Sunday, January 17, 2016
கடவுளுடன் விளையாடுதல் - சென்ஷி
என் இருக்கைக்கு எதிரே
கடவுளின் அமர்வு
மிகு சுவாரசிய ஆட்டமெனக்கூறி
காய்களை அடுக்கினேன்
கடவுளின் முணுமுணுத்தல்கள்
செவியிலேறவில்லை
காய் வெட்டுதல் குறி தப்பித்தல்
ரத்தம் சிந்துதல் வெட்டி எரித்தல்
என் ஆட்ட முறைகளை
விதிகளாக்கினேன்.
முணுமுணுத்துக் கொண்டிருந்தார் கடவுள்
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்
காடு புகுந்து வெற்றிக் களிப்பில்
குடித்துக் குடித்துக்
கூத்தாடிக் கொண்டிருந்தான் சாத்தான்
கடவுளின் முணுமுணுப்பு கேட்டிருக்க வாய்ப்பில்லை
விதிகளை மீறிய ஆட்டமென்று
தெரிந்தபின்பும்
நான் எனது வெற்றிக்காக
கடவுளின் காய்களை வெட்டிக்கொண்டிருந்தேன்
கடவுளின் முணுமுணுத்தல் அடங்கவில்லை
ஏவாளுக்காக ஆதாமுக்காக கோவிலுக்காக
மதத்திற்காக குழந்தைக்காக
இயற்கைக்காக
கடைசியாய்
சாத்தானை எனக்குக் கொடுத்ததற்காக
சுவாரசியமாய் இருந்தது ஆட்டம்
வெட்டுப்பட்ட காய்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தாம் விளையாடியது கடவுளுக்காகவென்று
என்னுடைய ஆட்டத்தில்
கடவுளைத் தோற்கடித்தப்பின்
வரமோ சாபமோ
முணுமுணுத்தலில் கிடைக்குமென்று
சப்தமாய் சொல்லச் சொன்னேன்
அவரவர் கண்கள்
அவரவர் மனது
என்றுச் சென்றார்.
***
நன்றி : சென்ஷி, யாழினி
குறிப்பு : கடவுளின் புகைப்படத்தை எடுத்தவர் ஷை.., இல்லை, ஆசிப்மீரான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment