிடந்தான். கூடவே சம்பாஷனை வேறு. இதனிடையே வேறு ஒரு ரகசியத்தையும் சொன்னார். அவரும் மனைவியுமாக பாலனின் வீட்டுக்கு வரப் போகிறார்களாம். மரியாதைக்குரிய விருந்தினர்களாகத்தான். வறட்டுச் சொறியன் நாயரின் மனைவிக்கும் வறட்டுச் சொறி இருக்கிறது. இதை மேற்படியானே என்னிடம் சொன்னார். எதையோ ஒன்றை எழுதிக் கொடுத்தேன். ஒரு நல்ல பாய், ஒரு தலையணை, ஒரு பெட்ஷீட், இவ்வளவையும் பிறகு நான் எரித்து விட்டேன். கார்பாலிக் சோப் போட்டு நான் பல தடவை குளித்தேன். ஒன்றிருந்து ஊசியும் போட்டுக் கொண்டேன். இருந்த பிறகும் எனக்கு இப்போதும் சொறியத் தோன்றுகிறது. அவரும் அவரது மனைவியும் உங்களது வீட்டுக்கு மரியாதைக்குரிய விருந்தினர்களாக வந்தால், என்னைப் பற்றிய பொய்கள் சொல்வார்கள். மேற்படியானும் நானும் கடையில் இருக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது. அன்றைய தபால்கள் வந்த போது, அதில் கௌமுதியும் இருந்தது. நான் அதன் கவரைப் பிரித்து, கசங்கியிருந்த பகுதிகளைச் சரிசெய்து மேஜையின் மீது வைத்தேன். உடனே ஒரு ஆள் வந்து மூன்றணா தந்து கௌமுதியை வாங்கிக் கொண்டு போனார். இது ஒவ்வொரு வாரமும் நடப்பதுதான். இதுதான் உண்மை. நான் கௌமுதியை வாசிக்க வேண்டுமென்றால், எனக்கு ஆறு பிரதிகளையாவது இலவசமாக அனுப்பித் தர வேண்டும்.
நான் இதையெல்லாம் எழுதுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. வறட்டுச் சொறியன் நாயருக்கு நான் எழுதிக் கொடுத்தது ஒரு கடிதந்தான். அதில் நான் தங்களை உடல் ரீதியாகத் தொந்தரவு செய்யப் போவதாக எழுதியிருந்தேன். திருவனந்தபுரத்துக்கு வந்தல்ல. நீங்கள் எரணாகுளத்துக்கு வரும்போது, உங்களின் கையைப் பற்றி நெரிப்பேன். அவ்வளவுதான். இது சும்மா ஒன்றுமல்ல. ஐக்கிய கேரளம் சம்பந்தமான கை நெரிப்பு. நியாயமான காரணத்துடன்.
ஐக்கிய கேரளத்திற்கு ஒரு தலைநகர் வேண்டுமல்லவா. அது திருவனந்தபுரமாக இருக்கட்டும் என்று தாங்கள் கௌமுதியில் எழுதியிருந்ததாக நம்பகத்தகுந்த ஒருவர் சொன்னார். இதைக் கேட்ட போது, லேசான கோபமும் வந்தது. பஷீர் புக் ஸ்டால் எரணாகுளத்தில் இருப்பதால், கேரளத்தின் தலைநகர் எரணாகுளத்தில்தான் அமைய வேண்டும். இதுதான் சரியான நியாயமும் கூட. இத்துடன் மற்றும் நூறு வித சரியான நியாயங்கள் என்னிடமிருப்பதாகவும் சொல்லியிருக்கிறேன். ஆனால், அதிலொரு நான்கை இப்போது மறந்து விட்டேன். அந்த நான்கையும் நினைவுபடுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, வேறு சில பிரச்சினைகள் உருவாகின. திருவனந்தபுரத்திலிருந்து ஒரு மானிய மாது இங்கே வந்தார். பெண் நாயர். கே. சரஸ்வதி அம்மா. அவர் சினிமா பார்க்கச் சென்றார். மார்னிங் ஷோ. பொதுவாக எரணாகுளத்து வாசிகளான நாங்கள் மார்னிங் ஷோ பார்க்கப் போவது கிடையாது. அந்த நேரக் காட்சி, வந்தேறிகளுக்கானது. மேற்படி திருவனந்தபுரவாசியான மானிய மாது, அரங்கத்திற்குள் நுழைந்ததும் பெரிய கூக்குரல்கள் கேட்டிருக்கின்றன. அரங்கு முழுவதும் மாணவர்களும் மாணவிகளும் நிறைந்திருந்தார்கள். அவர்கள் அமைதி காக்கவில்லையா. உதவாக்கரைகள் போல் கூச்சலிட்டார்களா? எல்லாம் முடிந்து மானிய மாது புக் ஸ்டாலுக்கு வந்த பிறகு, பேச்சினூடே ஐக்கிய கேரளத்தின் தலைநகரமாகப் போகும் அழகான நகரம் எரணாகுளம்தான் என்று நான் குறிப்பிட்டேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது. "துக்கிரிகளின் தேசம் இந்த எரணாகுளம். திருவனந்தபுரத்தைப் போன்ற அழகும் பண்பாடுகளும் நிறைந்த ஒரு பெரிய நகரம் இருக்கும் போது, இந்த சப்பைத்தனமான நகரை ஏன் ஐக்கிய கேரளத்தின் தலைநகராக்க வேண்டும்?"
எரணாகுளம் துக்கிரிகளின் தேசம், சப்பைப்பட்டணம், திருவனந்தபுரத்திலிருந்து வந்த அந்த மானிய மாது மற்றொரு குற்றமும் கண்டுபிடித்தார். கொசுவும் தமிழர் குஷ்டரோகிகளும் இந்த இரண்டு கூட்டமும் எரணாகுளவாசிகள் அல்லவே. திருவனந்தபுரத்துக் காரர்கள், எரணாகுளத்துக் காரர்களைப் பற்றி இப்படி நூற்றுக்கணக்கான குற்றங்களைச் சொல்கிறார்கள். போகப்போக கள்ள நோட்டு அடிப்பவர்கள், எரணாகுளத்துக் காரர்கள்தான் என்றும் சொல்லிவிடுவார்கள். பெரியோர்களே, ஆகவே எங்களை விட்டு விடுங்கள். ஐக்கிய கேரளத் தலைநகரை எரணாகுளத்தில் அமைக்க வேண்டாம்.
எச்சரிக்கை, திருவனந்தபுரத்திலிருந்து இனி யார் வந்தாலும் உதைப்போம்... இந்த விஷயத்தில் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. திருவனந்தபுரத்தில் தடியன்களும் பயில்வான்களும் நிறையப் பேர் இருப்பதாக அறிகிறோம். ஆகவே, திருவனந்தபுரத்துக்காரர்களை உதைப்போம் என்பதை எந்த நிபந்தனைகளும் இன்றி வாபஸ் பெறுகிறோம். என்னை விடப் பலவீனமானவராக அங்கே இருக்கும் ஒரேயொரு ஆள் பாலன் மட்டுந்தான். எனவே, பாலன் எரணாகுளத்துக்கு வரும் போது கையை நெரித்துக் குலுக்குவேன். அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று பிகே. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார். என்ன காரணத்துக்காக என்றா கேட்கிறீர்கள்? அவர் தங்களிடம் ஒரு விஷயம் சொல்ல என்னிடம் சொல்லியிருக்கிறார். கௌமுதி விசேஷ பதிப்பில் அவரது கட்டுரையுடன் வழக்கமாக ஒரு படத்தையும் வெளியிடுவீர்களல்லவா? அதை இந்தத் தடவை போடக்கூடாது. படத்தில் இருப்பதை விட அவர் அழகானவர். திருமணமாகாதவரும் கூட.... இது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்கு நல்ல வரலாறு ஒன்றினை நான் எழுதியனுப்புகிறேன். விசேஷ பதிப்பிற்கு அல்ல. விசேஷ பதிப்பை வாசித்து நான், ஞானியாக வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், ஒரு ஆறு பிரதியையாவது இலவசமாக அனுப்பித் தாருங்கள். அந்தப் பழைய சந்திரிகாதான் இப்போதும் தங்களுடைய மனைவியென்று நம்புகிறேன். தாங்களும் பிள்ளைகளும் பிள்ளைகளின் தாயும் நலமுடன் வாழப் பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு
பஷீர்
பிற்குறிப்பு: மரியாதைக்குரிய கேசவனை நான் விசாரித்ததாக சொல்லவும். அவருடைய வாழ்க்கைப் போராட்டம் சுறுசுறுப்பாக செல்கிறது. பஷீர் புக் ஸ்டாலில் அவர் பெரிய இலக்கியவாதியாக இடம்பிடித்திருக்கிறார். தங்களது "நிறமில்லாத வானவில்" சை! அது போன்ற கச்சடா புத்தகங்களை மூலையில் குவித்துப் போட்டிருக்கிறேன். சாதாரணமாக பஷீர் புக் ஸ்டாலில் ஒரு ஆளை இலக்கியவாதியாக அங்கீகரிக்க வேண்டுமென்றால், அவருடைய பெயரில் மூன்று புத்தகங்களாவது வெளி வந்திருக்க வேண்டும். தாங்கள் வேகமாக இன்னும் இரண்டு புத்தகங்களை உருவாக்கி விடுங்கள். புத்தக அலுமாரிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் தருகிறேன். நூலாசிரியர்களை இங்கே அப்படித்தான் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறேன். இரண்டு மூன்று, நான்கு வரிசைகளைக் கைப்பற்றியிருப்பவர்கள் எஸ்.கே. பொட்டேகாட், தகழி, பொன்குண்ணம்வாக்கி, கேசவதேவ், காரூர் நீலகண்ட பிள்ளை போன்றவர்கள்தான். நமது டிசி கிழக்கமூரி, வெட்டூர் ராமநாயர் ஆகியவர்கள் ஒரு அகில இந்தியச் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார்கள். வெட்டூர்சிங், டிசி சிங் என இவர்கள் பெயர்களை மாற்றிவிட்டதாக வர்க்கி சொன்னார். இங்கே எரணாகுளத்துக் காரர்களின் பெரும்பாலானவர்களும் ரஷ்யா, ஹெல்சிங்கி, சீனா போன்ற நாடுகளுக்குப் போயிருக்கிறார்கள். வேறு விசேஷங்கள் எதுவும் இல்லை. மற்றவை, தாங்கள் எரணாகுளத்துக்கு வரும்போது நேரில்.
இப்படிக்கு
வைக்கம் முகம்மது பஷீர்.
***
நன்றி: காலச்சுவடு பதிப்பகம், குளச்சல் மு. யூசுப் , எஸ்.எல்,எம். ஹனிபா (( E-Mail : slmhanifa22@gmail.com )
***
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:Basheer.jpg
***
போனஸ் சொறி :
போர் முடியவேண்டுமென்றால்...! - வைக்கம் முஹம்மது பஷீர்
Sunday, February 5, 2012
பஷீரின் உண்மையும் பொய்யும் (கேள்வி பதில்)
’வயசு ஏற ஏற லூசுத்தனங்களும் கூடும். இன்றை இளைஞர்களுக்கு எங்களைப் போன்ற லூசுகள் அறவே பிடிக்காது. ’ என்று சொல்லிக்கொண்டே உலக மகா லூசுக்கு ஒரு மெயில் அனுப்பினால் அது என்ன செய்யும்? உடனே பதிவிடும்; அவ்வளவுதான்.
முதலில் வருவது ஹனிபாக்காவின் மெயில். ’பஷீரும் எழுத்தாளர், நாமளும் எழுத்தாளர் ; இதென்ன அநியாயம்டா!’ என்று கேட்கிறார். மிகவும் ரசித்தேன் - வாசகனாக. எழுத்தாளன் நான் என்று என்னைக்கு சொன்னேன் காக்கா? - ஆபிதீன்
***
என்ட தங்க மகன் ஆபிதீனுக்கு,
நீங்க நம்மட நாதர் நானிலம் போற்றும் வைக்கம் முஹம்மது பஷீரின் உண்மையும் பொய்யும் படித்ததுண்டா? அனார் மேடம் புத்தகச் சந்தையில் எனக்காக கொள்முதல் செய்த நூல்களில் அதுதான் அற்புதம், வைரம், வைடூரியம். அவரும் எழுத்தாளர், நாமளும் எழுத்தாளர் இதென்ன அநியாயம்டா.
அவர் பொன்னார் மேனி, நாம சக்களத்தி. அவரின் "பாத்திமாவுடைய ஆடும்", "இளம்பருவத்துத் தோழியும்" எங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது இரண்டு புத்தகங்களையும் எனது பதினேழு வயதில் படித்திருப்பேன்.
எங்கட ஊரைப் பற்றி எழுதியமாதிரித்தான் அன்றும் இருந்தது. ஐம்பது வருடங்களின் பின் இன்றும் அப்படியே. படித்துப் படித்து மாய்ந்து போன நாட்கள். அதே மாய்தல், அதே பரவசம் இந்த உண்மையும் பொய்யும் படித்த போது. நெஞ்சு முட்டி அலை மோதுகிறது. நெஞ்சு வலி, கண்களின் கோளாறு எல்லாம் புத்தகத்தைப் புரட்டிய போது போன இடம் தெரியவில்லை. எழுத்துக்கு இவ்வளவு பெரிய மகத்துவமடா மன.
நண்பன் குளைச்சல் மு. யூசுப் அருமையாக மொழிமாற்றம் செய்திருக்கிறார். நமது பள்ளிவாசல்களில் கொஞ்சக்காலமாவது இஷாத் தொழுகைக்குப் பிறகு, பஷீர் அவர்களின் உண்மையும் பொய்யும் வாசிக்கச் செய்தால், நம்மட முஸல்மான்களெல்லாம் மனிதமான்களாவது உண்மையிலும் உண்மை.
பஷீரைப் படிப்பதும், பிறரைப் படிக்கத் தூண்டுவதும் ஆயிரம் ஒட்டகங்களை அறுத்து குர்பான் கொடுத்த நன்மை கிட்டும். (அட பாவி, ஆயிரம் ஒட்டகங்களை அறுப்பதை பஷீர் பொறுக்க மாட்டாரே, யாரோ புறுபுறுக்கும் சத்தம் கேட்கிறது) என நான் முன்மொழிகிறேன். ஆபிதீனோ, அருமைத் தம்பி தாஜோ இதை வழிமொழிந்தால் சரி.
246 பக்கங்களில் ’உண்மையும் பொய்யும்’ அற்புதம் கொண்டுள்ளது. முஸல்மான் கவிஞர்கள், எழுத்தாளர்களாகக் கோலம் போடும் நமது ஜோனகர்களுக்காக. முதலில் கேள்வி பதில் அனுப்புகிறேன்.
இப்படிக்கு
ஹனீபா காக்கா.
***
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த மைத்திரியில் எழுதிய கேள்வி பதில்கள்:
1) இறைவிசுவாசிதானா நீங்கள்? பள்ளிவாசலுக்குப் போவதுண்டா? தொழும் பழக்கமுண்டா? - அப்துல் சேர்த்தலை தெற்கு.
எல்லைகளில்லாப் பிரார்த்தனையே வாழ்க்கை
2) நீங்கள் முதலில் எழுதி பிரசுரமான கதை எது? அதற்கு பிரதிபலன் ஏதாவது கிடைத்ததா? - உலகன்னான் ஏலூர்
"தங்கம்" பிரதிபலனாக பதினொண்ணரை அணா ரொக்கமாகக் கிடைத்தது. (அதாவது பத்திரிகை அலுவலகத்தின் எதிரிலிருந்த சிறு ஓட்டலில் நான் பாக்கி வைத்திருந்த இந்தத் தொகை பத்திரிகை அதிபர் கொடுத்தார்)
3) பெண் விடுதலைக்கெதிராக நீங்கள் பேசியதாக அறிந்தேன். உண்மைதானா?
4) நாடு முழுதும் படர்ந்து பிடித்திருக்கும் சைக்கிள் போட்டியில் பெண்களுக்கான இடமில்லாதது ஏன்? - சே.ஜி. மாதவி குட்டி பெரும்பாவூர்
பெண் விடுதலைக்கெதிராக அப்படி நான் பேசவே இல்லை. சிந்திக்கவும் இல்லை, கனவு கூடக் கண்டதில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், பெண்விடுதலைக்காக வீரதீரத்துடன் போராடும் ஒரு முன்னணி வீரன் நான், சென்ற புதன்கிழமை, மணி பத்து, பெண் விடுதலைக்கெதிரான இருவர் என்னிடம் வாதம் செய்தார். நான் உடனே கொந்தளித்துப் போய் அவர்களை துவந்த யுத்தத்திற்கு அழைத்தேன். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்னை அழைத்தார்கள். எனது விலாப்புறத்திலிருந்த ஒரு எலும்பு உடைந்தது. தலையின் இடது சரிவுப் பிரதேசத்திலிருந்து ஒரு கொத்து மயிர்களையும் பிடுங்கினார்கள். நான் சொல்வது உண்மைதான். மிச்சமிருக்கும் எனது ஒவ்வொரு முடியையும் எலும்பையும் பெண் விடுதலைக்காக இழந்து விடவும் அதாவது அர்ப்பணிக்கவும் சித்தம் செய்திருக்கிறேன். பெண் விடுதலைக்காக இனி யார் என்ன சொன்னாலும் சரி, உடனே நான் துவந்த யுத்தம் நடத்த அறைகூவல் விடுவேன்.
அப்புறம் சைக்கிள் போட்டி, பெண்களுக்குத் தோதுப்படாது, பேச்சுப் போட்டி என்றால் பரவாயில்லை. அதன் சாம்பிள் பத்திரிகைச் செய்தி எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? நாடு முழுவதும் படர்ந்து வியாபித்திருக்கும் சைக்கிள் போட்டியை பெண்கள் வெறுப்புடன் உற்று நோக்குகிறார்கள் என்பதற்கான ஒரு நல்ல உதாரணம்தான், பெரும்பாவூரில் நடந்த கே.ஜி. மாதவிக்குட்டியின் பேச்சுப்போட்டி. மேற்கண்ட வீரப்பெண்மணி நூற்றியெட்டு மணிநேரம் வாய்மூடாமல் பேசிக் கொண்டிருந்தார். ஆகார, நீராகாதிகளைக் கூட அவர் பேசிக் கொண்டேதான் மேற்கொண்டார். மாதவிக் குட்டிக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்தன. சட்டி, பானை, அகப்பை, ஈர்க்கோரி போன்றவற்றுடன் ஒரு கன்றுக்குட்டியும் மாதவிக்குட்டிக்குக் கிடைத்தது. இந்த நூற்றியெட்டு மணி நேரச் சாதனை ஒரு உலக சாதனை என்பதாக பெரும்பாவூர்க்காரர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இது போல் அழுகைப் போட்டியிலும் பெண்கள் ஈடுபடக்கூடும். சிறு அசைவுகளைச் சொல்லிக் கூட பெண்களால் அழ முடிகிறதல்லவா. அப்புறம் பேன் பார்க்கும் போட்டி, பொய் சொல்லும் போட்டி, தொண்டை தழுதழுக்கும் போட்டி, பெருமூச்சு விடும் போட்டி, இப்படியான போட்டிகள் நிறைய இருக்கின்றன. மாதவிக்குட்டிக்கு பிடித்தமான போட்டி எது?
5) வழக்கமாக பஷீரின் உண்மையும் பொய்யும் ரசனையுடன் வாசிக்கும் 60 வயதைக் கடந்த என் பாட்டிக்கு ஒரு சந்தேகம். "ஏ... புள்ளெ, அந்தாளு பேரென்ன, பசிருன்னா? அந்தாளு ஏன் பரிசையெல்லாம் ஜோனோப் பிள்ளைகளுக்கே கொடுக்கிறான். சொந்த ஜாதி பாத்துத்தானோ" இது குறித்து தங்களின் பதிலென்ன பஷீர்? - எம்.கே. சிவனம்மா, நாயரம்பலம்
ஜோனகப் பெண்ணாகிய மதிப்புக்குரிய பாட்டி, நான் முழு நிரபராதி. பரிசு கொடுப்பவன் நானல்ல! இந்த விஷயத்தில் குற்றவாளி நர்மதா பத்திரிகையின் உரிமையாளர் ஆர்ட்டிஸ்ட் ராகவன் நாயர்தான். அவரது மனைவியின் பெயர் மட்டும்தான் நாயர், உண்மையில் அந்தப் பெண் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும. அவர் சொல்லித்தான் இவர் கொடுக்கிறாராக்கும். பாட்டிக்கு என் மீது பிணக்கம் வேண்டாம்.
6) தொண்ணாறாம் கோழி முட்டையிடுகிற அழகாட்டம் குந்திக்கினு உக்காந்து மாத்ருபூமியில எயிதிக் குவிக்கிற அந்த உறுப்பாய் ஆருண்ணா? நெஜமாலுமே நீங்கொ சரியான வாப்பாவோட மவனாங்காட்டி அந்த ஆளோட பேரைச் சொல்லுங்கோ பாக்கலாம்? - சலீம். கே.ஏ. போர்ட், கொச்சி
என் தங்கக் கொழுந்தே சலிமே, நீ விளையாடி விளையாடி உன் வாப்பாவையும் தொட்டு விளையாடுதியா மவனே? ஒங்கண்ணுலே உள்ள சில்வரைப் பேத்துருவேண்டா பேமானி ஒன் வாப்பா பெரிய மனிஷனா இருக்கலாம்? ஆனா நான் ஓன் கேள்விக்கு என்ன பதிலெச் சொல்ல, அந்த ஆளு ஒரு காபிரு. உறூபு, அவரோட உண்மையான பேரு குட்டி கிருஷ்ணமாரார்னு தோணுது. நீ, அந்த என்.வி. கிருஷ்ணவாரியாருக்கு எழுதிக் கேளேன். அந்த ஆளு சரியான வாப்பாவுக்கு பிறந்தவராயிருந்தா உனக்குப் பதில் எழுதுவாரு. அஸ்ஸலாமு அலைக்கும்.
7) சமீபத்தில் ஒரு பத்திரிகையில் தங்களுக்கு பைத்தியம் தொடங்கி விட்டதாகவும் பல சிகிச்சைகள் செய்த பிறகும் குணமாகாததால், உடனடியாக ஊளம்பாறை பைத்திய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லவிருப்பதாகப் படித்தேன். இது உண்மைதானா? - ஏ.பி. இராமன், பொய்யா, பூப்பத்தி
காவல் துறையினரின் உடனடிக் கவனத்திற்கு, நீங்கள் சென்ற வருடம், பொய்யாவிலிருந்து பிடித்துக் கொண்டு போய், ஊளம்பாறை லாக்கப்பில் போட்டிருந்த கிறுக்கன் குஞ்சிராமன் எனும் ஏ.பி. ராமன் எப்படியோ ஊளம்பாறையை ஏமாற்றி தப்பித்து பொய்யாவில் போய் சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேற்படியானை உடனடியாக சுற்றிவளைத்து குதிரை வட்டத்திற்கு அனுப்பி வைக்கவும்.
8) தாங்கள் ஒரு இறுக்கமான கம்யூனிஸ்ட் பிற்போக்கு வாதி என்பதாக கேள்விப்பட்டேனே சரிதானா? - எம் முஹம்மது, நீலிமங்கலம்
பிற்போக்குவாதிதான், ஆனால் கம்யூனிஸ்ட் அல்ல
9) டி.சி. கிழக்கெமுறி பூஷணத்தில் ஆண்களின் விஷயத்தில் தன்னை ஒரு ஆண் என்று ஸ்தாபிப்பதற்கு முயற்சித்திருக்கிறார். கூடவே இருந்த நானும் நீங்களும் உயிருடனிருக்கும் போது இதை ஒப்புக்கொள்ள முடியுமா? இனிமேலும் டிசி இதை நிறுவிக்காட்ட முயற்சி செய்தால் அவருடைய எலும்பை உடைத்து விடுவோமா? - சாமுவேல், நாகர்கோவில்
அன்புள்ள சாமுவேல், விஷயம் ரொம்பக் கேவலமானது தெரியுமல்லவா? ரகசியமாக இருக்கட்டும் டிசி ஆண்தான் என்று முட்டாள் உலகம் நம்பிவிட்டுப் போகட்டும். அதுதானே நல்லது.
10) என்னுடைய பஷீர் சாரே, எங்கள் ஊர்க் கோவிலில் சந்தனம் அரைக்கும் சாணைக்கல் உடைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக தங்களின் வழுக்கைத் தலை கிடைத்தால், வசதியாக இருக்கும். என்ன சொல்கிறீர்கள்? - எம்.என். மேனோன் , குழூர்
கோவிலில் பிரதிஷ்டிக்கப்பட்டிருப்பவர் யார், சிவனாக இருந்தால் தயவு செய்து என்னைக் கூப்பிடாதீர்கள். ஏதாவது பெண் தெய்வங்களா இருந்தால் மட்டும் வருகிறேன்.
***
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com ) , காலச்சுவடு பதிப்பகம், குளச்சல் மு. யூசுப்
Subscribe to:
Posts (Atom)





