Thursday, January 24, 2019

சாவுச் சாப்பாடு (துருக்கி சிறுகதை) - ஸெவத் குத்ரத்

மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்: கே. குஞ்ஞிகிருஷ்ணன் , தமிழில்: யூமா வாசுகி
*
ஜனவரியின் சாம்பல் நிறமார்ந்த ஆகாயத்தின் கீழே குளிர் அடர்ந்திருந்தது. அந்திப் பொழுதுடன் தெருக்கள் வெறிச்சோடிப்போயிருந்தன. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மனிதர்கள் வெளியே வந்தார்கள். தெருக்களுக்கோ, பள்ளிவாசலுக்கோ, தண்ணீர் எடுக்கும் ஊற்றுக்கோ யாரும் போவதில்லை. கோடையின் வெப்பத்தில் மனிதர்கள் கூடி நிறைந்திருந்த இடங்கள் குளிர்காலத்தில் சூன்யமாயின. தண்ணீர் எடுப்பதற்காக மிகச் சிலர் மட்டுமே ஊற்றுகளுக்குச் சென்றார்கள். மதியம் அங்கே சென்றிருந்த ஒரு குழந்தை தெருவுக்கு ஓடி வந்து, முதலில் பார்த்த மனிதனிடம் சொன்னது:

“துர்சுன் ஆகா இறந்துவிட்டார்!”

துர்சுன் ஆகா தெருவுக்குப் பழக்கமானவன். ஊற்றுத் தண்ணீர் நிறைத்த இரண்டு குடங்கள் கட்டிய கோலை தோளில் சுமந்து திரிவான். இதில் கிடைப்பதில் கொண்டுதான் அவன், மனைவி, இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பம் நாட்களோட்டிவந்தது. பொழுது விடியும்போதே குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருவழியே நடந்து அவன் உரக்கக் கேட்பான்.

“தண்ணீர்! யாருக்காவது தண்ணீர் வேண்டுமா?”

தெருமுனை கடைக்கோடி வீட்டுக்குக்கூட அவனது கூக்குரல் கேட்கும். தண்ணீர் தேவைப்படுபவர்கள் அழைப்பார்கள். “ஆகா, ஒரு குடம்”, “இரண்டு குடம்”, “மூன்று குடம்.” தண்ணீர் கொடுத்து முடித்த பிறகு, மீண்டும் குன்றேறி தண்ணீர் கொண்டு வந்து மற்றவர்களுக்குக் கொடுப்பான். நாள் முழுதும் அவன் வேலை இதுதான். அவன் வாழ்வின் மொத்த சம்பாத்தியமே அந்த இரண்டு குடங்களும் கோலும்தான். ஒவ்வொருமுறையும் மூன்று குருஷ்தான் அவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த கூலி. இடையிடையே அவன் மனைவி குல்நாஸை, மக்கள் எடுபிடி வேலைகளுக்காக அழைப்பார்கள். அதிலிருந்து கிடைக்கும் அற்பத் தொகையையும் கொண்டுதான் அவர்கள் காலம்தள்ளிவந்தார்கள்.

அவனது மரணம் திடீரென்று ஏற்பட்ட மரணம். ஊற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வரும் வழியில், குன்றின் மேலிருந்து கீழே இறங்கும்போது பனிக்கட்டியில் வழுக்கி விழுந்தான். விழும்போது நிலைதவறி தலை பாறையில் மோதி காயம்பட்டுவிட்டது. அதுவே, பலவீனமான துர்சுன் ஆகாவின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டது.

செய்தியைக் கேட்டு அதிர்ந்து நின்றுவிட்டாள் குல்நாஸ். வீட்டு வேலைகளில் செய்கிற சாதாரணத் தவறுகளுக்காக கடவுள் தன்னைத் தண்டித்துவிட்டாரா? அப்படியிருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர் கருணைமயமானவர். விபத்தின் காரணத்தால்தான் மரணம் ஏற்பட்டிருக்கிறது. துர்சுன் வழுக்கி விழுவதையும் இறப்பதையும் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.

குடும்பத்துக்காக துர்சுன் மிச்சம் வைத்தது, குடங்களும் கோலும் மட்டும்தான். குல்நாஸ் இனி என்ன செய்வாள்? யோசித்துப்பார்த்தாள். அவளுக்கு ஒரு பிடியும் கிடைக்கவில்லை. ஒன்பது, ஆறு வயதுகளிலுள்ள இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு எப்படி வாழ்வது? இனி எப்படி வயிற்றைக் கழுவுவது? எல்லாம் மாறிப்போய்விட்டது. தண்ணீர் எங்களை ஏமாற்றிவிட்டது.

மரணம் நடந்த வீடுகளில் யாரும் உணவு சமைப்பதில்லை. வீட்டுக்காரர்கள் முதலில் உணவைத்தான் மறப்பார்கள். ஆனால், அது ஒரு நாளோ இரண்டு நாளோ மட்டும்தான். அது முடிந்ததும், வயிற்றில் பசி எரிந்தால் யாராவது சொல்வார்கள்: “வாருங்கள், நாம் ஏதாவது சாப்பிடலாம்.” பிறகு வழக்கமான வாழ்க்கை நடைமுறைகள் தொடங்கிவிடும்.

இறப்பு நடந்த வீடுகளுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு, அண்டை வீட்டார் சாப்பாடு அனுப்புவார்கள். குல்நாஸின் வீட்டுக்கு முதலில் உணவு அனுப்பியது, தெருக்கோடியில் இருக்கும் ரெயிப் எபெண்டி எனும் பணக்கார வியாபாரிதான். மரணம் நிகழ்ந்த நாளின் மதியத்தில், குல்நாஸின் வீட்டுக்கு அந்தப் பெரிய வீட்டின் வேலைக்காரி தட்டுகளைக் கொண்டு வந்தாள். தட்டுகளில் சுவையான உணவுப் பொருட்கள் நிறைய இருந்தன.
உண்மையில் அங்கே அன்று உணவைப் பற்றி யாரும் யோசித்திருக்கவில்லை. ஆனால் தட்டுகளின் மூடிகளை அகற்றியபோது, அவர்கள் ஆவலுடன் சுற்றிலும் கூடினார்கள். அதற்கு முன்பு அவர்கள் ஒருபோதும் அவ்வளவு நல்ல உணவுகளைச் சாப்பிட்டதில்லை. உண்டு முடித்த பிறகும் அவர்கள் தட்டுகளைச் சுற்றி சற்று நேரம் சேர்ந்து அமர்ந்திருந்தார்கள்.

மறுநாள் வேறொரு அண்டைவாசி உணவு கொடுத்து அனுப்பினாள். இந்த நிலை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தது. அவர்களுடைய சொந்த வீட்டில் ஒருபோதும் அவ்வளவு நல்ல உணவுகளைச் சமைத்ததே இல்லை. ஆனால், வெளியிலிருந்து சாப்பாடு வருவது நின்றவுடன், அவர்கள் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிட்டது. தெருக்கடையிலிருந்து நிலக்கரி வாங்குவதற்குக் காசு இல்லாமல்போனபோது, அயல் வீடுகளிலிருந்து உணவுத் தட்டுகளின் வரவும் நின்றுவிட்டபோது, அவர்களால் துயரத்தைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

உணவு வருவது நின்றுவிட்ட முதலாவது நாளன்று அவர்கள் மதியம்வரை எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். வாயிற்படியருகே எவ்வளவு சிறிய ஓசை கேட்டாலும், அது தங்களுக்கு உணவு கொண்டு வரும் யாருடையவோ காலடியோசையாக இருக்குமோ என்று நினைத்து, அவர்கள் ஓடிச் சென்று கதவைத் திறந்து பார்ப்பார்கள். ஆனால், அவையெல்லாம் தெருவழியே தங்கள் பாடுகளைப் பார்த்துப் போகின்றவர்களின் ஓசைகளாக இருந்தன.

இரவில், இனி யாரும் உணவு கொண்டுவரப்போவதில்லை என்று அவர்கள் துயரத்துடன் புரிந்துகொண்டார்கள். வீட்டில் மீந்திருந்த உருளைக் கிழங்கை அவித்துத் தின்னவேண்டியிருந்தது. நான்கு நாட்கள் நல்ல உணவு சாப்பிட்டுப் பழகிய அவர்களின் வாய்க்கு அது பிடிக்கவில்லை. ஆனால், அதைச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

ஒரு கட்டத்தில், வீட்டிலிருந்த எல்லா சில்லறைப் பொருட்களும் தீர்ந்துவிட்டன. ஒன்றும் சாப்பிடாமல் ஒன்றும் குடிக்காமல் ஒரு இரவைக் கழிக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.
மறுநாளும் அதுதான் நிலைமை. அன்று மதியம் சின்னவன் சொன்னான்: “அம்மா, எனக்கு வயிறு வலிக்கிறது.” அம்மா, மகனைச் சமாதானப்படுத்தினாள்: “பொறு, மகனே. ஏதாவது நடக்காமல் இருக்காது.” ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. வெற்று வயிறுகள் ஒட்டி, சிறிய பச்சிளங்குழந்தைகளின் வயிறுபோல ஆவதாக அவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் படுக்கக்கூட முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமானார்கள். காதுகள் அடைத்துக்கொள்வதாகவும், பார்வை மங்குவதாகவும் அவர்கள் உணர்ந்தார்கள். தங்கள் குரலோசைகூட சுருங்கி வருகிறது என்று குழந்தைகள் அதிர்ச்சியுடன் புரிந்துகொண்டார்கள்.

குல்நாஸ் அன்று இரவு ஒரு கனவு கண்டாள். தெருவில் யாரோ தன்னை வேலைக்கு அழைப்பதாக. மறுநாள் காலையில் கனவு பலிக்குமென்று அவள் காத்திருந்தாள். ஆனால், யாரும் அழைக்கவில்லை. இரக்கத்துடன் மக்கள் சொன்னார்கள், “சாதுப் பெண்.” கணவன் இறந்த உடனேயே வேலைக்கு அழைப்பது கொடூரச் செயலாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மறுநாள் அந்தக் குடிசையில் யாரும், படுத்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. தங்கள் முன்னால் வரிசையாக உணவு இருப்பதுபோன்று அவர்களுக்குப் பிரமை ஏற்பட்டது. சின்னவன் சத்தமாகச் சொன்னான்: “பார் அம்மா, ரொட்டி!” அதை எடுப்பதைப்போன்று அவன் கைகளை நீட்டினான். “எவ்வளவு நன்றாக இருக்கிறது, மிகவும் மென்மையாக இருக்கிறது.” மூத்தவன் சில நொடிகள் இனிப்புப் பலகாரங்களைப் பார்த்தான். அவை உடனே மறைந்துவிட்டன. தட்டுகளில் அவை வந்தபோது வாரி விழுங்காதது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவன் நினைத்தான். இன்னொரு முறை அவற்றைப் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்குமே…

குழந்தைகளின் முணுமுணுப்பைக் கேட்டு குல்நாஸுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவள் விழிகளிலிருந்து கண்ணீர் பெருகியது. ஆனால், வெளியே ஒன்றும் நடக்கவில்லை. இவ்வளவு காலம் அவள் வாழ்ந்த தெருவில், ஒன்றும் சம்பவிக்காததைப்போலக் கடந்து செல்கிறது வாழ்க்கை.

ஒரு கதவின் ஓசை கேட்டது. அடுத்த வீட்டுப் பிள்ளை பள்ளிக்குச் செல்கிறான். அந்த வீட்டின் இளைய குழந்தை ஸெவத், கதவை இழுத்துச் சாத்தும் பழக்கமுடையவன். மூத்த பையன் சுலைமான் சாந்தமானவன். அவர்கள் அம்மா வாத நோயாளி.

மற்றொரு காலடியோசை. முடிவெட்டும் டாஹ்சின் எபெண்டியுடையது. அவன் கடையைத் திறக்கப்போகிறான். இன்னொரு காலடியோசை, கம்பெனி குமாஸ்தாவான ஹசன்பேயுடையது. திருமணம் செய்துகொண்டால் அவன் இந்தத் தெருவிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிடுவான். அதோ செல்வது பள்ளி ஆசிரியை நூர்ஹானிம். பிறகு போகும் மனிதன், செருப்பு தயாரிக்கும் பெய்சில்லா எபெண்டி. அப்புறம், வரி வசூலிக்கும் ஸெமில்பே. அப்படிப் பலரும் சென்றார்கள். ரொட்டிகள் நிறைந்த கூடைகளை குதிரைகளின் இருபுறமும் தொங்கவிட்டு குதிரை ஓட்டிச் செல்லும் ரிப்கிபே வருகிறான். அவன் கூடைகள் குலுங்கும் ஓசையை தூரத்திலிருந்தே கேட்கலாம். தினமும் குறித்த நேரத்தில் அவன் இந்த வழியே கடந்து செல்வான்.

கூடைகள் குலுங்கும் ஓசையை முதலில் கேட்டது மூத்தவன்தான். அவன் தம்பியைப் பார்த்தான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். தம்பி கத்தினான்: “ரொட்டி!” கூடைகள் குலுங்கும் ஓசை நெருங்கி நெருங்கி வருகிறது. குல்நாஸ் ஒரு துணியெடுத்துப் போர்த்திக்கொண்டு வாயிலருகே சென்றாள். இரண்டு துண்டு ரொட்டி கடன் கேட்கலாம் என்று அவள் முடிவு செய்தாள். துணி துவைக்கும் வேலைக்குச் சென்று கூலி கிடைத்தால் பணம் கொடுத்துவிடலாம். குதிரையின் குளம்படியோசை நெருங்கி நெருங்கி வந்தபோது அவள் கதவைத் திறந்தாள். வந்துகொண்டிருக்கிற குதிரைக்காரனை விரிந்த கண்களால் பார்த்தாள். இருபுறங்களிலும் நிறைந்து தொங்கும் கூடைகள். அவை தரையில் மோதிவிடுமோ என்றுகூடத் தோன்றியது. அந்தக் கூடைகள் நிறைய, நல்ல முறுகலான புதிய ரொட்டிகள் இருந்தன. தொட்டுப்பார்க்க வேண்டுமென்று ஆசை. தொட்டால் கூடையின் பாரம் தாங்காமல் கைகள் தாழ்ந்துபோகும். குடிசையை நெருங்கிக்கொண்டிருக்கும்போது குதிரைக்காரன், குதிரையின் வேகத்தை அதிகரிப்பதற்காகக் கூச்சலிட்டான்: “கிட்டீ… யாப்…” அது துள்ளி, குடிசையைக் கடந்து சென்றது. ஒரு கற்சிற்பத்தைப்போல குல்நாஸ் ஸ்தம்பித்துப்போய் அங்கேயே நின்றுவிட்டாள். உணவு, முன்னே கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், அதை எடுக்கத் தன்னால் முடியவில்லை. ஒரு வெண்ணிறத் துண்டை வீசுவதுபோல, குதிரை வாலசைத்துத் தன்னிடம் விடைபெறுவதாக அவளுக்குத் தோன்றியது.

கதவை அடித்துச் சாத்திவிட்டு குல்நாஸ் உள்ளே சென்றாள். பிள்ளைகள் ஆசையுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை நேராகப் பார்ப்பதற்குக்கூட அவர்களால் முடியவில்லை. தன் கைகளை ஒளித்துக்கொள்ளக்கூட ஓர் இடமில்லை அவளுக்கு. அம்மாவின் கைகளில் ஒன்றுமில்லை என்று அறிந்தபோது மூத்த மகன் கண்களை மூடினான். இளையவனும் அப்படித்தான் செய்தான். அறையின் ஒரு மூலைக்குச் சென்று கூனிக்குறுகி அமரத்தான் குல்நாஸால் முடிந்தது. அப்படியே கரைந்து இல்லாமல்போய்விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவள் மனப்பூர்வமாகவே விரும்பினாள். பிறகு இளைய மகன் அழைத்தான்:

“அம்மா, அம்மா…”

“என்ன மகனே?”

“எனக்கு என்னவோ செய்கிறது, அம்மா. தாங்க முடியவில்லை அம்மா.”

“என் தங்க மகனே… செல்ல மகனே…”

“என் வயிற்றில் ஏதோ அசைகிறது, அம்மா.”

“பசியினால்தான் அப்படியிருக்கிறது, மகனே. உன் குடல் அழுந்துகிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள்.”

“அம்மா, நான் செத்துப்போய்விடுவேன்…”

மூத்தவன் கண்களைத் திறந்து பார்த்தான். குல்நாஸ் அவர்கள் இருவரையும் பார்த்தாள். இளையவன் அமைதியாக இருந்தான். அவனது கண்கள் குழிந்திருந்தன. உதடுகள் வறண்டு வெடித்திருந்தன. உடல் மெலிந்து காய்ந்திருந்தது. குல்நாஸ், மூத்த மகனை அழைத்தாள். அவன் எழுந்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து வெளியே சென்றார்கள். அம்மா, மகனிடம் ரகசியமாகச் சொன்னாள்: “நீ கடைக்குச் செல்ல வேண்டும், போயே ஆகவேண்டும். கொஞ்சம் அரிசியும் உருளைக் கிழங்கும் கோதுமையும் கேள். சில நாட்களுக்குள் பணம் கொடுத்துவிடுவோம் என்று சொல்.”

கொடுங்குளிரில் ஒரு பையை எடுத்துக்கொண்டு அவன் வெளியே சென்றான். சக்தியற்றுப்போனதால் அவன் கால்கள் நடுங்கின. ஒருவிதமாகக் கடைக்குச் சென்றான். அங்கிருந்த பெரிய கணப்படுப்பின் வெப்பத்தில், மனிதர்கள் அகல்வதற்காகக் காத்திருந்தான். கடைசியில் அவன், பொருட்களைக் கேட்டு வாங்கினான். பிறகு, பணத்தைத் தேடுவதுபோல பையில் துழாவினான். வீட்டில் பணம் எடுக்க மறந்த பாவனையில் சொன்னான்:

“நான் வீட்டில் பணத்தை மறந்து வைத்துவிட்டேன். இனி பணத்தை எடுப்பதற்காக அவ்வளவு தூரம் போக வேண்டும். நீங்கள் இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நாளை கொண்டு வந்து தந்துவிடுகிறேன்.”

சிறார்களின் இத்தகைய தந்திரங்களை நன்றாக அறிந்த கடைக்காரன் சொன்னான்:

“வீட்டில் பணம் இருக்கும் பிள்ளைகள் உன்னைப்போன்று இப்படி மெலிந்துபோக மாட்டார்கள்.” பிறகு, பொருட்களை எடுத்து ஒரு பக்கமாக வைத்துவிட்டு, “போய் பணத்தை எடுத்துக்கொண்டு வா. அப்புறம் இந்தப் பொருட்களை நீ எடுத்துச் செல்லலாம்.”

தன் கபடத்தைக் கண்டுபிடித்ததில் துயரமுற்ற பையன் ஒத்துக்கொண்டான்:

“சரி.”

அவன் வெளியே சென்றான். அப்போது கடைக்காரன் சொன்னான்:

“அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். அவர்கள் எப்படித்தான் வாழ்வார்கள்!”

கடைக்காரனின் மனைவியும் இரக்கப்பட்டாள்:

“பாவப்பட்டவர்கள்…”

வீட்டை நோக்கிச் செல்லும்போது, அவன் உடலைத் தாங்கும் சக்தியற்று சோர்ந்து நடந்தன கால்கள். பெரிய வீடுகளின் புகைபோக்கிக் குழாய்களை அவன் பார்த்தான். அங்கிருப்பவர்களின் மீது அவனுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஆனால், குளிர் தாங்காமல் கிடுகிடுவென்று அடித்துக்கொள்கிற பற்களுடன் அவன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவனது வெற்றுக் கரங்களே தேவைக்கு அதிகமாகச் சொல்கின்றன என்று அம்மாவுக்குப் புரிந்தது. இளையவனும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். மூத்தவன், தான் அணிந்திருந்த மேலங்கியைக் கழற்றினான். கம்பளிக்கடியில் நுழைந்துகொண்டு சொன்னான்:

“எனக்குக் குளிர்கிறது…”

கிடைத்த எல்லாவற்றையும் கொண்டு குல்நாஸ் அவனைப் போர்த்தினாள். பையன் நடுங்கிக்கொண்டிருந்தான். கொஞ்சம் நேரம் சென்றபோது நடுக்கம் நின்றது. அவன் உடல் வெப்பத்தால் தகிக்கத் தொடங்கியது. அசைய முடியாத கண்களை சூன்யத்தில் ஊன்றி அவன் படுத்திருந்தான். துணிகளை அகற்றிவிட்டு தன் குளிர்ந்த கைகளால் குல்நாஸ் அவன் நெற்றியில் தடவினாள்.

மாலை நேரம்வரை குல்நாஸ் அங்கேயே இருந்தாள். என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினாள். அவள் மிகவும் நிராதரவுடன் வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தாள். தனக்குப் பசியில்லை என்று புரிந்துகொண்டாள். பசியின் தன்மை மாறியிருக்கிறது.

சூரியன் மறைந்தது. காய்ச்சல் வந்த மகனைப் போர்த்திய துணிகளெல்லாம் ஒரு பக்கத்தில் கருத்த கட்டுகள்போல இருட்டில் கிடந்தன. திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை உதித்தது. பழைய கிழிந்த துணிக்கு மாற்றாக யாராவது ஏதாவது சில்லறை தருவார்களா? அத்தகைய ஒரு கடை எங்கோ இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் இப்போது அது பூட்டப்பட்டிருக்கும். இனி காலைவரை காத்திருக்கவேண்டும்.

மூத்தவனின் காய்ச்சல் அதிகமானது. அவள் மிகவும் பீதியடைந்தாள். பசியினால் இளைய மகனுக்குத் தூங்கவும் முடியவில்லை. நோயாளியான மூத்த பையன் முனகி நெளிந்தான், கத்தினான். மேலே உற்றுப் பார்த்தவாறு மீண்டும் மீண்டும் பிதற்றிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் கண்ணாடிபோன்று வெளுத்திருந்தன. இளையவன், அண்ணனையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தான். மூத்தவன் மீண்டு்ம் பிதற்றத் தொடங்கியபோது இளையவன் எழுந்தான். அம்மாவுக்கு மட்டும் கேட்கும்படியான குரலில் மெதுவாகக் கேட்டான்:

“அம்மா, அண்ணன் செத்துப்போய்விடுவானா?”

மிகப் பெரும் தாக்குதலுக்கு ஆட்பட்டவளைப்போல குல்நாஸ் திடுக்கிட்டுப் பதறினாள். அஞ்சி அரண்டுபோய் மகனைப் பார்த்தாள்:

“என்ன மகனே, ஏன் இப்படிக் கேட்கிறாய்?”

இளையவன் சில நொடிகள் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு அம்மாவின் அருகே சென்று, அண்ணனுக்குக் கேட்டுவிடாதிருப்பதற்காக காதில் கைபொத்திச் சொன்னான்:

“அப்போது அந்தப் பெரிய வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வருவார்கள், அல்லவா…”

*

நன்றி : யூமா வாசுகி & சென்ஷி


Wednesday, January 2, 2019

'தங்ஙள் அமீர்' - களந்தை பீர் முகம்மது முன்னுரை

தாஜ் எழுதிய இந்த ஐந்து குறுநாவல்களும் பரவசமான அனுபவத்தைத் தந்தன.  ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளிலிருந்து வந்திருக்கும் குறுநாவல்கள்.  படைப்பாளியின் திசை என்ன?  கேட்டுப் பதில் பெற்றபின்னர்தான் இவற்றை எடைபோட வேண்டும் என்கிற அவசியமில்லை.  கைகளை விரித்து ஐந்து விரல்களையும் காணும்போது தோன்றும் அந்த வேறுபாடுகள் இந்தக் குறுநாவல்களிலும் உள்ளன.

ஒரு படைப்பாளியாக அவரால் சோதிக்க முடிந்தவற்றையெல்லாம் சோதித்திருக்கிறார்.  நாடகமே உலகம். இறந்தவனின் குறிப்புகள் என்ற இரண்டும் உலக நடப்புகளைக் கறாராக விமர்சிக்கின்றன.

இவ்விரண்டு நாவல்களிலும் அவருடைய படைப்பாற்றல் மிகப்பெரும் உயரத்தை எட்டியிருப்பதை ஒவ்வொரு வரியிலும் வாசித்துணரலாம்.

நாடகமே உலகம் கற்பனையையும் யதார்த்த நிகழ்வுகளையும் ஒன்றோடொன்று மோதவிட்டுப் பார்க்கிறது.  கற்பனை எப்போதுமே அழகானதுதான்;  கலையின் இயக்கம் இந்தக் கற்பனைக்கு வலுவூட்டும்போது நாம் கற்பனைக்குள் இருக்கிறோமா நிசத்திற்குள் நிற்கிறோமா என்கிற மயக்கம் ஏற்படுகிறது.  இந்த மயக்கம் ஏற்பட வேண்டுமென படைப்பாளி விரும்பியிருக்கிறார்.  ஆனால்

அதற்கான படைப்பு நுட்பம் அவ்வளவு சுலபமாக வாய்க்க முடியுமா?  இங்கு அது அப்படி வாய்த்திருப்பதை என்னவென்று சொல்ல?  ஒரு படைப்பு ஒரே சமயத்தில் குழந்தைகளையும் பெரியவர்களையும் சரிசமமான அளவில் பாதிப்பது மிகவும் அபூர்வமான விடயமாகும்.

நாடக உலகம் நாடகமாக நிகழும்போதே பல சிக்கல்கள் அதனுள்ளே உருவாகிவிடுகின்றன.  அது ஒரே சமயத்தில் நாடகமாகவும் நிகழ வேண்டும்;  பார்வையாளர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கும் வாய்க்காலகள் அமைக்க வேண்டும்.  எழுதப்பட்ட பிரதியும் தன் இறுக்கத்தை நெகிழ்விக்க வேண்டும்.  இப்படியான பல நோய்களுக்கு ஒரே ஒரு மாத்திரை கொடுப்பது எவ்வாறு சரியாகும்?   நாடகத்தில் நிகழக் கூடியன நமக்கு வாய்த்தால் அதைப் போன்ற பொன்னுலகம்  வேறொன்றுமில்லை.  மனிதர்களின் அன்பும் கருணையும் முழுமையான மனிதத்தை அருளும்போது எவ்வுயிர்க்கும் சொர்க்கம் வேறில்லை என்றாகும்.  ஒரே சம்பவத்தை அதன் அன்பான நகர்வாகவும் வேறுபாடான நகர்வாகவும் ஒரு நாடகம் பரிசோதிக்கிறது.  இந்தச் சுழலுக்குள் மனிதர்கள் என்னவாகிறார்கள் என நாடகம் நம்மிடம் கேள்வியெழுப்புகிறது.

நாடகப் பிரதிக்குள் சுகுணாவை எமிலியாகப் பார்க்க நேருவதும் கானை வின்செண்ட்டாகப் பார்க்க நேருவதும் விசித்திரமான சமூக விளையாட்டு.  இதை விதியின் விளையாட்டு என்று கூறி மானுடத்தின் மேன்மையை இழிவுசெய்ய முடியாது.  ஆனால் அதைச் செய்யத்தான் நாம் முயல்கிறோம்.  நம்முடைய மனத்துக்குள் கிடக்கின்ற ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு மகளிர்கள் விலை செலுத்த வேண்டியதாகிறது.  இது ஆணாதிக்கம் வரைய விரும்பும் விதி.  மகளிர்க்கான தனியுலகமோ தனிச் சுதந்திரமோ இல்லை.  எல்லோரும் சர்கார் சையத் அலி முகம்மது கான் திப்புவாக மாறினால் எமிலியை சுகுணாவாக ஆக்கிவிட இயலும்.  இப்படித்தான் மகளிர் சுதந்திரம் மதிப்பு பெறுகிறது.  முகம்மது கான் திப்புவை நாடக மேடையிலிருந்து இழுத்துப் போட்டால் அவனும் இன்னொரு வின்செண்ட்டாகவே இருப்பான்.  இங்கே மதம், நாகரிகம், கல்வி, அந்தஸ்து, சமூக உணர்வு என்பனவெல்லாம் அர்த்தமற்றவையாகிவிடுகின்றன.  எல்லா புனித நூல்களும் உயிர்ப்பற்று அது தோன்றிய காலத்திய ஜடமாகவே கிடந்துவிடுகின்றன.  பார்வையாளனும் கலைஞனும் குவிகிற மையப்புள்ளியில் இவையெல்லாமும் கரைந்தோ கலந்தோ சேறாகிவிடுகின்றன.  மகளிரின் செயல்கள் மனத்துக்கு உவப்பாக இல்லையெனில் அவர்களைக் கொல்வதில் தவறே இல்லை என்கிற நோக்கத்தைத்தான் கலைஞனும் பார்வையாளனும் கொள்கிறார்களெனில் அடிப்படையான சமூக இயக்கம் கேலிக்கூத்தாகவே இருக்கும்.

இறந்தவனின் குறிப்புகள் படைப்பாளிகளின் ஒரு பக்கத்தைத் தோலுரிக்கின்றன.  இதுவும் கற்பனையை முன்வைத்துச் சமூக யதார்த்தத்தை அலசுகிறது.  இருவேறு காலப் பரிமாணங்களில் ஒரு சமூகம் கொள்ளும் அரசியல் என்னவாக இருக்கும் என்கிற இலக்கை அலச முனைகின்றது.  எப்போதும் பதவியும் அதிகாரமும் இணைந்தே இருக்கின்றன.  ஒன்றில்லாமல் பிறிதொன்றில்லை.  நாகரிக வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் வளர்ந்துவரும் காலத்தோடு ஒன்றிணைய முடியவில்லை.  இதை உரசிப்பார்ப்பதற்காகவே ‘தி பெக்கர்’ என்ற நாவலும் அதன் படைப்பாளி காஸிமோவும் உள்ளே நுழைகின்றார்கள்.  இது கூடவே இருக்கின்ற எழுத்தாளனின் பொய்ம்மை முகத்தை அம்பலப்படுத்துகின்றது.  இறந்தவன் என்றும் கடிதம் எழுதப்போவதில்லை.  ஆனால் கதையில் வரும் இறந்தவனோடுதான் பிறந்தவன் உரையாடிக்கொண்டிருக்கிறான்.  இறந்தவன் என்பது ஒரு படிமமாகக் காலத்தோடு இசைய முடியாத ஒரு படைப்பாளியை விமர்சிப்பதாகத் தோன்றுகிறது.  இருவேறு காலங்களை முடிச்சுப்போடும்போடுகிற இழை பலவீனமாக இருக்கின்றது.  ஆனால் அதற்கான நியாயம் குறைவுபடவில்லை.  ஆதிகாலம் தொட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அதை எதிரிகளை ஒழித்துக்கட்டஅப் பயன்படுவதுமாக சதுரங்கக் காய்கள் உயிர்ப்புடனேயே இருந்துவருகின்றன.

தாஜின் மனத்துக்குள் அதிகார எதிர்ப்பு கனன்றுகொண்டே இருக்கின்றது.  அது தன் சமூகத்திற்கு வெளியே மட்டும் என்றில்லை;  உள்ளேயும் இதர மூன்று குறுநாவல்களுமே சொந்தச் சமூகத்தின் நடப்புகள், சிந்தனைகள், செயல்பாடுகளை விமர்சிப்பதாகவும் பகடி செய்வதாகவும் அமைகின்றன.  தங்ஙள் அமீர் காணப்படும் நிகழ்வுகளில் அவருடைய அரும்பெரும் சாதனைகளாக எதுவும் காணக் கிடைப்பதில்லை.  பிறரின் நோக்குகள், கணிப்புகளிலிருந்து இன்னொருவரின் அற்புதம் கணிக்கப்படுவதும் அதைச் சூழ்ந்து தம் இருப்புக்கு ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சிகளும் நமக்கு விசித்திரமானவையாகத் தோன்றுகின்றன.  அதே சமயத்தில் அவர்களின் துயரங்களுக்கு முடிவு கிட்டிவிடாதா என்ற ஏக்கமும் நம்மைச் சற்றே வதைக்கின்றது.  ’........’ யார் யார் எந்தெந்த மதத்திற்குள் இருந்தாலும் அவ்வவ் மண்ணின் இயல்புகளிலிருந்து துண்டித்து  வெளியேறிவிட அவர்களால் முடியாது என்பதைக் காட்டுகிறது.

சமூகமும் அதுசார்ந்த உணர்வுகளும் நாம் சிலாகிக்கும் கருத்துகளுக்கு வெளியேயும் ஜீவிக்கும்.  அதில் தாம், பிறர் என்கிற விலகல்கள் பேரளவில் இருப்பதில்லை;  ஒருவேளை அப்படியிருந்தாலும் தம்முடைய தேடல்களுக்கு எதெதெல்லாம் கைகொடுக்குமோ அதையெல்லாம் பக்குவமாகப் பயன்படுத்திக்கொள்ளவே விழையவும் செய்கிறோம்.  இப்படைப்புகளில் மேலோங்கி நிற்பது படைப்பாளியின் நுட்பமான பார்வைகள்.  இது இல்லாமல் படைப்புகளைச் செழுமைப்படுத்திவிட முடியாது.  ’பெருநாள் காலை’யில் அவர் குறிப்பிடும் ஒரு காட்சி, “அப்பல்லாம் பெருநாள்னா, இரவு இரண்டுமணிக்கே அடுப்பாங்கரையில் பாத்திரங்களின் சலசலப்புச் சப்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்.  விடிய இருக்கிற பெருநாளை அந்தச் சப்தங்கள்தான் வடிவமைத்துக் கொண்டிருப்பது மாதிரி!”  இத்தகைய காட்சிகளை ஒவ்வொருவரும் கண்டிருப்போம் - சப்தங்களையும் கேட்டிருப்போம் அவரவர் பண்டிகை நாள்களில்.  ஆனால் இந்தச் சப்தங்கள்தான் அவற்றை வடிவமைத்துக்கொண்டிருந்தன என்கிற மறைபொருளை நாம் கவனிக்கவில்லை.  படைப்பின் தன்மைக்கு இத்தகைய அம்சங்களே ஊன்றுகோலாகின்றன.  கூடவே நம்முடைய மத விவகாரங்களில் நாம் எவ்வளவு பெரிய கில்லாடிகளாக இருந்தாலும் அதற்கும் மேற்பட்ட கில்லாடிகள் நம்மிடையே இருப்பார்களெனவும் அவர்கள் ஒருகட்டத்தில் நம்மை வழிநடத்தக்கூடியவர்களாகத் திகழ்வார்களெனவும் அறிந்துகொள்கிறோம்.

தம் சமூகத்தைப் பரிசீலனைக்கு உட்படுத்துவது ஒரு படைப்பாளியின் மிகப்பெரும் கடமை.  படைப்பின் வழியே சமூகமும் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.  இவையிரண்டும் இல்லாத சூழலில் சமூகம் அசைவற்றுத் தேங்கிப் போய்விடும்.  இதில் சொந்த அபிமானங்களுக்கு வேலையில்லை.  இருப்பதில் திருப்திகண்டுவிடவும் கூடாது.  உலகம் முழுவதிலும் இச்சமூகத்திற்கு நேர்ந்திருக்கும் அவலங்களிலிருந்து மீள்வதற்கு இத்தகைய படைப்புகள் கைகொடுக்கும்.  அவ்வகையில் இக்குறுநாவல்கள் முஸ்லிம் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் பல.  அவற்றைப் பதில்களாக்க முயல வேண்டும்.

தாஜ் ஓர் எழுத்தாளராகக் காட்டும் உயரம் பரிசீலிக்கத் தூண்டுகிறது.  மலைகளின் உயரத்தைக் காற்று தொடாமல் போவதில்லை.  காற்றும் மலையும் உறவாடும் இடத்தை, உயிர்ப்பூட்டும் சிந்தனையை இக்கதைகள் காட்டுகின்றன.  தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் தாஜ் இருக்கிறார் என்கிற செய்தியை ஒரு வாசகனாக நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

*

நன்றி : களந்தை பீர் முகம்மது | காலச்சுவடு பதிப்பகம்