Showing posts with label குளச்சல் மு. யூசுப். Show all posts
Showing posts with label குளச்சல் மு. யூசுப். Show all posts

Thursday, March 28, 2019

புதிய விடியல் - குளச்சல் மு. யூசுஃப் நேர்காணல்

புதிய விடியல் : 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது தங்களுக்கு கிடைத்திருப்பதில் புதிய விடியல் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. உங்களது எழுத்துப்பணி மேலும் வளர இறைவன் அருள் புரிவானாக!


மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட திருடன் மணியன்பிள்ளை நூலுக்காக உங்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட் டுள்ளது. 2010 லேயே பஷீரின் எழுத்துக்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்து தமிழ் இலக்கிய உலகில் வெகுவாக பேசப்பட்டு விட்டது. ஆகவே, இவ்விருது தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாக வருத்தம் ஏதும் உள்ளதா?

குளச்சல் யூசுஃப்: கிடைக்குமென்ற நம்பிக்கையே இல்லாதபோது வருத்தம் ஏற்படுவதற்கான இடமே இல்லை. முதல் காரணம், இப்படியான ஒரு விருதை வாங்குவதற்கான பொருளாதார நிலையோ, அனுசரணை சீலமோ, அவர்களே இனம் கண்டு கொள்வதற்கான செல்வாக்கோ இல்லாதவன் நான். பரிந்துரைக்கச் சொல்வதை அவமானமாகக் கருதுபவன். பரிந்துரை செய்யட்டுமா என்று கேட்டவர்களைக்கூட பேசாமலாக்கிய திறன் பெற்றது எனது நாவின் தடித்தனம்.

ஆறேழு வருடங்களுக்கு முந்தைய ஒரு நிகழ்வு இது. சாகித்ய அகாதமி விருதின் தேர்வுக் குழுத்தலைவராக இருந்த ஒருவர் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, ‘மொழி பெயர்ப்புக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருதை உங்களுக்கு வழங்குவதாக முடிவு செய்தோம். இப்போது, வேறு ஒருவரைத் தேர்வு செய்ததாக பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. ஆகவே, உங்களுடைய மொழி பெயர்ப்புகளை முன்வைத்து கோவையில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். பெயர் மாற்றத்துக்கான காரணம் என்னவென்று எனக்கு மட்டுமல்ல, அவருக்கும் தெரியவில்லை.


புதிய விடியல் : நாஞ்சில் மண்ணுக்கே உள்ள தனித்துவத்தின் வெளிப்பாடுதான் குளச்சல் யூசுஃபின் உருவாக்கமா? இலக்கியத்துக்குள் நுழைந்த தருணம் எப்போது? உங்கள் உள்ளே இருந்த எழுத்தாளரை எப்படி, எப்போது அடையாளம் கண்டுகொண்டீர்கள்?


குளச்சல் யூசுஃப் : தனித்துவ மண் என்ற புளகாங்கிதம் நாஞ்சில் மண்ணுக்கு மட்டுமே உரித்தானதல்ல. நெல்லை, மதுரை, கோவை, தஞ்சையென தமிழ்நாட்டில் வேறு பல புளகாங்கிதங்களும் உண்டு. குமரி மாவட்டம், குளச்சலிலுள்ள ஒரு பள்ளியில் வெறும் ஐந்தாம் வகுப்புடன் எனது கல்வி முற்றுப்பெற்றது. ஏழு வயதில் துவங்கிய வாசிப்புக்கும், 12 ஆவது வயது முதல் வாழ்க்கையை நகர்த்துவதற்காகப் பட்ட துயரங்களுக்குமிடையே 1983,84 காலகட்டங்களில் சில சிறுகதைகளும் கட்டுரைகளும் நாகர்கோயில் வானொலி நிலையத்துக்காக சில கவிதைகளும் எழுதியதுதான் எனது எழுத்து வாழ்க்கையின் தொடக்கம். உண்மையைச் சொல்வதானால், எழுத்தாளனாக என்னை அடையாளம் கண்டவர்கள், நான் எழுதிய சிறு கதையை தனது பெயரில் பிரசுரித்து பத்திரிகை நிருபராகச் சேர்ந்த, இப்போது சன் தொலைகாட்சியில் பணியாற்றும் நண்பரும், நான் எழுதிய கட்டுரையை வலுக்கட்டாய மாகப் பிடுங்கிச் சென்று பத்திரிகைக்கு அனுப்பியவரும், மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியில் சேர்த்து என்னைப் படிக்க வைக்க முயற்சி செய்தவரும், எனது மளிகைக்கடையின் கட்டட உரிமையாளருமான தலைமையாசிரியர் சுப்ரமணியம் அவர்களும்தான்.

புதிய விடியல் : சுய எழுத்துக்களைக் காட்டிலும் மொழிபெயர்ப்பின் மீது தீவிர காதல் ஏன்? குறிப்பாக மலையாள மொழியின்மீதான அலாதி பிரியம்?


குளச்சல் யூசுஃப் : பிரசுர நோக்கம் சிறிதளவுமில்லாத எனது எழுத்தும் வாசிப்பும் தன்னார்வத்தின் அடிப்படையிலானவை. நான் புரிந்துகொண்டவற்றை, என்னை பிரமிக்க வைத்தவற்றை மற்றவர்களும் அறியச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவன். ஆனால், ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிய’ இயலாத நிலையில் மொழிபெயர்ப்பின் மூலம் உரையாடினேன். இது பிழைப்புக்கான மார்க்கமாக மாறிய நிகழ்வுகள் எனக்கு வாய்த்தப் பதிப்பகத்தை அடிப்படையாகக் கொண்டவை.

மலையாள மொழிமீதான அலாதி பிரியத்துக்குக் காரணம், நான் நடத்தி வந்த மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுவதற்காக வந்த பழைய புத்தகங்களில் வைக்கம் முஹம்மத் பஷீரின் பாத்துமாவின் ஆடு, பால்யகால சகி, எங்க உப்பப்பாக்கொரு ஆனையிருந்தது என்னும் மூன்று மலையாள குறு நாவல்களும் இருந்தன. எனது வாசிப்புப் பழக்கத்தை அறிந்திருந்த, மலையாளம் தெரிந்த ஒரு வாடிக்கையாளர், பஷீரைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் நிறைய சொன்னார். அவரால் தூண்டப்பட்ட நான், என்றாவதொரு நாள் மலையாள மொழியைக் கற்று இதை வாசிப்பேன் என்ற திட நம்பிக்கையுடன் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். திரைப்பட சுவரொட்டிகள், பத்திரிகை தலைப்புகள் என எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கினேன். மலையாளம் வசப்பட்டது. பிறகு, புத்தகங்களையும் எழுத்தையும் வாசிப்பையும் கலாச்சாரமாகக் கொண்ட மலையாள மொழிக்குள், காய்ந்த மாட்டுக்குக் கம்பங்கொல்லை கிடைத்தது போல் புகுந்து மேய்ந்தேன்.

புதிய விடியல் : இந்தியாவில், முஸ்லிம் என்பது எந்தத் துறையிலும் சிக்கலை எதிர் கொள்ளும் அடையாளமாகவே உள்ளது. இதற்கு எழுத்துத் துறையும் விதிவிலக்கல்ல. அப்படியான சிக்கல் எதையும் எழுத்தாளர் யூசுஃப் எதிர்கொண்டிருக்கிறாரா?

குளச்சல் யூசுஃப் : பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். எல்லா முனைகளிலிருந்தும். இது தந்திரமான முறையில் நிகழ்ந்தவை என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. கிறிஸ்தவர்களுக்குப் பெரும்பாலும் பொதுவான பெயர் இருக்கும். மதம், நம்பிக்கை கள், சமூகங்கள் சார்ந்து நியாயமான சில கருத்துக் களை இவர்களால் தமது சொந்தப் பெயர் களில் எழுத இயலும். இதற்குரிய வகையில் பிரசுர வாய்ப்புக்களும் எதிர்வினைகளும் இருக்கும். ஆனால், நியாயமான கருத்தாக இருந்தாலும் எனது பெயரில் எழுதிவிட இயலாது. மதக்கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள். எதிர்வினைகளும் அப்படித்தான் இருக்கும். இதில் நடுநிலைப் பத்திரிகைகளும் தனிநபர்களும்கூட விதிவிலக்கு அல்ல.

மிக அண்மைக்கால சிறு நிகழ்வொன்றைக் குறிப்பிடுகிறேன். நாகர்கோயிலில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி நல்ல நிழற்பாங்காகவும் விசாலமாகவும் காற்றோட்டமுள்ள பகுதியாகவும் அமைந்திருக்கிறது. ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நான், வாகனத்தை ஓட்டி வந்த முத்துசாமி என்ற நண்பரிடம், “பாலத்தின்கீழ் இலக்கியக் கூட்டம் நடத்தலாம் போலிருக்கிறதே?” என்றேன். நண்பரும் இதை தனது முகநூல் பக்கத்தில் இலக்கியக் கூட்டம் நடத்தும் அளவுக்கு மேம்பாலம் தரமானதாக இருக்கிறதென்று நான் சொன்னதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டு விட்டார். உடனே, என்னை விமர்சிப்பதுபோன்ற சில பின்னூட்டங்கள் வந்தன. நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. “உங்களுக்கெல்லாம் பெயர்தான் பிரச்சினை போலிருக்கிறது” என்று வெகுண்டெழுந்தார்.

புதிய விடியல் : பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு முன், இடிப்புக்குப் பின், பாஜக அதிகாரத்திற்கு வந்தபோது என ஏறக்குறைய மூன்று தலைமுறை முஸ்லிம் சமூகத்தை பார்த்திருக்கிறீர் கள். இந்தக் காலத்தினூடாக முஸ்லிம் சமூகத்தின், அரசியல், பொருளாதார எழுச்சி – வீழ்ச்சிகளை எப்படி எடை போடுகிறீர்கள்?

குளச்சல் யூசுஃப் : மத உணர்வுகளின் அடிப்படையில் ஜனநாயகக் கட்டமைப்பைக் குலைத்துப்போட்ட பாபரி மஸ்ஜிதின் தகர்வு, அப்போது சமூக நல்லிணக்கத் தகர்வாகவே கருதப்பட்டது. பிந்தைய நிகழ்வுகளும் இதை உறுதிப்படுத்தின. இரு சமூகங்களிடையே மதச்சுவர் எழும்பியது. முஸ்லிம் சமூகம் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள துவங்கியது. கலந்து வாழ்ந்த பகுதிகளிலிருந்துப் பாதுகாப்பு என்று கருதிய பகுதிகளை நோக்கிக் குடி பெயர்ந்தார்கள். பரஸ்பர நம்பிக்கைகள் சீர்குலையும் நிலை உருவானது. ஏற்கனவே, பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கியிருந்த முஸ்லிம் இளைஞர்களின் உணர்வு கள் மடைமாற்றமாகி விடாமல், அரசியல் விழிப்புணர்ச்சி பெறுவதற்கு தமிழகத்தில் புதிதாக உருவான இஸ்லாமிய அமைப்புகள் உதவியாக அமைந்தன.

ஏழு சதவிகித மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், அமைப்புகளாகப் பிரிந்து செயல்பட்டதால் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இக்கட்டான சூழ்நிலையிலும் நல்லிணக்கச் சூழலைத் தக்க வைத்துக்கொள்ள இயன்றது என்பதை நான் நல்ல விஷயமாகப் பார்க்கிறேன். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமின்மை, இழப்புதான் என்றாலும் அவர்களை அரசியல் குடையின் அணிதிரட்ட இயன்றது என்பது நல்ல அறிகுறி.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரைக்கும் பெருநிறுவனங்களின் ஆதிக்கம், அரசுப்பணி களை எதிர்பார்க்காமல் குறுந்தொழில் செய்யும் பெருமளவு முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அரசியல் இலாபத்துக்காக உருவாக்கப்படும் தீயில் வணிக நோக்கத்துடன் எண்ணெய் வார்ப்பதும் சேர்ந்தபோது முஸ்லிம்களின் மிச்சமிருந்த வணிகப்பாதுகாப்பும் கேள்விக்குள்ளானது. மொத்த வீழ்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப் பாக வங்கி, காப்பீடு போன்ற துறைகளை இறைநம்பிக்கையுடன் இணைப்பதைக் குறிப்பிடலாம்.

கேரளத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் செல்வந்தர்கள் சிலர் கொடுக்கும் வட்டியில்லா கடன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வையுங்கள். அவர்கள் பத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை படகு வடிவத்தில் மடித்து உங்களிடம் கொடுப்பார்கள். அதை நீங்கள் திருப்பிக் கொடுப்பதுவரைக்கும் படகுக்கு வாடகைச் செலுத்த வேண்டும். இதுதான் அந்த வட்டியில்லா கடன். இறையியல் சார்ந்து எவ்வளவு போலித்தனமாக வாழ்கிறோம் பாருங்கள்? அண்மையில், ‘அழகிய கடன்’ கொடுக்கும் ஒரு அமைப்பை அணுகி, கல்விக்கடன் பற்றி பேசினேன். “நாங்கள் கை வண்டி வாங்கவும் காய்கறி விற்கவும் கடன் கொடுக்கிறோம்” என்றார்கள். ஏற்கனவே நாம் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம் என்றால், பதிலுக்கு அவர்கள் நான்கு குர்ஆன் வசனங்களையோ மூன்று ஹதீஸ்களையோ மேற்கோள் காட்டக்கூடும்.


புதிய விடியல் : இலக்கிய ஆர்வமும் வாசிப்பு பழக்கமும் தற்போது முஸ்லிம் சமூகத்தில் எப்படி இருக்கிறது?

குளச்சல் யூசுஃப் : கலை இலக்கியத் துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கு முன் எப்போதையும் விட பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. புதிய இயக்கங்களின் வருகையால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதகமாக நான் உணர்வது இதுதான். வாசிப்புப் பழக்கத்தைப் பொறுத்தவரைக்கும் முஸ்லிம்களின் பங்களிப்பு அதல பாதாளத் தில் உள்ளது. கலை - இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்கள்தான் அறிவுத்துறை யிலும் சிறந்து விளங்குகிறார்கள், சாதனையாளர்களாக பரிணமிக்கிறார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளத் தவறி விட்டது.

புதிய விடியல் : பெருமளவில் கேரள முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உள் வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடு உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது. கேரள முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது தமிழக முஸ்லிம்கள் எந்தத் துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்...?

குளச்சல் யூசுஃப் : ஏற்கனவே சொன்னதுதான். வாசிப்பைக் கலாச்சாரமாகக்கொண்ட கேரள சமூகத்தில் முஸ்லிம்களின் கலை - இலக்கியப் பங்களிப்பு என்பது சராசரிக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக நூல்கள் விற்பனையாவதாகவும் புதிதாக கட்டப்படும் வீடுகளில் புத்தகங்கள் வைப்பதற்கென்று தனி இடம் ஒதுக்கப்படுவதாகவும் வாசித்தேன். புத்தக வாசிப்பும் கலை - இலக்கியப் பங்களிப்பும் அவர்களை அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் மாற்றியிருக்கிறது. இதன்மூலம், பெரும்பான்மை மதஅரசியலுக்கும் சிறுபான்மை மதஅரசியலுக்குமான வேறுபாடுகளை கேரள பொதுசமூகம் புரிந்து கொண்டிருக்கிறது.

கலைகளைக்கூட காரண காரியங்களுடனும், இறையியல் சார்ந்தும், அறிவியல் நோக்குடனும் அணுகும்போக்கு தமிழக முஸ்லிம்களிடையே அதிகரித்துள்ளது. இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பும் புதிதாக வந்த இயக்கங்களுக்கு இருக்கிறது. வீதி நாடகம் போன்ற குறியீட்டுக் கலைகளில்கூட மேற்சொன்ன காரண காரியங்களைத் தேடும் பார்வை, கலை இலக்கியத்துறைகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஊறு செய்யக் கூடியது.

கல்வித் துறை யில் முஸ்லிம்களின் பங்களிப்பு பெரும்பாலும் மொழியியல் சார்ந்ததாகவே இருக்கிறது. நாட்டார் வழக்கு, கலைகள் குறித்த ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. கல்வியைப் பொருளாதார அபிவிருத்திக்காக மட்டுமே பார்க்கும் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். முஸ்லிம்கள் கவனம் செலுத்தாத துறைகள் வேறுவகையில் இட்டு நிரப்பப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

புதிய விடியல் : வைக்கம் பஷீர் மீதான ஆர்வத்திற்கு காரணங்கள் ஏதும் இருக்கிறதா?

குளச்சல் யூசுஃப் : மலையாளம் தெரிந்த யாருமே வைக்கம் முஹம்மத் பஷீரின் படைப்பு கள்மீது ஆர்வம் காட்டாமல் இருக்க மாட்டார்கள் என்பது முதல் காரணம். அடுத்து, குமரி மாவட்டத்தின் குளச்சல்போன்ற கடலோரப் பகுதி முஸ்லிம்களுக்கும் இதன் மிக அருகிலுள்ள முஸ்லிம்களுக்குமிடை யிலான கலாச்சார ஒற்றுமைகளை விடவும், பல நூறு மைல் தொலைவிலுள்ள கேரளக் கடலோரப் பகுதி முஸ்லிம்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமைகள் மிகவும் நெருக்கமானவை.

எங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் கைலிக்குப் பதிலாக, கேரள முஸ்லிம் கள்போல் வேட்டி உடுத்துவார்கள். முந்தைய தலைமுறை யிலுள்ள பெண்கள், கேரள முஸ்லிம் பெண்கள்போல் கச்சமுறி, குப்பாயம் போன்ற ஆடை களை அணிவார்கள். இதுபோன்ற பல்வேறு ஒற்றுமைகளை ஆபரணங்களிலும் பார்க்க முடியும். உணவுப் பழக்கங்களை எடுத்துக்கொண்டால் கேரள பாணியிலான புட்டும், ஒறட்டியும் இங்கே முன்னிலை வகிக்கும். அதாவது, மொழியும் கலாச்சாரப் பின் புலமும் வைக்கம் முஹம்மத் பஷீர்மீது நான்கொண்ட ஆர்வத்துக்கு மேலதிக காரணங்களாகச் சொல்ல முடியும். ஆனால், இதையெல்லாம்விட அழுத்தமான காரணம், பாத்தும்மாவின் ஆட்டுக்கு வைக்க வேண்டிய கஞ்சித்தண்ணியை ஆனும்மா குடிப்பதால் உருவாகும் அக்கா – தங்கைக்கு இடையிலான பிரச்சினையை உலகளாவிய அனுபவமாக மாற்றத் தெரிந்த பஷீரின் கதைச்சொல் முறைதான்.

புதிய விடியல் : முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை மொழிபெயர்த்த அனுபவம்?

குளச்சல் யூசுஃப் : இஸ்லாம் குறித்து நான் எழுதிய முஹம்மத் நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு, பாரசீக மகாகவிகள் ஆகிய நூல்களுக்காக முதலில் சென்னை ரஹ்மத் பதிப்பகம் முஸ்தஃபா அண்ணனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர்தான் முதன் முதலில் இஸ்லாமிய ஆய்வுகளின் பக்கம் என்னை வரவழைத்து, எல்லா அர்த்தங்களிலும் உதவி யாக இருந்தார். தனது இஸ்லாமிய வரலாறு மூன்று பாகங்களையும் செப்பனிடும் பணி யையும் ஒப்படைத்தார். என்னுடைய கல்வித்தகுதியையும் இஸ்லாமிய அறிவையும் குறித்து அறிந்திருந்தும் இந்த மாபெரும் பணியை எப்படி என்னிடம் ஒப்படைக்கத் துணிந்தார் என்று தெரியவில்லை. அதில், உள்ளதை உள்ளபடி செப்பனிட நான் விரும்ப வில்லை. செய்கிற பணியில் ஆழ்ந்தப் புரிதலும் செய்நேர்த்தியும் இருந்தால்தான் மனத் திருப்திக் கிடைக்கும். ஆகவே, அதை மூலநூலாகக்கொண்டு, இஸ்லாமிய வரலாற்றின் மீது மேலும் ஆழமாக கவனம் செலுத்தினேன்.

ஏறத்தாழ மூன்றாண்டுகள் நீண்ட இந்தப் பணியின்போதுதான் இஸ்லாத்தைக் குறித்தும் அறிந்துகொள்கிறேன். இது சார்ந்த புரிதல்களின் அடிப்படையில்தான், ஹுஸைன் ஹைகலின் ஹயாத் முஹம்மத் நூலை, முஹம்மத் நபி (ஸல்) என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தேன். ஓராண்டு கால முழு உழைப்பையும் செலுத்த நேர்ந்த இந்த மொழியாக்கம் தொடர்பாக முதலில் ஒரு சில ஆலிம்களைச் சந்தித்து பேசினேன். இதை, மதரஸா சான்றிதழ் இல்லாத நான் மொழியாக்கம் செய்வதில் அவர்களுக்கு உடன் பாடில்லை என்பதையும் அதே சமயம், அதை அவர்கள் பெயரில் வெளியிடுவதில் முரண் பாடில்லை என்பதையும் புரிந்துகொண்டேன்.

ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன், இதே நூலை ஒருவர் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் காலஅவகாசம் குறித்தும் அதற்கான மதிப்பூதியம் குறித்தும் பேசினேன். “இது இறைப்பணி அல்லவா? இலவசமாக செய்யலாமே?” என்றார். நமக்குதான் தடித்த நாவு ஆயிற்றே? “நேற்றுவரை சைக்கிள் மிதித்த நீங்கள் இன்று காரில் உலா வருவதற்குக் காரணமும் இறைப்பணிதானே?” என்று கேட்டதுடன் அந்த உறவும் முறிந்து போயிற்று.

புதிய விடியல் : உங்களது மொழிபெயர்ப்பின் நுட்பம் என்ன? ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் கலையிலிருந்து மலையாளம் வேறுபடுகிறதா?

குளச்சல் யூசுஃப் : மூலமொழி ஆங்கிலமாகவோ மலையாளமாகவோ இருக்கலாம். ஆனால், அதன் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் மனிதர்களைச் சார்ந்தவை. எந்த மொழி சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களது தேவைகளும், ஏக்கங்களும், ஏமாற்றங்களும், இன்பதுன்பங்கள் தரும் அகவய உணர்வுகளும், வலியும் ஒன்றுதான். நான் உணர்ந்துகொண்டவரைக்கும் இதுதான் நுட்பம். இதைக் கற்பனையிலும் வாழ்வியல் சார்ந்தும் அனுபவித்து உணர்ந்து எழுதுகிறேன். இதனுள் படைப்பு சார்ந்து எஞ்சியிருப்பவை, காலமும் சூழலும். அதிகப்படியான தேடுதலையும் உழைப்பையும் இதில்தான் செலவிட வேண்டியதிருக்கும்.

புதிய விடியல் : ‘மணியன் பிள்ளையுடெ ஆத்ம கதா’ என்னும் மலையாள சுயசரிதையை தமிழில் மொழிபெயர்த்ததற்குக் குறிப்பிட்ட காரணங்கள் ஏதாவது உள்ளனவா?

குளச்சல் யூசுஃப் : ஆமாம். விளிம்பு நிலை மக்கள் குறித்தும் சமூகப் போராளிகள் குறித்தும் நான் மொழியாக்கம் செய்த நூல்களின் வரிசையில்தான் திருடன் மணியன் பிள்ளையும் வருகிறது. சமூக உன்னதர்களின் வாழ்வியல் பதிவுகளை விடவும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பதிவுகள்தான் சமூக அமைப்பைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழியென்று நான் கருதுகிறேன்.

புதிய விடியல் : தற்போதைய முற்போக்கு முஸ்லிம் எழுத்தாளர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் சிலர் முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் அடையாள பாதுகாப்பிற்கான உணர்வுகள், போராட்டங்களை வஹாபியத்துடன் இணைத்துச் சித்தரிக்கின்றனர். இத்தகைய எழுத்துக்களுக்கு சில தமிழ் நாளிதழ்களும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. இது சரியான நிலைபாடா? உங்களது கருத்து என்ன?

குளச்சல் யூசுஃப் : ஏற்கனவே குறிப்பிட்ட கலை – இலக்கியம் சார்ந்து செயல்படுபவர்கள் தங்களது துறையில் பின்னடைவு ஏற்படுவதற்கான காரணிகளை வஹாபியம் என்றும் தீவிர வாதம் என்றும் கருதுகிறார்கள். இதன் நீட்சியாக மூட நம்பிக்கை, வரதட்சணை, ஆர்ப்பாட்டமான விழாக்கள், பெண் வீட்டார் செலவில் திருமணங்கள், பெண் கல்வியை மறுப்பது, பள்ளிவாசலுக்குள் பெண்களை அனுமதிக்காமை, ஜகாத் என்னும் பெயரில் உழைக்க மறுக்கும் கூட்டத்தை உருவாக்குவது, ஊர் விலக்கம் செய்வதுபோன்ற சமூகச் சீர்கேடுகளுக்குத் தங்களை அறியாமல் முட்டுக் கொடுக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைபாட்டைத் தான் இதற்குக் காரணமாகச் சொல்ல இயலும். இதில், தமிழ் நாளிதழ்களின் பங்கைக் குறிப்பிடுவதானால், ஒரு பிரிவினர் தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள். அதை நாங்கள் பிரசுரிக்கிறோம் என்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அதன் நியாயங்கள் குறித்த எந்தப் பரிசீலனைக்கும் தங்களை உட்படுத்திக் கொள்வதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் மேற்சொன்ன சமூகச் சீர்கேடுகளுக்கு எதிரான மனப்பாங்கை முஸ்லிம் இளைஞர்களில் அதிகமானோரும் கொண்டிருக்கிறார் கள். இதற்காக, அவர்கள் மீது பயங்கரவாதிகளென அடையாளப் படுத்த உருவாக்கிய வஹாபி என்ற சொல்லைப் பயன் படுத்துவது குறித்து நான் ஒரு தமிழ் நாளிதழுக்கு மறுப்புக் கட்டுரை எழுதினேன். வழக்கமாக, முஸ்லிம்கள் எழுதும் கட்டுரைகளில் குர்ஆன் வசனங்களும் வழவழத் தன்மை யும் இருப்பதால் பிரசுரிக்கப்படுவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய மறுப்புக் கட்டுரை என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், ‘வாசல்படிவரை வந்து விட்டது வஹாபிஸ தீவிரவாதம்’ என்று மூன்றாவது நாள் தலையங்கம் வருகிறது. வஹாபி என்னும் சொல் தவறானப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் சமூகத்திலுள்ள பெரும்பான்மை இளைஞர்கள்மீது இதைப் பயன்படுத்துவது சரியா என்று முஸ்லிம் எழுத்தாளர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பது தான் என்னுடைய நிலைபாடு.

புதிய விடியல் : விருதுபெற்ற நிலையில் இந்தக் கேள்வியை கேட்காமல் பேட்டியை முடிக்க இயலாது. விருது தருபவர்களின் அறிவு நாணயம் கேள்விக்குட்படுத்த முடியாத ஒன்று அல்ல. மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பைக் காட்ட விருதை மறுப்பதை ஒரு ஆயுதமாக இலக்கியவாதிகள் பயன்படுத்தும் சூழலில் உங்களது கருத்து என்ன?

குளச்சல் யூசுஃப் : அரசு விருதை மறுப்பது என்பது ஒரு குறியீடு, இது மனஆதங்கத்தின் வெளிப்பாட்டு உத்தி. அரசால் கௌரவிக்கப்பட்ட ஒரு குடிமகன் அரசுக்கெதிரான தனது எதிர்ப்பை அல்லது வெறுப்பை அஹிம்சை வழியில் வெளிப்படுத்து கிறான். வாரமொரு விருது கிடைக்குமெனில் மக்களுக்கெ திரான ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொன்றைத் திரும்ப ஒப்படைத்து விடலாம் தான். தற்போது செய்யும் தவறை விட அதிகமான தவறை அரசுகள் செய்யாது என்ற உத்தரவாதம் இருந்தாலாவது இருப்பதைத் துறந்து விடலாம். இப்படியான சூழலில் விருது பெறும்போது பெற்ற அதே புகழை, துறக்கும் போதும் பெறுவதைத் தவிர வேறு எதையும் அடைய இயலாது. என்னைப் பொறுத்தவரைக்கும் விருதைத் துறப்பது என்பது நிகழ்வின் தீவிரத்தைப் பொறுத்தது. தீவிரத்துக்கான அளவுகோல் எதுவென்பதை முடிவு செய்யும்போது ஏற்கனவே சொன்ன உத்தரவாதப் பிரச்சினை மேலெழும்.

*
நன்றி : குளச்சல் யூசுஃப், புதிய விடியல் / Wafiq Sha

Saturday, November 16, 2013

முகமது பஷீரின் 'சப்தங்கள்' - குளச்சல் மு. யூசுஃப் முன்னுரை

வைக்கம் முகமது பஷீர் வாசகர்கள் (fb) குழுமத்திற்கு நன்றியுடன்...
**


முன்னுரை (சப்தங்கள்)
குளச்சல் மு. யூசுஃப்

பிரபஞ்சம் பின்னிட்ட கோடானுகோடி தினங்களின் நிலவு போர்த்திய ஓரிரவு. அதன் ஒரு பகுதி முகமிழந்த மனிதர்களை வெறும் ‘சப்தங்க’ளால் சித்திரப்படுத்தியிருக்கிறார் பஷீர். மொழியின் வெறும் ஓசைகளே இதில் மானுட உன்னதங்களைக் குலைத்துப் போடுகின் றன.

விலைமாதர்களையும் பாலியல் நோய்களையும் ஓரின சேர்க்கை யாளர்களையும் கருவாகக் கொண்ட 12 அத்தியாயம் நீண்ட இந்தச் சிறுகதை அல்லது சிறு நாவலின் அர்த்தப்பாடுகள் மானுட விழுமியங்களை மட்டுமல்ல மனிதனின் இருப்பையே நிலைகுலைய வைக்கிறது. அதுவரையிலான இலக்கிய மரபியல் அறிஞர்களையும் கௌரவமான கதைச்சொல்லிகளையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும்புலவர்களும் பேரிலக்கியவாதிகளும் தேவலோகக் காரிகைகளின் அங்க லாவண்யங்களை உவகையுடன் எழுதிக் குவித்துக்கொண்டிருந்த போது காற்றுப் பிரிவது உள்ளிட்ட இயற்கை உபாதைகள் தசையுள்ள தாஜ்மகால்களுக்கும் உண்டு என்று சொன்னவர் பஷீர்.

காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடிய அதே காலகட்டத்தில் தான் பஷீர் பாம்பையும் பூரானையும் நரியையும் பிற உயிரினங்களையும் பூமியின் வாரிசுதாரர்கள் என்றார். நேரடியான வாழ்க்கையனுபவங்களிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் படைப்பையும் வெகுசன இரசனையையும் தீவிரமான வாசக அனுபவத்தையும் ஒன்றிணைவாகப் பயணிக்கச் செய்கிற இந்தத் திசையறிவுதான் பஷீரின் மிகப்பெரிய பலம். கலாச்சாரத்தை வாசனையால் புரிந்துகொள்ள முடியுமென்றால் ஓரினப் புணர்ச்சியாளர்களின் கலாச்சாரத் தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியுமென்பதை மக்களின் மொழியில் சொன்னவர் பஷீர். வார்த்தைகளுக்கு இலக்கணரீதியிலான அழுத்தம் தந்து மனித வாழ்க்கையை வர்ணனை செய்ய முற்படுகிற, சமூகத்தின் வெளியில் நிற்கும் ஒரு பார்வையாளனின் கதைச்சொல் முறையும், இலக்கிய வகை மாதிரி பூடகங்களின் அர்த்தத் தளங்களுக்குள் பயணிக்கும் திறன்படைத்த நுண்மான் நுழைபுலன்கொண்ட வாசகன் பயணிக்கும் திசையும் இதிலிருந்து அடிப்படையாகவும் முற்றிலும் மாறுபாடானதுமாகும்.

புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மொழியின் இலக்கணத் தினுள் வகைப்படுத்தியும் மரபார்ந்த இலக்கிய வடிவத்தை விட்டு விலகி விடாமலும் எழுதும் டேபிள் ஒர்க் பஷீரைப் பொறுத்த வரை அன்னியமானது.

‘உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ எனும் அவரது குறுநாவலின் நாயகி பாடுகிற பாடலின் முதல் வரியே இப்படித்தான் தொடங்கும்: ‘குத்தினி ஹாலிக்க லித்தாப்போ...’ இதற்கான அர்த்தம் உலகிலுள்ள எந்த ஒரு மொழியிலும் கிடையாது.

ஆனால் எழுத்து வடிவிலான இந்த ‘சப்தங்’களுக்கு மலையாள நாட்டின் அரசியலில் அர்த்தமிருக்கிறது. ஆசிரியராக பணியாற்றுகிற அவரது இளைய சகோதரன் அண்ணனுக்கு இலக்கண இத்தியாதிகளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதால், “காக்கா, எதற்கும் கொஞ்சம் இலக்கணம் படிப்பது நல்லது” என்கிறார். பஷீருக்குக் கோபம் வந்தாலுமே இதற்காக அவர், தமையனுடன் இலக்கணம் பற்றிய சர்ச்சைக்குள் இறங்கிவிடவில்லை. “போடா, நீ. வீட்டிலிருந்த நெய்யை எல்லாம் திருடித் தின்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லித் திரிந்தவன்தானே நீ. உன்னுடைய இலக்கணத்தின் இலட்சணம் எனக்கா தெரியாது” என்று பதில் சொல்கிறார். தன்னுடைய படைப்புகள் ஆங்கில நாவல்களிருந்து தழுவப்பட்டவை என்ற விமர்சனத்தையும் பஷீர் இவ்வாறே எதிர்கொண்டார்: “வாய் வழியே சாப்பிடுவதாலும் வட்ட முகமும் ஒரு ஜோடி கை கால்களும் இரண்டு கண் களுமிருப்பதாலும் மேற்படியானை சர்ச்சிலின் மகனென்று சொல்லி விட முடியுமா?”

எழுதுகோலைத் தீட்டி காகிதங்களை எழுதுவதற்குப் பத்திரப்படுத்தி விட்டு அனுபவங் களைத் தேடிப் புறப்பட்டவரில்லை பஷீர். அவர் பயணங்களை நோக்கி துரத்தியடிக்கப் பட்டவர். யாரால் துரத்தப் படுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. மனித மனத்தின் இனம்காண முடியாத சூட்சுமப் பகுதி அது. வாழ்க்கை சுகப்படவில்லையென்பதற்காக பஷீர் யாரை நோக்கியும் தனது சுட்டுவிரலைத் தூண்டவில்லை. ஆகவேதான் தோட்டத்தில் நுழைந்த பாம்பு மனைவி பார்ப்பதற்குள் போய் விட்டால் நல்லது என்று அவர் பதைபதைப்பதுவும் அவரால் எதையுமே வெறுக்க இயலாமல் போனதுவும். வைக்கம் முகம்மது பஷீரின் கனவில் திருச்சூரில் உறையும் வடக்கும் நாதர் வந்து சொல்கிறார்: நன்றாகப் பழுத்தப் பாக்கு கிடைக்காமல் வாயெல்லாம் என்னவோ போலிருக்கிறது என்று. மறுநாள் பாக்குகளை வாங்கிப் பொட்டலமிட்டு கோயில் சுவர்களுக்குள் வீசி யெறிகிறார் பஷீர். மனம் பிறழ்வுபட்ட நிலையில் தான் எதிர்பாராமல் வந்துகிடைத்த இதுபோன்ற ஓராயிரம் அனுபவங்கள். இதைத்தான் மலையாள எழுத்தாளர் எம்.பி. போள், வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிய்த்தெடுத்ததும் ஓரங்களில் இரத்தம் துளிர்த்து நிற்பதுமான படைப்புகள் என்று வர்ணித்திருந்தார்.

பஷீரின் அதிஅற்புதப் படைப்புகளான பாத்துமாவின் ஆடு, பால்யகால தோழி, உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்ததுபோன்ற கதைகளை ஒருவேளை திறமையான கதாசிரியர்கள் யாராவது எப்போதாவது எழுதி விடுவார்களாக இருக்கலாம். ஆனால் மனிதனின் ஈனஸ்வரத்திலான இந்தப் பேரோசையை பஷீரைத் தவிர வேறு யாராலுமே எழுப்ப இயலாது. தமிழ்ச்சூழலில் அண்மைக்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரலை நாற்பதுகளிலேயே பிரதிபலித்து விட்டவர் பஷீர். அன்றுவரை யாரும் சொல்லாததும் அதற்குப் பின்னாலும் யாரும் சொல்லாததுமான ஹூருலீன் (சுவர்க்கலோகத் தாரகை) பெண்ணொருத்தி குசு விடுவதைப் பற்றிய சிறுகதையான பர்ர்ர்... ஐ பஷீர் எழுதி நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.

மலையாளத்தில் ‘பஷீரியம்’ எனும் இலக்கியக் கோட்பாட்டை மொழிசார்ந்தும் வடிவம் சார்ந்தும் ஏற்றுக்கொண்ட மலையாள வாசகர்களில் பெரும்பான்மையினரும் இன்று பஷீரைப் பற்றிய நினைவுபடுத்துதல்களைக்கூட இலக்கியத்தின் மற்றொரு முகமாக வரவேற்கிறார்கள். வாழும்போது மாந்திரீக கதாசிரியராகப் போற்றப் பட்டவரின் ஞாபகங்கள்கூட மாந்திரீகத் தன்மையுடனிருப்பதை அவரது வாழ்க்கையின் அதிசயமாகவே கருதவேண்டியதிருக்கிறது.
***


நன்றி : குளச்சல் மு. யூசுஃப் , காலச்சுவடு பதிப்பகம்
***
ஒரே ஒரு சுட்டி : உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்

Thursday, August 1, 2013

குளச்சல் மு. யூசுபின் உரை (வாசிக்காமல் விட்டது!)

அன்புள்ள தாஜ்,

உள்ளூர் விருது பெறும் விழாவில் வாசிப்பதற்காக இந்தக் கட்டுரையைத் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால்,அங்கே கூடியிருந்தவர்களில் பலரும்  இதை உள்வாங்குகிற அளவுக்கு ஆரோக்கியமான மனநிலையில் இருப்பதாக எனக்குப் படவில்லை. பெருந்தனக்காரர்களின் கூட்டம் அது. நான் மிக எளிமையாகக் காட்சியளிப்பதாகவும் சிலாகித்தார்கள்.  இது, இயல்பான தோற்றம் என்பதைக் கூட அவர்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. கல்வித்தகுதியைப் பற்றியெல்லாம் கூட விசாரித்தார்கள். இந்த அப்பாவிப் பெருமக்களை ஏமாற்ற எனக்கு மனமில்லை என்பதாலும்தான் கட்டுரையை வாசிக்காமல் விட்டேன். (அவார்ட் தொகை பற்றிய கட்டுரை பிறகு எப்போதாவது....)


 குளச்சல் மு. யூசுப் 

***

அனைவருக்கும் வணக்கம்.

மகாகவி உள்ளூர் பரமேஸ்வரஐயர் நினைவு விருதுக்கு என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. திருவாளர்கள்: பத்மநாபன்தம்பி, திருவல்லம் பாஸ்கரன்நாயர், ரமேஷன்நாயர், கே.எம். ஜார்ஜ், நீலபத்மநாபன், மாதவன்,
ஐயப்பப்பணிக்கர், சிற்பி பாலசுப்ரமணியம், பேராசிரியர் நாச்சிமுத்து, நகுலன், கவிஞர் சுகுமாரன் போன்ற படைப்பாளிகள், கல்வியாளர்கள், இப்போது, பேராசிரியர் பாலமோகன்தம்பி உட்பட பலர் பெற்று பெருமைப் படுத்திய விருதால் நான் இன்று பெருமை பெற்றிருக்கிறேன்.

இது வழக்கமாகச் சொல்லும் தன்னடக்கம் அல்ல!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், திருவனந்தபுரத்தில் நான் வாழ்ந்த  மிகக்குறுகிய காலத்தில், “அச்சாறுக் கச்சவடமும் ஐலண்ட் எக்ஸ்பிரஸும்” என்றொரு கதை எழுதினேன். இதன் பின்னணி, கேட்பவர்களுக்கு சுவாரஸ் யமாக இருக்கலாம். ஆனால், அதன் அப்போதைய அனுபவ நிலையை விவரிக்க எந்த எழுதுகோலாலும் இயலாது. இந்தக் கதையை எழுதிய பிறகு, பத்துக்கும் அதிகமான வீடுகள் மாறியிருக்கிறேன். ஆகவே, அந்தக் கதையும் தற்போது என்னிடமில்லை. காகிதக் கட்டுகளையும் புத்தகங்களையும் வீடு வீடாகச் சுமந்துத்திரிய இயலாதென்பதால், புத்தகங்களை மட்டும் வாசிப்பு ஆர்வமுள்ள நண்பர்களிடம் கொடுத்து விட்டு, எழுதியவற்றை சேர்த்து வைத்து, ஒரு தகப்பன் ஸ்தானத்தில் நின்று, எரியூட்டிவிடுவது வழக்கம். குலவழக்கப்படி, என்னுடைய படைப்புகள், அடக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கான, காணி நிலமோ இடங்ஙழி மண்ணோ சொந்தமாக இல்லை. ஆக, எனது எழுத்தில் சோகசுத்தி செய்துகொள்ளும் நோக்கமிருந்ததே தவிர பிரசுர ஆர்வம் இருக்கவில்லை.

வாசிப்பதிலும் எழுதுவதிலும் எந்த அளவுக்கு ஆர்வமிருந்ததோ அதேஅளவில் வெறுப்புமிருந்தது. ஒரு குடி நோயாளியின் அதே மனோபாவம். விடவும் முடியவில்லை; விடாமலும் முடியாது. குறிப்பிட்ட அந்தக் கதைக்கான தளம், சாட்சாத் அச்சாறுக் கச்சவடம்தான். 1988 இல் திருவனந்தபுரம், அட்டக்குளங் கரையில் நான் ஒரு சிறு பலசரக்குக் கடை விரித்தேன். கொள்வாரும் இருந்தனர். ஆனால், கடையைத் திறந்து, வேலையாளிடம் ஒப்படைத்து விட்டு நான் ஏதாவது வாசிப்புசாலைக்குப் போய்விடுவேன். தமிழின் ஓயாத வாசகனாகிய நான், மலையாள படைப்புகள் பரிச்சயமானதும் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் நுழைந்தது போலானேன். மலையாள மொழியை நான் எப்படிக் கற்றுக்கொண்டேன் என்று கேட்டால், தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. தமிழ் மொழியை எப்படிக் கற்றேனோ அதுபோல்தான் என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஒன்பதே மாதத்தில் கடை திவாலானது. என்னுடைய சேமிப்பும் மனைவியின் நகைகளுமாக நயாபைசா மிச்சமில்லாமல் ஆரம்பித்த கடை அது. பிழைக்க வேறு வழியுமில்லை. தைக்காடு, கன்னேட்டு முக்குப் பகுதிகளில் முட்டை வியாபாரியாக பல நாட்களும் பீமாபள்ளி பகுதியில் துணி வியாபாரியாக பல நாட்களும் திருவல்லம் பகுதிகளில் தீப்பட்டி வியாபாரியாக பல நாட்களும் எதை யெல்லாமோ செய்து பார்த்து விட்டு கடைசியில் ஊறுகாய் வியாபாரம் ஆரம்பித்தேன். சைக்கிளில் ஒரு பெட்டியைக் கட்டி வைத்து ஒவ்வொரு கடை யாகச் செல்ல வேண்டும். அதிகமும் கரமன, கிள்ளிப்பாலம் பகுதிகள்தான்.

இதே தமிழ்ச்சங்க வாசலில் பலமுறை நின்று இளைப்பாறியிருக்கிறேன். சிறு கடைகளில்தான் அட்டை ஊறுகாய் விற்பனையாகும். அப்போது, ஷாப்பிங் மால்களெல்லாம் இல்லை. கடைகள், ஒன்று அதல பாதாளத்திலும் மற்றொன்று பூமியின் உச்சியிலும் இருக்கும். சைக்கிள் மிதித்துச் செல்வதற் கான உடல்வலுவில்லை. இரண்டு நாட்கள் அலைந்து திரிந்தும் சைக்கிளுக்கு வாடகை கொடுப்பதற்குக்கூட விற்பனையாகவில்லை. ஏதாவதொன்று கை
கொடுக்கவில்லையென்றால் விட்டு விடுதலையாகி விடும் குணம் ஏற்கனவே வாய்த்திருந்தது. ரூமில் போய் உட்கார்ந்து யோசித்தேன். யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. முடிவு செய்தேன். ஊறுகாய் வியாபாரத்தையும் தலை முழுகி விட வேண்டியதுதான். ஊறுகாய் அட்டைகளின் லேபிள்களைக் கிழித் தெறிந்து விட்டு, பண்டலாகக் கட்டி, சைக்கிளில் வைத்து, தம்பானூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்றேன். ஏதோ ஒரு டிரெயின் நின்றது. அதில் தூக்கி வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விட்டேன். அது ஐலண்ட் எக்ஸ்பிரஸ்தானா என்று இப்போது சந்தேகம் இருக்கிறது. திரும்பி ரூமுக்கு வந்து எழுதிய கதைதான் ”அச்சாறுக் கச்சவடமும் ஐலண்ட் எக்ஸ்பிரஸும்.” நேராக திரும்பி வந்து, இயந்திரத்தனமாக எழுதி விடுகிற அனுபவமல்ல அது. ஒருவாறாக மனதைத் தேற்றி விட்டு பிறகு எழுதினேன். அனுபவங்களுக்காக  வாழ்ந்தால் அதை மிக எளிதில் படைப்பாக மாற்றி விட இயலும். தவிர்க்கவே இயலாத அவல வாழ்க்கையை எழுதுவதன் மூலம் மீண்டும் வாழ்ந்து பார்ப்பதென்பது மிகப் பெரிய மனத்தொந்தரவான விஷயம். அனுபவம் சார்ந்த படைப்பிலக்கியம் மனதுக்குப் பிடித்தமானதாக இருந்தாலும் அது தரும் மனத்தொந்தரவு மிகச்சிரமமாகவும் இருந்தது. திருவனந்தபுரத்திலுள்ள எனது இந்த அனுபவங்கள் மொத்தம் ஒன்றரை வருட காலம் மட்டும்தான்.

இப்படியான, விளிம்புநிலை வாழ்க்கையிலிருந்து இலக்கியப் பாதையில் அதுவும் மொழிபெயர்ப்பை நோக்கித் திரும்பியது, எதிர்பாராத நிகழ்வோ திட்டமிட்ட நிகழ்வோ அல்ல. வாழ்க்கை அவலங்களினூடே எழுத்தும் வாசிப்பும் தொடர்ந்துகொண்டிருந்தது. தமிழில் வந்த மொழிபெயர்ப்பு நூல்களை வாசிப்பதும் வாசிப்புக்குத் தடங்கலாக இருக்கும் இடங்களில் திருத்தங்கள் செய்துபார்ப்பதும் வழக்கமாக இருந்தது.  மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளின் மொழியாக்கங்களைக்கூட இப்படி திருத்தம் செய்து உள்ளூர மகிழ்ந் திருக்கிறேன். இந்த மகிழ்ச்சி, மனித இயல்புதான். இப்படியான அனுபவங் களை வைத்து, சில மொழிபெயர்ப்புகளையும் செய்து பார்த்தேன். வைக்கம் முகம்மதுபஷீரின் பால்யகால சகி, பாத்தும்மாடெ ஆடு, உப்புப்பாக்கொரான உண்டாயிருந்நு, சப்தங்ஙள், மதிலுகள்போன்ற மிகமுக்கியப் படைப்புகளைப் பலமுறை மொழிபெயர்த்திருக்கிறேன். புதிதாக வீடு மாறும்போது பழையன கழிந்து விடும். இவ்வளவு சாதனங்களினிடையே கொஞ்சம் பேப்பர் இருந்தால் என்னவாகிவிடப்போகிறது என்று சொல்லி தடுக்கும் மனைவியையும் மீறி. அப்போதெல்லாம், பதிப்பகங்களோ கல்வியாளர்களோ படைப்பாளிகளோ யாருமே என் நட்பு வளையத்தில் கிடையாது. இப்படியாக நான் மொழியாக்கம் செய்ததுதான் ஸ்மாரஹ ஸிலகள். இது புத்தகமாக வெளிவந்ததுகூட எதிர் பாராத நிகழ்வுதான். இப்படியாக மொழிபெயர்ப்புப் பக்கம் வந்தேன்.

திரைப்படங்களின் சிடி வடிவமும், எழுத முடியாமல் தோள் பட்டையில்  வலியும் ஏககாலத்தில் வந்தன. கடன் சம்பந்தமான முன்னனுபவங்கள் பல இருந்தும், துணிந்து கடனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். மெல்ல விழுந்தெழுந்து சுயமாகவே, கம்ப்யூட்டர் படித்தேன். பழைய மலையாளத் திரைப் படங்களை கம்ப்யூட்டரில் பார்க்க  ஆரம்பித்தேன். ஐம்பது அறுபதுகளில் வெளிவந்த மலையாளத் திரைப்படப் பாடல்கள் என்னுள் மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தூண்டின.

அப்படியே தமிழ் லிபியில் எழுதினால் எந்தத் தடையுமில்லாமல் தமிழர்களால் புரிந்து கொள்ள இயலும் விதமாக அந்தப்  பாடல்கள் அமைந்திருந்தன. ஒரே மொழியை இரண்டு விதமாக உச்சரிப்பது போல் தோன்றியது. இந்த உற்சாகத்தில் தமிழிலிருந்து மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சங்க இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். பண்டித மொழிக்கும் வெகுஜனங்களின் புரிதலுக்குமிடையே  இருக்கும் மிகப்பெரிய இடைவெளிகள் தெரிய வந்தன.

மலையாளத்திற்கும் தமிழுக்கும் பொதுவானதும் வழக்கிலுள்ளதுமான சொற்களைக்கூட தவிர்த்து விட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தியிருப்பதாக உணர்ந்தேன். இயல்பாகவே இது, கவித்துவத்தை இல்லாமல் செய்திருந்தது.  இது குறித்த  போதாமை, சமஸ்கிருதக் கலப்பை குறைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை மலையாளத்தில் மொழியாக்கம் செய்ய என்னைத் தூண்டியது. இதற்கு வசதியாக, முதலில் சித்தர் பாடல்களை எடுத்துக்கொண்டேன்.

இதில் சிலவற்றை மொழியாக்கம் மலையாளிகளான நண்பர்களிடமும் உறவினர் களிடம் வாசிக்கக் கொடுத்தபோது அவர்களால் மிக எளிதாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சமஸ்கிருதம் கலந்த மலையாளத்தைச் சிரமத்துடன் வாசித்தவர்கள் இதை மிக எளிதாக வாசித்தார்கள். மலையாள நாவுகள் சமஸ்கிருதத்திற்கு வழங்க மறுக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. இப்படியாக, நாலடியாரை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன்.

இதை, பிழை திருத்தித் தருவதாகக் கேட்டு வாங்கிய ஒரு மலையாளி நண்பர், தன்னுடைய பெயரில் வெளியிட்டது தனிக்கதை.

அனுபவங்களின் வெளிச்சத்தில் ஒருவன், நல்ல படைப்பாளியாக வருவதை யாருமே மறுக்க மாட்டார்கள். ஆனால் வெறும் அனுபவ வெளிச்சத்தில் மொழிசார்ந்த சிந்தனைகள் உருவாவதை மொழியியல் ஆய்வாளர்களால் ஒருபோதும் ஏற்க இயலாது என்று நினைக்கிறேன். மொழியென்பது வெகு ஜனங்களுக்குரிய கருவி. ஆகவே, அனுபங்கள் சார்ந்த மொழியியல் சிந்தனை களை முன்வைத்து ஆய்வுகள் நிகழ்வதுதான் சரியாக இருக்க முடியுமென்பது என்னுடைய கருத்து.

இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும், குறிப்பாக, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மு. முத்துராமன்; செயலாளர் திரு. க. வானமாமலை; சிறப்புரையாளர் முனைவர் திரு. மா. நயினார்; நன்றியுரை வழங்கும் திரு. ஜி. மாணிக்கம் மற்றும் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விமர்சனங்கள் மூலம் என்னை மெருகேற்றிய  எழுத்தாளர் சி. சொக்கலிங்கம் அண்ணன், கவிஞர் எச்.ஜி. ரசூல் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தோழர்களையும் என்னுடைய முதல் நூல் உட்பட பெரும்பாலான நூல்களை வெளியிட்ட காலச்சுவடு நிறுவனத்தையும் நன்றியுடன் இந்நேரம் நினைவு கூர்கிறேன்.

நன்றி வணக்கம்.

***
நன்றி : குளச்சல் மு. யூசுப் ( http://www.facebook.com/KulachalMuYoosuf ) , தாஜ்
***

தொடர்புடையவை..



Sunday, February 3, 2013

'வைக்கம்' அறைந்த அறை - தாஜ்

வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை படித்துவிட்டு நண்பர் தாஜ்  நேற்று எனக்கு அனுப்பிய மெயில் இது. 'என்ன மயிர் எழுத்து எழுதுகிறேன் நான்!' என்று தனக்குள் புழுங்கிக்கொள்கிறார் நண்பர். என்னை நான் கேட்பது போலவே இருக்கிறது! - ஆபிதீன்

***



 

 ’குளச்சல்’
மொழிமாற்றத்தில் வந்துள்ள
வைக்கம் முகம்மது பஷீரின்
'உலகப் புகழ்பெற்ற மூக்கு' எனும்
சிறுகதைத் தொகுப்பை
சில நாட்களாக
வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிப்பிலான என் வேகம்
நீங்கள் அறியாததல்ல.
சாதாரண வேகமா அது!
ஆமையின் வேகம்!
வாசிப்புக்கு
ஏதோவோர் வேகம்
வேண்டித்தானே இருக்கிறது!?

முன்பெல்லாம்...
தேர்ந்த படைப்பாளிகளின்
படைப்புகளை வாசிக்க,
எனக்கு
ரூல்தடியும் பென்சிலும்
இன்றியமையாதது.

இஷ்டமான வரிகளையும்
சிலாகிக்க வைக்கும்
நுட்பமான கிளர்ச்சிகளையும்
அடிக்கோடிட்டுக் கொண்டே
வாசிப்பவன் நான்!
வாசிப்பில்,
வாசிப்பைவிட
அதுவே முக்கியமெனக்கு!.

குறிப்பிடத் தகுந்த
சில படைப்பாளிகளின்
படைப்புகளை வாசிக்கும் போது
அப் புத்தகத்தின் வரிகள் பூராவும்
நான் கிழிக்கும் அடிக்கோடுகள்
தவிர்க்க முடியாமல் போனதுண்டு!

நன்றாக ஞாபகம் இருக்கிறது
80 - களில் வெளிவந்த,
ஒன்றை விரல் அளவிலான
தடிமனே கொண்ட
சுந்தர ராமசாமியின்
'ஜே.ஜே. சில குறிப்புகள்'
மூன்று விரல் அளவில்
தடிமனாகிப் போனதை
மறக்கவே முடியாது!
நாவலான படைப்பு
காவிய தடிமனாகிப் போனதில்
பல நேரம் சிரித்திருக்கிறேன்.

வாசிப்பில் என் குணாதிசயம்
அடிக் கோடோடு நின்றுவிடுவதில்லை.
படைப்பின் வரிகளினூடே
அதன் அர்த்தபாவ சுவடுகளைப் பிடித்து
அடிமேல் அடியெடுத்தபடிக்கு
வாசிப்பவன் நான்.

என் வாசிப்பின்
இத்தனை வினோத அழகையும்
நீங்கள் அறிவீர்கள்.
சிரித்து,
முகம் சுளித்தும் இருக்கின்றீர்கள்.

அந்தச் சிரிப்பும், அந்த முகச்சுளிப்பும்
அடிக்கோடிடும்
என் சிறுப்பிள்ளைத் தனத்திற்காக மட்டுமல்ல
புதிய புத்தகத்தை இன்னும் புதிசாக
வைத்துக் கொள்ள வேண்டாமா? என்கிற
பரிசுத்த
அழகியல் சார்ந்ததென அறிவேன்.

நாமெல்லாம் கல்யாணமாகி
ஒன்றுக்கு இரண்டு
குழந்தை பெற்றவர்கள் என்பது
நினைவுக்கு வந்து தொலைய
எனக்குள் நான்...
சிரித்து கொள்வேன்.

இப்போது
என் வாசிப்பில் சிறிது முன்னேற்றம்.
அந்த வேகத்தை
குறைக்கவில்லையென்றாலும்
அடிக்கோடிடும் கவித்துவத்தை
தொடராது நான் விட்டுவிட்டேன்.

இது,
என் வாசிப்பின் முன்னேற்றமென்றோ,
கதை நெளிவுகளின் நுட்பங்களும்
புரியாமை வரிகளும்
இப்போதெல்லாம்,
உடனே புரிந்துவிடுகிறதென்றோ அர்த்தமல்ல.
அடிக் கோடிடுவதை
அழகு குறையாமல் செய்யும்
காலத்தை விழுங்கும் நேரம்...
இப்போது கஷ்டமாகிப் போனது.
வாழ்வோடான
எதிரோட்டக் குடைச்சலுக்கு
ஒரு தலை காணமாட்டேன் என்கிறது.
ஆபிதீன்...
அங்கே எங்காவது
எனக்கு பொருந்துகிற மாதிரி
எக்ஸ்ட்ரா தலை கிடைக்குமா?

எங்கே மறந்துவிட்டேனோவென
வருடா வருடம் வயதுவேறு
என்னை வருத்தி நினைவுறுத்துகிறது,
அந்த அடிக் கோடுகள்
என்னதான் கவிதையென்றாலும்
ரூல் தடியும் பென்சிலும்
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறதென்றாலும்
சாதுர்யம் பிசகாமல்
இயக்க வேண்டிய ஒன்று!
அது ஆவதில்லை இப்போது.
சிரிப்பீர்கள், சிரித்துவிட்டுப் போங்கள்.
ஆனால்...
மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

இந்தக் கழிவை
இங்கே கொட்ட
எழுதப்படுகிற கடிதமல்ல இது!
பேத்தல் எப்பவும்
நம்மை மீறிவிடும் ஒன்று!
அதுவாகவே ஆஜர் கொடுத்துவிட்டது.

வைக்கம் முகம்மதுவின்
1945 -ம், வருடத்தின்
இரண்டு கதைகளை
இந்தத் தொகுப்பில்
தீர வாசித்தேன்.
ஒன்று. 'உலகப் புகழ்பெற்ற மூக்கு'
இரண்டு. 'ஜென்ம தினம்'
தவிர, அந்தத் தொகுப்பை
இன்னும் முடிக்கவில்லை என்பது
வேறு செய்தி.

அந்த இரண்டு சிறுகதைகளின் ஊடே...
இத்தனை நாளும்...
நான் எழுதிக் கொண்டிருக்கிற
என் 'பீத்த' எழுத்திற்காக
வைக்கம் அறைந்த அறை
வலுவானது!
ஒருவகையில் சரியானது!

1945 - மகரம் (தை) மாதத்தின்
ஓர் நாளிலிருந்து
இந்த 2013 - தை மாதத்தின் ஓர் நாளில்...
என்னை பதம்பார்த்த அந்த அறை...
எதிர்பாராத சுளீர்......!
68 - வருடம் நீண்ட
அந்தக் கரம்...
இன்னும் என் வியப்பில்!

எழுத்தாளராக மட்டுமல்லாது
ஒரு கால கட்டத்தில்
குஸ்தி பயில்வானகவும் அறியப்படும்
வைக்கத்தின் அறை
அத்தனை வலு
கொண்டிருந்திருந்ததோ என்னவோ!

வீசப்பட்டு தூர விழுந்த
இடத்திலிருந்து யோசித்தேன்.
அவர் அறைந்ததில் கொஞ்சம் வருத்தமில்லை.
இன்னும் கூட அவர் என்னை
பொறிகலங்க அறைந்திருக்கலாம்.
கன்னம் சிவந்ததெல்லாம் போதாது
மூளைப் பழுதிருக்க வேண்டும்.

'என்ன மயிர் எழுத்து எழுதுகிறேன் நான்!'
அவர் அப்படி அறைந்து
வீசியெறிந்தப் பிறகேதானே
யோசிக்கிறேன் நான்!
இனியேனும் திருந்துவேனா!
இயலுமா...?
முயன்றாலும்
சாத்தியப்படக் கூடியதா எழுத்து?
வேண்டுமானால்...
நாய் வாலை நிமிர்த்தலாம்.
இயலவும் இயலும்!

இந்த இரண்டு கதைகளில்
ஜென்ம தினம்
அறைந்த அறைதான்
வலுவான வலி கொண்டது!
அந்தக் கதையில்
நிறையவும் கவிதைவரிகள் இருப்பது
நினைவுக்கு வர...
குளச்சலுக்கு போன் போட்டேன்.

''நான்...
வைக்கம் முகம்மது பசீரின்
சிறுகதைத் தொகுப்புகள் இரண்டும்
நாவல் இரண்டும்
இருபது வருடங்களுக்கு முன்னமே
படித்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மொழிமாற்றச் சேவையில்
நீங்கள் ஈடுபட நினைத்தே இருக்காத நேரம்!
அன்றைய அந்த மொழி பெயர்ப்பாளர்கள்
ஆக்கித் தந்த வைக்கமின் மொழி
இன்னொரு சாதாரண மொழி!
படித்தேன்...,
வைக்கமை படித்தாகிவிட்டது
என்பதோடு
மறந்தேன்... அவ்வளவுதான்.

இன்றைக்கு
சிலாகிக்கும் இந்தக் கதைகளைக் கூட
முன்பு நான் வாசித்திருக்கக் கூடும்!
அன்றைக்கில்லாது
இன்றைக்கு இப்படி
இந்த இரண்டு கதைகளும்
என்னை வசீகரிக்க
என்ன காரணமாக இருக்கும்?
உங்களது மொழிபெயர்ப்பில்
இன்றைய
உங்களது மொழி
கூடுதல் வித்தைக் காண்பித்திருக்கிறதா?"
வெளிப்படையாகவே கேட்டேன்.

குளச்சல் சிரித்தார்..
"கேரளா முழுமைக்கும்
இன்றைக்கும் கூட வைக்கமை
தூக்கிவைத்துக் கொண்டாடுவது
இதனால்தான் தாஜ்!" என்றார்.

நம் இஸ்லாமிய படைப்பாளிகளில்
உண்மையை
பெரும் அளவில் முன்வைக்கும் எழுத்தை
உங்களிடம்தான்
நான் அதிகமும் வாசித்திருக்கிறேன்.
இப்போது
இன்னொருவராய்
வைக்கம் முகம்மது பஷீர்!

நீங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
கோலமிடுவீர்கள் என்றால்...
அவர் அதே கோலத்தை
விரிந்த எல்லையில்
அசாத்திய லாவகதோடு
வரைந்தெடுப்பவராக தெரிகிறார்!

1945 - கேரளத்து
அரசியல் மாய்மாலங்களை...
'உலக புகழ்ப் பெற்ற மூக்கு'இல்
பின் நவீனத்துவப் பின்னலில்
அதிகத்திற்கும்
அதிரடித்திருக்கிறார்!

சுதந்திரத்துக்கு முன்னாலான
காலம் அது!
அனேகமாக
இடைக்கால அரசு
அங்கே நடந்தேறியிருக்கலாம்.
அப்பவே தொடங்கிவிட்டதாக
அறிய முடிகிறது
மலையாளிகளின் இன்றைய அரசியல்!
அந்த மக்கள்
கெட்டிக்காரர்கள் என்பது
திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கப்படுகிறது!

அதே ஆண்டில் எழுதப்பட்டிருக்கும்
'ஜென்ம தினம்'
ஒரு நாள் சம்பவமாக....
வலுவான
சிறுகதையாகியிருக்கிறது!

ஜென்ம தினமென்றால்...
பிறந்த நாளாம்
அவரது பிறந்த நாளில்
அவர் எதிர்கொள்ளும்
யதார்த்த,
வாழ்வின் எதிர்மறையான நிகழ்வுகளை...
விழிப்பில் இருந்து
தூங்கப் போகும்வரையிலான
அந்த அரைநாளின் சம்பவ அடுக்குகளை
சரளமாகப் பதிவு செய்திருக்கிறார்.

வாழ்க்கை / நண்பர்கள்/  இல்லாமை / பசி/
அரசியல்/ புரட்சி குறித்த விமர்சனம்/
நாகரீக முரண்/ கடன்பட நேரிடும் இறுக்கம்/
கழிவிரக்கம் கொள்ளவைக்கும் களவு/
கவிதை தாக்கம்...
இப்படி
அத்தனை வளையத்திற்குள்ளும்
வளைய வந்து 
அரிய எழுத்தாக
இக்கதையினைப் பதிவு செய்திருக்கிறார்!

1945-ல்
தமிழக இலக்கிய வட்டத்தில் 
மணிக்கொடி காலம் பிரசித்தம்.
மௌனியும், புதுமைப் பித்தனும்
ஆட்சி செய்த தருணம்.
மௌனி பெருமளவில்
மனவெளியைப் பதிவு செய்பரென்றால்...
புதுமைப்பித்தன்
மேலை நாட்டை கீழை நாட்டிற்கு
இறக்குமதி செய்து பெயர் போட்டவர்!
இன்னுமான
தனித்துவமிக்கப்
புதுமைகளையும் காண்பித்தவர்.
இவர்கள் இருவருமே
அரசியல் தொட்டு
எழுதியதாக நினைவில்லை.

அந்த ஆண்டுகளில்..
இன்றைக்கும் காணும்
வாழும் அரசியல் மாய்மாலத்தை
'உலகப் புகழ்ப் பெற்ற மூக்கு'-ல்
1945 - வாக்கிலேயே
பின்னியெடுத்திருக்கிறார் வைக்கம்!

இங்கே நான் சுட்டும்...
'ஜென்ம தினம்' ஒட்டிய
சரளமான கதையும் கூட
அன்றைக்கு
தமிழில்
அபூர்வமாகத்தான் இருந்திருக்க முடியும்.

இரண்டாயிரத்தாண்டு
வெளிவந்து பார்த்த
'பாரதி'யில்
ஓர் வசனம்
என்னால் மறக்க முடியாதது.
வெளியில் தங்கியிருக்கும் பாரதிக்கு
குடும்பதிலிருந்து ஒரு செய்தி வரும்...
'குழந்தைக்கு உடல் நலமில்லை
வைத்தியத்திற்கு பணம் வேண்டும்' என்று
பாரதி கையிழந்த நிலையில் புலம்புவார்
'காலையிலேயே
இன்றைக்கு...,
இல்லாமை கஷ்டம்
தலைவிரித்தாடுகிறது' என்பார்
அந்த இல்லாமை தரும்
விவரிக்க முடியாத வருத்தத்தை
நான் பலமுறை
எதிர்கொண்டதாலோ என்னவோ
அதையே
வேறொரு மண்ணில் பேசும்
வைக்கம் முகம்மது பஷீரின்
இந்தக் கதை
பெரிதினும் பெரிதாகத் தெரிகிறது.
தவிர,
வைக்கம் முகம்மது பஷீர்
குளச்சல் மு. யூசூப் கூட்டணி
என் இலக்கிய மனதையும்
பேதலிக்க வைத்துவிட்டார்கள்!


-தாஜ்

***
நன்றி: தாஜ், குளச்சல் மு. யூசூப் , காலச்சுவடு பதிப்பகம்

***

சிறுகதைகள்...

ஜென்ம தினம் - பஷீர் (மொழிபெயர்ப்பு : குளச்சல் மு.யூசுப்)

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு -  பஷீர் (மொழிபெயர்ப்பு : நாகூர் ரூமி), வேறு சில முக்கியமான இணைப்புகளுடன்...

மற்றும்..

ஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணலும் சில பத்திகளும்
வறட்டுச் சொறி - பஷீரின் கடிதம்
பஷீரின் உண்மையும் பொய்யும் (கேள்வி பதில்)

Thursday, September 13, 2012

அம்மிக்குழவியால் வயிற்றில் இடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது - குளச்சல் மு. யூசுப்

ஃபேஸ்புக்கில் இன்று வாசித்த குளச்சல் மு.யூசுபின் எழுத்தைப் பதிவிடுகிறேன், நன்றியுடன். யாரைச் சொல்கிறார் மனுசன் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனாலும், அழகோ அழகு இந்த 'அம்மிக்குழவி'! - ஆபிதீன்.

***


முக்குண தோஷம் நீங்க சிறுபஞ்சமூலம்

புத்தகத்திலிருக்கும் கருத்தைவிடவும் தான் வாங்கிய நிலப் பத்திரத்திலிருக்கும் எழுத்து சிலரை வசீகரித்து விடுமென்பது இயல்பான விஷயம்தான். நமது கல்வி முறையின் நோக்கமும், இவர்போன்ற சான்றிதழ்க் கல்வியாளர்களின் இலட்சியமும் இதுதானே? மன மெனும் மர்மஸ்தானத்தில் விழுகிற ஐந்திலக்க ஊதியத் தாக்குதல், சிலரது சிந்தனைகளை அப்படியே திசைமாற்றிப் போட்டு விடும். எனவேதான், பொருளாதார ஊறுபாடுற்ற இவரது கண்களுக்கு பட்டா புத்தகத்திற்கும் இலக்கிய புத்தகத்திற்குமிடையிலான உள்ளடக்கத்தின் வண்ணத்தைப் பிரித்தறிய இயலாமல் போயிருக்கிறது. இது, தென்னம் பிள்ளைக்கும் தேசியவினாயகம் பிள்ளைக்குமிடையே வித்தியாசம் தெரியாத ஒரு பார்வை. இவரது அதிகபட்ச வாசிப்பே என்னுடைய மொழியாக்கங்களில் சில மட்டும் தான். இதில், விளவங்கோடு பத்திர எழுத்தாளரின் எழுத்துக்களையும் இவர் உட்படுத்த நினைப்பது நிச்சயமாகவே இவருக்குப் பிறகு, இவரது பெண்டு பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியூட்டும்.

கண்ணுக்குத் தெரியாத ஹர்ஷத் மேத்தாக்கள் உலவும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வணிக நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்; வெறுமனே முகவர்களை மட்டும் நம்பியிருந்தால் காளை முட்டும். வட்டித்தொழிலைப் பொறுத்த மட்டிலும் பாதுகாப்பை யும் ஆபத்தையும் சமதூரத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வணிகம்; சவரக்கத்திக்கே பயப்படுபவனால் வீச்சரிவாள் தூக்க இயலாது. திவால் அறிக்கைக்குப் பயப்பட வேண்டும்; மீட்டர் வட்டிக்காரனென்று எவனும் போட்டுக் கொடுக்காமலிருக்க வேண்டும். மஞ்சள் பிசாசு, பரவாயில்லை. ஆனால், அதன் கொள்ளளவு சார்ந்து, கொள்ளையனுக்குப் பயந்து நித்தமும் சாக வேண்டும்.

மிச்சமிருப்பது, பூமி. இது வளராது, பெருகாது, ஆனால், நிலவுடையாளர்களான முன்னோர்களில் பலரும் செய்ததுபோல், அரிசி வாங்கவும் ஆஸ்பத்திரிச் செலவுக்கும் கொடுத்து ஏழைபாளைகளிடமிருந்து கை நாட்டு வாங்கியும், கொள்ளி முடிஞ்ச சொத்தை யும், புறம்போக்கையும் வளைத்து இதை விரிவு விரிவுபடுத்தலாம். பஞ்சமி நிலமாக இருந்தாலும் பரவாயில்லை. மெக்காலே வமிசாவளியினருக்கு ஏமாற்றச் சொல்லியா தர வேண்டும்? பிறகு, அதில் கிராம்பு, ஏலம், ரப்பர்போன்ற பணப்பயிர்களை விளைவிக் கலாம்; அன்னியச் செலவாணியை அள்ளியெடுத்து தேசிய உற்பத்தியில் பங்கு வகிக்க லாம்; சேதாரத் தேய்மானங்கள் கிடையாது; 2000 மாடல், 40,000 கிலோமீட்டர் ஓடியிருக்கிறது என்று விலை மதிப்பைக் குறைக்க மாட்டார்கள். செகண்ட் ஹாண்ட் என்னும் பிரச்சினையே கிடையாது; ஏக்கரின் விலையை பத்தே ஆண்டுகளில் செண்ட் அலகில் திரும்பப் பெற்று விடலாம்; திருடன்களால் படுத்துத் தூங்குவதைத் தவிர சுருட்டிக்கொண்டு போக இயலாது; இது குறித்து பலருடைய ஆலோசனையின்பேரில், இவர் புதிதாக நிலம் வாங்கியிருக்கிறீர்; இதன் ஆவணம், பக்கத்திலுள்ள விளவங் கோட்டில் பதியப்பட்டிருக்கிறது; வாழ்த்துக்கள்! இதன், மூல ஆவணம், குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தபோது மலையாள மொழியில் பதியப்பட்டது. என்ன பார்க்கிறீர்கள்? இவருடைய நண்பர்கள் எமக்கும் நண்பர்கள் தானே?

இப்படியான இவர் எதையோ எழுதியிருக்கிறார். நிச்சயமாக ‘இறுதி முழக்கம்' இவருக்குக் காசு கொடுக்காது. மிச்சமிருப்பது, புகழ். தமிழ்ச்சூழலில் இன்று பணம் சம்பாதிப்பதுவும் எழுதிப் புகழ்பெறுவதும் ஏக காலத்தில் நடவாதது. வெகு சிலரைத் தவிர! பாலகுமார வாசகராகிய இவர் எல்லாவற்றிற்குமே ஆசைப்படுகிறார். சற்றே விலகியிருந்து சிந்தியும் பிள்ளாய்: நீர் புகழ்‘பெற' ஆசைப்பட்டு, ‘சுவர்முட்டி' விற்ற கையைச் சுட்டுக் கொண்ட பணமிருந்தால் பத்திரச் செலவுக்குப் பயன்பட்டிருக்கும்தானே?

எழுத்து என்பது, பணம் சம்பாதிப்பதுபோன்று சுலபமான காரியமில்லை, ஓய்! பிரபஞ்ச உற்பத்தி, இறைக்கோட்பாடு, வரலாறு, சமூகக் கட்டமைப்பு, மதங்கள், சாதியக் கட்டுமானங்கள், தனிமனித உணர்வுகள், பொருளாதாரம், அரசியல், சட்ட விதிகள், சமூக அவலங்கள் என, நிறைய வாசிக்க வேண்டியதிருக்கும்; இவை, கல்விப் புலத்திற்கு வெளியே நிகழவேண்டும். கண்பேறு, மந்திரவாதம், செய்வினை, குட்டிச்சாத்தான், தலைச்சன் பிள்ளை மண்டையோடு, தீட்டுத்துணி, மையிட்டுப் பார்த்தல்போன்ற மூடத் தனங்களை தொன்மமென்று நம்பாமல் எழுதவேண்டியதிருக்கும். இதற்கு பெரியார், கோவூர்போன்ற நிறைய சமூக சீர்திருத்தவாதிகளின் நூல்களை வாசிக்க வேண்டிய திருக்கும். ஆங்கிலம் தெரியாதென்பதை பாவகாரியமாகக் கருதாமல் - குறிப்பாக, தமிழ்நாட்டில் - கையில் வைத்திருக்கும் ஆங்கில நூலைக் கைவிட வேண்டியதிருக்கும். இதில் ஈகோ பார்க்கக் கூடாது. ஊடே, அறிவிலிகள் எனும் காய்தலை விலக்கி வைத்து விட்டு மக்களோடு மக்களாகக் கலந்து பழக முயற்சி செய்ய வேண்டும். வலைத்தளத்தி லிருந்து இதைப் பதிவிறக்கம் செய்ய ஏலா(தி)து.

நிறைய யோசியும். யோசிப்பதுபோல் பாவலா காட்டாமல் உண்மையாகவே யோசியும். தன்னம்பிக்கையுடன் எழுத முயற்சி செய்யும். இதற்கு, உமக்கு காஃப்மேயர் முதல் அப்துல் கலாம் வரையிலும் தோள் கொடுப்பார்கள். குறைந்தக் கட்டணத்தில் தன்னம்பிக்கை வகுப்புகளும் இப்போது பரவலாக நடைபெறுகின்றன. நீர் ஒரு பேராசிரியராக இருப்பதால், இதை ஒரு கட்டணம் என்றே கூற இயலாது. உமது வீட்டி லிருந்து விளவங்கோட்டிற்குச் செல்லும் சிற்றுந்திற்கான எரி பொருள் செலவுகூட ஆகாது. தன்னம்பிக்கையுடன் எழுதப் பழகும்; எதையாவது எழுதுவோம்; தனிப்பட்ட முறையில் எள்ளி நகையாடினாலும், பழகிய தோஷத்திற்காக எவரேனும் காமுறுவரென்று, ஒட்டுண்ணிபோல் பற்றிப் படராமலும், மனக்கோட்டத்தின் மாமருந்தான காய்தலும் உவத்தலுமின்றியும் சுயமாக முயற்சி செய்யும். தொன்மங்களின் அருளிருந்தால், இந்தியா விலேயே அதிகம்பேர் வாசிக்கிற பிற *மொழிப் பத்திரிகைகளிலும் தமிழின் மிக முக்கியமான பத்திரிகைகளிலும் உம்மையும் பாராட்டி முழுப்பக்கச் செய்திகள் வரக்கூடும்.

முக்கியத் தகவல்: உம்முடைய நூலை ‘காலச்சுவடு' நிராகரிக்கவோ, குமாரசெல்வா, மீரான்மைதீன், என்.டி. ராஜ்குமார்போன்றோரின் நூல்களைப் பதிப்பிக்கவோ நான் காரணம் கிடையாது. இது, படைப்பின் தகுதி அடிப்படையில் பதிப்பாளரால் தேர்வு செய்யப்படுவது. ஒரு வேண்டுகோள்: எதையாவது எழுதி விட்டு திருத்தம்கோரி, சான்றிதழ்க் கல்வியாளர்கள் யாரும் இனி என்னிடம் வராதீர்கள். விளவங்கோடு பத்திர எழுத்தாளரிடம் போங்கள்.

அன்புடன்: குளச்சல் மு. யூசுப்

அடிக்குறிப்பு: அம்மிக்குழவியால் வயிற்றில் இடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது.

***

நன்றி : குளச்சல் மு. யூசுப் | http://www.facebook.com/KulachalMuYoosuf