Saturday, June 30, 2012

ஓஷோவின் அரட்டைக் கச்சேரி

ஸென்'னுடன் நடந்து... 'ஸென்'னுடன் அமர்ந்து... நூலிலிருந்து.. (தமிழாக்கம் : சிங்கராயர்)

***

ஓஷோ, எத்தனையோ அழகான பேருரைகளை வழங்க எப்படி உங்களால் இவ்வளவு எளிதாக முடிகிறது?

திவாகர், என்ன பேருரைகள்? இந்த வெற்று அரட்டைக் கச்சேரியை நீ பேருரை என்கிறாயா? பேருரை என்பது சிரத்தைக்குரிய விஷயம்! பேருரை என்பது மதச் சார்பானது. தூய்மையானது. புனிதமானது. அது கோயில்களிலும் சர்சுகளிலுமே வழங்கப்படுவது. இந்த இடமோ சர்ச் அல்ல. இது குடிகாரர் மடம்; கேளிக்கை விடுதி! எது பேருரை? நான் எப்போதும் எந்த பேருரையும் ஆற்றியதில்லை. ஆம் , நான் புறணி (gossip) அளக்கிறேன். அது உண்மையே. ஆனால் அதில் எந்த நற்செய்தியும் (gospel) இல்லை; எந்த நாசூக்கும் இல்லை; எந்த ஒளிவுமறைவும் இல்லை.அது மிகவும் எளியது - என் முறை மிகவும் எளியது.

ஒரு பேரரசன் ஒரு சிற்றூரின் வழியாக போய்க் கொண்டிருந்தான். அவன் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற போர்வீரர்களில் ஒருவன். வில்வித்தை அபிமானி. வில்வித்தையில் மிகச் சிறந்தவர்களை அவன்  போற்றினான். அந்தச் சிற்றூரின் வழியாகப் போகும்போது அவன் பல மரங்களிலும் விளக்குக் கம்பங்களிலும் தோட்ட வேலிகளிலும் வரைந்திருந்த வட்டங்களின் நடுமையத்தில் குறிதவறாமல் அம்புகள் ஏறி இருந்ததைக் கண்டான். இம்மியும் பிசகாமல் வட்டங்களின் மையப்புள்ளியில் அம்புகள் குத்திட்டு நின்றன. ஏராளமான அம்புகள் எங்கு பார்த்தாலும்.. அவன் வியந்து போனான்.

அவன் சொன்னான், 'யார் இந்த மனிதன்? இவ்வளவு செம்மையான வில்லாளியை நான் இதுவரை கண்டதில்லை! அவனது இலக்கு துல்லியமாக இருக்கிறது. ஒரு இடத்திலும் அவன் குறி தப்பவில்லை. ஒரு அங்குலத்தில் ஒரு பிரிவு அளவுகூட பிசகவில்லை. எல்லா இடத்திலும் அம்பு சரியாக மையத்தில் பதிந்துள்ளது. ஒவ்வொரு இலக்கும் அதற்கு சான்றாக உள்ளது.' அவன் தன் தேரை நிறுத்தினான். ஊர் மக்களை அழைத்தான். 'யார் இந்த மனிதன்?' என கேட்டான்.

அதற்கு அவர்கள் எல்லாரும் நகைத்தார்கள். பின் சொன்னார்கள், 'அவனைப்பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள். அவன் ஒரு பித்தன்!'

'பித்தன் என்று எப்படிச் சொல்கிறீர்கள் நீங்கள்? அவன் பித்தனாயிருக்கலாம். ஆனால் நான் பார்த்தவர்களில் அவனே மாபெரும் வில்லாளியாக இருக்கிறான்.'

அவர்கள் சொன்னார்கள், 'அதற்கும் வில் வித்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனுக்கு வில்வித்தை பற்றி ஒன்றுமே தெரியாது.'

அரசன் சொன்னான்,'அப்படியானால் இது ஒரு அற்புதம்தான்! எப்படி இது அவனால் சாத்தியமாகிறது?'

அவர்கள் சொன்னார்கள், 'அது எளிது. முதலில் மரத்தின் மீது அம்பு எய்கிறான். பின் போய் அதைச் சுற்றி ஒரு வரைந்து விடுகிறான்!'

சரியாக அதுதான் என் முறையும்! அது எளிது! எனவே எதைக் குறித்தும் நீங்கள் கேட்க முடியும். ஆனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதையே சொல்கிறேன். முதலில் நான் அம்பு விடுகிறேன். பின் அதைச்சுற்றி ஒரு வட்டம் வரைந்து விடுகிறேன் - இறுதித் திருத்தம் சேர்ப்பதுபோல!

**

நன்றி : கவிதா பப்ளிகேஷன்

Saturday, June 23, 2012

ஷாஜஹான் கொடுத்த ஷவர்மா!

தமாஷைக் கேளுங்கள், இலங்கையைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஷாஜஹானின் கதையை அனுப்பிவைத்த ஹனீபாக்கா, கூடவே 'ஹாஜஹான் , தன் மனைவியுடன்' என்ற குறிப்போடு இந்த புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார்! அங்கேயும் 'இது' நடக்கிறதா?! சும்மா வெடைத்தேன், வேறு புகைப்படம் தனியாக வந்தது. அது இங்கே தேவையில்லை. கதையை மட்டும் பதிவிடலாம். அதற்கு முன் , என் குழப்பத்தைப் பார்த்துவிடுங்கள். இந்தப் பக்கங்களில் அவசியம் வெளியிடவேண்டும் என்று சில மாதங்களாக நான் தேடிக்கொண்டிருப்பது முற்போக்கு முகாமைச் சேர்ந்த (மத்தவங்க பிற்போக்கு அல்லது என்னைப்போல பொறம்போக்கு என்று அர்த்தம்) ஷாஜஹான். 'தற்காப்பு என்பது வாழ்வுரிமையோடு தொடர்புடையது'
என்ற கட்டுரை எழுதியவர் அவர்தானே? கருப்புப் பருத்தி? அப்ப, ஜித்தாவில் இருந்த ,  'சொர்க்கத்தின் காலடிகளில் " என்ற சிறுகதைத் தொகுப்பும்  விகடனில் வெளியான  "கனவுகள் காத்திருக்கின்றன " என்ற நாவலும் தந்த - சி ஜே ஷாஜஹான்  வேறா? தம்பி சென்ஷியிடமும் நண்பர் மஜீதிடமும் தேடச்சொன்னபோது கிடைத்ததோ வேறொரு முக்கியமான ஷாஜஹான். புதியவன் என்ற பெயரில் பிரமாதமாக எழுதுபவர். அப்புறம் லக்கி ஷாஜஹான் என்றொருவர் இருக்கிறார் இணையத்தில் . ஒரே குழப்பம் மும்தாஜுஊ...

ஒருவழியாக , நண்பர் மாதவராஜ் தயவில் , 'காட்டாறு' என்ற சிறுகதைத் தொகுதியைத் தந்த ஷாஜஹான்தான் நான் தேடிக்கொண்டிருப்பவர் என்று புரிந்துகொண்டேன்.நிச்சயம் இவராகத்தான் இருக்கும். இவருடைய சிறுகதை ஒன்று இலக்கியச் சிந்தனை பரிசுபெற்றதாகவும் அதை அசோகமித்திரன் தேர்ந்தெடுத்ததாகவும் எங்கோ படித்த நினைவு. தவறாக இருந்தால் திருத்துங்கள். தன்யனாவேன். சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருப்பது கிழக்கு பதிப்பகம் என்று வேறொருவர் சொல்லவே நம்ம ஹரன்பிரசன்னாவை முந்தாநாள் தொடர்பு கொண்டேன்.

யாருக்காவது சந்தேகம் இருந்தால் உடனே 'ஹபி'யைத்தான் தொடர்புகொள்ளவேண்டும். அதிகமாகிவிடும்! 'வம்சி புக்ஸ் வெளியிட்டிருப்பதாக கூகிள் சொல்கிறது. நான் தேடும் ஷாஜகான் இவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.' என்று மீண்டும் எழுதியதற்கு சும்மா இருக்க வேண்டாமா, இல்லையா?
'செங்கை ஆழியான் காட்டாறு என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கவிதா வெளியீடு. இது உங்களை குழப்புவதற்காக மட்டும். :>' என்று தகவல் கொடுத்திருக்கிறது ஃபேஸ்புக்கில். என்ன செய்யலாம் அந்த உருவத்தை?

என் குழப்பம் அப்படியே இருக்கட்டும், ஹனிபாக்காவும் உமா வரதராஜனும் போற்றும் இந்த ஷாஜஹானைப் படியுங்கள். 'ஈழத்து முஸ்லிம் தமிழ் சிறுகதை வரலாற்றில் பத்தாண்டுகளுக்கு ஒரு படைப்பாளி முகம் தருவது எங்கள் அதிர்ஷ்டமே. இந்தப் பத்தாண்டில் அவ்வாறு தரிசனம் தருபவர் ஷாஜஹான். ஷாஜஹான் (35) ஒரு நுண்கலைப் பட்டதாரி. ஆசிரியப் பணி புரிகிறார். ஆபிதீன் பக்க வாசகர்களுக்கு ஷாஜஹானின் முதல் கதையையே அறிமுகப்படுத்துவதில் ஆனந்தமடைகிறோம். தம்பி தாஜ், நல்ல கதை தங்கம், படித்து விட்டு ஒரு பின்னூட்டம் போடுங்களேன். ஷாஜஹான் உஷாராகட்டும்.' என்கிறார் ஹனீபாக்கா.

ஏற்கனவே வேறொரு இடத்தில் வெளியானதை எனக்கு ஏன் ஹனீபாக்கா அனுப்பிவைத்தார் என்று தெரியவில்லை. சரி, கண்ணீர் வரவழைக்கும் இந்த அரபுநாட்டு சபராளி கதையை அவசியம் படித்துப் பாருங்கள்.

மனைவியைத் தவிர திருப்பித் திருப்பி போடுறது மஹா தப்பு என்ற மாபெரும் கொள்கை முடிவின் காரணமாக (என் கதைகளையே இங்கே பதிவிடவில்லையே சார்...) சுட்டி மட்டும் தருகிறேன் :
http://rafifeathers.blogspot.ae/2012/08/blog-post.html
***
நன்றி : ஹனிபாக்கா, ஷாஜஹான்

Wednesday, June 20, 2012

நமது ஜனாதிபதி தேர்தலும் விசேச கூத்துகளும்! - தாஜ்


பேசாமல் , நம்ம தாஜையே இந்திய ஜனாதிபதி ஆக்கிவிட்டாலென்ன?பகைநாடுகளுக்குச் சென்று கவிதை சொல்லியே பழிதீர்த்துவிடுவார்.  ஆபிதீன் . 

***

நமது ஜனாதிபதி தேர்தலும்
நடைபெறும் விசேச கூத்துகளும்!

-தாஜ்

மனித வாழ்க்கைக்கு அதிகமும்
தேவைகளில் ஒன்று நகைச்சுவை..
சகல முடங்கல்களுக்கும்
கைக்கண்ட நிவாரணி அது!

பொதுமக்களுக்கு
அதனை வழங்கி வந்த
கூத்து/ நாடகம்/ சினிமா/
இன்னும், இதர மீடியாக்களென்று
அத்தனையும் இன்றைக்கு
நகைச்சுவை வழங்குவதில் இருந்து
வற்றிக் கருவாடாக காய்ந்து கிடக்கிறது!

இன்றைப் பொழுதுக்கு
அந்த இடத்தை அதிர்ஷ்டவசமாய் நிரப்பி
நம்மை மகிழ்விக்க முனைகிறது
அரசியல் அரங்கில்
புதிய ஜனாதிபதி தேர்வெனும் ஆட்டம்!

இந்திய ஜனாதிபதி தேர்வின்
எழுதப்படாத மரபென்பது...
இந்திய ஆளுங்கட்சி/ எதிர்க்கட்சி மற்றும்
மாநில பெரிய கட்சித் தலைகள் எல்லாம்
கூடி ஆலோசனை செய்து
'பெத்த'ப் பெயர் கொண்ட/
தன்னிச்சையாக இயங்க முடியாத (கூடாத)
பூங்கிழத்தை
அப்பதவியில் அமர்த்துவதென்பதுதான்!

ஏன் அப்படி கூடிப் பேசி
இப்படியானதோர் தேர்வை செய்கிறார்களாம்?

ஜனாதிபதி என்பவர்...
எல்லோருக்கும் பொதுவான
நபராக இருக்க வேண்டும்..

யோசித்தால்...,
அது அதனால் மட்டுமல்ல.
எந்தக் கட்சி அவரை சந்தித்து
கோரிக்கைவைக்கிற போதும்
தட்டாமல், மறுக்காமல் அவர் தலையாட்ட வேண்டும்.
அவரே தலையாட்ட மறுக்கிற போதும்
அவர் தலை தானே கட்டாயம் ஆடவேண்டும்.

தவிர, முப்படைகளுக்கும்
தான் தலைவர் என்கிற கோதாவில்
ஜனாதிபதியானவர்
ராணுவத்தைக் கையில் எடுத்து கொண்டு
அரசியல்வாதிகளான தங்களின் பதவிகளுக்கு
உலைவைத்துவிடக் கூடாதென்கிற கவனம்
எல்லாவற்றையும்விட தேர்வு செய்யும்
அரசியல்வாதிகளுக்கு மிக முக்கியம்.

இந்த சிந்தையோடுதான்
ஜனாதிபதியாக நிறுத்தப்படுகிறவரை
தீர கூடிப்பேசி தேர்வு செய்யணும் என்கிறார்கள்.
அப்படியேதான் தேர்வு செய்யவும் செய்கிறார்கள்.
அவர்கள் ஒற்றுமையாய் கை கொள்ளும்
மரபின் மூல அர்த்தமே இதன் வழிப்பட்டதுதான்!

*
அதிமுக்கியமான இந்த மரபை விட்டும்
புதிய ஜனாதிபதிக்கான ஓர் நபரை...
அவசர அவசரமாக அறிவித்தார் ஜெயலலிதா!
அவரது பெயர் கூட...
முன் எப்பவும் அத்தனைக்கு
பிரபலமாக அறியப்படாத பெயர்தான்.

'சங்மா'வை
காட்டுவாசி (நாகரீகமாய்..., 'பழங்குடி') என்கிற
பெரும் அடையாளத்துடன்
ஓராண்டில் நூறாண்டு பேசும் சாதனைகளை
நிகழ்த்திக் காட்டியிருக்கும்
நம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போதே
நான் எழுதினேன்...,
'அம்மா யாரையும் கலக்காமல்
தன் இஷ்டத்திற்கு
புதிய இந்திய ஜனாதிபதியை அறிவிக்கிறார்!
எத்தனைக்கு கூட்டிப் பெருக்கினாலும்
இது சரியாக வரும் என்று
தோன்றவில்லையே' என்றிருந்தேன்.
அந்த அளவில்தான்
அவர் தேர்வு குறித்த நிலை
தடுமாற்றம் கொண்டிருக்கிறது. .

அம்மாவின் ஜனாதிபதி வேட்பாளரை
நேற்றுவரை
இந்தியக்கட்சிகளில் எதுவும்
பெரிதாக அக்கறை காட்டவில்லை.
அதுமட்டுமல்ல,
சங்மா சார்ந்திருக்கும்
தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட
அவரை ஆதரிப்பதாக பெரிதாக
குரல் கொடுக்கவில்லை.

சட்டசபைத் தேர்தலில் வென்ற பிறகு
ஜெயலலிதா ஈடுபாடு கொண்ட
அகில இந்திய அரசியல் செயல்பாடு இது.
இப்படி அது பல்லிளித்துப் போவதில்
ஜெயலலிதாவுக்கு
கவலை இருப்பதாக தெரியவில்லை.
தன்னால் ஆகுமான காரியமான
1006-ஜோடிகளுக்கான திருமணத்தில்
உடனடியாக அவர் முனைப்பாகிவிட்டார்.
இத்தனை ஜோடிகளுக்கு
திருமணம் செய்விப்பதென்பது
நினைத்ததை முடிக்கும் காரியத்திற்கான
பரிகாரமாகக் கூட இருக்கலாம்.

*
அங்கே...
மேற்குவங்கத்தில் மம்தா அம்மாவும் இப்படித்தான்
புதிய ஜனாதிபதிக்கான தனது தேர்வாக
இன்றைய இந்தியப் பிரதமரான
மன்மோகன் சிங்கை அறிவித்தார்.
அப்புறம் அவருக்கு நினைவிற்கு வந்ததோ என்னவோ
நாம் அறிவித்த வேட்பாளர் மன்மோகன் சிங்
பிரதமராக இருக்கிறார் என்று!
உடனே, முன்னால் ஜனாதிபதி
டாக்டர் அப்துல் கலாமை
புதிய ஜனாதிபதியாக அறிவிக்கிறேன் என்கிறார்.
உத்திரப் பிரதேச ஆளும் கட்சித் தலைவரான
முலாயம் சிங்கும் ஆதரவும் உண்டு என்கிறார்.
தடலடியான இந்த அறிவிப்பு வந்த நாழிக்கு
கலாமும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

கலாம் ஓ.கே. சொன்ன மாலையே
முலாயம் சொல்கிறார்...
'நான் மம்தாவுடன் இல்லை' என்று!
மறுநாளைக்கும் மறுநாள்...
கலாமும் 'இந்தப் பழம் புளிக்கும்' என்றுவிட்டார்!
மம்தா இப்போதைக்கு
அடுத்து என்ன முடிவெடுப்பார் என்று
யாராலும் சொல்ல முடியாது.
தன்னையே அவர் ஜனாதிபதி வேட்பாளராக
அறிவித்துக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.

இத்தனைக் கூத்துகளுக்கும் இடையில்
இந்தியாவின் ஆளும் கட்சியும்/எதிர்க்கட்சியும்
ஜனாதிபதி வேட்பாளரை
அத்தனை சீக்கிரம் அறிப்பதாக இல்லை.
மாநிலக் கட்சிகள் ஆடிமுடித்த
இரண்டு நாள் கழித்து
காங்கிரஸ் வாய்திறந்து 'பிரணாப்' என்றது.
தொடர்ந்து பாரதிய ஜனதாவிடமும்
கையேந்தி நின்றது.
சுஸ்மா இரக்கம் காட்டுவார் என்று
அவரைப் பார்க்கிறது.

பாரதிய ஜனதாவோ இன்னும் யோசிக்கிறது.
நாளை (20.6.12) அது அறிவிக்க இருப்பதாக
இன்றைய செய்திகள் சொல்கின்றன.
ஜெயலலிதா அறிவித்த வேட்பாளரை
அவர்களது தலையில் கட்ட
அங்கே பெரிய ஒரு கூட்டமே வேலை செய்கிறது.
அந்தக் கட்சி எந்த வேட்பாளரை
அறிவித்தாலும், அல்லது ஆதரித்தாலும்
ஒருங்கிணைந்த ஆதரவாக
அது அமையும் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் இருப்பதாக தெரியவில்லை.

*
சந்தடி சாக்கில்
இந்தியக் கட்சிகள் ஒன்றைத் தெரிந்தே மறக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தல் குறித்த பேச்சு எழுந்த போதே
அப்பதவிக்கு பேசப்பட்ட நபர்களின் பட்டியலில்
கலைஞர் கருணாநிதியின் பெயரும் இருந்தது.
இன்றைக்கு அவரை யாருமே
அப்பதவிக்கு பேசாதது ஆச்சரியமே!
'பாவம் மனிதர், அதையும் அனுபவிக்கட்டுமே' என்று
ஒருவருக்காவது தோன்றியிருக்க வேண்டாமோ!?

ஒரு தமிழ்ப் பத்திரிகை
இதுபற்றி குறிப்பிட்டு எழுதியிருந்த போது...
'மூப்பனாரின் ஆவி பழிதீர்த்துவிட்டதாக!'
உண்மையாக இருக்குமாயென்ன?
எனக்கு நம்பிக்கை இல்லை.

***

நன்றி : தாஜ் | http://www.tamilpukkal.blogspot.com/  | satajdeen@gmail.com

Saturday, June 16, 2012

நூருல் அமீனின் நகைச்சுவை சிறுகதை

மெஹ்தி ஹஸன் மௌத்தான துக்கத்தில் 'மெஹ்ராஜ்' பற்றி பதிவிட இயலவில்லை.  பழைய 'மேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ்  விவாதமும் விளக்கமும்' பார்த்துக்கொள்ளுங்கள்; என்னை விடுங்கள். என்  துக்கம் எனக்கு சார்... துக்கத்தை மாற்ற இணைய நகைச்சுவை அரசன் பேயோனின் கமெண்ட்தான் நேற்று கொஞ்சம் உதவிற்று. மனுசன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் - 'அந்த வெற்றுக் காகிதமே' என்று. பின்னூட்டமிட்ட பாளைராஜா , 'பல இடங்களில் புரியவில்லை' என்று சொல்லவே பேயோன் சொல்கிறார் : 'பல இடங்களில் மட்டும்தானா?'.  அப்போதுதான் அந்தக் கட்டுரையே எனக்கும் புரிந்தது. நான் 'Death at a Funeral ' பார்த்து அழ ஆரம்பித்தேன். சரி, சிரிக்கத் தெரிந்தவர்கள் நூருல்அமீனின் இந்தக் கதையை வாசியுங்கள். அசைவ நகைச்சுவை தனக்கு வராது என்று சொல்லும் அமீன், 'கீழ்ப்படிதல்' பற்றி ஏன் சொல்கிறார் என்றுதான் தெரியவில்லை. ஏதாச்சும் இக்கிம் போலக்கிது...    இந்தக் கதையில், வாழ்க்கையில் அமைதிவருவதற்கான அழகான உபகதையும் உண்டு. எந்தக் கதை/கட்டுரையும் படிக்காமலிருந்தால்தான் உண்மையான அமைதி கிட்டும் என்று இன்னொரு ஹஜ்ரத் சொல்வதை பிறகு எழுதுகிறேன். நன்றி. - ஆபிதீன்

***


என் பெயர் பஷீர்

நூருல்அமீன்

 
என் பெயர் பஷீர். வைக்கம் பஷீரின் எழுத்துகளால் வசீகரிக்கப்பட்டு வைத்துக் கொண்ட புனைப்பெயரல்ல. என்னை உருவாக்கியவர் வைத்த பெயர். அவர் ஆன்மீகவாதி. அதனால் அவர் இமேஜை பாதுகாத்துக் கொள்ள போட்டுக் கொண்ட முகமூடி தான் நான் என்றெல்லாம் சில சீர்காழிகாரர்களுக்கு சந்தேகம் வரலாம் என்பதால் இந்த தன்னிலை விளக்கம்.

இது எனது கதை என்பதால் உங்கள் ஆன்மீக தீர்வுகளை உள் நுழைக்காமல் என்னை எனது போக்கில் விட்டு விடுங்கள் என்று கதையை ஆரம்பிக்கும் முன்பே தெளிவாக நான்  சொல்லிவிட்டேன்.

அவரது போக்கில் கதை சென்றால் புல்லாங்குழலில் தான் வெளியிட முடியும். இது 'இண்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட்' உள்ள ஆபிதீன் பக்கத்திற்கான கதை. ஆகவே உங்கள் கதையை மூட்டை கட்டி வைத்து விட்டு என்னை பின்தொடருங்கள் என கூறிவிட்டேன்.

எனவே என் கதை கூறலில் அவரது சாயல்கள் கொஞ்சம் தெரியலாம். ஆனால் நான் அவரல்ல. நான் அவரல்ல. நான் அவரல்ல…..

இனி என் கதை.

நேற்று மாலை நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய் “எனக்கு உடம்பு தேள் கொட்டுனா மாதிரி கடுக்குதும்மா” என்றாள் அன்பு
மனைவிஆஷிகா.

( அது என்ன வந்ததும், வராத்துமாய்? உடல் வீடு வந்துவிட்டது. உள்ளம் இன்னும் அலுவலகத்தில்.)

 ‘’உங்கூட்டு வலி எங்கூட்டு வலி இல்ல ஆயிரம் தேள் கொட்டுனா மாதிரி ஒரு கடுப்பு” என்றாள். 

இதுக்கு பேரு“Psychosomatic disorder” என்றேன்.  எனக்கும் கொஞ்சம் மனோதத்துவமெல்லாம் தெரியுமுள்ள!

“அப்படின்னா” என்றவளிடம்,

“ஆழ்மனதுல என் மேல ஏதாவது கடுப்பு இருக்கலாம். அத சொல்ல முடியாம அடக்கி வச்சிருதேன்னு வச்சுக்க. அந்த மனகடுப்பு உடல் கடுப்பாயிடும்” என்றவன் சராசரி கணவனை விட நாம கொஞ்சம் நல்லவன் தானே என்ற நம்பிக்கையுடன் “அப்புடி ஏதும் குறை இருக்கா?” என்றேன் கம்பீரமான புன்சிரிப்புடன்.

அவள் “ம்…ம்…” என்று மெலிதாய் முனங்கியவளாய் நெற்றியை சுருக்கி சிறிது நேரம் யோசிக்க ஆரம்பித்தாள்.

என் அடிவயிற்றில் ஜில்லாப்பு பரவியது.

‘ஏடாகூடமா ஏதாவது சொல்லி தலையில கல்லை போட்டுவிடுவாளோ?’

“என் உயிராச்சே நீ செல்லம்! உனக்கு என்ன கவலை சொல்லு” என்றேன் சற்றே சுருதி இறங்கியவனாய். ஏறத்தாள காலில் விழாத குறையுடன்.

அவளிடமிருந்து பதில் ஏதுமில்லை.

அவள் நீண்ட மௌனத்தினால் சற்று முன் அணிந்திருந்த கம்பீரமான பிம்பம் கலைந்து நடுக்கம் ஊடுறுவத் தொடங்கியது.


“ரெண்டு நாளா எனக்கு கூட ஹார்ட் பீட் ஜாஸ்தியா இருக்கும்மா!” என்றேன் அனுதாபம் வேண்டியவனாய். உண்மையிலேயே படபடப்பாகத் தான் இருந்தது. சம்பாதித்த கடைசி வெள்ளி வரை செலவாகும் சிங்கப்பூர் வாழ்க்கையில் என் ஒரே சேமிப்பு என் குடும்பத்தினரை சந்தோசமாக வைத்திருக்கின்றேன் என்ற திருப்தி தான். அதுவும் இல்லையா? என்ற அதிர்ச்சியில் கையிலிருந்த மிட்டாயை காகத்திடம் பறிகொடுத்த சிறுவனாய் பதறியது மனது.  

என் இருண்ட முகத்தை சட்டென படித்து விட்டாள் அவள்.

“நீங்க ரொம்ப நல்லவருமா!”  ஆறுதலாய் தலையை கோதினாள். எனது மனதின் தத்துவம் என்னை விட அவளுக்குக்குத் தான் தெளிவாய் தெரிகிறது என்பதால் இனி மேல் தேவையற்ற கேள்விகளை அவளிடம் கேட்கக் கூடாது என முடிவெடுத்தேன். நாம நல்லவன் தான் என்பது நமக்கே லேசுமாசா தெரியும் போது தேவையில்லாமல் அதை உண்மையா என பரிசோதனைக்குள்ளாக்கக் கூடாது. இதுவெல்லால் மெல்லிய கண்ணாடி மாதிரி சமாச்சாரம் தேவையில்லாமல் பலப்பரீட்ஷை நிகழ்த்தாதே பஷீர் என என்னை நானே எச்சரித்து கொண்டேன்.

இரவு உணவு முடிந்ததும் ஆஷீகா உறங்கிவிட்டாள். எனக்கு உறக்கம்வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.

‘ என்ன கவலை இவளுக்கு?’               

மாமியார், நாத்தனார் கொடுமை செய்பவர்கள் இல்லை. மேலும் அவர்கள் ஊரில் இருப்பதால் கொடுமை என்ற  பேச்சுக்கே இடமில்லை. சிங்கப்பூரில்
தனிக் காட்டு ராணியாக ராஜாங்கம் செலுத்துகிறாள். நானும் பிள்ளைகளும் அவளுக்கு மிகவும் கீழ்படிதலுடன் இருக்கின்றோம்.

உண்மையான கீழ்படிதலா? எங்கள் கீழ்படிதலில் சிறிது பாசாங்கு இருக்கலாம். அவளுக்கும் அது தெரிந்தாலும் அதை பிரியமுடன் அங்கீகரிப்பாள்.

“உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என தொப்பி போட்ட பாரதியாராய் உருகுவதிலும்,  “நான் பார்த்ததிலே உன் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன். நல்ல அழகி என்பேன்” என தொப்பி போடாத எம்ஜியாராய் நாடியை பிடித்து கன்னம்
கிள்ளுவதிலும், கொஞ்சம் உண்மையும், கொஞ்சம் இனிமையான பொய்யின் கலப்பும் இல்லை என்றால் வாழ்க்கை வசீகரமற்று போய்விடாதா?

நினைத்ததை நினைத்தபடி வெளிப்படுத்த நாம் என்ன மிருங்கங்களா?

மனிதன் சமூக மிருகம் என்கிறார்களே?

கலாச்சார, பண்பாட்டு வேசங்களுடன் வெளியில் அழைந்தாலும் உள்ளுக்குள் உறங்கும் மிருகம் யாரிடம் தான் இல்லை……

எப்போதோ படித்த ஆதவனின் கதை அரை குறையாய் ஞாபகத்திற்கு வந்தது. தன் மனைவியை முழுக்க முழுக்க அறிந்தவன் என நினைக்கும் கணவன் அலுவலகத்திருந்து தன் ஃபிளாட்டுக்கு திரும்புவான். வரும் வழியில் சக குடித்தனக்காரர்கள் அவன் மனைவியின் விஷேச குணாதியங்களை சொல்லி வியக்கும் போது தான் முற்றிலும்  அறியாத விசாலமான இன்னொரு பக்கம் தன் மனைவிக்கு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைவான். அத்தகைய அதிர்ச்சி என் மனதில் பூனைபோல் மெதுவாய் நுழைந்தது.

“நல்ல கணவன்னு மனைவி சொல்ல வேண்டும் அவன் தான் நல்ல மனிதன்”  என நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள் என எங்கோ படித்தது வேறு ஞாபகத்திற்கு வந்தது. (பஷீர் : மிஸ்டர் அமீன், உங்கள் சிந்தனையை என் மேல் திணிக்காதீர்கள் என சொன்னேன் அல்லவா? தயவு செய்து சற்று விலகி நில்லுங்கள்.

அமீன் : ஒ.கே. பஷீர் நான் குறுக்கிடவில்லை.)

தூக்கம் கலைந்து எழுந்த ஆஷிகா  “இன்னும் நீங்கள் தூங்கலையா ”   என்றாள்.

 “தூக்கம் வரலை” ன்னதும்.

 “ஏதும் ஆஃபிஸ் பிரச்சனையா?” என்றாள்.

“அதெல்லம் ஒன்னுமில்லை. ஒன்னையா நான் சந்தோசமா வச்சிருக்கேனாங்கிற கவலை தான்” என்றதும்.

 “நீங்க என்னை சந்தோசமாதானேம்மா வச்சிருகீங்க. அதுல என்ன சந்தேகம்”

 “ அப்ப நீ எதை நெனச்சு கவலைப்படுறே!” 

“மனுசின்னா மனசுல சின்ன சின்ன கவல வரத்தான் செய்யும். அதுகெல்லாம் காரணம் யாருக்கு தெரியும். வரிசையா கேள்வி கேட்டு தூக்கத்த கலைக்காம நீங்களும் தூங்குகம்மா”   என்றவளிடமிருந்து சிறிது நேரத்தில் மெல்லிய குறட்டை ஒலி எழுந்தது.

எனக்கு தூக்கம் வரவில்லை.    

எந்த கவலையும் இல்லைங்கிறா? அப்புறம் ஏன் டல்லா இருக்கா? அடிக்கடி
உடல் கடுக்குதூங்கிறா?

சின்ன ஃபிளாட்டில் அடைந்து வாழும் சிங்கப்பூர் வாழ்க்கை கசந்து விட்டதோ? பிரிவினையில் வெந்து தணியும் வாழ்க்கையை விட இது பல மடங்கு உயர்வல்லவா? என்ன செய்யலாம்?

சிறு வயதில் படித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு தம்பதியருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்த இனிமையே வாழ்க்கையில் சலிப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு ஒரு குரு இருந்தார். அவரிடம் சென்று, “எல்லா வளமும் இருந்தாலும் வாழ்க்கையில் அமைதியில்லை குருவே!”  என தங்கள் நிலையை சொல்லி பரிகாரம் கேட்டார்கள். “அவர் வீட்டின் கொல்லையில் கட்டி இருக்கும் ஆடு,பசுக்களை வீட்டின் உள்ளே மூன்று தினங்களுக்கு கட்டி வையுங்கள்”  என்றார். மூன்று நாட்களும் வீட்டில் ஆடு, மாடுகளின் கத்திக் கொண்டே இருந்தது. வீட்டின் உள்ளே ஒரே இறைச்சல், இட நெருக்கடி, கால்நடைக் கழிவுகளின் நாற்றமுமாய் பொழுது கழிந்தது. நாலாவது நாள் ஆடு, மாடுகளை வெளியேற்றி கொல்லையில் கட்டினார்கள். வீடு சுத்தமாகியது. மனசும். ‘அப்பாடா வீடு எவ்வளவு அமைதியாய் இருக்கிறது!’ என்றார்கள் அவர்கள்.

எதை எதையோ நினைத்தவண்ணம் இருந்தவன் அப்படியே தூங்கி விட்டேன்.

இன்று சனிக்கிழமை. அலுவலகம் அரை நாள் தான். மதியானம்  சிங்கப்பூரின் இன்னொரு மூலையில் இருக்கும் ஆஷிகாவின் அண்ணன்
குடும்பத்தினரை வீக் எண்ட் வந்து தங்கி செல்லுமாறு வலிய அழைத்தேன்.

“மச்சான், வீடு இடம் பத்தாதே. நாங்க ஆறு பேறு கொண்ட பெரிய குடும்பம். எல்லோரும் வந்து தங்கினால் இடம் பத்தாதே ஒன்னும்
தொந்தரவில்லையே“ என்றான் ஆஷிகாவின் அண்ணன்.

“வீட்டுல இடமில்லாட்டி என்ன? மனசுல இடமிருக்குதுல வாங்க மச்சான்“ என்றேன் வேறு வழி சிங்கப்பூரில் ஆடு, மாடுகளுக்கு எங்கே போவது?
நீங்களே சொல்லுங்கள்!.


***

நன்றி : ’புல்லாங்குழல்’ நூருல் அமீன் ( http://onameen.blogspot.com/ ) | EMail : onoorulameen@gmail.com

Wednesday, June 13, 2012

தங்க விசாரிப்புகளுடன் தாஜ் கடிதம் - TO: கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் (89)

முதல்வரம்மாவுக்கு எழுதியது போல கலைஞரய்யாவுக்கு கடிதம் எழுதுகிறார் கவிஞர் தாஜ். அடுத்து, உலகநாயகர் ஒபாமாவுக்கு எழுதவேண்டியதுதான் பாக்கி.  'பாவம்யா அவரு , வுட்டுடு' என்று சொன்னால், 'எனக்கு மட்டும் அந்த மனசு இல்லையா என்ன?  இந்த மீடியாக்களின் உலகத்திற்கிடையே அவர் இன்னும் அரதப் பழசு அரசியலையே நடத்துகிறார். உங்களிடம் சொன்னால் சிரிப்பீர்கள்; நான் இப்படி ஏதேனும் ஒரு பத்திரிகையில் உட்கார்ந்து எழுதக் கூடுமெனில் என் வீட்டையும் தேடி பணப்பண்டலை அனுப்பிவைத்தாலும் வைப்பார். ஆனாலும்... திருந்தவே மாட்டார். கட்டுரையில் அவரது இன்னும் பல அரசியல் நடவடிக்கைகளை எழுதியிருந்தேன். கட்டுரை கனமாகிப் போகிறதே என்று எடிட் செய்துவிட்டேன்' என்கிறார் நண்பர்.தப்பித்தேன். ஆமா, இது ஆபிதீன் பக்கங்களா தாஜூதீன் பக்கங்களா? - ஆபிதீன்
***


TO: 'மகா' கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்

'89-தங்க விசாரிப்புகளுடன்'
-------------------------------------

தாஜ்

12.06.2012

உங்களது நலத்தை
அன்புடன் விசாரிக்கிறேன்.
தவிர,
உங்களுக்கு
என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அரசியல்வாதி என்கிற பதம்
அரசியலை உள்ளாகக் கொண்டது.
அரசியல்... சாணக்கியம் சார்ந்தது.
சாணக்கியமோ.... சூழ்ச்சியின் வடிவம்.
சூழ்ச்சியை  மோசடியென அர்த்தப்படுத்தலாம்.
மோசடி... தமிழில் ஒரு கெட்டவார்த்தையானாலும்
அரசியல், அரசியல்வாதி என்கிற பதம்
இன்னும் இங்கே மதிப்பிற்குரியதாகவே இருக்கிறது.
பெரும்பாலோர்களாலும் போற்றவும் படுகிறது.

அரசியலின் 'மகா' அர்த்தம்...
எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்
பெரும்பாலோரால்... இங்கே
போற்றப்படுவதுதான் முக்கியம்!

என் கணிப்பில்... நீங்கள்
எல்லோராலும் போற்றப்படும் 
'நம்பர் ஒன்' அரசியல்வாதி!

பாசி பிடித்து துர்நாற்றமும் வீசும்
இந்திய அரசியல் துறையில்
நீங்கள்
நீண்டகால அனுபவம் கொண்டவர்!
வானளாவிய சகிப்புத் தன்மையுடன்
கூடுதல் திறமை கொண்டு
வெற்றிகரமாக
வலம் வருபவராகவும் நீங்கள் இருக்கிறீர்கள்!

'வாய்மையே வெல்லும்' என்பது சான்றோர் வாக்கு.
உங்கள் விசயத்தில் அது  100-க்கு 100 -சரி!
அதனை மெய்ப்பித்தும் காட்டியவர் நீங்கள்!
மெய்ப்பிப்பு என்றால்.... சாதாரண மெய்ப்பிப்பா அது...!?
அதிரடி மெய்ப்பிப்பு!
அந்த 'வாய்'யையும்.... 'மை'யையும்
நீங்கள் உபயோகித்த மாதிரி
இன்னொரு அரசியல்வாதி இங்கே உபயோகிக்கவேயில்லை!

வாய்மையே வெல்லும் என்பதை நிரூபணம் செய்ய
உங்களுக்குத்தான் எத்தனை உந்துதல்!
எத்தனைத் திறனாய் அதனை உபயோகித்துக் காட்டினீர்கள்.
ஒரு காலக்கட்டத்தில்
உங்களது அரசியல் எதிரிகளையெல்லாம்
துண்டைக் காணோம் துணியைக் காணோமென
ஓட்டம் பிடிக்க அல்லவா வைத்தீர்கள்!

உங்களோடு அரசியலுக்கு வந்தவர்களில்
தொடர்ந்து...  நீங்கள் ஒருவரே
இன்னும் பெயர் போடுபவராக இருக்கின்றீர்கள்!
நிச்சயமாகச் சொல்வேன்
இம்மண் ஆயிரம் அரசியல்வாதிகளை கண்டிருக்கலாம்
ஆனால்..., உங்கள் அளவிலான சாதுர்யம் கொண்ட
இன்னொரு அரசியல்வாதியை கண்டிருக்காது!

சமீபத்தில்...
2-g, சங்கதிகளை விரித்து
உங்களது இயக்கத்தையும்
உங்களது இரத்த உறவுகளையும்
ஒரு சதிகாரக் கூட்டம் (உங்கள் இயக்கத்தார்களின் சொல்)
படாய் படுத்திய போதும்... தொடர்ந்து
இன்றளவும் படுத்திக்கொண்டிருக்கும் போதும்
'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல'
நீங்கள் காட்டும் மௌனமும்
அதன் நிழலான பொறுமை என்பதும்
சாதாரணமானதல்ல!

2-g சங்கதிகளுக்கான குற்றச்சாட்டுகளுக்கு
'சட்சட்'டென்று ஆரம்பத்தில் நீங்கள்
பதிலுரைப்பும் மறுப்புகளும் சொல்கிறவாராக இருந்தாலும்
பின்னாலான நாட்களில்...
அரசியலில், காலத்தே பெற்ற அனுபவமாய்
நீங்கள் காட்டத் தொடங்கிய
மௌனமும், அதன் இன்னொரு பக்கமான
பொறுமையும் வியக்கத்தகுந்தது!
பதிலுரைப்புக்கு, சொல்லும் அர்த்தமும் மட்டும்தான்
மௌனத்திற்கோ ஆயிரம் ஆர்த்தம்!

உங்களிடம்
அரசியலின் அரிசுவடிப் பாடம் தொட்டுப்
படித்ததாலோ என்னவோ
உங்களது கழகக் கண்மணிகளும்
சொந்த ரத்தங்களும்
என்னமாய்...மௌனம் காக்கிறார்கள்!
உங்களது பேரனும் மகளும்
சகஜமான நடையிலும் கூட
சப்தம் காட்டாததோர் நடையல்லவா நடக்கிறார்கள்!
இருப்பையும் கூட அறிய முடியாத மௌனம்!
குருகுலப் பயிற்சி வீணாகவேயில்லை!
நம்மால் வியக்காமலும் இருக்க முடியவில்லை!

பாருங்களேன்....
உங்களது மௌனத்தால்.....
உங்கள் உறவுகளின் மௌனத்தால்....
2g- என்பது
இங்கே நம் மக்களிடம் இன்றைக்கு
டெல்லி வழக்குமன்றத்தில் நடக்கும் ஏதோ ஒரு வழக்கு!
அல்லது....
இன்னொரு வழக்கு. அவ்வளவுதான்!

நம் மக்களில் பாதிக்குபாதி பேர்கள்
அவ்வழக்கு பற்றிய நினைவிலிருந்தும் தூர வந்துவிட்டார்கள்!
ஏன்... மறந்தே போனவர்களும் உண்டிங்கே.

இப்படியான வழக்குகளில்
'மகா' கலைஞரான உங்களது அனுபவ ஞானம்
ஒரு போதும் பொய்த்ததில்லை.
நேற்றைக்கு...
'சர்காரியா கமிஷன்' என்னவானது?
உங்களது
மௌன சாதுர்யத்தின் முன் நின்றதாயென்ன?

அந்த வழக்கு தள்ளுபடியாகி
நீங்கள் வாகை சூடிய போது...
உங்களை
'விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி' என்றார் எம்.ஜி.யார்.  
அவர் சொன்னார் என்பதற்காக
மக்கள் அதனை இன்னுமா
நினைவிலா வைத்திருக்கிறார்கள்?
காலம் என்பது உருளக் கூடியதுதான்...
மக்களது மறதிகளின் பள்ளத்தாக்கில்
அது உருண்டு மறையக் கூடியதேயென....
உங்கள் அளவுக்கு
இங்கே அறிந்து உணர்ந்தவரும்தான் யார்?

'லாவணி' பாடி
சிக்கலான பிரச்சனைகளை
ஊதி நாமே பெரிசாக்குவதைவிட
மௌனமாய் இருந்து, மக்கள் மத்தியில் அதனை
நமுத்துப் போகவைப்பதும்தான்
எத்தனை புத்திசாலித்தனம்!?
திறம்படவே அதனை அப்படி
நிகழ்த்துகின்றீர்கள் என்பதுதான் என் வியப்பு!

வாயையும் மையையும் உபயோகிப்பது பலமென்றால்...
அதனை உபயோகிக்காமல் விடுவதும்
இன்னொரு வகையான பலம்.
ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே
உங்களை கும்பிட்டு வணங்கி
இந்த அடிப்படை அரசியல்
பாடத்தினை படித்திடல் வேண்டும்.
உங்களது 89-வயசு தங்க அனுபவம்
ஒன்றும் சாதாரணமானதல்ல!

*
போகட்டும்,
உங்களது திறமைகள் குறித்து
நிறையவே மலைத்தாகிவிட்டது!
இன்றைக்கு உங்களைப் பார்த்து
புதிதாக மலைக்கவென்று ஒன்றுமே இல்லை.
உண்டென்றால்... அது உங்களது
89-வது பிறந்தநாள் பெருவிழாதான்!!
அதுதான் எத்தனை சிறப்பாக
நடந்தேறியிருக்கிறது!

89-கிலோ எடை கொண்ட கேக்கு....

89-கிலோ எடை கொண்ட தங்கம்.....

லட்சங்களின் செலவில் புது வடிவ அலங்கார மேடை....
அங்கே கூடிய மக்கள் அலையில் சிங்கநாதம்...
செய்தியைக் கேட்கவே பிரமிப்பாக இருந்தது!

பெரியாரின் வழிகளை
பின்பற்றுவதாக கூறி வருகிற நீங்கள்
பெரியாரின் எந்தெந்த வழிகளை
கெட்டியாகத் தொடர்கின்றீர்கள் என்பதை
என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது.
என்னதான் உங்களைத் தெரியுமென பீற்றிக் கொண்டாலும்
உள்ளார்ந்த உங்களது கோட்பாட்டு நடவடிக்கைகள் எல்லாம்
எனக்குத் தெரியும் என்று ஆகிவிட முடியாது.

இந்த வயது விசயத்தில் நீங்கள் பெரியாரை
தொடரக் கூடியவராகவே இருக்கிறீர்கள். சந்தோஷம்!
அவர் 98-யை தொட்டு சளைக்காமல்
மக்களைச் சந்தித்தார் என்றால்...
நீங்கள் 89-யை தொட்டு
மக்களைச் சந்தித்து வருபவராக இருக்கிறீர்கள்!

அவர் தன் எடைக்கு எடை
பரிசுப் பொருட்களை பெற்றார் என்றால்
நீங்கள் உங்கள் வயதின் நம்பருக்கேற்ப
பரிசுப் பொருட்களை பெறுகிறீர்கள்!
எடையை விட்டு, வயது அளவுக்கு என்பது
சின்ன மாற்றம்தான் என்றாலும்
இது லாபகரமாகவே தெரிகிறது.
பரவாயில்லை.

பெரியார் தனக்கு கிடைக்கும்
பரிசு பொருட்களை கணக்கிட்டு பணமாக மாற்றி
இயக்கத்தின் வளர்ச்சி/
தாழ்ந்த நம் மக்களுக்கென்று கல்லூரி/
மேலும், இன்னும் பிற அர்த்தம் கொண்ட இத்தியாதிகளுக்கு
அதனை செலவளிக்கக் கூடியவராக இருந்தார்!
இந்த விசயத்தில் நீங்கள் எப்படி?

பெருந்தலைவர் காமராஜ் கூட
தனக்கு கிடைக்கும்
அன்பளிப்புகள் அத்தனையும்
அநாதை ஆசிரமத்திற்கு அனுப்பிவிடுவார் என்றும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 
கிட்டும் அன்பளிப்பு பொருட்கள் அனைத்தையும்
தனது வருமானத்தின் பெரும் பகுதியினையும்
ஏழைகளுக்காக வாரிவழங்கக் கூடியவர் என்பதாக
வாசித்தும் இருக்கிறேன்.
இப்போது, நீங்கள்தான் சொல்லணும்
இவ்விசயத்தில் எப்படி நீங்கள்?

உங்களது பிறந்த நாளுக்கு கிட்டிய
89-கிலோ கேக்கை வெட்டி
உடன் பிறப்புகளுக்கு நிச்சயம் தந்திருப்பீர்கள்.
கிட்டிய அந்த 89-கிலோ தங்கத்தை?
கேக்கை வெட்டித்தந்த மாதிரி உடன் பிறப்புகளுக்கு
இதனை வெட்டித் தந்திருக்க மாட்டீர்கள்.
அது வேண்டாத வேலையும் கூட.
சரி..., கட்சிப் பணிக்காக இருக்குமோ?
அப்படியெனில் இந்நேரம் மீடியாக்கள் அவ்வளவும்
உங்களை வியந்து வியந்தல்லவா சிலாகித்திருக்கும்!

89-கிலோ தங்கம் அன்பளிப்பாக கிடைத்த இச்செய்தி
மீடியாக்கள் சிலவற்றில் கசிந்ததோடு சரி.
பின் ஏனோ....
அவற்றின் வாயெல்லாம் அடைத்துப் போய்விட்டது!
எந்த மந்திரக்கோல் அவற்றின் வாய்களை
அடைத்ததென்று தெரியவில்லை.
போகட்டும்
இப்போது சொல்லுங்கள்...
89-கிலோ தங்கத்தின் அடுத்த நகர்வு எப்படியென்று.
ஏன் இப்படி
திரும்பத் திரும்ப கேட்கிறேன் என்றால்...
தொகை பெரிதாயிற்றே
அத்தனை கிலோ தங்கத்தையும்
பிறந்தநாள் பரிசுதானே என்பதாக
உங்கள் மனைவிமார்கள்
பங்கு போட்டு பிரித்து
வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கக் கூடுமென்றால்
உங்களது அரசியல் எதிரிகள் வாய் கூசாமல்
இத்தனைத் தங்கமும்
2-g வரவின் வேறு மாதிரியான நுழைவா?
என்றுவிடக் கூடாது பாருங்கள்
அதனால்தான் தெளிவு கேட்கிறேன்.

'அதான் மீடியாக்களின் வாயை
அடைத்துவிட்டாகிவிட்டதே' என்கிறீர்களா...
தலையைச் சுற்றுகிறது.
இத்தனை வலியோடு
எனக்கு ஏன் இந்த உறுத்தல்?
உங்களுக்கு
மீண்டும் என் வாழ்த்துக்கள்.

***

நன்றி : தாஜ்

http://www.tamilpukkal.blogspot.com/
satajdeen@gmail.com

***

தப்பிக்க ஒரு போனஸ் : சுப.வீரபாண்டியன் கவிதை :

கலைஞர் 89

நீண்டதுன் வாழ்க்கைப் பாதை
நீபல துறையில் மேதை
இன்பமும் துன்ப மென்றும்
இசையுடன் வசைகள் என்றும்
எதிரெதிர் நிலைகள் யாவும்
எதிர்கொண்ட தலைவன் நீதான்
புதுப்புனல் தனிலும் வேகம்
புயல்களும் பார்த்த தேகம்
வெற்றிகள் குவிந்த துண்டு
வேல்களும் பாய்ந்த துண்டு 
மாற்றங்கள் நூறு கண்டும்
மாறாது உனது தொண்டு
தமிழுனை என்றும் சூழ்க
தலைவரே வாழ்க வாழ்க
தொன்னூறு நூறா கட்டும்
புகழட்டும் திசைகள் எட்டும்!

Tuesday, June 5, 2012

சோவுக்கு சமர்ப்பணம் - தாஜ்


கட்டி எழுப்பப்பட்ட
புனிதங்களின் அஸ்திவார ஆட்டம்!

தாஜ்

இன்றைய செய்திகளில்
அத்வானி
பாரதிய ஜனதாவின் தலைமையைத் தாக்குகிறார்!

கட்சி மேலிடமும்
அதற்கும் மேலிடமான RSS ம்
அத்வானியின் இந்தத் தாக்குதலை
கண்டுகொள்வது கிடையாது.
கண்டுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை..
அத்வானியை பொருட்படுத்துவதும் கூட கிடையாது!

பாகிஸ்தானின் தந்தையான
முகம்மதலி ஜின்னா குறித்து
நேர்மையானவர் அவர் என்று
அத்வானி என்றைக்கு அபிப்ராயம் கூறினாரோ
அன்றைக்கே அத்வானியை
அக்கட்சி தள்ளிவைத்துவிட்டது.

அத்வானிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை
என்றோர் கணிப்பு பரவலாக இருப்பதும் கூட
இரண்டாவது காரணம்தான்.

பாபர் மசூதி இடிப்பு தருணத்தில்
அத்வானியின் ஆக்ரோஷமான பேச்சை
பயன்படுத்திக்கொள்ள முற்பட்ட கட்சித் தலைமை
இவருக்கு புனிதப்பட்டம் கட்டி
வட இந்தியா பூராவும் ரதயாத்திரைக்கு அனுப்பியது
அத்வானியும்
அப்படியே தன்னை நம்பியவராக
ரதயாத்திரை சென்று
மக்கள் மத்தியில் தன் ஆக்ரோஷத்தை
கட்டவிழ்த்துவிட்டார். அது ஓர் அளவுக்கு
வெற்றிகரமாகவும் முடிந்தது.
காரியம் முடிந்ததும்
கட்சி அவரை கருவேப்பிலையாய்
எடுத்துக் கடாசிவிட்டது.
அதனை அத்வானி அவதானிக்கத்தான்
அநியாயத்திற்கு லேட்டாகிவிட்டது!

சமீப காலங்களில் அவரும்
தனது இழந்த புகழை மீட்டெடுக்க
பழையபடிக்கு
என்னென்னவோ ரத யாத்திரையெல்லாம்
போய் பார்த்துவிட்டார்
ம்ஹும்... மக்கள் ஏனென்று கேட்கவில்லை.

ஆக,
இவரது புனிதத்தின் அஸ்திவார ஆட்டம்
சீண்டுவார் இல்லாமல்
நொடித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
*
அக் கட்சியில்
அத்வானியை ஒத்த இன்னொருவர் மோடி!
இவரும் புனிதப்பட்டம் கட்டப்பட்டவர்தான்.
குஜராத்தின் முதல்வராக வலம்வரும் இவர்
நாளை
பாரதத்தின் பிரதமர் பட்டம் கட்ட
தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும்
வேடிக்கை மனிதர்.

குஜராத்தில்
இஸ்லாமியர்களை வேட்டையாடியபோது
இவரை தட்டிக்கொடுத்த தலைமை,
கிட்டத்தட்ட
ஓர் கசாப்புக்கடைக்காரனாகவே
இவரை மாற்றிப் பார்த்தது.
பின்னர் ஏதோவோர் குற்றவுணர்வில் 
எல்லோருக்கும் நல்ல மனிதனாக மோடி நடக்கவும்
கட்சித் தலைமைக்கு கெட்ட மனிதராகி போனார்.
கசாப்புக் கடைக்காரன் எப்படி
காந்தியாக மாறலாம்?
RSSயின் சப்தம் காட்டாத கேள்வி இது.
நியாயம்தானேங்க!

வெட்டுகிறேன் என்றவன்
திடுமென வெட்டமாட்டேன்ணு
முரண்டு பிடிக்கலாமோ?
கலவரமில்லாமல் கட்சி வளர்ப்பதும்தான் எப்படி?
*
இன்றைய நிலவரப்படிக்கு
கட்சியில் இருந்து ஓசைப்படாமல் விலகி
தனி கிரகங்களாக வட்டமடிக்கும்
அத்வானியும் / மோடியும்
நம்ம சோவின் செல்லங்கள்!

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ
அகில இந்தியாவிலேயே
அத்வானியையும் மோடியையும்
பிரதமருக்கு சிபாரிசு செய்யும்
ஒரே நபர் நம்ம 'சோ'தான்!இப்போது சோவின் குரலில்
ஓர் சின்னத் திருத்தம்!
அத்வானி or மோடி...This or That என்றவர்
இன்றைக்கு
மோடி or ஜெயலலிதா என்கிறார்!

சரி...
பாரதிய ஜனதா ஓர் அகில இந்திய கட்சி.. ரைட்?
அந்த பாரதிய ஜனதாவின் மூளையாக
RSS இருந்து கொண்டிருக்கிறது
ரைட்?
நாளை பாராளுமன்ற பொதுத் தேர்தலில்
பாரதிய ஜனதா தனது கூட்டாளிக் கட்சிகளுடன்
மெஜாரிட்டியாக M.P.சீட்டுகளை வாகை சூடுமெனில்
அவர்களது பிரதமரை
அவர்கள் கூடி தேர்ந்தெடுப்பதுதான் நடக்கும்
அதுதான் முறை.
அதுதான் அவர்களது கட்சிக்கும் மரியாதை
அதற்கு மேல் அவர்களது மூளை அமைப்பான
RSSயையும் கலந்து பரிசீலிக்கணும்
ஆக...
இத்தனை நடைமுறை சம்பிரதாயங்களையும் விட்டு
நம்ம சோ....
தனது துக்ளக் பத்திரிகை ஆண்டுவிழாவில்
மேடையில் அத்வானியையும் மோடியையும்
உட்காரவைத்துக் கொண்டு
வரும் பாரளுமன்றத் தேர்தலில்
பிரதமர் வேட்பாளராக
பாரதிய ஜனதா மோடியை அறிவிக்க வேண்டும்.
அல்லாது போனால்...
ஜெயலலிதாவை அறிவிக்க வேண்டும் என்கிறார்!
இது எந்த ஊர் நியாமுங்க?
யோசித்துப் பார்த்தால்
இது பாரதிய ஜனதாவின் தன்மானத்திற்கு
விடப்பட்டிருக்கும் சவாலல்லவா இது!

என் மரமண்டைக்கே இது தோணும்போது
பாரதிய ஜனதா கட்சியின் மேதைகளுக்கு
இது விளங்குமா விளங்காதா?
நம்மை மீறி நடக்கும்
அத்வானிக்கும் - மோடிக்கும்
நம்மை ஊறுகாயாகப்
பயன் படுத்திக் கொண்டு வரும்
ஜெயலலிதாவுக்கும்
'ராஜ குருவாக' சோ தன்னைக் காமித்துக் கொண்டு
நம் கட்சியின் அடிப்படை சங்கதிகளில்
தலையிடுவதும்தான் எத்தனை அவமானம்?
அந்த மேதைகளுக்கு தோன்றுமா தோன்றாதா?
தேன்றியிருக்கிறது என்பதுதான் நடப்பு செய்தி.

எத்தனைக்கு ஊழலில் அல்லது
அராஜகத்தில் ஈடுபட்டு
கட்சியைவிட்டு தள்ளிப் போனவர்களையெல்லாம்
பாரதிய ஜனதா கட்சி நாடிப் போகிறதே தவிர
அத்வானியையோ மோடியையோ
அது நாடுவதாக இல்லை.
இவர்கள் மீது அவர்கள் கட்டியெழுப்பிய
புனித பிம்பத்தை
இன்றைக்கு அவர்களே
சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குருவின் சொல்லுக்கு
அத்வானி/ மோடி/ ஜெயலலிதா வகையறா
மரியாதை செய்யலாம்.
அச் சொல்லை பாரதிய ஜனதா கேட்கணுமா என்ன?
இக் குருவின் சொல்லுக்கு
இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டது பாரதிய ஜனதா!

உடல் உபாதை கொண்டார் சோ.
பாவம்.
சமீப துக்ளக் இதழ்களிலும் இது குறித்து 
புலம்பித் தீர்க்கிறார்.
நிஜமாகவே பாவமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்ய?
குருவி தன்னை பருந்தாக நினைக்கலாம்.
தப்பில்லை.
என்றாலும்...
அதன் ஆசை
அடுத்த ஜென்மத்தில்
வேண்டுமானால்
சாத்தியமாகலாம்.
***

நன்றி : தாஜ்

http://www.tamilpukkal.blogspot.com/
satajdeen@gmail.com