Showing posts with label போகன் சங்கர். Show all posts
Showing posts with label போகன் சங்கர். Show all posts

Monday, April 10, 2023

இனியொரு கோபாலன் - போகன் சங்கர்


நேற்று மாலை குழித்துறை கோபாலன் இறந்துவிட்டான். கோபாலன் இந்தவிடத்துப் பிரசித்தி பெற்ற கோவில் யானை. நிறைய குழந்தைகளின் ஹீரோ. நிறைய பெரியவர்களின் குழந்தை. எதிர்பார்த்த மரணம்தான். கொஞ்ச நாளாகவே அவனுக்கு உடல் நலமில்லை. வயிற்றுப் புண், சர்க்கரை வியாதி என்று என்னென்னவோ சொன்னார்கள்.

‘தேரி ஏறும்போது மூச்சிரைக்குது. இருமறான்' என்றார்கள். "இங்கேயானா எல்லா இடமும் தேரி.' இன்னும் சிலர், 'அதெல்லாம் இல்லை சார். அவனுக்குச் சரியா சாப்பாடில்லை. அவ்ளோதான். ஆனைன்னா அதுக்குள்ள சாப்பாடு தரணும். ஆனையை ஆனையா வச்சிருக்குறது அதோட சாப்பாடுதானே? இவங்க போடற பிச்சை அதோட தும்பிக்கைக்குப் போதாது.’

இதில் ஓரளவு உண்மை உண்டு. இடையில் இது சம்பந்தமாக போராட்டம் எல்லாம் நடத்தப்பட்டு அவனுக்குக் கூடுதலாய் சாப்பாடு வாங்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இன்னும் கொஞ்சம் தென்னம் மட்டைகளும் மரப்பட்டைகளும். ஆனால் எல்லாம் ரொம்பத் தாமதமாக வந்து சேர்ந்தது.

இன்று காலை அடக்கம் என்று சொன்னார்கள். அலுவலில் இருந்து அவசரமாக விடுவித்துக்கொண்டு அவனைப் பார்க்க ஓடினேன். வழியில் அவனுக்கு அஞ்சலி செலுத்திப் பெரிய பெரிய போஸ்டர்கள் இருந்தன. நல்ல கூட்டம். கோவில் யானை என்றாலும் கம்யூனிஸ்டுகளும் ஒரு செவ்வணக்கம் செய்திருந்தார்கள். அவர்களது குழந்தைப் பருவத்திலும் அவன் உண்டு அல்லவா? 

ஆனால் நான் போயிருந்திருக்கக் கூடாது. அங்கே நான் போனபொழுது கோபாலன் இல்லை. அவனது உடல்தான் முழுக்க அக்கக்காய்ப்ப் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக திசைக்கொன்றாக ரத்த விளாரியாகக் கிடந்தது. நான்கு கால்களும் ஒரு இடி விழுந்த கட்டிடத்தின் நான்கு தூண்கள்போலச் சிதறிக் கிடந்தன. மூன்று பேர், வெறும் முண்டு மட்டும் உடுத்திக்கொண்டு வியர்வை வழிய அவனது வயிற்றிலிருந்து ஈரலைக் கயிறு கொண்டு இழுத்து உரிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

நான் அதிர்ச்சியடைந்து, ‘என்ன இது?” என்றேன்.

ஒருவர், 'போஸ்ட் மார்ட்டம் என்றார்.

'எதற்கு? கோபாலனை யாராவது கொன்றுவிட்டார்களா?அல்லது அது தற்கொலை செய்துகொண்டுவிட்டதா?'

அவர் என் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, 'வயதான யானைகள் பல விஷமிட்டுக் கொல்லப்படுவதுண்டுதான்' என்றார். பிறகு சிந்தனையுடன், 'நாட்டில் பழக்கப்படுத்தப்பட்டு உலவும் யானைகள் தற்கொலைதான் செய்துகொள்கின்றன என்பது எனது சந்தேகம்.' 

கோபாலன் பல நாட்களாகச் சரியாக உணவெடுக்கவில்லை. அதைத் தற்கொலை என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. 

அந்த நபர் கசப்புடன் சிரித்து, 'இவையெல்லாம் அரசியல்சரியாகச் சொல்லப்படும் காரணங்கள். உண்மையான காரணம் அதோ' என்று காட்டினார்.

அங்கே எப்போதும் ஒரு நடன அசைவுபோல ஆட்டி ஆட்டி நடக்கும் கோபாலனின் தலை தனியாக கிடந்தது. ஒரு வலுத்த ஆள் வியர்வை சொட்ட அதன் தலையைக் கோடாலியால் பிளந்துகொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு தடவை கோடாரியை அடிக்கும்போதும் ஓர் உலோகச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கோடாரியை அடிக்கும்போதும் அந்த அதிர்ச்சியைத் தாங்க மாட்டாற்போல கோபாலனின் மூடியிருந்த கண்கள் திறந்து திறந்து மூடின.

ரமேஷ் பேடி எழுதிய 'யானை: காடுகளின் அரசன்' நூலில் (நேஷனல் புக் ட்ரஸ்ட்) யானைகள் சாவதற்கு, வனத்தில் தனிமையை நாடிப் போய்விடுகின்றன என்கிறார். பொதுவாகவே கூட்டமாய்த் திரியும் குணமுடைய யானை, தான் ஒரு சுமையாகிவிட்டோம் என்று தோன்றுகையில் எல்லாரையும் விட்டுவிட்டு நீர் நிலைகளையோ சதுப்பு நிலங்களையோ நாடிப் போய் விடுகிறது என்கிறார். ஒரு தடவை வேட்டைக்காரார்களால் சுடப்பட்டுத் தப்பிய யானையை நான்கு மாதங்கள் கழித்து ஒரு நதியின் அடியில் கண்டுபிடிக்கிறார். பெரிய எலும்புக்கூடாக. அது ஆற்றில் அமிழ்ந்துகொண்டு உணவு ஒரு பிடிகூட உண்ணாமல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்திருக்கிறது. யானை தான் இறப்பதை மற்றவர்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்கிறார் அவர்.

நான்என்னைச் சுற்றியுள்ள கூட்டம் பெருகுவதைக் கவனித்தேன். 

‘டாக்டர் காலைல ஊசி போட வந்தார். அதால நிக்க முடியலை. கிரேன் வச்சித் தூக்க ட்ரை பண்ணோம். அதுவும் நடக்கலை. பிறகு கோபாலன் தும்பிக்கையால் மூன்று தடவை தரையில் அடித்தான். பிறகு செத்துப்போனான்' என்று விளக்கிக்கொண்டிருந்த பெரிய மனிதரின் பெரிய காதுகளையே நான் பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றிருந்தேன்.

இப்போது காற்றில் மெலிதாக ஒரு வீச்சம் பரவத் தொடங்கியிருந்தது.

‘தந்தங்கள்!' என்றார் அந்த முதல் நபர். 'அதற்காகத்தான் இத்தனை நாடகமும்.'

நான் மிகுந்த தளர்ச்சியாய் உணர்ந்தேன். கோபாலனின் இளமைக் காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க முயன்றேன். அங்கம் அங்கமாக ஒரு விபத்து நடந்ததுபோல இங்கே சிதறிக் கிடக்கும் அவன் எங்கே பிறந்தான்? அவன் எப்போது பிடிக்கப்பட்டான்? இறக்கையில் என்ன நினைத்துக்கொண்டான்?

என் பக்கத்தில் இப்போது இன்னொரு வயதான நபர் தள்ளாடியவாறே வந்து நின்றார். குடித்திருக்கிறார் என்று தெரிந்தது.

"என்ன கெம்பீரமான யானை! கஜ ராஜன் அல்லவா கோபாலன்' என்றார்.

நான், 'அதெல்லாம் இல்லை. அவனொரு அடிமை. அவனது கால் சங்கிலிகளை நீங்கள் பார்த்ததில்லையா' என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன்.

அவர், 'இனியொரு கோபாலன் இனி எங்கு காணாம் பத்தும்?' என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.

‘இனியொரு கோபாலனை நாம் எங்கும் காணண்டாம் பெரியவரே' என்றேன் நான்

*


நன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்

Saturday, March 21, 2020

காலடி மண் - போகன் சங்கர்



காலடி மண் - போகன் சங்கர்

 இன்று மாலை பால் பண்ணை அருகே பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது பைக் ,ரோட்டிலிருந்த பள்ளத்தில் வீழ்ந்து கீழே விழுந்துவிட்டேன்.பைக் என் மேல் வீழ மிக அருகில் மிக அருகில் ஒரு பேருந்தின் டயர் கிறீச்சிட்டு நின்றதைப் பார்த்தேன்.சிலர் தூக்கிவிட்டார்கள்.சில சிராய்ப்புகள் உண்டு.கையிலும் காலிலும்.ஹெல்மெட் அணிந்ததால் பிழைத்தேன் என்று நினைக்கிறேன். பிறகு வண்டியை மெதுவே ஓட்டிப்போய் கவுரி சங்கரில் டீ குடித்தேன்.இரண்டு நகைச்சுவைப் பதிவுகளை எழுதினேன்.குழந்தைகளுக்கு இரவுணவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்ததும்தான் சற்றே உதறல் ஏற்பட்டது.லேசாக காதில் ஒரு ரீங்காரம் கேட்டதுபோல் தோன்றி குறைந்துவிட்டது.ஒரு கணம் நான் இறக்கப் போகிறேன் என்று தோன்றியது.
இதில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது விபத்தின் சடுதித் தன்மையே.ஒரே ஒரு கணம் நான் ஒரு பேருந்தின் கீழ் கிடந்தேன்.ஒரே ஒரு கணம் முன்பு நான் மரணத்திலிருந்து மீட்கப்பட்டேன்.எனக்கு சமீபத்தில் பார்த்த அய்யப்பனும் கோஷியும் படத்திலிருந்து ஒரு பாடல் நினைவுக்கு வந்தது."அறியா அறியா நேரத்து காலின் கீழ் உருள் பொட்டும்"சட்டென்று நம் காலின் கீழ் மண் சரிந்துவிடும்.அதன்பிறகு எல்லாம் மாறிவிடும்.
How we die புத்தகத்தின் ஆசிரியர் மரண அனுபவங்களையும் மரணத்துக்கு அருகில் சென்று திரும்பியவர்கள் அனுபவங்களை யும் எழுதி இருக்கிறார்.மரணம் மிக அருகில் வந்ததும் பலர் ஒரு வியத்தகு அமைதிக்குப் போய்விடுகிறார்கள் என்கிறார்கள். தெய்வத்தின் அருகாமை என்று ஆன்மீகவாதிகள் சொல்லக்கூடும் இதை.டாக்டர் நியூலாண்ட் இதை மரணத்தின் அருகாமையை உணர்ந்த மூளை எண்டார்பின்களைச் சுரந்து வாழ்வில் கடைசி முறையாக நம்மைக் காப்பாற்ற முயல்கிறது என்கிறார்.
உதாரணமாக அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்.பொருட்காட்சி ஒன்றுக்குத் தன் மகள்களுடன் சென்ற பெண்மணி ராட்டினத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கையில் ஒரு மன நிலை தவறிய மனிதன் அவரது ஒரு.குழந்தையை சராமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசத்துக்கு ஆளாகிறாள்.அந்த சம்பவம் பற்றி அவர் பின்னால் விவரித்தபோது "என்னை ஒரே ஒரு கேள்விதான் துன்புறுத்திக் கொண்டிருந்தது."என் மகள் இறக்கும்போது எவ்வளவு வேதனைப் பட்டாள்?ஆனால் நான் பிறகு அதை நன்கு நினைவுபடுத்திப் பார்த்தேன்.ஆரம்ப அதிர்ச்சிக்குப் பிறகு அவன் குத்திக்கொண்டே இருந்தபோதும் என் மகள் முகத்தில் வேதனையின் சுவடே தெரியவில்லை. ஒரு விவரிக்க முடியாத புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது.அவள் அந்த புன்சிரிப்போடுதான் இறந்துபோனாள்"
விபத்து நடந்து ஒரு அரைமணி நேரம் நான் காரணமே இன்றி புன்னகைத்துக்கொண்டே இருந்தேன்.எனது வழக்கமான பதற்றம் கூட இல்லை என்பதைக் கவனிததேன்.வழியில் பார்த்த ஒரு நண்பர் "சார் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!" என்றார்.
நான் "யெஸ்" என்றேன்.
*

நன்றி : போகன் சங்கர்

Wednesday, September 27, 2017

வவுத்துவலிக்கு போக காமெடி :)

கோடுகள் பாடுகள் அல்லது why bad things happen to good people ?

நேற்று ஒரு புதிய நண்பர் போன் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டு ''சார் நாங்க ஒரு சிறு பத்திரிக்கை கொண்டுவரோம் .உங்க கதையோ கவிதையோ தாங்க''என்றார் நான் வழக்கமாக சரி என்று சொல்லிவிட்டு மறந்துவிடுவேன் .அல்லது அடுத்த நிமிடமே எழுபது பக்கத்துக்கு போகும் ஒரு கதையை அனுப்பி 'இதை உங்க பத்திரிகைல போடலாமான்னு பாருங்க'என்பேன்.அவர்கள் பத்திரிகையே முன் அட்டை பின்னட்டையில் ''படிச்சே செத்தே!'என்று வெருட்டும் வாசகங்களுடன் ஸ்பான்சர்களின் 'எஸ் மாணிக்கம் நாடார் பலசரக்கு மாளிகை .எங்களிடம் சமையலுக்குத் தேவையான நயமான பருப்புவகைகள் உட்பட எல்லாம் சகாயவிலையில் கிடைக்கும்.கறவை மாடுகளுக்கான மாட்டுத் தீவனமும் உண்டு 'விளம்பரங்களுக்குப் போக (மறுபக்கம் மங்கலாய் தெரிதாவின் ஒரு mugshot கமலாதாஸின் கண்ணிடுங்கிய புன்னகை )நாற்பது பக்கங்கள்தான் வரும்.அன்றைக்கு என்ன திதியின் எந்த பாதத்தில் இருந்தேனோ ''உங்க பத்திரிகையின் கோட்பாடு என்ன ?''என்று கேட்டுவிட்டேன்.(கோட்பாடு என்பது சிக்கன்குனியாவை விட மோசமான வைரஸ்.ஒருதடவை ரத்தத்தில் ஏறிவிட்டால் அது ஆயுசுக்கும் போகாது என்று எனது நண்பர் சொன்னது உண்மைதான் போல )

நண்பர் ''சார் ?'என்றார்

நான் ''கோட்பாடு கோட்பாடு ?''என்றேன் ''ஐடியாலஜி ?இலக்கியப் பார்வை ?உலகப் பார்வை ?''

மறுமுனை சற்று அமைதியாக இருந்தது .நான் ''ஹலோ?''

''இருக்கேன் சார் சொல்றேன்''என்றார் அவர்.''அதாவது பார்த்தீங்கன்னா நான் மார்க்சிய பின்னணில வளர்ந்தேன் ''

''ஓ சரி இடதுசாரியா நீங்க ''

''இல்லே சார் அப்படி வளர்ந்தாலும் பிறகு வளர்ந்தபிறகு மார்க்ஸ்கிட்டே ஒரு போதாமை இருக்குன்னு தோணுச்சு .பெரியாரைப் படிச்சேன்.வர்க்க நீதி மாதிரியே சமூக நீதின்னு ஒண்ணு இருக்கில்லே? ''

''உண்மை உண்மை ''

''அதுல தீவிரமா இருந்தேன்.இந்த சின்னக் குத்தூசி இருக்கார் இல்லீங்க அவர்கிட்டே கூட ஏறக்குறைய ஒரு சீடன் மாதிரி இருந்தேன் ''

''ஓ ரொம்ப நல்லது.அவரு பெரிய தலையாச்சே ?''

''ஆமா ஆனா அப்படிப் பெரியார் படிச்சிகிட்டே வரும்போதுதான் எனக்கு ஒரு ஆக்சிடன்ட் ஆகுது ''

''ஓ சாரி என்னாச்சி ''

''ஒரு டிராக்டர் என் கால்லே ஏறிடுச்சு''

''டிராக்டர் ?''

''ஆமா ''

நான் மிக வியந்து ''டிராக்டர் மெதுவாதானே வரும்?"'என்றேன் ''அது எப்படி உங்க கால்ல ஏறுச்சு ?"'

''அது மெதுவாத்தான் வந்திருக்கும்.எனக்குத் தெரியலை .நான் மயக்கமா கிடந்தேன் ''

''ஏன் ?''

''அது முந்தின நாள் ஒரு இலக்கியக் கூட்டம் அதுல கொஞ்சம் சரக்கு போட்டிருந்தேன் ''
"'ஓ ''என்றேன் பிறகு மெதுவாக பெரியாருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தேன்

''ஒரு மூணு மாசம் உங்க ஊர் ஆஸ்பத்திரிலதான் கிடந்தேன் காலெல்லாம் நட்டு போல்ட்டு போட்டு முறுக்கி வச்சிருந்தாங்க ''

''அய்யோ வலி.''

''பயங்கர வலி .புண்ணு குணமே ஆக மாட்டேங்குது.கைக்காசெல்லாம் போயிடிச்சு.ரொம்ப உடைஞ்சி போயிட்டேன்.அப்போதான் அவங்க வந்தாங்க ''

''யாரு ''

''ஏசுவும் கன்னி மேரியும் ''

''யாரு ?''

''ஏசுவும் அன்னை மேரியும் ''

''எப்படி வந்தாங்க''

அவர் அசராமல் ''கார்லதான் ''என்றார் ''ஒரு வெள்ளை பிரீமியர் பத்மினி .''என்றவர் ''நோயாளிகளுக்கு பிரேயர் பண்றவங்க''

நான் சற்று ஆசுவாசமடைந்து ''தயவு செஞ்சு படிமங்கள்ல பேசாதீங்க எனக்கு நெஞ்சுவலி வருது 'என்று சொல்லலாமா என்று யோசித்தேன்.ஆனால் ஒரு சிறு பத்திரிகையாளரை அவ்விதம் சொல்வது பெரும் வன்முறையாகும் என்று நான் உணர்ந்தேன்

''அவங்க என் கால்ல கைவச்சி பிரார்த்தனை பண்ணாங்க .நம்புவீங்களா அடுத்த வாரமே எனக்கு நடக்க வந்திருச்சு''

''சரி ''என்றேன்

''இது பாருங்க எனக்கு பெரிய தத்துவச் சிக்கலை உண்டு பண்ணிருச்சு.பெரியார் கடவுள் இல்லைன்னு சொல்றார் .ஆனா இதை எப்படி விளக்கமுடியும் ?''

''அப்போ பெரியார் தப்புன்னு சொல்றீங்க ''

''அப்படில்ல .பெரியார் மட்டுமே சரின்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன் ''

நான் சற்று ஆசுவாசமடைந்து 'அப்ப நீங்க ஒரு ஆன்மீகவாதி மனம் திரும்பிய கிறித்துவர் இப்போ இல்லையா ?''

அவர் இரக்கமே இன்றி ''இல்லை ''என்றார்

நான் ''ஏன் ?''என்றேன்

''ஆனா நீங்க சொன்னது போல ஒரு தீவிரமான கிறித்துவராத்தான் அதுக்குப் பிறகு இருந்தேன் .நிறைய ஊர்ல போய் பொதுக் கூட்டங்கள்ல ரத்த சாட்சி சொல்லிருக்கேன்.மார்த்தாண்டம்,குளச்சல்.வெள்ளறடை,புன்னம்புரா ..ஆண்டவர் தினம்தோறும் என்கிட்டே ராத்திரி பேசிக்கிட்டிருந்தார் ''

''பேசிக்கிட்டிருந்தார்னா ......?" நான் தயக்கத்துடன் கேட்டேன்

''ஒரு வெளிச்சம்.ஒரு உஷ்ணம் .நீங்க படுத்துக்கிட்டிருக்கும்போதே உங்களை நெருங்கி வரும்.அதை உங்களால உணரமுடியும்''

''ஓ ''

''அப்போ நீங்க இலக்கியமெல்லாம் விட்டுட்டீங்க இல்லையா ''

''ஏன் விடணும்?அது எனது மூச்சுக்காத்து தோழர்.அதை எப்படி நானா விட முடியும் ?எனது நம்பிக்கைக்கு உட்பட்டு எழுத்திட்டிருந்தேன்.ஆர் எஸ் ஜாக்கப் அப்போ கிறித்துவ வாலிபன்னு ஒரு பத்திரிக்கை நடத்திட்டிருந்தார் .அதுல 'யாத்திரீகன்'ன்னு பேர்ல நிறைய எழுதினேன் ''

''ஓ நல்லது நான் ஜாக்கப் படிச்சிருக்கேன் எனக்கு பிடிக்கும் ''

''அப்புறம் பாருங்க ஒரு மூணுவருசம் கழிச்சி எனக்கு இன்னொரு ஆக்சிடன்ட் ஆயிடுச்சி''

நான் ''ரோட் ரோலர் ?''

''இல்லே ஸ்கூட்டர்.ஆனா இந்த தடவை எனக்கு ஒன்னும் ஆகலை ''

நான் 'கர்த்தருக்கு தோத்திரம் ''என்றேன்

''ஆனா பாருங்க என் ஸ்கூட்டர்ல மாட்டி ஒரு கிழவி மண்டையை போட்டிருச்சி ''

எனக்கு கடும்கோபம் வந்தது அடக்கிக்கொண்டு ''அப்போ ஆக்சிடன்ட் ஆனது அவங்களுக்குத்தான் உங்களுக்கில்லை ''

''ஆமா.அதுல பாருங்க அந்த கிழவியோட ஆளுங்க எல்லாம் என் மேல கேஸ் போட்டாங்க ரூபா கேட்டு மிரட்டினாங்க .எல்லோருமே விளிம்பு நிலை மக்கள்.எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் .ஏன்னா நான் ஜீனே , அமைப்பியல் ,தமிழவன்,சாறு நிவேதிதா எல்லாம் படிச்சிருக்கேனே ''

''அது சரி.பிறகென்ன ?''

''ஆனா அவங்க அதெல்லாம் படிக்கலையே ?''என்றார் அவர் ''அது ஒரு வருஷம் போச்சு.கோர்ட்டு,கேசு,கட்டப் பஞ்சாயத்து ,அடிதடி காசு விரயம்னு .எனக்கு ஒரு விரக்தி வந்துடுச்சி.இது ஏன் எனக்கு நிகழுது ?உண்மையில நான் இந்த விபத்தை தானா நிகழ்த்தலை.அது முழுக்க ஒரு அபத்தமான விபத்து ''

நான் ''எல்லா விபத்துகளுமே அப்படித்தானே ?''

''இல்லை அதுல ஒரு சயின்ஸ் இருக்கு .''என்றார் ''எனக்கு பெரிய அதிர்ச்சியா அது இருந்தது .ஏறக்குறைய ஒரு தவசி மாதிரி ஆண்டவரின் வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருந்த எனக்கு இது எப்படி நிகழ்ந்தது ?ஆண்டவர் இப்படி இதை நிகழ அனுமதிச்சார் ?ஒரு முன்னறிவிப்பு கூட ஏன் கொடுக்கலை ?இவ்வளவுக்கும் அதுக்கு முந்தின நாள் ராத்திரி கூட என் கூட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார்.ஏறக்குறைய அதே சமயத்துலதான் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எவாஞ்சலிஸ்ட் குடும்பத்த்திலேயும் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்து சில பேரு இறந்துட்டாங்க.எனக்கு முழுமையாவே நம்பிக்கை உடைஞ்சிடுச்சி ''என்றவர் சற்று அமைதிக்குப் பிறகு ''அப்போதான் நான் இருத்தலியல் என்கிற விசயத்துக்கு பக்கத்தில போறேன் .அப்படித்தான் சார்த்தர் என் வாழ்க்கைல வந்தார் ''

''அப்போ நீங்க ஒரு இருத்தலியல் வாதின்னு சொல்லுங்க.ஆனா சார்த்தரை பூக்கோ எப்பவோ காலி பண்ணிட்டாரே ''

அவர் ''அங்கேதான் வரேன் ''என்றார்.''இந்த பிரச்சினைக்கு நடுவில எனக்கு ஒரு காதல் வந்தது.அந்தக் கிழவி கேஸை எடுத்து வாதாடின வக்கீல்தான் அது ''

''ஓ ''என்றேன் ''புரியுது ''உண்மையில் எனக்குப் புரியவில்லை

''எங்களுக்கு திருமங்கலத்துல வச்சி கல்யாணம் நடந்தது .நாலே நாலு பேர்.நான் அவ.அவளோட சீனியர்.நான் வழக்கமா முடிவெட்டிக்கிற கடைப் பையன் ''

''ரொம்ப புரட்சிகரமான திருமணமா இருக்குதே ''

''ஆமா.அவங்க அது அப்படித்தான் நடக்கணும்னு சொன்னாங்க.அவங்க ஒரு பெமினிஸ்ட ''என்றார்

நான் ''எந்தப் பள்ளி ?''என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்

''பாருங்க அதுவும் ஒரு பிரச்சினைலதான் முடிஞ்சுது '

நான் ''எப்படி ''என்று இம்முறை கேட்கவில்லை .எனக்கே அது அப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தது

''அவங்களுக்கு சார்த்தரைப் பிடிக்கவே இல்லை.ஒரு கட்டத்துல அவரை ரொம்ப அபியூஸ் பண்ண ஆரமிச்சாங்க .நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்.ஒரு கட்டத்துல டிவோர்சுக்குப் போயிடுச்சி ''

நான் நம்ப முடியாமல் ''தோழர் ?ழீன் பால் சார்த்தருக்காகவா விவாகரத்து பண்ணிக்கிட்டீங்க!''என்றேன்

அவர் 'மெயினா அவருக்காகத்தான்.கூடவே நான் வேலைக்குப் போக மாட்டேங்கிறேன் .காலைல பனிரெண்டு மணிக்கு எந்திரிக்கிறேன்.குடிக்கிறேன்னு சில சில்லரைக் காரணங்கள் ''என்கிறார் ''ஒரு தத்துவத்தை எப்படி விட்டுக் கொடுக்கறது தோழர் ?''

நான் ''கஷ்டம்தான் ''என்றேன்

''அது ஒரு MESSY DIVORCE .அவ ஒரு வக்கீல் வேற இல்லியா .என் மேல இல்லாத கேஸெல்லாம் போட்டு பதினஞ்சு நாள் மதுரை ஜெயில்ல இருந்தேன் மிகத் துயரமான நாட்கள் .அய்யய்யோ .அவ என்கிட்டே ஜீவனாம்சம் எல்லாம் கேட்டு ரொம்ப சித்திரவதை பண்ணா .நானே வேலை இல்லாம சிறுபத்திரிகை நடத்திட்டு இருக்கேன்.எங்கிருந்து கொடுப்பேன் ?''

''பிறகு என்ன பண்ணீங்க ?''

''என்னோட குடும்ப வீடு இருந்தது அதை வித்து கொடுத்தேன்.எங்க அம்மாவுக்கு அதுல ரொம்ப வருத்தம்.கடைசிவரை என்னை சாபம் கொடுத்துகிட்டே இருந்துச்சு.ஒருநா பழனிக்குப் போறேன்னு போச்சு வரவே இல்லை திரும்பி''

''அய்யோ நீங்க தேடலியா ''

''ஏன் தேடாம?காசி வரைக்குப் போயி தேடுனேன் .கிடைக்கலை.''என்றவர் சற்று மவுனமாக இருந்தார் ''அப்போதான் நான் காசில இந்த ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவி ஒருத்தரைச் சந்திச்சேன் ''

நான் இப்போது அவசரமாக ''உங்க ஈமெயில் ஐடி கொடுங்க தோழர் ''என்றேன்

''அவரு சொன்னாரு ..''

''நான் நிச்சயமாக உங்களுக்கு கதை தாரேன் ''

''ஒரு புத்தகம் இருக்கு ஒரு யூதப் பாதிரி எழுதினது ..''

''நிச்சயமா அனுப்பறேன் தோழர்.அனுப்பிட்டு உங்களுக்கு செய்தி அனுப்பறேன்"

''புத்தகத்தோடு பேரு ..Why bad things happen to good people?''

''அதுல என்னன்னா பாதிரியாரோட பையனுக்கு ஒரு வினோத நோய் ...''

''நல்லது தோழர்.வணக்கம் ''

''இந்த கர்மக் கோட்பாடு இருக்கில்லையா ..அது பற்றி அவர் சொன்னார்.கிறித்துவத்துல யூதத்துல இஸ்லாமிலே இந்தக் கர்மக் கோட்பாடு இல்லே .அதான் அவங்க ஒரு பிரச்சினைக்கு நோய்க்கு இது யார் பாவம் ?அப்பா பாவமா பிள்ளை பாவமா ?இந்த துன்பத்தை கொடுத்தது கடவுளா சாத்தானா ன்னு எல்லாம் கேட்டுகிட்டு அலையுறாங்க.உண்மைல நாமதான் நாம படற துன்பத்துக்குக் காரணம் .நல்லது தீயதுக்கு நடுவில சமன்வயம்னு ஒன்னு இருக்கு வேதாந்தம் அதைத்தான் சொல்லுது ''

''தோழர் நான் ஆபிசுக்குப் போணுமே ?

''அவரு எனக்கு குண்டலினி யோகம் கத்துத் தந்தாரு.கிரியா யோகா பள்ளி.பிஹார் ஸ்கூல் ஒப் யோகா இருக்கில்லையா ?"'

''தோழர்...''

''இமயமலைல இரண்டுவருசம் இருந்தேன்.சிவானந்தா ஆசிரமம் இருக்கில்லே அங்கே கொஞ்ச நாள் ..''

''அது வந்து ....''

''ஆனா அதுவும் நிலைக்கலை .குண்டலினி யோகத்தை அதிகமா பண்ணி என் உடல் பழுதாயிடுச்சி.திடீர்னு எனக்கு ரத்த பேதியா போக ஆரம்பிச்சுது.நிக்கவே இல்லை.ஆசிரமத்துல கொஞ்ச நாள் பார்த்தாங்க.அப்புறம் நீங்க கீழே போய் உடம்பு சரி பண்ணிட்டு வாங்கன்னு அனுப்பிட்டாங்க '

''நான் சாயங்கலாமா ..''

''எப்படியோ கீழிறங்கி முகல்சராய் ரயில் நிலையத்துல கிடந்தேன்.காசில போய்ச் செத்துடலாம்னு தோணிடுச்சு.கையில காசு இல்லை.உடம்பில வலு இல்லை .ஒரு நாள் ..ஒரு வெள்ளிக்கிழமை அது அரை மயக்கமா கிடந்தப்போதான் அது நிகழ்ந்தது .எங்கியோ பாங்கு விளிக்கற சத்தம் கேக்குது யாரோ என்னைத் தொட்டு எழுப்பினாங்க ''

''யாரு ?"

''முழுக்க பர்தா போட்டுக்கிட்டு ஒரு பாயம்மா ''

''ஓ ''

''அவங்க எனக்கு சாப்பிட ரொட்டி கொடுத்தாங்க .அவங்க யாருன்னு நினைக்கறீங்க ?"

நான் 'அன்னை மேரியோ ?'என்று சொல்ல நினைத்து இல்லியே பர்தா போட்டிருக்கிற பாயம்மா என்கிறாரே?அன்னை கதீஜாவா ?

''நீங்களே சொல்லுங்க''

''எங்கம்மா ''

நான் ''பாயம்மா 'என்று திருத்தினேன்

''இல்லே எங்கம்மாதான் பாயம்மா.அவங்க மார்க்கம் மாறிட்டிருக்காங்க ''

நான் சட்டென்று அவசரமாக போனை வைத்துவிட்டு சுவரை வெறிப்பது பார்த்துவிட்டு மனைவி கவலையுற்று அருகில் வந்து ''என்னாச்சு ?காலங்காத்தாலியே வேர்க்க விறுவிறுக்க என்ன போன் ?ஆபிசுக்குப் போகலே ?"என்றாள்

நான் ''இல்லே எனக்கு ஒருபடியா வருது கூடவே வயத்தையும் வலிக்கி ''என்றேன்.

பாத்ரூமுக்குள் பாய்ந்து நுழைந்துவிட்டு திரும்ப வந்து ''நான் மெடிக்கல் லீவ் போடணும்னு நினைக்கறேன் .ரத்த பேதி போலத் தெரியுது '' என்றேன்
*
Thanks to : Bogan Sankar

Wednesday, December 16, 2015

'பதேமாரி' (தோணி) விமர்சனம் - போகன் சங்கர்

காட்சிப்பிழை இதழில் நண்பர் போகன் சங்கர் அருமையாக எழுதியிருக்கும் 'பரதேசிகள்' கட்டுரையிலிருந்து எடுத்துப் பகிர்கிறேன். மம்முட்டியின் 'பதேமாரி'யை நானும் பார்த்தேன். குஞ்சுமுஹம்மது இயக்கிய 'கர்ஷோம்' அளவுக்கு ஈர்க்கவில்லை. ஆனால் , அரபுநாட்டில் மனைவி மக்களுக்காக நெடுங்காலம் உழைத்த நாயகன், இனி ஊரோடு இருந்து விடும் திட்டத்தை மனைவியிடம் சொல்லும்போது, 'உங்களால் ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லையென்றாலும் துபாய்க்காரனோட பெண்டாட்டி என்ற சின்ன பெருமையாவது இருந்தது. இப்ப அதுவும் போச்சா?' என்று அவள் சொல்வது (நான் புரிந்துகொண்ட மலையாளத்தில்) அமைதியாக அழ வைத்தது. அப்படியே அஸ்மாவின் குரல்!. - ஆபிதீன்

இனி போகன் சங்கரின் வரிகள்....

அடிப்படையில் ‘குடும்பத்துக்காக ஓடாய்த் தேய்கிற மனிதனை அவன் குடும்பம் மறப்பது அல்லது வஞ்சிப்பது ‘வகைக் கதைதான் எனினும் தேர்ந்த திரைக்கதை மற்றும் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் நடிகரும் இயக்குனரும் வேறு தளப் படமாக இதை ஆக்கிவிடுகின்றனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டிக்கு நிறைவான படம் இது.

படம் ஒரு மரணத்துடன் ஆரம்பிக்கிறது.துபாயில் ஒரு காலை அலாரம் ஒரு மனிதனை எழுப்ப முயன்று தோற்கிறது.பள்ளிக்கல் நாராயணன் என்கிற நாராயணப் பணிக்கர் .துபாய்க்கு கள்ளத் தோணியில் ஏறி வந்த முதல் மலையாளிகளுள் ஒருவர் .செய்தி கேரளத்தில் உள்ள அவரது அப்போதுதான் தூங்கி எழும் வீட்டுக்கு தெரிவிக்கப்படுகிறது .அங்கே கட்டப் பட்டுக்கொண்டிருந்த ஒரு வீட்டின் பணி உடனே நிறுத்தப்படுகிறது.(இவனுங்க சாகிறதுக்கு ஒரு சமயம் பார்க்கிறானுங்க பாரு )நிறைய அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அவரது உடல் நாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.ஆனால் அவரது உடலை புதிய வீட்டில் ‘’வைக்க’’ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறான் அவரது மூத்த மகன்.துபாயில் அவருடன் பணிபுரிந்த பழைய கூட்டுக்காரன் ‘இந்த வீட்டுக்காகத்தான் அவன் அங்கே குருதி சோர உழைத்தான்’என்று கலங்குகிறார்.(இப்போது கேரளத்தில் காலியாகக் கிடக்கும் பனிரெண்டு லட்ச வீடுகளைப் பற்றிய செய்தியின் பின்புலம் தெளிவாகுகிறதுதானே?)
மத்திய கிழக்கு வாழ்க்கையின் துயரங்கள் படத்தில் மிகையில்லாமல் காட்ட பட்டுள்ளன கல்யாணம் ,கருமாதி எல்லாவற்றையும் போனிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய அவர்களது அவல நிலைமை பற்றி..’இம்முறைதான் கடைசி ‘’என்று ஒவ்வொருதடவையும் நாடு திரும்பும்போதும் அவர்கள் நினைத்துக் கொள்வது பற்றி சொந்தங்கள் வலைப்பின்னல் போல உருவாக்கி வைத்திருக்கும் நிர்ப்பந்தங்களால் மீண்டும் மீண்டும் அந்த பாலைவனத்துக்கே திரும்ப நேர்வது பற்றியெல்லாம் நாடகத் தன்மையில்லாமல் காட்டப் பட்டுள்ளன

இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாராயணன் பணிக்கர் கசப்பில்லாத மனிதராகவே வருகிறார்.டிவி பேட்டியில் ‘தான் தோற்காத மனிதன் ‘’என்றே சொல்கிறார்.அவர் எதை இழக்கவில்லை என்பதை கனல் படத்தில் வருகிற பிரதாப் போத்தன் மற்றும் ஷாயாஜி ஷிண்டே பாத்திரங்களோடு பொருத்திப் பார்க்கையில் புரிகிறது.அவர்கள் ஆன்மாவை இழந்து கட்டிடங்களையும் கார்களையும் பெற்றார்கள்.அவற்றையும் கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் பாஸ்டஸ் போல அவர்கள் இழந்தபோது அவர்கள் நிலைமை மிகப் பரிதாபகரமாக இருந்தது.

பதேமாரியின் நாயகன் அதை இழக்கவில்லை.அவன் கடைசிவரை அதற்காகவே உழைத்தாலும் அவன் பணத்துக்கு தனது ஆன்மாவை ரத்தைக் கையெழுத்திட்டுக் கொடுக்க சம்மதிக்கவேயில்லை. அவர் கடைசிவரை தனது நாட்டோடும் மக்களோடும் சிநேகம் உள்ளவராகவே இருந்தார்.அவர்கள் அந்த ஸ்நேகத்தைத் திருப்பி அளிக்காவிட்டாலும் அவர் இழக்காதது என்ன என்பதை படத்தில் வருகிற ஒரு காட்சி உணர்த்துகிறது.மூன்றாவது முறையாக துபாய் போவதற்கு முன்பு மும்பை விடுதியில் அவர் ஒரு சக மலையாளியைப் பார்க்கிறார் .இம்முறையும் அவர் பெற்றது எல்லாவற்றையும் இழந்துவிட்டுதான் திரும்புகிறார் .அந்த மலையாளியை அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக யாரோ ஏமாற்றியிருக்க அவன் மும்பையில் தெருப்பணி செய்து திரிகிறான்.தான் அவ்வாறு திரிவதை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பாமல் நாடகமாடிக் கொண்டிருக்கிறான்.சிறிய சிறிய பரிசுப் பொருட்களை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான்.எல்லாமே மும்பையிலேயே மலிவாகக் கிடைப்பவை.மம்மூட்டி அவனுக்கு தன கையிலிருந்த மிச்ச பணத்தையும் அளிக்கிறார்
நெகிழ்ந்து போன அவன் அவரது பெயர் என்ன என்று கேட்கிறான் .
‘’ஏன்?’’என்று கேட்கிறார் மம்மூட்டி
அவன் ‘’மதறாசாவில இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டுன்னு படிச்சதுண்டு .அதான்’’என்கிறான்
மம்மூட்டி புன்னகையுடன் சொல்கிறார்
‘’நாராயணன்’.என் பெயர் பள்ளிக்கல் நாராயணன் ‘’
*

நன்றி : போகன் சங்கர்