Showing posts with label அழகிய பெரியவன். Show all posts
Showing posts with label அழகிய பெரியவன். Show all posts

Tuesday, July 14, 2026

வீச்சம் - அழகிய பெரியவன் சிறுகதை

 ‘குறடு’’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து, நன்றியுடன்..

*


வீச்சம் - அழகிய பெரியவன்


காக்காசி நாறினான். காரை உதிர்ந்த மண் சுவரில் மூட்டைப் பூச்சிகளின் இரத்தம் பிதுக்கப்பட்ட கருஞ்சிவப்பு திட்டுகளின் இடையில் காக்காசி பிணையப்பட்டிருந்தான். கன்னங்கள் டொக்கு விழ ஆழமாகப் பீடியை இழுத்தான் அவன். வறண்டு எலும்புகள் தேலிய மார்பிலிருந்து புகைப்பொதிகள் விடாய்த்து வெளியேறின. இருமல் பீறிட்டது. மார்புக்கூடு பிளந்து விரியும் படியாக அவனை ஊடறுத்தது இருமல்.


செமித்த சாராய நாற்றமுடன் பீடியின் கடும் நாற்றமும் சேர்ந்து மேலும் நாறினான் காக்காசி. மலநாற்றம், செத்த உடல்களின் நாள் பட்ட நாற்றம் என நாற்றக் கலவை காற்றிலே இமிரி, அப்பன் முன்னிருக்கும் பாமாண்டியின் நாசித் துவாரங்களில் முண்டி யடித்தது. நுரையீரல் நிரம்பி உடல் நெளிந்தது. குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.


தளர வெளிக்கிருக்கும் அவகாசத்தையும் பள்ளிக்கூடம் பறித்துக் கொள்வது பாமாண்டிக்கு வருத்தமளிப்பதாய் இருக்கும், முன்பெல்லாம் வகுப்பறையில் நாற்றம் புலன் பற்றியதும், முகம் சுழித்து, உவ்வே கொட்டி, வண்ணாத்திப்பூச்சிகளின் றெக்கைகளை அழுத்துவது போல் மூக்கை பிடித்துக் கொள்வான். கீஸ் கீஸ் என்று மூக்கடியில் தேய்த்துத் தவிப்பான். உடம்பெங்கும் குண்டிகளாய் ஆக்கப்பட்டு விட்டவர்களைப் போலத் தெரிவார்கள் அப்போது அவனுக்கு எல்லாரும்.


"பொணந்தின்னிங்க..."


மூக்கடைத்த கீச்சுக்குரலில் வசவுகளை சொல்வான் பாமாண்டி. பள்ளிக்குப் போகையிலும் வருகையிலும் மலக் குப்பல்களால் வரிசை கட்டிய தெரு கடக்க மூக்குப் பிடித்தே மீள்வான். செத்து உப்பிப் புழுத்திருக்கும் நாய் வீச்சம் வழியில் எங்கேனும் அணைந்தால் 'கிசுரு அடிக்கும். கிசுரு அடிக்கும்" என

ஓடும் அவன் கால்கள். கூட்டாளிகள் கெட்ட வார்த்தை பேசினால் அருவருத்து மாய்வான். பக்ரீத் காலமொன்றில் மழை பிடித்துக் கொண்டபோது வீட்டில் காயப்போட்டிருந்த கறித்தோரணங்கள் அழுகத் தொடங்கிவிட்டன. அவனைப் பார்க்க கூட்டாளி ஒருவன் வர நேர்ந்துவிட்டது. அப்போது அவமானத்தால் துவண்டு போனான் பாமாண்டி. அதைத் தொடர்ந்து கறிக் கவிச்சி பிடிக்காமல் சைவனாய் மாறி பின் அரை மனதுடன் மீண்டதும் உண்டு. வெளிக்கிருக்காத ஒரு மனிதனாக.. தான் மாறிவிட வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுதல் செய்து கொண்டு மிருக்கிறான் சில சமயங்களில்.


அவனை நெட்டிமுறிக்க முயன்ற போதெல்லாம் ஒரு புழுவாய் மாறியிருக்கிறாள் பாட்டி அவனுக்கு.


"நா உம் பீ வாராமெ, நா உஞ்சளி சிந்தாமெ வளர்ந்துட்டியாடா "நீ பாமாண்டி?"


"அவனுக்கு கற்பூரம் கவிச்சி அடிக்குதும்மா... இப்படி நீத்தம் பாக்குறவன் வேற எங்காச்சும் போயி பொறந்து தொலைக்க வேண்டியதுதானே."


செவந்தமணியும், பாட்டியும் தங்களின் நியாய நிறுவலில் மேலும் புழுவாய் மாறியிருக்கின்றனர் அவன் முன்.


ஞாபகங்களில் தங்கும் அத்தனை நாற்றப் படிவுகளும் பொடி யாகி உதிர்ந்து நாற்றப்புகைச் சுருள்களாய் இன்று அப்பன் காக்காசி முன் அமர்ந்திருந்த போது எழும்பி வந்து உலுப்பின. உப்பிப் பெருத்து சுவர் சார்த்தி இருத்தப்பட்ட பிணமென அப்பன் பாமாண்டிக்கு காட்சியளித்தான். அப்பன் பிணமென நினைவுகள் ஊடாடியதும், உலுப்பின கிளையென அதிர்ந்தான் அவன். பாமாண்டியின் நினைவுக் கண்ணிகள் முன்னெழுந்து கிளைத்தன.


ஒரு காற்றடி காலத்தில்தான் காக்காசி கிணறுகளைத்தோண்டிக் கொண்டிருந்த வேலையை விட்டு தோல் ஷாப்புக்குப் போனது. மண்ணின் சதைத் துண்டுகளை அகழ்ந்து அகழ்ந்து தண்ணீர் சுழிக்கும் நாளங்களைத் தேடிக் கொண்டிருந்ததை செவந்தமணி தடுத்து விட்டாள். பிணம் வசிக்க வீடு தோண்டும் வெட்டியானைப் போல் தினமும் காக்காசி மண்கோலி, மண்கோலி பாதாளங்களின் உட்பிரவேசித்து பிணமென மீள்வது செவந்தமணியை அவஸ்தையுறச் செய்தது. சடலத்தின் குளிர்ச்சி நிரந்தரமாய் கணவனின் உடம்பில் தங்கிவிட்டதாய் உணர்ந்த ராத்திரியில் அவனை தோல் ஷாப்புக்கு போகும்படி ஏவினாள். அங்கும் பிராணிகளின் உடல் நழுவிய தோல்களுடன் காக்காசி இருக்க நேர்ந்தது. நாற்றமும் சவமும், பிணைந்த வாழ்வின் சோகைத் தனத்தில் தோல்களை உயிர்ப்பிக்கும் செயல் அவனை அந்த வேலையில் ஈடுபட வைத்தது.


வேலைக்குப் போயிருந்த முதல் வாரத்தின் கடைசி நாள் மாலையில் இன்னும் வீடு மீளாதிருந்தான் காக்காசி. சூரியனின் துர்மரணத்துக்குப் பின் வளர்ந்த இருட்டில் பிள்ளையுடன் வாசல் காத்துக் கிடந்தாள் செவந்தமணி. நேரம் ஏறஏற யாருமற்ற தனிமையின் இரவில் அனாதையின் சோகம் போல் பொழுது மாறி சூழ்ந்தது அவர்களை. பாமாண்டி செவந்தமணியின் முகத்தை ஏறிட்டான்.


பரிவின் கசிவு ததும்பும் விழிகள் கன்னத்தின் உள்வாங்கிய குழிகளில் சுழன்றன அவள் முகத்தில்.


"ஏம்மா உன்னும் அப்பா வர்ல?"


"தெரியிலேயே சாமி. இப்ப வந்துனு இருப்பாரு."


அவளின் சொற்கள் ஆதரவற்றுத் தவித்தன. பாமாண்டிக்கு நம்பிக்கையின் சாரம் வற்றி சுயமனத்தேற்றலில் எண்ணங்கள் குழம்பின.


"ஒருவேளை அப்பா செத்துட்டிருப்பாரோ."


பாமாண்டியின் முதுகு அதிர்ந்தது. செவந்தமணியின் அடி களைத் தாங்காமல் காக்காசி வந்து தேற்றும் வரை அழுது சுணங்கிக் கொண்டிருந்தான். பலகாரங்கள் பொதியப்பட்ட பொட்டலத்தை மகன் கைகளில் திணித்துவிட்டு தின்னச்சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான் காக்காசி. அப்போதுதான் அறியப் பட்டு வந்த அப்பனின் மனித வாசனையுடன் புதிதாய் குடலைப் புரட்டும் நாற்றம் ஒன்றும் வெளிப்படுவதை நுகர முடிந்தது பாமாண்டியால்.


நாற்றங்களைப் பிரித்தறியும் வயது தொடங்கிய போதுதான் பாமாண்டி குருகுலவாசம் கற்கும் வேதியப் பொடியன் கணக்காய் வெளியூர்களின் பள்ளிவிடுதிகளில் தங்கிப் படிக்க நேர்ந்தது. நாற்ற உலகிலிருந்து நந்தவன பரப்புக்கு உட்பட்டு விட்டதாய் நினைக்கத் தொடங்கிய அவன் வீடு மீள்தலை அருவருத்தான். மலங்கழிப்பதின் அசூயையுடன் கல்லூரிக் காலங்களில்தான் பாமாண்டி எனும் தன் பெயரை சுக்கல் ஆக்கி கா.பா.மாண்டி என புனைந்து கொண்டதும் நடந்தேறின. மாமன்னன் அக்பர் உடலிருந்தும் அலெக்சாண்டரிடம் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததான சுகந்த வாசனை பற்றிய குறிப்பைப் படித்ததும் அப்பன் அப்படி இருக்கலாகாதோ என எண்ணம் வருத்தியதும் உண்டு.


பணத்தேவைகளை முன்னிருத்திதான் வீட்டுக்கு வர நேர்ந்திருந்தது இப்போது பாமாண்டிக்கு. சாம்பல் பூத்த இருட்டுக் காலையில் சென்று, இருள் கவியும் மாலை திரும்பும் நாற்றம் பிடித்த தன் அப்பனை தவிர்க்கும் உபாயங்கள் அன்று தோற்றுப் போயின. பாமாண்டி காக்காசியிடம் சிக்கிக்கொண்டான். தன் ஒற்றை வித்து, கல்வியின் உயர் முகடுகளில் நின்று தன் நிமித்தமாய் உலகைப் பார்த்து கெக்கலியிடுகிறது. மகனின் பெருமித உணர்வுகளின் நெகழ்வில் ஆதூரமாய் மகனை உச்சி மோந்தான் காக்காசி.


அப்பனின் நடுங்கும் கைகளின் வழியாய் அணைக்கும் வெதுவெதுப்பு பாமாண்டிக்கு அருவருத்தது. தன் மீசை முடிகளை பிஞ்சி விரல்களால் அளைந்து நெஞ்சை உதைத்த மகனின் குழந்தைப் பருவ புளங்காகிதங்களால் ஆட்கொள்ளப்பட்ட காக்காசி நரை மண்டிய மீசை குத்தும்படிக்கு பாமாண்டியை முத்தம் செய்யத் தவித்தான். சாராயத்துடன் பீடியும் இணைந்த நாற்றக் கலவை காக்காசியிடமிருந்து கிளம்பி பாமாண்டியின் முகத்தை அறைந்தது. விதிர் விதிர்த்தான் பாமாண்டி. குபீரென அப்பனின் உடலிலிருந்து வெளிப்பட்ட பிணவாடை, சதைக் கவிச்சியாய் வெருட்டிக் குலைத்தது அவனை.


வறுத்த கறித்துண்டுகளை மெல்லும் தன்னை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காக்காசியின் முகக்கனிவையும் வாயில் குழைந்து கனலும் பீடியின் தீக்கண்ணையும் சந்திக்கத் திராணியற்று முகம் தாழ்த்தி பாமாண்டி நெளிந்தான். பரவியெழும் நாற்றப் புயலால் தாக்குண்டவனாகி சூலுற்றிருப்பவளைப்போல் வீட்டினுள்ளிருந்து எழுந்தோடி வாந்தி எடுத்தான் அவன். வாந்திக்கான எதுக்களிப்புகள் அடிவயிற்றிலிருந்து எழும்பி எழும்பி நெஞ்சு கிழித்தன. தலையின் பக்கங்களை கைகளால் அழுத்திச் சுருண்ட அவனை உடம்பு, மண்ணில் தலை புதையும் படியாய் இழுத்தது. பாமாண்டியின் வாயிலிருந்து உமிழ்நீர் சரங்கட்டியது.


பன்றியின் உடம்பில் உறைந்து உலர்ந்த சாக்கடை பொருக்குகளின் நிறமொத்து இருட்டு இருந்தபோது காக்காசி வெளியே கிளம்பிவிட்டான். கல் கல்லென்று இருமி இருமி இரவெல்லாம் மல்லாந்தபடி சுவர்க்கோழிகளின் கீச்சலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். தாவில்தங்காது தாவரித்துக் கிடந்தது படுக்கையில் அவன் உடம்பு. கோழை கட்டிய விலாப்படிகளில் மேலேறி கீழிறங்கி ஆட்டம் போட்டது இருமல்.


இருமல் புகைந்து மூச்சுத் திணறிய அவஸ்தைகளின் போதெல்லாம் அருகில் படுத்திருக்கும் செவந்தமணியின் குறட்டைகள் கேலி செய்தன அவனை. எச்சிலும் பிணத்தை சபிப்பதுபோல் அவள்மீது துப்பினான் காக்காசி. அருகிலிருக்கும் வீட்டிலிருந்து எழுந்து அடங்கிய சாமனின் ராக ஆலாபனையையொத்த நீண்ட கொட்டாவி மேலும் எரிச்சலூட்டியது காக்காசியை. தன் ஆங்காரத்தை பிரதி எடுத்து வசவுகளாய் சாமனின் வீட்டுத் திசையில் எறிந்தான் அவன்.


அருகிலிருக்கும் சிறு நகரின் மையத்திலிருந்த மசூதியின் தொழுகை அழைப்பு கேட்டபோது, அது அதிகாலை நான்கு மணிக் கானது என உணர்ந்து எழுந்துவிட்ட காக்காசி படுக்கையை விட்டகன்று சந்துக்குப் போனான். ஒன்றுக்கிருந்து, இடிந்த சுவரின் மண்ணால் நரநரவென பல்தீட்டி, மொரிக்கிச் சட்டியில் குளிர்ந் திருந்த நீரில் வாய் கொப்பளித்தான். நடையில் கிடந்த நாய் உண்ணியின் பிடுங்கல்களால் பின்னங்கால்களால் உதைத்து ஒலி யெழுப்பியது. முடங்கிக்கிடந்த குடிசையின் மேற்கால் கிளைத் திருந்த கோணப் புளியமரத்தில் சிக்கிக் கிழிந்து அலையும் பாலிதீன் பையாக நிலா வெறித்தது. பாத்திரங்களை உருட்டி கஞ்சியில் கை உளைந்த போது செவந்தமணி அரற்றினாள். 


"யாருடி நாயீ அது."


"கம்முனு படுமே, நாந்தான்."


"இன்னிக்கு புள்ளே போயிடறானாங். காலேஜில பீசு ணுமாமே. உம்பாட்டுக்கு கமானமா போயிட்டா எப்படி?"


"ஒரு பத்துமணிக்கா ஷாப்பாண்ட வரச் சொல்லுமே. எஜமாங்கிட்ட கேட்டு வாங்கித் தாரென் எதானாச்சும்."


நடுத்தெருவின் கோழி கூப்பிடும் சப்தம் இருட்டை பலவீன மாக்கியது. தெருவில் மண்டிக் கிடக்கும் இருட்டில் அமிழ்ந்து இருமல் ஒலிகளுடன் கரைந்தான் காக்காசி. முகங்கள் துலங்க ஆரம்பித்த மெல்லிய இருளில் தோல் ஷாப்பை அடைந்த காக்காசி ஆடைகளைக் களையத் தொடங்கினான். சுருண்ட வேட்டியையும்

சட்டையையும் உருண்டை பிடித்ததுபோல் ஒரு மூலையில் பத்திரப்படுத்திவிட்டு கோணிப்பையின் துண்டு ஒன்றால் கோவணத்தின் மேல் அரை கட்டிக்கொண்டான். தோல் ஷாப்பின் விரிந்த கட்டிடமும், தோல்களை ஊறப்போட்டிருந்த தொட்டிகள் வரிசையிடும் பெரும் கொட்டகையும் என எல்லாமே நாற்றத் துண்டுகளால் எழுப்பப்பட்டது போலிருந்தன. பச்சைத் தோல்கள் வேதிப் பொருட்களிலும் சுண்ணாம்பிலும் புளித்து ஊறி நாற்றம் பரப்பின. சவ்வுகளும், தோல் கழிந்த மயிர்களும் இரைந்திருக்கும் பரப்பு எங்கும் கொடூரக் கவிச்சி நாற்றம். தோல்கள் ஊறும் தொட்டிகளில் கரைசல் நீர் புளித்து, குமிழ்கட்டி, சீழ் நிறத்தில் இருந்தது.


காக்காசி தோல்களை திருப்பிப் போடவும் இடம் மாற்றவுமாக தொட்டிகளில் இறங்கத் தொடங்கினான். கொடூர குளிர்வின் ஊசித் தீண்டல்கள் அவனை வதைத்தன. மரத்து இற்ற தேகம் எதையும் சட்டை செய்யாமல் தோல்களைத் தூக்கி வீசியது. இறுகலாய்த் தழுவி அவன் எலும்புகளை நொறுக்கின. தோல் குவியல்களை இடம் மாற்றி, பச்சையாய் ஊறி நீர்ச்சொட்டும் அவற்றை அந்தரத்தில் தொங்கும் கொக்கிகளில் பிணைத்து முறுக்கிப் பிழிந்து, உலருவதற்கென கொட்டடிகளில் காயவிட்டு உழன்றான். வேதிநீர் கரைசல்களில், சவ்வுக் குவியலில், தோல்களின் கவிச்சிநெடியில் நாற்றம் பொதிந்த ஜடமாய் உருமாற்றம் கொண்டிருந்தான் அவன். 


மகன் வருகையின் எதிர்பார்ப்பும், எஜமானிடமிருந்து பணத்துக்கென எதிர்கொள்ளவிருக்கும் பதிலின் அனுமானமும் அவனை மேலும் ஆயாசம் கொள்ளச் செய்து பெருமூச்சைக் கிளப்பின.


இளம் வெயில் பொழுதில் அவன் மகன் அங்கு வந்து சேர்ந்தான். முக்கால் நிர்வாணியாய் தன்னை நோக்கி ஓடிவரும் அப்பனைப் பார்த்ததும் பெரும் மனத்தாக்குதலுக்கு ஆளானான் பாமாண்டி. கவிச்சி வீச்சம் வாரி அடித்தபடி இருக்கும் சூழலில் நாறும் மனிதனாய் எதிரே நிற்கும் அப்பனைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு.


"மயிரு... நா போயீ துட்டு வாங்கினு வருணுமா? நா போகல. அந்த நாத்தம் புடிச்ச ஷாப்புக்காவெல்லாம்."


"ராஜா, ஒரு வாட்டி மட்டும் போயிட்டு வந்துரப்பா. நா ஒரு வேலையா கெடக்கிறேங்."

நாற்றத்தின் குரூர அருவருப்பில் அதிர்ந்தவனாகவே அவனால் வீட்டில் இப்படி செவந்தமணியிடம் சொல்ல நேர்ந்தது. அந்த வீரியம் அப்பனின் கோலத்தை உள்வாங்கியதும் சரிவது போல் இருந்தது இப்போது. வார்த்தைகள் அடைபட்டு நெஞ்சு வீக்கம் கொண்டது. காக்காசியிடம் பேசவும் திராணியற்று மனம் சரிந்தான். நாற்றப் பண்டமாய் மாறிப்போனதை அந்த நொடியில் உணர்ந்தான் பாமாண்டி. முன் தீர்மானங்களின் பட்டை உரிந்து மெதுவாய் ஒரு பீக்குண்டுக்குள் அமிழ்ந்து வெளியேறினான் அவன். பாமாண்டியின் நாற்றப் பிரதிகள் அவனிலிருந்து உதிர்ந்து வீழ்ந்தபடியே இருந்தன.

(END)

நன்றி : அழகிய பெரியவன் , கலப்பை, சென்ஷி

Saturday, June 6, 2020

பூவரசம் பீப்பி (சிறுகதை) - அழகிய பெரியவன்

அழகிய பெரியவனின் 'குறடு’ சிறுகதைத் தொகுதியிலிருந்து, நன்றியுடன்...
*



பூவரசம் பீப்பி

வாழ்நாளில் எப்போதுமே நான் பார்க்க விரும்பாத என் ஊரில் வந்து நின்றுவிட்டன எங்கள் மிதிவண்டிகள். எனது ஊர். கோபச் சூட்டில் நினைவுகளின் குப்பைகளில் கருகி விழுந்துவிட்ட ஊர்.

சாவடியில் யாருமில்லை. ஆழ்ந்த கருநிழல்களைக் கவிழ்த்து விட்டு நின்றுகொண்டிருந்தன பூவரசுகள். உள்ளே நுழைந்தவுடன் பூவரசம் பீப்பிகளின் இசை மந்தைக்குள் சிக்கிக் கொண்டேன். கட்டிடத்தின் முன்புறத்தில் எங்களை உட்காரவைத்துவிட்டு தேநீர் வாங்கிவர ஓடினார் சிப்பந்தி ஒருவர். எங்களின் மிதிவண்டிகள் ஒருக்களித்துநின்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. பீப்பி
ஓசைகள் என்னை உட்காரவிடவில்லை. மர்லீனை தனியே விட்டுவிட்டு வெளியே வந்து நின்றேன்.

பூவரசின் இதயங்கள் காற்றுக்கு அசைந்தபடியிருந்தன. சடை சடையாய் நீண்டு தழைத்திருந்த அதன் மெலிந்த கொப்புகளில் - பிடித்திருக்கும் இலைகள், பச்சை நரம்புகளில் எனக்கான நினைவுகளைத் தாங்கியிருந்தன. அங்கங்கே பழுத்திருக்கும் மஞ்சள் இலைகள். அடி சிவந்து மஞ்சளாய் விரிந்திருக்கும் பூக்கள். வசீகரச் சுழல்களை மறைத்து வைத்திருக்கும் பம்பரக்காய்கள்.

பால்யத்தில் பூவரசின் முற்றிய பச்சை இலைகளைச் சுருட்டி ஊதி பீப்பிக்கள் அலையவிட்ட இசை, இதுவரைக்கும் கேட்டவை களின் எந்தச் சுரங்களிலும் இல்லை. மரத்தின் காற்று வயலில் புதைந்திருந்த பீப்பி இசை எனக்காக இப்போது வெளிக்கிளம்புவது போலிருந்தது. நான் கண்களைச் சாத்திக்கொண்டேன். நாக்குச் சுடும் காரத்திற்காக பல்தீட்டுவதையே வெறுத்தபோதும் அதிகம் விரும்பி அந்த பயோரியா டப்பாக்களை பாதுகாத்தது அந்தப் பிராயத்தில்தான். பல்பங்களும், புளியங்கொட்டைகளும், பம்பரப் பிஞ்சுகளும் நிறைந்த அந்த டப்பாக்கள் காக்கி டவுசர் ஜோப்பில் ஆடும். தேடிச் சேர்க்கும் பூவரசின் பழுப்பு இலைகளை ஒவ்வொன்றாய் பள்ளிக்கூட சிமிண்ட் தரையில் வைத்து, பயோரியா டப்பா மூடியை அதன் மேல் கவிழ்த்து அழுத்தி தரையில் தேய்த்து கூட்டாஞ்சோறு உண்ண வட்ட இலைகளை அடுக்குவதுண்டு.

பூவரசின் பூக்கள் அப்போது சுவையான பண்டம். இதழ் இதழாய்ப் பிரித்துத் தின்றதுபோக மகரந்தக் காம்பைத் தனியே தின்பது ஒரு பிரியத்துக்குரிய ருசியாய் இருக்கும். விழுந்துவிட்டால், காயம் என்றால் பூவரசுக்காய்களை உடைக்கக் கசிரும் மஞ்சள் பாலை பூசுவதுதான். நான் ஒற்றை இலையைத் தேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். காற்றுக்குத் தாழ்ந்து நிமிரும்போதெல்லாம் தென்படும் வெள்ளை வானம் என என் நினைவுகளின் தொலைப் பரப்பு கண்சிமிட்டியது. கதவாய் என் முன்நாட்களைத் திறந்து மூடியது அப்பூவரசு இலை. நான் பருகும்படியாக அவ்விலை குவிந்து நினைவுகளை வழியவிட்டபடி இருந்தது. என்னில் நினைவு பாரித்தது. வேறெந்த ஊர்களிலும் இத்தனை பூவரச மரங்களை நான் பார்த்ததில்லை. பள்ளிக்கூட வாசலில் பூவரசுத் தோப்பே இருக்கும். பள்ளி மைதானத்தின் எல்லைகளிலிருந்து மலை தொடங்கிவிடும். பெரும்பாறைகளும், குண்டுகளும், சீக்கைப் புதர்களும், சீத்தாச் செடிகளுமாய் மலை விரியும்.

மைதானம் வழியாகத்தான் ஆடுமாடுகளை ஓட்டிச் செல்வதும் ஓட்டி வருவதும். மேய்ந்த களைப்பும், அலுப்புமாய் காடிறங்கும் கால்நடைகள் பள்ளிக்கூடம் தாண்டி கீழிறங்குகிற மேட்டுப் பாதையின் நடுவிலே பூவரசுக் கூட்டத்திடையில் இருக்கும் பெரும் நீர்த்தொட்டிகளில் நீர் பருகும். அத்தொட்டிகளிலே குறவர்கள் மூங்கில் பத்தைகளை ஊறவிட்டு கூடை முடைந்தபடி இருப்பார்கள். மூங்கில் ஊறும் குச்சி அய்ஸ் வாசனை அங்கே சூழ்ந் திருக்கும். நீர் குடித்த கால்நடைகள் மலையடிவாரத்திலிருந்து ஊருக்குள் சேரும் வரைக்குமான கல்பொதிந்த பாதையில் சறுக்கி விடாதபடி நிதானித்து இறங்கும்.

ஊரைவிட்டால், பெரிய ஊரின் எல்லா முடுக்குகளிலும் பூவரசு மரங்கள்தான். ஸ்டேட் வங்கி எதிரில். வண்டி மேட்டில். சாவடிக்குள். மருத்துவமனை மைதானத்தில். காவல் நிலைய வாசலில். முஸ்லீம் பள்ளியின் ஓரங்களில். எல்லா இடங்களிலும் பூவரசுதான். ஊரைவிட்டு கிளம்பும்போதும் நாலைந்து ஊர்கள் வரைக்குமாக இலையுதிர்காலம் சந்திக்காத பூவரசுகளின் துரத்தல் இருக்கும்.

தேநீர் வந்தது. பள்ளிகூடத்தில் மத்தியான சாப்பாட்டுக்குப் போட்ட கோதுமை உப்புமாவின் ஆவிபறந்த வாசனை தேநீர் குவளையிலிருந்து எழும்பி முகத்தில் படர்ந்தது. என் உள்ளே பீப்பி இசை உச்சமடைந்தது. நிலைகுலைந்து போனேன்.

பாபா சாகேப்பின் நினைவு நாளன்றுதான் நானும், மர்லீனும் மிதிவண்டிகளில் கிளம்பினோம். சென்னையில் அதிகாரிகள் சிலர் கொடியசைத்து வழியனுப்பினார்கள். சாதி ஒழிப்பு, சமத்துவம் வலியுறுத்தி மிதிவண்டியிலே தென்னிந்தியா முழுதும் சுற்றும் பயணம். சென்னையிலிருந்து வேலூர், பேரணாம்பட்டு, கோலார் தங்கவயல், பெங்களூர் என்று வழித்தடம்.

இம்முறை விரிவாய் பயணம் இருந்ததால் அதிக முன்னேற் பாடுகளை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. மிதிவண்டிகளைப் பழுது பார்த்து, பயணச் செலவுகளுக்கு உதவி தேடி நிறுவனங்களிடமும் தொண்டு அமைப்புகளிடமும் அலைந்து கசந்த மனதுடனேயே மிதிவண்டிகளில் ஏறி அமர்ந்தோம்.

பயணம் எங்களுக்கு எப்போதுமே ஓர் அற்புத அனுபவமாகவேதான் இருந்திருக்கிறது. பயணம் மனிதர்களை உடைத்து விடக்கூடியது. அந்தத் துகள்களிலிருந்து மாறாத நம்பிக்கையிருந்தால் புதுமனிதர்களாக உயிர்த்தெழுந்துவிடலாம். இயற்கை ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டில் பயணம் செய்பவர்களால் மட்டுமே பங்கெடுத்துக்கொள்ள முடிகிறது. திருப்பெரும்புதூரில் முதல்நாள் இரவும், வேலூரிலே இரண்டாம் நாள் இரவும் கழிந்தன. முதல்நாள் மாலையிலேயே தொடைகளும், கைகளும், கல்லாய் சமைந்து வலி கிளம்பின. தசைகள் இறுகி இறுகி மிதிப்பதற்குக் கடினமாக இருந்தது. அதிகாலமே எழும்ப முடியவில்லை. இருக்கும் வலியுடனே வேலூர் வந்து சேர்ந்த போதுதான், கோலார் தங்கவயலுக்குப் போகும் வழியில் மலையடிவார கிராமத்தில் தங்கிவிடுவது என்று ஏற்பாடா யிற்று. எங்களுக்கு முன்பாக ஜீப்பிலே கிளம்பிவிட்ட சமூக நலத்துறை அதிகாரியை பார்க்கும்வரைக்கும் எங்கள் ஊரிலே தங்க நேரிடும் என்று நான் நினைக்கவில்லை. கால்களுக்குப் புது பலமும், துடிப்பும் வந்து சேர்ந்துவிட்டன. மனம் முழுக்கக் கொப்பளித்து வழிந்தது.

பணியாட்கள் எவருமற்று இருந்த சாவடி, மாவட்ட அதிகாரியின் வருகையால் முகம் மாறிவிட்டது. பணியாட்களும், பொது மக்களும் திரண்டு விட்டனர். மர்லீனுடைய குடுமியும், கடுக்கனும், எங்களின் அரைக்கால் சட்டைகளும், மிதிவண்டிகளின் புதுத்தோற்றங்களும் அங்கிருப்பவர்களை கண்கொட்டாதபடி செய்து கொண்டிருந்தன. அப்போதுதான் எனக்கு அங்கே பூவரசு மரங்கள் இருப்பதின் பிரக்ஞை வந்தது. அம்மரங்களிலிருந்து விழுந்து காய்ந்த என் சிறு வயது பிஞ்சு பம்பரக் காய்கள் வேகமாகச் சுழலத் துவங்கிவிட்டன.

பீப்பியின் சப்தம் உள்ளிறங்கி நிறைந்து நான் ஓசையாகி விட்டேன். சப்தமெழுப்பும் மிதியடிகளைப்போட்டுக்கொண்டு தத்தி நடக்கும் குழந்தையைப் போல என் அடிவைப்புகள் எல்லாம் பீப்பியின் இசை அதிர்வுகளாய் மாறி என்னை கீழ்நாட்களுக்குள் தள்ளிவிட்டன.

நாங்கள் அதிகாரியின் ஜீப்பிலே ஏறிக் கொண்டோம். எங்களுடன் சுழற்சங்க உறுப்பினர் ஒருவரும் இருந்தார். எங்கள் மிதிவண்டிகளுடன் இருவர் பின்தொடர்ந்தனர். ஜீப் போய் கொண் டிருந்த பாதை என் கிராமத்துக்கானது என்று நான் மெல்ல உணரத் தொடங்கியபோது எனக்கு சிலிர்ப்பு உண்டாகியது. நினைவுகள் கரைத்தன என்னை. இளைத்துக்கொண்டே போவது போல இருந்தது எனக்கு. ஜீப் நின்றதும் என்னை நிரந்தரமாய் அக்கணங்கள் வலுவாய்ப் பிடித்துக் கொண்டன. சிறுவனாக மாறி விட்டிருந்தேன். பல ஆண்டுகள் பின்னோக்கித் தாவி என் பால்ய நாட்களின் அற்புதமான மாலை ஒன்றிலே கால்பதித்து ஜீப்பிலிருந்து இறங்கினேன். அந்த மாலை பால்ய பொழுதுகளின் தன்மைகளை எனக்கென வைத்தபடி காத்துக் கொண்டிருந்தது.

குளிர்ந்த தரையில் படுத்துக்கொண்டு இளம்வெய்யிலின் வனப்பை கண்ணுற்றபடி ஊரின் எல்லையிலிருந்து வரும் இரும்புப் பட்டறையின் சம்மட்டி சத்தங்களூடே கடைவீதிக்குப் போயிருக்கும் பாட்டியை எதிர்பார்த்திருந்த பொழுதுகள், சூரியன் மறைந்த பின்னும் மஞ்சள் அடர்ந்து கருமஞ்சளாகி எங்கும் கவிந்து கிலி ஏற்படுத்தும் மாலைகளில் ஆலவட்டம் சுற்றி விழுந்து மேல்கவியும் வானத்தையும் தாண்டி நினைத்துப் பயந்த பொழுதுகள் தங்கித் தங்கிப் பறக்கும் தட்டான்களாய் அலைந்தன அந்த மாலையில். மேலத்தெரு வழியாக நடக்கையில் இதயம் விசை கூட்டியது.
உடல் விறைத்து கோபம் தலைக்கேறியது எனக்கு. துப்புரவாக இருந்த அந்தத் தெரு அழுக்குக் கால்களை நகைப்பதாய் தோன்றியது. அதுவரைக்கும் இடைவிடாது என் காதில் அதிர்ந்துகொண்டிருந்த பீப்பி சுருதி மாறி ஒரு பெரும் பன்றியின் கதறலாய் கேட்கத் தொடங்கியது. பன்றிகளை அதட்டும் சப்தம்போல் தூரத்திலிருந்து தொடர்ந்து கேட்டது. பன்றிகளின் உறுமலும், கதறலும் முற்றிலுமாய் என்னைச் சூழ்ந்து கொண்டன. நான் நடுங்கினேன்.

அப்போது ஊரிலே எங்களுக்கு நிறையப் பன்றிகள் இருந்தன. குடிசையின் பின்னாலும், முன்வாசலிலும் பன்றி விட்டைகள் காய்ந்து கருத்திருக்கும். மலம் தின்றுவிட்டு வந்து புழக்கடை சாக்கடையில் உழலும் பன்றிகளின் வீச்சம், 'சபக் சபக்' என அவைகள் எப்போதும் எதையாவது மெல்லும் ஓசை, செவிகளில் மூங்கில் கழிகளைப் போல் நுழைந்து விலகும் அவைகளின் உறுமல்கள், பெரிய தனக்க மரங்களில் செய்த குளுதித் தொட்டிகளிலிருந்து எழும்பும் புளித்த சோற்றுக் கஞ்சியின் நாற்றம், வெல்லம் காய்ச்சும் இடங்களுக்கெல்லாம் சென்றலைந்து அப்பா வாங்கி வந்து ஊற்றும் அழுக்குப் பாகின் நொதித்த வாசம் எல்லாம் சூழ்ந்ததாய் என் வீடு இருந்தது.

வகுப்பிலிருந்த அத்தனை பேரிடமும் சாக்குக் கட்டியை கொடுத்து கரும் பலகையில் சின்ன 'ஏ' போடச் சொல்லி ஒன்பது போல இழுத்தவர்களுக்கெல்லாம் கதிர்வேல் சார் புட்டத்தில் பட்டை இழுத்த காலை ஒன்றில், மரத்தடியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பெரும் மரமாய் சேகு ஏறி விரிந்திருந்த முள்மர நிழலில் வகுப்பு கொட்டமடித்துக் கொண்டிருந்த போது எங்கள் பன்றிகள் அந்தப் பக்கமாய் வந்தன. முள் காய்களைத் தேடி மென்ற படி வந்தவை என்னைப் பார்த்துவிட்டு உறுமலுடன் நின்றன போலிருந்தது.

“டேய், அதப் பார்ரா உங்க பன்னிங்க" என்று திமிலோகப் பட்டது வகுப்பு. கதிர்வேல் சார், பன்றி இருப்பது தெரிந்து பன்றி அடிக்கும்போதும் ஒரு பங்கு வேண்டும் எனக் கேட்டது அன்றுதான்.

“டேய், பன்னி அடிச்சா ஒரு பங்கு எடுத்தாடா, காசு தந்திர்றேன்.”

அந்த வாரக் கடைசியில் ராத்திரியை உலுக்கும்படி அப்பா பன்றி அடித்தார். கால்களையும், நீண்ட மூக்கு வாயையும் கயிற்றால் கட்டிவிட்டு குண்டாந்தடியால் கழுத்தைப் பார்த்து அடித்துக் கொண்டிருந்தார் அப்பா. அவருடன் பீமன் மாமாவும், கந்தஞ் சித்தப்பாவும் இருந்தார்கள். உயிர் இழுத்துக் கொண்டிருந்த பன்றியை காலையில் கழுத்தில் குத்திக் கொன்று தீய்த்தார்கள்.

மேல்மூடி இல்லாதபடி ஓடு ஒன்றால் தோலை சுரண்டிக் கழுவி மஞ்சள் பூசினார்கள். பாய்போல முடைந்திருந்த பச்சை ஓலையில் கிடத்தி துண்டு போட்டார் அப்பா. கறித்துண்டுகள் ரொட்டித் துண்டுகள் போல இருந்தன.

கையளவு தடித்திருந்த பன்றி வாரை அறுத்து அப்பா தந்தபோது மிகுந்த ஆசையுடன் வாங்கி மென்றேன் நான். கரகரவென பச்சைத் தேங்காய்ப்போல மசிந்தது அது  என் வாயில். கவுண்டமார்களும், நாயக்கமார்களுமாய் பங்கு போடும் வரை காத்திருந்து எடுத்துப் போனார்கள்.

ரத்தம் தோய்ந்து காய்ந்திருந்த ஓலைத் தடுக்கை ஈக்கள் மொய்த் திருந்த போதே அம்மா மசால் அரைத்து குழம்பு கூட்டி விட்டிருந்தாள். மணம் மூக்கை வருடியது. இந்தச் சொக்கும் மணத்துக்காகவே நான் மாம்பழக் காலங்களில் கூடையை எடுத்துக் கொண்டு சீப்பிப் போட்ட மாம்பழக் கொட்டைகளுக்காகத் திரிந்தேன். கூடை நிறைய்ய தூக்க முடியாமல் திணறிக் கொண்டு வரும்போது அதை அப்பா வாங்கி தட்டித் தட்டிப் போட அவரை நெட்டிக்கொண்டு தின்று தீர்க்கும் பன்றிகள்.

ஊரார் ஒதுங்கும் முள்ளுக் காட்டிடையே மலம் தேடி அலைந்து கொண்டிருப்பவைகளை துரத்தி ஓட்டிக் கொண்டு வருவதற்கு என்றுமே சலிப்பதில்லை. எழுந்து போகும்வரை காத்திருந்து தின்பதற்கு முந்தும் பன்றிகளை சபித்தபடி போவோரின் பலவித புட்டங்களை பார்க்க நேர்ந்த நாட்கள் அவை. பெண்கள் ஒதுங்கும் காட்டுப்பக்கம் மட்டும் சின்னவள் செவந்தமணிதான் போவாள் பன்றிகளை ஓட்டிவர. கிடாய் பன்றியின் விதை அறுத்து சாம்பல் தூவி துரத்திய மாலை ஒன்றிலே அதன் மரண ஓலத்தை நெஞ்சில் வாங்கத் திணறி நடுங்கிக் கொண்டு என் நேரம் கழிந்தபோது, தனா பாட்டி ஓடிவந்து அம்மாவிடம் கூப்பாடிட்டாள்.

"கயினியில் பன்னி பூந்துடுச்சின்னு, ரத்தினத்தெ ராம நாயக்கன் அடிக்கிறான்டி."

"அய்யோ எஞ்சாமியோ."

அம்மா பேய் ஓட்டம் ஓடினாள். பெருத்த கதறல்களுடன் நானும், செவந்தமணியும், தம்பியும் கூட ஓடினோம். ஓணியில் இறங்கி ஆற்றுக்கும் சுடுகாட்டுக்கும் போகிற வழியில் மணல் துகள்கள் அரையும் சப்தமுடன் மூச்சு பீறிட ஓடினோம். ஊரார் சிலர் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். ராமநாயுடு நெல்லறுத்துக் காய்ந்திருக்கும் கழனியில் நின்றுக்கொண்டு அப்பாவை குடையால் அடித்துக் கொண்டிருந்தான்.

"வானா நாக்கிறே இது நல்லால்ல, வானா நாக்கிறே."

அம்மா புடவையை வரிந்து செருகிக்கொண்டு ராம நாயக்கனை நெட்டித் தள்ளிவிட்டு அப்பாவை அணைத்து மீட்பது தெரிந்தது.

"அடித் தேவிடியாளே, உன்ன தெங்காம உடறதிலடி இன்னிக்கி. பன்னிய நெலத்துல உட்டுட்டு எவங்கூட படுத்துனு இருந்த?"

அம்மாவை வீசித்தள்ளிவிட்டு தொடரும் தாக்குதலில் அப்பா கீழே விழுவது தெரிந்தது. ஓடின வேகத்தில் நான் அம்மாவைத் தூக்கினேன். அப்பாவிடமிருந்து "செத்தஞ்சாமீ" என்றொரு ஓலம் எழுந்தது. "அய்யோ கொன்னுட்டாங்களே" அம்மாவின் ஆங்காரக் குரல் வயல்வெளியை உலுக்கியது. அப்பாவின் முகத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது.

அம்மா, புடவையால் அழுத்திப் பிடித்தபடி கதறினாள். ஊரார் நெருங்குவதற்குள் நாங்கள் அப்பாவின் ரத்தத்தால் குளித்திருந்தோம். கழனியில் கருந்திட்டுகளாய் ரத்தம் சிதறின. அப்பனின் ரத்தம் குடித்து அடங்கியது அந்த மாலையின் மௌனம்.

ரத்தப் பொழுதாய் உறைந்துபோன அந்த மாலைதான் என் இதுநாள் வரைக்குமான கனவுகளை சிவப்பாக்கிவிட்டது. ஊன்று தடியாய் வரப்புகளை குத்திக் கொண்டிருந்த குடைக்காம்பு, மழையின் போது வானையும், வெயிலின்போது சூரியனையும் காயப்படுத்தத் தீவிரித்து ரத்தம் ஒழுக என் தலைக்குள் நுழைந்துக்கொண்டது. பின் வந்த நாட்களை ஒற்றைக் கண்ணுடன் எதிர்கொண்டு உலகை சபித்தபடி வாழ்ந்து செத்தார் அப்பா. வெளிச்சம் கருத்த அவர் நாட்களின் கண்ணீர் எங்களின் காலங் களை ஈரப்படுத்திவிட்டது. கதறலும், ரத்தத் தகிப்பும், நடுக்கமும் துரத்த நாங்கள் நகரம்போய் சேர்ந்த பிறகு ஒருநாளும் எங்களின் தெறிப் போன பன்றிகளைச் சந்திக்கவேயில்லை.

ஆரத்தி எடுத்து எங்களை வரவேற்றார்கள்.

"இவர்தான் ராம நாயுடு. நம்ம கிளப்புல ரொம்ப காலமா இருக்கிறவர். அவரவச்சினே சொல்லக் கூடாது. அவ்வளவு தயாள குணம். எத்தினியோ வருசமா ஊர் பிரிசிடெண்டா இருந்தவர். நம்ம ஊருக்கு எந்த அதிகாரி வந்தாலும் சரி, அய்யா வீட்டு லேர்ந்துதான் சாப்பாடு போகும். இங்க வந்து தங்கிப் போகாத முக்கியஸ்தர்கள் இல்ல."

வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டோம்.

"என்ன சாப்பிடறீங்க. காப்பி, டீ, இல்ல குளுமையா எதாவது?"

வயதை மேற்கொண்டிருந்த உடம்புடன் சிரித்தபடி எதிரில் அமர்ந்து கொண்டார் ராம நாயுடு. அவரின் நாற்காலி இழைந்து இழைந்து மெருகேறி இருந்தது. அருகில் முக்காலிமீது கனமான புத்தகமொன்றும் செம்பில் நீரும் இருந்தன.

"எதுவும் வேண்டாமே. நிறைய்ய குடிச்சி சலிப்பாயிருக்கு."

"அப்படி சொல்லீட்டா எப்பிடி? டேய் லோகு எளனி கொண்டா " வாசல் பக்கமாய் அவர் உத்தரவு போனது.

"உங்களெப்பத்தி எதுவும் தெரியில. திடீர்ன்னு சொன்னாங்க."

"நாங்க ஒரு தொண்டு அமைப்புல வேல பாக்கிறவங்க. இவர் மர்லீன். நான் ரகு. இவருக்கு நேபாளம் பக்கம். தமிழ் வராது. நான் சென்னை ."

"சந்தோசமா இருக்கு, உங்களப்போல இளவட்டங்களெல்லாம் சாதி ஒழிப்பு சமத்துவம்னு பேசி சைக்கிள் பயணம் போறது. இங்க வந்து தங்கிப் போறதுல எனக்கு நெஜமாகவே ரொம்ப பெரும."

எனக்கு நாற்காலி முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும் குடையே தெரிந்தபடியிருந்தது.

"கலக்டர்கள்லேர்ந்து மந்திரிங்க வரையில் எத்தனையோ பேர இந்த ஊருக்கு கூட்டியாந்திருக்கேன். ஊர் முன்னேற என்னென்னமோ செஞ்சேன். எங்க? இன்னும் அப்பிடியேதான் இருக்காங்க அரிசனங்க. அதே கீழத்தெரு மேலத்தெருதான். காந்தி கண்ட கனவுகளெல்லாம் பலிக்க எத்னை காலம் ஆகுமோ தெரியில."

சுழற்சங்க உறுப்பினரும், அதிகாரியும் பவ்யமாக ஆமோதித்துக் கொண்டிருந்தனர்.

"நெலத்துக்கா போய் வருவங்களா? ஊரப்பாத்த மாதிரி இருக்கும். நேபாளத்துக்காரருக்கு நம்ம கிராமங்கள் பாக்க ஆச இருக்குமே."

கீழத்தெருவில் நாயுடுவின் பிரவேசம் வயசான பெண்களை எழவைத்தது. எந்த மாற்றமும் இல்லை , குடிசைகளுக்கு நடுவில் தெரிந்த சில கான்கிரீட் குடிசைகளைத் தவிர.

என் மனம் உந்திக்கொண்டு வந்தது. நடுத்தெருவின் கோடியில் தான் எங்கள் வீடு இருக்கும். போய்க் கொண்டிருக்கும்போதே ராம நாயுடு எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை நிறுத்தினார்.

"என்னாவே, நெத்தியில ஒன்னுமில்லாம மூளியாட்டமா போற. எனக்குப் புடிக்காதுன்னு தெரியுமில்ல. இங்க வா."

தெரு ஓர சாணி குப்பலிலிருந்து குச்சியால் கொஞ்சம் எடுத்து அவள் நெற்றியில் தீற்றினார் நாயுடு. வெட்கத்தாலும், அவமானத் தாலும் குறுகிய அவள் முகத்தை எங்களுக்கு பார்க்கப் பிடிக்கவில்லை .

கிணறை ஒட்டியிருந்த பம்பு அறைத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டோம். மர்லீனுக்கு எல்லாம் புதிதாகத் தெரிவதுபோல கண்களை விரித்துக் கொண்டு பார்த்தபடி இருந்தான். பயணங்களின் போது கவனிப்பு சிதறிவிடும் என்று அவன் அதிகம் பேச விரும்புவதில்லை .

மேற்குக் கழனியில் மிளகாய்த் தோட்டம் சிவந்த பழங்களுடன் குலுங்கியது. அப்பாவின் ரத்த நிறத்தில் பழங்கள் நினைவைக் கிள்ளி காரம் வைத்தன. பொழுது சாம்பல் பூக்கத் தொடங்கி யிருந்தது. சூரியன் விட்டுச் சென்ற வெளிச்சம் தயங்கித் தயங்கிக் கரைந்துக் கொண்டிருந்தது. நாயுடு சுற்றிச்சுற்றி கட்டளைகளை எறிந்து கொண்டிருந்தார்.

"நடவுக்குச் சொல்லியாச்சா? ஓஞ்சாப்பிடி வந்து எறங்கப் போறாளுங்க. வேளையோட தள்ளினு வந்து எறக்கு."

"ஒரத்துக்குச் சொல்லியிருக்கேன். வண்டி கட்டினு போயி அக்ரி ஆபிசுலேர்ந்து ஏத்தினு வந்திடு."

"என்னா தம்பிங்களே எப்பிடி நம்ம நெலம்?" அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார் நாயுடு.

"எல்லாம் பாட்டஞ் சொத்து. ஊர விட்டு எடுத்து வைக்கிற அடி நம்ம நெலந்தான். ஊரச் சுத்தி நம்மதுதான். விவசாயம் சம்பந்தமான எல்லா பரிசும், மெடல்களும் வாங்கியிருக்கேன். அங்க பாரு நெல்லு பயிருல போர்டெ. அக்ரி ஆபீசருங்களுக்கு டெஸ்டு அது இதுன்னு வேலையே நம்ம நெலத்துங்கள்ளதான்."

திரும்பியபின் இரவுச் சாப்பாட்டுக்கு வேளையோடு உட்கார்ந்து விட்டோம். இலைகளில் குழிப்பணியாரங்களும், ஊத்தாப்பங்களுமாக மணந்தன.

"நல்லாச் சாப்பிடுங்கே. எங்கூட்டுக்காரிக்கு கை ருசி அதிகம்."

சமையலறைப் பக்கமாய் புடவை ஒண்டியதைப் பார்த்தோம் நாங்கள். உணவு முடித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்த போது நாயுடு முன்னால் உட்கார்ந்துக் கொண்டார்.

"அம்மாவையும் கூப்பிடலாமே" மர்லீன் கேட்டான்.

"போட்டோ எடுக்கறாங்களாம் வர்றீயா?" என்ற நாயுடுவின் குரலுக்கு தன் புடவையை இழுத்துப் போர்த்தியபடி அவர் பக்கத்தில் வந்தமர்ந்தார் நாயுடம்மா. புகைப்படத்துக்குப் பின் அதிகாரியும், சுழற்சங்க உறுப்பினரும் விடைபெற்றுக் கொண்டனர். காலையில் நாங்களே கிளம்பிக் கொள்வதாய் சொல்லிவிட்டோம்.

நெடுநேரமாய் தூக்கம் வரவில்லை. தனியறையொன்றில் மின்விசிறியின் சுழற்சியை கண்ணுற்றபடி இருந்தோம்.

"எப்படி இருக்கு ஊர்?"

மர்லீன் மெல்லிய ஆங்கிலத்தில் "நன்றாய் இருக்கிறது. ஆனால், சாதி கூறு போடாத ஒரு கிராமத்தை நாம் நம் பயணத்தில் ஒரு காலும் கண்டடைய மாட்டோமா?" என்றான். ஊர்க்கோடியிலிருந்து சாமங்களின் வழியே பன்றிகளின் ஓயாத கதறல் எனக்கு கேட்டுக் கொண்டிருந்தது. அவை புரட்டும் மண்ணாய் மனம் அல்லாடியது. விடிந்தபின்பு வயல்களுக்காய் போவதாகச் சொன்னபோது "உதவிக்கு ஆள் அனுப்பவா" என்றார் நாயுடு. வேண்டாமென்று நடந்தோம்.

"பொம்பளைங்க ஒதுங்குற பக்கமாய் போயிடப் போறீங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தார் நாயுடு.

ஊரில் எங்களை வினோதமாய் பார்த்தார்கள். நேரே கீழூருக்குப்போய் பூவரசு விரிந்த ரட்சை கல்மேல் கொஞ்ச நேரம் உட்கார்ந்தோம். அங்கிருந்து எழுந்து நடுத்தெருவின் கோடிக்கு மர்லீனை கூட்டிக்கொண்டு போனேன் நான். எனக்கு முன்பாக ஓடியது என் மனம்.

என் நினைவுகளைப்போல் குமைந்திருந்தது என் வீடு. சுவர்கள் மட்டுமே எஞ்சி மழைக்கும் வெயிலுக்குமாக நின்றிருந்தன. குட்டிச் சுவராகியிருந்த என் வீட்டினுள் நுழைந்து ஒரு மண் துண்டை எடுத்தேன் நான். கண்கள் கசிந்தன. என் கையில் கதகதத்தது அம் மண்கட்டி.

பன்றிகள் அடைந்திருந்ததற்கான அடையாளங்களற்று வீட்டின் பின்புறம் முள்மரம் வெட்டப்பட்டுக் கிடந்தது. திசைக்கொன்றாய் சிதறிய என் பன்றிகள் என்னை நோக்கி ஓடிவருவது போலிருந்தன. என்னை முட்டிச் சூழ்ந்த பன்றி மந்தையில் நான் சிக்கிக் கொண் டேன். ஒரு பெருத்த பன்றியின் கெதாறல் என்னை உலுக்கியது.

"என்ன ஆயிற்று?"

"இது என் வீடு."

மர்லீன் அதிர்ந்து போனான். அவனால் நம்ப முடியவில்லை. "அப்படியா அப்படியா" எனஆயிரம் முறை கேட்டுக் கொண்டே இருந்தான். "அந்தக் கதையை சொல்லேன்" என்றவனுக்கு "ரத்தக் கவிச்சி அடிப்பது எங்கள் கதை" என்றேன் நான். மர்லீன் வெகு வாய் குத்தப்பட்டிருந்தான். சிற்றுண்டிவரை அவன் சகஜமாக வில்லை. சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கை கழுவப் பின்கட்டுக்குப் போனோம்.

வேலையாட்கள் பனையோலைத் தட்டுகளில் கூழ் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

"என்னா பீம மாமா, சௌக்கியமா?"

என்னை மிரட்சியுடன் பார்த்தார் ஒருவர்.

"நாந்தான் ரத்தினம் மகன். மெட்ராஸ் போயிட்டமே அவங்க."

"தம்பீ" என்றெழுந்தார் அவர். எல்லார் கண்களும் எரிந்தன.

"அப்பா எப்பிடி கீறாரூ?"

"மூனு வருசமாச்சி போயி."

மேலும் அவர்கள் பேசுவதற்குள் உள்ளே வந்துவிட்டோம்.

வெயில் இதமாய் இருந்தது. மிதிவண்டிகளை தயார்படுத்திக் கொண்டு விடைபெறத் தயாரானோம். இனி வெங்கட்ட கிரிமலையை ஏற வேண்டும். கோலார் வரை காடுதான். காலடிமண் பிடித்திழுப்பது போலிருந்தது. எல்லாரும் வாசலில் நின்றிருந்தனர். நான் நாயுடுவை ஆழமாய் ஒருமுறை பார்த்தேன். அவரும் வெளியில் கிளம்பிவிட்டார் போலிருந்தது. கையில் குடையுடன் நின்றார்.

எல்லாருக்கும் சொல்லிக் கொண்டோம்.

"போயி காயிதம் போடுங்க. தினியும் பாக்கப்போறமோ என்னவோ" ராம நாயுடு சிரிப்பு வழியும் முகத்துடன் எங்களிடம் சொன்னார்.

"திரும்பவும் பாப்போமுன்னுதான் நினைக்கிறேன்."

அவர் கையிலிருந்த குடையைப் பார்த்தபடி பேசினேன் நான் எனக்குள் என் பன்றிகளின் ஊறுமல் தீவிரமடைந்துவிட்டிருந்தது வேலையாட்களின் முகங்களில் மீண்டும் தீ பிடித்திருந்தது.

"அப்படியா" | "ஆமா, நான் கீழத்தெரு ரத்தினம் மகந்தான்."

அந்த முகத்தில் குற்ற உணர்வின் சொற்ப சாயலையாகிலும் கண்டுவிடும் குறியில் தவித்தது என் மனது. ராமநாயுடு இமைக்காமல் என்னையே வறட்சியுடன் பார்த்தார்.

"எங்க அப்பா சாகிற வரைக்கும் உங்க பேரைத்தான் புலம்பினு இருந்தார். என் பயணம் முடிஞ்சதும் நிச்சயம் உங்கள தேடி வருவேன்."

*


நன்றி : அழகிய பெரியவன் , கலப்பை, சென்ஷி