Showing posts with label பிலால் அலியார். Show all posts
Showing posts with label பிலால் அலியார். Show all posts

Saturday, April 4, 2020

கொரோனாவும்-தமிழகமும்-தமிழக இஸ்லாமியர்களும் - பிலால் அலியார்

வளைகுடாவின் முக்கிய வியாபார நகரமான துபாயில் ஜனவரி மாதம் கடைசி வாரமே கொரோனா தொற்று நோய் குறித்த உரையாடல்கள் தொடங்கிவிட்டன. சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பெரிய இழப்பை உருவாக்கிய கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. முதலில் சீனா மட்டுமே பாதிக்கப்படும் என்றே கருதப்பட்டது. ஆனால் பிப்ரவரி இரண்டாவது வாரமே அனைவருக்கும் உயிர் பயத்தை கொரோனா உருவாக்கி விட்டது. கொரானோ தொற்றிலிழுந்து நம்மை காத்துக்கொள்ள அரசுகளும், சுகாதார நிறுவனங்களும் வழிமுறைகளை வகுத்து Social distancing என்றழைக்கப்படும் மக்கள் நெருக்கத்தை குறைக்க திட்டங்களை வகுத்தனர். ஆனாலும் கொரோனாவின் வீச்சும், இழப்பும் இந்த நிமிடம் வரை நம்மை அச்சுறுத்தியே இருக்கிறது. மேலும் நமக்கு தெரிந்து உலகெங்கிலும் கொரோனா பரவலை தடுக்க மத, இன, மொழி, இட வேறுபாடற்று அனைவரும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானோவிற்க்காக பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அவை அனைவருக்கும் பொதுவானதாகவும், எவரையும் குற்றம் சுமத்தியும் உருவாக்கப்படவில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்துவதிலும், அவர்களுக்கு மன ரீதியாக உதவுவதிலும் எந்தவொரு நெருடலுமல்லை.

இந்தியாவிலும் கொரானா தொற்று பிப்ரவரி ஆரம்பித்திலேயே கேராளாவில் பதிவு செய்யப்பட்டாலும், இந்திய ஒன்றிய அரசும், மாநில தமிழக அரசும் மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்காமலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடராமலும் தேங்கி நின்றனர். ஆனால் நிலைமை கையை மீறிச்சென்ற பிறகு மார்ச் மூன்றாம் வாரம் இந்திய அளவில் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. Social distancing என்பது ஏட்டளவிலே இருந்தது, மக்கள் தங்களின் சமய வழிபாடு, சமூக கூடல்களில் இணைந்து பங்கேற்று கொரோனாவை வரவேற்றனர். மேலும் மருத்துவர்களுக்கான, மருத்துவ பணியாளர்களுக்கான நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும், மருத்துவர்களே நோய் தொற்று ஆளாகக்கூடிய சூழலும் உருவாகி இருப்பதாக செய்திகள் வலம் வர ஆரம்பித்தன.

இந்த நிலையில் டெல்லி நிஜாமுதீன் பள்ளிவாசலில் கூடிய தப்லீக் ஜமாத் என்ற இஸ்லாமிய மதத்தினர் சிலருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களை பரிசோதனைக்கு அழைத்திருப்பதாகவும் அரசின் சார்பில் செய்தி வெளியாகியது. அது முதல் ஊடகங்கள், சமூக வலை தளங்களான வாட்ஸ்அப்களில் தொடர்ச்சியான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. குறிப்பாக தினமலர் பத்திரிக்கை தப்லீக் ஜமாத்தார்கள் தலைமறைவாகினர் என்று வஞ்சமாக செய்தி வெளியிட்டது. சன்டிவி, நியூஸ் 18 போன்ற செய்தி ஊடகங்கள் தப்லீக் ஜமாத்தார் மூலமாக மட்டுமே கொரோனா தமிழகத்தில் பரப்பபடுவதாக தலைப்பிட்டு செய்திகளை வழங்க ஆரம்பித்தது. கொரோனா பயத்தில் இருந்த சாமானிய பொதுமக்களும் தங்களுக்கு கிடைத்த தொடர்ச்சியான பொய் செய்திகளின் அடிப்படையில் இஸ்லாமியர்களை கொரானோவின் இந்திய தூதுவர்களாக கருத ஆரம்பித்தனர். இதனால் ஒரு சமூக குழப்பமும், அமைதியின்மையும் உருவாகியது. குறிப்பாக பல நகரங்கள், கிராமங்களில் இஸ்லாமியர்கள் தனித்து விடப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அரசின் சுகாதார செயலாளர் அனைத்து தப்லீக் ஜமாத்தினரும் பரிசோதனைக்கு வந்து விட்டனர் என்றும்,  அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக ஊடக சந்தப்பில் அறிவித்த பிறகும், இப்போது வரை கொரோனாவிற்கு மத சாயம் பூசப்பட்டு மக்களிடையே பிரிவினையை உருவாக்கி வைத்திருக்கின்றனர் பாசிசவாதிகள், ஊடகங்களின் துணையுடன்.

கொள்ளை நோயில் இருந்து ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை காத்து கொள்ள, தங்களுக்குள் பரஸ்பர ஒற்றுமையுடன் இணைத்து பயணிக்க வேண்டிய தருணத்தில், சகோதர்களாக வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தை பிரித்து வைத்திருப்பது, இஸ்லாமியர்களுக்கு மிக கொடுமையான மன அழுத்தத்தை, மனவலியை உருவாக்கி இருக்கிறது. இதை களைய வேண்டிய அரசே,  ஊடங்களின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டும் காணாமல் ஊக்குவிப்பது நிலைமையை மோசமாக்கி வருகிறது.

இந்த சூழலில் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிமுறைகள்  தீவிரமாக ஆராயப்பட வேண்டும். அவதூறுகளை களைய சட்ட ரீதியாக நடவடிக்கைகளையும், மாநிலத்தின் ஏனைய முற்போக்கு இயக்கங்கள், அமைப்புகளுடன் இணைந்து கீழ்காணும் பணிகளை தாமதிக்காமல் செயல்படுத்த முனைய வேண்டும்.

1. தமிழக இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள், ஜமாத்துல் உலமா சபை அனைத்தும் உடனடியாக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை (மருத்துவர்கள், வழக்கறிஞர், தொழில் துறையினர், அரசியல் இயக்கத்தினர், உலாமாக்கள் அடங்கிய குழு)  உருவாக்கி, தமிழக அரசிடம் தப்லீக் ஜமாத்தினர் குறித்த வெள்ளை அறிக்கையை கோர வேண்டும். அரசு உடன்படாத சூழலில் தற்போது இருக்ககூடிய சட்டப்பூர்வ வழிகளை ஆராய வேண்டும்.

2. தமிழக இஸ்லாமிய ஒருங்கிணைப்பு குழு, தமிழக ஜனநாயக முற்போக்கு அமைப்புகளான திமுக, திராவிட கழகம், மதிமுக, விசிக, காங்கிரஸ், அமமுக, இடதுசாரி இயக்கங்களின் தலைமையுடன் பிரச்சனையின் வீரியம் குறித்து உரையாடி, இஸ்லாமியர்களை பொது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் கொடுமையை விளக்க வேண்டும். கட்சிகள், ஜனநாயக அமைப்புகளின் மாநில தலைமைகளின் வழியாக அந்தந்த அமைப்புகளின் மாவட்ட, நகர, கிராம நிர்வாகிகளுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி, இஸ்லாமியர்களுக்கான வாழ்வாதார உரிமையை நிலைநாட்டுவது குறுத்து தீவிரமாக வலியுறுத்த வேண்டும்.

3. ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் இஸ்லாமிய பிரமுகர்கள் முடிந்தவரை காவல்துறை அனுமதியுடன் பிறமத, பிறசமூக பிரமுகர்களுடன் உரையாடி, தப்லீக் ஜமாத் குறித்தும், அவர்களின் நோய் தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பு குறித்த அரசின் உண்மை நிலையை புரிய வைக்க வேண்டும்.

4. ஒவ்வொரு தனிப்பட்ட இஸ்லாமியனும் தன்னுடன் தொடர்பில் இருக்கும் பிறமத சமூக நண்பர்கள், பிறசமூக அமைப்புகளிடம் நடந்து கொண்டிருக்கும் பிரிவினைவாத பாசிச செயல்பாடுகளை விளக்குவதும், அதனால் இஸ்லாமியர்களுக்கு உண்டான இழப்புகள் குறித்தும் விளக்க வேண்டும்.

5. நாம் ஒவ்வொருவரும் அரசின் நோய் தடுப்பு கட்டுப்பாடு உத்தரவுகளையும், காவல்துறையின் அறிவுறுத்தலையும் எந்தவித சமரசமுமின்றி பின்பற்றுவதே நமக்கும், சமூகத்துக்கும் பலனளிக்குமே தவிர, மதரீதியாக சமரசங்களை மேற்கொள்வது கண்டிக்கப்படக்கூடியாதகவும் இருக்க வேண்டும்.

6. ஒவ்வொரு ஊரில் உள்ள ஜமாத் அமைப்பினரும் இந்த இக்கட்டான சூழலில் அரசுடன் இணைந்து அறிவியலுக்கு கட்டுப்பட்டு இந்த கொள்ளை நோயில் இருந்து அனைவரையும் காப்பாற்ற உறுதியேற்க வேண்டும்
தற்போதைய ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடு சூழலில் நாம் எவ்வாறு இவற்றையெல்லாம் செயல்படுத்த முடியும் என்ற பெரும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் சமூகத்திற்காக இந்த செயல்பாடுகளை நாம் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும்.

தனித்திருப்போம்
விழித்திருப்போம்
நம்பிக்கையுடன் இருப்போம்
சமத்துவம்/சகோதரத்துவம் காப்போம்
கொரோனாவை வெல்வோம்.
*

நன்றி : பிலால் அலியார்

Wednesday, November 27, 2019

பாபர் மசூதி தீர்ப்பும் சமூக அரசியலும் - பிலால் அலியார்

'திராவிட வாசிப்பு’ மின்னிதழில் சகோதரர் பிலால் அலியார் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
*


இந்தியா என் தாய் நாடு, இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என பள்ளிக்காலங்களில் தினந்தோறும் உறுதிமொழி எடுத்த நமக்கு, 2019 நவம்பர் மாத ஆரம்பத்தில் வெளியான சமூக வலைதள செய்திகள் அவற்றை பொய்யாக்கின. அரசும், நீதிமன்றமும், ஊடகங்களும் மக்களை பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றும், தொலைதூர பயணங்களை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு பதட்டம் நிறைந்த சூழலை உருவாக்கின.

நவம்பர் 9, 2019, அன்று தான் இந்தியாவின் ஒருமைப்பாடு, சமத்துவம், மத நல்லிணக்கத்தை சிதைத்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குவதாக அறிவித்தது. இந்திய அரசியலமைப்பின் நேர்மையான, சுதந்திரமான ஜனநாயக அமைப்பான உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னரே, அது எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அரசியல் புரிதல் கொண்ட அனைவருமே அறிந்து வைத்திருந்தது தான் பாசிச பாஜகவின் வெற்றி.

தீர்ப்பு குறித்து அறியும் முன், பாபர் மசூதி இடிப்பு குறித்த உண்மையான வரலாற்றை நாம் அறிய வேண்டும்.

1992-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கலவர விதை அதற்கும் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்டது. 1949-ம் வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவில் திருட்டுத்தனமாக பாபர் மசூதியின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து, அதன் வாயில் கதவை உடைத்து குழந்தை ராமன் சிலை நிறுவப்பட்டது. ராமன் சிலையை மசூதிக்குள் கொண்டு ஓடியவர் வைணவ அகோரியான அபிராம் தாஸ்.

பாபர் மசூதி இடிப்பை போன்றே மசூதிக்குள் சிலையை நிறுவியதும் விரிந்த அரசியல் சதித் திட்டத்தின் பகுதியே. அதனை அபிராம் தாஸின் தனிப்பட்ட ஆதாய நோக்கத்தில் விளைந்தது என்று மட்டும் சொல்ல முடியாது. காந்தி கொலையால் முடங்கியிருந்த இந்து மகாசபை – ஆர்.எஸ்.எஸ் தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை; இல்லையேல் தனிமைப்பட நேரும் என்ற ஆபத்தை உணர்ந்திருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்-க்கு சொல்லிக்கொள்ளுமளவு பெரிய செல்வாக்கு கிடையாது.

என்ன செய்தாவது இந்துக்களை திரட்ட வேண்டிய பதட்டத்தில் இருந்தார்கள். தனது சதி நோக்கத்தை மக்களிடம் மறைக்கின்ற அதே நேரத்தில், அந்த சதியையே மாபெரும் பொற்கால மீட்பு நடவடிக்கையாக பேசுவதற்கு அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இது காந்தி கொலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். காந்தி கொலை பகலில் செய்யப்பட்டது என்றால் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை நிறுவும் குற்றச் செயல் இரவிலே நிகழ்த்தப்பட்டது.

இவ்வாறு திட்டமிட்ட சதிசெயலின் பின்னணியில் வைக்கப்பட்ட அந்த சிலையின் பின்னணிதான் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலை வழிநடத்தியது.  வலதுசாரி பார்வை கொண்ட பெரும்பான்மை மதவாத அரசியலும், சிறுபான்மை வெறுப்பு அரசியலும் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டது வட மாநிலங்கள் முழுவதும். ஆனால் தென்கோடியில் இருந்த தமிழகம் மட்டும் விதிவிலக்காக. அதற்கு காரணம், இங்கிருந்த திராவிட அரசியலும், சமத்துவ சிந்தனையும் தான்.

1949ல் அத்துமீறி இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்தில் வைக்கப்பட்ட சிலைகளை வெளியேற்ற, அன்றைய இந்தியப் பிரதமர் நேரு, உ.பி.யின் முதல்வர் கோவிந்த் வல்லப் பந்திற்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் மத்தியில் உள்துறை பொறுப்பை வகித்த வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சிக்கு பலியாகி பாபர் மசூதி முன்பு குவிந்திருந்த மக்களை, படையை அனுப்பி வெளியேற்றி விட்டு சிலையை அகற்றுவதை எதிர்த்தார். இதை பகிரங்கமாக கண்டிக்கவோ, இல்லை நடவடிக்கை எடுக்க முடியாத நேருவோ, உ.பி காங்கிரசுக்குள் மதவாதம் புகுந்து விட்டது என்று வருணித்தார். தன்  கோபத்தை உ.பியின் பிரதமர் கோவிந்த் வல்லப் பந்திற்கு உணர்த்த அவரை சந்திக்க பின்னாட்களில் மறுத்தார் நேரு.  இதைத் தாண்டி இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்வாறு வைக்கப்பட்ட சிலைகள் மூலம் ஆர்எஸ்எஸ், பாஜக, விஸ்வ இந்தி பரிசத், பஜ்ரங்தள் போன்ற பாசிச அமைப்புகளால் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது, இந்தியாவின் மதநல்லிணக்கத்தை குறித்து கவலைப்படாமல். அதில் தொடர்ச்சியான வெற்றியும் கண்டு, 1992 டிசம்பர் 6, பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவைக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தன இந்துத்துவ அமைப்புகள். இந்தியாவெங்கும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள், கரசேவையை தடுத்து நிறுத்தி கலவர சூழலை கட்டுப்படுத்த அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் கேட்டு கொண்டனர்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த ஜெயலலிதா பகிரங்கமாக கரசேவைக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய இந்துத்துவ சார்பு நிலையை மக்களுக்கு உணர்த்தியது. அதே நேரத்தில் கரசேவை எதிர்ப்பு கண்டன கூட்டங்களை நடத்தியது மட்டும் அல்லாமல், அந்த கூட்டங்களிலும் பேசிய திமுக தலைவர் கலைஞர், சீனப் படையெடுப்புகள் நடந்த போது பிரதமர் நேருவுக்கும், லால்பகதூர் சாஸ்திரிக்கும் திமுக ஆதரவு கொடுத்ததை போல, கரசேவையை தடுக்க மத்திய அரசுக்கு உதவத் தயார் என்று அறிவித்தார்.

ஆனால் பெரும்பான்மைவாத மத அரசியலை மையப்படுத்திய, ஆர்எஸ்எஸ் சிந்தனையை கொண்ட காங்கிரசின் நரசிம்மராவ் அரசும், உ.பி. பாஜகவின் கல்யாண் சிங் அரசும் கரசேவர்கள் என்ற கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தவறியதால், தாங்கள் குறித்த தேதியில், நேரத்தில் பாபர் மசூதியை இடித்தனர். இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பண்பாடு, அனைத்தும் கேள்விக்குறியாகி நாடு முழுவதும் கலவர சூழல் ஏற்பட்டது.

பாபர் மசூதி இடிப்பை திராவிட, முற்போக்கு இயக்கங்களும், திமுகவும் கடுமையாக கண்டித்து, சிறுபான்மையினர் உரிமைக்கான, பாதுகாப்பிற்கான சூழலை உருவாக்க வேண்டிய அவசியத்தை குறித்து கவலைப்பட்டனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தளமான இடிக்கப்பட்ட பாபர் மசூதியை அரசு காலதாமதமில்லாமல் மறுநிர்மாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார், கலைஞர்.

1999ல் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி என்ற வரலாற்று பிழையை திமுக செய்த போதும், அதில் குறைந்த பட்ச பொது திட்டத்தை உருவாக்கி, ராமர் கோவில் கட்டுவதை எதிர்ப்பது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370யை நீக்க கூடாது என்ற பாஜகவின் நீண்டகால திட்டங்களை அரசியல் ரீதியாக முடக்கிப் போட்டார், கலைஞர். இன்றைய மோடியின் ஆட்சியில்  அவற்றின் நிலை அனைவரும் அறிந்ததே?

பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு, அவ்வப்போது பசு பாதுகாப்பு, மதம் என்ற பெயரில் இந்தியாவெங்கும் வன்முறை சூழல்கள் பாஜகவால் உருவாக்கப்பட்டாலும், சிறுபான்மையினருக்கான வாழ்வியல் சூழலை திராவிட சித்தாந்த அரசியலால் சிறப்பாகவே கட்டமைத்து வைத்திருக்கிறது தமிழகம். கோவை கலவரத்திற்கு பிறகான குண்டுவெடிப்பு சம்பவங்கள் இஸ்லாமியர்கள் மீதான பார்வையை மீள்பார்வை செய்ய வைத்ததையும், கவலைக்குரியதாக மாறியதையும் மறுக்க முடியாது. ஆனாலும் சமூக, பொருளாதார, கல்வி தளத்தில். இஸ்லாமியர்களுக்கான உரிமை மறுக்கப்படாததும், சம வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பதும், இஸ்லாமியர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடும் திமுகவின் சமத்துவ, சமூகநீதி பார்வைக்கு சாட்சி.

இத்தனை கால இடைவெளியில், 27 வருடங்களாக நடந்து வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கு அயோத்தி நில வழக்கு என்று பெயர் மாற்றமே நிகழ்ந்து விட்டது, சத்தமில்லாமல், இதுவும் பாசிசத்தின் வெற்றி தான். நவம்பர் 9, 2019, காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்க ஆரம்பித்த ஐந்து நீதிபதிகள், பாபர் மசூதி, இராமர் கோவிலை இடித்து கட்டப்படவில்லை என்ற வரலாற்று உண்மையை அறிவித்து விட்டு,  பாபர் மசூதியை ஒப்படைத்து விட்டு, அந்த இடத்தில் இராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றும், இடிக்கப்பட இருக்கும் பாபர் மசூதியை வேறொரு இடத்தில் நிர்மாணிக்க ஐந்து ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பையும் வழங்கினார்கள்.

தீர்ப்பு வெளிவந்த பின்பு தமிழகம் எப்போதும் போல் இயல்பு வாழ்க்கையை நடத்தியது மட்டும் அல்லாமல், தீர்ப்பால் கவலையடைந்திருக்கும் சிறுபான்மையினருக்கு, மாற்று மத சகோதரர்கள் தங்களின் தார்மீக ஆதரவையும் சமூக வலை தளங்களில் வழங்கியதையும் பரவலாக காண முடிந்தது.

இது மசூதியா? கோவிலா? என்ற பிரச்சினையில்லை.....

ஏனைனில் ஒவ்வொரு இறை நம்பிக்கை கொண்ட இஸ்லாமியனுக்கும் மெக்காவில் உள்ள இறையில்லமான காஃபாவை நோக்கி வணங்குவதுதான் முக்கியமே தவிர, அதை எந்தக் கட்டிடத்தில் இருந்து வணங்குவது என்பதை குறித்து கவலையில்லை. ஆனால், இந்தனை ஆண்டு காலம் இந்திய இறையாண்மை மீது சிறுபான்மை சமூகம் வைத்திருக்கும்/வைத்திருந்த நம்பிக்கையை, 1992ல் கடப்பாறைகளை கொண்டு சிதைத்தார்கள், இன்று சட்டத்தை கொண்டு இடித்து தள்ளி இருக்கிறார்கள். இதைப்பற்றி தேர்தல் அரசியலில் இயங்கும் பெரும்பாலான  கட்சிகளின் பிரதிநிதிகள் யாருமே கவலைப்படாத ஒரு நிலையை தான் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலும் மையம் கொண்டிருக்கிறது என்பதை  மிகுந்த கவலையுடன் பார்க்க வேண்டும்.

வடமாநிலங்களை மதத்தின் பிண்ணனியில் கபளீகரம் செய்து விட்டு, இன்று தமிழகத்தை அடிமைப்படுத்த சங்கபரிவாரம் முழு வீச்சுடன் செயல்படுகிறது. திராவிட அரசு என்ற பெயரில் பாசிச பாஜகவின் அடிமையாக இருக்கும் தமிழக அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளும், மதவாத, சாதியவாத அமைப்புகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் வலிமையும், கலைஞர் காலத்து திராவிட இயக்கத்து இளைஞர்கள் கனவு கண்ட அந்த முற்போக்கான அரசியலும், இன்று திமுகவின் தலைமையில் தமிழக இளைஞர்களின் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கையும் இருக்கிறது.


*



நன்றி : பிலால் அலியார் & திராவிட வாசிப்பு குழுவினர்