Thursday, December 26, 2013

இஸ்லாம் : கொல்றாரு இந்த கொள்ளு நதீம்!

காலச்சுவடு அக்டோபர் 2013 இதழில் வெளியான களந்தை பீர்முகமதின் 'இசுலாம் சில புரிதல்களை நோக்கி' எனும் கட்டுரைக்கு வந்த பதில்களில் கொள்ளு நதீமுடையதுதான் பிரமாதம். யார் இவர் என்று தெரியவில்லை; ஆனால் என் மகன் நதீம் அல்ல என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எனக்கு அறிமுகமான எளிய ஆம்பூர் இஸ்லாமியப் பேராசிரியராகவும் இருக்காது. இந்த விவாதமும் கருத்தும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. எனவே இங்கும் பதிவிடுகிறேன்.  சுட்டி தந்த மானுடநேயரும் மசாலா எதிரியுமான சீயாளி சாதிக் அவர்களின் சமூகத்திற்கு நன்றி. - ஆபிதீன்.
***

கொள்ளு நதீம் (ஆம்பூர்)  கூறியது:

அரேபியாவில் எனக்கு அமைந்த வேலை வாய்ப்பைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக (1997 - 2011) என மொத்தம் 14 ஆண்டுகளைச் சமூக ஆய்வு என்று சொல்லக் கூடிய அளவில் உலக நாடுகளைச் சேர்ந்த ஹாஜிகளின் மனவோட்டங்கள் நூறு விதமானது என்பதைப் நேரில் கண்டிருக்கிறேன். அவர்கள் எதிரும் புதிருமான மூன்று பெரும் சிந்தனையோட்டத்திற்கு மத்தியில் அல்லாடி கொண்டிருப்பதையும் காண்கிறேன்.

அதாவது

1. ஈராக்கின் பாக்தாத், இந்தியாவின் அஜ்மீர் என மண்ணுக்கேற்ற பண்புகளுடன் உருவான சூஃபிகளின் ‘Spiritual Islam - ஆன்மீக இஸ்லாம்’

2. பதினெட்டாம் நூற்றாண்டைய சவுதி அரேபியாவில் பிரபலமான வஹ்ஹாபிகளின் ‘Renaissance Islam - நவபிராமணிய(?) தூய்மைவாத, புத்தெழுச்சி இஸ்லாம்’

3. எகிப்தின் ஹசனல் பன்னா தொடங்கி நம் துணைகண்டத்தின் மௌதூதி வரை (அதன் தமிழக நீட்சி தமுமுக, பிஜெ போன்றவர்களின்) ‘Political Islam - அரசியல் இஸ்லாம்’

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த அமெரிக்க, கருப்பின, பெண்ணிய, முஸ்லிம், பேராசியர் ஆமினா வதூதைப் பேச விடாமல் துரத்தியடிக்கப்பட்ட சம்பவத்தை இஸ்லாமியப் பின்புலத் திலேயே ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பதிப்பில் சென்னை பைசுர் ரஹ்மான் எதிர்க்கேள்வி கேட்கிறார்.

முனைவர் வதூத் அவர்களின் புரிதலும் திருக்குர்ஆனுக்கு அவர் அளிக்கும் பொருள்களும் அளவுக்கு மிஞ்சியதாகவோ அவசரப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் திருக்குர்ஆனும் முஹம்மத் நபிகளின் வாழ்க்கையும் கருத்து சுதந்திரத்தை நேரடியாக உறுதி செய்கின்றன. திருக்குர்ஆனில் சந்தேகப்பட்டுக் குற்றம் கண்டுபிடித்தவரையும், தாம் ஆரம்பித்த சீர்த்திருத்த இயக்கத்திற்குள் ஊடுருவி குழப்பம் விளைவித்தவர்களுடன் முஹம்மத் நபி எப்படி நடந்து கொண்டார்? எளிமையான பதில் :

எதிரிகளை நபிகளார் கண்டுக்கொள்ளவில்லை, அலட்சியம் செய்தார், அவ்வளவே.

நட்பில்லாத பகை சக்திகளின் கருத்துக்களையும் கூட இஸ்லாத்துக்கான அச்சுறுத்தலாகத் திருக்குர்ஆன் பார்க்கவில்லை. அதற்கெதிராக வாய்ப்பூட்டு எதையும் போடவில்லை. எல்லாத் தத்துவப் போக்கின் சவால்களையும் எதிர்கொள்ளும் திறனைத் திருக்குர்ஆன் தன்னளவில் கொண்டிருக்கிறது.

முஹம்மத் நபிகள் இந்தத் தெய்வீகக் கட்டளைகளை மிகவும் கண்டிப்புடனும் தீவிர பற்றுடனும் பின்பற்றினார். தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களை சட்ட ரீதியான நடவடிக்கைளாலோ அல்லது அதற்குப் புறம்பாகவும் மறைமுகமாகவும் எதிரிகளை வேட்டையாடினார் என்பதற்கான எந்த எடுத்துக்காட்டும் வரலாற்றில் இல்லை.

இன்று இஸ்லாத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நின்று செயல்படும் “மாற்று செயல்பாட்டாளர்”களைக் கலாச்சாரக் காவலர்களாகத் தாமாகவே பொறுப்பேற்று இருக்கும் இந்த “இஸ்லாமிய தூய்மைவாதி”கள் குறுக்கிடுவதும் அத்துமீறி நடந்துகொள்வதும் உள்ளபடியே திருக்குர்ஆனுக்கும் நபிகளாரின் நடைமுறைக்கும் எதிரானது. நபிகளாரிடம் நயவஞ்சகர்களின் தலைவரான அப்துல்லாஹ் இப்னு உபை மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் துரோகங்கள் அதிகரித்த போது அண்ணல் நபியின் நெருங்கிய தோழர் உமர் இவர்களை ‘அழித்தொழிப்பு’ செய்ய அனுமதி கோருகிறார். அதற்கு நபிகள் நாயகம் அவர்களோ ஏன் உமரே! மக்கள் முஹம்மத் தன்னைச் சார்ந்தவர்களையே கொன்று கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டுமா எனத் திருப்பிக் கேட்கிறார். சிறிது காலத்தில் அந்த நயவஞ்சகர் இயற்கையாகவே மரணம் அடைந்தபோது எல்லாவற்றையும் மறந்துவிட்டு முஹம்மத் நபி இறுதி சடங்குடன் தொழுகையையும் நடத்தி வைக்கிறார்.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரோக்கியமான சர்ச்சைக்குரிய விவாதங்கள் நிறைய நிகழ்ந்து இருப்பதைக் காணலாம். உடனடியாக நம் நினைவுக்கு வருவது இரண்டு பெரும் தத்துவ மேதைகள். அல்கஸ்ஸாலி மற்றும் இப்னு ருஷ்த் ஆகியோர். அதில் கஸ்ஸாலி கிரேக்க நவ புளுடோனிய தர்க்கவியலைப் பற்றி பேசியதற்கு மறுப்பாக இப்னு ருஷ்த் தத்துவக் கோட்பாடு ஒன்றை அமைப்பு ரீதியாக உருவாக்கினார். அது இன்றைக்கும் மிகப்பெரும் செவ்விலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

அப்பாசிய ஆட்சியாளர் ஃகலீஃபா மாமுன் முன்னிலையில் சீர்த்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையில் நிகழ்ந்த சர்ச்சையும் அந்த வகைமையில் சேர்ந்ததே. இஸ்லாத்தின் உள்ளே பகுத்தறிவாளர்(முஃஅதஸிலா)கள் உருவாகி இருந்ததைப் பிற்கால வரலாறு பதிவு செய்துவைத்து இருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் இனி சாத்தியமே இல்லை என இன்று நம்மால் எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் ஓரளவு செல்வவளமும் செல்வாக்கும் பெற்று இருக்கும் பகுதியான (வேலூர் மாவட்ட) ஆம்பூரின் புத்தகக் கடையில் பெண்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று இன்றைக்கும் பகிரங்கமாக போர்ட் எழுதி மாட்டி வைத்திருப்பதும் மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர் துணி மறைப்புக்குப் பின்னால் நின்று பாடம் நடத்த வைத்திருப்பதும் உள்ளபடியே வெறுமனே ‘குறி’களையும் யோனிகளையும் சதா நினைத்துக் கொண்டிருக்கும் அழுகிப் போன மனங்களால் காலம் உறைந்து கிடக்கிறது.

நபியாகக் கடமையாற்றிய 23 ஆண்டுகளில் தம்முடைய எதிர்ப்பாளர்களுடன் அவர் வெறுமனே மூன்று (பத்ரு, உஹத் மற்றும் ஹுனைன் ஆகிய) இடங்களில் மட்டுமே போரிட்டார், அதுவும்கூடத் தவிர்க்க முடியாத சூழலாக இருந்தபோது மட்டுமே. இந்த மூன்று சந்தர்ப்பங்களில் போர் நீடித்த நேரம் என்பது வெறும் ஒன்றரை நாட்கள் மட்டுமே. இதன் பொருள் அவர் தன் வாழ்நாட்களில் ஒன்றரை நாட்கள் மட்டுமே போரிட்டார் என்பதும் இதனால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை இரு தரப்பிலும் சேர்த்து 130 நபர்களுக்கும் குறைவாகவே கொல்லப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது. மூர்க்கத்தனமான ஆக்ரமிப்பாளர்களுடன் இவ்வளவு குறைவாக இரத்தம் சிந்தியதற்குக் காரணம் அவர் அமைதியின் ஆற்றலை நம்பி இருந்தார் என்கிற செய்தி சொல்லப்பட வேண்டும்.

நாம் கருத்து வேறுபாடுகளைச் சகிப்புத்தன்மையுடனும் நம்முடன் முரண்படுபவர்களுடன் இன்னும் அதிக பொறைமையுடனும் எப்படி நடந்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்ப்புகளை ஜனநாயகத்துக்கு உட்பட்டும், இன்று பொதுச் சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும் விழுமியங்களை மதிக்கப் பழக வேண்டும்.

சுதந்திரத்துக்குப்பிறகான இந்தியாவில் எப்பொழுதும் இல்லாத வகையில் வகுப்புவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கி இனி வர இருக்கும் பதிற்றாண்டுகள் அமையக்கூடும். ‘இந்துக்களை ஒன்றுபடுத்து- முஸ்லிம்களை பிரித்தாளு’ என்று மெத்த படித்த சுப்ரமண்ய சாமியே வெட்கம் கெட்டுச் சொல்லும் இந்த காலத்தில் முஸ்லிம்களில் உள்ள அறிவுஜீவிகள், நியாய உணர்வுடைய சக இந்துக்கள், இடதுசாரிகள், இதர சிறுபான்மையினர் என அனைவருடன் ஒருங்கிணைய வேண்டும்.

பள்ளிவாசல் மேடைகளை முல்லாக்களும் அரசியல், பொருளாதார நிறுவனங்களை மேட்டுக்குடி முஸ்லிம்ளும் கைப்பற்றிக் வைத்திருக்கும் இந்தச் சூழலில் எஞ்சியிருக்கும் சிந்தனையாளர்கள் காலச்சுவடு போன்ற பொது வெளிகளைப் பயன்படுத்திச் சமூக அசைவியக்கத்திற்குக் காரணியாகும் பொறுப்பைச் சுமக்க முன்வர வேண்டும். அந்த வகையில் கண்ணனும் பீர்முகம்மதும் நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்களே.

***
நன்றி : கொள்ளு நதீம் , காலச்சுவடு

Thursday, December 12, 2013

அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - ஹமீது ஜாஃபர்

முன்னூட்டம்

ஒரு சிறிய பொறி, அது இப்படி காட்டுத் தீயாகும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை ஆம்..., ஏதோ ஆபிதீன் கேள்வி கேட்கப்போய் அதற்கு பதில் தேடப்போய் கட்டுரையாக மலர்ந்து தொடர் கட்டுரையாக வளர்ந்து ஆலமரமாக விழுதுகளுடன் நின்றுகொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சிக்கு முடிவு..?  இல்லை!

அல்பைரூனியில் தொடங்கி ஒவ்வொருவராக அணுகிக்கொண்டிருந்தபோது அவர்களின் அறிவு, ஆற்றல், உழைப்பு, தொண்டு, வெளிப்பாடு அனைத்தும் எனக்கு பிரமிப்பைத் தந்தது. அந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை எனலாம். மனதில் உருவாகும் எண்ணம், சொல்லாக ஒலியாக வெளிவருவதற்குமுன் உலகின் கடைக்கோடியை அடைந்துவிடுகிறது; அண்டத்தை அளக்கிறது; அண்டத்தையும் கடந்து அப்பாலும் செல்கிறது. பெரிய அறையை அடைத்துக்கொண்டிருந்த கணணி இப்போது உள்ளங்கையில் அடக்கமாகிவிட்டது. அறிவியல் வளர வளர மனிதனின் நினைவாற்றல் சுருங்கிக்கொண்டே போகிறது. இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லத்தெரிகிறதே ஒழிய அதற்குமேல் கூட்ட....? கணிப்பான் உதவியைத் தேடுகிறது. மனம் ஒருபக்கம் தடுமாறினாலும் இன்னொருபக்கம் அறிவியல் வளர்ச்சி அசுரவேகத்திலிருக்கிறது. எதையும் துல்லியமாக கணக்கிடும் பேராற்றலைப் பெற்றுக்கொண்டுள்ளது. என்றாலும் பிறை பார்ப்பதில் இன்னும் குடுமிப்பிடி சண்டை நடந்துக்கொண்டிருப்பது (எங்களுக்கு) விதிவிலக்கு.

நவீன தொழிற்நுட்பம், விதவிதமான கருவிகள், கணினிகள், செயற்கைக் கோள்கள் இத்தியாதி இத்தியாதி என பல்வேறு உதவிகளுடன் வெளிவரும் கண்டுபிடிப்புகள் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு எவ்வித கருவிகள் இல்லாமல் கண் பார்த்து மனம் சிந்தித்து சொல்லப்பட்ட அறிவியல் ஆய்வுகள் மிகத்துல்லியமாக இருந்தது எப்படி சாத்தியமானது என்பது கேள்விக்குறி. மருத்துவம், இசை, வான்இயல், சோதிடம், புவிஇயல், தத்துவம், கலை என பல்வேறு அறிவியல்களை ஆய்வு செய்து அவற்றினை எழுதிய நூல்கள் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவைகள்  மறைந்தன. அது எப்படி? காலத்தாலா? கவனமின்மையாலா? இயற்கை சீற்றத்தாலா? என பல கேள்விகள் என்னை துளைத்துக்கொண்டிருந்தபோது சகோதரர் நூருல் அமீன் அவர்கள் ''மனித குல வளர்ச்சிக்கு எல்லா துறையிலும் பங்களித்த இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய தேக்க நிலை எப்போது தொடங்கியது என்பதையும் அதன் மூல காரணங்களையும், தீர்வுகளையும் முன் வைக்கும் கட்டுரையையும் தந்தால் நானாவின் அருட்கொடை இன்னும் முழுமை பெறும்.''  என்ற வேண்டுகோளை 'அல் அஸ்மாயி' கட்டுரையின் பின்னூட்டத்தில் வைத்தார். சகோதரரின் வேண்டுகோளை ஏற்று தோண்டினேன், புதைக்க அல்ல, புதைந்திருப்பதை எடுக்க. எவை காரணமாக இருக்கும் என்று யூகித்தேனோ அவை அல்ல என்பது தெரிந்தது. உண்மைகள் முழுமையாக கிடைக்காவிட்டாலும் கிடைத்தவற்றை சகோதரருக்கு சமர்ப்பிக்கிறேன். மூன்று பாகமாக வரும் இது,  ஓர் ஆய்வல்ல.. என் பார்வை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

பி.கு : கடைசி பாகத்தில்  sources  குறிப்பிடுகிறேன்.
***

பாக்தாதில் தோன்றிய இஸ்லாமிய அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும் 
The Raise and Fall of Islamic Wisdom in Baghdad


பாகம் 1

ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் ஏகத்துவம் என்ற விளக்கு அணைந்துவிட்டது என்றே சொல்லலாம். ஆனால், அதன் திரியின் நுனியில் நெருப்பின் துளி புள்ளியளவு இருந்துக்கொண்டே இருந்தது. அதை தூண்டிவிடுவார் யாருமில்லை.  கி பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெருமானார் அவர்கள் அதனைத் தூண்டிவிட்டு எரியச் செய்தார்கள். அந்த தூண்டல் பெரும் தீபமாக உருவெடுத்து இன்று வரை ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.

அரேபிய தீபகற்பம் முழுவதும் அந்தகாச இருளில் சிக்கி இருந்தபோது அங்கே மனிதம் என்ற நிலை மறைந்து போய் அடிமைத்துவம், கொலை, கொள்ளை, பெண்சிசு கொலை என எண்ணிலடங்கா துயரங்கள் நடந்தேறிக்கொண்டிருந்த சமயத்தில்தான் பெருமானார் அவர்கள் அந்த தீபத்தை ஒளிரவிட்டார்கள். அதன் ஒளியில் தன்னை முழுவதுமாக ஆழ்த்திக்கொண்ட முதல் பெண்மணி அன்னை கதீஜா பிராட்டியார்(ரலி); முதல் மனிதர் ஹஜ்ரத் அபுபக்கர் சித்தீக் (ரலி); முதல் சிறுவர் ஹஜ்ரத் அலி (ரலி) ஆவார்கள்.


முதல் மூன்று பேரில் தொடங்கிய இஸ்லாம், பெருமானார் காலத்தில் அரேபிய தீபகற்பத்தைக் கடந்து பரவத் தொடங்கியது. என்றாலும் ஹஜ்ரத் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் காலத்தில் மிக வேகமாகப் பரவியது. மேற்கே லிபியாவிலிருந்து கிழக்கே துர்க்மெனிஸ்தான் வரை       உமர் காலத்தில்            இஸ்லாமிய அரசு  பரவியது. சுருங்கச் சொன்னால் சிரியா, மெஸபடோமியா, பாரசீகம் முழுவதும் இஸ்லாம் பரவியது. இஸ்லாம் வெறும் மதமாகப் பரவவில்லை. ஒரு விடுதலையாக, ஒரு வழிகாட்டலாக, பாரிய கண்ணோட்டமாகப் பரவியது. கூடவே கல்வி, அரசியல்,  கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் இவை அனைத்தும் தன்னுள் அடக்கிக்கொண்டிருந்தது. கிலாஃபத்துக்குப் பின்  ஹஜ்ரத் உதுமான்(ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட சிரியாவின் கவர்னர் முஆவியா பின் அபுசுஃப்யான் தலமையில் உமையாக்கள் ஆட்சி மலர்ந்தது.

அரசியல் ரீதியாக ஒருபக்கம் இஸ்லாம் பரவியபோது கூடவே கல்வியும் பரவியது. இறைவனிடமிருந்து இறங்கிய முதல் வசனமே கல்வியை மையமாகக் கொண்டிருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. குர்ஆனில் 750 முறை அறிவை (இல்ம்) பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.  "சீன தேசம் சென்றெங்கிலும் சீர்கல்வியைத் தேடு" என்றார்கள் பெருமானார் அவர்கள். வெறும் சொல்லோடு நின்றுவிடவில்லை. போர்க் கைதிகளில் யாரேனும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தால் இங்கு கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்துவிட்டு விடுதலைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தார்கள். தன் நேரடிப் பார்வையில் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களுக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்தார்கள். மற்ற சிறுவர்களுடன் ஒப்பிடுகையில்  ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களும், ஹஜ்ரத் அப்துல்லா பின் அப்பாஸ் அவர்களும் அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.

கி பி 653ல் மதினாவில் பள்ளிவாசலில் முதல் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. மஸ்ஜிதை தொழுகை நேரம் போக மீதி நேரத்தில் கல்வி சாலையாக மாற்றினார்கள். ஐந்து வயதுமுதல் சிறுவரும் சிறுமியரும் கல்வி கற்க தொடங்கினர். முதல் பாடமாக இறைவனின் திருநாமங்களும் எளிமையான வசனங்களும் படிக்க எழுத கற்பிக்கப்பட்டது. பின் குர்ஆன் முழுவதும் கற்பிக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றபின் கணிதம் கற்பிக்கப்பட்டது. உயர்கல்வி கற்பவர்கள் வேறொரு சூழல் ஏற்பட்டது. பள்ளிவாசல் தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகுப்பறையாக மாறியது. தங்கள் ஆசிரியரைச் சுற்றி அமர்ந்து பாடம் கற்றனர்.

இஸ்லாமும் கல்வியும்

கல்வி வளர்ச்சி என்பது தனியாக  நிகழ்ந்துவிடவில்லை. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து அதுவும் வளர்ந்தது என்பதுதான் எதார்த்த உண்மை. இஸ்லாத்தைப் பொருத்தவரை அரபியர், அரபியரல்லாதவர் ஒவ்வொருவரும் குர்ஆனை கற்பது கடமையாகியது. கூடவே நபி போதனையையையும் கற்கும் சூழலும் தனக்குத் தானாக உருவாகியது. எனவே கல்வியின் அவசியத்தை உணரத்தொடங்கினர்.

மதினாவுக்குப் பின் கல்வியின் தலைநகரம் என்று சொல்லப்படும் சரித்திரப்புகழ் வாய்ந்த பஸரா உத்துபா பின் அஜ்வா அவர்களால் கிபி 635/637ல் நிறுவப்பட்டது. சில காலம் பின்பு கூஃபா நகரம் சஅத் பின் வக்காஸ் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

இவ்விரு நகரங்களும் மதினாவுக்குப் பின் இஸ்லாமிய சரித்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் குர்ஆனையும் மார்க்க நெறிமுறைகளை போதிக்கும் நகரங்களாக விளங்கியது. பின்பு அரபு இலக்கணம், சொற்களஞ்சியக்கலை (lexicography) யை போதிக்கத்தொடங்கிய சில காலத்திலேயே ஃபிக்ஹ்/சட்ட இயல் (jurisprudence), மரபியல் கலாச்சாரம், தத்துவம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டது. காலப்போக்கில் அதன் தனித்தன்மை இழந்து கிரேக்க எண்ணங்களின் சாயலை உள்வாங்கியது.

பஸராவில் இஸ்லாம் பரவத்தொடங்கியபோது ஈராக்கில் அரபு தாய்மொழியாக இருக்கவில்லை. நெஸ்தோரிய மொழியும் கிரேக்க மொழியும் பரவலாக இருந்தது. இஸ்லாம் பரவத்தொடங்கியக் காலத்து பஸராவில்  அரபு இலக்கணம் இலக்கியம் சார்ந்த கல்வியைத் தொடங்கிவைத்தார் அலி(ரலி) அவர்களின் தோழர் அபு அல் அஸ்வத் அல் துஆலி. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஈராக்கியர்கள் இளவயது கடந்தபின்னறே அரபியை கற்கத் தொடங்கியதால்  உச்சரிப்பில் பல தவறுகள் நிகழ்வது சாதாரணமானது என்றாலும் அதனை அலி(ரலி) அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தொழுகையில் குர்ஆன் ஓதப்படவேண்டியிருப்பதால்  வசனங்கள் சரியாக உச்சரிக்க வழிவகை செய்யுமாறு தன் நண்பரிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதை அவர்  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

21 ஜனவரி 661ல் அலி(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபிறகு பஸராவில் கவர்னராக பொறுப்பேற்ற ஜாயித் பின் அபிஹி, ஒரு நாள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக்கொண்டார்கள்..." (9-3) என்ற வசனத்தை  அல்லாஹ் அவனுடைய தூதருடனும் இணைவைத்து வணங்குபவர்களுடனும் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக்கொண்டான் என்று பொருள் மாறிய உச்சரிப்பை கேட்கும்படியாக நேர்ந்தது.  இது தொடர்ந்து நீடித்தால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் என்பதால் அரபிமொழியில் உயிரொலி (vowel) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் தக்காஃபியின் (661-714) பங்கு குறிப்பிடத்தக்கது என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

அல் கலீல் பின் அஹமது(இற:786) என்ற பஸராவை சேர்ந்த அறிஞர் 'அல் அய்ன்' என்ற முதல் அரபி அகராதியை உருவாக்கினார். இவரது மாணவர் பாரசீகத்தைச் சேர்ந்த சிபவயஹ்(இ:795) என்று அழைக்கப்பட்ட உஸ்மான் பின் அல்ஹாரிதி என்பவர் 'அல்கித்தாப்' என்ற அரபு இலக்கணத்தை முதன் முறையாக முறைப்படுத்தினார்.

 
கூஃபா எழுத்தில்  குர் ஆன்  

ஒரு நூற்றாண்டிற்கிடையில் கூஃபாவிலும் அபு முஸ்லிம் முஆத் இப்னு முஸ்லிம் அல் ஹர்ரா என்பவரால் அரபிக் கலாசாலைத் தொடங்கப்பட்டு இலக்கண இலக்கியங்கள் கற்பிக்கப்பட்டன. இரண்டு நகரங்களிலும் போட்டியாக ஒரே மொழியைப் போதித்தாலும் விளக்கமளிப்பதில் வேறுபாடும் எதிரும் புதிரும் இருந்தது.  

உமையாக்களின் ஆட்சி (661-750)

முஆவியா  பின் அபு சுஃப்யான் இஸ்லாத்திற்கு வந்த பிறகு முக்கிய பொறுப்புக்களை வகிக்கத் தொடங்கினார். ஹஜ்ரத் அபு பக்கர்(ரலி) அவர்கள் அவரை சிரியாவில் பைசாந்தியரை வெற்றி கொள்வதற்கான பொறுப்பை அளித்தார்கள். ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் அவருக்கு டெமாஸ்கஸின் கவர்னர் பொறுப்பை கொடுத்தார்கள். அதன் பின் ஹஜ்ரத் உதுமான்(ரலி) அவர்கள் இன்றைய சிரியா முழுமைக்கும் வடமேற்கு ஈராக்கிற்கும்  கவர்னராக நியமித்தார்கள். அலி(ரலி) அவர்கள் கிலாஃபத்தை ஏற்ற பிறகு அவர்களுடன் எப்போதுமே உமையா அவர்கள் இணங்கிப்போகவில்லை.

ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் மரணத்திற்குப் பின் முஆவியா(ஆ661-680) ஜெருஸலத்தில் கலிஃபாவாக பதவி ஏற்றார். உடன் கால தாமதமில்லாமல்  டெமாஸ்கஸுக்கு தலைநகர் மாறியது. பல ஆண்டுகள் சிரியாவின் கவர்னராக  முஆவியா இருந்திருந்தது மட்டுமல்லாமல் பலம் வாய்ந்த சிரிய படையை உருவாக்கியிருந்தார். பொறுப்பேற்ற பிறகு இஸ்லாமியப் பேரரசு பாரசீகத்தில் கொரசான் வரையும் வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மெஸபடோமியா வரையும் பரவியது. அதன் முழு நிர்வாகத்தையும் ஒருங்கினைந்த கட்டுப்பாட்டில் வைக்க இரண்டு பெரிய அமைப்புகளை (திவான்) முஆவியா உருவாக்கினார். ஒன்று அரசு நிர்வாக செயலகங்கள். மற்றொன்று தகவல் தொடர்பு ஆணையம். (மூன்று திவான்கள் என்கிறது விக்கிப்பீடியா)

பெருமானார் அவர்களை பின்தொடர்ந்து கலிஃபாக்கள் ஏற்படுத்திய கல்வி முறை பின் பற்றப்பட்டது. குர் ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாக வைத்து சட்டம், சமூகவியல் போதிக்கப்பட்டன. கல்விச்சாலைகள் என்று தனியாக இல்லாமல் பள்ளிவாசல்களே கல்விக்கூடங்களாக விளங்கின. டெமாஸ்கஸ், பெய்ரூத், அண்டியோஷ், முதலான நகரங்களில் கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன. உமையா கலிஃபாக்களான உமர் பின் அப்துல் அஜீஜ் மற்றும் காலித் பின் யஜிதின் ஆட்சி காலத்தில் கல்வி உச்ச நிலையில் இருந்தது.

முஆவியாவுக்குப் பின் வந்த யஜீத்(ஆ680-683) தன் தந்தையை பின்பற்றினார். மூன்றாண்டு ஆட்சி காலத்தில் வரி விதிப்பில் மாற்றமும் டெமாஸ்கஸில் பாசன முறையில் மேம்பாடும் செய்தார்.  அப்துல் மாலிக்(685-705) காலத்தில் ஆட்சிமொழியாக இருந்த கிரேக்க, பரசீக மொழி நீக்கப்பட்டு அரபி ஆட்சிமொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது, பைசாந்திய நாணயங்கள் இஸ்லாமிய அமைப்புடன் திருத்தியமைக்கப்பட்டன. முதலாம் வலீத்(705-715) சுலைமான்(715-717) ஆட்சி காலத்தில் மொராக்கோ, ஸ்பெயின் வரை இஸ்லாமியப் பேரரசு விரிவாகியது. பல பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. புகழ்பெற்ற உமையா பள்ளிவாசல் டெமாஸ்கஸில் உருவாகியது.

இரண்டாம் உமர் (682-720) 

(உலகம் முழுவதும் என் ஆட்சிக்கு வந்தால் முதலாம் உமரைப் போல் ஆட்சி செய்வேன் இல்லாவிட்டால் இரண்டாம் உமரைப் போல் ஆட்சி செய்வேன் - நெப்போலியன்)

இரண்டாம் உமர் என்று சொல்லக்கூடிய உமர் பின் அப்துல் அஜீஜ் அவர்கள் கலிஃபா உமர் பின் ஹத்தாப்(ரலி) அவர்களின் தாய்வழி கொள்ளுப் பேரன். ஆட்சி செய்தது 717 முதல் 720 வரை. இந்த நான்காண்டு காலத்தில் செய்த சாதனைகள் பல. அவர் சிறந்த கல்வியாளர், அவரைச் சுற்றி எப்போதும் அறிஞர்கள் பலர் இருந்துக்கொண்டே இருந்தனர். கல்வியை ஊக்கப்படுத்தியதோடு நின்றுவிடாமல் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார். பெருமானார் அவர்களின் சொல்லும் செயலையும் பற்றிய தகவல்கள் வெகுவாகத் திரட்டினார். நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். பாரசீகம், கொரஸான், வடக்கு ஆப்ரிக்கா ஆகியவற்றில் நீர் வளம் பெருக்க கால்வாய்களும், சீரியப் பாதைகளும், பயணிகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக ஆங்காங்கே விடுதிகளும், கூடவே மருத்துவ நிலையங்களும் கட்டினார். திம்மிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஸ்யா வரியை நீக்கினார். செல்வந்தர்களும் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் பொழுதுபோக்கிற்காக உபயோகப்படுத்திக்கொண்டிருந்த புல்வெளிகளை அரசுடமையாக்கி பின் ஏழைகளுக்கு விவசாயத்திற்காகப் பிரித்துக்கொடுத்தார். அரசுப் பணியில் இருப்பவர்கள் வேறு தொழில் செய்யக்கூடாது என்ற நியமத்தை உருவாக்கினார். அரசு அதிகாரிகள் அனைவரும் மக்களிடம் சென்று குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யவைத்தார்.  முப்பத்தெட்டாம் வயதில் கி.பி. 720 பிப்ரவரியில் கையூட்டுப்பெற்ற பணியாளனால் விஷம் கொடுக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார். அதன்பின் ஆறு கலிஃபாக்கள் ஆட்சிக்கு வந்தனர் இரண்டாம் மார்வானுடன் உமையாக்கள் சகாப்தம் முடிவுற்று அப்பாஸிய சகாப்தம் தொடங்கியது.

 Umaiya dynasty
உமையாக்கள் நிர்வாகம் - ஓர் பார்வை

முதன்முதலில் முஆவியா அவர்களின் கீழ் ஆட்சி வந்தபோது பைசாந்திய பேரரசர்களின் நிர்வாகத்தின்  சில முக்கிய அம்சங்களை பின்பற்றினார். அரசு இயந்திரத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். ஒன்று அரசியல் நிர்வாகம், மற்றொன்று ராணுவம் மற்றும் வரி வசூலிப்பு, மூன்றாவது மார்க்க நிலைப்பாடு. அவற்றின் ஒவ்வொன்றும் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
மாநிலம்: பேரரசை பல மாநிலங்களாகப் பிரித்து அவற்றின் நிர்வாகத்திற்கு ஆளுநர்களை நியமித்தார்.
அரசுப் பணியாளர்கள்: அரசு பணிபுரிய போதுமான அரபியர்கள் இல்லாமையினால் தகுதியும் கல்வியுமுடைய அனைவரையும் பணியாளர்களாக நியமித்து அரபியுடன் கிரேக்கம், காப்டிக்(Coptic), பாரசீக மொழிகளில் ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. பின்பு வந்த கலிஃபா அப்துல் மாலிக் முழுமையாக அரபியில் பதிய வைத்தார்.

நாணயம்:  தொடக்கத்தில் பைசாந்திய, சாஸானிய நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் காலதாமதமின்றி அவற்றின் ஒரு பக்கத்தில் குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்டது. பின்னர் டெமாஸ்கஸில் நாணய ஆலை உருவாக்கப்பட்டு உமையாக்கள் நாணயம் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. தங்க நாணயத்திற்கு 'தினார்' என்று வெள்ளி நாணயத்திற்கு 'திர்ஹம்' என்றும் அழைக்கப்பட்டது.         

உமையாக் கால  நாணயம்
ஆறு ஆணையங்கள்(திவான்): கலிஃபாவின் நிர்வகத்திற்கு உதவியாக  திவான்கள் எனப்படும் ஆணையம் அல்லது துறை உருவாக்கப்பட்டது.
1. திவான் அல் கரஜ்: மத்திய வருவாய் துறை. இதில் வரி மற்றும் இதர வருமானம், செலவினம் போன்ற அனைத்து நிதி நிர்வாகங்கள் இதன் கீழ் வந்தன.
2. திவான் அல் ரஸாயில்: அனைத்து நிர்வாக அதிகாரிகள் மற்றும் துறைகளுக்கும் அனுப்பப்படும் உத்திரவு, தகவல் மற்றும் ஆவணங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலமைச் செயலகம் போன்ற அமைப்பு.
3. திவான் அல் கத்தம்: அனைத்து தகவல்களும் சீல் வைக்கப்பட்டு அனுப்பப்படுவதற்குமுன் நகல் எடுக்கப்பட்டு அவற்றை பாதுகாக்கும் துறை(Bureau of Registry). இது அப்பாஸியர்களின் மத்திய காலம் வரை நீடித்தது.
4. திவான் அல் பரீத்: தபால் துறை. முஆவியாவால் உருவாக்கப்பட்ட இது கலிஃபா அப்துல் மாலிக்கால் விரிவுபடுத்தப்பட்டு தொடர் பயன்பாட்டுக்கு வந்தது. உமர் பின் அப்துல் அஜீஸினால் இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு கொராஸான் பெருவழிச்சாலையில் ஆங்காங்கே நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. முக்கிய பெருவழிகளில் 12 மைலுக்கு ஒன்றாக தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர் மாற்று(relay) முறையில் தபால்கள் எடுத்தச் செல்லப்பட்டன. இதற்கென குதிரை, ஒட்டகம், கழுதை, ஆட்கள் பயன்படுத்தப்பட்டன. விரைவு மற்றும் அதிமுக்கிய தபால்களுக்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது.
5. திவான் அல் குதத்(Qudat): நீதி துறை. பெருமானார் அவர்கள் காலத்திலும் அதன் பின் வந்த கலிஃபாக்களும் நீதி பரிபாலனத்தன் தங்கள் கையிலேயே வைத்திருந்தனர். இஸ்லாம் விரிவடைந்தபின் ஹஜ்ரத் உமர் அல் ஃபாரூக் அவர்கள் கிபி 643ல் எகிப்தில் ஒரு நீதிபதியை நியமித்தார்கள்.  பின்னர் கிபி 661ல் உமையா கலிஃபாக்களான ஹாஷிம், இரண்டாம் வலீத் ஒன்றன்பின் ஒன்றாக பல நீதிபதிகளை நியமனம் செய்தனர்.
6. திவான் அல் ஜுந்த்: ராணுவத்துறை. தனித்துறையானாலும் கலிஃபாவின் நேரடி கண்கானிப்பில் இருந்தது. வீரர்களின் ஊதியம் முதல் பதவி உயர்வு வரை இதன் கீழ் மஞ்சனீக்(Catapult)    இருந்தது. வியூகத்தில் பைசாந்திய முறையை மாற்றியமைத்து இடம், வலம், நடு, முன்னனி, பின்னனி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு தனி தளபதிகள் நியமிக்கப்பட்டனர். இம்முறையே போரின்போதும் பயன்படுத்தினர். பின்னர் வந்த மார்வான் II(740-750) இம்முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு குர்துகளை ராணுவத்தில் சேர்த்தார். தரைப் படை, குதிரைப் படை, பீரங்கிப் படை(artilary) என மூன்றாக அமைத்தனர். அர்ராதா, மஞ்சனீக், dabbabah(canon) முதலியவை பீரங்கிப்படையில் பயன்படுத்தப்பட்டன.

கிரேக்க அறிவின் ஊடுருவல்
அலெக்ஸாந்தர் பேரரசு    மத்திய கிழக்கில் கிரேக்க அறிவின் தாக்கம் நீண்ட பின்னணி கொண்டது. கி.மு. 331ல் அலெக்ஸாண்டர் பாரசீகத்தையும் கடந்து வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் பகுதிவரை தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார். வெற்றிகொண்ட நாடுகளைப் பல காலனிகளாகப் பிரித்து தன் ஆட்சியை நிறுவினார். தூரதிருஷ்டவசமாக இறந்துவிடவே வாரிசு என்று சொல்வதற்கு அவரது பச்சிளம் குழந்தையைத் தவிர வேறு யாருமில்லை. எனவே அந்தந்தப் பகுதிகளை ஆண்ட தளபதிகள் நாட்டைக் கூறுபோட்டுக்கொண்டனர்.

கிமு 323 ல் மகாஅலக்ஸாண்டர் எகிப்தில் அலக்ஸாந்திரியா என்ற நகரை நிறுவியபின் அங்கே கிரேக்க கலாச்சாரம் உட்புகுந்தது. நகரின் நிர்வாகப் பொறுப்பை தாலமி சோட்டர் பெற்றபின் அதை பல அறிஞர்கள் கூடும் நகரமாக மாற்றினார். நூல்களும் ஆய்வுகளும் வரையப்பட்டன. கிரேக்க ஆட்சிக்குட்பட்டிருந்த சிரியாவிலும் மெஸமடோமியாவிலும் கிரேக்க மொழியைவிட அராமைக், ஹீப்ரு மொழிகள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதிகம் பேசப்படும் மொழி அராமைக்காகவே இருந்தது. பாரசீகத்தை ஆண்ட தளபதிகள் கிரேக்க பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் கிரேக்க மொழி பாரசீகம் வரை தன் ஆதிக்கத்தை செலுத்தியது.

அராபிய தொடர்பில் கிரேக்க அறிவு
Euclid (before 300 BC) அலக்ஸாந்திரியாவின் ஆரம்பகால அறிஞர். கணிதவியலை ஆய்வு செய்தவர். இவரது 'Eliments' பல விளக்கங்களைத் தருகிறது. பிற்காலத்தில் அராபியர்கள் இதனை ஆய்வு செய்தனர்.

Ariistarchus (d. 230 BC.) அலக்ஸாந்திரியாவில் ஆசிரியர். வான்இயல் ஆய்வாளர். பிதாகோரஸ் முக்கோணத் தத்துவத்தின் உதவியால் சூரியன், சந்திரன், பூமி இவைகளுக்கிடையேயுள்ள தூரத்தைக் கணக்கிட்டார். இவரது கொள்கையை பைரூனி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மறக்கக்கூடியதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
Eratostkeness (d. 194 BC.) அலக்ஸாந்திரியாவின் சிறந்த அறிஞர். பூமியின் விட்டத்தையும் சுற்றளவையும் அளக்கும் முறையை கண்டுபிடித்தவர். இவரது முறையை கலிஃபா அல் மாஃமூன் 829 ல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.

Archimedes (d. 212 BC) அலக்ஸாண்டிரியாவுடன் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் இவரது தத்துவம் அலக்ஸாண்டிரியாவிலும் பின்பு அரபியர்களாலும் பின்பற்றப்பட்டது.

Hypsicles (125 BC.) பாபிலோனிய வானவியலாரை பின் தொடர்ந்து வான் இயல் ஆய்வுக்காக வட்டத்தை 360° பிரித்து அதனை அறுபது கூறுகளாக பிரித்தார். இவரது ஆய்வை குஸ்தா பின் லுக்கா அரபியில் மொழிபெயர்த்தார் பின்பு அல் கிந்தி திருத்தி எழுதினார்.

Claudius Ptolemy (d. 168 AD) இவர் எழுதிய புகழ் வாய்ந்த Almagest ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபினால் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது.

மருத்துவ வரலாறு ஹிப்போகிரட்ஸ் (d. 257 BC) லிருந்து தொடங்குகிறது. அவரது நூலான Aphorisms பிரபலம் வாய்ந்த மருத்துவப் பாடநூலாக விளங்கியது. இதனை ஹுனைன் பின் இஸ்ஹாக் அரபியில் மொழிபெயர்த்தார். பின்பு அலக்ஸாந்திரியாவின் கேலனின் (d. 200 AD) மருத்துவக் கொள்கை பின்பற்றப்பட்டது. இவரது நூலை ஹுனைன் பின் இஸ்ஹாக் குழுவினர் அரபியில் மொழிபெயர்த்தனர். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த Paul of Aegina என்பவர் மருத்துவ நூல்கள் அனேகம் எழுதியுள்ளார்.  இதில் பிரபலம் வாய்ந்த The Seven Books of Medicine  ஹுனைன் பின் இஸ்ஹாக்கினால் 'அல் கவாபில்' என்ற பெயரில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்தியத் தொடர்பு
சஸ்ஸானிய மன்னன் முதலாம் குஷ்ராவ்(531-578),  ஜுந்திஷாப்பூர்  என்ற நகரை உருவாக்கி அதை குஜிஸ்தானின் தலைநகராக்கினான். ஒரு சில இந்திய மூலிகைகள் கிரேக்க மருத்துவத்தில் சேர்க்கப்படுவதை அறிந்த மன்னன் இந்திய முறைப்படி மருந்துக்கள் தயாரிக்கவும் மருந்துவம் செய்யவும் இந்தியாவிலிருந்து மருத்துவர்களையும் மருத்துவப் பொருட்களையும் சர்க்கரையும் வரவழைத்தான் என அலி பின் ஷஹல் அல் தாபரி தன்னுடைய ஃபிர்தவ்ஸ் அல் ஹிக்மா என்ற நூலில் குறிப்பிடுகிறார். அவை பெரும்பாலும் மாந்திரீகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன என மேலும் குறிப்பிடுகிறார். என்றாலும் அதிக அளவில் இந்திய மருந்துக்களையும் சர்க்கரையையும் தருவித்ததாக சொல்லப்படுகிறது. (கிபி 300 லிருந்தே கரும்புச் சாறிலிருந்து சர்க்கரைத் தயாரிக்கும் முறையை இந்தியர்கள் தெரிந்து வைத்திந்தனர். அப்போது அது மருத்துவப் பொருளாக பயன்படுத்தப்பட்டது பின்னரே உணவில் சேர்க்கும் ஒன்றாக ஆகியது.)

கிபி 638ல் அரபியர்களால் இராக் வெற்றிகொள்ளப்பட்டது அதை தொடர்ந்து 642 ல் பாரசீகம் வீழ்ந்தது. டெமாஸ்கஸிலிருந்தவாறே மெஸபடோமியாவையும் பாரசீகத்தையும் உமையாக்கள் ஆட்சி செய்தனர். என்றாலும் அங்கு வாழ்ந்த நெஸ்தோரிய கிருஸ்தவர்களின் வழிபாட்டுக் கொள்கையிலேயோ அல்லது அரிஸ்டாட்டிலிய போதனை முறைகளிலேயோ தலையிடவில்லை.

கடல் வழி வந்த இந்திய செல்வாக்கு
கி மு இரண்டாம் நூற்றாண்டுகளில் இந்திய வணிகர்கள் ஏடன் வரை சென்று அரபியர்களுடன்  வணிகம் செய்தனர். எகிப்திய வணிகர்கள் செங்கடல் வழியாக ஏடன் வந்து இந்தியப் பொருட்களை அரபியர்களிடமிருந்து பெற்றுச் சென்றனரேயல்லாது  இந்தியாவுடன் நேரடியான வணிகத் தொடர்பு த்திருக்கவில்லை. இந்தியாவுக்கான கடல் வழியை ரகசியமாக வைத்திருந்ததால் எகிப்தியர்களால் அறியமுடியாமல் இருந்தது.

கிபி 50க்குப் பிறகு ரோமானியர்கள் இந்தியா செல்ல தலைப்பட்டனர். பொதுவாக ஆறு மாதங்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் பருவக்காற்றைப் பயன்படுத்தி இந்தியா செல்லவும் மறு ஆறு மாதம் எதிர் திசையில் வீசும் காற்றைப் பயன்படுத்தி திரும்பிவரவும் செய்தனர். குறிப்பாக தென்மேற்கு பருவக்காற்றைப் பயன்படுத்தி செங்கடலின் முகத்துவாரத்திலிருந்து அல்லது ஏடனிலிருந்து மலபார் மற்றும் தென் கடற்கரை நகரங்களுக்கு 40 நாட்களில் வந்தனர். எதிர்புறமாக வீசும் வடமேற்கு பருவக்காற்றை திரும்புவதற்கு ஏதுவாக பயன்படுத்தினர்.  ரோமானியர்கள் இந்தியாவுடன் நேரடி வர்த்தகம் செய்ததற்கான ஆதாரமாக வடமேற்கு இந்தியாவில் கிடைத்த சில நாணயங்களும் தமிழகத்தில் கிடைத்த அதிக அளவிலான தங்க, வெள்ளி நாணனயங்களும் ஆகும். இது வெறும் வர்த்தகப் பரிமாற்றம் என்றில்லாமல் அறிவுப் பரிமாற்றமாகவும் இருந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். இது ஒருபுறமிருக்க சிரியா மற்றும் எகிப்து வழியாக கிரேக்க அறிவு நேரடியாக  அரபியர்களை அடைந்திருந்திருந்தது. இன்னொருபக்கம் அரபிக்கடல் வழியாக இந்திய அறிவு அரபியர்களை அடைந்தது. வேறொரு பக்கம் மறைமுகமாக பாரசீகத்தின் வழியாக இந்திய அறிவு அரபியர்களை அடைந்தது.                                     


இனியும் வரும்.....

***
 நன்றி : ஹமீது ஜாஃபர் (http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Wednesday, December 4, 2013

அப்பாரோட அங்கராக்கு - ஸ்ரீபதி பத்மனாநாபா

அங்கராக்கு என்றால் கொங்குத் தமிழில் சட்டை என்று அர்த்தமாம். கோவையில் இப்போது எம்சீயேஎம்பீயே படித்துக்கொண்டிக்கும் மகனிடம் கேட்டால் 'சாம்சங் நோட் III' என்கிறான்! விடுங்கள், 1998-ல் சுஜாதா தேர்ந்தெடுத்த ஸ்ரீபதி பத்மனாநாபாவின் கவிதையை பகிர்கிறேன்.   'ஏறக்குறைய உரைநடைக்கு அருகிலேயே கவிதை வந்துவிட்டது. உள்ளடக்கத்துக்கும் அதில் சொல்லப்படும் மனித மன இயக்கங்கள், ஏக்கங்கள், மனிதாபிமான அல்லது துரோகச் செயல்கள், யாத்திரைகள், மரங்கள், பஸ்கள், அன்றாட காட்சிகள் இவைகளை உரைநடை போலவே சொல்கிறார்கள். எனினும் ஏதோ ஒரு தன்மை அதைக் கவிதை என்று அடையாளம் காட்டுகிறது. இந்தியில் 'அகவிதா' என்ற இயக்கம் போல இது என்று சொல்லலாம்.  ஒரு சிறந்த உதாரணமாக இந்தக் கவிதையைப் பாருங்கள். நான் சொல்வது புரியும்' என்று சுஜாதா சொல்லியிருந்தார். பாருங்கள். 'வாப்பாட கம்ஸு சட்ட' என்று மறக்காமல் எழுதுங்கள். - ஆபிதீன்
***

அப்பாரோட அங்கராக்கு - ஸ்ரீபதி பத்மனாநாபா

ம்.. ஆறுமணி ஆயிருச்சா! அதா அவியளக் காணம்
அப்பாரு சாராயக் கடேல குச்சீட்டிருப்பாரு
ஆத்தா கொட்டாயில மொதோ ஆட்டத்துக்கு
நீண்டுட்ருக்கும். (பெரபுமு நதியாளுமு நடிச்ச படமாமா)
இனி அவிய வார வாரெங்கும்
நாந்தேன் டீயாத்தணும்
'டே ராசு.. நீ கல்லால குச்சீக்கோ, நா டீயாத்தறேன்,
எனக்கு டீயாத்தறாதுன்னா எளசு புடிச்சே புடிக்கும்,
கைய நீள நீளமா வீசி ஆத்துன்னா..
யம்மாடி எவ்ளோ நொரெ...
இப்பத்தா புடிக்கிறதேயில்ல...
கைய வீசறப்பல்லாம் முந்தானி வெலகிடுதா,
அவிஞ்ச கண்ணுக எல்லா அங்கியே பாக்கும்,
கருமத்த...!

*
இதாரு புதுசாருக்கு..
பேன்ட்டெல்லாம் போட்டுக்கிட்டு...
டவுனுக்காரராட்டமா?
'ஒரு டீ குடுக்கிறியாம்மா?
நாங் கெளாசக் களுவுனே,
அவுரு என்னயவே பாத்துட்ருந்தாரு..
'உம்பேரென்ன?
அய்யோ..
என்னிக்குமில்லாமெ எனக்கு ஏ இப்புடி வெக்கமா வருது
நாந் தலயக் கவுந்துக்கிட்டே 'மலருங்கொ'
டீய ஆத்தீட்டே ஓரக்கண்ணுல அவரப் பாத்தே..
எம் மூஞ்சியவா பாக்குறாரு..
நா டீய ஆத்தாம கீள வச்சே,
'ஆத்தியே குடும்மா',
நா பின்னாடி திலும்பிப் பாத்தே
செவுத்துல,
அப்பாரோட அங்கராக்கு தொங்கீட்டிருந்துச்சு
போயி தாவணி அதயப் போட்டுக்கிட்டே,
இப்போ மாராப்புந் தெரியாது
மண்ணாங்கட்டீந் தெரியாது
இனி தகிரியமா கைய நீளநீளமா வீதி ஆத்தலாம்
..யம்மாடி
எவ்ளோ நொரெ..!
**
மேலும் சில 'பூஜ்யம்' கவிதைகளை இங்கே பார்க்கலாம். 
நன்றி : ஸ்ரீபதி பத்மனாநாபா, தரு,  விகடன்  (சுஜாதாட்ஸ்)

Sunday, December 1, 2013

'அவதி' போக்கட்டும் இந்த ஆபிதா பர்வீன்

வினோதமான அவதி (விடுமுறை) கொடுத்திருக்கிறது அமீரக அரசாங்கம் இந்தமுறை ,  நாளைய 'நேஷனல் டே' யை கொண்டாட இயலாமல்.   நல்ல வேலை ஒன்று கிடைத்தால் நாலைந்து நாள் லீவு போட்டுவிட்டு வீட்டில் ஜாலியாக உட்காரலாம் என்று மோகன்லால் 'ஓர்க்காபுரத்து' படத்தில் நெடுமுடியோடு புலம்புவது ஞாபகம் வருகிறது. அதை விடுங்கள், ஒரு மலையாள நண்பர்தான் முந்தாநாள் ஃபேஸ்புக்கில் இப்படி எழுதினாராம்:

'பாவப்பட்டோர்க்கு வெள்ளியாழ்ச்சே (Friday) அவதி.  தட்டிமுட்டி ஜீவிப்போர்க்கு Fri -to- Sat அவதி. பணக்காரர்க்கு Fri, Sat & Sun அவதி. கோடீஸ்வரர்க்கு Fri, Sat , Sun & Monday அவதி! 

எப்படி? 'அவதி' கிட்டாத என்னைப்போன்றோர்க்கு அமைதி கிடைக்கவேண்டி ஆபிதா பர்வீனை இடுகிறேன்.
***

***
Thanks to : sarang0333
***
சூப்பர் ஆடியோவில் இங்கேயும் கேட்கலாம்

Monday, November 25, 2013

மச்சான் சொன்ன மஞ்சள் கதை - எஸ்.எல்.எம். ஹனிபா

இதே தலைப்பில் வேறெங்கும் இருக்கிறதா என்று இணையத்தை தேடினேன். அதிபயங்கர காமக்கதை ஒன்று வந்தது. சுட்டியெல்லாம் கொடுக்க முடியாது. அதைப் படித்துமுடித்துவிட்டு , மறக்காமல் முகம் சுளித்துவிட்டு , தொந்தரவு செய்யாத மஞ்சள் கதையை மட்டும் இங்கே பகிர்கிறேன். காக்கா வாழ்க. அப்படியே ஹாஜியார்களும்! - ஆபிதீன்
***

 மச்சான் சொன்ன மஞ்சள் கதை
எஸ்.எல்.எம். ஹனீபா

பத்து வருடங்களுக்கு முதல் ஒரு நாள் மச்சான் சொன்ன கதை இது. மச்சான் எனது உறவினர். உமர்லெப்பை சேகு இஸ்மாயில், வயது 78. ஒவ்வொரு நாளும் மச்சான் அரைக்கிலோ கோழித்தீன் வாங்க கடைக்கு வருவார். மச்சான் வசம் பத்துப் பன்னிரண்டு புறாக்கள். அவர் வீட்டிலிருந்து எனது கடை 3 கிலோமீற்றர் தூரம். தனது புராதன காலத்து சைக்கிள் வண்டியில் மிகவும் இலாவகமாக வந்து தீன் வாங்கிப் போவார். "இரண்டு கிலோ வாங்கிப் போங்களேன்" என்று சொன்னால் "வீணாக்கிப் போடுவார்கள்" என்பார். மச்சான் மிகவும் அப்புராணியான மனிதர். அவரைப் போல் மனிதர்களை ஊரில் காண்பது அரிதாகிப் போனது.

நல்ல மழை பொழிந்த ஒரு நாளின் பகற்பொழுதில் பகற் போசனத்துக்காக கடையை மூடி விட்டு வீடு சென்று கொண்டிருந்த போது, எதிரே மச்சான் பென்னம்பெரிய கோணிப்பையை தனது சைக்கிளின் கரியரில் வைத்துக் கட்டியவாறு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

"மச்சான், ஒவ்வொரு நாளும் மூட்ட மூட்டயா காய் கொண்டு போறீங்க. எனக்கும் ஒரு பத்துக் காய் கொண்டு தரலாந்தானே" இவ்வளவுதான் நான் சொன்னது.

என்னுடைய நினைப்பில் கோணிக்குள் இருப்பது மாங்காய் என்று எண்ணிவிட்டேன். கற்பனைக்கு என்ன குறைச்சல். உள்ளே இருந்ததோ வேறு.

மறுநாள் பகற் போசனத்துக்கு வீட்டுக்குச் சென்ற பொழுது, "உங்களுக்கு நபுசு அடங்காது, கண்ட கண்ட பலாயிலயெல்லாம் ஆசதான்".

நான் என்னவோ ஏதோ என்று திகைத்தேன். மீண்டும் மனைவி, "சேகு இஸ்மாயில் காக்கா மஞ்சள் பழம் பத்து தந்திட்டுப் போயிருக்கார். போட்டுக் குத்துங்க".

"பிள்ளெ, நான் மாங்காண்டு நினைச்சித்தான் கேட்டன்"

மறுநாள் மச்சான் கடைக்கு வந்தார். "மச்சான், நான் மாங்காண்டு நினைச்சித்தான் கேட்டன். அது மஞ்சள் பழம்" (இங்கு லாவுலு பழம் என்பார்கள்).

"மெய்தான், ஒவ்வொரு நாளும் மூட மூடயா கட்டிப் போறீங்களே. எங்க கொண்டு போறீங்க?"

"அது மச்சான், நம்மட பசார்ல இருக்கிற ஆஜியார்ர கொச்சிக்காய் மில்லுக்கு (கிரைண்டிங் மில்) கொண்டு போறேன். மூடெக்கு இரு நூறு ரூவா தருவார்" என்றார்.

"இந்தக் காய ஆஜியார் என்ன செய்யிறார்?" நான்.

"நல்லா முத்திய செங்காய நாலா வெட்டி வெய்யில்ல காய வெச்சி, பவுடராக்கி, மஞ்சள் தூளோடு கலந்து யாவாரம் செய்றார்" என்றவர், "இந்த வருஷமும் ஆஜியார், குடும்பத்தோட மக்காவுக்குப் போறார் மச்சான்" என்றார். 
***
நன்றி : ஹாஜி எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள்

Saturday, November 16, 2013

முகமது பஷீரின் 'சப்தங்கள்' - குளச்சல் மு. யூசுஃப் முன்னுரை

வைக்கம் முகமது பஷீர் வாசகர்கள் (fb) குழுமத்திற்கு நன்றியுடன்...
**


முன்னுரை (சப்தங்கள்)
குளச்சல் மு. யூசுஃப்

பிரபஞ்சம் பின்னிட்ட கோடானுகோடி தினங்களின் நிலவு போர்த்திய ஓரிரவு. அதன் ஒரு பகுதி முகமிழந்த மனிதர்களை வெறும் ‘சப்தங்க’ளால் சித்திரப்படுத்தியிருக்கிறார் பஷீர். மொழியின் வெறும் ஓசைகளே இதில் மானுட உன்னதங்களைக் குலைத்துப் போடுகின் றன.

விலைமாதர்களையும் பாலியல் நோய்களையும் ஓரின சேர்க்கை யாளர்களையும் கருவாகக் கொண்ட 12 அத்தியாயம் நீண்ட இந்தச் சிறுகதை அல்லது சிறு நாவலின் அர்த்தப்பாடுகள் மானுட விழுமியங்களை மட்டுமல்ல மனிதனின் இருப்பையே நிலைகுலைய வைக்கிறது. அதுவரையிலான இலக்கிய மரபியல் அறிஞர்களையும் கௌரவமான கதைச்சொல்லிகளையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும்புலவர்களும் பேரிலக்கியவாதிகளும் தேவலோகக் காரிகைகளின் அங்க லாவண்யங்களை உவகையுடன் எழுதிக் குவித்துக்கொண்டிருந்த போது காற்றுப் பிரிவது உள்ளிட்ட இயற்கை உபாதைகள் தசையுள்ள தாஜ்மகால்களுக்கும் உண்டு என்று சொன்னவர் பஷீர்.

காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடிய அதே காலகட்டத்தில் தான் பஷீர் பாம்பையும் பூரானையும் நரியையும் பிற உயிரினங்களையும் பூமியின் வாரிசுதாரர்கள் என்றார். நேரடியான வாழ்க்கையனுபவங்களிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் படைப்பையும் வெகுசன இரசனையையும் தீவிரமான வாசக அனுபவத்தையும் ஒன்றிணைவாகப் பயணிக்கச் செய்கிற இந்தத் திசையறிவுதான் பஷீரின் மிகப்பெரிய பலம். கலாச்சாரத்தை வாசனையால் புரிந்துகொள்ள முடியுமென்றால் ஓரினப் புணர்ச்சியாளர்களின் கலாச்சாரத் தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியுமென்பதை மக்களின் மொழியில் சொன்னவர் பஷீர். வார்த்தைகளுக்கு இலக்கணரீதியிலான அழுத்தம் தந்து மனித வாழ்க்கையை வர்ணனை செய்ய முற்படுகிற, சமூகத்தின் வெளியில் நிற்கும் ஒரு பார்வையாளனின் கதைச்சொல் முறையும், இலக்கிய வகை மாதிரி பூடகங்களின் அர்த்தத் தளங்களுக்குள் பயணிக்கும் திறன்படைத்த நுண்மான் நுழைபுலன்கொண்ட வாசகன் பயணிக்கும் திசையும் இதிலிருந்து அடிப்படையாகவும் முற்றிலும் மாறுபாடானதுமாகும்.

புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மொழியின் இலக்கணத் தினுள் வகைப்படுத்தியும் மரபார்ந்த இலக்கிய வடிவத்தை விட்டு விலகி விடாமலும் எழுதும் டேபிள் ஒர்க் பஷீரைப் பொறுத்த வரை அன்னியமானது.

‘உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ எனும் அவரது குறுநாவலின் நாயகி பாடுகிற பாடலின் முதல் வரியே இப்படித்தான் தொடங்கும்: ‘குத்தினி ஹாலிக்க லித்தாப்போ...’ இதற்கான அர்த்தம் உலகிலுள்ள எந்த ஒரு மொழியிலும் கிடையாது.

ஆனால் எழுத்து வடிவிலான இந்த ‘சப்தங்’களுக்கு மலையாள நாட்டின் அரசியலில் அர்த்தமிருக்கிறது. ஆசிரியராக பணியாற்றுகிற அவரது இளைய சகோதரன் அண்ணனுக்கு இலக்கண இத்தியாதிகளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதால், “காக்கா, எதற்கும் கொஞ்சம் இலக்கணம் படிப்பது நல்லது” என்கிறார். பஷீருக்குக் கோபம் வந்தாலுமே இதற்காக அவர், தமையனுடன் இலக்கணம் பற்றிய சர்ச்சைக்குள் இறங்கிவிடவில்லை. “போடா, நீ. வீட்டிலிருந்த நெய்யை எல்லாம் திருடித் தின்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லித் திரிந்தவன்தானே நீ. உன்னுடைய இலக்கணத்தின் இலட்சணம் எனக்கா தெரியாது” என்று பதில் சொல்கிறார். தன்னுடைய படைப்புகள் ஆங்கில நாவல்களிருந்து தழுவப்பட்டவை என்ற விமர்சனத்தையும் பஷீர் இவ்வாறே எதிர்கொண்டார்: “வாய் வழியே சாப்பிடுவதாலும் வட்ட முகமும் ஒரு ஜோடி கை கால்களும் இரண்டு கண் களுமிருப்பதாலும் மேற்படியானை சர்ச்சிலின் மகனென்று சொல்லி விட முடியுமா?”

எழுதுகோலைத் தீட்டி காகிதங்களை எழுதுவதற்குப் பத்திரப்படுத்தி விட்டு அனுபவங் களைத் தேடிப் புறப்பட்டவரில்லை பஷீர். அவர் பயணங்களை நோக்கி துரத்தியடிக்கப் பட்டவர். யாரால் துரத்தப் படுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. மனித மனத்தின் இனம்காண முடியாத சூட்சுமப் பகுதி அது. வாழ்க்கை சுகப்படவில்லையென்பதற்காக பஷீர் யாரை நோக்கியும் தனது சுட்டுவிரலைத் தூண்டவில்லை. ஆகவேதான் தோட்டத்தில் நுழைந்த பாம்பு மனைவி பார்ப்பதற்குள் போய் விட்டால் நல்லது என்று அவர் பதைபதைப்பதுவும் அவரால் எதையுமே வெறுக்க இயலாமல் போனதுவும். வைக்கம் முகம்மது பஷீரின் கனவில் திருச்சூரில் உறையும் வடக்கும் நாதர் வந்து சொல்கிறார்: நன்றாகப் பழுத்தப் பாக்கு கிடைக்காமல் வாயெல்லாம் என்னவோ போலிருக்கிறது என்று. மறுநாள் பாக்குகளை வாங்கிப் பொட்டலமிட்டு கோயில் சுவர்களுக்குள் வீசி யெறிகிறார் பஷீர். மனம் பிறழ்வுபட்ட நிலையில் தான் எதிர்பாராமல் வந்துகிடைத்த இதுபோன்ற ஓராயிரம் அனுபவங்கள். இதைத்தான் மலையாள எழுத்தாளர் எம்.பி. போள், வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிய்த்தெடுத்ததும் ஓரங்களில் இரத்தம் துளிர்த்து நிற்பதுமான படைப்புகள் என்று வர்ணித்திருந்தார்.

பஷீரின் அதிஅற்புதப் படைப்புகளான பாத்துமாவின் ஆடு, பால்யகால தோழி, உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்ததுபோன்ற கதைகளை ஒருவேளை திறமையான கதாசிரியர்கள் யாராவது எப்போதாவது எழுதி விடுவார்களாக இருக்கலாம். ஆனால் மனிதனின் ஈனஸ்வரத்திலான இந்தப் பேரோசையை பஷீரைத் தவிர வேறு யாராலுமே எழுப்ப இயலாது. தமிழ்ச்சூழலில் அண்மைக்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரலை நாற்பதுகளிலேயே பிரதிபலித்து விட்டவர் பஷீர். அன்றுவரை யாரும் சொல்லாததும் அதற்குப் பின்னாலும் யாரும் சொல்லாததுமான ஹூருலீன் (சுவர்க்கலோகத் தாரகை) பெண்ணொருத்தி குசு விடுவதைப் பற்றிய சிறுகதையான பர்ர்ர்... ஐ பஷீர் எழுதி நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.

மலையாளத்தில் ‘பஷீரியம்’ எனும் இலக்கியக் கோட்பாட்டை மொழிசார்ந்தும் வடிவம் சார்ந்தும் ஏற்றுக்கொண்ட மலையாள வாசகர்களில் பெரும்பான்மையினரும் இன்று பஷீரைப் பற்றிய நினைவுபடுத்துதல்களைக்கூட இலக்கியத்தின் மற்றொரு முகமாக வரவேற்கிறார்கள். வாழும்போது மாந்திரீக கதாசிரியராகப் போற்றப் பட்டவரின் ஞாபகங்கள்கூட மாந்திரீகத் தன்மையுடனிருப்பதை அவரது வாழ்க்கையின் அதிசயமாகவே கருதவேண்டியதிருக்கிறது.
***


நன்றி : குளச்சல் மு. யூசுஃப் , காலச்சுவடு பதிப்பகம்
***
ஒரே ஒரு சுட்டி : உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்

Wednesday, November 13, 2013

ரகசியம் - நிஷா மன்சூர்

புதைக்கப்படும்போது
புதைக்கப்படும்..!!

***

நன்றி : நிஷா மன்சூர்
https://www.facebook.com/nisha.mansur

**
குறிப்பு : 

நண்பர் தாஜ்,  'ரகசியமாக' ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்ட உரைவீச்சு ஒன்றை (தத்துவக் கவிதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...) வீசியிருந்தார். அதற்கு சகோதரர் நிஷா மன்சூர் எழுதிய இரண்டு சூப்பர் வரிதான் மேலேயுள்ளது.


இது தாஜ்எழுதியது :


யாரிடமும் சொல்ல முடியாத
சிலபல ரகசியங்கள்
எல்லோரிடமும் உண்டு.
கட்டாயம் இருக்கும்.
நிஜத்தில்
அதை யாரிடமும்
சொல்ல முடியாதும் கூட
கடைசி........... வரை.
***

Sunday, November 10, 2013

கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்

'கொ’ என்று தவறாக அடித்ததுமே கொக்கோகம் என்று முதலில் தருகிறான் குறும்பு செய்யும் கூகுளான்! கொத்தமல்லி, கொள்ளு, கொக்கு என்றும் தருகிறான் பிறகு என்றாலும் முதலில் தந்ததற்காக அங்கேபோய் அதிவீரராம பாண்டியனை அறியாமல் இருக்க முடியுமா? அப்புறமாத்தான் ’கோ’வை அடித்தேன்’ ; கோபாலகிருஷ்ண பாரதியாரையும் தரிசித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். எதற்கு?  நந்தன் புகழ் பாடியவர்,   நாகூர் பக்கத்து நரிமணத்தில் பிறந்தவர் என்பதால் ஒரு பிரியம். அவ்வளவே. இப்போது பகிரும் இந்த ஒலிப்பதிவில் அவர்  இயற்றிய ஏழு அருமையான பாடல்கள் இருக்கின்றன. சிக்கல் குருசரன், சௌம்யா, ஓ.எஸ்.தியாகராஜன், ஜி.என்.பி., சீதளாபதி பாலசுப்ரமணியம், நீலா ராம்கோபால், நிஷா பி. ராஜகோபால் என்று பலர் பாடினாலும் எழுந்து நிற்க வைப்பது எங்கள்  ஜி.என்.பியின் குரல்தான். கேளுங்கள்.

கேட்பதற்கு முன்பு ஒரு ஜோக்.  ”ஸங்கீத ஸரிகமபதநி' இதழில் ரா.கி.ரங்கராஜன் படித்ததை பசுபதிஐயா தளத்தில் பார்த்தேன்:

'என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்...'

'சரி, நீ என்ன பண்ணறே?'

'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?'.
***
***
Thanks to : Lakshminarayanan Noorani
+

கோபாலகிருஷ்ணபாரதியார் பாடல்கள்

Tuesday, November 5, 2013

ஏழையின் சாபம் - பிரேம்சந்த் சிறுகதை (தமிழாக்கம் : மஜீத்)


Image Courtesy : mvnu
***
ஏழையின் சாபம்
(Garib Ki Hai)

சாந்த்பூர் கிராமத்தின் பெரிய பணக்காரர் முன்ஷி ராம்சேவக். கிராமத்தின் சிறுமுறையீடுகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் கோர்ட்டான  வெட்டவெளிப் பொட்டலில், ஒரு வேப்பமரத்தடியில் கிடந்த உடைந்த பெஞ்சில்தான் அவர் தினமும் உட்கார்ந்திருப்பார். எந்தக் கோர்ட்டிலும் அவர் வாதாடுவதையோ அல்லது பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்வதையோ யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் எல்லோரும் அவரை வக்கீல் என்று அழைத்தனர். எப்போது அவர் அந்தப் பஞ்சாயத்துப் பொட்டலுக்கு போனாலும் கிராமத்தினர் கூட்டமாக அவரைப் பின் தொடர்ந்தனர். அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். சரஸ்வதிதேவியின் முழுகடாட்சமமும் பெற்ற பேச்சாற்றல் கொண்டவர் என்று அவரைப் புகழ்ந்தனர். ஆனால் இவை எல்லாமே குடும்ப பாரம்பர்யம்பற்றி வெற்றுப்பெருமைபேச மட்டுமே உதவியது. அவருக்கென்று பெரிய வருமானம் ஒன்றும் வரவில்லை. அவரது வாழ்வாதாரமே கிராமத்தின் ஆதரவற்ற விதவைப்பெண்களும் மற்றும் விபரம்போதாத பணக்காரக் கிழவர்களும்தான். விதவைப்பெண்கள் அவர்களிடமிருந்த பணத்தை, பாதுகாப்புக்காக அவரிடம் கொடுத்துவைத்தனர்; கிழவர்களோ தங்களது உதவாக்கரை மகன்களுக்குப் பயந்து தங்களது சொத்துக்களை அவரிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால், அவரது கைக்குப் போன பணம் போனதுதான்; திரும்பி வரும் வழியை மறந்துவிடும்!

அதே கிராமத்தில் முங்கா என்ற பிராமண விதவைப்பெண் வாழ்ந்து வந்தாள். அவளது கணவன் இந்திய ராணுவத்தின் சுதேசிப்படைப் பிரிவில் சார்ஜன்ட்டாக இருந்து அங்கேயே போரில் இறந்துவிட்டான். அவனது சிறப்பான சேவைக்காக அரசாங்கம் வெகுமதியாக 500 ரூபாய் அளித்திருந்தது. விதவை என்பதாலேயே மிகுந்த கஷ்டத்திலிருந்த அந்த பாவப்பட்ட சீவன், தன்னிடமிருந்த முழுத்தொகையையும் ராம்சேவக்கிடம் ஒப்படைத்து விட்டு மாதாமாதம் மிகச்சிறிய தொகையை பிச்சைவாங்குவது போலப் பெற்று வயிற்றைக் கழுவி வந்தாள். முன்ஷிஜியும் தனது கடமையை பலவருஷங்கள் மிக நேர்மையாகவே செய்து வந்தார். ஆனால் முங்காவுக்கு நிறைய வயதாகிவிட்டாலும் சாவதற்கான அறிகுறியே இல்லாததைக் கண்ட அவர், அவளது ஈமக்கிரியைக்கான செலவில் பாதியைக்கூட மிச்சம் விட்டுவைக்க மாட்டாள் என்று உணர்ந்தார்.

ஒருநாள் அவளிடம், “நீ சாகப்போகிறாயா, இல்லை சாகவே மாட்டாயா? உனது ஈமக்கிரியை செலவை நீயே பார்த்துக் கொள்வதாக ஒப்புக்கொள்” என்று சொல்லவும், அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவரிடம் மீதமிருக்கும் முழுத்தொகையையும் தன்னிடம் திருப்பித் தந்துவிடும்படி சொன்னாள். முன்ஷியின் கணக்குப் புத்தகம் தயாராக இருந்தது. அதன்படி ஒரு பைசாக்கூட மீதம் இல்லை! உடனே அவள் முரட்டுத்தனமாக அவரது கையைப்பற்றி, “நீ எனது  250 ரூபாயை அபகரித்துவிட்டாய்; ஆனால் அதில் ஒருபைசாவைக்கூட நீ வைத்துக்கொள்ள நான் விடமாட்டேன்” என்று கத்தினாள். ஆனால் அந்த பாவப்பட்ட விதவையின் கோபத்தினால் பெரிய பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. அவளுக்கு எந்த நீதிமன்றத்திலும் யாரையும் தெரியாது; எழுதப்படிக்கவும் தெரியாது. அவளிடம் கணக்குவழக்கும் கிடையாது; இருந்தாலும் கிராமசபை பஞ்சாயத்தில் அவளுக்குக் கொஞ்சம் நம்பிக்கை நிச்சயமாக இருந்தது. பஞ்சாயத்தும் கூடியது; சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர். முன்ஷியும் அசத்தலான தோரணையுடன் தயாராக இருந்தார். அவர் எழுந்து நின்று சபையோரிடம் பேச ஆரம்பித்தார்: “நண்பர்களே! நீங்கள் எல்லோரும் உன்னதமானவர்கள். உண்மைக்கு உங்களை அர்ப்பணித்து விட்டவர்கள். உங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். உங்களது பெருந்தன்மைக்கும் கருணைக்கும், உங்கள் தொண்டுக்கும் அன்புக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த துரதிருஷ்டசாலியான கைம்பெண்ணின் பணத்தை நான் நிஜமாகவே எடுத்துக்கொண்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?”

சபையோர்கள் ஒருமித்த குரலில், “இல்லை, இல்லை! நீங்கள் அந்தமாதிரி ஒரு செயலை செய்திருக்க முடியாது” என்று கூறினர்.

முன்ஷிஜி, “அப்படி நான் அவளது பணத்தைத் திருடிவிட்டதாக நீங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால், ஆற்றிலோ குளத்திலோ மூழ்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் பணக்காரனுமில்லை. பெரிய பரோபகாரி என்று பெருமைபட்டுக்கொள்ளவும் என்னால் முடியாது.  ஏதோ என் பேனாவாலும் உங்கள் பேரன்பாலும் நான் ஏழையும் இல்லை. ஒரு விதவையின் பணத்தைத் திருடும் அளவுக்கா நான் கீழானவன்?” என்றார். சபையோர்கள் மீண்டும் ஒருமித்தனர். “இல்லை, இல்லை! அந்தமாதிரி ஒரு செயலை செய்திருக்க முடியாது”.

சபை அவரை விடுவித்துவிட்டது.

முங்கா ஒரு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டபடி, “இங்கே என் பணத்தைப் பெற என்னால் முடியவில்லை; இருக்கட்டும். இங்கே அது எனக்குக் கிடைக்காமல் இருக்கலாம்; ஆனால் மேலுலகில் அதைத் திரும்பப் பெறுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அங்கே முங்காவுக்கு உதவவோ அவளது சோகத்தைக் கேட்கவோ யாரும் இல்லை. வறுமை அளித்த துயரங்கள் அத்தனையையும் அவள் ஒருசேர சகித்துக்கொண்டாள். அவளுக்கு நல்ல உடல் வலிமை இருந்தது. அவள் நினைத்திருந்தால் அவளால் கடுமையாக உழைக்க முடிந்திருக்கும். ஆனால் அந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வந்த நாளிலிருந்து இனி வேலைக்குப் போவதில்லை என்று உறுதிகொண்டாள். தனது பணத்தைப் பற்றிய நினைப்பே இப்போது அவளை முழுதுமாக ஆட்கொண்டிருந்தது. பகலிலும் இரவிலும், நடக்கும்போதும் உட்காந்திருக்கும்போதும் அவள் மனதில் ஒரே எண்ண ஓட்டம் தான் ; அது முன்ஷி ராம்சேவக்கைத் திட்டித்தீர்ப்பது.

படிப்படியாக அவள் மனம் பேதலித்தது. தலையிலும் உடம்பிலும் ஒட்டுத் துணியில்லாமல் கையில் ஒரு சிறிய கத்தியுடன் ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் உட்கார்ந்திருப்பாள். அவளது குடிசைக்குப் போவதுமில்லை. ஆற்றோரத்தில், பிணங்களைத் தகனம் செய்யும் எரிமேடைப் பக்கமாக பரட்டைத்தலையுடனும், சிவந்த கண்களுடனும் மெலிந்த கை,கால்களுடனும் வெறித்த பார்வையோடு அவள் சுற்றித்திரிந்தாள். இந்தக்கோலத்தில் அவளைப் பார்த்தவர்கள் பயந்து நடுங்கினர். யாரும் வேடிக்கைக்காகக்கூட அவளைக் கிண்டல் செய்யவில்லை. எப்போது அவள் கிராமத்துக்குள் வந்தாலும் பெண்கள் தங்கள் வீடுகளின் கதவுகளை மூடிக்கொண்டனர். ஆண்களும் நழுவி ஒதுங்கிக்கொண்டனர். குழந்தைகள் அலறி ஓடினர். ஆனால் ஒரே ஒரு குழந்தை மட்டும் பயந்து ஓடுவதில்லை – அது முன்ஷிஜியின் மகனான ராம்குலம். கிராமத்தின் மாறுகண்காரர்கள் மற்றும் ஊனமுற்ற மனிதர்கள் அவனை மிகவும் வெறுத்தொதுக்கினர். பரிதாபமாக குழம்பித்தவிக்கும் முங்காவை அவன், கிராமத்து நாய்களைவிட்டு துரத்தவிட்டு, முங்கா குடியிருப்புப்பகுதியை விட்டு வெளியேறும்வரை கைகளைத்தட்டிக்கொண்டு விரட்டிச் செல்வான்.

தன் பணத்தோடு புத்திசுவாதீனத்தையும் சேர்த்து இழந்த முங்கா உள்ளூரில் பைத்தியம் என்ற பட்டத்தைப் பெற்றாள். தனிமையில் அமர்ந்து ராம்சேவக்கைத் தாக்கி அழிக்கும் தனது அடங்காத ஆசையை வெளியிட்டபடி மணிக்கணக்கில் தனக்குள் பேசிக்கொள்வாள். அவளது வெறுப்பு உச்சக்கட்டம் அடையும்போது, தனது முகத்தை ராம்சேவக்கின் வீடு இருக்கும் பக்கமாத் திருப்பி, ஆக்ரோஷத்துடன், “உன் ரத்தத்தைக் குடிப்பேன்டா” என்று பயங்கரமாகக் கூச்சலிடுவாள்

முன்ஷிஜி ஒரு தைரியமான உறுதியான மனிதர்தான். ஆனாலும் முங்காவின் அந்த கொடூரமான வார்த்தைகளைக் கேட்டதும் பயந்துவிட்டார். மனிதர்கள் வழங்கும் தீர்ப்புக்கு வேண்டுமானால் நாம் அச்சப்படாமலிருக்கலாம், ஆனால் கடவுள் வழங்கும் தீர்ப்புக்கான அச்சம் மனிதர்களின் மனதில் எப்போதும் இருக்கும். முங்காவின் இரவுநேர நடமாட்டங்களால் ஈர்க்கப்பட்ட அந்த மாதிரியான பயம், சிலசமயங்களின் அவர் மனதிலும் பிரதிபலித்தது. அவர் மனைவி நாகினின் மனதில் இன்னும் அதிகமாகவே பிரதிபலித்தது. நாகின் மிகவும் புத்திசாலியான பெண்மணிதான். அவள் அடிக்கடி அவரது தொழில் நடவடிக்கைகளில் ஆலோசனை கூறுவாள். அவளது பேச்சு அவரது எழுத்துபோலவே ஜொலிக்கும். ஒருநாள் நடுராத்திரியில் முன்ஷிஜி தூங்கியபிறகு முங்கா திடீரென்று அவரது வீட்டுவாசலில் நின்று கூச்சலிட்டு, உன் ரத்தத்தைக் குடிக்கப் போறேன்டா என்று கத்தினாள். அவளது கொடூரச்சிரிப்பைக் கேட்ட அவர் அதிர்ச்சியில் துணுக்குற்றார். கால்கள் பயத்தால் நடுங்கின. இதயம் படபடத்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவைத் திறந்தார்; நாகினையும் எழுப்பினார்  இருவரும் சத்தமில்லாமல் வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தனர். முங்காவின் மங்கலான உருவம் தரையில் கிடந்தது. அவள் மூச்சிரைப்பதும் அவர்களுக்குக் கேட்டது, இப்படியே இரவும் கடந்துவிட்டது. வாசற்கதவை மூடிவிட்டாலும் ராம்சேவக்கும் நாகினும் மணிக்கணக்கில் உட்கார்ந்தே இருந்தனர். முங்கா வீட்டுக்குள் வரமுடியாது, ஆனாலும் அவளது குரலை யார் தடுத்து நிறுத்தமுடியும்? முங்காவின்  குரல்தான் அவள் குணாதிசயங்களிலேயே மிகவும் கொடூரமானது.

முங்கா முன்ஷிஜியின் வீட்டுவாசலில் கிடக்கும் செய்தி கிராமம் முழுதும் பரவியது. கிராமத்தினர் முன்ஷிஜி அவமானப்பட்டதையும் மதிப்பிழந்ததையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். எல்லோரும் ஒரே நேரத்தில் குழுமினர். சிறுவன் ராம்குலம் இந்தக் கூட்டத்தை விரும்பவில்லை; அவனுக்கிருந்த கோபத்தில் அவனுக்கு சக்தி இருந்தால் முங்காவைக் கிணற்றில் தூக்கிவீசி இருப்பான். ஒரு வாளியில் மாட்டுச்சாணத்தைக் கொண்டுவந்து பாவப்பட்ட முங்காமீது கொட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீதும் கொஞ்சம் சாணம் தெரித்தது. முங்கா முற்றிலும் சாணத்தால் மூடப்பட்டாள். வேடிக்கை பார்த்தவர்கள் சட்டென்று பின்வாங்கி, முன்ஷி ராம்குலத்தின் வாசலில்தான் இப்படியான நல்ல நிகழ்ச்சிகளைக் காணமுடியும் என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

முன்ஷிஜி தன் மகனின் புத்திசாலித்தனதையும், ஒன்றுக்கும் உதவாத கூட்டத்தை இப்படி நயதந்திரமாக விரட்டியதையும் வெகுவாகப் பாராட்டினார். ஒருவழியாக கூட்டம் முழுமையும் கலைந்து சென்றுவிட்டது. ஆனால் முங்கா இன்னும்  அப்படியே கிடந்தாள். அன்று இரவு அவள் முழுவதும் அன்னம் தண்ணீரின்றிக் கிடந்தாள். முன்ஷிஜியும் நாகினும் முன்னிரவுபோலவே மீண்டும் தூங்காமல் விடியும்வரை விழித்திருந்தனர். இன்று முங்காவின் கூச்சலும் சிரிப்பும் முன்பைவிடக் குறைவான தடவைகளே கேட்டதால், வீட்டிலிருந்தவர்கள் தொல்லைவிட்டது என்றுதான் நினைத்தனர். விடிந்தவுடன் முன்ஷிஜி கதவைத் திறந்ததும் முங்கா அசைவில்லாமல் கிடந்ததைப் பார்த்தார். அப்போது அந்த கிராமம் கண்ட பரபரப்பையும் ராம்சேவக்கிற்கு ஏற்பட்ட அவமானத்தையும் வார்த்தையால் விவரிக்க முடியாது. அவர் சேர்த்துவைத்திருந்த கௌரவம் எல்லாம் நொடியில் மறைந்துவிட்டது. ஆம், முங்கா அவரது வீட்டு வாசலில் உயிரை விட்டிருந்தாள்.  உயிரோடு இருக்கும் போது அவளால் பெரிதாக ஒன்றும் சாதிக்கமுடியாது என்பதையும் செத்தபின் தன்னால் சாதிக்கமுடியும் என்பதையும் அவள் அறிந்தேயிருந்தாள்.

முன்ஷி சட்டம் நன்கறிந்தவர். சட்டப்படி அவர் குற்றமற்றவர். அவர்மீது சட்டநடிவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய வகையில் முங்கா சாகவில்லை. இந்தமாதிரி உதாரணங்களை இந்திய தண்டனைச் சட்டத்திலுங்கூட  காணமுடியாது. முன்ஷியும் அவர் மனைவியும் தங்களுக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டுதான் தங்களைத் தேற்றிக்கொண்டனர். ஆனால் மாலை வந்தவுடன் அவர்களின் பகுத்தறிவுச் சமாதானங்கள் நீர்த்துப் போக ஆரம்பித்தன. இரவு வந்ததும் பயமும் பற்றிக்கொண்டது. நேரம் ஆக ஆக இந்தப்பயம் கூடிக்கொண்டே போனது. வீட்டின் முன்கதவை அவர்கள் மூடமறந்துவிட்டபடியால் அது திறந்தே கிடந்தது. எழுந்து சென்று அதை மூடுவதற்கான தைரியம்கூட அவர்களில் யாருக்கும் இல்லை. கடைசியில் நாகின் ஒரு விளக்கை எடுத்துக்கொள்ள, முன்ஷி ஒரு கோடரியையும், ராம்குலம் அரிவாளையும் எடுத்துக்கொண்டு, மூவரும் ஒன்றாக நடுங்கிக்கொண்டும் பதுங்கிக்கொண்டும் கதவருகே சென்றனர். கதவை மூடியபிறகு மூவரும் சமையலறைக்குச் சென்று ஏதோ சமைக்கத் தொடங்கினர்

ஆனாலும் முங்கா அவர்களது உணர்வுகளுக்குள் முழுதாய் நிறைந்திருந்தாள். அவர்கள் தங்களது நிழலைப் பார்த்தால்கூட நிச்சயமாய் அது முங்காதான் என்று பயந்து தாவிக் குதித்தனர். ஒவ்வொரு இருட்டு மூலையிலும் அவள் உட்கார்ந்திருப்பதாய் அவர்களுக்குத் தோன்றியது. சமையலறையில் மாவு, பருப்பு போன்றவற்றை வைத்திருக்கவேண்டி பெரியபெரிய மண்பாண்டங்கள் இருந்தன. அங்கங்கே சில பழைய பிடிதுணிகளும் இறைந்துகிடந்தன. அப்போது பசியெடுத்த சுண்டெலி ஒன்று இரைதேடி அந்தப்பக்கமாய் துணிகளுக்கிடையே ஊர்ந்துவரவே, சரசரவென்று சத்தம் கேட்க, அங்கே பரப்பிக்கிடந்த துணிகளும் முங்காவில் ஒல்லியான கால்கள் மாதிரியே தெரிய, அதைக்கண்ட நாகின் பயத்தில் குதித்து அலறி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள். என்ன நடந்ததென்று அறியாத முன்ஷி கதவை நோக்கிப் பாய, திடீரென்று ஓட ஆரம்பித்த ராம்குலம் தன் தந்தையின் கால்களுக்கிடையில் சிக்கிக்கொண்டான். அப்போது சுண்டெலி வெளிப்பட, அதைக் கண்டபின்னரே அவர்கள் இந்தக் களேபரத்தில் இருந்து மீண்டனர்.

சாப்பிட்டு முடித்துவிட்டு மூவரும் படுக்கையறைக்கு வந்தனர். ஆனால் அங்கும் அவர்களை முங்கா நிம்மதியாய் இருக்க விடவில்லை. அவர்கள் பேசிக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தனர். என்னதான் அவர்கள் மறக்கமுனைந்தாலும் அவர்களின் மனத்திரையை விட்டு முங்கா அகலவில்லை. ஒரு சிறிய அதிர்வுகூட அவர்களைத் திடுக்கிடவைத்தது. இலைகளின் சலசலப்புகளைக் கேட்டாலும் அவர்களின் ரோமக்கால்கள் குத்திட்டு நின்றன.

நாகின் தூங்கிக்கொண்டிருக்குப்போது, முங்கா சிவந்த கண்களோடும், கூரியபற்களோடும், தனது மார்பில் அமர்ந்துகொண்டு அரற்றியதுபோலத் தோன்றியதால், அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நாகின் பெருங்குரலுடன் அலறிக்கொண்டு, முற்றத்தை நோக்கி பைத்தியக்காரி போல ஓடினாள். பிறகு சடாரென சுயநினைவை இழந்து தரையில் விழுந்தாள். வியர்வை தெப்பலாக நனைத்துவிட்டிருந்தது. அவளது அலறலைக் கேட்டு முன்ஷி விழித்துக்கொண்டாலும் அச்சத்தில் கண்களைத் திறக்கவில்லை. குருடனைப் போல் தட்டுத்தடுமாறி, தடவிக்கொண்டே சென்று, நீண்டநேரத்திற்குப் பிறகு கதவைக் கண்டுபிடித்தார். பிறகு ஒருவழியாக அவர் முற்றத்தை அடைந்தார். அங்கே நாகின் தரையில் விழுந்து கிடந்தாள். முங்காவின் பயம் அவளைக் கொன்றுவிட்டிருந்தது. உயிரோடிருக்கும்போது முங்கா, நாகினின் சீற்றத்துக்கு எப்போதும் பயந்துகொண்டிருந்தாள். தன் உயிரைத் துறந்தபிறகு, நாகினின் சீற்றத்தை எதிர்கொள்ள இப்போது அவளால் முடிந்தது!

நாகினின் கதையை முடித்துவிட்டாலும், முங்கா முன்ஷிஜியை வெறுமனே விட்டுவிடப் போவதில்லை. ஓவ்வொரு கணமும் அவளது உருவம் அவரது கண்முன்னே தெரிந்துகொண்டுதான் இருந்தது. அவர் எங்கே இருந்தாலும் அவரது நினைவு மட்டும் அவளைச் சுற்றியே எப்போதும் வட்டமிட்டது. தனியறைச்சிறையில் அகப்பட்டதைப் போல எப்படியோ பத்துப் பன்னிரென்டு நாட்களைக் கழித்துவிட்டார். இரண்டு வாரங்களுக்குத் துக்கம் அனுசரித்தபின், ஒருநாள் தன் உடைகளை மாற்றிக்கொண்டு, தான் உட்காரும் பாய் மற்றும் தோளில் மாட்டும் பெட்டியுடன் பஞ்சாயத்துப் பொட்டலுக்குச் சென்றார்.

அவரது தோற்றம் கொஞ்சம் பிரகாசமாகத் தெரிகிறது. அன்றைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் அவரை மொய்க்கப்போகிறார்கள்; நிறைய துக்கவிசாரிப்பெல்லாம் நடக்கும். தாம் சிறிது கண்ணீர் சிந்தவேண்டிக்கூட வரலாம் என்றெல்லாம் நிறைய எதிர்பார்ப்புடன் சென்றார். தொழிலிலும் அன்று முன்கூட்டி மீட்கப்படும் கடன்களும், புதிய அடமானங்களும், ஒப்பந்தப்பத்திரங்களும் மிகுதியாக வரும்; நாம் பணத்தில் கொழிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டார். இதே எண்ணங்களுடனேயே அவர் பொட்டலை அடைந்தார்.

ஆனால் அங்கே நடந்ததோ வேறு; மிகுதியான அடமானங்கள், முன்கூட்டிய கடனடைப்புக்கள், வாடிக்கையாளர்களின் சந்தோஷமான வாழ்த்துக்கள், இவைகளுக்குப் பதிலாக மோசமான ஏமாற்றத்தைத்தான் அவர் எதிர்கொண்டார். தனது பெட்டியைத் திறந்துவைத்துக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருந்தும் யாரும் அவர் அருகில் வரவில்லை; ஒருவரும் அவர் இத்தனை நாள் எப்படி இருந்தார் என்று விசாரிக்கக்கூட முன்வரவில்லை. புது வாடிக்கையாளர்கள்தான் வரவில்லையென்றால், காலங்காலமாக முன்ஷிஜி குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த பழைய வாடிக்கையாளர்கள் கூட தங்கள் முகங்களை அவரிடம் இருந்து மறைத்துக்கொண்டனர். முழுநாளையும் இவ்வாறு பொட்டலில் வீணாய்க் கழித்தபின் வீட்டுக்குச் சென்று, கவலையிலும் ஏமாற்றத்திலும் மூழ்கினார். வீட்டுக்கு அருகில் வந்தவுடன் முங்காவின் உருவம் அவர் முன்னே தோன்றியது. கதவைத் திறந்தவுடன் ராம்குலம் அடைத்துவைத்திருந்த இரண்டு நாய்கள் பாய்ந்தோடி வெளியேற, மிகுதியான பயத்தால் தன்னுணர்வை முற்றிலும் இழந்த அவர் ஓலமிட்டு அலறி, சுயநினைவற்றுத் தரையில் சரிந்து விழுந்தார்.

இதற்குப் பிறகு முன்ஷிஜிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பல நாட்களாக அவர் பொட்டலுக்குச் செல்வதையும் வாட்டத்துடன்ன் திரும்பி வருவதையும் பலரும் பார்த்தனர். பிற்பாடு அவர் பத்ரிநாத் கோவிலுக்குப் புறப்பட்ட பிறகு பலமாதங்களுக்கு அவர் யார் கண்ணிலும் தென்படவில்லை.  ஒருநாள் அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையுடனும், நீண்ட சிக்குப்பிடித்த சடைமுடியுடனும் இருந்த அவர் கையில் ஒரு தண்ணீர் வைத்துக்கொள்ளும் மண்கலயம் இருந்தது. அவரது முகவெட்டு ஏறக்குறைய ராம்சேவக்கை ஒத்திருந்தது. அவரது பேச்சும்கூட ராம்சேவக்கிடம் இருந்து அத்தனைக்கு மாறுபடவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். அன்று இரவில் ராம்சேவக்கின் வீட்டில் இருந்து புகை கிளம்பியது; பிறகு நெருப்பின் ஒளிர்வும் தென்பட்டது;; அதன்பின் தீ பற்றிக்கொண்டு கொளுந்துவிட்டு எரிந்தது.

முன்ஷிஜி காணாமல் போனவுடன், ராம்குலம் தனது உறவினர் வீட்டுக்குச் சென்று, அவர் வீட்டில் சிறிதுகாலம் காலந்தள்ளினாலும், அவனது குணங்களுக்கு யாரும் ஒத்துப்போக முடியவில்லை. ஒருநாள் இன்னொருவரின் முள்ளங்கிகளைத் தோண்டியெடுக்க, தோட்டத்தின் உரிமைக்காரர் அவனைப்பிடித்து அறைந்துதள்ளிவிட்டார். இது அவனது கோபத்தைக்கிளறவே, அவரது களஞ்சியத்துக்குச் சென்று அதற்குத் தீவைத்துவிட்டான். களஞ்சியம் முற்றிலும் எரிந்து, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொருள்கள் சாம்பலாகிவிட்டன. போலிஸ் வந்து விசாரித்து ராம்குலம் கைது செய்யப்பட்டான். இந்தக் குற்றத்துக்காக, இப்போது அவர் சுனாரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் இருக்கிறான்.
***
நன்றி : நண்பர் மஜீத் |  amjeed6167@yahoo.com
***
தொடர்புடைய ஒரு பதிவு :
Sadgati (The Deliverance) - Hindi film, primarily made for TV, by Satyajit Ray, based on a short story of same name by Munshi Premchand.

Sunday, November 3, 2013

நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....! - -'துக்ளக்' சத்யாImage Courrtesy : outlookindia
***
நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....!

சத்யா

// நிரா ராடியாவின் டெலிஃபோன் உரையாடல்களில் உள்ள முக்கியமான ஆறு பயங்கர அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என ஸி.பி.ஐ.-க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த ஆறு பயங்கரங்கள் எவை என்று விவரமாக வெளியிடப்படாததால், என்னவோ ஏதோ என்ற கவலையில் ஆழ்ந்தோம். ஆய்வு செய்வதற்கு முன்பாக, அந்த பயங்கரங்கள் குறித்து ஸி.பி.ஐ. நிரா ராடியாவிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தினால் அது இப்படிதான் இருக்குமோ? //

ஸி.பி.ஐ. அதிகாரி :
உங்க டெலிஃபோன் உரையாடல்களிலே இருக்கிற பயங்கரங்களைக் கேட்டு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி அடைந்திருக்குது. அதைப் பத்தி ஆய்வு செய்யணும்னு உத்தரவு போட்டிருக்குது. மொதல்லே உங்களை விசாரிச்சுட்டா ஆய்வைத் தொடர வசதியா இருக்கும்.

நிரா ராடியா :
என்னுடைய 180 நாள் பேச்சைத்தான் வருமான வரித்துறை பதிவு செஞ்சுது. இதுக்கே இவ்வளவு பயங்கரமான்னு குதிக்கிறவங்க, மொத்த பேச்சையும் கேட்டா என்ன சொல்வாங்களோ? உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன? சின்ன
பயங்கரமாயிருந்தாதான் நான் டெலிஃபோன்ல பேசுவேன். பெரிய விசயம்னா, நேராத்தான் பேசுவேன். அது எங்க இண்டஸ்ட்ரியல் பாலிஸி.

ஸி.பி.ஐ. :
நல்லவேளை, உங்க டெலிஃபோன் பேச்சை மட்டும்தான் ஆய்வு பண்றோம். 'அரசு உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறதுக்கே பல கோடி செலவாகிவிடுது.'ன்னு உங்க தோழிகிட்டே சொல்லியிருக்கீங்க.......

நிரா :
இதுலே என்ன பயங்கரம் இருக்குது? அவங்க செய்யற வேலைக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது எங்க கடமை இல்லையா? 'இதுலே சலுகை காட்டுங்க, அதுலே வரியை ரத்து பண்ணுங்க, அந்த வேலையை எங்க நிறுவனத்துக்குக்
கொடுங்க'ன்னு உரிமையா கேக்கிறோம். சொன்னபடி செய்யுறாங்க. அந்த வேலைக்கு சம்பளம் கொடுக்கிறது தப்பா?

ஸி.பி.ஐ. :
அரசு உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் உங்க கிட்டே எப்படி சம்பளம் வாங்கலாம்?

நிரா :
எங்க கிட்டே மட்டுமல்லே, பல தொழிலதிபர்கள் கிட்டேயும் சம்பளம் வாங்கறாங்க. அவங்களை எல்லாம் விசாரிச்சீங்களா? மாட்டிக்கிட்டேன்னு தானே கேள்வி மேலே கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தறீங்க?

ஸி.பி.ஐ. :
சரி, அவுங்க பெயர் பட்டியலைக் கொடுங்க. சுப்ரீம் கோர்ட் ரொம்ப தொந்தரவு பண்ணா, கேஸ் போட உபயோகமா இருக்கும்.

நிரா :
லிஸ்ட் எல்லாம் கொடுக்க முடியாது. பேரை வெளியே சொல்றதில்லைன்னு அக்ரிமெண்ட் போட்டிருக்கோம். இதுவும் ஸ்விஸ் பேங் கறுப்புப் பண ஒப்பந்தம் மாதிரிதான். உயிரே போனாலும் எந்தத் தகவலும் வெளியே வராது. அப்படியொரு தொழில் கூட்டணி தர்மம்.

ஸி.பி.ஐ. :
'சீனாவும் பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதியிலே ஊடுருவ ஆசைப்படுது. அவர்களை இந்தியா தடுக்கக் கூடாது'ன்னு நீங்க ஒரு மத்திய மந்திரி கிட்டே பேசியிருக்கீங்க. அவரும் 'உரிய நடவடிக்கை எடுக்கிறோம்'னு உறுதி
அளிச்சிருக்காரு.

நிரா :
ஆமா, சீனாவிலேயும் பாகிஸ்தானிலேயும் கூட எங்க வியாபாரம் நடக்குது இல்லே? அதுலே லாஸ் வந்தா நீங்கள் ஏத்துப்பீங்களா? இதெல்லாம் பிஸ்னஸ், நீங்க தலையிடாதீங்க. உங்களுக்குத் தெரியாது.

ஸி.பி.ஐ. :
நீங்க சொன்னா மந்திரிகள் எப்படிகேக்கறாங்க?

நிரா :
என்ன கேள்வி கேக்கறீங்க? பிரதமரே கேக்கும்போது மந்திரிகள் கேட்க்க மாட்டாங்களா?

ஸி.பி.ஐ. :
ஆ...! பிரதமரும் கேட்பாரா?

நிரா :
நீங்களும் சுப்ரீம் கோர்ட் மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் ஷாக் ஆகறீங்களே? நான் சொன்னபடி கேக்கலைன்னா, பிரதமர் பத்தி ஒபாமா கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் இல்லே? அந்த பயம் அவருக்கு இருக்காதா?

ஸி.பி.ஐ. :
புரியலை; பிரதமருக்கு நீங்கதான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கறீங்களா?

நிரா :
எல்லாத்தையும் சொல்லித் தரமாட்டேன். பிஸினஸ் மட்டும்தான். உதாரணத்துக்கு, எந்தெந்த நிலக்கரிச் சுரங்கங்களை எந்தெந்த நிறுவனத்துக்கு ஒதுக்கணும்னு அவருக்கு என்ன தெரியும், பாவம்? நான்தானே சொல்லணும்! கோடிக் கணக்கிலே பணம்புரள்ற விசயமாச்சே! கொஞ்சம் ஏமாந்தாக் கூட அநியாயத்துக்கு கவர்மெண்டுக்கு லாபமாயிடுமே.

ஸி.பி.ஐ. :
நிலக்கரிச் சுரங்கங்களை விதி முறைப்படிதானே ஒதுக்கணும்?

நிரா :
கண்டிப்பா, நாம யாருக்கு ஒதுக்கீடு பண்றோமோ, அதுக்குத் தகுந்த மாதிரி நிலக்கரித் துறை அதிகாரிகள் விதிமுறைகளைத் திருத்திடுவாங்க.

ஸி.பி.ஐ. :
தீவிரவாதி ஜெயில்லேர்ந்தும், கோர்ட்லேர்ந்தும் தப்பிக்கப் போற விஷயத்தைக் கூட ஒரு ஜர்னலிஸ்ட்கிட்டே பேசியிருக்கீங்க.

நிரா :
இந்திய முஜாஹ்தீன் தீவிரவாதி தப்பிச்சதைப் பத்தி கேக்கறீங்களான்னு புரியலை. பொதுவா தப்பிக்கிற தேதி, டைம் மட்டும்தான் எங்க லெவல்லே முடிவு பண்ணுவோம். மத்த விஷயங்களை நீங்க ஆஃப்கானிஸ்தானுக்கு ஃபோன் பண்ணிதான் கேக்கணும். லைன் போட்டுத் தரட்டுமா

ஸி.பி.ஐ. :
ஐயையோ வேண்டாம்.

நிரா :
ஒரு தடவை என்ன ஆச்சு தெரியுமா? காஷ்மீரைத் தாக்கறதா, கல்கத்தாவைத் தாக்கறதான்னு தீவிரவாதிகளுக்குள்ளே சண்டை. நான்தான் தலையிட்டு, இந்த மாசம் காஷ்மீர், அடுத்த மாசம் கல்கத்தான்னு சமரசம் பண்ணிவெச்சேன். இதுக்காக பிரதமர் கூட எனக்கு தேங்ஸ் சொன்னாரு.

ஸி.பி.ஐ. :
என்னது? பிரதமர் தேங்ஸ் சொன்னாரா?

நிரா :
ஆமா. விஷயம் தெரிஞ்சுட்டு, அதுக்கேத்த மாதிரி பிரதமர் வெளிநாடு போயிட முடியுது இல்லே? அதை விடுங்க. சட்டீஸ்கர்லே கூட கலெக்டரைக் கடத்தறதா, கமிஷனரைக் கடத்தறதான்ற மாதிரி சமயங்களிலே தீவிரவாதிகளுக்கு நான்தான் கன்ஸல்டண்டா இருக்கேன். கோரிக்கை நிறைவேறினதும், அவங்களை விடுவிக்கறதுக்கும் ஏற்பாடு பண்றேன். அதனாலே ரெண்டு பக்கமும் என் பேர்லே மரியாதை உண்டு.

ஸி.பி.ஐ. :
சரி. பயமாயிருக்குது. தீவிரவாத விஷயத்தை விடுங்க. நிர்வாக ரீதியான நல்ல பயங்கரங்களைப் பத்திப் பேசலாம். 'எக்கச்சக்கமா சொத்து சேர்ந்து போச்சு, பணத்தை எப்படிக் காப்பாத்தறதுன்னே புரியலை, சொத்து கணக்கு வேறே கேக்கிறாங்க'ன்னு ஒரு மத்திய மந்திரி ஃபோன்லே அழுது புலம்பியிருக்காரு. நான் எப்படியாவது ஹெல்ப் பண்றேன்னு நீங்க அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கீங்க.

நிரா :
எல்லா மந்திரிகளுக்கும் இந்த மாதிரி பிரச்னை ஏற்படறது சகஜம்தான். வருமான வரிச் சட்டத்திலேர்ந்து அமைச்சர்களுக்கு விலக்கு வழங்கற அவசர சட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு பண்றேன்னு உறுதி அளிச்சேன். சுப்ரீம் கோர்ட் கவனிக்கிறதாலே கொஞ்சம் டிலே ஆகுது. மத்திய அமைச்சர்கள் ரகசியக் கூட்டத்திலேயும் இந்த சப்ஜெக்ட் வருது.

ஸி.பி.ஐ. :
அமைச்சர்கள் கூட்டத்திலே கூட நீங்க கலந்துக்குவீங்களா?

நிரா :
ஊஹும். அங்கே எதைப் பத்தி விவாதிக்கணும்னு அஜெண்டா தயார் பண்ணிக் குடுக்கறதோட என் வேலை முடிஞ்சுடும்.

ஸி.பி.ஐ. :
மந்திரி சபை கூட்ட அஜெண்டாவை நீங்க தயார் பண்றீங்களா?

நிரா :
எல்லா கூட்டத்துக்கும் நான் தயார் பண்ண மாட்டேன். முக்கியமான கூட்டத்துக்கு மட்டும்தான் 'மத்திய அரசு - தொழிலதிபர்கள் ஒப்பந்த’ப்படி அரசு நடக்கலைனா, அதை சரி செய்ய வேண்டியது என் வேலையாச்சே!

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே ஒரு தடவை ஸி.பி.ஐ. அதிகாரிகள் கிட்டே நீங்க கோபமா பேசினது கூட பதிவாயிருக்குது. இதோ... பேச்சைக் கேளுங்க....

நிரா :
ஓ...... இதைச் சொல்றீங்களா? மத்திய அமைச்சர்களும் அவங்களுக்கு வேண்டிய அதிகாரிகளும் வழக்குலே மாட்டும் போது, ஸி.பி.ஐ. சார்பா அவங்க மேலே எஃப்.ஐ.ஆர். போடறது சட்ட அமைச்சரோட வேலை. ஒரு தடவை சட்ட அமைச்சர் வெளிநாடு போயிருந்தப்போ, ஸி.பி.ஐ.யே எஃப்.ஐ.ஆர். போட்டுடுச்சு. அதான் 'சட்ட மந்திரி இல்லைன்னா என்ன? என் கிட்டே கேட்டிருந்தா நானே எஃப்.ஐ.ஆர். போட்டிருப்பேன் இல்லே? உங்களுக்கு என்ன அதிகாரம்?'ன்னு நல்லா கேட்டேன். அதான் இது.

ஸி.பி.ஐ. :
எஃப்.ஐ.ஆர். நீங்க எப்படிப் போடலாம்?

நிரா :
ஏன்? நான் என்ன புதுசாவா எஃப்.ஐ.ஆர். போடுறேன்? நம்ம ஆளுங்க, வழக்குலேர்ந்து நல்லபடியா தப்பிச்சு வர வேண்டாமா? ஏதாவது பிரச்சனை ஏற்பட்டா, எங்க பாஸ் என்னைத்தானே கேப்பார்?

ஸி.பி.ஐ:
கிரிமினல் எம்.பி.க்கள் பிரதமரை கேரோ பண்ண திட்டம் போட்டிருக்கிறதாக நீங்களும் ஒரு பெண் நிருபரும் பேசியிருக்கீங்க....

நிரா :
ஐயோ... அது பயங்கர ஜோக்! சீனியர் கிரிமினல் எம்.பி.க்கள் மேலே பல வழக்குகள் இன்னும் வாபஸ் ஆகாம இருக்குது. அதை எல்லாம் வாபஸ் வாங்க உடனே நடவடிக்கை எடுக்கணும்னு பிரதமரை ஹவுஸ் அரெஸ்ட் செய்ய திட்டம் போட்ட தகவல் எனக்கு கிடைச்சது. பிரதமரை எப்படியாவது காப்பாத்திட்டா, நமக்கு பெரிய அஸைன்மெண்ட் கிடைக்கும்னு எங்க பாஸ் என்கிட்டே சொன்னார். உடனே நான் கிரிமினல் எம்.பி.க்களோட ஃபோன்லே பேசி, வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா ஃபைல்ஸும் கூடிய சீக்கிரம் காணாமப் போகும்னு உறுதி அளிச்சேன். அப்புறம்தான் பிரச்னை முடிஞ்சது.

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே நீங்க நல்ல விஷயமே பேசினது இல்லையா?

நிரா :
எப்பவாவது அப்படி பேச்சு வரும். உடனே 'ராங் நம்பர்'னு வெச்சுடுவேன்.

***

நன்றி: துக்ளக் (30.10.2013) , சத்யா, 
தட்டச்சு உதவி : தாஜ்

Friday, November 1, 2013

நானும், குலாம் ஃப்ரீத் மக்பூல் சாப்ரியும் - சடையன் அமானுல்லா

ஜெதபு என்ற தலைப்பில் ஆபிதீன் நானா குலாம் ஃபரீத் மக்பூல் சாப்ரியின் ஒரு கவ்வால் பாடலை ( எல்லோரையும் போல கவ்வாலி என எழுத பிடிக்கவில்லை, தமிழில் காவாலி என்றால் கெட்ட சகவாசம் உள்ளவன் எனும் அர்த்தமாம்) ப்ளஸ் ல் இட்டிருந்தார்கள்

எனக்கு சாப்ரி பிரதர்ஸ் பரிச்சயமானது 1974 ல், ஊரிலே ஒருமுறை ட்ரான்சிஸ்டர் ரேடியோ வை உருட்டிக் கொண்டிருந்த போது, சாப்ரியின் பாடல் சிற்றலையில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சாப்ரி சகோதரர்களின் குரலே ஆடறுக்க கத்தியை தீட்டும் போது கரகர வென சத்தம் வருமே அதுபோல கரகர குரல், அதுவும் சிற்றலையின் கர கரப்பும் சாப்ரியின் கர கரப்பும் சேர்ந்து, ஒரே கறகற இருந்தாலும் பாடலின் இனிமையில் ஈர்க்கப்ப்ட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். சிற்றலையில் வந்தது குவைத் வானொலி. சொல்லி வைத்தது போல தினமும் இந்திய நேரப்படி 9.30 மணிக்கு சாப்ரி கவ்வால் வந்து கொண்டிருந்தது. அன்றிலிருந்து சாப்ரி யின் பரம ரசிகனாகி விட்டேன்.

அந்தக்காலம் முதுகலை முடித்து விட்டு ஊரில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். முதுகலை படித்துக் கொண்டிருந்த போது என் மாமி , “ எம் மருமொவன் எம்.ஏ படிக்கிறாரு, படிச்சு முடிச்சுட்டா வீட்டு வாசலுக்கு ஜீப் வரும் வேலை கொடுக்க “ என்பார்கள். ஒரு சைக்கிள் கூட வரவில்லை என்பது வேறே விஷயம். கடைசியில் எல்லோரும் போல நானும் துபாய் எனும் பாலைவன ஜோதியில் (1976) ஐக்கியமாகி விட்டேன்.

துபாயில் வேலையில்லாத “ கொமரு” ஆக ஒரு 3 மாதம் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், காலையில் டிபன் சாப்பிட்ட பிறகு காதர் ஹோட்டல் பக்கம் வந்து விடுவேன். அல் மாலிக் நியூஸ் ஏஜன்சியில் நின்று கொண்டே குமுதம் ஆனந்த விகடன் வார இதழ் , அடுத்து தந்தி தினமணி படித்து விடுவேன். அல் மாலிக்கில் தாடி வைத்த பாகிஸ்தானி ஒருவன் ஜாவ், ஜாவ் என்பான் , காதிலேயே வாங்கிக் கொள்ளமல் படித்து விட்டுதான் கிளம்புவேன். அடுத்த படையெடுப்பு, அல் மாலிக்கை சுற்றியுள்ள கேசட் கடைகள் அங்கே சாப்ரி பிரதர்சின் பாடல்களை பெரிய ஸ்பீக்கர் வைத்து ஏதோ தேவர் ஜெயந்தி விழாவில் ஒலிபரப்புவது போல ஒலிபரப்புவான். சாப்ரி பாடல்களை கேட்கும் போதே ஒரு ஜதபு,இஷ்க் ஏற்படும். அப்புறம் வேலை கிடைத்து  சம்பளம் வாங்கிய போது ஒரு நேசனல் தாமரைப்பூ கேசட் பிளேயர் வாங்கி சாப்ரி பிரதர்ஸ் பாடல்கள் எல்லாம் சலிக்க சலிக்க கேட்டேன். ஊருக்கு ஸஃபர் செய்யும் காலங்களில் இந்தக் கேசட்டை வாங்கிவந்து ஊரிலும் கேட்பேன். சாப்ரி பிரதர்சின் பாடல்கள் என் அம்மாவிற்கும் பிடித்துப் போய்விட்டது. அசர் தொழுகைக்குப் பின் " தம்பி அந்த அல்லா பாட்டை போடேன்" எனச் சொல்லும் அளவிற்கு ரசிகையாகி விட்டார்கள். என் மாமி வந்தால் "நாகூர் தர்காவில் இருப்பது போல இரிக்கி அந்த பீர்சா பாட்டை போடு" என்பார்கள்.

1985 களில் PTV 1 , PTV 2  சேனல்களில் ஜுமேராத் (வியாழன் மாலை) சாப்ரி பிரதர்சின் கவ்வால் பாடல்கள் ஒலிபரப்பாகும். நல்ல சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருப்பேன். ரூமுக்கு வரும் நண்பர்கள், துபாயில் பாக்கிஸ்தான் டி.வி பாக்குற ஒரே தமிழன் நீதான் என்பார்கள்.

1990 துபாயில் சாப்ரி பிரதர்சின் லைவ் கச்சேரி, விடுவேனா , முதல் ஆளாக டிக்கட் வாங்கி வைத்து விட்டேன். அல் நாசர் ஐஸ் ரிங்கில் கச்சேரி. பாவிப்பசங்க ஐஸ்தரையின் மேலே ப்ளைவுட் பலகையப் போட்டு அதற்கு மேலே நாற்காலியை போட்டு வைத்திருந்தார்கள்,  குளிர் நடுக்கி எடுத்து விட்டது.   சுமார் 2 மணி நேரக் கச்சேரி, பாக்கிஸ்தானியர்கள் ஜதபு வந்து ஒரே மாதிரி ஆடி ஆடி ரூபாய் நோட்டை சாப்ரி பிரதர்சின் ஆர்மோனியத்தின் மேல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

கச்சேரி முடிந்ததும், எல்லோரும் வரிசையில் நின்று கை கொடுத்து வந்தார்கள். நானும் வரிசையில் நின்று கொண்டேன். என் முறை வந்தது. கை கொடுத்தபோதே “ ஆப் கிதர் கா ஹே “ என்றார். சாப்ரி பிரதர்சின் மூத்தவர். மத்ராசி என்றேன்.

”பஹ்ஹுத் அச்சா மத்ராஸ் மே ப்ரோக்ராம் கியா, மவுண்ட் ரோட் தர்கா மே” என்றார். இன்னும் அதிகம் பேச ஆசை பின்னால் நின்றவன் பஸ் பஸ் ஜாவ் என்றான். நகர்ந்து வந்து விட்டேன். இன்றளவும் சாப்ரி பிரதர்ஸ் கவ்வால் என்றால் ஒரு தனி இஷ்க்  

***

நன்றி : அண்ணன் சடையன் சாபு
***

Thanks to : Kyle Musicbizpro

Who am I? - J. Krishnamurti

Someone asked Jiddu Krishnamurti "Who are you?"...
***

***
Thanks to : tamedmind

Thursday, October 24, 2013

மாஸ்டரின் சிஸ்டர் - ஹமீதுஜாஃபரின் 'ஷோக்கு'

'தி இந்து'வில் வந்த 'சிரித்து வாழ வேண்டும்!' கட்டுரையை சிரிக்காமல் படித்துக்கொண்டிருந்தபோது ஜாஃபர்நானாவின் 'விஷயம்' வெளியில் வந்தது . உலகத்திற்கு உடனே காட்டவேண்டும் என்ற அக்கறையில் பதிவிடுகிறேன். நேத்து பார்த்த 'காமெடி எக்ஸ்பிரஸ்'-ன் விளைவினால் பிறந்ததாம். நாளைக்கு துபாய் ductacக்கு  வரும் ஷிவ்குமார் ஷர்மாவைப் பார்க்க இயலாத கடுப்பில் நான் இருப்பதால் (டிக்கெட் 200 திர்ஹம். எளியோருக்கு கிட்டாத இசை என்ன எழவு இசை?) என்னால் சிரிக்க இயலவில்லை. ஆனால் நீங்கள் சிரிக்கலாம். என் நிலைமைக்காகவே சிரிக்கலாம். தப்பில்லை. முன்னாலேயே சொல்லிவிடுகிறேன். இது சைவ ஜோக். 'நயாகராவுக்கும் வயாகராவுக்கும் என்னங்கய்யா வித்தியாசம்? நயாகரா விழும். ' போன்ற அப்பாவி ஆசிப்மீரான் ஜோக்கல்ல! அப்படியும் சிரிப்பு வரவில்லையென்றால் எனக்குப் பிடித்த இன்னஸண்ட்-ஐ   இங்கே பாருங்கள். உத்தரவாதம். நன்றி. - ஆபிதீன்
**

மாஸ்டரின் சிஸ்டர்

ஹமீதுஜாஃபர்

நேற்று ஏசியா நெட் மிடிலீஸ்ட் சேனலில் 'காமெடி எக்ஸ்பிரஸ்' நிகழ்சி. அதுலெ ஒரு அறுபது வயசு ரிட்டையர்டு கர்னல் தம்பதி வாடகை வீட்டுக்கு குடி வருகிறார்கள். தம்பதி முதலில் குடி வந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகள். அவள் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருப்பதால் ஒரு மாதம் கழித்து வருவதாக கர்னல் சொல்கிறார். இதை கேட்டுக்கொண்டிருந்த எதிர் வீட்டு மூன்று வேலையில்லா வாலிபர்களின் கற்பனை குதிரை வேகத்தில் ஓடுகிறது. நாவில் எச்சில் சொட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியாக அப்பெண்ணை கற்பனை செய்துகொண்டு வரும் தேதியை எதிர்பார்க்கிறார்கள். அந்த நாளும் வந்தது, வந்ததோ ஆறு வயசு சிறுமி, பல வருடங்களுக்குப் பின் வேளங்கண்ணிவேண்டுதலினால் பிறந்த குழந்தை. அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் கர்னல். எப்படி இருந்திருக்கும் அந்த மூவருக்கும்?  இதை பார்த்துக்கொண்டிருந்தபோது பழைய சம்பவம் 1965ல் நடந்தது நினைவுக்கு வந்தது.

எப்போதும் போல தஞ்சாவூரிலிருந்து வரும் 9.30 ரயிலில் ஸ்கூலுக்குப் போகும்போது ஒரு நாள் நாகப்பட்டினம் பெரிய ஸ்டேஷனில் (நாகப்பட்டினத்தில் இரண்டு ஸ்டேஷன் இருந்தது. ஒன்னு பெரிய ஸ்டேஷன். இது ஜங்க்ஷன் அளவுக்கு பெரிசா இருந்துச்சு, இங்கே பதினைஞ்சு இருபது நிமிஷம் வரை ட்ரைன் நிற்கும் அதனாலெ பெரிய ஷ்டேஷன்னு எல்லாரும் சொல்லுவாங்க. இன்னொன்னு நாகப்பட்டினம் பீச் ஸ்டேஷன். இது ஹார்பரை ஒட்டி இருந்துச்சு (இப்போது இல்லை) வெள்ளைக்காரன் காலத்துலேந்து சரக்கு கப்பலும் பாஸஞ்சர் கப்பலும் நெறைய வந்துப் போய்கிட்டிருந்துச்சு. எப்படியும் இரண்டு பாஸஞ்சர் கப்பல் நாலு தரம் மலாயா சிங்கப்பூரிலிருந்து வந்து போகும். ரயில்வே லைன் இரண்டு ஃபர்லாங்கு தூரம் வரை சாலையை ஒட்டி இருந்ததினாலெ ரயில் போகும்போது ஒரு காங்கிமேன் (Gangman) பச்சைக் கொடியெ வீசிக்கிட்டு மணி அடிச்சிக்கிட்டே அந்த ரெண்டு பர்லாங் வரை முன்னாலெ போவார், அவர் பின்னாலெதான் ரயிலும் போவும். இது ப்ராட்கேஜாக மாற்றும் வரை இருந்தது.) சரியான கூட்டம். நாகூர் போற பாஸஞ்சரைவிட பசங்க கூட்டம் ஜாஸ்தியா இருந்துச்சு. எல்லோரும் CSI ஸ்கூல் 11th std பசங்க.

நாங்க ஒரு பத்து பதினஞ்சு பேர் அந்த ட்ரைன்லெதான் தினம் ஸ்கூலுக்கு போவதும் சாயந்திரம் 4.30 ட்ரைன்லெ திரும்புவதும் வழக்கம். என்னைக்குமில்லாமெ அன்னைக்கு நம்ம பசங்க கூட்டமா அலைமோதுவதைப் பார்த்தப்ப எங்களுக்கே ஒரு ஆச்சர்யம். ட்ரைனை விட்டு எறங்கியதுமே எங்களைப் பார்த்துட்டு எங்கேடா First Class இருக்குன்னு கேட்டானுங்க. அதோ அங்கெ செண்டர்லெ இருக்கும்னு சொல்லிட்டு என்ன விஷயம்னு கேட்டப்ப, "வா., வா., வா.... மாஸ்டர்ட சிஸ்டர் வருது ரிஸீவ் பண்ணனும்" அப்டீன்னாங்க. அப்பதான் எங்களுக்கே தெரிஞ்சுச்சு.

விஷயம் என்னான்னா....

மாஸ்டர்னு ஒரு அம்பது வயசு கல்யாணம் ஆகாத வாலிபர் எங்களுக்கு சோசியல் ஸ்டடீஸ் பாடம் நடத்துற வாத்தியார். பேரு ஜோசஃப் டானியல், டபுள் எம் ஏ,. பார்க்க லேசா கருப்பா சித்தானைக்குட்டி மாதிரி இருப்பார். ஏற்கனவே இருந்த தியேடர் சார் மெண்டல் ஆயிட்டதுனாலெ புதுசா ஜாயின் பண்ணியிருந்தார். அவரை "சார்"னு கூப்பிட்டா புடிக்காது. "மாஸ்டர்" னுதான் கூப்பிடனும். அவர் பாடம் நடத்துனார்னா ஃபஸ்ட் ரோவிலெ பசங்க யாரும் உட்கார மாட்டாங்க. ஏன்னு கேட்டாரு "சாரல் அடிக்கிது மாஸ்டர்"னு பதில் சொன்னோம். விஷயம் ஒன்னுமில்லே அவர் பேச ஆரம்பிச்சா எச்சில் தெரிக்கும். அதைதான் நாசூக்கா சாரல்னு சொன்னோம்.

"நாளைக்கு ஹாஃப் டே ஸ்கூலுக்கு வரமாட்டேன், அரட்டையடிக்காமெ ஒளுங்கா படிங்க, காலையிலெ ஒம்பதரை ட்ரைன்லெ என் சிஸ்டர் வாராங்க" அப்டீன்னு மொத நாள் சொல்லிருந்தார். அதன் விளைவு பசங்க எல்லாம் இங்கே கூடி இருந்தாங்க. பத்து மணிக்குத்தானே ஸ்கூல், அதுவும் அஞ்சு நிமிஷ வாக்கிங் டிஸ்டன்ஸ்.

பசங்க எல்லோருக்கும் ஒரே கற்பனை, சிஸ்டர்னு சொன்னதும், ஒரு இருபது இருபத்தஞ்சு வயசு இருக்கும்; கிளி மாதிரி இருக்கும்; கொக்கு, குயில் மாதிரி இருக்கும், அப்படி இருக்கும், இப்படி இருக்கும்; சாரு கருப்பா இருந்தாலும் அது நல்ல நெறமா வகையா இருக்கும், செவப்பா இருக்கும் வெள்ளையா மஞ்சளா அப்படி இப்படீன்ற மயக்கத்திலேயே ஃபஸ்ட்கிளாஸ் காரேஜை நோக்கி ஓடினோம்.

"மாஸ்டர், லக்கேஜை தூக்க போர்டரை கூப்பிடாதிங்க நாங்க தூக்குறோம், ஸ்கூலுக்கு லேட்டானுலும் பரவாயில்லை, மொத பிரீடு உங்கப் பிரீடுதானேன்னு முண்டியடிச்சிக்கிட்டுப் கம்பார்ட்மெண்ட் உள்ளேபோய் லக்கேஜை எடுத்து தலையிலெ சுமந்துக்கிட்டு வந்தான் சுரேஷும் சுல்தானும். பாக்கி பசங்க வாயில் எச்சி ஒழுவுறதுகூட தெரியாம வாசலையே பார்த்துக்கிட்டிருந்தப்பொ...

ஒரு அம்பத்தஞ்சு அறுபது வயசு மதிக்கத்தக்க ஒரு அம்மா மெதுவா எறங்கிச்சு, அவங்களுக்குப் பின்னால் யாருமில்லை.

"மை பாய்ஸ்,  திஸ் ஈஸ் மை சிஸ்டர், மேடம் ரோஸிலின்" அப்டீன்னு அறிமுகப்படுத்தினார்.

அவ்வளவுதான் ஒரு பயலையும் காணோம். எப்படி எஸ்கேப் ஆனானுங்கன்னு தெரியலெ, ஆய் ஊய்னு பெரிசா ரீல் விட்ட  ஹமீதொலி எங்கே போனான்னு தெரியலெ. மறு நாள் கிளாஸ்லெ "ஆல் ஆஃப் மை பாய்ஸ், தேங்க் யு வெரி மச் டு ரிஸீவ் மை சிஸ்டர் அட் ரயில்வே ஸ்டேஷன்" அப்டீன்னு சொல்லிட்டு எங்க எல்லோருக்கும் (திருநெல்வேலி) அல்வா ஒவ்வொரு துண்டு கொடுத்தார்.

****

நன்றி : அன்றும் ஏமாந்த ஹமீதுஜாஃபர்நானாவுக்கு!

Sunday, October 20, 2013

துப்பாக்கி பற்றிய கவிதைகள் - எம். ஏ. நுஃமான்
துப்பாக்கி பற்றிய கவிதைகள்

எம். ஏ. நுஃமான்

***
துப்பாக்கிக்கு மூளை இல்லை

துப்பாக்கிக்கு மூளை இல்லை
இதயமும் இல்லை
விரல் அதன் விசை அழுத்த வெடிக்கும்
உயிர் குடிக்கும்
கருவில் இருக்கும் குழந்தையின் எனினும்

விரலே என் விரலே
மூளையும் இதயமும் உள்ள என் விரலே
ஒரு கணம் யோசி
மீண்டும் ஒருகணம்
குறிசரியா என திரும்பவும் யோசி

இன்னும் நூறு ஆண்டுகள் போயினும்
உன்குறி சரி என
மக்கள் கூறும் திசையினில் மட்டுமே
விசையினை அழுத்து

அன்றேல்
‘நீயும் ஓர் கொலைகாரன்’ என
வரலாறு என் நெற்றியில் எழுதும்

1988

***

உனது போர்

தோழனே
யாருடன் பொருதினாய் நீ
யாரிடம் தோற்றாய் இறுதியில்

உன் துப்பாக்கி
உன் கண் ஒன்றைக் குறிபார்த்துச் சுட்டது
நீ அரைக் குருடானாய்

உன் துப்பாக்கி
உன் காது ஒன்றைக் குறிபார்த்துச் சுட்டது
நீ அரைச் செவிடானாய்

உன் கை ஒன்றையும் துளைத்துச் சென்றது
உன் துப்பாக்கிக் குண்டு
நீ ஒரு சொத்தியன் ஆனாய்

உன் கால் ஒன்றும் பலியாயிற்று
உன் துப்பாக்கிக் குண்டுக்கு
நீ முடவனும் ஆனாய்

தோழனே
நீ உன்னுடனே பொருதினாய்
உன்னிடமே தோல்வியுற்றாய்
உனது உடலும் ஊனமுற்றது
உனது போரும் தோல்வியுற்றது.

1995

***

பதிலீடு

இரண்டு துப்பாக்கிகள்
மாடிப்படி ஏறி
என் வாயிலைத் தட்டின

சன்னல் இடுக்கால் எட்டிப் பார்த்தேன்
இரண்டு துப்பாக்கிகள்
மரணப் பசியுடன்
வாயிலைத் தட்டின

உயிராசை துரத்த
ஓடினேன் பின்கதவால்
உயிர் என் கைப்பிடியில்

மனைவி தாழ்திறக்க
தள்ளித் திறந்தன துப்பாக்கிகள்
‘அப்பா இல்லை’ என்றான் மகன்
‘நீ இருக்கிறாய்தானே வாடா வெளியே’
துப்பாக்கிகள் அவனைக் கவ்விச் சென்றன

என் இளம்தளிர்
என் விந்தில் விளைந்த குருத்து
இளங்காலையில்
தெருவோரம்
இரத்தம் உறைந்த தரையில் கிடந்தது
கருகி

1988

***

பிணமலைப் பிரசங்கம்

பின்னர்
அவர் பிணமலையை நோக்கிச் சென்றார்
பிணங்கள் விழுந்து கிடந்த தெருக்களில்
இடறி விழுந்தவாறு
அகதிகள் அவரைத் தொடர்ந்தனர்

புதைப்பதற்கு இடமின்றியும்
எரிப்பதற்கு விறகு இன்றியும்
குவிந்து கிடந்த பிணமலையில்
அவர் ஏறினார்

அகதிகளைப் பார்த்து
அவர் பின்னர் பேசினார்

பொறுமை இழந்தவர்கள் என்னுடன் வாருங்கள்
அடிபணிய மறுத்தவர்கள் என்னுடன் வாருங்கள்
துப்பாக்கியின் எதிரிகள் என்னுடன் வாருங்கள்
வாழ்க்கையின் ரசத்தை உங்களுக்குப் பருகத் தருகிறேன்
பூலோக சுவர்க்கத்தை உங்களுக்குக் காட்டுகிறேன்

உங்கள் கழுத்தில் மிதித்துக்கொண்டு
உங்கள் விடுதலைக்காகப் போரிடுவோரை
நம்பாதீர்கள்

பிறரின் உரிமையைப் பறித்தவனுக்கு ஏது உரிமை
பிறரின் சுதந்திரத்தை மதியாதவனுக்கு ஏது சுதந்திரம்
பிறரின் சமத்தவத்தை மறுத்தவனுக்கு ஏது சமத்துவம்

துப்பாக்கிக் குழாயிலிருந்துதான்
அரசியல் அதிகாரம் பிறக்கிறது
என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
அதே குழாயிலிருந்துதான்
அடிமைத்தனமும் பிறக்கிறது
வன்முறைதான் விடுதலையின் மருத்துவச்சி
என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
விடுதலையின் கருச்சிதைவும் அதுதான்

துப்பாக்கியை நேசிப்போரை நேசியாதேயுங்கள்
துப்பாக்கியின் பாசையைப் பேசாதேயுங்கள்

அவர் பிரசங்கம் முடியுமுன்
அவரது பிடரியைக் குறிபார்த்து நின்ற
துப்பாக்கி வெடித்தது
பிணமலை இன்னும் ஓர் அடி உயர்ந்தது

1991

***

வெண்புறாவின் வருகைக்காகக்
காத்திருந்தபோது

வெண்புறாவின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருந்தேன்
என் வாசல் முற்றத்தில்

பருந்துதான் வந்தது முதலில்
என் கோழிக் குஞ்சுகளைத் தூக்கிச் சென்றது

பின்னர்
வல்லூறு வந்து குந்தியது
என் முற்றத்துத் தென்னையில்

அது எறிகணை பீய்ச்சியதில்
என் வீடும் வாயிலும்
பிய்ந்து சிதறின
என் உயிர் அழிந்தது
நான் மீண்டும் அகதியானேன்

-1997

**

பயங்கரக் கனவு

பயங்கரக் கனவுகண்டு
அலறி விழித்தேன்
நாக்கு உலர்ந்து
அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
பின்னிரவுக் குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது
பயங்கரக் கனவுதான்

இரண்டு அரக்கர்கள்
இருவரின் தலைகளும் வானத்துக்கப்பால்
இருவரின் கால்களும் பாதாளத்துக்குக் கீழ்
குரூரம் முகத்தில் தெறிக்க
என் இளம் காதலியை
இழுத்துக்கொண்டிருந்தனர்

இவள் எனக்கு என்றான் ஒருவன்
இல்லை எனக்கு என்றான் மற்றவன்
அவள் விழிகள் பிதுங்கி
கண்ணீர் சிந்தின
கைகள் பிய்ந்துவிடும்போல்
குருதி சிந்திற்று

இல்லை அவளை விடுங்கள்
விட்டுவிடுங்கள்
அவள் எனக்குரியவள் என்று கத்தினேன்

கண் விழித்தாலும்
நாக்கு உலர்ந்து அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
இன்னும் இதயம் பதறியது
இரவுக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது
கனவுதான்
பயங்கரக் கனவு

24.7.97

***


அவர்களும் நீயும்

ஜீப்வண்டியில் வந்தனர்
உன் வீட்டுக் கதவைத் தட்டினர்
விசாரணைக்காக
உன்னை இழுத்துச் சென்றனர்

உன் தாய் அழுதாள்
கதறினாள்
மன்றாடினாள்

அவர்களின் முகாமுக்குச் சென்று
விசாரித்தபோது
இல்லை
நாங்கள் கூட்டிவரவில்லை
என்று மறுத்தார்கள்

உன் தசை பிய்ந்து
எலும்புகள் நொறுங்கி
உன் இரத்தம் மண்ணில் கலந்தது

இப்போது உன்முறை

நீ காட்டுக்குள் இருந்து
கால்நடையாக வந்தாய்
என் வீட்டுக் கதவைத் தட்டி
விசாரணைக்காக என்னை இழுத்துச் சென்றாய்

என்தாய் அழுதாள்
கதறினாள்
மன்றாடினாள்

உன் முகாமுக்கு வந்து
விசாரித்தபோது
இல்லை
நாங்கள் கூட்டிவரவில்லை
என்று மறுத்தாய்

என் தசை பிய்ந்து
எலும்புகள் நொறுங்கி
என் இரத்தமும் மண்ணில் கலந்தது.

-1997

***

மரித்தோரின் ஆன்மா

சிங்கமும் புலியும்
கடித்துக் குதறிய
மனிதத் தசையும்
குருதியும்
எலும்புக் குவியலும்
சிதறிக் கிடக்கின்றன நிலமெங்கும்

தப்பிச் சென்றோரின் உடல் ஊனமுற்றது
இதயம் கிழிந்துபோயிற்று
உணர்வு மரத்துவிட்டது

நீ கேட்கிறாய்
யார் போர்க் குற்றவாளி என்று

கடவுளே
இந்த விலங்குகளிடமிருந்து
எங்களை ஏன் உன்னால்
காப்பாற்ற முடியவில்லை
என்று புலம்புகிகிறது
மரித்தோரின் ஆன்மா

2009

***

நீ தூக்கிய துப்பாக்கி

நீ துப்பாக்கியைத் தூக்கிய பிறகு
மரணத்துடன் விளையாடத் தொடங்குகிறாய்
நீ யுத்தத்தில் இறங்கிய பிறகு
படுகொலையின் நெடுஞ்சாலையில்
நடக்கத் தொடங்குகிறாய்

நீ உன் எதிரியைக் கொல்ல முனைகையில்
எதிரி உன்னைக் கொல்ல முனைகிறான்
நீ உன் எதிரியின் குடிகளை அழிக்கும்போது
எதிரி உன் குடிகளை அழிக்கிறான்

நீ அவன் கொலைகளைக் கண்டிக்கும்போது
அவன் உன் கொலைகளைக் கண்டிக்கிறான்
உன் நண்பர்கள் உனக்காகக் கொடி பிடிக்கின்றனர்
அவன் நண்பர்கள் அவனுக்காகக் கொடி பிடிக்கின்றனர்

நான் உங்கள் இருவருக்கும் எதிராகக் குரல் உயர்த்துகிறேன்
நான் கூறுவது இதுதான்
நீங்கள் துப்பாக்கியைக் கீNழுவைக்கும் வரை
அது உங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கும்

இனி எப்போது?

இனி
வேறு விசயங்களைப் பற்றி எழுதலாம்
ஆனாலும்
கொலைக் களத்திலிருந்து
மரணத்தின் வாடை இன்னும் வீசுகிறது
குரூரத்தின் நிழல்
என்னைப் பின்தொடர்கிறது
வன்மமும் வெறுப்பும்
என்னை வழிமறித்து நிற்கின்றன
துவேசத்தின் குரல் காற்றில் ஒலிக்கிறது
மேலாதிக்கத்தின் கரங்கள்
என் கழுத்தைச் சுற்றிவளைக்கின்றன

ஜன்னல்களையும் கதவுகளையும்
இறுகச் சாத்தித்
தனி அறைக்குள் இருந்தாலும்
சுவாசிக்கும் காற்றில்
கசப்புக் கரைந்திருக்கிறது

இனி எப்படி வேறு விசயங்களைப்பற்றி எழுதுவது?
அன்பையும் காதலையும் பற்றி
இனி எப்போது எழுதுவது?


சிறுவனின் தோளில் துப்பாக்கி

சிறுவனின் தோளில்
அமர்ந்திருந்தது துப்பாக்கி
அதைக் கண்ட நான்
ஒதுங்கிச் சொன்றேன்

நில், என்றது துப்பாக்கி
யார் நீ, பெயர் என்ன
எங்கிருந்து வருகிறாய்
எங்கு போகிறாய்
காட்டு உன் அடையாள அட்டையை
திற உன் பையை
சரி நீ போ என்றது துப்பாக்கி

சிறுவனின் தோளில்
மீண்டும் அமர்ந்தது துப்பாக்கி
அதன் முகத்தில் விறைப்பு
சிரிப்பே இல்லை


துப்பாக்கி பற்றிய கனவு

துப்பாக்கியைக் கனவுகண்ட
காலம் ஒன்றிருந்தது
அது புரட்சியைக் கொண்டுவரும்
விடுதலைக் கம்பளத்தை
என் வாசல் முற்றத்தில் விரிக்கும்

துப்பாக்கிதான் எத்தனை அழகு
என் காதலியின் தொடைபோல்
அதன் வளவளப்பு
விறைத்த குறிபோல்
அதன் கிளர்ச்சி

துப்பாக்கியைக் கைகளில் ஏந்தி
முகர்ந்து முத்தமிட்டேன்
அது வெடித்தபோது
அந்தோ
என் மூக்கும் முகமும்
பிய்ந்து சிதறின

என் கனவு கலைந்தது


இனி புதிதாக

எல்லாவற்றையும் மறந்துவிட்டு
இனி நாம் புதிதாக வாழத் தொடங்கலாம்

கழுவிவிடு என் இரத்தக்கறைகளை
கழுவுகிறேன் நான் உனதை

உன் பாவங்களுக்காக
நான் பிரார்த்தனை செய்கிறேன்
என் பாவங்களுக்காக
நீ பிரார்த்தனை செய்

இன்று நாம்
சபதம் செய்துகொள்வோம்
நீ என் எல்லைகளையும்
நான் உன் எல்லைகளையும்
தாண்டுவதில்லை என

எல்லாவற்றையும் மறந்துவிட்டு
இனி நாம் புதிதாக வாழத் தொடங்கலாம்

வா
என் கட்டில் உனக்காகக் காத்திருக்கிறது
உன் கட்டிலில்
எனக்காக ஒரு தலையணை
போட்டுவை

21. 12. 2010

***

நன்றி : எம். ஏ. நுஃமான் , எஸ்.எல்.எம். ஹனீபா