Monday, March 19, 2018

2CELLOS - Now We Are Free - Gladiator

Luka Sulic and Stjepan Hauser playing Now We Are Free by Hans Zimmer from Gladiator with the Sydney Symphony Orchestra at the Sydney Opera House.


*
Thanks to : 2CELLOS

Sunday, March 11, 2018

சிரிக்க வைத்தவர் அழவைத்து விட்டாரே!

மறைந்த எங்கள் ஜபருல்லாஹ்நாநா அவர்களைப் பற்றி அண்ணன் காயல் மகபூப் பிறைமேடை இதழில் (பிப்ரவரி 16-28, 2018) எழுதிய நினைவேந்தல் கட்டுரையை நன்றியுடன் பகிர்கிறேன்.
-----

‘‘தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற தவராஜ செம்மேருவே தயவு வைத்தெனையாளும் சற்குணங்குடி கொண்ட ஷாஹுல் ஹமீ தரசரே!’’ என குணங்குடி மஸ்தான் சாகிப் அவர்களால் புகழப்பெற்ற பாதுஷா நாயகம் அவர்கள் அடங்கியுள்ள ஆன்மீகத் திருத்தலம் நாகூர், வரலாற்றுச் சிறப்பு வாணிபச் செழிவு நிறைந்ததோடு தமிழ் அறிஞர்கள் பலரை தந்த ஊர்.

நான்காம் தமிழ்ச்சங்க நக்கீரர் என்று புகழப்பட்ட குலாம் காதிர் நாவலர், முப்பெரும் காப்பியங்களை இயற்றிய வண்ணக்களஞ்சிய புலவர், காயிதேமில்லத் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்கும் ‘மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே’ உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றிய புலவர் ஆபிதீன், ஆ.கா.அ. அப்துஸ்ஸமத் அவர்களுக்கு தொல்காப்பியம் கற்றுக் கொடுத்த ஹூசைன் முனைவர்பெய்க், அவரது இளவல் கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம், கம்பராமாயணத்தை வெளியிட்ட நீதியரசர் மு.மு.இஸ்மாயில், இசைமணி எஸ்.எம்.ஏ.காதர், தனது பாடல் குரல் வளத்தால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இசைமுரசு நாகூர் ஹனிபா, எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, முனைவர் நாகூர் ரூமி என எண்ணற்றோர் இந்நகருக்கு புகழ் சேர்த்தவர்கள்.

அந்த வரிசையில் நாகூர் மக்கள் மனதில் மட்டுமல்ல முஸ்லிம் லீக்கர் அனைவர் நெஞ்சத்திலும் நீங்கா இடம் பெற்றவர் கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ். 

தியாகி ஜக்கரிய்யா நானா புதல்வர்

1906ல் தொடங்கப்பட் அகில இந்திய முஸ்லிம் லீக், இந்திய விடுதலைக்குப்பின் 1948ல் இந்திய யூனியன் முஸ்லிம்லீகாக மலரச் செய்யப்பட்டபின் வீறுகொண்டெழுந்தது 1958 திருச்சி மாநாட்டை தொடர்ந்துதான்.

1958 ஜனவரி 11,12 இரு நாட்கள் திருச்சி பெரிய சவுக் ஆற்காடு நவாப் எண்டோமென்ட் ஜூம்ஆ மஸ்ஜித் முன்புறமுள்ள பரந்து விரிந்த மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தமிழ்நாடு மாநில ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பந்தலுக்கு ‘‘ தியாகி ஜக்கரியா பந்தல்’’ என பெயரிடப்பட்டிருந்தது. அந்த பெயர் சூட்டப்படக் காரணம் தஞ்சைத் தரணியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டுப் பேரணியில் நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர், முஸ்லிம்லீக் ஜிந்தாபாத் என ஆக்ரோஷமாக முழங்கிவரும் போது இருதயம் வெடித்து வாயின் வழியாக இரத்தம் கொட்டியது. அப்போதும் அந்த முழக்கத்தை அவர்விடவில்லை. அந்த தியாகியின் நினைவாகத்தான் திருச்சி மாநாட்டுப் பந்தலுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்த தியாகி ஜக்கரிய்யா. அவர்களின் மூத்த புதல்வர்தான் இஜட் ஜபருல்லாஹ். இந்திய யூனியன் முஸ்லிம்களின் மறைந்த மாபெரும் தலைவர் சிராஜூல்மில்லத், ஆ.கா.அ.அப்துல்சமது சாகிப் அவர்களோடு நெங்கிய நட்பு கொண்டவர் ஜக்ரிய்யா அவர்கள். 1944களில் ‘‘பால்யன்’ என்ற பெயரில் வார இதழை காரைக்காலில் இருந்து ஏ.எம்.அலி நடத்திவந்தார். பின்னர் அதனை அபுஅனிபாவிடம் ஒப்படைத்துவிட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார். அனிபா ‘பால்யனை’ அற்புதமாக நடத்தினார்.

சிராஜூல்மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது, நாவலர் ஏ.எம்.யூசுப் சாஹிப், காரைக்காலைச் சேர்ந்தவர்கள். ‘நானும், ஏ.எம். யூசுப் சாகிப், ஏ.எம்.அலி மூவரும் ‘பால்யன்’ மூலம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானோம். பின்னர் நாவலர் ஏ.எம்.யூசுப் சாகிப் முஸ்லிம் லீக் என்ற பத்திரிகையை தொடங்கி நடத்தினார். ஏ.எம்.அலி ‘சாந்தி விகடனை’ தொடங்கினார். நான் மணிவிளக்கு பத்திரிக்கைக்கு 1954ல் ஆசிரியர் பொறுப்பேற்று விட்டேன்’ என சிராஜூல்மில்லத் அன்றைக்கே எழுதினார். பால்யன் பத்திரிகை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘‘பால்யன் எழுத்தாளர்கள்’’ என்ற அமைப்பே தொடங்கப்பட்டது.

ஆ.கா.அ.அப்துல்சமது சாகிப், நாவலர் ஏ.எம்.யூசுப்சாகிப் ஆகியோரோடு அரசியல் ஞாநி வடகரை எம்.எம்.பக்கர், நாகூர் ஜக்கரிய்யா ஆகியோரும் இந்த அமைப்பில் இடம் பெற்றவர்கள். அதனால்தான் இவர்களையெல்லாம் கவிஞர் ஜபருல்லாஹ் மாமு என்றே அழைப்பார்.

முஸ்லிம்லீகின் நாகூர் நகரச் செயலாளராக இருந்த ஜகரிய்யா சாகிப் நாகூர் நகர சீரத் கமிட்டி தலைவராகவும் இருந்து மீலாது விழாக்களை முன்னின்று நடத்தி முஸ்லிம்லீக் தலைவர்களை பேச வைத்தார். அதிலிருந்தே அத்தலைவர்களுடன் ஜபருல்லாஹ் அவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது.

இஜட். ஜபருல்லாஹ் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்தவர். தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவருக்கு பேராசிரியர். பி.ஜிஎல் சட்டப்படிப்பை சென்னையில் படித்தார்.

1975 பிப்ரவரி 14 அன்று சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவராக சிராஜூல்மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதன்பின்னர்தான் செங்கம் ஜப்பார் அவர்களை பொதுச் செயலாளராக கொண்ட இளைஞர் முஸ்லிம் லீகிற்கு அங்கீகாரம் கிடைத்தது. சிராஜூல்மில்லத் அவர்களே அதன் மாநிலத்தலைவர். நான் மாநில பொருளாளர். அதே போன்று முஸ்லிம்லீகின் மாணவர் அணியின் அமைப்பாளராக நாகூர் இஜட்.ஜபருல்லாஹ் நியமிக்கப்பட்டார். இதற்கு காரணம் சமுதாயக் கவிஞர் தா.காசிம்.

அப்போது அவர் ‘சரவிளக்கு’ மாதம் இருமுறை ஏட்டின் ஆசிரியர். நாங்கள் ஒன்றாக இருக்கும்போது சிரிப்புக்கு பஞ்சமேயிருக்காது. பசி மறந்து போகும் எனது திருமணத்திற்கு தேதி கேட்க சிராஜூல் மில்லத் அவர்களிடம் கவியரசு தா.காசிம், கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ் ஆகியோருடன் சென்றிருந்தேன். ‘‘என்ன மகபூப், திருமண வயதில் உங்களுக்கு ஒரு பிள்ளையிருக்கும் செய்தியை என்னிடம் சொல்ல வேயில்லையே’’ என்றார் சிராஜூல் மில்லத். ‘மகபூபிற்கு இன்னும் பிள்ளை பிறக்கவில்லை, ஏனெனில் இன்னும் திருமணம் ஆகவில்லை திருமணத்திற்கு தேதி கேட்டுத்தான் வந்துள்ளோம்’ என்றார் கவிஞர் ஜபருல்லாஹ். எல்லோரும் சிரித்து விட்டனர்.

அப்போது குறிக்கிட்ட கவிஞர் தா.காசிம், மகபூப் குருவுக்கே இன்னும் திருமணமாகவில்லை அதைப்பற்றி ஒன்று சொல்லவா? எனக்கேட்டு சொல்லத் தொடங்கினார். ‘‘இவர்குரு செங்கம் ஜப்பார் பெண் பார்க்க ஒரு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது காபி கொண்டுவந்த பெண்ணின் தாயார் செங்கம் ஜப்பாரை பார்த்ததும் காபியை தராமல் வெட்கப்பட்டுக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார். ஏன் என்று கேட்டபோது, ‘இவர் என்னையே பெண் கேட்டு வந்தவர், அதனால் தான் வெட்கமாகிவிட்டது’ என்றாராம்’’ எனச் சொல்ல அங்கே சிரிப்பலைகள் அடங்க நீண்டநேரமானது.

சிராஜூல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமத் அவர்களுக்கு அ.ச.அப்துல் ஹமீத் பாகவி சகோதரர்கள், சகோதரிகள் அன்பான பிள்ளைகள் என்றால், கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ், முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவர் ஏ.கே.ரிபாயி சாகிப் (முன்னாள் எம்.பி) புதல்வர் புலவர் ஹிலால் முஸ்தபா, மற்றும் நான் செல்லப்பிள்ளைகள். கவிஞரும் புலவரும் இணைபிரியா நண்பர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் தமிழுக்கு அர்த்தம் தேட அகராதிகள் இல்லை.

1975- 85 கால கட்டங்களில் கவிஞர் ஜபருல்லாஹ்வும் நானும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டோம். பின்னர் சிராஜூல் மில்லத் அவர்கள், ‘காயல் மகபூப் உணர்ச்சிப் பேச்சாளர், கவிஞர் ஜபருல்லாஹ் நகைச்சுவை பேச்சாளர். அவர் உணர்வை கிளர்ந்தெழச் செய்தாலும் இவர் சிரிக்க வைத்தே கூட்டத்தை முடித்துவிடுவார் ஆகவே இருவரும் ஒரே நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம்’ என கூறிவிட்டார்கள்.

நான் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறைச்சாலைக்குச் சென்றதில் பெரும் வேதனை அடைந்தவர்களில் கவிஞர் ஜபருல்லாஹ்வும் ஒருவர். அப்போது அவர் தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர். அப்போது என் பிரச்சனையில் தலையிட ஆணையத் தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை அவர்களை வற்புறுத்தியும் அதில் அவர் ஆர்வம் காட்டாததால் அந்த ஆணைய நடவடிக்கைகளில் இருந்தே ஒதுங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பேச்சாளராக மட்டுமன்றி மாவட்டச் செயலாளராக, மாநிலச் செயலாளராக பணியாற்றிய இஸட்.ஜபருல்லாஹ் ஒரு அற்புதமான கவிஞர். எண்ணற்ற கவிதைகளைஎழுதிக் குவித்தவர் ஆனால் நாகூர் ரூமி தொகுத்து வெளியிட்ட ஒரேயொரு கவிதை தொகுப்பை தவிர வேறு எதுவும் நூலாக வெளிவரவில்லை என்பது வேதனைக்குரியது. நாகூர் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்ட அந்த நூல் வெளியீட்டு விழாவில் கூட தலைவர் பேராசிரியர் அவர்களுடன் தற்செயலாகவே கலந்து கொள்ளும் வாயப்பு கிடைத்தது.

எதையும் வித்தியாசமாகவே சிந்திக்கும் வழக்கமுடைய கவிஞர் ஜபருல்லாஹ் கவியரங்குகளில் தனிமுத்திரை பதித்தவர். ஒரு கவியரங்கிற்கு ‘இனியொரு விதி செய்வோம்’ என்பது தலைப்பு. ‘இனியொரு விதி எதற்கு? எண்ண பண்ணி கிழிப்பதற்கு? என இவர் பாடி வந்தார். இவர் கவிஞர் மட்டுமல்ல அழகான பாடகர். முஸ்லிம் லீக் மேடைகளில் இவர் பாடிய ‘ஆடி அசைந்தலைந்து பறக்குதடா’ என்ற பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

சூஃபியைப்போல் வாழ்ந்தவர்

பகலை இராவக்கி, இரவை பகலாக்கி சூஃபியைப் போல் வாழ்ந்த கவிஞர், மசால் வடையையும் தேனீரையுமே வாழ்நாள் உணவாக்கிக் கொண்டவர். ஆனால் எங்களைப் போன்றவர்களை வீட்டிற்கு அழைத்து வகைவகையாக விருந்தளிப்பார். நாம் சாப்பிடுவதை பார்த்து ரசிப்பார்.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இஹ்யா உலுமித்தீனை தமிழாக்கம் செய்த மௌலானா எஸ்.அப்துல் வஹாப் பாகவி ஹள்ரத் அவர்களை ஆன்மீக குருவாக ஏற்று செயல்பட்ட கவிஞர் இஸட்.ஜபருல்லாஹ், 1949 மார்ச் 15ல் பிறந்தவர். தந்தை ஜக்கரிய்யா. தாய் ஆயிஷா நாச்சியார். உடன்பிறந்தோர் ஹாஜா நஜ்முதீன், லியாகத்அலி, முகம்மது பிலால், அகமது ஜலால், யூசுப் மரைக்காயர் மற்றும் ஹமீதா பேகம். இவரது மனைவி ரஹ்மத் நஜ்மா. நியாஸ் அகமது இவரது புதல்வர், நஸ்ரின் ரெஹானா இவரது புதல்வி, ஹாஜாமுயினுத்தின் மருமகன். ஹமீதா தஸ்னிம் மருமகள்.

2018 ஜனவரி 28 அதிகாலை 12.45 மணியளவில் நாகூர் புதுமனைத்தெரு 14ம் இலக்க இல்லத்தில் கவிஞர் ஜபருல்லாஹ் மரணித்துவிட்டார் என்ற அந்த துயர செய்தி கடையநல்லூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம்லீக் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது கிடைத்தது. பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாட கண்ணீர் பணித்தது. அன்று இஷா தொழுகைக்குப்பின் தர்கா கபரஸ்தானில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெற்றது. அதில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் கலந்து கொண்டு உருக்கமான உரை நிகழ்த்தினார்.

இரண்டாயிரம் பேர் இருக்கும் பொதுக் கூட்டமானாலும், இரண்டு பேர் மட்டுமே இருக்கும் உரையாடனாலும் சிரிக்க வைத்தவர். அவரை அறிந்தவர்களை அழவைத்துவிட்டு சென்றுவிட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பிழைகளை பொறுத்து நற்செயல்களை பரிபூரணமாக அங்கீகரித்து மேலான சுவனபதியை வழங்கியருள பிரார்த்திப்போம்.

காயல் மகபூப்
*
Thanks - Piraimedai Fortnightly

Saturday, March 10, 2018

பிரம்மராஜன் உரை


யாவரும் நிகழ்வு - 46 (Oct 22, 2017) . போர்ஹெஸ் (தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் கட்டுரைகள் கவிதைகள்) நூல் வெளியீட்டு விழாவில் பேசியது. 
*


Thanks to : Shruti TV