நாகூர் கௌதிய்யா சங்கத்தின் நூற்றாண்டு விழா மலரில் நண்பர் அப்துல் கையூம் எழுதிய கட்டுரை நன்றியுடன் பகிர்கிறேன். - AB
*
சரித்திர நாயகர்களும் சதம் கண்ட சங்கமும்
-
நாகூர் அப்துல் கையூம்
ஒரு நூற்றாண்டைத் தாண்டி வீறுநடை போடும் கெளதிய்யா சங்கத்தின் உன்னதங்களை
ஒருசில பக்கங்களில் அடைத்துவிட இயலாது. BETTER LATE THAN NEVER என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. தாமதமாக கொண்டாடினாலும்
தகுந்த நேரத்தில் இச்சங்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தனித்துவமிக்க
தரமான ஒரு ஓர் அற்புத நிகழ்வு.
நாகூர் கெளதியா சங்கம் இதுவரை ஏராளமான பிரமுகர்களுக்கு வரவேற்பு அளித்து
கெளரவித்திருக்கிறது. பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய
காயிதேமில்லத், இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தலைவராக விளங்கிய
பனாத்வாலா - இப்படியாக எத்தனையோ முக்கியப் புள்ளிகள். இவ்வரவேற்புகளில்
மிக முக்கியமானது நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பதில்
சற்றும் ஐயமில்லை.
காரணம் என்னவெனில் நாகூர் மண்ணின் மைந்தர் ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் எனும் உயர்பதவியை ஏற்று சொந்த ஊருக்கு அடியெடுத்து வருகையில்
அவர் பிறந்த மண்ணில் கொடுக்கப்படும் வரவேற்பு ஒரு சரித்திர நிகழ்வன்றோ?
பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிகத் தமிழக ஆளுநராக நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்கள் நியமிக்கப்படுகிறார். 1980-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 27ஆம் நாள் அவர் பதவியேற்ற
நன்னாள். பதவியேற்றபின்பு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நாகூர் கெளதிய்யா சங்கத்தில் அவருக்கு
பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது..
பள்ளிப்பருவம்
நாகூர் மீயான்தெரு முனிசிபல் முகம்மதிய ஆண்கள் ஆரம்பநிலைப்
பள்ளி. இப்பள்ளிக்கூடம்தான் இஸ்மாயீல் எனும் இலக்கிய இமயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்துத்
தந்த பாசறை.
சிறுவன் இஸ்மாயீல் அப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்த நேரமது. தமிழ்நாடு மாநிலம் “மெட்ராஸ் பிரஸிடென்ஸி”
என்று அழைக்கப்பட்ட காலம். ஒரு காலைப் பொழுதில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், வீதியில்
பலத்த ஆரவாரம் ஒலிக்கின்றது. வாகனங்களின் அணிவகுப்பு சீராக வந்துக் கொண்டிருந்ததைக்
கண்டு, பாடத்தை நிறுத்திவிட்டு, ஆசிரியர்களும்
மாணவர்களை வேடிக்கை பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் செல்கின்றனர். திண்ணை மீதிருந்தும்,
சுற்றுச் சுவர் மீது ஏறி நின்றும், அந்த கண்கொள்ளாக்
காட்சியை கண்டு களிக்கின்றனர் மாணவர்கள்.
படோபகரமான வாகன அணிவகுப்புக்கிடையே ஒரு ‘மெர்ஸிடீஸ்’ படகுக்கார் பவனி வருகிறது. அதில் அட்டகாசமான தோரணையில் ஆங்கிலேய கவர்னர் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
ஊர்வலம் பள்ளியின் வழியாக கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. உற்சாகம் மேலிட,
வாகனங்கள் சென்ற வழியே, வைத்த பார்வை தீராது,
வழிமேல் விழி வைத்து; கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருக்கிறான்
சிறுவன் இஸ்மாயீல்.
இஸ்மாயீல் மீது பேரபிமானம் வைத்திருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் “டேய் பசங்களா! நம்ம இஸ்மாயீலும் ஒருநாள் இந்த மாதிரி கவர்னர் ஆகி அட்டகாசமாக
ஊர்வலம் வருவான். பார்த்துக்கொண்டே இருங்க!” என்று விளையாட்டாகச்
சொன்னது அந்தச் சிறுவனின் காதில் அசரீரியாய் ஒலித்துக்
கொண்டிருக்கிறது. அன்பிற்குரிய ஆசிரியர் அகமகிழ்ந்து அளித்த நல்வாக்கு, ஒருநாள் உண்மையிலேயே பலிக்கும் என்று யாரும் ஊகித்திருக்க மாட்டார்கள். அந்த
நல்வாக்கு பலித்து இப்போது நிறைவேறி இருந்தது. கெளதிய்யா சங்கம் அம்மாமனிதருக்கு அளித்த
வரவேற்பு இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டு.
விளையும் பயிர்
சிறுவன் இஸ்மாயீலுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. நாகூரில் நபிகள் நாயகத்தின்
‘மீலாது விழா’ கொண்டாட்டம்.
அவ்விழாவில் இஸ்மாயீலுக்கு சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.
மடை திறந்த வெள்ளமென பேசி கேட்போரை
வியப்பில் ஆழ்த்துகிறான் அச்சிறுவன். “விளையும் பயிர் முளையில்
தெரியும்” என்பார்களே, அதுபோல.
அதுமட்டுமன்றி, சிறுவயதில் அரபி மதரசா சென்று அரபி மொழியில் பயிற்சி
பெற்று முறையாக முதிர்ச்சி பெற்றிருந்தான் அச்சிறுவன். பிற்காலத்தில் தமிழ்மொழியில்
அபார பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், தொடக்க வயதில் அரபி மதரஸாவில்
அடிப்படை மார்க்கக் கல்வி பயின்ற காரணத்தால் அதன்பின் ஆரம்பப் பள்ளியில் அடியெடுத்து
வைத்த காலத்தில் அவனோடு படித்த மாணவர்களில் இவன்தான் வயதில் மூப்பு. இவன் வயதையொத்த
பிற மாணவர்கள் மேல்வகுப்பில் இருந்ததைப் பார்த்து இவனுக்குள் ஒரு தீராத ஏக்கம். வாழ்க்கையில்
ஏனோ பின்தங்கி விட்டதைப் போன்ற ஒரு திக்பிரமை. அதிகப்படியாக தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற உத்வேகம், தன் வயதையொத்த மாணவர்களுடன் தானும் சேர்ந்து படிக்க
வேண்டும் என்ற உந்துதல், கல்வியில் இச்சிறுவன் காட்டிய பேரார்வம்
இவையாவும் பள்ளி ஆசிரியர்களை இவன்பால் கவனத்தை ஈர்த்தது.
இளமையில் சோகம்
இஸ்மாயீலின் இளமைக் காலத்து வாழ்க்கைப் பாதையில் பூக்கள் விரித்திருக்கப்
படவில்லை. அவன் கரடு முரடான முட்பாதையைக் கடக்க வேண்டியிருந்தது. பி.முஹம்மது காசிம் மரைக்காயர், ருகையா பீவி இருவருக்கும்
செல்வப்புதல்வானாய் வந்து பிறந்தவர்தான் நம் நாகூர் நாயகன். உடன் பிறந்தவர்கள் இரண்டு
பேர். ஒருவரின் பெயர் ஜக்கரியா மரைக்காயர். இன்னொருவர் உம்மு ஹனிமா என்றழைக்கப்படும்
சகோதரி ஆவார். நாகூர் லுக்மான் ஆலிம் சாயபு என்பவரின் வாழ்க்கைத் துணைவியார்.
ஒன்பதாவது வயதில், பெற்ற தாயையும், பதிமூன்றாவது வயதில் தந்தையையும் பறிகொடுத்த சிறுவன் இஸ்மாயீலுக்கு உலகமே இருண்டு
போகிறது. ஆறுதல் தேடும் வயதில், ஆதரவு வேண்டும்
பருவத்தில், அனாதையாய் ஆகிவிடுவது அளப்பரிய கொடுமையன்றோ?
இருந்த போதிலும் உறவினர்கள் அவனைக் கைவிடவில்லை; கண்ணுங் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள்.
மேல்நிலைக்கல்வி
இஸ்மாயீலுக்கு தமிழ்மொழி மீது ஓர் அதீத ஈடுபாடு ஏற்பட்டது நாகை தேசிய
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான். ஆசிரியர் என்.ஆராவமுதன் ஐயங்கார் அவனுக்கு
அளித்த உற்சாகமும், ஊக்குவிப்பும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். இந்த ஆராவமுதன் யாரென்றால்
பாடகர் ஏ.வி.ரமணனின் தந்தை, பாடகி உமா ரமணணின் மாமனார். எஸ்.எஸ்.எல்.சி. வரை இஸ்மாயீலின் ஆசிரியராக இருந்து
அவன் ஆற்றலை வளர்த்தவர்,
இஸ்மாயீல் மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பை எட்டியபோது தமிழிலக்கியத்தில்
மென்மேலும் தேர்ச்சி பெறக்கூடிய அரிய வாய்ப்பு கிடைக்கிறது.
சங்க இலக்கியத்தில் பெருந்திறன் வாய்ந்த சந்தானம் ஐயர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் போன்றவர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பு அவர்
செய்த பெரும்பேறு எனலாம்.
பிறர் நோக்கு
மனவியல் நிபுணர் பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்கப் பெண்மணி எழுதி, ஆக்ஸ்ஃபோர்ட் பதிப்பகம் வெளியிட்ட, “Questioning of Ramayanas” என்ற ஆய்வுநூல் பெரும் சர்ச்சையை கிளப்பிய நூல். இதில் இந்து சமயத்தவரின் மனதை
புண்படுத்தும் வகையில் தகவல்கள் அடங்கி இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு எழுந்து,
இந்நூலை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தின்
சமய விரிவாளராக பணியாற்றும் பேராசிரியை வாசுதா நாராயணன் எழுதிய “The Ramayana and its Muslim Interpreters” என்ற ஆய்வுக்கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அதில் அவர் நீதிபதி இஸ்மாயீல்
அவர்களை வானளவப் புகழ்ந்திருந்தார்.
திருக்குறளின் மேன்மையை எடுத்துச்சொல்ல கானடாவில் பிறந்த ஒரு ஜி.யு.போப்
தேவைப்பட்டதைப் போன்று, நாகூர்க்காரரின் மகிமையை எடுத்துச் சொல்ல நமக்கொரு அமெரிக்கா
பேராசிரியை தேவைப்படுகிறது. இதைப் படித்த உள்ளூர்க்காரனான நான் இவரின் மகிமையை இதுநாள்வரை
உணரவில்லையே என வெட்கித்துப் போனேன்.
படிப்படி முன்னேற்றம்
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய அவர் வகிக்காத பதவிகளே இல்லை எனலாம்.
வழக்குரைஞராக, சென்னை விவேகானந்தா மற்றும் சட்டக் கல்லூரியில் பகுதிநேரப்
பேராசிரியராக, தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக. தில்லி உயர்நீதிமன்ற
கூடுதல் நீதிபதியாக, சென்னை உயர்மன்ற நீதிபதியாக, பிறகு தலைமை நீதிபதியாக, தற்காலிக கவர்னராக,
இடையே கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, சட்டக்
கமிஷன் தலைவராக, தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் கமிட்டியின் தலைவராக,
இப்படியாக அவர் வகித்த அனைத்துப் பதவிகளிலும் அக்மார்க் முத்திரை பதித்தார்.
சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவராக இருந்த அவர்,
தொடக்ககால முதல் தனது மரணம்வரை அவ்வமைப்பின் தலைவராக நீடித்து சாதனை
புரிந்தவர் .
நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் உறவுக்காரப் பிள்ளைகள் அவரை “ஜட்ஜப்பா” என்றுதான் பாசத்துடன் அழைப்பார்கள்.
“உங்களுக்கு ஜட்ஜப்பா பிடிக்கும். அவருக்கோ கவிக்கம்பனுடைய விருத்தப்பா
பிடிக்கும்” என்று நான் அவர் உறவினர் ஒருவரிடம் நகைச்சுவையாக
கூறுவதுண்டு.
தவறான கண்ணோட்டம்
காலம் முழுதும் அவர் கம்பராமாயணத்தின் புகழைப் பரப்புவதிலும், பட்டிமன்றங்களில் இராமபிரானுக்கு வக்காலத்து வாங்குவதில் தன் காலத்தை செலவிட்டார்
என்ற விமர்சனம் பரவலாகவே உண்டு. பெரும்பாலும் அவர் பிறாமணச் சகோதர்களுக்கிடையே வாழ்ந்து
வந்ததால், அவருடைய உணவு முறைகூட சுத்த சைவமாகவே மாறிவிட்டிருந்தது. கம்பனின் எழுத்தாற்றலில் அவர் தன் மனதைப் பறிகொடுத்ததென்னவோ உண்மை. அதற்காக
அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளிலிருந்து விலகிப்போய் விட்டார் என்பது அர்த்தமல்ல.
இஸ்லாமிய இலக்கியம்
நீதியரசர் எழுதிய முதல் நூல் மெளலானா ஆஜாத் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு.
அப்போது அவருக்கு வெறும் 24 வயது. இந்நூலுக்கு முன்னுரை
வழங்கியவர் யார் தெரியுமா? மூதறிஞர் ராஜாஜி.
அவரெழுதிய இஸ்லாமிய நூல்களில் “அல்லாவுக்கு ஆயிரம்
திருநாமங்கள்” என்ற முத்தமிழ் நூல், இஸ்லாமிய
எழுத்துலகில் முத்திரை பதித்த தித்திக்கும் படைப்பு. அரபுமொழியில் “அஸ்மாவுல் ஹுஸ்னா” என்றால் அழகிய திருநாமங்கள் என்று
அர்த்தம். இந்நூலில் அவர் மார்க்க அறிஞர்களே வியக்கக் கூடிய அளவுக்கு பல நுட்பமான விஷயங்களை
மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். அரபு மொழியிலும், தமிழ்
மொழியிலும் வல்லமை பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய ஓர் அறிவுபூர்வமான ஒரு நூலை வெளிக்கொணர
இயலும் என்பது வெள்ளிடைமலை
நபிகள் நாயகத்தின் நிறைவான வாழ்க்கை உமறுப்புலவருக்கு 'சீறப்புராணம்' என்ற காப்பியத்தை வடிக்க காரணமாக அமைந்தது.
இப்றாஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் சேகுனாப் புலவருக்கு
‘திரமணிமாலை’ என்னும் இலக்கியத்தைப்
படைக்க உந்துதலாக இருந்தது. அதேபோன்று சுலைமான்
நபியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வண்ணக் களஞ்சியப் புலவருக்கு ‘இராஜநாயகம்’ என்னும் இலக்கியக் காப்பியம் வடிக்கத் தூண்டியது.
யூசுப் நபியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் சாரணபாஸ்கரனாருக்கு "யூசுப்-ஜுலைகா” என்ற காப்பியத்தை வடிக்க காரணமாயிருந்தது
“சீறாப்புராணம்”, “யூசுப்-ஜுலைகா
காவியம்”, “இராஜ நாயகம்” போன்ற இலக்கியச்
சுவைமிக்க இஸ்லாமியப் படைப்புகள் அத்தனையும் அவர் அக்குவேறு
ஆணிவேறாக அலசி ஆராய்ந்துள்ளார். அந்த அற்புதமான திறனாய்வுகளை
கட்டுரைகள், நூல்கள், சொற்பொழிவு
வாயிலாக தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு தரமானதாய் வார்த்தும் இருக்கிறார்.
சாரணபாஸ்கரனாரின் “யூசுப்-ஜுலைகா”
காப்பியத்திற்கு அணிந்துரை வழங்கியவர் நீதியரசர் மு.மு.இஸ்மாயீல்.
வண்ணக்களஞ்சியப் புலவரின் “இராஜநாயகம்”
என்ற காப்பியத்தை திறனாய்வு செய்து நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள்
எழுதிய “இனிக்கும் இராஜ நாயகம்” என்ற நூல்
குறிப்பிடத்தக்கது.
8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணக்களஞ்சியப் புலவரின் இயற்பெயர்
செய்யது ஹமீது இப்ராஹிம் என்பதாகும். வண்ணம் என்னும் சந்தச் செய்யுள் பாடுவதில் வல்லவரான
இவரை வண்ணக்களஞ்சியப் புலவர் என்ற பெயரைச்சூட்டி இவரைச் சிறப்பித்தனர். வண்ணக்களஞ்சியப்
புலவர் மீசல் என்னும் ஊரில் பிறந்தார். அவர் நாகூருக்கு
அருகில் உள்ள பொறையார் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பதாயி மரைக்காயர் எனும் செல்வந்தரின்
மகளை மணமுடித்துக் கொண்ட இவர், தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை
நாகூரிலேயே கழித்தார். இவர் நாகூர்க்காரராகவே அறியப்பட்டார்.
‘புலவர் கோட்டை’ என்றழைக்கப்பட்ட நாகூரில் செயலாற்றிய
புலவர்கள் சபை இவருக்கு “வண்ணக்களஞ்சியப் புலவர்” என்ற சிறப்பு பட்டத்தை அளித்து கெளரவித்தது.
காந்தியவாதி
2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம்
வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைக் கண்ணால் காண்பதற்கு திருச்சி
மாநகருக்கு ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய்
மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரமது.
இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்திஜீயின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்தவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன். புகழ் பெற்ற
காந்தியவாதியான அவர் மகாத்மா காந்தியின் நூல்களைத் தொகுத்தவர். நீதியரசர் காந்தியச்
சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயீலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற்திறனும் சுவாமிநாதனை மிகவும் ஈர்த்தது.
தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு
உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீல் அவரைத் தன் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் போற்றினார்.
ஒரு பேட்டியின் போது “தங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு
காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக்
காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்”
என்று கூறினார். அவரது நினைவாக “பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு” என்ற ஒன்றையும்
நிறுவினார்.
இளம் வயதிலிருந்தே காந்தியின் “ஹரிஜன்’
இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின்
இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.
மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச்
சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்
கம்ப இராமாயணம்
திருக்குறள் விளக்கத்திற்கு திருக்குறள் முனுசாமியைப் போன்று, சிலம்பதிகார விளக்கத்திற்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யைப் போன்று,
கம்ப ராமாயணத்திற்கு ‘அத்தாரிட்டி’ யார் என்றால் எல்லோருடைய நினைவிலும் உதிப்பது
நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுடைய பெயர்தான். இன்றளவும் மதநல்லிணக்கத்திற்கு நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களைத்தான்
எல்லோரும் உதாரணம் காட்டுகிறார்கள்.
1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி
கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணினார். அதற்கான ஆயத்தங்களை அவர்
மேற்கொண்டபோது அவர் கலந்தாலோசனை செய்தது நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம்தான். இசையரசிக்கு
இஸ்மாயில் சொன்ன யோசனை இதுதான். கம்பராமாயணப் பாடல்களை முதலில் மனனம் செய்து,
அதன் பொருளுணர்ந்து அதன் பின்னர் பாடல் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் ஒரு பவ்யமான சிஷ்யையைப் போன்று
அவ்வப்போது கம்பராமாயணத்தைப் பற்றிய சந்தேகங்களையும் அதன் அருஞ்சொற்பொருளையும் அவ்வப்போது
ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.
இலக்கியச் செல்வரும் எம்.ஜி.ஆரும்
மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாம் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சி 1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம்தேதி பகல் 12 மணிக்கு நடைந்தேறியது. பதவியேற்பு
சம்பிரதாயங்கள் முடிந்ததும் எம்.ஜி.ஆரும், கவர்னர் பட்வாரியும்
ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொண்டனர். பதவியேற்ற 17 அமைச்சர்களும்
எம்.ஜி.ஆர். காலைத்
தொட்டு வணங்கினார்கள்.
மேடையிலிருந்து
வேகமாக கீழிறங்கி வந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். முன் வரிசையில் அமர்ந்திருந்த நீதியரசரின்
கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பவ்யமாக வணங்கி வாழ்த்துப் பெற்றார்.
நீதியரசர் மீது மற்றவர்கள் கொண்டிருந்த மரியாதைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
கெளதிய்யா பைத்து சபா
"கெளதிய்யா சங்கம்" என்பது
ஓர் ஆலமரம். கெளதிய்யா பள்ளிக்கூடம், கெளதிய்யா
பைத்துசபா, கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் இவையாவும்
அதன் விழுதுகளாக பரவிய அமைப்புகள். கெளதிய்யா பைத்துசபா, புலவர் ஆபிதீன் போன்ற இலக்கிய ஆளுமைகளையும், இசைமுரசு
நாகூர் இ.எம்.ஹனிபா போன்ற இசை மேதைகளையும் உருவாக்கியது என்ற விவரம் மட்டும்தான் எல்லோருக்கும்
தெரியும். இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக, நாகூருக்கு வருகை
தந்த சரித்திர நாயகர்களுக்கு தந்த வரவேற்பைப் பற்றிய விவரங்கள் இன்றைய இளந்தலைமுறையினருக்கு
தெரிய வாய்ப்பே இல்லை.
நான் சிறுவனாக இருக்கையில் என் தந்தைவழி பாட்டி அதை ஒரு சுவையான நிகழ்வாக
விவரித்துச் சொல்ல நான் கேட்டு களித்திருக்கின்றேன்.
இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கிலாஃபத் இயக்கத்தின் தலைவர்களாக விளங்கிய அலி சகோதரர்கள் குறித்து உலகமே நன்கறியும்.
ஆங்கில ஏகாதிபத்திய காலனிய அரசுடன் ஒத்துழைக்க மறுத்து ஆங்கிலேயர்களை
கதிகலங்க வைத்தவர்கள் இந்த அலி சகோதரர்கள்.
இதில் மெளலானா முஹம்மது அலி ஜவஹர் இளைய சகோதரர். மெளலானா சௌகத் அலி கான்
மூத்த சகோதரர். இவர்களின் தாயார் பீ அம்மா (Bi Ammaa) என்று அன்புடன் அழைக்கப்படும் ஹாஜியா ஆலாஜி பானு பேகம் அவர்களும் இந்திய விடுதலைக்கு
பாடுபட்ட மகத்தான பெண்மணி ஆவார். கைராட்டையில் நூற்ற நூலால்
நெய்யப்பட்ட ஆடைக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு ‘கதர் ஆடை’ என்ற பெயர் வந்தது.
கெளதிய்யா சங்க கட்டடம் எழும்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அலி சகோதரர்கள்
தங்கள் தாயார் பீ அம்மாவுடன் 1921ஆம் ஆண்டு எப்ரல் மாதம் நாகூர் வருகை தந்தனர். ‘பைத்து’ பாடி “தப்ஸ்” முழக்கத்துடன் கெளதிய்யா சங்கத்தாரும், நாகூர் முஸ்லிம்
சங்கம் ஜமாத்தாரும் ஒன்றுகூடி தந்த பிரமாண்டமான வரவேற்பு நாகூரில் நடைபெற்ற ஒரு சரித்திர
நிகழ்வு.
மெளலானா முகமது அலி அவர்கள் ஈரோட்டில் நடந்த உலமாக்கள் மாநாட்டுக்கு வருகை
தந்தபோது ஈ.வெ.ரா பெரியார் இப்படிச் சொன்னார். “இந்த தேசம் காந்தியிடம்
இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ இதோ இந்த மெளலானா முகமது அலி அவர்களின் சட்டைப் பையில்
இருக்கிறார்" என்றார். அந்த அளவுக்கு இந்திய சுதந்திர வேள்வியில்
மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மெளலானா முகமது அலி. இந்த அலி சகோதரர்களைப் பற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, “என்
தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று காந்திஜி
பெருமையாகச் சொன்னார்.
1930-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பற்றி கலந்துபேச லண்டனில்
வட்டமேசை மாநாட்டுக்கு மெளலானா முகமது அலி அழைக்கப்பட்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இரண்டு
மணி நேரம் முழங்கினார்.
“எனது நாட்டுக்கு சுதந்திரம் கொடுங்கள். அல்லது உங்கள்
மண்ணில் அடக்கமாக எனக்கு கல்லறையில் இடம் கொடுங்கள்" என்று
உணர்ச்சிகரமாகப் பேசினார். சுதந்திரம் தரப்படவில்லை. ஆனால் இறைவன் அவரது நாட்டத்தை
நிறைவேற்றினான். லண்டன் வட்டமேசை மாநாட்டில் உடல்நலக் குறைவோடு முழங்கிய அவர் 04-01-1931–ல் லண்டன் மாநகரிலேயே உயிர் பிரிந்தார்.
அவரது ஜனாஸாவை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள்
சம்மதிக்கவில்லை. கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த 22 நாடுகள் அந்தப் புனித மகானின் உடலைத் தங்களது மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்று
கோரி வரிசையில் நின்றன. இறுதியில் ஜெருசலத்தின் ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளியில் உள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
அலி சகோதரர்களுக்கு பைத்து பாடி ‘தப்ஸ்’ முழக்கத்துடன் நாகூர் மக்கள் அலி சகோதர்களுக்கும், அவர்களுடைய
தாயார் பீ அம்மாவுக்கும் வரவேற்பு அளித்தனர் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வரவேற்பு தந்த உற்சாகத்தின்
பேரில் சொந்தமாக பைத்து சபா ஒன்றை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது. ‘கெளதிய்யா பைத்து சபா’ அமைய இந்நிகழ்வு அடித்தளம் கண்டது.
முற்றும்
*
நன்றி : அப்துல் கையூம்

