Tuesday, June 16, 2026

கத்தார் காசிம் (சிறுகதை) - ஜபினத்

படைப்பு பதிப்பகம் வெளியிட்ட ’சீன் டபாக்கு டம் டம்’ சிறுகதைத் தொகுதியிலிருந்து நன்றியுடன் பகிர்கிறேன். - AB

*


கத்தார் காசிம் 

மம்மாயிஷா தனது அறையின் ஜன்னல் வழியே சாலையில் விளையாடிக்கொண்டிருந்த பேரனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனின் மூக்கும் முன் நெற்றியும் கணவர் காசிமின் முகச்சாடையை ஒட்டி இருந்தது. பேரன் காசிமைப் பார்க்கும் போதெல்லாம் மம்மாயிஷாவிற்கு இளவயது காசிமின் முகம் நினைவுக்கு வந்து புன்னகையை வரவைக்கும்.


இன்று சனிக்கிழமை. காசிமிற்கு விடுமுறை நாள். கொஞ்சம் தாமதமாகத்தான் எழுவார். லுஹர் பாங்கு சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து மம்மாயிஷாவின் செல்போன் அடித்தது.


“என்னஸ்ஸி என்ன செய்றாவோ?"


"என்னத்த செய்யப்போறேன் ஒங்க பேரனைத்தான் பாத்துட்டு நிக்கன்."


"நல்லா பாத்தவொ, என்ன வெஞ்சனம்."


"கெண்டையத்தான் ஆனம் வச்சி சாலையை வறுத்தாவொ சின்னவன் யாவாரத்துக்கு பெங்களூர் போயிருக்கானாம். அவம் பொஞ்சாதியும் புள்ளைவுளும் இங்குட்டுதான் நிக்குதுவொ."


கொட்டாவி விட்டபடி. "சரிடி நான் கொஞ்சம் அழுக்கு துணி கெடக்கு கழுவனும் பொறவு பேசுதேன்."


"என்னங்க எங்கன ஓடுறியோ? அரபிக்கிட்ட லீவுக்கு பேசினியளா இல்லியா நோன்பு வருது நாளு நெருங்குது, பெருனாவுக்குள்ள வந்துடுவியோ தானே."


"ஆமா, இவ அத்தா கட்டி வச்சிருக்குறோ கூப்புட்டவுடனே வரதுக்கு வரண்டி."


"இப்ப நீங்க கேட்டியளா இல்லையா? அதை சொல்லுங்க." 


"இருடி, பெரியம்மாட்ட பேசிருக்கேன் அவங்க மவண்ட்ட பேசிட்டு சொல்லுவோ, கெடந்து குதிக்காத.”


இருவருக்கும் உரையாடல் தொடர்ந்தது.


'காசிம்.காசிம்' என்று சொல்வதைவிட 'கத்தர் காசிம்' என்றால்தான் ஊருக்குள் தெரியும். முஹம்மது ஆயிஷாவை மம்மாயிஷா கத்தர் காசிம்ட பொஞ்சாதி என்றுதான் அடையாளப்படுத்துவார்கள்.


மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், பதினெட்டு பேரப் பிள்ளைகள் என பெரிய குடும்பம் அவர்களுடையது. மம்மாயிஷா காசிமின் தாம்பத்தியத்திற்கு மூன்றாவது மகனின் பதினைந்து வயதுதான் சாட்சி. அவனை உண்டாகி இருந்தபோது ஊரும் குடும்பமும் கேலி பேசி சிரித்தாலும் அதை கடுகளவும் காதில் போட்டுக் கொள்ளாமல் கெத்தாகப் பெத்தெடுக்க ஒரே காரணம் காசிமின் கத்தர் சம்பளம் தான். கணவருடைய சம்பளத்தில் இருக்கிறோம் என்பதே மம்மாயிஷாவின் நடைக்கும் உடைக்கும் காரணமாக இருந்தது.


கடந்த முறை காசிம் சபருக்கு வந்திருந்தபோது உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறுகளினால் இரண்டு மாத விடுப்பு தாண்டியும் ஊரிலேயே இருக்க நேரிட்டது. அந்த மூன்று மாதங்களில் அவர் பல விசயங்களைப் புரிந்துகொண்டார். நேரிடையாக கேட்காமல் சாடைமாடையாக வந்த கேள்விகளின் விபரீதத்தை உணர்ந்து அரபியிடம் கெஞ்சிக் கூத்தாடி மறுபடி கத்தருக்கே வந்துவிட்டார்.


"என்னங்க, முடிச்சிட்டு தானே வாரேன்னு சொன்னிங்க” என்ற மனைவியிடம் மகன்களையும் மருமகள்களையும் காட்டிக் கொடுக்காமல் அரபி வற்புறுத்தி அழைப்பதாகக் கூறி வந்து விட்டார். பிள்ளைகள் தன்னை மரியாதையுடன் நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கும் அந்தப் பைத்தியத்துக்கு கடைசி வரை அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்று நினைத்தார்.


கத்தர் சென்றதும், அவருடைய பண வரத்து தொடர்ந்ததும், உம்மாமீது மகன்களும், மாமியார்மீது மருமகள்களும் மரியாதையை அதிகரித்தனர். மம்மாயிஷாவைப் 

பொறுத்தவரை அதெல்லாம் தன் மீதான அன்பில் வருகிறது. காசிமிற்கு மட்டுமே அதன் உள் அர்த்தம் புரியும். அதனாலேயே மூன்று வருடம் ஊருக்குத் திரும்பாமலே இருந்து விட்டார்.


மம்மாயிஷாவிற்கு இப்போதெல்லாம் காசிமை அதிகமாக தேடியது. சிலசமயம் அவரைப் பார்க்காமலே உலகைவிட்டு சென்று விடுவோமோ என்று பயந்து கொண்டிருந்தாள்.


மூத்த மகன் வீடு கட்டிக்கொண்டிருக்கிறான், இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த புது வீட்டில் தனக்கான அறையில் காசிமோடு மீதி காலத்தைக் கெத்தாகக் கழித்துவிட வேண்டும் என்பதுதான் அவளின் கனவு. சொந்த வீட்டில் புருசன் மடியில் கெட்டுக் கழுத்தியா போய் சேர்ந்துட்டான்னு ஊர் பேசனுமென்பதை ஒவ்வொரு தொழுகையிலும் வேண்டிக்கொண்டிருந்தாள்.


மம்மாயிஷாவின் கவலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த பெருனாவுக்குள் காசிம் வந்துவிட வேண்டுமே என மனதுக்குள் பிதற்றிக்கொண்டே இருந்தாள்.

“அத்தம்மா, அத்தம்மா” பேரன் அபூவின் குரலுக்கு நினைவுக்கு திரும்பினாள்.


“என்னஸ்ஸீ."


"அம்மா அடிச்சிடுச்சி."


அழுதவனை இழுத்து மடியில் போட்டுக்கொண்டு தலைமுடியை கோதிவிட்டாள்.


“அவதான் வேலையா இருக்குதால்ல. அவகிட்ட போனா கோவம் வரும்தானே. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க அத்தம்மா எடுத்து தாரேன்.”


அபூ அத்தம்மாவின் மடியில் படுத்துக்கொண்டே விம்மிக்கொண்டிருந்தான்.


“சந்தைல கலர் கலர் கோழிகுஞ்சு பாத்தேன். எனக்கு அது வாங்கித் தா அத்தம்மா.”


மம்மாயிஷாவுக்கு சிரிப்பு வந்தது. இதுக்கா போய் சண்டை போட்டவொ.


"புது வீட்டுள அதுவுல்லாம் பேண்டு அசிங்கமாக்கிடுமாம். அம்மா தர மாட்டேன் சொல்லிடுச்சி.”


'சரித்தா....அத்தம்மா வாங்கி தர்றேன் அழுவாத."


மம்மாயிஷா தன் மணிப்பர்ஸைத் திறந்து இரண்டு நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தாள்.


அபூ சிரித்துக்கொண்டே வாங்கிய அடுத்த நொடி காற்றாய் ஓடி மறைந்தான்.


காசிம் அனுப்பும் பணம் யாவும் இப்படித்தான் காற்றாய் பறந்துகொண்டிருந்தது.


மாதம் பிறந்ததும் பத்திலிருந்து பதினைந்து தேதிக்குள் காசிம் பணம் அனுப்பி விடுவார். அந்தத் தேதியை தோதுபடுத்தி மகன்களுக்கு உம்மா மேல் பாசம் அதிகமாக வரும், மகள்கள் பிள்ளைகளோடு வீடு தேடி வருவார்கள். மருமகள்கள் மாமியாரை உள்ளங்கையில் தாங்குவார்கள். பேரக்குழந்தைகள் கூட அத்தம்மா மேல் அதீத அன்போடு நடந்து கொள்வார்கள். பணம் காலியானதும் அத்தனை பேரும் இயல்பு வாழ்கைக்குத் திரும்பி விடுவார்கள்.


மம்மாயிஷாவுக்கு இதெல்லாம் குறையாகக்கூடப் பட்டதில்லை. என் பிள்ளைக என்கிட்ட தானே கேட்குதுவொ,. என்ற பெருமையோடு எடுத்துக் கொடுப்பாள்.


காசிம் எப்போதாவது போனில் கேட்பார் “என்னட்டி எதாவது சேர்த்து வச்சிருக்கியா? உன்னிய நம்பித்தான் ஊருக்கு வருவேன்” மம்மாயிஷா சிரித்துக்கொண்டே “ "ஆமா பரண்லத்தான் பொட்டலமா கட்டி போட்டு வச்சிக்குதேன் "மச்சான் வந்து தான் எடுத்து தருவனும்” என்னும்போது 'மச்சான்' என்ற இடத்தில் வெட்கத்தைக் கலந்து சிரிப்பை உதிர்ப்பாள்.


கத்தரில் இருக்கும் காசிமிற்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. கடந்த முறை வரும் வரை அவனும் மம்மாயிஷாவைப் போலத்தான் மகன்களின்மீது பெரும் நம்பிக்கையோடு இருந்தான். 


“அத்தா, எப்ப வரிங்க? வருசம் ரெண்டாச்சி” என்று ஓயாமல் அழைத்து, ஒரு வழியாக ஊருக்கு வந்து இறங்கினார் காசிம். வந்த இரண்டு மூன்று நாள் தடபுடலாக விருந்து கேலி என வீடே கலகலப்பாக இருந்தது...


"அத்தா உங்ககிட்ட பேசனும்” என்று மகன்கள் இருவரும் கூப்பிட்டு நடுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். காசிம் நாற்காலியில் அமர, அவரை ஒட்டிய படி தரையில் மம்மாயிஷாவும் அமர்ந்துகொண்டார்.


மகன்கள் இருவரும் காசிமின் பெயரில் உள்ள தென்காசி இடத்தை விற்றுத் தருவதற்கு தான் பூசி மெழுகினர். காசிம் தன்னுடைய முப்பது வருட சம்பாத்தியத்தை முழுவதுமாக அந்த இடத்தில்தான் கொட்டி வைத்திருந்தார். வெகுகாலமாகவே அவர்களுடைய கண்களை உருத்திக்க்கொண்டிருந்தது. காசிம் மோவாயைத் தடவியபடி யோசித்துக்கொண்டிருந்தார். மம்மாயிஷா ஏதோ யோசனைக்குப் பின், மகன்களை கண் காட்டி உள்ளே போகச் சாடை காட்டினாள். பிள்ளைகள் நகர்ந்ததும் காசிமின் முழங்காலை வருடியபடி பேசினாள். 


அவளுடைய சிரிப்பு கலந்த பேச்சில் வெகுளித்தனம் வழிந்தது. "என்னத்த யோசிக்கிறவொ? மத்த புள்ளைலவளபோல அப்பன் எடத்தை ஏமாத்தி வித்துட்டு வந்து நிக்காம எவ்வளவு பொறுப்பு கேக்குறானுவோ, தங்கச்சியளுவக்கும் பங்கு தர்ரேன்னுறாவொ, சின்னவனையும் படிக்க வச்சிடுவானுவோ. பொறவு என்னத்துக்கு யோசிக்கிறவோ?


நாம என்ன நடுத்தெருவுல நிப்பாட்டுத புள்ளையளையா பெத்துதுக்குறோம். அஞ்சும் அஞ்சி கண்ணுமணிவொ அதுவுளுக்கோ கொறையே அதுவோ எல்லார்கிட்டயும் நம்மளால இருக்க முடியலன்னுதான்.


போதும் இந்த சபரு, அலைச்சலு எல்லாம். பேசாம குடுத்துப்புட்டு ஊரோட உக்காருங்க. எனக்கும் நீங்க இல்லாம இருக்கவே முடியுல. மேலுக்கு நோவுதுன்னா முதுவை தடவி வுட கூட ஆளில்ல மருமவ கிட்ட சொல்லவும் வெக்கமா இருக்கு மவளுவோ எல்லா வேலையும் போட்டுபொட்டு வந்து எவ்வளவு காலம் நிக்க முடியும்”


பேசிப் பேசி காசிமை சம்மதிக்க வைத்தாள். ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்து பணப் பட்டுவாடா செய்ததும் மூத்தவன் தன் பங்கில் வீட்டு வேலையைத் துவங்கினான் சின்னவன் தொழிலில் போட்டுவிட்டு ஊர் ஊராகச் சுற்ற, மகள்கள் புது வண்டி, நகை என மின்னினார்கள்.


காசிமிற்கு மிஞ்சிய பணத்தில் மம்மாயிஷாவிற்கு ஆறு பவுனில் கருகமணி கோர்த்து செயின் வாங்கி கொடுத்தார். கல்யாணம் ஆன புதிதில் தனக்காக கழட்டிக் கொடுத்த செயினை மீண்டும் அணிய அவளுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கு. "இப்பவும் எனக்கு எதுக்குங்க? பேத்தியளுக்கு" என்று வாய் எடுத்தவளை தன் அதிகாரக் குரலால் அமைதி ஆக்கினார் காசிம்.


அந்த செயினை மாட்டிக்கொண்டு தோழிக வீடு, குடும்பத்து வீடு, தெருவாசிங்க வீடுன்னு ஒரு ரவுண்டு போய் பெருமை அடித்து வந்துவிட்டாள் மம்மாயிஷா. அவளுடைய புது நகையைவிட அதிகமாக மின்னியது கிழவியின் வெட்கம் தான். காசிம் அதை பார்த்துப் பார்த்து ரசித்தான். "உனக்கு மட்டும் வயசே ஆவ மாட்டேங்குதுடி” என்றவனை, "போங்கங்க அங்குட்டு" என்று வெட்கத்தோடு கோவப்பட்டுக்கொண்டாள். 


நாட்கள் நகர்ந்தன. பணம் தீர்ந்ததும் மகன்களின் பேச்சில் இரட்டை அர்த்தங்கள் வெளிப்பட்டன. கறி ஆனம் கோப்பையில் சவ்வும் எலும்பும் மட்டுமே வந்தது. "மாமா, ரேசன் கடைக்கு" என்று கேட்ட பொண்டாட்டியை அடக்காமல் மகன் "இல்லத்தா வேலைக்கு போவனும் நேரமாச்சு அதான்” என்று பதிலுக்கு காத்திராமல் விரைந்தான். தன் இடம் பறிபோனதை காசிம் உணர்ந்தாலும் மம்மாயிஷாவைவிட்டுப் பிரியப் பயந்தார். 


அவளுக்கு எதாவது நடந்து விடுமோ என்பதிலேயே அவர் பிடி கெட்டியாக இருந்தது. ஆனால் வருமானம் இல்லாமல் மகன்கள் கணவரை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று தெரிந்தால் அவள் உயிரையும் விட்டுவிடுவாள் என்பதை உணர்ந்தார்,தான் கூட இருப்பதைவிட தன் பணமும் மகன்கள் மீதான நம்பிக்கையும் இன்னும் அவளை நன்றாக வைத்திருக்கும் என்பதால் மீண்டும் கத்தருக்கே கிளம்பி வந்து விட்டார்.


அவர் நினைத்தபடியே ஒவ்வொரு முறை பேசும்போதும் மகன்கள், மகள்கள் பெருமை பேசாமல் போனை வைக்கமாட்டாள் மம்மாயிஷா. ஆனால் இந்த முறை காசிம் தங்களுக்கென தனிச் சேமிப்பை தெளிவாக செய்து வைத்திருந்தார். மம்மாயிஷாவிடம் பேசும் போதெல்லாம் 'உன்னை நம்பித்தான் வரேன்' என்று கேலி செய்தாலும் 'உன்னை விட்டுவிட மாட்டேண்டி மச்சான். சேர்த்து வச்சிருக்கேன்' என்று மனசுக்குள் கர்ஜித்துக் கொள்வார். 


இம்முறை காசிமை மம்மாயிஷா வருந்தி அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருந்தது. அவர்களுடைய ஐம்பதாவது கல்யாண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. இருபத்தி ஏழாவது நோன்பு அன்றைக்குதான் அவர்களுக்கான ஐம்பதாவது திருமண நாளும் வருகிறது, தொடர்ந்தாற்போல மூன்று வருடம் கத்தரிலேயே இருந்து விட்டதால் இந்தப் பெரு நாளிலாவது இரண்டு பேரும் இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தாள் மம்மாயிஷா. ஆனால் காசிமால் இப்போ வரை விடுப்பு எடுக்கவே முடியவில்லை என்பதே அவளுக்கு கலக்கமாக இருந்தது.


கத்தர் மன்னனின் தூரத்து உறவினரான சேக் தாவூத் பின் அகமது என்ற அரபியின் வீட்டில்தான் காசிம் சமையல் பணியில் இருந்தார். காசிமோடு சேர்த்து இருபது சமையல்காரர்கள், இது தவிர ஏழெட்டு டிரைவர்கள், செக்யூரிட்டிகள் என ஒரு கூட்டமே அந்த வீட்டிற்கு பணி செய்து வந்தது. அரபியின் பாட்டிதான் அந்தக் குடும்பத்தின் தலைமை ஆனவர். பெரியம்மா சொன்னால்தான் அங்கு எதுவும் நடக்கும். மகன்கள் பேரன்கள் என வீட்டிற்குள் ஒரு ராஜாங்கத்தையே நடத்திக்கொண்டிருந்தார். 


காசிமிற்கு விடுப்பு கேட்க போகும் போதெல்லாம் எதாவது ஒரு தடங்கல் வந்துகொண்டே இருந்தது. அவரும் அப்போ பாத்துக்கலாம் இப்போ பாத்துக்கலாம் என்று நாட்களைக் கடத்திவிட நோன்பு காலமும் துவங்கியது.


‘அத்தம்மா' என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள் அஃப்ரின்.


பேத்தி அஃப்ரினுக்கு ஐந்து வயதிருக்கும். உம்மாவுடன் புது வீட்டுக்கு சென்றுவிட்டு வந்திருந்தாள். 


"என்னட்டி...புது வூட்டை பாத்தியா, அழகாயிருந்துசா” 


வீட்டில் பூச்சு வேலை நடந்துகொண்டிருந்தது. 


"அத்தம்மா வீடு அழகாயிருந்துச்சி. நம்ம வீட்டுல டயில்ஸ் போடலையாம் க்ரானைட்டுதான் போடுறாகளாம்" 


"அதென்னட்டி க்ரானைட்டு'


"அது தரையை தொட்டா குளுகுளுன்னு இருக்குமாம். தண்ணி ஊத்திருந்தா வழுக்கி உழுந்துருவமாம். வேற அப்பப்போ உழுவுற பாத்து கம்பு வச்சி நட என்னா”


அப்ரின் மழலை மொழியில் பேசிக்கொண்டிருந்தாள். 


மம்மாயிஷாவுக்குப் புரிந்தது. மருமகளை அழைத்தாள். "எம்மா நீ தஸ்தகிருட்ட சொல்லு. மாமாக்கும் எனக்கும் காலு சரியில்ல. முன்ன மாதிரி பதிஞ்சி நடக்க முடியல். அதனால் கருத்த ராவுத்தர் வூட்ல போட்டாக்ல புள்ளி வச்ச டைல்ஸே போட சொல்லும்மா. முழுசுக்கும் வேணா, மாமாட ரூமுக்கு மட்டும் போட்டா போதும். எங்க காலத்துக்கு பொறவு நீங்க மாத்திக்கங்க. சரியாமா"


"சரிங்க மாமி, நான் அவுகட்ட சொல்லிடுறேன்" சலித்தபடி சென்றாள்.


"ஏங்க, உங்க அம்மா நம்மகூடவா இருக்கப் போவுது? நீங்கத்தானே சொன்னிய, புது வீட்டுக்கு போறப்ப சின்னவுக கூட்டிட்டு போயிடுவாங்கன்னு. அதைச் சொல்லித்தானே அவ பொஞ்சாதி அவங்க அம்மா வூட்டையே பங்குத் தொகைல வெல குடுத்து வாங்கிச்சி.”


"ஆமாடி, அவங்க அப்படித்தான் சொன்னாங்க அம்மா மனசுல என்ன வச்சிருக்குன்னு தெரியலயே."


முறைத்தபடி எழுந்தாள்.


"இத்தனை வருசம் நாந்தானே சேவகம் பண்ணேன். காணாததாக்கும் நான் மட்டுமா மருமவ."


"ஏண்டி கத்துறே? எங்கம்மாவை பத்தி எனக்கு தெரியும். அது இந்த வீட்டைவிட்டு வராது. இருபத்தி வருசமா வாடகைக்கு இருக்கோம் அது இதை சொந்த வீடாத்தான் பாக்குது பேச்சுக்கு ரெண்டு நாள் நம்ம வீட்டுக்கு வந்து தங்கிட்டு திரும்பிரும். அதுக்கு இங்க இருந்து நாலு பேர் கிட்ட பொரணி பேசுனாத்தான் பொழுதே போவும் நீ சும்மா கெட."


"அப்ப க்ரானைட்டு தானே முழு வூட்டுக்கும் போடுவியே." 


"ஆமாடி. அமைதியா கெட்டி. சும்மா சலம்பிட்டு" அவளை இறுக்கி அணைத்தபடி அமைதி ஆக்கினான்.


பக்கத்து அறையில் குளிருக்கு மின் விசிறியை நிறுத்தி இருந்தவளுக்கு அத்தனை பேச்சும் காதில் விழ, அதிர்சியில் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி படுத்துக்கொண்டாள் மம்மாயிஷா. 


நோன்பு ஓடியது. மம்மாயிஷாவின் பேச்சில் உற்சாகம் குறைந்திருந்ததை காசிம் உணர்ந்தார். ஆனால் அரபி வீட்டில் நாளுக்கு நாள் உறவினர்களின் வருகை அதிகமானதால் விடுப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டது. 


விடிந்தால் இருபத்தி ஏழாவது நோன்பு, ஐம்பதாவது கல்யாண நாள். இரண்டு முறை அழைத்தும் மம்மாயிஷா போனை எடுக்கவில்லை. நல்ல கோபத்தில் இருப்பாள். பிறகு சமாதானப்படுத்திக் கொள்ளலாம். 'அதை கொண்டாங்க இதைக்கொண்டாங்க' என்ற ஆர்டர்களுக்கு மத்தியில் அதை அப்படியே விட்டுவிட்டு வேலைக்குள் மூழ்கி மம்மாயிஷாவை மறந்தார் காசிம். 


"பெரியம்மா உங்களை கூப்பிடுறாங்க" பாகிஸ்தான்கார சக பணியாளனின் குரலுக்கு அவனைத் தொடர்ந்தபடி ஓட்டமும் நடையுமாக ஓடினார் காசிம்.


பெரியம்மாவின் அரேபியக் குரல் கம்பீரமாக ஒலித்தது.


”அடேய் காசிம் இன்னிக்கு இஃப்தாருக்கு என்ன செஞ்சிருக்க?” 


"மஜ்பூஸ், கப்சா, அரீஷ்." 


"இனிப்பு என்ன செஞ்சிருக்க?” 


"குனாஃபா அசீர்.”


"ஊருக்குப் போகனும்னு கேட்டிருந்தியா?"


'ஆமாம்' என அவசரமாக தலை ஆட்டினார். "அதெல்லாம் அனுப்ப முடியாது" என்று உரக்க சிரித்தபடி குட்காவை இழுத்தார்.


காசிமின் முகம் இறுகியது.


"இன்னும் இரண்டு மூணு நாளைக்கு நிறைய சொந்தக்காரங்க வருவாங்க. சாப்பாடுலாம் சூப்பரா இருக்கனும். இல்லன்னா உன்னையைத்தான் கேட்பேன் புரிஞ்சுதா?"


காசிம் மெதுவாக சரி என்பதாக தலை ஆட்டினார். "உன் கூடமாட ஒத்தாசைக்கு இந்தப் பொம்பளையையும் கூட்டிட்டு போ” என்று கைகாட்ட அவர் கை காட்டிய இடத்தில் மிரட்சியாக நின்றுகொண்டிருந்தாள் மம்மாயிஷா. 


காசிமிற்கு தன் கண்களைத் தானே நம்ப முடியாமல் தடவிக்கொண்டு மறுபடி பார்க்க பெரியம்மாவின் வெடிச்சிரிப்பில் அதிர்ந்தார்.


"கல்யாண நாள் வாழ்த்துக்கள் காசிமே இரண்டு மணி நேரம் உனக்கு ஃப்ரீ டைம். போ, போய் உன் பொண்டாட்டி கூட இஃப்தாரை கொண்டாடு." 


மம்மாயிஷாவின் கையை இழுத்துக்கொண்டு ஓடினார் காசிம். தங்க நிறத்தில் பளிங்குகளால் மின்னிய அந்த அடுக்களை அவர்களுக்கு தாஜ்மஹாலைப் போல் இருந்தது. 

அவர்களை தனிமையில் விட்டு விட்டு மற்ற பணியாளர்கள் ஒதுங்கி நின்றனர்.


"எப்படிடீ வந்தே" இருவரின் கைகளும் நடுங்கிக்கொண்டிருந்தன. 


மம்மாயிஷாவுக்கு காசிம் கோபத்தில் அடித்து விடுவானோ என்ற பயம் இருந்தது. ஆனால், அவர் கண்களில் உள்ள கண்ணீரைக் கண்டதும் பதறிப் போனாள்.


பதில் சொல்ல வாய் எடுத்தாலும் வார்த்தை வராமல் உளறினாள்.


காசிம் அவளுக்குத் தண்ணீரைக் கொடுத்து அமைதி ஆக்கினான்.


"நம்ம பாத்திமுத்து மவன் சொய்பு இங்கத்தானே இருக்கான். அவன் பொஞ்சாதி புள்ளை பெத்திருக்கா. கூட இருந்து பாத்துக்க நாப்பது நாளைக்குன்னுட்டு வேலைக்கு ஆள் கேட்டான்னு சின்னவன் சொல்லிட்டு இருந்தான். அதான் புள்ளைலுவள கேக்காம நான் பாத்திமுத்துட்ட சொல்லி இங்கன வந்துட்டேன்.” 


“வீட்டு வேலைக்கா?” காசிமின் குரல் தழுதழுத்தது. 


"அப்படி இல்லிங்க. பாத்திமுத்து மவண்டா எனக்கும் மவன் தானே இது என்ன வேத்து வேலையா?” அவள் படபடத்தபடி அவனை சமாதானம் செய்தாள். 


"ஏண்டி, என்னை கேக்காம இவ்வளவு தூரம் வர்ற அளவுக்கு" 


"என் மச்சானுக்காக எவ்வளவு தூரம்னாலும் வருவேன்" காசிம் அவளை கண்ணீருடன் பார்த்தார்.


இருவரும் ஒரே தட்டில் உணவை வைத்துக்கொண்டு எதிர் எதிரே அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள, தூரத்தில் ருந்து ரசித்தாள் பெரியம்மா. 


"எல்லாருக்கும் இந்தப் பாக்கியம் கிடைச்சிடாது மம்மதே, உங்க மொதலாளிக்கிட்ட பெரியம்மா சொன்னேன்னு இந்த வருசத்துக்கு வீடு கட்டிக் கொடுக்குற பத்து பேர்ல காசிம் பேரையும் சேர்க்கச் சொல்லு, அவரு ஊர்ல அவர் கேட்குற வசதியோட எந்தக் குறையும் இல்லாம கட்டிக் கொடுக்கனும் சரியா" பெரியம்மாவின் உதவியாளர் முஹம்மது என்கிற மம்மது 'ஆகட்டும் மா, ஆகட்டும் மா” என தலையாட்டிக்கொண்டிருந்தார். 


"எட்டி, கருவமணி எங்கட்டி"


"காக்கை தூக்கிட்டு கத்தாருக்கு போயிருச்சி மச்சான்" என்று வெட்கத்தோட சிரித்தாள் மம்மாயிஷா.

**

(இந்தச் சிறுகதை 'கதிராளிகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது)

*


நன்றி : ஜபினத்