Sunday, April 25, 2021

Monday, April 12, 2021

எச்சில் படாத நோன்பு (சிறுகதை) - நாகூர் ரூமி

ரமலான் ஸ்பெஷல்! நண்பரின் ’குட்டியாப்பா’ சிறுகதைத் தொகுதியிலிருந்து...
*

எச்சில் படாத நோன்பு (சிறுகதை) - நாகூர் ரூமி

அந்த ஓசைக்காகவே காத்திருந்தான் பஷீர். வாப்பா விடும் குறட்டை, காற்றுடன் கிசுகிசுக்கும் தென்னை ஓலைகள், பல்லிகளின் சங்கேத மொழி. எல்லாம் மறுபடி மறுபடி ஒலித்து அவன் செவிகளில் மனப்பாடம் ஆகிக்கொண்டிருந்தன. திடுக்கென்று தூக்கிப்போடும்படி ஒரு குண்டு போட்டார்கள். சில வினாடிகளில் மறுகுண்டு. ஆஹா நோம்புதான்! இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த கற்பனையின் சிறகுகள் படபடவென்று அடித்துக்கொண்டு சேவலைப்போல் கிளம்பின. பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் பஷீர். குண்டுகளைத் தொடர்ந்து அந்த ரமலான் மாதத்தின் முதல் விடியலை ஒலித்த 'நஹரா' இசை அவன் சந்தோஷத்தை ஆமோதித்தது. அந்த ஓசைக்காகத்தான் அவன் காத்திருந்தான்.

நாளைக்குத் தல நோம்பு . மாலை, புதுட்ரஸ், கையில் பூச்சென்டு. 'மருவண்டி ' சகிதமாய் ஒரு மினி புடை சூழ சொந்தக்கார வீடுகளுக்கெல்லாம் காட்சி கொடுத்துக் காசு பெறுதல் - நினைக்கும் போதே பஷீருக்கு இனித்தது. அரைவிழிப்பில் இருந்த அம்மாவைத் துரிதப்படுத்தினான். சஹர் செய்ய வேண்டுமே ....

மறுநாள், மாலை மரியாதையுடன் சொந்தக்கார வீடு செல்லும் படலம் தொடங்கியது. பஷீர் நோன்பு பிடிப்பதைப் பார்த்து அவன் ம்மாவுக்கு பொரியரிசி வாசம். மாமா வீட்டுக்குப் போனான் முதலில். மாமா சாய்மா' நாக்காலியில் அழுக்கு முண்டா பனியனும் கைலியுமாய் சாய்ந்திருந்தார். விஷயம் சொன்னவுடன் எந்திரிச்சு 'என்னட வாப்பா , பரக்கத்தா இரி' என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டார்.

"மாமா, உங்க வாய் ஏன் இவ்வளவு நாறுது?'' சிறுவனின் கேள்வி ஒருகணம் மாமாவை சங்கடப்படுத்தியது. 'டேய், மூனாகானா மவன்லடா நீ'' என்று வழிந்து பின்பு பெருமையோடு சொன்னார்.
"டேய் .... நோம்பு புடிச்சிக்கிறேன்ல .... பல்லு வௌக்கக் கூடாது. நா மெளத்தாப்போனா, இந்த நாத்தம் கஸ்தூரி வாசமா மாறிருண்டா பயலே ... இதெல்லாம் ஒனக்கெங்கேப் புரியப் போகுது...''

''மாமா அப்பன்டா நீங்க மௌத்தாப் போறவரைக்கும் இந்த நாத்தம் அடிக்குமே?'' என்று கவலையோடு கேட்டான் பஷீர். வாய்நாற்றம் வெளிப்படுத்திய மறு உலகம் சார்ந்த ஆன்மீக தத்துவத்தைப் புரிந்து கொள்ள பஷீருக்கு வயது பத்தாது என்ற முடிவுக்கு வந்தவராய், "டேய் மூனாகானாமவனா கொக்கா?'' என்று சப்தமாக சிரித்துக்கொண்டே அவன் முதுகில் அழுத்தமாகத் தட்டினார் மாமா.

பகல் இரண்டு மணியளவுக்கு பஷீருக்கு பயங்கரமாகப் பசித்தது. யாருக்கும் தெரியாமல் தண்ணீர் குடித்து விடலாமா என்று நினைத்தான். நாக்கு வறண்டு உலர்ந்து வாய் பூத்தது. சரியாகப் பேசக்கூட முடியவில்லை. வீட்டில் தண்ணீர் குடித்தால் யாரும் பார்த்துவிடுவார்கள். ஜோப்பில் கையை விட்டான். சில்லறைகள் சிரித்தன. கடைக்குப் போய் முட்டாய் வாங்கியாருக்கும் தெரியாமல் தின்றுவிடலாம் என்று முடிவு செய்தான். கடைக்குப் போகும் வழியில் ரஹ்மான் வந்தான். அவன் போன வருஷமே நோன்பு பிடித்தான். அதனால் வாத்தியார் கூட அந்த மாசம் பூரா அவனை அடிக்கவே இல்லை .

"டேய் .... நீ தல நோம்பாடா புடிச்சிக்கறே?''

"ம்''

'ஒனக்குப் பசிக்கலயாடா?'' அநுபவத்தின் பால் விளைந்த ரஹ்மானின் கேள்விக்கு பஷீர் பதில் சொல்ல யோசித்தான். அவனுக்கு எப்போதுமே தன் கஷ்டத்தை யாரிடமும் வெளிப் படுத்துகிற பழக்கம் கிடையாது. அவன் ரத்தம் அப்படி. அவன் வாப்பா இந்த விஷயத்தில் ஒரு பாறை. இவனும் பாறைக்குப் பிறந்தவனாகவே பல விஷயத்தில் இருந்தான்.

"ம்ஹும்"சர்வ சாதாரணமாகச் சொல்ல முயன்றான் பஷீர்.

"எனக்கு ரொம்ப பசிச்சிச்சுடா... யார்கிட்டயும் சொல்லாதே.... நா போன வருஷம் யாருக்கும் தெரியாமே தண்ணியைக் குடிச்சிட்டேனே'' என்று சொல்லிக் கண்சிமிட்டினான்.

தன்னுடைய பிரச்சினை. அதற்கான பஷீரின் ரகசியமான தீர்வு எல்லாம் ஊருக்கே பொதுவானதாக இருப்பதை நினைத்து பஷீர் ஆச்சர்யப்பட்டான். ரஹ்மானை விட்டு வரும் போது தன் முடிவை மாற்றிக்கொண்டான். எல்லாருக்கும் தெரிந்த அந்த ரகசியத்தைப் பின்பற்றப் பிடிக்கவில்லை . தனக்கு மட்டும் உரிய ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். முட்டாய் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டான். ரொம்ப யோசனைக்குப் பிறகு, அந்த முடிவுக்கு வந்தான். தெருவில் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டான். யாரும் கவனிக்கவில்லை. அதுவரை காறித்துப்பிக் கொண்டு வந்த எச்சிலை விழுங்கினான். விழுங்கும் போது சப்தம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் என்றாலும் ஆதாமின் ஆப்பிள்' ஸ்லோமோஷனில் ஏறி இறங்குவதை அவனால் கேட்க முடிந்தது. தொண்டையையும் குடலையும் நனைத்து குளிர்காலத்தில் சுடுதண்ணியில் குளித்த இதமாக இறங்கிய உமிழ்நீர் பெருநாள் சாப்பாட்டைவிட அப்போது சுவையாக இருந்ததை உணர முடிந்தது. இந்த வழி மிகவும் ரகசியமானதாகவும் வசதியானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தது. பசி கூட அடங்கிப் போனதாகத் தோன்றியது.

ஊரை ஒரு ரவுண்டு வந்தான். ரஷீது நானாசிங்கப்பூர் கடையில் ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப்பாலக னின் போன உயிரை எப்படி ஆண்டவன் பாவா ரூபத்தில் வந்து மீட்டுத் தந்தான் என்று ஹனீபா மிகவும் உருக்கமாக ரொம்ப நேரம் பாடிக்கொண்டிருந்தார். அந்த மாதத்திற்கே உரிய நிறங்கள், வாசனைகளை ஊர் அடையத் தொடங்கியிருந்தது. காதிரியா மதரஸாவில் ஒரே பிள்ளைகள் கூட்டம். எல்லாம் கையில் தூக்குச் சட்டிகளுடன் செம்சட்டியைச் சுற்றி ஆக்ரமித்துக் கொண்டிருந்தன. கஞ்சி ஊற்ற ஊற்ற குழந்தைகள் நகர்ந்து கொண்டிருந்தன (விரட்டப்பட்டனர்). பணக்காரப் பிள்ளை களை அறிந்த அகப்பை இரண்டு முறை அள்ளி அவர்கள் தூக்குச் சட்டிகளை நிரப்பியது.

மாலை ஐந்தே முக்காலுக்கெல்லாம் செய்யது பள்ளி ஞாபகம் வந்தது. நோன்பு அங்கே திறந்தால் தான் திறந்த மாதிரி இருக்கும். நோன்பின் சுவையேறிய கஞ்சி அங்குதான் கிடைக்கும் . ம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி விட்டான். ப்ராசாப்பம், எறச்சியானம், வட்லப்பம் என்றெல்லாம் ம்மா சொல்லி ஆசை காட்டிய போதும் செய்யது பள்ளியில் நோன்பு திறக்கவே விரும்பினான் பஷீர்.

எச்சில் விஷயம் மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. செய்யது பள்ளியில் கொட்றாக்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முக்கியப் பிரமுகர்கள் பள்ளியின் உள்பகுதியில் தூண்களில் சாய்ந்து
கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களைச் சுற்றி கஞ்சி நிரம்பிய கொட்றாக்கள் காத்துக்கொண்டிருந்தன.

''வாங்கனி மூனாகானா தலநோம்பா புடிச்சிக்கிரியும்'' என்ற பஷீரைப் பார்த்து சிரித்தார் உமர்காகா. ஏன் எல்லோரும் தன்னை வாப்பாவின் பெயரைச் சொல்லியே அழைக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டான் பஷீர். பஷீருக்காக இரண்டு கொட்றாக்களை வைத்தார் அவர். பெரியவர்களெல்லாம் ஹவ்தில் போய் ஒதுவு செஞ்சபிறகு வந்தமர்வதைப் பார்த்த பஷீர் எழுந்து சென்று தானும் அதைப் போலச் செய்து விட்டு வந்து அமர்ந்து கொண்டான். உட்காரும் போது கவனமாக பெரிய கடிகாரத்துக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டான்.

சின்ன முள் ஆறிலும் பெரிய முள் பன்னிரண்டிலும் நின்றன. திரும்பப் பெரிய முள் ஆறருகில் வரவேண்டும். 'என்னாங்கனி, மூனாகானா பசிக்குதா மணி பாக்குறியுமே'' சிரித்துக்கொண்டே ஈரக்கைகளை மேல் துண்டால் துடைத்துக்கொண்டே பெரியவர் தானும் ஒரு முறை பார்த்துக்கொண்டார். பஷீர் எல்லாரையும் கவனித்தான். சிலர் உள்ளே நுழையும்போதே காலை சாக்குத் துணியில் இப்படியும் அப்படியும் தேய்ப்பது போல மணி பார்த்துக்கொண்டார்கள். சிலர் 'யா அல்லாஹ்' என்று முகத்தை உயர்த்தி தாடியைக் கோதி முகத்தைக் கீழே இறக்கும் போது மணியைப் பார்த்துக்கொண்டே இறக்கினார்கள். பஷீரிடம் நிறையப்பேர் பேசினார்கள். பேசிய எல்லார் வாயிலும் மாமா இருந்தார். மௌத்துக்குப் பிறகு கஸ்தூரி வாசம் அதிகம் பெற எல்லாரும் போட்டி போடுவது தெரிந்தது. என்னவோ பஷீருக்கு அந்த கஸ்தூரிப்போட்டியை நினைத்தாலே குமட்டியது.

அந்த ஊரின் பெரும் பணக்காரரான எஸ்.ஜே. வந்து வழக்கம் போல எல்லாருக்கும் ஆப்பம் வாடா தர்மம் செய்தார். கஞ்சியைப் பார்த்தான் பஷீர். மேலே ஆடை விழுந்து தேங்கி ஆடாமல் கொட்றாவில் நின்றது கஞ்சி. கஞ்சியின் கண்ணாக நடுவில் பேரீச்சம்பழம் . ஓரத்தில் சம்பால் ஒட்டிக்கொண்டிருந்தது. எஸ்.ஜே. கொடுத்த ஆப்பத்தை வாங்கி கஞ்சி கலையாமல் அதன்மேல் வைத்து, அதன்மேல் வாடாவை வைத்தான் பஷீர். பொட்டியில் இருந்த வாடா ஆப்பங்களையெல்லாம் கொடுத்தபின் எஸ்.ஜே. பஷீரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார். மூன்று கொட்றாக் கஞ்சிகளைக் கொண்டு வந்து அவர்முன் பவ்யமாக வைத்தார்கள். பஷீருக்கு சந்தோஷமும் ஆச்சர்யமும் எப்போதும் காரிலேயே போகும் எஸ். ஜே. நானாவுக்கும் கஞ்சிதானா?

திடுக்கென்று தூக்கிப்போடும் வகையில் தர்காவில் குண்டு போட்டார்கள். எல்லாம் நோன்பு திறக்கும் துஆ ஓதினார்கள். பஷீர் கையை மட்டும் அவர்களைப் போல ஏந்திக்கொண்டு ஓதுவது போல் முணுமுணுத்தான். கஞ்சி குடிக்கும் போது மறுபடியும் எச்சில் ஞாபகம் வந்தது.

- மணிச்சுடர், 1988
*
நன்றி : நாகூர் ரூமி , ஸ்நேகா

தொடர்புடைய பதிவு :
ருசிக்காலம் - ஆபிதீன்