Showing posts with label ஓஷோ. Show all posts
Showing posts with label ஓஷோ. Show all posts

Wednesday, January 13, 2016

பயங்கரமான நல்லவர்கள் ! - ஓஷோ

Thanks to :  Venni La  & Zara Thustra  (fb)
*

நீங்கள் ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்றபோதும்கூட, நீங்கள் கெடுதல்தான் செய்கிறீர்கள்.

நல்லது செய்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எப்போதுமே கெடுதல்தான் செய்கின்றனர்.

இந்த உலகிலேயே மிகவும் தீங்கானவர்கள் அவர்கள்தான். சமூக சீர்திருத்தவாதிகள், சமூக புரட்சியாளர்கள், இவர்கள்தான் மிகவும் தீங்கானவர்கள்.

ஆனால் அவர்கள் செய்கின்ற அந்தத் தீங்கு எங்கு இருக்கிறது என்பதைக்கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.

ஏனெனில் அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் மற்றவர்களுக்கான சிறைவாசத்தை அவர்கள் உருவாக்குகின்ற வழி அதுதான்.

நீங்கள், அவர்களை உங்களுக்கு ஏதாவது செய்வதற்கு அனுமதித்தால், அதன்பிறகு நீங்கள் அவர்களின் உடைமை ஆகிவிடுவீர்கள்.

அவர்கள், முதலில் உங்கள் பாதங்களை சுகமாக அமுக்கிவிடுவார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கைகள் உங்கள் கழுத்தை நோக்கி நகர்வதை நீங்கள் காணலாம்.

பாதத்தில் ஆரம்பித்து உங்களது கழுத்தில் அவர்கள் முடிப்பார்கள். ஏனெனில் அவர்களும் விழிப்புணர்வு அற்றவர்கள்தான்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அவர்கள் ஒரு தந்திரத்தைக் கற்று வைத்திருக்கிறார்கள்.

அதாவது, நீங்கள் யாரையாவது உங்களுக்குச் சொந்தமானவராக ஆக்க விரும்பினால் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்பதுதான் அது.

இப்படிப்பட்ட ஒரு தந்திரத்தை அவர்கள் கற்றுவைத்திருப்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது.

ஆனால், அவர்கள் செய்வது எல்லாம் கெடுதலில்தான் முடியும். ஏனெனில், அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும், அது மற்றவர்களை தங்களுடையராக்கிக் கொள்வதற்கான முயற்சியாகத்தான் இருக்கும்.

அது என்ன பெயரில், என்ன வழியில் வந்தாலும், அது ஒரு பாவச் செயல், சமயச் பற்றற்றது.

- ஓஷோ -

Tuesday, January 8, 2013

ஓஷோ, துணிவு என்பது என்ன?

'துணிவு' என்னும் சொல்லை நான் பயன்படுத்தும்போது படைவீரனின் துணிவை குறிப்பதில்லை. அது துணிவல்ல, சுத்த மடத்தனம். அது வெறும் மூர்க்கம்; துணிவல்ல. அது வெளியில் இருந்து திணிக்கப்பட்டதே. அவன் மந்தமாகுமாறு அவனை நீங்கள் பயிற்ற வேண்டி உள்ளது. அது புத்தியின்மை; புத்தி அல்ல. எனவேதான் படைவீரர்கள் மடையர்களாக இருக்கிறார்கள். அதிக பதக்கங்கள் பெறப்பெற அதிக மடையர்களாக அவர்கள் ஆகி இருக்கிறார்கள் என நீங்கள் உறுதியாக அறிய முடியும். அவர்கள் தோளில் இருக்கும் விருதுகளை எண்ணியே அவர்கள் எத்தனை முட்டாள்கள் என நீங்கள் அறியலாம்.

படையின் மொத்த வேலையுமே புத்திசாலித்தனத்தை நாசமாக்குவதுதான். ஏனெனில் புத்தியுள்ள மனிதனால் கொல்ல முடியாது. காரணமே இல்லாமல் ஒருவரைக் கொல்ல வேண்டி வரும்போது புத்திசாலி 1001 கேள்விகளைக் கேட்பான்.

ஒரு இந்தியன் ஒரு பாகிஸ்தானியை கொல்லுகிறான். அவனை அதற்கு முன் சந்தித்ததே இல்லை. அவனை அதற்கு முன் பார்த்ததே இல்லை. அவனுடன் அவனுக்கு எந்த பகைமையும் இல்லை. அவ்வாறே ஒரு பாகிஸ்தானியும் இந்தியனைக் கொல்கிறான். எந்தக் காரணமும் இல்லாமலேயே.. அவனுக்கு எந்த தீங்கும் செய்யாதவனைப் போய் கொல்கிறான்...

கொஞ்சமாவது அறிவிருந்தால் அவர்களால் அதை செய்ய முடியுமா? தன் மனைவி தனக்காக வீட்டில் காத்துக்கொண்டிருப்பது போலவே அவன் மனைவி அவனுக்காக அவன் வீட்டில் காத்துக் கொண்டிருப்பாள் என்பதையும், தன் குழந்தைகள் தன்னை எதிர்பார்த்திருப்பார்கள் என்பது போலவே அவன் குழந்தைகளும் அவனை எதிர்பார்த்திருப்பார்கள் என்பதையும் தன் வயதான தாய்தந்தையர் தன்னைச் சார்ந்திருப்பது போலவே அவனுடைய தாய் தந்தையர் அவனைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்தால் எந்த இந்தியனோ பாகிஸ்தானியோ அதை செய்ய முடியுமா? கொல்லவோ கொல்லப்படவோ செய்கிற இந்த மடமையை செய்ய முடியுமா?

படைவீரர்கள் நுண்ணறிவுள்ளவர்களாயிருக்க அனுமதிக்கப்பட்டால் பூமியிலிருந்து போர்கள் மறைந்து விடும்.

- ஓஷோ -  'ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து' நூலிலிருந்து (தமிழாக்கம் : சிங்கராயர்)

***

குறிப்பு : துணிவு பற்றி விரிவாக ஓஷோ சொல்வதை பிறகு தொடர்கிறேன். உஷார், அரபியிடமிருந்து ·போன் வருகிறது...! என்ன, ஓஷோ ஜோக் உடனே வேண்டுமா? ஒரேயொரு வெஜிடேரியன் ஜோக்தான் கைவசம் இருக்கிறது, பரவாயில்லையா?

'நுண்ணறிவுள்ள' சிறுவன் (நதீம்?)  தன் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தானாம் : 'பெற்றோர்கள் இவ்வளவு தொல்லையானவர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள முடிந்திருந்தால், ஒரு போதும் அவர்களைப் பெற்றிருந்திருக்க மாட்டேன்!'

**

நன்றி : கவிதா பப்ளிகேஷன்

Saturday, June 30, 2012

ஓஷோவின் அரட்டைக் கச்சேரி

ஸென்'னுடன் நடந்து... 'ஸென்'னுடன் அமர்ந்து... நூலிலிருந்து.. (தமிழாக்கம் : சிங்கராயர்)

***

ஓஷோ, எத்தனையோ அழகான பேருரைகளை வழங்க எப்படி உங்களால் இவ்வளவு எளிதாக முடிகிறது?

திவாகர், என்ன பேருரைகள்? இந்த வெற்று அரட்டைக் கச்சேரியை நீ பேருரை என்கிறாயா? பேருரை என்பது சிரத்தைக்குரிய விஷயம்! பேருரை என்பது மதச் சார்பானது. தூய்மையானது. புனிதமானது. அது கோயில்களிலும் சர்சுகளிலுமே வழங்கப்படுவது. இந்த இடமோ சர்ச் அல்ல. இது குடிகாரர் மடம்; கேளிக்கை விடுதி! எது பேருரை? நான் எப்போதும் எந்த பேருரையும் ஆற்றியதில்லை. ஆம் , நான் புறணி (gossip) அளக்கிறேன். அது உண்மையே. ஆனால் அதில் எந்த நற்செய்தியும் (gospel) இல்லை; எந்த நாசூக்கும் இல்லை; எந்த ஒளிவுமறைவும் இல்லை.அது மிகவும் எளியது - என் முறை மிகவும் எளியது.

ஒரு பேரரசன் ஒரு சிற்றூரின் வழியாக போய்க் கொண்டிருந்தான். அவன் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற போர்வீரர்களில் ஒருவன். வில்வித்தை அபிமானி. வில்வித்தையில் மிகச் சிறந்தவர்களை அவன்  போற்றினான். அந்தச் சிற்றூரின் வழியாகப் போகும்போது அவன் பல மரங்களிலும் விளக்குக் கம்பங்களிலும் தோட்ட வேலிகளிலும் வரைந்திருந்த வட்டங்களின் நடுமையத்தில் குறிதவறாமல் அம்புகள் ஏறி இருந்ததைக் கண்டான். இம்மியும் பிசகாமல் வட்டங்களின் மையப்புள்ளியில் அம்புகள் குத்திட்டு நின்றன. ஏராளமான அம்புகள் எங்கு பார்த்தாலும்.. அவன் வியந்து போனான்.

அவன் சொன்னான், 'யார் இந்த மனிதன்? இவ்வளவு செம்மையான வில்லாளியை நான் இதுவரை கண்டதில்லை! அவனது இலக்கு துல்லியமாக இருக்கிறது. ஒரு இடத்திலும் அவன் குறி தப்பவில்லை. ஒரு அங்குலத்தில் ஒரு பிரிவு அளவுகூட பிசகவில்லை. எல்லா இடத்திலும் அம்பு சரியாக மையத்தில் பதிந்துள்ளது. ஒவ்வொரு இலக்கும் அதற்கு சான்றாக உள்ளது.' அவன் தன் தேரை நிறுத்தினான். ஊர் மக்களை அழைத்தான். 'யார் இந்த மனிதன்?' என கேட்டான்.

அதற்கு அவர்கள் எல்லாரும் நகைத்தார்கள். பின் சொன்னார்கள், 'அவனைப்பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள். அவன் ஒரு பித்தன்!'

'பித்தன் என்று எப்படிச் சொல்கிறீர்கள் நீங்கள்? அவன் பித்தனாயிருக்கலாம். ஆனால் நான் பார்த்தவர்களில் அவனே மாபெரும் வில்லாளியாக இருக்கிறான்.'

அவர்கள் சொன்னார்கள், 'அதற்கும் வில் வித்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனுக்கு வில்வித்தை பற்றி ஒன்றுமே தெரியாது.'

அரசன் சொன்னான்,'அப்படியானால் இது ஒரு அற்புதம்தான்! எப்படி இது அவனால் சாத்தியமாகிறது?'

அவர்கள் சொன்னார்கள், 'அது எளிது. முதலில் மரத்தின் மீது அம்பு எய்கிறான். பின் போய் அதைச் சுற்றி ஒரு வரைந்து விடுகிறான்!'

சரியாக அதுதான் என் முறையும்! அது எளிது! எனவே எதைக் குறித்தும் நீங்கள் கேட்க முடியும். ஆனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதையே சொல்கிறேன். முதலில் நான் அம்பு விடுகிறேன். பின் அதைச்சுற்றி ஒரு வட்டம் வரைந்து விடுகிறேன் - இறுதித் திருத்தம் சேர்ப்பதுபோல!

**

நன்றி : கவிதா பப்ளிகேஷன்