Showing posts with label கணையாழி. Show all posts
Showing posts with label கணையாழி. Show all posts

Saturday, November 11, 2017

உடைப்பு - அமரந்தாவின் சிறுகதை

இம்மாத கணையாழி இதழில் வெளியான தோழி அமரந்தாவின் அருமையான சிறுகதை. ஸ்கேன் செய்து அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி.









நன்றி : அமரந்தா , கணையாழி








Sunday, August 7, 2016

கடை (குறுநாவல்) - ஆபிதீன்

கணையாழி (October 1985) தி.ஜானகிராமன் குறுநாவல் திட்டத்தில் தேர்வு பெற்று பிரசுரமானது. ஓவியம் : ஆபிதீன்
*

கந்தூரி முதல்நாள் இந்தக் கடை திறப்போமா என்கிற சந்தேகம் இருந்தது. வழக்கம்போலவே கடைசி நேரத்தில் படபடவென்று வேலை பார்த்து, பத்து மணிக்கு கொடி ஏறியதும் அப்துல் பாஸித்தின் 'கிரா-அத்'தைக் கொஞ்ச நேரம் போட்ட பின்பு 'அல்லாஹ் உன் கருணை' என்று துவங்கும் டி.எம்.யாகூப் பாட்டை 'சன்சுய்' ஆம்ப்ளிஃபேருக்குத் தொடர்புள்ள, பார்க்கப் படு அழகாக இருக்கும் 'அகாய்' 'டெக்'கில் அலற வைத்தார் மாமா.

கடை ஆரம்பமாகி விட்டது.

கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை அல்லது காரைக்காலில் தனி ரிகார்டிங் சென்டர் திறக்கிற என் விருப்பத்தை லத்தீஃப் மாமா ஏற்றுக் கொண்டாலும் அது ஆரம்பிக்கும் வரை, நாகூரிலே -பெரிய மளிகைக்கடைக்கு எதிரில் ஏழெட்டு வருடமாகச் சும்மாவே பூட்டிக் கிடக்கிற, கந்தூரிக்கு கந்தூரி வாடகைக்கு விடப் பயன்படுகிற , எங்களின் இரண்டு கடைகளில் ஒன்றை ரிகார்டிங் சென்டராக அமைத்துத் தருகிறேன் என்றார். நாகூரில் தனியாக ரிகார்டிங் சென்டர் ஒன்றும் இல்லை. தர்கா லைன் பஜாரில் வெளிநாட்டுப் பொருள்கள் விற்கும் கடைகளோடு சேர்ந்தாற்போல் 'டெக்னிக்', 'டச் சவுண்ட்' என்று ரிகார்டிங் செய்கிற கடைகள் இருந்தன. தவிர, தர்கா லைன் பஜாரில் இருக்கும் லத்தீஃப் மாமாவின் கடை இப்போது சிங்கப்பூர் பொருட்கள் விற்கிற கடையாக மாறி விட்டது. மாமாவிற்கு திடீரென செல்வச் செழிப்போ கஸ்டம்ஸ்காரர்களுக்குப் பயப்படாத துணிச்சலோ வந்து விடவில்லை. அவருடைய நண்பன் மஞ்ச மரைக்கான், சங்கு மார்க் கைலி ஏஜெண்ட்டுக்குச் சொந்தமான கடை ஒன்றில் ஒரு சின்ன ராக்கை போட்டு ஓரமாக சிங்கப்பூர், சிலோன் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வழக்கமாகக் கந்தூரியில் சங்கு கைலிக் கம்பெனிக்காரர்கள் அந்த  இடத்தில் பிரம்மாண்டமான ஸ்டால் போடுவார்கள். அந்த அசுர ஸ்டால் அவன் கடையைத் தூக்கி எறிந்தது. லத்தீஃப் மாமா செய்கிற, சற்று நேரம் கடையில் உட்கார்ந்தால் பைத்தியம் பிடிக்க வைக்கிற , 'ரொடேஷனு'க்கு அவ்வப்போது ஆயிரம் ஐநூறு கொடுத்து உதவுகிற மஞ்ச மரைக்கானுக்கு இந்த நிலை ஏற்பட்டது மாமாவின் மனதை வருத்தியிருக்க வேண்டும். தவிர, எத்தனை நாள்தான் தர்கா லைன் பஜாரிலுள்ள கடைகளிலேயே பெரிதாக, பார்வைக்கு எடுப்பாக இருக்கிற தன் கடை ( இதற்கு, பக்கத்திலுள்ள ப்ரூக் பாண்ட் கிடங்கு எப்போதும் மூடிக்கிடப்பதும் ஒரு காரணம். எப்போதாவது ப்ரூக் பாண்ட் ஐயர் , காரில் சர்ரென்று வந்து இறங்குவார். சரக்குகளை விநியோகம் செய்து விட்டுப் போய் விடுவார். உதிரியல்ல. பெரிய பெரிய கேஸ் பெட்டிகள். அந்த ஓரிரு மணி நேரம்தான் அந்த இடம் பர...பர... மற்ற நேரங்களில் மூப்பின் சுமை தாங்க முடியாமல் விழுந்து கிடக்கிற ஒரு கிழவி போல பேச்சு மூச்சின்றி இருக்கும்.) ஜனங்களின் பார்வைக்கு 'டக்'கென்று படுகிற தன் கடை ஒளியிழந்து கிடப்பது ? இதை இட்டு நிரப்பலாமென்றால் குறைந்தது ஐம்பது பெரிய நோட்டு வேண்டும். யாரிடம் இருக்கிறது ? மஞ்ச மரைக்கான் கடைக்கு வந்தான்.

மாமாவிற்கும் மஞ்ச மரைக்கானுக்கும் என்ன ஒப்பந்தமோ தெரியவில்லை. ஆனால் பஜாரில், கௌஸூக்கு சமமாக லைனில் சாமான்கள் எடுக்கிற அவன், கடையில் நிறையவே உரிமை எடுத்துக் கொள்கிறான். மஞ்ச மரைக்கான் நெட்டையாக, கூன் முதுகுடன், அசமந்தத் தனம் விரவியிருக்கிற முகத்துடன் ஒரு ஒட்டகம் போலவே இருப்பான். ஒட்டகம் , அரபியின் கூடாரத்தில் காலடி எடுத்து வைக்கிறதா என்ன? லத்தீஃப் மாமா தன் கடைக்குக் கீழே ஒரு ஐந்தடிக் கடை-வந்தா வரத்தான் கடை மாதிரி-போட்டு வியாபாரம் பண்ணினார். சொந்தக்காரனான கஞ்சா மடையன் கௌஸ் வேறு பிரச்னையை உண்டு பண்ணினான். 'மச்சான்.. மச்சான்' என்று வாய் ஒயாமல் சொன்னவன், லத்தீஃப் கடை  இப்போது ஏகப்பட்ட சிங்கப்பூர் சாமான்களோடு ஜொலிக்க ஆரம்பித்ததும் எரிந்து ரகளை செய்ய ஆரம்பித்தான். குடிவெறி வேறு. தினமும் திட்டித் தீர்த்தான் வாய் ஓயாமல். எந்தப் பாட்டு போட்டாலும் அதற்கு எதிராக ஒரு கமெண்ட். 'இல்லை எனும் சொல்லே இனி எந்தன் வாழ்வில் இல்லை' என்று போட்டால் 'டேய் ங்காத்தால ஓலி...இல்லையா? ஒன்னய இல்லாமயே ஆக்கிப்புடுறேண்டா ..பால்.' என்பான். தன் வீட்டு 'டெக்'கை எடுத்து வந்து மாமா கடையில் போடும் பாட்டுகள் கேட்க விடாமல் அலற வைத்தான். அவன் ஒரு பாட்டு போட்டால் இங்கே ஒரு பாட்டு என்று போட்டி வந்தால் சங்கடமில்லை. போட்டுப் பார்த்து விடலாம். ஆனால் பஜாரில், ஆபாசமாகக் குடும்பத்தையெல்லாம் இழுக்க ஆரம்பித்தால் ?

மாமாவின் தர்கா லைன் கடையில் மஞ்ச மரைக்கான் புகுந்த பிறகு 'ஸ்டீரியோ சீசன்' தனியாக இங்கே வந்து விட்டது. இந்தக் கடையின் முழுப் பொறுப்பும் என்னுடையது. சின்னக் கடைதான். டீஸண்டான கடை. 'கிக்கிரி பிக்கிரி' என்றெல்லாம் கலர் அடிக்காமல் பளிச்சென்று, ஸ்னோ ஒயிட் பெயிண்ட். ரிகார்ட் கவர்களையெல்லாம் ஒரேயடியாக இடைவெளி தெரியாத அளவுக்கு ஒட்டாமல் இடைவெளி விட்டு ஒட்டியிருக்கிறேன்.  தர்காவிற்குப் போகிறவர்களுக்குப் பார்வையாக. ஜியாரத் செய்து விட்டு திரும்புகிறவர்கள் கண்ணில் ராக்கையில் வரிசையாக வைத்திருக்கிற கேஸ்ஸட்டுகள் படும். நின்று, கடையை நேராகப் பார்ப்பவர்கள் படு அலம்பலான டெக், ஆம்ப்ளிஃபேர், பாக்ஸ்-ஐப் பார்ப்பார்கள். டிஸ்கோ லைட்டையும் அதை பிரதிபலிக்க வைக்கிற, இந்தப் பக்கத்தில் யாரிடமும் இல்லாத (சென்னையில் இருக்கிறது) Reflecting Plates-ன் பல மாடலையும் பார்ப்பார்கள். டிஸ்கோ லைட்தான் பந்தா. ட்ராஃபிக் ஜாம் ஆகி விட்டது. போலீஸ் வந்து அதை எரிய விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளுமளவிற்கு. இருந்தாலும் அவ்வப்போது கூட்டத்தைக் கவர 'ஜிங்..ஜிங்'கென்று ஒரு பாட்டைப் போட்டு டிஸ்கோ லைட். எதிரில் மளிகைக் கடைக்குப் பக்கத்தில் பெரிய கடலைக் கடை. எங்கள் கடையின் பூட்டிக் கிடக்கும் அடுத்த பாகத்திற்கு முன் ஒரு சின்ன மேடையில் பூக்கடை. வழக்கமாக அதிராம்பட்டினம் வீரிய புஷ்டி அல்வாக்காரனுக்குத்தான் கடையை வாடகைக்கு விடுவது. அவன் வந்தால் கடையில் பாதிதான் இப்போது கிடைத்திருக்கும். பூக்கடை நாறியிருக்கும். ஆனால் இம்முறை மிகவும் கெஞ்சினார் பூக்கடைக்காரர். ('தம்பி..வேறே எடம் ஒண்ணும் எனக்கு பொலப்படலே.. நீங்கதான் பாத்து ஏதாச்சும் செய்யனும்') ஒரு வருடமாக வாசலில் சும்மா கடை வைத்திருக்கிறார். வாடகை கிடையாது. அவ்வப்போது ஓரிரண்டு ரோஜா மலர்கள் தருவார். நாம் முகர்ந்து கொள்ள வேண்டும். ரோஜா மணக்கும். மாமா சரி சொல்லி விட்டார்.

ஆக பெண்களின் பார்வையில் படுகிற கடை. தவிர, இந்த முறை கடையிலேயே உட்கார்ந்து விட்டதால் வெளியில் நகரவே இயலவில்லை. இதற்கு 24 மணி நேரமும் 'ஜே..ஜே' என்று கடையில் கூட்டமிருந்தது என்பது அர்த்தமல்ல. புதிதாக ஏற்றுக் கொண்ட பொறுப்பு. அதை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் என்றுதான். ' வேற கடை தொறக்குற வரைக்கும் இங்கேயெ இருந்துக்க..முன்னூறு நானூறு எடுத்துக்க மாசம்..' என்று சொல்லிய மாமாவிற்கு ஏமாற்றத்தை அளிக்க விரும்பவில்லை. நிரந்தரமாகவே இங்கே கடை வைக்கத் திட்டம்.

'கந்தூரிக்குச் சரி, வியாபாரம் நடக்கும். மத்த நேரத்துலெ? சரிப்பட்டு வருமா? அந்த பஜார் மாதிரியில்ல இது. அங்க வர்றவனுவ சிங்கப்பூர் சாமானுவள பாத்த ஒன்னயே 'ஆ'ண்டு வுளுந்து வாங்குவான். இந்தப் பக்கம் அப்படியா?'

மாமா இடைமறித்தார். 'அதெல்லாம் வரும். ரிகார்டிங் சென்டருண்டு ஒண்ணும் இல்லப்பா நம்ம ஊருலெ. ரீடெய்லுக்கு விக்கக்கூட வாணாம்பா. நமக்கு ஆர்டர் வந்தாவே போதும்.'

'வருமா?'

'வரும். அட, ஒரு நாளக்கி - ஹந்திரி முடிஞ்சவொன்னெ - ரெண்டு வந்தாக் கூட போதுமே'

'ரெண்டு போதுமா?'

'என்னாப்பா நீ ஒண்ணு.. ஒரு பேச்சுக்கு ரெண்டுண்டு சொல்றேன். ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பேரு இக்கிது. நம்மட்ட இக்கிற சாமானுவள்லாம் சமானியமல்ல. ஒனக்குத் தெரியாதா? அதனாலெ, நான் சொல்றேன்; ஆர்டர் நல்லா வரும்'

நம்பிக்கையோடு சொன்னார் மாமா. மேலும் ஏதாவது கேட்டால் கோபமுறுவார் போல முகம். சரியென்றேன். மேலும், கடையிலிருப்பதால் அனுபவமும் கிடைக்கும். இது எனக்கு நிச்சயமாக வித்யாசமான அனுபவம். காலை ஒன்பதரை மணியிலிருந்து ஒரு மணி வரை. பின் மூணரையிலிருந்து ஏழு. அப்புறம் ஏழரையிலிருந்து பதினோரு மணி வரை. முக்கியமான நாட்களில் இரவு ஒரு மணி வரை கடை. ஹத்தத்திற்கு விடிகடை.

இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தக் கடையில் இருக்கலாம். இதற்குள் வரி..வரி..என்று வரும் அரசு அதிகாரிகளைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். பரவாயில்லை. எனக்கு நன்றாகவே நடிக்க வருகிறது. ஒருநாள் பந்தலுக்கு வரி என்று ஒருவன் வந்தான். முப்பது ரூபாயாம் வருடத்திற்கு. 'ஹீ..ஹீ..ஹீ..' என்று இளித்துக் கொண்டே அடுத்த நாள் வரச் சொன்னேன். அடுத்த நாள் வரும்போது ஒரு பத்துப் பதினைத்து வருடம் தன் நாயகனைப் பிரிந்து, இப்போது அவனை வரவேற்கிற, ஒரு கற்புக்கரசி மார்க் மனைவியின் முகபாவம் எனக்கு இருந்தது. அன்று ஹீ..ஹீ..பலனளித்தது. அவன் வந்தவுடனேயே முதல் அடி. நன்னாரி சர்பத் இரண்டு! விழுந்து விட்டான். எல்லாக் கடைகளிலும் வசூலித்ததை விட பத்து ருபாய் குறைவாக வாங்கிக் கொண்டு போனான். அவனுக்கு சினிமா பாட்டெல்லாம் பிடிக்காதாம். பக்திப் பாட்டுகள்தானாம். 'திருமுருகன் தேனிசை' ஒரு கேஸ்ஸட்டில் போட்டு வேண்டுமென்று சொல்லி விட்டுப் போனான். சேல்ஸ் டாக்ஸ் ஐயரும் என்னிடம் விழுந்தார். அவருக்கும் பக்திப் பாட்டுகள்தான் பிடிக்குமாம். அதென்னமோ அரசு அதிகாரிகள் பெரும்பாலோர் இப்படித்தான் பக்தியில் திளைக்கிறார்கள். கடவுள் வாழ்க !

கடைக்கு வரும் கஸ்டமர்களிடம் நான் சிரித்துப் பேசுவது கூடப் பிஸாதாகி விட்டது. ஒரு கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதியாக ஒரு வருடம் சென்னையில் இருந்தபோது அலைந்த அலைச்சல், இப்போது நினைத்தாலும் கசப்புத் திரவத்தை நெஞ்சில் நிரப்பும் அந்த அனுபவம், எனக்கு தாராளமாகச் சிரிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது- கடைந்தெடுத்த தேவடியாள் போல. அந்தப் 'பக்குவம்' எனக்கு இங்கே கை கொடுக்கிறது. அதற்கும் பிஸாது!

'பெத்தயா ஓலி..எப்படித் திமிராப் போவான். கடெ வச்ச ஒன்னெ கொழஞ்சி கொழஞ்சி பேசுறான். நாக்காலி எடுத்துப் போடுறான்..டீங்கிறான்..சர்பத்துங்குறான்' - தினகரன் சொன்னான். அவன் நண்பர்கள் சொன்னார்களாம் இப்படி. கடை வைத்தவன் கஸ்டமர்களிடம் பின் எப்படிப் பழகுவது? 

சம்பந்தமில்லாத ஆட்களுடன் நான் எதற்காகப் பேச வேண்டும்? 'ஒலகத்திலேயே தாந்தான் பெரிய அறிவாளி போல திமிரு.. நடை..ங்காத்தா' என்றார்களாம். அறிவாளிக்கென்று ஒரு தனி நடையா? வானம் பார்க்கும் புருவந்தூக்கிகளின் நடையா? 'அறிவாளி நடை கற்றுக் கொடுக்கப்படும்' என்று தொங்கும் போர்டுகள் எங்கேயிருக்கிறது? அப்படிப் பார்த்தால் நான் பழகும் ஆட்களெல்லாம் அறிவாளிகளா? தினகரனும் , பெரியம்மா மகன் தாரிக்கும் , என் மாமாவும் , என் குடும்பத்தார்களும்... அறிவாளிகளா? அனைவரும் உலகத்தை மாற்றிவிடக் கூடியவர்களா?

ஏற்றுக் கொண்ட பொறுப்பை அருமையாக  நிறைவேற்றிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். கந்தூரியில் நல்ல வியாபாரம்தான்- தர்கா லைன் கடையை விட. வழக்கம்போலவே இந்த வருடமும் .எம்.யாகூப்தான் ஹீரோ. சும்மா பிய்த்துக் கொண்டு போனது. பணம் நிறைய இருந்திருந்தால் டி.எம்.யாகூப் லேட்டஸ்ட் பாகம் 9ஐ இன்னும் நிறையப் போட்டு ஆயிரம் ரெண்டாயிரம் கூடச் சம்பாதித்திருக்க முடியும். எல்லாம் முடிந்தபின்தானே நமக்குப் புத்தியே வரும்!

டி.எம்.யாகூப் ஒருநாள் இந்தக் கடைக்கு 'விஸிட்' பண்ணினார். பெரிய கூட்டமே சேர்ந்துவிட்டது. கடைக்கு இதைவிட ஒரு விளம்பரம் வேண்டுமா? யாகூப் காக்கா வரும் செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பே தெரியுமாதலால் 'மதீனா மகிமை' ரிகார்டு கவர், யாகூப் காக்கா பாடிய கேஸ்ஸட்டுகள் ( முக்கியமாக டி..எம்.யாகூப்பின் சிவந்த முகம் கொண்ட inlay card உடன்) முழுமையாகக் கடையை ஆக்கிரமித்தது. இவரை வைத்து பிஸினஸ் செய்கிறோம்; இது கூடப் பண்ணவில்லையென்றால்?

கச்சேரி மேடைகளில் stereo season மைக்கைக் கண்டாலே புதுப்பாட்டு பாடும் யோசனையைக் கைவிட்டு விடுவார். ஒரு பெரிய ரிகார்ட் தயாரிக்கும் கம்பெனியே அவரைப் பிடிக்கனும் என்றால் ஐயாயிரம் பத்தாயிரம் கொடுக்க வேண்டும். நமக்கு, அவ்வளவு சுலபத்தில் மசிந்து விடுவாரா? இருந்தாலும் அவ்வப்போது புதிதாகப் பாடுவதை 'டக்'கென்று பிடித்து மாமா, பெயரைத் தட்டிக் கொண்டு விடுவார். உபசரணை பண்ணினேன். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என் முகத்தை அருகில் இழுத்து , தன் குவித்த வாயை விறைத்த வலது கையினால் மறைத்துக் காதோரம் ஏதோ சொல்லப் போனார். ஐயையோ..! வழக்கமாக இப்படித்தான் தன் கச்சேரிகளில் வாத்தியக்காரர்களைத் திட்டுவார். பார்ப்பவர்களுக்கு அவர் சிரித்தவாறே ஏதோ சொல்வதுபோல் தோன்றும். ஆனால் நாக்கைப் பிடுங்குகிறார்போல் திட்டுவார். எல்லோரும் இதைச் சொல்வார்கள் என்றாலும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டதில்லை. கடைக்கு வருகிற , யாகூப் காக்காவிடம் வாசிக்கும் ஆட்களே சொல்வார்கள். சாஸ்திரீய முறைப்படி பிரமாதமாகத் தப்லா வாசிக்கும் பாவாஜியே சொல்வான்: 'டொண்டணக்குப் பாட்டு பாடுறவனுக்குலாம் வாசிக்கிற விதி எனக்கு...நொண்டிக்கை மாதிரி ஆக்கிப்புட்டான்..இந்த லட்சணத்துலெ தாறுமாறா ஏசுறான் மேடையிலேயே. ஹராமுலெ பொறந்தவன்' என்று. ஆனால் நேரிடையாக நானே கேட்டேன். KKசாபு ஏற்பாடு செய்த கச்சேரிக்கு ரிகார்டிங் செய்ய மாமாவுடன் சென்றபோது அப்படி அவர் புனித மொழிகளால் திட்டியதைக் கேட்டபோதுதான் நம்பிக்கை வந்தது. எழுதினால், நல்லவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் வெட்கம் கொள்ளுமளவு திட்டினார். அருளிசை அரசரான அவருடைய பாடல்களை விட அவருடைய அந்த வசவுகள் நன்றாக இருந்ததாகப் பட்டது அப்போது.

தயக்கத்துடன் காதைக் கொடுத்தேன்.

'அந்த 'மதினா மகிமை' ரிகார்டை ஒரு TDK டேப்புலெ போட்டு - ஒங்க மாமாவெ ரிகார்ட் பண்ணச் சொல்லுங்க- வூட்டுக்கு அனுப்பி வைங்க.' என்றார். சென்றார். 

யாகூப் காக்காவுடன் நெருக்கமாகப் பேசிய, மனித குலத்திலேயே உயர்ந்த பிறவி!  - கூட்டம் என்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்தது பெரிய சங்கடமாக இருந்தது.

கடையில் உட்கார்ந்ததால் வழக்கமாய் அனுபவிக்கிற சந்தோஷம் போயிற்று. மினாராவில் ஏற முடியவில்லை. நானும் பெரியம்மா மகன் தாரிக்கும்தான் கடையில். இருவரைத் தவிர வேறு ஆட்கள் 'கல்லா' அருகே இருந்தால் பிரச்னை எழும் என்று இந்த ஏற்பாடு. நான் மட்டும் பெரிய மினாராவில் ஏறிக் கொல்லைக்கு வரும் பெண்களை நோட்டமிட்டால் (இயற்கையின் அழகில் மனதைப் பறி கொடுத்தால்!) அவனுக்குப் பற்றிக் கொண்டல்லவா வரும்? அதனால் போகவில்லை. இருப்பினும் எட்டாம் இரவு - வாண வேடிக்கை நடக்கும் அன்று-அவன் வேடிக்கை பார்க்கப் போவதாகவும், பீரோட்டம் அன்று கடற்கரைக்கு நான் போவதாகவும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி சென்றோம். மற்றபடி ஊஹூம்..கொடிஊர்வலம் வரும்போது வீட்டு வாயிலின் அருகே நிற்க முடியவில்லை. எதிர்வீட்டு முத்துக் கனியிடம் நான் வருவதாக தகவல் அனுப்பியிருந்தேன். கொண்டை, எம்.எஸ், ஜூபி வந்திருப்பார்கள்..போயிற்று..கொடி ஏறும்போது கிப்ஸ் கைலி ஸ்டால் அருகே நின்று புதிதாக எதையும் ஒப்பேற்ற முடியவில்லை. சீராணி வழங்குகிற சாக்கில் கையின் பதத்தை அறிய முடியாமல் போயிற்று. எட்டாம் இரவும் இப்படித்தான். எனது வாணம் சீறிப் பாயவில்லை. மருந்து திணிக்க நேரமில்லாத பிஸி! தூரத்திலிருந்து பார்த்தேன் - கடைக்கு வெளியில் நின்று கொண்டு சற்று நேரம். தலைகள்தான் தெரிந்தது.

திட்டமிட்டுச் சென்ற பீரோட்டம் கோபத்தைத்தான் தந்தது. ஒடுக்கத்து புதன் கடற்கரையின் அழகைப் போலில்லை. இப்போது வெளியூர் ஜனங்கள் மூச்சு முட்டுகிற மாதிரி கூடினார்கள். ஒன்றும் சுகமில்லை. இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைப்பு வையேன் என்று நண்பன் கேட்டபோது 'கூளங்கள்' என்றே என்னால் சொல்ல முடிந்தது. சரியான உடம்புகள் காணாத ஏமாற்றமா அல்லது அன்று கடற்கரைக்கு வருவதாக தகவல் அனுப்பிய ஜொஹரா வராத எரிச்சலா அல்லது வேறு ஒன்றா என்று தெரியவில்லை. எனக்கு மனது சரியில்லை. பீர்சாபு வரும்போது அல்லாவைப் பார்த்தமாதிரி ஜனங்கள் வெறிகொண்டு அவரைப் பார்க்க ஓடி வந்து குவிந்தது எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. பீராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..! ஒரு எலுமிச்சம் பழத்தை எவ்வளவு விலைக்கு விற்று விடலாம்..! எலுமிச்சம் பழத்தினுள் பீரினுடைய 'சாறு' இருப்பதாக நம்பும் பெண்களை எவ்வளவு சுலபமாக வசப்படுத்திவிட முடியும்..! வாழ்க்கை எவ்வளவு வன்ணமயமானது..! தலையில் பச்சைப் பேட்டாவைச் சுற்றிய ஆபிதீனைக் கற்பனை பண்ணினேன். எப்படியோதான் இருந்தது. ஆனால் பழக்கமாகினால் சரியாகிவிடும்.

கந்தூரியின் பதினாலு நாளில் எங்களின் அரிப்பு ஓரளவிற்குத் தணிந்தது ஹத்தம் அன்றுதான். அன்று விடிகடை. சந்தனக் கூடு எங்கள் தெருவிற்கு வர அதிகாலை நாலு மணியாகியது. ஒரு மணியிலிருந்து மூணறை வரை தாரிக் ரிகார்டிங் ரூமுக்குள்ளேயே போய் தூங்கி விட்டான். அவனை எழுப்பிக் கடையில் உட்கார வைத்து விட்டு வீட்டிற்கு தூங்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு, பெண்கள் விஷயத்தில் ஜாலி பண்ணுவதற்காகவே M.Com பரீட்சைக்கான ஸ்டடி லீவில் வாண வேடிக்கை நடக்கும் எட்டாம் இரவு ஊர் வந்த , என் துணை இல்லாமல் தவித்துப் போன , ஹமீதை இழுத்துக் கொண்டு கூட்டத்தை நெருக்கித் தள்ளியவாறு எங்கள் தெருவை அடைந்தோம். கூட்டு ஃபாத்திஹா கட்டிடத்திலிருந்து கூடு வந்து கொண்டிருக்கும் செய்தி கேட்டவுடனே நாங்கள் தெருவில் நுழைந்து விட்டோம். தெரு நிறைந்திருந்தது. கூடு வரும் முக்கியமான தெருக்களில் எங்கள் தெரு ஒன்றாதலால் பெண்கள், குழந்தைகள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கூட்டம்கூட்டமாக இருந்தார்கள். தெருவில் மல்லிகைப் பூ விற்பவர்களும் தப்ஸ் அடிக்கும் பாவாக்களும் நிறைய இருந்தார்கள். தெருவெங்கும் ஜர்தா சோறு மணத்தது. கூடு வருவதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். வீட்டுக்குப் பக்கத்திலுள்ள திண்ணையில் நிற்கும் பெண்களின் தொடைகள் தலையில் படுமாறு நின்று கொண்டோம். கடைத் தெருவிலிருந்து தெருவுக்குள் ஊர்வலம் நுழைந்தது. ஊர்வலம் தெரிய ஆரம்பித்ததுமே நெரிசல் அதிகமானது. என் தலையை இரு கைகள் இறுக்கமாகப் பிடித்து அழுத்திக் கொண்டன. தேரடித்தெரு பஸ்ரியா!

கூட்டிற்கு முன்னால் தஞ்சாவூர் ஆல்பர்ட் பார்ட்டியின் கச்சேரி ஒரு அலங்கார வண்டியில் வந்தது. கூடு எங்களருகில் வந்தது. கூட்டம் தள்ளிய தள்ளில் பெண்களோடு பெண்களாக திண்ணை மேல் பஸ்ரியாவோடு நிற்க வேண்டி வந்தது. மிகப் பக்கத்தில், அடுத்த வீட்டு வாசலில் என் உம்மா! கூட்டம் எல்லாவற்றையும் அடித்து விடுகிறது.

பஸ்ரியா என் கையில் மல்லிகைப் பூவைக் கொடுத்து அழுத்தினாள். 'பெரீய பதுவுஸூ மயிரா இருப்பியே..இந்தப் போடு போடுறியே..ஒரு நாளைக்கி ஒன்னய....கச்சடா..' என்று அவளிடம் கிசுகிசுத்தவாறே பூவைக் கூட்டின்மேல் எறிந்தேன். கூடு இந்த வருடம் மிகப் பிரமாதம்! மனதை அள்ளியது. அந்த அதிகாலை நேரமும் ஊர்வலம் சோபையுறக் காரணம் என்று பட்டது.

பூப்பல்லாக்கு , செட்டிப்பல்லாக்கு போய் தாஜ்மஹால் பீடி வண்டிகள் மியான் தெருவில் நுழையும் வரை கூட்டம் தாள முடியாமல் இருந்தது. போதும் என்று உடம்பு சொல்லிற்று. அசந்து ரூமில் படுத்தவன் அடுத்த நாள் காலை பத்து மணிக்குத்தான் எழுந்தேன்.

இந்த ஒருநாள்தான். மற்றபடி எங்களின் உடம்பிற்கு வேறு தீனி போட முடியவில்லை. ஆசரஹான் அருகே நடந்த கச்சேரிகள், தான்சேன் இசையரங்கில் நடந்த கச்சேரிகளை அனுபவிக்க முடியவில்லை. கடை மூடத் தினம் இரவு ஒரு மணியானது. அதற்கு மேல் சென்றால் கச்சேரிகளில் அவ்வளவு கூட்டம் இருக்காது. கால்மாட்டுத் தெருவிலும் பெண்கள் கூட்டம் போயிருக்கும். இந்த வருடம் சில தெரிந்த பையன்கள் அந்தப் பக்கத்தில் புடவைக்கடை, சர்பத் கடை வைத்திருந்தும் பிரயோசனமில்லை. தூக்கத்திற்கு கண்கள் கெஞ்சும் நேரத்தில் என்ன செய்வது? கந்தூரி முடிந்தபின் இரவு பத்து மணிக்கெல்லாம் கடையை மாமா மூடச் சொல்லிவிடலாம். ஆனால் எட்டு மணிக்குச் சாப்பிட்டுவிட்டு பாலத்தடிக்குப் போய் ஆற்றைப் பார்த்துக் கொண்டே ஹமீதுடன் இரவு பத்து மணி வரை பேச முடியாது. பத்து மணிக்கு மேல் சாதாரண நாளில் ஹமீது வரமாட்டான்.

ஒருவகையில் பார்த்தால் இதெல்லாம் நல்லதென்றுதான் தோன்றிற்று. சின்னப் பிள்ளையா இன்னும்? சம்பாதிக்க வேண்டிய வயதில், வீட்டாரின் வெறுப்புமிழும் பார்வையைத் தவிர்த்துக் கொள்கிற வயதில் இந்த மாதிரி வயசின் அரிப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இருந்தால்தான் கடையில் உட்காரப் பொறுமை வரும் என்று தோன்றியது.

வேலை கிடைக்காமல் வெட்டிப் பயலாகச் சுற்றுகிற நேரத்தில் ஏற்படுகிற அவமானங்களுக்கு மாற்றாகத்தான் நான் அளவு கடந்து பெண்களை இச்சிக்கிறேனா? தெரியவில்லை. கூட்டத்தில் ஆண்களைத் தொட்டு 'ஸ்..ஆ..' என்று சிலிர்த்துக் கொள்ளும் ஆண்களுக்கு நான் எவ்வளவோ தேவலை என்று என்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறேன்..வெளியில் சுற்றினால்தான் பெண் கிடைப்பாளா? கடையில் உட்கார்ந்தால் யாரையும் தேற்ற முடியாதா? சொல்லப் போனால் வெறிநாய் மாதிரி அலையாமல் நிதானமாகவே 'கோழி' பிடிக்கலாமே! கடையில் உட்காருவதில் இந்த விஷயத்தில் வசதியே இல்லையென்று சொல்ல முடியாதுதான்.

தர்கா லைன் பஜார் மாதிரியல்ல இந்தப் பஜார். அங்கே எவ்வளவு சத்தமாக  வேண்டுமானாலும் பாட்டுப் போடலாம். அவ்வப்போது 'சத்தமா வைய்யி லத்திஃபு.' என்று நேயர் விருப்பம் வேறு.! பெரும்பாலும் கவாலிப் பாடல்கள்தான் கேட்பார்கள். ஆனால் பாங்கு சொல்லும் நேரத்தில் மட்டும் பாட்டுச் சத்தம் கேட்டால் அடக்கச் சொல்லி எல்லாத் திசைகளிலிருந்தும் குரல்கள் சீறிப் பாயும். சத்தம் போட்டு விட்டு, 'செல்லா வீட்டுல இக்கிற குட்டி பெருசாயிட்டா போட்டு மாட்டனும்பா..'என்று மாசு மருவற்ற உள்ளத்தோடு பேசிக் கொண்டிருப்பார்களென்றாலும், அந்தச் சமயத்தில் பாட்டு மட்டும் போடக் கூடாது என்பதில் கண்டிப்புத்தான். பாங்குக்கு இடைஞ்சலோ இல்லையோ, செல்லா வீட்டுக் குட்டிக்கு இடைஞ்சல் வரக்கூடாதே!

இந்தப் பஜாரில் ஹிந்துக்களின் கடை கணிசமாக இருப்பதாலா, பாங்கு சரியாகக் கேட்காத தூரத்தாலா என்பது தெரியவில்லை..அந்தச் சமயத்தில் பாட்டுப் போடலாம். கண்டிப்பு கிடையாது. எப்போதாவது, பஜாரில் போகும் ஆட்கள் கையால் தர்காவைச் சுட்டிக்காட்டிப் பிறகு பாங்கு சொல்வது போல சைகை செய்து 'அடக்குங்க' என்று சத்தம் போடாமல் சொல்லிவிட்டுப் போகிறார்கள். 'ஹொத்துவா' நடக்கிற நேரத்திலும் இப்படித்தான். 

இந்தப் பஜாரிலுள்ள சங்கடம், பாட்டுகளைச் சத்தமாக வைக்கக் கூடாது. தர்கா லைன் போல அகலம் இல்லாமல் ஒடுக்கமாக இருப்பதால் 80 வாட் சக்தி உள்ள ஆம்ப்ளிஃபயரின் உதவியுடன் இரண்டு ஸ்டீரியோ பாக்ஸ்கள் அலறும்போது வியாபாரம் செய்ய முடியாதுதான். முதலில் கடலைக்கடை லிங்கம்தான் ஆட்சேபணை எழுப்பினான்.'ங்கும்மாலெ... அவனுக்கென்னா? கடலை மல்லாக்கொட்டையா குமிச்சி வச்சிக்கிறான்..பாத்தவன் வாங்கிட்டுப் போவான். நமக்கு? சத்தம் போட்டத்தானே வியாபாரம்..?' என்று ரிகார்டிங் செய்கிற பிலால் சத்தம் போட்டார் என்னிடம். லிங்கம் நேரிடையாக ஆட்சேபணை எழுப்பவில்லை. ஜக்கரியா பாயிடம் சொல்லி லத்திஃப் மாமாவிடம் சொல்லச் சொன்னான். 'கொஞ்சம் கொறச்சி வச்சிக்கப்பா..மத்தஹலுக்கு வியாபாரம் செய்ய முடியாம போவுதுல்லெ..' என்றார் மாமா. பாக்ஸை கடையினுள் வைத்தது மட்டுமல்லாமல் 80 வாட் சன்ஸூய் ஆம்ப்ளிஃபயர் இருந்த இடத்தில் 10 வாட் சக்தி உள்ள ஒரு மகா மட்டமான மோனோ ஆம்ப்ளிஃபயரை வைத்தார். ஒரு இரண்டு நாள் பூனை கத்துவது போல சத்தம் வெளி வந்தது. வியாபாரம் பாதித்தது. ஆனால் இந்தச் சத்தமும் தங்களின் வியாபாரத்தைப் பாதிப்பதாகக் கடைத்தெருப் பெரிய மனிதன்கள் ஒன்றுகூடித் தீர்மானித்து இந்த ஊர் சப்-இன்ஸ்பெக்டருக்கு பெட்டிஷன் கொடுக்கப்போவதாக மாமா கேள்விப் பட்டதும் கோபமடைந்தார். சன்ஸூய் மறுபடியும் வெளிவந்தது. 'கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கிறது'தான் வியாபாரம். எல்லோருடைய காதையும் செவிடாக்க வேண்டுமென்றோ மற்றவர்களின் வியாபாரத்தைக் கெடுப்பதோ 'ஸ்டீரியோ சீச'னின் நோக்கமல்ல. அப்படி சத்தம் வெளி வந்தால் அடக்கச் சொல்லி இலேசாகச் சைகை காண்பித்து, தங்களின் பிளாட்டின நேரத்தில் ஒரு நொடியை-ஒரே ஒரு நொடியை-இந்தப் பெரிய மனிதர்கள் செலவழித்தால் குறைந்து விடுமா? இளைஞர்களின் உற்சாகம் இந்தப் பெரியவர்களுக்குப் பிடிப்பதில்லை எப்போதும். மனதிற்குப் பிடிக்காமல் போனால் காரணம் கிடைக்கும்- குறை சொல்ல. அப்போது பக்கத்து கடை ஹலீம் பாயின் ஊதுபத்தி கடையில் ஒரு ஊதுபத்தி எரிவதே எனக்கு பேரிடியாய்த் தோணலாம். எவர்சில்வர் கடை சுலைமான் காக்காவின் பெயர் பொறிக்கும் மெஷின் இயங்கும்போது, ஜக்கரியா பாயின் அலுமினியப் பாத்திரக் கடையில் பாத்திரம் ஒன்றோடு ஒன்று உருளும்போது மலை சரிந்து மேலே விழுவது போல உணரலாம். லிங்கம் கடலை வறுப்பது கூட ஆயிரம் நயாகரா ஒன்றாகக் கொட்டுவதுபோல இருக்கலாம். 

மனதிற்குப் பிடிக்கிற மனிதர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நிசப்தம், சப்தத்தில் பிறக்கிறதென்று ஒரு தியரி உருவாக்கலாம். 

வால்யூம் லெவல் ஒரு குறிப்பிட்ட எண்ணிலேயே இருக்குமாறு 'டெக்'கில் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது சுலபமானதல்ல. பாகவதரை ரசிப்பவருக்கு டி.எம்.எஸ்ஸை மிகக் குறைந்த சத்தத்தில் வைத்தாலும் எரிச்சல் வரலாம். 

ஒரு பெரிய மனிதர். இதய நோயாளியாம். ஜக்கரியா பாய்தான். சப்தம் அவருக்கு மரணத்தை கொடுத்து விடுமாம். இந்த எழுபது வயதில் , கடைத்தெருவில்தான் இயற்கையன்னை நிசப்தமாக , நிச்சலனமாக அரசாட்சி செய்வதாக இவருக்குத் தோன்றியிருக்கிறது.

இந்தத் தொந்தரவெல்லாம் நீங்க வழியுண்டு. இரவு பத்து மணி வரை கடையைத் திறந்து வைத்திருப்பது. ஆனால் துரதிர்ஷ்டமாக மனிதர்கள் இந்த நேரத்தில் தூங்கி விடுகிறார்கள். பேய்கள் வியாபாரம் செய்யலாம். இந்த சினிமாப் பாட்டுகள் பேய்களுக்கு மிகவும் பிடிக்கக் கூடியவை.

என்ன செய்யலாம்?

கண்ணாடிக் கதவு போட்டு சத்தம் வெளியாகாமல் பண்ணலாம். வியாபாரம் நடக்காது; அவ்வளவுதான்.

விரோதம் என்று வளர்ந்தால் வேண்டுமென்றே ரிகார்டிங் சென்டரை மூடிவிட்டு அந்த இடத்தில் ஒரு கொத்துப் புறாட்டா கடையைப் போடலாம். சும்மாவேணும் தவ்வாவைக் காது கிழிவது போல ஓசைப்படுத்திக் கொண்டிருக்கலாம். புகையை மூச்சு முட்டுவது போல கிளப்பலாம் - கொத்துப் புறாட்டாவை வேறு வகையில் தயாரிப்பது கண்டுபிடிக்கப்படாத வரையில். ஆனால் விரோதம் வியாபாரத்திற்கு ஆகாது. ஆகவே நான் கடைத்தெருவோடு இணக்கமாக நடந்து கொண்டேன். லிங்கம் கடைக்கு வந்தால் சிரித்துப் பேசினேன். தாரிக் எரிச்சலடைவான். 'ஊரு வுட்டு ஊரு வந்திருக்கிற தம்பலப் பய... யாகூப் காக்கா பாட்டு போட்டாவே இவன்ற மூஞ்சி பண்டி மாதிரி போய்டுது...R.S.S __மவன், பயந்துகிட்டுத்தான் நேரடியா நம்மள்ட்டெ சொல்லாம ஜக்கரியா __மவன்ட்டெ சொல்லிவுட்டுட்டான். நேரா சொல்லிந்தா ஏறிடுவேன்.. நம்ம ஊர்ல இவன்ற பாச்சாவெ காமிச்சாண்டா நம்ம செட்டை வச்சி நாறடிச்சிடுவேன்..' என்று ஆத்திரமாய் பொருமுவான்.

லிங்கம் வசதி வாய்ந்தவன். வீட்டில் அருமையான 'நாகமுச்சி டெக்' வைத்திருப்பவன். நாகப்பட்டினத்தில் இரண்டு மூன்று ரிகார்டிங் சென்டர் இருந்தாலும் சீசன் கிளையில்தான் கொடுப்பான். மாதம் குறைந்தது பத்துமேக்ஸல் 90 கேஸ்ஸட். நூற்றைம்பது, இருநூறு ரூபாய் என்று மாதாமாதம் துண்டாக அவனிடமிருந்து வருகிறது. அதைக் கெடுத்துக் கொள்வது எனக்கு உசிதமாகப் படவில்லை.

பாட்டுப் போட்டால், அதுவும் இஸ்லாமியப் பாடல்கள் போட்டால் லிங்கம் முறைத்து முறைத்துப் பார்க்கிறான் என்று சொல்லி, R.S.Sஐத் திட்டிய பின், லிங்கத்தின் கடையை கொளுத்த வேண்டும் என்பான் தாரிக். 'ங்காத்தா..ங்காத்தா..' என்று மூச்சுக்கு நூறு முறை ஏசுவான். லிங்கம் முறைக்கவெல்லாம் இல்லை. அவன் பார்வையே அப்படித்தான். அடிக்கடி பல்லைக் கடித்துக் கொண்டு 'ஸ்..' என்று ஒரு சப்தம். ஒருவேளை அன்பாகப் பார்க்க வேண்டும் என்று அவன் நினைத்திருக்கலாம். அது முறைப்பதுபோல பட்டிருக்கலாம் தாரிக்கிற்கு. R.S.S என்றாலே அடி உதை என்று இந்த 17 வயதிலேயே வெறியோடு நினைக்கிற அவனுக்கு அப்படிப் படும்தான். லிங்கம் R.S.Sகாரன் என்று பரவலான பேச்சுதான். இதனாலேயே தெற்குத்தெரு ஜமா, அவன் கடையில் ஏதும் வாங்காமல் பக்கத்தில் இக்கனூண்டு கடை வைத்திருக்கிற ராஜாபிள்ளையிடம் வாங்குவார்கள்.

ஒருநாள் லிங்கம் , 'தம்பி..அரிசி குத்தும் அக்கா மகளே..'ண்டு அடிக்கடி போடுவீங்களே..என்னா படம் அது?.ஆங்..மண்வாசனை. அதெ கொஞ்சம் குத்த வுடுங்களேன்' என்று எதிர்க்கடையிலிருந்து குரல் கொடுத்தான். 
'போடாதீங்க நானா' என்று விரலால் இடுப்பில் குத்திக் கிசுகிசுத்தான் தாரிக். ஆனாலும் நான் அந்தப் பாட்டைப் போட்டேன்.

அந்தப் பாட்டில் 'நான் குத்தும்போது' என்று ஒரு இடம். சொல்லிவிட்டுச் சற்று மௌனம். பின்பு 'அரிசி குத்தும்போது வலிக்கவில்லையா?' என்று முடியும்.  'ஆஹா!' என்று , உயந்த குரலில் அந்தப் பாட்டின் உயர்ந்த கருத்துக் குறித்துப் புளகாங்கிதமடைந்து கும்மாளமிட்ட அவனைப் பார்க்கப் பார்க்க தாரிக்கிற்கு வெறி ஏறியது. நான் இருக்கும்போதாவது கட்டுப்படுத்திக் கொள்வான். ஆனால் நான் சாப்பிடப்போகும் நேரத்தில் 'டெக்'ஐ அலறவைத்து லிங்கத்திற்கு வெறியுண்டாக்குவான் என்று நினைத்ததால் அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடி வர வேண்டியிருந்தது.

கூட்டம் வரும் நேரத்தில், குறைந்த பட்சம் சத்தம் வெளியில் வருவது மாதிரியாவது பாட்டுப் போட்டால்தான் விற்பனையாகும் என்ற நிலையில், தெரிந்தவர்கள் வந்து பேச்சுக் கொடுத்துவிடுவது வேறு எரிச்சலான விஷயமாக இருந்தது. கஸ்டமர்கள் என்றால் எப்படியாவது இழுத்துப் பிடித்தால் வாங்கிக்கொண்டு போவார்கள். போஸ்ட் ஆபீஸில் கூடப் பேரம் பேசி ஸ்டாம்ப், கவர் எல்லாம் குறைந்த விலையில் வாங்கி வந்து விடுகிற சாமர்த்தியசாலிகளைச் சமாளிப்பது கஷ்டம். எரிச்சல் தரக் கூடிய விஷயம். இருந்தாலும் ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு வகை என்று நம்மைத் தேற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் Customer is always right. (B.B.A படித்திருக்கிறேனே..!) ஆனால் பிஸினஸ் செய்கிற நேரத்தில் சும்மா பேசுவதற்காகத் தெரிந்தவர்கள் வந்து கழுத்தறுப்பது வேதனை, நண்பன் ஷஹரியரின் மாமா சும்மா கடைத் தெருப்பக்கம் தனது 68வது வயதில் பிறந்த 2 வயது மகனுடன் போய் கொண்டிருந்தார். சிறுவன் என்னைப் பார்த்திருக்கிறான். 'தோ..மாமா..' என்று கை நீட்டிக் காண்பித்து தன் வாப்பாவை இழுத்துக் கொண்டு வந்து விட்டான். டிஸ்கோ லைட் அவனைக் கவர்ந்திருக்க வேண்டும். எட்டாம் இரவு வாணவேடிக்கை நடந்து முடிந்து ஜனங்கள் திரளாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். யாகூபையோ ஹனிஃபாவையோ அல்லது ஷேக் முஹம்மதையோ கத்த வைத்தால் (நாம் 'டெக்'கில் கேஸ்ஸட்டை போட்டாலே போதும். அவர்களே கத்த ஆரம்பித்து விடுவார்கள். 'ப்ளே' பட்டனைக் கூட நாம் போடத் தேவையில்லை!) கேஸ்ஸட்டுகள் விற்பனையாகும். கொடி ஏற்றிய இரவன்று இருபது முப்பது கேஸ்ஸட்டுகள் விற்றதுதான். அதற்குப் பிறகு ஏழாம் இரவு வரை வியாபாரம் ஒன்றும் சுகமில்லை. எல்லா வியாபாரிகளுக்கும்தான். எட்டிலிருந்துதான் கூட்டம் வழக்கமாகச் சேரும். எட்டாம் இரவு முக்கியமான நேரத்தில் இவர்!

ஏதோ பேச்சுக் கொடுத்தார். 'டெக்'ஐ ஆஃப் பண்ணுவதைத் தவிர வழியில்லை. வியாபார நேரத்தை உணர்ந்து கொண்டவராகத் தெரியவில்லை. அவரிடம் எடுத்துச் சொல்லவும் முடியவில்லை. தப்பாக எடுத்துக் கொண்டு விடுவாரோ என்று தயக்கமாக இருந்தது. (ஒருவேளை அவரிடமிருந்தும் ஏதும் ஆர்டர் கிடைக்கலாம் என்று நினைத்தேனோ என்னவோ!) அவராகக் கொஞ்ச நேரம் பேசி விட்டுப் போய் விடுவார் என்று நம்பிக்கை படர்ந்த நேரத்தில் பிலால் அதைக் குட்டிச் சுவராக்கினார். 'மாமா..கொடி ஊர்வலம் அன்னக்கி நீங்க ஷோக்கா பாடினீங்க' என்று. போச்சு! கேலிக்குத்தான் அப்படிச் சொன்னார். அவ்வளவுதான்; ஷஹரியரின் மாமனாருக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு போனது. ஆயிரத்தோராவது தடவையாகச் சொல்ல ஆரம்பித்தார். இருபத்தைந்து வருடமாகத் தான் இப்படி நாகையிலிருந்து வரும் கொடி ஊர்வலத்தில் ஒரு கப்பலில் அமர்ந்து பாடி வருவதை, வயிற்றுவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் காதர் ஒலி பாவாவிடம், வயிற்று வலி குணமாகினால் வருடா வருடம் கந்தூரியில் கப்பலில் அமர்ந்து பாடி வருவதாக நேர்ந்து கொண்டு, அதன்படியே வருவதை, வற்ற வற்றக் குறையாத தன் உணர்ச்சிகரமான குரலில் சொன்னார். வயிற்றுவலியின்போது தான் துடித்ததை அப்படியே நடித்துக் காட்டினார். இப்போது டிஸ்கோலைட் போட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். இடையில் இரண்டு மூன்று வருடம் பாடாமல் விட்டு விட்டதாகவும், காதர் ஒலி பாவா அவரது கனவில் தோன்றி பாட உத்தரவிட்டதாகவும் சொன்னார். இவருடைய மச்சான் யாசின் காக்கா இதற்காக இவரை நன்றாக வெடைப்பார். 'ஆமா..பெரீய்ய படே குலாம் அலிகான்..நீம்பரு பாடித்தான் ஆவனும்ண்டு பாதுஷா நாயஹம் ஒத்தக் கால்லெ நிண்டாஹலாக்கும்..' என்று. இவருக்கு வயிற்று வலி போயிற்று. ஆனால் எத்தனை பேருக்கு இதனால் தலைவலி..!

சாதாரண சமயமாக இருந்தால் குள்ள மச்சானை - ஷஹரியரின் மாமானாருடைய பட்டப் பெயர்தான் இது- பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவருடைய 'இங்கிலிபீஸ்' அப்படி. M.A  ஆங்கில இலக்கியம் படித்த தன் மருமகனுக்குச் சமதையாகப் பேச வேண்டாமா?

'ஹார்ட் அட்டாக்' வந்து மீண்ட உறவினர் ஒருவருக்குக் குள்ள மச்சானின் ஆலோசனை இது : 'கொழுப்பு சாமான்லாம் சேக்கக் கூடாது..அப்பத்தான் ஹார்ட் அட்டாக்கு 'பிக்-அப்' ஆகும்..'

'ரொம்ப நல்ல மனிதர்' என்று சொல்ல வேண்டும். குள்ள மச்சான் சொல்வார்: 'அவரா..ரொம்ப காமன்ஸான ஆளாச்சே..!'. 'கொஞ்சம் கண்டிப்பான ஆள்' என்று சொல்ல மாட்டார். 'தம்பி...அவரு ஒரு ஸ்கெட்ச்சான ஆளு' என்பார். அடிக்கடி கிரிப், லெவல், செட்-அப் என்று சம்பந்தமில்லாத இடத்தில் இங்லிபீஸ் பிரமாதமாக, பிரவாகமாக வந்து விழும். இவரது ஊரில் இவரை மாப்பிள்ளை என்றுதான் கூப்பிடுவார்கள். நாகையிலிருந்து வவ்வாலடி வந்து கல்யாணம் முடித்ததால் நாகை மாப்பிள்ளை என்பது மருவி 'மாப்பிள்ளை'யாயிற்று. ஒரு சமயம் இரவு ஒரு மணிக்குத் தன் நண்பரின் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டிய சமயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் பெண்டாட்டிக்கு நோக்காடு. உதவிக்கு இன்னொரு பெண் வேண்டும்.

'யாரது நடு ஜாமத்துலெ?' - நண்பரின் மனைவி தூக்கத்திலிருந்து எழுந்த எரிச்சலில் கேட்டது.

'நாந்தான்..மாப்புளெ வந்திக்கிறேன்!'

தன் மாப்பிள்ளையா? சபரிலிருக்கிற மனுஷன் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் திடுதிடுப்பென்று வந்து நிற்க வேண்டிய அவசியம்? அந்தப் பெண்மனி அலறியடித்துக் கொண்டு கதவைத் திறந்தால், குள்ள மச்சான் !

'அட,... கழிச்சல்ல போவான்..!' - ஒரே கலாட்டா.

குள்ள மச்சான் ஒரு மணி நேரத்திற்குள் சுருக்கமாகப் பேச்சை முடித்து விட்டுப் போனது விந்தைதான். நாசூக்காகவெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஊஹூம். அவர் இஷ்டப்படித்தான் வெளியில் போனார். கூட்டம் முக்கால் வாசி கலைந்த பின்பு என்னத்தைப் பண்ணிக் கிழிப்பது? குறைந்தது பத்துக் கேஸட்கள் விற்றிருக்காதா? 10X25=250. லாபம் நூற்றைம்பது ரூபாய்.

நல்ல வேளையாக மாமா அந்தச் சமயத்தில் இல்லை. ஆனால் மாமா இருக்கும் நேரத்தில்- மிக முக்கியமான வியாபார நேரத்தில்-ஹத்தம் அன்று- தெரிந்தவர்கள் என்கூடப் பேச வந்து விடுவது ஒரு துரதிர்ஷ்டம். என் நெருங்கிய நண்பனான சுந்தரின் நண்பர் பாண்டியன். கத்தாரிலிருந்து இவர் எப்போது வந்தார்...?! ஆள் முன்னைப்போல தொளதொளவென்றில்லாமல் மெலிந்து அழகாக இருந்தார். ஒவ்வொரு ஆளும் சௌதி போய் இரண்டு மூன்று ஆட்களுக்கு உள்ள உடம்பைச் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இவர் இப்படி மெலிந்து போய் வந்திருக்கிறாரே..

திடீரென்று என் பெயரை (இனிஷியலோடு) ஒரு தாளில் எழுதச் சொல்லிக் கையெழுத்தையும் போடச் சொன்னார்.

'தெரியும் பாண்டியன்.. நியூமராலஜியா? ரெண்டு வருஷத்துக்கு முன்னால அதுபடி மாத்தி வச்சேன். எனக்கு இப்பல்லாம் அதுல நம்பிக்கையில்லெ'

'அட, சும்மா எழுதுங்க சொல்றேன்'

'பெயரை எழுதினேன். H. Abedheen

'நீங்க சரியான நாலு. அதுவும் ஒங்க டேட் ஆஃப் பர்த் 13.03.1958. சுந்தர் சொல்லியிருக்கிறான். அப்ப கரெக்ட்தான். கூட்டுனா சூடபிளா நம்பர் ஒண்ணு வர்ர மாதிரி வச்சிக்கிறிங்க..கையெழுத்துப் போடுங்க..பார்ப்போம்'

போட்டேன். 'என்னா இது?' என்றார்.

'கையெழுத்து'

'இதா? ஒண்ணுமே புரியலையே..'

'அதனாலெ என்னா?'

'ஆ..இப்பத்தான் தப்பு பண்ணுறீங்க..கையெழுத்து புரியிற மாதிரி இருக்கனும். ஒங்க பெயர்ல வர்ர எழுத்துலாம் தெரியனும். அப்பத்தான் நம்பருக்கு 'பவர்' இருக்கும்.

'அப்ப..டைப் அடிச்சிடனும்'

'கேலியா? சரி, இப்ப என் கையெழுத்தெப் பாருங்க.' போட்டார். பார்த்தேன். 'ஒரு எழுத்தும் எனக்குப் புரியவில்லை' என்றேன்.

'நீங்க குதர்க்கம் பண்றீங்க'

'இல்லே பாண்டியன்..நெஜமாவே எனக்குப் புரியலே. தவிர, எல்லோருக்கும் ஒரே மாதிரி ஒண்ணு எப்படித் தோணும்? அப்ப 'பவர்'ங்கிறதை தீர்மானிக்கிறது யாரு? பெரிய நிலைமையில் இருக்கிறவங்கண்டு நீங்க சொல்ற ஆளுங்களோட கையெழுத்து அவ்வளவும், எல்லாருக்கும் புரிஞ்சிடுமா?'

தனது உறவினரான கல்லூரிப் பேராசிரியை ஒருவரின் பெயர், அவரது கையெழுத்து, ஒருசமயம் விஜயலட்சுமி என்ற அந்தப் பேராசிரியை தன் கையெழுத்தில் கடைசியாக வரும் 'i' என்ற எழுத்தைப் புரியாமல் எழுதி வந்ததால் - தன் ஒரே ஒரு எழுத்து தன் 'பவரை' இழப்பதுபோல எழுதி விட்டதால் - அவருக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள், தான் அந்தப் பேராசிரியையிடம் விளக்கமாக எடுத்துரைத்து நிலைமையை மாற்றியது எல்லாவற்றையும் பாண்டியன் எடுத்துச் சொன்னார்.

என் முகம் அவருக்குச் சலிப்பைத் தந்திருக்க வேண்டும். 'சரி..ஆபிதீன்.. பதிமூணுலெ வந்த நாலுக்கு லைஃப் முழுக்க ஒடம்பு, மனசு எல்லாத்துலெயும் சங்கடம் இந்துகிட்டுதான் இருக்கும்..ஒங்க பேர்லெ கொஞ்சம் 'ஆல்டர்' பண்ணனும். நான் நியூமராலஜிலெ இப்ப 'ரிஸர்ச்' பண்ணிக்கிட்டிருக்கேன். கண்ட கம்மனாட்டிலாம் இந்த ஃபீல்டை ச்சீப்பா ஆக்கிட்டான்... அதனாலெ இதுலெ நெறயப் பேருக்கு பிடிப்பு இல்லாம போச்சி..நான் கம்ப்ளீட்டா வேற சிஸ்டத்துலெ ரிஸர்ச் பண்றேன். உங்களைத் தவிர வேற யார்ட்டெயும் சொல்லக் கூட இல்லே இதை. இப்ப நான் ரொம்ப பிஸி. ஒரு மாசம் போவட்டும். ஒரு நல்ல நேரத்துலெ இதெப் பத்திப் பேசுறேன். அந்த நல்ல நேரத்துலெ ஒங்க பெயரை மாத்தனும்' என்றார்.

நல்ல நேரமா? அது வருமோ இல்லையோ இப்போது கெட்ட நேரம்தான் என்று தோன்றியது. மாமாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சரியான கூட்ட நேரத்தில் இவன் வந்து கழுத்தறுக்கிறானே என்று முகம் சொல்லியது. எனக்குப் பாண்டியனிடம் சொல்லச் சங்கடமாக இருந்தது. பாண்டியன் இன்னும் சற்று நேரம் பேசினார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இங்கே இருப்பதும் அரபுநாட்டில் சம்பாதிப்பதும் ஒன்றுதான் என்றார். ஒன்றுதானா என்று சந்தேகம் வந்தது.

ஒரு பணக்காரரரின் பிள்ளையாக இருந்தும் எந்தக் காரணத்தாலோ வீட்டால் ஒதுக்கப்பட்டு, மூன்று நான்கு வருடங்கள் ஒரு ஜட்டி வாங்கக் கூட காசில்லாமல் , நண்பர்களைப் பார்த்தால் எங்கே டீ வாங்கித் தரக் கேட்டு விடுவார்களோ என்று பயந்து பயந்து ஒதுங்கிய பாண்டியனுக்கு ஊர் வந்து ஒரு வாரமாகியும் நண்பன் சுந்தருக்கு ஒரு லெட்டர் கூட எழுத முடியாத பிஸி. அலட்சியமாகத் தோளில் தொங்கும் 'நிக்கான்' கேமரா, பாக்கெட்டில் Dunhill International, கையில் கோல்டு-ரோலக்ஸ்.. எல்லாம் ஒன்றுதானா?

'எந்தத் தொழில் தனியாக ஆரம்பிக்கவும் பணமில்லை என்று புலம்புகிறீர்கள்; ரிகார்டிங் சென்டர் மட்டும் திறக்கப் போகிறேன் என்கிறீர்கள். எப்படி?' என்று கேட்டார். துபாயிலிருக்கும் நண்பன் ஷரீஃப் உதவுவதாகச் சொல்லியிருக்கிறான் என்றேன். இதிலும் நம்பிக்கையில்லை என்றேன். பாண்டியன் நிறைய 'அட்வைஸ்' பண்ணினார். கத்தாரில் கவர்மெண்ட் தோட்டி என்றால் சும்மாவா? அதுவும் முன்று வருடச் சம்பாத்தியத்திற்குப் பின் வந்திருக்கிறார்.

ஆனால் அவர் நிரந்தரமாகவே தோட்டியாக இருந்து விடப் போகிறாரா என்ன?

முன்னூறு நானூறு ரூபாய் சம்பளமாகக் கொடுக்கிறேன் என்று லத்தீஃப் மாமா சொன்னாலும் நிச்சயமாகக் கொடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அவருக்கிருக்கும் பிரச்னைகள் அப்படி. இதையே வேறு ஆள் செய்தால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் உறவு என்பதை வைத்துக் கொண்டு ஏமாற்றினால் நான் பொறுத்துக் கொண்டிருப்பேனா? மாட்டேன் என்றுதான் பட்டது. அந்த நிலைக்கு லத்தீஃப் மாமா என்னை ஆளாக்குவாரோ இல்லையோ இப்போது ஒரு சிகரெட்டிற்காக ஒரு ரூபாய் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்வதிலேயே எனக்குக் குஷி வந்து விடுகிறது. பாண்டியனுக்கு ஏன் தெம்பு வராது என்று நினைத்தேன். சரிதான்.

பாண்டியன் கொஞ்ச நேரத்தில் போனார்.

'வியாபார நேரத்துலெ ஏம்பா இந்தச் சள்ளையெல்லாம் விலை குடுத்து வாங்குறே' என்றார் மாமா எரிச்சலுடன்.

'நான் கூப்புடலை'

'அவனுவனுக்கே புத்தி இக்கினும்..சரி, இன்னமே வந்தா மூஞ்சிலே அடிச்சாப்புல சொல்லி அனுப்பிடு'

சரி என்றேன். பாண்டியன் பேசிக் கொண்டிருக்கும்போதே சொன்னார்: மூன்று வருஷம் கழித்து வந்து பார்த்தால் ஊரில் நிறைய தெரிந்த மனிதர்கள் செத்துப் போயிருக்கிறார்கள்; அதிர்ச்சியாக இருந்தது என்று. உயிரோடு இருக்கும் தெரிந்த ஆளைப் பார்த்த சந்தோசத்தில் கடையில் நுழைந்து பேசி விட்டுப் போன பாண்டியன் மேல் எனக்கு அவ்வளவாகக் கோபம் ஏற்படவில்லை. டிஸ்கோ லைட்டை ஆஃப் செய்து விட்டு டி.எம்.யாகூபை கொக்கியாகப் போட்டு ஜனங்களை இழுக்காமல் அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் 'ஸிக்ஸ்டியா இந்தா பத்து ரூவா ரிகார்டிங் சார்ஜ். நைன்டியா இந்தா பதினஞ்சி. ஒரு படத்தோட முழுப் பாட்டையும் போட்டாத்தான் இப்படி. 'செலக்ட்' பண்ணுனீங்கண்டா அஞ்சு ரூவா கூட ஆவும். ஆனா இப்ப செலக்டட் சாங்ஸ் எடுக்க முடியாது. ஸாரி, பாய். ஹந்திரி முடிஞ்சி நிதானமா வாங்க. All songsஆ ? இந்தோ ஒரு மணி நேரத்துலெ தந்துடுறேன்..' என்று பேசுவது ஞாபகம் வந்தது. ரிகார்டிங் ஆர்டர்கள் இதுவரை ஐந்து வந்திருக்கலாம். அதற்கு எவ்வளவு ஆகும்? பதிவு செய்த கேஸட்கள் ஒன்று 25ரு வீதம் இதுவரை பத்துப் பதினைந்து விற்றிருக்கலாம். அது எவ்வளவு ஆகும் என்று மனம் கணக்குப் போட்டபோது பாண்டியன் உயிரோடு இருக்கும் ஆளைத்தான் பார்த்துச் சென்றார என்று சந்தேகம் வந்தது எனக்கு.

ஒருவழியாகக் கந்தூரி முடிந்தது. அடுத்த நாள் காலையிலேயே தர்காவில் எல்லா அலங்கார மின் விளக்குகளும் கழற்றப்பட்டுவிட்டன. பீரோட்டம்..அப்புறம் ஆளோட்டம் என்று சொல்வார்கள். ஊரும் ஓய்ந்து போனது.

பதினான்கு நாளும் சரியான தூக்கமில்லாததாலும் ஒரேயடியாக உட்கார்ந்திருந்ததாலும் எனக்கு உடம்பு கொதித்தது. தலை வெள்ளிக் கிழமை வரை கடையைத் திறந்து வைக்கச் சொன்னார் மாமா. ஊரிலுள்ள எல்லாக் கடைகளும் தலை வெள்ளிக்கிழமை முடிந்துதான் லீவு விடுவார்கள் என்றார். இரண்டு மூன்று நாள் இழுத்தடித்தேன். ஒருவழியாகத் தலை வெள்ளிக்கிழமையும் முடிந்தது. அன்று இரவே கந்தூரி வியாபாரத்திற்கான கணக்குகளை சரிபார்த்து மாமாவிடம் ஒப்படைத்தேன். எந்த வருடமும் இல்லாத வியாபாரம்தான். மாமா முகத்திலிருந்த சிரிப்பு நன்றாகத்தான் இருந்தது. அடுத்த வருடமும் இப்படியே இந்த முகம் சிரிக்குமா என்று நினைத்தேன். ஊரிலுள்ள போட்டி ரிகார்டிங் சென்டர் ஆன 'Technic'இன் ஆட்கள் தினமும் இந்தக் கடையைக் கவனித்தவாறே சென்றார்கள்.  'டெக்னிக்' கமாலுதீன் இந்தப் பஜாரில் முன்யோசனையில்லாமல் கடை திறக்காமலிருந்தது பற்றி வயிறெரிந்து கொண்டிருக்கிறான். அடுத்த வருடம் எப்படியும் இந்தப் பஜாரில் ஒரு கடையைப் பிடிப்பான். ஆனால் மறு கந்தூரி வர இன்னும் ஒரு வருடமல்லாவா இருக்கிறது? இதில் எவ்வளவோ நடந்து விடலாம்.

சனி, ஞாயிறு இரண்டு நாள் லீவு விடச் சொன்னார் மாமா. ஆச்சரியம்தான். சனிக்கிழமை முழுதும் தூங்கினேன். அன்று இரவு பத்து மணிக்கு பாட்டியா எழுப்பி விட்டார்கள். சாப்பிட்டு விட்டுப் படுத்தவன் ஞாயிறு காலை எழுந்திருக்கப் பதினோரு மணியாயிற்று. குளித்து, சாப்பிட்டு விட்டுக் கடைக்குச் சென்றேன்.

இந்தக் கடை திறந்ததிலிருந்து யாகூபோ, ஹனிஃபாவோ, ஷேக் முஹம்மதோ, பாலசுப்ரமண்யமோ, அல்லது வேறு எந்தக் கந்தர்வக் குரலோன்களோ சாக்கடைத்தனமான இசையைக் கத்தும்போது ,மலத்தைக் குதப்பிக் குதப்பித் தின்பது போல ஒரு உணர்வு உடலில் ஏற்படும்போது , 'கரெண்ட் கட்' ஏற்பட்டால் சந்தோசம் கொள்ளலாம். ஆனால் இங்கே முடியாது. மாமா சக்தி வாய்ந்த 'இன்வெர்டர்' வைத்திருந்தார். அது பத்து டியூப் லைட்கள், மூன்று ஃபேன்கள், இரண்டு மூன்று மூன்று 'டெக்'குகளைப் பாடவைக்கும் சக்தி வாய்ந்தது. அதில் 'பின்'னைச் சொருகி மறுபடியும் ஜனங்களைக் கவர வேண்டியிருந்தது.

எல்லாப் பாவத்தையும் தொலைத்துத் தலை முழுகுகிற மாதிரி ஒரு பீம்ஷென் ஜோஷியையோ ஜி.என்.பி.யையோ கேட்கும்போது ஏற்படுகிற பரவசத்தைத் தருகிற தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.கஃபூரை இன்று ஒரு இரண்டு மணி நேரமாவது ஹெட்போனில் கேட்க வேண்டும் என்று ஆவலாகப் போனேன். வருடத்திற்கு ஒருநாள் கந்தூரியின் ஏழாம் இரவன்று பெரிய எஜமான் வாசலில் பக்கவாத்தியங்களோடு பாடுவார். 'நீண்ட பெருமூச்சுகளை எழுப்பும்' உயர்ந்த சங்கீதம் அது. இந்த வருடம் நான் போய்க் கேட்க இயலவில்லை. போன வருடம் அவர் பாடியபோது நான் பதிவு செய்த கேஸட்கள் ரிகார்டிங் ரூமில் இருந்தன. அதைப் போட்டுக் கேட்க வேண்டும் என்ற ஆவலோடு சென்றேன்.

அந்த கேஸட்டுகளை ரிகார்டிங் ரூமிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து கடையிலிருந்த டெக்கில் போட்டுவிட்டு ஹெட்போனைக் காதில் வைத்தேன். கன்றாவியாக இருந்தது. அவரது குரலும் பாடும் விதமும் எனக்கு அளவு கடந்த சிரிப்பை ஏற்படுத்தியது. மூன்று TDK MA-90. ஒரு கேஸட்டின் விலை 50 ரூபாய். ரிகார்டிங் சார்ஜோடு 65 ரூபாய் 70 ரூபாயாகும். மூன்று கேஸட்களுக்கு 70x3=210ரூ. டி.எம்.யாகூபைப் போட்டால் ,பக்கா கேஸட்டில்தான் வேண்டும் என்று கேட்டு வரும் பக்கா கஸ்டமர்களுக்கு  250 ரூபாய்க்கு விற்கலாம்.

'பிலால்..இதெ அப்படியே அழிச்சிட்டு மூணுலெயும் யாகூப் காக்கா பாட்டெ போடும்..ரெண்டுலெ முஸ்லீம் பாட்டு..இன்னொன்னுலெ கட்சிப் பாட்டு. நல்லா வெலைக்குப் போவும்' என்று பிலாலிடம் சொல்லி அந்த கேஸட்டுகளைக் கொடுத்துவிட்டு வீட்டிற்குத் தூங்கப் போனேன்.

(முற்றும்)

அருஞ்சொற்பொருள் :

கந்தூரி - அவுலியாக்களின் நினைவுதினத்தில் நடத்தப்படும் விழா  (அவுலியா - இறைநேசர்)
கிராஅத் - திருக் குர்ஆன் வசனங்களை இராகத்துடன் ஓதுதல்
தர்கா - அவுலியா அடக்கம் செய்யப்பட்ட இடம்
ஜியாரத் - அவுலியாவின் சமாதியைத் தரிசித்தல்
பிஸாது - புறம் பேசுதல்
சீராணி - பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
பீர் - குரு  (கதையில் வரும் பீர் , 'பெரிய எஜமான்'-ன் பிரதான சீடரான முயினுதீனின் ஞான வம்சா வழியினரின் தலைவர்)
ஃபாத்திஹா - இறந்தவர்களுக்காகவும், அவுலியாவை முன்வைத்தும் இறைவனை இறைஞ்சுதல்
ஹத்தம் - கந்தூரியின் முக்கிய நாளான , அவுலியாவின் ரவுளா ஷரீஃபுக்கு (சமாதி) சந்தனம் பூசும் நிகழ்ச்சி
தப்ஸ் - வட்டமான கொட்டு
ஜர்தா சோறு - விசேஷங்களின் போது செய்யப்படும் இனிப்பான சோறு
பதுவுஸூ - பொறுமை
பாங்கு - தொழுகைக்கான அழைப்பொலி
ஹொத்துவா -  குத்பா (கூட்டுத் தொழுகை)
சபர் - பிரயாணம்
சள்ளை - தொந்தரவு
காதர் ஒலி, பாதுஷா நாயஹம் , பெரிய எஜமான் -  'இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் புரவலர் நாதர்' என்று போற்றப்படுபவரும் இஸ்லாமியர்களை விட அதிகமாக இந்துப் பெருமக்களை இன்றும் ஈர்ப்பவருமான இறைநேசர் ஷாஹூல் ஹமீது பாதுஷா (1504 - 1570 A.D.)

Monday, February 3, 2014

ஒரு அகதி உருவாகும் நேரம் - பொ. கருணாகரமூர்த்தி ('கணையாழி' குறுநாவல் - 1994)


"அண்ணர், மெத்தக் கவனமாய்க் கேளுங்கோ, இந்தக் குரூப்பில நீங்கள்தான் எல்லாரிலும் வயதில பெரியவராயிருக்கிறியள். மற்றவங்களையும் விடுப்பு விண்ணாணம் பார்க்க விடாம கவனமாய்க் கூட்டிக்கொண்டு போய்ச் சேர்க்கிறது உங்களுடைய பொறுப்பு"

"அதெல்லாம் நான் வெல்லுவன், நீங்கள் குழந்தைக்குச் சொல்லுகிற மாதிரி நெடுகச் சொல்ல வேண்டாம்." மிக மெலிதான சூடு, சட்டநாதனின் வார்த்தைகளில் கலந்து வெளிப்பட்டது. அதை நாம் உணராதிருக்க, 'எல்லாம் அம்மாளாச்சி துணை செய்வாள்' என்று கவரிங் செய்தார்.

சிங்கப்பூர் ஏர்போர்ட்டின் 'டிபாச்சர் ஹோலி'ல் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் கவுண்டரில் 'தலைகள்' (போட்டோ) மாற்றிய பிரிட்டிஷ் விசாவுள்ள பாஸ்போர்ட்டுகளுடனும், ரிக்கெட்களுடனும் அவர்களைப் 'போர்டிங்கார்ட்' எடுக்க விட்டு விட்டு நாங்கள் தூரத்தில் நின்று அவதானித்தோம்.

எம்மவர்களின் தலைமாற்றங்களும், தகிடுதத்தங்களும் அவ்வளவாக அவர்களுக்குப் புரியாத நேரம். மனதில் துளியும் சந்தேகமின்றி வார்த்தைக்கு இரண்டு 'சேர்' போட்டு போர்டிங் கார்டுகளைக் கையில் கொடுத்து, சந்தோஷமான பயணத்திற்கும் வாழ்த்துவார்கள். விமானம் புறப்பட இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. அவர்கள் நால்வரையும் 'மெக்.டொனால்ட்ஸ்' ரெஸ்ரோறண்டுக்குக் கூட்டிப் போய் மில்க்ஷேக்கும், கொக்காக்கோலாவும் வாங்கிக்கொடுத்து, நூற்றி எட்டாவது தடவையாக ஏர்போர்டுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், விமானம் ஃப்ராங்ஃபேர்ட்டில் ட்ரான்ஸிட்டில் நிற்கும் போது எப்படி இறங்கி, எந்த கேட்டினால் வெளியேற வேண்டும் என்பது பற்றி விளக்கம் கொடுத்தேன்.

"எமிக்ரேஷன் கவுண்டரில் எக்ஸிட் அடித்து உள்ளே நுழைந்ததும், அங்கேயும் பெரிய ஹோல் இருக்கும். உடனே இடது பக்கம் திரும்பி நடக்கிறீர்கள். அங்கிருக்கும் 'டியூட்டி ஃப்ரீ ஷாப்' எதிரில் உள்ள, ஒடுக்கமான ஹோல் போன்ற கொறிடார், நேரே உங்களைப் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் விமானப் பயணிகளை, விமானம் ஏற்றும் டர்மினல் ஹோல்களுக்கும் இட்டுச் செல்லும். எதற்கும் முதலில் பெரிய ஹோலில் உள்ள அறிவித்தல் பலகையிலோ அல்லது ஆங்காங்குள்ள டி.வி மொனிடர் போன்ற டேர்மினல்களிலோ BA-17 நம்பர் பிளைட்டுக்குப் பயணிகள் செல்ல வேண்டிய ஹோலின் இலக்கத்தைப் பார்த்து உறுதி செய்து கொண்டு, முதற் சொன்ன கொறிடோர் வழியே போகிறீர்கள். அந்த ஹோலினுள் நுழையுமும் வாசலில் அதிகாரிகள் உங்களையும் உங்கள் பெட்டிகளையும் இன்னுமொருதடவை 'ஸ்கானிங்' பரிசோதனைக்கு உட்படுத்தலாம். அநேகமான ஹாலின் முன்பகுதி 'ட்ரான்ஸிட்' பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். நீங்கள் பின்னால் போய் உட்காருகிறீர்கள். விமானம் புறப்பட ஏதாவது தாமதமானால் அறிவிப்பார்கள். அல்லது விமானம் புறப்பட அரை மணி நேரம் முன்னதாக உங்களை விமானத்தினுள் போய் அமர அனுமதிப்பார்கள். 'போடிங் கார்டில்' உள்ள சீட் இலக்கத்தைப் பார்த்து உட்கார்ந்து கொள்ள வேண்டியது.. அவ்வளவுதான்."

எல்லோரும் புரிந்த மாதிரி தலையாட்டினார்கள். மாலை ஐந்து மணிக்கே 'குட் பை' சொல்லி அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு நாம் வெளியில் கோலாலம்பூர் செல்லவிருந்த ஒரு பயணிக் கும்பலுடன் கலந்து காத்திருந்தோம்.

என் தொழில் பார்ட்னரும் நண்பனுமான ராதாவும் நானும் சும்மா விவாதத்திற்கு, பகுத்தறிவு வாதங்கள் பேசினாலும் இது போன்ற 'டென்சனான' தருணங்களிலும், இக்கட்டான வேளைகளிலும் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொள்வோம்.

அன்றும் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு கன்னத்திலும் போட்டுக் கொண்டோம்.

விமானம் புறப்பட கால்மணி நேரமிருக்க, இவர்கள் பெயர்களை ஒலிபெருக்கியில் கூப்பிட்டு சீக்கிரம் விமானத்திற்கு வரும்படி அழைத்தார்கள். எமக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் கூப்பிட்டார்கள்.

"மிஸ்டர் வேசிகாரநாடன்... (வசீகரநாதன்)
மிஸ்டர் அடவன்... (ஆதவன்)
மிஸ்டர் வாலவன்... (வளவன்)
மிஸ்டர் அமூடன்.. (அமுதன்)

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் ரிகுயஸ்ட் தீஸ் பசெஞ்ஜேர்ஸ் ரூ பி ஒன் போட் ஓவர் டிரான்ஸிட் டேர்மினல் சி-32 ஹோல் இம்மீடியட்லி."

சனம் எங்கே போய்ச் 'சிக்கு'ப் பட்டுதோ?

ஒரே குழப்பமாக இருந்தது. என்ன நடந்தது என்று யாரைக் கேட்பது? இவர்கள் உரிய நேரத்தினுள் விமானத்திற்குள் போகாவிட்டால் இருபதினாயிரம் டொலர் ஸ்வாகா! தலை மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போட்களுக்குக் கொடுத்த விலையே பதினாயிரம் டொலர்.


ஒரு 'டிரிப்' அடிபட்டுப் போச்சென்றால், எவ்வளவு நஷ்டம்! ஏஜென்ட் வேலை பார்ப்பது ஒருவகை சூதாட்டம்தான்.

'பயணிக்கு என்ன வந்தது...? எப்ப அனுப்புகிறீர்கள் மறுதர'மென்று வந்து முற்றத்தைப் பள்ளமாக்க தொடங்கிவிடுவார்கள். ஏர்போட்டுள் நுழைந்து, விமானத்தில் ஏறி உட்காருவது வரையில் எத்தனை தெளிவாக, எத்தனை தடவை தொண்டை நீர் வற்ற எடுத்துச் சொல்லியிருந்தோம்? ராதாவுக்கு அவன் பரந்த தேகம் முழுவதும் வியர்த்தது. சரியாக ஐந்து பன்னிரண்டுக்கு மூன்றாம் முறையும் கூப்பிட்டார்கள். 'கேஸ்கள்' விமானத்திற்குப் போய்ச் சேரவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

"அதிகாரிகள் யாரிடமாவது சிக்கியிருந்தால் இந்த 'ஐயா முத்துக்கள்' எம்மையும் மாட்டி விட்டு விடும்.. வா.. மெல்ல மாறுவம்" என்றான் ராதா. டாக்ஸியில் ஏறிக்கொண்டு எமது ஹோட்டலுக்கு அண்மித்தாக, 'சிராங்கூன் ரோடி'ல் சைனா ரெஸ்ரோறன்ட் ஒன்றில் இறங்கிக் கொண்டோம். சுமாரான 'கிக்' ஏறும் வகையில் பியர் குடித்துக் கொண்டு இருக்கையில், ராதா, இருபதினாயிரம் டொலர்கள் சம்பாதிக்க இத்தாலி சர்க்கஸ் கொம்பனியில் எத்தனை கோடி தரம் சம்மட்டியால் அடிக்க வேண்டுமென்று வருந்தினான். ராதாவின் கவலையைப் பார்க்க ஏற்கெனவே பொருள் இழப்புகளைச் சந்தித்துப் பழகிப்போன நான் கவலைப்பட்டது 'போதாது' போலிருந்தது.
மேலும் பியரும், விஸ்கியும் ஓடர் பண்ணினோம். 'சுப்பா' ஏறவும், தோல்வியே திரும்பத் திரும்ப நுளம்பைப் போல இரைந்து கொண்டு வந்து மனதில் துன்பம் செய்தது. போதை துன்பத்தை விரட்டும் என்பது பொய்!

பதினொரு மணிக்கு மேல் ஹோட்டலுக்கு நடந்தே போனோம். அவர்களது அறையில் நால்வரும் இழவு கொடுத்த மாதிரித் தலைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றார்கள்.

"என்னப்பா நடந்தது? புத்தகத்தை (பாஸ்போட்டை) மீண்டும் செக் பண்ணினார்களா?"
இளைஞர்களில் சற்று விவரமானவன் சொன்னான்.
"ஒருத்தரும் செக் பண்ணவேயில்லை.. அம்புக் குறிகள் காட்டியபடி சரியான பசேஜுகள் வழியாகத்தான் போனோம்.."
"போய்...?"
சட்டநாதனைக் காட்டிச் சொன்னான்,
"இவர்தான் 'ட்ரான்ஸ்ஃபர்' அறையினுள் போயிருப்போம்.. இனி வந்து கூட்டிக்கொண்டு போவாங்கள்" என்றார்.
"நீங்கள் போயிருக்க வேண்டியது 'ட்ரான்ஸிட்' அறைப்பக்கம். 'ட்ரான்ஸ்ஃபர்' என்பது வேறு ஏதாவது விமானத்தில் சிங்கப்பூர் வந்த தொடர்ந்து உங்கள் விமானத்தில் பயணிப்பவர்கள் தங்கும் அறை……… அதனுள்ளும் யாராவது பயணிகள் இருந்தார்களா?"

"ஒருத்தருமதுக்கயில்லை, சும்மா வெளிச்சுப்போய்க்கிடந்துது."

"ஐந்து நாற்பத்தைந்து வரையில.. பிளேன் புறப்பட்டுப் போகும் வரையில்.. நாலு பேரும் 'மழுவன்கள்' மாதிரி உட்கார்ந்திருக்கிறியள்.. மூன்று தரம் உங்களுடைய பேருகளைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டாங்களே.. காதென்ன எல்லோருக்கும் ஒத்தபடி அடைச்சுப் போயிருந்ததோ.."

"அவர்கள் கூப்பிட்டதொன்றுமே விளங்கேயில்ல.. லாஸ்ட் மினிட்லதான் இவருடைய பேச்சைக் கேட்டு ப்ளேனை விட்டு விடுவோமோ என்று பயம் வந்து, வெளியில வந்த அந்தப் பக்கமாய் வந்த ஒரு ஓபிசரைக் கேட்டோம். அவர், 'இட் ஈஸ் ரூ லேட்.. ப்ளேன் ரன் வேய்க்கு மூவ் பண்ணிட்டது" என்றார். பிறகு எங்களுடைய புத்தகங்கள் 'போடிங் கார்டுகள்' எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தார். பார்த்துவிட்டு, 'நான்கு வருடத்துக்கு மேல் இங்கிலாந்தில் இருக்கிறியள். ஏன் 'இங்கிலிஷ்' பேசச் சிக்குப் படிறியள்" என்று கேட்டார். எங்களுக்குப் பயத்தில் நெஞ்சுத் தண்ணி வத்திப் போச்சு. பிறகு எல்லாப் படங்களையும் மாறிமாறிப் பார்த்தார். எல்லோரையும் பின்னால் வரச் சொல்லி லிப்டில் 'அறைவல் ஹோலு'க்குக் கூட்டிக்கொண்டு போய் பாஸ்போட்களைத் திரும்பிக் கையில் தந்துவிட்டுச் சொன்னார், "வேறு யாராவது அதிகாரி பிடித்து, உங்களைப் பொலீசில் குடுத்தானெண்டால் மூன்று வருஷங்கள் 'உள்ள' குந்த வேண்டி வரும்.. இங்க ஒரு நிமிஷமும் நில்லாமல் ஓடித் தப்புங்கோ" என்று வாசலைக் காட்டிவிட்டார். டாக்ஸி பிடித்துப் பறந்து வந்திட்டம்."
"எங்களுடைய பிரச்சினைகள் தெரிந்த ஒரு அதிகாரியிடம் மாட்டினபடியால் உங்களை 'ஓடித்தப்புங்கோ' என்று விட்டு விட்டான்கள்.. யாரோ ஒரு நல்ல ஜீவன்.."
"ஆள் எப்படியிருப்பான் பார்வைக்கு.."
"சீனாக்காரன்.. அவ்வளவு இறுக்கமான முகமில்லை."
"அதுதான் பார்த்தன்.. யாராவது ஒரு தமிழனிட்ட மாட்டியிருந்தால் நேரே பொலிஸில் ஒப்படைத்து, தனது உத்தியோகப் பெருமையைக் காட்டியிருப்பான்!"
**
ஒரு அகதி உருவாகும் நேரம் தொடர்ச்சி2

ராதா சட்டநாதனுக்குப் பக்கத்தில்வந்து, அவருடைய முகத்தை உற்றுப்பார்த்துவிட்டுச் சொன்னான்
நீர் பேசாமல்அம்பாள் கஃபேயில் நின்று அடுப்பையே பார்த்திருக்கலாம் காணும்…… இங்கவந்து இன்னும் மூன்றுபேர் சுளுவாய்ஃப்ராங்பேர்ட்போய் இறங்கிற சான்ஸையும் கெடுத்திட்டு நிற்கிறீரே………?”
சட்டநாதனுக்கு விழுந்த அர்ச்சனையைப் பார்த்ததும் இதுவரை மற்ற இருவரும் மெல்ல பாத்ரூம் பக்கமாக நழுவப் பார்த்தனர்.
ஏய் இங்கே வாங்கோ ரெண்டுபேரும்………” ராதா கூப்பிட்டான்.
குழிமுயல்கள்மாதிரி முழிச்சுக்கொண்டு வந்தார்கள்.
என்ன. என்ன துரைமாரைட்ரான்ஸ்ஃபர் ரூமிலிருந்து பிளேனுக்குள்ள கூட்டிக்கொண்டுபோய் இருத்துவாங்களென்று இருந்தனீங்களோ…….. ஏனென்றால் நீங்களெல்லோரும் என்னடிப்ளோமட் பாஸ்போர்ட்டுக்கள்தானே வைத்திருக்கிறியள்.வி..பிக்களென்று வந்து நிலபாவாடை விரித்து உங்களைக் கூட்டிக்கொண்டுபோக……… இந்தாளுக்குத்தான் மூளையில்லை என்றால் உங்களுக்கெங்கை போச்சு…… ஒரு வயதுக்குத்தகுந்த விவேகம் வேண்டாம்………………?”
கட்டுநாயகா விமானநிலையம்போலப் பயணிகளை பேருந்துமூலம், இங்கெல்லாம் விமானம் தரித்துநிற்குமிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போக மாட்டார்கள். பயணிகள்டர்மினல்அறையிலிருந்தெ நேரடியாகடெலெஸ்கோபிக் பஸேஜினூடாக விமானத்தில் ஏறிவிடலாம் என்பதையும் அவர்களுக்குச் சொல்லியிருக்கலாமென்று பட்டது.
சரி விடடா……ஃபாஸ்ட் இஸ் ஃபாஸ்ட்…….” என்றேன்.
அவன் ஆற்றாமையில் மேலும் திட்டினான்.
இவ்வளவு செலவுசெய்து றிஸ்க் எடுத்துக்கொண்டு பிளேன்ல ஏறுறதுக்கு வாசல்படிவரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்கிறம்……… நீங்கள் வீம்புக்குப் பண்ணின மாதிரி எல்லாவற்றையும் கெடுத்துப்போட்டு ஒன்றுமே நடவாத மாதிரி வந்து நிக்கிறியள், ஏஜென்ட் என்றாப்போல எல்லோரும் என்ன சுவிஸ் பாங்கில கணக்கு வைச்சிருப்பாங்கள் என்று நினைக்கிறியளோ…….? ரெண்டு லட்சம் புரட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பியள்…….அப்பிடித்தான் நாங்களும்……நாலு ட்றிப்ஸ் அடிபட்டுப்போச்சென்றால் றோட்டில துண்டைப் போட்டுக்குந்தவேண்டியதுதான்……… ஒரு பயல் பைசா காட்டமாட்டான். நீங்கள் வேறுயாரும் ஏஜென்டிட்டை கொளுவுப்பட்டிருந்தால் அடுத்த கொழும்பு ஃப்ளைட்டில ஏற்றிவிட்டிட்டு இதுக்குமேல ஒன்றுஞ்செய்யேலாவென்றுடட்டாகாட்டிவிட்டிருப்பாங்கள். உங்கள் தலைகளின்ஒளிவட்டங்களைப் பார்த்த அன்றே இது எம்மால ஆகாத கேஸென்று திரும்ப்பிக்கொழும்புக்கே அனுப்பியிருந்தோமென்றால் நஷ்டம் ஏதோ கொழும்புக்கான டிக்கெட் செலவோட போயிருக்கும். ஏதோ எங்கட தலைவிதியாக்கும்,….அட சிங்கப்பூர்க்காரன் ஏர்ப்போட்டுக்குள்ள விட்டாப்போல, நேராய்ப்போல பிளேனுக்க குந்தத்தெரியாமல் இருக்கிற பூச்சிகள்.பட்டிக்காட்டான்கள், இந்த 1989 இல நீங்களாய்த்தான் இருக்கும்…… ஆபிரிக்காக்காரன்கள் எப்போவோ திருந்திவிட்டாங்கள்……இராப்பகலாய் வீடியோவில நதியாவையும் ரேவதியையும் பார்த்துக்கொண்டிருந்த நேரம் உங்களுடைய பாஸ்போட்டில இருக்கிற பெயருகளைப் பாத்துவைச்சுருக்கலாமல்லே…….” ஆத்திரம் பொங்க ராதா அவர்களை நிற்கவைத்தே திட்டித்தீர்த்தான்.
பாஸ்ப்போட்டில பெயருகளைப் பார்த்துவைச்சிருந்தோமண்ணை, அவங்கள் கூப்பிட்டபோதுதான் அது எங்கட பெயரென்று விளங்கவில்லை.”
நாலுபெயருகளில அப்படி ஒரு பெயர்தானும் விளங்கவில்லையோ. கொஞ்சம் வித்தியாசமாய்க்கூப்பிட்டால் உங்கள் பெயர்களையே விளங்காத நீங்கள் ஃப்ரெஞ்சும், ஜெர்மனும் படித்து யூரோப்பைக்கலக்கி……அப்பப்பா அதெல்லாம் எந்த யுகத்திலோ……” நெற்றியில் அடித்துக்கொண்டான்.
அந்த வாரம் ஹொட்டல்காசு கட்டவும், சாப்பாட்டுச்செலவுகளுக்குப் பணமில்லாமலும் கஷ்டப்பட்டோம். சக ஏஜென்டுகள், பழகிய கடைக்காரர்கள் எல்லோரிடமும் வாய்விட்டோம். ‘சிலோன்காரங்களுக்கு பணம் கொடுத்தால் அப்படியே கொண்டு கம்பிநீட்டிவிடுவார்கள்என்ற அச்சம் அநேகருக்கு. இரண்டு லிட்டர் பெரிய விஸ்கி போத்தல்கள் கொண்டுவந்தால் மாத்திரம் ஏழு கைகளையும் நீட்டி வாங்கிக்கொள்வார்கள்.
நாங்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பியவர்களில் 20 பேருக்கும்மேல் இன்னும் பாக்கி வைத்திருந்தார்கள். தொலைபேசியில் தொடர்புகொள்ளக் கூடியவர்களைத் தொடர்புகொண்டு பாக்கிகளைக்கேட்டோம். எவரும் மசிவதாயில்லை. ஏஜென்ட் இளகிய மனசுள்ளவனாயிருந்தால் பயணிகள் இப்படித்தான் தலையில் கொச்சிமிளகாய் அரைப்பார்கள். கனடாவோ,சுவிற்ஸர்லாந்தோ போயிறங்கும் வரையில் சப்பாத்தைத் துடைத்துத்தரவும் தயாராக இருப்பார்கள். அக்கரையில் கால்பதித்ததும் குரலும் பாவனைகளும் மாறிவிடும்.
இஞ்ச வேலையுமில்லை…….ஒன்றுமில்லை. காசுக்கு எங்கபோறது……? ”
இனித்தானே நாங்களும் சோஷல்காசில எதையும் மிச்சம்பிடித்துத்தரவேணும்.. இன்னுமொரு நாலைஞ்சு மாசத்துக்குப் பொறுக்கமாட்டியளோ……?” மாதிரியான பிரசண்டங்கள் எல்லாம் கிளம்பும். ‘முன்னரே கறாராயிருந்து காசை உரித்திராத உங்கள் புத்தியைச் செருப்பால அடியுங்கோடாஎன்பதை வேறுவார்த்தைகளில் சொன்னார்கள்.
ஜெர்மனியிலிருந்து ஒருவர் தான்கட்டவிருக்கும் பெண்ணையும் மாமியையும் அனுப்பிவிடும்படி முன்னே கேட்டிருந்தவர். அவர்களைக் கொழும்பிலிருந்து எப்போது சிங்கப்பூருக்கு அனுப்பவேண்டுமென்றுகேட்டு, டெலெக்ஸ் ட்ரான்ஸ்ஃபர் மூலம் என் வங்கியிலக்கத்துக்கு பணமும் அனுப்பியிருந்தார், சற்றே சுதாகரிக்க முடிந்தது.

புராணகாலத்தில் கடவுளர்கள் தம் பக்தர்களைச் சோதிக்க, மேலும் மேலும் புடம்போட்டுப்பார்க்க தாமே அவதரித்து வருவதுண்டாம். கலியுகத்தில் ஜனத்தொகை அதிகரித்துவிட்டதாலோ என்னவோ, அவர்களும் பிஸி மிகவாகி இப்போதெல்லாம் தமது பிரதிநிதிகளையே அனுப்புகிறார்கள்
அவர்களும் உண்மைப்பக்தர்களையெல்லாம் விட்டுவிட்டு கண்டநின்றவர்களிடமெல்லாம் வந்து சேர்ந்துவிடுகிறார்கள். ஜெயிக்கும்போது குதிக்கிறதும் தோற்கையில் சோர்ந்து குந்திவிடுகிற சாமானியத்திலும் சாமானியன் நான்.
பத்து வருடங்கள் ஜெர்மனியில் பனியிலும் குளிரிலும் இரவுபகலாக வேலைசெய்து குருவியாய் சேகரித்த பணத்தை விவேகம் சுயதொழில் ஆரம்பிக்கிறேன் என்று உணவகம் ஒன்றை ஆரம்பித்து அதில் கரைத்துவிட்டுத் தளர்ந்துபோய் இருந்தவன்.
ஒன்பது பேர்கொண்ட குடும்பத்தின் பொறுப்பான தலைப்பிள்ளையாகக் குடும்பப் பாரத்தைச் சுமக்கவேண்டி எண்பதுகளின் ஆரம்பத்திலேயே பையில் 500 டொலருடன் தரைவழியாகப் பரதேசம் புறப்பட்டு ஈரான், ஈராக் எல்லாம் வேலைதேடியலைந்து கடையாக இத்தாலியில் தரித்துநின்று சர்க்கஸ் கொம்பனியொன்றில் மாதம் 150 டொலருக்கு 5 கிலோ மடத்தலினால் கூடாரம் கட்டுவதற்கான ஆணி அடித்துக்கொண்டிருந்த நண்பன் ராதாவுடன் சேர்ந்து கொஞ்சம் விரைவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிங்கப்பூரில் முகாமிட்டுநின்று இலங்கைத் தமிழ் அகதிகளை கடவுச்சீட்டுகளில் சில பொருத்தங்களைச் செய்துகொண்டு கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நோக்கி நகர்த்திக்கொண்டு ஓரளவுக்கு நாணயமான ஏஜென்டுகள் எனப்பெயர் வாங்கிக்கொண்டிருக்கும் வேளையில், எந்தக்கடவுளின் பிரதிநிதியோசட்டநாதன்எனும் அகதிப்பயணியின் உருவில் எம்மிடம் வந்து சேர்ந்தார். 43 வயது, நல்ல கறுவல், உயரம் ஆறடியிருக்கும். முதுகில் ஒட்டகத்திமில்மாதிரி பாளைக்கத்தி வளைவுடன்கூடிய சிறியதிட்டு, கால்களை எட்டிவைத்து ஒட்டகத்தைப்போலவே தலையை ஆட்டியாட்டித் தாண்டி நடக்கும் அழகே தனி. கொழும்பில் கொமிசன்கடை வைத்திருக்கும் ராதாவின் மாமன் மறவன்புலவில் பெண் எடுத்தவகையில் பெண்ணின் உறவுக்காரராம்.
சிங்கப்பூரில் பிறநாடுகளுக்குப் பயணிக்க ஏஜென்டுகளால் கொண்டுவரப்படுபவர்களிடமும், ஏஜென்டுகளை நம்பியும்வந்து தரித்து நிற்கும் ஏனைய பயணிகளிடமும் சட்டநாதன் பேசும்போது அணுவிஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கே தான்தான் ஐடியா கொடுத்ததுபோலவும், ‘தான் மட்டும் ஈழத்தில் இன்னும் ஒரு வருடம் நிற்கமுடிந்தால் கண்டி, அநுராதபுரம், பொலநறுவை உள்ளிட்ட நெடிய தமிழீழத்தை அமைத்துக்கொடுத்துவிடுவேன்என்றமாதிரிக் கொளுத்துவாராம். ஏஜென்ட்ஸ் என்றவகையில் எம்மிடம் கொஞ்சம் மரியாதை இருந்தது. எம்மிடம் அலப்பறைகள் எதுவும் வைத்துக்கொள்ள மாட்டார்.

மாதனை-பருத்தித்துறை மகேந்திரனைப்போல கொழும்பில்பசிபிக்-லங்காஎன்றோஅன்டார்டிக் லங்காஎன்றோ போட்மாட்டி நூற்றுக்கணக்கில் அப்பாவிகளிடம் ஜெர்மனிக்கு அனுப்புகிறேன், கனடாவுக்கு அனுப்புகிறேன் பேர்வழியென்று காசைச்சுருட்டிவிட்டு அவர்களை பாங்கொக்கிலும், சிங்கப்பூரிலும் கொண்டுவந்து இறக்கிவிட்டுத் தலைமறாகிவாகிவிடும் அயோக்கிய நாதாரிகளைத்தவிர வேறெந்த ஏஜென்டுமே தம் உறாவுக்காரர்களை வெளிநாடுகளுக்கு நகர்த்த உடன்படுவதில்லை. பயணி உறவுக்காரராயின் ஏனைய ஏஜென்டுகள் வசூலிக்கும் கட்டணத்தை அவர்களிடம் அறவிடமுடியாது. ‘அள்ளல்கள் கிள்ளல்கள்இருக்கும். பயணமுதலில் முழுப்பணத்தையும் வாங்கிவிடமுடியாது. பயணி விக்கினங்களில்லாமல் நேரகாலத்துக்கு இலக்கையடைந்துவிட்டால் அவர்களுக்கு ஒப்புக்கொண்டதொகை மிக அதிகமாகத்தோன்றும்.
சரியான காசுஎன்பார்கள்.
தம்பி உழைச்சுத்தருவான்தானேஎன்றோஎங்கட காசுக்கென்ன பயம்என்றோ தட்டைப்புரட்டிப் போட்டார்களாயின் போச்சு!
பயணி ரூட் பிழைச்சு ஏதாவது நாட்டில் தொங்கிப்போனால், உலகத்தின் நாடுகள் அனைத்திலிருந்தும் அவரின் மற்ற உறவினர்களிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வரும்.
பார்த்துக் கெதியாய் அனுப்புங்கோ தம்பி
என்ன இப்படிச்செய்துபோட்டியள்
கெதியாய் அனுப்புவியளென்றுதானே உங்களிட்ட விட்டது
கடைசி எப்பவந்து சேருவினம்
பயணி பெண்ணாயிருந்தால்………..“ முகூர்த்தம் தப்பப்போகுது பெண்ணைக் கெதியாய் அனுப்புங்கோஎன்று மாப்பிள்ளைப்பையன் தணலில் நிற்பவன்போலத் துடிப்பான்.

சிங்கப்பூரில்சித்தப்பாஎன்று பிரபலமான ஏஜென்ட் ஒருவர் ஃப்ரெஞ்ச் கார்ட்காரர். அதாவது அங்கீகரிக்கப்பட்ட அகதி, ட்ராவல் டொக்குமென்ட் உடையவர். அதிகம் முதலீடுசெய்து ஆண்களினதும் பெண்களினதுமாகப் பத்துப் பதினைந்துகாட்களைவாங்கிவைத்துக்கொண்டு தோற்றமும், வயதும் பொருந்துமிடத்துதலைகளைமாற்றியும், மாற்றாமலும் வெற்றிகரமாகத் தொழில் செய்துவந்தார்.
சித்தப்பாவின் இயற்பெயர் தியாகநாதன் மெலீரஸ். ஃப்ரான்ஸ்போக சிங்கப்பூரில் தரித்துநின்ற அவரது பெறாமகன் உறவுமுறையுள்ள ஒரு பையன் அவரைச்சித்தப்பா’ ‘சித்தப்பாஎனக்கூப்பிடவும் எல்லோருக்குமே சித்தப்பாவானார் தியாகநாதன். வழக்கமான ஏஜென்டுகளைப்போல அழைத்துச்செல்லும் இளம்பெண்களிடம் பாலியல் ஜோக்குகளோ, சேஷ்டைகளோ வைத்துக்கொள்ளாமல் அவர்களைக் கௌரவமான முறையில் பாதுகாப்புடன் கூட்டிக்கொண்டுபோய் அக்கரையில் சேர்ப்பிப்பதாலும், இதுவரையிலான அவரது ட்றிப்புகள் எதுவும் அடிபட்டுப்போகாமல் அதிஷ்டகரமானவையாக நடந்துகொண்டிருந்ததாலும்ஜென்டில்மென் ஏஜென்ட்என்று பெயரெடுத்திருந்தார் சித்தப்பா. அவர் தங்கியிருந்த ஹொட்டலுக்குப்போய் அவரை நேரில் சந்தித்து எமது பிரச்சனைபற்றி எடுத்துச்சொன்னோம். அவரோ சட்டநாதனின் வயதுக்குப்பொருத்தமான காட்கள் தன்னிடம் இல்லையென்றும் மற்ற இளைஞர்கள் மூவருக்கும் டிக்கெட்போட்டுத்தந்தால் தான்கூட்டிப்போவதாகவும் சம்மதித்தார்.
ட்றிப் வெற்றிகரமாக அமைந்தால் தலைக்கு 1,000 டொலர்கள் தரவேண்டுமென்றும் அதைச்செலுத்த இரண்டுமாதங்கள் அவகாசமும் தந்தார். இது மிகவும் நியாயமான உடன்பாடாக இருந்ததால் சம்மதித்தோம். அதேவாரம் ஜெர்மன் நண்பன் அனுப்பிய பணத்தில் சித்தப்பாவுக்கும் இளைஞர்களுக்குமாகச்சேர்த்து டிக்கெட்டுகள்போட்டு அவர்களை வெற்றிகரமாக அனுப்பிவைத்துவிட்டுச் சற்றே ஆசுவாசம் செய்தோம்.
இப்போது ஒற்றைத்தலைவலியாக சட்டநாதன் மட்டுமிருந்தார். அவரது இரண்டுங்கெட்டான் 43 வயதுக்குப் புத்தகங்கள் எதுவும் பொருந்துவதாயில்லை. அது பொதுவாக அரளைபெயரும் வயது மாத்திரமல்ல, அந்த வயதுக்காரர்கள் எவ்வளவுதான் காசைக்காட்டினாலும் புத்தகத்தைக் கொடுப்பதுபோன்ற ஸ்பெகுலேஷன்களில் இறங்கமாட்டார்கள். ஒழுங்கு, சட்டஇடுக்குகள்பற்றி அபரிமிதமாகச்சிந்தித்துப் பயப்படுவார்கள்.
ஜெர்மனியிலிருக்கும் எனது சகோதரனுக்கு நிலமையை எடுத்து 5 டெலிகாட்டுகள் தீருமட்டும் எடுத்துச்சொல்லி எப்படியாவது பணம் அனுப்பச்சொல்லிக் கேட்டேன். நான் தொழில் தொடங்கும்போதேசெட்டிக்கு வேளாமைஎன்று ஆசீர்வதித்தவர், ஏராளம் சலிப்புகள், சினத்தல்களின் பின் ஐந்து வட்டிக்கு 6,000 டொலர்கள் வாங்கி அனுப்பினார். “ நீ இந்த ஏஜென்ட் மயிர்பிடுங்கினது காணும், உருப்படியாய் ஊர்வந்து சேர்……….… இனிமேல் வெள்ளைச்சல்லி புரட்டேலாது கண்டியோ…………”
இதற்குள் எனக்கும் ராதாவுக்கும் விசா காலாவதியாகும் நாள் நெருங்கி வந்துகொண்டிருந்தது. ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு வாரங்களுக்குத்தான் விசா தருவார்கள். எவராவது சிங்கப்பூர்பிரஜை உத்தரவாதம் அளித்தால் மேலும் ஒருவாரம் விசாவை நீடிக்கலாம். தமக்கு ஆதாயமில்லாமல் யாரும் உத்தரவாதம் தந்துவிடமாட்டார்கள். முன்பாயின் தொடருந்தில் மலேஷியாவுக்குப் போய்விட்டு மறுநாளே சிங்கப்பூருக்குத் திரும்பிவந்தால் திரும்பவும் இரண்டு வாரங்கள் விசா லேசாகக் கிடைத்துவிடும். இலங்கையருக்கு மலேஷியாவிசா பெறுவதில் ஏககெடுபிடிகள் வந்தபின்பு பயணச்சீட்டின் விலை அதிகமானாலும் பாங்கொக்குக்கே பறந்துபோய்த் திரும்புவோம்.
நானும் ராதாவும் பாங்கொக்குக்குப் பறந்துபோய் வந்ததின் மூலம் சிங்கப்பூர் விசாவைப் புதுப்பித்துக்கொண்டோம்.
எம் ஹொட்டலில் தன் நண்பர்களைப் பார்க்க அடிக்கடி வருகிறவரும், எம்மைக்காணும் வேளைகளில் புன்னகைப்பவருமான ஒருவர் எப்படியோ சட்டநாதனின் பிரச்சனையைத் தெரிந்துகொண்டு எதேச்சையாக எம்மைக் கோமளவிலாஸில் கண்டபோது சொன்னார்:
பெர்லினிலிருந்து ஒருத்தர் வந்து பெருமாள்வீதி சீனாக்காரியின் ஹொட்டலிலே நிற்கிறார். அவர்கள் குடும்பத்திலே யாருக்கோ இங்கே கலியாணம்போல இருக்கு, ஸ்ரீலங்காவிலிருந்து பெண்ணின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேச்சைப்பார்த்தால் எப்படியும் இன்னும் இரண்டு கிழமைக்காவது நிற்கவேண்டிவரும்போல இருக்கு. அவருக்கும் உங்கடகாயின்ட வயதிருக்கும், போய் மெல்லப் புத்தகத்தைத் தட்டிப்பாருங்கோ.”

தகவலருக்கு நன்றிகூறிவிட்டு அந்த ஆசாமிபிடிச்சிராவிடைப்பாக இருக்கக்கூடாதேயென்று பெருமாளைச்சேவித்துக்கொண்டு போகும் வழியில் சிராங்கூன் வீதி வீரமாகாளி அம்மனுக்கொரு அர்ச்சனையும் செய்வித்துக்கொண்டு பிரசாதத்துடன் சீனாக்காரியின் ஹொட்டலுக்குப் போனோம்.
மனுஷன் அசப்பில்என்னத்தைக்கன்னையாபோலிருந்தார். பாஸ்போர்ட் சட்டநாதனுக்கு ஜோராகப்பொருந்திவரும். சந்தோஷம், போனதும் எங்களை அறிமுகம் செய்துகொண்டு கோவில்பிரசாதத்தைக் கொடுத்தோம் மாமியிடம். பயபக்தியுடன் வாங்கிக்கொண்டார்.
நானும் பெர்லினிலதான் இருக்கிறன்
மெய்யாலுமோ..நான் ஒரு விஷேசங்களிலகூட உம்மை ஒருநாளும் காணேல்லை. சரி.. எவ்வளவு காலமாய் அங்க இருக்கிறீர்.”
பத்து வருஷங்களாச்சு
பெர்லினில எங்க
பெயர், விலாசம் சொன்னேன்.
அப்ப இந்தப்பெயரில ஒருத்தர் ஏஜென்ட் வேலை பார்க்கிறார்………”
அது வேறு யாருமில்லை……… நான்தான்.”
அட நல்லதாய்ப்போச்சுப்பாஎன்றவர் அர்த்தத்துடன் மனைவியைப் பார்த்தார்.
அவர் பிறகும் விஷயத்தை மேலும் அவிழாமல் யாழ்ப்பாணத்தில் ஊர் குறிச்சியை எல்லாம் துல்லியமாக உசவினார். விளம்பினேன். ராதா மாமியின் ஊரைக்கேட்டுவிட்டுஉங்களை எங்கேயோ பார்த்தமாதிரிக்கிடக்குஎன்று உச்சினான்.
நான் அச்சுவேலி
அதுதான பார்த்தன், நான் புத்தூர் கிழக்கு சந்தோஷம் விதானையாற்றை மகன். ”
ஒரேயடியாய்ப்போட்டான்.
என் மனக்குகையில் ராதாவின் அப்பா சுருட்டுக்கொட்டிலுக்குள் இருந்து ஆடுகுதிரையில் ஆடுவதைப்போல் முன்னும் பின்னும் ஆடியாடி சுருட்டுசுத்தும் திவ்யகாட்சி விரியவும் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.
கன்னையா மேலும் நெருங்கி பெர்லினில் நாலுவட்டி சுப்பரைத்தெரியுமோ, சூனா கானா சூரியைத்தெரியுமோ, வொட்கா வேலாயுதத்தைத்தெரியுமோ என்று கேட்ட எல்லாரையும்நம்ம கூட்டுக்கள்தான்என்றேன். பின் விடுதலைப்போராட்டங்கள் பற்றிப் பேச்சுவந்தபோது அவர் எந்த இயக்கப் பக்கமாய் வீசுகிறாரென்பதை நுட்பமாய்க் கணித்து அதுக்கிசையச் சல்லாரியைப் போட்டேன். வெளிநாடுகளுக்குப்போக வந்து சிங்கப்பூரில் தரித்துநிற்கும் எம்மவர் கஷ்டங்கள் பற்றிப்பேசினோம். பேச்சிடையே புகுந்த ராதா தான் 500, 1,000 வெள்ளி நோட்டுக்கள் தவிர்ந்து மற்றையவைகளுடன் புழங்குவதில்லை என்பதாகக் காட்டிக்கொண்டான்.
இப்ப சிங்கப்பூருக்கென்ன புடவை, நகை கொள்முதலுக்கு வந்தனீங்களோ..?”
தெரியாத மாதிரி பெரியஅளவைகளில் கேட்டோம். கன்னையா அலமாரி மாதிரி அகலமாயிருந்த மாமியைக் கண்களால் காட்டிச்சொன்னார்……அதுவுந்தான்…… அதோட இவவின்ர தம்பிக்காரனுக்கு கல்யாணம். ஹைடெல்பேர்க்கில இருக்கிறவர், எங்களோட வந்தவர், இப்பவுட் பியோட டெலிபோன்பேச வெளியில போயிட்டார். பெண் வியாழக்கிழமை பின்னேர ஃப்ளைட்டில கொழும்பில இருந்து வாறா……… வந்ததும் நாளைப்பார்த்துக் கோயில்ல தாலிகட்டை வைச்சிட்டு……” என்றவர் நிறுத்தி மனைவியின் முகத்தப்பார்த்தார். அவரைப் புரிந்துகொண்ட மாமி சொன்னார்: “ விஷயத்தைத் தம்பியிட்ட வெளிப்படையாய்ச் சொல்லுங்கோவன்……… அந்தத் தம்பியும் பெர்லினில இருக்கிறார், மற்றவரும் பக்கத்தூர்க்காரராயிருக்கிறார். பரிச்சயமில்லாத புது ஏஜென்டுகளிட்டைப்போய் முட்டுப்படுற நேரம் இப்படி நெருக்கமாய் இருக்கிறவையிட்ட பொறுப்பை ஒப்படைக்கிறது நம்பிக்கைகூடத்தானே……”
மாமியின் பீடிகையில் அவர்கள் எங்கே வருகிறார்கள் என்பது புரிந்தாலும் ஒன்றும் புரியாத கன்னியின் பாவனையோடும், அவர் கோடிகாட்டும் விஷயத்தில் அக்கறை காட்டாமலும் மேலும்தெக்காமார்க்கெட்டில் விளைமீன் கிடக்கென்றும் செனகொ போர்ட்டில சாண்நீள இறால் கிடக்கென்றும் அளக்கவும் கன்னையா மீண்டும் விஷயத்தைத்தொட்டார்.
கல்யாணம் முடிஞ்சகையோட பொம்பிளையையும் கூட்டிப்போறதுதான் எங்கட பிளான்…….. அந்தப்பொறுப்பை இப்ப நெருக்கமாயிட்ட உங்களிட்டயே விடலாமென்று யோசிக்கிறம்.”
அதெல்லாம் கலாதியாய்ச் செய்யலாம். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம், நான் அதுக்கான காசைக்கூட பெர்லினிலேயே வந்து வாங்குவன்…… ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்காக இதைக்கூடச் செய்யாட்டிப் பிறகென்ன மனுஷர் நாம..?”
ராதா சொன்னான்: “ எதுக்கும் நீங்கள் உங்கட மைத்துனரிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுவையுங்கோ……..இதை எங்களைக்கொண்டு செய்விப்பதில அவருக்கும் பூரணசம்மதந்தான் என்றதை அறிஞ்சிட்டால் எங்களுக்கும் மனதுக்கொரு தைரியமாயிருக்கும்.”
அதொன்றும் பிரச்சனையாயில்லை…….. எங்களுக்குத்தெரிஞ்ச பார்ட்டிதானென்று நாங்கள் சொன்னால்ப் பிறகொன்றும் மறுத்துப் பறையமாட்டார்.”
அப்பச்சரி
மற்ற விஷயத்தையும் கேளன்என்றான் ராதா என்னிடம்.
என்ன விஷயம்…… எதென்றாலும் நேர்நேராய்ப்பேசுங்கோ…… எதிலும் வெளிப்படையாய் இருப்பதுதான் எனக்கும் பிடிக்கும்என்றார் பெர்லின் கன்னையா.
நான் தொடர்ந்தேன்.
ஓமோம்.. வெளிப்படையாய் இருக்கிறதுதான் எல்லோருக்கும் நல்லது……….. எப்படியும் ஒருவாரமோ பத்துநாட்கள் நீங்கள் இங்கேதானே இருக்கப்போறியள்? ”
ஓமோம்உண்மை, இவையை அனுப்பாமல் நாங்கள் எங்கே போறது………?”
அப்பிடியென்றால்உங்களாலும் ஒரு சகாயம் பண்ணமுடியும்………..”
என்னது சொல்லுங்கோ…….. என்னுடைய இயைபுக்குட்பட்டது என்றால் செய்வன். ”
என்னமாதிரியென்றால்……….. அசப்பில உங்களையே மாதிரியே ஒருத்தர் எங்களிட்ட இருக்கிறார்…… அதுதான் உங்களின்ர புத்தகத்தை ஒரு நாலுநாட்களுக்குத் தந்தியளேயென்றால்…… ஒரு கும்பத்தஸ்தருக்குப் பெரும் உபகாரமாய் அமையும்……… ”
ம்ம்ம்ம்…….. என்ர புத்தகம் பாருங்கோ அது ஒறிஜினலாய்க்கிடக்கு. எங்கேயும் மாட்டிச்சுதென்றால்……… என்ர விசா, வேலை எல்லாம் நாறிப்போயிடும்……ம்……..ஆங்.” என்று நீளத்துக்கு இழுத்தார். ஆனால் அந்த இழுவையிலும் கொஞ்சம் இளக்கடியும் தென்பட்டது. பொறுத்த டைமிங்கில் ராதா அடுத்த ஆப்பையும் சொருகினான்.
புத்தகத்துக்கு நடப்பு விலையைவிட ஆயிரம் வெள்ளிகூடப்போட்டு ஏழாயிரமாய்த்தாறம்என்றுவிட்டு ஜெர்கின் பொக்கட்டுக்குள் கையைவிட்டு டொலர்க்கட்டை எடுத்துச்சரக் சரக்கென்று எண்ணத்தொடங்கினான்.
மாமி காசுக்கட்டைப் பார்த்ததும் ஏழாயிரம் வெள்ளிக்கும் அப்படியே 35 சவரன்கள் நகைகள் வாங்கி உடம்பெல்லாம் தொங்கவிடலாமென நினைத்தாரோ என்னவோ, முகத்தில் 200 உவாட்ஸ் மெர்க்குரி விளக்கின் பளீர் ஒளிப்பைக் காட்டினார்.
இதொன்றும் புதுக்காரியமில்லை. இப்ப உங்கள் மைத்துனரின் மனைவியைக்கூட நாங்கள்தான் அனுப்பிவைக்கிறதென்றால்…… உங்களைப்போல ஒருத்திதந்த பாஸ்போர்ட்டையோ, ட்ராவல் டொக்குமெண்டையோதான் பாவிக்கப்போறம். ஏர்போர்ட்டில நாலு ஒபிஷேர்ஸைக் கைக்குள்ள போட்டு வைச்சிருக்கிறம். பிரச்சனையள்வர சான்ஸேயில்லை. அப்பிடித்தான் ஒன்று வந்தாலும் வெட்டியாட நாங்களாச்சு. ஒன்றும் அந்தளவுக்குப் போகாது………… நீங்கள் பயப்படத் தேவையில்லை……”
அவர் முகம் கொஞ்சம் வெளிப்பதுபோலிருக்க நான் தொடர்ந்து புளுகினேன். “ எங்கட கிரகபலனுகள் எமக்குச் சாதகமாய் நிற்குது, நாங்களிப்ப 100 பேருக்கும்மேல இந்த ஏர்போர்ட்டால ஏத்தியிட்டம். ஒரு சிக்கலும் வரேல்லை. எனக்கு உச்சம்பெற்ற வெள்ளி, இவனுக்கு புதன் உச்சத்தில இருக்கு, இந்தத் தெசைகளில தொட்டதெல்லாம் துலங்கும். ஒரு விக்கினமும் வராது. ஒரு பேச்சுக்குச்சொல்லுறம், அப்படித்தான் ஒரு இடைஞ்சல் உங்கட புத்தகத்துக்கு வந்துதென்று வையுங்கோ……. உங்களைப் பத்திரமாய்க்கொண்டுபோய் பெர்லினில சேர்ப்பிக்க நாங்களாச்சு, அதுக்குக்க்யாரண்டிதாறம்.”
நீங்கள் இவ்வளவு சொல்றதால…….. நானும் நம்பவேண்டியிருக்குஎன்றவர் மனைவியின் திசையில் பார்த்துச் செருமிவிட்டுச் சொன்னார்:
ஏன் தம்பி…….. இதை நீங்கள் பத்தாய்த் தந்தால் என்ன? ”
எங்களோட காசுக்குப்பிரச்சனையில்லை…… பன்னிரண்டென்றாலும் சரிதான். ஆனால் பிறகு உங்கட ஆளை அனுப்ப நீங்களும் அதே தொகையைச் சேர்த்துத்தானே தரப்போறியள்.”
அதுவும் சரிதான்என்றவர் என்னத்தைக்கன்னையாவைப் போலவே பக்கவாட்டு பனியனைத் திரைச்சு பளுவில் செல்லமாய்ச் சொறிந்தபடி சிரித்தார்.
எங்க உங்க புத்தகத்தை ஒருக்காப் பார்ப்பம்
மாமி அதைப் பயணவுறைக்குள்ளிருந்து எடுத்துவந்து கொடுத்தார். புத்தகம் கன்னியாக, திருப்தியாக இருந்தது. ராதா பணத்தைக்கொடுத்தான். மாமி முகத்தில் மீண்டும் மெர்க்குரி பூத்தது.
தம்பிமாரே, புத்தகத்தை மட்டும் வினைக்கெடுத்ததையுங்கோ………”
சாய்ச்சாய்……. ஒரு வினைக்கேடும் வராது, நாளைய ஃப்ளைட்டில ஆள் பெர்லின் போறார். நாளையின்றைக்கு நம்மாள் ஒருத்தர் பாரீஸிலிருந்து பெர்லின்போய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு இஞ்ச வாறார். நாங்கள் ப்றோட்வே ஹொட்டல்ல…… அதுதான் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கும் மசூதிக்குமிடையில இருக்கிற பெரிய ஹொட்டல்ல 37ம் நம்பர் அறையில இருக்கிறம்.”
அவர்களுக்கு ஹொட்டல் கார்ட்டையும் கொடுத்துவிட்டுப் படியிறங்கையில் ராதா சொன்னான்புத்தமின்னும் வரேல்லையென்றுபோட்டு ரெண்டு ட்றிப்பென்றாலும் அடிக்கவேணும், இல்லாட்டி நட்டம் கவர்பண்ணேலாது.”
எதுக்கும் முதல்ல சட்டநாதன் பெர்லின்போய் இறங்கட்டும்.”
மறுநாள் சட்டநாதனின் மீசையைச் சற்றே மெல்லிதாக ஒதுக்கச் சொல்லிவிட்டுப் பார்த்தோம். கன்னையாவின் புத்தகத்திலிருந்த தலையின் சாயலோடு ஒத்துப்போனார். தலைமாற்றம் எதுவும் செய்யாமலே இன்டர் ஃப்ளுக்கில் டிக்கெட் போட்டோம். ஏர்போட்டில் சந்தேகம் வராமலிருக்க ஷொப்பிங் செய்யவந்த பய்ணிபோல் பாவனை இருக்கவும் விலை உயர்ந்த பெரிய பயணவுறை ஒன்றைவாங்கி அதுக்குள் எமது உடுத்திய சாரங்கள், சப்பாத்துக்கள், பத்திரிகைகள், தெக்காமார்க்கெட்டின் மலிவான கடாத்துணி என்பவற்றால் அடைத்து நிரப்பி உப்பச்செய்து லக்கேஜில் போட்டோம்.
அன்று நிறைய ஜெர்மன் உல்லாசப்பயணிகள்இன்டர் ஃப்ளுக்கில் நாடுதிரும்பினார்கள். பிஸியாயிருந்த கவுண்டர் ஒன்றில் போடிங்கார்ட் எடுத்துக்கொண்டு உல்லாசப்பயணிகளுடன் கலந்து ஒருவாறு விமானமேற்றி விட்டோம்.
மறுநாள் காலைமுதல் சட்டநாதன் பெர்லின்போய்ச் சேர்ந்த நல்ல செய்தியை எதிர்பார்த்து அறையை நீங்காது கோப்பியையும் தேநீரையும் மாறிமாறி வரவழைத்துக் குடித்தபடி காத்திருந்தோம். போன் ஒலிப்பதாகக்காணோம். இரவு கடையில்டெலிகாட்வாங்கிக்கொண்டு பொதுத்தொலைபேசிக்கூண்டிலிருந்து போன் பண்ணினோம். சட்டநாதனை ஷோனஃபெல்ட் விமானநிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்ல நாம் ஏற்பாடு செய்திருந்த ஜீவா வேலைக்குப்போயிருக்க அவர் அறைத்தோழர் பேசினார்.
நானும் ஏர்ப்போட்டுக்குப் போனனான், நீங்கள் அனுப்பினவர் ஒரு கறுவல் நெடுவல் காயோ? ”
ஓமோம்……ஓம்வந்திட்டாரோ அண்ணை?”
ஒரு நெடுவல் காய் லக்கேஜ் கொன்வேயரிலயிருந்து சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தவர்தான்…… பின்னால வந்த பொலிஸ் அவருடைய சூட்கேஸையும் வாங்கி ஆளையும் உள்ளேகூட்டிக்கொண்டு போனாங்கள்……… இரண்டு மூன்று மணத்தியாலமாய் வெளியில காத்திருந்து பார்த்தம். பிறகு நம்ம ஆட்கள் எவரும் வெளியில வாறமாதிரி இல்லை. என்ன பேர்வழியில.. என்ன புத்தகத்தில அனுப்பினியளோ என்றுந்தெரியாதுதானே…… பயணியை யாரென்று சொல்லி விபரங்கேட்கிறது. ஜீவாவுக்கும் வேலைக்குப்போக நேரமாச்சு.வந்திட்டம், வெறி சொறி. ”
திடீரென்று ஒரு சந்தேகம்பொறிக்கக் கேட்டேன்தம்பி.. என்ன கலர் சூட்கேஸ் அவர் கொண்டுவந்தவர்……?”
ஒரு பெரிய கறுப்பு சூட்கேஸ் றோலர் வைத்தது.”
நாசமாய்ப்போக…… பிறவுண் கலரல்லோ கொடுத்துவிட்ட நாங்கள்……….”
அட அதுதான் பொலிஸும் சூட்கேஸைக் காட்டிக்காட்டித்தான் ஏதோ அவரை விசாரித்தது. பாஷை விளங்காமல் முழிக்கிறதைப் பார்த்திட்டுக் காயை உள்ளே கூட்டிப்போயிட்டாங்கள்.”
இதற்குள் டெலிகாட் யூனிற்றுகள் தீருவதைபீப் பீப்ஒலி எச்சரித்துவிட்டுத் தொடர்பைத் துண்டித்தது. சட்டநாதன் பிறகும் எங்கேயோ ஆப்பை இழுத்துப் போட்டார். நாங்கள் வாங்கிக்கொடுத்தது ப்ரவுண் சூட்கேஸ்தான் என்பதை ராதாவும் உறுதிப்படுத்தினான்.
என்ன ஆளை உள்ளே கூட்டிப்போய் சாமானுகளைக் கொட்டிச்செக்பண்ணிப் பார்த்திட்டுத் துரத்தியிருப்பாங்கள்.”
ஆளுக்கு ஒரு வார்த்தை ஜெர்மன் புரியாதே……”
மறுநாளும் பெர்லினுக்குப் போன்பண்ணினோம். யாரும் வீட்டில் இருக்கவில்லை. எமக்கு மட்டும் வானம் மந்தாரம் போட்டிருந்தது. பத்து வருடங்கள் பெர்லினில வாழ்ந்த ஒருவரின் ஒறிஜினல் புத்தகத்தில அனுப்பியிருக்கிறோம். புத்தகத்தைக் கொம்பியூட்டரிலபோட்டு நோண்டிப்பார்த்தால் என்னாகுமென்று நாங்கள் பயந்துகொண்டிருக்க அடுத்தகாலையில் சட்டநாதன் டாக்ஸியில் வந்திறங்கினார். ராதா அவரைக் கண்டதும் தலையிலடித்து அலறினான்.
தாயே…… வீரமாகாளி. இதென்ன காட்சியிது? ”
என்னப்பா என்னாச்சு?”
பிரச்சனையில்லாமல் பெர்லின் போய்ச்சேர்ந்திட்டன்……. அங்கதான் ஒரு சின்னக்குழப்பம் வந்து எல்லாத்தையும் கெடுத்துப்போட்டுது.”
என்ன இழவெடுத்த குழப்பம்பா……. சொல்லித்தொலையும்?”
சூட்கேஸைத் தெரியாமல் மாறி எடுத்திட்டன்……. சூட்கேஸ்காரன் உடன பொலிஸைக் கூட்டியந்திட்டான்.”
ச்..சூ…… அதுக்குள்ள நீரும் பார்க்க எல்லாம் உதவத்த சாமானுகள் (பல கெட்டவார்த்தைகள் xxxxx )…….யுந்தானே போட்டு நிரபின்னாங்கள்……. அந்தப் பிண்டங்களை அதிலேயே போட்டிட்டு ஆள் தப்பினால்ப்போதுமென்று போய்த்தொலையாதையுமன்…… ”
ஏதோ……என்ர கிரகசாரமாக்கும்…… ஒரு கணம் புத்திதடுமாறித்தான் போச்சு.”
உமக்கென்ன கெட்டகாலம், நீர் எப்பிடியோ ஜெர்மனிக்குப் போறது போகத்தான் போறீர்…….. எங்களைத்தான் ஏழரைநாட்டான் பிடிச்சுக்கொண்டு நிக்குது. அல்லது.. உம்முடை முட்டாள்க்காரியங்களுக்கெல்லாம் நாங்கள் லட்சக்கணக்கில அழவேண்டியிருக்குப் பாரும். போன ஜென்மத்தில ஏதோ உம்மட்டைப் பட்டகடனாக்கும்…… இப்பவந்து அறவாக்குறீர்.”
ராதா ஏச ஏச சட்டநாதனின் முகம் பரிதாபமாய் இருண்டுகொண்டு வந்தது.
நான் ராதாவை மேலும் எகிறவிடாது தடுத்தேன்.
அப்ப புத்தகத்துக்கென்னாச்சு?”
அது உன்னுடையதல்லவென்று பறிச்சுப்போட்டங்கள். ”
சரி………….. அது என்னுடையதல்லத்தான், வேறு யாருடையதோ புத்தகத்தை எடுத்துக்கொண்டு இங்கே அரசியல் தஞ்சம்கோரி வந்திருக்கிறன் என்று சொல்லாதையுமன்…….?”
அப்படிச் சொல்லலாமென்றுதான் இருந்தனான்…….. இரவு பாணைத்தந்து படுக்க வைத்திட்டுக் காலமை ஃப்ளைட்டில கொண்டுவந்து ஏத்திற்றானே………”
பாஸ்போர்ட் இல்லாமல் எப்பிடி உம்மைச் சிங்கப்பூருக்கு ஏத்துவான்…… இவன் எப்பிடி உம்மை விட்டான்?”
மற்றப் புத்தகம் இருந்ததில்லே… “ கீழே பார்த்தார்.
என்ன பிதற்றுறீர்..?”
என்ர ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்.”
அது எங்களிட்டயல்லே இருந்தது, எப்ப எடுத்துத் தொலைச்சீர். ”
அது உங்களிட்ட சும்மாதானே கிடக்கப்போகுதென்றிட்டு நான் எடுத்திட்டன்.”
மீண்டும் நிலத்தைப்பார்த்தார்.
அட போறதுதான் ஃபோர்ஜ்ட் பாஸ்போர்ட்டில, அதோட சொந்தப் பாஸ்போர்ட்டையும் கக்கத்தில கொண்டுபோனால் எந்த நாட்டிலயப்பா உம்மை அனுமதிப்பான்……. சொல்லுற இழவை ஒன்றும் செய்யாதையும், சொல்லாத கருமாதி எல்லாம் ஒழுங்காய் செய்து தொலையும்……”
ராதா சொன்னான்: “ இப்ப அந்த இழவைக் காவிக்கொண்டுபோயிராவிட்டால் ;டெம்பெரறி ஸ்டேதந்து நாட்டுக்கை ஓடென்று விட்டிருப்பாங்களே………… பொதுவாய் ஏஜென்ட் என்றாலே பம்மாத்துக்காரர், ஹம்பக்பேர் வழிகள் என்றுதான் உலகத்தில பேர்…… ஆனால் உம்மை மாதிரி பெர்லினல கொண்டுபோய் விட்ட பின்னாலும் ஓடித்தப்பிப்பிழைக்கத் தெரியாமல்பூமராங்மாதிரி எய்தவனிட்டையே திரும்பிவாற நாலுபேர் பயணிகளாக வாய்த்தால்ப் போதும். அவனும் பக்கிரியாகி நடுத்தெருவில நின்று திருவோட்டை ஏந்தவேண்டியதுதான்……...ச்சே…… இந்த ஏஜென்ட் வேலைக்கு வெளிக்கிட்ட நேரம் அங்கேயே நின்று குதிரைகளுக்குப் புல்லுப்போடப் போயிருக்கலாம்.”
அன்று மாலையே சட்டநாதன் திருப்பி அனுப்பப்பட்ட விஷயம் அறிந்து விசைச்சுக்கொண்டு வந்த கன்னையா வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ராதாவும் இரண்டு நாட்களாக சாப்பாடு, உறக்கம் இல்லாமல் சுவாதீனம் குழம்பினவன்போல இருந்தான். அவனுக்குத் தன் மாமன் அனுப்பிவைத்த லூஸுப்பயணியால்த்தானே இவ்வளவு உலைச்சலும் என்ற கவலை. அவனைச் சமாதானம் செய்வதும் எனக்குப் பாடாகத்தான் இருந்தது.
அம்மான் ஒருவிலாசப்பேர்வழி கண்டியோ…….….. என்னஎன்ர மருமோன் சுவிஸுக்கென்ன சுக்கிரனுக்குக்கூட ஆட்களை அனுப்பிவைக்கக்கூடிய ஒரு பராக்கிரமசிங்கன்என்று பெண்சாதியின் சனத்திட்ட கொளுத்தியிருப்பார், சின்ன வயதில நாங்கள் பள்ளிக்குத் தேவையான கொப்பி, பென்சிலுக்கு இடறுப்படுகிற நேரத்திலகூடத் திரும்பிப்பார்த்திருக்க மாட்டார். இப்ப பார் அவருடைய விலாசத்தைக்காப்பாற்ற இந்தமாதிரி லோல்கேஸுகளோட மாயவேண்டிக்கிடக்கு…… படுத்தால் நித்திரை வருகுதில்லடா……”
பாவம்டா……. இந்தாளுக்கும் நாலு பெண் பிள்ளைகளாம், நாங்களும் கைவிட்டு……. மனுஷன் கிணத்தில ஆத்தில குதிச்சுதென்றால் ஜென்மப்பழி வந்து சேர்ந்திடும். மனுஷன் எங்களிட்ட யமகண்டத்தில வந்துதோ, மரணயோகத்தில வந்துசேர்ந்துதோ……. ஒரு சவாலாய் எடுத்து இந்தாளை அனுப்பத்தான் வேணும். ”
சித்தப்பா ஜெர்மனியில் கொண்டு சேர்த்த இளைஞர்களுள் இருவர் கொண்டுபோன பயணிகள் காசோலைகளை மாற்றியும், மற்றும் தெரிந்தவர்களோ உறவுகளிடமோ மாறியும் 2,000 டொலர்கள் டெலெக்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். பணந்தான் புரட்டமுடிந்தாலும் இப்பெம்மானை அக்கரையில் கொண்டுப்போய் இறக்கிவிடும் மார்க்கந்தான் புலனாகவில்லை. நாட்கள் விச்ராந்தியில் கழிந்தன.
கன்னையா மைத்துனருக்கான பெண்ணும் வந்து இறங்கினாள். மாப்பிள்ளையும் பெண்ணும் முன்பின் அறிமுகமானவர்களோ காதலித்தவர்களோ……அல்ல, இருந்தும் தமிழ்ப்படங்களில் தோய்ந்ததின் விளைவாக்கும், விமான நிலையத்தில் நாமெல்லாம் கூசிப்போகும்படி அவர்களது அணைப்பின் இறுக்கம் இருந்தது!
வீரமாகாளி அம்மன் சந்நிதியில் அவர்களுக்குத் தாலிகட்டு நடந்தது. அன்றே கன்னையா தான் வேலையில்போய்ச் சேரவேண்டுமென அலுப்புத்தர ஆரம்பித்தார். நாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற அவரை எப்படியும் பெர்லினுக்கு அனுப்பியே ஆகவேண்டும். பெர்லினை அடைந்துவிட்டால் அங்கே தனது ட்ராவெல் டொக்குமென்ட் தொலைந்துபோய் விட்டதென்றோ, அல்லது வேறுமாதிரியான ஜில்மால் விட்டோ புது டொக்குமென்ட் பெற்றுக்கொண்டு விடுவார்…… ஆள் விண்ணன்.
சித்தப்பாவின் டொக்குமெண்டுகளில் பயணங்கள் விக்கினங்கள் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தன. தனக்கு ராசியான ஏர்ப்போர்ட்டுக்கள் என்று ஃப்ராங்ஃபேர்ட், டுய்செல் டோர்ஃப், அம்ஸ்ரடாமுக்கு மட்டும் பயணிகளைக் கொண்டுப்போய் இறக்கிக்கொண்டிருந்தார். நிறையப்பணமும் அவர் கைகளில் புரண்டது. நாம் சட்டநாதனுடன் அல்லாடுவதைப் பார்த்துச் சித்தப்பா தானாகவே சட்டநாதனையும், கன்னையாவையும், அவர் மைத்துனரின் புதுமனைவியையும் அம்ஸ்ரடாமில் தரித்து லண்டன் போகும் விமானம் ஒன்றில் அவரிடமிருந்த புத்தகங்களில் சில தயாரிப்பு விசாக்களைப்போட்டு அழைத்துச்செல்ல முன்வந்தார். இருந்தும் கன்னையாவோ ஒரேயடியாக மயிலைமாடுமாதிரி மடுத்துக்கொண்டு நின்றார். ‘இந்த ஆள்தானே தனது பாஸ்போட்டைக் கொண்டுபோய் அநியாயத்துக்குத் தொலைத்தவர்என்று சட்டநாதனைக் காணுந்தோறும் அவருக்கு கேந்தி கேந்தியாக வந்தது. தனது அபிப்பிராயத்தை அவருக்கு முகத்துக்கு நேரே சொல்லவும் செய்தார்.
உமக்கு ஏழரைநாட்டான் நடக்குதுபோல கிடக்கு. பயணம் வெளிக்கிட முதல் குறிப்பொன்றும் பாக்கேல்லையே காணும்……?”
ராதா சொன்னான்: “அவர் எத்தனைமுறைதான்ஷட்டில்விளையாடினாலும் ஜெர்மனிக்கு போகவேபோறார். அப்பிடி கிரகதோஷம், சாபம் இருக்கென்டால் அதெல்லாம் எங்களுக்காய்த்தான் இருக்கும்.”
சரி……சரி.. நடந்ததுகளையே நெடுக யோசிக்காதையுங்கோ……அடுத்து என்ன செய்யலாம் என்று பார்ப்பம். சித்தப்பா சொல்றவழியையும் விட்டிட்டால் இப்போதைக்குச் சாத்தியமான வழியொன்றுமில்லை. முதல் கோணல் முற்றுங் கோணல்…… நீங்கள் தயவுசெய்து மடுத்துக்கொண்டு நிற்காதையுங்கோ…… அவரையும் கூட்டிக்கொண்டுபோய் ஒரு மாதிரிக்கரை சேருங்கோ……ஐயா.”
அந்தஐயாகொஞ்சம் வேலை செய்திருக்க வேணும். யாழ்ப்பாணத்தில் முன்பு ஓடிய டபிள் டெக்கர் பஸ் மாதிரி பல தினுசில் மூச்சுக்கள் விட்டுவிட்டு மௌனமானார். அம் மௌனத்தோடு புதுப்பெண்ணை அனுப்பும் வகையில் முன்பணமாக 5,000 டி.மார்க்குகள் தந்தார். மறுநாள் டெலெக்ஸில் எடுப்பித்த பணத்துடன் இதையும் சேர்த்து எல்லோருக்கும் டிக்கெட்டுகள் போட்டோம்.
மறுநாள் சட்டநாதன் பொழுது விடியமுதலே எழுந்து குளித்துவிட்டுப் பெருமாள் கோவிலுக்குப்போய் பூசையில் கலந்துவிட்டு வில்வம்பத்திரி, திருமண் பிரசாதங்களுடன் கோமளவிலாஸில் நெகிழிப்பைகளில் தேநீரும் வாங்கிவந்து எங்களை எழுப்பினார். பாவமாயிருந்தது.
பெர்லின்போய்டிபோர்ட்ஆகிவந்ததிலிருந்து மற்றப் பயணிகளிடம் அடிக்கும் அலட்டல்கள், அலப்பறைகள், வெடிகள், பிரலாபங்கள் அனைத்தும் நீங்கி முழுமௌனியாகி விட்டிருந்தார்.
மாலை 06:10க்கு விமானம். ராதா தேநீரைக் குடித்துவிட்டு பாத்றூம்போய் வந்து மீண்டும் 11:00 மணிவரை படுத்திருந்தான்.
ஏதும் சுகமில்லையோ.என்னடாஎன்று விசாரித்ததுக்குசாய்…… அப்படி ஒன்றுமில்லைஎன்றவன் திடுப்பென
மச்சான் இன்றைக்கு ஃப்ளைட்டை கான்சல் பண்ணுவம்என்றான்.
என்னடா…… உளர்ற?”
இல்லடா…… விடியப்புறம் என்ர கீழ்வாய்ப்பல்லுகள் முரசோட கழன்றுவிழக் கனாக்கண்டன்…… எனக்கென்றால் இன்றைய விஷயம் சக்ஸஸாய் வருமென்று தோன்றேல்லை………”
கனவுனக்குச் செமியாக்குணத்தில வந்திருக்கும், அதை வைச்சு ஃபிளைட்டைக் கான்சல் பண்றது சைல்டிஷ் மான்.”
எனக்கு லொஜிக்கலாய் விவாதிக்கத்தெரியேல்லை………… ஆனால் கான்சல் பண்றதுதான் நல்லதென்று படுது.”
ஃப்ளைட்டைக் கான்சல் பண்றது சின்ன விஷயம்…… ஆனால் சேர்த்து யோசிக்க நிறைய விஷயமிருக்கு…… சித்தப்பா புத்தகத்துக்கு நெருக்கலாம்…… ‘ பெர்லின் கன்னையாபிறகும் தலையைச் சிலுப்பிச்சுதென்றால்…… அது யோசிக்க வேணும்…… அல்லது உங்களாலதான் சிங்கப்பூரில தொங்கிக்கொண்டு நிற்க வேண்டியிருக்கு, நாங்கள் கொண்டு வந்த காசெல்லாம் கரைஞ்சுபோச்சு……. இனி நீங்கள்தான் எங்களுக்கு ஹொட்டல், சாப்பாட்டுச்செலவுக்கெல்லாம் பார்க்கவேணுமென்று புதுக்கதை தொடங்கலாம்…… அதுபற்றி யோசிக்க வேணும்……. இந்த கம்ப்யூட்டர் யுகத்தில இப்படிக் கனவு, சகுனம் என்று பஞ்சாங்கமாய் இருக்கிறியே…………”
எனக்குள்ளும் மெல்லியதிக்இருந்தாலும் ராதாவைத் தைரியப்படுத்தினேன். “ அறவே நனைஞ்சிட்டம்…… இனிக்குளிரென்ன கூதலென்ன……” என்று 12:00 மணிக்கு அரைமனதுடன் சம்மதம் தெரிவித்தான். அன்றே பெர்லினுக்கு இன்டர் ஃப்ளுக் ஃப்ளைட்டும் இரவு 09:00 மணிக்கு இருந்தது. அதில் கன்னையாமாமி, மைத்துனர் டிக்கெட்டுக்களைஓகேபண்ணிக்கொடுத்தோம். அவர்கள்தான் தமது ஒறிஜினல் ட்ராவல் டொக்குமென்டுகளில் திரும்பப்போகிறவர்களாயிற்றே. கவலையின்றி பெரிய பெரிய பயணவுறைகளில் வாங்கிய பட்டுப்புடவைகளையும், வெள்ளிப்பாத்திரங்கள், நகைகள், கைமணிக்கூடுகள் அனைத்தையும் கட்டில் முழுவதும் பரப்பிவைத்து பிரித்துப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.
மாலையானதும் இரண்டு டாக்ஸிகள் வைத்துக்கொண்டு ஏர்ப்போர்ட்டுக்குப் போனோம். போகும்போது வேகநெடுஞ்சாலையில் டாக்ஸிக்குள்ளிருந்து குருவிகுவிக்’ ‘குவிக்என்பதுபோல ஒலி வரவே புதுப்பெண் தன் கணவனிடம் ஒரு குழந்தைக்குரிய வியப்புடன்அது என்னஎன்று கேட்டார்.
அது வந்து இங்க ஸ்பீட் லிமிட் இருக்கு……. வழமையாக சிட்டிக்குள்ள 50 கி.மீ வேகத்திலதான் ஓட்டவேணும், இது ஹைவேயானபடியால டிரைவர் 70 கி.மீ வேகத்தில ஓட்டுறார். அதுதான் ஸ்பீட் லிமிட்டைத் தாண்டியாயிற்று என்பதை எச்சரிக்கிறது அந்தச்சத்தம். ”
ஆங்………… அப்பிடியா…………… பயங்கர வேகந்தான்.”
இந்த 70.கி.மீட்டருக்கே வாயைப்பிளந்தால் எப்படி…….அங்கே வாருமன் உமக்கு 170……..200 கி.மீ எல்லாம் காட்டிறன்………”
மாப்பிள்ளை எடுத்த எடுப்பில அப்பிடி எல்லாம் செமவேகம் பிடிக்கதையுங்கோ.” என்றான் ராதா. எல்லோரும் அதிர்ந்து சிரித்தோம்.
இரண்டு ஃப்ளைட்டுகளும் விண்ணில் தாவியதும், நாமும் முகில்களாகி எதேச்சையில் மிதப்பதாக உணர்ந்தோம். டாக்ஸி எம் வாடிக்கையானமண்டறின்சைனா உணவகத்துக்கு விரைந்தது. ஃபுட்ஸியும் பியரும் எத்தனையென்று ஞாபகப்படுத்த முடியாத அளவுக்குக் குடித்தோம். ராதாவுக்குப் போதையில் கண்கள் சொக்கிப்போயிருந்தன.
இறால் நூடில்ஸ் வரவழைத்துச் சாப்பிட்டோம். சாப்பிட்டானதும் மொழுமொழு வென்றிருந்த மெழுகுக்கால்களோடு எமக்குப் பரிமாறிக்கொண்டிருந்த பரிசாரகி மங்களமாகஇது எமது கொம்பிளிமென்ட்என்று லிசீவைன் பரிமாறவும் அவளின் பிருஷ்டத்தில் ராதா தட்டினான்.
இது எதுக்கு? ”
அப்பிடித்தான் ஒரு இங்கிலிஷ் படத்தில தட்டுறான்.”
ஹா..ஹா. நீ கொடுத்த 5 வெள்ளி டிப்ஸுக்கு.என்று ஈய்த்துக்கொண்டு உன் பின்னால வந்திடுவாளாக்கும்…… அவளொன்றும் சம்பளத்துக்கு வேலை பார்க்கிற பெண்ணல்ல, ரெஸ்ரோறன்ட் சொந்தக்காரியாக்கும்…… இப்ப குசினிக்குள்ள போயிட்டாள், உனக்குச்சொருககத்தியோடதான் வாறாளோவுந்தரியாது சீனாக்காரி.”
என்றுவிட்டு ராதாவைப் பார்த்தேன். அவ்வளவு போதையிலும் ட்ராஃபிக்கான அந்தச்சாலையின் வாகனங்களில் அடிபடாமல் எப்படித்தான் குறுக்கறுத்தானோ குடல்தெறிக்க ஓடிச் சாலையின் மறுபக்கத்தில் நின்றான்.
மறுநாள் காலையில் நிறையக் கடிதங்கள் வந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உணர்ச்சியூட்டின. ஒரு மாமாங்கத்துக்கு முன்னால் நீர்கொழும்பில் ஒரு உறவினர் வீட்டில் தங்க நேர்ந்தபோது அங்கே அவர்கள் அயல்வீட்டில் ஏழெட்டுக்குழந்தைகளோடு வாழும் சாந்தமேரி எனும் பெண் எழுதியிருந்தாள்.
அன்பான தம்பி;
என் கணவன் கடலில் கூலித்தொழிலுக்குப்போய் கிடைக்கும் காசில் முழுவதையும் குடித்துவிட்டுத்தான் தினமும் வீட்டுக்கு வருகிறார். அவரை இனித் திருத்த முடியாது. பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் ஆரம்பமாகிவிட்டது. அவர்களுக்கு சட்டைகளும், புத்தகம் கொப்பிகளும் வாங்க வகையில்லாம் இருக்கிறேன். தயவுசெய்து என்னை உங்கள் சகோதரியாய் நினைத்து ஏதாவது உதவிசெய்யுங்கோ. எனது குழந்தைகள் ஆளாகி ஒருநாள் உங்களுக்கு அனைத்தையும் திருப்புவார்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.’
காலங்கடந்திருந்தாலும் விலைகூடிய புதுவருட வாழ்த்து அட்டை ஒன்றும் சேர்த்து அனுப்பியிருந்தார். பாவம் அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை.
இரண்டாவது கடிதம் நைரோபியிலிருந்து புறப்பட்டு ஃப்ராங்ஃபேர்ட்டில் தரித்து வார்ஷோவுக்குப் பறக்கும்அல்-இத்தாலியாஃப்ளைட்டில் ஃப்ராங்ஃபேர்ட் அனுப்புவதற்காக, நாம் நைரோபிக்கு அனுப்பி அங்கு கொலராவோ, பன்றிக்கய்ச்சலுக்கோ தொற்றாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாளே இரு இளைஞர்களின் பெற்றோர்களும் கலந்து பேசிக்கொண்டு எழுதியிருந்தார்கள். ‘ தம்பி நீங்கள் அனுப்பிய பிள்ளைகள்தான் ஜெர்மனிக்குப் போய்ச்சேரவில்லை. நாங்கள் கடன்பட்டு உங்களுக்குச் செலுத்திய பணத்தையாவது எங்களுக்குத் திருப்பித்தாருங்கள். பிள்ளைகள் தலையெடுத்து அடைத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் கடன்பட்டோம். இனி உங்களையல்லால் யார்தான் எம் கடனை அடைக்கப்போகிறார்கள்?’
டிக்கெட் செலவினங்கள்போக மீதியைத் திருப்பி விடுவோம்என்றான் ராதா.
*
மூன்றாவது கடிதமும் உணர்ச்சிப்பிழம்பாக இருந்தது. மூன்று இளம்பெண்கள், புதிய ஏஜென்ட் ஒருவரால் சிங்கப்பூர் அழைத்து வரப்பட்டுப், பின் ஏஜென்ட் லாவோஸுக்கோ எங்கேயோபோய் தொங்கிக்கொண்டுவிடஅம்போவென விடப்பட்டவர்கள். சிங்கப்பூரில் தவித்துப்போய் நின்றார்கள். அவர்கள் சிங்கையில் நின்று சீரழியப்போகிறார்களே என்று மூவரையும் சொந்தப் பணத்தில் அம்ஸ்ரடாம் ஊடாக ஜெர்மனிக்கு அனுப்பினோம். அங்கே சிக்கலின்றி உறவினர்களைப் போய் அடைந்தவர்கள் பாதங்களுக்குபூச்சொரிதல்தவிர்த்து மற்றெல்லா வகையிலும் நன்றி நவின்றிருந்தார்கள்.
*
இவர்களுள் செவ்வந்தி என்று ஒருத்தி எம்மைப் பாடோபாடென்று படுத்தியெடுத்துவிட்டாள். இவளுக்கு மூன்றோ நாலு மாசங்களுக்கு முன்னர்தான் திருமணம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. மனைவியையும் கூட அழைத்துப்போய்விடமுடியாததொங்குபொறிவிசாவில் இருந்த இவளது கணவன் பாரீஸுக்குத் திரும்பியிருந்தான்.
அவளை உட்காரவைத்து இரவுமுழுவதும் பாடம் நடத்துவோம். கவனமாகக் கேள்.
நீ வந்து ஃப்ரான்ஸில இருக்கிற ஒரு ஆளின்ர புத்தகத்தில போகப்போகிறாய், அதே ஃப்ரான்ஸிலிருந்து வந்தவள் மாதிரி உன் நடையுடை பாவனைகள் எல்லாம் இருக்கவேணும் கண்டியோ…………”
மென்று தலையைப்பலமாக ஆட்டுவாள். பறக்க இருந்த முதநாள் சேர்ந்து பறக்கும் மற்றைய பெண்களுக்குச் சொல்லிவைத்தோம்.
செவ்வந்தியை இரவு படுக்கமுதல் நல்லாய் முழுகவைத்து கேசம் காத்தில பறக்கிற ஒரு மொட் கேர்ளாய் அவளுக்குக் ஹேயர் ஸ்டைல் பண்ணிவிடுங்கோ. உந்தப் பஞ்சாபி சுடிதார் எல்லாவற்றையும் சுருட்டி உள்ளே வைச்சிட்டு நாங்கள் வங்கித்தாற ஜீன்ஸுக்குள்ள செவ்வந்தியை ஒருமாதிரி இறக்கிவிடுங்கோ.”
ஜீன்ஸ் வாங்கும்போது டென்னிஸ் வீராங்கனைகள் அணிவது மாதிரி பிங்கலரில தலைக்கு ஒரு அகலமான பாண்டும் வாங்கிவைத்திருந்தோம்.
காலையில் செவ்வந்தியைப் பார்த்தால் செழிக்க எண்ணெய் வைச்சுக்கொண்டு அம்மாமிமாதிரி நிக்கிறாள். மற்றவர்களைக் கூப்பிட்டு என்ன சொன்னாங்கள் உங்களுக்கு என்று ஏசினால்…………
அண்ணை நாங்கள் என்ன செய்யிறது…… இரவு அவளுக்கு ஒரு டியூப் ஷம்போ போட்டு முழுகத்தான் வைச்ச நாங்கள். கைப்பழக்கமாம், விடிய எழும்பினவுடன எண்ணெய வைச்சிட்டு நிக்கிறாள். ”
சரி…………. மறுபடியும் ஆளைத் தண்ணியில அமுக்குங்கோ…………” அமுக்கினார்கள்.
அவள் ஃப்ரான்ஸில் தன்னுடைய பேர், ஊர், விலாசத்தைச் சொல்லிக்கொடுத்து சரியாகச் சொல்கிறாளா என்பதை மறுபடிமறுபடி சொல்லச் சொல்லிச் சரிபார்த்தோம். ஹொட்டலில் சரியாகவே சொன்னாள்.
டாக்ஸியிலேறி ஏர்போட்டில் கால்களை வைத்ததும் அருள்வந்தவள் மாதிரி முழுசத்தொடங்கினாள். “முழுசாதை………..விலாசத்தைச் சொல்லுஎன்றேன். அவளுக்குக் குரலே வரவில்லை. திரும்பத்திரும்பக் கேட்கவும் இழப்புவீட்டிலிருக்கும் பெண்களைப்போல ஒரு கேரல் குரலில்வான் கோ அவெனியூ- 37, 75025 பாரீஸ்என்றாள்.
ராதாவை ஒரு கோப்பி வங்கிவரச்சொல்லி அவளுக்குக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினோம். இமிகிறேசன் மேடையை நெருங்கவும் அவள் விரல்கள் லேசாக நடுங்க தன் ஸ்டைலுக்குப் பொருந்தாதவாறு மேலும் முழிசிக்கொண்டு நின்றாள். இன்னும் உறுக்கினால் அழுதுவிடுவாள் போலிருந்தது.
அடியே……உன்னை ஒருத்தரும் இங்க விழுங்க மாட்டாங்கள், சும்மா எங்களோட கதைச்சுக்கொண்டு, மனுஷனோடை பாரீஸில டூயட்பாடிச் சுத்துறதை நினைச்சுக்கொண்டு சந்தோஷமாய் நில்லு பார்ப்பம்.”
மென்றாள் முழுசுவதைக் குறைக்கவில்லை. “ அடியே……… முழுசாதடி, அவங்கள் பயந்து கவுண்டரை விட்டுட்டுப் பின்னால பாயப்போறாங்கள்…………”
முன்னால நின்ற ஒரு வெள்ளைக்கார முதியவரை அடுத்து இவள் முறை வந்தது. பாஸ்போட்டை மேசையில் வைத்தாள். கவுண்டரில் மங்கோலியமுகத்துடன் இருந்த அலுவலர் முகமன் சொல்லி சூட்கேஸை பெல்ட்டில் வைக்கச் சொன்னார். நாங்கள் அதன் நிறை ஒரு கிராம்கூட அதிகமாகாதபடி பார்த்துக்கொண்டோம். அதையிட்டுக்கதைஎதுவும் வந்தால் இவளால் சமாளிக்கமுடியாது என்பது தெரியும்.
இப்போது அலுவலர் பாஸ்போட்டைக் கையில் எடுத்துப்பார்த்தபடிஹாய்……..ஹவ் வாஸ் யுவர் ட்றிப் இன் சிங்கப்பூர்…………… சடிஸ்ஃபையிங்? ” என்றார்.
இவளுக்கு “ ………….ஜ்ஜா தாங்ஸ்என்று சொல்லத்தெரியவில்லை. பயத்தில் கழுத்து நரம்புகள் புடைத்து வெளித்தள்ள முகம் வியர்த்தது. வலிப்பு வந்தவள் மாதிரிப் பற்களை நெறுமிக் கடித்துக்கொண்டாள்.
அவருக்குச் சந்தேகம் வந்தது. “ ஓகே.. மடம் வில் யூ பிளீஸ் ரெல் மீவேர் யூ ஆர் லிவிங் இன் பாரீஸ்?”
செவ்வந்தி என்னைப் பார்த்துக்கொண்டுபாரீஸ்என்றாள்.
குனிந்து அவள் பாதத்தைப்பார்த்துஅவனைப்பார்த்து விலாசத்தைச் சொல்லடி……… ” என்றேன் மெதுவாக.
மீண்டும்பாரீஸ்என்றாள். அவன் மீண்டும் பொறுமை இழந்து,
மடம்…… லுக் ஹியர்………… நோ யூ ஆர் லிவிங் இன் பாரீஸ், லெட் மெ நோ வேர் யூ ஆர் லிவிங் இன் பாரீஸ்………?” வார்த்தைகளை நிறுத்தி நிறுத்திப் புரியும்படி சொன்னான்.
பாரீஸ்
குட் கேர்ள்…… இஃப் யூ டெல் மீ எக்ஸாக்ட் ஆன்ஸர்…… வில் லெட் யூ கோ
செவ்வந்தி மீண்டும்பாரீஸ்என்றாள்.
ஆபீஸருக்கு எல்லாம் புரிந்துவிட என்னைப்பார்த்துப்ளீஸ் டேக் ஹேர் அவுட், இஃப் யு ட்றை நெக்ஸ்டைம், வில் ஹாவ் டு றிபோர்ட் டு போலீஸ்என்றான். அவன் பொலீஸில் காட்டிக்கொடுக்காமல் விட்டதே பெரிய விஷயம். வெளியேறினோம்.
மற்ற இரு பெண்களையும் அனுப்புவதில் அத்தனை சிரமங்கள் இருக்கவில்லை.
செவ்வந்திக்கு 20 வயதுதான். அவளுக்குக் கடைசியாக கட்டைப்பாவாடை கட்டுவித்துபொனி டெயில்எல்லாம் கட்டிச் சின்னப்பெண்போலச் சிங்காரித்து சித்தப்பா ஒருஅப்பாவும் 16 வயது மகளுமாகஒரு புத்தகத்தில் அனுப்பி வைத்து உதவினார். எமக்கு மீண்டும் மூச்சுவிட முடிந்தது.

இப்பெண்கள் ஜெர்மனி போய்ச்சேர்ந்து ஒருவாரமிருக்கும், ஒரு சனிக்கிழமை இரவு 23:00 மணிக்குமேல் இருவரும் உணவகம் ஒன்றில் அடைந்துவிட்டு ஹொட்டலுக்கு அரை மப்பில் றேஸ்-கோர்ஸ் வீதியால் திரும்பிக்கொண்டிருக்கையில் மலேசிய அல்லக்கை ஒருவனால்உழவாரப்பிடியோ, ‘ஹாக்கி மட்டைபோலிருந்த ஒரு தடியால் இருட்டினுள் தாக்கப்பட்டோம். தாக்கியவன் கட்டிடப்புதுப்பித்தல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு வளவுக்குள் தாவியோடித் தப்பித்துக்கொண்டான். ராதாவுக்கு நெற்றிப்புருவம் வெடித்ததில் ஆஸ்பத்தரிக்குப்போய் தையல் போடவேண்டியிருந்தது.
இருட்டடி நிச்சயம் சகோதர ஏஜென்ட் ஒருவரின் கைங்கரியந்தான், வெறும் தொழிற்பொறாமையோ, அல்லதுநான் கூட்டிவந்த பயணியை எப்படி இவர்கள் அனுப்பலாம்என்கிற தயாளசிந்தையோ தெரியவில்லை.
மறுநாள்மூவ்கிறீம் வாங்கி ஒருவருக்கொருவர் தேய்த்துக்கொண்டு, ஹொட்டல் பையன் ஒருவனை அனுப்பி செட்டிநாடு உணவகத்தில் சாப்பாடு எடுப்பித்துச் சாப்பிட்டுவிட்டுகலங்கல்தொலைக்காட்சியில் சம்பந்தா சம்பந்தமில்லாத செய்திகளைப் பார்த்துக்கொண்டும், தொலைபேசி அழைப்புகளை எதிர்பார்த்துக்கொண்டும் அறையிலேயே முடங்கிக் கிடந்தோம்.
*
பெர்லின் போனவர்கள் போன் எடுத்தார்கள். “ நாங்கள் சுகமாக வந்து சேர்ந்துவிட்டோம்…… அம்ஸ்ரடாமிலிருந்துதான் தகவல்கள் இன்னும் ஒன்றும் வரேல்லை.”
அவர்களின் விசாக்களை அம்ஸ்ரடாம் அதிகாரிகள் சந்தேகிக்காமல் நாட்டுக்குள் நுழைய அனுமதித்து விட்டார்களாயின் இதுவரையில் போன் செய்திருப்பார்கள். விசாக்களில் சந்தேகம் வந்து சிக்கலாகி நான் சொல்லிக்கொடுத்தபடி அரசியல் தஞ்சம் கோரியிருப்பார்களாயின் கரித்தாஸோ, செஞ்சிலுவைச் சங்கத்தினரோ வந்து அவர்களைப் பொறுப்பேற்று தமது ஹொட்டலில் தங்கவைப்பார்கள். அதன்பின் பயணிகள் காசோலையை மாற்றி எமக்குத் தொலைபேச சற்றுத்தாமதமாகும். என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை, குழப்பந்தான் எஞ்சியது. மேலே சிந்திக்க முடியாமல் தாமதமாக படுக்கைக்குச் சென்றோம்.

காலை 07:00 மணி இருக்கும். அறையின் அழைப்பு மணிகிர்என்றது. ஹொட்டல் பையன் கோப்பி கொண்டுவருறான் எனக்கதவைத் திறந்தால் என்னவொரு திருக்கோலம்! அணிந்துகொண்டுபோன அதே உடுப்புகளுடன் தலைகள் எல்லாம் கலைந்திருக்க, முகமெல்லாம் எண்ணெய் வழிந்தபடி பயணக்களைப்புடன் அம்ஸ்ரடாம் குழு வாசலில் தரிசனம் தந்தது!
உள்ளே வாங்க……”
கையில் வைத்திருந்த பயணவுறையை தொப்பெனக் கீழே போட்டுவிட்டுக் கன்னையா சொன்னார்:
போன சனிக்கிழமை ஃப்ளைட் ஒன்று அம்ஸ்ரடாம் ஏர்போட்டில நின்றபோது சில இலங்கைத்தமிழர்கள் இறங்கிப்போய் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். வாரவிடுமுறை நாட்களில் செஞ்சிலுவைச்சங்க அலுவலர்களோ,வேறு சமூகசேவை அமைப்பின் அலுவலர்களோ இருக்கமாட்டார்களாம், ஆதலால் திங்கள் வரையில் இவர்களை ஒரு ஹோலில் தடுப்பில் வைத்திருந்திருக்கிறார்கள். அதைப்புரியாமல் நம்மசனம் எங்கே திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பயத்தில ஜன்னலை உடைத்து வெளியே பாய்ஞ்சுறண்வேயிலவழியே ஓடித்தப்பியிருக்கு……… அந்த எரிச்சலில் இருந்த அலுவலர்கள்இலங்கையர்கள்என்றவுடன் எம்மைப்பிடித்து அடுத்த ஃப்ளைட்டிலேயே டிபோர்ட் பண்ணிவிட்டாங்கள். எவ்வளவோ விபரமாக எம் நாட்டுநிலமைகளையும், எம் அவலங்களையும் எடுத்துச்சொல்லியும் அவங்கள் காதில வாங்கவோ மசியவோ இல்லை.”
நீண்ட பெருமூச்சுவிட்டுக் கதிரையில் உட்கார்ந்தார். அறையில் ஏமாற்றமும், அந்தகாரமும் மௌனமும் நிறைந்து கனத்தன!
இவர்களை நிமிர்ந்து பார்க்க விரும்பாமல் ராதா தொடர்ந்து குப்புறப் படுத்திருந்தான். இவ்வகையான ஏமாற்றத்தையும் தோல்வியையும் கொண்ட கணத்தைத்தானே இராவணனும் அனுபவித்திருப்பான். அடுத்த அடுத்த நாட்களும் அந்தகாரத்தில் கழிந்தன. சட்டநாதன் முழு மௌனம் காத்தார்.
புறோட்வேஹொட்டலிலேயே மூவருக்கும் அறைபோட்டுக்கொடுத்தோம். சட்டநாதன் மூன்றாம் முறையும் திரும்பி வந்த விஷயம் இலங்கைத் தமிழ் வட்டகை முழுவதும் வைரலாகப் பரவியது. அவர் எங்கே போனாலும் சனம் விநோத விலங்கொன்றைப் பார்ப்பதுபோலப் பார்த்தது. சிலர் அவரைக் காட்டித் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளவும் செய்தனர். சட்டநாதனைக் கடத்தாவிட்டால் எமது தொழிலும் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. என்னதான் செய்யலாம்…… நின்றும் இருந்தும் கிடந்தும் யோசித்தோம்.
ராதா சொன்னான்: “யாழிலும், வன்னியிலும், மட்டக்களப்பிலும் பொருளாதாரத்தடை; எந்நேரமும் தலையில் ஷெல் விழலாம், தமிழன் மூச்சுவிடமுடியாது, எந்த நேரத்திலும் எந்தச் சிங்களவனும் நெஞ்சில் கத்தியைச்சொருவிடலாம், வீடு புகுந்து தாக்கலாம், தீராத மரணபயம். இந்நிலையில் ஒரு சிலரையாவது, அகதிகளாகவாவது ஏதோவொரு நாட்டில் உயிர்தப்பிவாழ உதவி செய்கிறோம், எமது தொழிலும் அறத்தின் பாற்பட்டது என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தேன், ஆனால் இதொன்றும் அப்படி அல்லப்போல இருக்கு………”
தத்துவச்சித்தர் இப்பிரவசனத்தை எதை வைச்சுச் சொல்றாப்பல………? ”
அல்லது அடுத்தடுத்து இவ்வளவு சோதனைகள் வராது……”
ஒருவனுடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் பிறீ-புறோகிராம் பண்ணப்பட்டிருக்கு என்றதை நம்பிறியோ……?”
அட நீயும் வேதாந்தம் பேச ஆரம்பிச்சிட்டியா……. எந்த நாடுதான் அகதிகளை முழுமனதோட வரவேற்குது..? நாங்களும் எத்தனை ஏர்போட்டுகளில் எத்தனை அதிகாரிகளுக்குக் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு அகதிகளைக்கொண்டுபோய்ச் சேர்க்கிறம். அவர்களும் பற்களை நெறுமிக்கொண்டுதான் தருணங்களில் சிரிக்கிறார்கள். இதுவும் ஒரு வகை அத்துமீறலே, தர்மத்தின் வகைப்பட்டதல்ல. சக ஏஜென்டின் காட்டிக்கொடுத்தல், இருட்டடிகள், மாட்டுப்பட்டால் கிடைக்கக்கூடிய தண்டனைகள் இத்யாதிகளிலிருந்து தப்பித்து ஏதோ தியாகம் செய்கிறோமென்று நினைத்துக்கொண்டிருப்பது வெறும் கற்பனை, ஊடோபியா, அறவியலுக்குள் அடங்காது………… எமது சாங்கியங்கள்.”
ஒரு படம்பார்க்கத் தொலைக்காட்சி முன்னால் அமரும்போது கொஞ்சம் வேர்க்கடலையோ, வறுத்த பூசினி, சூரியகாந்திவிதையோ எடுத்து உரித்துக் கொறித்துக்கொண்டு ஆரம்பிப்போம். நேரமாக ஆக அப்படத்தை விடவும் விதைகளை உரிப்பதும் கொறிப்பதும் எரிச்சலாக இருக்கும், ஆனாலும் விடமாட்டோம், நிறுத்தாமல் கொறித்துக்கொண்டே இருப்போம். அப்படித்தான் எமக்கு ஏஜென்ஸித் தொழிலுமிருந்தது.
*
பத்திரம் பத்திரம் பத்திரமாகஅனுப்பிவைக்கவேணுமென்று கேட்டு அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணும் தாயும் வந்து சேர்ந்தனர். அதே ஃப்ளைட்டில் நான் முன்பு அனுப்பிவைத்த பயணிகளின் சிபாரிசின் பெயரில் ஒரு இளந்தம்பதியும் சுவிஸ்போவதற்காக வந்தது. பையன் முன்பு கப்பலில் வேலை செய்தவனாம். 10,000 டொலருக்கும் மேல் பயணியர் காசோலையும் நிறைய கரன்ஸியும் வைத்திருந்தார்கள். மாலை வேளைகளில் மனைவியும் அவனுமாக ஜாலியாக வெளியில் சுற்றித்திரிவார்கள். திரும்பிவரும்போது எங்களுக்கும் லிசி, மங்குஸ்தான், பாஷன், டோறியான் பழங்கள் வாங்கி வருவார்கள்.
சட்டநாதன் அறையிலேயே முடங்கிக் கிடந்தார். ராதாஆரம்பத்தில ட்றை பண்ணின மாதிரி பிரிடிஷ் ஏர்வேய்ஸில ட்றை பண்ணினாலென்ன……” என்றான்.
ஏதோ ஒன்று செய்தாக வேணுமே…… செய்வம். ” என்றேன்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஃப்ளைட் உள்ள நாளாகப்பார்த்து ஆளை அவருடைய ஒறிஜினல் பாஸ்போட்டில உள்ளேவிட வேணும்…… என்ன ஓவர் ஸ்டேக்கு ஃபைன் கொஞ்சம் கட்டவேண்டி வரும்.”
பரவாயில்லை…… அதையும் கட்டுவம், பின்ன பிரிடிஷ் விசாவுள்ள பாஸ்போட்டை இமிகிறேசனில காட்டினம் என்றால் இங்கிலிஸ் தெரியாதகாய்அதில நின்று இடறுப்பட்டு முக்குளிக்கும். ”
சட்டநாதன் பிறகும் ஏதும் கோல்மால் பண்ணினாரென்றால் அதிகாரிகள் உஷாராகி விடுவார்கள். இந்த ரூட்டும் நோண்டியாகி விடும், பிறகு வேறெவரையும் இந்த ரூட்டில தள்ளமுடியாதுபோய் விடும், ஆனாலும் எமக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. ‘ரிஸ்க்எடுத்துப் பார்ப்பதெனத் துணிந்தோம்.
தம்பதி கொஞ்சம் முன்பணம் தந்தனர். ராதா போட்டிருந்த கனமான தங்கச்சங்கிலியை முதன்முதலாக அடகுவைத்தான். ஃப்ராங்ஃபேர்ட் தரித்துப்போகும் லண்டன் ஃப்ளைட்டுக்கும், அதேநாள் கொழும்புக்குமாக இரண்டு டிக்கெட் போட்டோம். ஏர்போட்டுக்கு நாம் டாக்ஸியில் போய்க்கொண்டிருக்கும்போது வெளியே பார்த்துக்கொண்டு வந்த ராதா தன்பாட்டுக்குச் சிரித்தான்.
என்ன சிரிப்பு…… தரிசனங்கள் ஏதும் பிரத்தியட்சமாகுதோ………?”

சட்டநாதனுக்குப் புரிந்துவிடாமல் ராதா ஆங்கிலத்தில் சொன்னான்.

இல்லை, சட்டநாதன் நமக்குத்தாறது ரெண்டு லட்சம்…… நாம அவரை அனுப்பச் செலவு செய்யிறது ஆறு லட்சத்துக்கும் மேல. முன்னைப்போல நாடு பிரச்சனைகள் எதுவும் இல்லாம இருக்கென்றுவை, நாங்கள் இந்தத்தொகையை அவருக்கே உபயம் பண்றமென்றும்வை…… அவரும் அதைக்கொண்டுபோய்மக்கள்வங்கியின் நிலை இருப்புத் திட்டத்திலபோட்டால், மாசம் ஆறாயிரம் ரூபாய் வட்டிவரும். அவர் அதைவைச்சு அங்கேயே தர்பார் நடத்திக்கொண்டு வாழலாம் அதைத்தான் நினைச்சுப் பார்த்தேன்……… ”
இந்த ஒவ்வொரு தனியனுடைய அலைச்சல், உலைச்சலுகளுக்குக் காரணம் நான் முன்ன சொன்னேனே…… ‘பிறீ புறோக்கிராம்என்று அப்பிடி வைச்சிட்டால் மனவுளைச்சல் இல்லை.”
வெளிநாடு போய்த்தான் பெரிசாய் என்னத்தைக் கிழிச்சம்………. கறுப்புதோலோட இலங்கையிலிருந்து போகிற அகதிகளை வெள்ளையன் ஒரு பூச்சியைப்போலத்தான் பார்க்கிறான். சுவிஸில முழு இலங்கைத்தமிழரையும் திருப்பி அனுப்பப்போறானாம். ஜெர்மனியில பழைய கிழக்கு ஜெர்மனியின் குக்கிராமங்களில் ரஷ்ய இராணுவம் இருந்த பழைய கட்டிடங்களில் செர்பிய, அலபானிய, குர்திஷ் அகதிகளோட சேர்த்துக் கஞ்சி ஊத்திறான். கைச்செலவுக்கு வாரம் 20 டி.மார்க்குகள் கொடுக்கிறான். அகதிகள் ஃப்ரான்ஸில் வீடு, வேலை இரண்டுமே எடுக்கமுடியாது. கிடைக்கும் அறைகளில் அடுக்குக்கட்டிலிலும், செற்றிகளிலுமாய் பத்துப் பன்னிரண்டுபேர் தூங்கறான். இவர் ஃப்ரான்ஸ்போய் ஃப்ரெஞ் படித்து வேலை தேடி உழைக்கிறதுக்குள்ள பென்ஷன் வயதைத்தாண்டிவிடுவார். உண்மையைச்சொல்லி ஐரோப்பா உனக்குச் சரிவராது என்றால் கேட்பாரோ……………?”
பாவம்…….. நாலு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில எவ்வளவு எதிர்பார்ப்புக்கள் இருக்கும். மனுஷன் அங்ஙினபோய் 100 டி.மார்க்குகள் அனுப்பினாலும் அதுகளுக்கு எவ்வளவோ ஆறுதலாக இருக்கும்.”
அப்பிடி அனுப்பிற மாதிரி அமைஞ்சுதென்றால்……… அதிஷ்டந்தான்.” மூச்செறிந்தான்.
கொழும்பு டிக்கெட்டையும் பாஸ்போட்டையும் கொடுத்து ஏர்போர்ட் கவுண்டரில் போடிங்கார்ட் எடுத்தோம். லண்டன் டிக்கெட்டையும், தலைமாற்றிய பிரிடிஷ் விசாவுள்ள பாஸ்போட்டையும் பிரிடிஷ் ஏர்வேய்ஸ் கவுண்டரில் கொடுத்தோம், அவர்கள் ஒரு விசாரணையுமில்லாமல் போடிங்காட்டைத் தந்தார்கள். அதையும் எடுத்துக்கொண்டு ஒரு மூலையாகப்போய் காலியாக இருந்த இருக்கைகளில் சட்டநாதனை அமரவைத்து அவருக்கு 109 வது தடவையாக விளக்கங்கள் கொடுத்தோம்.
இங்கே பாருங்கோ……… இனியும் எங்களைச் சோதிக்கப்படாது, எல்லாவற்றையும் சரியாகக் கிரகித்து ஜெயராமனாய் ஃப்ராங்ஃபேர்ட்டிலபோய் இறங்கிறியள்……”
புன்னகைத்தார். “ ச்சாய்…………… நான் இனிப் பிழைவிடமாட்டன்…… நீங்கள் சொல்லித்தந்தபடியே அத்தனையும் சரியாய்ச் செய்வன்…… கவலை விடுங்கோ…….”
இதுக்கு மேல நீர் எது செய்தாலும் அதுதான் உம்ம தலைவிதி, இந்த பிரிடிஷ் பாஸ்போட்டையும், போடிங் காட்டையும் பெனியனுக்கு உள்ளே வையும்வைத்தார்.
மற்றப் பாஸ்போட்டையும் போடிங்காட்டையும் செக்கிங்கில காட்டும், ஓவர் ஸ்டேக்கு 90 வெள்ளி சொச்சம் கேட்பாங்கள், கட்டிவிடும்……சரியா, லண்டன் ஃப்ளைட் 17:45க்கு, நீங்கள் முந்திப்போன மாதிரி ட்ரான்ஸ்ஃபர் ஹோலுக்குள்ள நுழையப்படாது. ஆனால் அதுக்குப் பக்கத்திலுள்ள ரொயிலெட்டுள்ள புகுந்து உம்முடைய சொந்தப் பாஸ்போட்டையும் ஃபைன் கட்டின ரசீதையும் உள்ளே வைச்சிட்டு, உள்ளே இருக்கிற மற்றப் பாஸ்போடையும் போடிங்காட்டையும் வெளியே எடுக்கிறீர். இன்னும் ஒரு 70 மீட்டர் மேல நடந்தால் ட்ரான்ஸிட் அன்ட் போடிங் பாசெஞ்சேர்ஸ் என்று இன்னொரு ஹோல் வரும். சி-32 அதன் நம்பர், அதுக்குள்ளதான் அடுத்து நுழையிறீர்.”
சரி.சரி
“ 17:15 க்கெல்லாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புறப்பட்டுவிடும். நீர் அதுவரையில் மெயின் ஹோலில இருக்கிற எக்ஸ்கலேட்டரில மேல ஏறி அங்க இருக்கிற ரெஸ்ரோரன்டுள்ள புகுந்து கோப்பி குடித்து நேரத்தைக் கடத்திறீர்……… ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்காரன் மிஸ்டர்.சட்டநாதன், மிஸ்டர்.சட்டநாதன், மிஸ்டர்.சட்டநாதன்……… என்று கோட்டில மாதிரி மூன்றுதரம் கூப்பிடுவான், நீர் காதில போடக்கூடாது.”
சரி……”
பிறகு 17:20 போல கீழே இறங்கி ஹோல் சி-32க்குப் போறீர்……… இனிக் ஹோல்ல சந்தேகம் வந்தால் நீல ஜூனிஃபோமில இருக்கிற எந்த ஒஃபிஸரிட்டையும் கேட்கலாம். பிறகென்ன ஃப்ளைட்டில ஏறிக்குந்திறதுதான். நொன்ஸ்டொப் ஃப்ளைட்……. ஜெர்மனி லோகல் ரைம் 12:05 க்கு இறங்குது. ட்ரான்ஸிட்டில இறங்கி ஜேம்ஸ்பொண்ட் மாதிரி வெளியே போறீர்…….”
மீண்டும் தரையிலிறங்கி விட்டது மாதிரிப் புன்னகைக்கிறார்.
சட்டநாதனை உள்ளே அனுப்பிவிட்டு நாமும் டிபாச்சர் அரங்கின் முதலாவது தளத்துக்குப்போய் நின்று கொண்டோம். அங்கே நின்றுகொண்டால் பிரதான அரங்கில் நடப்பவைகளை அதன் உயரமான கண்ணாடிச் சுவரினூடாகக் கண்காணிக்கலாம்.
சட்டநாதன் இமிகிரேஷன் சம்பிரதாயங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேரே ரொயிலெட்டினுள் ஜேம்ஸ் பொன்ட் ப்றீஃப் கேஸுடன் நுழைந்தார். இரண்டு நிமிஷங்களில் மீண்டும் வெளியே வந்தார். ஷேர்ட் பின்பக்கம் சரியாக ட்ரவுசரினுள்ளே விடப்படாமல், கோட்டைவிடவும் நீண்டு கீழே தொங்கியது. கோட்டின் பொத்தான்கள் மீளவும் மாட்டப்படவில்லை. வெளியே வந்தும் சில விநாடிகள் கோமாளிகள் மாதிரி முழித்துக்கொண்டு நிற்கிறார். ராதா சொன்னான்: “ கேஸ் ஃபைன் கட்டின ஒறேஞ் சீட்டைக் இன்னும் கையில் பிடிச்சிருக்கு……… அப்பிடியென்றால் கையில் வைச்சிருக்கிறதும் இழவு ஒறிஜினல் பாஸ்போட்டுத்தான்போல………”
இரண்டுமே ஸ்ரீலங்கன் பாஸ்போட்டுக்கள், அதனால எதைக் கையில் வைத்திருக்கிறார் என்பதைத் தூரத்திலிருந்து துணியமுடியவில்லை. இதுக்கெல்லாம் என்ன பைனாகுலரா வைத்திருக்கமுடியும்? லண்டன் டிக்கெட் போட்ட புத்தகத்துக்கு ஃபைன் ஒன்றும் கட்டவேண்டியதில்லை.
சாமான் அநாவசியத்துக்கு ஃபைன் ரசீதைக்காட்டி மாட்டப்போகுது…………” ராதா அரற்றினான்.
சட்டநாதன் மீண்டும் ஒரு தடவை சுழன்று நாலுதிசைகளிலும் அலங்கமலங்கப் பார்த்துவிட்டு ரெஸ்ரோறன்ட்டின் திசையில் ஒட்டகம் மாதிரி நடந்தார். பின் எக்ஸ்கலேட்டரில் ஏறி பாலன்ஸ் செய்துகொண்டு நின்றார். 17:10 மணிக்குள் இரண்டுதரம் அவர் பெயரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அழைத்து உடனடியாக விமானத்துக்கு வரச்சொன்னது. பிரதான அரங்கின் பிரமாண்டமான அறிவுப்புத்திரையில் ஏர்லங்கா என்றதுக்கு எதிராகபோர்டிங்என்று பச்சை லைட் இன்னும் எரிந்துகொண்டிருந்தது.
அங்கே பாரடா கேஸைஎன்றான். பார்த்தேன்.
சட்டநாதன் இப்போ எக்ஸ்கலேட்டரில் இறங்கிக் கொண்டிருந்தார். கோப்பியைக் குடித்துக்கொண்டிரு…….. 17:20க்கு முதல் கீழே இறங்கப்படாது என்று எத்தனை தடவைகள் திரும்பத்திரும்பச் சொல்லி இருந்திப்போம்.
ராதா சொன்னான்: “இது சுத்த அங்கொட கேஸ்…………(மனநல மருத்துவமனை உள்ள இடம்) மாமாவும் விஷயம் தெரியாமல் பிடித்து எங்களை மாட்டிவிட்டிட்டார். நாமளும் விஷயம் பிடிபடாமல்த்தான் பரதேசியோட உலைஞ்சிருக்கிறம்………….. நாதாரிக்கு ஐந்து நிமிஷத்துக்குள்ளபிலாதிவந்திட்டுது பார்……….. இந்தமுறையும் ஏதும் செய்து நாத்திக்கொண்டு வந்துது………அம்மாவாணை கத்தியெடுத்துச் சொருகாமல் விடன் ………….” ராதா ஆற்றாமையில் இரைந்தான். அவன் கன்னங்கள் சிவந்து துடித்தன.
நான் அவனைச் சமாதானப் படுத்தினேன். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணியாளர்கள் யாராவது வந்து தன்னை ரெஸ்ரோறன்டுக்குள்ள தேடிவரலாம் என்கிற முன்யோசனையிலதான் ஆள் இறங்கிசிப்ளாக்குள்ள போகுதாக்கும், அங்கேயும் ரொயிலெட்டுகள் இருக்கு, நுழைந்து மறைந்தும் இருக்கலாம்.
இப்படி எல்லாம் செய்வாரென்று தெரிந்திருந்தால் நாமும் ஒரு கொழும்பு டிக்கெட் எடுத்து உள்ளேபோய், கேஸைச் சரியான ஃப்ளைட்டில ஏற்றிவிட்டிருக்கலாம். டிக்கெட் 300 டொலர்களை யோசிச்சு………”
இவ்வளவு கோச்சிங்குக்குப் பிறகும் இப்படிச் செய்வாரென்று ஆர் கண்டது?”
குறைஞ்சது. ஒரு விவரமான ஆளைத்தன்னும் இந்தாளோட போட்டிருக்க வேணும்
“...ம்ம்ம்………… யார் போறான் இதோட கூட?”
இன்னும் ஏர்போட்டிலெயே நின்றுகொண்டிருப்பது விவேகமாகப் படவில்லை.
எமது வாடிக்கையான சைனீஸ் உணவகத்துக்குப்போய் சாப்பிட்டோம்.
இரவு தூக்கம் பிடித்தபாடில்லை. இந்த ஆள் என்ன செய்திருக்கும், ஃப்ராங்ஃபேர்ட் போய்ச்சேர்ந்திருக்குமோ…… இல்லை ஏதாவது புதுக்கரைச்சலை உண்டாக்கியிருக்குமோ………………?
லெட்ஸ் பி ஒப்ரிமிஸ்டிக்என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டோம்.
நேரம் நகர மறுத்தது……….. வெளியில் காற்றாடவில்லை. படுக்கையில் உடம்பு நசநசத்தது. எல்லவற்றையும் மீறி எப்போதோ தூங்கிப்போனோம். காலையில் ஹொட்டல் பையன் கொண்டுவந்த தேநீரைக் குடித்துக்கொண்டிருக்கையில் தொலைபேசி அடித்தது. பாய்ந்துபோய் எடுத்தேன்.
தம்பி நான் சட்டநாதன் பேசிறன்
என்ன……எல்லாம் வெற்றிதானே…… ஃப்ராங்ஃபேர்ட் போய்ச்சேர்ந்தாச்சே………?”

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்காரனல்லே………… பாதி வழியில வந்துமக்கா மே மொக்கத கரண்ணே(இங்கே என்ன செய்கிறாய்) என்று பிடிச்சுக் கொண்டுபோய் ஃப்ளைட்டில ஏத்திட்டான்.”
ஏன் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் புறப்பட முதல்ல கீழை இறங்கித்தொலைச்சீர்…… அங்கேதான் திரும்பின பக்கமெல்லாம் மணிக்கூடுகள் இருக்கே, பார்த்து இறங்கியிருக்கலாமல்லே…………?”
என்னுடைய வாச்சில 05:20 காட்டத்தான் இறங்கின்னான். அதுகூட உங்களுடைய மணிக்கூட்டில பார்த்துச்செற்பண்ணினதுதான்.”
எந்த மணிக்கூடு?”
அதுதான் தலைமாட்டில வைச்சிருப்பியளே அலார்ம் மணிக்கூடு.”
நாசமாய்ப்போக…….. அது இரண்டு கிழமையாய் ஓடாமல்க்கிடக்கு.”
அது சரி…….நீர் பிரிடிஷ் ஏர்லைன்ஸின்ர போர்டிங்காட்டைக்காட்டினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்காரன் ஏன் கூட்டிப்போறான்……… நீர் பாஸ்போட்டை மாத்தி வைக்கேல்லையா………?”
“….ஏதோபிசகிப்போச்சு…….என்ர கஷ்டகாலம்.”
சரி, இப்ப எங்கநின்று பேசுறீர்……?”
இங்க இந்திய அமைதிப்படை உடன வெளியேற வேணும் என்று ஜே.வி.பி காரங்கள் றோட்டில இறங்கிக் கலகம் செய்யுறாங்கள். பருப்பு, உளுந்து, பயறு, கொத்துமல்லி விற்கிற கடைகள் எல்லாம் அடிச்சு உடைக்கிறங்கள், மீறி விற்கும் கடைக்காரர்களைக் கடத்திக்கொண்டுபோய் வெடிவைக்கிறாங்கள்…….. இதுவே இனக்கலவரமாய் மாறலாமோ என்கிற பயத்தில் கோவில்கள், ராமகிருஷ்ண மிஷன் எல்லாம் அகதி முகாம்களாக்கப்பட்டுத் தமிழ்ச்சனங்கள் போய்த்தஞ்சம் அடைந்தபடி இருக்கு……… நானும் கப்பித்தாவத்த பிள்ளையார் கோவிலிலேதான் இருக்கிறேன், பக்கத்தில கொம்மூனிகேசன் சென்டர் ஒன்றில நின்று கதைக்கிறன், நிலமை பதட்டமாய் இருக்கிறதால நான் உடன கோயிலுக்குத் திரும்பவேணும்………”
வெளியில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த ராதா போன் கதைத்த சத்தம் கேட்டு ஆவலுடன் உள்ளே ஓடிவந்தான்.
என்ன………சட்டநாதனோ பேசுறார்…………… ?”
ஓமோம்…………அவர்தான்
நான் போனை அவன் கையில்தந்து அறையைவிட்டு மெல்ல வெளியேறினேன்.

*

குறிப்பு:- இக்கதை 1994 ஆம் ஆண்டு கணையாழி நடத்திய தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் இரண்டாம் இடத்தை வென்றது.

**
+ இரு சிறுகதைகள் :
சந்திரிகா - பொ.கருணாகரமூர்த்தி கலைஞன் - பொ.கருணாகரமூர்த்தி.
நன்றி : பொ. கருணாகரமூர்த்தி , எஸ்.எல்.எம். ஹனிபா , ஸபீர்