Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, July 14, 2026

வீச்சம் - அழகிய பெரியவன் சிறுகதை

 ‘குறடு’’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து, நன்றியுடன்..

*


வீச்சம் - அழகிய பெரியவன்


காக்காசி நாறினான். காரை உதிர்ந்த மண் சுவரில் மூட்டைப் பூச்சிகளின் இரத்தம் பிதுக்கப்பட்ட கருஞ்சிவப்பு திட்டுகளின் இடையில் காக்காசி பிணையப்பட்டிருந்தான். கன்னங்கள் டொக்கு விழ ஆழமாகப் பீடியை இழுத்தான் அவன். வறண்டு எலும்புகள் தேலிய மார்பிலிருந்து புகைப்பொதிகள் விடாய்த்து வெளியேறின. இருமல் பீறிட்டது. மார்புக்கூடு பிளந்து விரியும் படியாக அவனை ஊடறுத்தது இருமல்.


செமித்த சாராய நாற்றமுடன் பீடியின் கடும் நாற்றமும் சேர்ந்து மேலும் நாறினான் காக்காசி. மலநாற்றம், செத்த உடல்களின் நாள் பட்ட நாற்றம் என நாற்றக் கலவை காற்றிலே இமிரி, அப்பன் முன்னிருக்கும் பாமாண்டியின் நாசித் துவாரங்களில் முண்டி யடித்தது. நுரையீரல் நிரம்பி உடல் நெளிந்தது. குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.


தளர வெளிக்கிருக்கும் அவகாசத்தையும் பள்ளிக்கூடம் பறித்துக் கொள்வது பாமாண்டிக்கு வருத்தமளிப்பதாய் இருக்கும், முன்பெல்லாம் வகுப்பறையில் நாற்றம் புலன் பற்றியதும், முகம் சுழித்து, உவ்வே கொட்டி, வண்ணாத்திப்பூச்சிகளின் றெக்கைகளை அழுத்துவது போல் மூக்கை பிடித்துக் கொள்வான். கீஸ் கீஸ் என்று மூக்கடியில் தேய்த்துத் தவிப்பான். உடம்பெங்கும் குண்டிகளாய் ஆக்கப்பட்டு விட்டவர்களைப் போலத் தெரிவார்கள் அப்போது அவனுக்கு எல்லாரும்.


"பொணந்தின்னிங்க..."


மூக்கடைத்த கீச்சுக்குரலில் வசவுகளை சொல்வான் பாமாண்டி. பள்ளிக்குப் போகையிலும் வருகையிலும் மலக் குப்பல்களால் வரிசை கட்டிய தெரு கடக்க மூக்குப் பிடித்தே மீள்வான். செத்து உப்பிப் புழுத்திருக்கும் நாய் வீச்சம் வழியில் எங்கேனும் அணைந்தால் 'கிசுரு அடிக்கும். கிசுரு அடிக்கும்" என

ஓடும் அவன் கால்கள். கூட்டாளிகள் கெட்ட வார்த்தை பேசினால் அருவருத்து மாய்வான். பக்ரீத் காலமொன்றில் மழை பிடித்துக் கொண்டபோது வீட்டில் காயப்போட்டிருந்த கறித்தோரணங்கள் அழுகத் தொடங்கிவிட்டன. அவனைப் பார்க்க கூட்டாளி ஒருவன் வர நேர்ந்துவிட்டது. அப்போது அவமானத்தால் துவண்டு போனான் பாமாண்டி. அதைத் தொடர்ந்து கறிக் கவிச்சி பிடிக்காமல் சைவனாய் மாறி பின் அரை மனதுடன் மீண்டதும் உண்டு. வெளிக்கிருக்காத ஒரு மனிதனாக.. தான் மாறிவிட வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுதல் செய்து கொண்டு மிருக்கிறான் சில சமயங்களில்.


அவனை நெட்டிமுறிக்க முயன்ற போதெல்லாம் ஒரு புழுவாய் மாறியிருக்கிறாள் பாட்டி அவனுக்கு.


"நா உம் பீ வாராமெ, நா உஞ்சளி சிந்தாமெ வளர்ந்துட்டியாடா "நீ பாமாண்டி?"


"அவனுக்கு கற்பூரம் கவிச்சி அடிக்குதும்மா... இப்படி நீத்தம் பாக்குறவன் வேற எங்காச்சும் போயி பொறந்து தொலைக்க வேண்டியதுதானே."


செவந்தமணியும், பாட்டியும் தங்களின் நியாய நிறுவலில் மேலும் புழுவாய் மாறியிருக்கின்றனர் அவன் முன்.


ஞாபகங்களில் தங்கும் அத்தனை நாற்றப் படிவுகளும் பொடி யாகி உதிர்ந்து நாற்றப்புகைச் சுருள்களாய் இன்று அப்பன் காக்காசி முன் அமர்ந்திருந்த போது எழும்பி வந்து உலுப்பின. உப்பிப் பெருத்து சுவர் சார்த்தி இருத்தப்பட்ட பிணமென அப்பன் பாமாண்டிக்கு காட்சியளித்தான். அப்பன் பிணமென நினைவுகள் ஊடாடியதும், உலுப்பின கிளையென அதிர்ந்தான் அவன். பாமாண்டியின் நினைவுக் கண்ணிகள் முன்னெழுந்து கிளைத்தன.


ஒரு காற்றடி காலத்தில்தான் காக்காசி கிணறுகளைத்தோண்டிக் கொண்டிருந்த வேலையை விட்டு தோல் ஷாப்புக்குப் போனது. மண்ணின் சதைத் துண்டுகளை அகழ்ந்து அகழ்ந்து தண்ணீர் சுழிக்கும் நாளங்களைத் தேடிக் கொண்டிருந்ததை செவந்தமணி தடுத்து விட்டாள். பிணம் வசிக்க வீடு தோண்டும் வெட்டியானைப் போல் தினமும் காக்காசி மண்கோலி, மண்கோலி பாதாளங்களின் உட்பிரவேசித்து பிணமென மீள்வது செவந்தமணியை அவஸ்தையுறச் செய்தது. சடலத்தின் குளிர்ச்சி நிரந்தரமாய் கணவனின் உடம்பில் தங்கிவிட்டதாய் உணர்ந்த ராத்திரியில் அவனை தோல் ஷாப்புக்கு போகும்படி ஏவினாள். அங்கும் பிராணிகளின் உடல் நழுவிய தோல்களுடன் காக்காசி இருக்க நேர்ந்தது. நாற்றமும் சவமும், பிணைந்த வாழ்வின் சோகைத் தனத்தில் தோல்களை உயிர்ப்பிக்கும் செயல் அவனை அந்த வேலையில் ஈடுபட வைத்தது.


வேலைக்குப் போயிருந்த முதல் வாரத்தின் கடைசி நாள் மாலையில் இன்னும் வீடு மீளாதிருந்தான் காக்காசி. சூரியனின் துர்மரணத்துக்குப் பின் வளர்ந்த இருட்டில் பிள்ளையுடன் வாசல் காத்துக் கிடந்தாள் செவந்தமணி. நேரம் ஏறஏற யாருமற்ற தனிமையின் இரவில் அனாதையின் சோகம் போல் பொழுது மாறி சூழ்ந்தது அவர்களை. பாமாண்டி செவந்தமணியின் முகத்தை ஏறிட்டான்.


பரிவின் கசிவு ததும்பும் விழிகள் கன்னத்தின் உள்வாங்கிய குழிகளில் சுழன்றன அவள் முகத்தில்.


"ஏம்மா உன்னும் அப்பா வர்ல?"


"தெரியிலேயே சாமி. இப்ப வந்துனு இருப்பாரு."


அவளின் சொற்கள் ஆதரவற்றுத் தவித்தன. பாமாண்டிக்கு நம்பிக்கையின் சாரம் வற்றி சுயமனத்தேற்றலில் எண்ணங்கள் குழம்பின.


"ஒருவேளை அப்பா செத்துட்டிருப்பாரோ."


பாமாண்டியின் முதுகு அதிர்ந்தது. செவந்தமணியின் அடி களைத் தாங்காமல் காக்காசி வந்து தேற்றும் வரை அழுது சுணங்கிக் கொண்டிருந்தான். பலகாரங்கள் பொதியப்பட்ட பொட்டலத்தை மகன் கைகளில் திணித்துவிட்டு தின்னச்சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான் காக்காசி. அப்போதுதான் அறியப் பட்டு வந்த அப்பனின் மனித வாசனையுடன் புதிதாய் குடலைப் புரட்டும் நாற்றம் ஒன்றும் வெளிப்படுவதை நுகர முடிந்தது பாமாண்டியால்.


நாற்றங்களைப் பிரித்தறியும் வயது தொடங்கிய போதுதான் பாமாண்டி குருகுலவாசம் கற்கும் வேதியப் பொடியன் கணக்காய் வெளியூர்களின் பள்ளிவிடுதிகளில் தங்கிப் படிக்க நேர்ந்தது. நாற்ற உலகிலிருந்து நந்தவன பரப்புக்கு உட்பட்டு விட்டதாய் நினைக்கத் தொடங்கிய அவன் வீடு மீள்தலை அருவருத்தான். மலங்கழிப்பதின் அசூயையுடன் கல்லூரிக் காலங்களில்தான் பாமாண்டி எனும் தன் பெயரை சுக்கல் ஆக்கி கா.பா.மாண்டி என புனைந்து கொண்டதும் நடந்தேறின. மாமன்னன் அக்பர் உடலிருந்தும் அலெக்சாண்டரிடம் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததான சுகந்த வாசனை பற்றிய குறிப்பைப் படித்ததும் அப்பன் அப்படி இருக்கலாகாதோ என எண்ணம் வருத்தியதும் உண்டு.


பணத்தேவைகளை முன்னிருத்திதான் வீட்டுக்கு வர நேர்ந்திருந்தது இப்போது பாமாண்டிக்கு. சாம்பல் பூத்த இருட்டுக் காலையில் சென்று, இருள் கவியும் மாலை திரும்பும் நாற்றம் பிடித்த தன் அப்பனை தவிர்க்கும் உபாயங்கள் அன்று தோற்றுப் போயின. பாமாண்டி காக்காசியிடம் சிக்கிக்கொண்டான். தன் ஒற்றை வித்து, கல்வியின் உயர் முகடுகளில் நின்று தன் நிமித்தமாய் உலகைப் பார்த்து கெக்கலியிடுகிறது. மகனின் பெருமித உணர்வுகளின் நெகழ்வில் ஆதூரமாய் மகனை உச்சி மோந்தான் காக்காசி.


அப்பனின் நடுங்கும் கைகளின் வழியாய் அணைக்கும் வெதுவெதுப்பு பாமாண்டிக்கு அருவருத்தது. தன் மீசை முடிகளை பிஞ்சி விரல்களால் அளைந்து நெஞ்சை உதைத்த மகனின் குழந்தைப் பருவ புளங்காகிதங்களால் ஆட்கொள்ளப்பட்ட காக்காசி நரை மண்டிய மீசை குத்தும்படிக்கு பாமாண்டியை முத்தம் செய்யத் தவித்தான். சாராயத்துடன் பீடியும் இணைந்த நாற்றக் கலவை காக்காசியிடமிருந்து கிளம்பி பாமாண்டியின் முகத்தை அறைந்தது. விதிர் விதிர்த்தான் பாமாண்டி. குபீரென அப்பனின் உடலிலிருந்து வெளிப்பட்ட பிணவாடை, சதைக் கவிச்சியாய் வெருட்டிக் குலைத்தது அவனை.


வறுத்த கறித்துண்டுகளை மெல்லும் தன்னை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காக்காசியின் முகக்கனிவையும் வாயில் குழைந்து கனலும் பீடியின் தீக்கண்ணையும் சந்திக்கத் திராணியற்று முகம் தாழ்த்தி பாமாண்டி நெளிந்தான். பரவியெழும் நாற்றப் புயலால் தாக்குண்டவனாகி சூலுற்றிருப்பவளைப்போல் வீட்டினுள்ளிருந்து எழுந்தோடி வாந்தி எடுத்தான் அவன். வாந்திக்கான எதுக்களிப்புகள் அடிவயிற்றிலிருந்து எழும்பி எழும்பி நெஞ்சு கிழித்தன. தலையின் பக்கங்களை கைகளால் அழுத்திச் சுருண்ட அவனை உடம்பு, மண்ணில் தலை புதையும் படியாய் இழுத்தது. பாமாண்டியின் வாயிலிருந்து உமிழ்நீர் சரங்கட்டியது.


பன்றியின் உடம்பில் உறைந்து உலர்ந்த சாக்கடை பொருக்குகளின் நிறமொத்து இருட்டு இருந்தபோது காக்காசி வெளியே கிளம்பிவிட்டான். கல் கல்லென்று இருமி இருமி இரவெல்லாம் மல்லாந்தபடி சுவர்க்கோழிகளின் கீச்சலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். தாவில்தங்காது தாவரித்துக் கிடந்தது படுக்கையில் அவன் உடம்பு. கோழை கட்டிய விலாப்படிகளில் மேலேறி கீழிறங்கி ஆட்டம் போட்டது இருமல்.


இருமல் புகைந்து மூச்சுத் திணறிய அவஸ்தைகளின் போதெல்லாம் அருகில் படுத்திருக்கும் செவந்தமணியின் குறட்டைகள் கேலி செய்தன அவனை. எச்சிலும் பிணத்தை சபிப்பதுபோல் அவள்மீது துப்பினான் காக்காசி. அருகிலிருக்கும் வீட்டிலிருந்து எழுந்து அடங்கிய சாமனின் ராக ஆலாபனையையொத்த நீண்ட கொட்டாவி மேலும் எரிச்சலூட்டியது காக்காசியை. தன் ஆங்காரத்தை பிரதி எடுத்து வசவுகளாய் சாமனின் வீட்டுத் திசையில் எறிந்தான் அவன்.


அருகிலிருக்கும் சிறு நகரின் மையத்திலிருந்த மசூதியின் தொழுகை அழைப்பு கேட்டபோது, அது அதிகாலை நான்கு மணிக் கானது என உணர்ந்து எழுந்துவிட்ட காக்காசி படுக்கையை விட்டகன்று சந்துக்குப் போனான். ஒன்றுக்கிருந்து, இடிந்த சுவரின் மண்ணால் நரநரவென பல்தீட்டி, மொரிக்கிச் சட்டியில் குளிர்ந் திருந்த நீரில் வாய் கொப்பளித்தான். நடையில் கிடந்த நாய் உண்ணியின் பிடுங்கல்களால் பின்னங்கால்களால் உதைத்து ஒலி யெழுப்பியது. முடங்கிக்கிடந்த குடிசையின் மேற்கால் கிளைத் திருந்த கோணப் புளியமரத்தில் சிக்கிக் கிழிந்து அலையும் பாலிதீன் பையாக நிலா வெறித்தது. பாத்திரங்களை உருட்டி கஞ்சியில் கை உளைந்த போது செவந்தமணி அரற்றினாள். 


"யாருடி நாயீ அது."


"கம்முனு படுமே, நாந்தான்."


"இன்னிக்கு புள்ளே போயிடறானாங். காலேஜில பீசு ணுமாமே. உம்பாட்டுக்கு கமானமா போயிட்டா எப்படி?"


"ஒரு பத்துமணிக்கா ஷாப்பாண்ட வரச் சொல்லுமே. எஜமாங்கிட்ட கேட்டு வாங்கித் தாரென் எதானாச்சும்."


நடுத்தெருவின் கோழி கூப்பிடும் சப்தம் இருட்டை பலவீன மாக்கியது. தெருவில் மண்டிக் கிடக்கும் இருட்டில் அமிழ்ந்து இருமல் ஒலிகளுடன் கரைந்தான் காக்காசி. முகங்கள் துலங்க ஆரம்பித்த மெல்லிய இருளில் தோல் ஷாப்பை அடைந்த காக்காசி ஆடைகளைக் களையத் தொடங்கினான். சுருண்ட வேட்டியையும்

சட்டையையும் உருண்டை பிடித்ததுபோல் ஒரு மூலையில் பத்திரப்படுத்திவிட்டு கோணிப்பையின் துண்டு ஒன்றால் கோவணத்தின் மேல் அரை கட்டிக்கொண்டான். தோல் ஷாப்பின் விரிந்த கட்டிடமும், தோல்களை ஊறப்போட்டிருந்த தொட்டிகள் வரிசையிடும் பெரும் கொட்டகையும் என எல்லாமே நாற்றத் துண்டுகளால் எழுப்பப்பட்டது போலிருந்தன. பச்சைத் தோல்கள் வேதிப் பொருட்களிலும் சுண்ணாம்பிலும் புளித்து ஊறி நாற்றம் பரப்பின. சவ்வுகளும், தோல் கழிந்த மயிர்களும் இரைந்திருக்கும் பரப்பு எங்கும் கொடூரக் கவிச்சி நாற்றம். தோல்கள் ஊறும் தொட்டிகளில் கரைசல் நீர் புளித்து, குமிழ்கட்டி, சீழ் நிறத்தில் இருந்தது.


காக்காசி தோல்களை திருப்பிப் போடவும் இடம் மாற்றவுமாக தொட்டிகளில் இறங்கத் தொடங்கினான். கொடூர குளிர்வின் ஊசித் தீண்டல்கள் அவனை வதைத்தன. மரத்து இற்ற தேகம் எதையும் சட்டை செய்யாமல் தோல்களைத் தூக்கி வீசியது. இறுகலாய்த் தழுவி அவன் எலும்புகளை நொறுக்கின. தோல் குவியல்களை இடம் மாற்றி, பச்சையாய் ஊறி நீர்ச்சொட்டும் அவற்றை அந்தரத்தில் தொங்கும் கொக்கிகளில் பிணைத்து முறுக்கிப் பிழிந்து, உலருவதற்கென கொட்டடிகளில் காயவிட்டு உழன்றான். வேதிநீர் கரைசல்களில், சவ்வுக் குவியலில், தோல்களின் கவிச்சிநெடியில் நாற்றம் பொதிந்த ஜடமாய் உருமாற்றம் கொண்டிருந்தான் அவன். 


மகன் வருகையின் எதிர்பார்ப்பும், எஜமானிடமிருந்து பணத்துக்கென எதிர்கொள்ளவிருக்கும் பதிலின் அனுமானமும் அவனை மேலும் ஆயாசம் கொள்ளச் செய்து பெருமூச்சைக் கிளப்பின.


இளம் வெயில் பொழுதில் அவன் மகன் அங்கு வந்து சேர்ந்தான். முக்கால் நிர்வாணியாய் தன்னை நோக்கி ஓடிவரும் அப்பனைப் பார்த்ததும் பெரும் மனத்தாக்குதலுக்கு ஆளானான் பாமாண்டி. கவிச்சி வீச்சம் வாரி அடித்தபடி இருக்கும் சூழலில் நாறும் மனிதனாய் எதிரே நிற்கும் அப்பனைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு.


"மயிரு... நா போயீ துட்டு வாங்கினு வருணுமா? நா போகல. அந்த நாத்தம் புடிச்ச ஷாப்புக்காவெல்லாம்."


"ராஜா, ஒரு வாட்டி மட்டும் போயிட்டு வந்துரப்பா. நா ஒரு வேலையா கெடக்கிறேங்."

நாற்றத்தின் குரூர அருவருப்பில் அதிர்ந்தவனாகவே அவனால் வீட்டில் இப்படி செவந்தமணியிடம் சொல்ல நேர்ந்தது. அந்த வீரியம் அப்பனின் கோலத்தை உள்வாங்கியதும் சரிவது போல் இருந்தது இப்போது. வார்த்தைகள் அடைபட்டு நெஞ்சு வீக்கம் கொண்டது. காக்காசியிடம் பேசவும் திராணியற்று மனம் சரிந்தான். நாற்றப் பண்டமாய் மாறிப்போனதை அந்த நொடியில் உணர்ந்தான் பாமாண்டி. முன் தீர்மானங்களின் பட்டை உரிந்து மெதுவாய் ஒரு பீக்குண்டுக்குள் அமிழ்ந்து வெளியேறினான் அவன். பாமாண்டியின் நாற்றப் பிரதிகள் அவனிலிருந்து உதிர்ந்து வீழ்ந்தபடியே இருந்தன.

(END)

நன்றி : அழகிய பெரியவன் , கலப்பை, சென்ஷி

Tuesday, June 16, 2026

கத்தார் காசிம் (சிறுகதை) - ஜபினத்

படைப்பு பதிப்பகம் வெளியிட்ட ’சீன் டபாக்கு டம் டம்’ சிறுகதைத் தொகுதியிலிருந்து நன்றியுடன் பகிர்கிறேன். - AB

*


கத்தார் காசிம் 

மம்மாயிஷா தனது அறையின் ஜன்னல் வழியே சாலையில் விளையாடிக்கொண்டிருந்த பேரனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனின் மூக்கும் முன் நெற்றியும் கணவர் காசிமின் முகச்சாடையை ஒட்டி இருந்தது. பேரன் காசிமைப் பார்க்கும் போதெல்லாம் மம்மாயிஷாவிற்கு இளவயது காசிமின் முகம் நினைவுக்கு வந்து புன்னகையை வரவைக்கும்.


இன்று சனிக்கிழமை. காசிமிற்கு விடுமுறை நாள். கொஞ்சம் தாமதமாகத்தான் எழுவார். லுஹர் பாங்கு சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து மம்மாயிஷாவின் செல்போன் அடித்தது.


“என்னஸ்ஸி என்ன செய்றாவோ?"


"என்னத்த செய்யப்போறேன் ஒங்க பேரனைத்தான் பாத்துட்டு நிக்கன்."


"நல்லா பாத்தவொ, என்ன வெஞ்சனம்."


"கெண்டையத்தான் ஆனம் வச்சி சாலையை வறுத்தாவொ சின்னவன் யாவாரத்துக்கு பெங்களூர் போயிருக்கானாம். அவம் பொஞ்சாதியும் புள்ளைவுளும் இங்குட்டுதான் நிக்குதுவொ."


கொட்டாவி விட்டபடி. "சரிடி நான் கொஞ்சம் அழுக்கு துணி கெடக்கு கழுவனும் பொறவு பேசுதேன்."


"என்னங்க எங்கன ஓடுறியோ? அரபிக்கிட்ட லீவுக்கு பேசினியளா இல்லியா நோன்பு வருது நாளு நெருங்குது, பெருனாவுக்குள்ள வந்துடுவியோ தானே."


"ஆமா, இவ அத்தா கட்டி வச்சிருக்குறோ கூப்புட்டவுடனே வரதுக்கு வரண்டி."


"இப்ப நீங்க கேட்டியளா இல்லையா? அதை சொல்லுங்க." 


"இருடி, பெரியம்மாட்ட பேசிருக்கேன் அவங்க மவண்ட்ட பேசிட்டு சொல்லுவோ, கெடந்து குதிக்காத.”


இருவருக்கும் உரையாடல் தொடர்ந்தது.


'காசிம்.காசிம்' என்று சொல்வதைவிட 'கத்தர் காசிம்' என்றால்தான் ஊருக்குள் தெரியும். முஹம்மது ஆயிஷாவை மம்மாயிஷா கத்தர் காசிம்ட பொஞ்சாதி என்றுதான் அடையாளப்படுத்துவார்கள்.


மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், பதினெட்டு பேரப் பிள்ளைகள் என பெரிய குடும்பம் அவர்களுடையது. மம்மாயிஷா காசிமின் தாம்பத்தியத்திற்கு மூன்றாவது மகனின் பதினைந்து வயதுதான் சாட்சி. அவனை உண்டாகி இருந்தபோது ஊரும் குடும்பமும் கேலி பேசி சிரித்தாலும் அதை கடுகளவும் காதில் போட்டுக் கொள்ளாமல் கெத்தாகப் பெத்தெடுக்க ஒரே காரணம் காசிமின் கத்தர் சம்பளம் தான். கணவருடைய சம்பளத்தில் இருக்கிறோம் என்பதே மம்மாயிஷாவின் நடைக்கும் உடைக்கும் காரணமாக இருந்தது.


கடந்த முறை காசிம் சபருக்கு வந்திருந்தபோது உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறுகளினால் இரண்டு மாத விடுப்பு தாண்டியும் ஊரிலேயே இருக்க நேரிட்டது. அந்த மூன்று மாதங்களில் அவர் பல விசயங்களைப் புரிந்துகொண்டார். நேரிடையாக கேட்காமல் சாடைமாடையாக வந்த கேள்விகளின் விபரீதத்தை உணர்ந்து அரபியிடம் கெஞ்சிக் கூத்தாடி மறுபடி கத்தருக்கே வந்துவிட்டார்.


"என்னங்க, முடிச்சிட்டு தானே வாரேன்னு சொன்னிங்க” என்ற மனைவியிடம் மகன்களையும் மருமகள்களையும் காட்டிக் கொடுக்காமல் அரபி வற்புறுத்தி அழைப்பதாகக் கூறி வந்து விட்டார். பிள்ளைகள் தன்னை மரியாதையுடன் நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கும் அந்தப் பைத்தியத்துக்கு கடைசி வரை அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்று நினைத்தார்.


கத்தர் சென்றதும், அவருடைய பண வரத்து தொடர்ந்ததும், உம்மாமீது மகன்களும், மாமியார்மீது மருமகள்களும் மரியாதையை அதிகரித்தனர். மம்மாயிஷாவைப் 

பொறுத்தவரை அதெல்லாம் தன் மீதான அன்பில் வருகிறது. காசிமிற்கு மட்டுமே அதன் உள் அர்த்தம் புரியும். அதனாலேயே மூன்று வருடம் ஊருக்குத் திரும்பாமலே இருந்து விட்டார்.


மம்மாயிஷாவிற்கு இப்போதெல்லாம் காசிமை அதிகமாக தேடியது. சிலசமயம் அவரைப் பார்க்காமலே உலகைவிட்டு சென்று விடுவோமோ என்று பயந்து கொண்டிருந்தாள்.


மூத்த மகன் வீடு கட்டிக்கொண்டிருக்கிறான், இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த புது வீட்டில் தனக்கான அறையில் காசிமோடு மீதி காலத்தைக் கெத்தாகக் கழித்துவிட வேண்டும் என்பதுதான் அவளின் கனவு. சொந்த வீட்டில் புருசன் மடியில் கெட்டுக் கழுத்தியா போய் சேர்ந்துட்டான்னு ஊர் பேசனுமென்பதை ஒவ்வொரு தொழுகையிலும் வேண்டிக்கொண்டிருந்தாள்.


மம்மாயிஷாவின் கவலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த பெருனாவுக்குள் காசிம் வந்துவிட வேண்டுமே என மனதுக்குள் பிதற்றிக்கொண்டே இருந்தாள்.

“அத்தம்மா, அத்தம்மா” பேரன் அபூவின் குரலுக்கு நினைவுக்கு திரும்பினாள்.


“என்னஸ்ஸீ."


"அம்மா அடிச்சிடுச்சி."


அழுதவனை இழுத்து மடியில் போட்டுக்கொண்டு தலைமுடியை கோதிவிட்டாள்.


“அவதான் வேலையா இருக்குதால்ல. அவகிட்ட போனா கோவம் வரும்தானே. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க அத்தம்மா எடுத்து தாரேன்.”


அபூ அத்தம்மாவின் மடியில் படுத்துக்கொண்டே விம்மிக்கொண்டிருந்தான்.


“சந்தைல கலர் கலர் கோழிகுஞ்சு பாத்தேன். எனக்கு அது வாங்கித் தா அத்தம்மா.”


மம்மாயிஷாவுக்கு சிரிப்பு வந்தது. இதுக்கா போய் சண்டை போட்டவொ.


"புது வீட்டுள அதுவுல்லாம் பேண்டு அசிங்கமாக்கிடுமாம். அம்மா தர மாட்டேன் சொல்லிடுச்சி.”


'சரித்தா....அத்தம்மா வாங்கி தர்றேன் அழுவாத."


மம்மாயிஷா தன் மணிப்பர்ஸைத் திறந்து இரண்டு நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தாள்.


அபூ சிரித்துக்கொண்டே வாங்கிய அடுத்த நொடி காற்றாய் ஓடி மறைந்தான்.


காசிம் அனுப்பும் பணம் யாவும் இப்படித்தான் காற்றாய் பறந்துகொண்டிருந்தது.


மாதம் பிறந்ததும் பத்திலிருந்து பதினைந்து தேதிக்குள் காசிம் பணம் அனுப்பி விடுவார். அந்தத் தேதியை தோதுபடுத்தி மகன்களுக்கு உம்மா மேல் பாசம் அதிகமாக வரும், மகள்கள் பிள்ளைகளோடு வீடு தேடி வருவார்கள். மருமகள்கள் மாமியாரை உள்ளங்கையில் தாங்குவார்கள். பேரக்குழந்தைகள் கூட அத்தம்மா மேல் அதீத அன்போடு நடந்து கொள்வார்கள். பணம் காலியானதும் அத்தனை பேரும் இயல்பு வாழ்கைக்குத் திரும்பி விடுவார்கள்.


மம்மாயிஷாவுக்கு இதெல்லாம் குறையாகக்கூடப் பட்டதில்லை. என் பிள்ளைக என்கிட்ட தானே கேட்குதுவொ,. என்ற பெருமையோடு எடுத்துக் கொடுப்பாள்.


காசிம் எப்போதாவது போனில் கேட்பார் “என்னட்டி எதாவது சேர்த்து வச்சிருக்கியா? உன்னிய நம்பித்தான் ஊருக்கு வருவேன்” மம்மாயிஷா சிரித்துக்கொண்டே “ "ஆமா பரண்லத்தான் பொட்டலமா கட்டி போட்டு வச்சிக்குதேன் "மச்சான் வந்து தான் எடுத்து தருவனும்” என்னும்போது 'மச்சான்' என்ற இடத்தில் வெட்கத்தைக் கலந்து சிரிப்பை உதிர்ப்பாள்.


கத்தரில் இருக்கும் காசிமிற்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. கடந்த முறை வரும் வரை அவனும் மம்மாயிஷாவைப் போலத்தான் மகன்களின்மீது பெரும் நம்பிக்கையோடு இருந்தான். 


“அத்தா, எப்ப வரிங்க? வருசம் ரெண்டாச்சி” என்று ஓயாமல் அழைத்து, ஒரு வழியாக ஊருக்கு வந்து இறங்கினார் காசிம். வந்த இரண்டு மூன்று நாள் தடபுடலாக விருந்து கேலி என வீடே கலகலப்பாக இருந்தது...


"அத்தா உங்ககிட்ட பேசனும்” என்று மகன்கள் இருவரும் கூப்பிட்டு நடுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். காசிம் நாற்காலியில் அமர, அவரை ஒட்டிய படி தரையில் மம்மாயிஷாவும் அமர்ந்துகொண்டார்.


மகன்கள் இருவரும் காசிமின் பெயரில் உள்ள தென்காசி இடத்தை விற்றுத் தருவதற்கு தான் பூசி மெழுகினர். காசிம் தன்னுடைய முப்பது வருட சம்பாத்தியத்தை முழுவதுமாக அந்த இடத்தில்தான் கொட்டி வைத்திருந்தார். வெகுகாலமாகவே அவர்களுடைய கண்களை உருத்திக்க்கொண்டிருந்தது. காசிம் மோவாயைத் தடவியபடி யோசித்துக்கொண்டிருந்தார். மம்மாயிஷா ஏதோ யோசனைக்குப் பின், மகன்களை கண் காட்டி உள்ளே போகச் சாடை காட்டினாள். பிள்ளைகள் நகர்ந்ததும் காசிமின் முழங்காலை வருடியபடி பேசினாள். 


அவளுடைய சிரிப்பு கலந்த பேச்சில் வெகுளித்தனம் வழிந்தது. "என்னத்த யோசிக்கிறவொ? மத்த புள்ளைலவளபோல அப்பன் எடத்தை ஏமாத்தி வித்துட்டு வந்து நிக்காம எவ்வளவு பொறுப்பு கேக்குறானுவோ, தங்கச்சியளுவக்கும் பங்கு தர்ரேன்னுறாவொ, சின்னவனையும் படிக்க வச்சிடுவானுவோ. பொறவு என்னத்துக்கு யோசிக்கிறவோ?


நாம என்ன நடுத்தெருவுல நிப்பாட்டுத புள்ளையளையா பெத்துதுக்குறோம். அஞ்சும் அஞ்சி கண்ணுமணிவொ அதுவுளுக்கோ கொறையே அதுவோ எல்லார்கிட்டயும் நம்மளால இருக்க முடியலன்னுதான்.


போதும் இந்த சபரு, அலைச்சலு எல்லாம். பேசாம குடுத்துப்புட்டு ஊரோட உக்காருங்க. எனக்கும் நீங்க இல்லாம இருக்கவே முடியுல. மேலுக்கு நோவுதுன்னா முதுவை தடவி வுட கூட ஆளில்ல மருமவ கிட்ட சொல்லவும் வெக்கமா இருக்கு மவளுவோ எல்லா வேலையும் போட்டுபொட்டு வந்து எவ்வளவு காலம் நிக்க முடியும்”


பேசிப் பேசி காசிமை சம்மதிக்க வைத்தாள். ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்து பணப் பட்டுவாடா செய்ததும் மூத்தவன் தன் பங்கில் வீட்டு வேலையைத் துவங்கினான் சின்னவன் தொழிலில் போட்டுவிட்டு ஊர் ஊராகச் சுற்ற, மகள்கள் புது வண்டி, நகை என மின்னினார்கள்.


காசிமிற்கு மிஞ்சிய பணத்தில் மம்மாயிஷாவிற்கு ஆறு பவுனில் கருகமணி கோர்த்து செயின் வாங்கி கொடுத்தார். கல்யாணம் ஆன புதிதில் தனக்காக கழட்டிக் கொடுத்த செயினை மீண்டும் அணிய அவளுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கு. "இப்பவும் எனக்கு எதுக்குங்க? பேத்தியளுக்கு" என்று வாய் எடுத்தவளை தன் அதிகாரக் குரலால் அமைதி ஆக்கினார் காசிம்.


அந்த செயினை மாட்டிக்கொண்டு தோழிக வீடு, குடும்பத்து வீடு, தெருவாசிங்க வீடுன்னு ஒரு ரவுண்டு போய் பெருமை அடித்து வந்துவிட்டாள் மம்மாயிஷா. அவளுடைய புது நகையைவிட அதிகமாக மின்னியது கிழவியின் வெட்கம் தான். காசிம் அதை பார்த்துப் பார்த்து ரசித்தான். "உனக்கு மட்டும் வயசே ஆவ மாட்டேங்குதுடி” என்றவனை, "போங்கங்க அங்குட்டு" என்று வெட்கத்தோடு கோவப்பட்டுக்கொண்டாள். 


நாட்கள் நகர்ந்தன. பணம் தீர்ந்ததும் மகன்களின் பேச்சில் இரட்டை அர்த்தங்கள் வெளிப்பட்டன. கறி ஆனம் கோப்பையில் சவ்வும் எலும்பும் மட்டுமே வந்தது. "மாமா, ரேசன் கடைக்கு" என்று கேட்ட பொண்டாட்டியை அடக்காமல் மகன் "இல்லத்தா வேலைக்கு போவனும் நேரமாச்சு அதான்” என்று பதிலுக்கு காத்திராமல் விரைந்தான். தன் இடம் பறிபோனதை காசிம் உணர்ந்தாலும் மம்மாயிஷாவைவிட்டுப் பிரியப் பயந்தார். 


அவளுக்கு எதாவது நடந்து விடுமோ என்பதிலேயே அவர் பிடி கெட்டியாக இருந்தது. ஆனால் வருமானம் இல்லாமல் மகன்கள் கணவரை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று தெரிந்தால் அவள் உயிரையும் விட்டுவிடுவாள் என்பதை உணர்ந்தார்,தான் கூட இருப்பதைவிட தன் பணமும் மகன்கள் மீதான நம்பிக்கையும் இன்னும் அவளை நன்றாக வைத்திருக்கும் என்பதால் மீண்டும் கத்தருக்கே கிளம்பி வந்து விட்டார்.


அவர் நினைத்தபடியே ஒவ்வொரு முறை பேசும்போதும் மகன்கள், மகள்கள் பெருமை பேசாமல் போனை வைக்கமாட்டாள் மம்மாயிஷா. ஆனால் இந்த முறை காசிம் தங்களுக்கென தனிச் சேமிப்பை தெளிவாக செய்து வைத்திருந்தார். மம்மாயிஷாவிடம் பேசும் போதெல்லாம் 'உன்னை நம்பித்தான் வரேன்' என்று கேலி செய்தாலும் 'உன்னை விட்டுவிட மாட்டேண்டி மச்சான். சேர்த்து வச்சிருக்கேன்' என்று மனசுக்குள் கர்ஜித்துக் கொள்வார். 


இம்முறை காசிமை மம்மாயிஷா வருந்தி அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருந்தது. அவர்களுடைய ஐம்பதாவது கல்யாண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. இருபத்தி ஏழாவது நோன்பு அன்றைக்குதான் அவர்களுக்கான ஐம்பதாவது திருமண நாளும் வருகிறது, தொடர்ந்தாற்போல மூன்று வருடம் கத்தரிலேயே இருந்து விட்டதால் இந்தப் பெரு நாளிலாவது இரண்டு பேரும் இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தாள் மம்மாயிஷா. ஆனால் காசிமால் இப்போ வரை விடுப்பு எடுக்கவே முடியவில்லை என்பதே அவளுக்கு கலக்கமாக இருந்தது.


கத்தர் மன்னனின் தூரத்து உறவினரான சேக் தாவூத் பின் அகமது என்ற அரபியின் வீட்டில்தான் காசிம் சமையல் பணியில் இருந்தார். காசிமோடு சேர்த்து இருபது சமையல்காரர்கள், இது தவிர ஏழெட்டு டிரைவர்கள், செக்யூரிட்டிகள் என ஒரு கூட்டமே அந்த வீட்டிற்கு பணி செய்து வந்தது. அரபியின் பாட்டிதான் அந்தக் குடும்பத்தின் தலைமை ஆனவர். பெரியம்மா சொன்னால்தான் அங்கு எதுவும் நடக்கும். மகன்கள் பேரன்கள் என வீட்டிற்குள் ஒரு ராஜாங்கத்தையே நடத்திக்கொண்டிருந்தார். 


காசிமிற்கு விடுப்பு கேட்க போகும் போதெல்லாம் எதாவது ஒரு தடங்கல் வந்துகொண்டே இருந்தது. அவரும் அப்போ பாத்துக்கலாம் இப்போ பாத்துக்கலாம் என்று நாட்களைக் கடத்திவிட நோன்பு காலமும் துவங்கியது.


‘அத்தம்மா' என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள் அஃப்ரின்.


பேத்தி அஃப்ரினுக்கு ஐந்து வயதிருக்கும். உம்மாவுடன் புது வீட்டுக்கு சென்றுவிட்டு வந்திருந்தாள். 


"என்னட்டி...புது வூட்டை பாத்தியா, அழகாயிருந்துசா” 


வீட்டில் பூச்சு வேலை நடந்துகொண்டிருந்தது. 


"அத்தம்மா வீடு அழகாயிருந்துச்சி. நம்ம வீட்டுல டயில்ஸ் போடலையாம் க்ரானைட்டுதான் போடுறாகளாம்" 


"அதென்னட்டி க்ரானைட்டு'


"அது தரையை தொட்டா குளுகுளுன்னு இருக்குமாம். தண்ணி ஊத்திருந்தா வழுக்கி உழுந்துருவமாம். வேற அப்பப்போ உழுவுற பாத்து கம்பு வச்சி நட என்னா”


அப்ரின் மழலை மொழியில் பேசிக்கொண்டிருந்தாள். 


மம்மாயிஷாவுக்குப் புரிந்தது. மருமகளை அழைத்தாள். "எம்மா நீ தஸ்தகிருட்ட சொல்லு. மாமாக்கும் எனக்கும் காலு சரியில்ல. முன்ன மாதிரி பதிஞ்சி நடக்க முடியல். அதனால் கருத்த ராவுத்தர் வூட்ல போட்டாக்ல புள்ளி வச்ச டைல்ஸே போட சொல்லும்மா. முழுசுக்கும் வேணா, மாமாட ரூமுக்கு மட்டும் போட்டா போதும். எங்க காலத்துக்கு பொறவு நீங்க மாத்திக்கங்க. சரியாமா"


"சரிங்க மாமி, நான் அவுகட்ட சொல்லிடுறேன்" சலித்தபடி சென்றாள்.


"ஏங்க, உங்க அம்மா நம்மகூடவா இருக்கப் போவுது? நீங்கத்தானே சொன்னிய, புது வீட்டுக்கு போறப்ப சின்னவுக கூட்டிட்டு போயிடுவாங்கன்னு. அதைச் சொல்லித்தானே அவ பொஞ்சாதி அவங்க அம்மா வூட்டையே பங்குத் தொகைல வெல குடுத்து வாங்கிச்சி.”


"ஆமாடி, அவங்க அப்படித்தான் சொன்னாங்க அம்மா மனசுல என்ன வச்சிருக்குன்னு தெரியலயே."


முறைத்தபடி எழுந்தாள்.


"இத்தனை வருசம் நாந்தானே சேவகம் பண்ணேன். காணாததாக்கும் நான் மட்டுமா மருமவ."


"ஏண்டி கத்துறே? எங்கம்மாவை பத்தி எனக்கு தெரியும். அது இந்த வீட்டைவிட்டு வராது. இருபத்தி வருசமா வாடகைக்கு இருக்கோம் அது இதை சொந்த வீடாத்தான் பாக்குது பேச்சுக்கு ரெண்டு நாள் நம்ம வீட்டுக்கு வந்து தங்கிட்டு திரும்பிரும். அதுக்கு இங்க இருந்து நாலு பேர் கிட்ட பொரணி பேசுனாத்தான் பொழுதே போவும் நீ சும்மா கெட."


"அப்ப க்ரானைட்டு தானே முழு வூட்டுக்கும் போடுவியே." 


"ஆமாடி. அமைதியா கெட்டி. சும்மா சலம்பிட்டு" அவளை இறுக்கி அணைத்தபடி அமைதி ஆக்கினான்.


பக்கத்து அறையில் குளிருக்கு மின் விசிறியை நிறுத்தி இருந்தவளுக்கு அத்தனை பேச்சும் காதில் விழ, அதிர்சியில் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி படுத்துக்கொண்டாள் மம்மாயிஷா. 


நோன்பு ஓடியது. மம்மாயிஷாவின் பேச்சில் உற்சாகம் குறைந்திருந்ததை காசிம் உணர்ந்தார். ஆனால் அரபி வீட்டில் நாளுக்கு நாள் உறவினர்களின் வருகை அதிகமானதால் விடுப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டது. 


விடிந்தால் இருபத்தி ஏழாவது நோன்பு, ஐம்பதாவது கல்யாண நாள். இரண்டு முறை அழைத்தும் மம்மாயிஷா போனை எடுக்கவில்லை. நல்ல கோபத்தில் இருப்பாள். பிறகு சமாதானப்படுத்திக் கொள்ளலாம். 'அதை கொண்டாங்க இதைக்கொண்டாங்க' என்ற ஆர்டர்களுக்கு மத்தியில் அதை அப்படியே விட்டுவிட்டு வேலைக்குள் மூழ்கி மம்மாயிஷாவை மறந்தார் காசிம். 


"பெரியம்மா உங்களை கூப்பிடுறாங்க" பாகிஸ்தான்கார சக பணியாளனின் குரலுக்கு அவனைத் தொடர்ந்தபடி ஓட்டமும் நடையுமாக ஓடினார் காசிம்.


பெரியம்மாவின் அரேபியக் குரல் கம்பீரமாக ஒலித்தது.


”அடேய் காசிம் இன்னிக்கு இஃப்தாருக்கு என்ன செஞ்சிருக்க?” 


"மஜ்பூஸ், கப்சா, அரீஷ்." 


"இனிப்பு என்ன செஞ்சிருக்க?” 


"குனாஃபா அசீர்.”


"ஊருக்குப் போகனும்னு கேட்டிருந்தியா?"


'ஆமாம்' என அவசரமாக தலை ஆட்டினார். "அதெல்லாம் அனுப்ப முடியாது" என்று உரக்க சிரித்தபடி குட்காவை இழுத்தார்.


காசிமின் முகம் இறுகியது.


"இன்னும் இரண்டு மூணு நாளைக்கு நிறைய சொந்தக்காரங்க வருவாங்க. சாப்பாடுலாம் சூப்பரா இருக்கனும். இல்லன்னா உன்னையைத்தான் கேட்பேன் புரிஞ்சுதா?"


காசிம் மெதுவாக சரி என்பதாக தலை ஆட்டினார். "உன் கூடமாட ஒத்தாசைக்கு இந்தப் பொம்பளையையும் கூட்டிட்டு போ” என்று கைகாட்ட அவர் கை காட்டிய இடத்தில் மிரட்சியாக நின்றுகொண்டிருந்தாள் மம்மாயிஷா. 


காசிமிற்கு தன் கண்களைத் தானே நம்ப முடியாமல் தடவிக்கொண்டு மறுபடி பார்க்க பெரியம்மாவின் வெடிச்சிரிப்பில் அதிர்ந்தார்.


"கல்யாண நாள் வாழ்த்துக்கள் காசிமே இரண்டு மணி நேரம் உனக்கு ஃப்ரீ டைம். போ, போய் உன் பொண்டாட்டி கூட இஃப்தாரை கொண்டாடு." 


மம்மாயிஷாவின் கையை இழுத்துக்கொண்டு ஓடினார் காசிம். தங்க நிறத்தில் பளிங்குகளால் மின்னிய அந்த அடுக்களை அவர்களுக்கு தாஜ்மஹாலைப் போல் இருந்தது. 

அவர்களை தனிமையில் விட்டு விட்டு மற்ற பணியாளர்கள் ஒதுங்கி நின்றனர்.


"எப்படிடீ வந்தே" இருவரின் கைகளும் நடுங்கிக்கொண்டிருந்தன. 


மம்மாயிஷாவுக்கு காசிம் கோபத்தில் அடித்து விடுவானோ என்ற பயம் இருந்தது. ஆனால், அவர் கண்களில் உள்ள கண்ணீரைக் கண்டதும் பதறிப் போனாள்.


பதில் சொல்ல வாய் எடுத்தாலும் வார்த்தை வராமல் உளறினாள்.


காசிம் அவளுக்குத் தண்ணீரைக் கொடுத்து அமைதி ஆக்கினான்.


"நம்ம பாத்திமுத்து மவன் சொய்பு இங்கத்தானே இருக்கான். அவன் பொஞ்சாதி புள்ளை பெத்திருக்கா. கூட இருந்து பாத்துக்க நாப்பது நாளைக்குன்னுட்டு வேலைக்கு ஆள் கேட்டான்னு சின்னவன் சொல்லிட்டு இருந்தான். அதான் புள்ளைலுவள கேக்காம நான் பாத்திமுத்துட்ட சொல்லி இங்கன வந்துட்டேன்.” 


“வீட்டு வேலைக்கா?” காசிமின் குரல் தழுதழுத்தது. 


"அப்படி இல்லிங்க. பாத்திமுத்து மவண்டா எனக்கும் மவன் தானே இது என்ன வேத்து வேலையா?” அவள் படபடத்தபடி அவனை சமாதானம் செய்தாள். 


"ஏண்டி, என்னை கேக்காம இவ்வளவு தூரம் வர்ற அளவுக்கு" 


"என் மச்சானுக்காக எவ்வளவு தூரம்னாலும் வருவேன்" காசிம் அவளை கண்ணீருடன் பார்த்தார்.


இருவரும் ஒரே தட்டில் உணவை வைத்துக்கொண்டு எதிர் எதிரே அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள, தூரத்தில் ருந்து ரசித்தாள் பெரியம்மா. 


"எல்லாருக்கும் இந்தப் பாக்கியம் கிடைச்சிடாது மம்மதே, உங்க மொதலாளிக்கிட்ட பெரியம்மா சொன்னேன்னு இந்த வருசத்துக்கு வீடு கட்டிக் கொடுக்குற பத்து பேர்ல காசிம் பேரையும் சேர்க்கச் சொல்லு, அவரு ஊர்ல அவர் கேட்குற வசதியோட எந்தக் குறையும் இல்லாம கட்டிக் கொடுக்கனும் சரியா" பெரியம்மாவின் உதவியாளர் முஹம்மது என்கிற மம்மது 'ஆகட்டும் மா, ஆகட்டும் மா” என தலையாட்டிக்கொண்டிருந்தார். 


"எட்டி, கருவமணி எங்கட்டி"


"காக்கை தூக்கிட்டு கத்தாருக்கு போயிருச்சி மச்சான்" என்று வெட்கத்தோட சிரித்தாள் மம்மாயிஷா.

**

(இந்தச் சிறுகதை 'கதிராளிகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது)

*


நன்றி : ஜபினத்


Thursday, April 3, 2025

மழையும், ரயிலும் - ஷம்ஸ் இப்ராஹிம்

சுவாரஸ்யமான ‘கடையநல்லூர் புராணம்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து, பகிர்கிறேன். இந்த நூல் பற்றி, ’எளிய மனிதர்களிடத்தில் நிறைந்த வாழ்வும் ஒப்பனையற்று ததும்பும் கதைகளுமிருக்கின்றன. கதையின் மனிதர்களும் இதன் வட்டார சொற்களும் புதிய அனுபவமாகிறது. கதைகள் வெட்டவெளியில் தடுப்பாரின்றி வீசும் காற்றுபோல பரவுவதை எனது வாசிப்பில் உணர்ந்தேன்’ என்கிறார் நண்பர் மீரான் மைதீன். 

நன்றி.

**

மழையும், ரயிலும் - ஷம்ஸ் இப்ராஹிம்

விடுமுறை நாட்களில் வெள்ளனே எழ நேர்ந்தால் விளக்கிய கையோடு சாயாவைக் குடித்து விட்டுத்தான் வாசலுக்கு வருவேன். எல்லோர் வீட்டிலும் முதலாவதாக எழுந்து விடும் ம்மாக்களை போன்று ஐஸாம்மாவும் வெள்ளனே எழுந்து விடும். அது எப்படி ம்மாக்களுக்கு மட்டும் 'அலாரமே' இல்லாமல் எழும்ப முடிகிறது என நான் பலமுறை யோசித்ததுண்டு. ம்மா சொன்னாள், “பஜர் பாங்கு சொல்லும் பொழுதே எனக்கு முழிப்புத் தட்டி விடும், வாப்பா தொழுதுவிட்டு வரும் வரை சும்மா படுத்துக் கிடப்பேன்”.

காலை எழுந்ததும் வாப்பாவிற்குச் சாயா போடுவதில் ஆரம்பமாகிறது ம்மாவின் விடியல். நாஷ்டா என்ன செய்யலாம் என யோசித்தவாறு வாசலில் துப்புரவுப் பணியாளர் விசில் சத்தம் கேட்கும் முன்பே, ஒருபக்க கதவின் மேல் தாழ்ப்பாளைத் திறந்து கதவில் தொங்கும் திரைச் சீலையால் கதவை இறுக்கி மூடச் செய்து, குப்பைத் தொட்டியுடன் வாசலில் போய் உட்காரும் ஐஸாம்மா. என் நல்லம்மா அடிக்கடி என்னைப்பற்றிச் சொல்வாள், 'உறங்கினால் நீ ஜகடி முண்டம்'. (ஜகடி முண்டம் என்றால் முண்டமான பேய். உடல் முழுதும் தீப்பற்றி எரிய, தெருவில் கிழக்கும் மேற்கும் உருளுமாம்) அதனால் எந்தப் பக்கம் படுத்தாலும் அநேக நேரங்களில் வாசல் நேராகவே என் காலை புலரும். சில சமயம் ஒழுங்காக அடைபடாத கதவு பாதியளவு திறந்து விடுவதால் காலையிலேயே எனக்கும், ம்மாவிற்கும் வாக்குவாதம் நடக்கும்.

அன்றும் அப்படித் திறந்து போட்டுப் போனதும் இரண்டு முறை ம்மாவை அழைத்தேன். ம்மா வாசலில் இல்லையென்று தெரிந்தது. மெல்ல எழுந்தேன். கதவடைக்க வரும் பொழுது தெருவைப் பார்த்தேன். வெளியே தூவானம்! மழை காரணமாக மூன்று நாட்களுக்குப் பள்ளிக்கூடமும், மதரஸாவும் 'லீவு' விட்டிருந்தார்கள். மேற்கு வானெல்லாம் பீடிப் புகை மண்டியது போலாக ஆங்காங்கே கருப்பாய் குழுமியிருந்தது. சூட்டைத் தணிப்பதல்ல, அதிகாலை பெய்யும் மழைக்கு மண்ணை சந்தித்தல் மட்டுமே பணி. வழியிலேயே சூரியனைச் சிறை பிடித்து விடும் மேகங்கள் மழையையும், நிலத்தையும் தனியாகச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து உபகாரம் செய்கின்றன.

எதிர் வீட்டு ஹாஜா வாப்பாவும், என் சேக்காளி மம்மதும் வாசலில் நின்று கிழக்கே பார்த்து என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல மம்மதும் பனியனுடன் வெளியே நின்றிருந்தான். சூர்யோதயமே காணாத இவன் வந்து நிற்பதில் ஏதோ சம்பவம்தான் என்று யோசித்துக் கொண்டே நானும் வாசலில் வந்து கிழக்கே பார்த்தேன். கீழக் கடைசி வீட்டு செய்யதலி பாத்திமா ம்மா வீட்டின் முன், பெண்கள் கூட்டம் கூடி நின்றது. ஐஸாம்மாவும் அங்கேதான் நின்றாள். எங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டியைக் காக்கா ஒன்றிரண்டு முறை கிளறிவிட்டு மீன் கழிவு சுற்றி வைத்த 'பாலித்தீன்' உறையைத் தூக்கிக் கொண்டு சற்று தூரமாகப் போய் பிரித்துக் கொண்டிருந்தது. அது கிளறிவிட்டுப் போனதால் தெரு முழுக்க இலேசாக மீன் நாற்றம் வீசியது. மழையில் நனைந்த சில காக்கைகள், கரண்ட் கம்பிக்கு மேல் நின்று கூர் அலகினால் தத்தமது உடலை சிக் எடுத்துக் கொண்டிருந்தன.

ஐஸாம்மாவை பார்த்துவிட்டுத் திரும்பும் போது மம்மதிடம், “என்ன?” என்று கேட்டேன்.

"தெரியல! சத்தமா கிடக்குன்னு வந்தேன். வாப்பா! என்னப்பா?” என்றான்.

"தண்டவாளத்துல யாரோ ஆக்சிடெண்ட் ஆகிட்டாங்களாம்” என்று ஹாஜா வாப்பா சொன்னார்.

"மச்சான்! வரியா? போய் பாத்துட்டு வரலாமா?” என்று அவன் என்னிடம் கேட்டான்.

மம்மதைப் பார்த்து "என்னத்துக்குல அங்க? இப்போ போலீஸ் வருவான். பேசாம போய் படு” என்று அதட்டி விட்டார் ஹாஜா வாப்பா.

நான் வேகமாக சட்டையைப் போட்டுவிட்டு கிழக்கே தண்டவாளம் நோக்கிச் சென்றேன். மேற்கு நோக்கி வந்த ஐஸாம்மா 'மழைத்துளி விழுது வீட்டுக்குப் போ!' என்று என்னை விரட்டி விட்டாள். நான் போவதைப் பார்த்து மம்மதும் செருப்பைப் போட்டுவிட்டு சட்டையைப் பூட்டியவாறு, எனக்குப் பின்னால் தொங்கோட்டமாய் ஓடி வந்தான். அவன் வாப்பா சத்தம் கொடுத்ததை இரண்டு பேருமே காதில் வாங்கவில்லை. ஐஸாம்மா என்னோடு சேர்த்து, அவனையும் வீட்டுக்குப் போகச் சொல்லி விரட்டியதும் "மேல ஏற மாட்டோம் ஐஸாம்மா, இங்கே நின்னு பாத்துட்டு வந்துடறோம்” என்று எனக்கும் சேர்த்து சிபாரிசு செய்தான். ஐஸாம்மா வாசலுக்குப் போனதால் இனி நாங்கள் கண் பார்வைக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஏனெனில், கடையநல்லூர் தெருக்களின் கட்டிட அமைப்பே வித்தியாசமானது. ரயில் பெட்டியைச் செங்குத்து வரிசையில் அடுக்கி வைத்தார் போல், ஒன்றுக்கொன்று பொதுச்சுவர் கொண்டு அமையப் பெற்றிருக்கும். தெருவின் முனை மேற்கே மெயின் ரோட்டில் தொடங்கி, கிழக்கே தண்டவாளத்தருகே முற்றுப்பெறும். முன்பெல்லாம் மேற்குத் தெருவில் நின்று கொண்டு கிழக்கே பார்த்தால் ரயிலைக் காண முடியும். ஆனால் இப்பொழுது எல்லா வீட்டின் வாசலையும் இஷ்டம் போலத் தெருவுக்குள் கொண்டு வந்து பாதையை ஆக்கிரமிப்பு செய்தபடியால் கிழக்கு நோக்கி வர வர வீட்டின் வாசற்படிகள் வரிசையில் இருக்காது. அதனால் ரயில் பார்க்கும் கொடுப்பினையெல்லாம் மேற்குத் தெரு அப்பா புள்ளைகளுக்கு (குழந்தைகள்) வாய்த்து விடவில்லை.

நானும், மம்மதும் தண்டவாளம் மேலேறினோம். பருத்த மழைத் துளி ஒன்று என் உச்சந்தலையில் பட்டு விரிகையில் நாங்கள் நடக்கத் தொடங்கி இருந்தோம். குளிரும், மண் சுகந்தமும் சேர்ந்து தண்டவாளமெங்கும் ஈரப்பசை. திடீரென எங்கிருந்தோ வந்த 'உஹ்ப்' என்ற வாடைக் காற்று என் உடம்பிற்குள் ஊடுருவி மறுபக்கம் வெளியேறிப் போனது. தண்டவாள ஜல்லிகளுக்கிடையே இரண்டு மூக்குத்திச் செடிகள் காற்றுக்கு இசைந்தாடிய வண்ணம் ஆடிக் கொண்டிருந்தன. தெருக்களையெல்லாம் தாண்டி 'ஐஸ் வாட்டர்' கிணற்றுக்குப் பக்கத்தில் இருக்கும் தென்னந்தோப்பருகே அந்தச் சம்பவம் நடந்துள்ளதைக் கண்டு கொண்டோம். செல்ல வேண்டிய இடம் தூரம்தான். தண்டவாளத்தின் மேலும் கீழும் மக்கள் கூட்டம் கணிசமாய் தென்பட்டது. பக்கத்துத் தெருக்காரர்கள் சிலர் விபத்துக்குள்ளான உடலைப் பார்த்து விட்டு தண்டவாளத்திலிருந்து கீழிறங்கிப் போனது தெரிந்தது. எங்கள் தெருக்காரர்கள் சிலர் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். 'மழை கூடும் முன் பார்த்து விட்டு வரலாம்' என்று மம்மது ஓட்டம் எடுத்தான்.

சகதி கலந்த எங்களின் செருப்புக்கால் மிதிப்பட்டு தண்டவாளக் கற்கள் புரள ‘சலுப்! சலுப்!' என்று இருவரும் ஓடினோம். ஐஸ் வாட்டர் கிணற்றை நெருங்கும் பொழுது “நீ என்னல இங்க வந்த?” என்று என் சாச்சா முறைப்புடன் கேட்டார். சர்க்கார் கேட்டுக் கொண்டதால் அவரும், அவர் சேக்காளி ஆட்டோ பஷீரும் விபத்து விஷயமாகக் குறுக்கு விசாரணை நடத்த வந்திருந்தார்கள்.

"சும்மா பாத்துட்டு போலாம்னு..” என அவரை விட்டு விலகினேன்.

என்னை நெருங்கி லாவகமாய் வந்தவர் நாக்கைத் துருத்தியவாறு, "வேணாம் வா! QUIT!.. அது ரொம்ப அசிங்கமா கிடக்கு” என்று சொல்லிக் கொண்டே என் கையை இழுத்துக் கொண்டு நடக்கலானார். அவரின் பிடியை விட்டு நழுவி விடுவேன் என்பதால், பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கும் குழந்தையை இழுப்பது போல் என் தோள் புஜங்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டார். மழை பெய்யத் தொடங்கியதால் கூட்டம் கொஞ்சம் விலகியது. சாச்சாவோடு நடந்து கொண்டே நான் திரும்பிப் பார்க்கும் பொழுது யாரோ ஒருவன் தண்டவாளத்தின் நடுவே கேட்பாரற்றுக் கிடந்தான். ஓர் உருவம் அதை நோக்கி ஆவேசமாய் ஓடியது.

ஆமாம்!... மம்மது அவனை நெருங்கிப் போய்விட்டான். 

"போலீஸ் வருவான். மேல போகக் கூடாது. இங்க நின்னு பார்” என்று என்னைக் கடைசி வீட்டு செய்யதலி பாத்திமாம்மா வாசலில் நிற்கச் சொல்லிவிட்டு சாச்சா கடந்து போனார். மாவடிக்கால் சாலை வழியே 'ஆம்புலன்ஸ்' வந்து நின்றது. உள்ளிருந்து இறங்கிய இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தண்டவாளம் வழியாக மட்டுமே அங்குப் போக முடியும் என்பதால் உடலை எப்படித் தூக்கிக் கொண்டு போகப் போகிறார்கள் என்று பார்க்கக் கூட்டம் கூடி நின்றது.

தூரலில் நனைந்தவாக்கில் மம்மது அங்கிருந்து ஓடி வந்தான்.

“என்னல?.. பாத்துட்டியா?” என்றேன்.

நான் அப்படிக் கேட்கும் பொழுது ரயில்வே கேட்டுக்கு அருகே இருந்து இரண்டு போலீஸ்காரர்கள்' சிரித்துப் பேசிக் கொண்டே வந்தார்கள். இன்னும் இருவர் அவர்களுக்குப்

பின்னால் ‘ஸ்ட்ரச்சரை' தூக்கிக் கொண்டு தண்டவாளம் மேல் ஓடி வந்தார்கள்.

"ச்ச்ச! உவ்வேக்! தலையே இல்லல. அடிச்ச அடியில தூக்கி வீசி ரயில் அவன் மேல ஏறிப் போயிருக்கு. கால்ல உள்ள சதை இவ்ளோக்கும் தண்டவாளத்துல பிஞ்சி கிடக்குது. மூளையும், கண்ணும் தனியா கிடக்கு. உவ்வேக்! வாந்தி வந்துட்டுன்னு ஓடி வந்துட்டேன்... நல்ல வேளைக்கு நீ பாக்கல...”

இதை அவன் சொல்லும் பொழுது சில பெண்கள் கூட்டமும் அதைக் கேட்டு,  ‘ஷூ!' 'இப்படியா சாவு வரணும்?'

'அய்யோ! எவனாவது வெளியூர்காரனா இருக்குமோ?'

'காது கேக்காத கிழவன் இருப்பானே மாமி.. அவனா இருக்கலாமா?' என ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். 

மழை இன்னும் வேகம் காட்டியது. உடலை எடுக்கப் போன இருவரும், அதனைச் சுமந்து குலுங்கிக் குலுங்கி ஓடி வந்தார்கள். வெள்ளைத் துணி கொண்டு மூடிய உடலை ரயில்வே கேட்டருகே நின்ற ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். உடல் எங்களைத் தாண்டிப் போகும் பொழுது அது எங்களை அமைதி பேணும்படி கேட்டுக் கொண்டது. அதனால் சடுதியில் எல்லாருமே அமைதியாகினோம். அக்கணம் ஓடும் இருவரால் கற்களின் சலசலப்பு மட்டுமே கேட்டது. பின்னும் சற்று நேரம் வரைக்குமே அதே நிசப்தம். மழையோடு நாங்கள் எல்லோரும் கலைந்து போனோம். 

இரண்டாம் நாள் காலையில்தான் அவன் யாரென்றே அடையாளம் கண்டுபிடித்தார்கள். 'முட்டை வியாபாரியின் மகன் பரிதாபச் சாவு' என்று சார்வாள் வீட்டுக்கு வந்த பேப்பரில் செய்தி இருந்ததாக மம்மதின் வாப்பா சொன்னார். நானும், மம்மதும் போய் பேப்பரைப் பார்த்தோம். அவன் இருபத்தெட்டு வயதைச் சார்ந்தவன் என்றும் அவனின் புகைப்படமும், அதற்குக் கீழே பெரிதாகத் தண்டவாளத்தில் துணியால் மூடிய நிலையில் அவன் உடலும் ஒட்டப்பட்டிருந்தன. காதல் தோல்வியில் தற்கொலை என்று யூகிப்பதாகவும், காவல்துறை விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்தி முடிவு பெற்றிருந்தது. 

ஒரு வாரமும் அவன் ரயிலில் விழுந்து செத்துப் போன கதைதான் எல்லாத் தெருவிலும் ஓடியது. வட்டாரத்துப் பெண்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் மச்சான்களோடு பேச இதுவும் பேசு பொருளானது. செய்யதலி பாத்திமா ம்மா அவனை ஒருநாள் முன்பே தண்டவாளத்தில் வைத்துப் பார்த்ததாகவும், தன் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்ததாகவும் சொன்னாள்.

‘ஏம்லா நிறுத்திட்ட? இரண்டு நாள் தங்கிட்டு கறி சாப்பிட்டுப் போனாம்னும் சொல்லு... உன்ன எவன் கேப்பான்?’ என நல்லம்மா எல்லோரின் பேச்சுக்கும் கேலி செய்தாள். 

அந்த இடத்தைத் தாண்டிப் போனால் மட்டுமே எங்கள் கிரிக்கெட் கிரவுண்டை அடைய முடியும். அப்படி அதனைக் கடந்து போகும் போதெல்லாம் மம்மது சிறிய மரக்குச்சியை எடுத்து வைத்து, 'இங்குதான் உடம்பு கிடந்தது.... இங்குதான் மூளை. இங்குதான் கால்' என்று அடி அங்குலம் மாறாமல் ஆக்சிடண்ட்டைப் பார்க்காத சேக்காளிமார்களுக்கு விளக்கிக் காண்பிப்பான். ஓரிரு நாட்களுக்குப் பின் நடந்ததையெல்லாம் மறந்து விட்டு வழக்கமான இடம் போலாக அங்கே வந்து போய்க் கொள்வோம். எப்போதும் போல் மழையும், ரயிலும் வந்து போய்க் கொண்டிருந்தது.

*

Thanks to IQRA Publication & Asif Meeran




Wednesday, April 10, 2024

ஓணான் மார்க்கம் (சிறுகதை) - ஆபிதீன்


கைலிக்குள் இருந்த பழைய கதை இது! ஆமாம், நிஜமாகவே பீரோவிலிருந்த கைலிகளுக்குள் எப்படியோ புகுந்திருந்தது. தன்னைப் பற்றிய கதை என்று தெரிந்துகொண்டு சரியான இடத்தில் மறைந்துகொண்ட அதன் புத்திசாலித்தனத்தை என்னென்பது! 

நேற்று அதை உருவும்போது, ’உருப்படாத கதை’ என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் தூக்கியெறிந்து இலக்கியத்தை நிலைநாட்டிய கவிஞர் ஒருவரின் நினைப்பும் வந்தது. நல்ல மனுசன். மவுத்தாகிவிட்டார். 

'கொஞ்சம் மாத்துனா ஓரளவு தேறும்’ என்று அவர் சொன்ன யோசனையை முடிந்தால் பிறகு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ். நல்லவேளையாக எழுதிய என் பெயர் அப்படியே இருக்கட்டும் என்றார். அல்ஹம்துலில்லாஹ். ஏனெனில், சும்மா தமாஷாக பேசிக்கொண்டிருந்தாலே நம் அனுபவம் இன்னொருவரின் பெயரில் அடுத்த நாள் வந்துவிடுகிறது.

சரி, கதையின் தலைப்பு : ஓணான் மார்க்கம்

இனி படிக்கலாம்.
***
X வடிவத்தில் இருக்கும் 'ரொஹையான் கட்டை' மாதிரி யஹ்யா மரைக்காயரின் கைகள் பின்னியிருந்தன. தாடை , மேல் விரியும் புள்ளியில் கவலையோடு உட்கார்ந்திருந்தது. முழங்கை மூட்டுக்கள் கணக்குப்பிள்ளை மேஜை போல இருக்கும் ’கல்லா’வில் ஊன்றியிருக்க, கடைத் தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார் அவர் . 

வெயிலை மறைக்கப் போட்டிருந்த மரப்புதான் அசைந்து கொண்டிருந்தது.
 
ஒரு ’கைநேஞ்சி’ கூட விற்றபாடில்லை. 'ஓணான் மார்க்' என்கிற பெயரே சரியில்லையே முதலில். சாயம் போகாதது -அல்லது - போனாலும் அடுத்த வண்ணம் வந்துவிடும் என்பதை symbolicஆக உணர்த்தத்தான் அந்த ஓணான் என்று மரைக்காயர் சொன்னார் எல்லோரிடமும். அது பச்சோந்தியல்லவா என்று கடைத்தெருவில் கேட்டபோதுதான் அவருக்குத் தன் தவறு புரிந்தது. ஆனால் அதற்குள்ளாக 'ச்சாப்பு' குத்தப்பட்டு  லேபிளும் ஒட்டப்பட்ட கைலி பண்டல்கள் வந்து இறங்கி விட்டன. உருவம் கூடுமா கூடாதா எனும் வாதங்களுக்கு காது கொடுக்காமல் 'விசில் மார்க்' லேபிள்களுக்கு தன்னுடைய ஓணான் எவ்வளவோ பரவாயில்லை என்று மரைக்காயர் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார். உண்மைதான். விசில், silhouetteல் இருக்கும்போது அசப்பில் அது தரும் உருவமும் உணர்வுமே வேறு...! வட நாட்டில் எங்கோ ஒரு கோசா (அலி) கூட  தான் விரும்பிப் பெற்ற அந்த சின்னத்தில் தேர்தலில் நின்று ஜெயித்தாள்/ர். மத்திய மந்திரியாகவும் ஆகியிருக்கக் கூடும்.

இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கடை போர்டு கூட ரெடியாகி விட்டது. விலை உயர்ந்த பிளாஸ்டிக் சைன் போர்டு அல்லதான். ஆனால் அதை விடப் பளபளப்பாக மிட்டாய் ரோஸ் கலரில் ஆர்டிஸ்ட் சையதுவாப்பா செய்து கொடுத்த தகர போர்டு. ஓணான் ஒன்பது கலரில் இருந்தது - வரைந்தவனுக்கு காசு கேட்டுக் கொண்டு.

'வுடு! எனக்கு கிடைக்கிம்டு இருந்தா நான் பண்டி பிராண்ட் போட்டு வித்தாலும் பறந்து போயிடும்' என்றார் மரைக்காயர். 

'அதுக்கு பண்டியையே வித்துக்கிட்டு இருக்க வேண்டியதுதானெ..பஜார்லே வந்து ஏன் நாத்தம் பண்ணிக்கிட்டு இரிக்கனும்? இந்தோ இக்கிது பள்ளிவாசல். அதுக்கு போவாம கடை முன்னாலேயே ஒண்ணுக்கு இருந்தா எவனாவது வருவானா வாங்க , அட, பார்க்க?' என்றார்கள் பாவா பஜாரில்.

அதற்குத்தான் அ·ப்ஜலை வேலைக்கு வைத்திருக்கிறாரே மரைக்காயர்! labelஇல் உள்ள ஓணானையும் மரைக்காரரின் ஓணானையும் அவன் ஒப்பிட்டு நோக்க ஒரு அரிய வாய்ப்பு.

அதையாவது பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் அந்த குடலைப் பிடுங்கும் மூத்திர நாற்றம்... அ·ப்ஜலுக்கு அது கொடுமையாக இருந்தது. ஏதோ பெரிய வியாதி பிடித்த உடம்பிலிருந்து வெளியாகும் மூத்திரத்தின் நாற்றம்...

வேறு கடையில் வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால் 'சொல்லு கேக்காத புள்ளெ' என்றுஅவன் உம்மாவுக்கு கோபம் வருகிறது. மரைக்காயர் அவன் வாப்பாவுக்கு தூரத்து சொந்தக்காரராம். 'என்னா ஒரு ஓணான் தாண்டுற அளவுக்கு தூரம் இக்கிமா?' என்று அ·ப்ஜல் வெடைத்தான். கோலாலம்பூரில் உள்ள அவன் வாப்பாவுக்கு கேட்டு விட்டது!

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு எல்லா நல்ல முஸ்லீம் பிள்ளைகளையும் போல அ·ப்ஜல் அரபு நாடு போவதற்காக காத்துக் கொண்டிருக்கும்போது அவன் வாப்பாவின் தற்காலிக முடிவு , சம்பளம் சரியாகக் கொடுக்கும் மரைக்காயரின் கைலிக் கடல். 

நாளுக்கு ஒன்றாய் கைலிக் கடைகள் நாவூரில் முளைக்கின்றன. கைலி மலைகளின் நடுவே ஊர் கணவாய் போல ஓடுகிறது என்று சொல்லலாம். சென்னையில் உள்ள பெரும்பெரும் கைலிக் கம்பெனிகளுக்கு ஏஜெண்டாக மாறிக் கொண்டு கண்ணை அள்ளும் வண்ணத்திலும் டிசைனிலும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கம்பெனி சின்னங்கள் கவர்ச்சிகரமாக இருந்தால் கைலிகளில் பெயர்களோ நேற்றுதான் seal உடைக்கப்பட்ட நடிகைகளின் பெயர்களில் மனதை அள்ளுகின்றன. அல்லது லேட்டஸ்ட் ஹிட் படங்களில் பெயர்கள். கம்பெனி பெயருக்கு ஒன்றும் கைலி பெயருக்கு ஒன்றுமாக ஜனங்கள் வாங்குகிறார்கள். ஒன்று இடுப்புக்கு கீழும் மற்றொன்று இடுப்புக்கு மேலுமாக இருக்கலாம். வெறும் கைலிகள் மட்டுமின்றி பனியன்கள் , ஜட்டிகள் , பெண்களுக்கான பத்தாய் கைலிகளும் வேறு... கூட்டம் நிரம்பி வழிகிறது அந்தக் கடைகளில்.

மரைக்காயரோ  விலை மலிவு என்று எங்கிருந்தோ மெஷின் தறியிலிருந்து வாங்கிவந்து கைலிக்குள் ஓணானை விடுகிறார். வியாபார மூளையாம். ஆமாம், ஓணானுக்கு மூளை இருக்கிறதா? 'ஓணானை அடித்தால் ஒன்பது நன்மை' என்று பையன்கள் சொல்வது அதற்குத் தெரியுமா ?

'அது எப்படிங்கனி அறுவதுக்கு நாப்பதும் எம்பதுக்கு எம்பதும் இருவதுக்கு இருவது மாதிரியே இக்கிது?!' என்று மரைக்காயரின் நண்பர் கேட்டார் . 'பாயடி'யும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்த அ·ப்ஜல் , மரைக்காயரின் கோபத்தைப் பார்த்து அடக்கிக் கொண்டான்.

மரைக்காயர், 'என்னட size சரியா இக்கிம்ங்கனி!' என்றார்.

'உம்மட size ஆ? 'உமர் ஹத்தாப்’ட மாதிரிலெ ஒன்றரை முழம் இக்கிம்!'

நண்பரின் கேலியை மரைக்காயர் பொருட்படுத்தவில்லை. ' XXX787 கம்பெனியை அடிக்க முடியாது' என்று சொன்ன நண்பரின் மூக்கை அறுக்க XXX787 கடையெலேர்ந்து ஒரு 54 இஞ்ச் ஒண்ணு எடுத்து வா தம்பி' என்றார் மரைக்காயர். எடுத்து வந்து ஓணான் மார்க்கோடு அளந்ததில் ஒணானின் நீளம் அதிகமாக இருந்தது. 'இல்லே... அதுக்குப் போட்டியா இக்கிற XXX785தான் சரியா இக்கிம் ' என்றார் நண்பர் விட்டுக் கொடுக்காமல் . 'அப்போ XXX785 லெ ஒண்ணு எடுத்து வா' என்றார் மரைக்காயர். அதுவும் ஓணானை விட கம்மிதான்!

நண்பருக்கு அவமானமாகப் போய்விட்டது. 'சரிதான் ரெண்டு பேருமே ஒரு சாமானுக்கு பொறந்தவனுவதானே' என்றார்.

மரைக்காயருக்கு எதையோ நிரூபித்து விட்ட திருப்தி! அவரது கைலி ஓணானுக்குப் பிறந்ததாக்கும்..

திருப்தி , எதையாவது விற்று கிடைப்பதில் வரும் லாபத்தில் அல்லவா வர வேண்டும் ? 

அ·ப்ஜலுக்கு முன்னால் கால்மாட்டு சந்திலிருந்து ஒரு சின்ன பையன் வேலைக்கு வந்தான். கடை ஆரம்பித்த புதிது. கடை ஆரம்பிக்கவே ஒரு வருடம் ஆகியிருக்கிறது. மரைக்காயர் இலேசில் யாராலும் அணுக முடியாத மனாம் சாபுவை  அணுகி , கடை திறக்கச் சொல்லும் உத்தரவு வரும் கனவுக்காக அலைந்து , கடைசியில் மனாம்சாபுவுக்கு அந்த கனவு வந்ததும்தான் கடையைத் திறந்தார். மனாம்சாபுவுக்கு உத்தரவு கொடுத்தது கூட ஓணாணாகத்தான் இருக்கும். கனவின் மூலமாக மனாம்சாபு கைலியையும் விற்க முடியுமா? அதை மரைக்காயர்தான் செய்ய வேண்டும்.

மரைக்காயர் கைலி விற்க வேண்டும் என்று கடையில் உட்காராமல் தர்காவில் உட்கார்ந்தார் நேர்ந்து கொண்டு!

அவ்வப்போது கடைக்கு வந்து பையனிடம் விசாரணை: 'என்னாங்கனி .. ஏதாவது வித்தியுமா?'

'இல்லே மாமா'

'ஹைர் !.. நடக்கும்; பாவா நடத்திக் காட்டுவாஹா!'

பத்து நாளைக்குப் பிறகு நடந்தது. 

பையன் இரண்டு ரூபாய்க்கு 'போனி’ பண்ணியிருந்தான்! அது கடை சாமானல்ல. பக்கத்து சிங்கப்பூர்க் கடை ஆள் , விற்ற பிறகு காசு தரச் சொல்லியிருக்கும் சின்னப் பிள்ளைகள் ஜட்டி. made as china ! . இதில் மரைக்காயருக்கு பாதி லாபம் இருக்கிறது என்றாலும் பக்கத்து கடைக்காரனின் வியாபார சாமர்த்தியத்தை அவரும் காட்டியிருந்தால் இடம் மாறிய சந்தோஷத்திலாவது ஓணான் ஒன்று விற்றுப் போயிருக்கும். சாமர்த்தியம் சுத்தமாகக் கிடையாது மரைக்காயருக்கு. இருந்திருந்தால் மற்ற கடைக்காரர்கள் செய்வது மாதிரி  கூரையை கடைத்தெரு பாதிவரை இழுத்து கைலிகளை தொங்கவிட்டு , கூரை நிழலின் சுகத்துக்காக ஏங்கும் டைல்ஸ் தரையும் போட்டிருப்பாரே ! எப்படியோ அவர் கல்லாவும் காசை பார்த்து விட்டது.

மரைக்காயருக்கு சந்தோசம். அதிர்ஷ்டத்தை வாங்கும் தகுதி நமக்கு இருக்கிறதா இல்லையா  என்று check பண்ணிக் கொண்டுதான் அதிர்ஷ்டம் வரும். இப்போது மரைக்காயருக்கு தகுதி வந்து விட்டது. இனிமேல் கடைக்கு முன் தேங்கியுள்ள மூத்திரக் குட்டை ஓடி மறைகிற மாதிரி ஒரு பெரிய மழை வரத்தான் போகிறது.

கல்லாவில் முதன் முதலாக காசை பார்த்து சந்தோஷத்தில் 'என்னடா வித்தே..?' என்றார் பையனிடம் செல்லமாக. கெட்டிக்கார பையன். ஆனால் அநியாய மறதி. 

'ம்..ம்... ஒண்ணு வித்தேன் மாமா..' என்றான்.

'அதுதான் எதுண்டு கேக்குறேன்'

'இல்லே மாமா...ஒரு பொம்பளை வந்தாஹா.. 'பாபா செட்' இக்கிதாண்டு கேட்டாஹா.. இல்லேண்டேன்.. அப்புறம் வெறெ என்னமோ ஒண்ணு கேட்டாஹா. அதை வித்தேன். அது.. அது...'

'பரவாயில்லே.. ரெண்டு ரூவாயா இந்தாலும் கணக்குலே எளுதனும்லே நான்?. இப்படி இஞ்சிப் பேயன் மாதிரி இரிக்கக் கூடாது. யோசிச்சி வை. நான் தொழுவிட்டு வந்துடுறேன்..'

அசருக்கு போன மரைக்காயர் இஷாவையெல்லாம் முடித்து விட்டு கடை கட்டுகிற நேரத்தில் வந்து சேர்ந்தார். பையனிடம் கேட்டார் : 'நினைப்புக்கு வந்திச்சிலே ? சொல்லு..என்ன வித்தா ?'

'ஒண்ணு வித்தேன் மாமா ரெண்டு ரூவாய்க்கி. அது.. அது என்னாண்டுதான்..' - பையன் இழுத்தான் எச்சிலை விழுங்கிக் கொண்டே.

'செல்லக்கனி சாபுட்டெ கணக்கு போட்டு பாக்கனுமோ?'

'இல்லே மாமா..ஒண்ணு வித்...'

'சரி ! நீ எழுது. நான் சொல்றேன் என்னா சாமாண்டு..' - கணக்கு புத்தகத்தைத் தூக்கி பையன் முன் போட்டார் மரைக்காயர்.

'ம்... எழுது... உம்மாட பப்பான் - ரெண்டு ரூவா!'

பையன் எப்படி இருப்பான் ?

அப்படி ஏதாவது ஏடாகூடாமாக சொல்லி விடுவாரோ என்று அ·ப்ஜலுக்கும் பயமாக இருந்தது. தவிர எதையாவது விற்றால் அல்லவா சம்பளம் கொடுப்பார்? அல்லது கைலி ஒன்றை சம்பளமாகக் கொடுத்து விடுவாரா?
 கடை இந்த வள்ளலில் இருக்கும்போது அ·ப்ஜலின் புரட்சிக்கார சென்னை நண்பன் ஒரு நாள் வந்தான். மரைக்காயர் , ஒரு பார்வைக்கு வேலைக்காரன் மாதிரிதான் இருப்பார். அதற்காக தன் நண்பனுடன் உட்கார்ந்திருப்பவர் யார், என்ன என்று கூட யோசிக்காமலா கணேஷ் பேசுவது?

'திருடனும் ! நாம எடுக்கப் போற art filmக்கு இந்த கடையிலிருந்து வர்ற சம்பளம் மட்டும் சரி வராது.  தெரியுமா, மெஸ்னியாவ்ஸ்யாகி கூட கேமராவை திருடித்தான்டா படம் எடுத்தான்..'

கெடுத்தானே பாவி!

மரைக்காயரின் முகம் மூத்திரம் குடித்த ஓணான் மாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சந்தோசம் இருக்கும் என்பது அ·ப்ஜலின் அனுமானம். ஏதோ ஒன்று கடையில் இருக்கப் போய்தானே திருடச் சொல்கிறான் ?

ஒரு சல்லி கூட விற்காத கடையில் ஓணானைத்தான் திருட வேண்டும் - 'அல்லாஹும்ம சல்லி வ சல்லி' என்று சொல்லிக் கொண்டு. 
ஒரே ஒரு முறை கைலி விற்றதுதான். ஆனால் காசு வரவில்லை. வீட்டிலிருந்து கொண்டு அனுப்பச் சொன்னார் ஒரு மேலத்தெரு காக்கா. அவர் ·போனில் சொன்னபடியே ஒரு ரெட்டை மூட்டுக் கைலியை , கடனுக்கு தைத்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அ·ப்ஜல் காசுக்கு நின்றான். 'நாளைக்கி கடைத்தெரு வரும்போது 'பச்சை' (டாலர்)ஐ மாத்தி தரேங்கனி... யஹ்யாட்டெ சொல்லும்..' என்றார் அவர். அடுத்த நாள் அவருடைய மைய்யத்துதான் 'கலிமா..ஷஹாதா.!' என்று மூமின் certificate வாங்கியபடி பஜாரில் கடந்து போனது. போனது எளிமையான 'சந்துக்'. மரப்பெட்டி அல்ல. டாலர் இன்னும் மாற்றப் படவில்லை போலும்...

விற்ற ஒரே கைலிக்கும் காசு கிடைக்காத வருத்தத்தை விட 'ஓணானைக் கட்டியதால்தான் அவர் மெளத்..' என்று XXX785 கைலி கடைக்காரன் கிளப்பிய பிஸாது யஹ்யா மரைக்காயரை ரொம்பவும் பாதித்தது. 'எந்த நேரத்துலே இதை சொல்றான் பாரு...! ஒரு தொழுவாளியெ மனம் கசங்க வைச்சவனை அல்லாஹ் சும்மா வுட மாட்டான்.. பாத்துக்கிட்டே இரு..' என்றார் அ·ப்ஜலிடம். பிஸாதை மாற்ற ,  மெளத்தானவர் எப்போதும் ஓணானைத்தான் கட்டுவார் பிரியமாக என்று சலாம் கொடுக்க வந்த அத்தனை பேரிடமும் சொல்லிக் மரைக்காயர் புலம்பிக் கொண்டிருந்தில் வேறு எல்லோருக்கும் தெரிந்து போனது !

அன்றிலிருந்து வாடிக்கையாளின் வருகைக்காக மரைக்காயரின் முகம் வானத்தை வானத்தைப் பார்த்துக் கொண்டு ஓணான் போலவே இருந்தது.  நாக்கு திடீரெரென்று நீண்டு ஒருநாள் கிராக்கியைப் பிடித்தே விட்டது - தெரிந்த ஒரு சாபு மூலம். ஜியாரத்திற்கு வந்த பாம்பேகாரன். 'க்யா தாம் ஹே?' என்று கேட்டான் ஒரு கைலியைப் பார்த்து. 'தாம்' (dhaam) என்றால் விலை என்று சாபுக்கு தெரியவில்லை. அவருக்குத் தெரிந்தது அடுத்து கிராக்கியை முடி இறக்கக் கூட்டிக் கொண்டு போவதுதான். அ·ப்ஜலுக்கும் தெரியவில்லை. செளதி போகும் ஏற்பாட்டிற்காக பாம்பே சென்று திரும்பி வரும்போது ரயிலில் ஒரு கிழவி அவனிடம் கேட்டாள். 'பாம்பே கயா?'. அர்த்தம் தெரியாமல் பேமுழி முழித்துக் கொண்டு காது செவிடானவன் போல நடித்தவன் அவன். 'தாம்' தெரியுமா இப்போது ? மரைக்காயர்தான் உதவிக்கு வந்தார். கைலி பாஷையில் 'டாம்' என்றால் கட்டம் என்று அர்த்தம். ஹ, இது தெரியாதா அவருக்கு?

'யே படா படா டாம் ஹை !'.

பாம்பேகாரன் ஏற இறங்க அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு ஓடினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

மரைக்காயரின் சோகத்தைப் போக்க அவர் வீட்டு மனுஷர்கள் கைலி வாங்கினால்தான் உண்டு. ஆனால் அவர் வீட்டுப் பெண்களோ 'கைலிண்டா ஒரு ’ஜீமத்’ இக்கெ வாணாம்? இஹல்ட்டெ கைலி வாங்கி உடுத்துனா பேண்டவன் கூட எந்திரிக்க மாட்டான் பாத்து!' என்கிறார்கள். பேலுபவன் முன்னால் இவர்கள் ஏன் போக வேண்டும் ? 

நம் மதிப்பு நமக்கு எப்போதுமே தெரிவதில்லை. மனசெல்லாம் வெளியில்தான் பெருமை காண்கிறது. 

மனாம் சாபுக்கும் இந்த கதிதான். வெளியூர் ஜனங்கள் அவர் கனவு கண்டு சொல்லும் உத்தரவுக்காக மண்டுகிறார்கள். ஆனால் அவர் வீட்டு பெண்களோ தன் வீட்டு பையன் அரபுநாடு போவானா என்று கணக்கு போட்டுப் பார்க்க குஞ்சுக்கொல்லை ஹஜ்ரத்தைப் பார்க்கப் போகிறார்கள் . சமயத்தில் அரபுநாடே போய் விடுகிறார்கள்!

உள்ளூர் என்றாலே உதவாதது என்று பார்த்தால் வெளியூர் ஆட்கள் வந்து நாவூர் ஓணானைப் பிடித்துக் கொண்டு போக வேண்டுமே.. ஏன் வாங்கவில்லை? எப்படிப் பார்த்தாலும் கைலி டிசைன்கள் நாவூரில் கிடைப்பதுபோல அவர்கள் ஊரில் கிடைக்குமா? ஒவ்வொரு வருடமும் கைலிகளுக்கு புது டிசைன் அறிமுகப்படுத்துவதே நாவூர் கந்தூரியில்தானே.. என்னென்ன வகை கட்டங்கள்..! சட்டைத் துணியாகக் கூட உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் மரைக்காயரோ புதுமை என்று 'கம்பம்' இல்லாத கைலிகளை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறார். ' கைலிட பின்பக்கம்டு தெரிய ஒரு டிசைனா ? அட..போங்கப்பா' என்கிறார் பெருமை வழிய.

'இது என்ன பெரிய நூதனமா ?' என்று பஜாரில் கேட்டார்கள். அவர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. பட்டுப் புடவைகளுக்கு வருகிற மாதிரி அடியில் பார்டர் போட்டெல்லாம் புதுமைகள் வருகிறபோது மரைக்காயரின் புதுமை தூசு அல்லவா?

'அப்ப முன்னாலேயும் பின்னாலேயும் ஒட்டை போட்டுத்தான் விக்கெனும்..' என்றார் மரைக்காயர்.

நினைத்துப் பார்த்தாலே சிரிப்பாக இருந்தது அ·ப்ஜலுக்கு. 'இவர்களுக்கு மட்டும் தடை இல்லை என்றால்..' என்று டி.வியில் இரட்டைத்தொப்பி மார்க் கைலி விளம்பரம் வரும். வக்கீல், டிரா·பிக் போலீஸ், டாக்டர் எல்லோரும் கைலிகளோடுதான் அலைவார்கள் டூட்டி நேரத்தில். அவர்கள் எல்லாரும் மரைக்காயர் சொன்ன யோசனை படி கைலி கட்டியிருந்தால் ஜோராக இருக்கும் இல்லையா ? 'நல்ல வேளை ஜனாதிபதியை வுட்டுப்புட்டானுவ!..' என்று கிண்டல் செய்தாலும் 'விளம்பரம் நல்லாத்தான் இக்கிது..' என்று சொன்ன மரைக்காயரை அசத்த, 'படிச்ச புள்ளெ'யான அ·ப்ஜலும் ஒரு caption போட்டான். ஆறுமுகம் பிரெஸ்ஸில் 1000 நோட்டிஸ் அடித்தார்கள்.

கைலிகளை வாங்காதீர்கள் !

அசத்தலாக இல்லை ? அதாவது தரமில்லாத கைலிகளை வாங்காதீர்கள்; ஓணான் மார்க் கைலிகளையே வாங்குங்கள் ! இது நோட்டிஸ் அடியில் சின்ன எழுத்தில் வரும். ஆனால் யாருக்கு அவனது விளம்பர யுக்தியையெல்லாம் கவனிக்க நேரமிருக்கிறது ? ஜும்ஆ தொழுதுவிட்டு ஓடிவருபவர்கள் , நேர்ந்துகொண்டு பவுருவதற்கு காத்திருக்கும் பாலைப் பார்ப்பார்களா அல்லது பிரயோஜனமில்லாத நோட்டிஸ்களையா ? முதல் வரியில் மட்டும் கண்ணை ஒட்டி வேறு ஏதாவது படம் தெரிகிறதா என்று பார்த்து விட்டு ஓணானைப் பார்த்ததும் கசக்கி கீழே எறிந்து விடுகிறார்கள்.

மரைக்காயர் அதற்கப்புறம் விளம்பரம் பற்றி ஏதும் அவனிடம் பேசுவதில்லை.

பக்கத்து கிராமங்களுக்கு சைக்கிளில் சரக்கை எடுத்துச் சென்று கடனில் கொடுத்து வாங்கும் முறை பற்றி அவன் சொன்னதையும் காதில் வாங்கவில்லை. ஒரு விளம்பரத்திலேயே திறமையைப் பார்த்து விட்டார்.

பிரபலமாக இருக்கிற XXX பிராண்டுகளில் கொஞ்சம் வாங்கிப் போடலாம் கூடவே. ஆனால் அவர்கள் கடனுக்கு கொடுக்க மாட்டார்கள். பணத்திற்கு மரைக்காயர் எங்கே போவார் ? குவைத்தில் இருக்கிற அவர் மகன் , மலேயா சபரை முடித்துவிட்டு ஊருக்கு வந்த தன் வாப்பாவுக்காக இரக்கப்பட்டு அனுப்பிய பணத்தில் இந்த சரக்கு வாங்கவே அவருக்கு மூச்சு வாங்கி விட்டது.  தர்கா கடையாக இருப்பதால் வாடகை கம்மியாக இருப்பதாலும் ஓணான் எப்படியோ ஓடுகிறது. ஓடுகிறது என்று சொல்வது கூட தப்புதான். 

ஒன்றிரண்டாவது விற்க கந்தூரி சமயத்தில்தான் கடையை திறந்திருக்க வேண்டும். ஆனால் சார்மினார், தாஜ்மஹால் போன்ற பிரமாண்டமான வடிவங்களில் ஸ்டால் போட்டு கூடவே பிளாஸ்டிக் வாளிகளும் இனாமாகத் தந்து பெரிய கம்பெனிகள் தூள் பறத்தும் போது மரைக்காயரின் ஓணான் என்ன செய்து விட முடியும்? அந்தக் காலத்தில் பீடி கம்பெனிகள் விளம்பரத்திற்காக பெரிய பெரிய ஆட்டக்காரிகளையெல்லாம் கொண்டு வந்து தங்களின் vanக்கு மேல் குட்டைப் பாவாடையோடு ஆட விடுவார்கள் - கீழிருந்து பார்ப்பவர்களின் பீடி நன்றாக புகைவதற்காக. அது போல் செய்தால்தான் உண்டு. அப்போதும் ஓணான் விற்குமா என்று சந்தேகம்தான்

பேசாமல் இந்த கைலிகளை யாரிடமாவது தள்ளி விட்டுவிட்டு சிங்கப்பூர் கடையாக மாற்றி விடவேண்டும். அந்த காலம் மாதிரியா கஸ்டம்ஸ் பிரச்சனை எல்லாம்? விற்பவர்களை ஓட ஓட  விரட்டி அடித்து, பூட்ஸால் மிதித்த அதே கஸ்டம்ஸ் ஆபீஸர்கள்தானே  வகை வகையாய் ·பாரின் சாமான்களுக்கு தேடி வருகிறார்கள் இப்போதெல்லாம். அரசாங்கம் மாதிரியே சட்டமும் வேடிக்கையானது.  யோசித்த அ·ப்ஜல், மரைக்காரரிடம் சொன்னான்.

'அட, நல்ல ஐடியாதாங்கனி..!' என்று அவனை ஆச்சரியமாக பார்த்தார். தன் நண்பனின் மகனா புத்திசாலித்தனமாக பேசுவது !

'வைக்கலாம்தான்... ஆனா யஹ்யாவுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்றார் பொன்னம்பலம். தையற்காரர். தமாஷானவர். பக்கத்து கடை வாசலில்அவரது மெஷின் இருக்கிறது. அது எந்நேரமும் கைலி தைப்பதில் பிஸியாக இருப்பதால் மரைக்காயருக்கு பொறாமை உண்டு.

'ஏன் அண்ணே..' என்று கேட்டான் அ·ப்ஜல்.

'விக்கெ வர்ற பொம்பளைட்டே 'ஐட்டத்தைக் காட்டுங்க..' ண்டு சொல்லனுமே !'  

கைலிக்கடைகாரர்களும் சாதாரணமானவர்களா ? ஆண்கள் இல்லா வீட்டிலிருந்து கைலி எடுக்க வரும் பெண்களிடம் அலாதியான கரிசனத்துடன் 'விரிக்கவா?' என்று சொல்வார்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே. கையில் கைலிகள் ஆடும், எச்சரிக்கையாக.

அருவருப்பாக பேசுகிறார் என்று பொன்னம்பலத்தை தள்ளி விட்டுவிடவும்  முடியாது. அவர் வேறொரு கைலிக்கடை பக்கம் மெஷினை கொண்டு போனால் கைலியை தைக்க வருபர்களின் கருணைப் பார்வையையும் இழந்து விட வேண்டியிருக்கும். பஜாரில் இரண்டு தையற்காரர்கள் இருந்தாலும் பொன்னம்பலத்தின் தையல்தான் பிரபலம். 

கைலிகள் ஏன் தைக்கப்பட்டே கம்பெனிகளிலிருந்து வருவதில்லை என்பது ஒரு புதிர். கைலியை வாங்கி , பிறகு தைப்பதற்கு என்று 3 ரூபாய் ஏன் கொடுக்க வேண்டும்? ஒருவேளை கைலிக்கடைக்காரர்களே இப்படி ஒரு ஏற்பாடு செய்து கொண்டு கமிஷன் அடித்துக் கொள்கிறார்களா? இந்த வியாபார நுணுக்கங்கள் இருக்கட்டும். பொன்னம்பலம் , வேட்டிபோல பிரிந்தே வரும் கைலியை மூட்டும்போது பட்டியின் அகலம் அத்தனை மெல்லிசாக - கைலியின் அகலம் மோசமாகக் கெடாமல் -இருக்கும். உடுத்தும்போது குப்புறக் கவிழ்த்த V மாதிரி அமைந்து எதுவும் தனியாக முன்னால் தூக்கிக் கொண்டு வராது. விஷேசமான தையல். ஏதோ கோட்டு சூட்டு தைப்பவன் மாதிரி 'தையற் கலைஞர்' என்று அவர் போர்டு வைத்திருப்பதை இதற்காக மன்னித்து விடலாம்.

ஆனால் கைலிகளை தைத்து பிழைப்பை ஓட்டும் இவருக்கு கைலி கட்டுவது பிடிக்காது ! அதுதான் வேடிக்கை. 'வழிப்பதற்கு எது வாகானது?' என்று பட்டிமன்றமே நடக்கும் அவருக்கும் மரைக்காயருக்கும்.

நடக்கும்போது விலகி விலகி தொடைகளில் காற்று படவைக்கும் வேட்டிதான் தமிழன் பொன்னம்பலத்திற்கு உயர்வு. அது அவர் கம்கட்டு அழுக்கு மாதிரி மஞ்சள் பிடித்துப் போயிருந்தாலும் வேட்டி வேட்டிதான்.

பக்கத்து மோகப்பட்டினத்தில் உள்ள வங்கிகள், அரசாங்க அலுவலகங்கள் போவதற்கு வேட்டிதான் கண்ணியம். கைலியை உடுத்திக் கொண்டு போனாலே 'பதினொன்னு' (11) என்று நாவூர் பெண்கள் கேலி செய்யும் இந்த பேண்ட் போட்ட ஊழியர்களின் பார்வையே மாறி விடுகிறது - 'வந்துட்டானா மடமரைக்கான் நாவூர்லேர்ந்து' என்று. என்னதான் அரைக் கலரோ அல்லது வெள்ளைக் கைலியோ கட்டினாலும் வேட்டிக்கு ஈடாகுமா ?  அதனால்தான் இப்போது நாவூரின் பணக்கார காக்காக்களெல்லாம் எல்லாம் எளிமையின் சின்னமாம் கதர் வேட்டி கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். கருநீல வண்ண வெல்வெட் தொப்பியைப் போட்டுக் கொண்டு ஒரு வெள்ளை வேஷ்டியையும் கட்டி, கையில் ஒரு விரிக்காத குடையுடன் வலம் வருவது  நன்றாகத்தான் இருக்கிறது! வெள்ளைத் துப்பட்டிகள், கறுப்பு புர்காவாக மாறி வருவதைப் போல இதுவும் ஒரு மாற்றம்தான். சில ஊர்களில் 4 முழ வெள்ளை வேஷ்டியையே புர்காவாக பயன் படுத்துகிறார்களே அழகாக!  நாவூரிலோ அது தம்பலத்தனம்..

'அட போடா!' என்றார் மரைக்காயர். செல்லமாக அப்படி கூப்பிடுவார். அ·ப்ஜலும் செல்லம் காட்டலாம்தான். ஆனால் வாப்பாவுக்கு தெரிந்து விடும். செளதி போக பணம் கிடைக்காது.

' வெளங்காதவந்தான் அப்படி உடுத்துவான். தொப்பிக்கு கைலிதான் கரெக்ட். அதான் இஸ்லாமானவன் மாதிரி இக்கிம். அதோட ஒரு கோட்டும் மாட்டிக்கிட்டுப் போனா எப்படி இக்கிம் ?!' என்று கற்பனை தந்த பரவசத்தில் மரைக்காயர் சொன்னார்.

துருக்கி தொப்பி போட்டுக் கொண்டு கோட்டு-கைலி- மிதிரிக்கட்டை சகிதமாக பெருநாள் தினங்களில் காட்சி தந்து பிள்ளைகளுக்கு 25 பைசாவுக்கு மேல் கொடுக்காத அந்த காலத்து குடும்பத்துப் பெரியவர்கள் அவனது நினைவில் வந்தார்கள். சகிக்கவில்லை.

ஆனால் உண்மையை சொல்ல முடியுமா ஒரு முதலாளியிடம்? 

'நல்லாயிக்கிம் மாமா!' என்றான்

'கைலி நம்ம ஓணான்தான் . அதுதான் எடுப்பு. 'டர்ர்'ண்டு கட்டு உடாது சீக்கிரத்துலெ!'

'பின்னே ?'

'அப்படிச் சொல்லு. ஆனா நம்ம ஓணானைப் பத்தி எவனுக்கும் தெரியமாட்டேங்குதே...'

'தெரியும். கொஞ்சம் சபுர் செய்யனும்'

'இல்லே.. கடையை XXX787 காரண்டெ கொடுத்துட்டேன் - சரக்கோட..'

'எப்ப மாமா ?' - அதிர்ச்சியுடன் கேட்டான் அவன். அல்லாஹ் மரைக்காயரையும் சும்மா விடவில்லை போலிருக்கிறதே...

'ஹொத்துவா பள்ளிலெ பேசி முடிச்சாச்சுப்பா. எல்லாத்தையும் வித்த பொறவு எனக்கு காசு கொடுப்பான் , இன்ஷா அல்லாஹ்.'

'நான் ?' 

'இந்த கடையிலேயே வேலை பாரு...சம்பளம் கொடுக்குற முதலாளி வந்தா நல்லதுதானே..? வாப்பாவுக்கு எழுதிப் போடு...' - யஹ்யா மரைக்காயர் வேதனையுடன் சொல்லிவிட்டு வீட்டிற்குப் போனார். இரவு , கடை வாசல் சுத்தமாகக் கழுவப்பட்டு  மணத்தது. மரைக்காயர் இனி பஜார் பக்கம் வருவார் என்று தோன்றவில்லை.

அடுத்த நாள்  காலை அ·ப்ஜல் தன் புது முதலாளி வீட்டிற்குப் போய் சாவி வாங்கி விட்டு கடை திறக்கப் போகும்போது ஷட்டரை இழுக்கும் பிடியில் ஒரு செத்த ஓணான் மாட்டியிருந்ததைப் பார்த்தான். எந்த ஹராமி செய்த வேலை இது ? ஓணான் எதனாலோ கொடூரமாக பலமுறை அடித்து நசுக்கப்பட்டு குடல் கும்பியெல்லாம் வெளியேறி இருந்தது. 'க·பன்' போல அதன் மேல் ஒரு கிழிந்த துணி வேறு. துணி மூத்திர நாற்றம் அடித்தது. ஏதோ பெரிய வியாதி பிடித்த உடம்பிலிருந்து வெளியாகும் மூத்திரத்தின் நாற்றம்...

(முடிந்தது)

எங்கே முடிந்தது? கொஞ்சம் டீடெய்ல் சேர்க்கனுமாம். இப்போதெல்லாம் மூட்டியே வரும் கைலிகளின் உட்புறத் தையல், வெளியில் தெரிகிறது. கன்றாவி! ‘உடுத்தத் தெரியாதவன்’ என்று நாவூரில் சொல்வார்கள்; பனியன் ஜட்டியைத் திருப்பிப் போடுவது மாதிரியான செயல். இதைக் குறிப்பிடலாமா என்றால் கவிஞர் ஒத்துக்கொள்ளவில்லை. சினிஃபீல்டில் நுழைய முயற்சி செய்துகொண்டிருக்கிறவர் ஏதாச்சும் புதுமையா சொல்வார். பார்க்கலாம்.

சொன்னார் : இப்படிச் செய்யும். அந்தப் புது முதலாளி பெரும் கோடீஸ்வரரா ஆயிட்டதா.

எப்படீ? 

யாரையோ புடிச்சி (ஏதோ ஒரு இயக்கத்தின் பெயர் சொன்னார்; ஞாபகமில்லை) ’கல்ஃபு’க்கு கைலி எக்ஸ்போர்ட் செய்றாரு, அவராலேயே நம்பமுடியாம பயங்கர சேல்ஸ்.

நெசமாவா!

கேளும். லேபிள்ல ஒரு சின்ன மிஸ்டேக். ’ஓணான் மார்க்’ங்குறது ‘ஓலான் மார்க்’ன்னு பிரிண்ட் ஆயிருக்கு!
(end)
*
அருஞ்சொற் பொருள்:

ரொஹையான் கட்டை -  திருக் குர்ஆன் வைத்து ஓத உதவும் பலகை
60x60 , 80x80, பாயடி, மூட்டு  - கைலி வகைகள்
அஸர் , இஷா - தொழுகை நேரங்கள்
பிஸாது - புறம் பேசுவது
ஜியாரத் - இறை நேசர்களின் சமாதியை வழி படுவது
ஜீமத் - அழகு
ஜூம்ஆ - வெள்ளியன்று நடக்கும் கூட்டுத் தொழுகை
சபர் - பிரயாணம்
சபுர் -பொறுமை
க·பன் - இறந்த உடலின் மேல் போடப்படும் துணி

Monday, August 28, 2023

மன்னிப்பு (சிறுகதை ) - நாகூர் ரூமி



மன்னிப்பு - நாகூர் ரூமி


சாயங்காலம் ஆரம்பித்த வேதனை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான். கால்வலிக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. என்றாலும் எங்கோ நெருடுவதை அவனால் உணர முடிந்தது.


வலது பாதத்தைப் பார்த்தான். பெரு விரலிலிருந்து கணுக்கால் வரை வெட்டி எடுத்து விடலாம் போலத் தோன்றியது. ஆயிரம் கோடாரிகளை வைத்து யாரோ உள்ளே கொத்துகிறார்கள். நின்றால், நடந்தால் ம்ஹூம் சாயங்காலத்திலிருந்து விரலைக்கூட அசைக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. எப்படிச் சொல்வது? பாட்டிக்கு மட்டும்தான் தெரியும். அவள் 'அப்பவே சொன்னேனே' என்று அரற்ற ஆரம்பித்து விட்டாள். பாட்டியின் புலம்பலை ஒரு முறைப்பு அடக்கிவிடும். ஆனால் மனசாட்சியின் புலம்பலை? சாயங்காலத்திலிருந்தே அவனது அறிவு சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து கிடக்கிறது. மீசையில் மண் ஒட்டிவிடுமே என்று சமாளித்து வந்தான். இனிமேல் முடியாது.


பாட்டியின் நாற்பது வருஷ மூடநம்பிக்கைகள் பச்சிலை உருவில் பாதத்தில் தேய்க்கப்பட்டனவே தவிர, வலி குறையவில்லை. பாட்டியின் நம்பிக்கை பச்சிலையாகக் காய்ந்து, உதிர்ந்து விட்டிருந்தது. ராமநாதன் சில தைலங்களின்மீது நம்பிக்கை வைத்திருந்தான். அதில் சிங்கப்பூர் 'கோடாலி' தைலமும் ஒன்று. அவனைப் பொறுத்தவரை அதுவும் சர்வரோக நிவாரணி மாதிரி. அதையும் காலில் கொட்டியாயிற்று. விறுவிறுவென்று ஏறியதே தவிர, பாதத்தினுள்ளே நரம்புகளுக்குப் பதில் அக்கினிக் கட்டிகள் தான்.


ஈஸிசேரில் சாய்ந்தபடி காலைத் தூக்கி எதிரிலிருந்த கட்டிலில், மெத்தைமீது போட்டுக் கொண்டான். கொஞ்சம் வசதியாக இருந் தாலும் கோடாரிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.


ராமநாதன் தன் நண்பன் ரவியின் உபாயத்தைக் கையாண்டு பார்த்தான். உடலில் எங்காவது அரித்தால் ரவி சொறிய மாட்டான். மனதின் திடத்தன்மைக்கு உடனே ஒரு போட்டி. 'அரிக்கிறாயா...ம்... அரி... எவ்வளவு நேரம் அரிப்பாய்... பார்க்கிறேன்... நான் சொறியவே மாட்டேன்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்து கொள்வான். தோலின் தினவையும் நகங்களின் பரபரப்பையும் அவன் மனம் வெற்றி கொள்வதை ராமநாதன் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறான். அதை நினைத்துக்கொண்டான். 'வலிக்கிறாயா... பார்ப்போம்... எவ்வளவு நேரம் வலிப்பாய்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்துகொண்ட கனமே அது சுக்கு நூறாய் உடைந்து போனது. ஆயிரம் ரவிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத வலி.


நத்தைபோல் வந்தது இரவு. ராமநாதன் முனங்க ஆரம்பித்தான். பாட்டி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள். ஒருமுறை முறைத்து, “உடனே டாக்டர் சீனிவாசனை வரச்சொல்லி ஃபோன் பண்ணு," என்றான்.


'அப்பவே சொன்னனே... மாரியாத்தாட்ட விளையாடாதடான்னு'' - போகும்போதும் புலம்பிக் கொண்டே சென்றாள் பாட்டி.


மாரியாத்தா, நகங்களும் மீசையும் கொண்ட மாரியாத்தா! சே... என்ன அறிவு கெட்டவர்கள் என்று நினைத்தான். வலி அதிகமாகியதுபோல் இருந்தது. கண்ணை மூடிக் கொண்டான். பல்லைக் கடித்துக் கொண்டான்.


சீனிவாசன் வந்தார். பாதத்தைத் தட்டிப் பார்த்தார். திருப்பினார் அப்படியும் இப்படியும் சுண்டினார். கடைசியில் ராமநாதனிடம், 'வாட் ஹாப்பண்ட் ஆக்ச்சுவலி?" என்றார். இப்போது என்ன சொல்வது? ஒரு கணம்தான். தயக்கம் உணரப்படுவதற்குமுன் பதில் சொல்லிவிட வேண்டும்.


"காலை உதறினேன். சுவரில் இடித்துவிட்டது''. பாட்டியைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்துக் கொண்டான். அவள்தானே ஒரே சாட்சி. சாட்சியும் மௌனித்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே.


"இடிச்சுதுன்னா சொல்றே?" வீக்கமே இல்லையே?" ஆச்சரியப்பட்டார் சீனிவாசன். 'ஓகே... ஒரு ஆயின்ட்மென்ட் தாரேன், தடவிக்கோ" என்றார்.


''சார்... இரவு நான் எப்படியாவது தூங்கணூம்."


'ஏன், அவ்வளவு வலிக்கிறதா?” என்று கேட்டு ஒரு இன்ஜெக்சன் போட்டார்.


ஊசி போட்ட வலியை உணர முடியவில்லை. இமைகள் லேசாக கனத்தன. டாக்டர் காலையில் வருவாராம்.


மனத்தில் அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடந்தது.


வீட்டுக்குள் வந்தபோது பாட்டியைத் தவிர யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் சிதம்பரம் கோயிலுக்கு. பாட்டி அடுப்பங்கரையில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தான் ராமநாதன். ஓசைப்படாமல் வழக்கம்போல. அப்போது தான் அது நடந்தது.


பாட்டியின் பக்கவாட்டில் எவர்சில்வர் ப்ளேட்டில் மல்லிகைப் பூவாய்ச் சாதம். பாட்டி திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தாள். அவள் பார்க்காதபோது, சோற்றில் வாயை வைத்து நக்கிக் கொண்டிருந்தது மாரியாத்தா. மாரியாத்தா, வீட்டுப் பூனை. பாட்டியின் செல்லப் பூனை. பாட்டி வைத்தபெயர். பாட்டியின் இஷ்ட தெய்வம் மாரியாத்தா. இஷ்டத்துக்குச் சாதத்தை எச்சில் பண்ணிக் கொண்டிருந்தது.


ராமநாதனுக்குப் பூனைகள் என்றாலே கால்கள் பரபரக்கும். நக்கும் சுவாரஸ்யத்தில் மாரியாத்தா இவனைக் கவனிக்கவில்லை. மெல்ல மெல்லப் பூனைபோல் ஓசைப்படாமல் நடந்து அதனருகில் சென்றான்.


அதன் வயிற்றுக்குக் கீழ் தன் வலது பாதத்தை நுழைத்தான். பாட்டி திரும்பிக் கொண்டிருந்தாள். அதற்குள் காரியத்தை முடித்து விடவேண்டும். இல்லையேல் சத்தம் போட்டுக் கிழவி காரியத்தைக் கெடுத்துவிடுவாள். இந்தச் சனியன் பிடித்த பூனை இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது.


கால் பந்தை 'கோல்' நோக்கி உதைப்பதுபோல ஒரே எத்து. பூனை எதிரே இருந்த சுவரில் 'டக்' என்ற ஒலியுடன் பயங்கரமாக மோதிக் கீழே விழுந்தது. விழுந்தபோது 'மோவ்' என்று பரிதாபகரமான ஒரு ஒலியை எழுப்பியது. அந்த ஒலி ராமநாதனைச் சற்றுப் பயமுறுத்தியது. பின்பு பூனை ஓடிவிட்டது.


பாட்டி பார்த்துவிட்டு, "அடப்பாவி! மாரியாத்தா சூலிடா, அடப் படுபாவி” என்று பதறினாள்.


சூல்கொண்ட மாரியாத்தா. ராமநாதனுக்கும் சற்றுப் பாவமாக இருந்தது. அவசரத்தில் வயிற்றின் உப்பலைக் கவனிக்கவில்லை. 


''சரி ...சரி ...இந்தச் சோத்தை வெளியிலே கொட்டு... மாரியாத்தாவாம் மாரியாத்தா...” என்று திட்டிவிட்டு வந்ததுதான். அரைமணியில் ஆரம்பித்தது வலி.


திடீரென்று விழிப்பு வந்தது. மணி பார்த்தான். இரவு ஒரு மணி. வீடு பாட்டியோடு சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவனோடு சேர்ந்து வலது பாதம் விழித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் கோடரிகள்.


ஒரு யோசனை தோன்றியது. அப்படிச் செய்துவிட வேண்டியது தான் என்ற முடிவோடு எழுந்தான். ஹாலின் கிழக்கு மூலையில் உள்ள அலமாரிக்குப் பின்புறம்தான் மாரியாத்தாவின் குடித்தனம். இந்நேரம் அங்கிருக்கிறதோ என்னவோ.


ஹால் விளக்கைப் போட்டான். அலமாரிக்குச் சென்றான். பின்னால் பார்க்கப் பயம். மாரியாத்தா மேலே பாய்ந்து விடுமோ?


மெதுவாக எட்டிப் பார்த்தான். மாரியாத்தா குட்டிகள் ஈன்றிருந்தது. இரண்டு குட்டிகள். வெள்ளையும் சாம்பலுமாய். குட்டிகளை நக்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை நுழைத்தான். இவனைப் பார்த்தவுடன் பளபளக்கும் கண்களுடன் போருக்குத் தயாராவதுபோல் எழுந்து நின்றது.


ராமநாதன் என்ன ஆனாலும் சரியென்று மண்டியிட்டு அமர்ந்தான். மிகுந்த சிரமத்துடன் இரு கைகளையும் குவித்து வணங்கினான். வார்த்தைகள் பயனற்றுப் போயின. கரகரவென்று கன்னங்களில் சூடாகக் கண்ணீர் வழிந்தோடியது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தானென்று தெரியாது. 'சரி போ' என்று மாரியாத்தா உத்தரவு கொடுத்ததுபோல் இருந்தது. எழுந்து வந்து, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.


காலையில் காப்பியுடன் பாட்டி எழுப்பினாள். விசாரித்தாள். ராமநாதன் பாதத்தைப் பார்த்தான். கோடரிகள் புதைக்கப்பட்டிருந்தன. வலி இறந்து விட்டிருந்தது. உற்சாகமாகப் பாதத்தை ஆட்டிக் காட்டினான். பாட்டி வாஞ்சையாகத் தலையைக் கோதினாள். அறைக்குள் பார்வையை ஓட்டினான் ராமநாதன். அறை வாசலில் நின்று மாரியாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.

*

(குமுதம் 27.8.1987)

*

நன்றி : மாரியாத்தா &  நாகூர் ருமி

Friday, July 7, 2023

ஃபோன் நகரம்‼️ (சிறுகதை) - எஸ்.எல்.எம். ஹனீபா


ஃபோன் நகரம்

எஸ்.எல்.எம். ஹனீபா

அவன் அமரனான் : அவன் பொன்னகரம் படைத்தான் - நான் ஒரு போன் நகரம் எழுதினேன்..

வீட்டின் முற்றம் முழுவதும் விதவிதமான பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கும். அதிகாலையில் பனிகுளித்து, முகங்களில் அழகும் மணமும் துளிர்த்து புத்தம்புதிய மணமகள் போல நிற்கும் அந்தப் பூஞ்செடிகளைத் தினந்தினம் தரிசித்துத் திழைத்து நிற்கிறேன்..

அன்றும் வழக்கம்போல நிற்கிறேன், எனது பத்துவயதுச் செல்லக்குட்டி பாடசாலைக்குப் போக  ! அவளை தரிசிக்க.... 

அதோ வருகிறாள் எனது சசிக்குட்டி. அவளுக்குப் புன்னகையே முகமாக வாய்த்துள்ளது, அத்தனை அப்பாவித்தனமும் குறும்பும் நிறைந்த, நிலவில் வடித்த பேரழகு முகம் அவளுக்கு..

"ஹாய் அங்கிள் ! குட் மோர்னிங்"

"குட் மோனிங், குட் மோனிங்.. வாடா செல்லம்.. எப்டி இருக்காய் ?" - கேட்டுக்கொண்டே அந்தக் கணத்தில் பிறந்த ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பூஞ்செடிகளைப் பார்த்தேன்.. மிகவும் அழகானவை அந்தப் பூக்களா அல்லது எனது சசிக்குட்டியா ? சந்தேகம் கலைந்தது, சசிக்குட்டிதான் பேழகு ! 

அவள் பாடாசாலைக்குப் போகும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு வகையான பூக்களில் ஒன்றைப் பறித்துக் கொடுப்பேன். அன்றும் அவளுக்கு ஒரு ரோசா மலரைப் பறித்துக் கொடுத்தேன்..

முத்துப் பற்கள் பளிச்சிட "தேங்க் யூ அங்கிள், Bye.." 

எனக்கும் அவளுக்கும் இடையே இந்தச் சந்திப்புத் தினமும் நடக்கும்.. 

மாலை நேரங்களில் அவள் ஓதல் பள்ளிக்குப் போவாள். அப்போது சற்று வெயில் நேரமாக இருப்பதால் நான் கொஞ்சம் வீட்டுக்குள் சாய்ந்து கிடப்பேன். சொந்த வீட்டுக்குள் வருவதுபோல எனது அறைக்குள் வருவாள். படுத்துக் கிடக்கும் எனது கைகளைப் பற்றி, கைகுலுக்கிவிட்டுச் செல்வாள். சிலபோது எமது கைகளில், நெற்றியில், தலையில் முத்தமிட்டுச் செல்வாள். அந்த வயதில் எனக்கொரு மகள் இருந்து அவள் இதையெல்லாம் செய்தால் எத்தகைய உணர்வுகள் ஏற்படுமோ அதே உணர்வுகளைத்தான் சசியின் செய்கைகளும் எனக்குள் ஏற்படுத்தின. 

அவளுக்குச் சிறுசிறு பொருளாதாரத் தேவைகள் ஏற்படும். படிப்புச் செலவுகள், பாடசாலை உபகரணங்கள் வாங்க என்று என்னிடம் எப்போதாவது காசு கேட்பாள், அதையும் உரிமையோடு கேட்பாள். கொடுத்து உதவுவேன்.

வருடங்கள் அவளை முன்னோக்கி நகர்த்தி வந்தன. வேகமாக, அழகாக வளர்ந்து வந்தாள்.

ஒருநாள் மாலை நான் அறையில் சாய்ந்து கிடந்தேன். சசி திடீரென ரெண்டு பையன்களோடு எனது அறைக்குள் வந்தாள். ஓதல் பள்ளி போகிற வழியில் வந்திருக்கிறாள். அந்தப் பையன்களில் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஒருவனைச் சுட்டிக்காட்டி "அங்கிள், இவனைத்தான் நான் லவ் பண்றேன்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாகப் போயிற்று. இந்தச் சசிக்குட்டி அவ்வளவு வளர்ந்து விட்டாளா இப்போது ? எனக்குள் ஒருவிதமான பிரிவுத் துயரமும் அவளது வாழ்க்கை குறித்த அச்சமும் தோன்றிற்று... 

மாலை நேரங்களிலும் அவள் எங்காவது போகும்போது என்னையும் கூப்பிடுவாள். இருவரும் இரண்டு சைக்கிள்களில் சவாரி போவோம் கண்டதையும் பேசிச் சிரித்தபடி... பாடசாலையில் நடக்கும் சுவாரஷ்யமான விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பாள்.. அவளுக்குள் அப்போது பால்யபருவக் காதல் உணர்வுகள் முனைப்புற்றிருந்தன.. அவளது 'லவ்வர்' பையன் தூரத்தில் தென்பட்டதும் எனக்குச் சைகை காட்டி, என்னைக் 'கழற்றி விட்டுவிட்டு' அவனை நோக்கிச் சைக்கிளில் பறந்துவிடுவாள்.. 

அப்போது அவள் முன்னைய பையனை விட்டுவிட்டு இன்னொரு பையனுடன் நட்பாகி இருந்தாள். அது குறித்தும் அவளிடம் கேட்டேன். "என்னடி சசி, ஆளை மாத்திட்டியா ? 

"அவன் சரில்லை அங்கிள், என்னை விட்டுட்டு இன்னொருத்தியப் புடிச்சிட்டான், எனக்கென்ன ஆளா பஞ்சம், நானும் ஆள மாத்திட்டன்" என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.! 

இவள் தொடர்ந்து நன்றாகப் படிப்பாளா ? பொறுப்புடன் நடந்து கொள்வாளா ? வாழ்க்கையில் சறுக்கி விடுவாளா ? என்ற கேள்விகள் என்னை அடிக்கடி துளைத்தெடுத்தன.

ஒருநாள் மாலை பாதையில் என்னைச் சந்தித்தவள் திடீரென "அங்கிள், எனக்கொரு ஐயாயிரம் ரூபா காசு வேணும்" என்றாள். நானோ திடுக்கிட்டுப் போனேன்.

"என்னத்துக்குச் சசி உனக்கு இப்ப இவ்வளவு காசு ? என்ன அவசரம் ?" என்றேன்.

"நான் நாலைஞ்சி பொடியன்மார லவ் பண்ணிட்டன் அங்கிள்.. எல்லானும் ஏமாத்திப்போட்டு விலகிட்டான்கள். இப்ப இருக்கிறவனும் போய்ருவானோ எண்டு பயமாக் கிடக்குது, அவனும் இல்லாம எனக்கு இரிக்க ஏலாது. வாற கிழம அவன்ட பிறந்த நாள். அவனுக்கொரு ஃபோன் வாங்கிக் குடுக்கணும்,  அவனும் அதத்தான் கேட்கான் அங்கிள்.. எப்டியாவது வாங்கிக் குடுக்கத்தான் வேணும், அதுக்குத்தான் ஐயாயிரம் ரூபா வேணும்" 

நான் சிலையாகிப் போனேன் ! இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் ! இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறது ? சசியைப் பற்றிய ஒரு பேரச்சம் எனக்குள் பொங்கிப் பிரவாகித்து வெடித்தது ! 

"உன்ட நெலெம எனக்கு விளங்குது சசி.. ஆனா இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோன்னுதான் கவலையாக் கிடக்கு. நீ அவனுக்கு போன் வாங்கிக் குடுக்க நினெக்கிறதுல தப்பில்ல.. நான் பென்ஷன்காரன், ஒனக்குத் தெரியும்தானே சசி, இருநூறு முன்னூறுன்னா எடுத்துக்கேலும்..

ஐயாயிரத்திற்கு ஒடனமே எங்க போற நான்.. அதான் கவலையாக் கிடக்குது..." - நான் மிகுந்த சங்கடப் பட்டேன்.

கொஞ்ச நேரம் நெற்றியில் கோடுகள் படர, புருவங்களைச் சொருக விட்டு எதையோ கடுமையாகச் சிந்தித்துத் தலை நிமிர்ந்தவள், "சரி அங்கிள், பரவாயில்லை, நான் சமாளித்துக் கொள்றன்" என்று சொல்லி என் வயிற்றில் செல்லமாகத் தட்டிவிட்டுப் புன்னகையுடன் போய்விட்டாள். 

அவளது பாடசாலைக்கு அருகில் ஒரு ஃபென்சி ஸ்டோர் கடை இருந்தது. கடைக்காரர் தமிழ்ப் படங்களில் வரும் வில்லன்கள் போலிருப்பார். அண்டா வயிறு, பருத்த ஷரீரம், காட்டுத்தனமாக வளர்ந்துகிடக்கும் அரைவாசி நரைத்த தாடி, கழற்றாத தொப்பி, அஞ்சி நேரத் தொழுகையாளி, அஷில் முஸ்லிம், பெயர் நன்றாக நினைவில் உள்ளது, சொல்ல மாட்டேன். 

அந்தக் கடைக்கு சசி அடிக்கடி போவாள். பாடசாலை உபகரணங்கள் வாங்குவாள். அவள் கடைக்கு வந்தால் கடைக்காரர் குளிர்ந்துபோவார். பொருள்களை அவசரமாகக் கொடுத்து அனுப்பாமல் இழுத்தடிப்பார். அவளைச் சீண்டிவிட்டுப் பேச்சுக் கொடுத்துக் கலாய்ப்பார். பொருள்களைக் காட்டும் சாட்டில் கைகளைத் தொடுவார், தேவையில்லாமல் உரசிக்கொண்டு நிற்பார், பட்டும்படாத மாதிரி அவளது மார்பில் பிஷ்டங்களில் உதடுகளில் தட்டி, வருடி விடுவார்.. இவற்றையெல்லாம் அவள் கண்டுகொள்ளாமல் இருப்பாள், போகும்போது அவரிடமிருந்து இலவசமாகக் கிடைக்கும் டொஃபி, சுவிங்கம் மாதிரி அற்பச் சந்தோஷங்களுக்காக ! 

கடைக்காரரின் இந்தக் குஷால் செய்கைகள் பற்றியெல்லாம் சசி என்னிடமும் சொல்லியுள்ளாள். அந்த மனிதன் ஒரு புழுவைப் போல என மனக் கண்களில் தோன்றி மறைவார்...

என்னிடம் ஐயாயிரம் ரூபா கேட்ட அன்றைய தினம் மாலை சசி அந்தக் கடைக்குச் செல்கிறாள்...

வெற்றிலைக் கறைபடிந்த கோரமான பற்களைக் காட்டிச் சிரித்து வழிந்து சசியை வரவேற்கிறார்.

"மாமா, எனக்கொரு ஹெல்ப் பண்ணுவீங்களா..?"

"உனக்கில்லாத ஹெல்ப்பாடி செல்லம்.. சொல்லன் பார்ப்பம், உனக்காக நான் என்னெண்டாலும் செய்வன்.." சொல்லிக்கொண்டே அந்தப் புழு சசியின் கைவிரல்களைப் பிடித்து மெல்ல அழுத்துகிறது... 

"மாமா, வாப்பா வெளிநாட்டுல இரிந்து வாற மாசம் காசி அனுப்புவாங்க, காசி கிடைச்சதும் தந்துர்றன்..  எனக்கொரு ஐயாயிரம் ரூபாய் காசி கடனா தருவீங்களா..?

" என்ன புள்ள, இப்டி சிம்ப்பளா ஐயாயிரம்னு கேட்காய்.. பெரிய தொகையாச்சே.. எப்டி தாற சின்னப் புள்ள உன்னய நம்பி..?"

"என்ன மாமா.. சும்மா கதய வளக்காதீங்க, நான் பெரிய புள்ளயாகி மூணு வரிசம் இப்ப ! வாற டிசம்பருக்கு ஓ.லெவல் எழுதப் போறன், காசி தர ஏலுமா ஏலாதா, அவ்ளோதான் கத !"

"டியே, டியேய். கோவிச்சுக்காதடீ, இப்ப லாச்சிக்குள்ளால அவ்ளோ காசில்ல, அந்திக்கி யாவாரம் நடந்துதான் காசி சேரணும். நீ கவலப் படாத, நாளெக்கி ஸ்கூலுக்கு கொஞ்சம் நேரத்தோட வா, நான் சுபஹ் தொழுதிட்டு வந்து கொஞ்சம் சாஞ்சி கிடப்பன், கட துறக்கிறதுக்கு கொஞ்சம் முந்தி ஒரு 6.45 க்கிப் போல வா, கடக்கிப் பின்னால் வந்து கதவ தட்டு, நான் எழும்பி கதவ தொறந்து நீ கேட்ட காச தாறன்" என்று சொன்ன புழுவின் கண்கள் சசியின் மார்புகளின் மீது பரவுவதை சசி அவதானித்தாள்... அவளுக்கு உள்ளேயும் ஏதோ செய்வதாக உணர்ந்தாள்..

"சரி மாமா, நான் காலைல வாறன் .."  என்று நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து ஒரு யோகர்ட்டைத் திணித்தது புழு.

இன்று கையைப் பிடித்து இழுத்த இழுப்பில் நாளை காலை தனக்கு நடக்கப் போவதை நன்றாக உணர்ந்துகொண்டாள்.

மறுநாள் காலை 6.45 மணிக்குக் கடைக்குள் நுழைந்த சசி 7.00 மணிக்கு வெளியே வந்தாள்... 

சீருடையையில் கசங்கி இருந்த இடங்களை, பர்தாவை தடவிவிட்டுச் சரிசெய்தவாறே கைக்குட்டையால் உதடுகளையும் கன்னங்களையும் அழுத்தித் துடைத்தவாறு பாடசாலை 'கேட்'டை நெருங்கினாள்...

'கேட்' அருகில் நின்றுகொண்டிருந்த அவளது 'லவ்வ'ரின் கைக்குள் அந்த ஐயாயிரத்தை வேண்டா வெறுப்பாகத் திணித்துவிட்டு, அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் பாடசாலைக்குள் நுழைகிறாள்...

*

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா

https://www.facebook.com/slm.hanifa

Wednesday, September 14, 2022

மாறுசாதி (சிறுகதை) – திக்குவல்லை கமால்

மல்லிகை’ இதழில், 1972ஆம் ஆண்டு வெளியான சிறுகதை இது. திக்குவல்லை கமால் அவர்களின் ‘விடை பிழைத்த கணக்கு’ தொகுப்பிலும் உண்டு. நன்றியுடன் பகிர்கிறேன். - AB

**


மாறுசாதி – திக்குவல்லை கமால்

முன்வாசலில் எரிந்து கொண்டிருந்த குப்பி லாம்பின் வெளிச்சம் கதவுக்கிடையில் புகுந்து, அடுத்த அறை எதிர்ச் சிவரில் கோடு வரைந்தாற் போல் படிந்திருந்தது, தரையில் ஒரு பக்கமாகப் பதித்திருந்த கண்ணாடிக்குள்ளால் ஓரிரண்டு நட்சந்திரங்களும் மின்னிக்கொண்டிருந்தன.

இவை இரண்டையும் மாறிமாறிப் பார்த்தவண்ணம் பாயில் புரண்டு கொண்டிருந்தாள் ஹிதாயா. 

ஏழெட்டு வருடங்களாக நாளாந்தம் இதே நேரத்தில் விரிந்து பழகிப்போன அவளது கண் இமைகள் இன்றும் விரிந்து கொண்டதில் தவறில்லைதான். -

இந்த ஒரு மாதத்தையும் மாத்திரம் தவிர்த்து, அதற்கு முன்பெல்லாம் அவள் இந்த நேரத்தில் நிச்சயமாகக் குசினிக்குள் குந்தி அடுப்பெரித்துக்கொண்டு அல்லது கோப்பி கலக்கிக் கொண்டுதானிருப்பாள். 

அதிகாலையிலேயே பொட்டணியைச் சுமந்தபடி வெளிக்கிடும் ஜெஸில் நானாவிற்கு, அந்தக் கோப்பிக் கோப்பையில் எத்தனையோ நம்பிக்கைகளும் மன நிறைவுகளும் தான்.

ஆனால் இந்த ஒருமாத காலமாக...எல்லாம் அடிதலை மாறிப்போயிருக்கிறதே.

அவள் இன்னும் கண்களைத் திறந்தபடி புரண்டுகொண்டிருந்தாள். வெளியே காகங்கள் கத்திப் பறக்கத் துவங்கியதைத் தொடர்ந்து, விடிந்துவிடுமுன் தண்ணீர் எடுத்து வரக் கிளம்பும் கன்னியர்களின் கலகலப்பு அவளை ஒன்றும் செய்து விடவில்லை .

மாறாக முன்வாசலிலிருந்தெழும்பும் அந்த நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் ஒலி.......

" கஹ்.....கஹ்...... கஹ்க ஹ்''

தலையைக் கிளப்பி ஓய்ந்து விடுகிறதா என்ற எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், அங்கே, அது தொடர்க் கதையாக நீண்டுகொண்டிருந்தது.

சடக் கென்றெழுந்து, நிலத்தில் உராய்ந்து இழுபட்டு வரும் பிடவையைக் கூட கவனிக்காமல் முன்வாசலுக்குப் போய் கணவனின் நெஞ்சை மேலிருந்துகீழாக இடைவிடாது தடவியபோதுதான் ஒருவாறு இருமல் ஓய்ந்தது.

அதே கைப்பட மேசையிலிருந்த 'சுடுதண்ணீர்ப் போத்தலிலிருந்து வெந்நீரில் கொஞ்சம் வாத்தெடுத்து நன்றாக பிடித்துகொண்டு தருவதற்கத்தாட்சியாக வெளிச்சம் பலபுறமும் பரவிக் கொண்டிருந்தது.

கதவைத் திறந்றகொண்டு வெளிக்கிட்டவள் பின்பக்கமாகக் கட்டிவைத்திருந்த இரண்டு ஆடுகளையும் அவிழ்ந்து விட்டுக் காலைக் காரியங்களில் ஈடுபடலானாள்.

அதிகாலை வேளையில் பனிக் குளிரில் கணவனை அதுவும் நேயாளியாக இருக்கும் நிலையில் வெளிக்கனுப்ப விரும்பாத அவள், அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து தான் வைத்திருந்தாள். 

அப்போது நேரம் ஏழு மணியைத் தாண்டியிருக்குமென்பதை குர்ஆன் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் மூலம் தெரிந்துகொண்டதும் சீக்கிரம் போய் மருந்துக் குழிகைகளை எடுத்து அவருக்கு விழுங்கச் செய்துவிட்டு முற்றத்தைப் பெருக்கத் துவங்கினாள் .

உடற்கட்டுக் கலைந்து நோயாளியாகக் கிடக்கும் ஜெஸில் நானாவை , ’பொட்டணி ஜெஸில்' என்று சொன்னால்தான் எவருக்கும் ஒரேயடியாகப் புரிந்துகொள்வார்கள்.

வசதியாக வாழும் பலர் அவர்களுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும் அவர்களுக்குப் பல்லைக் காட்டித் தலை சொறியும் பழக்கம், வாழ்க்கை வசதியற்று இப்படி நோயாளியாக அவதிப்படும் நேரத்திலும் கூட அவரிடத்திலில்லை.

அவர் கல்யாணம் செய்துகொண்ட புதிதிலெல்லாம் உதவிக்கு இன்னொருவரையும் இருத்திக்கொண்டு பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குப் போய்ப் பிடவை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். நாட்பட நாட்பட இயற்கையான வாழ்க்கைச் சோதனைகளால் தாழ்த்தப்பட்டு, உள்ளூர்ப் பொட்டணி வியாபாரியாக மாறிவிட்டார்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பொட்டணியைத் தலையிற் சுமந்து முழக்கோலைக் கையிலெடுத்தாரென்றால் இனி ஐந்தாறு மைல்கள் காற்தோல் தேய ”நடடாராஜா'' தான், பின்பு - மாலையில் விளக்கேற்றும் வேளையில் தான் சாப்பாட்டுச்சாமான்...காய்கறிகள் சகிதம் வீடு வந்து சேருவார்.

வாராவாரம் எப்படியோ கடைகளில் பிடலைத் தினுசுகள் வாங்கிச் சேகரித்துக் கொள்வார். அவளும் அப்பகுதி பெண்களின் ஓய்வு நேரக் கைப்பின்னலான 'ரேந்தை'களை வாங்கியும், சட்டைப் பிடவைகளுக்கு பூவேலைகள் செய்து கொடுத்தும் கணவனுக்கு ஒத்துழைப்பாள். 

''முதலாளி இன்ன வத:''

இக்குரலைக் கேட்டதும் சரிந்து தோளில் விழுந்திருந்த பிடவையை இழுத்துத் தலையிற் போட்டபடி கழுத்தை உயர்த்திப் பார்த்தாள். அங்கே வெற்றிலைக் காவியேறிய பற்களால் சிரித்தபடி ஒரு சிங்களவர் நின்றுகொண்டிருந்தார்.

“ஒவ் எதுவட என்ன” என்றவாறு துடைப்பக் கட்டையை மூலையில் வைத்துவிட்டு, உள்ளே போய் இரண்டாம் அறைக்கதவு இடையால் பார்த்தபோது அவர் உள்ளே வந்தமர்ந்து கணவனிடம் சுகம்விசாரிப்பதை அவதானித்தாள்.

அப்போது அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு வசதியாகப் போய் விட்டது. உடன் தேநீர் தயாரித்தவள் ஒரு கணம் தயங்கிய போது.. வந்திருப்பவருக்கு அதனைக் கொண்டுபோய்க் கொடுக்க வேறு யாரும் இல்லையே என்பதால் அவளாகவே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள்.

“உம்மா, ஆப்பா...உம்மா ஆப்பா'' விழித்தெழுந்து விட்டு மகள் ஓடிவந்து அவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிக்கவோ முகம் கழுவவோ போகாத நிலையில் அடம் பிடித்த போது அவளுக்குப் பலத்த கோபம் வந்து முட்டியது. பாவம்; சிறு பிள்ளைகளுக்கே உரித்தான இயல்புதானே.

அன்று ஞாயிற்றுக்கிழமை; நேற்றைய நாளும் எப்படியோ கழிந்து போய்விட்டது. இன்றாவது அவளைக் கட்டிக்கொண்டுபோய் நீராடாவிட்டால் பின்பு பாடசாலை நாட்களில் அதை நினைத்துப் பார்க்கவே இயலாதல்லவா? அதே நேரத்தில் வீட்டில் சேர்ந்திருத்த அழுக்குத் துணிகளும் கூடி அவளை மேலும் உசார் படுத்தியது.

அடுத்த கணம் “ வா மகன் குளிக்கப் போக...' 'சிறுவ னையும் அழைத்தபடி துணிமணிகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தயாரானாள்.

''எனக்கேலும்மா... பௌத்த நோவு''

எங்கிருத்துதான் அவனுக்கிந்த நோய் திடீரென்று வந்ததோ. குளிக்காமலிருக்க அவன் போடும் போலிக் காரணம்தான் அது என்பது அவளுக்குந் தெரியாதா என்ன ?

“குளிக்க வந்தாத்தான் ஆப்ப தார''

இந்த மந்திரத்தை அவள் சந்தர்ப்பம் பார்த்து உச்சரித்ததுதான் தாமதம்; தன்னிச்சையாக அவள் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

"அம்ஜத்து... அம்ஜத்து... வாளியக் கொஞ்சம் எடுக்கவா'' அடுத்த வீட்டை அண்மிக் குரல் கொடுத்தாள் ஹிதாயா.

"ஆ... நானும் குளிக்கப் போகணும். சொணக்காமக் கொணுவாங்கொ'' உள்ளேயிருந்து நிபந்தனையுடன் அனுமதி வந்தது.

இரவல் வாளியையும் சுமந்து கொண்டு நடக்கத் துவங்கினாள். பாவம், ஒரு பொண்ணாக இருந்த போதிலும், அவளுக்குத்தான் எத்தனைப் பொறுப்புகளும் வேலைகளும்.. விடிவுகாண முடியாத சிந்தனைகளும்...

இன்னும் மூன்றே மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. டாக்டரின் உத்தரவுப்படி ஜெஸில் நானாவை 'வீரலில கயரோக ஆஸ்பத்திரியில் கூட்டிக்கொண்டுபோய் சேர்க்க வேண்டும். குறைந்த கணக்கில் அதற்கு இருபத்தைத்து ரூபாவாவது கையிலிருக்கவேண்டும், 

இந்த ஒரே மாதத்திற்குள் கையில் மடியில் இருந்ததெல்லாம் விற்றுச் சுட்டு முடித்தாகிவிட்டது. யாரியமும் கேட்டுப் பெற்றுப் பழக்கப்படாத அவள் வேறெதுவுமே செய்ய முடியாத நிலையில் கடனுக்காவது கேட்டு வைப்போமென்று தான் நேற்று கண்ணாடி முதலாளியின் பெண்சாதியை நாடினாள்.

''உம்மா பகலக்கி மீன் வாங்கேம் சல்லில்ல'' என்பதுதான் அவனது பதில்.

வெட்கித்து வெட்கித்துக் கேட்டால் நிச்சயம் கிடைக்கு மென்ற நம்பிக்கையில் வாய் திறந்த முதல் முயற்சியே இப்படிப் படுதோல்வியை அரவணைத்தபோது அதற்குப் பிறகு இன்னுமொருவரிடம் போய் வாய் திறக்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை .

''எனக்கேல உ.ம்மா... பெனத்த நோவுது' ' கிணற்ற டியை அடைந்ததும் மீண்டும் சிறுவனின் போலிச்சாட்டு.

நிறைந்திருந்த பெண்களுக்கிடையே அவளும் நுழைந்து அவசர அவசரமாக துணிகளைத் துவைப்பதிலும் குளிப்பதிளும் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

நான்கு புறமும் மதில்கள் எழுப்பிப் பெண்களுக்கென்றே விஷேசமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுதான் அந்தப் பள்ளிக் கிணறு. இடை விடாது பெண்கள் கூடிக்கொண்டிருக்கும் அங்கு , வழமை போல அன்றும் உள்ளூர்ச் சம்பவங்களின் விமர்சனங்கள் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்குக் காது கொடுக்கும் நிலையில் அவளில்லை.

அவளுக்குத்தான் எத்தனையெத்தனை பிரச்சினைகள் முக்கால் மணி நேரத்துக்குள் துணிகளைத் துவைத்து மகனைக் குளிப்பாட்டி, தானும் குளித்துப் புறப்படத் தயாரானபோதுதான் அந்த வேண்டுகோள்.

“வாளியக் கொஞ்சம் தா-... நான் குளிச்சிட்டு அனுப்பியன்''

எதிரே, காதிலும் கழுத்திலும் தங்க நகைகள் பள பளக்க மார்பு ரவிக்கையைக் கழற்றியபடி நின்று கொண்டி ருந்தாள் கண்ணாடியின் முதலாளியின் மனைவி. 

அவள் சிறிது யோசித்தாள். இரவல் கொடுத்தவள் உடனே கொண்டுவந்து தரும்படி சொல்லியிருக்கிறாளே,

''புரியமில்லாட்டி எடுத்துக்கொணு போடி ஒன்ட அருமச் சாமன''

“இல்ல இது ஏன்டயல்ல; அடுத்தூட்டு வாளி.'' அவள் காரணம் காட்ட முனைந்தாள்.

*போதும் போதும் சாட்டு. நீ இப்ப பெரிய மனிசி தானே, '' அப்பெண் அனாவசியமாக வார்த்தைகளைப் பொழிந்ததை அவளால் பொறுக்க முடியவில்லை.

”நாங்க பெருக்கேயில்ல...சிறுக்கேமில்லே...எப்போதும் ஒரு மாதிரித் தான்''

"வாயப் பொத்து நாணயக்காரி... நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு, மறு சாதிய ஊட்டுள்ளுக்குப் போட்டுக் கொண்டு கூத்தாடியவள்...... ஓண்ட ரசம் பட்டுத்தானே ஒத்தனொத்தனா வாரானியள் ......',

அங்கு கிளர்ந்து வெடித்த சிரிப்பொலி அவளை இன்னும் அதிரச் செய்துவிட்டது. குனிந்தவர்களும், நிமிர்ந்தவர்களும் தண்ணீர் அள்ளுபவர்களும் முதுகு தேய்ப்பவர்களும்...அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கி யதைப் பார்த்ததும், அவர்களெல்லோரும் ''கண்ணாடி முதலாளி' யின் மனைவியின் குரலை ஆமோதிப்பது போலிருந்தது.

அவள் வேறு எதுவும் பேச முடியாதவளாக...பேசியும் பயனில்லையே என்பதால் மகனையும் கையில் பிடித்துக் கொண்டு அமைதியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

''மாறுசாதி ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு''

இந்தச் சொற்றொடர் மீண்டும் மீண்டும் அவள் செவியில் எதிரொலித்து அவளது உள்ளத்தைத் துகள் துகளாக்கிக் கொண்டிருந்தது.

இருக்கின்ற துயரங்களும் வேதனைகளும் போதாக் குறைக்கு இப்படியும் ஓர் அவமானமா?

இந்த ஏழு வருட காலமாக ஜெஸீல் நாளா அன்றை யன்றைக்குப் பணம்தான் சம்பாதித்து வந்தார் என்றுதான் அவள் நம்பியிருந்தாள் , ஆனால் அவர் பணத்தை மாத்திரமல்ல பல மனித உள்ளங்களைக்கூடச் சம்பாதித்துள்ளார் என்பதை. அவர் நோயாளியாக மாறிய இந்த ஒரே மாதத்துக்குள் அவள் நன்குணர்ந்து கொண்டாள். - ஒவ்வொரு நாளும் அவர் பழகிய பகுதிகளான ஊராமம், ரதம்பல, பிடதெலி முதலிய பகுதிகளிலிருந்து வந்து போய்க்கொண்டிருக்கும் சிங்களச் சகோதர சகோதரிகளே அதற்குச் சான்று.

சொந்தக்காரர்களென்றும் ஊரவர் என்றும் இருப்பவர் களெல்லாம் புறக்கணித்து வைத்திருக்கும் இந்நிலையில், பழக்கப் பிணைப்பால் வந்து போய்க் கொண்டிருப்பவர்களைக் கூட விட்டுவைக்காது கெட்ட கதைகளைத் தொடுக்கும் இவர்களின் விகாரத் தனத்தை யாரிடம் சொல்வது?

”உம்மா ...ஆப்ப..... உம்மா ஆப்ப'

வீட்டை அடைவதற்கும் சிறுவன் மீண்டும் கோரிக்கை விடுவதற்கும் சரியாக இருந்தது. 

முதன் முதலில் அவனுக்குக் காலைச் சாப்பாடு ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு , கணவனைப் பார்க்கமுன்னே ஓடிச் சென்றாள் ஹிதாயா.

அப்பொழுது தான் இருமி ஓய்ந்தாரோ என்னவோ? நெஞ்சை தடவியபடி சுருண்டு கொண்டிருந்தான் அவள் கணவன். அவரைக் கண்டதும் கிணற்றடியில் நடைபெற்ற சம்பவம் அவள் நினைவில் கீறல் போட்டது. 

’நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு... மாறுசாதிய ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு.......' 

ஹிதாயா பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டாள். சடுதியாக அவள் பார்வை கீழ்நோக்கிப் பதிந்தது. தோடம் பழங்கள் கீரைகறிகள் நிறைந்த கூடையொன்று அவள் கண்ணிற் பட்டது. அது காலையில் வந்தவர் கொண்டு வந்ததாகத்தானிருக்க வேண்டும். அவர் மாத்திரமா? ஒவ்வொரு நாளும் வரும் அத்தனை பேரும் இப்படித்தான்.

”ஹிதாயா....... எனத்தியன் பாக்கிய. அது வெள்ளன வந்த மாட்டின் மஹத்தயா கொணுவந்தது. அவரு என்னோட உசிரு மாதிரி. நான் போனா ஒரு மொழம் நேரந்தயாவது எடுக்காம அனுப்பியல்ல. நல்ல வரும்படிக்காரன். நான் வாணாண்டு செல்லச்செல்ல இதேம் தத்திட்டுப் பெய்த்தார்,'' என்று சொல்லியவாறு தலையணைக்கடியிலிருந்து அதனையெடுத்து நீட்டினார். ஆமாம் ஐம்பது ரூபாத் தாள். அவள் இதற்காகத்தானே நேற்று முயற்சித்து இனிமேல் அந்த முயற்சியே வேண்டாமென வெறுத்து, இன்னும் மூன்று நாட்களுக்குப் பின் கணவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல என்ன வழியென்று தெரியாமல் தவித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்,

அவனது நெஞ்சுப் பாரம் சட்டென்று இளகியது போன்ற உணர்வு.

இப்பொழுது அவளுக்குள் புது நம்பிக்கையொன்று சுடர் விடுகிறது.

*

(மல்லிகை . 1972 செப்டம்பர்.)

நன்றி : திக்குவல்லை கமால்

*

மேலும் வாசிக்க :

செருப்பு (சிறுகதை) - திக்குவல்லை கமால்

ஆயுள் தண்டனை – திக்குவல்லை கமால்


Sunday, October 24, 2021

நாடாக்காரர்கள் - சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதை

’கணையாழி’யின் ஆரம்ப இருபத்தைந்து வருசத்தில் தன் மனதில் இன்னும் நிற்கும் சிறுகதையாக ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய இந்தக் கதையைச் சொல்லியிருந்தார் சுஜாதா - தன்னுடைய ’கணையாழி கடைசிப் பக்கங்கள்’ நூலில் (Aug'1990). (கவிதை : ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம், நாவல்: மரப்பசு, குறுநாவல் : கடை) . 

இந்தச் சிறுகதை வெளியான ஆண்டு 1974.(மே - ஜூன்). 'பூர்ணாஹூதி’ தொகுப்பில் இருக்கிறது.

பல வருடங்களாக தேடிக்கொண்டிருந்தது கதை, தங்கை யாழினி மூலம் சென்றவாரம் கிடைத்தது. நண்பர்களுக்காக பகிர்கிறேன். காப்பி பேஸ்ட் செய்பவர்கள் நன்றியை யாழினிக்கும் அப்படியே சென்ஷிக்கும் சொல்லவும். நன்றி!
***

நாடாக்காரர்கள் - ராமச்சந்திர வைத்தியநாத்
------------------
தொரக்கண்ணு அவசர அவரசமாக தலைக்கு ஊத்திக் கொண்டான். நயினா வேறே மறப்புக்கு அப்பாலே நிண்ணுகிட்டு "டேய் சுருக்கா குளிச்சுட்டுப் போடா. அப்பாலே போனா எதனாச்சும் சாக்கு போக்கு சொல்லிடப் போறானுவ” என்று கத்திக் கொண்டு இருந்தார். ஒழச்சு ஓடாப் போன சந்திரிகாவை கஸ்டப்பட்டு கையில் பிடிச்சிண்டு மூஞ்சிலே அழுத்தி தேச்சுண்டான். ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து மூஞ்சிலேயும் தலிலேயும் படால் படால்னு அடிச்சிண்டான். அரை வேஷ்டியாலே புளிஞ்சு தொடச்சிண்டு, மறு தவா புளிஞ்சு இடுப்லே சுத்திண்டு உள்ளே போனான். 
கொடாப்புக்கு பொகை போடற மாதிரி வூடு பூரா பொகை. அம்மாக்காரி அடுப்படிலே உக்காந்துண்டு ‘உப்ப்பு உப்ப்பு' என்று ஊதிக்கினு இருந்தாள்.

பழைய முண்டா பனியனை எடுத்துப் போட்டுகிட்டு அதுமேலே கட்டம் போட்ட கருப்பு சட்டையை போட்டுக்கினு கெளம்பினான். தொரக்கண்ணு கிட்டே இருக்கிறதுலேயே அது ஒண்ணுதான் நல்ல சட்டை “டேய் தொரய் நாஸ்டா ஆவலே நாயிரு கடலே துண்ணுக்கிறியா? என்றாள். 'அது சர்தான் துட்டுக்கு எங்கே போவுது?” என்று அனாசியமாகப் பதில் கொடுத்தான். “இந்தா எட்டணா பில்லை சாமியை கும்பிட்டு போ. வேலெ கெடக்கும்.” என்று பாட ஆரம்பிச்சா.

அவன் அப்பா வேறு கோயிங்களை படலைத் தொறந்து வெளிலே விட்டுகினு இருந்தவர் பாத்துட்டார். "டேய் இன்னுமாடா போல? அவனுங்கள்ளாம் கரெக்டா கௌம்பி பூட்டானுங்க. இன்னும் தூங்கறியே சீக்கிரமா போடா சோம்பேறி” என்று கத்தினார்.

தொரக்கண்ணு நெதானமாவே அப்பாவை பார்த்து ஒரு முளி முளிச்சுட்டு,. “நாரா.... கய்தேப் பையா எனக்கு ஏண்டா நாய்னாவாப் பொறந்தே” என்று மனசிற்குள் திட்டிக் கொண்டே கௌம்பினான்.

பச்சபாஸ் டேனிங் வரைக்கும் போயிட்டா அங்கேந்து எழுவத்தியொண்ணைப் புடிச்சுடலாம். இல்லாக்காட்டி கார்டன் வரை போயிட்டா பார்டி ஸெவனையும் சேர்த்து புடிக்கலாம் என்று நெனச்சிகிட்டே பச்சப்பாஸ் வந்தான். எவனோ ஒத்தன் இப்பதான் எழுவத்தியொண்ணு ஒண்ணு போச்சு என்றான். பக்குனு ஆயிடுச்சு தொரக்கண்ணுக்கு. மணி இப்பவே ஏழாயிடுச்சு. ஏழரைக்குள்ளே போனாதான் இஞ்சினீயரை பாக்கலாம். வேலக்கி முதல்நாளே, கேக்கறதுக்கே லேட்டாப் போனா அவன் வூட்டு துட்டு போறா மாதிரி காயுவானுங்களே, இன்னொரு நாள் கய்தேனு சொல்லிட்டாங்கன்னா என்னா பண்றது. கிடுகிடுன்னு கார்டன் வரக்கிம் போயிட்டா அங்கேந்து எதுலாச்சும் பூள்ளாம் என்று நெனச்சான். வழிலே கடைலே ரண்டு சார்மினார் வாங்கினான். வழக்கமா தொரக்கண்ணுக்கு கணேஸ் பீடி இல்லாட்டி, சாது பீடிதான். இன்னக்கி நாயின பஸ்ஸுக்கா கொடுத்த எட்டணா, அம்மாக்காரி நாஸ்டாக்கு கொடுத்த முழு எட்டணா பில்லை மொத்தம் ஒரு ரூபா, பை நெறஞ்சிருந்திச்சு. பாக்கிச் சில்லறையை. ஆப் டிரவுசர் பாக்கெட்டில் போட்டுகினான்.

'ஒரு காலி பாக்கெட் இருந்தா கொடுப்பா அப்படி நசுங்கி பூடும்" என்றான். ஏதோ முணகின்டே பங்க்காரன் காலி பியர்ஸ் பாக்கெட்டைப் போட்டான். சிகரெட்டை பத்த வைக்கறதுக்கு பேப்பர் துண்டு பாத்தான். டப்பாலே துண்டுங்களே இல்லை. "யோவ் பொட்டி குடுய்யா" என்றான் அதிகாரமாகவே. "ஏன் வெளக்கு எரியறது கண்லே தெரில்லியா” என்றான் பங்க்காரன். “சரி பேப்பர் துண்டு கொடு பத்த வச்சுக்கறேன்” என்றான். உடனே பெரிய ஜோதி ஊறுகாய் அட்டை எடுத்துப் போட்டான். தொரக்கண்ணு அதை ரெண்டா, பெரிசா கிழிச்சான் அப்படியே தீவட்டி கொளுத்தற மாதிரி கொளுத்தினான். சிகரெட்டை பத்த வச்சுகினான். பங்க்காரன் முறைச்சுப் பார்த்தான்.

வேகமாக நடையைக் கட்டினான். வேஷ்டியை மடிச்சி ஆப் டிரவசர் தெரியிற மாதிரி கட்டினான். இப்படி கட்டிகினு நடந்தா பாஷ்டா நடக்க முடியும். தவுத்து படா ஸோவா வேறேயிருக்கும்னு தொரக்கண்ணுக்கு நெனப்பு. சேர்ந்தா மாதிரி இரண்டு இழுப்பு இழுத்தான். பொகையை நெஞ்சுலே அடக்கி மூக்கு வளியா விடறதுலே என்ன சொகம். கார்டன் ஸ்டாப்பிங் இன்னும் 25 கஜம்தான் இருக்கும். ஒரு 71 பஸ் காலியா வந்துச்சு. உடனே சிகரெட்டை கீழே போட்டுட்டு ஓல்டான் ஓல்டான்னு கத்திக்கிட்டே ஓடினான். பஸ் நிக்கவேயில்லை. இன்னும் அந்த பஸ் டிரிப் ஆரம்பிக்கலை போலிருக்கு. தொரக்கண்ணுக்கு கோவம் தாங்கலை. பஸ்ஸை விட்டது பெரிசுல்லே, பத்தவச்சு நாலு இழுப்பு இழுக்கறதுக்குள்ளே சிகரட்டை கீழே போட்டதுதான் இன்னும் வருத்தம்.

“தேவ்டியாப் பசங்க! பஸ் டிரைவர்னா கொம்பு மொளச்ச ஞாபகம். பப்ளிக்லாம் சேந்து இவனுகளை கொளுத்தணும், பச்சப்பாஸ் ஸ்டுடெண்ட்ங்க ஏன் தகராறு வலிக்கமாட்டாங்க இப்படி செஞ்சா?" இன்னோர் சிகரெட்டையும் புடிக்கணும் போல தோணிச்சு. பத்த வைக்கலாமா? இல்லாக்காட்டி பஸ் வந்துடுமா? யோசிச்சான். சரி பத்த வச்சுக்கலாம் நெனச்சு முனைலே இருந்த பங்க் கடைப் பக்கம் போனான். அதுக்கு 47 ஒண்ணு வந்துடுச்சி, கிடுகிடுனு ஓடிப்போய் ஏறிண்டான். கோச்பாட்டரி ஒண்ணு என்று சொல்லி பத்து பைசா டிக்கட் வாங்கினான்.

சுடுகாட்டுக்கு அடுத்த ஸ்டாப்பிங் குடிசை மாத்து வாரியம் ஸ்டாப்பிங். அதுலே எறங்கி பீச்சாங்கை பக்கமா கொடார்ஸ் தான் சொல்லிருந்தாரு நயினா. சுடுகாடு தாண்டின உடனே எழுந்து புட்போர்டிலே நிண்ணுகினான். "ஏன்யா யென் உசிரை வாங்கறீங்க மேலே ஏறி நில்லுய்யா”ன்னு டிரைவர் கூச்சல் போட்டான்.

வர வர டான்ஸ்போர்ட்டே மோசமா பூடிச்சி. நெச்சயமா ஜெகநாதபொரம் பசங்களை விட்டு ஒரு தபா கல்லடிக்கச் சொன்னா ரூட்லே சரியா பூடுவாங்க என்று தீர்மானிச்சு, "சர்தான் கண்ணு நாங்கள்ளாம் சர்வீஸ்காரங்கதான்" என்றான் தொரக்கண்ணு. ஸ்டாப்பிங் வந்துடுச்சு இறங்கினான். டிரைவரை ஒரு வெட்டு வெட்டிகினே நடந்தான். பொட்டிக் கடை ஒண்ணு இருந்தது. சைட்லே தினத்தந்தி போஸ்டர்லே பிரபல நடிகை கொலை என்று பெரிசா இருந்திச்சு. சார்மினாரை பத்தவச்சுகினு எவ செத்துருப்பா? விஜயாவா இல்லாக்காட்டி ஜெயலலிதாவா? யோசிச்சான். ஏன் ஒரு தெனத்தந்தி வாங்கி படிச்சா என்ன? காசுதான் இருக்கே. பதினாரு பைசாலே குடியா முளுவிடும். பெட்டிக்கடைலே ஓர் பாண்ட்காரர் வில்ஸ் பத்த வைச்சார். “ஸார் டைம் எவ்ளோ ?” என்றான். “ஏழு பத்து என்று சொல்லவே, இன்னும் இருபது நிமிசம் இருக்கே அதுக்குள்ளாறே படிச்சுகிட்டே போயிடலாம்னு தெனத்தந்தி ஒண்ணு கொடுய்யான்னு பதினாறு பைசாவைக் கொடுத்தான். அவருகிட்டேயே "ஏய்யா இந்த வேலைக்கி எடுக்கற ஆபீஸ் எங்கே இருக்கு?" என்று கேட்டான். “நேரே ஸ்டெயிட்டா போ அங்கேதான்...” என்றான் பெட்டிக் கடைக்காரன்.


ஜெயலலிதா செத்துருக்கக் கூடாது. வேற எவ செத்தாலும் பரவாயில்லைனு மனசிற்குள் சொல்லிக்கினே பேப்பரைப் படிக்க ஆரம்பித்தான். சிகரெட்டை கடைசி இழுப்பு இழுத்து மெறிச்சுட்டு படிச்சிகினே நடந்தான். எவளோ தெலுங்குக்காரி சைட் நடிகை. இப்பதான் தமிழ்லே புக் ஆவப் போறான்னு படிச்சதும் சப்னு ஆயிடுச்சு. கோவம் கோவமாக வந்தது. தெனத்தந்தி அயோக்கியன். பப்ளிக்கை ஏமாத்றானுங்க. டெய்லி டூப், ஆய்த்தன் ஒளிகண்ணு மனசிற்குள் கூவினான். பேப்பரை மடிச்சு அக்குளில் சொருகிக்கினான். கொடார்ஸ் தாண்டினான். வழிலே நாலைஞ்சு சிட்டுங்க 
போயிண்டிருந்ததுங்க. இங்கிலீஸ்லே புல்தினு போனாளுங்க. கடேசிலே ஆபிஸ்கிட்டே போனான். வாசல்லே ஏக கும்பல். பாத்தோண்ணியே இதான் இஞ்சினீயர் ஆபீஸ்னு கண்டுகினான்.

"ராசாராம் இஞ்சினீயர் ஐயரு, அவருட்டே சாமிக்கண்ணு மகன், கார்பேசன் கார்டன்லே இருந்தவருன்னாலே புரிஞ்சுப்பாரு. எந்த வேலயும் செய்றேன்னு சொல்லு” என்று நாயினா சொல்லியிருந்தார்.

நேத்து ராவிலே பயனி, கோயிந்தன் இவங்கள்ளாம் வந்து கோச் பாட்டரிலே ஆள் எடுக்கறாங்கணு சொன்னவுடனேயே, இஞ்சினீயர் ராசாராம்டே வேலை செஞ்சதையும் கட்டுபடியாவலேனு பின்னாடி கார்பேசன் கவுன்சிலர் மோசஸ் கிட்டே ஒரு மாச சம்பளத்தை ரண்டு மாசமா தரேன்னு சொல்லி வேலக்கி போனதையும். நாயினா தொரக்கண்ணுட்டே சொல்லிட்டாரு.

"நீ போய் நெலமையை சொன்னா உனக்கு வேலை நிச்சயமா தருவாருடா” என்று அடித்துச் சொன்னாரு நாயினா.

தொரக்கண்ணுக்கு பைத்தியக்காரத்தனமாயிருந்தது. எப்பவோ வேல பாத்த இஞ்சினீயர், டெய்லி எத்தினி கூலியை பாக்கறானோ? அவன் எவனோ? அவங்கிட்டே போய் தொங்கனுமேன்னு இருந்தாலும் பயணி, கோயிந்தா, ரண்டு பேரும் வேல சாதாரணமாவே சிபாரிசு காட்டிகூட நடக்கும்னு சொல்லவே எதுக்கும் ட்ரை பண்ணித்தான் பாக்கலாம்னுதான் இன்னக்கி கௌம்பினான். இவன் கெளம்பறதுக்கு முன்னாடியே கோயிந்தன், பயனி, இன்னும் நாலைஞ்சு பேர் இவன் ஏரியா பசங்க, வேல வெட்டி இல்லாம சுத்தறவங்க கெளம்பிட்டாங்க. ஆபீஸ் பின்னாடி அவங்கள்ளாம் வரிசைலே நிண்ணுகிட்டு இருந்தாங்க. பெரிய க்யூ 'ஒலகம் சுத்தும் வாலிபன்' கணக்கா இருந்தது. வளைஞ்சு வன பெரிசுதான். பின்னாலே நிண்ணு தெனத்தந்தி பூரா படிக்கலாம்னு கடைசி வரிசைலே போனான். அதுக்குள்ளாரே 'தொரக்கண்ணு தொரக்கண்ணு’னு யாரோ கூச்சல் போடவே திரும்பினான். கோயிந்தன் வரிசைலே முன்னாடி பத்து பதினஞ்சு ஆளுங்களுக்குள்ளே இருப்பான். கூப்பிட்டான். பின்னாடி அல்லாம் நாலஞ்சு பேர் மூஞ்சி தெரியாதவனுங்களாயிருந்தாலும் ஏரியா பசங்கதான். பயனி, மைக்கேல், ரங்கா எல்லாரும் இருந்தாங்க, கோயிந்தன் மெதுவா சொன்னான். “டேய் கய்தே இவ்ளோ நேரம் கயிச்சா வருவே? இந்த மாசத்லே நாப்பது ஆளுங்கதான் எடுப்பானாம். நீ யோக்யனா கடேசிலே போனா கெடைக்காது. நைசா என் பின்னாடி பூந்துடு."

"என்ன கோயிந்தா போலீஸ் பாக்றப்பவே ஆனந்த் க்யூலே பால் மார்றவனாச்சே இப்ப இந்த க்யூவா ப்ரம்மாதம்?” என்று நைசாய் பூந்தான். அதுக்குள்ளாரே பின்னாடி எவனோ பாத்துட்டான். 

"ஏம்பா தெனத்தந்தி வெள்லே வாய்யா. ஏய்யா பூர்ரே! இப்ப வந்துட்டு பூர்ரியே! நாய்மா இது? பின்னாடி நிக்கறவனுங்க மன்சாள்லே சேத்தியில்லியா?" என்று கூச்சல் போடத் துவங்கினான்.

பொல பொலன்னு காத்திருந்த மாதிரி ஏழெட்டு பேர் சேந்துட்டாங்க 'வெள்லே வாய்யா'ன்னு கத்தினாங்க. கூச்சலோட நிக்காம தடியன் ஒத்தன் முன்னாடி வந்து, "வாய்யா வெளிலே, போய் பின்னாடி நில்லுய்யா' என்று சொன்னான். தொரக்கண்ணுக்கு ஜமா தைரியம். “யோவ் கக்கூசு போயிட்டு வரேன். பூர்ரேங்கிரியே” என்றான். “யோவ் இவரு அப்பவே எங்கிட்ட சொல்லிட்டுப் போனார்ய்யா" என்றான் கோயிந்தன். தடியன் முன்னாடி வந்தான். அவன் பின்னாடி வேறே ஏழெட்டு பேர், தொரக்கண்ணைத் தொட்டு "யோவ் தெனத்தந்தி வெளிலே வாய்யா கடேசிலே போய் நில்லுய்யா” என்று திரும்பித் திரும்பி சொல்லிக்கிட்டே இருந்தான். பயனி தடியனைப் பாத்து, "யோவ் அந்த ஆள் மேலேந்து கையை எடுய்யா” என்றான். "எடுக்காட என்ன செய்வே?" என்று சொல்லிக்கிட்டே தொரக்கண்ணு சட்டை காலரை புடிச்சு இளுத்தான். அந்தப் பக்கம் கோயிந்தன் தொரக்கண்ணு கையை புடிச்சு க்யூலே தங்க வைக்கறா மாதிரி இளுத்தான். தடியன் இப்போ வேகமா இளுக்கவும் சட்டை டர்ருனு கிளிஞ்சுது. தொரக்கண்ணுக்கு ஆங்காரம் வந்தது. "டோய் சோமாறி சட்டையாடா கிளிச்சே" என்று தடியன் மேல் பாஞ்சான். டிரான்ஸ்போர்ட் மேலே கோவம், தெனத்தந்தி பேப்பர் காரனுங்க மேலே இருந்த கோவம் எல்லாம் சேந்து, தடியனுக்கு மூஞ்சிலே அடி செமுத்தியா விழுந்தது. தடியன்  அமுங்கறவனாயில்லே! அவனும் தொரக்கண்ணு முதுகிலே ஓர் குத்துவிட்டு சட்டையைப் புடிச்சி வேமாக "டாய் என்னயாடா அடிக்கறே”ன்னு இழுத்தான். தொரக்கண்ணுவின் கட்டம் போட்ட கருப்பு சட்டை தூளாகியது. அதுக்குள்ளாற பயனி தடியன் மேலே பாஞ்சான். தடியன் செட்டும் பாஞ்சானுங்க. ஆனா பயனி, கோயிந்தன், ரங்கா மூணு பேரும் சேர்ந்ததும் பூட்டானுங்க. மைக்கேல் மட்டும் சைட்லே தடியனுக்கு ஒண்ணு சரியா கொடுத்தான். ஒரே களபேரம். "ஜெகநாதபுரம் செட்டுடா எங்களையா மொறக்கிறீங்க" என்று கத்திகிணு, சோர்ந்து போய் கீழே உட்கார்ந்த தடியனை இன்னொரு குத்துவிட்டான் தொரக்கண்ணு.

“ஏன்யா வேலைக்கு வந்தீங்களா? இல்லே சண்ட போட வந்தீங்களா?" என்றான் ஒருத்தன். அவனும் வரிசைலே பின்னாடி நிண்ணுண்டுருந்தான். ஆனா, வயசானவனாயிருந்தான்.

“போய் கம்னு இருய்யா இப்ப இருக்ற வெறுப்லே நீயும் வாங்கிக்கப் போறே'' என்றான் மைக்கேல்.

அதுக்குள்ளார 'இஞ்சினீயர் வந்துட்டாரு வந்துட்டாரு' என்று முணு முணுக்கவே எல்லாரும் வரிசைலே நிண்ணாங்க. தொரக்கண்ணு, பயனி, கோயிந்தன் பக்கத்திலே நின்றான். பின்னாடி ரங்காவும் மைக்கேலும் இருந்தார்கள். தடியன் மெதுவா எழுந்து மொனவிக்கிட்டே பின்னாடி போனான்.

“யோவ் மொனவாதே இன்னும் சம்பளம் வாங்கிப்பே" என்று தெனாவட்டா சொல்லிண்டே இஞ்சினீயரைப் பார்த்தான் தொரக்கண்ணு. எவனோ அதுக்குள்ளரே அவருட்டே போய் வத்தி வச்சுட்டானுங்க போல இருக்கு. நேர இங்கதான் வந்தார்.

"ஏம்பா சண்டைக்கின்னா வந்தீங்க, வெளியிலே போயிடுங்க'' என்றார். தொரக்கண்ணு “குட்மானிங் சார், அந்தத் தடியன் தான் எங்ககிட்டே வலுச்சண்டக்கி வந்தான். அதோட இல்லாமே என் சட்டையைப் புடிச்சி வேறே கிளிச்சுட்டான்'' என்றான்.

ஏற இறங்கப் பாத்தார் இஞ்சினீயர். பயனி, கோயிந்தன், மைக்கேல், ரங்கா அத்தினி பேரையும் நோட்டம் விட்டார். "எந்த இடத்துலேந்துய்யா நீங்கள்ளாம் வரீங்க'' என்றார்.

“சேத்துப்பட்டு ஸார்'' இந்த வாட்டியும் தொரக்கண்ணுதான் பதில் சொன்னான்.

“சேத்துப்பட்டுனா ஜெகநாதபுரம் தானே?''

தொரக்கண்ணுக்கு பெருமையா பூடுச்சி. ஏரியா பத்தி ஆபீஸருக்கு கூட தெரிஞ்சிருக்கே என்று சந்தோஷப்பட்டான். "ஆமாம் சார் அதே தான்" என்றான்.

"அதானே பாத்தேன் வேலக்கி வந்த இடத்துலேயும் பொறுகித்தனம் பண்ற கேப்மாரிங்க ஜெகநாதபொரம் பசங்கதானே'' என்றார் தடியனுக்கு மூஞ்சி மேலே கொடுத்தா மாதிரி இவருக்கும் தாடைல ரெண்டு கொடுக்கலாமானு தொரக்கண்ணு நெனச்சான்.

"சார் மன்னிச்சுக்கோங்க'' என்றான் பயனி. கோயிந்தனும் கூடச் சேந்துண்டான். மைக்கேலும், ரங்காவும் கையைக் கட்டிக்கிட்டு பேசாம நின்னாங்க. தொரக்கண்ணு மட்டும் அலச்சியமா அவரை மொறச்சி பாத்தான்.

“நீங்க அஞ்சு பேரும் போயிடுங்க, ஒங்களுக்கெல்லா கொடுத்தா இந்த பாக்டரி உருப்பட்ட மாதிரிதான்'' என்றார் இஞ்சினியர்.

எவருமே அசையவில்லை. இந்தவாட்டி மன்சுக்கோங்க ஸார். இனிமே சண்டேல்லாம் போடமாட்டோம்" என்று அஞ்சு பேரும் சேர்ந்து சொன்னார்கள்.

இதை அவர் காதில் வாங்கிக்கிட்டது மாதிரியே தெரியலை. அதுக்குள்ளாறே ரயில்வே போலீஸ் ஒத்தன் வந்துட்டான். பாத்தா புல் தடுக்கி மாதிரி அவன் இருந்தான். “ஏம்பா யார்யா சண்டை போடறது? மரியாதையா வெளியே போயிடுங்க. மெயின் ரோட்லே போய் வச்சுக்கோங்க. இங்கெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அப்புறம் கேஸ் புக் பண்ணும்படியாக ஆயிடும்"னு சவுடால் பேசிக்கினு வந்தான். தொரக்கண்ணுவையும், அவன் கிழிஞ்ச சட்டை கசங்கி அக்குளில் சொருகியிருந்த தெனத்தந்தி, ஆப்டவுசர் தெரிய மடிச்சு கட்டிண்டு இருந்த வேஸ்டி இதெல்லாம் பாத்த உடனேயே புரிஞ்சிண்ட மாதிரி "நீ தானேய்யா போயிடு வெளிலே. உன்னோட எவன்யா வந்தான்?" என்று அவன் நீட்டுவதற்குள் பயனி, கோயிந்தன், ரங்கா, மைக்கேல் எல்லாரும் தொரக்கண்ணை பாலோ பண்ணினாங்க. கொஞ்ச தூரம் தாண்டல. மைக்கேலுக்கு கோவம் கோவமா வந்தது. அவன் வீட்லே பொண்டாட்டி, அவன் நாயினா, ரெண்டு புள்ளீங்க, இத்தினிபேரு இவனை நம்பிதான் அவங்க துண்றாங்க.

"தொரக்கண்ணு ஒன்னாலேதான் இந்த வெனயே'' என்றான் அழுத்தமாக.

"நா கம்னு கடேசிலே போய் நின்னுருப்பேன். கோயிந்தன் தானே...' என்று இழுத்தான் தொரக்கண்ணு.

"டேய், ஒனக்கு நல்லதெ நெனச்சதுக்கு இது போதாதுடா எனக்கு. ஏதோ நம்ப ஏரியா பையனாச்சே பழகினவனாச்சேன்னு கூப்பிட்டா... ” என்று பொரிந்து தள்ளினான் கோயிந்தன்.

"போங்கடா மயிரானுங்களா எனக்கு இது போதாதுடா” என்று தலேலையும் அடிச்சிக்கிட்டான்.

பயனி சமாதானப்படுத்த ஆரம்பிச்சான். "சரி பேசாம வாங்க. இன்னக்கி ஆக மொத்தம் எங்கூலி போச்சு'' என்றான்.

"நம்ப எல்லார் கூலியும் தான், ஆனா தொரக்கண்ணு இன்னக்கி புதுசு” என்றான் மைக்கேல்.

“சரி பேசாம வா'' என்று சொல்லிக்கிட்டே பெட்டிக்கடை முன்னாடி போய் நிண்ணுட்டான் தொரக்கண்ணு.

"ஒரு கட்டு சாது, ஒரு சீட்டா பொட்டி ஒண்ணு கொடுங்க'' என்று எட்டணா பில்லையை பிஸ்கட் பாட்டில் மூடிமேல வச்சான். “சாது இல்ல, காஜா தரவா?'' என்றான் கடைக்காரன். “கணேஷ் இருந்தாக் கொடு'' என்றான். பீடியை வாங்கிண்டான் “சீட்டா இல்ல கார் தரட்டுமா?'' என்றான் மறுபடி கடைக்காரன். “என்யா கடே..'' சொல்ல வாயெடுத்த தொரக்கண்ணு கஸ்டப்பட்டு அடக்கிண்டான். “பரவால்லே எதினாச்சும் ஒரு பொட்டி கொடு” என்றான். அதுக்குள்ளாரே ரங்கா, “தொரக்கண்ணு எங்கிட்டே பொட்டி இருக்கு வாங்காதே'' என்றான். பாக்கி இருபது பைசா திருப்பிக் கொடுத்தான் கடைக்காரன். “ஏம்பா கணேஸ் இருவத்தஞ்சுதானே? என்னிலேந்து முப்பது? என்றான் தொரக்கண்ணு.

"அதெல்லாம் ஒரு மாசமாவுது. இப்பல்லாம் இந்த ஏரியாலே முப்பதுதான்'' என்று வெட்டிப் பேசினான் கடைக்காரன்.

சரி இன்னக்கி நம்ப டைம் சரில்லே வாயை தெறக்கக்கூடாதுன்னு தொரக்கண்ணு தீர்மானிச்சான். எல்லாரும் கணேஸரை பத்த வைச்சிண்டாங்க. ரங்கன் மட்டும் அடிமடிலேந்து ஒரு பாதி அடிச்ச பியர்ஸைப் பத்த வச்சிண்டான். அவன் சிகரட்டைப் பாத்த உடனே தொரக்கண்ணுக்கு காலிலே பஸ் வரச்சே கீழே போடாம அனைச்சி வெச்சிருந்தா இப்ப ஒரு அரை தம்மாவது அடிக்கலாமேன்னு தோணிச்சி.

"அப்போ இன்னி பொழப்பு அம்பேல்தானா மச்சான்'' என்றான் கோயிந்தன்.

“இல்லேடா மாமா, கவலப்படாதே. தொரக்கண்ணு எக்ஸ்பர்ட், இருக்கான். இன்னக்கி ஆளுக்கு அஞ்சாவது தேறும்" என்றான் பயனி.

“இங்க ஸ்கூல் எதினாச்சும் இருந்துச்சுனா இங்கியே உட்காந்துக்கலாம்'' என்றான் கொஞ்சம் சந்தோஷமாகவே தொரக்கண்ணு.

“தொரை இன்னக்கி தெரிஞ்சுக்கோ? ஏரியா வுட்டு ஏரியா மட்டும் என்னக்கிம் வச்சுக்காதே. அது படா டேஞ்சர் புரிஞ்சுண்டியா'' என்றான் ரங்கா .

“அப்ப எங்கே தான் போவறது?''

“அப்படி கேளு தொரை. பச்சப்பாஸ் காலேஜ் பக்கமாவே போயிடலாம்" என்றான் பயனி.

“முதல்லே மொத்தம் எவ்ளோ துட்டுனு பாக்க வோணாமா?" என்று மைக்கேல் சொல்லவே பயனி கலெட் பண்ணினான். மொத்தம் மூணு தொண்ணூறு இருந்தது. சரி இது போதும். வா நடந்தே போயிடலாம் என்று பயனி சொன்னவுடன், தொரக்கண்ணுவும், கோயிந்தனும் ஒத்துக்காததால் கார்டன் வரை பஸ்லே போய் அங்கேந்து பச்சப்பாஸ் நடந்து பூடலாம் என்றான் ரங்கா .

கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு பீடி எல்லாருமே பத்த வச்சிண்டாங்க. இந்தவாட்டியும் ஒரு அணைச்ச பாதி சிகரட்டை ரங்கா எடுத்துப் பத்த வச்சிக்கிட்டான். பஸ் வந்தது. பயனி 'அஞ்சு கார்டன்’ என்று சொல்லி டிக்கட் வாங்கினான். டிரைவர் சீட் சைட்லே நாலு பேரும் எதிர்க்க பயனியும் உட்கார்ந்தனர்.

இரண்டு ஸ்டாப்பிங் தாண்டறதுக்குள்ளேயே பஸ் ரொம்பிடிச்சி. ஸ்கூல், வேலை, காலேஜ் போறவங்க கூட்டம். ஒரு கிருதாக்காரன் பேக் பாக்கெட்லேந்து பர்ஸ் ஒன்று பயனியைப் பார்த்து பல்லை இளிச்சிது. பயணி சாவதானமா எழுந்து, “ஸார் நீங்க உக்காருங்க” என்று வயதானவரைக் கூப்பிட்டான். அவர், “இல்லேப்பா நான் கார்டன்லேதான் எறங்கிடறேன்” என்று சொல்வதற்குள் கிருதாக்காரன் உக்கார்ந்துட்டான். பயனிக்கு என்னவோ போல ஆயிடுச்சி “சனியனே தூய்த்தெறி கெய்வா, கிருதா'' என்று மனசிற்குள் வண்டவார்த்தையில் திட்ட ஆரம்பித்தான். கார்டன் ஸ்டாப் வந்தது. பயணி நாலு பேருக்கும் முன்னாடியே ஜாடை காட்டிட்டான். எவருமே இறங்கவில்லை.

பஸ் பொறப்பட்டு, அழகப்பா நகர் தாண்டவே கண்டக்டர் பயனின் பார்த்துட்டான். “யோவ் கார்டன் வரை டிக்கட் வாங்கிட்டு தாண்டி வரியே! இன்னும் அஞ்சு பத்து காசு டிக்கட் வாங்குய்யா'' என்றான்.

“கார்டன் வந்தா சொல்லு எங்களுக்கு தெரியாதுண்ணு அப்பவே நான் சொன்னேனே! நீ தான் எங்களுக்கு சொல்லயே'' என்றான் ரங்கன்.

தொரக்கண்ணு திருதிருனு முளிச்சான்.

“பெரியவர் கார்டன்லேதானே எறங்கறதா சொன்னாரு, அவரோட எறங்கறதானே?'' என்று கிருதா சொன்னவுடன் அவனை வெட்டி எறியலாம் போல் இருந்தது பயனிக்கு. 'சரி வெட்டிப் பேச்சு வேண்டாம் இங்கே இறங்கிடுங்க' என்றான் டிரைவர். அவனுக்கு பேசிட்டே இருந்தா வசூலை பின் சர்வீஸ்காரன் அடிச்சிருவானேனு பயம்.

அஞ்சு பேரும் எறங்கினாங்க. "இவங்களுக்கு இதே வேலயாப் போச்சு'' என்று கண்டக்டர் தினம் வருகிறது மாதிரி அலுத்துக் கொண்டான். பஸ் பொறப்பட்டு ஸ்பீட் எடுத்தது. மைக்கேல் கண்டக்டரைப் பாத்து, “டேய் நன்னா உன்னை ஒதிக்கறேன்'' என்றான். அவன், காதுலே விழுந்திருக்க முடியாது.

“நம்ப ஐடியா எப்படி? நடை கொஞ்ச தொலவு தான்" என்றான் பயனி. அதுக்குள் ரங்கா, "நான் சமாளிக்காட்டி இன்னும் பேஜாரா பூட்டிருக்கும் என்றான்.

"ஏன் பயனி நடுப்பறே எழுந்துட்டே'' என்றான் தொரக்கண்ணு. கிருதாக்காரனை குறிவச்சத சொல்ல இஷ்டப்படலே பயனிக்கு.

“சும்மா கால் மரத்துப் போச்சு அதான்'' என்றான். 
"அதெல்லாம் இல்லே வேற ஏதோ'' என்றான் கோயிந்தன். 
"நீ நெனக்கற மாதிரி இல்லே கோயிந்து'' 
“கிருதாக்காரனை குறி வைக்கலேன்னு சொல்லு?'' 
"அதெல்லாம்''
"பயனி, ரைட் இல்ல எதினாச்சும் ஒரு வார்த்தை சொல்லு போதும்''
"ரைட் கோயிந்தா'' என்று முடிச்சான் பயனி. பயனியைத் தவிர மீதி நாலு பேரும் மனசிற்குள் சிரித்துக் கொண்டார்கள்.

"வெட்டி வார்த்தை எதுக்கு? மணி 9 ஆவப் போவுது, காலேஜ் பயலுக வர நேரம். குயிக்கா வாங்க'' என்றான் பயனி கொஞ்சம் மொறைப்பாக.

எல்லாரும் பீடி பத்த வச்சுக்கிட்டாங்க. இந்த வாட்டி ரங்கன் அனைச்ச பாதி பில்டர் சிகரட் குடிக்க ஆரம்பிச்சான். “தொரக்கண்ணு கிளிஞ்ச சொக்காயை அவுத்துடு. நான் உள்ளே மஞ்ச பனியன் போட்டுருக்கேன் அத அவுத்து தரேன் அதே போட்டுக்கோ'' என்றான் கோயிந்தன்.

பனியன் போட்டுட்ட பின்னர் சொக்காயை அழகாச் சுருட்டி தெனத்தந்தி உள்ளே வச்சு மறுபடி அக்குளில் சொருகிக்கினான்.

"மேக்கே காம்பவுண்டு சுவர் பக்கம்தான் நெறய நிழல் இருக்கு. அங்கே போயிடலாம். அதுக்குள்ளாற நான் மணி கடேக்கு போய் வரேன் என்று சொல்லிக்கிட்டே மைக்கேல், கோயிந்தன், ரங்கன், 

மூணுபேருட்டேயும் ஒவ்வோர் ரூபாயைக் கொடுத்துட்டு பயனி கடைக்கிப் போனான்.

பச்சப்பாஸ் காலேஜ்னு எதுக்கு பேர் வச்சானுங்க? கேட்டு, ஜன்னல் கதவு எல்லாம் பச்சையா இருக்கறதனாலேயா என்று நெனச்சிகினே தொரக்கண்ணு சுவர் ஓரமாக நிழலைப் பாத்து ஒக்காந்தான். கிழிஞ்ச சட்டையாலே கீழே மண் போகத் தட்டிட்டு அதை மடிச்சுப் போட்டுகிட்டு உட்காந்தான். எதிர்க்க தெனத்தந்தியை மடிச்சி பாய் மாதிரி விரிச்சான். உடனே பயனி வந்து விட்டான். நீட்டமான அரிக்கன் விளக்குலே கொளுத்தற மாதிரி ஒரு நாடாவையும் புது காப்பிங் பென்சில் ஒன்றையும் தொரக்கண்ணுகிட்டே கொடுத்தான்.

தொரக்கண்ணு நிமிந்தான். பின் நாடாவை ரெண்டா படிச்சு ரவுண்டா சுத்திக்கிட்டு, “வாங்க சார் சரியான டபுள் மடிப்பை இந்த நாடா மேலே பென்சில் வச்சு கண்டுபிடிங்க. ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு இத்தினி மடிப்லே எது நடு மடிப்னு கண்டுபிடிச்சீங்கன்னா டபுள் துட்டு ஒரு ரூவா வச்சா ரெண்டு ரூவா, ரெண்டு வச்சா நாலு. அஞ்சு வெச்சா பத்து'' என்று மந்திரம் மாதிரி சொல்ல ஆரம்பிச்சான். மெதுவா காலேஜ் ஸ்டூடன்ஸ் நாலைஞ்சு பேர் வேடிக்கை பாக்க ஆரம்பிச்சாங்க.

மைக்கேல் வந்தான். “யோவ் மடிப்பக் கரெக்டாக் கண்டுபிடிச்சாத் துட்டை கை மேலே தருவியா?'' என்றான்.

"ஏன்யா பென்சிலை இப்படிக் கொடு. நான் மடிப்பைக் கண்டுபிடிக்கறேன்''னு சொல்லி ஒரு ரூபாயை கீழே போட்டுட்டு பென்சிலை எங்கோ மடிப்பிலே சொருகினான் கோயிந்தன்.

பயனி மெதுவா பசங்க பாண்ட் பாக்கெட்டுகளைப் பாக்க ஆரம்பிச்சான். ரங்கா இந்தவாட்டி சாது பீடியை வாயில் வைச்சு புகையை இஸ்துகினே செவப்புத்தலையன் வரானானு நோட்டம் விட ஆரம்பித்தான்.
**

நன்றி : கணையாழி, சென்ஷி

*
தொடர்புடைய காணொளி :