Tuesday, July 18, 2017

இஸ்லாமியக் கட்டிடக்கலையில் கணிதத்தின் ஆளுமை


ஹமீது ஜாஃபரின் கட்டுரை :

எங்கள் ஹஜ்ரத்தை ஓவியமாக வரைந்து  அவர்களிடம் ஒரு சீடர் (ஆபிதீன் அல்ல!) கொடுத்தபோது, “அட.., என்னை மாதிரி இரிக்கிதே” என்றார்கள். அப்படி சொன்னதோடுமட்டுமல்ல அதில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் அப்படி சொன்னதில் ஆயிரம் அர்த்தம் பொதிந்துள்ளது. ஒரு சாமானியனின் ஓவியத்திற்கா இந்தப் பாராட்டு…! இல்லை,  எத்தனையோ ஓவியர்கள் அவர்களை வரைந்துள்ளனர், அவற்றில் ஒன்றுகூட அவர்கள் மாதிரி இல்லை என்பதுதான் எதார்த்தம்.

எத்தனையோ ஓவிய  ஜாம்பவான்கள் உலகில் இருக்கின்றனர் ஆனால் ஒருவருக்குக்கூட இஸ்லாமிய ஓவியத்தின் நுட்பம் அறிந்தாரில்லை , சமீப காலம் வரை. எதோ குறுக்கும் நெடுக்குமாக ஓடும் கோடுகளில் உண்டாகும் நட்சத்திரங்களை ஒத்திருப்பதாக தெரிந்திருக்கக்கூடும். அதனால் அதன்மீது கவனம் செலுத்தாமல் இருந்திருக்கக்கூடும்.

இஸ்லாமிய கலை என்பது பிரத்தியேக அமைப்புள்ளது.  அது வெறும் வரைகலையல்ல; மாறாக பார்ப்பவர் கண்கவர அமையப்பெற்ற ஓவியங்களை விஞ்சி நிற்கும் வரைகோடுகளின் நர்த்தனம், கோணங்களின் அபிநயம். இந்தக் கலையைப் பற்றி ஒரு பார்வை என்னுள் இருந்துவந்தது. விரிவாகச் சொல்வதானால் வளைகுடா நாடுகளில் என் வாழ்வு நடந்தேறிக்கொண்டிருக்கும் காலம் முதல் அதன் மீது ஒரு காதல் இருந்தது. ஆனால் அதன் அழகு / நேர்த்தி எப்படி வந்தது , எந்தக் காலம் தோன்றியது என்பதெல்லாம் ஒரு புரியாத புதிராகவே இருந்துவந்தது. நான் ஒன்றை தேடப்போய் எதிர்பாராதவிதமாக என் கேள்விக்கான பதில் கிடைத்தது என்று சொல்லலாம்.  இதுபோன்ற நிகழ்வை, உங்கள் தேட்டம் அதில் கொண்டுபோய் விட்டுள்ளது என்று எங்கள் ஹஜ்ரத் சொல்வார்கள். உண்மையும் அதுதான்.

இஸ்லாமிய கட்டிடக்கலையில் கணிதத்தின் ஆளுமை.


பாரசீகத்திலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், இன்னபிற நாடுகளிலும் இருக்கும் பள்ளிவாசல்களில்  உள்ளும் புறமும் காணப்படும் அலங்காரம், வடிவமைப்பும் கண்ணைக் கவரும் வண்ணத்தில் Calligraphy முறையில் பொறிக்கப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களைக் கடந்து பதியப்பட்டுள்ள கோடுகளால் ஆன Decoration  பிரத்தியேக அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கின்றன.

இஸ்லாமிய நாகரீகத்தில் கணிதத்தின் அமைப்பு, கட்டிடக்கலை மற்றும் கலை இவைகளின் ஒழுங்குமுறை பற்றிய இன்றைய ஆராய்ச்சியில் ஒரு துறையாக இது பங்கு வகுக்கிறது.   கணித ரீதியிலான பிரதிபலிப்புக்கும் செயல்முறைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பை எவ்வாறு கான்கிரீட் மற்றும் குறியீட்டு வடிவங்களாக  (symbolic form)  கட்டிடங்களில் அமைத்து அழகுபடுத்துவது என்கிற திட்டமிடலை வல்லுனர்கள் தெரிவித்தனர். மேலும் சமீபத்திய ஆய்வாளர்கள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தகைய கணித முடிவுகளை உணர்வதில் அற்புத முன்னேற்றம் காட்டினர்.  இது தொடர்பான பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து வெளிகொணர்ந்துள்ளார் பேராசிரியர் சலீம் அல் ஹஸனி. இன்னும் பல கண்டுபிடிப்புகள் வரவிருக்கின்றன என்று கூறும் பேராசிரியர் அறிவியல், கட்டிடக்கலை கணிதவியலார் மற்றும் வரலாற்றாசிரியர்கள் வட்டத்தில் விவாதங்களை முன் வைத்து இஸ்லாமிய பாரம்பரியத்தில் தத்துவார்த்த மற்றும் பயன்பாட்டு கணிதத்திற்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

அமெரிக்க ஆய்வாளர்களான  Peter J.Lu மற்றும்  Paul J.Steinhardt  "Sophisticated Geometry in Islamic Architecture", "Geometry meets artistry in medieval tile work", "Geometry Meets Arts in Islamic Tiles". என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 2007ல் வெளியிட்ட ஆய்வறிக்கை அறிவியல் உலகில் முக்கிய செய்தியாகப் பேசப்பட்டது. அதில் அவர்கள் குறிப்பிடும்போது மத்திய காலக்கட்டத்தில் இஸ்லாமிய கலைஞர்கள் ஜியோமிதி நுட்பத்தைப் பயன்படுத்தி கடும் சிக்கலான அலங்கார வடிவங்களை உருவாக்கினார்கள் என்பதை மேற்கத்திய கணிதவியலாரினால் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அறிந்திருக்கவில்லை. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களிலும் அரண்மனைகளிலும் வெறும் ஐந்து வார்ப்புருவகளைக் கொண்டு அலங்கார நட்சத்திரங்களை பல கோணங்களில் அமைத்தார்கள்.

இத்தகைய typical girih (The girih [is] a highly codified mode of geometric patterning with a distinctive repertoire of algebraically definable elements…) வடிவமைப்புகளை உருவாக்கிய இஸ்லாமிய கைவினைஞர்கள் மிக கடினமான கணிதக் கருத்துப்பற்றிய உள்ளுணர்வுகளை புரியும் அறிவினை கொண்டிருந்ததாக கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மத்தியகால இஸ்லாமிய கலைகளில் கணிதம் முக்கிய பங்கு வகுத்திருப்பதற்கான ஆதாரமாக இருக்கலாம் அல்லது தங்கள் கலையை எளிதில் நிர்மாணிப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Girih வடிவமைப்புகள் முக்கோண அல்லது சதுர வடிவ சிறிய பலநிற கட்டங்கள் அமைந்த ஒழுங்குமுறையாகவும் ஒன்றின் மீதொன்றான zigzag நெளிவுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. அவற்றை உருவாக்க மட்டப்பலகை மற்றும் கோணமாணி (straightedge rulers and compasses) கருவிகளை பயன்படுத்தி ஒவ்வொரு வடிவமும் கடினமிக்கதாகவும் மிகத்துல்லியமாகவும் வரையப்பட்டி ருக்கலாம் என கருதப்படுகிறது.

இருப்பினும் 15ம் நூற்றாண்டிலிருந்து கையாளப்படும் ஒத்த பரிமாண அல்லது சமச்சீரானா இத்தகைய அமைப்பு “quasi-crystalline” என அறியப்படுகிறது. இதனை ஐந்து முறையோ அல்லது பத்து முறையோ சுழற்ற முடியுமாதலால் முடிவற்ற நிலைக்கு அதனை கொண்டு செல்லலாம். கடந்த 1970ல் ஆக்ஸ்போர்டு கணிதவியலரான Roger Penrose இந்த quasi-crystalline தத்துவத்தை கணக்கிட்டார். ஆனால் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்லாமிய கைவினைஞர்கள் இதனை உருவாக்கிவிட்டனர்.

Geometry at the basic Islamic architectural decoration

மத்தியகால இஸ்லாமிய கலை பற்றிய ஆய்வில் ஜியோமிதி (geometry) முறையை மூலதனமாகப் பயன்படுத்தியிருப்பது சில நூற்றாண்டுகளுக்குப்பின் நவீன கணிதமேதைகளால் கணிக்கப்பட்டது. குறிப்பாக இதனைப் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் 15ம் நூற்றாண்டு கலைஞர்களும் கட்டிடக்கலைஞர்களும் இன்றைய கணிதமேதைகளால் அழைக்கப்படும் “quasicrystalline geometry” என்ற நுட்பத்தைப் பயன்படுத்தும் வித்தையை வியக்கத்தக்க வகையில் அறிந்திருந்தனர்.

1200லேயே இஸ்லாமிய கணிதமும் வடிவமைப்பும் முக்கிய கண்டுபிடிப்பின் முன்னேற்றமாக இருந்தது என்று Paul J. Stainhardt மற்றும் Peter. J. lu வும் 2007 பிப்ரவரியில் அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கையில் கூறுகின்றனர். மத்திய ஆசியாவில் முஸ்லிம் கட்டிடக்கலை நிபுணர்கள் கணிதத்தைப் பிரதிபலிக்கிற சாயல்களை உருவாக்கியுள்ளதையும் காட்டுகிறது.


Peter Lu, தன் தொழில் முறை பயணமாக உஸ்பெக்கிஸ்தான் சென்றிருந்தபோது அங்கு quasi-crystalline அமைப்பில் தசகோண கலைவடிவங்கள் (decagonal artworks) இருப்பதை கண்டு வியப்படைந்தார். பின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் திரும்பியபின் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய நூலகத்தில் இஸ்லாமியக் கலையின் quasi-crystalline ன் வடிவமைப்பைத் தேடியதில் ஐந்துபக்க  பலகோண அச்சின் வரைவு, பத்துபக்க தசகோணம், அறுகோணம், ஐங்கோணம், சாய்வு சதுரம் (rhombus) மற்றும் வில் வடிவ அமைப்பு முதலான அனேக கட்டிடக்கலை சுவடிகள் கிடைத்தன. அவற்றை ஒன்றோடொன்று இணைக்கும்போதும் ஒன்றன் மீதொன்றாக அமைக்கும்போதும் இத்தகைய வடிவங்களை உருவாக்கமுடியும் என அறிந்தார்.

மனித, மிருக உருவங்கள் அமையக்கூடாது என்பது இஸ்லாமிய மரபு. அதன் பிரகாரம் மத சார்பான பல இஸ்லாமிய கட்டிடங்கள்  இல்லாமல் ஜியோமிதி கணிதப்படி நட்சத்திரம் மற்றும் பலகோண வடிவங்களில் (grometric star and polygon petterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவைகளின் இணைப்பு  பெரும்பாலும் ஜிக்ஜாக்(zigzag) வளைவுகள் போலுள்ளன. 13ம் நூற்றாண்டின் இஸ்லாமிய கைவினைஞர்கள் அலங்கரிக்கப்பட்ட பலகோண ஓடுகளை (decorated, polygonal tiles) உருவாக்க சிறு சிறு தொகுப்பு அச்சுகளை உண்டாக்கினர்.  இதற்கு கிரிஹ் ஓடுகள்(girih tiles) என்றழைத்தனர் என்கிறார் பீட்டல் லூவும் ஸ்டீன்ஹர்ட்டும் தங்களது அறிவியல் பத்திரிக்கையில். வரை நுணுக்க வேலைபாடுகளை மட்டப்பலகை மற்றும் கோணமாணிகளின் உதவியினால் உருவாக்கினர் என்கின்றனர் கலைவரலாற்றாசிரியர்கள். ஆனால் ஆய்வறிக்கையோ முஸ்லிம் கைவினைஞர்கள் தசகோணம், ஐங்கோணம், அறுகோணம் டைமண்டு வடிவங்களை ஒரு basic toolkit of girih யினால் வடிவங்களை உருவாக்கினர் என்கிறது.

மட்டப்பலகை மற்றும் கோணமாணிகளினால் இத்தகைய வடிவங்களை உருவாக்கியிருக்கலாம் என்று நாம் முடிவுக்கு வந்தாலும் பத்துபக்க தசகோண ஓடுகளை (ten sided decagonal tiles) உருவாக்க வேறுவகை நுணுக்கமான கருவிகளைப் பயன்படுத்திருக்கலாம். ஆனால்  பலநூறு தசகோண வடிவங்களை நேரான விளிம்பில் நிறுவுவது மிகுந்த சவால் உள்ளதாக இருந்திருக்கும் என்று பீட்டர் லூ தி இண்டிபெண்டண்டுக்குக் கொடுத்த ஆய்வறிக்கையில் கூறுகிறார்.

இதன்விளைவாக அறிவியல் வட்டத்தில் சூழப்பட்ட விவாதங்கள் இருந்தபோதிலும் இஸ்லாமிய அறிவியல் பாரம்பரியத்தில் அனேக கண்டுபிடிப்புகள் இன்னும் வரவிருக்கின்றன. இன்னும் முஸ்லிம் நாகரீகத்தில் பல்வேறு தொடர் ஆராய்ச்சிகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் நம் அறிவுக்கு விருந்தாகக்கூடும்.

Periodicgirih pattern from the Seljuk Mama Hatun Mausoleum in Tercan, Turkey (~1200 CE), with girih-tile reconstruction overlaid at bottom.

கணிதம், கலை, செய்முறை அறிவு ஆகியவற்றுடன் இணைந்த இஸ்லாமிய கட்டிடக்கலை பற்றிய இன்றைய ஆராய்ச்சியின் பின்னணியாக Muqarnas என்ற கலை அமைப்பைக் குறிப்பிடலாம். Muqarnas என்பது பாரம்பரிய இஸ்லாமிய கட்டிடக்கலையில் ஒரு வகை அலங்கரிக்கப்பட்ட உத்தர சட்டம் (Muqarnas is a type of corbel used as a decorative device in traditional Islamic architecture.) [corbel – மேல் தளத்தைத் தாங்கிப்பிடிப்பதுபோல் தூணில்/சுவற்றில் பொருத்தப்பட்டுள்ள தாங்கு, இது பெரும்பாலும் கோயில்களில் காணலாம்.] இது 10ம் நூற்றாண்டில் வடகிழக்கு ஈரானிலும் அதே காலகட்டத்தில் மத்திய வடக்கு ஆப்ரிக்காவிலும் வளர்ந்துவந்த கட்டிடக்கலையின் அலங்கார அமைப்புக்கான அரபி பெயர் muqarnas என்பது. இது பல அடுக்குகளைக்கொண்ட முப்பரிமாண அலங்காரம். எளிமையான ஜியோமிதி கூறுபடி இரு பரிமாண முறையிலும் சிறிய வடிவிலும் அமைக்கலாம். இதன் சிறந்த எடுத்துக்காட்டை ஸ்பெயின் கிரானேடாவிலுள்ள  அல்ஹம்ப்ராவிலும் கெய்ரோவிலுள்ள சுல்தான் குத்துபியின் அடக்கத்தலத்திலும் காணலாம்.

muqarnasன் தனி அழகை ரசித்துப் பயணித்தவர்களின் குறிப்பு வரலாறு முழுவதும் சுருக்கமாக இருந்தனவே தவிர விரிவானதாக இல்லை. எனவே இன்னும் பல விசயங்கள் தெளிவுபடுத்தப்படாமலேயே இருக்கின்றன. இந்த கட்டிடக்கலையில் அழகுபடுத்தும் கலையில் பணிபுரிந்த Shiro Takahashi  பல்வேறு muqarnas களை வகைப்படுத்தி வரைபடமாக உருவாக்கி அவற்றை உருவாக்கும் யுக்திகளையும் விளக்கியிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க ஜெர்மனியிலுள்ள ஹெய்டல்பர்க் பல்கலைகழக்கத்தின் அறிவியலார் Yvonne Dold-Samplonius தலைமையில் இஸ்லாமியக் கட்டிடக்கலையில் muqarnas tradition ஆய்வுத் திட்டம் வகுக்கப்பட்டது.  இத்திட்டத்தில் சுண்ணாம்பு காரைப் படிவ வளைவுகளின் புணர்நிர்மானத்திற்கான கணிதக் கருத்து மற்றும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எடுத்துக்கொள்ளபட்டது.

                    
Combination of Mathematics, Astronomy, Art and Architecture
       
சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று முஸ்லிம் கட்டிடக்கலை வல்லுனர்களும் விஞ்ஞானிகளும் அலங்கார வடிவ அமைப்புகளை உண்டாக்குவதற்கப்பால் கணிதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது தெளிவு.  இதன் வெளிப்பாடாக துருக்கியிலுள்ள சிவஸ் [https://www.britannica.com/place/Sivas] நகரிலுள்ள திவ்ரிகி உலூ மசூதி செல்ஜிக் கட்டிடக்கலையின் முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஜியோமிதி பாணியிலும் தாவரவியல் அமைப்பிலும் வடிவமைப்பதில் துருக்கி தலைசிறந்ததாக விளங்குகிறது. இந்த வியத்தகு மசூதி 1228 ம் ஆண்டு Mengucekid அமீர் அஹமது ஷாவால் நிறுவப்பட்டது. இது அஹ்லாத் நகரின் Hurremsah என்ற கட்டிடக்கலை நிபுணரால் கட்டுவிக்கப்பட்டது. இது UNESCO வால் அங்கீகரிக்கப்பட்டு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகப்பாரம்பரியப் பட்டியலில் 1985ல் சேர்க்கப்பட்டுள்ளது.

மசூதியில் வெளிப்புற சுவர்களில் வடிவமைக்கப்பட்ட வளைவுகளில் பல்வேறு உருவ நிழல்கள் காணப்படுகின்றன என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஒரு நாளில் பல்வேறு வேளைகளில் நான்கு வகையான உருவ நிழல்கள் வெவ்வேறு திக்குகளில் சுவற்றில் தோன்றுகின்றன. முதல் மூன்று நிழல்கள் முறையே ஒரு மனிதன் நேராகப் பார்ப்பதுபோலவும், புத்தகம் வாசிப்பது போலவும், தொழுவது போலவும் காட்சியளிக்கிறது. நான்காவது ஒரு பெண் தொழுவதுபோல் காட்சியளிக்கிறது. கணிதம், வானிலை மற்றும் கலை ஆகியவற்றின் கலவை இல்லாமல்  இந்த குறிப்பிட்ட அம்சம் வடிவமைக்கப்படவில்லை. உண்மையில் இந்த மசூதி நிர்மாணிப்பதற்கு முன் இரண்டாண்டுகள் சூரியன், நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை சரியாக கவனித்து அதன்பின்னரே மிகக் கவனமாக கணக்கிடப்பட்டு சுவர்கள் எழுப்பப்பட்டு வெளிப்புற கதவுகள் செதுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக...

ஐநூறு ஆண்டுகளுக்குமுன் தோன்றிய கலை நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இன்று அதன் நுணுக்கம், அறிவு, தொழில்நுட்பம் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இது இத்துடன் நின்றுவிடவில்லை. இன்னும் எத்தனை சூட்சமங்கள் இருக்கின்றன என்பது வல்லுனர்களின் ஆய்விலும் வாதப் பிரதிவாதங்களிலும் பொதிந்து கிடக்கின்றன. அப்போது அதன் அறிவு இன்னும் நமக்கு பிரமிப்பாக இருக்கும்.

இக்கட்டிடக் கலை இஸ்லாத்தில் மாத்திரமில்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்தினரிடமும் கட்டிடக்கலை மட்டுமல்ல மற்ற எல்லா கலைகளும் எல்லா அறிவுகளும் ஒவ்வொரு வகையில் மேலோங்கி இருந்தது. பின்நவீனத்துவம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இன்றைய அறிவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நவீனத்துவம் இல்லாத அந்த காலக்கட்டத்தில் மிளிர்ந்த அறிவு பிரமிக்கத்தக்கதாக மட்டுமல்ல புதிராகவும் இருக்கிறது. இதுபோன்ற என்னற்ற புதிர்கள் தானாக நிகழ்ந்ததல்ல, எல்லாம் ஒரு கணிதத்தின் ஆளுமைகொண்டே நிகழ்ந்திருக்கிறது.

Sources:   http://www.muslimheritage.com/article/new-discoveries-in-islamic-complex
 http://www.nature.com/news/2007/070219/full/news070219-9.html
*

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Thursday, July 6, 2017

சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள் (02)

சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள்

அத்தியாயம் 01

அத்தியாயம் 02

ஆபிதீன்

*

சென்ற வருடப் பிறப்பன்று (01.01.95, 01:30 am) சர்க்கார் பேசியதிலிருந்து:

இந்த வருடத்தில் நீ என்ன செய்வாய் என்று கேட்கிறார்கள். குழம்பிக் குழப்பவே சீடர்கள் இருக்கிறார்கள். 'Specificஆ என்ன வேணும்டு தெரியினும்பா' என்று சொல்லிவிட்டுச் சொல்கிறார்கள்: 'Financial Security - First & Best. Most Important. அது இல்லாம ஞானம் பலிக்காது. நாம சந்தோஷமா இருக்கனும்; நாலு பேருக்கு உதவனும்; கடன் இருக்கக்கூடாது. ஒரு 50 பவுன் நகை, குறைஞ்சது. ஆனா அது பேங்க்லெ அடமானத்துக்கு போயிடக்கூடாது' என்று சொல்லி , 'சரி, நீ என்னா செய்வா' - ஒருவரைக் கேட்கிறார்கள். 

'வூடு கட்டுவேன் சர்க்கார்'. 

'எது? இந்த குஸ்திலெ கட்டுவாஹலே... அந்த வூடுதானே? எட்டுவூடு பத்துவூடுண்டுலெ கட்டுவாஹா அதுலெ. நீ எவ்வளவு கட்டப்போறா?'

'நாலு அஸ்திவாரம் போட்டு ஒரு வூடு கட்டுவேன் சர்க்கார்'. '

அட , என்னெட்ட உள்ள ஒரு கெட்ட குணத்தை நீக்குவேன், ஒரு நல்ல குணத்தை உண்டாக்குவேண்டு சொல்லேம்பா! ஏன் பணத்தைப் பத்திப் பேசுறேண்டா அதுதான் எல்லாருக்கும் மெயின் பிரச்சனையா இக்கிது'

*

'எதைபத்தி உங்களாலெ கற்பனை பண்ணமுடியலையே அதை அடைய முடியாது. தூங்கப்போகும்போது வரும் எண்ணம் விழிக்கும்போதும் வந்து, அந்த எண்ணம் Dominating Forceஆகவும் அது Businessஆகவும் இருந்தால் - Businessman ஆகலாம் -  இந்த Burning Desireஐக் கொண்டு. What a Human mind can conceive and believe it can surely achieve. When you are ready for a thing it is sure to happen. 

பணம் மட்டும் போதுமா? பத்தாது. செல்வாக்கு வேணும். மொதல்ல பொண்டாட்டி மதிக்கனும் நம்மளை. அவளை சந்தோஷப்படுத்தனும். அப்பத்தான் புள்ளையிலுவ நல்லா இக்கிம். பொண்டாட்டிய அரவணைச்சிக்கிட்டே போவனும். பொஞ்சாதி 'துஆ பரக்கத்' ஸ்ட்ராங்கா இருக்கனும். 'Backing force' அவதான். 

செல்வம் நமக்காகத்தானே தவிர செல்வத்துக்காக நாமல்ல. பணத்தை வேலைக்காரனா மதி. அப்ப செல்வம் தானா வரும். 

Something for Nothing என்று எதுவும் கிடையாது. 

சமுதாயத்தோடு கலந்து பேசும்போது நடியுங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுங்கள். நம் Philosophyஐ வெளியில் சொல்ல வேண்டாம். கல்லால் அடிபட வேண்டிவரும். அதாவது , இரண்டு வாழ்க்கை தேவை. சமுதாய வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை. சமுதாய வாழ்க்கைக்கு செல்வாக்கு கொடுப்பதே அந்தரங்க வாழ்க்கைதான். 

Cigarett Lighterஐ கொளுத்தாம இருந்தா வீணாப் போவுது. கார் ஓடலைன்னா சக்கரம் வீணாப் போவுது. மனசு அப்படியல்ல. சும்மா இருந்தா நெகடிவ் விஷ வித்துக்கள் வளரும். அதனால்தான் திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும் - மேன்மையாக. 

ஆண்டவன் ஒருவன் என்று பெயர். எத்தனை கோடி இதயங்கள் உண்டோ அத்தனை கோடி ஆண்டவன் இருக்கிறான். 

ஆசை ஸ்ட்ராங்கா இருந்தா தனக்குத்தானகவே காரியம் நடக்கும் - இதை உருப்போடுங்க. 

Succes Philosophyல் Dependable Memory அவசியம். இதற்கு  Subconsciousஐ Strengthen பண்ணனும். அதுக்கு திரும்பத் திரும்ப பழைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டும் - இரவு படுக்கப்போகும்போது. Dependable Memoryயும் வரும். Subconscious-ம் ஸ்ட்ராங்கா ஆகும். 

அவசியமா அது? இப்ப அவசியமா? இவ்வளவுக்குத்தான் செய்யனுமா? என்று 3 முறை கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்று நெகடிவ்வாக இருந்தாலும் அந்தக் காரியம் செய்ய வேண்டாம். (பணம் செலவு செய்வது பற்றி). 

நானும் ஹோம்வொர்க் பண்ணிக்கிட்டுத்தான் இக்கிறேன். நான் இப்ப சொல்றது அஞ்சாம் கிளாஸ் பையன் நாலாங்கிளாஸ் பையனுக்கு சொல்ற மாதிரி. இப்படித்தான் வாழனும். ஒரு கை , மேலேயுள்ள அறிவைப் பெற. மறு கை, கீழே உள்ளவனை தூக்கி விட. இரண்டு கையையும் மேலே தூக்குனா சுயநலம். ரெண்டு கையையும் கீழே கொண்டுவந்தா இழுத்துப் போட்டுடுவான், ஜாக்கிரதை. இதுதான் லைஃப். 

பெரும் பணக்காரனுக்கு நோய்வர என்ன காரணம்? பணம் பணம் பணம்டு பொய்ட்டான். பணத்தோட சேர்த்து லைஃபையும் சேத்து நெனைச்சிருந்தாக்கா பணம் பணமா இருக்கும். செல்வாக்கு செல்வாக்கா இருக்கும். உடல் ஆரோக்கியமா இருக்கும். 

என் Principleஐ வச்சித்தான் நீங்க வளர முடியும். என் Principle என் Principle அல்ல, பெரிய தலைகள் எல்லாம் வளர்ந்தது இந்த Principleஐ வச்சித்தான்'

*

1995 புதுவருடப் பேச்சு கேஸட் இன்று - 19.01.1996  - மஞ்சனூர் ஜெப்பார்நானா மூலம் காலையில் கிடைத்தது. 

வெள்ளி 'செஷனுக்கு' உட்காரும் சமயத்தில் இதைக் கேட்டேன், எழுத. பழசை எத்தனை முறைதான் கேட்பது என்று புதுசு. இந்தக் கேஸட்கள் ஒரு காலத்தில் கனவாகப் பேசப்பட்டு வந்தன. என்னால் நினைக்கப்பட்டும் வந்தன. அவர்களை விமர்சித்த காலங்களில் அவர்களின் 'Business' பற்றிய கேஸட்டைப் பெற நாடினேன். ஆனால் முடியவில்லை. இப்போது சர்க்காரை நாடிவிட்டபோது முயல நினைத்தாலே போதுமானது. 'இதெயே போன வருஷம் கேட்டிந்தா கொடுத்திருக்க மாட்டேன். இப்ப செட்டுலெ இருக்கீங்க. பொண்டாட்டிட்ட கூட கொடுக்காதது இந்த கேஸட்கள்.. எடுத்துட்டுப்போயி கேளுங்க ' என்று சொல்லியே ஜெப்பார்நானா கொடுத்தார்.

'நானா.. அந்த பிசினஸ், ஹிப்னாடிஸம் பத்தின கேஸட்..'

'அது ஊருலெ இக்கிது. போய் எடுத்துட்டு வர்றேன்'

கிடைக்கும். ஆனால் செஷன்-ன் தொடர்ச்சிதான் கிடைக்கவில்லை. துபாய் வந்து ஒன்றரை மாதமாகிறது. ரவூஃப், என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறாய்? அனுப்பினாயா? யாருக்கு?

*

அடுத்த கேஸட் 29 to Jan 95 என்று போட்டிருக்கிறது. டிசம்பர் 94ஐச் சொல்கிறதா ஜனவரி 95ஐ சொல்கிறதா?

'மேலே வர்ற Improvement எல்லாம் கீழே வரனும் முதல்லெ. கீழே வர்ற Improvement-லாம் மனசுல வரனும். மனசுல வந்தாத்தான் செயலே மாறும். அதனாலே , நீங்க தொழுதுகிட்டே இக்கிறீங்க, உங்க லைஃப்லெ மாத்தம் வரலைண்டா ஒண்ணு நீங்க தொழவே இல்லே, இல்லே உங்க 'நெகடிவிடி' , தொழுகையினால வர்ற இம்ப்ரூவ்மெண்ட்டை விட ஸ்ட்ராங்கா இருக்கு. அதனாலெ நாலு நாள் அல்ல, நாப்பது நாள் தொழுவுங்க. 

இப்பவும் சொல்றேன், அப்பவும் சொல்றேன், எப்பவும் சொல்றேன், சுடுகாடு சுவனமா மாறுவதற்கு நாப்பது நாள். பிச்சைக்காரன் கோடீஸ்வரனாக நாப்பது நாள். நாப்பது நாள்தான். இப்பவும் சொல்றேன்.  Only நாப்பது நாள். 

எந்தப் பயிற்சியும் செய்ய முடியும். ஆனா, நீங்க ரெடியா இருக்கனும்..எல்லாத்தையும் control  பண்ணனும். எதை? சின்னச் சின்ன செயல்களை Control பண்ணுங்க. Control ஆவுதா? Mind திரளுதுண்டு அர்த்தம்'


அரேபியா :

'அரேபியாவுக்கு ஏன் போவ வாணாங்குறேன்? உங்க இளமை, உங்க ஆரோக்கியம், உங்க மகிழ்ச்சி, நீங்க கொஞ்சுறது, வெளையாடுறது...எல்லாத்துக்கும் மேலே ஆண்மை... அந்த சூட்டுலெ ஆண்மை பொய்டும்! எல்லாத்தையும் உட்டுப்புட்டு ஒரு ஈஸி சேர், ரெண்டு கட்டு சுருட்டு, மூணு காராபூந்தி பொட்டலம்; சும்மா 'கூல்' பண்ணி உட்டுடுலாம். இதுக்குப் போயி மாஞ்சி மாஞ்சி வுழுவுது ஜனங்க!'

ஊர் :

'மனுஷன் நல்லவனா கெட்டவனா என்பது முக்கியமல்ல. திறமைசாலியா என்பதுதான் முக்கியம். தெருவுக்கு ஒரு தலைவன் தேர்ந்தெடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த உலமாக்கள் ஊருக்கு அவசியம்' - போலீஸ் ஸ்டேஷன் இல்லாத நிலைவர என்று பேசும்போது.

வாய்:

'நான் ஏன் (டிவி'யில்) சினிமா போடுறேண்டு கேட்டா படம் பாக்குறதுக்கு அல்ல, நீங்கள்லாம் கேள்வி கேட்காம இருக்குறதுக்கு!'

பீ :

சர்க்கார் கொடுக்கும் பயிற்சிகளைக் கடைப்பிடித்து வந்தால்? சர்க்கார் சொல்கிறார்கள்:

'நடக்குற முறை, அசையிற முறை, 'ஸ்மோக்' பண்ணுற முறை , ஏன் - தண்ணி குடிக்கிற முறை.. (எல்லாம் மாறும்)- பீ பேலுற முறையை நாம பாக்க முடியாது, பேண்ட பீயை வேண்டா பாக்கலாம் - நம்ம வூட்டுலெ முடியாது, FlushOutஆ இல்லாம இருந்தா பாக்கலாம் - அதுல பெஸ்ட் பீ பேலுறது சிஹாபு நானாதான். கரெக்டா குழா மாதிரி பேலுவாஹா. லேசா அமுக்கி வுட்டுடுவாஹாண்டு நெனைக்கிறேன். லேசா, ரிலாக்ஸ்டா பேலனும். சுஹமா பீ பேலனும்.'

நான்:

சர்க்கார் , என் பத்துவருட அரபுநாட்டு வாழ்க்கையில் ரெண்டு சுருட்டு கட்டு வாங்கிவிட்டேன். அஸ்மா, தன் நகையை அடகுவைத்து எப்படியும் முன்று காராபூந்தி பொட்டலம் வாங்கிவிடக்கூடும். அந்த ஈஸி சேர், அதற்குத்தான் இந்த துபாய் அல்லது வரவிருக்கிற லண்டன் அல்லது பாரீஸ்! சிங்கப்பூரில் வாங்குவதும் நல்லதுதான், சீக்கிரம் ஊருக்கு கொண்டு வந்து விடலாம். அங்கே போகவா?

*

'எண்ணத்துல மாத்தம் வந்திச்சின்னா செயல் மாறும். Thought Habit மாறும்போது எதையும் செய்யலாம். முடியாதுண்டு தோணுதா? லேசா படுத்துக்கிட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க. அதை திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப நெனைச்சிக்கிட்டே இருங்க. அப்படியே பயம் தெளிஞ்சிக்கிட்டு வந்து, சாத்தியம்தான் இதுவரைக்கிம் சாத்தியம்தாண்டு தோணும். Positivity வந்திடுச்சிண்டு அர்த்தம். அப்புறம் at the reach of our hand என்று தெரிய ஆரம்பிக்கும். அப்ப.. reachக்கே வந்துடும். நீங்க செய்ய வேண்டியது என்னா? மனசை சுத்தமாக்கி வைங்க. எப்படி சுத்தப்படுத்துறது? இரண்டு வழி இருக்கு. அமைதியை உண்டாக்கிவிட்டு வாழ்வது ஒரு வழி. அமைதி உள்ள மாதிரி நடிக்கிறது மறு வழி. ஊருக்கு நடிக்கிறதுக்கு அல்ல, உங்களுக்கு நீங்களே நடிச்சிக்கனும்.' 

'நிற்கும்போது கோவம் வந்தா உக்காந்துக்க. பெரிய வேலையை செய்யாதே..உட்கார்ந்திருக்கும்போது கோவம் வந்தா படுத்துக்க, ஹதீஸ் இது. கோவம் வரும்போது நம் மாற்றுவழி போல நடிக்க வேண்டும் (உட்கார்ந்து->படுப்பது) அதாவது எண்ணத்துல மாற்றம் உண்டாக்கிட்டு செயலில் உண்டு பண்ணலாம்- ஒரு வழி. செயலில் வேண்டுமென்றே மாற்றம் ஏற்படுத்துவதால் எண்ணம் மாற ஆரம்பிக்கும், மறு வழி'.

*

சர்க்காரின் மச்சான் தாவுதுவாப்பா ஒரு கேள்வி கேட்டார்களாம்: 'ஏன் மச்சான், நீங்க காலேஜிலேயே கால் வைக்காத ஆளு. நான் M.Aலெ டபுள் டிகிரி. உங்களுக்கு Grasping Force அதிகம்!'

'நீங்க வந்தது என்ன காரணம்ட்டு.. நீங்களா எப்படி முடிவுக்கு வந்தீங்க? நீங்க புஸ்தகத்தை பொரட்டிக்கிட்டு இக்கிறீங்க. நான் புஸ்தகம் எழுதுனவன்ற மண்டைய பொரட்டிக்கிட்டிக்கிறேன்' - சர்க்காரின் பதில்.

*

'படிப்பு வேறே மரியாதை வேற அந்தஸ்து வேற Mental Force வேற. ஒரு பரப்பயலுக்கு வரட்டும் - பரப்பயல்ண்டு பொருளாதாரத்திலே 'வீக்'குண்டு அர்த்தத்துல சொல்றேன் , மனுஷனை குறை சொல்லலே - அந்த Mental Force வந்தா Top Class Peopleலோட மேலே பொய்டுவான்.' 

'என்ன வேண்டும் கேள் , உடனே தருகிறேன்' என்று அல்லா கேட்டபோது ஒருவன் கேட்டானாம், 'என்னுடைய பேரனுடைய பேரன் என் பரம்பரைக்கே சொந்தமா மூணு அடுக்கு மாளிகையில் ஓடி விளையாடுவதை என் கண்களால் பார்த்து நான் ஓடிக்கொண்டே ரசிக்க வேண்டும்!' இப்படி 'துஆ' கேட்கனும். அப்படி கேட்க தெரியலையா? கேட்காதே, சும்மா இரி. பிறகு என்னா செய்யிறது? சக்தியை வளர்த்துக்கிட்டே இரி. கத்தியை கூராக்கிட்டே இரி. உபயோகிக்கிற சந்தர்ப்பம் தானா வரும். எப்படிண்டு மட்டும் கேட்க வாணாம்'

*. 

நல்ல செய்தி பேசக்கூடியதும் சொர்க்கலோகத்து தோட்டங்களில் ஒன்று - ஹதீஸ்.

*

'ஒத்திப் போடுறதுக்கு காரணம் Inferiority Complex. எங்கே வளர்ந்துடுவோமோங்கற பயம் காரணம். வெற்றியைப் பார்த்து பயப்படுற குணம் காரணம். தாழ்வு மனப்பான்மையுடைய காரணம் Past Failures.'

'ஞானப்பாதை என்ன கொடுவா கருவாடா? கஷ்டப்படனும்.. உஸ்தாதுமார்களை Daily  பார்க்கனும், 'துல்லிபிரியாணி' சாப்பிட அல்ல. பாக்கனும், அவ்வளவுதான். 'தொழுவுங்க வாப்பா, நோம்பு புடிங்க வாப்பா'ண்டு சொல்றவனுக்கு போய் கொட்டுறானுவ.. ஒரு மயக்கத்துலெ, Hypnotic Forceலெ வாழுறான் மனுஷன்.. Illusion.. பாரபைத்தியம். எனக்கு என்னா, என்னை நம்பிக்கிட்டிக்கிற புள்ளையிலுவள தூக்கி வுட்டுடனும். இல்லேண்டா ஆத்மா சாந்தியடையாது. அட தூக்கி வுடுறதுக்கு மாத்தமா அமுக்கிக்கிட்டே ஒக்காந்திருந்தா என்னா செய்யிறது?'

ஒரு சீடனுக்கு திட்டு : 'எத்தனை தடவை சொல்லியிக்கிறேன், பத்திரிக்கை படிக்காதே, வெளிப்பேச்சு கேட்காதேண்டு! குறள்-ஐ refer பண்ணுறான்.. 'யேய்.. என் புஸ்தகத்தையே படிக்காதேங்குறேன்.. குறளை சொல்றியே'ண்டு அடிச்சா அதுக்கு ஒரு மறு குறள் சொல்லுறான் டக்குண்டு! புரியலை, புரியிற 'நியமத்' இல்லே.. யாருக்கு ஆண்டவனின் முத்திரை நெஞ்சில் இல்லையோ , அல்லது யாருடைய முத்திரையை உடைக்க முடியுமோ , அல்லது யாருடைய முத்திரையை சூடு காமிச்சி - இதயத்துக்கு பழுதில்லாம - கரைக்க முடியுமோ அவங்களுக்குத்தான் நான் ஹெல்ப் பண்ண முடியும்.'

சர்க்காரின் 'ஸ்டார்' சின்னம்: 

'தெய்வத்தன்மை கீழே வந்து, வளர்ந்து, ஞானப் பாதையிலெ மறுபடி cross பண்ணி , அங்கே சமுதாயத்துக்கு தொண்டு செஞ்சிட்டு, அப்புறம் தெய்வத்தன்மைக்கே மேலே பொய்டுது. அதுதான் 'ஸ்டார்'ண்டு Symbolஆ பேர் வச்சிக்கிறோம். வட்டம் என்பது அண்ட சராசரம். அண்ட சராசரத்தை துளைச்சிக்கிட்டு போற 'ஸ்டார்'. சக்தி படைச்சது இந்த 'ஸ்டார்'. அதனாலதான் கூம்பை முன்னாலெ போட்டேன்!.

*

பேசாதே : 

சர்க்காரிடம் ஏச்சு வாங்காமல் தப்பிப்பது கடினம். முக்கால்வாசி ஏச்சு நம் முந்திரித்தனத்தால் கிடைக்கும். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் நமக்கு ஆயிரத்தெட்டு சந்தேகம் வந்தாலும் கேட்கக்கூடாது. 'Flaw வச்சித்தான் ஒவ்வொண்ணையும் சொல்றேன். நீங்க கேட்கனும்' என்று சொல்வது , அவர்கள் பேசி முடித்த பிறகு. 'ஒவ்வொரு செய்கையையும் உணர்ந்து, ரசித்து செய்ய வேண்டும் - அந்த செயலைச் செய்கிற பிரக்ஞையோடு - உதாரணமாக டீ குடிப்பதை இந்த அளவு நிதானத்தோடு...' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடையில் நான் பாய்ந்தேன் பொறுக்கமாட்டாமல் . 'ஜப்பானில்கூட தேநீர் வைபவம் ஒன்று இருக்கிறதாம்..அங்கே ஒரு டீயை குடிக்க 3 மணி நேரம் ஆகுமாம்' என்று புகுந்தேன். ஜானகிராமனின் பயணக்கட்டுரை ஒன்றில் அவர் வியந்து - வழக்கம்போல- பேசுவார். அந்த ஞாபகம்.

'ஹராம்! நீங்க இப்படி பேசுறது ஹராம். வுட்டுடுங்க இதை'

'சர்க்கார், வந்து...'

'ஆக்கபூர்வமான, சரியான உதாரணம்தான். ஆனா அத நான் பேசி முடிச்சபொறவு சொல்லனும். இப்படி குறுக்கே விழக்கூடாது. நான் சொல்லும்போது உங்களுக்கு பலதையும் சொல்லத்தோணும். ஆசை கொப்பளிச்சிக்கிட்டு வரும். அடக்குங்க'

சரி, பேசாமலும் இருக்கலாமா? 'நான் பேசுற பாணியே கேள்வி கேக்குறமாதிரிதான் இருக்கும். நீங்க உங்க பதிலை சொல்லி என்னையும் எல்லோரயும் குழப்பி வுட்டுடாதீங்க' என்பார்களே என்று பிள்ளைகள் பேசாமல் இருந்தாலும் தொலைந்தது.

'நீங்கள்லாம் அவுலியா மாதிரி.. எது சொன்னாலும் பேசாம இருப்பீங்க' என்பார்கள்.

எப்படியோ சர்க்கார் வாயால் 'அவுலியா' பட்டம் என்று பிள்ளைகள் சந்தோஷப்படலாமோ?

'அவுலியாவெல்லாம் கழுதை மாதிரி!' - சர்க்கார் சரியாகவே முடிப்பார்கள் எப்போதும்.

கேள் : 

'பேசும்போது கேட்கனும்..அதுதான் நம்ம பிரின்ஸிபிள். சம்பந்தப்பட்டவர்கள்தான் கேட்கலாம். உங்களுக்கு ஞாபகம் வர்றதையெல்லாம் சொல்லக்கூடாது என்னெட்ட. உங்களுக்கு வரக்கூடிய எந்தக் கேள்வியும் சரி, எனக்கு வந்ததுதான். எல்லாரையும் 'அனலைஸ்' பண்ணிப்பார்த்த பிறகுதான் நான் பேசுறேன். எந்த தராசுலேயும் நிக்கிம் என் பேச்சு. படிக்கிற காலத்துலெ என் ஹஜ்ரத் என்னெட்ட ஒண்ணு சொல்லிக்கிட்டிருக்கும்போது 'இதுதானே ஹஜ்ரத் அல்லா சொல்றான் குர்ஆன்லெ' என்று நான் சொன்னதுக்காக மூணு மாசம் என்னோட பேசலை அஹ. இதை சொன்னப்போ 'டக்'குண்டு பதில் சொன்னாஹா, 'இதை அல்லா சொன்னபோது நான் வெளிலே போயிருந்தேன்பா'ண்டு. மூணு மாசம்.. உருக்கி உருக்கிப் பாத்துக்கிட்டு சும்மா இருக்காஹா! என் முகத்தைப் பாக்கவே இல்லை.. கதறுனேன். அப்ப என்னா சொன்னாஹா தெரியுமா, 'அல்லா இதெத்தான சொல்றாண்டு கேக்குறியே.. அல்லா யாருண்டு தெரியுமா? அல்லா யாரு, ரசூல் யாருண்டு தெரியாமதான என்னெட்டெ வந்திக்கிறா நீ? என் தோள் மேலேயா கை போடுறா? என் கூட்டாளியா நீ? என்ன, கலந்தா உரையோடுறோம்? பேச்சு கேட்க உட்கார்ந்திரிக்கிறியா, இல்லே, கலந்து உரையாடவா?' . அப்பத்தான் என் தப்பு தெரிஞ்சது.

'நான் சொல்லும்போது நீங்க ஒண்ணு சொன்னா கேட்கிற இன்னொருவருக்கு மனசுல ரெண்டு செய்தியும் ஒண்ணா ரிகார்ட் ஆகும். நாளைக்கி அவர் 'ரிபீட்' பண்ணும்போது என் செய்தியாக அவர் செய்தி வெளிவரும். நான் , பேசனுமே என்கிறதுக்காக கொஞ்சம் சும்மா இருப்பேன்..அவர் 'சர்க்கார் ஆமோதிச்சிட்டாஹா' என்பார். பேச்சுல எவ்வளவு Difficulties இக்கிதுண்டு சொல்றேன். ஒரு தனி ஸ்கூல் இது, மொத்தத்திலே. பத்தாயிரம் தடவை சொன்ன செய்தியை உங்கள்ட்ட சொல்றேன். ஒரு உஸ்தாது கிட்டே சிஷ்யப்பிள்ளை கேட்டாராம். 'நான் எங்கே போவ?'

'சிரியாவுக்கு போ'

'ஏஃபில் மஷூக் ஹூனாக்?' (எப்படி வாழுறது அங்கே?). சரிதானே? அறிமுகம் இல்லை. பழக்க வழக்கம் இல்லை.

'சந்தேகம் வந்துவிட்டது. என் அட்வைஸ் வேலை செய்யாது' - உஸ்தாத் சொன்ன பதில்.

ஆக , சொன்னா செஞ்சிடனும். அவ்வளவுதான். Geometryலெ ஒரு புள்ளி வச்சா One Dimension. பக்கத்துலெ இன்னொரு புள்ளி வச்சா Two Dimension. அதுக்கு மேலே ஒரு புள்ளி வச்சா 3 Dimension. இதை நம்பனும் முதல்லே. எப்படிண்டு கேக்கக்கூடாது. ஒத்துக்கிட்டா கால்குலேசன் பூரா கம்ப்ளிட்டா இருக்கும். அதனால்தான் Open Heartness & Open Mindnessஓடு இங்கெ வரணும். நீங்க பெத்துகிட்ட அறிவு பூரா கரைஞ்சி போறத கண்ணால பாக்கலாம். அதுக்காக , முன்னாடி தூக்கி வைக்கக்கூடாது - கரைச்சி வுடுங்கண்டு. உங்க அறிவு அறிவே அல்ல. அறிவுக்கு பேரு Knowledge. நாங்க சொல்றதுக்கு பேரு Wisdom. ஞானம். இது 'இர்ஃபான்', இது 'மஅரிஃபா'. இது ஜெனெரலா கொடுக்குற 'Talk' அல்ல. சோறல்ல. நோய்க்கு கொடுக்குற மருந்து. ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு மாதிரியா இருக்கும். இங்கே ஒவ்வொரு ஆளும் அப்பப்ப சில கேள்விகள் கேட்டு அதை உங்களுக்கு சூட்டபிளா அமைச்சிக்கனும். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு மாதிரி கொடுப்பேன், ஆளோட நோய்க்கு தகுந்தமாதிரி. ஆனா எல்லா மாத்திரையையும் கொடுத்துடுவேன், அதுதானே முறை!' - 'S'

*

03-08.01.95 கேஸட் :

'ஜனங்கள்ட்டெ வேதாந்தம் மாறனும். 'இது ஆகாது , இதோட விளைவுதான் அது' என்று நம்புற மனப்பான்மை மாறனும். மனசை சுத்தமாக்கி வச்சிக்கிட்டு டெஸ்ட் பண்ணி பாக்கனும்டு பாத்தா லைஃப் பத்தாது. எனவே டெஸ்ட் பண்ணி அதுக்காகவே லைஃபை அர்ப்பணிச்சிக்கிறவங்க பேச்சைக் கேட்கனும். அவ்வளவுதான்.'

ஒரு செட்டியாருக்கு ஒரு சாபு கடன் கொடுத்திருக்கிறார் (அப்படியும் நடக்குமா?!). இப்போது சாபுவுக்கு பயங்கரமான பணமுடை. செட்டியாரைப் போட்டு நெருக்கினார்.' இந்தோ அந்தோண்டு இழுத்தடிக்கிறியும்.. ரெண்டுல ஒண்ணு ; எப்போ தரப்போறியும்?'

அவர் ஆத்திரம் செட்டியாரின் பதிலால் உடனே வடிந்து விட்டது.

'நாளைக்கு சத்தியமா நிச்சயமா தந்துடுவேன் சாபு. உங்க வேலைதான் முதல்லெ'

சாபு இதைநம்பி மறுகடன் வாங்கி , சோறுகறி ஆக்கி தின்றுவிட்டு , அடுத்தநாள் செட்டியார் வீட்டிற்குப் போனால் செட்டியார் குந்திக்கொண்டு உட்கார்ந்து என்னமோ செய்துகொண்டிருக்கிறார். 'உங்க வேலையைத்தான் பாத்துக்கிருக்காரு' - செட்டியார் மனைவியும் சாபுக்கு குஷி ஏற்படுத்தினாள். 

'உங்க வேலதான்'- செட்டியார் ஒரு எலந்தக்கொட்டையை ஒரு குவளையில் தண்ணீரில் போட்டு அமுக்கிக்கொண்டே சொன்னாராம்.

'என்னா பன்னுறியும் செட்டியாரே.. என்ன இது?' - உற்றுப் பார்த்திருக்கிறார் சாபு.

'வாங்க சாபு, பாருங்க! இது வளர்ந்து, மரமாகி, பழம் வச்சி, பறிச்சி வெட்டுன உடனேயே ஃபர்ஸ்ட் காசு உங்களுக்குதான்'

சாபு விரக்தி சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தாராம்.

'ஏன் சிரிக்க மாட்டீங்க...கடனுக்கு வழி பொறந்திடுச்சில்ல..!' - செட்டியார். செட்டியாரா கொக்கா?

*

'ஜம்' :

'ஜம்' ரொம்ப சிம்பிள். ரொம்ப ஈஸி. அதாவது , தங்க பஸ்பம் மாதிரி. வேற ஒன்னும் வாணாம். அதைமட்டும் கரெக்டா செஞ்சிட்டு வந்தா போதும். நான் இருக்கும்போது என் முன்னால எந்த வேலை செய்யக்கூடாதோ 'ஜம்'முலெ செய்யக்கூடாது. நீங்க என்னை நினைக்கிறதுதான் 'ஜம்'. 'ஜம்' செய்ய முடியலைண்டு சொன்னா எனக்குப் பிடிக்காத வேலையை செஞ்சிக்கிட்டிக்கிறதா அர்த்தம்.'

*

'ஒரு குழந்தைக்கு ஒரு பட்டம் வாங்குறதுக்கு எவ்வளவு கவலைப்படுமோ எவ்வளவு அக்கறைப்படுமோ அதே அக்கறைதான் தஞ்சாவூர் ஜில்லாவை விலைக்கு வாங்குறதுக்கும். அந்தப் பட்டத்தோட மதிப்புதான் இதுவும்டு உங்களால நம்ப முடியனும்'.

*

சாய்பாபாவைப் பற்றிய ஒரு புத்தகம். The Miracle Man என்று. அதைப் படித்த நாகை வக்கீல் ஒருவர் சர்க்காரிடம் கேட்டாராம். 'சாபு, அந்தப் புக்கை ரசிச்சிப் படிச்சிங்களா?' 

'Understand what has not been written.. understand what has been written between the lines' அதாங்க எனக்குப் புடிக்கும். நான் எல்லாத்தையும் ரசிப்பேன். Paralysed attack ஆன ஒரு ஆளை சாய்பாபா குணப்படுத்துறான். அவன் கொண்டு வந்த காணிக்கையா கொட்டும்போது ஒரு வார்த்தை - சாய்பாபா சொல்றான் - 'It is  not me. It is you that cure yourself. இத நான் ரொம்ப மதிக்கிறேன்'
*

நோன்பின் மாண்பு : 

'நோன்பு புடிச்சு பட்டினி கெடந்து இறைவணக்கம்ங்குற பேருல செய்றீங்க. ஏங்க, பெருநாளன்னிக்கு முகம் வாடிப்போயி, வத்திப்போயிலெ இருக்கனும்? control பண்ணுனாதால முகம் தெளிவாவுல இருக்கனும்? ஏங்க உப்பிப்போய் இருக்கீங்க? காலைப்பசியாற, பகலுக்கு சாப்பாடு, நைட்டு சாப்பாடு.. 'சஹரு'க்கு போட்டு வெட்டுறது , நோன்பு தொறந்த உடனே மறுவெட்டு. இதுக்குப்பேரு நோன்புண்டா சொல்றது? நம்ம நோன்புல 'ஒலு'வோட இருக்கனும். Fully concious of yourself. Next, எதுல ஆசை வருதோ, அத திங்கக்கூடாது. அதுதான் நம்ம நோன்பு. இத மாதிரி இருக்க ஆரம்பிச்சா ஊர் ரொம்ப அலஹா இக்கெ ஆரம்பிக்கும்.'

ஒரு Training (1972ல் நடந்தது):

'லைஃப்லெ தவிர்க்க முடிஞ்சது, தவிர்க்க முடியாததுண்டு ரெண்டு இருக்கு. தவிர்க்க முடிஞ்சதை உயிரைவிட்டு தடுக்கனும். தவிர்க்க முடியாததை accept பண்ணிக்கனும். Acceptance  of inevitable is the first step to conquire Happiness.

இதுக்கு ஒரு டிரைனிங். எல்லாரும் 15, 15 ரூவா போட்டு சோறாக்க வேண்டியது. சோறுண்டா டாப் கிளாஸ் மொகல் பிரியாணி. சீட்டுக் குலுக்கிப் போட வேண்டியது. யாரோட பேர் வருதோ அஹலுக்கு சோறு கிடையாது. அவந்தான் பரிமாறனும். சாப்புடுற ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தியா சொல்லனும், அவன் நாக்குல தண்ணி வர்ற மாதிரி. அப்புறம் ஒரு ஆணம் கூட கொடுக்க மாட்டோம். வெறும் தோசை வாங்கித் தருவோம். ஹமீது சாபு சொன்னான்: 'அடுத்த வெள்ளிக்கிழமைதானே? அன்னக்கி எனக்கு காய்ச்சல் வரும் சர்க்கார்!'

*

'பெர்னார்ட் ஷா 200 ரூவா களவு கொடுத்துட்டான். பெர்னார்ட்ஷா தெரியுமுலெ? கை, காலு, நகம், மயிரு, மண்டை எல்லா இடத்துலேயும் மூளை உள்ளவன்.Great Man. 'ஏன் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாமே' என்று அவன் கூட்டாளி கேட்டதுக்கு 'மறு 200 ரூவா செலவாவுறதுக்கா?'ண்டான் அவன். ' ஏன் களவு போனிச்சி? நான் சரியா லாக்கர்லெ வைக்கலே. இனிமேல் சரியா லாக்கர்லெ வச்சிடுவேன்'ண்டான். எவ்வளவு அளஹா சொல்றான் அவன்!' 'எது எது எந்தெந்த காலத்துல எப்படி எப்படி நடக்கனும்டு ஆசைப்பட்டாங்களோ அது அது அந்த அந்த காலத்துலெ அப்படி அப்படி நடக்குறதப் பார்த்து வெறுப்படையிறாங்க' - பெர்னார்ட்ஷா சொன்னது. ஆனால் லைஃபை அளஹாக்குறதுக்கு பெர்னார்ட்ஷா தேவையில்ல'

*

'Becoming & Being' - நாம் தெய்வமாக இருக்கலாம், தெய்வமாக மாற முடியாது'

*

'எந்த அளவுக்கு எதுலெ செலவு பன்றதுண்டு சரியா தெரியனும். சக்திவிலாஸ் பஸ் ஓனர் எவ்வளவு பெரிய பணமுள்ளவன். தூசி மாதிரி பறந்து பொய்ட்டான். கேயார் சரோஜாட்ட போனதுனால தப்பு இல்லே. முழு கவனத்தையும் அவ மேல வச்சதுதான் தப்பு. கடைசில கெடச்சது என்ன அவனுக்கு? ஒரு பொந்தும் ரெண்டு பந்தும்! விந்தை சேமியுங்க , அதுதான் 'ரூஹானியத்' 

*

அக்டோபர்-நவம்பர்'95ல் நான் எடுத்த குறிப்புகள் :

போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்துண்டு நெனைச்சா மயிரைத்தான் புடுங்க முடியும்.

வாழ்க்கை பிரியாணி மசாலா போல (அறிவு, செல்வம், Controlling Force, Understanding etc சேர்த்த மசாலா)

மெழுகுவர்த்தியாக இருக்காதே. TorchLightஆக இரு

சின்ன வெற்றிகளே பெரிய வெற்றியை அடையும் வலிமையைத் தரும் (Similarity)

எண்ணுவதைச் செய், செய்வதை எண்ணு. 

பணத்துக்கு ரோஷம் உண்டு. ரிலாக்ஸ்டாக இருப்பவனிடதான் பணம் வரும். (பணம் வந்ததால் ரிலாக்ஸ்டு Mood என்பது தப்பு)

கோபப்படும்போது கோபப்படுகிறோம் என்று நினைத்தால் சிரிப்பு வரும்.

வெளிக்கிருக்கும்போது எடுக்கும் Decision  சரியாக இருக்கும் (முதுகுத்தண்டு நேராக இருப்பதால்).

காணிக்கைக்கும் அன்பளிப்புக்கும் உள்ள வித்யாஸம் : காணிக்கை : கொடுக்கும் கை தாழும். வாங்கும் கை மேலே இருக்கும். அன்பளிப்பு : வாங்கும் கை தாழும்; கொடுக்கும் கை மேலே இருக்கும். 

அடைவதற்கு முன் இருந்த Personality அடைந்த பின்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் 'Thought Habit' டெவலப் ஆகும். பொருள் மீண்டும் மீண்டும் தேடி வரும்.

ஆண்டவனின் கஜானாவில் பட்டத்துக்கும் RollsRoyce காருக்கும் வித்யாஸமில்லை.

Don't think past Failures. Think Success in the Past.

அவசரம் ஆத்திரம் பொறாமை இந்த மூன்றும் ஹராம்.

***

26.01.1996 வெள்ளி 'செஷன்'

'Secret Symbol'க்கான முன்னோட்டமாக இந்தப்பேச்சு வருகிறது என்று சொல்லி காலையில் ஜெப்பார்நானா கொடுத்த மூன்று கேஸட்களில் முதலாவதை (19.01.95 to 04.02.95) எடுத்துக்கொண்டு உட்காருகிறேன்.

'நாம சுத்தமா இருக்கனும். மத்ததுலாம் தானா துலங்கும். துலங்கிக்கிட்டே வரும்போது துலங்குறனாலத்தான் நாம சுத்தமா இருக்கிறோம் என்று தப்பா நெனைச்சிக்கக் கூடாது. சுத்தம்தான் துலங்க வைக்கிது. அதனால் 'ரியாலத்'ங்குறது உயிர் மாதிரி. 

'சிரமம்ங்குறது நன்மைக்கு First Step.'

''Problem வந்தால் அதே நிமிடத்தில் தீர்ப்பது சிரமம். ஒத்திவைத்து, Focus பண்ணுங்க. ஒத்தி வைக்கிறது, ஒத்திப் போடுறதல்ல. ஒத்தி வச்சா செஞ்சாவனும்'

'லைஃப்ல மல்லாக்கொட்டை மாதிரி இக்கினும். எந்த அளவுக்கு ஆர்ப்பரிச்சி கூத்து போடுவீங்களோ அந்த அளவு Power வீக் ஆகும். வாழ்க்கையைப் பத்தித்தான் 75% நெனைக்கனும், இடையூறுகளை நீக்குறதப் பத்தி 25%தான் நெனைக்கனும்'

'உலகத்துல வர்ற துன்பத்துலெ பெரும்பகுதி எதிர்பாக்குறதுனால வர்றதுதான்.'

'நான் வழிசொல்லித் தர்றேன். இந்த வழியை நீங்க எந்த வழியிலேயும் கண்டுபிடிக்க இயலாது. நான் நெனைக்கிறேன், அல்லாஹூ ஆலம் எப்படியோ, திடீரென்று 'எஜமானுக்கு' அக்கறை வந்து, சியாந்தெருவுக்கு வந்து, 'ஸ்ச்சூ'ண்டு ஓதி ஊதி வுட்டுட்டாஹாண்டா பேச்சு வேற, அப்படி வர்றதுக்கும் வாய்ப்பிருக்குது, வரலாம். நீங்க அதை எதிர்பார்க்கிறதா இருந்தா பாத்துக்கிட்டே இரிங்க. ஆனா 'எஜமானுக்கு' நெறயா வேலை இருக்கு. முதல்லெ, 'எஜமானை' எதிர்பார்க்கிற அளவு உங்களுக்கு பக்குவம் இருக்கா? அதையிலெ பாக்கனும்! கடன் கொடுத்த பக்கிரிசாமியே கனவுலெ வரமாட்டேங்குறான், 'எஜமானா' வருவாஹா? நீங்களா போட்டு உங்கள ஏமாத்திக்கிட்டு அலையிறீங்களே.. ஒண்ணுமில்லே, மௌலுது சபை, ரோஜாப்பூ, கொஞ்சம் பன்னீர் தெளிச்சி வச்சாக்கா ஜனங்க என் காலை நக்கிட்டு அலைஞ்சிக்கிடிருப்பானுவ'

'இந்த அல்லாஹ்வும் ரசூலும் குத்புமார்களும் என்ன சொன்னாங்க? நல்லா வாழச் சொன்னாங்க, நீங்க செய்றதுலாம் அவங்களை வெடைக்கிறதுதான்!'

'கோட்டையைக் கட்டப்போறீங்களா, கோட்டையை யோசனை பண்ண வாணாம். கோட்டையைக் கட்டவுடாம எந்த சின்ன செயல் தடுக்குதுன்னு பாருங்க. successfulஆ வாழுறதுக்கு மிக மிக மிக சிறிய சக்திதான் தேவை. தோல்வியடையத்தான் பெரிய சக்தி தேவை. சிரிக்கிறதுக்கு உள்ள சக்தியைவிட தும்முறதுக்கு, அழுவுறதுக்கு அதிக சக்தி தேவை. மேலே போறவன் செழிப்பா தெரியிறதுக்கு காரணம் மேலே போனதால அல்ல, செழிப்பா இருந்ததுனாலத்தான் மேலே போனான் என்று தெரியனும்'

'எடுத்தா முடிச்சிடனும், இல்லேன்னா எடுக்கக்கூடாது'

'அடையிறதைவிட பாதுகாக்குறதுதான் சிரமம்'

'மருதாணி விசேசம், பாப்பர விளையாட்டு விசேஷம். இதெல்லாம் பொம்பளைங்க விளையாடுவாளுவ. நமக்கும் வெளையாட்டு இக்கிது. But, if.., as if... !'

*

பக்கத்திலுள்ள பள்ளியில் தொழாமல் தூரமாக சென்று தொழுவது சிறப்பு. (Ex. சியாந்தெரு to ஜோலனா பள்ளி) . என்ன காரணம்? சர்க்கார் சொல்கிறார்கள் : 'சுக்கு கண்ட இடத்திலெ புள்ளைய பெக்கக்கூடாதுண்டு அர்த்தம். தொழுகையை நெனைச்சிக்கிட்டு அதுக்காக முயற்சி எடுத்துக்கிட்டு போ, பக்கத்துலேயே முட்டிக்காதே'

*.

'ஆண்டவன் மனுஷனை டெஸ்ட் பண்ண ஒரு வழி கண்டுபுடிச்சான். How to test him-ங்கிறதுக்கு.. காதை ஓபனாவச்சிட்டான். வுளுவத்தான் செய்யிம். நீ controlஆ இரி பாக்கலாம்டு'

'ஒவ்வொரு drawbackம் ஒரு நன்மையை கூடவே வச்சிக்கிட்டிருக்கு. அந்த நன்மை நிச்சயமாக equalஆகவோ greaterஆகவோதான் இக்கிம்' - சர்க்கார் தன் தனிமையைப் பத்தி.

*


'நாக்கூரையே வளைச்சிப் போடுறதுக்குள்ள வழி தெரியும் எனக்கு. ஒரு தாடி, ரெண்டு மாஷா அல்லாஹ், அரைக்கண் மூடுன பார்வை.. போதும்!

'சட்டை மட்டும்தான் நல்லா போட்டுக்குறானுவ.. நல்லா Neatஆ டிரெஸ் பண்ணிக்கிறான். ஷேவ் பண்ணிக்கிறான். ஸ்டேஜ்ல நடக்கிறான், இங்கிலீஸ் வார்த்தையைப் போட்டு பேசிக்கிறான். Actual Lifeலெ பழகும்போது காட்டுமிராண்டிப் பயலுவ. அவனுவள விட மோசம் இவனுவ. மிருகம் தேவலை. ஏன் தெரியலே வெளியிலே? எல்லோரும் மிருகமா இக்கிறானுவல்ல! மாறி நடக்குறவனை பைத்தியம்டு ஒதுக்கி வச்சிடுறானுவ'. (நம் மனிதர்கள் பற்றி)

'What we are today is the result of what we were in the Pastண்டு புரிஞ்சிக்கிறது First Golden Time. இது Practicalityக்கு வரனும். அப்ப, இன்னக்கி நெனைக்கிறது நாளைக்கு நடக்குது, இன்னக்கி நெனைக்கிறதை நாளன்னிக்கு நடத்தி வைக்கலாம் என்று எப்ப Dynamic Belief வருமோ அது  Second Golden Time.. அப்பதான் லைஃப். இதுக்கு பல தியாகங்கள் பண்ணனும்'

'ஒவ்வொருத்தன் கையிலேயும் AK47 வேணும். மத்தவனை சுட அல்ல. நம்மள சுடாம இருக்க. பாரபைத்தியமா ஒத்தவன் இக்கிறானா பைத்தியம் அவண்டு உணர்ந்துக்குங்க. அவன் ஒங்களை அட்டாக் பண்ணாக்கா நீங்க பைத்தியம்டு அர்த்தம், அவனைவிட'. (Self Defence.)

'கெட்டது, நமக்கு மாறுபட்டது, எதிரானது, நம்மள மோதி சிதைக்காத அளவாவது பாத்துக்கனும். இது முக்கியம். Self Defence முக்கியம்.

'Common sense-ஐ  வச்சிப்பாத்தா பலவிஷயம் புரியும். அதெ use பண்ணுறதில்லே. ஏன்? அது துருப்பிடிச்சிரிச்சி, இல்லே, அது இல்லை! இந்தியமூளை ஒசத்திண்டு ஒருத்தன் சொன்னானாம். Use பண்ணலைண்டு அர்த்தம்! '

*

சர்க்கார் , முனீரின் common senseஐ சிலாகிக்கிறார்கள் உயர்வாக இங்கே. Senseஐ விட அவரது பேச்சை. கொத்துப் புராட்டா வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு முட்டை போட்டு, நல்லவிதமாக கைமா போட்டு. முனீர் அதோடு சேர்த்து இரண்டு சிகரெட் பாக்கெட்டும் வாங்கி வருகிறார். 'அப்ப , நூறு ரூவா கொடுத்தா நூறு ரூவாய்க்கும் செலவு பண்ணிப்புடுவீங்களோ?' - சர்க்கார்

'அப்படி இல்லே சர்க்கார், அடுத்து நீங்க என்னா சொல்லுவீங்களோ அதெ வாங்கிட்டு வந்தேன்'

'நான் என்னா சொன்னேனோ அதைச் செய்யனும். ஓஹோ, என்னைய அளக்குறீங்களோ நீங்க?' - சர்க்காருக்கு கோபம்.

'ரொம்ப அளஹா அதுக்கு பதில் சொன்னான் பாருங்க முனீரு....' என்று சொல்லும் சர்க்கார் , முனீர் சொன்னதைச் சொல்கிறார்கள்: ' 'சர்க்கார்.. ஒங்களெ எப்படி சர்க்கார் அளக்க முடியும்? நான் என்னெயெ அளந்துகிட்டேன். அடுத்து நான் என்னா செய்யவேண்டி வரும்டு என்னையெ அளந்துகிட்டேன்'

*

மீராமெய்தீனுக்கும் முனீருக்கும் ஒரு வாக்குவாதம்.

'முனீரு.. அதிகம் பேசாதிங்க.. கற்றது கைமண் அளவு'

'உண்மைதான் மீராமெய்தீன்! நான் கற்றதுலெ உங்களுக்குத் தெரிஞ்சது என் கைமண் அளவு!'

*

'என்மேலே பலபேரு எரிச்சல்படுறான்.. நாம எல்லாருக்கும் சலாம் சொல்றோம், குனியிறோம், சிங்கப்பூருக்கு குண்டாவ தூக்கிட்டுப் போறோம்.. இவன் அலையாம உக்காந்துகிட்டே செஞ்சிடுறாண்டு எரிச்சல்படுறான். இங்கே என்னா பண்ணுறேண்டு தெரியுமா உனக்கு? சேத்தான்பாவா வாஞ்சூருக்குபோனான். தியானம் பண்ணவாம். நான் எண்ணிப்பாக்கலே, ஒரு 250 பருவாச்சும் இக்கிம் மூஞ்சிலே. அங்கே இந்துகிட்டு மனாரடி பொம்பளைய சைட் அடிச்சிக்கிட்டிந்திக்கிறான். உடம்பு எங்கே இக்கிதுங்குறது முக்கியம் அல்ல'

'நஷ்டம்ங்குறது சீக்கு. தோல்விங்குறது சீக்கு. அவமானம். வெட்கக்கேடு. அதனாலெ தலைவலிச்சா 'வலிக்குது'ண்டு சொல்றதுக்கு வெட்கப்படுறமாதிரி படிச்சிக்குங்க'

*

Similarity (ஒரு தோசை சட்னி உதாரணம். சட்னி பிடிக்காதவர்கள் ஆணம் என்று வைத்துக் கொள்க) :

'தோசையை திங்கிறவன் கடைசி தோசையோட சட்டினியும் சரியாக முடிவதுபோல சாப்பிட்டா லைஃப் நார்மலாக இருக்கும். சட்டினியெ முதல் தோசையோடு காலி பண்ணிட்டா லைஃப்லெ ஏங்குவாண்டு அர்த்தம். சட்டினியை மீதி வைக்கிறானா , எல்லா தோசையையும் சாப்பிட்டுப்புட்டு? அவன் வளர்வாண்டு அர்த்தம். இதெ Large Scaleலிலே பாத்தா ஒரு பெரிய பில்டிங் ஆரம்பிச்சி பாதியிலேயே நிப்பான். ஏன்? தோசையெ திண்ட முறைதான் காரணம்!'

'எவன் வாழலையோ - proper execuse இல்லேண்டா - சுட்டுடனும் அவனை. இருந்தால் பத்துபேரை கெடுப்பான் அவன். சமுதாயம் குட்டிச்சுவராகும் - இது தியரி. ப்ராக்டிகலா சரியா வராது. Passport காணோம்டு அலைஞ்சிக்கிட்டு இருக்கும்போதுகூட ஒரு மூட்டைப்பூச்சி ஒரு எலியைப் பார்த்து எப்படி பயப்படுதுண்டு பாக்கனும். இப்படித்தான் வாழனும்' 

'உங்களை உத்துப்பாருங்க. அப்ப தாழ்வு மனப்பான்மை வராது. clarity கிடைக்கும்'

**. 

அந்தக் காலம்... சர்க்காரின் மேல் 'பலாத்தண்ணி'யை (கழிவுநீர்) தவறுதலாக ஊற்றிய பெண்மணியிடம், 'என்னம்மா.. இப்படி செஞ்சிட்டியே.. என்னெட்டெ இக்கிறதே ஒரு சட்டைதானே...இப்ப நான் வெளிலே கிளம்பிக்கிட்டிக்கிறேன். அந்த சைடுலெ ஊத்தியிருக்கலாமே' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே , நடந்த தவறில் அவர்களின் பங்கும் புரிகிறது...தான் வேறொரு பக்கம் போயிருக்கலாமே..!

சர்க்காருக்கு இப்போது நூற்றுக்கணக்கான சட்டைகள், கைக்குட்டைகள்.. ஆனால் , உபயோகிக்கிறார்களா? சட்டையை அவர்கள் உபயோகிப்பது 'புர்தாஷரீஃப்' அன்று, 'பட்டை'க்கு, பிறகு வெளியூர் போகும்போது.. மற்ற சமயங்களில் சட்டை கிடையாது. அவர்கள் ரூமில் அடுக்கி வைத்துள்ள கைக்குட்டைகளைப் பார்த்து அவர்களின் மருமகன், 'மாமா.. மினாரா அளவுக்கு ஒசரமா இக்கிது மாமா' என்றானாம். 'இவருக்கு கைநேஞ்சி ஒண்ணு வேணுமாம், இவர் 'ஹிக்மத்'தை என்னெட்ட காமிக்கிறாரு!' - சர்க்கார். மனதைப் படிப்பது சர்க்காருக்கு மிகவும் சுலபம். ஆனால் இன்று பஸ்ஸில் கூடவந்த நண்பன் பளவூட்டுத்தம்பி (இவனும் சர்க்காரின் சீடன்), சில தகவல்களைச் சொன்னான். மருமகன் தாவுதுகுட்டி அப்படிப்பட்டவரா? அவரை சர்க்கார் படிக்கவில்லையா? ஆனால் மருமகனின் தப்புக்கு மாமா எப்படி பொறுப்பேற்க முடியும்? ஆமாம், எதனால் சர்க்காரின் பழைய சீடர்களில் மிக முக்கியமானவர்களாக இருந்த ஷிட்டகாங்மாலிம், அபுபக்கர் ஆகியோர் இப்போது வருவதேயில்லை?அப்படி அவர்கள் முன்னேறிவிடவும் இல்லைதான். வராமலிருப்பதே முன்னேற்றம் என்று நினைத்துவிட்டார்களா அவர்கள்? யாருக்கு?

(தொடரும்)

http://abedheen.wordpress.com/

குறிப்புகள் :

துஆ பரக்கத் - பிரார்த்தனையின் வலிமை
உலமாக்கள் - ஆலிம்கள் (படித்தவர்கள்)
நியமத் - அருள்
ஹராம் - விலக்கப்பட்டது
அவுலியா - இறைஞானி
இர்ஃபான், மஅரிஃபா - மெய்ஞான நிலைகள்
சாபு - சாஹிப் (சகோதரர்). 'பெரிய எஜமானின்' சந்ததியினரை இப்படி அழைப்பார்கள்
எஜமான், பெரிய எஜமான் - இறைநேசர் ஷாஹூல் ஹமீது பாதுஷா
ஆணம் - குழம்பு
ரூஹானியத் - ஆன்மீக சக்தி
ரியாலத் - பயிற்சி
மௌலுது - புகழ்மாலை
ரசூல் - முகமது நபி (சல்)
குத்புமார்கள் - இறைஞானிகள்
வெடைக்கிறது - கிண்டல் செய்வது
புர்தாஷரீஃப் - பூஷரி இமாம் இயற்றிய பாடல்களை ஓதுதல்
பட்டை - யந்திரம்
கைநேஞ்சி - கைக்குட்டை
ஹிக்மத் - சூழ்ச்சி

Saturday, July 1, 2017

சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள் (01)

21 வருசங்களுக்கு முன்பு ஒரு கறுப்பு டைரியில் எழுதிவைத்த ஆன்மீகக் குறிப்புகளை - பெயர்களை மட்டும் மாற்றி - இங்கே பகிர்கிறேன். மதிப்பிற்குரிய எங்கள் ஹஜ்ரத் மர்ஹூம் அப்துல் வஹாப் பாக்கவி அவர்கள் சொல்வதுபோல , இது கறி போட்ட ஸ்பெஷல் மசால் வடை! - AB
----------------
சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள் 

ஆபிதீன்

***

'காரியம் நடப்பதற்கு இரண்டு வழி : 1. திரும்பத் திரும்ப நினை , 2. குருவிடம் கேள்' - சர்க்கார்

***

அத்தியாயம் 01

நமக்குப் புலப்படும் மூன்று நான்கு தீர்வுகளில் எது நன்மையைக் கொடுக்க வல்லது (Right Choice) என்று 'கிரிஸ்டல் க்ளீயராக'த் தெரிய இப்படிச் செய்யவேண்டுமாம்: தலையை சாய்த்துக்கொண்டு, வலது நெற்றிப்பொட்டில் சுட்டுவிரலும் முகவாயில் பெருவிரலும் வைத்தபடி , மூன்றுமுறை 'சுபுஹானக்க லா இல்மலனா இல்லாமா அல்லம்தனா இன்னக அந்த்தல் அலீமுல் ஹகீம்' (1)  என்று ஓதவேண்டும். 

இந்த டைரி எழுதுவதைக் கூட அப்படித்தான் முடிவெடுத்தேனோ?

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடத்தும் ஒரு 'செஷன்'(Session)-ல் சர்க்கார் அதைச் சொன்னபோது 'சர்க்கார்.. இதை 'ஒலு'வோடுதான் ஓதனுமா?' என்று ஒரு சீடர் கேட்டார். ' பீ பேண்டுட்டு சூத்து கழுவாம கூட ஓதலாம். என்னா ஒண்ணு, பிசுபிசுங்கும்; மாஞ்சா போட்ட கயிறு மாதிரி ஒட்டும்' என்றார்கள் சர்க்கார். 'S' என்றும் மரியாதையாக நாங்கள் குறிப்பிடுவோம்.

அவர்களின் 'வெடை'க்கு ஈடு இணையே கிடையாது. 'யாராவது பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும்போது அதைப் பார்க்ககூடாது' என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மனோதத்துவம் தெரிந்த சீடர் ஒருவர் குறுக்கிட்டார். 'பணத்தை திருப்பி வச்சும் எண்ணக்கூடாது' என்று. 'S' சொன்னார்கள் : 'ஆமா, பணத்தை 'குப்பி'யடிக்கக் கூடாது'. 'குப்பி' என்றால் ஓரினப்புணர்ச்சி. 'பையன் வேலை' என்று ஊரில் சொல்வார்கள். குலுங்கும் பிருஷ்டங்களுடன் சிறுபையன்கள் போனால் 'நெய்சூத்து' என்று சப்புகொட்டும் வேடிக்கையான ஊர். நாக்கூர்.

'செயல் செய்யும்போது அந்தக் காரியம் செய்வதாக நினை' என்று போகும் ஒரு சமயம். தூங்கி வழியும் சீடர்கள் தூக்கத்திலேயே சிரிக்கிறார் போலவும் போகும். ஆனால் சிரிப்பு ஒரு நிமிடம்தான் நிலவ வேண்டும். அடுத்த நிமிடம், 'இதற்கு மேல் மாற்றவே முடியாத - இம்ப்ரூவ் செய்யவே இயலாத - விஷயம்/பொருள் என்ன?'வென்று கேள்வி பறந்து வரும். 'இல்முல் ஹக்' (கணிதம்) என்பதுதான் பதில். 1+1=2தான். அதற்கு மேல் எப்படி மாற்ற முடியும்? ஆனால் 'அல்லாஹ்' என்று சொல்லி ஒருவர் செமையாக மாட்டினார். எங்களைப்போலவே ஒரு 'மழுங்கனி'. பயங்கரமாகத் திட்டு விழுந்தது, அல்லாஹ்வுக்கும் சேர்த்து.

'செஷன்'ல் சேர்வதற்கு முன் , சென்றவருட அக்டோபரில்தான் 'பட்டை'க்கு உட்கார்ந்திருந்தேன். வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும் சடங்கு. மார்ச்சும் அக்டோபரும். கெட்டியான , வண்ணம்பூசிய ஒரு சிறிய காகிதம்தான் 'பட்டை'. ஓதிக் கொடுப்பார்கள். அதை வைத்திருக்கும் நாம் - தினமும் 'இஸ்மு' எனப்படும் மந்திரத்தை - 'S' சொல்லிக் கொடுத்தபடி-  ஓதிவர வேண்டும். ரொம்பவும் அன்புபூண்ட சீடர்கள் , 'இத மூணு முறை ஓதனும்; பொறவு , ஒரு 'மிஸ்கினுக்கு சாப்பாடு' என்று சேர்த்தே ஓதுவார்களாம். நான் அப்படிச் செய்யமாட்டேன் என்று நம்பிக்கையிருந்தது. கொமஞ்சான் புகைக்கு நடுவே கண்மூடி 'சலவாத்' சொல்லிக் கொண்டிருக்கும்போது உடம்பு பறந்து கொண்டிருந்தது, மனசுக்கேற்ப. இது அத்தனையையும் முன்பு கிண்டல் செய்து கொண்டிருந்த நான் மாறிப்போயிருந்தேன்.

ஓதிமுடித்ததும் தர்ஹாவிற்கு போய் 'ஜியாரத்' செய்துவிட்டு , வீட்டுக்குப் போகவேண்டும் என்பது விதி. குழுவாகப் போகக் கூடாது, யாருடனும் பேசக்கூடாது என்று உத்தரவு. 'யாரோடயும் பேசக்கூடாதுண்டு 'S' சொன்னாஹலாமே..' என்று ரவூஃப் கேட்டுக்கொண்டே வந்தான். 'ஆமா...ஸ்...பேசாதே..' என்று சொல்லிக்கொண்டே வந்தேன்.

தர்ஹாவில் அடங்கியுள்ள - பெரியஎஜமான்' என்று அழைக்கப்படும் - ஷாஹுல் ஹமீது பாதுஷாவை 'ஃபோகஸ்' பண்ணித்தான் ஆரம்ப பயிற்சிகள் எல்லாமே. பாதுஷாவின் ஹத்தத்தின் போது அதிகாலையில் (4: 10 a.m ) அவர்கள் 'வஃபாத்'தான நேரம் ஓதியது:

சலவாத் ('அல்லாஹும்ம சல்லிவசல்லி வபாரிக் அலைஹி') - 11 முறை
'அஸ்ஸலாமு அலைக்கும் யா ஷாஹுல் ஹமீது ஐனுல்லா' - 500 முறை
சலவாத் - 11 முறை

'S' எனக்கு 'Secret Symbol' (சுருக்கமாக , 'SS') பயிற்சி செய்ய அனுமதி கொடுத்தது சென்றவருட ஹத்தத்தின்போதுதான்.


சிம்பலில் 'பிரமிட்' வரைக்கும்தான் இதுவரை எனக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. நான் தாமதமாக 'செஷன்'ல் சேர்ந்ததால், தொடர்ந்து 'செஷன்'க்கு வர இயலாத 'சபர்'ஆல், மிகவும் எளிமையாக்கித் தந்தார்கள், பிரத்தியேகமாக. அதன்படி பயிற்சியும் செய்து வந்தேன். பயணம் புறப்படும் அன்று கீழுள்ள வட்டத்திற்கான அனுமதியைக் கேட்டேன். பிறகு சொல்கிறேன் என்று சொன்னார்கள். காத்துக் கொண்டிருக்கிறேன், பயிற்சியை இங்கும் விடாமல். அவர்களின் நெருக்கம் பயிற்சியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கும். ஆனால்... அவர்களைப் பிரியும்போதுதான் எப்படி அழுகை உடைத்துக்கொண்டு வந்தது! பிள்ளைகளைப் பிரியும்போதுகூட அப்படி இல்லை. மகளார் அஸ்ராவோடு இந்தமுறை மகன் அனீஸும் சேர்ந்திருக்க எனக்கு வழக்கமான இதயவலி வந்திருக்க வேண்டும். அன்றும் வெள்ளி. 'ஓதிவிட்டுப் போங்க' என்று சொல்லியிருந்தார்கள். சேத்தபொண்ணின் 'முடிவு' பண்ணுகிற சடங்கை முடித்துவிட்டுப் போயிருந்தேன். கொஞ்சநேரம் உட்கார்ந்துவிட்டு , அவர்கள் ஓதி ஊதியதும் வந்தேன். காலையின் அழுகை இப்போது இல்லை. தெளிவாக இருந்தது மனது. இப்போது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தெரிந்தது.

'S'ஐ அவர்களின் பழைய கால்மாட்டுத்தெரு வீட்டுக்கு போய்ப் பார்த்தது 1989 கடைசியில். மாமாவின் ரிகார்டிங் கடையில் வேலைபார்த்த முபாரக் அலிதான் காரணம். சர்க்காரை வரைந்து தாருங்கள் என்று அவன் நச்சரிக்க, வரைந்து கொடுத்துவிட்டு , அது நன்றாக அமையவே , திமிரையெல்லாம் ஒழித்துவிட்டு , நாமும் பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று கிளம்பிப்போய் , அதில் அவர்களின் கையெழுத்து வாங்கிவிட்டு கூடவே அன்பையும் பெற்று வந்தேன். 'நீங்கள்லாம் எப்பவோ வரவேண்டியது' என்று மட்டும் சொன்னார்கள். இப்போது 'செட்'டுப்பிள்ளையாகி விட்டேன். காரணம் , நண்பன் ரவூஃப். 'ரஜ்னீஸ் புகழ்' ரவூஃப். இப்போது சர்க்காரே கதி என்று அவன் கிடப்பதின் ஆச்சரியம், சர்க்காரைக் கண்டு , செஷனில் உட்கார்ந்து, அந்த மிகச்சரியான கோர்வை கொண்ட - விஞ்ஞானமும் ஆன்மீகமும் இணைந்த - பேச்சைக் கேட்டபிறகுதான் நீங்கியது. நன்றி முபாரக் அலிக்கா அல்லது ரவூஃபுக்கா? கீழே விழுந்து கிடக்கும்போது திடீரென்று சுற்றிக் கூடும் கூட்டத்தில் ஒருவர் சோடா வாங்கி வருகிறார், ஒருவர் கை தூக்கி விடுகிறார். நிதானமாய் எழுந்து பார்த்தால் அவர்களெல்லாம் போய்விட்டிருப்பார்கள். அவர்கள் வந்தது நாம் விழுந்ததால்தான் என்று உணர்கிற மாதிரிதான். பிறகு எனக்குத்தான் நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும். நான், ரவூஃப் எல்லாம் சர்க்காரைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தது ஒரு காலம். லா.ச.ரா, குலாம் அலி, சேகுவேரா எல்லாம் எங்களுக்காகத்தான் பிறந்திருந்தார்கள், இவர்களுக்கு முன் சர்க்காராவது! எங்களுக்கும் சைக்காலஜி தெரியுமாக்கும்! ரவூஃப் சற்று துணிச்சலானவன். சர்க்கார் வீட்டிற்குப் போய் ரஜ்னீஷின் 'Blank Mind'  பற்றி புளகாங்கிதம் அடைய, சர்க்கார் அவனைக் கிழித்திருக்கிறார்கள். அப்போதும் கிண்டலாகப் பேசிய ரவூஃபை , 'ரவூஃப்.. நான் இங்கேயேதான் இருப்பேன். நீ ஏழெட்டு வருசத்துலெ என் காலடியிலெ கெடப்பா' என்று சொன்னார்களாம். அப்போதே ரவூஃப் சொன்னான் இதை. சரியாக ஏழெட்டு வருஷம். ஆனால் ரவூஃப் சமாதானமடைய ஒரு வழி இருக்கிறது. சர்க்கார் அங்கேயே இருப்பதாகச் சொன்னார்கள். இப்போது கஃபூர்ஷா தெருவுக்கு - புது வீட்டுக்கு - அல்லவா மாறி வந்து விட்டார்கள் !

*

ஞாபகமறதிக்கு (போக்க!) :

a. யாரிடமும் தன் ஞாபகமறதியைப் (புகழ்ந்து) சொல்ல வேண்டாம்.
b. இரவில் படுக்கப்போகுமுன் அன்றைய நிகழ்ச்சிகளை , வரிசையாக, ருசியோடு , அசைபோட்டு எண்ணுக. முழித்ததும் அதன் தொடர்ச்சி நினைவுக்கு வருமானால் பயிற்சி வெற்றி. 'ஃபோட்டோகிராஃபிக் மெமரி' வந்துவிட்டது என்று அர்த்தம்.
c. காலையில் முழித்ததும் - விழிப்பு வந்த நிலையில் - கண்களை மூடிக்கொண்டு -  உடலின் பாகங்களை ஒவ்வொன்றாக உணர்ந்துகொள்ள முயல வேண்டும்.

மேலே உள்ளதை முதலிலேயே எழுதலாம் என்று நினைத்திருந்தேன்! 

இல்லை, பயிற்சி பிரமாதமான பலன்களைத் தந்துகொண்டிருக்கிறது. மறந்துபோனவைகளை ஒரு வெறியோடு தூசுதட்டி கைவிட்டுக் குடைந்து எடுத்துப் போடுகிறது மனசு. இந்த முயற்சியே முதலில் இல்லாமல் இருந்தது. முயற்சியே வெற்றிதான். அப்படித்தான் 'ஜம்'மில் நான் பல தவறுகளைச் செய்கிறேன்' என்றேன் ரவூஃபிடம். 'இப்படி தெரியிறதே ஒசத்திதான்' என்றான். கண்ட்ரோல் இல்லையே என்று நினைப்பதே நமக்கு கண்ட்ரோல் வருகிறது என்பதைச் சொல்வதாகச் சொன்னான். கண்ட்ரோலோடுதான் சொல்கிறானா இதை? அப்படித்தான். சர்க்கார் முதலில் எனக்கு ஒருமணிநேரம்தான் 'ஜம்'முக்கு அனுமதி தந்தார்கள். பிறகு நான் விரும்பிக் கேட்கவே இரண்டு மணி நேரமானது. பயணத்தன்று 3 மணி நேரம் கிடைத்தது - ஸ்பெஷல் பயிற்சிகளோடு. 

'ஜம்' என்றால் சர்க்கார் நமக்கு பக்கத்திலிருந்தால் எப்படி ஒரு காரியத்தை செய்வோமோ அப்படி செய்வது.


'இது மாதிரி ஒரு அற்புதமான குரு யாருக்கும் கிடைக்காது' என்றேன் ரவூஃபின் நண்பர் பரமசிவத்திடம். அவருக்கு நெஞ்சு நிறைய பெருமிதம். 'ஆனா, நம்மள மாதிரி மட்டமான சீடர்கள் சர்க்காருக்கும் கிடைக்காது' என்றதுமே பரமசிவம் தர்ஹா குளத்தில் என்னைத் தள்ளிவிடப் பார்த்தார்!

பரமசிவத்தை மறக்க முடியவில்லை. ரவூஃபுக்கு ஓம்பூரில் கண் தெரியாத பிரச்சனை திடீரென்று ஏற்பட்டபோது (மாணவர்களின் 'பதுவா'வோ?) நாக்கூர் சர்க்காரை நாக்கூர் ரவூஃபுக்கு நாக்கூரில் காட்டியவர் அவர். ரவூஃபுக்கு கண் திறந்து விட்டது!. பல தத்துவ, மத போதகர்களின் பேச்சிலும் எழுத்திலும் குழம்பி , விடையை சர்க்காரிடம் தெரிந்து கொண்டிருக்கிறார் பரமசிவம் எனும் கணிதப் பேராசிரியர் . 1+1=2.... அவரது பயத்தையும் பவ்யத்தையும் பார்த்தால் நாம் வெட்கப்பட வேண்டும். சர்க்காரின் பாதங்களை தன் இரு உள்ளங்கைகளாலும் அழுத்திப் பிடித்து தன் கண்களில் மெல்ல ஒற்றிக்கொண்டு , பின் அவர்களுக்கு நேராக விறைத்தபடி உட்கார்ந்து, தன் கண்களை மூக்குக் கண்ணாடிக்கு வெளியே தள்ளிவிடுவார். சர்க்கார் சொல்லும் விஷயத்தின் நாடியை தவறவிட்டுவிட்டு , மிகச்சரியாக செய்யவேண்டுமே என்கிற பயத்தில் அவர் குழம்புவதுதான் வேடிக்கை.  

பரமசிவம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வரும்போதும் செஷனுக்கு வருகிற மற்ற மாணவர்களிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருப்பார். மூணு அடியா, மூணரை அடியா? சரி, வட்டம் தரையிலிருந்து எத்தனை அடி தூரத்திற்கு சுவற்றில் இருக்க வேண்டும்? வட்டம் வரைவதற்குள்ள சதுர அட்டையின் அளவென்ன?  சீக்ரெட் சிம்பலுக்கான பயிற்சியில் Astral Body  சுற்றிவரும் தூரம் குறித்தும் இம்மாதிரிதான் சந்தேகங்கள். இப்போது அவர் குழப்பம் தீர்ந்திருக்கக் கூடும். வட்டம் பார்ப்பதை விட்டு விட்டிருப்பார் !

*

'சர்க்கார் போல கோவப்படாம இக்கினும்டு பாக்குறேன்' - உள்வட்டத்தில் ஒருவர்

'சர்க்கார் கோவப்பட உடமாட்டாஹலேண்டு நெனைக்கனும்' - சர்க்கார்

*

தனது கோபம் பற்றி சர்க்கார் ஒருமுறை சொன்னார்கள் : 'பயங்கரமான முன்கோபியா இருந்தேன் ஆபிதீன். கோவம் வந்தா கொல்லுகொல்லூண்டு கொல்லுவேன் , கண்ணுமண்ணு தெரியாம. வர்ற ஜனங்கள்ட்டெயும் முதல்ல எல்லாம் 'சுள்'ளுண்டு எரிஞ்சு வுளுவேன் - அஹலுவ தப்பு பண்ணும்போது. இப்ப கோவப்படுறதேயில்ல ஜனங்கள்ட்டெ. வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறாஹா? புத்தியில இல்லே, தப்பா பேசத்தோணுது, நடக்கத் தோணுது. கோவிச்சிக்கிட்டு காலணாவுக்கு புண்ணியம் இல்லேயே..'

*

'நீ நானாக மாறுவரை என்னைச் சேர்ந்தவனல்ல' - சர்க்கார் அடிக்கடி சொல்வது. அவர்களாக மாறுவதென்பது அவர்களின் நெகடிவ் தன்மைகள் (உம். Chain Smoking) நீங்கி. ஞானி ஹாஜாமெய்தீன் சிஷ்தி ரஹ்மத்துல்லாஹி சொல்வார்களாம் அப்படி.

'இது கஷ்டமல்ல, But worth having  to try' என்பார்கள். எதிலும் பாசிடிவ் அப்ரோச்..'அப்படீன்னா... 'ஸ்மோக்' பண்ணமாட்டேன் என்று நினைப்பதை விட 'ஸ்மோக்' பண்ணாம இக்கிற நெலைய நெனைச்சிப் பாக்கனும். அதான் பாசிடிவ் அப்ரோச். ' - சர்க்கார். மேலும் சொல்வார்கள் : 'Life & Knowledge must be organized . கோர்க்கப்பட்டதா இருக்கணும். எண்ண ஓட்டத்தை மாறுபட்டு ஓட்டப்பழகனும். நினைப்பது கடந்த கால வெற்றியாக இருக்கணும். தோல்வியை , அது எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாக இருந்தா மட்டும்நெனைக்கலாம். இல்லேன்னா அது வீண்.'

சுருக்கமாக , இப்போதைய ஆபிதீனாக இருக்கக் கூடாது! சொற்பப் பணத்தை - பேங்கிலிருந்து எடுப்பதுபோன்ற மனோபாவத்துடன் -ஆபிதீன் கடன் வாங்கினால் பிறகு அவனுக்கு கடனே வராது! தான் புதுவீடு கட்டும்போதுகூட தன் பேங்க் பேலன்ஸ் அப்படியே இருந்ததாக சர்க்கார் சொன்னார்கள். கடன்தான். ஆனால் சொந்தப் பணம் என்பதாக நினைப்பு வேண்டும். அப்போதுதான் கடனே கிடைக்குமாம். தீர்க்க முடியும் என்கிற Positive Approach...

*

சர்க்கார் ஒரு கோப்பையில் ஏதோ ஸ்வீட் வைத்துக்கொண்டு தாஹாவை கூப்பிட்டார்கள்: 'தாஹா , ஒரு ஸ்பூன் கொண்டு வா'

தாஹா ஓடிப்போய் பவ்யமாய் எடுத்துக் கொடுத்தார். உள்ள ஸ்பூன்களிலேயே மிகச் சிறியது அது.

'தாஹா..அந்த கப்-போர்ட்லெ காது குடையிற கும்பி இக்கிது, எடுத்துட்டு வாயேன்'

அனைவரின் சிரிப்பையும் புரியாமல் அவரும் எடுக்கப் போனார்.

பள்ளிக்கூடத்தையும் கடைத்தெருவையும் தன் ஹராமித்தனங்களால் கலகலக்க வைத்த, வைக்கிற தாஹா இப்போது எப்படி மாறிப் போனார். எனக்கு 'MKT' நஸ்ருதீன் நினைப்பு வந்தது.

நஸ்ருதீனின் தம்பி ஜலால் , அவர் முதலாளி தங்கியிருந்த ஃப்ளாட்டுக்கு அடுத்த ஃப்ளாட்டில் நடந்த 'ஹவாலா' விவகாரத்தால் - துண்டுதுண்டாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒருவரைப் பார்த்ததிலிருந்து - ஷைத்தான் கோளாறால் கடுமையாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஜலாலை சர்க்கார்தான் குணப்படுத்தினார்கள்.  அவ்வப்போது , இறந்த ஷைத்தானை தன் கட்டுப்பாடற்ற தனத்தால் புதுப்பித்துக்கொண்டிருந்த ஜலாலுக்கு எப்பவும் சர்க்காரின் பார்வை தேவைப்படுவதின் காரணமாகவோ என்னவோ அண்ணன் நஸ்ருதீன் பயந்து சாவார் , சர்க்காருக்கு. பள்ளிக்கூட காலத்திலிருந்தே பயங்கர ஹராமி நஸ்ருதீன். இப்போது இருக்கிற கம்பெனியிலும்தான். சேல்ஸ்மேன் சையதுபாயோடு ஒருமுறை பேசிக்கொண்டிருந்தார் சுவாரஸ்யமாக - சையதுபாயின் பின்புறம் நின்றுகொண்டு, இடுப்புவரை கைலியை வழித்துக்கொண்டு, வழக்கம்போல ஜட்டியும் போடாமல்! இப்போதும் இப்படியா என்று நான் பயந்தே போனேன். அப்படி பயமுறுத்துகிற நஸ்ருதீனுக்கு சர்க்கார் என்றால் அத்தனை பக்தி. அவருக்கு போனவருடம் ஆண்குழந்தை பிறந்தது. ஒவ்வொரு ஆளிடமும் நல்லபெயர் சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் சர்க்கார் வைத்ததாக ஒரு பெயரைச் சொன்னார். அது அத்தனை இனிமையாக இல்லை. 'என்ன இது' என்று முகம் சுளித்துக் கேட்டேன். 'அப்படித்தான். 'செவன்-அப்'புண்டு சர்க்கார் வைக்கச் சொன்னாக்கூட அதத்தான் வைப்பேன்' என்றார். இதைக் கேள்விப்பட்ட தம்பி மஸ்தான் மரைக்கான் கூட அவரைப் பார்க்கும் சமயங்களில் 'செவன்-அப் நல்லாயிருக்காஹலா?' என்றுதான் நலம் விசாரிப்பான். 'பட்டை'க்காக தினமும் ஓதுகிற விஷயம் , அவரது மகாமட்டமான கம்பெனியின் வேலைநேரத்திற்கு ஒத்துவராமல் பெரும்பாலும் போகும். அப்போது அவர் முகம் காட்டுகிற வேதனை... 'ஒரே ஜபம் பண்ணுற கூட்டமா பொய்டுச்சி' என்ற நக்கல் பேச்சை வேறு கேட்க வேண்டும் , அப்படியே ஒதினாலும். அந்த கோபக்காரர் எப்படித்தான் பொறுத்துக்கொண்டு இப்படி சர்க்கார் செய்யச் சொன்ன ஒன்றுக்கு தன் சக்திக்கு இயன்றவரை செய்யப்பார்க்கிறாரோ என்று ஆச்சரியம்தான் வரும். எனக்கும் அப்படித்தான் இருக்கிறது இப்போது. ஓதாமலிருந்துவிட்டால் அன்று எதையோ இழந்த மாதிரி இருக்கிறது. ஓதுகையில் உடலில் திரள்கிற சக்தி - அதைக் கையில் கொண்டுவந்து , தானாக தூக்க வைக்கிறபோது 'ஒரு விரலசைத்தால் உலகமே அசைய வேண்டும்' என்று சர்க்கார் சொல்கிற சக்தியை உணர்கிறேன். படுத்துக்கொண்டு, உடலின் அத்தனை பரபரப்பையும் அசைவுகளையும் நீக்கி ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு கை தூக்க முயற்சித்தது ஆரம்பத்தில் தோல்விகளைத் தந்தாலும் இப்போது சரியாக வந்து கொண்டிருக்கிறது. அப்போது திரள்கிற எண்ணத்தின் வலிமை அதை வெற்றிகரமாக முடித்துவைக்கும் சக்தியைக் கொண்டது என்பார்கள் சர்க்கார். இந்த சமயத்தில் கொடுக்கிற Auto Suggestion வலிமையானது. 

'Chain of Thought' (எண்ண ஓட்டம்) சரியாக வந்தா உதிப்பு உருவாகும், அதன்படி நடந்தா வெற்றி நிச்சயம்'- சர்க்கார்

*

'S' சொன்னது: 

01) இன்னொருவரை பார்ப்பது என்பது நம்மை சரிப்படுத்திக் கொள்ளத்தான். 02) 'வளரவேண்டும் அவன்' என்று ஒருவனைப்பற்றி நினைத்தால் அவனுக்கு நாம் சொல்லும் யோசனை என்னவாக இருக்க வேண்டும்? உற்றுப் பார்க்கச் சொல் தன்னை. நீயும் உற்றுப்பார். 03) உணர்ச்சிகளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே -optஆக வை. காரியம் முடியும். 04) 'வாழ்வில் என்ன வேண்டும், அல்லது, எதற்காக இந்த வாழ்வு?' என்று ஆண்டவன் நேரில் வந்து கேட்டால் என்ன  சொல்வாய்? விரலசைத்தால் அண்ட சராசரங்களும் அசைவதுபோல எதையும் முடிக்கக்கூடிய சக்தியா? அல்ல. என்னை உணர வழி செய் என்று கேள். அழுக்கை நீக்கத்தான் பயிற்சியெல்லாம். Know Thyelf. உன்னை உணர். 05) எட்டு பண்புகள் வாழ்வில் முக்கியம்: பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, உணர்வது, சிந்தனை,நினைவாற்றல், கோர்த்துப்பிரித்தல், பின்னால் வருவதை முன்னால் நினைப்பது. 06) Quick Decision மிக அவசியம். Quick Decision எடுத்து தோல்வியைத் தழுவுவதை விட Quick Decision எடுக்காமல் இருப்பது முட்டாள்தனம். 07) Nothing is accidental. Everything have reason. 08) 'What do you want out of your life?' என்பது சுத்தமாகத் தெரிய வேண்டும். Major Aim என்பது நாம் எல்லாவற்றையும் தியாகம் செய்து அடையக்கூடிய மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 08) சாதிக்க வேண்டுமானால் ஆசைப்படு. ஆசை என்பது Intensified பிரார்த்தனைக்கு மறுபெயர். குறிப்பிட்ட எண்ணத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நினைத்தால் அந்த எண்ணம் செயலாகும். வீடு கட்ட வேண்டுமா? பணத்தை நினைக்காதே. அதை எப்படிக் கட்டலாம் என்று அதன் அலங்காரங்களை நினை (கற்பனை செய்). 

09) 'ஒரு ஊட்டுக்குப் போயிருந்தேன். அங்கெ என்னட பெரிய ஃபோட்டோ ஒண்ணு இருந்திச்சி. நான் சொன்னேன், 'இத விட பெரிய ஃபோட்டோ - கலரு - என்னட்டெ இக்கிது. அதை தர்றேன். மாட்டுங்க. ஒங்களாலெ ஃப்ரேம் போடுறவனாச்சும் புத்திசாலியா பொழைக்கட்டும்டு. சர்க்கார் இங்கெ இருந்தா இந்த பிரச்சனைக்கு எப்படி முடிவு சொல்வாஹாண்டு யோசிச்சி செய்ங்க. அதுக்கு வேணுண்டா ஃபோட்டோ தேவைப்படலாம், பத்தி கொளுத்துறதுக்கு இல்லே!' 

10) 'சொல்றதையிலாம் எழுதி எழுதி என்னா புண்ணியம்? நடக்கப் பாருங்க!'

*

சர்க்கார் சொல்லும் கற்பனை, அதன் வலிமை பற்றி ஒரு யூதப் பெண்மணியின் கூற்றை ஜுனியர்விகடன் (07.01.1996) இதழில் எதேச்சையாகப் படித்து ஆச்சரியம். Mrs லாரா, கிரானைட் தொழிலதிபரிடம் சொல்கிறாள் : 'குழந்தைகளை கனவு காண்பது ஸாஃப்ட்வேர்.அவர்கள் உருவம் ஹார்ட்வேர். பிறகு அவர்கள் லட்சியம் நிறைவேறும்போது அதே ப்ரோக்ராம்கள் ப்ரிண்ட்-அவுட்டாக வெளிப்படுகின்றன'

*

சீக்ரெட் சிம்பலுக்கான பயிற்சியின் அனுமதி கிடைப்பதற்கு முதல்நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. (தர்ஹாவிலுள்ள) 'குளுந்த மண்டபம்' பக்கத்திலிருந்து வெளியில் நோக்குகிறேன். அலங்கார வாசலுக்கும் பெரியமினாராவுக்கும் நடுவில் ஒரு மிகப்பெரிய மலைத்தொடர் இருக்கிறது. பெரியமினாரா அதனுள் இருக்கிறதா அதை மீறி வெளியில் எழும்பி நிற்கிறதா? சரியாகத் தெரியவில்லை. மலைத்தொடர்களில் கசியும் ஊற்றுகள் தெரிகின்றன. எவ்வளவு அழகாக இருக்கிறது! அனால், இதென்ன..ஓ..அது நிஜமான மலைத்தொடரே அல்ல. அட்டை. சரிந்து விழுகிறது! பெரியமினாரா கூட அட்டைதான். அதனுட்புறமெல்லாம் தட்டியைத் தூக்கி வைக்கிற கம்புகள். அதுவும் நிலைகுலைகிறது. 

உச்சியினின்றும் சரிந்துவிழுகிற கனவைக் கண்டபோதெல்லாம் உண்மையிலேயே சரிந்திருக்கிறேன். இந்தக் கனவு பயத்தைத் தருகிறது. அதுவும் சர்க்கார் அவர்களின் தொடர்பு ஆழமான பிறகு - 'ஜம்'மெல்லாம் பண்ணிக்கொண்டு வரும்போது - இப்படி தடம் புரண்டு விழுகிற கனவு எதற்காக? மறுநாள் சர்க்காரிடம் கேட்டேன். என் பயத்தையும் சொன்னேன். 'மற்றவர்களுக்கு கனவைக்கேட்டு விளக்கம் சொல்கிறதுபோல நமது 'ரியாலத்'தில் உள்ள பிள்ளைகளின் கனவை சொல்லமுடியாது. நமது ரியாலத்தே 'பெரிய எஜமானை' நோக்கித்தான். நீங்க தர்ஹாவில் இருந்திருக்கீங்க. போதும். இது கெட்ட கனவல்ல' என்றார்கள். 

அன்று இரவுதான் எனக்கு அனுமதி கிடைத்தது.

*

நண்பர் ஃபரீது சந்தோசமாக இருந்தார். 'என்னா ஃபரீது..ஒரே 'ஜெதப்'பா இக்கிறியுமே..!' என்று கேட்டேன். 'நேத்து 'திக்ர்' பண்ணிக்கிட்டிருந்தேன். மனசு பூரா வாப்பாவ பாக்கனும்டு நெனைப்பு தாங்கலே..'என்னா ஆண்டவனே.. காட்டவே மாட்டேங்குறியே'ண்டு மனமுருகி கேட்டேன். அல்ஹம்துலில்லாஹ் , ராவு அளகான கனவு, வாப்பா வந்தாஹா..' என்றார். 'நல்ல விஷயம்தான். சில பேருக்கு முகம் வேறமாதிரி - டிராகுலா மாதிரி - மாறியிருக்கும். பாத்த உடனேயே நாம நல்லா தெரிஞ்சிக்கலாம் , அஹ வாப்பா கனவுல வந்திக்கிறாஹாண்டு. நம்ம நம்ம புள்ளையிலுவ மொஹம் இப்படித்தான் இக்கிம்' என்றேன்.

'அட நீ ஒண்ணு, நபுஸு புடிச்சஹதான் கனவுல வருவாஹா' என்றான் மஸ்தான் மரைக்கான்.

'அப்ப Daily ஒம்மட மவன் ஒம்ம கனவுல பாப்பான்' - ஃபரீது

நாம் இறந்தபிறகுதான் தெரியும், வாழ்ந்தது ஒரு நீண்ட கனவென்று சர்க்கார் சொல்வார்கள்.

நண்பர் ஃபரீது , ஜோல்பேட் ஹஜ்ரத்தின் சீடர். ஜோல்பேட் ஹஜ்ரத் ஒரு தனி அரசாங்கமே நடத்தி வருகிறார். சில அரசாங்கத்திற்கு சில செயல்பாடுகள் முடியாமல் போகின்றன. ஃபரீது என் சர்க்காரை நாடினார். ஃபரீது தன் நாக்கூர் நண்பர் ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார் - வெவ்வேறு சமயங்களில். வாங்கிய நபரோ நல்லவர்தான். ஆனால் ஒரு லட்சம் ரூபாய்தான் தான் வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது அவருக்கு. அப்படியாயின் அவர் நல்லவராகத்தான் இருக்கவேண்டும். தனக்கு இன்ன இன்ன தேதியில் பணம் கொடுத்த விபரம் சரியாக நினைவில் தெரிய வேண்டும் என்பதாக சர்க்காரிடம் சொன்னாராம். நாக்கூர், மிக சுலபம்...ஒரு 3 நாள் கழித்து வாருங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதற்குள் ஃபரீதை துபாய் இழுத்து விட்டது. எனவே என்னிடம் கடிதம் எழுதிக் கேட்கச் சொன்னார். நானும் கடிதம் எழுதியிருக்கிறேன் - சர்க்காரின் மருமகன் தாவுதுகுட்டிக்கு - சர்க்காரைக் கேளுங்கள், இப்போது என்ன செய்யலாம் என்று. பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சர்க்காரால் முடிகிற விஷயம்தான் சாதாரணமாக. 35 வயது நபரை 38 வருடங்களுக்கு பின் அழைத்துச் சென்று அவர் என்னவாக அல்லது அது என்னவாக இருந்தது என்று அறிவதெல்லாம் சுலபம்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். அற்புதங்கள் சாதாரணமானவை என்பது அவர்களின் கருத்து. வெகுதொலைவில் உள்ளவர்களின் குரலைக் கேட்பது (clairaudience), Crystal Ball மூலமாகப் பார்ப்பது என்பதெல்லாம் தகுந்த பயிற்சிகள் மூலம் யார் வேண்டுமானாலும் செய்கிற ஒன்று என்பார்கள். எல்லாம் சும்மா சொல்வதுதானா? அவர்கள் ஏதும் செய்ததில்லையா? ஏன் இல்லை, நான் இதை எழுதிக் கொண்டிருப்பதே சாட்சி! 

சர்க்காரைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த காலங்களில் கலிஃபுல்லா நானா சொன்ன செய்திகள் ஓரிரண்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு. கலிஃபுல்லா நானா என்ற குதர்க்கத் திலகத்தை அடித்துப்போட்டு விடுவதுதான் சாதாரண விஷயமா என்ன? அவர் குதர்க்கத்திற்கு ஒரு உதாரணம்: கலிஃபுல்லா ஒரு நோன்பு சமயத்தில் கடுமையாக 'செண்ட்' அடித்துக்கொண்டு வெளியில் வந்திருக்கிறார். 'தவ்பா... தவ்பா..! நோம்புலையா! தனக்கு எது அதிகமா பிடிக்கிறதோ அத வுடுறதுக்கு பயிற்சிதான் நோம்பு' என்றிருக்கிறார் அவர் நண்பர். 

'அப்படியா? எனக்கு நோம்பு பிடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். வுட்டுடவா?' - கலிஃபுல்லா.

கடுமையான பயம் இருந்தால் ஓதுவதற்கு ஒரு 'இஸ்மு' கிடைத்திருக்கிறது அவருக்கு - சர்க்காரிடமிருந்து. கலிஃபுல்லா ஊட்டி மலைப்பாதையில் நடு இரவில் மாட்டியிருக்கிறார். கார் ரிப்பேர். பக்கத்தில் ஏதேனும் Workshop இருக்கிறதா என்று பார்க்கப் போயிருக்கிறான் டிரைவர் . போனவன் ஒருமணி நேரம் காணவில்லை. கரிய இருளும், தனிமையும் கடுமையாக அவரை பயமுறுத்தி இருக்கிறது. பேய்களுக்கும் அவரைப் பார்த்து அப்படித்தானிருக்கும். கலிஃபுல்லாவிற்கு திடீரென்று அந்த 'இஸ்மு' ஞாபகம் வந்திருக்கிறது. ஓதியிருக்கிறார். அப்புறம் என்ன நடந்ததென்று அவருக்குத் தெரியாது. காலையில் அவர் நண்பர் வீட்டில் கண் விழித்ததுதான் தெரியும். இதைச் சொல்ல நாக்கூருக்கு வந்து சர்க்காரின் வீட்டிற்குள் நுழைந்தால் சர்க்கார் அவரைப் பார்த்து சத்தம் போடுகிறார்களாம், 'ஏம்ப்பா.. இந்த இந்த நேரத்துலதான் தொந்தரவு பண்ணுறதுண்டு இல்லையா?

'என்ன சொல்றீங்க சர்க்கார்?'

'முந்தா நாள் ராத்திரி ஒன்றரை மணிக்கு என்னைக் கூப்புட்டத சொல்றேன்' - சர்க்கார்.

இன்னொரு சம்பவம். கலிஃபுல்லா நானாவும் அவர் நண்பரும் சர்க்காரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நண்பரை சர்க்கார் டீ வாங்கி வரச் சொல்கிறார்கள். அவர் போகிறார். சற்று நேரத்தில் கதவு தட்டப்படுகிறது. டீ வாங்கப் போனவர்தான் வந்திருக்கிறார். கதவைத் திறந்து அவரைப் பார்த்த கலிஃபுல்லாவை சர்க்கார் வேறொரு இடத்தைப் பார்க்கச் சொல்கிறார்கள். டீ வாங்கப்போவதற்கு முன்பு இருந்த நண்பர் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தாராம்! இரண்டு வெவ்வேறு இடங்களில், நிலைகளில், ஒருவரைப் பார்த்த கலிஃபுல்லாவின் திகைப்பு , சர்க்கார் சொன்னபிறகுதான் நீங்குகிறது. உட்கார்ந்திருந்த நபர் உண்மையல்ல, அது ரிகார்டு. பதிவு. சென்றவர் பதிந்துவிட்டுப் போன ரிகார்ட்.

clear
use life index name
do while not eof()
mname=space(10)
@10,15 say 'Believe' get mname valid ! empty (mname)
read
seek mname
if found()
wait wind+'Record of &mname'
else
exit
endif
enddo
use
retu

கலிஃபுல்லாநானாவின் தம்பி ஹாஜித்தம்பிக்கு சர்க்காரைக் கட்டோடு பிடிக்காது. 'சர்க்கார் சொல்லித்தான்  நானா என் உம்மாவோட சரியான உறவா இல்லே.. ஆனா , சர்க்கார்ட்டெ என்னமோ இக்கெத்தான் செய்யிது' என்பார். அவர் நானா கலிஃபுல்லா ஒருமுறை தன் உள்ளங்கையைப் பார்க்கச் சொன்னபோது, மிகச் சுத்தமாக தன் லாத்தா (அக்கா) வீட்டுக்கொல்லையில் குளித்துக் கொண்டிருந்தது தெரிந்ததே !

*

'செஷன்' முடிந்து 'தப்ருக்' என்ற பெயரில் ஒரு அலம்பலான விருந்தும் நடந்தது. சர்க்கார் ரிலாக்ஸாக இருக்கும்போது ரவூஃப் மெல்லக் கேட்டான். 'மாமா..அந்த Crystal Ball ஒண்ணயாச்சும் கொடுங்க'

'எதுக்கு? என் வூட்டுக்கு முன்னாலெ இன்னொரு கடை போடவா?'

ரவூஃப் தலையைச் சொறிந்தான். அடுத்து , தண்ணீரில் நடக்கும் வித்தையைக் கேட்கலாமென்றிருக்கும்போது..! 'அட, அதெல்லாம் ஒண்ணும் வாணாம்ப்பா, இந்த 'SS'ஐ மட்டும் ஒழுங்கா பண்ணிக்கிட்டு வா. எல்லாம் இதுலெ அடக்கம்' என்றார்கள் சர்க்கார்.

*

அற்புதங்களால் என்ன பிடுங்க முடியும்? பசிக்கும் ஏழைக்கு சோறு போட முடியுமா என்று என் புரட்சி நண்பன் கேட்பான். அவனுடைய சமீபத்திய புரட்சி என் கடிதங்களை அவன் பெயரில் சிறுகதையாக , குறுநாவலாக , 'இந்தியா டுடே', குமுதத்தில் போட்டது. நான் அவனை செருப்பால் அடிக்கக்கூடாத அற்புதத்தை மறந்து இதென்ன பேச்சு? குறைந்தது பத்து ஏழைகளின் வயிறாவது சர்க்காரால் தினம் நிரம்புகிறது. சர்க்கார் சொல்லும் பரிகாரங்களில் இதுவும் ஒன்று, சரி சோறு போடலாம், ஏழ்மையை ஒழிக்க முடியுமா? ஒ, முடியுமே.. இன்னொருவனின் எழுத்தை தன் எழுத்து என்று சொல்லி சம்பாதிக்கலாமே அன்பழகன்..

ஒரேயொரு வித்தையை தெரிந்துகொண்டு கோடீஸ்வரனாக கொழிக்கிற மகான் பரட்டைக்கு - அட, சாய்பாபாதான் -  முன்னால் சர்க்கார்தான் எவ்வளவு எளிமை!  ஒரு ஈஸி சேர், கால்வைத்துக்கொள்ள ஒரு ஓட்டை முக்காலி, தேவையான எலெக்ட்ரிக் , எலக்ட்ரானிக் சாமான்கள் சுற்றிவர இருந்தாலும் சர்க்கார் தனியாக , அந்த இடத்தில் எளிமையாக , ஒரு சாதாரண வெள்ளைக் கைலி (பழுத்திருக்கிறது), கைவைத்த வெள்ளை பனியனுடன் தெரிகிறார்கள். கால்மாட்டுத்தெருவை விட இப்போது - ஏசி உள்ள கஃபூர்ஷாதெரு வீட்டில் எளிமை இன்னும் தூக்கலாக இருக்கிறது. 22 வருடங்கள் வாழ்ந்த வாடகை வீட்டை திடீரென காலி பண்ணச் சொன்னதற்கு அனுபவ பாத்தியதையெல்லாம் கொண்டாடித் திண்டாட வைக்காமல், 'என்னால் முடியும்' என்று காட்ட இந்தப் புதுவீடு. எட்டு லட்சரூபாய் ஆகியிருக்கிறது. கடன் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பேங்க் பேலன்ஸ் இன்னும் குறையவில்லை. ஒரு வருடத்தில் கடனை அடைத்துவிடுவேன் என்று சொல்கிறார்கள்.

ஒரு கேஸட்டில் சொல்கிறார்கள்.. ஒரு இளவயசுப் பையன் வந்தானாம். அவனுக்கு ஒரு 'அதிசய' சக்தி தேவைப்பட்டிருக்கிறது. என்ன அது? எந்தப் பொருளையும் ஊடுருவிப் போக வேண்டும். ஒரு இரும்புக் கதவா? அவன் கைபடும்போது கை சுலபமாக உள்ளே போய்விட வேண்டும். இரும்புக் கதவென்கிறான்.. ஆனால் பணமோ நகையோ வைக்கிற இரும்புப் பெட்டகம்தான். சர்க்கார் அவனிடம் கேட்டார்களாம் , 'அதை வச்சிக்கிட்டு என்ன மசுர புடுங்கப் போறா?'. 'அற்ப ஆசை..' - சர்க்கார் முனுமுனுக்கிறார்கள். வாழச் சொல்கிற சர்க்கார் அற்புதமன்றி வேறென்ன? பேசிக் ப்ரோக்ராமிங்கில் சந்தேகம் கேட்கலாம்.. 'ஷரீஅத்' பற்றிக் கேட்கலாம். 'தரீக்கா'வைக் கேட்கலாம் வைத்தியம் கேட்கலாம்...மனோதத்துவம் படிக்கலாம்...இன்ஜினீரிங், மெடிகல் ஃபீல்டில் உள்ள புது கண்டுபிடிப்புகளின் குறை நிறைகளைக் கேட்கலாம். பொருளாதாரத்தை, அரசியலை, சமுதாய வாழ்வை வினவலாம், வியாபார வெற்றிக்கான வழிகளை, ஒரு நவீன சூஃபிஸத்தை - சங்கரரையும் மன்சூர் ரலியல்லாஹுஅன்ஹுவையும் தாண்டி - அறியலாம்.

வெவ்வேறு ஃபீல்டுகளில் உள்ள தலைசிறந்த மண்டைகள் இந்த ஒரு மண்டைக்குள் எப்படி வருகிறது? மிகச் சுலபம்தான். அதாவது,  சர்க்காருக்கு. ஒரு பெரிய குளத்தின் நடுவில் ஒரு கம்பை ஊன்றி ஒரு சிலந்தியை மேலே வைத்தால் தன் வலையைப் பின்ன இழையைப் பறக்க விடுமாம் , வெவ்வேறு திசைகளில். அப்படிப் பறக்கவிட்டு பிடித்துக் கொள்வதுதான் அத்தனை விஷயங்களும் என்றார்கள் ஒருமுறை. வலைவிரிக்கிறேன் என்று உடுத்தியிருக்கிற கைலியை நான் அவிழ்த்து வீசிப் பிடித்தால்? காற்றில் கைலியும் அவிழ்ந்து விடுகிறது! அது போகட்டும், ஊடுருவும் சக்தி அந்தப் பையனுக்கு கிடைத்திருந்தால் தன் பெண்டாட்டியை எப்படிச் செய்வான் என்று கற்பனை ஓடுகிறது..'பெண்ணே...உன் கதி இதுதானா?' என்று சிதம்பரம் ஜெயராமன் வேறு ஊடுருவுகிறான்!

மறைந்த சூஃபி ஞானி இமாம் ஜாஃபர்சாதிக் பற்றி புத்தகம் எழுதிக்கொண்டிருக்கும்போது சர்க்காருக்கு ஏதோ ஒரு சந்தேகம் தெளிவுபடுத்தப்பட வேண்டியிருந்தது. யாரிடம் கேட்பது? யாரிடம் கேட்டாலும் சரிவராது. இமாம் ஜாஃபர்சாதிக் அவர்கள்தான் சொல்ல வேண்டும். அவர்களிடம்தான் கேட்டார்களாம் சர்க்கார். சேக்ஸ்பியரில் சந்தேகமா? சேக்ஸ்பியரிடமே கேட்டு விடுவது!

இது 'கராமத்' என்று கூத்தாட வேண்டியதில்லை நாம். 'கராமத்' பற்றி சர்க்கார் தெளிவாகவே சொல்கிறார்கள்.

'கராமத் நடத்துறவங்க 'அவுலியா'ண்டு சொல்லிவிட முடியாது. நடைமுறைக்கு மாறான செயல். அதுதானே 'கராமத்'ங்குறது? மேஜிசியன் கையைக் காட்டுனா தண்ணி ஊத்துது. இதே வேலையை 'ஒலியுல்லா' செஞ்சா அது 'கராமத்'. இந்த செயல் செய்யிறதுனாலெ லைஃப்லெ எந்த செயல் நமக்கு fulfill ஆகுது? ஒண்ணுமில்லே.. அவன் மேலே ஒரு 'மொஹப்பத்', ஒரு ஆச்சரியம், ஒரு வியப்பு. அவன் மூலமா நீங்க அடிமையா பொய்டுறீங்க. உங்கள வாழ வைக்கிற மாதிரி ஒண்ணுமில்லே அதுலெ..'

'குழப்பி உட்டுடுறாங்க சர்க்கார்' - இதை வைத்து வியாபாரம் பண்ணுகிறவர்களை ஒருவர் குறை கூறுகிறார்.

'குழப்பி உடலே.. குழப்பி வுட்டாலும் திறமைசாலிண்டு அர்த்தம். அவனே குழம்பி கெடக்குறான். அவன்ற குழப்பத்த உங்கள்ட்டெ ஒப்படைச்சுடுவான். அவ்வளவுதான்'

பிழைக்கத் தெரியாத 'கராமத்'தை பண்ணுவது என் சர்க்கார்.

*

நண்பர் ஃபரீது இரண்டு வருடத்துக்கு முன்பு துபாய்க்கு டிரான்ஸிட்-ல் வந்திருந்தார். ஜோல்பேட் ஹஜ்ரத் வந்திருப்பதாக ஒரு நபர் சொன்னவுடன் அவருக்கு புல்லரித்துவிட்டது. எனக்கும் கண்டிப்பாக அரிக்கும் என்று சொல்லி அன்று இரவு கூட்டிக்கொண்டு போனார். 'ஜிப்ஸ்' கைலிக்காரர்கள் வருடத்துக்கு 3 தடவையாவது துபாய்க்கு அவரைக் கூட்டிவந்து விடுகிறார்கள். இந்த முறைதான் போனேன். ஹஜ்ரத்தின் சிஷ்யர்கள் காட்டுகிற அளவுகடந்த மரியாதை, பயம் என்னைக் கவர்ந்தது. அந்த பயம் அளவுக்கு அவர்களின் பேச்சு வசியப்படுத்தவில்லை. ஆனால் , நினைப்பதைத் தெளிவாக கோர்வையாகச் சொல்லத்தெரிகிறது அவருக்கு. 'திக்ரு' நடந்தது. அனைவரும் அல்லாவோடு கலந்து அழுதார்கள். 'திக்ரு' முடிந்த பிறகுதான் அல்லா அழ ஆரம்பித்தான். ஹஜ்ரத், 'பரக்கத் காசு.. எல்லாரும் வாங்கிங்குங்க. என்னெ நெனச்சிப் பாருங்க, என் முகம் தெரியும்' என்றதும் எனக்கும் 'பரக்கத் காசு' கிடைத்தது (வாங்காமல் போனால் 'பரக்கத் அடி' கிடைக்குமே!) இரண்டுநாள் கழித்து திடீரென்று ஹஜ்ரத்தின் நினைப்பு வரவே, அட அந்தக் காசு கூட இன்னும் நம்மிடம் இருக்கிறதே என்று காசை எடுத்துப் பார்த்தேன். துபாயின் ஒரு திர்ஹம் நாணயம். நாணயம்தான் தெரிந்தது திரும்பவும். காசு.. ஜோல்பேட் ஹஜ்ரத் சொன்னது சரிதான், அவர்களின் முகம்தான் அது!

(தொடரும்)

http://abedheen.wordpress.com/

*

குறிப்புகள் :

1 : (இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன் - திருக்குர்ஆன் (2 : 32)

ஒலு - புனித சுத்திகரிப்பு
வெடை - கிண்டல்
சலவாத் - நபிகள் நாயகத்தின் மீது வாழ்த்து சொல்வது
ஜியாரத் - அவுலியாவின் (இறைஞானியின்) சமாதியை தரிசித்தல்
தர்ஹா - அவுலியா அடக்கம் செய்யப்பட்ட இடம்
ஹத்தம் - அவுலியாவின் சமாதிக்கு சந்தனம் பூசும் தினம். பொதுவாக, நினைவு தினத்தில் செய்யப்படும் ஒருசடங்கு
வஃபாத் - இறப்பு
சபர், சஃபர் - பிரயாணம்
'முடிவு' செய்தல் - நிச்சயதார்த்தம்
மிஸ்கீன் - ஏழை
பதுவா - சாபம்
ரியாலத் - பயிற்சி
ஜெதப்பு - குஷி
திக்ர் - இறை நாமங்களை ஜெபித்தல்
அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்
நபுஸு - பேராசை
தவ்பா - மன்னிப்பு
தப்ரூக் - பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
ஷரீஅத் - மார்க்கச் சட்டம்
தரீக்கா - (ஞானப்) பாதை
கராமத் - அற்புதம்
பரக்கத் - கிருபை, சுபிட்சம்
ஹராமி - துஷ்டன்
மன்சூர் ரலியல்லாஹுஅன்ஹு - 'அனல்ஹக்' (நானே இறைவன்) என்று சொன்னதால் கொல்லப்பட்ட ஞானி.