Wednesday, June 29, 2016

பாவத்தைக் கழுவுகின்ற வழியைப் பாரும்! - அஷ்ரஃப் சிஹாப்தீன் கவிதை


உனக்கு வேறா?
----------------------
கடைத் தெருவில் அபாயாக்கள் அலையுதென்றும்
குமருகளும் குழந்தைகளும் திரியுதென்றும்
கடைசிதினப் பெருங்கருணை பிறழ்ந்தாரென்றும்
கடைவாயோ கிழிந்துவிடக் கத்துகின்றீர்
உடையொன்றைப் பெருநாளில் உடுக்க எண்ணும்
உம்தாயும் சோதரியும் மனையாள் மற்றும்
முடையில்லா உம்குடும்பப் பெண்டிர்க்கெல்லாம்
மலக்குகளோ தருகின்றார் புதிய ஆடை?
தொழிலிடத்துத் தோழனொரு கடையைச் சொன்னால்
தோதாகக் கிளம்புதற்கு வேளை பார்ப்பீர்
தொழுகைக்குப் போகின்ற வேளை கூட
திறந்திருக்கும் கடைக்குள்ளே ஆடை பார்ப்பீர்
அழகாகப் பொருந்தி வரும் உடையைத் தேடி
ஆனமட்டும் பகலெல்லாம் அலைவீர் மற்ற
ஆளுடைய பெண்டிரொடு ஆடைக்காக
அங்காடி செல்வதைநீர் அசிங்கம் என்பீர்!
பகலெல்லாம் வீடுணவு, ஆடைதோய்த்தல்
பிள்ளைகளின் தேவைகள் பெருக்கல் கூட்டல்
அகமுடையான் குடும்பத்தை ஆதரித்தல்
ஆயிரமாய் வரும் குடும்பச் சிக்கலெல்லாம்
அகங்கொள்ளும் முகங்கொள்ளும் குடும்பமாது
ஆடையொன்றைப் பெறுவதற்குக் கடைக்குச் சென்றால்
முகங்கோணி மனங்கோணி முஸ்லிம் மானம்
முடிந்ததெனச் சொல்வதென்ன முட்டாளேநீ!
வெளிநாட்டில் பணிசெய்யும் கணவன் கொண்ட
வனிதையரும் குழந்தைகளும் ஆடை வாங்க
வெளியாகிக் கடைகளுக்குச செல்வதன்றி
வேறுவழி இருக்கிறதா? அவர்க்கு மட்டும்
வெளிச்செல்லும் சட்டங்கள் வேறு உண்டோ?
வீட்டுக்கே நீர் கொண்டோ கொடுப்பீர் ஆடை?
பழிசொல்லும் பாவத்தை விட்டு உந்தன்
பாவத்தைக் கழுவுகின்ற வழியைப் பாரும்!

*
நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன்
https://www.facebook.com/ashroff.shihabdeen/posts/10209681380982103


1 comment:

  1. "பகலெல்லாம் வீடுணவு, ஆடைதோய்த்தல்
    பிள்ளைகளின் தேவைகள் பெருக்கல் கூட்டல்
    அகமுடையான் குடும்பத்தை ஆதரித்தல்
    ஆயிரமாய் வரும் குடும்பச் சிக்கலெல்லாம்
    அகங்கொள்ளும் முகங்கொள்ளும் குடும்பமாது
    ஆடையொன்றைப் பெறுவதற்குக் கடைக்குச் சென்றால்
    முகங்கோணி மனங்கோணி முஸ்லிம் மானம்
    முடிந்ததெனச் சொல்வதென்ன முட்டாளேநீ!
    வெளிநாட்டில் பணிசெய்யும் கணவன் கொண்ட
    வனிதையரும் குழந்தைகளும் ஆடை வாங்க
    வெளியாகிக் கடைகளுக்குச செல்வதன்றி
    வேறுவழி இருக்கிறதா?"-
    சாட்டையிடி...அடியல்ல இடி.அருமை அஷ்ரஃப் சிஹாப்தீன்.

    ReplyDelete