Wednesday, August 29, 2012

கௌதம சித்தார்த்தனின் 'சோமு என்னும் ஈமு' - சில குறிப்புகள் : தாஜ்


இச் சிறுகதையை வாசித்து முடித்த நாழியில், '9940786278'-யை தேடி இழுத்து, நச். அந்த முனையில் கௌதம சித்தார்த்தன்! குழப்பமான குரலோடு 'ஹலோ... ?' . ஒவ்வொருதரமும் அழைக்கிற போதும் இப்படியான தடுமாற்றம் அவரிடம் எதிரொலிப்பதை நான் ரசிக்கவே செய்கிறேன். 'தலைவரே..., நான் தாஜ்!' என்றால், 'அட... நீங்களா? எங்கே ஆளையே காணல?' என்பார். இப்போதும் அப்படித்தான். 

முந்தாநாள்தான் அவரை அழைத்து, கால்காசுக்கு போறாத இலக்கியச் சங்கதிகளை, அரைமணிக்கும் அதிகம் பேசினேன். என்றாலும், அவரிடமிருந்து இப்படியானதொரு எதிரொலிப்பு என்பது...., அவரது ஸ்டைலாகவே போய்விட்டது!

முந்தாநாள் கிடக்கட்டும், காலையில் பேசி, பிற்பகலில் அவரை நான் அழைத்தாலும் கூட, 'ஹலோ...  ?' என்று ஆரம்பித்து.., என் அறிமுகத்திற்குப் பிறகு, 'அட... நீங்களா...? எங்கே ஆளையே காணலையே?' வியப்பு செய்த பின்தான் பேசுவார். நண்பர்களின் பெயர்களை செல்லில் பதிவு செய்ய மறக்கும் 'சோம்பல் நோய்' இது!

நவீன இலக்கியவாதிகளில் பலர், இந்த நோய்க்கு ஆட்பட்டவர்களே - என்னையும் சேர்த்து! நான் அத்தனை பெரிய 'ந.வி.' இலக்கியவாதி இல்லாது போனாலும், இந்த நோய் என் வயதின் செல்லமாக எனக்கும் வந்து சேர்ந்திருக்கிறது! நான் கிடக்கட்டும். இந்தப் படைப்பிலக்கியவாதிகள், அவர்களது 'படைப்பு மாந்தர்களோடு' சதா நேரமும் அளவளாவவே டைம் போதாது. அத்தனைக்கு குசலம் கொண்டு நெகிழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்தக் கூத்தில், நண்பர்களின் பெயர்களை வேலைமெனக்கெட்டு செல்லில் ஏற்றவும்தான் ஏது ஸார்... நேரம்? 

கௌதம சித்தார்த்தன் நவீன இலக்கியத்தில் எனக்கும் சீனியர். ஒரு காலத்தில், சிற்றிதழ்களை, 'க்ரியா'வில் தேடிப் பிடித்து வாங்கி, வாசிக்கத் துவங்கிய தருணம், தன் படைப்புகளில் அவர் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்! கௌதம சித்தார்த்தனையும் சேர்த்து, எல்லா 'கிங்'குகளையும் வாசித்து, அதனையெல்லாம் எழுத்தில் நான் கக்கத் துவங்கி, பேனாவையும் பேப்பர்களையும் துவம்சம் செய்துக் கொண்டிருந்த போது, அவர் தனது படைப்புகளை நிறுத்திவிட்டு, இலக்கிய ஸ்தலம் விட்டும், விடுதலை கொண்டுவிட்டார்!

பின் நவீனத்தை தமிழில் மிக அழகாக தொட்டு காமித்துக் கொண்டிருந்தாரே.... கௌதம சித்தார்த்தன் என்றொருவர்... அவர் எங்கே போனார்? என்று எல்லோரையும் மாதிரி நானும் தேட, கிட்டவில்லை அவர். அவர் எழுதிய பிரபல சிறுகதையான 'தம்பி'யை சப்புக் கொட்டி வாசித்தது நினைவுகளில் எழும் போதெல்லாம் நிலழாக கௌத சித்தார்த்தன் பின்தெரிந்து கொண்டிருப்பார்!

தனது படைப்புகளை சிறுகதையாக மட்டுமே படைத்தளித்தவர் கௌதம சித்தார்த்தன். கூடுதலாக, வளமான கட்டுரைகள் பலவும் எழுதி இருக்கிறார் என்றாலும், நாவல் எதுவும் எழுதவில்லை. என் நினைவுகள் ஊனம் கொண்டிருக்காவிடில், இது சரி.

தமிழ் இலக்கிய வட்டத்தில் எழுதப்படாத சட்டமொன்று உண்டு. நாவல் என்று ஒன்றை எழுதினால்தான் படைப்பாளி இங்கே அங்கீகாரம் பெற முடியும். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இஸ்டத்திற்கு கற்பனை காட்டுக்குள் 'கொம்பனை' துரத்தி வர்ணித்து கொண்டே மேற்கு தொடர்ச்சி மலைகளின் கீர்த்திகளை ஒருசேர கண்டமேனிக்கு பிணாத்தியபடிக்கு இரணூறு முண்ணூறு பக்கத்திற்கு ரொப்பி அதனை நாவலாக்கலாம். ஓ.கே., பெண்களை மாறி மாறி நிர்வாணமாக்கி எத்தனை நூறு பக்கத்திற்கும் நட்டுக் கொண்டிருக்கும் ஆண்குறியோடு வட்டமிட்டு வட்டமிட்டு அந்தப் பெண்களை குத்திக் கிழித்து காமம் சொட்ட, நாவல் மேல் நாவல் எழுதலாம். அங்கீகாரம் உண்டிங்கே. இப்படியான அங்கீகாரத்தை கௌதமன் சித்தார்த்தன் வலியத் தேடிப் பெறாது போனதினால்..., பெரிய பிரஸ்ஸுகள் அவரை தேடவில்லை. அவரும் அன்றைக்கு கவலைப்பட்டதாக தெரியவில்லை.

எட்டு வருடங்களுக்கு முன்னால், இலக்கியத்தின் பக்கம் தலையுயர்த்திய அவர், திரும்பவும் ஏனோ மாயமானார். இவர் எழுதிய பின் நவீனப் படைப்புகளின் சரியான கூற்றுகள் பிடிபடாமல் முட்டி மோதிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்..., இன்றைக்கு இலக்கிய உலகில் ஜாம்பவான்கள்! தோலில் லேப்டாப்பும், கையில் பாஸ்போர்ட்டுமாய் உலகம் பூரவும் தங்கள் இலக்கியத்தை பரப்பக் கிளம்பியிருக்கும் இந்த நாளில்,  சித்தார்த்தன் ஆரம்ப வகுப்பு மாணவனாட்டம் இலக்கிய வட்டத்திற்குள் மீண்டும் அட்டனன்ஸ் கொடுத்து, ஜரூர் காண்பித்துக் கொண்டிருக்கிறார்! எல்லா இலக்கிய சிற்றிதழ்களிலும் எழுத ஒப்புதல் தந்தவராக, எழுதியும் வருகிறார். அவரது வேகம் 'குமுதம்' வார இதழையும் விடவில்லை.

இந்த வார குமுதம் (29.8.2012) இதழில், அவரது 'சோமு என்னும் ஈமு' வெளிவந்திருக்கிறது. குமுதம் வாசகர்களை அவர் மனதில் கொண்டு இக்கதையை எழுதி இருந்தாலும், அவர்களே அறிந்து உணர முடியாததோர் பின் நவீனத்துப் பின்னலாக இதனை படைத்து, முத்திரை பதித்திருக்கிறார். கச்சிதமான வார்த்தைகளில் சொல் சுத்தமாக கதையை அவர் படைத்திருக்கும் விதம் மலைக்கவைக்கிறது. உயர்ந்த வகை நகைச்சுவை கதையோட்டத்தில் பிரமாதமாக வெளிப்பட்டிருக்கிறது. வாசிப்பவன் 'வாசிப்பு தரம்' கொண்டிருந்தால் மட்டுமே சிக்கக் கூடிய புரிதலாக அந்த நகைச்சுவை இருக்கிறது. தமிழ் சினிமாவைப் பற்றிய அவரது கிண்டல் ரொம்பவும் வித்தியாசம்! சமூகத்தையும் நம்ம சினிமாவையும் சரியாகத்தான் படம் பிடித்திருக்கிறார்!

இக்கதை, ஈரோட்டு ஈமு மாஃபியாக்கள் கைதில் சிக்குவதற்கு முன்பு எழுதியதாக அறியமுடிகிறது. கதையெழுதிய வேகத்தில் இது வெளிவந்திருந்தால்..., இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஓர் யானையும் அதன் குட்டியையும் முன்நிறுத்தி, ரஜினிகாந்தின் இமேஜை சிதைத்து தேவர் எடுத்திருந்த 'அன்னையோர் ஆலையம்' படத்தைப்பற்றியும், தமிழில் மிகச் சிறந்த பின்நவீனத்துவப் படமான 'மந்திரப் புன்னகை'யையும் இக்கதையில் குறிப்பு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருக்கும் பட்சம், 'சோமு என்னும் ஈமு' இன்னும் முழுமை கொண்டிருக்கும்.

- தாஜ்

***


சோமு என்னும் ஈமு
கௌதம சித்தார்த்தன்

// 'ரஜினிகாந்தைக் கொலை செய்வதென்று
தீர்மானித்துவிட்டேன்; ஆமாம்,
தமிழ் சினிமாவின்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத்தான்....' //

என் செல்பேசியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் வெலவெலத்துப் போனேன். ஒருவேளை தமாஷாக இருக்குமோ...? மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அப்புறம் தமிழ் சினிமாவின் கதி? சற்றைக்கெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தவனாக செல்பேசியில் அந்த எண்ணைத் தொடர்புகொண்டேன்.

"இன்னும் 25 நிமிடங்களில் உங்களை வந்து சந்திக்கிறேன்..." என்றது அந்த மர்மக் குரல். அட பெத்தராயுடா! அது இன்னும் ஆபத்தாச்சே.... உடம்பில் ஒரு நடுக்கம் ஏறியடித்தது. பயம் கலந்த பதட்டத்துடனும் தவிப்புடனும் காத்திருந்தேன்.

சரியாக 25ஆம் நிமிடத்தில் வந்து சேர்ந்தார் 'அவர்'. தோளில் தொங்கிக் கொண்டிருந்த குஞ்சலங்கள் பதித்த பை இந்திக்காரர் போல அடையாளப்படுத்தியது. நாளைக்கு போலீஸ் என்கொயரியில் கணினி முன்னால் அடையாளம் சொல்ல அமரும்போது சொல்வதற்கு வாகாக, அவரது அங்கலட்சணங்களை நோட்டம் விட்டேன். முப்பதைத் தாண்டிக் கொண்டிருக்கும் அவர், சாவகாசமாக அமர்ந்து தனது 'கனமான' பையைக் கழட்டி மேஜையின் மீது வைத்துவிட்டு ஆசுவாசமானார். 'பேக் கே பீச்சே கியா ஹை?'

அவரோடு பேசப்பேச என்னுள்ளிருந்த பரபரப்பு பறந்தோடிவிட்டது. பதட்டப்படாதீர்கள், கிச்சிலிபாளையம் வட்டார 'காக்கும் கடவுள் கோச்சடையான்' ரசிகர்மன்ற நிர்வாகிகளே, விஷயம் இதுதான்;

அப்பா - அம்மா பழனிமலையில் மொட்டையடித்து வைத்த பெயர் பழனிச்சாமி; கோலிவுட்டுக்காக நியூமராலஜி பார்த்து தானே சூட்டிக்கொண்ட பெயர் ஆதவன் பழனிசுவாமி. கடந்த 10 வருடங்களில் தமிழின் புகழ்பெற்ற இயக்குநர் செம்மல்களிடமெல்லாம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்போது ஒரு படம் இயக்கும் தணியாத தாகத்தில் அலைந்து கொண்டிருப்பவர்.

அந்தந்த காலகட்டத்திற்கேற்ப ஒவ்வொரு முறையும் ஒரு புதிய திரைக்கதையோடு கோலிவுட்டின் இண்டு இடுக்குகளிலெல்லாம் நுழைந்தவர். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு கதை;

"விக்ரம், வாசனையை நுகரமுடியாத வினோதமான நோய்கொண்டவராக இருக்கிறார். அமலாபால் தனக்குள் வைத்திருக்கும் இருவாட்சிப்பூவின் அற்புதமான நறுமணத்தை அவருக்கு நுகரக் கொடுத்து அந்த நோயை எப்படிப் போக்குகிறார் என்பது ஒரு கதை. சூரியாவுக்கு, ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு, உருவங்கள், காட்சிகள், எழுத்துக்கள் எல்லாமே இடவலமாகத் தெரிகின்றன. அவருக்காகவே ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார். கிளைமாக்ஸில் கொகெய்ன் கடத்தும் பிரகாஷ்ராஜ், ஜோதிகாவைக் கடத்துகிறார். ஜோதிகாவை மீட்கப்போகும்போது சூரியாவின் விசேஷமான கண்ணாடி உடைந்து போக, அவர் எப்படி மீட்கிறார் என்பது இன்னொரு கதை. தன்னைவிட வயது அதிகமான பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சிம்புவுக்கு ஒரு கட்டத்தில்...."

"சரி, ஆதவன் - இப்போ என்ன விசேஷம்?"

இப்படி ஒழுங்காய் கோலிவுட்டின் விதிகள் பிரகாரம் போய்க்கொண்டிருந்த ஆதவனின் வாழ்க்கையில் நுழைந்தார் நவீன தமிழ் இலக்கியவாதியான சேசோபா (சேரன் சோழன் பாண்டியன்).

ஆதவனுக்கு உலக இலக்கியத்தைக் கரைத்துக் குடிக்க வைத்தார். இருவரும் சோறு தண்ணியில்லாமல் உலக சினிமாவிலிருந்து, பின்நவீனத்துவம் வரை பிரித்து மேய்ந்தார்கள். சேசோபாவின் தொடர்ந்த வாதப் பிரதிவாதங்களில் ஆதவன் மெல்ல மெல்ல ஒரு பின்நவீனத்துவப் பார்வை கொண்ட தமிழ் சினிமாக்காரராக மாற்றம் பெற்றார்.

தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமா எடுப்பதென்ற முடிவில் தயாரிப்பாளரைத் தேட ஆரம்பித்தார் ஆதவன்.

தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமாக்காரராக தன்னை உருவகப்படுத்தினார்.

"நான், தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமாக்காரர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாதேவர்தான்" என்றேன். ஆதவன் வியப்புடன் என்னைப் பார்த்தார்.

அவரது முதல் படமான தாய்க்குப்பின் தாரத்திலிருந்து, புகழ்பெற்ற எம்.ஜி.ஆர். போன்ற படிமங்களை உடைத்து மிகச் சாதாரணமான, ஆடுமாடுகளை புகழேணியில் ஏற்றும் படிமங்களாக மாற்றுவதில் கில்லாடி அவர் என்றேன். புகழின் உச்சியிலிருந்த எம்.ஜி.ஆரை 'வேட்டைக்காரன்', 'நல்லநேரம்', போன்ற படங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் துணைநடிகராக மாற்றியிருக்கும் தொழில்நுட்பத்தை விளக்கினேன். 'ஆட்டுக்கார அலமேலு'வின் ஆட்டையும், வெள்ளிக்கிழமை விரத'த்தில் பாம்பையும் கதாநாயகர்களாக நடிக்கவைத்து அந்தத் தத்துவத்தை ஒரு வெற்றிச் சூத்திரமாக மாற்றியவர் தேவர் என்றும், படத்தில் நடித்த ஆட்டை திரையரங்குகளில் தோன்றவைத்து சூப்பர்ஸ்டார்களின் புகழை வஞ்சப்புகழ்ச்சியாக மாற்றியவர் என்றும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.

"அதுமட்டுமல்ல, நெம்பர், 2 ம் நீங்கள் ஆகமுடியாது. அவர் பேராசிரியர் அல்ல; இராமநாரயணன்."  

"தேவரின் தத்துவ நீட்சியாக ஜனரஞ்சக சினிமா தளத்தில் இந்தப் புகழ்மிக்க நாயக பிம்பங்களை மிகப் பெரிய நையாண்டி செய்தவர். குரங்கு, பூனை, எலி என்று அங்கதத்தின் பன்முகத்தன்மை கொண்ட நோக்கில் சமூகத்தை எள்ளி நகையாடியவர். சமூகத்தில் கட்டமைத்திருக்கும் புகழைக் கேள்விக்குள்ளாக்கியவர்" என்றேன்.

இவர்கள் எல்லோருமே ஒரு தீர்க்கமான தத்துவப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் அல்லரென்றும், எம்.ஜி.ஆர். கால்சீட் கொடுக்காமல் சொதப்பியதால்தான் தேவர் இந்த முடிவை எடுத்தாரென்றும், இதற்குப் பின்னணியில் இருப்பது வெறும் ஜனரஞ்சகச் சந்தைதானென்றும் விவாதித்தார் ஆதவன்.

நீங்கள் சொல்லும் இருவரும் இந்தப் படிமத்தை ஒரு சிந்தனாபூர்வமாகவோ, தத்துவமாகவோ உடைக்கவில்லையென்றும், தி.பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்திலிருந்து எம்.ஜி.ஆர். வழியாக இன்றைய ரஜினிகாந்த் வரை கட்டமைக்கப்படும் நாயக பிம்பத்தை உடைத்தால்தான் இன்றைக்கு அந்தப் படிமம் இப்படிப் பூதாகரமாக வளர்ந்திருக்காது என்று ஆவேசமாகப் பேசினார்.

"ரஜினிகாந்த் என்பது ஒரு சாகாவரம் பெற்ற படிமம். இதைப் பற்றி உலக சினிமாவின் தலைசிறந்த கோட்பாட்டாளர் கில்லஸ் டெல்யூஸ் என்ன சொல்கிறாரென்றால்..."

"சரி, ஆதவன், இப்போ என்ன விசேஷம்?"

இந்தப் பின்நவீனத்துவ எழவெல்லாம் தெரியாத, சிலகோடிகளைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் அள்ளித்தர வேண்டும். அதேசமயத்தில் தனது கொள்கைக்கேற்றபடியும் இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன பத்திரிகைகளும் பாராட்டித் தொலைக்க வேண்டும். உலகப்பட ரேஞ்சுக்கு எடுத்திருக்கான்யா என்று கோலிவுட் வாயைப் பிளக்க வேண்டும். கடவுளே! இப்படி எத்தனை 'வேண்டும்கள்'... ஆனால், இத்தனை மாங்காய்களையும் ஒரே கல்லில் அடித்துவிடும் வாய்ப்பு நம் பழனிசுவாமிக்கு நேர்ந்ததுதான் பேரதிர்ஷ்டம்!

அவரது தயாரிப்பாளர் தேடும் யாத்திரை ஈரோட்டில் கொண்டுவந்து சேர்த்தது. வளமான ஈரோட்டு மண்ணும் மனிதர்களும் அவருக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். ஆனால், ஈரோட்டுக்காரர்கள் அரசியலில் முதலீடு செய்வதில்தான் ஆர்வம் காட்டினார்கள். அடுத்தப்படியாக ஈமுக் கோழியில்.
ஒவ்வொரு முறையும் ஈரோட்டில் புதிய புதிய தொழில்கள் வடிவெடுக்கும். ஆண்மை விருத்திக்குப் பயன்படுவதாகச் சொல்லப்படும் மண்ணுளிப் பாம்பு வியாபாரம், நாகரத்தினக் கல் வியாபாரம், விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படுவதாகச் சொல்லப்படும் இரிடியம் வியாபாரம், சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கான அரியவகையான அகர்மரம் வளர்ப்பது, டேட்டா எண்ட்ரி. என்று யாராலும் கற்பனை செய்யமுடியாத கணித சூத்திரத்தில் பலகோடிகள் புழங்கும் வியாபாரங்கள். டேட்டா எண்ட்ரியை இப்படியெல்லாம் அபாயகரமான தொழில்துறையாக உருவாக்கலாம் என்ற சூத்திரத்தை ஒபாமாவிடம் சொல்லியிருந்தால் இந்தியர்களைக் கண்டு நடுங்கியிருப்பார்.

இந்தமுறை ஈரோட்டைப் பிடித்திருப்பது ஈ.மு.

ஈரோட்டின் ஈமுக் கோழி தொழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்ததை நொடியில் புரிந்துகொண்டார் ஆதவன்.

இதன் தாய்மண்ணான ஆஸ்திரேலியாவில்கூட இத்தொழில் இவ்வளவு முதலீட்டுடன் நடக்காது. பலகோடிகளையெல்லாம் தாண்டிய மில்லியன் டிரில்லியன் பணம் இத்தொழிலில் புழங்குகிறது. ஒரு ஈமுக் குஞ்சின் விலை 10,000. அதை ஆறுமாதம் வளர்த்துக் கொடுத்தால் ஒருலட்சம். அதைப் பார்த்துக் கொள்வதற்கு மாதாமதம் 10,000. பத்துக் குஞ்சுகளுக்கு மேல் வாங்கினால், 'விலையில்லாப் பொருளாக' இரண்டு பவுன் தங்கக்காசு. என்றெல்லாம் பல திட்டங்கள் மூலம் பணத்தை அள்ளிக் கொண்டிருந்தார்கள் ஈமு அதிபர்கள். நடிகை நமீதா, ஈமு வாடிக்கையாளர்களைப் பார்த்து 'மச்சான்ஸ்' என்று விளிப்பதும், பாக்கியராஜ் தனது வெள்ளந்தியான பேச்சில் ஈமு புகழ் பாடுவதும்... இவ்வளவு முதலீட்டில் உற்பத்தி செய்யும் இக்கோழிகளை என்ன செய்கிறார்கள்? இதன் நிழலாக நடக்கும் சீட்டாட்டத்தின் சூத்திரம் என்ன என்பதெல்லாம் ஈமு அதிபர்களுக்கும் பத்திரிகைகளுக்குமே வெளிச்சம். இன்றைய தேதியில் வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்துப் பத்திரிகைகளிலும் ஈமுவின் ஈஸ்ட்மென்கலர் விளம்பரம்தான்.

இதைப்பற்றி விரிவாக ஒரு சர்வே எடுத்துப் பார்த்து, ஈமு மார்க்கெட்லயே மிகமிகமிக... பெரிய தொழிலதிபராக, ஈமு மாஃபியாவாகத் திகழும் ஒருவரை மிகுந்த சிரமங்களுக்கிடையில் கண்டுபிடித்தார் ஆதவன். அதிபரின் உபயோகத்திற்கான கார்கள் மட்டும் 37 இருப்பதாகவும் அதில் பி.எம்.டபிள்யூ. 3 என்றும் தற்போது சத்தியமங்கலத்தில் ஒரு ஹெலிபேடு (வானூர்தித்தளம்?) கட்டியிருப்பதாகவும் கசிந்த செய்திகளின் பரவசத்துடன் அதிபரை அணுகினார். ஐந்து நிமிடம் ஒதுக்கிய ஈமு அதிபர், ஆதவனைப் பிடித்துப் போகவே, மேலும் 25 நிமிடங்கள் ஒதுக்கி தயாரிப்பாளராக இருக்க சம்மதம் தெரிவித்தார்.

"படத்திற்கு பட்ஜெட் எவ்வளவு?" என்றார் ஈமு அதிபர்.

"ஒன்றே முக்கால் கோடி..." என்றார் ஆதவன்.

"100 கோடி ரூபாயில் படம் எடுக்கலாம்; ஆனால், இரண்டு நிபந்தனைகள்" என்றார் ஈமு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா....

"நிபந்தனை 1. ஈமு கோழியைச் சுற்றித்தான் கதை இருக்க வேண்டும்.

நிபந்தனை 2. ரஜினிகாந்த் நடிக்க வேண்டும்."

கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா...

மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடிப் போனார் ஆதவன்.

இந்த நிபந்தனைகள் கோடம்பாக்க சினிமாக்காரர்களுக்கு வேண்டுமானால் பெரும் சிக்கலாக இருக்கலாம். ஆனால், பின்நவீனத்துவச் சிந்தனை கொண்ட ஆதவன் பழனிசுவாமிக்கு லட்டு.

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'நான் ஈ' என்னும் படம் அவரது மனக்கண்ணில் நிழலாடியது. 'இந்தப் படத்திற்குள் பின்நவீனத்துவச் சிந்தனை கொண்ட ஒருபார்வை இருக்கிறதென்று' சேசோபா அவரிடம் கதைத்த வார்த்தைகள் தலைக்குள் கிர்ரென்று ஏறின.

ரஜினிகாந்த் என்னும் சாகாவரம் பெற்ற படிமத்தைக் கொன்றே தீரவேண்டும்.

அடுத்த 55ஆவது நிமிடத்தில் 'சோமு என்னும் ஈமு' கதையோடு அவரைப் பார்த்துக் கதைசொல்லி அட்வான்ஸும் வாங்கிவிட்டார்.

"ஸாரி... தப்பா எடுத்துக்காதீங்க, கதையை உங்ககிட்டே சொல்ல முடியாது. ரஜினிசார் கதை... லீக்காய்டும்..." என்றார் ஆதவன்.

"அதனாலென்ன... பரவால்லே..." என்று தப்பித்தேன்.

"நான் உங்ககிட்டே வந்திருப்பதன் முக்கியக் காரணம்... நீங்க எனக்கொரு உதவி செய்யணும்..." என்றார்.

"சொல்லுங்கள் ஆதவன்..." என்றேன் கலவரத்துடன்.

ரஜினிகாந்த் எனக்குத் தெரிந்தவர் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். "அவரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தரவேண்டும்" என்றார்.

எனக்கு ரஜினிகாந்தைத் தெரியும் ஆனால், அவருக்கு என்னைத் தெரியாது என்ற ஜோக் ரொம்பப் பழசாகி விட்டதால், "எழுத்தாளர் ஒருவருக்கு ரஜினிசார் நன்கு தெரிந்தவர். அவரிடம் நீங்கள் முயற்சி செய்யுங்கள்' என்று அவரின் முகவரியைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

தமிழ் சினிமாவிற்கு விமோசனமே இல்லையா?

***
நன்றி: குமுதம் (29.8.2012) இதழ்.
தட்டச்சு & வடிவம்: தாஜ் | satajdeen@gmail.com
***
நன்றி : கௌதம சித்தார்த்தன் | E-Mail :  unnatham@gmail.com
***
கௌதம சித்தார்த்தனின் 'தம்பி'யை இங்கே பார்க்கலாம்.

Monday, August 13, 2012

காடாறு மாதம் நாடாறு மாதம் - கவிஞர் விக்ரமாதித்யன்


முன்குறிப்புகள் : தாஜ்

முன் குறிப்பு - 1

கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி என்கிற சிறப்புடன் விளங்கும் கவிஞர் விக்ரமாதித்யன், தனது வரலாற்றை குமுதம் தீராநதியில் எழுதத் துவங்கி இருக்கிறார். முதல் அத்தியாயம் இம்மாத (ஆகஸ்ட் - 2012) தீராநதியில் வெளிவந்திருக்கிறது. இந்த முதல் அத்தியாயம், அவரது நடு நிலைப் பள்ளிப் படிப்புடன் தொடங்குகிறது. திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட அவர், தான் படித்ததாக இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிற  'மாதிரவேளூர்' என்கிற கிராமம் எங்களது தாலுக்காவை சேர்ந்தது! சீர்காழியில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவு. நம்பி விக்ரமாதித்தியன், தனது இளம்பருவத்திலேயே இத்தனை தூர வித்தியாசத்தை காண்பித்திருப்பதென்பது இன்றைக்கு அவர் கவிதையில் காட்டும் வித்தியாசத்தை விட, தனித்துவம் மிக்கதாக இருக்கிறது!  

நம்பி, தனது இடைக்காலத்தில் வாழ்ந்த நீண்ட சென்னை வாழ்க்கைக்குப் பிறகு, தற்போது தனது மண்ணான திருநெல்வேலியில்தான் வாழ்ந்து வருகிறார். இருந்தும், சுமார் 50-வருடங்களுக்கு முன் தான் படித்த கிராமத்தை, நடுநிலைப் பள்ளியை, அதன் ஆசிரியர்களை, இனாமாக தங்க வைத்து உணவிட்ட விடுதி வாழ்க்கையை, அக்கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளை... என்று ஒன்றுவிடாமல் துல்லியமாக அவர் நினைவுக் கூர்ந்திருக்கும் விதம் வியப்பை தருகிறது! அதனை வெளிப்படுத்த அவர் உபயோகித்திருக்கும் நிஜங்களின் மொழியோ..., அவர் எழுதும் அந்த வரலாற்றுக் கூற்றுகளோடு நம்மை ஐக்கியப்படுத்திவிடுகிறது.

நம்பியை எனக்குத் தெரியும். அவரது கவிதை என்னை வசீகரித்ததை வைத்துமட்டும் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டங்களில், சென்னையில்  அவரை மாதம் தோறும் சந்தித்திருக்கிறேன். மணிக்கணக்கில் அளவளாவி இருக்கிறேன். அந்தச் சந்திப்பின் போதெல்லாம் அவர் சீர்காழிக்கு பக்கத்து கிராமத்தில் தான் படித்தப்  பள்ளிப்படிப்பு குறித்து சொன்னதில்லை. அவரது கவிதைகள், கவிதைச் சார்ந்து அவர் எழுதிய சில புத்தகங்கள், மற்றும் அவரது கட்டுரைகள் என்று  அவரை நிறையவும் படித்திருக்கிறேன். அதில் ஒன்றிலும் அவர், அந்தக் கிராமத்தைச் சுட்டி எழுதினாரில்லை.

இடைக்காலத்தில், இலக்கிய நண்பர்கள் சிலரால் அவரது சீர்காழி கிராமத்து பந்தத்தை அறிந்து, கூடுதல் தகவலுக்கு இங்கே எனது ஊரைச் சார்ந்த, நம்பியை அவரது பள்ளிப் பருவம் தொட்டு அறிந்த நண்பர் ஒருவரின் தபிபுயும் என்னுடன் படித்தவனுமான 'இறச்சிக் கடை' விஸ்வநாதனை கேட்டு விசாரித்து நேர் செய்து கொண்டேன். பேச்சுப் போக்கில் அவன், பல வருடங்களுக்கு முன் எங்களது ஊரிலுள்ள பிரபலமான முருகன் பிரஸில் எங்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை நினையூட்டினான். அந்த நினையூட்டல் நம்பியைப் பற்றியதுதான் என்று கூடுதல் தகவலாக சொன்னான். நான் என் நினைவுகளை பின்னோக்கி பரிசோதித்தேன்.

எனது இளம் பருவத்தில், எங்களது பகுதியில் இருந்த, 'சுத்தானந்த ஜோதி மறுமலர்ச்சி மன்றம்' என்கிற, 'S.J.மறுமலர்ச்சி மன்றம்' இஸ்லாமிய இளைஞர்களை கொண்ட சமூக சேவை அமைப்பில், நான் பொறுப்பில் சில காலம் இருந்தேன். இதன் மிகப் பெரிய பணி, இஸ்லாமிய திருமணங்களின் போது, கல்யாண விருந்துப் பறிமாறுவதும், கூடுதல் கறி கொட்றாவோடு திருப்தியாகச் சாப்பிடுவதும், மாப்பிள்ளை வீட்டாரிடமும், பெண்வீட்டாரிடமும் அதையும் இதையும் சொல்லிப் பிடுங்கும் நூறு, இருநூறு பணத்தில் எல்லோருமாக கட்டாய சச்சரவுடன் பங்கு பிரித்துக் கொள்வதுமாக இருக்கும்.

உப பணியாக, மாப்பிள்ளை ஊர்வலத்தின் போது பங்கெடுத்து , இறைவனை / இறைத்தூதரை கோரஸாக புகழ்பாடும் சடங்கும், மணத் தம்பதியினரை நூறு வயசு வாழ நிர்ப்பந்தித்து (வயசுக்கு மீறிய) வாழ்த்திப் பாடும் இன்னொரு சடங்கும் எங்களுக்கு உண்டு. அப்படிப் பாடும் பாடல்கள், பெரும்பாலும் அக்காலக்கட்டத்தில் பிரபலமான சினிமா பாடல்களின் மெட்டில் புனைந்ததாகவே இருக்கும். இப்படி சில பல பாடல்களை அன்றைக்கு நானும் எழுதியதுண்டு. பின் நாளில், என்னைவிட வயதில் குறைந்த, ஆனாலும் நட்புவட்டத்தில் இருந்து கொண்டிருந்த நண்பர் சாதிக், 'இப்படியான பாடல்களை எல்லாம் நீங்க எழுதாதிங்கண்ணே' என்று அழுந்தச் சொன்ன பொழுதில், அது சரியென்று எனக்கும் பட , அந்தப் புனித மிக்க பாட்டுக்குப் பாட்டெழுதும் போக்கைவிட்டேன். சாதிக் ஏன் அப்படிச் சொன்னார் என்பதும், உடனே நானும் அதனைக் கைவிட்டேன் என்பதும்  இங்கே இப்போது வேண்டாம்.

அப்படி பாட்டுக்கு பாட்டெழுதிய காலத்தில், அந்தப் பாடல்களை சில நேரம் பிரஸில் அச்சில் பதிய வேண்டியும் இருக்கும். அதையொட்டி, எங்கள் ஊரின் பிரபல்யமான முருகன் பிரஸுக்கு எழுதிய பாடல்களை கொண்டு சென்று தரவும், அது அச்சு ஏறும் முன் புரூப் பார்க்கவும் செல்ல வேண்டி இருக்கும். அப்படி ஒருதரம் புரூப் பார்க்கப் போன போது, அந்தப் பிரஸில், நண்பன் 'இறச்சிக்கடை' விஸ்வநாதன் உட்கார்ந்திருதான். தனது அண்ணனுக்கு வேண்டிய ஒருவர் இந்த பிரஸில் கவிதைப் புத்தகம் ஒன்றை அச்சிடுகிறார் என்றும், அதை எழுதிய அந்தக் கவிஞரோ சாராயம் குடித்துவிட்டு தன் வீட்டுத் திண்ணையில் மல்லாந்து கிடக்க, நான் அது விசயமாக ஒன்றும் புரியாமல் இங்கே உட்கார்ந்திருக்கிறேன் என்றான்.

முழுமை பெறாத அந்தக் கவிதைத் தொகுப்பின் பக்கங்களை எடுத்து வாசித்துப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. முத்தியதோர் பைத்தியம், சாராயம் போதை தலைக்கேறிய நிலையில், தமிழ் வார்த்தைகளை அடுக்கு வரிசையில் அடுக்கு அடுக்காகப் பிரித்து எழுதி வைத்திருப்பது மாதிரி பட்டது. அந்த நண்பனிடம் நான் உரிமையோடு மனதில் பட்டதைக் கேட்டேன், "அந்த ஆள், என்ன பைத்தியமா?". நான் கேட்டதுதான் தாமதம், முருகன் பிரஸ் பணியாட்கள், அதன் உரிமையாளர் என்று அனைவரும் சிரித்தார்கள். என் நண்பனும் சிரித்தபடி நெளிந்தான். நான் அப்படி தடிமனாய் கிண்டல் அடித்த அந்த எழுத்து புதுக் கவிதை சார்ந்தது என்றோ, அதை எழுதிய கவிஞன்தான் இன்றைக்கு நான் மதிக்கும் கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி என்றோ, அன்றைக்கெனக்கு தெரியாது!

முன் குறிப்பு - 2:

தன் சார்ந்த வரலாற்றை, தனது இடைக்காலத்தில் எழுதிய கவிஞர் கண்ணதாசன், அதற்கு அவரது பார்வையில் மிகப் பொருத்தமான, நுட்பம் சார்ந்த தலைப்பாக 'வனவாசம்' என்று பெயரிட்டிருந்தார். அதாவது, திராவிட இயக்கத்தில் அவர் தங்கி இருந்த காலத்தை அப்படி அவர் கருதினார், அல்லது அப்படி அவர் நமக்கு சுட்டிக்காண்பித்திருந்தார். இன்றைக்கு, தனது வாழ்வின் பெரும் பகுதியை இலக்கியம் இலக்கியம் சார்ந்த அலைச்சல் என்றே துலைத்துவிட்ட கவிஞர் விக்ரமாதித்தியன், தன் வரலாற்றுப் பதிவுக்கு 'காடாறு மாதம் நாடாறு மாதம்' என்று தலைப்பிட்டிருக்கிறார். என் பார்வையில் இத்தலைப்பு கவிஞர் கண்ணதாசன் தன் வரலாற்றுக்கு இட்டத் தலைப்பையும் மிஞ்சுவதாக இருக்கிறது! இத்தனை விசேச நுட்பம் கொண்ட தலைப்புகள், கவிஞர்களுக்குதான் சாத்தியம் போலும்!  


***
காடாறு மாதம் நாடாறு மாதம் - கவிஞர் விக்ரமாதித்யன்

மாதிரிவேளூர். கொள்ளிடக் கரையோரமுள்ள சிற்றூர். சிதம்பரம் - சீர்காழி - பிரதான சாலையில் - வல்லம்படுகை பாலம் கடந்ததும் - ஆனைக்காரன் சத்திரம்; அதிலிருந்து மேற்கே மூன்று கல் தொலைவு. கொள்ளிடம் என்று ரயில்வே ஸ்டேஷனும் கிழக்கே மகேந்திர பள்ளி போகிற பாதையில் இருக்கிறது. 63-64 கல்வியாண்டின் போது, மாதிரவேளூரில், முத்துசுவாமி விஸ்வநாதன் நடுநிலைப்பள்ளி என்று இலவச உணவு விடுதியுடன் ஒரு பள்ளி தொடங்கினார்கள்.

எங்கள் அத்தான் (பெரியம்மா மகள், அக்கா கணவர்) ஆனைக்காரன் சத்திரம் சரகப் பள்ளித் துணை ஆய்வாளராக இருந்தார்கள். அப்போது, எஸ்.எஸ்.எல்.சி. வரையிலுமாவது படிக்கட்டும் என எண்ணி, அங்கே என்னைச் சேர்த்து விட்டார்கள். மூன்று வருஷம்; ஏழு, எட்டு, ஒன்பதாம் வகுப்பு அந்த கிராமத்தில்தான்.

ஊருக்கு வடக்கே ஆறு; அதற்கும் முன்னாகவே வாய்க்கால்; கிழக்கே மாதலீஸ்வரர் கோயில்; மேற்கே பெருமாள் கோயில்; தெற்கே பள்ளிக்கூடம்; சுற்றிச் சூழவும் வயல். மின்சாரம் கிடையாது; பேருந்து விடவில்லை. வண்டி, சைக்கிள் வரும் போகும்; மழைக்காலத்தில் ஆனைக்காரன் சத்திரம் பாதை சேறும் சகதியுமாக கிடக்கும்; போக முடியாது.

'கப்பல்காரச்செட்டியார் வீடு' என்பார்கள், சீர்காழியில்; அவர்களுக்கு மாதிரவேளூரில் நிறைய நிலம்; ஒரு பண்ணை வீடு; அங்கேதான் அறுவடைக்காலத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். பண்ணை வீட்டுக்கு அண்டையில் இருந்த காலி இடத்தில்தான் கீற்றுக்கொட்டகை போட்டு வகுப்பறைகள்; ஏற்கனவே இருந்த ஒரு கட்டிடத்தில் எட்டாம் வகுப்பு. பக்கத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் சிலரும் பெண்பிள்ளைகள் பண்ணை வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்; அக்ரஹாரத்திலுள்ள ஒரு வீடுதான் பையன்கள் தங்குமிடம்.

சாப்பாடு, பண்ணை வீட்டின் ஹாலில். காலையில் நொய்க்கஞ்சி அல்லது பழையது; மதியமும் இரவும் சோறு; ஏதாவது ஒரு குழம்பு. ஒரு கறி, மோர். "அன்னம்பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்.." தேவாரப்பாடல் சொல்லி, "பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்" குறள் கூறி முடித்த பிறகுதான் சாப்பிட வேண்டும்; நெற்றியில் திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது; மற்ந்துபோய் விபூதி பூசாமல் வந்துவிட்டு, கரும்பலகை எழுத்தை அழித்துத் தீற்றிவிட்டு வருவதெல்லாம் நடக்கும்.

ஆஸ்டல் பையன்களில் அநேகம் பேரும் சீர்காழி தாலுக்காவைச் சேர்ந்தவர்கள்; பெரிய பையன்கள்; சனி - ஞாயிறானால் தவறாமல் ஊருக்குப் போய்விடுவார்கள்; வீட்டை நினைத்து மறுகுபவனைப் பார்க்க முடியாது.

காலையில் எழுந்ததும் வாய்க்காலுக்குத்தான் போயாக வேண்டும்; கோடைக்காலத்தில் ஆறு. வழியில் ஒரு பலசரக்குக் கடை; எந்நேரமும் சிலோன் ரேடியோ பாடிக் கொண்டிருக்கும்; அதுதான் ஒரே ஒரு பொழுதுபோக்கு அந்த ஊரில்.

தலைமையாசிரியர் சம்பந்தம் பிள்ளை, பள்ளியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் உயர்விலும் அக்கறை கொண்டவர்; கல்வி உதவித் தொகை கிடைக்கச் செய்வது, பேச்சு, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பது, 'ஸ்டடி ஹவர்ஸ்' ஏற்படுத்தி மேற்பார்வையிடுவது, மாணவர் மன்றம் அமைத்து ஊக்குவிப்பது எல்லாவற்றிலும் தலைப்பட்டு நடத்துவார்; வருஷா வருஷம் தவறாமல் நூலகத்துக்கு புஸ்தகங்கள் வாங்குவார்; அவர் தான் தெரிவு செய்வார். தமிழாசிரியர் பூவராக சாமியைக் கலந்து கொண்டு உயர்நிலைப் பள்ளியாக்கி, மாவட்டத்தில் ஓர் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளில் முனைப்பாக இருப்பார்.

நூலகப்பொறுப்பு, சுசீலா டீச்சர்; வகுப்பு நேரம் இல்லாத சமயம் பார்த்துதான் புஸ்தகங்கள் கேட்டு வாங்க முடியும்; அப்படிப் படித்தவைதாம், தமிழ்த் தென்றல் திரு.வி.க.,மறைமலையடிகள், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.ப.விஸ்வநாதம், பன் மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், சிலம்புச் செல்வர் மபொ.சிவஞானம், டாக்டர் மா.இராசமாணிக்கனார், டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் முதலான தமிழறிஞர் நூற்களெல்லாம்.

எழுத முற்பட்டதும் மாதிரவேளூரில்தான். 'சுதேசமித்திரன்' நாளிதளில் 'மாணவர் மலர்' என்றொரு பகுதி; பிரதமர் நேருவின் மறைவை நினைத்து, ரோஜா, கண்ணீர் சிந்துவதாக ஓர் உருவகக் கதை, ஒரு கவிதையெல்லாம் வெளியிட்டு, பாரதியார் கவிதைகள், மனோன்மணியம் அனுப்பியிருந்தார்கள்; பள்ளி முகவரியுடன் வந்திருந்ததனால், வகுப்பாசிரியர் கலியபெருமாள் முதல்... தலைமையாசிரியர் வரை நல்ல மதிப்பு.

மாணவப்பருவம்தானே, வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. விடுமுறை நாள்களில் ஆச்சாள்புரத்திலுள்ள அக்கா வீட்டுக்குப் போய்விடலாம். (பாடல்பெற்ற ஸ்தலம்; திருஞான சம்பந்தருக்குத் திருமணம் நடந்த ஊர்; தேவாரத்தில், திருநல்லூர்.) என்னுடைய 'வெறுஞ் சோற்றுக்குத்தான்' கதை, மாதிர வேளூர் ஆச்சாள்புரப் பின்புலமும் வாழ்வனுபவமும் உள்ளதுதான்.

அறை நண்பர்களான கல்யாணசுந்தரம் அவருடைய ஊரான பனைமங்கலத்துக்கும் காந்தி, கொண்டலுக்கும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்; எங்களுடன் படித்த சாமியப்பன், தென்னந்தோப்புக்கு நடுவில் இருக்கும் தங்கள் குடியிருப்புக்குக் கூட்டிக் கொண்டு போய் இளநீர் பறித்துக் கொடுப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்; இளைய தமிழய்யா தங்கராசுவின் அழைப்பில், இதேபோல உள்ளூர்க் குடியிருப்புக்கு சென்றிருந்த போது, கேக், மிக்ஸர், தேநீர் விருந்தளித்து, பல்லடம் மாணிக்கம் கவிதைத் தொகுப்பும் தந்து அனுப்பி வைத்தார். (பல்லடமும் அவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகத் தமிழ் பயின்றவர்கள்.) சீர்காழி / சிதம்பரம் கோயில்களுக்குக் கூட்டிக் கொண்டு போன நண்பர்களும் இருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தன. கலியபெருமாள் சார், தன் திருமணத்திற்குப் பையன்கள் எல்லோரையும் அழைத்திருந்தார்; சீர்காழியில் ஒரு சத்திரத்தில் நடந்த அந்த கல்யாணத்துக்கு நாங்கள் போயிருந்தோம்.

சாயங்காலம், கோயிலில் 'பிரேயர்' உண்டு; குருக்கள், தேவாரம், திருப்புகழ், பாரதியின் 'தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி' எல்லாம் பாடுவார்; கூடவே நாங்களும் பாட வேண்டும். ஆஸ்டல் லீடர், அட்டெண்டன்ஸ் எடுப்பார்.

பிரேயர் நேரத்தில் இல்லையென்றால் மீல்ஸ்-கட்; அதிகபட்சத் தண்டனையே இதுதான். சனி, ஞாயிறில் ஊருக்குப் போய்விட்டுப் பிந்தி வந்தால், பையன்கள் சண்டை போட்டு அடித்துக் கொண்டால், சிதம்பரம் போய் சினிமா பார்த்துவிட்டு வந்து மாட்டிக் கொண்டால், இந்த மாதிரி தவறுகளுக்கு மீல்ஸ்-கட்தான் தண்டனை.

காலையில் என்றால் பிரச்சனையில்லை; இருக்கவே இருக்கின்றன இரண்டு டீக் கடைகள்; இட்லி கிடைக்கும்; எப்படியோ சாப்பிட்டுவிடலாம்; ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் ஒன்றும் கிடையாது. தட்டைக் கழுவிக் கொண்டு வந்து, சாப்பிட உட்கார்ந்த பிறகு எழுந்து போக வேண்டியதெல்லாம் நேரும்.

ஸ்காலர்ஷிப் வருகிற நாள்களில், பையன்கள், விடுதிக் காப்பாளரிடம் அனுமதி பெற்று, சிதம்பரம் போய் யூனிஃபார்ம் துணி, நோட்டு, புஸ்தகம் எல்லாம் வாங்கிக்கொண்டு, படமும் பார்த்துவிட்டு வருவதுண்டு; மற்ற நேரங்களில் எப்படிக் கேட்க முடியும். எதற்கும் துணிந்த பையன்கள் சில் பேர் புதுப்படம் வந்ததும் போய்ப் பார்த்துவிடுவார்கள். சனி ஞாயிறில்.

சிதம்பரம் செல்வதில் ஒரு கணக்கு இருக்கிறது. ஒன்றரை மணிக்கெல்லாம் மத்தியச் சாப்பாடு; முக்கால் மணி நேரத்தில் போக வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பதினைந்து நிமிஷம்; வல்லம் படுகைக்குப் பத்து நிமிஷம்; சிதம்பரம் இருபது நிமிஷம்.

கொள்ளிடத்தில் தண்ணீர் கொஞ்சமாகத்தான் போகும்; மணலாக விரிந்து கிடக்கும் ஆறு; ஆழமான இடமென்றால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கிக் கரையேறி, நடுத்திட்டுக்கு நடந்து, மறுபடியும் இப்படியே சென்றால் எதிர்கரை; கிழக்கே திரும்பிப் போனால் வல்லம் படுகை; எட்டி நடந்தால் சிதம்பரம்; வடுகநாதன் தியேட்டர் வந்துவிடும். இதேமாதிரி திரும்பி வந்தால் பிரேயரில் கலந்து கொள்ளலாம்; எதற்கும் ஆஸ்டல் லீடரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் போவார்கள்; பிரேயர் முடிவதற்குள் வந்துவிட்டால் அட்டெண்டன்ஸ் போட்டு விடுவார்.

'காதலிக்க நேரமில்லை' ரிலீஸ்; ஞாயிற்றுக்கிழமை மதியம் நானும் மணி என்கிற நண்பனுமாகப் புறப்பட்டுவிட்டோம். எல்லாம் சரியாக இருந்தன. பாலையாவின் நடிப்பு, நாகேஷின் காமெடி, ரவிச்சந்திரனின் இளவயது, காஞ்சனாவின் தோற்றம் என்று பேசிக் கொண்டே வந்துவிட்டோம்; படம் பார்த்த சந்தோஷம்.

கால் மணி நேரம் லேட்டாகி விட்டது எப்படியோ; ஆனாலும் ஒரு சமாதானம், பிரேயர் முடிவதற்குள் போய்விடலாம்; என்ன ஆகிவிடும். ஆனால் ஆகிவிட்டது. சோதனைக்கு, அன்றைக்குப் பார்த்து வார்டன் வந்துவிட்டுப் போயிருக்கிறார்.

ஸ்டடி - ஹவர்ஸ் முடிந்து சாப்பிடப் போனோம்; பயந்தது போலவே நடந்தது. வார்டன், எங்கள் பெயரை வாசித்துவிட்டு, 'மீல்ஸ்-கட்' என்று அறிவித்தார்; அப்படியும், "பிரேயர்க்கு வந்துவிட்டோம், பிந்திவிட்டது." என்று சொல்லிப் பார்த்தோம். விதிகளும் ஒழுங்குமுறைகளும் மாற்ற முடியாதவைதாமே. அன்றிரவு..., அன்னம் பாலிக்கப்படவில்லை.

***
தட்டச்சு & வடிவம்: தாஜ்
***
நன்றி: தீராநதி ( ஆகஸ்ட்/ 2012) , விக்ரமாதித்யன்
நன்றி : தாஜ் | http://www.tamilpukkal.blogspot.com/  | satajdeen@gmail.com
***

Saturday, August 4, 2012

நோன்புக்காலம் : ஆசிப்மீரான் கதையும் ஹமீதுஜாஃபர் செய்தியும்

ஆசிப் மீரானின் இரவுகள் -  சே.. அப்படி சொன்னா தப்பு - ஆசிப்மீரானின் சிறுகதை (இரவுகள்) சுட்டி : http://asifmeeran.blogspot.com/2006/10/blog-post_03.html

ஜாபர் நானாவின்  செய்தி கீழே வருகிறது.

***

நோன்புக்கால செய்தி - ஹமீது ஜாஃபர்

"அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்" (அல் குர்ஆன் 3:135)

"யாரேனும் தீமையைச் செய்து அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால், அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்" (அல் குர்ஆன் 4:110)

"அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்" (அல் குர்ஆன் 5:74)

இந்த மூன்று வசனங்களையும் எழுதி அதன் கீழே அவ்வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இச்செய்தியை கொடுத்துள்ளார்கள்.

"நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உலக காரியங்களுக்காகவே அதிக நேரத்தை செலவிடுகிறோம். அதில் படைத்த இறைவனை நினைப்பது என்பது மிகக் குறுகிய நேரமே. ஐவேளை தொழுகையில் மட்டுமே இறைவனுடைய நினைப்பு வருகிறது. பள்ளியைவிட்டு வெளியே வந்தால் உலக நினைப்புகளில் மூழ்கிவிடுகிறோம். இந்த அளவுக்கு ஷைத்தானின் சூழ்ச்சி நம்மை இறை நினைப்பைவிட்டு பாராமுகமாக்கிவிடுகிறது. இதனால் வாழ்வில் பல தவறுகளை இழைக்கின்றோம். நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கின்றான். எனவே அவனிடமே பாவமன்னிப்புத் தேடவேண்டும் என்றும், நாளை மறுமையில் அவனிடமே மீளுதல் உண்டு என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடவேண்டும். மேற்கண்ட வசனங்களும் இதையே உணர்த்துகிறது.

மேலும் செய்த தவறை மறுபடியும் செய்யாமல் அல்லாஹ்விற்கு பயந்து அதிலிருந்து முழுமையாக விடுபட்டு நன்மையான காரியங்களின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் இவ்வசனங்கள் உணர்த்துகிறது."

இப்படி எழுதப்பட்ட தவ்ஹீது ஜாமாத்தின் வாராந்திர நோட்டீஸில் என் கண்ணில் பட்டது. மேலே கூறப்பட்ட வசனங்களுக்கு ஏதோ செய்தியை சொல்லவேண்டும் என்ற நோக்கம் தெரிகிறதே ஒழிய வேறு பொருத்தப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

அவ்வசனங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் சொல்லும் செய்தியை ஆராய்ந்தால் எதோ எல்லோரும்  ஐவேளைத் தொழுகையில் மட்டும் இறைவனை நினைப்பது போலவும் மற்ற நேரங்களில் உலக காரியங்களால் இறைவனை மறந்து வாழ்ந்துக்கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது.

நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் இறைத்தன்மை பின்னிப்பிணைந்து கிடக்கிறதே! நாம் யாருக்காக வாழ்கிறோம்? யாருக்காக உழைக்கிறோம்? யாருக்காக நேரத்தை செலவு செய்துகொண்டிருக்கிறோம்? எல்லாமே குடும்பம், சமுதாயத்தைச் சார்ந்தல்லவா நிற்கிறது. தனியாக இறைவனை நினைத்தால்தான் இறை சிந்தனையா? தொழும்போது எங்கே இறை சிந்தனை இருக்கிறது? "அல்லாஹு அக்பர்" என்று தக்பீர் கட்டியபின் இறைவன் எங்கே இருக்கிறான்? இறைவனை அனுப்பிவிட்டு அடுத்து செய்யவேண்டிய வேலையைப் பற்றிய சிந்தனையிலல்லவா சுழன்றுகொண்டிருக்கிறோம். வெறும் இறை சிந்தனை மட்டும் இருந்துகொண்டிருந்தால் வாழ்க்கை என்னாவது? தன்னை நம்பி இருக்கும் குடும்பம் என்னாவது?

இந்த ஆலிம்கள், மார்க்க அறிவு வேறு உலக அறிவு வேறு; மார்க்க வாழ்க்கை வேறு உலக வாழ்க்கை வேறு என்ற கோட்பாட்டில் நிற்பதால் வருகின்ற விளைவு பாமரர்களின் மூளையை மழுங்கச் செய்கின்றது. காலங்காலமாக போதிக்கப்பட்டு வருவதினால் இன்றுவரை முஸ்லிம்கள் பின்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இறைவன், தொழுகையை நிர்ணயித்திருப்பது விழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான். தூங்கும் நேரத்தில் தொழுகை கடமையாக்கப் படவில்லை. அதே நேரத்தில் தொழுதுக்கொண்டே இருங்கள் என்று சொல்லவுமில்லை. "(ஜும்ஆ) தொழுகை முடிவு பெற்றால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள்" (அல் குர்ஆன் 62:10). அருள் என்றால்...? அது வியாபாரமாகவும் இருக்கலாம், விவசாயமாகவும் இருக்கலாம், அவரவர் பணியாகவும் இருக்கலாம், நியாயமாக விதிக்கப்பட்ட எதுவுமாக இருக்கலாம்.

உலக நினைப்பே ஷைத்தானின் சூழ்ச்சி என்கிறார்கள் இந்த ஆலிம்கள்.

அது எப்படி?  "அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான்..." (அல் குர்ஆன் 2:29) என்கிறான் மனிதனைப் பார்த்து, அப்படி இருக்கும்போது உலக நினைப்பு எப்படி ஷைத்தானின் சூழ்ச்சியாகும்?. இவ்வுலகில் பிறந்தபின் உலக நினைவே இல்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமா? நீ எதற்காகப் பிறந்தாய்? இறைவனை சதா நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவா? அதற்குதான் மலாயிக்கத்துக்கள் என்று சொல்லக்கூடிய வானவர்கள் இருக்கிறார்களே! இறைவனின் அனைத்துப் படைப்புகளிலுமிருந்து தனித்தன்மையான 'இறைவனின் பிரதிநிதி' என்ற சிறப்பு மனிதனுக்கு மட்டும்தானே இருக்கிறது. அப்படியானால் நீ இவ்வுலகில் சிறப்பாக வாழவேண்டாமா? உன் வாழ்வு மற்றுள்ளோருக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டாமா? உன் குடும்பம் மட்டுமல்ல உன் சமுதாயமும் பயனடைய வேண்டாமா? தொழுகையில் மட்டுமே இறைவனை சிந்திக்கமுடியும் என்றால்... இது ஏமாற்று வேலையல்லவா? மனிதன் செய்யும் ஒவ்வொரு நற்பணியிலும் இறைவனின் அருள் பின்னிக்கிடக்கிறது. அவனது அருள் இல்லாமல் ஒரு காரியமும் செய்யமுடியாது. "என்னுடைய அருள் இல்லாது ஒரு நன்மையான காரியம் செய்யமுடியுமா?" என்று கேட்கும் இறைவன், தீய வழியில் செல்பவர்கள் குறித்து சொல்லும்போது "அவர்களை அவ்வழியில் விட்டுவிடுகிறேன்" என்கிறான்.

ஷைத்தானின் சூழ்ச்சி என்பது, இது தவறு என்று தெரிந்து அதை வேண்டுமென்றே செய்தால் அது சூழ்ச்சி. அப்படிப்பட்ட நிலைக்கு பாவமன்னிப்பு தேவைப்படுகிறது; தெரியாமல் ஒரு காரியத்தை செய்துவிட்டு அது தவறு என்று தெரிந்தால் அதற்கு பாவமன்னிப்பு தேவைப்படுகிறது; தவறு என்று தெரிந்து மீண்டும் மீண்டும் செய்தால் அதற்கும் பாவமன்னிப்பு தேவைப்படுகிறது. உலக நினைப்பே ஷைத்தானின் சூழ்ச்சி என்று சொல்வது அபத்தமானது. அதே நேரம் உலகில் மலிந்துகிடக்கும் வீணான சிந்தனைகளில் மூழ்கிக்கிடப்பது, வாழ்க்கைக்கு தேவையற்றவைகளில் நேரத்தை செலவழிப்பது, மற்றான் தோட்டத்து மல்லிகைக்கு ஆசைப்படுவது இதல்லாம் நீங்கள் சொல்லும் ஷைத்தானின் வழிகெடுத்தல் ஆகும்.

மனிதனைத் தன்னுடைய பிரதிநிதியாக்கிக்கொண்டிருந்தாலும் "மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்" (அல் குர்ஆன் 4:28). எனவே தவறு செய்வது இயற்கையாகவே அமைந்துவிட்டது. தவறை உணர்ந்து திருந்திக்கொள்வதற்கும், தவறு நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்வதற்கும், தன் மனதை அலையவிடாமல் கட்டுப்படுத்துவதற்கும் இறைவணக்கத்தை ஏற்படுத்தி அதில் ஒன்றான நோன்பை நமக்களித்து, அந்த நோன்பு காலத்தில் உடம்பை, மனதை, ஆசையை, இச்சையை, சுயத்தேவையை கட்டுக்குள் கொண்டுவரும் வாய்ப்பை நமக்களித்துள்ளான். இதுவே நோன்பின் சிறப்புகளில் ஒன்றாகும்.

***

நன்றி : ஹமீது ஜாஃபர் http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com
நன்றி : ஆசிப்மீரான்
Wednesday, August 1, 2012

நான் கண்ட நாலு பேய்கள் - 1 : மஜீத்

கொழுந்து விட்டெரிகிறது சிரியா; கூடவே ’தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ தீ - இன்னும். இந்தக் கொடுமையில் , பேய் கட்டுரையை அனுப்பி ’காட்டுங்க நானா’ என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் வேண்டும்! மஜீதுக்கு அது இருக்கிறது. பயப்படவே மாட்டார். 'ஆச்சி' என்றால் மட்டும் அச்சமோ அச்சம். இருக்கும்தானே...

இன்னொரு வேடிக்கை செய்தார். நண்பர் பேயோன் குறிப்பிட்ட ‘பன்னிரு விழிகளிலே’ பாடல் வேண்டும் என்று நான் கேட்டதற்காக,  தேடியெடுத்து  சுட்டி கொடுத்தவர், ‘ரமலான் சேவை!’ என்று தலைப்போடு அனுப்புகிறார்.  என் அப்பனே முருகா, காரைக்குடி மஜீதை மட்டும் காப்பாத்துப்பா!. .

சரி.  “பேய் .. இருக்கிறதா ? இல்லையா” என்று கொத்தமங்கலம் சுப்பு கேட்டதற்குப் “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, அது மட்டும் உண்மை” என்று புதுமைப்பித்தன் கூறினாராம். புதுமைப்பித்தன் சிறிதுகாலம் காரைக்குடியில் - மஜீத்விட்டுப் பக்கம் - வேலைபார்த்தது உண்மை என்று இதன்மூலம் தெரிகிறது.  நானும் புதுமைப்பித்தன் ரகம்தான். அய்யய்யோ, எழுத்தில் அல்ல, பயத்தில். இதை ‘தஹிரியமா’ எங்கேயும் சொல்வேன். 

பேய்க்கு முன்னுரை வழங்க பிசாசுதான் சரியான ஆள் என்பதால் தாஜை இங்கே இழுக்கிறேன். ஃபேஸ்புக்கில் நம்ம கவிஞர் கேட்ட கேள்வியால்தான் நண்பர் கிரிதரனிடமிடமிருந்து சுவாரஸ்யமான பதில் கிடைத்தது. ‘மானுடராகிய நாம் சிந்திக்கின்றோம். அவற்றால் அவ்விதம் சிந்திக்க முடிவதில்லை. சிந்திப்பதால் இருப்பு பற்றிய அச்சம், மரணம் பற்றிய அச்சம் எம்மைக் கற்பனை செய்ய வைக்கின்றது. விளைவு: ஆலமரத்து முனி, இரத்தக்காட்டேரி போன்ற பல்வகைப் பேய்கள். இவ்விதமெல்லாம் கூறுகின்றேனேயென்று, என்னை யாமத்தில் மயானத்துக்குச் செல்லும்படி மட்டும் சவாலுக்கு அழைத்து விடாதீர்கள்!’ என்று சொல்லியிருந்தார். (முழுதாக பிறகு பதிவிடுகிறேன்). இந்தக் கட்டுரையும் கிடைத்தது. இலக்கியக் கட்டுரை அல்ல என்பதால் பயமில்லாமல் வாசித்தேன்; பதிவிடவும் முன்வந்தேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பேய் பிடித்தாட்டுகிறது. எனக்கு Blogபேய், மஜீதுக்கு Facebook பேய். தாஜுக்கு கவிதைப் பேய். அஸ்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் நான்தான் அசல் பேய்! எப்படி விரட்டுவது? சொல்லுங்களேன். - ஆபிதீன்


***


முதலில் பிசாசின் பாராட்டு மெயிலைப் பாருங்கள் :

மஜீத்...
ரொம்ப அருமை.
எழுத்திலே ஒரு புதையல் எடுத்திருக்கே.

நீ கண்ட காட்சிபற்றி
என் கருத்து.

நாம் உணரும் காட்சிகள்
கண்ணே பார்த்தாலும்
மூளைதான் காண்கிறது.
பாமரர்கள் இந்த நிலையை சட்டென ஒப்ப மாட்டார்கள்.

நாம் காணும் காட்சிகள்
ஒவ்வொருவருக்கும்
சின்னச் சின்ன வித்தியாசத்தில் தெரியும் என்பதுதான் உண்மை.
ஒருவன் விழுந்து விழுந்து ரசிக்கும் பெண்
இன்னொருவன் பார்வையில் ஒன்றுமில்லை என்று ஆவதும் கூட இதனால்தான்!

தவிர,
இந்தப் பார்வை இரண்டு நிலைப்பட்டது.
ஒன்று,
நாம் கண்களால் காணும்போதே மூளை நமக்கு விரித்துக் காட்டுவது.

இரண்டு,

நம் மூளை நமக்கு நம் உணர்வுகளுக்கு ஒப்ப காட்சிகளை விரித்துக் காட்டுவது.

இது கண்களை திறந்திருக்கும்போதும் நடக்கும், கண்களை மூடிக் கொண்டிருக்கும்போதும், தூங்கும்போதும் நடக்கும். கலைஞன், கண்களைத் திறந்துக் கொண்டோ, மூடிக் கொண்டோ ஒரு காட்சியை ’விஸுவலாக’ டெவலப் செய்து பார்ப்பது இப்படித்தான்! நாம் தூங்கும் போதும் கனவு காண்பது இப்படித்தான். ஆக, நம் கண்ணுக்கு காட்சி தெரிந்தது என்பதை பேயைக் கண்டேன் என்கிற நிலையோடு குழப்பிக்கொண்டு பார்ப்பது அத்தனைக்கு சரியாக இருக்காது.

இங்கே நீ அந்த தவறை செய்யவில்லை. குழந்தைப் பருவத்தில் கண்ட மிரட்சியை மிரட்சியாக மட்டுமே எழுதி இருக்கிறாய். மேலும் நீ சொல்லாமல் விட்டதைத்தான்  உனக்கு எழுதி இருக்கிறேன்.

குறிப்பாய் குழந்தைகள் டார்ச் அடித்து விளையாட்டை நீ தொட்டுக் காமித்திருப்பதில் சொக்கிப் போனேன். அப்படியான டார்ச் லைட் அத்துப் போன இன்றைய காலகட்டத்தில், இந்த உன் வர்ணனை ஓர் ஆவணம்.
வாழ்த்துக்கள்.

-தாஜ்

***


நான் கண்ட நாலு பேய்கள் - 1 : மஜீத்

நான் பேயை வெகு அருகில் கண்டவன். கிட்டத்தட்ட மூன்றடி தூரத்துக்குள். நான் பேய்ப்பயம் காட்டப்பட்டு வளர்க்கப்படவில்லை. குழந்தைப்பருவ பயமுறுத்துதல்கள் கூட  ‘களவாணி‘ வந்து புடிச்சுக்கிட்டுப் போய்ருவான் என்றுதான் இருக்கும். பூச்சாண்டி மாக்காண்டியெல்லாம் தெருப்பயலுக சொல்லித்தான் தெரியும். என் களவாணியின் கற்பனை உருவம் தெரியுமா? உடலெல்லாம் பச்சிலைபோன்ற வஸ்துவால் பூசிக்கொண்டிருக்கும் ஒல்லியான, கையில்  ‘ஏதோ‘ ஆயுதம் வைத்திருக்கும் ஒரு மனிதன் (வெட்டும்புலி தீப்பெட்டியில் இருப்பவர் போல)

சில வருடங்களுக்குப் பிறகு சாதாரண மனிதர்கள்தான் களவானிகள் என்பதைத் தெரிந்தும், கண்கூடாக அறிந்தும், நம்ப சிரமப்பட்டவன் நான். அப்போ பேயைக் கற்பனை செய்தவர்கள் பாடு?

அதிருஷ்டவசமாக பயம் காட்டாமல் வளர்க்கப்பட்டவன் நான். அதைவிட அதிர்ஷ்டம் நான் பயப்படுவேனோ என்று என் தந்தை பயப்படாதது.

முதல்பேய்:

மருத்துவரான என் அத்தா ஆகாசவாணியில் 11 மணிவரை கர்னாடக சங்கீதம் - ரேடியோ சங்கீத சம்மேளனம் – (சங்கீதம்லாம் தெரியாது; இருந்தும் விரும்பிக்கேட்பார்) கேட்டுவிட்டுத் தூங்கும் பழக்கமுள்ளவர். சில சமயங்களில் நடு இரவில் திடீரென்று சிகரெட் (ஒருநாளைக்கு குறைந்தது 5 பாக்கெட் வரைக்கும் புகைப்பார் அப்போது) இல்லையென்று செகன்ட்ஷோ நடக்கும் டூரிங் டாக்கீசுக்குப் போய் வாங்கிவருவார். எனக்கு ஏழுவயதிருக்கலாம் அப்போது. ஒரு நாள் நடுஇரவில் விழித்தேன். தூக்கம் கலைந்துவிட புரண்டு புரண்டு படுக்க, என்னடா தம்பி தூங்கலையா நீன்னு கேட்டார். இல்லைன்னு நான் சொல்ல, அப்பன்னா கடைக்குப் போய் டீ வாங்கிட்டு வர்றியான்னு கேட்டவுடனேயே, சடாரென்று எழுந்துவிட்டேன். (எப்படியும் இரவு 12 மணிக்குமேல்தான் இருந்திருக்கும்)

அவரும் எழுந்து, அவர் வைத்திருந்த, ‘தெர்மோஸ்‘ ஃப்ளாஸ்க்கையும் ரென்டுகட்டை வின்ச்செஸ்டர் டார்ச்சையும் எடுத்துத் தந்தார், ஃப்ளாஸ்கை அதில் மாட்டியிருந்த தோல் வாரால் என் தோளில் குறுக்காக அணிவித்து, கடையில்போய்தான் கழட்டவேண்டும். அங்கு வெந்நீர் ஊற்றிக் கழுவிவிட்டு டீ போட சொல்லவேண்டும் என்று வழிமுறை சொன்னார். பிற்பாடு அப்படி மாட்டிக்கொண்டு போவது மிகவும் பிடித்த ஒன்றாகிப் போனது.

எல்லா வீட்டிலும் மின்சாரம்  பரவலாகாத நேரம் அது. எங்கள் வீட்டிலும் மின்சாரம் இல்லை அப்போது. அந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்ப்பது பரவசமானது., வட்டமான பித்தளைப் பட்டனை அழுத்துவது, கீழுள்ள பட்டனைத்தள்ளி தொடர்ச்சியாக எரியச்செய்வது, கையால் மூடி ரத்தம் பார்ப்பது, வானில் அடித்து எவ்வளவு தூரம் வெளிச்சம் போகிறது, அது எங்கே முடிகிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்வது என்று தேவையே இல்லாமல் எரித்து பேட்டரியை முடித்துவிடுவதால் சிறுவர்களிடம் அது கிடைக்காது. இப்போது சுதந்திரமாக உபயோகிக்க தகுதி வந்துவிட்டதால், பெரியமனிதராகி விட்ட தோரணையில் பயமோ இரவு எத்தனை மணி என்ற சிந்தனையோ எங்கிருந்து வரும்?

ஆனால் முதல்நாள் அனுபவம் ரொம்ப வித்தியாசமாக அமைந்து விட்டது;

அப்போது எங்கள் ஊரில் விளக்குக் கம்பங்கள் நிறைய இருந்தாலும் அவற்றில் ஏதாவது ஒன்றிரண்டில் அவ்வப்போது விளக்குகள் எரியவும் செய்யும்! இப்போது மிஷன் ஸ்டார்ட்; வீட்டிலிருந்து கிளம்பி, தெருவைத்தாண்டி, மஞ்சச்சந்து முக்கத்தில் ஒரு ட்யூப்லைட் எரிந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. இருட்டாக இருந்தால்தானே டார்ச் லைட் அடிக்கலாம்! மஞ்சசந்து முழுதும் வெளிச்சம் தெரிந்தது. மெயின்ரோட்டில் திரும்பியதும் இருட்டு. டார்ச் லைட்டுக்கு வேலை, உபயோககரமாய், என் மூலம் முதன்முதலாய், ஹா... அப்படியே சென்றேன். காசிக்காரச்செட்டியார் வீட்டருகே, ரோட்டின் குறுக்காக ஓடிய வயரில் ஒரு குண்டுபல்பு லைட். டார்ச்சை அணைத்தேன். பிறகு மீண்டும் கொஞ்ச தூரத்தில் இருட்டு. டார்ச் லைட். பிறகு சந்தைப்பேட்டைத் தெரு குறுக்கிடும்போது மறுபடி ஒரு தெருவிளக்கு. பிறகு மீண்டும் இருட்டு. பஹார்ராவுத்தர் வீட்டருகே ஒரு ட்யூலைட். அதன் பிறகு சிறிது இருட்டு. அப்போதே கொஞ்ச தூரத்தில் நைட்டுக்கடையான காளியம்மாள் டீஸ்டால் தெரிந்தது. கடையின் வெளிச்சம் தெரியும் வரை டார்ச்லைட். பிறகு சமத்தாக அணைத்துவிட்டு கடையை அடைந்தேன்,

ஃப்ளாஸ்க்கில் எப்படி டீ போடவேண்டும் என்று டீ போட்டவருக்குப் பாடம் நடத்திவிட்டு, இடையில் கிடைத்த பாராட்டுகளை வானத்தில் மிதந்து வாங்கிக்கொண்டு (பையன் யாரு? ராத்திரியில் பயப்படாம வந்திருக்கானே? ஓ, நம்ம டாக்டர் பையனா? சின்னப்புள்ளயா இருந்தாலும் எப்டி பத்தரமா தெர்மாஸ கொண்ட்டு வந்துருக்கான் பாத்தியளா? புள்ளைனா இப்டித்தான் இருக்கணும்), திரும்பிப் போகும் வழியில் எங்கெங்கே லைட்டு இருக்கு, எங்கு டார்ச் அடிக்கணும்னு யோசனையோடு டீயையும் வாங்கிக்கொண்டு, கிளம்பினேன்.

கடையிலிருந்து கொஞ்சதூரத்தில் ஆரம்பித்து பஹார்ராவுத்தர் வீடுவரை டார்ச், சந்தைப்பேட்டைத் தெரு லைட், காசிக்காரச்செட்டியார் வீட்டு குண்டுபல்பு வெளிச்சங்களில் அணைத்துவிட்டு வந்துகொண்டிருந்தேன். இப்போது குண்டுபல்பு வெளிச்சத்தால் என் நிழல் நீண்டுகொண்டேபோவதை கவனித்துக்கொண்டே அடுத்து இருட்டானவுடன் டார்ச் அடிக்கணும் என்ற திட்டமும் மனதில் வந்தது. எப்போது இருட்டாகும் என்ற ஆவலில் நடந்தேன்.

திடீரென்று ஒரு அதிர்வு. பதட்டம். மனது வெறுமையான உணர்வோடு விவரிக்க இயலாத பயம். சரேலென்று எல்லாம் நடந்ததுபோல எனக்கு முன்னால் தரையிலிருந்து வானம்வரைக்கும் சுமார் 3 அல்லது 4 அடி அகலத்துக்கு ஒரே வெள்ளையாக ஏதோ ஒன்று நிற்கிறது. இப்போதும் அந்தத் தோற்றம் ஞாபகம் இருக்கிறது. திடுக்கென்று உடல் தூக்கிப் போட்டால் போன்ற ஒரு உணர்வு. சப்தநாடியும் அடங்கிப்போக வினாடிகளில்  ‘பயலுக‘ சொன்ன எல்லாப் பேய்க்கதைகளும் ஞாபகத்தில் வந்து செல்ல, லேசாக கண்கள் இருட்ட, அடுத்து என்ன என்ற பயமும் எதிர்பார்ப்பும் - இத்தனையும் வினாடிகளுக்குள் - நடந்தேறியது. பிறகு திடீரென்று சுயஉணர்வு வந்ததுபோல் தோன்ற, மூளை எனக்கிட்ட முதல் கட்டளை: டார்ச்சை அடி. அடித்தேன்
என் எதிரில் நின்றது எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரிந்த, அதீத சாதுவான, எண்ணெய்க் கடைக்காரரால் பிள்ளையார் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட தூய வெள்ளைநிற, கோயில்மாடு. எனக்கு சுமார் 4 அடி தூரத்தில் நின்றது. அதற்கு மேல் – வானம் வரை - ஒன்றுமே இல்லை.

விலகி நடந்து அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டில் இருந்தேன். இவ்வளவும் நினைவில் இருக்கும் எனக்கு, இந்த ஐந்துநிமிடங்களில் நடந்தது நினைவில் இல்லை. சுத்தமாக. வீட்டில் அத்தாவின் பாராட்டு. (தம்பி சீக்கிரமா வாங்கிட்டு வன்ட்டானே) எனக்கும் டீ. அதன்பிறகு கொஞ்சநேரத்தில் தூங்கியும் விட்டேன். அன்று நான் பயத்தில் வியர்த்து மூர்ச்சையடைந்திருந்தாலோ, பயங்கரமாகக் கத்தி ஊரைக்கூட்டியிருந்தாலோ, அல்லது வீட்டுக்குச் சென்றபின் இரண்டுநாளைக்குக் காய்ச்சல் அடித்திருந்தாலோ (பின்குறிப்பு காண்க), இன்றுவரை எனக்குப் பேய்ப் பயம் இருந்திருக்கலாம். பயம் வராத வகையில் நானும் அதிருஷ்டசாலிதான். அதன்பிறகு எத்தனையோ முறை சென்றுவந்திருக்கிறேன் இரவு வேளைகளில். ஒன்றும் தட்டுப்படவில்லை என் கண்களுக்கு.

பி.கு.: என் அத்தாவின் சிறுவயதில் காளையார்கோவிலில் இருக்கும்போது, பக்கத்திலிருந்த சிவல்புஞ்சைக்கு (இடம் விஷயத்தில் தகவல்பிழை இருக்கலாம்) காலைநேரத்தில், வாயால் பிர்ங்ர்ங்ர்ங்ர்ங்ர்ங்ர்ர்ர்ர் என்று காரோட்டிகொண்டே பெரியத்தாவீட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது, ஒத்தியடிப்பாதையில் திடீரென்று  “டேய் நில்ரா“ என்று அதட்டலாக ஒரு சத்தம்கேட்க, இவர் நின்றால் சுமார் 7 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக மிகப்பெரிய முறுக்கு மீசையுடன் ஒரு ஆள் நின்றிருக்க, இவருக்கு  “திடுக்குனு தூக்கிப்போட்ருச்சு“. கண்ணைக்கசக்கிட்டுப் பார்த்திருக்கார். ஒருத்தரையும் காணோம். இவருக்கும் பயமோ, வேறு எதுவுமோ ஒன்றும் தோன்றவில்லையாம். மறுபடியும் பிர்ங்ர்ங்ர்ங்ர்ங்ர்ங்ர்ர்ர்ர். வீட்டுக்குப் போனால் காய்ச்சல் வந்துருச்சாம். கிழவிகள் துருவித்துருவிக் கேட்டபின் நினைவுபடுத்தி நடந்ததைச் சொல்ல  “ஏதோதோ சொன்னுச்சுகளாம், பெருசுக“. இவருக்கு சுத்தமாகப் புரியவில்லையாம்.

ஆக மேலே சொன்ன இரண்டு விஷயங்களுமே அப்படியே விட்டுவிட்டதால் அவை இரண்டும் இன்றளவும் வெறும் சம்பவங்களே. லேசாக இட்டுக்கட்டினாலோ, அல்லது நாங்களே சிறிது சேர்த்து சுவாரஸ்யமாக்கி இருந்தாலோ இரண்டு பேய்கள் அதிகப்படியாக இப்பூவுலகில் உலாவிக் கொண்டிருக்கும்.

இச்சம்பவத்தை சிறிதளவுகூட மிகைப்படுத்தி ஒரு பேய்க்கதையாக நான் சுவாரஸ்யப்படுத்தாதது, இன்றளவும் “நான் என்னைப்பற்றியே“ வியக்கும் ஒரு விஷயம்.

எனவே,

சம்பவங்களும்,
சம்பந்தப்பட்டவர்களின் பயமும்,
சுவாரஸ்யமாக்குவதற்கு அவர்கள் சேர்த்துக்கொள்ளும் பொய்களும்,
தவிர மனத்தில் ஏற்றப்பட்ட மூடநம்பிக்கைகளும்தான்
பேய்கள்.

மற்றபடி அவை பாவம்! விட்டுவிடுங்கள்.
முடிந்தால் என்னிடம் அனுப்பி வையுங்கள்! எனக்கும் கொஞ்சம் டைம்ப்பாஸா இருக்கட்டும்!!

கடவுளும் பேயும் ஒண்ணுதான்.
கற்பிக்கப்பட்டாலொழிய கண்டுணரமுடியாது.

***


நன்றி : பேய்க்கும் பிசாசுக்கும்! 
http://majeedblog.wordpress.com/
amjeed6167@yahoo.com

****

போனஸ் : ஒரு பேய்க்கதை !
பேய் வீடு | யெஸ்.பாலபாரதி