Sunday, April 28, 2013

சாபம் - கோ.ராஜாராம்

1979-ல் வெளியான 'இழந்து போன ஆகாயம்' தொகுப்பிலிருந்து, எனக்குப் பிடித்த 'நெறிகள்' இதழ் சிறுகதை, நன்றியுடன்...

***
சாபம்
கோ.ராஜாராம்

நான் மல்லாந்து படுத்திருந்திருந்தேன். மனோவுக்காக காத்திருந்த என் அருகாமை விரிப்பும் என்னோடு சேர்ந்து மல்லாந்தவாறாய் ஓர் எண்ணம். மனோ வர இன்னும் நேரமாகும். அக்கா வந்திருக்கிறாள். அக்காவின் இரண்டு குழந்தைகள் இங்கேயே மூன்று உள்ளன. தங்கை சிங்காரிக்கும், அக்காவிற்கும் இடையில் மனோதான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி வரும். கொல்லைப் புறத்தில் பேச்சுச் சத்தம் கேட்டது. அம்மா, அக்கா, சிங்காரி என்று மாறி மாறிக் குரல். ஒன்றையொன்று இடைவெட்டும் குரல்கள். மனோவின் குரல் எப்போதாவது தான் கேட்டது. அவள்தான் பாத்திரம் துலக்கிக் கொண்டிருக்க வேண்டும். பயல்கள் ஒருவனோடொருவன் கட்டி புரண்டபடி 'சளசள'வென்று பேச்சுக் கொட்டியவாறு, புதிய நண்பர்கள் தந்த குதூகலத்தில் அமிழ்ந்து ஒலிகள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் கூடத் தூங்க கொஞ்சம் நேரந்தான் ஆகும். குழாயிலிருந்து தொட்டிக்குள் விழுகிற நீரின் சீரான ஒலி கொல்லைப் புறத்திலிருந்து. இந்த மனோ எப்போதுதான் வந்து தொலைவாள்? வந்தவுடன் அவள் என்ன செய்வாள் என்று பழகிப் போய்விட்டது. விளக்கை அணைத்துவிட்டு தாழிடுவாள். ஏன் இதை மாற்றிச் செய்ய மாட்டாள் என்று யோசித்திருக்கிறேன். முதலில் விளக்கைத்தான் அணைத்திருக்கிறாள். பின், என் அருகில் என் இடக்கைப் புறமுள்ள வெற்றிடத்துக்கு வந்து மெல்ல உட்கார்வாள். உட்கார்ந்தபடியே என் இடது தோளைத் தொடுவாள். எப்பவுமே கை ஜில்லிட்டுப் போய்த்தானிருக்கும். அவ்வளவு நேரம் தண்ணீரில் கைகளை அலம்பி, பாத்திரம் துலக்கியிருப்பாள். அதன் மென்மை மிக அதிகமாய்த் தெரியும். 'நெழுநெழு'வென்று உணர்வேன். நுனிவிரல்கள் உட்புறமாகச் சிலவேளை குழிந்துகூடப் போய்ச் சுருக்கங் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவள் கை மெள்ள என் இடது தோளிலிருந்து பயணமாகி என் இடது மார்பில் ஊர்ந்து, கழுத்து வழியே பயணமாகி என் இடது மார்பில் ஊர்ந்து, கழுத்து வழியே உதடுகளை வழியும். என்னுள் சலனம் அப்போதுதான் ஏற்படும். பழக்கத்தை மாற்ற வேணும், நான் அதற்கு முன்பே சலனப்பட முயன்றிருக்கிறேன். ஆனால் அவள் விரல்களின் குளுமை என் உதடுகளை வருடும் வரையில் என் உறைவு குலைந்ததேயில்லை. இதென்ன பழக்கத்தின் அடிமையாய்ப் போய், என்னையே, இயந்திரமாக்கி, என் உயிர்ப்புகளிளை இழந்து வருகிறேன் என்று தோன்றியிருக்கிறது.

மனோவின் உடல், மனோவின் அசைவுகள், நெளிவுகள், எந்த நேரத்தில் அவள் எங்கே தொடுவாள், எங்கே முத்தமிடுவாள் என்றெல்லாம் ஒரு கணிப்பும், இயந்திரமயமான எதிர்பார்ப்பும் எனக்கிருந்தது. எங்கே கை வைத்தால் எலும்பு தட்டுப்படும், எங்கே கை வைத்தால் சதை தட்டுப்படும், என்றெல்லாம் எனக்குப் பழக்கமாகியிருந்தது. எந்த ஸ்பரிசம் அவளைக் கிளர்ந்தெழச் செய்யும் என்றெல்லாம் மனனமாகியிருந்தது. அவளுக்கும்தான் இப்படி இருக்கும். இந்த உணர்வுகள், பழக்கப் படிவுகள் என்னைத் திடமாக்கி விடுகின்றன. சில சமயம், உயிரிழந்த பொம்மைகள் இரண்டின் கழைக்கூத்து போல, எந்தப் புதுமையும் அற்ற ஒரு செயல்பாடு. சில சமயம் உரக்கக்கத்த வேண்டும் போல் இருக்கும். முடிந்ததில்லை. எங்கள் எல்லாச் செயல்களுக்கும் சாட்சியமாய் அருகில் அறையில், ஒரு சுவர் இடைவெளிக்கப்பால் என் அம்மா, தம்பி, தங்கையர் என என்னைக் கூசச் செய்யும் பார்வை வீச்சுக்களுடம், என் ஒலிகளை உணர்ந்து கேலி செய்கின்ற விஷப் படுக்கைகள் என அவர்கள். அவர்கள் மீதிருந்த என் பாசம் சிறிது சிறிதாகக் கூச்சம் நிறைந்த ஒரு பயமும் வெறுப்புமாய் ஆகிவிட்டிருக்கிறது. முழுமை பெறுகிற உச்சநிலைகளிலும்கூட எங்கள் முனகல்கள் அமுங்கித் தேய்ந்து பக்கத்து அறையிருப்பின் சுமையேறி நசுங்கிப் போய்ச் சோர்ந்து ஒலிக்கையில் என் அடிமைத்தனம் மட்டுமே விஸ்வரூபமேடுத்து என்னை உறையவைக்கும். ஐயகோ! என் மனைவிக்குக் கூட முழுமையாக, ஒலிரூபமாக நான் சொந்தப்படவில்லையா? பின், இதென்ன உறவுகளின் சமுத்திரத்தில் என்னை மூழ்கடித்துக் கொள்கின்ற முட்டாள்தனமான பொறுப்புணர்ச்சி?

இன்னமும் கொல்லைப்புறம் சப்தங்கள் ஓயவில்லை. இந்த எதிர்பார்ப்புக்கு விரைவில் பூர்த்தி செய்யப்படவிருக்கிற விழைவின் உச்ச்சக்கட்ட எக்களிப்பிற்கு, உலர்ந்துபோன ஒரு சலிப்பு மிக்க பின் விளைவான அயர்ச்சிக்கும், அந்த வேளை மனம் நிரம்பிப்பொய், உடை குலைந்த நிலையில், எந்த பாலிணைவு விழைவுமின்றி, அவள் மார்பையும் கூந்தலையும் வருடுகின்ற, உணர்ச்சிகள் வரண்ட, ஒரு மகிழ்ச்சியற்ற மனவெளிக்கு என்ன அர்த்தம்? இந்த எதிர்ப்பும் பழக்கமாய்ப் படிந்துபோன ஒன்றெனினும் அந்தச் சிறையைத் தவிர்தெறிந்து விட முடிந்ததில்லை. அக்காலத்திலிருக்கின்ற இன்றுகூட, என் இரவுப் பொழுது இப்படித்தான் கழியவேண்டும் போல. ஒரு களிப்பு அற்ற கடமைப்பாங்கு மட்டும்... நான்சென்ஸ்!

தினமும் இவளேதானா , எனச் சலிப்படைந்து, அவளுடைய infinite variety என்று ஏதோ ஒற்றைக் கற்பனை செய்துகொண்டு, வேறு விதம ¡கமுயன்றபோதுங்கூட;  அவள் அந்த வழி தப்புதலை உணர்ந்து, மென்மையாக,  பழக்கமாகிப்போன பாதையிலெயே என் கைகளை நகர்த்தி வைத்து விடுவாள். என்னால் எதிர்க்குரல் தரமுடியாது, இதுதான் சரியென்பது போல அவளுக்குள் நினைப்போ? அவளுக்கு ஏன் சலிப்பே தோன்றினதில்லை. முதலில் விளைக்கை அணைத்து விட்டுக் கதவைச் சாத்துவதில் தொடங்கி அயர்ச்சியுடன் என் கைகளைத் தன் மீது ஊர அனுமதித்தபடி, தன் ஆடைக்குலைவை ஒதுக்குவதுபோல, என் மேற்காலில் கைகளை வைக்க முற்படுவதுவரை ஏன் இவள் வேற்றுமை காட்டுவதில்லை. மனதுக்குள்ளான என் இறைஞ்சுதல்கள், மனோ, நீ சற்றே மாறேன். உன்னைச் சிறிது நேரம் எனக்கு உடைகள் இன்றி காட்டி விடேன். மனோ, நீ ஸ்பரிசத்தல் மட்டுமே என்னுடன் உறவு கொள்வதை முடித்துக்கொண்டு சற்றே தனிமை கொண்டு, காட்சியில், ஒலியுறவில் என்னுடையவளாய் ஆகப்பாரேன். இல்லை, நீ மாறத்தான் வேண்டும். உன் சிறிய மார்பகங்கள், கை வைத்தால் எலும்பைத் தெரிவிக்கிற பின்னணியில் கொண்டு செல்லும் மார்பகங்கள் - ஐயோ¡ சற்று எனக்கு எங்கே சதைப்பற்று வேண்டு,. உன் பின் பகுதியிலிருக்கிற சதைப் பற்று போல - நான் ஒரே ஒரு முறை தொட்டு ரசித்த, அதற்கு மேல் செல்ல பயந்ததுபோல் என்னுள் முடங்கிப்போன அந்தக்கணத்தின் மகத்துவத்தின் சதைப்பற்றுத் திமிறுகிற என் கல்லூரித் தோழி ஜானுவினுடையது போல, சரி உன் பௌதீக அமைப்பை இனி மாற்றுவதென்பதில்லை. தொலைகிறது. உன் பழக்கத் தொற்றுதல்கள்? Infinite Variety வேண்டாம் - கொஞ்சம் போல மாறுதல். இந்த என் இறைஞ்சுதல்கள் உன் காதுகளில் விழாத ஒலியலை வடிவில் எனக்குள்ளேயே தங்கி விடுகின்றன. நான் உன்னுடன் பேசும்போதுகூட  என் தேவைகளை மறந்து, உன் உறவுகளை, என் உறவுகளை உறவுகள் என்ற சொல்லின் குறிப்பைத் தவிர வேறு தொடர்பற்ற silly உறவுகள். அவர்கள் பலங்கள் / பலவீனங்கள், மகிழ்ச்சிகள் - உனக்கும் எனக்கும் எந்த விதத்திலும் உறவில்லாத அந்த உறவினர்களைப் பற்றியா நாம் பேச வேண்டும்? பேச்சு என்ற சொல்லுக்கு நியாயந்தராத, உதடுகளில் கூட உருப்பெறாத காற்றோடு கலந்தலிலே முடிகின்ற பேச்சுக்கள்... நான்சென்ஸ்.

கொல்லைப் புறத்தில் பாத்திரமெல்லாம் கழுவியாகி விட்டது போல உணர்வு. பேச்சுச் சத்தம் குறைந்திருக்கிறது. முழுக்க நின்று விடவில்லை. பெண்களுக்கு பேசுவதற்கு ஏதோ ஒரு விஷயம் கிடைத்த்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த அறையின் நான்கு சிமிண்ட் சுவர்களுமே சரசரவென்று நகர்ந்து பென்ணுருவாகி, மனோவாகி விளக்கை அணைத்து விட்டுக் கதவைச் சார்ந்திவிட்டு என்னருகில் படுத்து, தன் பழக்கத்தைப் பிரயோகம் செய்கின்ற மாதிரி ஓருணர்வு. ஆனாலவள் இன்னமும் வரவில்லை. அடுத்த அறையில் குழந்தைகளின்  ஒலி சற்றுக் குறைந்திருந்தது. அக்கா அதட்டிக்கொண்டிருந்தாள். 'படுங்கடா படுங்கடா' பயல்கள் சத்தம் இன்னமும் குறைந்தது. என் பெயரைச் சொல்லி அக்கா கூப்பிட்டாள் 'சத்தத்தைக் காணோமே தூங்கிட்டான் போலிருக்கு. நாளெல்லாம் வேலை, பாவம்' ஆனால் நான் தூங்கவில்லை. இந்த அறைக்குள் ராத்திரியில் ஒலியெழுப்புவது, ஒரு முரண்பாடு போலாகிவிட்டது. சாத்தியமற்ற, பொருந்திவராத ஒரு முரண்பாடு இந்த அறை அந்த ஒரு செயலுக்கே ஆனதுபோல.

சுற்றுலாவில் சென்ற நாட்களில் நானும் மனோவுமாய் ஓர் இரவு, ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. மகாலிபுரத்தின் கடலொலி 'ஹோ'வென்று, லாட்ஜ் சுவர்களை மீறி ஒலியெழுப்பியது. சுற்றுலாக் களைப்பில் படுத்தவன் வீட்டின் அறையில் செய்வது போலவே மனோ இங்கே விளக்கு அணைந்து விட்டுக் கதவைச் சாத்தியவுடன்  உள்ளூர 'திக்'கென்று எரிச்சல் பட்டு, என்னை அவளுக்குத் தரமால் முழுக்கவும் மறைந்து குறுகி ஜடமாய்க் கிடந்தேன். தோளிலிருந்து தொடங்கி என் உதட்டுக்கு வந்த கைகள் என் திடத்தைக் கண்டு தயங்கின. ஏதோ தூக்கம் நெருங்கினாற்போலிருந்தது. என் அடுத்த விழிப்பில் என்னருகில் கண்ணயர்ந்த மனோ தெரிந்தாள். பின் சட்டென்று என் காதில் ஒலித்துச் 'சர சர'வென்று வடிந்து போகிற, பெரிய அலைகள். 'என்னைக் கொண்டு விடும்மா' என்று நடுஇரவில் எழுந்து கொண்டு பாத்ரூம் போவதற்குள் அம்மாவை அழைக்கின்ற தம்பியின் நினைவுதான் வந்தது. அந்தத் தனியறை இங்குமா, இன்னுமா துரத்துகின்றது என்று எண்ணி என் படுக்கையிலிருந்து இறங்கி விளக்கைப் போட்டேன். அவளின் அலங்கோலம் அவள் அரை விழிப்பில் அசைந்து 'என்ன' என்றாள். 'ஒன்றுமில்லை'யென்று சொல்லிவிட்டுப் பின் பாத்ரூம் சென்று திரும்பினேன். அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள். பாவாடை, ஜாக்கட் மட்டும். அரைத் தூக்கக் கலக்கத்தில் சோர்ந்த முகம், நான் அவளருகில் உட்காராமல் கீழேயோ சுவற்றில்சாய்ந்து கொண்டு உட்கார்ந்தேன். அவள் அந்த அசாதரணமாகப் பட்ட செயலினால் சட்டென்று எழுந்து கொண்டாள். 'என்னங்க' 'ஒண்ணுமில்லை' அவள் அருகில் வந்து உட்கார்ந்தாள். பக்கவாட்டில் திரும்பி சட்டென்று அவள் முகத்தை அழுந்தப் பற்றி என் உதடுகளைப் பதிந்தேன். ஒரு நிமிஷம் அதிர்ந்து போனது போல் தெரிந்த அவள் அடுத்த நிமிஷம் தன் கைகளை என் மேல் படரவிட்டு - வழக்கம்போலவே - இடது கையை என் இடது தோளிலும், வலது கையை முதுகெலும்பிலும் படர விட்டாள். சட்டென்று எல்லாமே, என் முயற்சிகளே ஒன்றுமில்லாததான உணர்வில் என்னைத் தளர்த்திக் கொண்டேன். 'என்னங்க' 'ஒன்ணுமில்லை' சட்ட்டென்று அவள் மடியில், பாவாடை மெலிதான தன்மையில் நுணுக்கமாய்த்தெரிந்த அவள் அங்க அமைப்புகள் என் முகத்தில் அழுந்த நான் குலுங்கினேன். கண்ணில் நீர் வந்து விடுமோ என்றொரு பயம். அந்த உள்ளாடையில் நாற்றம் நாசியிலேறியபோது இன்னமும் என் முகத்தை அவள் மடியில் பதித்துக்கொள்ளத் தோன்றியது.அந்த உடை, அப்போது, அவளுக்கும் எனக்கும் இடையில் ஒரு தடையாய் இல்லை.  ஒரு தொடர்புக்கருவி போலிருந்தது. அதன் மூலமாய்த்தான் அவளை கட்டவேண்டுமது போல. அழுத்தத்தில் அவளின் உள் உறுப்புகளின் உருவக்கேந்திர ஸ்தாபன விஸ்தீகரனம் அருகாமைப் பட்டது. சட்டென்று என் முகத்தை விலக்கிக்கொண்டு விட்டேன். விம்மியழுதுவிடுவேனோ? என்றொரு அச்சம். 'என்னங்க' 'ஒண்ணுமில்லை'. அவள் கையில் வழக்கமான ஜில்லிப்பு இன்று இல்லை என்று ஆறுதலான நினைவு வந்தது. அவளுடைய விரல்களை நான் வருடினேன். தினம் ஒரு பாணியாக, தினம் ஒரு அமைப்பாக இந்த விரல்கள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். இயலாததை எண்ணிக் கொள்வதில் ஒரு அசட்டு சந்தோசம். குளிர்ச்சியின்மையைத் தவிர ஒரு மாற்றமும் அந்த விரல்களில் இல்லையென்ற உணர்வு வந்தவுடன் விரல்களைப் பிடியிலிருந்து நழுவ விட்டுடேன். 'எண்னங்க' 'ஒண்ணுமில்லை' அன்று வெறும் உடனிருப்பாக, நிகழ்வின்றிக் கழிந்தது. ஆனால் காலையில் எழுந்ததும் வழக்கம்போலவே அவள் குளித்து விட்டாள்.

அருகிலிருந்த அறையில் விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. புத்தகம் படிப்பதற்காக என்றெண்ணிக்கொண்டு எரியவிட்ட மின் விளக்கு என் அறையில், மனோ உள்ளே வந்து விளக்கை அணைத்து வீட்டுக் கதவைச் சாத்தலானாள். என் காத்திருப்பு ஒரு பொருளுமற்றதென்று எண்ணி இருட்டினூடே என்னை நோக்கி வருகிற என் மனோவைப் பார்க்கலானேன். ஒருவருக்கொருவர் வரமாக வேண்டிய நாம், சாபமாகி போனதெந்தவிதம்? உன் அம்மா, என் அம்மா, என் தங்கை, தம்பி  இந்த ஒலிகளை கடத்துகிற நான்கு சுவர்கள், என் முன்னும் தளராத உன் உடைகள், தவறான இடங்களில் எலும்பாகியும் சதையாகியும்போன நீ , பொறுப்பேற்க முடியாத  உன் உடல் அமைப்பு மோக நிழல் தீண்டுதல்களிலும் சிலிர்ப்பேறாத உன் வெறுமையான கடமையுணர்ச்சி, நீ தோளில் தொடங்குகிற பிரயாணம், எல்லாம் ஏன் இன்று வெறும் தேவையாக மட்டுமே மாறி விட்டன?

மனோவின் கையை என் இடது தோளில் உணர்ந்தேன்.

***
நன்றி : கோபால் ராஜாராம்

Thursday, April 25, 2013

எந்த நேரமும் எம்புறா நெனப்புதான் - மஜீத்நண்பர் சொன்ன ‘அனிமல்ஸ் ஆர் ப்யூட்டிஃபுல் பீப்ள்’ படத்தை பாக்கனும்னு திட்டம்போட்ட அன்னிக்கு நிலநடுக்கம் சதி செஞ்சு கவுத்துருச்சு. அதனால நேத்து ராத்திரி பார்த்தே தீரனும்னு, முடிவோட, வீட்டுக்கு ஓடுற வழியில, ஒரு புதுசொந்தக்காரத் தம்பியைப் (புதுப்பணக்காரன் மாதிரி) பாத்து, அதுட்டயும் இந்தப்படத்தைப் பாக்கச் சொல்லிட்டு, தம்பி சொன்ன ‘எர்த்’ படத்தையும் கொஞ்சம் கொஞ்சம் பாத்து,, குறிச்சுக்கிட்டு,
## முக்கியமா இரவு விருந்தையும் சிறப்பிச்சுட்டு –ஹிஹி ##  ராத்திரி 12 மணிக்கு வந்து வீட்டுவாசலப் பாக்க ஓட்டமா ஓட, …….. 

எதுத்த கட்டடத்து வாசல்ல அந்த நேரத்துல ஒரு சுவரோரமா ஒரு வெள்ளப்புறா தரையில உக்காந்துருந்துச்சு. பிரேக் போட்டு, கொஞ்சம் கிட்டக்கப்போய் தொட முயற்சி பண்ணேன், சாதாரணமா பறந்திருக்க வேண்டிய புறா பறக்கல. லேசா அசைஞ்சு மட்டும் கொடுத்துச்சு… பிடிக்க முயற்சிபண்ணேன். நின்னபடிக்கு அசையவே இல்ல. எனக்குப் போக மனசில்ல. ஏதாவது பூனை வந்தா புறா அம்பேல்தான். கையில புடிச்சு தூக்கிட்டேன். அந்த நேரத்துலயும் ஒரு ஆந்திராக்கார நண்பர் அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தார். அவர்ட்ட சுருக்கமா ‘வெளக்குனேன்’. மேலே ஏஸி மேல வச்சுட்டா காலைல பறந்துரும். வச்சிரவான்னு கேட்டேன். அதுக்கு அவர், வேணாம், கீழே விழுந்துரப்போகுது, என்கிட்ட கொடுங்க, நான் இருக்கும் கட்டடத்துல நெறையப் புறா நிக்கும், அதுகளோட விட்டிருவேன்ன்னார். நானும் கொடுத்துட்டேன். நடந்து என் வீட்டு வாசலுக்குப் பக்கத்தில் போனவுடன், திடீர்ச்சந்தேகம் வந்தது: பூனைக்குப்பதிலா இவர் இரையாக்கிட்டா?ன்னு.
நான் கைல வச்சிருந்தபோது, நல்ல புஸ்டியா வேற இருந்தமாதிரி ஞாபகம்.
பாய் என்கிட்டயே குடுத்துரு, நான் வீட்டு பால்கனில வச்சுக்கிட்றேன்னு சொல்லவும் அவரும் சரின்னு கொடுக்கும்போது, எம்பொரடில அடிக்கிறமாதிரி, புறா ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாரு.
பாத்தீங்களா? புஸ்டியா இருக்கிறது மட்டும் நோட் பண்ற எனக்கு, அந்த இருட்டிலும் புறா அழகா இருக்குறத நோட் பண்ணுன அவர் மேல சந்தேகம். என்ன உலகம் இது?

குற்றவுணர்ச்சியோட வீட்டுக்கதவைத் திறந்து, வெளிச்சத்தில் புறாவைப் பாத்தா அம்புட்டு அழகு… வெள்ளை நிறம்…கழுத்தில் மட்டும் கருஞ்சாம்பல் நிறப் புள்ளிகள்.. ஆனா அது என்னைப்பாத்ததுல எங்கோ சிக்கல் மாதிரி தோனுச்சு. நேராவே பாக்கமுடியும்போது, தேவையில்லாமல் கழுத்தை ஒரு மாதிரி சுத்தி வளச்சுப்பாத்துச்சு. கொண்டுபோய், 10 அடி நீளம், ஒன்றைஅடி அகலம், நாலடி உயர வெளிச்சுவர் இருக்கிற அந்தப் மினியேச்சர் பால்கனில விட்டுட்டு, ஒரு டப்பாவில் தண்ணி, வீட்டுல இருந்த அரிசியப் போட்டுட்டு, படம் பாக்கலாம்னு கண்ணாடிக் கதவை மூடும்போதும் மூடுனபிறகும் மீண்டும் அதே மாதிரி கழுத்தச் சொழட்டி என்னயப் பாத்துச்சு…ஏன்னு தெரியல.. ஆனா பயப்படுறமாதிரி தெரியல

அதுக்கப்ப்புறம் படத்தைப் பாத்து முடிச்சுட்டேன், ஒரு நாலஞ்சு தடவ புறாவ வந்து வந்து பாத்துக்கிட்டே.. படம் முடிஞ்சும் தூங்க முடியல.. மறுபடியும் சிலதடவை போய்ப்போய் பாத்தேன். தூங்குறமாதிரி தெரிஞ்சுச்சு, தூங்காதமாதிரியும்தான். எப்படியோ 5 மணி ஆச்சு தூங்க, மறுபடி எட்டேமுக்காலுக்கு அரக்கப்பறக்க எந்திருச்சு ஓடிப்போய்ப் பாத்தா, நடந்துபோய் வேற எடத்துல நின்னுக்கிட்ருந்துச்சு. சாப்டுச்சா தண்ணி குடிச்சுச்சான்னு தெரியல. ஆனா என்னவோ வித்தியாசமா பண்ணுச்சு, கழுத்தச் சுத்தி ஒருமாதிரியாப் பாத்துட்டு, அதோட உச்சந்தலைய தரைல வச்சுத் தேச்சுக்கிருச்சு. எனக்கு ஏகப்பட்ட கேள்விகள் - இருக்கும் கவலைகளுக்குச் சகோதரர்கள் சேர்ந்தார்கள்:

எம் புறாவுக்கு என்ன பிரச்சினை?
இதுவரைக்கும் அது பறந்ததே இல்லையா?
நேத்து எதுவும் அடிகிடி பட்ருக்குமா?
இல்ல மனுசனுக்கு மாதிரி எதுவும் மன வியாதியா? ஆட்டிஸம் மாதிரி
அப்பறம் இத்தனநாள் எப்டி வாழ்ந்துச்சு?
அது நல்லபடியா பறந்து போய்ருமா?

இன்னும் கொஞ்சம் அரிசியும் போட்டுட்டு, அவசரமா ஆஃபிஸுக்கு வந்துட்டேன்
சாயந்திரம் ஊருக்குப்போகும் நண்பரை ஏர்ப்போர்ட்டில் விட்டுவிட்டுத்தான் போய்ப் பார்க்கவேண்டும்..

2

வியாழக்கிழமை ராத்திரி புறா உயிரோடு இருந்ததே எனக்கு சந்தோஷம்தான்….. ஆனால் அது ஆரோக்கியமா இல்லைன்னு மட்டும் தெரியுது. சாப்பிடுது; தண்ணி குடிக்கிது.தலையில ஏதோ பிரச்சினை. தலைகீழாவே பாக்க முயற்சி பண்ணுது. கழுத்தை 180°  க்கு சொழட்டி, மல்லாந்து பாக்குது.

எல்லாத்தையும் விடக்கொடுமை, திடீர்திடீர்னு கழுத்தைத் திருப்புனபடிக்கு, அலகை மேல்பக்கமா வச்சுக்கிட்டு, உச்சந்தலையை தரைல அடிச்சிக்கிருது. அடிக்கடி.. இதத்தான் பாக்க சகிக்கலை.

புறாக்களுக்காக இரக்கப்பட்டோ இல்ல போறவழிக்குப் புண்ணியம் தேட மட்டுமோ, வீதிகள்ல போட்ருக்கிற  3 வகை இரைகளப் பொறுக்கிவந்து போட்டு, எதப் பிரியமா சாப்டுதுன்னு கண்டுபிடிச்சாச்சு.

பகல்நேரத்துல நான் போய் தண்ணி, இரை வச்சா, பயந்து நடக்கவோ, ஓடவோ, பறக்கவோ முயற்சிபண்றதுல, கீழவிழுந்து, மல்லாக்க போட்ட கரப்பான்பூச்சிமாதிரி துடிச்சிட்டு அப்பறம் எந்திரிக்கிது. பாவமா இருக்கு. நான் பால்கனிக்கு போகும் அந்த கண்ணாடிக்கதவையே ரொம்ப நேரம் பாக்குது. ஆனா, சிலசமயத்துல அந்தக் கண்ணாடிக்கதவுகிட்டயே வந்து நின்னு உள்ள பாக்குறதுக்கும் முயற்சிபண்ணுது….

என்னவோ போங்க, எனக்கு எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..

எங்கேயாவது கொண்டுபோய்க் காட்டலாம்தான்….ஆனா நான் இருக்கும் ஊர்ல அது அவ்வளவு நல்லதில்லை. மொதக்கேள்வி இதோட பாஸ்போர்ட் எங்கன்னு இருக்கும். அப்பறம், கொஞ்ச நேரத்துல, நீ எத்தன நாளா இத வச்சுருக்கேம்பாக. எதுக்குக்கேக்கிறியன்னு நான் கேட்டேன்னு வச்சுக்கிங்க:

“ இல்ல,,,,,,புறாவுக்கு HM8V71Kௐ ன்னு ஒரு வைரஸ்தாக்கிருக்கு; அது மனுசங்களுக்கும் ரொம்ப ஆபத்து; அதுனால உன்னய குவாரன்ட்டைன் பண்ணபோறோம், ஏய் ஏய் எங்க ஓட்றே? பா……ய்ஸ்………….. கேட்ச் ஹிம் ”

இப்டி நடக்கிறதுக்கும் ச்சான்ஸ் இருக்கு!
அதனால என்னதான் நடக்குதுன்னு பாத்துடலாம்…
இதற்கான அமைப்பு ஏதாவது இருக்கான்னு தேடிட்ருக்கேன்
இதுவரைக்கும் கண்ல படலை
***
***
நன்றி : மஜீத் | புறாக்கறி இங்கே கிடைக்கும் : amjeed6167@yahoo.com
 

Tuesday, April 23, 2013

அடிச்சது பார் ஜாக்பாட்.........! - ஹமீது ஜாஃபர்

அடிச்சா இப்படி அடிக்கணும் லக்.. இல்லேன்னா அடிக்கவே கூடாது. இதுக்கு எங்க பக்கம் ஒரு பழமொழி உண்டு, ஆனா சொல்லக்கூடாது அவ்ளொ அசிங்கமா இருக்கும்... சும்மா சொல்லப்டாது எல்லாத்துக்குமா இருக்கும் மச்சம்..? அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்..! ஏன் சுத்தி வளைச்சிக்கிட்டு நேராவே வாரேன் விசயத்துக்கு.

நேத்து Gulf News ஐ பார்த்தேன், ஒரு நிமிஷம் அசந்தே போயிட்டேன்..! அதுலெ வந்த தலைப்பு சேதி இதான்.. "Saudi Arabia bride demands groom marry her friends" உள்ளே ஆரம்பிக்கிற விசயம் இப்படி... 'A Saudi teacher has reportedly told the man who wanted to marry her that she had only one condition before accepting his proposal: He must marry her two friends at the school at the same time.' முழு சேதியையும் இங்கே [http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-arabia-bride-demands-groom-marry-her-friends-1.1173120] சொடிக்கி படிச்சுக்குங்க..

இதெ படிச்சவுடன் எனக்கு பலமாதிரி ஞாபகம் ஓடுச்சு. ஒரு மனுசனுக்கு மூனு விதமான பிரியாணி கொடுத்தா கொஞ்சங்கொஞ்சமா சாப்புட்டுப் பார்க்கலாம். இல்லெ வேறெ பொருள் கொடுத்தா வச்சுக்கலாம். ஆனா ஒரே நேரத்துலெ மூணு பொண்டாட்டி... யம்மாடி..? என்னாலெ ஒரு சல்மாவை வச்சு சமாளிக்க முடியலெ. இப்பவும் ஒரு பெண்ணோடு பேசினா வெளக்கமத்தெ தூக்குறா. அப்படி இருக்கு நம்ம நெலமை. இங்கெ என்னான்னா வர்ர பொண்டாட்டியே இலவச இணைப்பா ரெண்டு கொடுக்குறாள். நல்ல ஏற்பாடு..! ஆனால் ஒன்னு ஒரு குதிரைப் பூட்டிய வண்டிக்கும் மூணு குதிரைப் பூட்டிய சாரட்டுக்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கு, சாரட்டு நல்லா ஓடும்.

அந்த வண்டி எப்படியாச்சு ஓடட்டும் அதுக்கு ஏன் இஸ்லாத்தை இழுக்கணும்? அந்த காலத்துலெ உஹது யுத்தத்துக்குப் பிறகு சஹாபாக்கள் நிறையபேர் இறந்துட்டாங்க. அவங்க பொண்டாட்டி எல்லாம் விதவை ஆயிட்டாங்க. வேறு வார்த்தையிலெ சொன்னா ஆண்கள் குறைஞ்சுப்போய் பெண்கள் ஜாஸ்தியா ஆயிட்டாங்க. இதெ இப்படியே விட்டா தவறானப் பாதைக்குப் போய் நிலமை சீரழிஞ்சி போயிடும் என்கிறதுக்காக நாலு பேரை(பெண்களை) கல்யாணம் பண்ணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதாண்டா சாக்குன்னு அனுமதி அளிச்சா எப்படி..? நம்ம ஆலிம்சாக்களே இப்படித்தான் சட்டம் எதுக்காக வந்துச்சுன்னு யோசனைப் பண்றதே கிடையாது. பெருமானார் சொல்லிட்டாக எடுத்து நடத்தவேண்டியது நம்ம கடமை, அவ்வளவுதான். இதுக்கெல்லாம் முன்னுதாரணம் நம்ம தலைவெட்டி ராஜாங்கம்.

ஜிந்தாபாத்.....!
***
நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Thursday, April 18, 2013

ஊர் போவதற்கு முன் ஒரு துபாய் ஃபோட்டோ!

ஃபர்ஸ்ட் கல்ஃப் பேங்க் ஸ்டேஷன் அருகே இப்படி ஒண்ணு! மொபைலில் எடுத்தேன் நேற்று.  சென்ஷி, நல்லா இருக்கா?Wednesday, April 17, 2013

"அடிப்படையில் நான் ஒரு சங்கீதக்காரன்" - கி. ராஜநாராயணன்

"ஒரு அதிகாலை நேரத்தில், திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்குக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டு, ஒரு முதுபெரும் வாய்ப்பாட்டுப் பாகவதர் பார்க்கப்போனபோது, அந்த நேரத்திலும் ராஜரத்தினம் பிள்ளை நாயனத்தில் கடுமையாக சாதகம் செய்து கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த பாகவதர், “ ஏன் இப்படி? உடம்பு பூராணமாக குணமான பிறகு வாசிக்கலாமே” என்று கடிந்து கொண்டாராம். “தினம் தவறாமல் சாதகம் பண்ணினால்தான் ராஜரத்தினம் , இல்லைன்னா கழுதை ரத்தினம்தான்” என்றாராம் ராஜரத்தினம் பிள்ளை. நாதஸ்வரத்தை கையாளுகிறவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாயனத்தை தூரத்திலிருந்து கேட்பதே இன்பம். நம்ம ஊர்க்காரன் குயிலுக்குக்கூட மைக் செட்  வேணும் என்பான்" - குமுதம் ஜங்ஸன் பேட்டி (24-12-2002) / கி.ரா பக்கங்கள்.

முழுதாக இங்கே ( இமேஜை 'க்ளிக்' செய்யவும்) :
**
நன்றி : கி.ராஜநாராயணன், குமுதம் , தாஜ்

Monday, April 15, 2013

அப்பன்மார்களும் அண்ணன்மார்களும் குதிப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது?

பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்ற நூலிலிருந்து... (நன்றி : , வானவில் - இதழ் 27 )
 
"ஒரு அரவாணி உருவாவது என்பது பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் பல புதிர்களைக் கட்டவிழ்க்கின்றன. மகாராசன் தொகுத்த ‘அரவாணிகள்’ என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் சாலினி நமக்குப்  புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் ‘ஜனிக்கும்’ அந்தக் கணத்தில் பெண்பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது. அந்தக் கருவின் உடம்பில் ஒற்றை Y குரோமோசோம் வீற்றிருந்தால், அது கருவான ஆறாம் வாரத்தில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. அந்த டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் அந்தக் கருவின் உடம்பு முழுக்கப் பரவி எல்லா செல்களையும் ‘ஆண்மைப்படுத்தி’ விடுகிறது. ஆறு வாரம் வளர முலைகள், மூளை நரம்புகள், கர்ப்பப்பையாக பிறகு வளரப்போகும் முலேரியன் குழாய்கள் என்று முழுவதுமாகப் பெண்பாலாய் இருந்த அந்த சிசு, டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் மெல்ல மெல்ல மாறுகிறது. அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஆண்மைப்படுத்தப்படுவதால் விரைப்புறுப்பு, விந்தகம் மாதிரியான புதுப்புது உறுப்புகள் உருவாகின்றன. அதேபோல, சிசுவின் மூளை நரம்புகளும் மாற்றி அமைக்கப்படுவதால் ‘ஆண்’ என்கிற உடல் உருவம் மூளையில் பதிகிறது. இதனை ‘பாடி இமேஜ்’ என்கிறோம். நம் எல்லோரின் மூளையிலும் நமது ஒவ்வொரு புற உறுப்பிற்கான உருவகமும் பதிந்திருக்கிறது.
 
‘நான் ஆம்பிளையாக்கும்’ என்று மீசை முறுக்கும் சண்டியர்கள் எல்லோருமே முதல் ஆறு வாரங்கள் பெண்ணாக இருந்து, ‘பெண்மயம்’ கருணையினால் ஆண்களாகப் பிழைத்தவர்கள்தான் என்பதை அறியும் போது மகிழ்ச்சி தோன்றுகிறது. அதோடு, மரபணுக்கள் கர்ப்பப்பைக்குள் செய்த யுத்தமும் மூன்றாம் பால் தோன்றக் காரணமாகிறது என்பது விஞ்ஞானம். இதற்கு அப்பன்மார்களும் அண்ணன்மார்களும் குதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?”
***
நன்றி: பிரபஞ்சன், உயிர்மை

Sunday, April 14, 2013

'லெமன் ட்ரீ' சினிமா பற்றி ஜமாலன் - காண வேன்டிய காணொளி

Win T.Vயில் Lemon Tree பற்றி  'நான் பார்த்த சினிமா' நிகழ்ச்சியில் நண்பர் ஜமாலன் பேசியது...
***
***
*** நன்றி : வின் டிவி, ஜமாலன்

Saturday, April 13, 2013

Munojot Yo'Ichiyev

'கீதமின்றி சங்கீதமின்றி வாழ்வும் ஏது?’ - வாணிஜெயராம்
***

***
Thanks to : ZamanProduction

Wednesday, April 10, 2013

மலர்மன்னன் எழுதிய கடைசி நூல் - அசோகமித்திரன்


முதலில் தாஜ்-ன் அஞ்சலி...
 
மறைந்த எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் எனக்கு விசேசமானவர். பிரியத்திற்குரியவர்! எழுபதுகளில் அவர் சிறுபத்திரிகைகள் நடத்தியதோ, நாவல்கள் எழுதியதோ, தேர்ந்த எழுத்தாளர் என்கிற ஆகிருதி கொண்டு பல வாராந்தரிகளில் மதிப்புடன் வலம் வந்தவர் என்பதோ, அறிஞர் அண்ணா 1967-தேர்தலின் போது மூதறிஞர் ராஜாஜியோடு கூட்டணி அமைத்த போது மலர்மன்னன் அண்ணாவை கொண்டாடியவர் என்பதோ, அண்ணாவின் மதிப்பையும் பெற்றவர் என்பதோ... நான் அவரை எதிர்கொண்ட தருணத்தில் அறிந்தவன் இல்லை. அதனையெல்லாம் அவரோடு நட்பு கொண்ட பின்னாட்களில் அறியவந்தது.
 
 
நான் அறியவந்தபோது அறிய வந்ததெல்லாம், அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ராஜாஜிக்குப் பிறகு தமிழகத்தில் இழந்துவிட்ட பிராமண ஆதிக்கத்தை மீட்க நினைத்தவர், பெரியாரால் தனது குலத்தின் மீது படிந்த கறைகளை நிவர்த்தி செய்ய முனைந்தவர், இஸ்லாமியர்களின் எதிரான குரலுக்கு வலு சேர்த்தவர், பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைய தன் முழு நேர உழைப்பையும் தந்தவர்... என்பன போன்றவைகள்தான்.
 
 
1998-ல் இண்டர்நெட் உபயோகத்திற்கு வந்த போது, தமிழ் வலைத் தளங்கள் சில சிறிதும் பெரிதுமாக அதில் அரங்கேறின. அந்த வகையில் மிக பெரிய அளவிலான, அழகிய வடிவமைப்போடு கூடிய வலைத்தளமாக 'திண்ணை' நெட்டில்  வலம்வர ஆரம்பித்தது. 'திண்ணை' அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சிலரால் வெளிவந்தது. அதன் ஆசிரியர், அவரது இளமைப் பருவத்தில் இடதுசாரி சார்ந்தவராக அறியவரப்பட்டாலும்... திண்ணை அப்படி இல்லை. எல்லா கருத்துக்களுக்கும் திண்ணை இடம் கொடுத்தது. அதில் கூடுதலான இடத்தை தமிழ் ஆர்.எஸ்.எஸ். உயர் ஜாதி நண்பர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மேலே பாரதிய ஜனதா அரசு அமைய வேண்டும் என்பதில் அழுத்தம் கொண்ட எண்ணம் இருந்தது.
 
 
அந்தக் காலக்கட்டத்தில் பாரதிய ஜனதா முன் நிறுத்திய முதல் அரசியல் எதிரி முஸ்லிம்கள்தான். அது ஏன் என்று இன்றுவரை நான் சரியாக அறிய முடியவில்லை. அதனால் என்னவோ, வாராவாரம் வந்த திண்ணையில் எழுதிய உயர் ஜாதி நண்பர்கள் இஸ்லாமியர்களை பலவித விமர்சனங்களின் வழியே சீண்டிக் கொண்டே இருந்தனர். அல்லது எதிர்த்துக் கொண்டே இருந்தனர்.

2003 தொட்டு நான் திண்ணையை வாசிக்க தொடங்கியிருந்தாலும், 2004-ல்தான் அதில் நான் எழுதத் தொடங்கினேன். கவிதை / கட்டுரை / விவாதம் / விமர்சனம் / சிறுகதை என்று பலவற்றையும் அதில் நான் எழுதினேன். இதற்கிடையில், உயர் வகுப்பினரின் இஸ்லாமிய எதிர்ப்பு விமர்சனங்களும், இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பும், கேலியும் கிண்டலும் சகிக்க முடியாத அளவுக்கு அதில் போய் கொண்டிருந்தது.
 
 
எல்லா மதமாச்சரியங்களையும் நான் அந்நியமாக பார்ப்பவன் என்பதால், அவர்களின் அந்த எதிர்ப்பாளர்களில் இருந்து தள்ளியே போய் கொண்டிருந்தேன். என்றாலும் அவர்கள் பெரியதோர் குழுவாக இணைந்து பல்வேறு கோணத்திலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிக் கொண்டிருந்தார்கள்.

எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர்கள்தான். பாரதிய ஜனதா என்கிற அரசியல் கட்சிக்காரர்கள் ஆட்சிக்கு குறிவைத்தால் அவர்கள் முழுமையாக எதிர் கொள்ளவேண்டியது காங்கிரஸ் கட்சியைத்தான்.

ஆனாலும் நாட்டில் இஸ்லாமியர்களின் ஆட்சி நடப்பது மாதிரி இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆங்காங்கே பெரிய பாதிப்புகளைத் தந்து சீண்டிக் கொண்டேயிருக்க, திண்ணையில் எழுதிய அக் கட்சியின் சகபாடிகளும் அதே எதிர்ப்பை எழுத்தில் காட்டினார்கள். அப்படி எழுதிய பெரியதோர் குழுவுக்கு, ஆசான் ஸ்தானத்தில் இயங்கியவர் அண்ணன் மலர்மன்னன் அவர்கள்.

ஒரு கட்டத்தில், எனக்கு இஸ்டமான பெரியாரின் கருத்துக்களை கையில் ஏந்தியப்படிக்கு, இடதுசாரி சிந்தனையோடு, திண்ணையில் இயங்கிய உயர் ஜாதிக்காரர்களின் தீவிர இந்து எழுச்சி எழுத்துக்களை தயவு தாட்சண்யமற்று விமர்சிக்கத் தொடங்கினேன். அந்தப் பக்கத்து முக்கிய நபர்கள் எல்லாம் ஆர்வமாய் என்னை எதிர்க்க, நானும் பயமற்று அவர்களின் எழுத்துக்களின் முரண்பாட்டை எதிர்கொண்டு தீர விமர்சித்தேன். ஒரு எல்லையில் அத்தனை எதிர்ப்பாளர்களுமே நண்பர்களாகிப் போனார்கள். அவர்களின் ஆசான் ஸ்தானம் வகித்த மலர்மன்னன் அவர்கள் கூடுதல் நட்பை முன்வைத்தார்.

திண்ணையில் தொடர்ச்சியாக நான் ஆறு சிறுகதைகள் எழுதினேன். அந்த ஆறு சிறுகதைகளையும் தட்டாது தேர்வு செய்தது மலர்மன்னன் என்பது என் யூகம். அது மட்டுமல்லாது, அந்தச் சிறுகதைகளை உடனுக்கு உடன் பாராட்டி மெயிலும் எழுதுவார். என் கதைகள் குறித்து அதில் சிலாகிக்கவும் செய்தார். பெரிய பத்திரிகைகளில் நான் எழுதணும் என்று வற்புறுத்தினார். 'குடத்திற்குள் எரியும் வெளிச்சமாக இருந்தால் போதாது' என்பார். கலை இலக்கிய உலகில் விபரதாரியான அவரது பாராட்டுகள் எனக்கு உற்சாகத்தையே தந்தது. தொடர்ந்து மலர்மன்னன் அவர்களோடு சில வருஷம் மெயில் தொடர்பில் இருந்தேன்.

திண்ணை இந்து தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருப்பதாக, திண்ணையின் நட்பு வட்டத்தைச் சேர்ந்த நண்பர் பி.கே.சிவகுமார், திண்ணையிலேயே திறந்த கடிதமொன்றை எழுதினார். அதில்,  மலர்மன்னன் அவர்களின் திண்ணைஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார்.பரபரப்பை ஏற்படுத்திய திறந்த கடிதம் அது! நான் அக்கடிதத்தை வரவேற்று, பி.கே.சிவகுமார் அவர்களுக்கு ஆதரவாக அவர் எழுதியுள்ள அத்தனை வரிகளும், கால் புள்ளி அரைப் புள்ளி முதலாக அத்தனையும் உண்மை என்று அடுத்த வாரத்தில் திண்ணையில் நான் கருத்து வைத்திருந்தேன். இந்த கருத்தையொட்டி மலர்மன்னன் அவர்கள் மெயில் எழுதி என்னிடம் வருத்தப்பட்டார். நான் நிஜத்தைத்தானே எழுதினேன் என்கிற நிலையில் நின்றேன்.

பி.கே. சிவகுமாரின் திறந்த கடிதத்திற்குப் பிறகு, திண்ணையில் உயர் ஜாதி இந்து தீவிரவாத அரசியல் சற்று குறையவும் குறைந்தது.

இத்தனைக்குப் பிறகும், சிலமாதங்கள் கழித்து, மலர்மன்னனின் மெயில் எனக்கு வரத் தொடங்கியது. அதில் பெரும்பாலான மெயில் நலம் விசாரிப்பாகவும், நான் படிக்கவேண்டிய புத்தகங்கள் குறித்தும் எழுதிக் கொண்டிருந்தார். அவரை நான், பெரிய அண்ணன் ஸ்தானத்தில் கடைசிவரை மனதில் கொண்டிருந்தேன். ஒரு மூன்று மாதங்களுக்கு முன் கூட, ஒரு பெரிய பத்திரிகைக்கு உன் கதையை அனுப்பிவைக்க சம்மதமா? என்று திரும்பத் திரும்ப மெயில் எழுதிக் கேட்டார். நான் சம்மதம் செய்யவில்லை. அவர் தீவிரமான ஆர்.எஸ்.எஸ். அபிமானி, அவர் குறிப்பிடும் இதழும் அப்படியாகிப் போய்விடுமோ என்கிற ஓர் யோசிப்பில்தான் நான் சம்மதம் செய்யாமல் நழுவினேன். இங்கே நழுவினேன் என்பது, அந்தப் பெரியவருக்கு நான் மெயில் எழுதாது விட்டதைக் குறிப்பிடுகிறேன்.

இன்றைக்கு அவரது மறைவு செய்தியை கணையாழியின் (ஏப்ரல் 2013) வாயிலாகத்தான் அறியவந்தேன். மலர்மன்னன் குறித்து அசோகமித்திரன் எழுத எழுத என் கண்கள் பனித்தன. அவரை நான் நேரில் கண்டதில்லை என்றாலும், அவரோடு பலகாலம் பழகிய நட்பு இறுக்கமாக என்னுள் தங்கி இருக்கிறது.
-தாஜ்

***

அஞ்சலி:மலர்மன்னன் எழுதிய கடைசி நூல்

அசோகமித்திரன்         

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்கு மலர்மன்னனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிக நெருக்கமாக இருந்த நாங்கள் ஒரு காரணமும் இல்லாமல் தொடர்பே இல்லாமல் போன இடைவேளைகள் உண்டு. அவருடைய முகவரி, தொலைபேசி எண் எல்லாம் மாறியிருக்கும். இந்த முறையும் அப்படித்தான்.

ஆனால் சில மாதங்களாக அவருடைய பெயர் பல பத்திரிகைகளில் காணக் கிடைத்த வண்ணம் இருந்தது. வாழ்க்கை மீதும் சமூகம் மீதும் அவருடைய ஈடுப்பாட்டைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.

அவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். அதே போலத் தொலைபேசியில் அவர் பேசும் போதும் அவர் சிரித்த முகமாகப் பேசுவதை உணரமுடியும். அவருடைய உடல் நிலை சில காலமாகவே சரியில்லை என்று நான் பிற்பாடு அறிந்து  கொண்டேன். ஆனால் அவர் பேச்சில் சிறிதளவு அலுப்புக் கூட இல்லை. பாம்பன் சாமி சமாதி அருகில் தான் ஒரு சாமியார் போல இருப்பதாகச் சொன்னார். அதையும் சிரித்துக் கொண்டே. மறைந்த எழுத்தாளர் தி.ஜ.ரங்கநாதனுடைய குடும்பத்துக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொன்னார்.

அவர் எழுதிய ஒரு நூல் மதிப்புரை எனக்கு நினைவுக்கு வந்தது. மிகவும் நன்றாக இருந்ததாகச் சொன்னேன். அதைவிட நான்கு மாதங்கள் முன்னர் வெளிவந்த அவருடைய ஒரு புது நூலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொன்னார். "இனியும் கையால் எழுதிக் கொண்டிருக்காதீர்கள். கை வலிக்கத் தொடங்கினால் லேசில் சரியாகாது" என்று எனக்கு யோசனை கூறினார். ஆனால் அவரே பிப்ரவரி 9-ஆம் தேதி மறைந்து விட்டார். வயது 73.

அவர் குறிப்பிட்ட நூல்தான் 'திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்.' அவருடைய முந்தைய நூல்கள் இரண்டைப் படித்திருக்கிறேன். இந்த நூலும் மிகவும் சிறப்பாக மிகுந்த உழைப்புக்குப் பிறகு எழுதப்பட்டிருந்தது. அவருடைய ஆதாரங்களைத் தனியே அடிக்குறிப்புகள், பின்னிணைப்புகள் என்றில்லாமல் நூலிலேயே குறிப்பிட்டு எழுதியிருந்தார். வறட்டு ஆய்வு நூலாகப் போயிருக்கக்கூடியதை கடைசிப் பக்கம் வரை படித்த பிறகே கீழே வைக்கக் கூடிய சுவாரசியமும் பொருள் பொருந்தியதாகவும் ரசாயனம் செய்திருந்தார்.

இதைப் படித்த பிறகுதான் 'திராவிட' என்ற பெயர்ச்சொல் ஆரம்ப முதலே எவ்வளவு குழப்பமாகவே செயல்பட்டிருக்கிறது, இன்றும் செயல்பட்டிருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆதி சங்கரர் காலத்தில், அதாவது குறைந்தது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் காசிப் பண்டிதர்கள் அவரை 'திராவிட சிசு' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்! அதாவது, தெற்கிலிருந்து வந்திருக்கும் சிறுவன். இந்த நூற்றாண்டு 'திராவிட' செயல்பாட்டில் கடைசி வரை தெளிவுடன் இயங்கியவர் எஅடேச முதலியார். ஆனால் அவர் 1937லேயே இறந்து விடுகிறார்.

மலர்மன்னன் நூல் நெருடலே இல்லாமல் விளங்குவதற்கு மறைமுகக் காரணம் அதன் நடையும் பிழையற்ற தயாரிப்பும். சென்னை கிழக்குப் பதிப்பகம் இன்றைய சாத்தியங்களில் நூலைச் சிறப்பான முறையில் தயாரித்திருக்கிறது. பின் அட்டையில் நூலைப் பற்றிய குறிப்பு விரிவாகவே இருக்கிறது. ஆனால் நூலாசிரியர் பற்றி ஒரு தகவலும் இல்லை!

மலர்மன்னன் ஒரு சிறந்த நாவலாசிரியர். நான் படித்த இரு நாவல்களை என்னால் மறக்க முடியாது. ஒன்று 1970 அளவில் அவர் வேலைக்குப்போகும் ஒரு பெண்ணை முன்வைத்து எழுதியது. இரண்டாவது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் நடப்பட்ட பயங்கர சாதிக்கலவரப் பின்னணியில் எழுதப்பட்டது.

எப்போதும் மலர்ச்சியும் உற்சாகமும் கொண்ட ஒரு மனிதரை நாம் இழந்துவிட்டோம். அவருடைய இறுதி நாள்களைப் பந்தங்களைத் துறந்து ஒரு துறவியாக வாழ்ந்திருந்தாலும் அவருடைய சமூக அக்கறையும் எழுத்தாற்றலும் கடைசிவரை நீடித்திருக்கிறது.

***

மேலும்...

அஞ்சலி:
மலர்மன்னன் பற்றி அசோகமித்திரன் (ஆழம்)

மலர்மன்னன் பற்றி வெங்கட் சாமிநாதன்

மலர்மன்னன் பற்றி ஹரன் பிரசன்னா

Monday, April 8, 2013

மருத்துவ இளவரசர் இப்னு சீனா - நிறைவுப்பகுதி

மஞ்சக்கொல்லை மன்னர் ஹமீதுஜாஃபரின் தொகுப்பில்...

அருட்கொடையாளர் - 15

மருத்துவ இளவரசர் இப்னு சீனா (980-1037)
முதல் பகுதி : http://abedheen.blogspot.com/2013/04/blog-post.html

இரண்டாம் பகுதி : http://abedheen.blogspot.com/2013/04/blog-post_4.html

பாகம் 3

ஆன்மா (The Soul)

மனித ஆன்மா பருப்பொருள் சாரா நுண்ணியம்(incorporeal) வாய்ந்தது, அது உருவற்ற ஒன்று ஏனென்றால் பிரிக்கமுடியாத அறிவார்ந்த சிந்தனைகளை தன்னுள் கொண்டது. முரண்பாடில்லாத ஒத்திசைவான சிந்தனைகள் வரையறுக்கப்பட்ட நிலை கொண்டிருப்பதால் வெவ்வேறு சிந்தனைகளின் ஒரு பகுதியாக இருக்கமுடியாது எனவே அது ஒரேயொரு ஒத்திசைவான சிந்தனையே என உளப்பூர்வமாகக் கருதினார்.

இப்னு சீனாவைப் பொருத்தவரை ஆன்மா நுண்ணியமும்(incorporeal)  இறவாமையும் உள்ளது, உடல் சிதைவோ அழிவோ அதை பாதிக்காது. உடல் மற்றும் ஆன்மா  ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது அவற்றின் இருப்பிற்கு(existence) அவசியமாகிறதால். தர்க்கரீதியாக ஆன்மா உடலை சார்ந்திருந்தால் உடலின் அழிவு அல்லது சிதைவினால் ஆன்மாவின் இருப்பை தீர்மானிக்கமுடியும். எனவே ஆன்மாவுக்கு உடல் காரணி அல்ல அவற்றில் ஆன்மா நுண்பொருளும் உடல் பருப்பொருளுமாகும். ஆனால் அவை இரண்டும் சுயாதீனமானது. அதன் சுயாதீன விளைவாக பருப்பொருளான உடலில் மாற்றங்களும் தேய்வுறுதலும் நிகழ்கின்றனவே தவிர ஆன்மாவின் மாற்றத்தால் அல்ல. எனவே உடலின் மாற்றத்தை ஆன்மா பின் தொடராது.

வான்இயல் (Astronomy)

இப்னு சீனா இஸ்ஃபஹானிலும் ஹமதானிலும் இருக்கும்போது வான்வெளி ஆய்வுகள் நடத்தியுள்ளார். அவருடைய அவதானிப்புகளில் பல உண்மைகள் கிடைத்தன. உதாரணமாக சுக்கிரன்(venus) சூரியனின் மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளி என்றிருந்த நிலைப்பாட்டை மாற்றி அது ஒரு கோள், சூரியனைவிட பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வெளிப்படுத்தினார். நட்சத்திரங்களை ஆய்வு செய்ய சுழலும்(pivot) வகையில் இரண்டு கால்களையுடைய கருவி ஒன்றை உருவாக்கினார். கீழ்பகுதி கால் படுக்கை வசத்தில் சுழன்று azimuth ஐ காண்பிக்கும் மேல் பகுதி காலில் அமைக்கப்பட்ட அளவுகோலின் உதவியால் வின்மீண்களின் உயரத்தை அளக்கமுடியும். பாக்தாதுக்கும் குர்கானுக்கும் (Gurgan) உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தை அளவிட்டு சொன்னதும் குர்கானில் சந்திரன் meridian ஐ கடப்பதை அளந்து சொன்னதும் அவருடைய வான்இயலில் மற்றொரு அம்சமாகும். தவிர ஒளியின் வேகம் (velocity) வரையறைக்குட்பட்டது என்றும் விளக்கினார்.

இசையும், இயந்திரக்கருவிகளும்

கணிதத்தில் ஒரு பிரிவாகவே இசையைப் பற்றியும் விவரித்திருக்கிறார். அதிகமாக இல்லாவிட்டாலும் தொனி இடைவெளி பற்றியும் சந்த அமைப்பு (rhythmic pattern) பற்றியும் விரிவாக விளக்கியுள்ளதோடு சில இசைக் கருவிகளையும் உருவாக்கியுள்ளார்.

உருளைகள்(rollers), நெம்புகோள்கள்(levers), சகடைகள்(pulleys), இருசுச்சக்கரங்கள் (windlasses) ஆகியவற்றை உருவாக்கியதோடல்லாமல் அவற்றைக்கொண்டு எளிதான எந்திரங்களையும் உருவாக்கியுள்ளார்.

இப்னு சீனாவும் பைரூனியும்

இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் இருவருக்கும் கருத்து வேறுபாடும் பனிப்போரும் நிலவியது. இப்னு சீனா அரிஸ்டாட்டிலிய கொள்கையை ஆதரித்தவர். பைரூனி அரிஸ்டாட்டிலின் தத்துவத்தையும்  peripatic school யும் விமரிசித்தவர். பைரூனியின் விமரிசனத்திற்கு இப்னு சீனாவும் அவரது மாணவர் அஹமது இப்னு அலி அல் மாசூமியும் பதில் அளித்தனர். பின் பைரூனி பதினெட்டுக் கேள்விகளை  இப்னு சீனாவிடம் கேட்டிருந்தார், அவற்றில் பத்து அரிஸ்டாட்டிலின் On the Heavens பற்றிய விமரிசனமாகும்.

இப்னு சீனா சுமார் 450 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் 240 மட்டுமே அழியாமல் இருக்கின்றன. அவற்றில் 150 தத்துவத்தைப் பற்றியும் 40 மருத்துவத்தைப் பற்றியும். மற்றவைப் பற்றி குறிப்பு இல்லை. Andrea Alpago(d.1520) என்பவரால் கானூன் ஃபில் தீப் இத்தாலியில் மொழிபெயர்க்கப்பட்டது.

(நிறைவு)
***
சில முக்கிய தகவல்கள்:

•    980: Avicenna is born in Afschana in the today's Usbekistan
•    981-989: Ibn Sinas family pulls after Bukhara in the today's Usbekistan
•    990: With 10 years it knows the Koran by heart
•    990-996: Ibn Sina is informed by different teachers and begins to study medicine
•    997: It becomes the body physician of Nuh Ibn Mansur
•    1002: Ibn Sina loses his father Abdullah
•    1004: The samanidische dynasty dies out Ibn Sina is unemployed
•    1005-1024: Avicenna serves different princes and begins its most famous works "the canon "and "the healing "
•    1025-1036: Ibn Sina works as a body physician of the ruler of Isfahan
•    1037: The large physician dies in Hamadan at the age of 57 years at the Ruhr
•    12. Jhdt: Gerhard of Cremona translates the canon of the medicine into latin - thus he applies to in 17. Jhdt. as the most important text book of the medicine
•    1470: In the entire evening country there is 15 - 30 latin expenditures of the canon
•    1490: A part of the aluminium-Shifa appears in Pavia
•    1493: In Neapel a Hebrew version of the canon appears
•    1493, 1495, 1546: In Venice three latin versions of the Metaphysica are printed
•    1593: As one of the first Arab works the canon of the medicine in Rome is printed
•    1650: The canon is used for the last time in the universities by luffing and Montpellier

Sources:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
http://idrees.lk/?p=883
http://kalvianjal.blogspot.com/2013/01/blog-post_5254.html
http://en.wikipedia.org/wiki/Avicenna
http://www.iep.utm.edu/avicenna/
http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Avicenna.html
http://ddc.aub.edu.lb/projects/saab/avicenna/contents-eng.html     (Canon of Medicine complete) 1953 edition
http://books.google.ae/books?id=B8k3fsvGRyEC&printsec=frontcover&dq=biography+of+ibn+sina&hl=en&sa=X&ei=VbkfUe-zIoaK4ASj54DYCw&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=biography%20of%20ibn%20sina&f=false
http://www.iranicaonline.org/articles/avicenna-index
http://en.economypoint.org/a/avicenna.html      
http://sharif.edu/~hatef/files/abu%20ali%20sina%2022.pdf
https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/The_Book_of_Healing.html
http://en.wikipedia.org/wiki/The_Book_of_Healing
http://www.ontology.co/avicenna.htm
http://www.muslimphilosophy.com/sina/art/ibn%20Sina-REP.htm#is6
***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Sunday, April 7, 2013

மனதை உலுக்கிய மகுடேசுவரன்

இந்த உலகின்
மிகச்சிறந்த புகைப்படம்
மனைவி பிள்ளைகளைப் பிரிந்து
அயல்நாட்டில்
உழைத்துத் தேய்பவனின் பர்ஸில்
இருக்கிறது !

***
நன்றி : கவிஞர் மகுடேசுவரன்


Thursday, April 4, 2013

மருத்துவ இளவரசர் இப்னு சீனா - இரண்டாம் பகுதி

மஞ்சக்கொல்லை மன்னர் ஹமீதுஜாஃபரின் தொகுப்பில்...

முதல் பகுதி : http://abedheen.blogspot.com/2013/04/blog-post.html

***

மருத்துவ இளவரசர் இப்னு சீனா - 2


Medicine and Biology
 
பொதுவாகவே கிரேக்க தத்துவம் மட்டுமல்ல மருத்துவமும் அன்றைய இஸ்லாமிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அனேக கிரேக்க நூல்கள் அரபி மொழிக்கு மாற்றப்பட்டிருந்தன. ஹிப்போகிரட்ஸ், கேலன், அரிஸ்டாட்டிலின் மருத்துவக் கொள்கைகளைப் பின்பற்றி இப்னு சீனாவின் நூல்கள் இருந்தன. மேலும் கானூன் ஃபில் தீப் கேலனின் மருத்துவக் கொள்கையிலிருந்து புதிதாக எதுவும் சொல்லாவிட்டாலும் ஐயத்திற்கு இடமில்லாத சிறப்பான விளக்கத்தை அளிக்கிறது. இப்னு சீனாவுக்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹுனைன் பின் இஸ்ஹாக் , அலி பின் ரப்பான் தாப்ரி, முஹம்மது பின் ஜக்கரியா ராஜி போன்றோர்கள் முறையாகவும் மதிநுட்பத்துடனும் மருத்துவத்தைப் பற்றி விளக்கியுள்ளனர் என்று The Encyclopaedia of Iranica குறிப்பிடுகிறது.
 
மருத்துவத்துறையைப் பொருத்தவரை இப்னு சீனா இரண்டு முக்கிய நூல்களை அளித்துள்ளார். ஒன்று கானூன் ஃபில் தீப் (The Law  of Medicine) மற்றொன்று கித்தாப் அல் ஷிஃபா (The Book of Healing). 1015 க்கு முன்பே கானூனை எழுதத் தொடங்கிவிட்டார்.
 
 
இது 5  பெரும் பாகங்களைக் கொண்டது.  பாகம் 1, மருத்துவ விஞ்ஞானம் பற்றியது. இதனுள் நான்கு உட்பிரிவுகள். (முதல் பிரிவில் உடற்கூறு, அது உருவாக்கப்பட்ட four elements-நீர், நெருப்பு, காற்று, மண்; Four Humors- இரத்தம், சளி, மஞ்சள்பித்தம், கரும்பித்தம்; உடல் உள் வெளி உறுப்புக்கள் அமைப்பு (சதை, எலும்பு, நரம்பு, தமணி) அவைகளின் செயல்பாடு முதலானவை; பிரிவு 2, நோய்களின் காரணமும் அறிகுறியும்; பிரிவு 3, உடல்நலம் பேணல் மற்றும் preventive medicine; பிரிவு 4, சிகிட்சை மற்று உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை விரிவாக்கியிருக்கிறார்.)  பாகம் 2,  அரபு எண்கணித வரிசையில் (அப்ஜத்- د ج ب ا) 800க்கும் மேற்பட்ட மருந்துகள் (mostly of vegetable origin but with many animal and mineral substances). பாகம் 3, உச்சி முதல் பாதம் வரையிலான நோய்கள் பற்றி முறையாகப் பேசப்படுகிறது. பாகம் 4, நோயின் விளைவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள் (care of the hair, skin, nails, body odor and treatment of overweight/underweight) மற்றும் மஸாஜ் உடற்பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள். பாகம் 5, மருந்துக் குறிப்பு அட்டவணை (The Formulary  which contains some 650 compound prescriptions - theriacs, elctuaries, potions, syrups etc, ).
 
ஒரு மருத்துவர் தனது தொழிலில் எந்த அளவு கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதை தனது மருத்துவ நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
 
• மருந்து தற்செயலாகக்கூட புறச்சார்புடையதாக இருக்கக்கூடாது.
• சிக்கலில்லாமல் எளிமையாக உபயோகிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
• இரு எதிர்நிலையான நோய்களை குணப்படுத்துமா என்பதை சோதித்தறிந்திருக்கவேண்டும். ஏனென்றால் ஒரு நோயை குணப்படுத்தும் வேளையில் மற்றொரு புதிய நோயை உருவாக்கக்கூடாது.
• நோயின் தன்மையைப் பொருத்து மருந்தின் வீரியம் இருக்கவேண்டும். ஏனென்றால் அது வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
• கொடுக்கக்கூடிய மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
• சோதனைகளை மனித உடம்பில்தான் நடத்தவேண்டுமே ஒழிய குதிரை, சிங்கம் போன்ற விலங்கினத்தின்மீது நடத்தக்கூடாது. காரணம் அம்மருந்து மனிதனுக்கு பலனளிக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
 
கித்தாப் அல் தீப் Andrea Alpago(d. 1520) வால் இத்தாலியில் மொழிபெயர்க்கப் பட்டது. 1593ல் ரோமில்  அரபி பதிப்பு கிடைத்தது. 1491ல் நேபிள்ஸில் ஹீப்ரு பதிப்பு வெளியானது. 12ம் நூற்றாண்டில் Gerard of Cremona வால்  லத்தீனில் மொழிபெயர்க்கப் பட்டது. 15ம் நூற்றாண்டில் முப்பது வருடங்களில் பதினாறு முறை பதிப்பிக்கப்பட்டது. 16ம் நூற்றாண்டில் இருபதுக்கு மேற்பட்ட பதிப்புகள் வெளியாயின. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்நூல் பிரசுரிக்கப்பட்டது. Lonvain University யில் 18ம் நூற்றாண்டு வரை பாடபுத்தகமாக வைக்கப்பட்டிருந்தது. அனேக ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் பல்கலைக் கழகங்களில் பல நூற்றாண்டுகள் மருத்துவ பாடமாக போதிக்கப்பட்டது.
 
கித்தாப் அல் ஷிஃபா الشفاء کتاب(The Book of Healing)
 
இப்னு சீனாவின் புகழ் பெற்ற நூல்களின் ஒன்றான கித்தாப் அல் ஷிஃபா 1014 ல் தொடங்கி 1020 வாக்கில் முடித்ததாகவும் 1027ல் வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதில்  தர்க்கம், இயற்கை அறிவியல், கணிதம், இறைமெய்இயல் (metaphysics)  ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டது. கணிதத்தை  quadrivium of arithmetic, geometry, astronomy and music என நான்கு பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் ஒவ்வொன்றையும் பல உட்பிரிவுகளாக பிரித்திருக்கிறார். வரைகணிதத்தை(Geometry)  geodesy, statics, kinmatics, hydrostatics, optics எனவும்; வான்இயலை astronomical & geographical tables, calendar எனவும்; Arithemetic ஐ அல்ஜிப்ரா, இந்திய கூட்டல் கழித்தல் எனவும்; இசையை இசைக் கருவிகள் என உட்பிரிவுகளாக பிரித்திருக்கிறார்.
 
யூக்லிடின் eliments ஐ பின்பற்றி இப்னு சீனாவின் வரைகணிதம் (geometry) இருந்தது. முன் வந்த இஸ்லாமிய அறிஞர்களின் கோட்பாட்டை பின்பற்றியே இவரது வரைகணிதம் இருந்தாலும்  பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கோடு, இணைகோடு, கோணம், முக்கோணம், areas of parallograms and triangles, geometric algebra, regular polygons, proportions relating to area of polygons, volumes of polyhedral and the sphere என அனைத்தையும் வரைகணிதத்தில் விவரித்துள்ளார்.
 
'கித்தாப் அல் தபியியாத்' என்ற பகுதியில் ஆறு அத்தியாயங்களில் கனிமம் மற்றும் உலோகவியல் கட்டுரையில் மலைகள் உருவான முறை, மேகங்கள் உண்டாவதில் மலைகளின் பங்கு, நீர் ஆதாரங்கள், பூகம்பம் எழுமிடங்கள், கனிமங்கள் உருவாகும் விதம் மற்றும் நிலப்பரப்பின் பன்முகத்தன்மை ஆகியவற்றை விரிவாக எழுதியுள்ளார். இதன் ஆதாரங்களாக இரு கொள்கைகளை முன் வைக்கிறார். முதலாவதாக பல்வேறு உலோகங்கள் உருவாக உறைந்த ஆவிகள் (condensed vepors) முக்கிய பங்கு வகுக்கிறது என்ற அரிஸ்டாட்டிலின் தத்துவம்.  இரண்டாவதாக Mercury-Sulphur ன் பங்கும் தன்மைகளைப் பற்றி கூறும்போது ஜாபிர் பின் ஹையானின்  அல்கெமிக் கொள்கை.
 
கனிமம், தாவரம், விலங்கின உலகினை ஓர் ஒழுங்குமுறையோடு ஒருங்கிணைத்து கூறியுள்ளது பின்னர் புவிஇயல் மற்றும் கனிமங்களின் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது. மேலும் விண்கற்களின் (meteor)அமைப்பு, படிவுப்பாறை(sedimentary rock) உருவாக்கம், மலைகள் உண்டாக பூகம்பத்தின் பங்களிப்பையும் விளக்கியுள்ளதோடு கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தொல்படிமங்கள்(fossils) எப்படி மலையுச்சியில் கிடைக்கின்றன என்பதையும் துல்லியமாக விளக்கியுள்ளார்.
 
இப்னு சீனாவின் பங்களிப்பைப் பற்றி Stephen Toulmin  , மற்றும் Goodfield கூறும்போது கி.பி 1000 ல் இப்னு சீனாவின் மலைத்தொடர்கள் பற்றிய அனுமானம், 800 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடிப்படைக்கூற்றை  கிருஸ்துவ உலகம் கண்டறியப்படவேண்டியிருந்தது என்கின்றனர்.
 
உளவியல்
 
அரிஸ்டாட்டிலின் உளவியல் கொள்கையைச் சார்ந்தே இவரது கொள்கையும் அமைந்துள்ளது. ஆன்மா(soul) நிறைநிலை பெற்றது(entelechy) என்கிறார் அரிஸ்டாட்டில். கப்பலின் மாலுமி போன்றது என்கிறார் இப்னு சீனா. அது உடம்பை விட்டும் தன்னிலையான இருப்பைக் (existence) கொண்டது என விளக்கம் அளிக்கிறார்.
 
மனமும் அதன் இருப்பும்(existence), மனதிற்கும் உடம்பிற்குமுள்ள தொடர்பு, உணர்வு(sensation), புலனுணர்வு(perception) முதலானவற்றை கித்தாப் அல் ஷிஃபாவில் விளக்கும்போது, மனம் தன் ஆதிக்கத்தை உடம்பின்மீது செலுத்துவது சாதாரண நிகழ்வாகும். எனவே மனத்தின் விருப்பப்படி உடம்பு செயல்படுகிறது. இது முதல் நிலை. இரண்டாம் நிலையில் மனவெழுச்சியிலும்(emotion) மன உறுதியிலும் (will) தன் செல்வாக்கை செலுத்துகிறது. ஆழமான பள்ளம்(chasm) அல்லது உயரமான இரு கோபுரங்களின் இடையே பாலம் போல் போடப்பட்ட குறுகிய பலகையை ஒருவன் கடக்கும்போது ஒரு பிடிமானம் தேவைப்படுவதின் காரணம் பயம் ஏற்படுவதால் என்பதை  இங்கே உதாரணமாகக் காண்பித்துவிட்டு எதிர்மறை மனவெழுச்சி(negative emotion) மரணத்தையும் விளைவிக்கும் என்கிறார்.  அறிதுயில் (hypnosis-al wahm al amil) நிலையைப் பற்றி விளக்கமளிக்கும்போது செய்யப்படுபவரின் இசைவு இருந்தால் மாத்திரமே செய்யமுடியும் என்கிறார்.
 
உடல் உள நோய்களை எப்போதுமே ஒன்றாக இணைத்தே பார்க்கிறார். உளச்சோர்வு (மன அழுத்தம்-depression) ஒரு வகையான mood disorder, அது சந்தேகத்தையும் ஒரு வித பயத்தையும்(phobias)  ஏற்படுத்திவிடும். உளச்சோர்விலிருந்து(melancholia) பைத்தியத்தனம்(mania) வரை கோப உணர்வு கொண்டுச்செல்லும் என்று விளக்கம் அளிக்கும் இப்னு சீனா தலையினுள் இருக்கும் ஈரத்தன்மை (humidity inside the head) mood disorder ஆவதற்கு ஒரு வகையில் உறுதுணையாக இருக்கிறது, ஒரு மனிதன் அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது அதிக அளவு காற்றை சுவாசிக்கிறான். அக்காற்றில் இருக்கும் ஈரம்(moisture) மூளையை சென்றடைகிறது, அதன் அளவு மூளை ஏற்றுக்கொள்ளும் அளவைவிட அதிகப்படும்போது மூளை தன் விவேகத்தை (rationality) இழந்து mental disorder நிலைக்கு இழுத்துச்செல்கிறது என்கிறார். மேலும் நினைவாற்றல் குறைவு, காக்காய் வலிப்பு, கெட்டகனவு(nightmare) இவைகளுக்கான அறிகுறிகளும் அதற்கான சிகிட்சை  முறைகளையும் எழுதியுள்ளார்.
 
மன நோயாளிகளைக் குணப்படுத்த இவர் பிரத்தியேக முறையைக் கையாண்டார். பாரசீக இளவரசிக்கு melancholia எனப்படும் உளச்சோர்வு நோயும், மாயமருட்சி அல்லது திரிபுணர்வு எனப்படும் delusion  நோயும் ஒரு சேரத் தாக்கி தன்னை பசுவாக பாவித்து வந்தவளை முற்றிலுமாக குணப்படுத்திய முறையும் சுல்தானுடைய மகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை அசைக்கவே முடியாத நிலையை மனோரீதியான முரட்டு வைத்தியம் செய்து குணப்படுத்தியதும் உதாரணங்களாகும்.
 
இறைமெய்யியல் (Metaphysics)
 
ஆரம்பகால இஸ்லாமிய தத்துவமும், இறைமெய்இயலும் இஸ்லாமிய இறையியலில்(Islamic theology) இரண்டரக் கலந்திருந்தன. இது அரிஸ்டாட்டிலிய சாரம்(essence) மற்றும் இருப்பு(existence) தத்துவத்தின் வித்தியாசத்தைக் காட்டிலும்  தெளிவாக வேறுபடுத்தியது. இப்னு சீனாவின் இருப்பு(existence) சார்ந்த தத்துவம் அல் ஃபராபியின் கொள்கையைச் சார்ந்தே இருக்கிறது.  அல் ஃபராபியைத் தொடர்ந்து இப்னு சீனாவும் உள்ளமை(being) பற்றிய சந்தேகத்திற்கு முழு ஆய்வை மேற்கொண்டு சாரத்திற்கும் (மாஹியத்-essence) இருப்பிற்கும் (உஜூது-existence) இடையிலான சிறப்பை தெளிவு படுத்துகிறார்.
 
இப்னு சீனாவின் நோக்கம் அறிவியல் மற்றும் மதத்திலுள்ள அனைத்து அம்சங்களையும்  இறைமெய்இயலில் (metaphysics) ஒருங்கிணைக்கும் முயற்சியாக இருந்தது. அவரது கண்ணோட்டத்தில் பிரபஞ்சம் உண்டானதைப் பற்றியும் தீமையின் தொல்லை, இறைவணக்கம், இறையருள், முன்னறிவுப்புகள், அற்புதங்கள், அதிசயங்கள் ஆகியவற்றையும் விளக்க முயற்சிப்பதோடு மதச்சட்டம், மனிதனின் இறுதி விதி தொடர்பான விளைவு பற்றியும் இதனுள் அடக்கியிருக்கிறார்.
 
அறிவுநெறிஇயல் (Epistemology)
 
இப்னு சீனாவின் இரண்டாவது செல்வாக்கு மிகுந்த கருத்துருவம் அறிவைப் பற்றிய கோட்பாடு. மனிதனுடைய அறிவு பிறப்பிலேயே ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அட்டவணைபோல் அமைந்திருக்கிறது. தூய்மையான பேராற்றல் அல்லது திறன் கல்வியின் வழியாகவே உண்மையாக்கப்படுவது தெரியவருகிறது. அனுபவ பரிச்சயத்தை அடிப்படையாகக் கொண்ட பழக்கத்திலிருந்தே உலகிய அறிவு பெறப்படுகிறது. அது வளர்ச்சியுற syllogistic (நேரியல் வாத) முறையே காரணமாயிருந்தது. அவ்வறிவு மூல அறிவாற்றல் (material intellect-அக்ல் அல் ஹயுலானி)லிருந்து வளர்த்துக்கொண்ட நிலையையும், இயக்க அறிவாற்றலில் (active intellect-அக்ல் அல் ஃபால்) இருந்து பெறப்பெற்ற பேராற்றலையும் தன்னுள் தக்கவைத்துக்கொள்கிறது. இவ்விரண்டின் இணைப்பே மனிதன் பெற்ற சரியான புத்திசாலித்தனமான அறிவாகும்.
 
இப்னு சீனாவின் அறிவுநெறிஇயலை(Epistemology) இறையறிவுடன் தொடர்பு படுத்துவது சிக்கலான காரியமாகும். தெய்வீகம் தூய்மையானது, தூலமற்றது எனவே குறிப்பிட்ட விஷயத்தை அதன் நேரடி அறிவுநெறியில் உட்படுத்த முடியாது. இவ்வுலகில் அவிழ்க்கப்படாத விஷயங்களும் உலகலாவிய முறையில் பிரபஞ்ச குணங்களும் என்ன எங்கே என்பதும் இறைவனுக்கே தெரியும் என்ற முடிவுக்கு இப்னு சீனா வந்தார்.
 
(தொடரும்)
 
***
Refer Sources in Part 1
***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Monday, April 1, 2013

மருத்துவ இளவரசர் இப்னு சீனா

மஞ்சக்கொல்லை மன்னர் ஹமீதுஜாஃபரின் தொகுப்பில்...

அருட்கொடையாளர் - 15

பள்ளிப் பருவம், குமுதம், கல்கண்டு என்று தொடங்கி கல்கி வரை எல்லா வாரப் பத்திரிக்கைகளில் வரும் சிறுகதை முதல் தொடர்கதை வரை அனைத்தையும் படித்து முடித்துவிடுவேன். அதிலும் சாண்டியல்னின் தொடர் என்றால் உயிர். இதல்லாமல் மு.வா, கி.வா.ஜ., வல்லிக்கண்ணன், ரா.கி. ரங்கராஜன் படைப்புக்களையும் பாக்கி வைப்பதில்லை. இதுமட்டுமல்ல ஹஸன் எழுதிய ‘மஹ்ஜபீன்’, ‘சிந்து நதி கரையினிலே’, முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ‘குஞ்சாலி மரைக்காயர்’ (ஆசிரியர் நினைவில்லை) ஆகியவற்றையும் விட்டுவைக்கவில்லை. இப்படி புத்தகப் பைத்தியமாக இருந்த காலத்தில் கிடைத்த செவி வழிச் செய்தி, இப்னு சீனா என்பவர் மிகப் பெரிய வைத்தியர். அவரிடம் மூலிகைகள் பேசுமாம், அவர் குணமாக்காத வியாதியே இல்லை என்றெல்லாம் கேள்விப்பட்டேன். அப்போதல்லாம் எல்லாவற்றையும் உள்வாங்கும் பருவம், அலசிப் பார்க்கும் திராணி கிடையாது. வேறு வார்த்தையில் சொன்னால் நான் வெகுளி.

ஹஜ்ரத் அவர்களிடம் மாணவனாக சேர்ந்தபிறகு, ஒரு நாள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது சொன்னார்கள், ஒரு மருந்தை நாவின் நுனியில் வைத்த மாத்திரத்திலேயே அதன் தன்மைகளை சொல்லும் ஆற்றல் படைத்தவர் இப்னு சீனா, ஒரு முறை ஒரு மாத்திரையை இரண்டுமுறை சுவைத்துப் பார்த்துவிட்டு இதில் இருபத்தேழு வகை மூலிகைகள் இன்னென்ன விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு எத்தனை விகிதம் என்ற சந்தேகம் வந்ததால் மீண்டும் சுவைத்துப் பார்த்து கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று என்றாராம்.

இப்படி கேள்விப்பட்டிருந்ததால் இந்த கட்டுரையை எழுதும் வரை இப்னு சீனா ஒரு தலைசிறந்த வைத்தியர் என்று மட்டுமே தெரியும்.  ஆனால் அவர் பல ஆற்றல் படைத்தவர் என்பது இப்போதுதான் தெரிய வந்தது. மருத்துவத்துறையில்  ஆற்றல் பெற்றிருந்த அதே வேலையில் தத்துவத்திலும் சிறந்தவராக விளங்கியிருக்கிறார். மேலும் கணிதத்திலும் இசையிலும் வானசாத்திரத்திலும் போதிய ஆய்வுகள் நடத்தியிருக்கிறார். என்றாலும் இன்றுவரை மருத்துவராகவே கருதப்படுகிறார். அத்தகைய ஆற்றல் படைத்த மருத்துவரை மேற்கத்திய உலகம் அறிந்து வைத்திருக்கிற அளவுக்கு நம் தமிழ் உலகம் அறிந்திருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஆனால் அவரால் மேற்கத்தியவர்கள் பெற்ற பயன்கள் எண்ணிலடங்கா. சோதனை நிறைந்த பாதையில் சளைக்காமல் சாதனை படைத்தவர்களில் இவரும் ஒருவர்.


மருத்துவ இளவரசர்                                       
இப்னு சீனா (980-1037)                         

அபு அலி அல் ஹுசைன் இன்பு அப்துல்லா இப்னு சீனா என்ற முழுப்பெயரை உடைய இவர் உலகம் முழுவதும் அறியப்படுவது Avicenna என்ற லத்தின் மொழிப் பெயர். இஸ்லாமிய உலகில் அறியப்படும் இப்னு சீனா இன்றைய உஸ்பெக்கிஸ்தான் தலைநகரான புக்கராவில்  Kharmaithen (The Land of the Sun) க்கு அருகிலுள்ள Afshana என்ற ஊரில் ஆகஸ்ட்  980 (சஃபர் 370)ல் பிறந்து ஈரானிலுள்ள ஹமதான் நகரில் கிபி.1037 ஜூனில் மரணமடைந்தார்.

இப்னு சீனாவைப் பற்றி கூறும்போது பல் வேறு விதமான கருத்துக்கள் தொனிக்கின்றன. அவர் பிறப்பையும் இறப்பையும் மாற்றமில்லாமல் கூறுபவர்கள் அவர் Brethren Purity (اخوان‌الصفا) என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்றும், வேறு சிலர் ஹனஃபி பிரிவை சேர்ந்தவர் என்றும், இன்னும் சிலர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகின்றனர். அவரது தந்தையைப் பற்றி தெளிவான செய்தி இல்லை, இவர் இரண்டாவது மகன் என்ற செய்தி உண்டு. அவர் துருக்கி அல்லது அரபி அல்லது பாரசீக வம்சம் என பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் அவரது தாயார் அஃப்ஷானா கிராமத்தைச் சேர்ந்தவர், சித்தாரா (star) என்ற பாரசீகப் பெயரை உடையவர் என்றும் எனவே அவர் பாரசீகர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வாழ்க்கைச் சுருக்கம்

கிபி. 900 த்தில் இஸ்லாமிய வெற்றிக்குப் பிறகு Transoxiania வும் கொரஸானும் சாமனித்தின் ஆளுமைக்கு உட்பட்டது. புக்கரா தலைநகராகவும் சமர்கந்து முக்கிய கலாச்சார நகராகவும் விளங்கின. பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் சாமனித் ஆட்சி வலுவிழக்கத் தொடங்கியது. அச்சமயத்தில் இப்னு சீனா பிறந்தார். அவர் பிறந்திலிருந்து மரணிக்கும் வரை வாழ்வின் பெரும்பகுதி நிலையற்ற அரசியல் சூழல்களினால் பாதிப்புக்குள்ளானது.

ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடம் கற்றார். விளையும் பயிர் முளையிலேயே தெரியுமல்லவா,  இப்னு சீனா சிறுவனாக இருக்கும்போதே மற்ற சிறுவர்களைக் காட்டிலும் வித்தியாசமானவராகத் திகழ்ந்தார். நூஹ் பின் மன்சூருடைய ஆட்சி காலத்தில் அவருடைய தந்தை அப்பகுதியின் ஆளுநராக இருந்தமையால் தினமும் மாலைப் பொழுது பல அறிஞர்கள் கூடுவது வழக்கமாக இருந்ததால் அவர் வீடு ஒரு கல்விச்சாலை போல் அமைந்திருந்தது. விளையாடும் பருவத்திலிருந்த  அறிவின் தேடல், அங்கு குழுமிய அறிஞர்களிடமிருந்து பல்வேறு அறிவுகள் பெறும் வாய்ப்பு அமைந்தது. இயற்கையிலேயே அபரிமிதமான நினைவாற்றல் கொண்டிருந்த இப்னு சீனா தனது பத்தாவது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ததோடு தான் படித்த அனைத்து அரபுப் பாடல்களையும் மனனம் செய்தார். பதிமூன்றாம் வயதில் மருத்துவம் படிக்கத் தொடங்கியவர் பதினாறாம் வயதில் அதில் நிபுணத்துவம் பெற்று வைத்தியம் செய்யத் தொடங்கினார்.

சிறுவனாக இருந்த காலத்தில்  அவரது தந்தையும் சகோதரரும் ஆன்மா அதன் ஆற்றல் பற்றியும், தத்துவம், இந்திய கணிதம் பற்றியும் விவாதிப்பதை தொடர்ந்து கவனித்து வந்ததாகவும்,  பின்பு தந்தையின் உதவியால் ஒரு வணிகரிடமிருந்து (greengrocer) இந்திய எண் கணிதத்தையும் (arithmetic), இஸ்மாயில் அல் ஜாஹித் என்ற அறிஞரிடம் ஹனஃபி சட்டங்களையும் (ஃபிக்ஹ்) பயின்றதாகவும், அக்காலத்தில் வாழ்ந்த சில அறிஞர்களிடம் தர்க்கம், றைமெய்இயல் (metaphysics) ஆகியவற்றை கற்றதாகவும், சில நெருக்கடியான சூழலில் உதவி பெற்றதைத் தவிர பெரும்பாலும் தன் சுய ஆற்றலால் பல்வேறு அறிவுகளைப் பெற்றதாகவும் தன்  வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடுகிறார் என சில ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், ஒருமுறை புக்கராவுக்கு வந்திருந்த Natali என்ற தத்துவஇயல் அறிஞரை தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தன் மகனுக்கு தத்துவஇயல் கற்கவைத்ததார் என்றும்,  பாடம் தொடங்கிய சில நாட்களிலேயே இவருடைய ஆறிவாற்றலைக் கண்ட Natali இப்னு சீனாவை கல்வியைத் தவிர வேறு எவற்றிலும் ஈடுபடுத்தவேண்டாம் என்று அவரது தந்தையிடம் ஆலோசனை வழங்கியதாகவும், சிறிதளவே ஆசிரியரிடம் தத்துவமும், கூடவே தர்க்கமும் கற்றபின் தாலமி, ஈகுலிட், அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவங்களை ஆசிரியர் உதவி இல்லாமல் கற்றதாகவும், Natali புக்கராவை விட்டு குர்கன்ஞ் சென்றபிறகு இயற்கை அறிவியலும் மெட்டஃபிசிக்ஸும் தானாகவே கற்றதாகவும் 'AVICENNA - his life and  works' என்ற புத்தகத்தில் Soheil M Afnan குறிப்பிடுகிறார்.

தர்க்கம், இறைமெய்இயல் (metaphysics) இவைகளைப் பற்றி கற்கும்காலை அரிஸ்டாட்டிலின் இறைமெய்இயலை (metaphysics) புரிவதில் பெரும் குழப்பம் இருந்தது. சுருங்கச் சொன்னால் அல் ஃபராபியின் விளக்கஉரை கிடைத்தபின்பே அது புரியத் தொடங்கியது. தத்துவஇயலை மேலும் கற்க தொடங்கியபோது இறைமெய்இயலில் ஏற்பட்ட குழப்பமே இங்கும் நீடித்தது. அவருடை குழப்பத்தைத் தீர்த்துவைக்கக்கூடியவர் எவருமில்லை. எனவே  குழப்பமான தருணங்களில் கையிலெடுத்துள்ள நூற்களை வைத்துவிட்டு ஒலு செய்து பின் மஸ்ஜிதுக்குச் சென்று தனது குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை தொழுதுக்கொண்டிருப்பார். இரவு வெகு நேரம் வரை படித்துவிட்டு அதே சிந்தனையில் உறங்கிவிடுவதும் வாடிக்கை. புரியாதவற்றிற்கு கனவுகள் மூலம் தீர்வு கிடைத்ததுண்டு. "அரிஸ்டாட்டிலின் இறைமெய்இயலை நாற்பது முறை வாசித்து அதன் வார்த்தைகள் நினைவில் நின்றாலும் சரியான பொருள் விளங்காமலிருந்தபோது ஒரு புத்தகக் கடையிலிருந்து மூன்று திர்ஹம் கொடுத்து  வாங்கிவந்த அல்ஃபராபியின் புத்தகம் விளக்கம் கொடுத்தது" என்கிறார்.

16ம் வயதில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தன் சுய முயற்சியால் பல்வேறு வகையான மருத்துவமுறையைக் கண்டுபிடித்தார். 18ம் வயதில் முழுப் பயிற்சிப் பெற்ற மருத்துவராக பரிணமித்தார். மாறுபட்ட அணுகுமுறையால் பல வியாதிகளை குணப்படுத்தினார். “மருத்துவத்தில் முழு பயிற்சி ஏற்பட்டபின் நான் நல்ல மருத்துவனானேன். பெரும்பாலோருக்கு இலவசமாக சிகிச்சை செய்தேன், எனது புகழ் அரண்மனைவரை சென்றது." பல போராட்டங்களுக்கிடையே  ஆட்சியை தக்கவைத்துக்கொண்டிருந்த  சுல்தான் நூஹ் இப்னு மன்சூர் (997ல்) நோயுடன் போராடிக்கொண்டிருந்தார். பலரின் வைத்தியம் பலன் அளிக்க மறுத்தது. இறுதியாக இப்னு சீனாவின் சிகிச்சை பலனளித்தது. அதன் பயன் அரண்மனை நூலகம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இது அவருக்கு பெரிதும் உதவியது. அங்கு கிடைத்த அரிய நூல்கள் மேலும் தன் அறிவை வளர்த்துக்கொள்ளும் பெரும் வாய்ப்பாக அமைந்தது.

21ம் வயதில் முதன்முறையாக ’மஜுமு’(Compendium) என்ற நூலை எழுதினார், பின் அயலத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க இருபது தொகுதிகள் கொண்ட ‘அல் ஹாஸில் வல் மஹ்சூல் (the Importance and the Substance) என்ற நூலையும் நன்னெறிகளைப் பற்றி ‘அல் பி(B)ற் வல் இதம்' (Good work and Evil) என்ற நூலையும் எழுதினார். ஆனால் அந்நூல்களின் மூலப்பிரதியையே சக அறிஞர்களிடம் அளித்துவிட்டதால் அவை மறைந்துவிட்டது என்கின்றனர்.


22 வயதாகும்போது  தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட பேரிழப்பு இப்னு சீனாவின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியது. சுயமாக சம்பாதிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். எனவே தந்தை செய்த பணியை இவர் தொடர்ந்ததோடு மருத்துவப் பணியும் செய்துவந்தார். துருக்கியர்கள் புக்கராவைக் கைப்பற்றி சமனித் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர். மஹ்மூது கஜினி ஆட்சிபொறுப்பில் அமர்ந்தபின் இப்னு சீனாவின் நிலமை இன்னும் மோசமாக ஆகியது.  ஆட்சியருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரினால் புக்கராவை விட்டு நீங்கி கொரஸான் பகுதியில் பல்வேறு நகர்களில் சுற்றித் திரிந்தார். சென்ற நகர்களிலெல்லாம் மருத்துவராகவும், ஆசிரியராகவும், வாழ்க்கை நடத்தினார்.  ஒவ்வொரு நாள் மாலையிலும் தன் மாணவர்களுடன் தத்துவம் மற்றும் அறிவியல் பற்றி விவாதங்கள் நடத்துவார். 1012ல் குவாரிஜம் அருகிலுள்ள குர்கான் நகரில் சட்ட நிபுணராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது  ஜுஜானி (Juzjani) என்பவர் மாணவராக சேர்ந்தார். அது குரு சீடர் உறவாக பரிணமித்து இறுதி வரை அவருடனேயே இருந்தார். ஜுஜானி வெறும் மாணவராக மட்டுமில்லாமல்  இப்னு சீனாவின் வாழ்க்கை சரிதையையும் (autobiography) எழுதினார்.

கிபி. 925 முதல் ராய் (தற்போது டெஹ்ரானில் ஒரு பகுதி) யைத் தலைநகராகக்கொண்டு புயீத் வம்சத்தினர் ஆட்சி புரிந்து வந்தனர்.  அது ஒரு தலைசிறந்த இஸ்லாமிய நகராக விளங்கியது. அங்கு ஒரு மிகப் பெரிய நூலகம் ஒன்று இருந்தது, அங்கு ஆட்சிபுரிந்த ஃபக்கீர் அல் தௌலா அறிஞர்களை கண்ணியப்படுத்திவந்தார்.   1012/1013ல் ராய் வந்தபோது சுல்தான் இறந்து விட்டார். பட்டத்துக்கு வரவேண்டிய மகன் மஜித் அல் தௌலா சிறுவனாக இருந்ததால் அவர் மனைவி செய்யிதா ஆட்சியைப் பிடித்துக்கொண்டார். இப்னு சீனாவால் அங்கு ஓரிரு வருடமே இருக்க முடிந்தது. மஜித் அல் தௌலாவின் சகோதரர் ஷம்ஸ் அல் தௌலாவின் ஆக்கிரமிப்பால் ராயை விட்டு நீங்கி ஹமதான் சென்றார். அங்கு ஷம்ஸ் அல் தௌலாவுக்கு ஏற்பட்டிருந்த குடல் நோயை(Colic) குணப்படுத்தியபின் அரசவை மருத்துவராகவும் பின்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.  1021ல் ஷம்ஸ் அல் தௌலாவின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விளைவாக இஸ்ஃபஹான் சென்றார் அங்கு ஆலா அல் தௌலாவின் அரசவையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு குடல் நோய்(Colic) கடுமையாகத் தாக்கியது. தனக்குத் தானாக வைத்தியம் செய்யத் தொடங்கியதாகவும் ஒரு நாள் எட்டு முறை மருந்து உட்கொண்டதாகவும் அதனால் சிறு குடல்  பாதிக்கப்பட்டதாகவும் இருந்தாலும் தொடர்ந்து தனக்குத் தானே சிகிட்சை செய்து வந்ததாகவும் ஒரு நாள் ஒரு பங்கு கூடுதலாக சிவரிவிதை (Celery seed)யில் செய்யப்பட்ட மருந்தை இரு முறை உட்கொண்டதாகவும், ஆனால் சக வைத்தியர் ஐந்து பங்கு மருந்து கொடுத்ததாகவும் இது மேலும் சீர்கேடு செய்தது என்று ஜுஜானி கூறுகிறார். 

இருந்தாலும் இவர் எடுத்துக்கொண்ட சுய வைத்தியம் ஓரளவு பலனளித்தாலும் மிகவும் பலவீனமானார். சிறிது சுகம் கிடைத்தபின் மீண்டும் அரசவைக்குச் செல்லத் தொடங்கினார்.  பூரண சுகம் கிடைப்பதற்கு முன்பே அலா அல் தௌலாவின் நிர்பந்தத்தால் அவருடன்  ஹமதான் படை எடுப்பில் கலந்துக்கொண்டபோது மீண்டும் நோய் தாக்கியது. நிற்பதற்குக்கூட சக்தியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். கடினமான நிலையிலேயே ஹமதான் அடைந்தார்.  தன் நிலையை உணர்ந்துக்கொண்ட இப்னு சீனா சிகிட்சைக்கான முயற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. நண்பர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை தன்னிடமிருந்த செல்வங்களை ஏழைகளுக்கு கொடுத்தார், தனது அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுத்தார், மரணம் வரை குர்ஆன் ஓதுவதில் கவனத்தை செலுத்தினார். கிபி. 1037 ஜூன் (ஹிஜ்ரி 428 ரமலான்) தனது 58 ம் வயதில் மரணத்தைத் தழுவினார். (ஹமதான் செல்லும் வழியில் மரணமடைந்ததாகவும் ஹம்தானுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்)

(தொடரும்)
***
சில முக்கிய தகவல்:

•    980: Avicenna is born in Afschana in the today's Usbekistan
•    981-989: Ibn Sinas family pulls after Bukhara in the today's Usbekistan
•    990: With 10 years it knows the Koran by heart
•    990-996: Ibn Sina is informed by different teachers and begins to study medicine
•    997: It becomes the body physician of Nuh Ibn Mansur
•    1002: Ibn Sina loses his father Abdullah
•    1004: The samanidische dynasty dies out Ibn Sina is unemployed
•    1005-1024: Avicenna serves different princes and begins its most famous works "the canon "and "the healing "
•    1025-1036: Ibn Sina works as a body physician of the ruler of Isfahan
•    1037: The large physician dies in Hamadan at the age of 57 years at the Ruhr
•    12. Jhdt: Gerhard of Cremona translates the canon of the medicine into latin - thus he applies to in 17. Jhdt. as the most important text book of the medicine
•    1470: In the entire evening country there is 15 - 30 latin expenditures of the canon
•    1490: A part of the aluminium-Shifa appears in Pavia
•    1493: In Neapel a Hebrew version of the canon appears
•    1493, 1495, 1546: In Venice three latin versions of the Metaphysica are printed
•    1593: As one of the first Arab works the canon of the medicine in Rome is printed
•    1650: The canon is used for the last time in the universities by luffing and Montpellier

Sources:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
http://idrees.lk/?p=883
http://kalvianjal.blogspot.com/2013/01/blog-post_5254.html
http://en.wikipedia.org/wiki/Avicenna
http://www.iep.utm.edu/avicenna/
http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Avicenna.html
http://ddc.aub.edu.lb/projects/saab/avicenna/contents-eng.html     (Canon of Medicine complete) 1953 edition
http://books.google.ae/books?id=B8k3fsvGRyEC&printsec=frontcover&dq=biography+of+ibn+sina&hl=en&sa=X&ei=VbkfUe-zIoaK4ASj54DYCw&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=biography%20of%20ibn%20sina&f=false
http://www.iranicaonline.org/articles/avicenna-index
http://en.economypoint.org/a/avicenna.html      
http://sharif.edu/~hatef/files/abu%20ali%20sina%2022.pdf
https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/The_Book_of_Healing.html
http://en.wikipedia.org/wiki/The_Book_of_Healing
http://www.ontology.co/avicenna.htm
http://www.muslimphilosophy.com/sina/art/ibn%20Sina-REP.htm#is6
***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com