Monday, March 31, 2014

மிகவும் பச்சையான வாழ்க்கை - கோபி கிருஷ்ணன்

தான் எழுதிய கதைகளிலேயே இதுதான் மிகவும் பிடித்திருக்கிறது என்று கோபி கிருஷ்ணன் குறிப்பிடுகிறார் - யூமா.வாசுகியுடனான நேர்காணலில். சைஸும் ஒரு ஜட்டிக்குள் அடங்கக்கூடியதாக சின்னதாக இருந்ததால் உடனே பிடித்து... , தட்டச்சு செய்துவிட்டேன். அரசியல் அடிதடிகளில் ஈடுபடுவதில்லை, 'நானுண்டு என் ஜட்டியுண்டு!' - ஆபிதீன்


***

மிகவும் பச்சையான வாழ்க்கை - கோபி கிருஷ்ணன்

இளமைக்காலம் முதற்கொண்டே நான் ஜட்டிதான் அணிபவனென்றாலும் அது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாகிவிடும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இதுவரை வாடகை வீடுகளிலேயே இருந்திருக்கிறேன். காயப்போட அனைத்துக் குடித்தனக்காரர்களுக்கும் ஒரே மொட்டை மாடிதான் இருப்பதால் சிறு துணிவகைகைகள் - கைக்குட்டை போன்றவை - வேறு குடித்தனக்காரர்களுக்குச் செல்லும்; பிறகு திரும்பி வரும்; சில வேளை காணாமல் போகும். ஜட்டிகளுக்கும் இதே கதிதான்.

ஜட்டியோ, ப்ராவோ காணாமல் போனால் பக்கத்து போர்ஷன்காரர்களிடம் கேட்பது மிகவும் சிரமமான விஷயம். எனது ஜட்டிகளில் நிறைய தொலைந்திருக்கின்றன. நான் வாய்விட்டு அடுத்த வீட்டுக்காரர்களைக் கேட்டதில்லை.

இந்த வீட்டில் வாழ்க்கை சப்பென்று சுரத்தே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே என்று விசனப்பட்டுக் கொண்டிருந்த சமயம், ஒரு மாலை வீட்டுக்கார அம்மாள் என் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். "முரளி ஜட்டி ஒங்கதுல கலந்திருக்கான்னு பாரேன்" என்று. அவள் "இல்லை" என்று சொல்ல வீட்டுக்கார அம்மாள் மீண்டும் வலியுறுத்த, பெட்டியில் இருந்த எல்லாத் துணிகளையும் அலசி அவள் மீண்டும் "இல்லை" என்று வீட்டுக்கார அம்மாளிடம் சொல்ல அப்படியே இழுத்துக்கொண்டு போனது விவகாரம். முரளி வீட்டுக்காரர்களின் ஒரே வாரிசு. நல்ல பையன். ஆனால் ஜட்டி அணிபவன்  என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. அது ஒன்றும் தவறில்லை என்றாலும்.

கடைசியாக, என் மனைவி அடித்துச் சொல்லிவிட்டாள், நான் பிறர் ஜட்டியை அணிவதில்லை என்றும் , நான் நானுன்னு என் ஜட்டியுண்டு என்று என் பாட்டுக்குக் கிடப்பவன் என்றும், யார் ஜட்டிக்கும் ஆசைப்படாதவன் என்றும், பிறர் ஜட்டி விஷயத்தில் தலையிடாதவன் என்றும். வீட்டுக்கார அம்மாள் எங்கள் பகுதியை விட்டுச் சென்றாள் ஒருவழியாக. அடுத்த பகுதிக்காரப் பெண்மணியிடம் விசாரணையைத் துவக்கினாள்.

புதுக் கருக்குக் கழியாத புத்தம்புது ஜட்டி, விலை சுளையாக முப்பத்தெட்டு ரூபாய். பச்சைப் பசேல் என்ற நிறம். ஒரே முறையாதான் முரளி அணிந்திருந்தான். அதற்குள் யார் கண்பட்டதோ இப்படி ஆகிவிட்டது. புலம்பல், சாபம் இப்படியாக ஒரு வாரம் கழிந்தது. ஒருமுறை நான்கூட நினைக்கும்படி ஆகிவிட்டது. இந்த வீட்டில் இருக்கும் வரை இனி ஜட்டியே உபயோகிக்கக்கூடாது என்று.

காலப் போக்கில் எல்லாம் சரியாகிவிட வேண்டும்தானே? ஆனால் ஜட்டி விஷயத்தில் அப்படி ஆகிவிடவில்லை. சம்பவம் நடந்து இரண்டாவது வார ஞாயிறு. குடித்தனக்காரர்கள் அல்பங்கள், திருட்டுப் புத்தி உடையவர்கள், ஜட்டி திருடின கை அழுகும். இப்படி வாய்க்கு வந்தபடி ஏதேதோ வசவு மீண்டும். கடைசியாக ஒரு போடு, "இருக்கிற ஆம்பளைங்க லுங்கியத் தூக்கியா பாக்க முடியும்?"

அந்த அம்மாளிடமிருந்து இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் மிகவும் அதிர்ந்தேன். ஒருவேளை அந்த மாதிரி நடவடிக்கை ஏதாவது மேற்கொள்ளப்பட்டு விடுமோ என்று நடுக்கமாக இருக்கிறது. ஒருவிதக் கலவரத்துடன்தான் வீட்டில் இருக்கவேண்டி வருகிறது. மிகவும் பாதுகாப்பாகப் பச்சை நிற ஜட்டிகளை வாங்குவதில்லை.

**

நன்றி : நற்றிணை பதிப்பகம்,  சி. மோகன் தொகுத்த 'கோபி கிருஷ்ணன் படைப்புகள்' இரவல் தந்த "சாத்தான்"

***
தொடர்புடைய சுட்டி :
மகான்கள் – கோபிகிருஷ்ணன்

Saturday, March 29, 2014

பெருந்தலைவரின் நினைவு - கவிஞர் தாஜ்

'ஒரு கோயில் திறந்தால்  இந்துக்களுக்கு மகிழ்ச்சி; ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்துவர்களுக்கு மகிழ்ச்சி; ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி; ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி; ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மை படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி' என்று கூறிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் (நன்றி சாதிக் , FB) ,  'சிகரெட் கடை திறந்தால் சீர்காழிக்காரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி' என்று சொல்லும் நம் கவிஞருக்கு எத்தனை நெருக்கமாக இருந்திருக்கிறார் என்று கூறும் பதிவு இது.  எழுதியவர் அதே தாஜ்தான். எனவே உரைவீச்சு வடிவில் கட்டுரை நம்மை வெட்டி வீழ்த்தும். பயப்படவேண்டாம்,  சகலருக்கும் சங்கடம் தரும் இந்த 'ஸ்டைலில்' எழுதப்போவது தெரிந்திருந்தால் பெருந்தலைவர் அன்றே கவிஞரை விரட்டியடித்திருப்பார்' என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வாசியுங்கள். தாஜுக்கு...
ன்
றி!

***


பெருந்தலைவரின் நினைவு:

1972 -ல் நடந்த
தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்
காமராஜ்,
ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து
போட்டியிட்டும்
தி.மு.க. கூட்டணியிடம்
அவர் தோல்வியைத் தழுவினார்.

அது சாதாரண தோல்வியல்ல.
அவரை ஒன்றுமில்லாதாக்கிய
படுதோல்வி அது.

என்றாலும்,
அத்தருணத்தில்
அவருக்குப் பின்னால்
அணிவகுத்த மாணவர்களின் கூட்டம்
சொல்லி மாளாது.
அந்த அணிவகுப்பில்
நானும் இருந்தேன் என்பதை
இன்றைக்கு நினைத்தாலும்
சந்தோஷமாகவே இருக்கிறது.

காமராஜ்
எனக்கு அரசில் தலைவர் மட்டுமல்ல...
அதையும் தாண்டி..
அவரை நான்
என் தாத்தாவாகவே
வரித்துக் கொண்டிருந்தேன்.
அத்தனைப் பாசம்.

அந்தக் காலக்கட்டத்தில்
அவரைப் பார்க்காத மாதமே இருக்காதெனக்கு.
எங்கள் பக்கமாக அவர் வராது போனாலும்
சென்னைச் சென்று
அவர் தங்கி இருந்த
திருமாலைப் பிள்ளை தெரு வீட்டில் வைத்து
கண்டு வர தவறமாட்டேன்.

அவர்
என்னோடு சகஜமாக பேசியது மாதிரி
கோபித்துக் கொண்டும் பேசியிருக்கிறார்.
வா, உட்கார் என்ற மாதிரியே
போ வெளியே என்றும் சொல்லி இருக்கிறார்.
என்னுடைய இணக்கமான பதில்களும்
தாறுமாறான பதில்களுமே
அதற்கு அடிப்படை என்றால்
அது சரியாக இருக்கும்.

என்னை
பெயர் கூறி அழைக்கும் அளவில்
அவரிடம் நெருக்கமாக இருந்தேன் என்பதுதான்
இங்கே மிக முக்கியமான செய்தி.

அவர் இறப்பதற்கு முன்
நடந்த பிறந்த தின விழாவிற்கு
நான்
அவரைக் காண சென்றிருந்தேன்.

அவர் உடல்நலமற்று இந்த போது
நடந்தேறிய விழா அது.
பலரும் அந்தப் பிறந்தநாளை
அவரது கடைசி பிறந்தநாளாக
கணித்தார்களோ என்னவோ...
அன்று அவருக்கு வாழ்த்து கூற
ஏகப்பட்ட பெரிய தலைகள்!
ஏகப்பட்ட கூட்டம்!
நானோ
அப்படியெல்லாம் நினைத்து
அங்கே செல்லவில்லை.
சென்ற பிறகே
சூழ்நிலை அப்படியென உணர்த்து
பதறியது மனம்.

தலைவருக்கு வாழ்த்துக் கூற
நின்ற கூட்டத்தினரை
அரைமணி நேரம் அனுமதித்தால்
அடுத்த அரைமணி நேரம் இல்லை.
இடையிடையே
அவர் கட்டாயம்
ஓய்வு எடுக்க வேண்டும் என்பதாக
டாக்டரின் உத்தரவாம்!

எனக்கு முன்னால்
திமுக மாறன் நின்றிருந்தார்.
கியூ முறைப்படியே
அவருக்குப் பின்னே நான் போனேன்.
உள்ளே ஐயாவை கண்டதும்
அவரது காலைத் தொட்டு
ஆசீர்வாதம் பெற முயன்ற போது
அதை அவர் தடுத்தார்.
அவரைக் காண நான் போகும் போதெல்லாம்
இப்படித்தான் நடக்கும்.
நான் ஆசீர்வாதம் வாங்க
அவரது காலடிதொட முனைவேன்,
அவர் தடுப்பார்.
அதுவே முதல் சர்ச்சையாகிப் போகும்.

அதனை அவர் விரும்பவில்லை என்பதை
நான் அறிவேன் என்றாலும்,
அவரை காண முற்படும் போதெல்லாம்
என் சிரம் தாழவே செய்யும்.
நான் கொஞ்சம் படித்திருக்கிறேன் என்றால்
அது, அவர் இட்ட பிச்சையல்லவா?

கியூ பிரகாரம்
அவரது அறைக்குள்
நானும் என் நண்பனும் நுழைந்தோம்.
என்னைக் கண்டதும்
தலைவர் முகத்தில் புன்முறுவல்.
'இப்படி பின்னே வந்து நின்றுகொள்' என்றார்.
அப்படியே அவரது பின்னே போய்
நான்
என் நண்பனோடு போய்
நின்று கொண்டேன் என்றாலும்
உடல் பதற்றமாகவே இருந்தது.
அடுத்த அரைமணிக்கான ஓய்வுக்கு
வாயில் கதவை அடைத்துவிட்டார்கள்.

நான் உள்ளே நுழைந்த போதே
அங்கே இருவர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் ஆங்கில இதழில் இருந்து
அவரை பேட்டியெடுக்க வந்த
நிருபர்கள் அவர்கள் என
சற்றைய நாழியில் அறியவந்தேன்.
அந்த வீட்டின்
முன் அறையில் நாங்கள் என்றால்
வீட்டின் உள் ஹாலில்
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்,
குமரி ஆனந்தன் மாதிரியான
பேச்சாளர்கள் போன்றோர்
இருந்த இருப்பை உணர்ந்தேன்.
அவர்களது இடைவிடாதப் பேச்சும்
மெல்ல கேட்ட அவர்களது சிரிப்பும்
அதை எனக்கு உணர்த்தியது.

கடவு அடைக்கப்பட்டப் பிறகு
ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களின்
பேட்டி தொடர்ந்தது.
எமர்ஜென்சியை பற்றி கேட்டார்கள்.
'அது இன்னும் கொஞ்ச காலம்
தொடர்ந்தால் நல்லது என்றும்
மக்களுக்கு இப்போதுதான்
சுதந்திரமென்றால் என்னவென்றும்
எழுத்துரிமை...
பேச்சுரிமை..
என்றால் என்னவென்றும்
பிடிபட ஆரம்பித்திருக்கிறது' என்றும் சொன்னார்.
அது, அவரது விரக்தியில்
வெளிப்பட்ட வார்த்தைகளென
சட்டென புரியவே செய்தது.

அத்தனை வெளிச்சமில்லாத அந்த அறையில்
நான் சிலையாக நின்றேன்.
நான் அழைத்து போன என் நண்பன்
தி.மு.க.வை சேர்ந்தவன்.
தான் காமராஜுக்குப் பின்னால் நிற்பதையே
அவனால் நம்பமுடியாமல் நின்றான்.
'தாஜுக்கு அவர் தலைவரிடம்
இத்தனை செல்வாக்கா?' என்று
மலைத்தவனாக நிலைகொள்ளாது நின்றான்.

இடையே என் பக்கம் திரும்பி,
'நலமா? என்றும்
ஊரில்
கட்சிவேலை நடக்கிறதா?' என்றும் கேட்டார்.
மாடுமாதிரி தலையாட்டிவைத்தேன்.
எனக்கென்னவோ
அப்போது அவரை பார்த்த போது
உடல்நலம் குன்றியவராக தெரியவில்லை.
சேர்வாக இருப்பதாக மட்டுமே தெரிந்தது.

அரைமணி கழிந்து
மீண்டும் கதவு திறக்கப்பட்ட போது
புறப்பட துரிதப்பட்டேன்.
அப்பவும் 'நில்லேன்' என்றார்.
'இல்லையா...' என்றுவிட்டு வெளிப்பட்டேன்.
அதுதான் என் தலைவனோடு
கடைசியாக பேசிய நிகழ்வு.
பின்னர்
அவர் இறந்து
ராஜாஜிஹாலில் அவரை
கிடத்தி வைக்கப்பட்டிருந்த போதுதான்
அந்த நிலையில்தான்
பார்க்கக் கிடைத்தது.
***
satajdeen@gmail.com

Sunday, March 23, 2014

ஒரு கறிவேப்பிலையின் கழிவிறக்கம் - இஜட். ஜபருல்லா

ஆட்சிக் கட்டிலில்
ஏறவேண்டும் என்ற
ஆசை நெருப்பில்
அரசியல் கட்சிகளாய்
எண்ணெய் கொதிக்க...

ஆக்ரோஷப்படும்
பேச்சாளர்களாம்
கடுகுகள் குதிக்க..

வறுமைக் கோட்டுக்குள்
வாடும் வாக்காளர்களாய்
கண்ணீர்விட்டு
வெங்காயம்
வதங்கித் தவிக்க

இறுதியில் -
தலைமை சமையற்காரர்
"கறிவேப்பிலை எங்கே ?"
என -
என்னைத் தேடுகையில்
என் காது குளிரும்...!

கொத்தாய் இருந்த நானும்
அந்தக் கொப்பறையில்
உறவுக் காம்புகள் கிள்ளப்பட்டு விடுவேன்..
ஒரு தொண்டனாய்...!

எனினும் -
நானின்று
தேர்தல் தாளிப்பு நடக்குமா ?
இப்படி -
எனக்குள்ளே ஒரு இறுமாப்பு
தலை தூக்கும்...!

இறுதியில் எல்லாம் முடிந்து
பதவிப் பந்தி பரிமாறப்படுகையில்
எல்லோராலும்
தூக்கியெறியப் படுவேன்..!

சமைக்கும் தலைவர் மட்டுமே
எப்போதும்போல சன்மானம் பெறுவார்..!

வாசம் சேர்க்கும் என்னை -
விருந்தில் -
வீசி எறிபவர்கள்
என் - மருத்துவ மகத்துவத்தை
எனோ -
மறந்துவிடுகிறார்கள்...!

ஆமாம்..!
அரசியல் கட்சிகளின்
அடிமட்டத்  தொண்டனுக்கு
அழகான உதாரணம் நான்...!

***
10-12-95
***
நன்றி : இஜட். ஜபருல்லா

Monday, March 17, 2014

ஏனோ தெரியவில்லை... - இஜட். ஜபருல்லாஹ்

இறைவா......!
நீ - மரமாக இல்லை...
மரத்துக்குள் இருக்கிறாய்...!
மனிதனாக இல்லை...
மனிதனுக்குள் இருக்கிறாய்...!

நீ - மனசாக இல்லை...
மனசுக்குள் இருக்கிறாய்...!
கண்ணாக இல்லை...
கண்ணுக்குள் இருக்கிறாய்..!
காட்சியாய் இல்லை...
காட்சிக்குள் இருக்கிறாய்...!

நீ -  வெளிச்சம் அல்ல...
வெளிச்சத்துக்குள் இருக்கிறாய்...!
இருட்டும் அல்ல...
இருட்டுக்குள்ளும் இருக்கிறாய்...!

இப்படி -
நீ யாராகவும் இல்லை...
நீ எதுவாகவும் இல்லை..
எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறாய்...!
ஏனோ தெரியவில்லை...
நாங்கள் மட்டும் ...
உன்னை - 
வெளியே தேடுகிறோம்...!
***
3-7-2008
***
நன்றி : இஜட். ஜபருல்லாஹ் , தட்டச்சு உதவி : ஹமீது ஜாஃபர்


Thursday, March 13, 2014

சத்தமாய் திட்டாதீர்கள் - செய்தாலியின் கவிதை

செய்தாலியின் கவிதையை அல்ல!  செவுளில் அறைவது போல வேறொன்று சொல்கிறார் சகோதரர். தாஜ் பாராட்டிய கவிதையை நன்றியுடன் இங்கே பதிவிடுகிறேன்.


வீதியில்
கையேந்தி நிற்பவர்களை
சத்தமாய் திட்டாதீர்கள்
அவர்களுக்கு சொந்தமானதை
நாம் மௌனமாய் திருடியிருக்கலாம்-செய்தாலி