Wednesday, September 26, 2012

'சிகேஹ்' - மார்க்க அறிஞர்கள் இதுபற்றி விளக்கக் கூட்டங்கள் நடத்தினால் என்ன?

கார்டியன் -ல்  வந்த ஃபாஸெல் ஹவ்ராமியின் (Editor : Kurdishblogger.com ) . பழைய கட்டுரையைப் படித்துவிட்டு இப்போது கேள்வி கேட்பவர் நம்ம மஜீத் ஹ(வ்)ராமி. இருக்கிற பிரச்சனை பத்தாதென்று இவர் வேறு! நாம் அறியாத தமிழில் நன்றாக மொழிபெயர்த்து அனுப்பியிருக்கிறார். போடுவோம், நன்றியுடன். - ஆபிதீன்.

***

source : http://www.guardian.co.uk/world/iran-blog/2012/mar/06/iran-temporary-marriage-law-sigheh

***

இந்த வாரம், ஈரான் பாராளுமன்றத்தில், ஆண்கள் அவர்கள் விரும்பும் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் பாலியல் தொடர்புகொள்ள அனுமதிக்கும், சர்ச்சைக்குரிய, ஷரியா சட்டம் மூலமாக அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் "சிகேஹ் அல்லது தற்காலிக திருமணம்" (sigheh) என்ற உள்நாட்டு சட்டத்தில், ஒரு புதிய திருத்தத்தை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஈரானில் திருமணத்திற்கு வெளியே செக்ஸ் என்றால் 100 கசையடி, விபச்சாரம் விஷயமென்றால் கல்லெறிந்து கொல்லும் மரண தண்டனை என்கின்ற அளவிலான குற்றம். எனினும், சிகேஹ் என்ற நடைமுறைப்படி, ஒரு மனிதன் ஒரு பெண்ணை, குறிப்பிட்ட மத சடங்குகள் மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் திருமணம் செய்து கொள்ள முடியும். இத்திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டியதில்லாமலேயே, ஒரு சில நிமிடங்கள் முதல் பல ஆண்டுகள் வரை நீடிக்கும்.  தற்காலிக திருமணங்களை ஆண் நினைத்தால், எந்த நேரத்திலும் முடித்துவைக்கமுடியும், ஆனால் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இல்லை.

அனைவரும் ஆண்களாலான, 104 உறுப்பினர்கள் மூலம் கடந்த திங்களன்று நிறைவேற்றப்பட்ட புதிய திருத்தம்,  கர்ப்பம் போன்ற  குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பதிவு தேவை என்று சொன்னாலும், முறையான பதிவு இல்லாமல் சிகேஹ் நடப்பதற்கு பெருமளவில் அனுமதிக்கவே செய்கிறது.

சத்தார் ஹிதாயத்காஹ் என்ற ஒரு எதிர்க்கட்சி எம்.பி., . "நாளை முதல், ஒருபெண்கூட தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் பாலியல் உறவோடு இல்லை என்று உறுதியாக இருக்க முடியாது. எனவே இப்போது இங்கு (ஈரானுக்கும்) மேற்குலகுக்கும் எந்த வித்தியாசமும்  இல்லை. யார் வேண்டுமானலும் 'தற்காலிக திருமணம்' உடன்பாடு உள்ளது என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, ஒருவருடன் பாலியல் உறவு கொண்டிருக்க முடியும் " என்று கூறியதாக எத்திமாத் என்ற சீர்திருத்தவாத செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

சிகேஹ் பதிவு செய்யப்படத் தேவையில்லை என்று கூறுபவர்கள், அது தனிப்பட்ட உரிமை சம்பந்தப்பட்டஒரு விஷயம் என்று வாதிடுகின்றனர்.  செக்ஸ் உண்மையில் ஒரு தனிப்பட்டவிஷயம்தான்.  ஆனால் பாலியல் என்று வரும்போது ஈரான் மக்களின் தனிப்பட்ட உரிமையை மதிப்பது கிடையாது என்பதுதான் உண்மை. திருமணம் அல்லது தற்காலிக திருமணம் வெளியே பாலியல் விவகாரங்கள் குற்றங்கள் கருதப்படுகிறது.  நீண்டகாலமாகவே, சட்டத்திற்குப் புறமாக, ஆண்களுக்கு ஆதவாக, ஆண்கள் அவர்கள் விரும்பும் காலம் வரை பெண்களைப் பாலுறவு கொள்ள அவர்களுக்கு உரிமை கொடுத்து, ஆதரவாக சிகேஹ் - தற்காலிக திருமண சட்டம் - முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய திருத்தங்கள், பெண்கள் உரிமைகளை பெரிதாக ஒன்றும் அங்கீகரிக்கவில்லை. மேலும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டு நிலையைக் கண்டுகொள்ளாத, ஈரானிய  குடும்ப அமைப்பின் அடித்தளத்தை அச்சுறுத்தும் பழைய சட்டம் தொடரவே அனுமதிக்கின்றன.

***
Thanks : Majeed &   Fazel Hawramy

Monday, September 24, 2012

மஹாநடன் திலகனின் மரணம்


ஓவியம் : ராஜசேகரன் பரமேஸ்வரன்
Image Coutesy : http://www.artween.com/Artists/Rajasekharan-Parameswaran/Theme/oil-painting-of-Thilakan

***
திலகனுக்கு என் அஞ்சலி.  நான் பார்த்து ரசித்த சில சினிமாக்கள் இவர் இல்லாமல் சோபித்திருக்காது. பெருந்தச்சன், கிரீடம், மூணாம்பக்கம், கண்ணெழுதிபொட்டும்தொட்டு போன்ற படங்களிலிருந்து முக்கிய காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தார்கள் காலையில். பழைய பேட்டி ஒன்றும். அவரது பெயரைப் பார்த்துவிட்டு ,’குரல் ஒன்றும் சரி இல்லையே..’ என்றார்களாம் ரேடியோ ஸ்டேஷனில். ‘நாயர்’ என்று சேர்த்து அப்ளிகேஷன் அனுப்பு என்று நண்பர்கள் சொல்லவும் ’சுரேந்த்ரநாத நாயர்’ என்று அனுப்பியிருக்கிறார். செலக்டட்!. அவருடைய வெளிப்படையான பேச்சு போலவே படங்களின் வசனங்களும் அமைந்தன. இயக்குநர் பத்மராஜனின் மூணாம்பக்கம் சினிமாவில் ’செருப்பக்காரனாயிருந்தா ஒருதரமெங்கிலும் போலீஸ் ஸ்டேஷன் கேரியிருக்கனும்’ வசனம் ஒரு உதாரணம். ’இன்னஸண்ட்’ சினிமாவிரும்பிகள் திலகனின் ஒரு படமாவது பார்க்க வேண்டும். - ஆபிதீன்

Saturday, September 22, 2012

ஆயிரமே.. ஆனாலும்... அன்னாகயிரே அவுந்தாலும்...

அ.மார்க்ஸ் அவர்களின் முகநூலில்  சகோதரர் ராஜாராம் ஒரு கமெண்ட் கொடுத்திருந்தார். பிடித்திருந்தது. அவர் குறிப்பிடும் கவிஞர் இன்குலாபின் பிள்ளையார் கட்டுரை  யாரிடமாவது இருக்கிறதா? அனுப்புங்களேன். - ஆபிதீன்

***

Rajaram Komagan :


முகநூல் அலுப்பை பல நேரங்களில் தருகிறது.எனக்கு தெரிந்து மிகக்குறைந்த அளவில் தான் அதிக கவனத்தோடும்,சிரத்தையோடும் இதில் வினை எதிர்வினைபுரிகின்றனர்.மற்றபடி இதில் பொழுது வீணாகிறதோ என்று கூட எண்ணம் தோன்றுகின்றது. ஆயிரமே.. ஆனாலும்... அன்னாகயிரே அவுந்தாலும் உடுரா பல்லாக்க..என வண்டியை ஒட்டுகின்றோமா? அன் தோன்றுகிறது. மதமோ, ஆன்மீகமோ தனி மனித நம்பிக்கை என்ற ரீதியிலான அணுகுமுறை இல்லாதாது பெரும்  குறை.நம்பிக்கைகளை நிறுவனப்படுத்தி குழுவாக,அதற்குரிய தனி வாழ்வியல் முறையை அடையாளப்படுத்துவதில் மத நிறுவனங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்திருக்கின்றன.தனிமனித சுதந்திரத்தை அங்கீகரிக்கின்ற நாகரிகத்தை இழந்து வெகுதொலைவுக்கு வந்துவிட்டோம்.பக்ரீத்து பாய் வீட்டு பிரியாணி நம் வீட்டிற்கும் நம் வீட்டு தீபாவளி பலகாரம் பாய் வீட்டுக்கும் பரிமாற்றப்பட்ட காலங்கள் ஏக்கத்திற்குரிய இறந்த காலங்களாகி விட்டன. கவிஞர் இன்குலாபின்
பிள்ளையார் கட்டுரையை வாசித்தவர்களுக்கு இந்த ஆதங்கம் புரியக்கூடும்.... ஆன்மீகம் மக்களைப் பிரிக்க அல்ல இணைக்க வேண்டும்..அப்படி இல்லாதவை தடை செய்யப்பட வேண்டும்.... அதிகார அட்டகாசங்கள் கடுகி ஓழிக.!
 
***
நன்றி : அ.மார்க்ஸ் , ராஜாராம் கோமகன்

Wednesday, September 19, 2012

The meaning of Modern Art

Mr. Pollock, in your opinion, what is the meaning of modern art?

Modern art, to me...is nothing more than...the expression of the contemporary aims...of the age that we're living in.

Did the classical artists have any means of expressing their age?

Yes, and they did it very well. All cultures have had means and techniques...of expressing their...immediate aims. The thing that interests me...is that today...painters do not have to go to a subject matter outside of themselves. They work from a different source. They work from within. It seems to me...that the modern artist cannot express this age the airplane, the atom bomb,the radio in the old forms of the Renaissance...or any other past culture.

- from the subtitles :  'Pollock'

***


The She-Wolf
Image Courtesy :  WebMuseum

Monday, September 17, 2012

மடலில் பூத்த மனம் - இப்னு ஹம்துன்

'என்'ணங்கள் - 3 

காலத்தின் கரங்களில்..... என்று ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஒரு வருடமாகப் போகிறது. முரட்டுக் கோபம் கொண்ட, நேரடியாகக் கேட்டுத் தெளிய விரும்பாத உறவினர் ஒருவருக்கான சங்கேதம் அது. அதற்கு வந்த மறுமொழிகளும், விமர்சனங்களும் மகிழ்வளித்தபடியிருக்க.... ஒரேஒரு விமர்சனம் தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில் இஸ்லாமும் முஸ்லிம்களும் கவிதைக்கு எதிரானவர்கள் என்கிற அபத்தப் புரிதலை அந்த விமர்சனம் எழுப்பியது. எழுதியவர் சற்றே அறிமுகமான ஒரு சகோதரர், மாநிலந் தழுவிய அமைப்பொன்றில் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர் என்பதால் அவருக்குப் புரிந்துணர்வுடன் விளக்க நினைத்தேன். ஒரு மடல் வடித்தேன்.

அம்மடல்.........
    ...............கவிஞர்கள் வழிகேடர்கள் என்ற திருமறை கூற்று இன்றும் மெய் படுத்திக்கொண்டிருக்கின்றது.
    இறை மறை கவியை தவிர்த்து மற்ற ஏதும் மனசு விட்டு படிச்சா புரியும் என்பதற்கோ மனசு தெளியும் என்பதற்கோ இடமில்லை.
    இதை யார் மனதும் புண்படுத்துவதற்கு எழுதவில்லை. உண்மை நிலை இதுதான்.

அன்பின் .........................,

மேற்கண்ட கருத்து உங்களிடமிருந்து வந்ததாக எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனிநபர் தாக்குதலில்லாத, தரக்குறைவற்ற விமர்சனங்களைத் தவிர, பொதுவாக, கருத்துரிமையை மறிக்கவோ, பறிக்கவோ செய்வதில்லை என்பது எந்தன் கொள்கை. ஆனால் உங்களுடைய மேற்கண்ட கருத்தில் பொத்தாம் பொதுவாக, ஒட்டுமொத்தக் கவிஞர்களையும் சாடியுள்ளதால், கவிஞர்களில் எத்தனையோ உத்தமமான நபித்தோழர்கள், இறையடியார்களும் உள்ளனர் என்பதால், உங்களின் விளக்கத்தினைப் பெறும் நோக்கத்தில் உங்களின் இக்கருத்தை வெளியிடுவதைத் தாமதம் செய்யக் கேட்டிருக்கிறேன். உங்களின் விளக்கத்தைப் பொறுத்து அது வெளியிடப்படலாம்.

குர்ஆன், ஹதீஸை கற்றறிந்தவராக, பொதுஅறிவு மிக்கவராகக் கருதப்படும் உங்களிடமிருந்து இப்படியொரு கருத்தா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

நீங்கள் குறிப்பிடும் அல்குர்ஆனின் வசனத்தில், 'கவிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அல்குர் ஆனின் 26ஆவது அத்தியாயம், இலக்கியம் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது:

"ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை (நபியே) உமக்கு அறிவிக்கட்டுமா?" "இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்" "ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே!" "மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்." "நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா?" "நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்" "(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே!) தாங்கள் செல்லுமிடம் எதுவென அநீதி இழைத்தவர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். -அல்குர்ஆன் 026:221-227.

இஸ்லாம் இலக்கியங்களை ஐயந்திரிபற ஏற்றுக் கொள்கிறது; வரவேற்கிறது. உண்மையை, யதார்த்தத்தை அழகுறப்பாடி, வாழ்க்கை இலட்சியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. மாறாக, உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்மை அல்லது அளவுக்கு மீறிய கற்பனை என்னும் சவுரிமுடியை வைத்து, பொய்க் கற்பனைச் செய்திகளையே அதிகமாக நீட்டிப்பின்னிடும் நச்சிலக்கியங்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்ட நச்சுக் கவிஞர்களையே - பொய்யர்களையே - அல்குர்ஆன், 'ஷைத்தான்கள்' என்றே அடையாளம் காட்டுகின்றதே தவிர, உண்மைக் கவிஞர்களை அது இழித்துரைக்கவில்லை.

கவிதைக்குப் பொய் அழகு என்று வைரமுத்துத்தனமாகச் சொல்லப்பட்ட வறட்சியான தத்துவத்தை அறிந்த அளவுக்குக் கூட நம்மில் பலரும்,
''நிச்சயமாக கவிதையிலும் ஹிக்மத் - ஞானம் உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6145) என்ற ஹதீஸை, நபிமொழியை அறிந்திருக்கவில்லையே என்பது தான்  எனக்கு வியப்பு.

கவிதைக்குப் பொய் அழகாய் இருக்கலாம். அது கலையும் ஒப்பனை. ஆனால் உண்மை தான் அதன் ஆன்மாவாயிருக்கவேண்டும். ஆகவே தான், ஒரு முஸ்லிம் கவிஞன் கூறினான்: கவிதையில் உண்மையைத்தான் சொல்ல வேண்டும். பொய்போல சொல்லவேண்டும். என்னுடைய கவிதைகளில் நான் இந்த மேற்கோளையே கவனம் கொள்கிறேன். 'கண்'டதையும் எழுதும் கவிஞர்களிடமிருந்து வாழ்வியல் உண்மைகளை எழுதும் நாங்கள் நிச்சயம்  வேறுபட்டவர்கள்.

அவசர கோலத்தில், அறியாமையால் முற்றிலுமாகக் கவிதையை வெறுப்போர், தமது கருத்தாடலுக்குச் சான்றாக, திருக்குர்ஆனின் 26:224 வசனத்தை மேற்கோள்  காட்டுகின்றனர்.  ஆனால், அதனைத் தொடர்ந்துள்ள மூன்று வசனங்களைப் பற்றி சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.  அவ்வசனத்திற்கும் அதனையடுத்துள்ள மூன்று வசனங்களுக்கும் விளக்கமளிக்கும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தமது ‘ஃபத்ஹுல் பாரீ’ எனும் நூலில் குறிப்பிடுவதாவது:

“இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கவிஞர்கள், இணை வைப்போராக இருந்துகொண்டு, நல்லவர்களையும் அறநெறிகளையும் தாக்கிக் கவிதை பாடி வந்தவர்களாவர். அப்துல்லாஹ் இப்னு சப்அரீ, ஹுபைரா பின் அபீ வஹப், முஸாபிஉ பின் அப்தி மனாஃப், அம்ர் பின் அப்தில்லாஹ், உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.  அதே நேரத்தில், உண்மைக்காகக் குரல் கொடுத்து, நல்லதே பேசிவந்த கவிஞர்களும் இருந்துள்ளனர்.  இறைவனையும் இறைத்தூதரையும் புகழ்ந்து பாடி, இறை மார்க்கத்துக்கு வலு சேர்த்து வந்தனர்.  அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, ஹஸ்ஸான் இப்னு தாபித், கஅப் இப்னு மாலிக், கஅப் இப்னு சுஹைர் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.  ஆக, பொய்யும் போலிப் புகழ்ச்சியும் வசையும் இல்லாத, நல்ல கருத்துகளைக் கூறும் கவிதைகள் அனுமதிக்கப்பட்டவை ஆகும்.  இத்தகைய கவிதைகளை நபி (ஸல்) அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.” (சஹீஹுல் புகாரீ, பாகம் ஆறு, பக்கம் 646)

ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) என்கிற கவிஞருக்காக பள்ளியிலேயே மேடை அமைத்துக் கொடுத்து கவிபாடச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.

மேலும், உமையத் இபுனு அபிஸல்த்து என்கிற முஸ்லிமல்லாதவராக இருந்தவரின்  கவிதையைப் பற்றி அதன் உண்மைத் தன்மையைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் சீரா (வரலாறு) நமக்குச் சான்று பகர்ந்துகொண்டிருக்கிறது. அதுபோலவே, குர்ஆன் சுன்னாவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருக்கிற, வெறுமே பொய்யும் புனைவுமான  கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு நாமும் விலகிக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும், உங்களுக்கும், வேறெந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.

என் மதிப்புக்குரிய மார்க்கச் சகோதரர்களில் ஒருவராக இருக்கும் நீங்கள், நான் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டித் திருத்த முனைவதை வரவேற்று, அதனை  ஏற்றுத் திருத்திக்கொள்பவனாகவே என்னைக் காண்பீர்கள் இன்ஷா அல்லாஹ். ஆனால், அவை முழுமையாக குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பது ஒன்று தான் அதற்கு அடிப்படை நிபந்தனை.

நேர்மறையான, சரியான  விமர்சனங்களை நட்சத்திர திசைக் காட்டிகளாகக் கருதி வழி அறியவும், சரி செய்துகொள்ளவும் விரும்புகிற அதேவேளை, எதிர்மறை உணர்ச்சிகளால் உந்தப்பட்டு செய்யப்படுகிற விமர்சனங்களை பறவையின் சிறகசைப்பில் பறக்கும் சருகுகளாகக் கருதிப் புறக்கணித்துப் போவதென் பழக்கம். இருந்தும் நீங்கள் என் மதிப்பிற்குரியவர் என்பதால் இந்த விளக்கம் - அடையாத காதல் தோல்விக்கு, செயற்கையானத் துக்கக் கவிதை எழுதும் சாராசரி கவிஞனாக, பொதுபுத்தி வாயிலாக, என்னை நீங்கள் கருதியிருந்தால்  தயவு செய்து அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற விண்ணப்பத்தோடு!

இந்த விளக்கத்திற்குப் பின்னும் உங்கள் கருத்தே சரி என்று நீங்கள் பிடி'வாதம்' பிடித்தால், என் எழுத்துகளில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இன்ஷா அல்லாஹ், நிச்சயம் திருத்திக்கொள்வேன், அச்சுட்டல்கள் பொருத்தமாக இருக்குமென்றால். அல்லது யாரையோ 'வாதத்தில்' வெல்லும் பொருட்டே உங்களால் இக்கருத்து சொல்லப்பட்டதாக இருந்தால், நல்லது, நான் இப்போது விடை பெற்றுக்கொள்கிறேன்.காலம் கனிந்து நிற்கும் 'அந்த நாளில்' இறைமன்றத்தில் இதற்கான விடையைப் பெற்றுக்கொள்கிறேன்.

பி.கு: குர்ஆன் ஹதீஸை உங்கள் கருத்துகளில் மேற்கோள் காட்ட நேரிடுகையில், அதை முழுமையாக எடுத்து வைக்கவும். பொருள் மாறுபாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வேண்டுகோள்.
நன்றி. வஸ்ஸலாம்.
.
என்று எழுதியிருந்தேன்.

உடனடியாக வந்த மறுமொழியில்

தங்களின் விளக்கத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எனது வரிகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். துஆ செய்யுங்கள்.
என்று எழுதியிருந்தார். அல்ஹம்துலில்லாஹ்.

அண்மையில் கூட சில அவைகளில் 'இவர் கவிஞர்; கூட்டிக் குறைத்துச் சொல்வார்' என்று நேரடியாகவே விமர்சனம் செய்யப்பட்டேன். அவ்வப்போது அதற்குரிய விளக்கத்தை அளித்துவிட்டாலும், அந்த விமர்சகர்களுக்கும் விடையளிக்கும் விதமாக இப்பதிவு அமையட்டும்.

***

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி சாம் பாசில் என்னும் இஸ்ரேலிய யூதனொருவன் 'The Innocence of Muslims' என்கிற பெயரில் திரைப்படம் என்ற போர்வையில் செய்துள்ள மிகக் கேவலமான அவதூறு கடும் வேதனையளிக்கிறது. பொதுவாக, முஸ்லிம்கள் பிறமத புனிதங்கள் மீது எவ்வித  அவதூறும் செய்வதில்லை. இருந்தும், இஸ்லாத்தின் மீதான யூதர்களின் காழ்ப்புணர்ச்சியும் அரசியல் ஆதாய நோக்கும் அருவருப்பாய் இருக்கிறது.  உணர்ச்சிப் பூர்வமாகப் பொங்கும் முஸ்லிம்களின் வன்முறையில் அப்பாவிகள் உயிரையும் உடமைகளையும் இழப்பது மேலும் சொல்லொணா வலியைத் தருகிறது. முஸ்லிம்களின் முரட்டுத்தனம் குறித்த பிம்பத்தையே இந்தப் படபாவிகள் வேண்டி நிற்பது என்பதை விளங்கவேண்டும்.

கொலைவாளேந்தி வந்த கடும் உமரையும் சமரின்றி சாய்த்த சத்திய இஸ்லாம் சாம் பாசில்களையும் தன்னுள் ஈர்க்கும் இன்ஷா அல்லாஹ்.

***
நன்றி : இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) | fakhrudeen.h@gmail.com

Saturday, September 15, 2012

நாகூர் ராமச்சந்திரனும் பரங்கிப்பேட்டை நதியும்!

நகுலன் புயல் நாகூர் வரை தாக்கியிருக்கிறது. அஸ்மாவையும் விட்டுவைக்கவில்லை!  ’அஸ்மாவான்னு கேட்டாஹா மச்சான், ஆமாங்கனி, அதுக்கு என்னா இப்போ? என்றேன்’ என்று எழுதுகிறாள். இன்னொரு பெரிய கவிஞர் நேற்று அனுப்பிய எஸ்.எம்.எஸ். இது (கூடன்குளமாவது கொடுவா கருவாடாவது, ஆன்மிகம்தான் முக்கியம்!) :

நீ யார்?  என்றார் அவர்
நான்தான் என்றேன்
என்னை அவருக்குத் தெரிந்தது
எனக்குத்தான் என்னைத் தெரியவில்லை...!


***

அவ்ளவுதான். எளிமையாக எழுதும் இந்த கவிஞரின் பெயர் யாருக்காவது தெரிகிறதா? ஜபருல்லாஹ்மாமா என்று பாய்ந்தோடு வருகிறார் இஸ்மாயில் பாய். அட, கரெக்ட்!  துரை, அப்படியே பரங்கிப்பேட்டை பாய் பஃக்ருத்தீனின் கீழ்க்கண்ட கவிதையையும் வாசித்துப் பாருங்கள். ஃபேஸ்புக்கில் ’விரலோட்டத்தில்’ எழுதியதாம். கையோட்டமே நமக்கு சரிவர மாட்டேங்குது!. ’நீங்கள் ஃபேஸ்புக், லொட்டு லொசுக்கு என்று வேறெங்கும் பதிவிடாமலிருந்தால் இங்கே போடலாம்’ என்று சொன்னேன்.  ’ஆபிதீன் பக்கங்களுக்காக ஸ்பெஷலா எழுதியனுப்பிட்டு, அங்க பதிஞ்சவுடனே, அந்த லிங்க்க கொடுத்து மத்த லொட்டு லொசுக்குல போட்றேன், சரியா? !’ என்று பதில் அனுப்பி கூடவே. பச்சை நிறப் போர்வையும் , அதான் கட்டுரை (மடலில் பூத்த மனம்), அனுப்பியிருந்தார். அது  அப்புறம். இப்பொழுது அவருடைய ’நினைவின் நதி’யில் நனையுங்கள்.

’பெருமை மணக்கும் பரங்கியர் பேட்டை
பெருங்காய வாடை  பரப்ப - பெரிதாகப்
பேசிய பேச்சினில் பெற்றது மென்னவோ
வாசித்(து) இடுவீர் வழக்கு!’ -விக்கிப்பீடியா


நன்றி!. - ஆபிதீன்

***

நினைவின் நதி! -  இப்னு ஹம்துன்

அவனைப் பார்த்தே
அநேக வருடங்கள் ஆகியிருந்தன
இன்னமும் நினைவிலிருக்கிறது
கடைசியாய்  கொண்ட கோபம்.

பள்ளிக்கூடக் குறிப்பேட்டில்
பதிந்திருந்த சச்சரவை
இருவருமே மறக்காமல்
இதயத்தில் குறித்துக்கொண்டோம்

கைகலப்பில் கீறல்கள்
உடலங்கள் மீதில்.

அவ்வப்போது
நினைவின் நதியில்
மிதந்தபடியிருக்கும்
அவனைப் போன்றதொரு முகம்.

பின்னொரு நாள்
பழைய நண்பனின் திருமணத்தில்
பார்வையில் பட்டோம் பரஸ்பரம்

பாறையில் பூத்த மலராய்
பழைய கோபங்களின் மீது
பூத்த புன்னகை
பெருஞ்சிரிப்பாய் வெடித்த போது
நாங்கள்
பால்யத்துக்குத் திரும்பியிருந்தோம்.

வெள்ளம் வடிந்த வீதியில்
சூரியன் சிரித்துக்கொண்டிருந்தான்
பிரகாசமாய்,

***
நன்றி : இஜட். ஜபருல்லாஹ் & இப்னு ஹம்துன் (fakhrudeen.h@gmail.com )

Thursday, September 13, 2012

அம்மிக்குழவியால் வயிற்றில் இடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது - குளச்சல் மு. யூசுப்

ஃபேஸ்புக்கில் இன்று வாசித்த குளச்சல் மு.யூசுபின் எழுத்தைப் பதிவிடுகிறேன், நன்றியுடன். யாரைச் சொல்கிறார் மனுசன் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனாலும், அழகோ அழகு இந்த 'அம்மிக்குழவி'! - ஆபிதீன்.

***


முக்குண தோஷம் நீங்க சிறுபஞ்சமூலம்

புத்தகத்திலிருக்கும் கருத்தைவிடவும் தான் வாங்கிய நிலப் பத்திரத்திலிருக்கும் எழுத்து சிலரை வசீகரித்து விடுமென்பது இயல்பான விஷயம்தான். நமது கல்வி முறையின் நோக்கமும், இவர்போன்ற சான்றிதழ்க் கல்வியாளர்களின் இலட்சியமும் இதுதானே? மன மெனும் மர்மஸ்தானத்தில் விழுகிற ஐந்திலக்க ஊதியத் தாக்குதல், சிலரது சிந்தனைகளை அப்படியே திசைமாற்றிப் போட்டு விடும். எனவேதான், பொருளாதார ஊறுபாடுற்ற இவரது கண்களுக்கு பட்டா புத்தகத்திற்கும் இலக்கிய புத்தகத்திற்குமிடையிலான உள்ளடக்கத்தின் வண்ணத்தைப் பிரித்தறிய இயலாமல் போயிருக்கிறது. இது, தென்னம் பிள்ளைக்கும் தேசியவினாயகம் பிள்ளைக்குமிடையே வித்தியாசம் தெரியாத ஒரு பார்வை. இவரது அதிகபட்ச வாசிப்பே என்னுடைய மொழியாக்கங்களில் சில மட்டும் தான். இதில், விளவங்கோடு பத்திர எழுத்தாளரின் எழுத்துக்களையும் இவர் உட்படுத்த நினைப்பது நிச்சயமாகவே இவருக்குப் பிறகு, இவரது பெண்டு பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியூட்டும்.

கண்ணுக்குத் தெரியாத ஹர்ஷத் மேத்தாக்கள் உலவும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வணிக நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்; வெறுமனே முகவர்களை மட்டும் நம்பியிருந்தால் காளை முட்டும். வட்டித்தொழிலைப் பொறுத்த மட்டிலும் பாதுகாப்பை யும் ஆபத்தையும் சமதூரத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வணிகம்; சவரக்கத்திக்கே பயப்படுபவனால் வீச்சரிவாள் தூக்க இயலாது. திவால் அறிக்கைக்குப் பயப்பட வேண்டும்; மீட்டர் வட்டிக்காரனென்று எவனும் போட்டுக் கொடுக்காமலிருக்க வேண்டும். மஞ்சள் பிசாசு, பரவாயில்லை. ஆனால், அதன் கொள்ளளவு சார்ந்து, கொள்ளையனுக்குப் பயந்து நித்தமும் சாக வேண்டும்.

மிச்சமிருப்பது, பூமி. இது வளராது, பெருகாது, ஆனால், நிலவுடையாளர்களான முன்னோர்களில் பலரும் செய்ததுபோல், அரிசி வாங்கவும் ஆஸ்பத்திரிச் செலவுக்கும் கொடுத்து ஏழைபாளைகளிடமிருந்து கை நாட்டு வாங்கியும், கொள்ளி முடிஞ்ச சொத்தை யும், புறம்போக்கையும் வளைத்து இதை விரிவு விரிவுபடுத்தலாம். பஞ்சமி நிலமாக இருந்தாலும் பரவாயில்லை. மெக்காலே வமிசாவளியினருக்கு ஏமாற்றச் சொல்லியா தர வேண்டும்? பிறகு, அதில் கிராம்பு, ஏலம், ரப்பர்போன்ற பணப்பயிர்களை விளைவிக் கலாம்; அன்னியச் செலவாணியை அள்ளியெடுத்து தேசிய உற்பத்தியில் பங்கு வகிக்க லாம்; சேதாரத் தேய்மானங்கள் கிடையாது; 2000 மாடல், 40,000 கிலோமீட்டர் ஓடியிருக்கிறது என்று விலை மதிப்பைக் குறைக்க மாட்டார்கள். செகண்ட் ஹாண்ட் என்னும் பிரச்சினையே கிடையாது; ஏக்கரின் விலையை பத்தே ஆண்டுகளில் செண்ட் அலகில் திரும்பப் பெற்று விடலாம்; திருடன்களால் படுத்துத் தூங்குவதைத் தவிர சுருட்டிக்கொண்டு போக இயலாது; இது குறித்து பலருடைய ஆலோசனையின்பேரில், இவர் புதிதாக நிலம் வாங்கியிருக்கிறீர்; இதன் ஆவணம், பக்கத்திலுள்ள விளவங் கோட்டில் பதியப்பட்டிருக்கிறது; வாழ்த்துக்கள்! இதன், மூல ஆவணம், குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தபோது மலையாள மொழியில் பதியப்பட்டது. என்ன பார்க்கிறீர்கள்? இவருடைய நண்பர்கள் எமக்கும் நண்பர்கள் தானே?

இப்படியான இவர் எதையோ எழுதியிருக்கிறார். நிச்சயமாக ‘இறுதி முழக்கம்' இவருக்குக் காசு கொடுக்காது. மிச்சமிருப்பது, புகழ். தமிழ்ச்சூழலில் இன்று பணம் சம்பாதிப்பதுவும் எழுதிப் புகழ்பெறுவதும் ஏக காலத்தில் நடவாதது. வெகு சிலரைத் தவிர! பாலகுமார வாசகராகிய இவர் எல்லாவற்றிற்குமே ஆசைப்படுகிறார். சற்றே விலகியிருந்து சிந்தியும் பிள்ளாய்: நீர் புகழ்‘பெற' ஆசைப்பட்டு, ‘சுவர்முட்டி' விற்ற கையைச் சுட்டுக் கொண்ட பணமிருந்தால் பத்திரச் செலவுக்குப் பயன்பட்டிருக்கும்தானே?

எழுத்து என்பது, பணம் சம்பாதிப்பதுபோன்று சுலபமான காரியமில்லை, ஓய்! பிரபஞ்ச உற்பத்தி, இறைக்கோட்பாடு, வரலாறு, சமூகக் கட்டமைப்பு, மதங்கள், சாதியக் கட்டுமானங்கள், தனிமனித உணர்வுகள், பொருளாதாரம், அரசியல், சட்ட விதிகள், சமூக அவலங்கள் என, நிறைய வாசிக்க வேண்டியதிருக்கும்; இவை, கல்விப் புலத்திற்கு வெளியே நிகழவேண்டும். கண்பேறு, மந்திரவாதம், செய்வினை, குட்டிச்சாத்தான், தலைச்சன் பிள்ளை மண்டையோடு, தீட்டுத்துணி, மையிட்டுப் பார்த்தல்போன்ற மூடத் தனங்களை தொன்மமென்று நம்பாமல் எழுதவேண்டியதிருக்கும். இதற்கு பெரியார், கோவூர்போன்ற நிறைய சமூக சீர்திருத்தவாதிகளின் நூல்களை வாசிக்க வேண்டிய திருக்கும். ஆங்கிலம் தெரியாதென்பதை பாவகாரியமாகக் கருதாமல் - குறிப்பாக, தமிழ்நாட்டில் - கையில் வைத்திருக்கும் ஆங்கில நூலைக் கைவிட வேண்டியதிருக்கும். இதில் ஈகோ பார்க்கக் கூடாது. ஊடே, அறிவிலிகள் எனும் காய்தலை விலக்கி வைத்து விட்டு மக்களோடு மக்களாகக் கலந்து பழக முயற்சி செய்ய வேண்டும். வலைத்தளத்தி லிருந்து இதைப் பதிவிறக்கம் செய்ய ஏலா(தி)து.

நிறைய யோசியும். யோசிப்பதுபோல் பாவலா காட்டாமல் உண்மையாகவே யோசியும். தன்னம்பிக்கையுடன் எழுத முயற்சி செய்யும். இதற்கு, உமக்கு காஃப்மேயர் முதல் அப்துல் கலாம் வரையிலும் தோள் கொடுப்பார்கள். குறைந்தக் கட்டணத்தில் தன்னம்பிக்கை வகுப்புகளும் இப்போது பரவலாக நடைபெறுகின்றன. நீர் ஒரு பேராசிரியராக இருப்பதால், இதை ஒரு கட்டணம் என்றே கூற இயலாது. உமது வீட்டி லிருந்து விளவங்கோட்டிற்குச் செல்லும் சிற்றுந்திற்கான எரி பொருள் செலவுகூட ஆகாது. தன்னம்பிக்கையுடன் எழுதப் பழகும்; எதையாவது எழுதுவோம்; தனிப்பட்ட முறையில் எள்ளி நகையாடினாலும், பழகிய தோஷத்திற்காக எவரேனும் காமுறுவரென்று, ஒட்டுண்ணிபோல் பற்றிப் படராமலும், மனக்கோட்டத்தின் மாமருந்தான காய்தலும் உவத்தலுமின்றியும் சுயமாக முயற்சி செய்யும். தொன்மங்களின் அருளிருந்தால், இந்தியா விலேயே அதிகம்பேர் வாசிக்கிற பிற *மொழிப் பத்திரிகைகளிலும் தமிழின் மிக முக்கியமான பத்திரிகைகளிலும் உம்மையும் பாராட்டி முழுப்பக்கச் செய்திகள் வரக்கூடும்.

முக்கியத் தகவல்: உம்முடைய நூலை ‘காலச்சுவடு' நிராகரிக்கவோ, குமாரசெல்வா, மீரான்மைதீன், என்.டி. ராஜ்குமார்போன்றோரின் நூல்களைப் பதிப்பிக்கவோ நான் காரணம் கிடையாது. இது, படைப்பின் தகுதி அடிப்படையில் பதிப்பாளரால் தேர்வு செய்யப்படுவது. ஒரு வேண்டுகோள்: எதையாவது எழுதி விட்டு திருத்தம்கோரி, சான்றிதழ்க் கல்வியாளர்கள் யாரும் இனி என்னிடம் வராதீர்கள். விளவங்கோடு பத்திர எழுத்தாளரிடம் போங்கள்.

அன்புடன்: குளச்சல் மு. யூசுப்

அடிக்குறிப்பு: அம்மிக்குழவியால் வயிற்றில் இடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது.

***

நன்றி : குளச்சல் மு. யூசுப் | http://www.facebook.com/KulachalMuYoosuf