Monday, January 25, 2016

Nihal Bitla

'இந்தக் 'குழந்தை'யின் சோகம் நம்மால் நிச்சயம் உணரமுடியாதது..' என்று கூகுள் ப்ளஸ்ஸில் பகிர்ந்திருந்தார் நண்பர் மஜீத் . ஆனால், எதற்கெடுத்தாலும் 'பொசுக்'கென்று துவண்டு விழும் நம்மை , ‘All I know is that I have the rare power of being young and old at the same time. My condition has made me believe that we should make the most of our time on earth. We should live life in the most incredibly beautiful way.’ என்று தேற்றுகிறான் பையன்.

Read Sanjay Pandey's Article
Visit : https://www.facebook.com/TeamNihal/
Thanks to : fridaymagazine & majeedSunday, January 24, 2016

சூஃபி ஞானி செய்யது ஆசியா உம்மாள்

அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய 'முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்' எனும் நூலிலிருந்து பதிவிடுகிறேன். ஏற்கனவே இந்நூலிலிருந்து இறசூல் பீவி , கச்சிப்பிள்ளையம்மாள் என்ற இரண்டு பெண் புலவர் ஞானிகளைப் பதிவிட்டிருக்கிறேன். கடைசியாக இருந்தது கீழக்கரை ஆசியா உம்மாள் அவர்கள்தான். 'தமிழ்நாட்டில் வேறு யாரும் 'பொம்பள அவுலியா' உள்ளார்களா சீதேவி?' என்று  ஹானரபிள் செக்ரட்டரி அஸ்மாவிடம் அடக்கமுடன் கேட்டேன். நாகூர் மியான்தெருவில் ஒருவர் தற்போது வாழ்ந்து வருவதாகவும் பெயர் பிறகு சொல்வதாகவும் சொன்னார். அறியவும் ! - ஆபிதீன்

*

செய்யது ஆசியா உம்மாள்

இவரின் பாரம்பரியமோ பெருமையுடையது. வள்ளல் சீதக்காதியின் இளவல் பட்டத்து மரைக்காயர் என்னும் முகம்மது அப்துல் காதிர் மரைக்காயரின் மகன் முகம்மது அபூபக்கர் மரைக்காயருக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மகள் சாறா உம்மாவுக்கும் பிறந்த வள்ளல் அவ்வாக்காறு மரைக்காயர் எனப் புகழ்பெற்ற அப்துல் காதிர் மரைக்காயர். இவரே கீழக்கரை ஜூம்ஆப் பள்ளிவாயிலையும் காயல்பட்டணம் புதுப்பள்ளிவாயிலையும் கட்டுவித்தவர். அவரின் மகள் வயிற்றுப் பேரரே இரண்டாம் சீதக்காதி என் அழைக்கப்பெறும் ஹபீபுஅரசர் எனப் பீடும்புகழும் பெற்ற  ஹபீபு முஹம்மது மரைக்காயர். அவரின் வள்ளன்மையின் நறுமணம் இந்நாட்டில் மட்டுமின்றி அரபுநாட்டிலும் பரிமளித்துக் கமழ்ந்தது. அங்குள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் அறிஞர்களுக்கும் வாரி வழங்கியதோடல்லாது புனித யாத்திரிகர்களின் வசதிக்காக ஜித்தாவுக்கும் மக்காவுக்கும் இடையில் கிணறுகளும் தோண்டுவித்தார் அவர். அவரின் இளவல் அப்துல் காதிர் மரைக்காயரின் வழிவந்த ஹபீபு முஹம்மது மரைக்காயரின் அருந்தவத்துத் திருமகளே செய்யிது ஆசியா உம்மாள்.

கருவிலே திருவாய்க்கப் பெற்ற அம்மங்கை நல்லார் இளமையிலேயே தனித்திருந்து இறைநேசச் செல்வர்களின் துதிப்பாடல்களை மனனம் செய்து பாடிக்கொண்டிருக்கும் இயல்பினைப் பெற்றிருந்தார். இறைத் தியானத்திலேயே இலயித்து இன்புற்று அவற்றைப் பாடிப் பரவினார். பிறரிடம் அதிகமாகப் பேசாது தம் இல்லத்தின் மேல்மாடியில் தம் பெரும்பாலான நேரத்தைக் கழிந்துவந்ததன் காரணமாக 'மேல் வீட்டுப் பிள்ளை' என்று அழைக்கப்பெற்ற அவர் அக்காலை தாமாகவே பல பாடல்களைப் பாடினார். அத்துடன் நில்லாது அக்காலை கீழைமாநகரின் ஆன்மீகச் செங்கோலோச்சி வந்த இறைநேசச் செல்வர் கல்வத்துநாயகம் அவர்களை அணுகி அவர்களிடம் தீட்சை பெற்றுச் சீடருமானார். அவர் கி.பி. 1948-ஆம் ஆண்டில் தம் எண்பதாவது வயதில் கீழக்கரையில் காலமானர்.

அவர் பாடிய பாடல்கள், 'மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம்' 'மாலிகா இரத்தினம்' என இரு பகுதிகளாக இருக்கின்றன. அவற்றில் இறைவனைப் பற்றியும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் பற்பல இறைநேசச் செல்வர்களைப் பற்றியும் அவர் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தும் அரபுத் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

அவற்றில்,

'சர்க்குரு உயர்குதுபாம் சையிது அப்துல்காதிர்
பொற்பாதம் போற்றி நிதம் புண்ணியமாய்ப் புகழ்வேன்'

என்று கல்வத்துநாயகம் சையிது அப்துல் காதிர் (ரஹ்) அவர்களைப் போற்றிப் புகழும் அவர் பின்னர்,

வல்லான் ஹபீபுமுஹ ம்மதுசதக்கத் துல்லாவென்னும்
பல்லாக் கொலியை நிதம்பண்பாக நான் புகழ்வேன்

என்று பல்லாக்குவலி அவர்கள் மீது புகழ்ப்பா பாடுகிறார்.

அவர் ஷாஹ¤ல் ஹமீது நாயகம் அவர்களின் வரலாற்றையும் தம் மூதாதையான ஹபீபரசர் வரலாற்றையும் கவிதையிலேயே மொழிவது கவிதைப் பொழிவாகவே உள்ளது.

அவர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் மீது பாடிய இன்னிசையில் அவர்கள் ஓர் இறந்த உடலத்தை நோக்கி, 'என் உத்திரவால் எழு!' என்று கூற,

'சொன்னவுடன் மையித்து சுணங்கா தெழுந்திடவே
விண்ணவரும் மண்ணவரும் மேன்மையுடன் புகழ்ந்தார்'

என்று பாடுகின்றார்.

அவர் தொண்டியில் அடங்கப் பெற்றுள்ள ஷைகு அபூபக்கர் வலி அவர்கள் மீது பாடிய ஒரு பாட்டில்

சிந்தையும் நாவையும் ஜெயிக்க முடியவில்லை
ஜெயிக்க வலி தாரும் வலியே!
சித்தி ஆனந்தமெனும் சிவராஜ யோகமென்னில்
தெளிவாக்க அருளும் வலியே!

விந்தையாய் வந்ததொரு வேதாந்த தீபமெனும்
வெளிச்ச முள்ளருளும் வலியே!
வேதாவே நல்லஉயர் நாதாவே உன்றன்உயிர்
தாதாவே அருளும் வலியே!

எந்தனுயிர் உந்தனுயிர் என்நிலைஉன் முன்னிலையாய்
ஏகநிலை அருளும் வலியே!
எல்லாம் அறிந்தவரே! ஏகாந்த மெல்லாமுன்
இலங்கிவர வருளும் வலியே!

சந்ததமாய் நிற்பவரே! தான்தானு மானவரே!
சதானந்தம் அருளும் வலியே!
சிந்தைபுகும் தொண்டியர்என் ஜத்தான குத்பேநல்
ஷைகு அபூபக்ரு வலியே!

என்று பாடியிருப்பதிலிருந்து ஷைகு அபூபக்ரு வலி அவரின் மூதாதையர்களில் ஒருவர் என்பது பெறப்படுகிறது.

அவர் தம் மற்றொரு மூதாதையான சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மீது பாடிய கண்ணிகளில் அவர்களின் அருள் வேண்டி இறைஞ்சும் கண்ணிகள் அற்புதமாக அமைந்துள்ளன. அவை வருமாறு :

எந்தனுக் குள்ளே  இலங்கும்உயர் சூட்சியத்தை
விந்தையுடன் காட்டியருள் வேதா சதக்வலியே!
பேசமுடி யாதஉயர்  பேரின்ப சாகரத்துள்
ஆசையுடன் முழுக அருளும் சதக்வலியே!
திறமான இல்முல்யகீன் தெளிவுடைய ஐனுல்யகீன்
தரமான ஹக்குல்யகீன் தவமருள் சதக்வலியே!

இவ்வாறு தம் பாட்டனாரின் அருள்வேண்டி இறைஞ்சும் அவர், இறைவனை நோக்கி,

தன்னை அறிந்துணர சதானந்த நிஷ்டையருள்
என்னை உன்னில் சேர்த்தே ஏகபராபரனே
ஆவி அகலுமுன்னே ஆண்டவனே உன்னருளை
ஏவி என்னில் வரச்செய் ஏகபரி பூரணனே!
என்னை உற்றுணர்ந்தேன் ஏதுமில்லை உன்னையன்றி
என்ன கதிதருவாய் ஏகபரி பூரணனே!

என்று பாடுகின்றார்.

மற்றொருவகைக் கண்ணியில்,

என்னிலே நீயன்றி எவருண்டும் ஒன்றுமில்லை
என்னை ஆராயவேண்டாம் இறை யே கப் பாரானவனே!
ஆவி கலங்குதையோ ஆதரிப்பார் நீயன்றிஇல்லை
பாவிஎன்றே தள்ளாதென்னைப் பாரு, கப் பாரானவனே!
இச்சமய மேசமயம் ஏகாந்த முத்திதர
பட்சம்வைத்து சேர்த்தருள்தா பரனே, கப்பாரனவனே!

என்று அவர் பாடி இறைஞ்சுவது நம் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது.

இறைவனிடம் இவ்விதம் பாடி இறைஞ்சும் அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வேண்டி,

சீமான் தனத்துடைய செல்வர் முஹம்மதென்னுள்
ஈமானைத் தான் நிரப்பும் இறசூல்நபி நாயகமே!
ஈமான் தனை நிரப்பி என்றென்றும் உம்முடைய
கார்மான மாக்கிஎன்னைக் காரும்நபி நாயகமே!

என்று பாடி அவர்கள் மீது,

மர்ஹபா யாமர் ஹபா முஹம்மதர்க்கே மர்ஹபாவே
மர்ஹபா யாமர் ஹபா முஸ்தபாக்கே மர்ஹபாவே
மர்ஹபா யாமர் ஹபா ஹாமிதர்க்கே மர்ஹபாவே
மர்ஹபா யாமர் ஹபா அஹ்மதர்க்கே மர்ஹபாவே

என்று சுபசோபனம் சொரியும்போது நம் உள்ளமெல்லாம் பரவசமுறுகிறது.

*

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

Thursday, January 21, 2016

Hirana : Kabir Bhajan presented by Mahesh Kale


Thanks to : ICMA Foundation , Mahesh Kale
+
Mahesh Kale - Raga Gavati

கோபல்ல கிராமத்தில் ஒரு கதை !

அக்கையா சொன்னதாக கி.ரா சொன்னது : 
"ஒரு ஊர்லெ ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மகன், கல்யாணம் ஆகவேண்டிய வயசு. கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். பொண்ணு ரெண்டு. அக்கா தங்கை. அதுகளும் ராஜகுமாரத்திகதான். கல்யாணம் தடபுடலாய் நடந்து முடிஞ்சது.

முதல் நாள் ராத்திரி. மாடியிலெ ரெண்டு அறைகள். அந்த அறைகள் எப்படி அமைஞ்சிருந்ததுண்ணா.. ஒரு அறை மேலே; இன்னொன்னு கீழே. ரெண்டுக்கும் போக ஏணிப்படிகள்.

கீழ் அறையிலெ தங்கச்சிக்காரி இருநா. மேலே அக்காக்காரி. கல்யாணமான ராஜகுமாரன் வந்தான்.

இந்த நேரத்துலெ ஒரு திருடன் அரண்மனையிலெ களவாங்க உடும்புலெ கயத்தைக்கட்டி மேலேவீசி அந்த கயிறு வழியா மேலேஏறி அந்த இடத்துக்கே வந்திட்டான். ராஜகுமாரன் அந்த அறையில் ஏதாவது ஒண்ணுக்குள்ளே போயி கதவைப் பூட்டிக்கிட்டதும் இவன் வேலையை இவன் ஆரம்பிக்கலாம்ண்ணு காத்துக்கிட்டிருந்தான்...

ராஜகுமாரன் ஏணிப்படி வழியாய் ஏறி முதல் அறையைக் கடந்து மேலே உள்ள அறைக்குப் போகப்  போனான். வாசலில் காத்திருந்த இளையவள் அவனுடைய காலைப் பிடிச்சிக்கிட்டா.

"எங்கே போறீர் என்னைக் கடந்து; முதல்லெ நான் இருக்கிறது தெரியலையா?"ண்ணு கேட்டா.

சரீண்ணு சொல்லி அவன் ஒருபடி கிழே இறங்கக் கால் வச்சான் அவகிட்டெ போறதுக்கு. இதுக்குள்ளே மேலேயுள்ள அறைவாசல்லெ காத்திருந்த மூத்தவள் அவன் கழுத்தைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு "என்ன அர்த்தம் இது? முதல்லெ தாலிகட்டினது என்னைத்தானே; இங்கெ வந்திட்டுப் பிறகுதான் அங்கே போகணும், நா விடமாட்டேன் ஆமா"ண்ணு சொல்லிட்டா!

ராஜகுமாரன் சொன்னான் "அவ சின்னவ; குழந்தைக்குச் சமானம். மூத்தவள் நீ; இளையவளுக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே? அதோடு அவ வாய்திறந்து கேட்டுட்டா" என்று சமாதானம் சொல்லிப் பாத்தான். மூத்தவள் அவனை விடுறதாய் இல்லை.

ராஜகுமாரன், காலைப் பிடித்துக்கொண்ட இளையவளிடம் "உன் அக்கா சொல்றதும் நியாயம்தானே, முதல்லெ முறைப்படி நடந்துகொள்றதுதான் முறை. காலை விட்டுரு"ண்ணு கேட்டுப் பார்த்தான்.

"மூத்தவர்களுக்குத்தான் பொறுமை வேணும். நானோ வெக்கத்தைவிட்டு வாய்திறந்து கேட்டுட்டேன்; விட்டுக் கொடுத்தாத்தா என்ன? அவ எப்பவும் இப்படித்தான்" என்றாள் இளையவள்.

"ஓஹோ, முறைதவறி நடந்துக்கிட்டதுமில்லமே வாய் வேறயா? முடியாது. இங்கெதான் முதல்லெ வரணும்" என்று முரண்டு பிடித்தாள் மூத்தவள். அவன் கழுத்தில் போட்ட பிடியை விடாதது மட்டுமில்லெ, பிடியை இறுக்கினாள்.

இளையவளோ காலைப்பிடித்த பிடியை விடவே இல்லை. கீழ்நோக்கி அவனை இழுத்தாள்.

இப்படி அவனை அவர்கள் பாடாய்ப் படுத்தி, அந்த ரெண்டு உடன்பிறப்புகளும் நீயாச்சி நானாச்சி என்று சண்டைபோட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அரமணைக்குள் வந்த கள்ளன் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். 'பாப்போம்; இது எப்படித்தான் முடியுது' என்று.

ராஜகுமாரன் அந்த ரெண்டு பொண்களையும் எப்படியாவது சமாதானப்படுத்திரலாம்ண்ணு முயற்சி செய்து பாத்தான். நடக்கலை. என்ன செய்யிறதுண்ணும் தெரியலை.

'ரெண்டு பேர்ட்டேயும் நா வரலை; விட்டுருங்க என்னை' என்று கோபமாய்த் திமிறிப் பாத்தான். கட்டியிருந்த வேட்டி அவுந்து போச்சி! அவர்கள் வகையான பிடியைப் பிடித்துக் கொண்டார்கள்!
**

.... மீதிப் பகுதியை வாசகர்கள் இங்கிருந்து பிடித்துக் கொள்ளவும்!

*

Wednesday, January 20, 2016

எஸ்.பொ ஓவியம் - ஜீவா

Wacom Tablet-ல் வரைந்தாராம் எஸ்.பொ'வை . அருமை.
*

*
நன்றி : ஓவியர் ஜீவா

பிரபஞ்சன் நம்ம ஆளு !

பிரபஞ்சன் 1978-ல் எழுதிய 'சங்கம்' சிறுகதையிலிருந்து.. 


"ஒட்டக்கூத்தர் தெரியுமா?"

"ம்... யாரு?"

"அதாம்பா, சோழ ராஜாகிட்டே ஆஸ்தான கவியா இருந்தாரே அந்த ஒட்டக்கூத்தர்."

"அவரா.. தெரியும். 'உலா' பாடினவர்."

"அது எனக்குத் தெரியாது. அவரு நம்ம ஆளு."

"நம்ம ஆளா?"

"ஆமா, நம்ம ஜாதிக்காரரு."

"ஓகோ.."

"ஆமா.. இதெல்லாம் தெரிஞ்சுக்காம என்ன நீ படிக்கிறே.."

அவரைத் திருப்திப்படுத்த வேண்டும்போல அவனுக்குத் தோன்றியது.

"கம்பர் கூட நம்ப ஆளா?"

"அவர் வெள்ளாள முதலிப்பா. நம்ம ஆளு இல்லே."

"அது எப்படிச் சொல்றீங்க?.."

"கம்பனை வைச்சு ஆதரிச்சவரு சடையப்ப முதலி. அவரு வெள்ளாளர். அதனால கம்பனும் வெள்ளாள முதலியாராத்தான் இருக்கணும். வேற ஜாதியானை ஆதரிக்கிறதுக்கு சடையப்ப முதலிக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு?"Sunday, January 17, 2016

'நம் நாயகம்' நூல் வெளியீட்டு விழா

சகோதரி ஜெஸிலா பானு எழுதிய 'நம் நாயகம்' நூலின் வெளியீட்டு விழா வரும் 23ஆம் தேதி சென்னையில் - 'கவிக்கோ' மன்றத்தில் - நடக்கிறது. விழா சிறக்க வாழ்த்துகிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை  குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்ற நடையில் அருமையாக எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒன்றை இங்கே பகிர்கிறேன் (கூகுள் ப்ளஸ்-ல் ஏற்கனவே இதை வாசித்தவர்கள் மீண்டும் இங்கே வாசித்தால் அவர்களின் மைனஸ் ஒன்று குறையும் என்று உறுதி கூறுகிறேன்!) 

*

எல்லோரும் சமம்
-------------------

ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களோட பயணத்தில் இருந்து திரும்புனாங்க.

எல்லாரும் ஓய்வெடுக்கலாம்னு ஒரு இடத்தில் தங்கினாங்க. எல்லாருக்கும் களைப்பாகவும் பசியாகவும் இருந்துச்சு. ஒரு ஆட்டை அறுத்து எல்லாரும் பசியாறலாம்னு முடிவு செஞ்சாங்க.

ஒரு தோழர் "என்னோட ஆட்டை அறுக்கலாம்னு"னு சொன்னாங்க. இன்னொரு தோழர் "அதனோட தோலை நான் உரிக்கறேன்"ன்னு சொன்னாங்க. மற்றொரு தோழர் "அதை சுவையா நான் சமைச்சு தர்றேன்"னு சொன்னாங்க. இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையைப் பிரிச்சிக்கிட்டாங்க. அப்ப நாயகம் (ஸல்) அவர்கள் "சமைக்கத் தேவையான  விறகை நான் சேகரிச்சிக்கிட்டு வர்றேன்"ன்னு சொன்னாங்க.

உடனே அங்கிருந்த தோழர்கள் எல்லாரும் "யா ரசூலுல்லாஹ்! தயவுசெஞ்சு நீங்க ஓய்வெடுங்க.. உங்களுக்காக இதெல்லாம் நாங்க செய்யுறது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்"ன்னு சொன்னாங்க.

அதுக்கு நாயகம் (ஸல்) அவர்கள் "அது உங்க எல்லாருக்குமே சந்தோஷம் தரும்னு எனக்குத் தெரியும். ஆனா.. அல்லாஹ்வுக்கு அது சந்தோஷத்தைத் தராதே.. அவன் கண் பார்வையிலே எல்லாரும் சமம்தானே? நான் 
மட்டும் சும்மா உட்கார்ந்துக்கிட்டு இருக்க, நீங்க எல்லாரும் எனக்குப் பணிவிடை செய்யறதை அல்லாஹ் ஒரு போதும் விரும்ப மாட்டான். என்னைத் தடுக்காதீங்க"ன்னு சொல்லிட்டு விறகு சேகரிக்கப் போயிட்டாங்க.

இதுல இருந்து என்ன தெரியுது? நாயகம் (ஸல்) அவர்கள் சின்ன விசயத்துக்கூட அல்லாஹ்வை அஞ்சி நடந்தது மட்டுமல்லாமல், எந்த விசயத்துலயும் தாம் ஒரு இறைத்தூதர்ங்குறதுக்காக எந்தச் சலுகையையும் பெறாமல், கடைசி வரை தாம் ஒரு எளிமையான இறையடியாராக வாழ்ந்திருக்காங்கன்னு புரியுது.
*

அழைப்பிதழ் :

நன்றி : ஜெஸிலா பானு
http://jazeela.blogspot.ae/

கடவுளுடன் விளையாடுதல் - சென்ஷி


என் இருக்கைக்கு எதிரே
கடவுளின் அமர்வு
மிகு சுவாரசிய ஆட்டமெனக்கூறி
காய்களை அடுக்கினேன்
கடவுளின் முணுமுணுத்தல்கள்
செவியிலேறவில்லை

காய் வெட்டுதல் குறி தப்பித்தல்
ரத்தம் சிந்துதல் வெட்டி எரித்தல்
என் ஆட்ட முறைகளை
விதிகளாக்கினேன்.
முணுமுணுத்துக் கொண்டிருந்தார் கடவுள்

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்
காடு புகுந்து வெற்றிக் களிப்பில்
குடித்துக் குடித்துக்
கூத்தாடிக் கொண்டிருந்தான் சாத்தான்
கடவுளின் முணுமுணுப்பு கேட்டிருக்க வாய்ப்பில்லை

விதிகளை மீறிய ஆட்டமென்று
தெரிந்தபின்பும்
நான் எனது வெற்றிக்காக
கடவுளின் காய்களை வெட்டிக்கொண்டிருந்தேன்
கடவுளின் முணுமுணுத்தல் அடங்கவில்லை

ஏவாளுக்காக ஆதாமுக்காக கோவிலுக்காக
மதத்திற்காக குழந்தைக்காக
இயற்கைக்காக
கடைசியாய்
சாத்தானை எனக்குக் கொடுத்ததற்காக
சுவாரசியமாய் இருந்தது ஆட்டம்

வெட்டுப்பட்ட காய்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தாம் விளையாடியது கடவுளுக்காகவென்று

என்னுடைய ஆட்டத்தில்
கடவுளைத் தோற்கடித்தப்பின்
வரமோ சாபமோ
முணுமுணுத்தலில் கிடைக்குமென்று
சப்தமாய் சொல்லச் சொன்னேன்

அவரவர் கண்கள்
அவரவர் மனது
என்றுச் சென்றார். 

***
நன்றி : சென்ஷி, யாழினி
குறிப்பு : கடவுளின் புகைப்படத்தை எடுத்தவர் ஷை.., இல்லை, ஆசிப்மீரான்!

Saturday, January 16, 2016

சொல்ல மறையும் தீவு - பிரேம்


பாறைகளின் உட்குழிவுகளில் பதுங்கியிருந்தவை
அலைகளின் நுரைப்பரப்பில் இரைந்து கிடந்தவை
சுடர் ஒடுங்கிப் புகைவிரியும் நிறக்கோட்டில் நெளிந்தலைந்தவை
ஓட்டினைக் கொத்தி உள்ளிருந்து வெளிக் கிளம்பும்
அலகின் நுனியில் ஒட்டியிருந்தவை
எனத் தாம் கண்டெடுத்தவைகளை
சொற்களாக்கி வைத்திருப்பவர்களுக்கு
இந்த உலகின் அத்தனைக் கனவுகளும் சொந்தமாகட்டும்.
தம்மைத் தவிர வேறு எதையெதையோ
சொல்லித் திரியும் பாசாங்கும்
தன்னை மற்றொன்றில் ஓயாமல் மறைத்துக் கொள்ளும்
மாறுவேடத் தந்திரமும் கொண்ட
சொற்களிடமிருந்து தப்பிக்க
அறிந்தவர்கள் யாரோ அவர்களுக்கு
இந்த உலகின் அத்தனை இசையும் சொந்தமாகட்டும்.
கேட்கவும் சொல்லவும் யாருமற்ற தனிமையில்
தற்கொலை செய்து மடிந்த நெடிய வாசகங்கள்
விட்டுச் சென்ற சொற்களின்
ஓயாத முணகல்களைக் கேட்கத் தெரிந்தவர்களுக்கு
இந்த உலகின் அத்தனைக் கவிதைகளும் சொந்தமாகட்டும்.
(வேறு)
கனவும் இசையும் கவிதைகளும் அற்ற
ஒரு அதிசயத் தீவிலிருந்து
எனக்குக் கிடைத்தன இச்சொற்கள்
உச்சரிக்கும் போதே
கனவால் இசையால் கவிதையால் நிரம்பிவிடும்
இவற்றிடமிருந்து
ஒருநாளும் அறிந்து கொள்ள முடியாது
உங்களால்
அந்தத் தீவின் ரகசியத்தை.
*
நன்றி : பிரேம்

Thursday, January 14, 2016

அபூபக்கர் எனும் யானை :)

செம காமெடி ! from Malayalam Film 'Gurushiyan' . Thanks to :  hgytnb01
*
*
knpradeep77's comment :
in Baroda, i have witnessed a big quarrel between Hindus and Muslims when a road accident happened, a pedestrian victim, a muslim boy (not very serious injuries) and the driver of the vehicle was a hindu. and once the accident happened, nobody cared about the boy who was injured, but all started shouting at the driver and soon it was a fight between muslims and hindus, i ran to the nearest police post and informed them, and i went away from there fearing a riot will breakout!

Wednesday, January 13, 2016

பயங்கரமான நல்லவர்கள் ! - ஓஷோ

Thanks to :  Venni La  & Zara Thustra  (fb)
*

நீங்கள் ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்றபோதும்கூட, நீங்கள் கெடுதல்தான் செய்கிறீர்கள்.

நல்லது செய்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எப்போதுமே கெடுதல்தான் செய்கின்றனர்.

இந்த உலகிலேயே மிகவும் தீங்கானவர்கள் அவர்கள்தான். சமூக சீர்திருத்தவாதிகள், சமூக புரட்சியாளர்கள், இவர்கள்தான் மிகவும் தீங்கானவர்கள்.

ஆனால் அவர்கள் செய்கின்ற அந்தத் தீங்கு எங்கு இருக்கிறது என்பதைக்கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.

ஏனெனில் அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் மற்றவர்களுக்கான சிறைவாசத்தை அவர்கள் உருவாக்குகின்ற வழி அதுதான்.

நீங்கள், அவர்களை உங்களுக்கு ஏதாவது செய்வதற்கு அனுமதித்தால், அதன்பிறகு நீங்கள் அவர்களின் உடைமை ஆகிவிடுவீர்கள்.

அவர்கள், முதலில் உங்கள் பாதங்களை சுகமாக அமுக்கிவிடுவார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கைகள் உங்கள் கழுத்தை நோக்கி நகர்வதை நீங்கள் காணலாம்.

பாதத்தில் ஆரம்பித்து உங்களது கழுத்தில் அவர்கள் முடிப்பார்கள். ஏனெனில் அவர்களும் விழிப்புணர்வு அற்றவர்கள்தான்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அவர்கள் ஒரு தந்திரத்தைக் கற்று வைத்திருக்கிறார்கள்.

அதாவது, நீங்கள் யாரையாவது உங்களுக்குச் சொந்தமானவராக ஆக்க விரும்பினால் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்பதுதான் அது.

இப்படிப்பட்ட ஒரு தந்திரத்தை அவர்கள் கற்றுவைத்திருப்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது.

ஆனால், அவர்கள் செய்வது எல்லாம் கெடுதலில்தான் முடியும். ஏனெனில், அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும், அது மற்றவர்களை தங்களுடையராக்கிக் கொள்வதற்கான முயற்சியாகத்தான் இருக்கும்.

அது என்ன பெயரில், என்ன வழியில் வந்தாலும், அது ஒரு பாவச் செயல், சமயச் பற்றற்றது.

- ஓஷோ -