Sunday, October 24, 2021

நாடாக்காரர்கள் - சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதை

’கணையாழி’யின் ஆரம்ப இருபத்தைந்து வருசத்தில் தன் மனதில் இன்னும் நிற்கும் சிறுகதையாக ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய இந்தக் கதையைச் சொல்லியிருந்தார் சுஜாதா - தன்னுடைய ’கணையாழி கடைசிப் பக்கங்கள்’ நூலில் (Aug'1990). (கவிதை : ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம், நாவல்: மரப்பசு, குறுநாவல் : கடை) . 

இந்தச் சிறுகதை வெளியான ஆண்டு 1974.(மே - ஜூன்). 'பூர்ணாஹூதி’ தொகுப்பில் இருக்கிறது.

பல வருடங்களாக தேடிக்கொண்டிருந்தது கதை, தங்கை யாழினி மூலம் சென்றவாரம் கிடைத்தது. நண்பர்களுக்காக பகிர்கிறேன். காப்பி பேஸ்ட் செய்பவர்கள் நன்றியை யாழினிக்கும் அப்படியே சென்ஷிக்கும் சொல்லவும். நன்றி!
***

நாடாக்காரர்கள் - ராமச்சந்திர வைத்தியநாத்
------------------
தொரக்கண்ணு அவசர அவரசமாக தலைக்கு ஊத்திக் கொண்டான். நயினா வேறே மறப்புக்கு அப்பாலே நிண்ணுகிட்டு "டேய் சுருக்கா குளிச்சுட்டுப் போடா. அப்பாலே போனா எதனாச்சும் சாக்கு போக்கு சொல்லிடப் போறானுவ” என்று கத்திக் கொண்டு இருந்தார். ஒழச்சு ஓடாப் போன சந்திரிகாவை கஸ்டப்பட்டு கையில் பிடிச்சிண்டு மூஞ்சிலே அழுத்தி தேச்சுண்டான். ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து மூஞ்சிலேயும் தலிலேயும் படால் படால்னு அடிச்சிண்டான். அரை வேஷ்டியாலே புளிஞ்சு தொடச்சிண்டு, மறு தவா புளிஞ்சு இடுப்லே சுத்திண்டு உள்ளே போனான். 
கொடாப்புக்கு பொகை போடற மாதிரி வூடு பூரா பொகை. அம்மாக்காரி அடுப்படிலே உக்காந்துண்டு ‘உப்ப்பு உப்ப்பு' என்று ஊதிக்கினு இருந்தாள்.

பழைய முண்டா பனியனை எடுத்துப் போட்டுகிட்டு அதுமேலே கட்டம் போட்ட கருப்பு சட்டையை போட்டுக்கினு கெளம்பினான். தொரக்கண்ணு கிட்டே இருக்கிறதுலேயே அது ஒண்ணுதான் நல்ல சட்டை “டேய் தொரய் நாஸ்டா ஆவலே நாயிரு கடலே துண்ணுக்கிறியா? என்றாள். 'அது சர்தான் துட்டுக்கு எங்கே போவுது?” என்று அனாசியமாகப் பதில் கொடுத்தான். “இந்தா எட்டணா பில்லை சாமியை கும்பிட்டு போ. வேலெ கெடக்கும்.” என்று பாட ஆரம்பிச்சா.

அவன் அப்பா வேறு கோயிங்களை படலைத் தொறந்து வெளிலே விட்டுகினு இருந்தவர் பாத்துட்டார். "டேய் இன்னுமாடா போல? அவனுங்கள்ளாம் கரெக்டா கௌம்பி பூட்டானுங்க. இன்னும் தூங்கறியே சீக்கிரமா போடா சோம்பேறி” என்று கத்தினார்.

தொரக்கண்ணு நெதானமாவே அப்பாவை பார்த்து ஒரு முளி முளிச்சுட்டு,. “நாரா.... கய்தேப் பையா எனக்கு ஏண்டா நாய்னாவாப் பொறந்தே” என்று மனசிற்குள் திட்டிக் கொண்டே கௌம்பினான்.

பச்சபாஸ் டேனிங் வரைக்கும் போயிட்டா அங்கேந்து எழுவத்தியொண்ணைப் புடிச்சுடலாம். இல்லாக்காட்டி கார்டன் வரை போயிட்டா பார்டி ஸெவனையும் சேர்த்து புடிக்கலாம் என்று நெனச்சிகிட்டே பச்சப்பாஸ் வந்தான். எவனோ ஒத்தன் இப்பதான் எழுவத்தியொண்ணு ஒண்ணு போச்சு என்றான். பக்குனு ஆயிடுச்சு தொரக்கண்ணுக்கு. மணி இப்பவே ஏழாயிடுச்சு. ஏழரைக்குள்ளே போனாதான் இஞ்சினீயரை பாக்கலாம். வேலக்கி முதல்நாளே, கேக்கறதுக்கே லேட்டாப் போனா அவன் வூட்டு துட்டு போறா மாதிரி காயுவானுங்களே, இன்னொரு நாள் கய்தேனு சொல்லிட்டாங்கன்னா என்னா பண்றது. கிடுகிடுன்னு கார்டன் வரக்கிம் போயிட்டா அங்கேந்து எதுலாச்சும் பூள்ளாம் என்று நெனச்சான். வழிலே கடைலே ரண்டு சார்மினார் வாங்கினான். வழக்கமா தொரக்கண்ணுக்கு கணேஸ் பீடி இல்லாட்டி, சாது பீடிதான். இன்னக்கி நாயின பஸ்ஸுக்கா கொடுத்த எட்டணா, அம்மாக்காரி நாஸ்டாக்கு கொடுத்த முழு எட்டணா பில்லை மொத்தம் ஒரு ரூபா, பை நெறஞ்சிருந்திச்சு. பாக்கிச் சில்லறையை. ஆப் டிரவுசர் பாக்கெட்டில் போட்டுகினான்.

'ஒரு காலி பாக்கெட் இருந்தா கொடுப்பா அப்படி நசுங்கி பூடும்" என்றான். ஏதோ முணகின்டே பங்க்காரன் காலி பியர்ஸ் பாக்கெட்டைப் போட்டான். சிகரெட்டை பத்த வைக்கறதுக்கு பேப்பர் துண்டு பாத்தான். டப்பாலே துண்டுங்களே இல்லை. "யோவ் பொட்டி குடுய்யா" என்றான் அதிகாரமாகவே. "ஏன் வெளக்கு எரியறது கண்லே தெரில்லியா” என்றான் பங்க்காரன். “சரி பேப்பர் துண்டு கொடு பத்த வச்சுக்கறேன்” என்றான். உடனே பெரிய ஜோதி ஊறுகாய் அட்டை எடுத்துப் போட்டான். தொரக்கண்ணு அதை ரெண்டா, பெரிசா கிழிச்சான் அப்படியே தீவட்டி கொளுத்தற மாதிரி கொளுத்தினான். சிகரெட்டை பத்த வச்சுகினான். பங்க்காரன் முறைச்சுப் பார்த்தான்.

வேகமாக நடையைக் கட்டினான். வேஷ்டியை மடிச்சி ஆப் டிரவசர் தெரியிற மாதிரி கட்டினான். இப்படி கட்டிகினு நடந்தா பாஷ்டா நடக்க முடியும். தவுத்து படா ஸோவா வேறேயிருக்கும்னு தொரக்கண்ணுக்கு நெனப்பு. சேர்ந்தா மாதிரி இரண்டு இழுப்பு இழுத்தான். பொகையை நெஞ்சுலே அடக்கி மூக்கு வளியா விடறதுலே என்ன சொகம். கார்டன் ஸ்டாப்பிங் இன்னும் 25 கஜம்தான் இருக்கும். ஒரு 71 பஸ் காலியா வந்துச்சு. உடனே சிகரெட்டை கீழே போட்டுட்டு ஓல்டான் ஓல்டான்னு கத்திக்கிட்டே ஓடினான். பஸ் நிக்கவேயில்லை. இன்னும் அந்த பஸ் டிரிப் ஆரம்பிக்கலை போலிருக்கு. தொரக்கண்ணுக்கு கோவம் தாங்கலை. பஸ்ஸை விட்டது பெரிசுல்லே, பத்தவச்சு நாலு இழுப்பு இழுக்கறதுக்குள்ளே சிகரட்டை கீழே போட்டதுதான் இன்னும் வருத்தம்.

“தேவ்டியாப் பசங்க! பஸ் டிரைவர்னா கொம்பு மொளச்ச ஞாபகம். பப்ளிக்லாம் சேந்து இவனுகளை கொளுத்தணும், பச்சப்பாஸ் ஸ்டுடெண்ட்ங்க ஏன் தகராறு வலிக்கமாட்டாங்க இப்படி செஞ்சா?" இன்னோர் சிகரெட்டையும் புடிக்கணும் போல தோணிச்சு. பத்த வைக்கலாமா? இல்லாக்காட்டி பஸ் வந்துடுமா? யோசிச்சான். சரி பத்த வச்சுக்கலாம் நெனச்சு முனைலே இருந்த பங்க் கடைப் பக்கம் போனான். அதுக்கு 47 ஒண்ணு வந்துடுச்சி, கிடுகிடுனு ஓடிப்போய் ஏறிண்டான். கோச்பாட்டரி ஒண்ணு என்று சொல்லி பத்து பைசா டிக்கட் வாங்கினான்.

சுடுகாட்டுக்கு அடுத்த ஸ்டாப்பிங் குடிசை மாத்து வாரியம் ஸ்டாப்பிங். அதுலே எறங்கி பீச்சாங்கை பக்கமா கொடார்ஸ் தான் சொல்லிருந்தாரு நயினா. சுடுகாடு தாண்டின உடனே எழுந்து புட்போர்டிலே நிண்ணுகினான். "ஏன்யா யென் உசிரை வாங்கறீங்க மேலே ஏறி நில்லுய்யா”ன்னு டிரைவர் கூச்சல் போட்டான்.

வர வர டான்ஸ்போர்ட்டே மோசமா பூடிச்சி. நெச்சயமா ஜெகநாதபொரம் பசங்களை விட்டு ஒரு தபா கல்லடிக்கச் சொன்னா ரூட்லே சரியா பூடுவாங்க என்று தீர்மானிச்சு, "சர்தான் கண்ணு நாங்கள்ளாம் சர்வீஸ்காரங்கதான்" என்றான் தொரக்கண்ணு. ஸ்டாப்பிங் வந்துடுச்சு இறங்கினான். டிரைவரை ஒரு வெட்டு வெட்டிகினே நடந்தான். பொட்டிக் கடை ஒண்ணு இருந்தது. சைட்லே தினத்தந்தி போஸ்டர்லே பிரபல நடிகை கொலை என்று பெரிசா இருந்திச்சு. சார்மினாரை பத்தவச்சுகினு எவ செத்துருப்பா? விஜயாவா இல்லாக்காட்டி ஜெயலலிதாவா? யோசிச்சான். ஏன் ஒரு தெனத்தந்தி வாங்கி படிச்சா என்ன? காசுதான் இருக்கே. பதினாரு பைசாலே குடியா முளுவிடும். பெட்டிக்கடைலே ஓர் பாண்ட்காரர் வில்ஸ் பத்த வைச்சார். “ஸார் டைம் எவ்ளோ ?” என்றான். “ஏழு பத்து என்று சொல்லவே, இன்னும் இருபது நிமிசம் இருக்கே அதுக்குள்ளாறே படிச்சுகிட்டே போயிடலாம்னு தெனத்தந்தி ஒண்ணு கொடுய்யான்னு பதினாறு பைசாவைக் கொடுத்தான். அவருகிட்டேயே "ஏய்யா இந்த வேலைக்கி எடுக்கற ஆபீஸ் எங்கே இருக்கு?" என்று கேட்டான். “நேரே ஸ்டெயிட்டா போ அங்கேதான்...” என்றான் பெட்டிக் கடைக்காரன்.


ஜெயலலிதா செத்துருக்கக் கூடாது. வேற எவ செத்தாலும் பரவாயில்லைனு மனசிற்குள் சொல்லிக்கினே பேப்பரைப் படிக்க ஆரம்பித்தான். சிகரெட்டை கடைசி இழுப்பு இழுத்து மெறிச்சுட்டு படிச்சிகினே நடந்தான். எவளோ தெலுங்குக்காரி சைட் நடிகை. இப்பதான் தமிழ்லே புக் ஆவப் போறான்னு படிச்சதும் சப்னு ஆயிடுச்சு. கோவம் கோவமாக வந்தது. தெனத்தந்தி அயோக்கியன். பப்ளிக்கை ஏமாத்றானுங்க. டெய்லி டூப், ஆய்த்தன் ஒளிகண்ணு மனசிற்குள் கூவினான். பேப்பரை மடிச்சு அக்குளில் சொருகிக்கினான். கொடார்ஸ் தாண்டினான். வழிலே நாலைஞ்சு சிட்டுங்க 
போயிண்டிருந்ததுங்க. இங்கிலீஸ்லே புல்தினு போனாளுங்க. கடேசிலே ஆபிஸ்கிட்டே போனான். வாசல்லே ஏக கும்பல். பாத்தோண்ணியே இதான் இஞ்சினீயர் ஆபீஸ்னு கண்டுகினான்.

"ராசாராம் இஞ்சினீயர் ஐயரு, அவருட்டே சாமிக்கண்ணு மகன், கார்பேசன் கார்டன்லே இருந்தவருன்னாலே புரிஞ்சுப்பாரு. எந்த வேலயும் செய்றேன்னு சொல்லு” என்று நாயினா சொல்லியிருந்தார்.

நேத்து ராவிலே பயனி, கோயிந்தன் இவங்கள்ளாம் வந்து கோச் பாட்டரிலே ஆள் எடுக்கறாங்கணு சொன்னவுடனேயே, இஞ்சினீயர் ராசாராம்டே வேலை செஞ்சதையும் கட்டுபடியாவலேனு பின்னாடி கார்பேசன் கவுன்சிலர் மோசஸ் கிட்டே ஒரு மாச சம்பளத்தை ரண்டு மாசமா தரேன்னு சொல்லி வேலக்கி போனதையும். நாயினா தொரக்கண்ணுட்டே சொல்லிட்டாரு.

"நீ போய் நெலமையை சொன்னா உனக்கு வேலை நிச்சயமா தருவாருடா” என்று அடித்துச் சொன்னாரு நாயினா.

தொரக்கண்ணுக்கு பைத்தியக்காரத்தனமாயிருந்தது. எப்பவோ வேல பாத்த இஞ்சினீயர், டெய்லி எத்தினி கூலியை பாக்கறானோ? அவன் எவனோ? அவங்கிட்டே போய் தொங்கனுமேன்னு இருந்தாலும் பயணி, கோயிந்தா, ரண்டு பேரும் வேல சாதாரணமாவே சிபாரிசு காட்டிகூட நடக்கும்னு சொல்லவே எதுக்கும் ட்ரை பண்ணித்தான் பாக்கலாம்னுதான் இன்னக்கி கௌம்பினான். இவன் கெளம்பறதுக்கு முன்னாடியே கோயிந்தன், பயனி, இன்னும் நாலைஞ்சு பேர் இவன் ஏரியா பசங்க, வேல வெட்டி இல்லாம சுத்தறவங்க கெளம்பிட்டாங்க. ஆபீஸ் பின்னாடி அவங்கள்ளாம் வரிசைலே நிண்ணுகிட்டு இருந்தாங்க. பெரிய க்யூ 'ஒலகம் சுத்தும் வாலிபன்' கணக்கா இருந்தது. வளைஞ்சு வன பெரிசுதான். பின்னாலே நிண்ணு தெனத்தந்தி பூரா படிக்கலாம்னு கடைசி வரிசைலே போனான். அதுக்குள்ளாரே 'தொரக்கண்ணு தொரக்கண்ணு’னு யாரோ கூச்சல் போடவே திரும்பினான். கோயிந்தன் வரிசைலே முன்னாடி பத்து பதினஞ்சு ஆளுங்களுக்குள்ளே இருப்பான். கூப்பிட்டான். பின்னாடி அல்லாம் நாலஞ்சு பேர் மூஞ்சி தெரியாதவனுங்களாயிருந்தாலும் ஏரியா பசங்கதான். பயனி, மைக்கேல், ரங்கா எல்லாரும் இருந்தாங்க, கோயிந்தன் மெதுவா சொன்னான். “டேய் கய்தே இவ்ளோ நேரம் கயிச்சா வருவே? இந்த மாசத்லே நாப்பது ஆளுங்கதான் எடுப்பானாம். நீ யோக்யனா கடேசிலே போனா கெடைக்காது. நைசா என் பின்னாடி பூந்துடு."

"என்ன கோயிந்தா போலீஸ் பாக்றப்பவே ஆனந்த் க்யூலே பால் மார்றவனாச்சே இப்ப இந்த க்யூவா ப்ரம்மாதம்?” என்று நைசாய் பூந்தான். அதுக்குள்ளாரே பின்னாடி எவனோ பாத்துட்டான். 

"ஏம்பா தெனத்தந்தி வெள்லே வாய்யா. ஏய்யா பூர்ரே! இப்ப வந்துட்டு பூர்ரியே! நாய்மா இது? பின்னாடி நிக்கறவனுங்க மன்சாள்லே சேத்தியில்லியா?" என்று கூச்சல் போடத் துவங்கினான்.

பொல பொலன்னு காத்திருந்த மாதிரி ஏழெட்டு பேர் சேந்துட்டாங்க 'வெள்லே வாய்யா'ன்னு கத்தினாங்க. கூச்சலோட நிக்காம தடியன் ஒத்தன் முன்னாடி வந்து, "வாய்யா வெளிலே, போய் பின்னாடி நில்லுய்யா' என்று சொன்னான். தொரக்கண்ணுக்கு ஜமா தைரியம். “யோவ் கக்கூசு போயிட்டு வரேன். பூர்ரேங்கிரியே” என்றான். “யோவ் இவரு அப்பவே எங்கிட்ட சொல்லிட்டுப் போனார்ய்யா" என்றான் கோயிந்தன். தடியன் முன்னாடி வந்தான். அவன் பின்னாடி வேறே ஏழெட்டு பேர், தொரக்கண்ணைத் தொட்டு "யோவ் தெனத்தந்தி வெளிலே வாய்யா கடேசிலே போய் நில்லுய்யா” என்று திரும்பித் திரும்பி சொல்லிக்கிட்டே இருந்தான். பயனி தடியனைப் பாத்து, "யோவ் அந்த ஆள் மேலேந்து கையை எடுய்யா” என்றான். "எடுக்காட என்ன செய்வே?" என்று சொல்லிக்கிட்டே தொரக்கண்ணு சட்டை காலரை புடிச்சு இளுத்தான். அந்தப் பக்கம் கோயிந்தன் தொரக்கண்ணு கையை புடிச்சு க்யூலே தங்க வைக்கறா மாதிரி இளுத்தான். தடியன் இப்போ வேகமா இளுக்கவும் சட்டை டர்ருனு கிளிஞ்சுது. தொரக்கண்ணுக்கு ஆங்காரம் வந்தது. "டோய் சோமாறி சட்டையாடா கிளிச்சே" என்று தடியன் மேல் பாஞ்சான். டிரான்ஸ்போர்ட் மேலே கோவம், தெனத்தந்தி பேப்பர் காரனுங்க மேலே இருந்த கோவம் எல்லாம் சேந்து, தடியனுக்கு மூஞ்சிலே அடி செமுத்தியா விழுந்தது. தடியன்  அமுங்கறவனாயில்லே! அவனும் தொரக்கண்ணு முதுகிலே ஓர் குத்துவிட்டு சட்டையைப் புடிச்சி வேமாக "டாய் என்னயாடா அடிக்கறே”ன்னு இழுத்தான். தொரக்கண்ணுவின் கட்டம் போட்ட கருப்பு சட்டை தூளாகியது. அதுக்குள்ளாற பயனி தடியன் மேலே பாஞ்சான். தடியன் செட்டும் பாஞ்சானுங்க. ஆனா பயனி, கோயிந்தன், ரங்கா மூணு பேரும் சேர்ந்ததும் பூட்டானுங்க. மைக்கேல் மட்டும் சைட்லே தடியனுக்கு ஒண்ணு சரியா கொடுத்தான். ஒரே களபேரம். "ஜெகநாதபுரம் செட்டுடா எங்களையா மொறக்கிறீங்க" என்று கத்திகிணு, சோர்ந்து போய் கீழே உட்கார்ந்த தடியனை இன்னொரு குத்துவிட்டான் தொரக்கண்ணு.

“ஏன்யா வேலைக்கு வந்தீங்களா? இல்லே சண்ட போட வந்தீங்களா?" என்றான் ஒருத்தன். அவனும் வரிசைலே பின்னாடி நிண்ணுண்டுருந்தான். ஆனா, வயசானவனாயிருந்தான்.

“போய் கம்னு இருய்யா இப்ப இருக்ற வெறுப்லே நீயும் வாங்கிக்கப் போறே'' என்றான் மைக்கேல்.

அதுக்குள்ளார 'இஞ்சினீயர் வந்துட்டாரு வந்துட்டாரு' என்று முணு முணுக்கவே எல்லாரும் வரிசைலே நிண்ணாங்க. தொரக்கண்ணு, பயனி, கோயிந்தன் பக்கத்திலே நின்றான். பின்னாடி ரங்காவும் மைக்கேலும் இருந்தார்கள். தடியன் மெதுவா எழுந்து மொனவிக்கிட்டே பின்னாடி போனான்.

“யோவ் மொனவாதே இன்னும் சம்பளம் வாங்கிப்பே" என்று தெனாவட்டா சொல்லிண்டே இஞ்சினீயரைப் பார்த்தான் தொரக்கண்ணு. எவனோ அதுக்குள்ளரே அவருட்டே போய் வத்தி வச்சுட்டானுங்க போல இருக்கு. நேர இங்கதான் வந்தார்.

"ஏம்பா சண்டைக்கின்னா வந்தீங்க, வெளியிலே போயிடுங்க'' என்றார். தொரக்கண்ணு “குட்மானிங் சார், அந்தத் தடியன் தான் எங்ககிட்டே வலுச்சண்டக்கி வந்தான். அதோட இல்லாமே என் சட்டையைப் புடிச்சி வேறே கிளிச்சுட்டான்'' என்றான்.

ஏற இறங்கப் பாத்தார் இஞ்சினீயர். பயனி, கோயிந்தன், மைக்கேல், ரங்கா அத்தினி பேரையும் நோட்டம் விட்டார். "எந்த இடத்துலேந்துய்யா நீங்கள்ளாம் வரீங்க'' என்றார்.

“சேத்துப்பட்டு ஸார்'' இந்த வாட்டியும் தொரக்கண்ணுதான் பதில் சொன்னான்.

“சேத்துப்பட்டுனா ஜெகநாதபுரம் தானே?''

தொரக்கண்ணுக்கு பெருமையா பூடுச்சி. ஏரியா பத்தி ஆபீஸருக்கு கூட தெரிஞ்சிருக்கே என்று சந்தோஷப்பட்டான். "ஆமாம் சார் அதே தான்" என்றான்.

"அதானே பாத்தேன் வேலக்கி வந்த இடத்துலேயும் பொறுகித்தனம் பண்ற கேப்மாரிங்க ஜெகநாதபொரம் பசங்கதானே'' என்றார் தடியனுக்கு மூஞ்சி மேலே கொடுத்தா மாதிரி இவருக்கும் தாடைல ரெண்டு கொடுக்கலாமானு தொரக்கண்ணு நெனச்சான்.

"சார் மன்னிச்சுக்கோங்க'' என்றான் பயனி. கோயிந்தனும் கூடச் சேந்துண்டான். மைக்கேலும், ரங்காவும் கையைக் கட்டிக்கிட்டு பேசாம நின்னாங்க. தொரக்கண்ணு மட்டும் அலச்சியமா அவரை மொறச்சி பாத்தான்.

“நீங்க அஞ்சு பேரும் போயிடுங்க, ஒங்களுக்கெல்லா கொடுத்தா இந்த பாக்டரி உருப்பட்ட மாதிரிதான்'' என்றார் இஞ்சினியர்.

எவருமே அசையவில்லை. இந்தவாட்டி மன்சுக்கோங்க ஸார். இனிமே சண்டேல்லாம் போடமாட்டோம்" என்று அஞ்சு பேரும் சேர்ந்து சொன்னார்கள்.

இதை அவர் காதில் வாங்கிக்கிட்டது மாதிரியே தெரியலை. அதுக்குள்ளாறே ரயில்வே போலீஸ் ஒத்தன் வந்துட்டான். பாத்தா புல் தடுக்கி மாதிரி அவன் இருந்தான். “ஏம்பா யார்யா சண்டை போடறது? மரியாதையா வெளியே போயிடுங்க. மெயின் ரோட்லே போய் வச்சுக்கோங்க. இங்கெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அப்புறம் கேஸ் புக் பண்ணும்படியாக ஆயிடும்"னு சவுடால் பேசிக்கினு வந்தான். தொரக்கண்ணுவையும், அவன் கிழிஞ்ச சட்டை கசங்கி அக்குளில் சொருகியிருந்த தெனத்தந்தி, ஆப்டவுசர் தெரிய மடிச்சு கட்டிண்டு இருந்த வேஸ்டி இதெல்லாம் பாத்த உடனேயே புரிஞ்சிண்ட மாதிரி "நீ தானேய்யா போயிடு வெளிலே. உன்னோட எவன்யா வந்தான்?" என்று அவன் நீட்டுவதற்குள் பயனி, கோயிந்தன், ரங்கா, மைக்கேல் எல்லாரும் தொரக்கண்ணை பாலோ பண்ணினாங்க. கொஞ்ச தூரம் தாண்டல. மைக்கேலுக்கு கோவம் கோவமா வந்தது. அவன் வீட்லே பொண்டாட்டி, அவன் நாயினா, ரெண்டு புள்ளீங்க, இத்தினிபேரு இவனை நம்பிதான் அவங்க துண்றாங்க.

"தொரக்கண்ணு ஒன்னாலேதான் இந்த வெனயே'' என்றான் அழுத்தமாக.

"நா கம்னு கடேசிலே போய் நின்னுருப்பேன். கோயிந்தன் தானே...' என்று இழுத்தான் தொரக்கண்ணு.

"டேய், ஒனக்கு நல்லதெ நெனச்சதுக்கு இது போதாதுடா எனக்கு. ஏதோ நம்ப ஏரியா பையனாச்சே பழகினவனாச்சேன்னு கூப்பிட்டா... ” என்று பொரிந்து தள்ளினான் கோயிந்தன்.

"போங்கடா மயிரானுங்களா எனக்கு இது போதாதுடா” என்று தலேலையும் அடிச்சிக்கிட்டான்.

பயனி சமாதானப்படுத்த ஆரம்பிச்சான். "சரி பேசாம வாங்க. இன்னக்கி ஆக மொத்தம் எங்கூலி போச்சு'' என்றான்.

"நம்ப எல்லார் கூலியும் தான், ஆனா தொரக்கண்ணு இன்னக்கி புதுசு” என்றான் மைக்கேல்.

“சரி பேசாம வா'' என்று சொல்லிக்கிட்டே பெட்டிக்கடை முன்னாடி போய் நிண்ணுட்டான் தொரக்கண்ணு.

"ஒரு கட்டு சாது, ஒரு சீட்டா பொட்டி ஒண்ணு கொடுங்க'' என்று எட்டணா பில்லையை பிஸ்கட் பாட்டில் மூடிமேல வச்சான். “சாது இல்ல, காஜா தரவா?'' என்றான் கடைக்காரன். “கணேஷ் இருந்தாக் கொடு'' என்றான். பீடியை வாங்கிண்டான் “சீட்டா இல்ல கார் தரட்டுமா?'' என்றான் மறுபடி கடைக்காரன். “என்யா கடே..'' சொல்ல வாயெடுத்த தொரக்கண்ணு கஸ்டப்பட்டு அடக்கிண்டான். “பரவால்லே எதினாச்சும் ஒரு பொட்டி கொடு” என்றான். அதுக்குள்ளாரே ரங்கா, “தொரக்கண்ணு எங்கிட்டே பொட்டி இருக்கு வாங்காதே'' என்றான். பாக்கி இருபது பைசா திருப்பிக் கொடுத்தான் கடைக்காரன். “ஏம்பா கணேஸ் இருவத்தஞ்சுதானே? என்னிலேந்து முப்பது? என்றான் தொரக்கண்ணு.

"அதெல்லாம் ஒரு மாசமாவுது. இப்பல்லாம் இந்த ஏரியாலே முப்பதுதான்'' என்று வெட்டிப் பேசினான் கடைக்காரன்.

சரி இன்னக்கி நம்ப டைம் சரில்லே வாயை தெறக்கக்கூடாதுன்னு தொரக்கண்ணு தீர்மானிச்சான். எல்லாரும் கணேஸரை பத்த வைச்சிண்டாங்க. ரங்கன் மட்டும் அடிமடிலேந்து ஒரு பாதி அடிச்ச பியர்ஸைப் பத்த வச்சிண்டான். அவன் சிகரட்டைப் பாத்த உடனே தொரக்கண்ணுக்கு காலிலே பஸ் வரச்சே கீழே போடாம அனைச்சி வெச்சிருந்தா இப்ப ஒரு அரை தம்மாவது அடிக்கலாமேன்னு தோணிச்சி.

"அப்போ இன்னி பொழப்பு அம்பேல்தானா மச்சான்'' என்றான் கோயிந்தன்.

“இல்லேடா மாமா, கவலப்படாதே. தொரக்கண்ணு எக்ஸ்பர்ட், இருக்கான். இன்னக்கி ஆளுக்கு அஞ்சாவது தேறும்" என்றான் பயனி.

“இங்க ஸ்கூல் எதினாச்சும் இருந்துச்சுனா இங்கியே உட்காந்துக்கலாம்'' என்றான் கொஞ்சம் சந்தோஷமாகவே தொரக்கண்ணு.

“தொரை இன்னக்கி தெரிஞ்சுக்கோ? ஏரியா வுட்டு ஏரியா மட்டும் என்னக்கிம் வச்சுக்காதே. அது படா டேஞ்சர் புரிஞ்சுண்டியா'' என்றான் ரங்கா .

“அப்ப எங்கே தான் போவறது?''

“அப்படி கேளு தொரை. பச்சப்பாஸ் காலேஜ் பக்கமாவே போயிடலாம்" என்றான் பயனி.

“முதல்லே மொத்தம் எவ்ளோ துட்டுனு பாக்க வோணாமா?" என்று மைக்கேல் சொல்லவே பயனி கலெட் பண்ணினான். மொத்தம் மூணு தொண்ணூறு இருந்தது. சரி இது போதும். வா நடந்தே போயிடலாம் என்று பயனி சொன்னவுடன், தொரக்கண்ணுவும், கோயிந்தனும் ஒத்துக்காததால் கார்டன் வரை பஸ்லே போய் அங்கேந்து பச்சப்பாஸ் நடந்து பூடலாம் என்றான் ரங்கா .

கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு பீடி எல்லாருமே பத்த வச்சிண்டாங்க. இந்தவாட்டியும் ஒரு அணைச்ச பாதி சிகரட்டை ரங்கா எடுத்துப் பத்த வச்சிக்கிட்டான். பஸ் வந்தது. பயனி 'அஞ்சு கார்டன்’ என்று சொல்லி டிக்கட் வாங்கினான். டிரைவர் சீட் சைட்லே நாலு பேரும் எதிர்க்க பயனியும் உட்கார்ந்தனர்.

இரண்டு ஸ்டாப்பிங் தாண்டறதுக்குள்ளேயே பஸ் ரொம்பிடிச்சி. ஸ்கூல், வேலை, காலேஜ் போறவங்க கூட்டம். ஒரு கிருதாக்காரன் பேக் பாக்கெட்லேந்து பர்ஸ் ஒன்று பயனியைப் பார்த்து பல்லை இளிச்சிது. பயணி சாவதானமா எழுந்து, “ஸார் நீங்க உக்காருங்க” என்று வயதானவரைக் கூப்பிட்டான். அவர், “இல்லேப்பா நான் கார்டன்லேதான் எறங்கிடறேன்” என்று சொல்வதற்குள் கிருதாக்காரன் உக்கார்ந்துட்டான். பயனிக்கு என்னவோ போல ஆயிடுச்சி “சனியனே தூய்த்தெறி கெய்வா, கிருதா'' என்று மனசிற்குள் வண்டவார்த்தையில் திட்ட ஆரம்பித்தான். கார்டன் ஸ்டாப் வந்தது. பயணி நாலு பேருக்கும் முன்னாடியே ஜாடை காட்டிட்டான். எவருமே இறங்கவில்லை.

பஸ் பொறப்பட்டு, அழகப்பா நகர் தாண்டவே கண்டக்டர் பயனின் பார்த்துட்டான். “யோவ் கார்டன் வரை டிக்கட் வாங்கிட்டு தாண்டி வரியே! இன்னும் அஞ்சு பத்து காசு டிக்கட் வாங்குய்யா'' என்றான்.

“கார்டன் வந்தா சொல்லு எங்களுக்கு தெரியாதுண்ணு அப்பவே நான் சொன்னேனே! நீ தான் எங்களுக்கு சொல்லயே'' என்றான் ரங்கன்.

தொரக்கண்ணு திருதிருனு முளிச்சான்.

“பெரியவர் கார்டன்லேதானே எறங்கறதா சொன்னாரு, அவரோட எறங்கறதானே?'' என்று கிருதா சொன்னவுடன் அவனை வெட்டி எறியலாம் போல் இருந்தது பயனிக்கு. 'சரி வெட்டிப் பேச்சு வேண்டாம் இங்கே இறங்கிடுங்க' என்றான் டிரைவர். அவனுக்கு பேசிட்டே இருந்தா வசூலை பின் சர்வீஸ்காரன் அடிச்சிருவானேனு பயம்.

அஞ்சு பேரும் எறங்கினாங்க. "இவங்களுக்கு இதே வேலயாப் போச்சு'' என்று கண்டக்டர் தினம் வருகிறது மாதிரி அலுத்துக் கொண்டான். பஸ் பொறப்பட்டு ஸ்பீட் எடுத்தது. மைக்கேல் கண்டக்டரைப் பாத்து, “டேய் நன்னா உன்னை ஒதிக்கறேன்'' என்றான். அவன், காதுலே விழுந்திருக்க முடியாது.

“நம்ப ஐடியா எப்படி? நடை கொஞ்ச தொலவு தான்" என்றான் பயனி. அதுக்குள் ரங்கா, "நான் சமாளிக்காட்டி இன்னும் பேஜாரா பூட்டிருக்கும் என்றான்.

"ஏன் பயனி நடுப்பறே எழுந்துட்டே'' என்றான் தொரக்கண்ணு. கிருதாக்காரனை குறிவச்சத சொல்ல இஷ்டப்படலே பயனிக்கு.

“சும்மா கால் மரத்துப் போச்சு அதான்'' என்றான். 
"அதெல்லாம் இல்லே வேற ஏதோ'' என்றான் கோயிந்தன். 
"நீ நெனக்கற மாதிரி இல்லே கோயிந்து'' 
“கிருதாக்காரனை குறி வைக்கலேன்னு சொல்லு?'' 
"அதெல்லாம்''
"பயனி, ரைட் இல்ல எதினாச்சும் ஒரு வார்த்தை சொல்லு போதும்''
"ரைட் கோயிந்தா'' என்று முடிச்சான் பயனி. பயனியைத் தவிர மீதி நாலு பேரும் மனசிற்குள் சிரித்துக் கொண்டார்கள்.

"வெட்டி வார்த்தை எதுக்கு? மணி 9 ஆவப் போவுது, காலேஜ் பயலுக வர நேரம். குயிக்கா வாங்க'' என்றான் பயனி கொஞ்சம் மொறைப்பாக.

எல்லாரும் பீடி பத்த வச்சுக்கிட்டாங்க. இந்த வாட்டி ரங்கன் அனைச்ச பாதி பில்டர் சிகரட் குடிக்க ஆரம்பிச்சான். “தொரக்கண்ணு கிளிஞ்ச சொக்காயை அவுத்துடு. நான் உள்ளே மஞ்ச பனியன் போட்டுருக்கேன் அத அவுத்து தரேன் அதே போட்டுக்கோ'' என்றான் கோயிந்தன்.

பனியன் போட்டுட்ட பின்னர் சொக்காயை அழகாச் சுருட்டி தெனத்தந்தி உள்ளே வச்சு மறுபடி அக்குளில் சொருகிக்கினான்.

"மேக்கே காம்பவுண்டு சுவர் பக்கம்தான் நெறய நிழல் இருக்கு. அங்கே போயிடலாம். அதுக்குள்ளாற நான் மணி கடேக்கு போய் வரேன் என்று சொல்லிக்கிட்டே மைக்கேல், கோயிந்தன், ரங்கன், 

மூணுபேருட்டேயும் ஒவ்வோர் ரூபாயைக் கொடுத்துட்டு பயனி கடைக்கிப் போனான்.

பச்சப்பாஸ் காலேஜ்னு எதுக்கு பேர் வச்சானுங்க? கேட்டு, ஜன்னல் கதவு எல்லாம் பச்சையா இருக்கறதனாலேயா என்று நெனச்சிகினே தொரக்கண்ணு சுவர் ஓரமாக நிழலைப் பாத்து ஒக்காந்தான். கிழிஞ்ச சட்டையாலே கீழே மண் போகத் தட்டிட்டு அதை மடிச்சுப் போட்டுகிட்டு உட்காந்தான். எதிர்க்க தெனத்தந்தியை மடிச்சி பாய் மாதிரி விரிச்சான். உடனே பயனி வந்து விட்டான். நீட்டமான அரிக்கன் விளக்குலே கொளுத்தற மாதிரி ஒரு நாடாவையும் புது காப்பிங் பென்சில் ஒன்றையும் தொரக்கண்ணுகிட்டே கொடுத்தான்.

தொரக்கண்ணு நிமிந்தான். பின் நாடாவை ரெண்டா படிச்சு ரவுண்டா சுத்திக்கிட்டு, “வாங்க சார் சரியான டபுள் மடிப்பை இந்த நாடா மேலே பென்சில் வச்சு கண்டுபிடிங்க. ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு இத்தினி மடிப்லே எது நடு மடிப்னு கண்டுபிடிச்சீங்கன்னா டபுள் துட்டு ஒரு ரூவா வச்சா ரெண்டு ரூவா, ரெண்டு வச்சா நாலு. அஞ்சு வெச்சா பத்து'' என்று மந்திரம் மாதிரி சொல்ல ஆரம்பிச்சான். மெதுவா காலேஜ் ஸ்டூடன்ஸ் நாலைஞ்சு பேர் வேடிக்கை பாக்க ஆரம்பிச்சாங்க.

மைக்கேல் வந்தான். “யோவ் மடிப்பக் கரெக்டாக் கண்டுபிடிச்சாத் துட்டை கை மேலே தருவியா?'' என்றான்.

"ஏன்யா பென்சிலை இப்படிக் கொடு. நான் மடிப்பைக் கண்டுபிடிக்கறேன்''னு சொல்லி ஒரு ரூபாயை கீழே போட்டுட்டு பென்சிலை எங்கோ மடிப்பிலே சொருகினான் கோயிந்தன்.

பயனி மெதுவா பசங்க பாண்ட் பாக்கெட்டுகளைப் பாக்க ஆரம்பிச்சான். ரங்கா இந்தவாட்டி சாது பீடியை வாயில் வைச்சு புகையை இஸ்துகினே செவப்புத்தலையன் வரானானு நோட்டம் விட ஆரம்பித்தான்.
**

நன்றி : கணையாழி, சென்ஷி

*
தொடர்புடைய காணொளி :