Thursday, April 24, 2014

சிவலோக நாதனைக் கண்டு...- சஞ்சய் சுப்ரமணியன்

எங்கள் ப்ளஸ்-ன் இசை குரு வாசு பாலாஜி பகிர்ந்திருந்தார் இந்த வீடியோவை. பலமுறை கேட்டுவிட்டேன். இதை விரும்பாத 'இளகிய' உள்ளங்கள் இஸ்லாமிய கவ்வாலியை இங்கே கேட்கலாம். நன்றி.

***

Thanks to : Sanjay Subrahmanyan

சுட்டி : நந்தனார் திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர் பாடியது.


Sunday, April 20, 2014

தங்ஙள் அமீர் (குறுநாவல்) - தாஜ்

'தங்ஙள்' என்கிற  டைட்டிலைப் பார்த்ததுமே 'மழவில்காவடி' சினிமாவில் வரும் குஞ்சுகாதரின் (மம்முகோயா) தங்ஙள்தான் முதலில் ஞாபகத்திற்கு வந்தார்.  தன் பெண்ணின் மனதை மாற்ற அந்த போலி மந்திரவாதியை தொடர்பு கொள்ளும் சங்கரன்குட்டியிடம் (இன்னஸென்ட்) 'தங்ஙள்' இதற்கு சம்மதிக்கமாட்டார் என்பார் கோயா.  'யாரு இந்த தங்ஙளு ?' 'நம்ம உஸ்தாதுதான்' 'அவர் எங்கேன்னு சொல்லு, காருல போயி அழைச்சிட்டு வந்துடுவோம்'. - இன்னஸெண்ட் சொல்வற்கு , 'யா அல்லாஹ்!, நம்ம தங்ஙளு மரிச்சி ஆறு வருசமாச்சு.  இப்ப சொர்க்கத்துல; அங்கே கார் போவுமோ?' - மம்முகோயாவின் நக்கல். பரவூர் பரதன் பட்டென்று சொல்வார் அப்போது , ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு : 'அங்க கார் போவாது!'. அடி குடையால!  சுட்டி : 


அதுபோலொரு தங்ஙள்தான் அமீரும்.  நண்பர் தாஜ் குறிப்பிடுகிற காலத்தில்  சவுதி அல்கோபரில் அநியாயக்கார அரபி ஒருத்தனிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டுக்கொண்டிருந்தேன் - மூலத்தோடு. ஜனங்கள் சிரிக்க பிறகு கதை எழுத வேண்டாமா? கணையாழி இதழில் வந்த 'கடை' குறுநாவலின் (தன்னால் மறக்க முடியாத படைப்பாக சுஜாதா இதை சொல்லியிருப்பதை சமீபத்தில்தான் அறிந்தேன். மறக்காமல் இங்கே சொல்லிவிடுகிறேன்) ரசிகராக என்னை எப்போதாவது பார்க்க வருபவர் சும்மா இராமல் இலக்கியம் பேசிவிட்டுப் போவார்.. அந்த வேதனையைப் 
பிறகு சொல்கிறேன்!   இந்தக் குறுநாவலை விமர்சனம் செய்யுங்கள் என்ற தாஜுக்கு என் பதில் , 'இயலாது , ஆனால் ரசித்துப் படித்தேன், 'நான் போக வேண்டாம் என்று சொன்னா, நீங்க போகாமயிருப்பதா?' என்று கேட்கும் மேனேஜரை நினைத்து விலா நோகச் சிரித்தேன் என்பதுதான். ஆபிதீன் பக்கங்களுக்கு பங்களிப்பதே ஓரிருவர்தான், அவர்களின் பகைமையையும் 
சம்பாதித்துக் கொள்ளவேண்டுமா? மாட்டவே மாட்டேன். முப்பது வருடங்களுக்குப் பிறகு சவுதி நினைவுகளை எழுதுபவர் , 'பெற்ற குழந்தைகள் குறித்த சகலமான தொடர் தாக்கங்களால், காலங்களில் பெற்றவர்கள் கொள்ளும் மனப் பதைப்புகள் பல ரகம்' எனும் வலி மிகுந்த வரியை விரிவாக்கி விரைவில் எழுதவேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். விமர்சனம்? ' 

நீங்கள் சந்திக்க எண்ணும் சாது, சாமியார், சன்னியாசி, ஹஜ்ரத் இன்னும்...  தத்துவ மேதைகள் என்று எவருமே உங்களுக்கு..... புத்தம் புதிதாக  எதனையும் சொல்லிவிட மாட்டார்கள்!  சொல்லி விடவும் முடியாது. உங்களுக்கு புரிந்த தெரிந்த கருத்துகளையே அவர்களின் வியாக்கியான அழகு மொழியில் மகிமை கூட்டி புதிய விளக்கங்களோடு மிளிர்வார்கள்!' என்று ஃபேஸ்புக்கில் தங்ஙள் தாஜே சொல்லியிருப்பதுதான் விமர்சனம்!. தங்ஙள்கள் கேரளத்தில் மட்டுமல்ல,  சுய முன்னேற்றத்திற்கு உதவுகிறேன் என்று விதவிதமான பெயர்களுடன் வினோத வகுப்புகள் நடத்தும் 
தமிழர்களிலும் இருக்கிறார்கள். என்ன, தலைப்பாகை மட்டும் இல்லை. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! - ஆபிதீன்
***


தங்ஙள் அமீர் 
------------------
-தாஜ்

"நேற்று 'அல் - முராஃபி'க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?" - எங்க மேனேஜர் 'ஜெம்', எதிர்பக்கத்து கேபினிலிருந்து எழுப்பிய அந்தக் கேள்வி எனக்கானது. காலையில் அலுவலகம் போனவுடன், மேனேஜர் ரூமுக்கும், அக்கவுண்டண்ட் ரூமுக்கும் எதிரே, பக்கவாட்டுத் தடுப்பினுள் காணும் டீ டேபிளில், காஃபி உண்டாக்கி; நானும், ஸ்டோர்கீப்பர் ஜமாலும் குடிக்கத்தொடங்கிய போதுதான், ஜெம் அலுவலகம் வந்தார். இருக்கையில் அவர் அமர்ந்த நாழிக்கு அப்படி கேட்டதென்பது எனக்கு குழப்பத்தைத் தந்தது.

'அல் முராஃபி' ஒரு சூப்பர் மார்க்கெட். ரியாத் புறநகர்ப் பகுதியான 'அல் நசீம்'-ல் உள்ளது. அதன் பர்ச்சேஸ் மேனேஜர்தான் போக்கர்! அவனைப்பற்றிதான் கேட்கிறார். மலையாளியான அவன் பெயர் பக்கர் குஞ்சு. பக்கர் குஞ்சுதான் போக்கராகிப் போனான். எங்க மேனேஜருக்கு அவன் கூட்டுக்காரனும்கூட. வியாபாரரீதியில் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் தரக்கூடியவன். அதற்கு ஈடாக மாதம் தட்டாமல் நாங்கள் அவனுக்கு தரக்கூடிய அன்பளிப்பு கவர் கனமானது! சிரிப்பற்ற அவனது முகத்தில் சிரிப்பை வரவழைப்பது! மாதம் முடியும் முன்னே மணியடித்தமாதிரி எங்களுடைய கவர் அவனுக்கு போய்சேரும். அவனது எத்தனையோ சௌதி சம்பாத்திய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

இந்த வியாபார யுக்தியில் எங்கமேனேஜர் மொழி, மதம், நாடு கடந்து தன்நேர்மையை பறைசாற்றுபவர்! ரியாத்தில் எங்களோடு வியாபாரத் தொடர்பு கொண்டிருக்கும் அத்தனை 'போக்கர்'களுக்கும் பேசியது பேசியப்படிக்கு பர்செண்டேஜ் சுத்தமாய், ஒரே காலக்கணக்கில், அவரவர்களை, எங்களது கவர் மகிழ்வித்துவிடும்! அவர்களும் தங்கள் பங்கிற்கு 'பேங்க் செக்' விசயத்தில் சொன்ன தேதி மாறாமல் முழுத்தொகைக்கும் செக் தந்து, விசுவாசத்தை நிலைநாட்டுபவர்களாக 
இருந்தார்கள். அடுத்தடுத்த மாதத்திற்கான ஆர்டர்களையும் நாங்கள் வியக்கும் அளவில் அதிகமாகவும் தருவார்கள்! இந்த 'அதிகம்' உயர உயர கவரின் கனமும் கூடும் என்பதை அறிந்தவர்கள் அவர்கள்! எங்க மேனேஜருக்கு, இதன்பொருட்டு மேலிடத்தில் நல்லபெயர், கொசுறாய் திறமைசாலி என்கிற பட்டம்! 'பையர்'களின் ஆர்டர்கள் மாதாமாதம் கூடுவதும், அவர்களின் செக் சொன்னதேதிக்கு ஹெட்ஆபிஸ் போய் சேர்வதும், பிசகில்லாமல் அது பேங்கில் பணமாவதுமென்றால்... சும்மாவா?

போக்கரும் ஜெம்மும் தேர்ந்த வியாபாரிகள். அதன் அத்தனை நுட்பங்களும் அவர்களுக்கு அத்துப்படி. இந்தநுட்பத்தில் எங்க ஜெம் ஒருபடி மேல். போக்கரும் சளைத்தவனில்லை. வியாபாரப்பேச்சால் எதிராளியின் ஒருகண்ணை போக்கரால் மறைத்துவிட முடியுமென்றால், ஜெம்மால் இரண்டுகண்களையும்  மறைத்துவிட முடியும்! இஸ்ட நண்பனான போக்கரோடு, சில வாரங்களாக ஜெம்முக்கு சுமுகமில்லை. போக்கரிடமிருந்து வரவேண்டிய வியாபார நிமிர்த்தமான ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. அவன் தந்த சென்றமாதத்திற்கான செக், பேங்கில்பணமாகவில்லை. வியாபாரபோக்கில் இந்தவகை செயல்பாடுகள் ஓர்வகையான மறைமுக யுத்தம்!

உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் எங்களது மொத்த வியாபாரத்தில், நியூஸிலாத்திலிருந்து நாங்கள் இறக்குமதி செய்யும் தேர்ந்ததோர் 'பால்பவுடர்' பிரதான இடத்தை வகித்தது. அதனை முன்வைத்துதான் நாங்கள் பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்துவந்தோம். அந்த அளவிற்கு விற்பனையில் அந்தப் பால்பவுடர் எங்களுக்கு அபாரமாக கைகொடுத்தது. சௌதி பூராவுக்கும் எங்க கம்பெனிதான் அதன் ஏஜென்ஸியை வைத்திருந்தது. அந்தப் பால்பவுடரை ரியாத்தில் நாங்கள் அறிமுகப்படுத்திய தொடக்க காலத்தில், வியாபாரிகளுக்கு அதனை 
அநியாயத்துக்கும் குறைந்தவிலையில் தந்தோம்! அப்படி தரச்சொல்லி அதன்வழியே தங்களது பால்பவுடர் மார்கெட்டை இறுக்கிப்பிடிக்கும் 
வழிமுறைகளை நியூஸிலாந்திலிருந்து அந்தப் பால்பவுடர் கம்பெனி எங்களுக்கு பாடம் புகட்டியது. அதன் வியாபாரம் பரபரப்பாகி, சூடுபிடிக்கத் துவங்கிய கொஞ்ச காலத்திற்கெல்லாம், அதன் விலை படிப்படியாக மேலேறத் தொடங்கியது.

இந்த 'படிப்படியான' விலையேற்றமும் அவர்களது புகட்டல்தான்! வியாபாரமென்பது வித்தைசார்ந்தது. சாணக்கியம் இல்லாத இடம்தான் எது?

எங்களது பால்பவுடர் விலையேறும்போதெல்லாம் அதுகுறித்து வியாபாரிகளுக்கு முன்கூட்டியே முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். வியாபாரிகள் அத்தகைய தருணங்களில் போதுமான அளவுக்குமேல் வாங்கிவைத்துக் கொள்வார்கள். புதிய விலையில் விற்று அதிகலாபமும் பார்ப்பார்கள். அத்தகைய தருணங்களில் நாங்களும் கூடுதலாகவே பால்பவுடரை தந்து, அவர்களின் எண்ணம் ஈடேற உதவுபவர்களாகவே இருப்போம். விலையேற்றத்தை ஒட்டிய எங்களின் சாணக்கியம் ஜெயிக்குமிடமே அதுதான்! நாங்கள் வியாபாரிகளை மகிழ்வித்தால் மட்டும் போதும். அவர்கள் மக்களை ஆசுவாசப்படுத்திவிடுவார்கள். லாபத்தை முன்நிறுத்தும் எந்தத் துறையுமே வாங்குபவர்களின் அசௌகரியத்தை 'திசைத்திருப்ப மட்டும்' முயலுமே தவிர, அவர்களின் கஷ்டதிசை நோக்காது!

எங்கள் பால்பவுடரின் சமீபத்திய விலையேற்றத்தின் போது, அது குறித்து எல்லா வியாபாரிகளுக்கும் முன்கூட்டியே தகவல் செய்த மாதிரிக்கு போக்கருக்கும் தகவல் தரப்பட்டது. மாதம் இருநூறு கார்ட்டூன்கள் அளவில் எங்களது பால்பவுடரை வாங்கும் பேக்கர், இம்முறை அறநூறு கார்ட்டூன்கள் கேட்டான். ஒரு மாதத்திற்கு வாங்கும் அதே அளவிற்கான கார்ட்டூன்கள் மட்டுமே கூடுதலாகவும், பழைய விலைக்கும் தரயியலுமென்று ஜெம் சொல்லிவிட்டார். அதுதான் அவருக்கான தலைமை அலுவலகத்தின் உத்தரவாகவும் இருந்தது. நாங்கள் தரமுன்வந்த கூடுதலான இருநூறு கார்டூன்களை போக்கர் வேண்டாமென மறுத்துவிட்டான். தான் பணிபுரியும் சூப்பர்மார்கெட்டுக்கு லாபம் ஈட்டிதரும் அவனது ஆர்வம் தடைப்பட்டு போனதில் அவனுக்குதான் எத்தனை வருத்தம்! எந்தவோர் நல்லெண்ணம் தடைப்படும்போது, அதன் ஆர்வலர்களுக்கு வருத்தம் மேலோங்கவே செய்யும். போக்கர் கூடுதலாக வருத்தம்கொண்டான்.

நிகழ்வில், போக்கர் குஞ்சுக்கும் எங்க மேனேஜர் ஜெம்மிற்குமான நட்பில் சிலவாரங்களாக லேசான வீக்கமிருந்தது. அது வியாபாரம் சார்ந்ததாக சொல்லமுடியாது. என்றாலும், அதுவே இப்போது வியாபாரத்தில் முட்டிக்கொண்டு நிற்கிறது.

ஜெம்மிற்கு அவனிடம் தனிப்பட்ட வருத்தமொன்று உண்டு. அதுதான், இந்த வீக்கத்திற்கே அடிப்படை. அவன்கேட்ட அறுநூறு கார்ட்டூன்களைத் தர இயலாவிட்டாலும் ஐநூறு அளவில் தந்து அவனை திருப்திப் படுத்தியிருக்க முடியும்.

கூடுதல் கார்ட்டூன்களின் தேவைகுறித்து மேலிடத்தில் ஜெம் அழுந்தச்சொன்னால், அவர்கள் 'எஸ்' சொல்லியிருப்பார்கள். ஆனால், மேலிடத்தில் போக்கருக்காக ஜெம் கோரிக்கை எதையும்வைக்கவில்லை. நான் அனுமானித்தவரை தனிப்பட்ட வருத்தம்தான் இதில் பிரதானம். இப்பிரதானத்தின் பின்னேதான் 'தங்ஙள் அமீர்' வருகிறார்!

அல்-நசீம் ஏரியா பக்கமாக நேற்று நான் போயிருந்தபோது, அல் முராஃபிக்கு போகவில்லைதான். போக்கரை சந்திக்கவில்லைதான். அதற்கு காரணமிருந்தது. . அங்கே போகவேண்டாமென ஜெம்தான் நேற்றுகாலையில், வாய்மொழி உத்தரவாக என்னிடம்சொன்னார். இப்போது இப்படிகேட்கிறார்!  அவரதுகேள்வியை காதில் வாங்கிய நான், குழம்பிய நிலையில் காஃபியை அப்படியே வைத்துவிட்டு, எதிரே இடதுபக்கமிருக்கும் அவரது கேபினுக்குள் நுழைந்தேன்.

"நேற்று 'அல் - முராஃபி'க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?" என்று என்முகம் பார்த்து, எந்த சலனமுமில்லாமல் திரும்பவும் அதையே கேட்டார். அவரது கணீரின் அழுத்தம், கூடுதலாக குழப்பமடைய செய்தது. 'ஒரு சமயம், நேற்று நாம்தான் அவர் சொன்ன வாய்மொழி உத்தரவை சரியாக காதில் வாங்கிகொள்ளவில்லையோ?' நிச்சயமில்லை. நேற்றைக்கு என்னிடம் அவர்சொன்னது நிஜம்! வெளிப்படுத்த முடியாத தகிப்போடு, "நீங்கதானே நேற்றைக்கு அங்கே போகவேண்டாம், போக்கரிடம் ஆர்டர் எதுவும் கேட்க வேண்டாமென சொன்னீங்க!" என்றேன். 

உடனே அவர், "நான் போக வேண்டாம் என்று சொன்னா, நீங்க போகாமயிருப்பதா?" என்றார். என்னிடம் அதற்கு பதிலில்லை. இது கணிக்க இயலாத சாதுர்யம் கொண்ட கேள்வி! சராசரிகளுக்கு பிடிப்படாது. செஸ்போர்டை தலைகீழாக கவிழ்த்துபோட்டு காய்களை நகர்த்தச் சொன்னா... நான் என்ன செய்ய?

எங்க மேனேஜரோடு நான் எத்தனை நட்பாக இருந்தாலும், எங்களுக்கிடையே கண்களுக்கு தெரியாத கோடொன்று இருக்கவே செய்கிறது. அவரது கேள்விகள் எதனையும் சட்டென மறுத்து பேசிவிடமுடியாது. என்றாலும், இப்ப அவர் என்னை பேச நிர்ப்பந்திக்கிறார். நான் மாட்டேன். அவரோடு சர்ச்சைக்குரிய எதுவும் சரிப்படாது. தகாது. அப்படி சர்ச்சித்தாலும், பெரிதாக அதி அர்த்தமிருக்கபோவதில்லை. எப்படியும் கடைசியில் அவர்தான் ஜெயிப்பார்! 

பேச்சற்று நின்றுகொண்டிருந்தேன். நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தது. பிறகு அவர், இயல்பாக என் பெயரை விளித்து, "போக்கரை நான் பார்த்துகொள்கிறேன். அவனால் கவர் வாங்காமல் 

ஆகாது. இனியும்கூட நீங்கள் அங்கே போகவேண்டாம்." என்றவராக, அன்றைய காலைப் பொழுதிற்கு சப்ளை செய்யவேண்டிய 'இன்வாய்ஸ்'ஸுகளை தந்தார். மேலும், அது சம்மந்தமான 

தகவல்கள் சிலவற்றையும் சொன்னார். நானும், நிகழ்ந்த சம்பவத்தை முற்றாய் மறந்த மாதிரிக்கு, அவர்சொன்ன தகவல்களை கேட்டுக்கொண்டும் தலையாட்டியபடியும் வெளியானேன்.

என் வருகைக்காக ஆபிஸ் வராண்டாவில் சிரித்துகொண்டே தயாராக நின்றான் ஜமால். அவனை 'வா'வென அழைத்துகொண்டு, ஆபீஸைவிட்டு அவசரமாக வெளியானேன். முதலில் புகைக்கவேண்டும் என்கிற சிந்தை பரபரவென்று இருந்தது.

கட்டிடத்தின் கீழே நிழல் பார்க்க நின்று, சிகரெட் பற்றவைத்து கொண்டேன். 'என்ன பொழப்புடா இது!?'வென தோன்றியது. புகைத்ததை கீழேபோட்டு மிதித்துவிட்டு. வேனிலேறி ஸ்டார்ட் செய்தேன். என்னைப் பார்த்து சிரித்தவனாக ஜமாலும் ஏறியமர்ந்தான். வேன், 'ஃபைஸலியா'விலுள்ள எங்களது 'வேர்ஹவுஸ்' பார்க்க விரைந்தது.

டிரைவ் செய்தபடிக்கு, பக்கத்தில் அமர்ந்திருந்த ஜமாலைப் பார்த்தேன். அவன் இன்னும் சிரிப்பு குறையாமல் இருந்தான். மேனேஜரின் சப்தம் கேட்டு, குழப்பி,  நான் விழித்த விழிப்பைக் கண்டு 

நமட்டுச் சிரிப்பை தொடங்கியவன், இன்னும் நிறுத்தினானில்லை. மேனேஜர் ஜெம், நேற்று வாய்மொழி உத்தரவாக என்னிடம் சொன்னதையறிவான். அதனால்தான் ரசித்து சிரித்துகொண்டேயிருக்கிறான். அவனிடம், "பாருய்யா, உங்க மச்சான் எப்படியெல்லாம் உல்டாவா பேசுறாருன்ணு?" என்றேன். அவன் இப்போது வாய்விட்டு வேகமாக சிரித்தான். நாட்டில், ஜமால் என் மாவட்டத்துக்காரன். கீழத்தஞ்சை. ஆனாலும், இங்கே வந்தபின்தான் பழக்கம். உடன் பிறந்தவனாக பழகக் கூடியன். நான் எந்நேரமும் அவனை ஒருமையில் அழைப்பதையோ, சரளமாக அப்படி பேசுவதையோ, ஒருபோதும் தவறாக கருதாதவன்! இதற்கெல்லாம் நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

"உங்களுக்கு தெரியாதா பாய், அந்த ஆளு அப்படிதான். ஏட்டிக்குப் போட்டியாதான் பேசுவாரு. நாங்க எவ்வளவோ அனுபவிச்சாச்சு!" என்று அழுத்தம் தந்து சொன்னான். நிஜமாலுமே ஜெம் அப்படித்தானா? என்று எனக்கு தெரியாது. ஆனா, ஜமாலுக்கு எங்க மேனேஜர் சொந்த மச்சான் என்பது தெரியும். இவனது மூத்த தங்கையைதான் அவர் மணம்முடித்திருக்கிறார்!

***
சென்னை வாசியான ஜெம் குடும்பத்தினர், திருமண புரோக்கர் மூலம், ஜெம்மிற்கு கீழத்தஞ்சையில் பெண்தேடி, நடந்த திருமணமது. கல்யாணத்திற்கு நிற்கும் கீழத்தஞ்சைப் பெண்கள், சென்னைவாசிகளின் பார்வைக்கு பசு! போடப்படுவது புல்லோ, வைக்கோலோ அது எதுவொன்றென்றாலும் சத்தம் காட்டாது தின்றும், முட்டாது பால்தந்தும் வியக்கவைக்கும் சாதுக்கள்! குடும்பத்திற்கு அடங்கிவொடுங்கி சேவகம் புரிகிற ஜாதி! சென்னைவாசிகளின் கணிப்பை நூறுசதம், முடிந்தால் கூடுதலாகவே மெய்ப்பிப்பவர்கள்! இந்த அடங்கியொடுங்குதலை அவர்கள் 
பிறப்போடு கொண்டு வருபவர்கள்!

ஜெம் குடும்பத்தினரின் தேர்வும் சோடைபோகவில்லை. "அதேபார் நிஷா... வெள்ளைகாக்கை பறக்கிறது" யென, மனைவியிடம் ஜெம் சொல்லக் கூடுமெனில், குனிந்ததலை நிமிராமல் "ஆமாங்க!" என இரண்டுதரம் ஒப்புக்கொள்ளும் பெண்ணவள்! புருஷன் சொல்லுக்கு, தன் தங்கை ஆமாம் போடும் துரிதம்கண்டு மலைத்தவனாய், என்னிடம் ஒருமுறை அதனை விவரித்தபோது, 'அப்படியா!' யென வியந்ததோடு, அதனை ஜீரணிக்கவும் சிரமம் கொண்டேன். இந்தக் காலத்திலும் இப்படியா? உலகம் பூராவும் பெண்கள், நீ நான் என்று நவீன உலகத்திற்குள் நுழைந்திட விரும்பும் புதுமைப் பெண்ணாக மாறினாலும், கீழத்தஞ்சை இஸ்லாமியப் பெண்கள் எந்தக்காலமும் ஒரே காலமாக கருதக் கூடியவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது! இத்தனைக்கும் அந்தப்பெண் ஜெம்முக்கு இரண்டாம்தாரம்! படித்த பெண்வேறு!

நான் முதன்முதலாக அந்தப் பெண்ணை கண்டபோது, சின்னச்சின்ன இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும், மகிழ்ச்சியாகவுமே இருந்தார்! இன்றைக்கும் அப்படித்தான் இருக்கிறார் என்கிற வகையில் எனக்கும் சந்தோஷம்தான்! ஜமால் இன்னொரு செய்தியையும் சொன்னான். அதனை ஜீரணிக்க இன்னும் சிரமமாக இருந்தது. ஜெம், காதல்வயப்பட்டு செய்துகொண்ட அவரின் முதல் திருமணம், ஒரு கிருஸ்துவப் பெண்ணோடு என்றும், சென்னையைச் சேர்ந்த அந்தப் பெண்ணால்  தன் தங்கை மாதிரிக்கு தங்குதடையின்றி அவருக்கு 'ஆமாம்' போட சிரமம் கொண்டதினால்தான், இவரை பிரிய நேர்ந்ததாம்! முகம்தெரியாத அந்தப் பெண் மீது அனுதாபம் எழுந்தது. மனிதவாழ்வின் கோணல்கள் எதுதான் 
ஜீரணிக்கக் கூடியதாக இருக்கிறது? அவரது முதல் மனைவி, அவரோடு இல்லையே தவிர, அவள் பெற்றுதந்த ஓர் ஆண்மகன் இப்போது ஜெம்மிடம்தான்!

ஜெம்மின் மகன் குறித்து சில செய்திகள் அறிய வந்திருக்கிறேன். நேரில் அந்தப் பையனை பார்த்தும் இருக்கிறேன். அவனைப்பற்றிச் சொல்ல சில செய்திகள்கூட உண்டு. பெயர் அகம்மத் 

ரஹ்மானி. வயது பன்னிரெண்டு. உடம்பு முடியாதவன். ஊனம். நான்குவயதில் வீல்சேர் வாசியாகி, பின்னர் அதனோடவே வாழத் தொடங்கிவிட்டவன். எட்டு வயதுவரை இருந்த அவனது திடகாத்திரமான உடம்பும், தேஸேஜும் பின்னர் கரையத் தொடங்கி ரூபம் மங்க, தோல் மூடிய எலும்புகளின் கோர்வையாக ஆகிவிட்டவன். டாக்டர்கள் பலரும்பார்த்து, பல்வேறு சிகிச்சைகளுக்கு அந்தப்பையனை ஆட்படுத்தியும்கூட, தேறமுடியாது போன அவனது சுகவீனம் எவருக்கும் நெஞ்சைத் தைக்கும். அவனின் தந்தை ஜெம்முக்கு, எந்நேரமும் மகன் குறித்து துயரமுண்டு. "என் பையன் ஒரு மெல்டிங் மேன்!" என்று துயரடர்ந்த மனதோடு என்னிடம் ஒருமுறை ஜெம் கோடிட்டு காமித்தபோது, அவருக்கு ஆறுதல் சொல்லத் தெரியாத கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டேன். தந்தையின் ஜீவனில் துயரத்தைப் பரப்பிவிட்டு பாட்டியின் பராமரிப்பில், சென்னை வீட்டில் இருக்கிறான்! பெற்ற குழந்தைகள் குறித்த சகலமான தொடர் தாக்கங்களால், காலங்களில் பெற்றவர்கள் கொள்ளும் மனப் பதைப்புகள் பல ரகம். அதில்.. இதுவோர் ரகம்!

***
'அல் கமாலியா' ஃபுட்ஸ்டஃப்ஸ்'-ன் தலைமையகம் ரியாதல்ல, ’தமாம்’. ரியாத் கிளைதான். இங்கே புதிய கிளை திறக்க முடிவானபோது, முதலில் திறமையான மேனேஜரை தேர்வு செய்யத் தொடங்கினார்கள். அப்படி தேர்வானவர்தான் ஜெமீல்மாலிக். தமாமைச் சுற்றிய பகுதிகளில், பல 'லேபர் கேம்ப்’புகளில் ஜெம் மேனேஜர் பணியில் பத்து வருடங்களுக்குமேல் பெயர்போட்டவர் அவர்! எங்கள் கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் ஜெஃப்ரி ஒரு லெப்னானி. அவன் தமாமைச் சுற்றியுள்ள கேம்ப்புகளுக்கு பால் பவுடர் மற்றும் எங்களது இன்னுமான பல பொருட்களுக்கு ஆர்டர் எடுக்கப் போகிறபோது, ஜெம்மை அவர் பணிபுரிகிற வைத்து கண்டதில், அவரது திறமை ஜெஃப்ரிக்கு ஈர்ப்பைத்தர, ஜெம்மைக் குறிவைத்து, அவரோடு கலந்துபேசி, ரியாத் பிராஞ்ஜின் மேனேஜராக அவரை தேர்வு செய்தான். ஜெமீல்மாலிக்கை கம்பெனியிலுள்ள எல்லோருமே 'ஜெம்' மென அழைத்தனர். அப்படி அழைப்பதையே அவரும் விரும்பினார். அதன்படிக்கு எனக்கும் அவர் 'ஜெம்'மாகிப் போனார்!

ரியாத்திற்கு வருவதற்கு முன் எனக்கும் ஜெமீல் மாலிக்கிற்குமான பழக்கம் இலேசானது. தமாமில் ஒரு புத்தகக் கடையில் வைத்து ஒருமுறை அவரிடம் நாலே நாலு வார்த்தைகள் என்கிற அளவில் பேசியிருப்பேன். பின்னர் எங்காவது காணும்போது 'ஹலோ' அவ்வளவுதான். இந்த சாதாரணப் பழக்கம் தந்த நட்பாலோ என்னவோ, ஒருமுறை தமாம் கடைவீதியில் வைத்து என்னை அவர் சந்தித்தபோது, நான் ரியாத் வர வேண்டுமென விரும்பினார். "ரியாத் பிராஞ்ச்சுக்கு என் மைத்துனன் ஜமாலோடு நீங்களும் வருகின்றீர்கள். நாம் மூவர்தான் முதலில் அங்கே போகிறோம். என் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பைத் தரணும்" என்று தன் அன்பை வெளிப்படுத்தினார். நான் சம்மதம் சொன்னேன். அதுநாள்வரை பணிசெய்த என் தமாம் கம்பெனியை முடித்துக் கொண்டு, ரியாத் வாழ்க்கைக்கு ஆயத்தமானேன்.

தமாமைச் சுற்றி அல்கோபர், துக்பா, டெஹரான், ரஸ்தனூரா, அல் ஜுபைல், ஷஃபானா என்று வட்டமிட்ட எனக்கு ரியாத் புதுசு. பணக்கார அரபிகளின் பவிசான பூமி! நகரின் பாதிக்கும் அதிகமான வெளியை அந்த வம்சத்தார்கள் கட்டிடங்கள் என்கிற பெயரில், நிரப்பி வைத்திருக்கிறார்கள். கண்ணில்படுகிற வான்தொடும் கட்டிடங்கள் அத்தனையும் அவர்களுடையதுதான்! நகரின் 
மையத்தில், மேற்கு திசைபபார்க்க 'அல்-நஸ்ரியா' என்றோர் இடம். அந்த ஸ்தலம் பூராவும் மன்னர் பரம்பரை வாசிகளுக்கான குடியிருப்புப் பகுதி. அங்கே, ஒரு பங்களாவிலிருந்து அடுத்த பங்களாவுக்கு நடந்து கடப்பதென்பது சுலபமல்ல!

உலகில், அதிக வாகன நெரிசல்கொண்ட நகரங்களில் ஒன்றாக ரியாத்தை சொல்வார்கள். ஒவ்வொரு அரபியும் யானையைவிட பருமன் கொண்ட அமெரிக்க வாகனத்தை எண்ணிக்கையற்று வாங்கிவைத்திருந்தால்.... பின் எப்படி நெரிசலில்லாமல் போகும்? தங்களது வாரிசுகளுக்கு வண்ணத்திலொன்று என்கிற கணக்கில் தகப்பன் அரபி வாங்கித்தருவதை யாரும் குற்றம்காணமுடியாதுதான், அதற்காக பிறக்காத பிள்ளைகளுக்குமா அப்படி வாங்கி வாங்கி நிறுத்துவது!

தலைநகர் பாதுகாப்புக்காக மன்னர் கால சிந்தனையில் அகழி வெட்டுவதுமாதிரி, அத்தனை ஆழத்திற்கு, நகரைச்சுற்றி ரிங்ரோட் என்றும், எண்ணிக்கையில்லா பாலங்களென்றும் மையடவுனுக்குள்ளே அண்டர்கிரவுண்ட் நெடுஞ்சாலைகளென்றும் பல நிறுவியிருந்தாலும் ஒலையா ரோட்டிலும், சித்தீன் ஸ்ட்ரீட்டிலும் எந்நேரமும் மணிக்கணக்கில் வாகனங்கள் ஊர்ந்துதான் கடந்தாகணும்! எங்க கம்பெனி முத்திரை கொண்ட பெரிய வாகனத்தில் வியாபாரம்பொருட்டு அங்கெல்லாம் தினைக்கும் நான் வலம்வருவதை தவிர்க்க இயலாது. அத்தகைய நெரிசலான ரோடுகளில் என் பெரிய வாகனத்தை ஓட்டியபடிக்கு ஊர்ந்து செல்வதென்பது மஹா கஷ்டம்! இடையிடையே சிக்னல், போலீஸ்! மினுக்கென்று கோபம்கொப்பளிக்க காலங்களில் வளர்ந்த என்னை, அநியாயத்திற்கு சாதுவாக்கிய சம்பவம் ஒன்று உண்டென்றால், அது, இங்கே நான் எதிர்கொண்ட வாகனநெரிசல்தான்! வாழ்தல்பொருட்டு வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் கொஞ்சமல்ல!

'மலாஸ்' ஏரியாவில் எங்களது ஆஃபீஸென்றால். தங்குமிடம் 'முரப்பா' என்றானது. ஃபேமிலியோடு எங்க ஜெம் ஒரு ஃபிளாட்டில் தங்கினார். பக்கத்து பிளாட்டில் நானும் ஜமாலும். மூன்று ரூம்களைக் கொண்ட அந்தப் பெரிய ஃபிளாட்டில் எங்கள் இருவருக்கும் ஒரு ரூமே போதுமானதாகயிருந்தது. மீதமுள்ள ரூம்கள், இனிவரும் எங்கள் உதவியாளர்களுக்கானது. தங்குமிடத்திலிருந்து வலபுறமாக ஒன்றரை கிலோமீட்டர் போனால் 'பத்தா' கடைவீதி! ரியாத்தைச் சுற்றி எங்கெங்கோ உள்ள இந்தியர்கள், தங்களின் வெள்ளி விடுமுறையில் சங்கமிக்கும் விசேச ஸ்தலமிது! பஞ்சம் பிழைக்கவந்த இந்தியக்கூலிகளின் சொந்தக் கதைகளையும், சோகக் கதைகளையும் கேட்டுக்கேட்டே அங்குள்ள 
புதிய கட்டிடங்கள் கூட இத்து, சிதிலமாக விழ, இடித்து மீண்டும் புதிதாக கட்டவேண்டிய நிலை!

ஜெம்மிற்கு கீழ் பணியாற்றத் தொடங்கிய ஒருவருடத்திற்கெல்லாம், அவர் எனக்கு பிடிபட்டு, பிடித்தும்போனார். இன்றைக்கு அவர் தந்த அதிர்வுகளையொத்த அதிர்வுகளை பலமுறை அவரிடம் பெற்றிருக்கிறேன். B.B.A. படிக்காமல், வியாபார யுக்திகளை கற்பதென்றால் சும்மாவா? ஜமால் சொல்கிற மாதிரியெல்லாம் அவர் இல்லை, அநியாயத்திற்கு அவரை குறைத்து மதிப்பிடுகிறான். அசாத்திய திறமைசாலியான அவரை, அவன் குறைத்து மதிப்பிட்டால் ஆச்சா? வியாபாரரீதியாக அவரால் இங்கே நான்பெற்ற விவேகமான அனுபவங்களுக்காகவே, அவரை இன்னும் நான் 
மெச்சலாம். தகும்!

என்னுடைய பார்வையில் ஜெம் சறுக்கிய ஓர் நிகழ்வு உண்டென்றால் அது, மலையாள மாந்திரீகவாதி தங்ஙளிடம்தான்! மீளமுடியாத சுகவீனத்தில் இருக்கும் தன் மகனின் நலன் பொருட்டு, அவரது சிந்தை மழுங்கி விட்டது. ஜெம்மின் நண்பரான பக்கர் குஞ்சுவால் அறிமுகப்படுத்தப்பட்ட மலையாள மாந்திரீகவாதி தங்ஙள், "உங்கள் மகனின் சுகவீனத்தை கட்டாயம் நான் களைவேன். பையனுக்கு 'வப்பு' வைக்கப்பட்டிருக்கலாம். உங்களோடு உடனிருந்து பின்னர் பகைமை பாராட்டியவர் எவரோ ஒருவர் அப்படிச் செய்திருக்கவேண்டும். அந்தப் பையனை நிச்சயம் எழுந்து நடமாட வைக்கிறேன்!" அவர் மிக உறுதியாக அப்படிக் கூறவும், பக்கர் குஞ்சு, "இது 
பொன்னுபோல நடக்கும் அண்ணே" என்று வழிமொழிந்தான். ஜெம் முழுமையாக நம்பினார்.  தங்ஙளின் ஆன்மீகத் தோற்றம் யாரையும் நம்பாமலும் விட்டும்விடாது.

இத்தனைக்கும், தங்ஙள் கூறிய சங்கதிகள் அத்தனையும் பக்கர்குஞ்சுவிடம், ஜெம் முன்பு கூறியிருந்ததுதான். இப்போது தங்ஙள் வழியே, ஜெம்மிடமே வந்து, அவரை வியக்கடித்தது! ஒருவேளை பக்கர் குஞ்சு தங்ஙளிடம் சொல்லியிருக்கக் கூடுமோ? என்று நினைத்தவர், பின்னர் அப்படி இருக்காது, தங்ஙளை சந்தேகிப்பது மகா தவறென்று என்று தனக்குள் சமாதானமாகிப் போனார். எதிரே பொங்கிவழியும் மாந்திரீக மகத்துவத்தை யார்தான் கேள்விக்கு ஊட்படுத்த முடியும்? ஒரு வெள்ளிக்கிழமை மாலைநேரம் பார்க்க, எங்கள் பிளாட்டிற்கு தங்ஙள் காலடியெடுத்து வைத்தார்! 

தன்மகன், அத்தருணமே பூரணசுகம் கொண்டுவிட்டதாக சந்தோஷமும் கொண்டார் ஜெம்! மகிழ்ச்சியோடு வந்த தங்ஙள், ஜமாலுக்கும் எனக்கும் பக்கத்து ரூம் மெட்டானார்!

***
கேரளத்து தங்ஙள்மார்களைப்பற்றி வாசித்திருக்கிறேன். காதுவழி செய்திகளாக பலதை கேள்விப்பட்டிருக்கிறேன். 'தங்ஙள் அமீர்' எங்கள் இருப்பிடம் வருவதற்கு முன், தங்ஙள் சமூகத்தாரில் யாதொரு தங்ஙளையும் நான் கண்டதில்லை.

தங்ஙள் என்பது கேரளத்தில் வாழும் இஸ்லாமிய தனவந்தக் குடும்பத்தினர் சிலருக்கான பட்டப்பெயர்! கேரளத்து அரசியலில் அவர்களது ஆதிக்கம் அதிகம்.  அவர்களுள் சிலர் மாந்திரீகத்தை பரம்பரைப் பணியாக கொண்டவர்கள். இந்திய முக்கியப் புள்ளிகளுக்கு தங்ஙள்மார்களதமா மாந்திரீகத்தேவை அவ்வப்போது அவசியம் வேண்டியதாகப் போகிறது. தனக்குப் போட்டியாக வளரும் கம்பெனியை நசுக்க நினைக்கும் பெரும் கம்பெனிகளின் முதலாளிமார்களுக்கும், சினிமாவில் தன்னை முந்தும் புதிய ஹீரோவின் மார்கெட்டை முடக்க நினைக்கும் பழைய ஹீரோவின் 
அபிலாசையினை நிறைவேற்றித் தரவும், அரசியலில் முதலமைச்சர் நாற்காலியை குறிவைக்கும் மூத்தஅரசியல்வாதிகளின் ஏக்கத்திற்கு ஆவண செய்யவும், விரும்பிய பெண்ணை அல்லது விரும்பிய ஆணை தன்கட்டுக்குள் வைக்கவும், திருமணம் மூலம் அடைய நினைப்பவர்களின் விரும்புகிறவர்களுக்கு அதனை கைகூடசெய்யவும் மாந்திரீகர்கள் இம்மண்ணிற்கு கட்டாயமாகி போகிறார்கள்! மேலும், 'பில்லி, சூன்யம்' வைப்பது,எடுப்பது மாதிரியான அதீதப் பணிகளுக்கும் இந்த மாந்திரீகவாதிகள்தான் எத்தனையெத்தனை அவசியம்!

ஓய்வுநேரப் பொழுதொன்றில், தங்ஙள் அமீர் காட்டிய அவரது பிரத்தியோக ஆல்பத்தை கண்டபோது, நானும் ஜமாலும் வியந்து போனோம். யார் யாரெல்லாம் அவரை அழைத்து மரியாதை செய்திருக்கிறார்கள் என்பது ஃபோட்டோ சான்றுகளுடன் இருந்தது! தங்ஙளின் சேவை இவர்களுக்கெல்லாம் ஏதோ ஒருவகையில் உபயோகப்பட்டிருக்கிறது. கண்ணுற்ற புகைப்படங்களில், இந்திராகாந்தி, ஜெயவர்த்தனே, மாநில அரசியலில் பெயர்பெற்ற சில அரசியல்தலைவர்கள், இந்தி நடிகர்கள் நடிகைகள், பெரும் தொழில்அதிபர்கள் என்று அதில் பலரும்உண்டு. தங்ஙளை அழைக்கும் அளவில், 'இவர்களுக்குமா பிரச்சனை..!?' என்கிற கேள்வியெழ வியப்புகள் மேலோங்கியிருந்தது! பொதுவாக மாந்திரீகம் மாதிரியான அதீதங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால்தான் அத்தகைய வியப்பு எழுந்ததென்று நினைக்கிறேன். மாந்திரீகத்தின் மீது மட்டுமல்ல, பேய்பிசாசுகளுக்குகூட நான் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதற்கெல்லாம் அடிப்படையில், கேள்விகளற்ற தாராள நம்பிக்கைகள் வேண்டும்! நான் அதில் ஆக சைஃபர்.

தங்ஙளை இங்கே அழைத்து வந்தபோது, என்னையும் ஜமாலையும் தனியே அழைத்த ஜெம், 'சில வாரங்கள் அவர் இங்கே இருப்பார் என்றும், அவரது மனம் கோணாமல் நாங்கள் நடக்கவேண்டும் என்றும், அவரிடம் நாங்கள் மரியாதை குறைவாக ஒருபோதும் நடந்து விடலாகாது என்றும்' தாழ்ந்த குரலில் சொன்னார். எங்கள் இருவரையும் சேர்த்து அரபுநாடுகளில் வாழும் 
எந்தவொரு கீழத்தஞ்சைக்காரர்களுக்கும் 'பணிவும் மரியாதையும்' இரண்டு கண்கள்! அவன் தனது எந்தவொரு கண்ணையும் யாருக்காகவும் எதற்காகவும் இழந்தான் என்கிற சரித்திரமே இல்லை!

அதே தாழ்ந்த குரலில், "ஸார்.., இது தேவையா?" என்றேன். அருகில் நின்ற என்னை, பெயர்கூறி அழைத்து, "நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை அறிவேன். இது பிரயோஜனமற்றது, கூடாததென சொல்ல வருகின்றீர்கள் இல்லையா? இது மட்டுமல்ல, என் மகனின் பிணி நீங்கி, அவன் நலம்பெற எந்தக் கோவிலில் போய் கும்பிடச்சொன்னாலும் கும்பிடத் தயங்கமாட்டேன்" என்றவர், "நீங்கள் அறியமாட்டீர்கள், என்மகனுக்காக எத்தனையோ தரம் வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு சென்று நான் பிராத்தனை செய்திருக்கிறேன் தெரியுமா?" என்றார். அவரது கண்கள், அவர் கொண்ட சொல்லொணா சிரமங்களை கோடிட்டுக் காட்டியது. பதில்சொல்ல முடியவில்லை என்னால்.

'நம்பிக்கை'யின் விரல்நுனி அழுந்தப்பட ஏண்டா உரசினோம் என்றாகிப் போனது. என்னை நான் நொந்தும் கொண்டவனாக, எப்படியாவது அவரிடம் சகஜம் பாராட்டி சமநிலைக்கு மீண்டும் அவரை கொண்டுவந்தால் போதுமென்றாகிவிட்டது. அப்படி யோசித்த சில நொடிகளில் ஸாரி கேட்டவனாக, ஏதேதோ சகஜமாகப் பேசி, அவரை சமநிலைக்கு கொண்டுவந்து சேர்த்தேன்.

முகம் மலர்ந்தவராக, தங்ஙளுக்கான நல்லசமையல் செய்துதருவது பற்றி பேசத்தொடங்கினார். எதனையும் காதில் சரியே வாங்காமலேயே "நிச்சயமாக" என்றேன். 'ஓகே.' என்று விட்டு கிளம்பினார். இப்போது அவர் முகத்தில், என் மீதான பழைய நம்பிக்கையின் சாயல்! அது போதாதா எனக்கு!

ஜெம்மின் தலை மறையுமுன்னே,"ஏங்கபாய்... அந்த ஆளைப்பார்த்தா பித்துகுளி மாதிரிதெரியுது. அவருக்கு மரியாதை கொடுக்கனுமுன்ணு இவர் ஏன் நம்மகிட்ட குதிக்கிறார்?" என்று தன் மச்சானை குத்திக்காட்டினான் ஜமால்.

கட்டமைக்கப்படும் புனிதங்களின் மீது, நான் அங்கீகரிக்கப்பட்ட மறுப்பாளன் என்றால், ஜமால் அங்கீகரிக்கப்படாத மறுப்பாளன்! எங்கள் இரண்டு பேர்களின் பராமரிப்பில்தான் இன்றைக்குதொட்டு பவித்திரம் கலையாத தங்ஙள் பணிவிடைகள் பெறப்போகிறார்! சிலநேரம், காலம் இப்படிதான்... எல்லோரோடும் ஏகநேரத்தில் விளையாடும்!

குழம்பிய நிலையில், ஜமால் என்னிடம் ஒன்றை கேட்டான்."ஏன்பாய், எங்க மச்சானின் மகன் மதராஸிலிருக்கிறான். தங்ஙளோ, அந்தப்பையனை பார்த்ததுமில்லை. இங்கிருந்து இவரெப்படி அவனுக்கு வைத்தியம்பார்க்கமுடியும்?" என்றான்.

அடுத்த பத்து நிமிஷத்திற்கு 'டெலிபதி'யைப் பற்றியும், 'இறையருள்' பெற்றவராக தங்ஙள் புகழ்படும் அவரது தொழில்மாட்சியைப் பற்றியும் விபரித்தேன். தலையாட்டிகேட்டவன் கடைசியில் 'புரியலைபாய்' என்றுவிட்டான். நான் மட்டுமென்ன புரிந்து, அனுபவம் கொண்டா விவரிக்கிறேன்!? சொல்பனின் வேலை நயம்பட சொல்வது. அப்படி நான் சொல்லியாகிவிட்டது. அவ்வளவுதான். அவனுக்குப் புரியவில்லை என்றால், புதிய புதியவிளக்கங்களுக்கு நான் எங்கே போவேன்?

தங்ஙள் வந்திருந்த முதல்நாள் இரவே சமையலுக்கான 'ஸ்பெஷல்கள்' அடுப்பில் கொதிக்கத் துவங்கிவிட்டது. தவ்வாவில் பொன்னிற சப்பாத்தி. அதன் மேலே அசல்நெய் பூச்சு! சமையல் வாசனை தங்ஙளை அறையில் இருக்கவொட்டாமல் அடிக்க, நேரே கிச்சனுக்கே வந்துவிட்டார் சிக்கன்மசாலா கொதி பரப்பும் மணத்தையும், மட்டன் குருமா திரளும் தளுக்கையும் வியந்துபார்த்தார்! தனக்கு தமிழத்து சமையல் பிடிக்கும் என்றார். எங்கள் பக்கமுள்ள 'லால்பேட்டை மதரஸா'வில் 
ஆறுவருடங்கள் தங்கி, 'ஹாஃபி’ஸு'க்கு படித்ததாகச் சொன்னார். நான் சமைத்துக் கொண்டிருந்தபோது, ஜமால், சிரித்த முகத்தோடான சின்னச்சின்ன கேள்விகளால், தங்ஙள் பக்கச் செய்திகளை கறந்து கொண்டிருந்தான். இந்தத் திறமையான செயல்பாட்டிற்கு, அவன் ஏதோவொரு பாலிடெக்னிக்கில்  'டிப்ளமோ' படித்திருக்க வேண்டும்! இதற்கெல்லாமா 'டிப்ளமோ படிப்பு' இருக்கும்? 

வாய்ப்பில்லைதான்! ஆனா, 'சென்னையில் வைத்து ஒரு பள்ளப்பட்டிக்காரரது ரெடிமேட் கடையில் பத்து வருஷங்கள் வேலைபார்த்து பல பாடங்கள் படித்திருக்கிறேன் என்று சில நேரம் பெருமையாக சொல்லிக் கொள்வான். இதனைவிடவா 'பாலிடெக்னிக்' கற்றுதரும் பாடங்கள் பெரிசு!?

தங்ஙள் வந்து ஒரு வாரத்திற்குள், அவர்பக்கத்து செய்திகள் அறிய நானும் ஜமாலும் ஆர்வமானோம். எங்களது ஆர்வத்துக்கு பழுதில்லாது செய்திகள் கொத்து கொத்தாக கிடைக்கத் துவங்கின. 

இந்தச்செய்தி சேகரிப்பில் நாங்கள் காட்டிய சிரத்தையும் துரிதமும் அலாதியானது. ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலுள்ள உண்மைகளை கண்டறிய, கிடைத்த செய்திகளை தீர அலசலானோம். 

அதன்சாரத்தை மனதில் வரிசைக்கிரமமாய் இருத்திக்கொண்டே வந்தோம். நான் வெளிவட்டத்தில் செய்திகளை சேகரித்தால், ஜமால் உள்வட்டத்தில், தன் தங்கையின் வழியே நிறையவே சேகரித்து கொண்டுவந்து கொட்டினான். அவனது தங்கை, தானொரு கீழத்தஞ்சை மாவட்டத்துப் பெண் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதில் சிரிப்பே எழுந்தது. தன் கணவர் வழியாகத்தான் அந்தப்பெண் இதனையெல்லாம் அறிந்திருக்க வேண்டும்! ஆக, ஜெம்மும் தங்ஙள் குறித்து செய்திகள் பல அறியவே செய்கிறார்! ஆனால் வெளிக்காட்டத்தான் அவரால் இயலாமல் போகிறது.

ஓரளவில் தகவல்களை அறிந்த பின்னர், தங்ஙளைப் பார்க்கும்போதெல்லாம் என்னுள் இரக்கமே எழுந்தது. பள்ளிப்பருவத்தில் எங்கள் வீட்டில் நான், தவறு செய்துவிட்டு மாட்டிக்கொள்ளும் தருணங்களிலெல்லாம், என்பாட்டி என்னிடம் ஒன்றை அழுந்தச்சொல்லும். 'தண்ணிக்குளே குசுவிட்டா தெரியாதுன்னு நினைச்சுடாதேடா, எப்படியாவது அது தலைக்கு மேலே வந்து காட்டிக்கொடுத்துடும்ன்னு தெரிஞ்சுக்க' என்பார்கள். பாவம்தான் தங்ஙள்!

***
தங்ஙள் அமீரது இயற்பெயர் 'தாஹா இப்ராகிம் தங்ஙள்' கேரளமாநிலத்தில் காசர்கோட்டை தொட்டடுத்ததோர் குக்கிராமம். வயதில்மூத்தவரான அவரது மாந்திரீகக் கீர்த்திகளை முன்வைத்து, தங்ஙளை மதிக்கும் கேரளத்து அபிமானிகள் தந்த பட்டம்தான் 'அமீர்!' அமீர் என்றால் தலைவன் என்று பொருள். அந்தப் அபிமானிகள், தாஹா இப்ராகிம் தங்ஙளை, 'தங்ஙள் அமீர்' என்று மரியாதையோடு அழைக்கத்தொடங்கினார்கள்! அதுவே அவரைக் குறிக்கும் வழக்குபெயராயிற்று!

சமீபத்தில் மகாராஷ்ட்டிரா சட்டசபைக்கு நடந்த பொதுத்தேர்தலில், அம்மாநிலத்தின் மூத்தஅரசியல் தலைவர் ஒருவர், 'தங்களது கட்சி வெல்லவும், தனக்கு எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கூடவும், முதலமைச்சர் நாற்காலி தனக்கே தகைக்கவும் தங்ஙள் அமீரிடம் கோரிக்கை வைத்தார்! தங்ஙள் அவரது சாதக பாதகங்களை கணித்து விட்டு, அதற்கு உறுதியும் கொடுத்தார். அடுத்தசில நாட்களிலேயே, பம்பாயின் மையத்திலுள்ள ஓர் நட்சத்திர ஹோட்டலில் தங்ஙள் தங்கவைக்கப்பட்டார்.

அங்கிருந்தபடிக்கு, அந்த மூத்த அரசியல்தலைவரின் கோரிக்கைக்கான மாந்திரீக வேலைகளை தொடங்கி நடத்தினார். ஜெயிக்குமா? என்று சந்தேகத்தை எழுப்பிய அந்த அரசியல்வாதியின் கட்சி, அதிக பெரும்பான்மையுடன் வென்றது!

அவரது ஆதரவாளர்கள் ஒருவர்விடாமல் எல்லோரும் ஜெயித்து வாகைச் சூடினார்கள்! ஆனால்., சம்பந்தப்பட்ட மூத்த அரசியல்வாதி மயிரிழையில் தோற்றுப்போனார்! அவரது கட்சிக்குள் தலையெடுத்த அரசியல் எதிரி ஒருவன், ஓர் கேரளத்து நம்பூதிரி மாந்திரீகரைக் கொண்டு, அவருக்கு எதிராக செய்த யாகம், தங்ஙள் மாந்திரீகத்தின் முக்கியத்துவத்தை கொஞ்சம்போல முடக்கிவிட்டது! அப்படித்தான் சக அரசியல்தலைகள் காதோடு பேசிகொண்டார்கள். இதெல்லாம் வெளிஉலகம் அறியாது, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போடும் மஹாஜனங்கள், இந்த சூட்சமக் கூத்தை அறிந்தும்தான் என்ன செய்யபோகிறார்கள்?

சத்தம் காட்டாமல் நட்சத்திர ஹோட்டலில் தன் ஜாகையை தங்ஙள் பரபரக்க காலிசெய்துகொண்டிருந்த போது, அவருக்கான 'பம்பாய் - பெங்களூர்' ஃபிளைட் டிக்கட்டுடன் முகம்மத்கஃபூர் அவரைவந்து சந்தித்தான். கஃபூர், பம்பாயிலுள்ள பிரபலமான 'டிராவல் ஒன்றின் மேனேஜிங் டைரக்டர். பூர்வீகம் கேரளா. தங்ஙளின் ஆத்ம அபிமானி. கபூருடன் ஓர் சௌதிக்காரனும் வந்திருந்தான்! 'தன்பெயர் அப்துல்லா அல்-ரவ்தான் என்றும். ஃபிரம்... ரியாத் என்றும், தன்னுடைய க்ளீனிங் கம்பெனிக்கு கஃபூர்மூலம் 130 இந்திய லேபர்களை தேர்வு செய்ய வந்திருக்கிறேன் என்றும்' தன்னை அவன் தங்ஙளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். தங்ஙள் அவனிடம் இன்முகத்தோடு பேசினார். பின்னர், கஃபூர் தங்ஙளை தனியே அழைத்து சில சங்கதிகளை மெல்லிய குரலில் சொன்னான்.

"இந்த அரபி, என் பராமரிப்பில்தான் கடந்த பத்து நாட்களாக இருக்கிறான், ரொம்ப நல்லவன். 'கஞ்ஜுஸ்' கிடையாது" என்றுகூறிய கஃபூர், இன்னொரு செய்தியையும் தங்ஙளிடம் சொன்னான். "என் சொல்கேட்டு, அப்துல்லா அல்-ரவ் இப்போது ஒருகாரியமாய் உங்களை சந்திக்க வந்திருக்கிறான். அவன் திருமணம் ஆனவன். இப்போது இவன், ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அந்தப்பெண்ணும் முதல் கணவனிடம் இருந்து தலாக் பெற்றவளாக இருந்து வருகிறாள். ரியாத்திற்கு அடுத்த நகரமான 'கஸீம்'மை சேர்ந்தவள் அவள். பெயர் 'நூரா அஸ்மி'. அவள் வேறு யாருமல்ல. அவனுடைய மாமன் மகள்தான்! இளம்வயதிலிருந்தே அவளை விரும்பியிருக்கிறான். முதல்மனைவியாக 
அவளை அடைய நினைத்தும் நடக்கவில்லை. இப்போது அவன் முயல்கிற போதும், சிலப் பிரச்சனைகள் தலையெடுத்திருக்கிறது. அவனே உங்களிடம் பின்னர் எல்லாவற்றையும் விபரமாக சொல்வான். இதனை என்னிடம் அவன் ஆதங்கத்தோடு சொல்லிக்கொண்டிருந்த போது, எனக்கு உங்களின் நினைவுதான் எழுந்தது. அவனிடம் உங்களது மகத்துவத்தை எடுத்துச் சொல்லியதில் அவனுக்கு திருப்தி. இப்போது இங்கே அவனது சம்மதத்தோடுதான் அழைத்துவந்தேன். நீங்கள் சரிசொன்னால், அவன் கொண்டுவந்திருக்கிற விசா ஒன்றில், உங்களை அவனோடு ரியாத்திற்கு ஓரிரு நாளில் அனுப்பிவைக்கிறேன். இந்தச் சேவைக்காக ரூபாய் ஐந்துலட்சம் கேட்டு வாங்கி, உங்களது அக்கெளண்ட்டிலும் போட்டுவிடுகிறேன். சம்மதம்தானே சாப்? தட்டாமல் நீங்கள் சம்மதம் சொல்லணும். உங்களால்தான் அது முடியுமென்பதை நான் அறிவேன்" என்றான் கஃபூர்.

தங்ஙளுக்கு கஃபூர் நம்பிக்கையானவன். அந்த மூத்த அரசியல்வாதி தந்த பெரியபணத்தை இவன் மூலமாகத்தான் ஊரிலுள்ள வீட்டுக்கு அனுப்பி சரி செய்தார். இப்போதைக்கு, கஃபூர் சொல்வதை ஏற்பது நல்லது. சூழ்நிலையும் அப்படிதான் இருக்கிறது. தான் தோற்றுப்போன வெறுப்பில் அந்த மூத்த அரசியல்வாதி, நம்மை எதுவேண்டுமானாலும் செய்ய முனையலாம். இப்போதைக்கு பாதுகாப்பு மிக முக்கியம். நான் ஊருக்கு போவதைவிட, கொஞ்சநாட்கள் இப்படி போய் தலைமறைவாக இருப்பதே சரி. மனதிற்குள் அவர் சௌதிபோக தயாரான நிலையில், வாய்பேச்சாக ஓர் கோரிக்கைவைத்தார். "அங்கே போனால், நான் உம்ராவுக்கு சென்றுவர அப்துல்லா அல்-ரவ் சம்மதமும், ஏற்பாடுகளும் செய்து தரணும்." என்றார். அந்தக் கோரிக்கையினை கஃபூர் அரபியிடம் சிலாகித்து சொன்னான். சற்றும்யோசிக்காமல் 'ஜை...ன்' என்றப்படிக்கு சிரித்தான் அப்துல்லா அல்-ரவ். அவனது சிரிப்போடு, தங்ஙளும் கஃபூரும் முகம்மலர சங்கமித்தார்கள்! சிரிப்பு மனித இனத்தின் விசேசகவசம்! சபையில் மறைக்க நினைப்பவற்றை அது மிக எளிதாக காத்து தந்துவிடும்.

அப்துல்லா அல்-ரவ், தங்ஙளோடு ரியாத் இண்டர்நேஷனல் வந்து இறங்கும்வரை, தனது மாமன்மகள் நூராவைப்பற்றிய பால்யகால நினைவுகளையும், அவளை முதலாவது மனைவியாக அடைய நினைத்த எண்ணம் சிதைந்து போனதையும், இப்போது அவளை மணமுடிக்க எண்ணியபோது, எழுந்த புதிய சிக்கலையும் தங்ஙளிடம் சொல்லிக்கொண்டே வந்தான், ஏர்போர்ட்டிலிருந்து வெளியான போது, தங்ஙளை எதிர்பார்த்தும் வரவேற்கவுமாக ரியாத்தில் வாழும் கேரளத்து இஸ்லாமிய  குடும்பங்களிலிருந்து ஆண்களும் பெண்களுமாக பலர் வந்திருந்தனர்! ரியாத்தில் இயங்கும் 'கேரள முஸ்லீம் நல சங்கம்' அமைப்பாளர்களுக்கு  கஃபூர் முன்கூட்டியே தகவல் தந்திருந்தான். தவிர, தங்ஙளின் பிரபல்யமும் இன்னொரு காரணம். தங்ஙளை வரவேற்க வந்த கூட்டத்தினரைக் கண்ட அப்துல்லா அல்-ரவ் வியந்து போனான்! 'நம்முடன் வந்திருக்கும் இந்த 
தங்ஙள் அத்தனைக்கு சிறப்பு கொண்டவரா!!?'

அப்துல்லா அல்-ரவ், தன் வீட்டின் மாடியிலுள்ள தனி ஃப்ளாட்டில், கூடுதல் மரியாதைகளோடு தங்ஙளை தங்கவைத்தான். அடுத்த சிலநாட்களில், தான் ஏற்ற பணியினை துவங்கவிருப்பதாக அரபியிடம் தங்ஙள் சொன்னபோது, அவனுக்கு மஹா சந்தோஷம். ஆனாலும், தங்ஙளைக் காண தினமும் பத்துக்கும் குறையாத கேரள இஸ்லாமிய குடும்பத்தார்கள் வருவதும், அவர்களின் மனக்குறைகளை அவரிடம் நீண்டநேரம் கூறியவண்ணமிருப்பதும் அவனுக்கு மண்டைபாரமாக இருந்தது. அக்கம்பக்கமுள்ள அவனது சகஅரபி நண்பர்கள் இந்தியர்களின் வருகைகுறித்து கேட்கிறபோது அவனால் பதில்சொல்ல முடியவில்லை. எதுவேண்டு மானாலும் நடந்துதொலையட்டும், நூராவைமட்டும் சம்மதிக்கவைத்தால் போதும் என்று நினைத்தான்.

'நூரா... நூரா..' என்று அப்துல்லா அல்-ரவ் புலம்பிக்கொண்டுவரும் நேரங்களில், அதனைப்பொருட்படுத்தாமல் சில மாந்திரீக வித்தைகளை அவனிடம் செய்து காட்டிக்கொண்டிருந்தார் தங்ஙள்! எழுமிச்சைப்பழத்தை அறுத்து ரத்தம் வரவழைத்தார், டம்ளரிலிருந்த தண்ணீரை எரிய விட்டார், விரலை அறுத்துக்கொண்டு காயமற்று காட்டி, மூடிய கைக்குளிருந்து மோதிரத்தையும் வரவழைத்துகாட்டினார், இப்படி தங்ஙள் எதைச்செய்து காட்டினாலும், அதனிலெல்லாம் அவன் ஒட்டுதலையோ, வியப்பையோ காட்டவில்லை. குறைந்தபட்சம் முகம் மலர்ந்திருக்கலாம், அவன் 
அதனையும் செய்தானில்லை. அந்தத் தருணங்களில்கூட நூரா... நூராவென நூராவின் நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தது, தங்ஙளுக்கு சங்கடத்தை தந்தது. நேரம் வாய்க்கும் போதெல்லாம் சீக்கிரமே அவள் தனக்கு கிடைக்கவேண்டுமென அவன் அழுத்தம்கொடுத்து கொண்டிருந்ததும் அவருக்குப் பிடிக்கவில்லை. தன்னிடம் நம்பிக்கை கொள்ளத்தெரியாமல், தன் மாந்திரீக வித்தைகளை வியக்கவும் தெரியாமல், நூரா நூராவென வந்துபோகிற அவன், தங்ஙளுக்கு ஆச்சரியமாகிப் போனான். ரியாத்தில் தங்ஙளின் மாந்திரீக மகிமை, தினம்தினம் கேள்விக்குறியாகி கொண்டிருப்பதை அவரே உணர்ந்தார்.

நம்பிக்கை கொள்ளும் மனம் கொஞ்சமுமில்லாத, இந்தத் தள்ளிப்போன அரபிக்கு, எப்படி தன்னால் தன் மகிமைகளை நிரூபணம் செய்யமுடியும்? என் நாட்டில் எத்தனைபேர்கள் என் பேச்சை நம்புகிறார்கள்! கேள்வியே எழுப்பாமல், மௌனம் செய்தவர்களாக பயபக்தியோடல்லவா ஒப்புக்கொள்கிறார்கள்! இவனும் அப்படி நம்பித்தொலைத்தால் அல்லவா நல்லது! தனிமையில் மீண்டும் மீண்டும் யோசிக்க, மனம்சோர்வுற்ற தங்ஙள் கோபப்படலானார். என்றாலும், ஏழுநாட்கள் நோன்பிருந்து, அதன்பின் மாந்திரீகப் பணியை வீச்சாகத் தொடங்கினார்.

மாந்திரீகப் பணிக்கான அமர்வில் அவர் அமர்ந்தபோது, அவரது உடையலங்காரம் மாறியது. அது, அவரை தெய்வீகச் சித்தராகக் காட்டியது. வழக்கமாக அவர் தலையில் கட்டியிருந்தப் பச்சைத் தலைப்பாகை இப்போது மிகப் பெரியதாகி போயிருந்தது! தலைப்பாகையின் பின்னால் நீண்டிருந்த குஞ்சத்தை தோள் வழியே முன்னுக்கு திருப்பிவிட்டிருந்தார். தலைப்பாகைக்கு ஏற்றவகையில் தாடியை கச்சிதமாக மழித்திருந்தார். அணிந்திருந்த வெள்ளை குர்தா, அவரது கணுக்காலுக்கு மேலே நின்றிருந்தது. சாக்ஸ் அணியப்பட்ட கால்களோடு வெள்ளை விரிப்பில் அமர்ந்து, குரான் ஆயத்துகளை மனனமாகவும், ராகமிட்டும் கேட்போர் மனதை கவ்வும் விதமாகவும் இரவில் வெகுநேரம் ஓதினார். அவர் அப்படி 
ஓதியதைக்கண்ட அப்துல்லா அல்-ரவ் ஆடித்தான் போனான். மூன்றுநாட்கள் நடந்தேறிய இந்நிகழ்வுக்குப் பிறகு, அடுத்தநாள் இரவில் மாந்திரீகத்திற்குறிய ஆயத்துகளை வாய்க்குள்ளாகவே ஜபித்தவராக, செப்புத்தகட்டில் அதனைக் கிறுக்கி, வெள்ளி தாயத்தொன்றில் அடக்கி, அரக்கிட்டு மூடினார்! அடுத்துவந்த வெள்ளிக்கிழமை இரவு சாம்பிராணிப் புகைபோட்டு, தாயத்தை அதில்காட்டி மீண்டும் சலிக்காமல் ஜபித்து முடித்து, அரபியின் இடுப்பில் தங்ஙளே கட்டிவிட்டார்.

அப்துல்லா அல்-ரவ்விற்கு அதிக கூச்சமும், கொஞ்சத்திற்கு நம்பிக்கையும் வந்தது.

தங்ஙள் தொடர்ந்து அப்துல்லா அல்-ரவ்விடம், அடுத்தக்கட்ட மாந்திரீக செயல்பாட்டுக்கு நூராவின் தலைமுடியில் சிலவும், அவளது காலடி மண்ணும் வேண்டும் என்றார். அது சாத்தியமில்லையென்றான் அரபி. 'இல்லை, அதுகட்டாயம் வேண்டும்' என்று தங்ஙள் சொன்னபோது, பார்க்கலாம் முயல்கிறேன் என்றான். அது கிட்டும்வரை, தான் உம்ரா 
போகவேண்டுமென்றார். மறுப்பேதும் கூறாமல் டிரைவரோடு கார் கொடுத்து, கைநிறைய பணமும்கொடுத்து, அவரை உம்ராவுக்கு அனுப்பிவைத்தான்! உம்ராவில், புனித ஸ்தலங்களை தரிசிக்கமுடியும். அங்கே மனமுருக கையேந்தி ஆறுதல் கொள்ளமுடியும்! தங்ஙள் அங்கே போனார், புனிதங்களை தரிசித்தார், கையேந்தினார் என்பதெல்லாம் நடந்தது. ஆனால், ஆறுதல் கொண்டாரா?

உம்ரா போய் திரும்பும் வழியெல்லாம் தங்ஙளுக்கு நூராவைப்பற்றிய சிந்தையே மேலோங்கியிருந்தது. அவளை அடையாமல் அப்துல்லா அல்-ரவ் தன்னை விடமாட்டான் போலிருக்கிறதே என்று குழம்பினார். ஊராக இருந்தால், சம்மந்தப்பட்டவனுக்கு தெரியாமல், யாராவது ஒரு விசயதாரியை அனுப்பி, அல்லது நானே போயிருந்து அந்தப் பெண்ணிடம், அவன் கொண்டிருக்கிற காதலை உயர்வுபடுத்திப் பேசி, எப்படியாவது அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிடலாம். இங்கே அதற்கு வழியில்லையேயென மருவினார். இன்னொரு பக்கம் நூராவை, லோக்கலில் உள்ள ஏதோவொரு இளவரசன் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக வேறு சொல்கிறான். அவனுக்குவிரோதமாக மாந்திரீகம் செய்வதாக, தெரியவந்தால் தலை நிச்சயம் தப்பாது! இத்தனை அலைக்கழிப்பைத் தரும் இந்த மாந்திரீகத்தை உடனே விட்டொழித்து தலைமுழுகவேண்டுமென நினைத்தார். தன் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்தத் தொழிலை விட்டு விடுவது அத்தனை எளிதானதில்லையெனவும் அவருக்குத் தோன்றியது. தொடர்ந்தும், தங்ஙள் தீர்வற்று யோசித்துக் கொண்டிருந்தார். யோசனை எப்பவுமே, மனிதனை சமவெளி குழப்பத்திலிருந்து மீட்டு, மலைமுகட்டில் கொண்டுசென்று நிறுத்திவிடும். 'அடுத்த அடி தவறினால் பாதாளமெனும் நிலை!' இதனை அறிந்துணர்ந்த தங்ஙள், யோசிப்பதை சட்டென நிறுத்திகொண்டார்.

ரியாத் வந்தடைந்த தங்ஙள், ஓய்வாக வீட்டில் படுக்கலானார். அசதிகள் இருந்தும் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை. பகல்வேளை, சாப்பாட்டு நேரம்! ஆனால், அவருக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. வீட்டில் அப்போது அப்துல்லா அல்-ரவ் இல்லை. இருந்திருக்கும் பட்சம், நேரங்காலம் தெரியாமல் வந்து நின்று, நூராவென கழுத்தறுத்திருப்பான். வேறு சிந்தையே கிடையாது அவனுக்கு! அவனிடமிருந்து தப்பித்து ஊர் செல்வது எப்படி? யோசிக்கத் தொடங்கினார். வழியொன்றும் புலப்படவில்லை. தனக்கு புலப்படாவிட்டாலென்ன? இந்நாட்டில் நீண்டகாலம் வசிக்கும் தனதுநாட்டினைச் சேர்ந்த நண்பர்களிடம் கலந்தாலோசித்தால் தக்கவழி நிச்சயம் கிட்டுமென திடமாக நம்பினார். அடைபட்ட சங்கடத்தின் கதவுகள் ஒவ்வொன்றாக திறவுபட்டது! நிம்மதி கொள்ளலானார்! திறந்த கதவின் வழியே கீற்றாய் வெளிச்சமும் கிட்ட, தங்ஙள் ஆசுவாசம் கொண்டார்.

படுக்கையைவிட்டெழுந்து யோசித்தப்படியே பால்கனிக்கு வந்தார். தலைநகர் ரியாத் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வாகனங்கள் விரையும் இடைவிடாத இரைச்சல், புதிய கட்டிடக் கட்டுமானங்களின் ஓசை, சுட்டுத்தீய்க்கும் சூரியனின் தழுவல், எதனையும் பொருட்படுத்தாது ரோட்டில் நடந்து போய்கொண்டிருக்கும் பாவப்பட்ட இந்தியக் கூலிகள் என்று பலதையும் கண்டார். திடுமென தங்ஙளுக்கு, 'கேரள முஸ்லீம் நலச் சங்கம்' நினைவுக்கு வந்தது. அதன் தலைவர் முஸ்தஃபா மொஹையதீன் ரொம்பவும் மரியாதை தெரிந்த மனிதர். பத்தா கடைவீதியில் அவரது, 
'சௌத் இந்தியன் சாரீஸ்' இருக்கிறது. இடைப்பட்ட நாட்களில் முஸ்தஃபா ஒருமுறை தங்ஙளை அழைத்துபோய் கடையை காண்பித்திருக்கிறார். நாட்டுக்குபோகும் நம்மவர்கள் அங்கே பொருட்கள் வாங்கும் வேகம் பிரமிப்பை தரக்கூடியதாக இருந்தது! பத்தா கடைவீதி இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரம்தான். நடந்தே போய்விடலாம். யோசித்த நாழியில், தங்ஙள் ரூமை விட்டுப்புறப்பட்டார். மனதிற்குள் தகிப்புகொண்டிருந்த அவருக்கு சுட்டெரிக்கும் வெளித் தகிப்பு உறுத்தவில்லை!

கடைவாசலில் தங்ஙளின் தலை தெரிந்தநாழிக்கு, பரபரப்புடன் கல்லாவை விட்டெழுந்து வாசலுக்கு விரைந்தோடிவந்த முஸ்தஃபா, அவருக்கு சலாம் கூறி, உள்ளே அழைத்துபோனார். கடையில் பணியெடுக்கும் அத்தனை பேர்களும் தங்ஙளுக்கு சலாம் கூறினார்கள். முஸ்தஃபா, தங்ஙளைக் கல்லாவில் உட்காரவைத்தான். பக்கத்தில் கிடந்த இருக்கையொன்றில் உட்கார்ந்தும் உட்காராத நிலையில் அவர் இருக்கலானார். தங்ஙளின் முகத்தை நேர்நோக்கிய அவர் பார்வையால் விசாரித்தார். தங்ஙள் மெதுவாக ஒவ்வொன்றாக மனத்தகிப்பைக் கொட்டினார். கண்சிமிட்டாமல் தங்ஙள் சொல்வதைக் கேட்ட அவர், பணிவோடுகேட்ட ஒரேகேள்வி 'உங்க பாஸ்போர்ட் இப்போது யாரிடம் இருக்கிறது?' 'உம்ராவுக்கென்று 
அரபியிடம் வாங்கிய தன் பாஸ்போர்ட் இப்போது தன்னிடமே இருக்கிறதென்றார். இப்போது, மொஹையதீன் முகத்தில் பிரகாசம். இனியொன்னும் பிரச்சனையில்லை என்றான் முஸ்தஃபா. இப்போது தங்ஙள் முகத்தில் பிரகாசம்!

***
தங்ஙள், அப்துல்லா அல்-ரவ்க்கு கேள்விக்குறியாகிப் போனார். உம்ரா போய்வந்த அவர், தன்னைச் சந்திக்காமல் 'எங்கோ' போனதெப்படி? குழம்பியவன், அவரை தேடத் துவங்கினான். 'செல்'யுகம் அன்றைக்கு சௌதியில் அறிமுகமாகாத காலம். தேடுவதை விட்டால் வேறு மார்க்கமில்லை. அவனுக்கு, தங்ஙள் காணாமல் போனதைவிட, காரியம்தான் முக்கியம்!

முஸ்தஃபா மொஹையதீனின் இல்லத்தில் இரண்டுநாள் நிம்மதியாக உண்டுறங்கிய தங்ஙள், அரபியின் தேடலைக் கேள்விப்பட்டு சங்கடப்பட்டார். கேரள முஸ்லீம் நலசங்கத்தை விசாரித்தப்படிக்கு, அதன்தலைவரான தன்னைத் தேடிக்கொண்டு, தனது கடைக்கே அவன் வந்துவிட்டதை முஸ்தஃபா விவரித்தார். 'தங்ஙள் இங்கே வரவில்லை' என்று நான்சொன்னதை அவன் நம்பாமல்தான் திரும்பினான் என்றார். மௌனமாக முஸ்தஃபாவின் முகத்தையே பார்த்தபடி இருந்தார் தங்ஙள்.

"தங்ஙள் சாப்.. நீங்கள் இனியிங்கே தங்குவதென்பது சரியாக இருக்காது, அவன் தேடிக்கொண்டு இங்கேயும் வர வாய்ப்பிருக்கிறது" என்று கூறி, தங்ஙளை தன் நண்பரான காதர்பாய் பிளாட்டில் தங்கவைத்தார். அரபியின் தேடல் தொடர்ந்தது.

மூன்று நான்கு இருப்பிட மாற்றத்திற்குப் பின்னால், நகரின் கிழக்குப் புறமாக, நகரைவிட்டும் சற்று தள்ளியிருக்கும் 'அல் நசீம்'ல் உள்ள பக்கர் குஞ்சுவின் இருப்பிடத்திற்கு தங்ஙள் அனுப்பி வைக்கப்பட்டார். பக்கர் குஞ்சுவின் திறமைமீது சங்க அமைப்பிலுள்ள எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. தங்ஙளின் கோரிக்கையை மிகச்சரியாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவன் அவனென நம்பினார்கள். சரியான தேர்வுதான் அது! பக்கர் குஞ்சுவை நான் அறிவேன். அவன் திறமையின் வித்துதான்!  

ரியாத்தில் வசிக்கும் வேறெந்த மலையாளிகளையும் விட தங்ஙளுக்கு பக்கர் குஞ்சு அதிக மரியாதை செய்பவனாக இருந்தான். அவரின் பாதுகாப்பு கருதி தனது குடியிருப்புக்கு சற்று தள்ளியுள்ள அவனதுநண்பன் ஒருவனின் ஃப்ளாட்டில் அவரை தங்கவைத்தான். அந்த இடத்திற்கு அரபி அத்தனை சீக்கிரம் கண்டு வந்துவிட முடியாதென்றே முதலில் தீர்மானம் கொண்டான்.

'தங்ஙளை அரபியின் குறுக்கீடு இல்லாமல் எப்படி இந்தியாவுக்கு அனுப்பிவைப்பது? என்று திட்டம் ஒன்றை வகுத்தான். அவரை நிச்சயம் ரியாத்திலிருந்து விமானம் ஏற்றுவது ஆகாது. இங்கிருந்து நாநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமாமிற்கு அனுப்பி, அங்கிருந்து டெஹரான் வழியேதான் ஊர் அனுப்பிவைக்க வேண்டும். அவர் ஊர்போகும் போது பெரியதொகை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும், என்றெல்லாம் அவனிடம் தீர்மானங்கள் உறுதிபட்டது! தங்ஙளின் பாஸ்போர்ட்டை சரி பார்த்தவகையில், அதன் காலக்கெடு முடிந்திருந்தது. அதனை இந்தியன் 
எம்பஸியில் சரிசெய்யவேண்டும். அதுவரை, தங்ஙள் தன்னையொட்டிய இடத்தில் தங்குவதையும்விடவும், வேறெந்த மலையாளிகளின் இடத்தில் தங்குவதையும் விடவும், இன்னொரு பாதுகாப்பான இடத்தில் அவர் தங்கவைக்கப்பட வேண்டுமென நினைத்தான். அப்படி அவன் கூடுதலாக யோசித்த போது, அந்தயோசனை சென்று நின்றவிடம் ஜெம்! அவனது விரல் ஜெம்மின் ஆபிஸ் நம்பரை சுழற்றியது. எதிர்முனை 'ஹலோ' என்றது. பக்கர் குஞ்சு, 'அண்ணா' என்றான். பெருபாலும் மலையாளிகள் தமிழர்களை அண்ணாவென்றே விளிப்பது வழக்கம். அப்படி அவர்கள் அண்ணாவென விளிப்பது மரியாதை கொண்ட அழைப்பாக மட்டும் கொண்டுவிட முடியாது.

தங்ஙளின் கீர்த்திகளை ஜெம்மிடம் அதிகமும் சொன்னான் பக்கர் குஞ்சு. 'தன்னுடைய பையனின் சுகவீனத்தை அவரால் களைய முடியுமா?' என்று ஜெம் மெல்ல கேட்கவும், அந்தக் கேள்வியைதான் அவரிடம் இருந்து வெகுநேரமாக எதிர்ப்பார்த்திருந்த மாதிரிக்கு, பக்கர் குஞ்சு ஊறுதிபட பேசத் துவங்கினான். 'ஜெம். நோக்கிக்கோ ஐயாள் பொன்னுபோல மொவனின் நோவத்தனையும் கழையும்' என்றான். தொடர்ந்து அவன் பேசியபோது, 'தங்ஙளை உமது இருப்பிடத்திற்கு அழைத்துப் போய் பத்துநாள் தங்கவைத்து, பையனின் நோவு தீர ஏற்பாடுகளை செய்துகொள். இன்ஷாஅல்லா, பத்து நாளுக்குள்ளாகவே மொவன் உடல்நலத்தில் கொரைச்ச முன்னேற்றம் காணும்!' என்றான். "தங்ஙளை, அரபி எதற்காக சௌதிக்கு அழைத்து வந்தான்?" பக்கர் குஞ்சிடம் மன ஐய்யப்பாடோடு ஒரு கேள்வியை எழுப்பினார் ஜெம். அதற்கு அவன் மழுப்பலான காரணத்தைக் கூறி சமாளித்தான். அப்துல்லா அல்-ரவ்வை 'வட்டென' கிண்டல் அடித்தான். ஜெம், அதனையொட்டிய பிற கேள்விகளைக் கேட்கவில்லை. தந்தைப்பாசம் மேலோங்க, மகனின் நல்வாழ்வுக்கான தருணம் தொடங்கி விட்டதாகக் கருதி, சந்தோஷத்தில் முழுகிப்போனார்!

நண்பன் சொல்லின் மீதான நம்பிக்கையில், அன்றைக்கே பக்கர் குஞ்சுவை அழைத்துக்கொண்டு தங்ஙளைச் சந்தித்தார். தங்ஙளின் தோற்றப் பொழிவு, பக்கர் குஞ்சுவின் சொல்லை உறுதி செய்தது. தன் பையனின் சுகவீனத்தை ஜெம் சொல்லத் தொடங்கவும், தொடர்ச்சியை தங்ஙள், சொல்லத் தொடங்கினார். ஜெம் தடுமாறிவிட, பக்கர் குஞ்சு சலனமில்லாமல் தங்ஙளைப் பார்த்து வியந்து கொண்டிருந்தான். பின்னர், ஜெம்மை தனியே அழைத்த பக்கர் குஞ்சு, சிகிச்சைக்கான தொகையை நிர்ணயம்செய்தான். இரண்டாயிரம் டாலருக்கு ஓகே ஆனது!

தங்ஙளை தனது இருப்பிடத்திற்கு அழைத்து போக இரண்டு நாள் ’டைம்’ கேட்டார் ஜெம். ஏன் என்றான் பக்கர். ஹெட்டாபிஸுக்கு தகவல் செய்துவிட்டு அழைத்துப் போவதுதான நல்லதென்றார் ஜெம். பக்கர் குஞ்சு அதனை ஏற்றுகொண்டான்.

சொல்லியபடிக்கு இரண்டுநாட்கள் கழித்து அவரை இருப்பிடத்திற்கு அழைத்துவர ஆயத்தமானர். தங்ஙளை ஜெம்மின் காரில் அனுப்பிவைத்த பக்கர் குஞ்சு, தனிமையில் நின்று, தன்னைத்தானே மெச்சிக்கொண்டான். 'இத்தனை திறமைசாலியா நான்?' சாதனைகள் பலவற்றை விரல் சொடுக்கில் செய்து பழக்கப்பட்ட அவனுக்கு இந்தச்சாதனை ஏனோ வியப்பைத் தந்தது!

***
தங்ஙள் இங்கு வந்து, எங்களோடு தங்கஆரம்பித்து பத்துநாட்கள் கழிந்துவிட்டது. அவருக்கு, நானும் ஜமாலும் காட்டும் மரியாதை கொஞ்சமும் மாறாதிருந்தது. பணிவிடைகளுக்கும் குறைவில்லை. இப்போது தங்ஙள் எங்களுக்கு இனிமையான மனிதர்! நண்பரெனவும் சொல்லலாம். வீணே அவரிடம் எதுவும் பேசுவது கிடையாது. யதார்த்தமாக நான்பேசினாலே அது விவகாரமான பேச்சாகப் போய்விடுவதுண்டு! என் ராசி அப்படி! அதனால் நான், ஜாக்கிரதை மற்றும் கப்சிப். ஆனால், ஜமாலின் ராசிவேறு! அவரிடம் அவன் சதா எதையாவது பேசிக்கொண்டேயிருப்பான். அவன் பேச்சு பெரும்பாலும் விவகாரமாகவே இருக்கும். அவரிடம் அவன் என்னபேசுகிறான், அதற்கு என்னஅர்த்தம் என்றெல்லாம் எனக்குதான் தெரியும். அவனது சூட்சமமான கேள்விகளால் அவரே அறியாது அவரிடம் தெறித்துவிடும் பதில்களில் நான் எனதிற்குள் சிரித்துக் கொள்வேன்.

தங்ஙளுக்கு, ஜமாலின் பேச்சென்பது, 'இன்னசெண்ட் டாக்கிங்!' அவரது பார்வையில் அவன் சூதுவாற்றவன்! ஒருவன் தனது விவகாரமான பேச்சுக்குப் பிறகும் இப்படியெல்லாம் சான்று பெறுகிறானென்றால், அதற்காக அவன் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும். ஜமால் வாங்கி வந்திருக்கிறான்! அதில் இரண்டு கருத்தில்லை! ஜமாலுக்கு இயற்கையாகவே குழந்தைத்தனமான முகம். நானே பலமுறை வியந்திருக்கிறேன்! சிலருக்கு பிறப்பு வழங்கும் கொடையது! மனிதர்களது பேச்சின் சூட்சுமம் கண்டறியும் 'மெஷின்' ஒன்றை மேலைநாடுகளால் நாளை கண்டுப்பிடிக்கப்பட்டு, அது, உபயோகத்திற்கும் வரக்கூடுமென்றாலும், ஜமால் மாதிரியான ஆட்களிடம் 
சாஷ்டாங்கமாய் மண்டியிட்டுவிடும்.

தங்ஙளிடம் நான் அதிகம் பேசாமல், வாயைமூடிகொண்டிருப்பதும் சரியில்லைதான். ஏதாவது பேசினால்தான், நான் அவரிடம் நிறையநேரம் மௌனம் செய்வதற்கும் அர்த்தமிருக்கும். அவர் என்னிடம் பேசும்போதும் அரை வார்த்தை, கால்வார்த்தையென்று பதில்கூறி, மீதப்பேச்சை புன்னகையால் நிரப்புதலென்பது நன்றாகவா இருக்கிறது?

ஆனால், அலுக்காமல்தான் அதனை நான் செய்துகொண்டிருக்கிறேன். அவரிடம் தாராளமாகப் பேசலாம்தான். பேச்சும் எனக்கு இஷ்டமானதுதான். நான் எதுவொன்று குறித்தும் அவரிடம் கேட்டாலும், நான் கேட்பதைவிட்டும் இன்னொரு தளத்தில் தங்ஙள் பதில் சொல்கிறபோது, பலநேரம் ஏண்டா இவரிடம் கேள்வியெழுப்பினோம் என்றாகிவிடுகிறது. நீங்கள் சொல்வது தவறென்று அவரிடம் நேரிடையாய் சொல்லுவது சரியாக வருமென்றும் தோன்றவில்லை. 'எதிரிடையான கருத்துக்களை நேரிடையாக பேசக் கூடாது' என்று ஒரு பெரியவர் என்னிடம் சொன்ன சொல் சரியென எப்பவும் நம்புகிறவன் நான்.

தங்ஙள் ஒருமுறை, தனது ஸ்ரீலங்கா பயணத்தையும், அந்தப்பயணத்தில் அதிபர் ஜெயவர்த்தனாவை சந்தித்தது பற்றியும் சொல்லிக்கொண்டே போனார். எனக்கு உலக அரசியல் அரங்கில் ஸ்ரீலங்க அதிபர் ஜெயவர்தனா மீது தனிப்பட்ட கருத்தொன்று தீர்மானமாகயிருந்தது. அன்றைய தினத்தில் உலகளவில் நீங்கள் வெறுக்கும் பத்து அரசியல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடும்படிக்கு யாரேனும் என்னை கேட்டிருப்பார்களேயானால், நிச்சயம் ஜெயவர்த்தனாவின் பெயரையே முதலில் நான் எழுதியிருப்பேன்.

ஜெயவர்தனாவை தங்ஙள் சிலாகித்து சொன்னநேரத்தில், "ஈழப் பிரச்சனைப்பற்றிய உங்களது கருத்தென்ன?" என்று அவரிடம் கேட்டேன். அவரும் தயக்கமற பதில்சொன்னார், "நீங்கள் இப்போது சௌதிக்கு பிழைக்க வந்திருக்கின்றீர்கள், இங்கே தங்கவும், வாழவும் ஏன் வசிக்கவும் செய்றீர்கள். அதன்பொருட்டு, இது உங்கதேசம் ஆகிவிடுமா? நீங்களும்தான் இந்நாட்டை என் தேசமென்று சொல்வீர்களா? அதற்காக போராடவும்கூட செய்வீர்களா? அப்படியே போராடினாலும் அது தகுமா?" என்றார். நான் அந்தப் பதிலைகேட்டு மனதிற்குள் கலகலவென்றும், வெளியில் கொஞ்சம் 
போலவும் சிரித்தேனேதவிர, அவரை மறுக்க துளியும் முயலவில்லை. 'எதிரிடையான கருத்துக்களை நேரிடையாக பேசக் கூடாது!' கொஞ்சம் போல நான் சிரித்த சிரிப்பு அவருக்குப் போதுமான ஒப்புதலாக போய்விட்டது. அதில் எனக்கும் நிரம்ப நிம்மதி. அதன்பிறகு அவரிடம் மறந்தும் கேள்வியெதனையும் எழுப்புவதேயில்லை. எனக்காகவும் சேர்க்க, தங்ஙளிடம் பேசுவதற்கும், பேச்சுமாதிரியே கேள்விகளை சரளமாக எழுப்புவதற்கும் ஜமால் ஒருவன் இருப்பது போதாதா?

இந்தப் பத்துநாட்களில், எங்க மேனேஜர், தங்ஙளின் இன்னொரு பக்கச் செய்திகளில் கொஞ்சம்போல அறியவந்ததில் அதிர்ச்சி கொண்டிருந்தார். குறிப்பாக  அப்துல்லா அல்-ரவ் தங்ஙளை தேடிக்கொண்டு அலைவதில் அவர்கொண்ட அதிச்சி அதிகம். அரபி, பெரும்பாலும் மலையாளிகளை தேடியே அலைவான் என்றும், நம்மைத் தேடிவர அவனுக்கு தோணாது என்றும் கருதினார். அவர் கருதியப்டிக்கு அவன் இங்கு வரவில்லைதான். கேரள முஸ்லீம் நலச்சங்கம் சார்ந்தவர்களையே அவன் தேடிச் சுற்றிக் கொண்டிருந்தான். தமிழ்பேசும் இஸ்லாமியர் ஒருவரின் பராமரிப்பில் தங்ஙள் இருக்கக்கூடுமென்று அவனது உளவாளிக்கு ஏனோ எட்டவில்லை! தங்ஙளைத் தேடிக்கொண்டு அரபி எங்கள் குடியிருப்புக்கு வரவில்லையே தவிர, கேரள முஸ்லீம் நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நாள் தவறாது இங்குவந்தார்கள். தங்ஙளை கண்டுபேசியும் மகிழ்ந்தார்கள். விரைவில் அவரை நாட்டுக்கு அனுப்பிவைக்க இருக்கும் நல்ல செய்தியினையும், 
அதற்கான  ஆயத்தங்களை தங்ஙளிடம் சொல்லிப்போனார்கள். வந்துபோகிறவர்கள் எல்லாம் 'தங்ஙள்அமீர்'க்கு, நல்லசெய்தி சொல்வதென்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது! யாருக்கு யார் நல்ல செய்தி சொல்வது?

தினம் தினம் மாலை ஆறுமணிதொட்டு, எட்டுவரை ஜெம்மிம் வீட்டில், இடைவிடாது மாந்திரீகச் செயல்பாடுகள் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் சென்னைக்கு டெலிபோன் போட்டு, "பையன் இப்போது எப்படியிருக்கிறான்? எழுந்து நிற்க முயற்சிக்கிறானா?" என்று கேட்டறிந்தபடி இருந்தார் ஜெம். எதிர் முனையின் பதில், "பையன் இப்போது தேவலாம் போலத்தான் இருக்கிறான், 'இன்ஷாஅல்லா' அவன் எழுந்து நிற்பான் போலத்தான் தோன்றுகிறது!" தினைக்கும் எதிர் முனை பதிலென்பது இப்படி ஒரே மாதிரியாகவே இருந்தது. ஜெம்மும் நம்பிக்கை தளரவில்லை. எட்டு 
மணிக்கு ஜெம்மிடம் விடைபெற்றவராக எங்களது இருப்பிடத்திற்கு வருவார். பின்னர், ஒரு ஸ்பெஷல் சாயா. அடுத்து அவரது தினசரி செயல்பாடுகளில் ஒன்றான வாக்கிங் கிளம்பிவிடுவார். 

எங்கள் இருப்பிட கட்டிடத்துக்குப் பின்புறம் ஒரு ஹைவே இருந்தது, அதில் இறங்கி ஓரமாக நடக்கத் தொடங்கிவிடுவார். அடுத்து ஒன்பது மணி வாக்கில்தான் திரும்புவார். பின்னர் எங்களோடு சாப்பிட்டு மகிழ்ந்து, உறங்கப் போய்விடுவார். ஏசி ரூமில் இழுத்து போத்திக்கொண்டு நன்றாக உறங்கவும் உறங்குவார். உறக்கத்தைகொண்டு ஒருவரது நிம்மதியை 
கணக்கிட்டுவிடலாம் என்பார்கள். அந்தப்படி பார்த்தால், எங்களிடம் வந்தநாளிலிருந்து தங்ஙள் நிம்மதியாகதான் இருக்கிறார்!

இன்றைக்கு அவர் வாக்கிங் சென்றிருந்தபோது, அழைப்பு மணியடித்தது. ஜமால் போய் கதவைதிறந்தான். பின்னர் "பாய்..." என்று என்னை அழைத்தான். நான் போனபோது, பெருத்த உடல்வாகும் உயரமும்கொண்ட, மிரட்டும் அரேபிய ஆடையலங்காரத்துடன் ஓர்அரபி நின்றான். சலாம்சொன்னான். பதில் சலாம் சொன்னேன். தன்னை அப்துல்லா அல்-ரவ் என்று ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டு, "தங்ஙள் இருக்கிறார்? என்றுகேட்டவுடன். "இல்லை. அப்படியாரும் இங்கேயில்லை" என்றேன். சரியென்றுவிட்டு, சிறிதுநேரம் நின்றவனாக, இருப்பிடத்தை 
வட்டமிட்டுபார்த்தான். அங்கே எங்க கம்பெனி வேன்நின்றது, அதில் தலைமை அலுவலகத்தின் டெலிபோன் நம்பர்இருந்தது. அருகில்போய், அதனை குறித்துகொண்டவனாய் தனது காரிலேறி புறப்பட்டான்.

எங்களது பதில் அவனுக்கு திருப்தியைதரவில்லை என்பதை நாங்கள் உணரவே செய்தோம். நிச்சயம் மீண்டும் வருவானென எனக்கு அப்போதே தீர்மானமாகி விட்டது. அவன் தலை மறைவானவுடன், எங்கமேனேஜர் பிளாட்டுக்குச் சென்று செய்தியைச் சொன்னோம். ஜெம் ஆடிப்போய்விட்டார். ஹெட்ஆபிஸுக்கு இது தெரியவந்தால், பிரச்சனையென நினைத்திருக்கலாம். உடனே அவர் பக்கர் குஞ்சுவை டெலிபோனில் அழைத்து செய்தியைச் சொன்னார். அதற்கு அவன், "அண்ணா ஒண்ணும் பேடிக்க வேணாம். அவனொரு பிராந்து. அவன் வந்துபோனதில ஒரு சுக்குமில்ல பார்த்துக்கோ மத்ததெல்லாம் நாளை ராவுல அண்ணாவிடம் யான் பறையும். சரியா?, தங்ஙளை ஞான் அதே ராவுல கொண்டுபோகும் சரியா!" என்றான். "நாளை எல்லா விபரங்களையும் சொல், இப்போது வந்து தங்ஙளை அழைத்துச் செல்" என்றார் ஜெம். அவரது கடுமை அவனை பாதித்திருக்கவேண்டும். பத்துநிமிடத்தில் தான் அங்கு வருவதாகச் சொன்னவன், அதன்படி வரவும் செய்தான். பக்கர் குஞ்சு முகத்தில் சந்தோஷமில்லை. திட்டமிட்ட செயல்பாடுகள் திடுமென நொடிக்கும்போது சம்மந்தப்பட்டவனின் அகமகிழ்வு தொலையத்தான் செய்யும். அவன் வந்திறங்கி எங்களுக்கு சலாம் சொன்னதுகூட காதுகளில் சரியாகவிழவில்லை. அவனதுகுரல் அத்தனைக்கு உடைந்திருந்தது. உள்ளுக்குள்ளே நொறுங்கிவிட்டான் போலும். பாவம்.

பக்கர் குஞ்சு நேரே ஜெம்மின் பிளாட்டினுள் போய் ஏதேதோ பேசினான். அடுத்து தங்ஙளை பத்திரமான இடத்துக்கு கொண்டு போக யாரையோ வரசொல்லி விட்டு, எதிர்பார்த்தவனாக வெளியேவந்து எங்களோடு நின்றான். தங்ஙள் தனது வாக்கிங்கை முடித்துகொண்டு திரும்பினார். ஜெம் ஃபிளாட் முன்பாக நாங்கள் நிற்பதைகண்டு அவரும் நின்றார். பக்கர் குஞ்சு அவரை அழைத்துபோய் செய்திகளைச் சொன்னான். பக்கர் குஞ்சு எதிர்பார்த்த கார் வந்தது நின்றது. தங்ஙள், ஜெம் பிளாட்டினுள் போய் அவரிடம் சொல்லிவிட்டு வெளிவந்து, என்னிடமும் ஜமாலிடமும் "நான் பிறகு வருகிறேன்" என்றவராக சிரித்தபடியே காரிலேறும் தருணம், இன்னொரு கார் எங்கள் அருகில் வந்துநின்றது. அதிலிருந்து அப்துல்லா 
அல்-ரவ் இறங்கினான்.

தங்ஙள், வேறுவழியின்றி அரபியைப்பார்க்க நடந்தார். அப்துல்லா அல்-ரவ் அவருக்கு சலாம் சொன்னான். தங்ஙளும் பதிலுரைத்தார். பின்னர், தங்ஙளை தனியே அழைத்து போய், "உம்ராவிலிருந்து திரும்பிய பிறகு, ஏன் என்னைப்பார்க்க தவிர்க்கின்றீர்கள்?" என்று கேட்க, தனக்கு கடுமையான வயிற்றுவலி என்றார். நிஜத்தில், அந்த வலியால் அவர் அப்பப்ப அவஸ்தைப்படுவதை பிளாட்டில் வைத்து கண்டிருக்கிறோம். வலிபோக்க அவர் ஒருவேரை எங்களிடம் தந்து தனக்கு கஷாயம் வைத்துக்கொடு என கேட்பார். நாங்களும் அதன்படிக்கு வைத்து கொடுப்போம். சிறிது நேரத்தில் வலிநீங்கி நிம்மதியும் கொள்வார். அப்படி ஒருதரம் அவருக்கு கசாயம் தந்தபோது ஜமால் சிரிக்காமல் கேட்டான், "ஏங்க ஹஜ்ரத் யாரேனும் உங்களுக்கு வப்பு வைத்திருப்பார்களோ?" 'ஜமால்...' என்று பெயர் கூறி அழைத்தவராக, தங்ஙள் வாய்விட்டு சிரித்தார். இதுவும் அவனது அப்பாவித்தனமான கேள்வியென்கிற லிஸ்டில் ஏறியது.

கவலைகொண்ட முகத்துடன் அப்துல்லா அல்-ரவ், பக்கத்திலுள்ள நட்சத்திர அந்தஸ்து கொண்ட மருத்துவமனையின் பெயரைகூறி, நாளை அங்கே போகலாம், நீங்கள் இங்கேயேயிருங்கள் என்றுவிட்டு சென்றுவிட்டான். அப்துல்லா அல்-ரவ்வின் இந்த அணுகுமுறை, தங்ஙளைத் தவிர்த்து, எங்கள் எல்லோரையும் துணுக்குறச் செய்தது. 'அப்துல்லா அல்-ரவ் இத்தனைக்கு 
நல்லவனா!?" எங்களது மெல்லிய அதிர்ச்சியை யூகித்தவராக, தங்ஙள் சொன்னார், "ஐ... யாளு வட்டாக்கும்... மஜ்னூன்!" என்றார்.

***   
தங்ஙள், எங்களை விட்டு ஹாஸ்பிட்டலுக்கு போய் இன்றோடு ஏழுநாட்கள் ஆகிவிட்டது. அங்கே அவருக்கு வயிற்றில் சிறிய ஆப்பரேஷன் என்றும், இப்போது நலமாக இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. 'Dr.Abdul Rahman Al Mishari Hospital' என்கிற அந்த நட்சத்திர ஹாஸ்பிட்டல், இங்கிருந்து டாக்ஸியில் பத்து நிமிட பயணதூரம்தான். நண்பர்கள் பலரும் அவரைப் போய் பார்த்து வந்தாலும், அவர் அரபியின் பார்வையில் இருக்கிறாரென்று சொன்னார்கள். நானும் ஜமாலும் அவரை இன்று பார்க்கப் போனோம். நாங்கள் போனநேரம் வெளியாட்கள் பார்க்க முடியாத நேரம். திரும்பிவிட்டோம். அன்றிரவு எங்கள் இருப்பிடத்துக்கு பக்கர் குஞ்சு தங்ஙளை காரில் அழைத்து வந்தான். வந்தவுடன் தங்ஙள் எங்களிடம், "சாப்பிட என்னயிருக்கு?" என்றார். பகல்வைத்த மீன்கறியும், கீரை மசியலும் இருந்தது, இரண்டுமே அவருக்கு இஸ்டமானது. அதனை சூடுபடுத்தி உடனே சாப்பாட்டைபரிமாறினோம். ஹாஸ்பிட்டலில் இத்தனைநாளும் சாப்பிடமுடியாது சாப்பிட்ட கொடுமையை அவர் சிரித்தப்படிக்கு சொன்னார். பின்னர் ஜெம்மின் பிளாட்டிற்கு பக்கர் குஞ்சுடன்சென்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்னமே, டெஹரான் ஏர்போர்ட் வழியே தங்ஙள் ஊர்போகும் செய்தியை எங்க மேனேஜர் அறிவார். ஆனால், அது என்றைய தினம் என்று முடிவாகவில்லை என்றும் அவருக்கு தகவல் கிடைத்திருந்தது. அவரை பத்திரமாக அனுப்பிவைக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டோரில் ஜெம்மும் ஒருவராகிப் போனதால் அவருக்கு அச்செய்தி காலத்தே கிடைத்துக் கொண்டிருந்தது. இப்பவும் பக்கர் குஞ்சு அதனை விரிவாக விளக்கியவனாக,  சில பிரத்தியோக தகவல்களையும் தாழ்ந்த குரலில் ஜெம்மிடம் சொன்னான்.

"சென்னை சென்றடைந்ததும், தங்ஙள் உங்க பையனுக்கு நேரில் வைத்தியம் பார்க்க இருக்கிறாரென்றும், சென்னையில்போய் அவர் இறங்க முடிவு செய்திருப்பதே அதன்பொருட்டுதானென்றும், பையனின் பெயரால் அங்கேவைத்து ஐநூறு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கணும் என அவர் எண்ணம் கொண்டிருப்பதாக'வும் சொன்னான், ஜெம் சந்தோஷப்பட்டார். ரூமுக்குபோன ஜெம், இரண்டாயிரம் டாலர்களையும், அன்னதானத்திற்கென தனியே ஐநூறு டாலர்களையுமாக இரண்டாயிரத்து ஐநூறு டாலர்களை எடுத்துவந்தவர், பக்கர் குஞ்சுவை தனியே அழைத்து அதனை தந்தார். "யான் பின்னே ஈ டாலரெ, தங்ஙள் சாபுக்கு 'உண்டியலில்' அனுப்பித்தரும்" என்று தனக்குதானே சொல்லிக் கொண்டவனாக டாலரை தன் சட்டையின் உள்பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான். கடந்த ஒருவாரமாக தங்ஙளின் பயணம் பொருட்டு, கேரளா இஸ்லாமிய நலசங்கத்தை சேர்ந்த பெரியதலைகளிடம், பக்கர் குஞ்சு நடத்திய மெகா வசூல் குறித்த செய்திகளில் வியந்த ஜெம், நேற்று அதனை ஜமாலிடம் கூறியிருந்தார். லகுவான நேரத்தை மிகச்சரியாய் காசாக்கத் தெரிந்தவனே அசல்வியாபாரி. பக்கர் குஞ்சு அப்படியானதோர் வியாபாரி என்பதில் இரண்டு கருத்திருக்க முடியாது!

இன்று இரவே தங்ஙள் நாட்டுக்குப் புறப்பட இருப்பதை அறியவந்த கேரள இஸ்லாமிய நலசங்கத்தின் முக்கியஸ்தர்கள், மூன்றுகார்களில் எங்கள் இருப்பிடத்திற்கு எதிரே உள்ள கார் பார்க்கிங்கில் குழுமிவிட்டார்கள். தங்ஙள் புறப்படும் தறுவாயில் எல்லோரையும் பார்க்க, சலாம் கூறிவிட்டு, உருக்கமாக ஒருவிசயத்தை ஜெம்மிடம் சொன்னார். "உங்க பையனுக்கு பார்க்கப்படும் மாந்திரீக சிகிச்சைத்தான் என்கடைசி சிகிச்சையாக இருக்கும். இனி என் வாழ்நாளில் யவருக்கும் சிகிச்சை பார்க்க போவதில்லை" ஆப்பரேஷன் செய்த இடத்திலிருந்து தெறித்த வலியோடு, தீர்மானமாக பேசினார். நானும் ஜமாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டோம்! ஏன் இப்படியோர் முடிவு? என்று ஜெம் கேட்கக் கூடுமென நினைத்தேன். ஜெம் ஏனோ அதனை கேட்கவில்லை. பொதுவில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேர்களுக்கும் தங்ஙளின் 'ரியாத் சங்கடங்கள்' தெரிந்திருந்தபடியால் அவர்களும் தங்ஙளின் தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாய், அப்துல்லா அல்-ரவ்வை எரிச்சலில் சபித்தார்கள். 'தங்ஙளின் மனநோவு சும்மாவிடாது. ஐயாளு, கொரைச்ச தெவசத்துல பிராந்தா அலைவான்!'

தனது காரில், தங்ஙளோடு சென்ற பக்கர் குஞ்சு, ரியாதின் கிழக்கெல்லையில் உள்ள தன் ஸ்தலத்தில் இறங்கிக்கொண்டவனாக, டிக்கட்டையும் பாஸ்போர்ட்டையும் தங்ஙளிடம் தந்துவிட்டு, அவருடன் உதவிக்கென பயணிக்கும் நண்பர்கள் இருவரிடமும், தங்ஙளை பத்திரமாக விமானம் ஏற்றிவிடும் வரையிலான கட்டளைகள் அத்தனையும் தெளிவாக எடுத்துரைத்தான். "இப்போது மணி 8.30. அடுத்த நாலுமணிநேரத்தில் ஏர்போர்ட் போய்விடலாம். ராவுல மூணுமணிக்கு பிளைட்டிண்டே டிப்பார்ச்சர்! அங்கே ஏர்போட்டில் வேலைசெய்யும் நம்ம சத்தார்பாய் உங்களை ஒன்னரை மணிக்கெல்லாம் ஏர்போர்ட்வாசலில் சந்திப்பார். நீக்கள் தங்ஙளை அவருடன் உள்ளே அனுப்பிவையுங்கள். நேரமானாலும் 
விமானம் கிளம்பும்வரை அங்கேயேயிருந்து பின்னர் ரியாத் திரும்பினால் மதி" என்றான். கடைசியாக தங்ஙளிடம் கை கொடுத்துவிட்டு, ஒரு பணக் கவரை அவரிடம் தந்து பத்திரமாக பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளச் சொன்னவன், தனது பேண்ட்பாக்கெட்டை யும் தொட்டுப் பார்த்துக் கொண்டான். இடம் போதாமல் பிதுங்கும் பணத்தை உள்ளே திணித்து கொண்டபடி, "இன்ஷா அல்லா நாளைகாலை ஒன்பதுமணி அளவில் சென்னை மீனம்பாக்கம் சென்றடைவீர்கள். உங்களை அழைத்துபோக, அகமது கவுஸ்ன்னு ஒரு கூட்டுக்காரர் வரும். ஐயாளுக்கு தங்ஙள்சாபை  
தெரியும். ஹோட்டலில் ரூம் புக் செய்துட்டுண்டு. நம்ம அகமதுகவுஸ் மதராஸில பெரிய அரசியல்காரராக்கும்! ஏர்போர்ட்டைவிட்டு வெளிவரும்நேரம் எனக்கு போன்செய்யுங்கள்" என்று கூறிமுடித்தான். தங்ஙள் தலையசைத்தார். உத்தரவு பெற்றுகொண்ட தங்ஙள் சிரமப்பட்டு புன்முறுவல் செய்ய,, கார் கிளம்பியது. பாலைவன வயிற்றை நேரே கீறிவகுந்து போடப்பட்டிருக்கும் அந்த பிரமாண்ட ஹைவேயில் கார் ஒளியை பாய்ச்சியப்படிக்கு விரைந்தது.

***

நேற்றுகாலை, அப்துல்லா அல்-ரவ், ஹாஸ்பிட்டலுக்கு வந்து தங்ஙளைச் சந்தித்து, "நாளைஇரவு நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலாமென சொல்லிவிட்டார்கள். ஹாஸ்பிட்டல் அக்கவுண்ட்டை கிளீயர் செய்துவிட்டேன்." என்றான். தங்ஙள் தலையசைத்தார். நாளை, தான் அல்-கஸிம் போக இருப்பதையும். நூராவின் தலைமுடி மற்றும் அவளது காலடி மண்ணும் எடுத்துவர முயற்சி செய்யயிருப்பது குறித்தும் அவரிடம் சொன்னான். அதற்கும் தங்ஙள் தலையசைத்தார். ரியாத் திரும்ப இரண்டு நாட்கள் பிடிக்கும் என்றவன், தங்ஙளை வீட்டில் ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு, கைச்செலவுக்கு பணமும் தந்தவனாய் சலாம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அப்துல்லா அல்-ரவ், இரண்டுநாள் வெளியூர் பயணம் என்கிற செய்தி, பக்கர் குஞ்சுவிற்கு உடனே தெரிவிக்கப்பட்டது. அவனும் இப்படியோர் சாதகமான நேரத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பாஸ்போர்ட்டின் காலக்கெடு முடிந்திருந்ததை எம்பஸியில் கொடுத்து சரி செய்தாகிவிட்டது. பாஸ்போர்ட்டில் லேபருக்குரிய எண்ட்ரிவிசா மட்டும்தான் அடிக்கப்பட்டு 
இருக்கிறது. அதன் காலக்கெடு மூன்றுமாதம். அது முடிய இன்னும் நாட்களுண்டு. அதனை கொண்டு ஊர் திரும்பலாம். பொதுவில் பிரச்சனை ஏதுமில்லை. டெஹரான் ஏர்போர்ட்டை பிரச்சனையில்லாமல் கடக்க, அங்கே ஏர்போர்ட்டில் பணியெடுக்கும் தன் நாட்டுக்காரரான சத்தாரிடம் சொல்லியாகிவிட்டது. உடனடியாக, மறுநாள் இரவு விமானத்திற்கு, 'டெஹரான்-மதராஸ்' டிக்கெட்டை பக்கர் குஞ்சு புக் செய்தான். ஹாஸ்பிட்டலில் இருந்து நேரே ஜெம் இருப்பிடம், அங்கிருந்து நேரே தமாம் வழியே டெஹரான் என்றும் தீர்மானித்திருந்தான். அவரை அழைத்து வந்த 
அப்துல்லா அல்-ராவ் அறியாமல், ஊர் அனுப்பிவைக்க பக்கர் குஞ்சு காய்களை திறம்படவே நகர்த்தியிருந்தான்! அவனது திட்டச் செயல்பாடுகளின் துரிதம், மாந்திரீகரான தங்ஙளையே வியக்கவைத்தது!

மதராஸ் போய் இறங்கி பக்கர் குஞ்சுவிடம் தங்ஙள் டெலிஃபோனில் பேசினார். தடங்கலற்ற தன் பயணத்தைச் சிலாகித்து சந்தோஷபட்டார். பக்கர் குஞ்சு, அச்செய்தியினை கேரள முஸ்லீம் நலசங்க நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தான்.

பின்னர் ஜெம்மிடமும் சொன்னான். தங்ஙள் தனக்கு போன் செய்து நேரடியாக செய்தியைச் சொல்லாததில் அவருக்கு கொஞ்சம் வருத்தம். அது நியாயமான வருத்தமும்கூட. இரண்டாயிரத்து ஐநூறு டாலருக்கு ஒரு வேல்யூ வேண்டாமா?

மதராஸ் வீட்டுக்கு போவதாகச் சொன்ன தங்ஙள், தன்னிடம் விபரம்கேட்டு பேசுவதுதானே முறை?  என்வீட்டிற்கு போகலை! - ஜெம்மின் வருத்தம் கிளைத்துகொண்டிருந்தது. சற்றைய நேரத்திற்கெல்லாம் அந்த வருத்தம் பக்கர் குஞ்சுமீது தாவியது. டெலிபோனில் பக்கர் குஞ்சுவிடம் தன் ஆதங்கத்தை கொட்டினார். மதராஸ் போய் இறங்கிய தங்ஙளுக்கு எத்தனைவேலையோ? எந்தலட்சாதிபதி, எந்த கோடிஸ்வரியை அடைய, அவரை அவரறியாமல் கடத்திக் கொண்டு போனானோ!

***
எங்களது கட்டிடத்தையொட்டி வடக்குபார்த்த மூலையில் ஒரு கருவேலமரம். நம் நாட்டு கருவேலரகமல்ல. இது வேறு ரகம்! வாகாய் நெடு நெடுன்னு வளர்ந்து, உயரத்தில் விஸ்தீரணமாய் கிளை பரப்பி அடுத்தவர்களுக்கு முள்ளுறுத்தல் தராத ரகம்! கீழே அதன் நிழல்படரும் பரப்பிற்கு, மொட்டு மொட்டாய் பஞ்சு மாதிரியான தன் மஞ்சள்பூவை உதிர்த்து, மனம் கொண்டயவர்களையெல்லாம் ஸ்தலம் மிதிக்கவிடாது! பௌர்ணமி முன்னிரவு நேரங்களில், கருவேலனில் காணும் சல்லடைப் பரப்பிலிருந்து சின்னச் சின்ன வெளிச்ச வட்டமும், அதன் கிளைகளின் நிழல்கோடுகளும், மஞ்சப்பூ வெல்வெட் ஸ்தலத்தில் அழகூட்ட, இரவின் சாயல்கொண்ட பிரமாண்ட நவீனச் சித்திரமாகிவிடும்!

பௌர்ணமி இன்று! மணி ஏழு. நானும் ஜமாலும் அந்த ஸ்தலத்தை ஒட்டிய பிளாட்பாரத்தில் நின்றபடி, எங்கள் இருப்பிடத்திற்கு நேர் எதிரேயுள்ள கார்பார்க்கிங் திடலில், வரயிருக்கும் வி.ஐ.பி. ஒருவரின் கார் வரவை எதிர்பார்த்திருந்தோம்.

இந்தப்பக்கம் காலடியில் மனதையள்ளும் சித்திரம்! அந்தப்பக்கம் வி.ஐ.பி. யின் வருகை! நிமிடங்கள் இனம் புரியாத உந்தலில் நகர்ந்து கொண்டிருந்தது. வரும் வி.ஐ.பி. வேறு யாருமல்ல அப்துல்லா அல்-ரவ்தான்! அவன் இப்போது இங்கே நட்போடு வருவதும், ஜெம்மிடம் அவன் டெலிபோனில் உரையாடியதும் புரியாத புதிர்! அவனது மாற்றமான அணுகுமுறை ரொம்ப யோசிக்க வைத்தது. அந்த அரபி எப்படி.. இப்படி இந்தக் கருவேலமரம் கணக்கா சட்டென உயர்ந்து, முள்ளுறுத்தா ரகமானான்!? தங்ஙள் இவனிடம் சொல்லாமல் இந்தியா போனதறிந்தும்?

வழக்கம்போல பகல் மூன்றுமணிக்கு அலுவலகம்போனதும், நான் வேனில் இருந்தபடி, மாலைநேர சப்ளைகளுக்கான இன்வாய்ஸுகளை வாங்கிவர ஜமாலை மேலே அனுப்பிவைத்தேன். போனவன் வழக்கத்தைவிட கூடுதல் நேரம் கழித்தே வந்தான். "ஏய்யா லேட்?" இரண்டே இரண்டு இன்வாய்ஸ்களை மட்டும் என்னிடம் தந்தவனாக ஜமால் வேனில் ஏறியமர்ந்தான். "பாய் தெரியுமா சேதி? நம்ம ஆளு, அந்த அரபி, அப்துல்லா அல்-ரவ்விடம் டெலிபோனில் பேசிக் கொண்டிருக்கிறார்! தங்ஙளை, கேரள முஸ்லிம் நலச் சங்கம்தான் பதுக்கிவைத்து பாதுகாத்தது என்றும், அதுவறியாது; தன்மகனின் உடல்நலம் வேண்டி அவரை அழைத்துவந்தது மாந்திரீகம் பார்த்ததாகவும், நேற்றிரவு அந்த சங்கத்தைச் சேர்ந்த ஆட்கள், அவரை டெஹரான்வழியே இந்தியாவுக்கு அனுப்பித்துவிட்டார்கள்  என்று ஒன்றுவிடாமல் அத்தனையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்!" ஜமால் சொன்னதைகேட்டு எனக்கு பெரிய குழப்பம். "அப்படியா? அப்படியா?" யென 
அவனிடம் மீண்டும்மீண்டும் கேட்டவனாக, டிரைவ் செய்துகொண்டிருந்தேன். எப்படி கணித்தாலும், எனக்கு ஜெம்மின் இந்த 'உண்மை விளிம்பித்தனம்' புரிந்துக்கொள்ள இயலாமலிருந்தது.

தங்ஙள், மதராஸ்போய் இறங்கி அவருக்கு நேரடியாக டெலிபோன் செய்யவில்லை என்பதினாலான அவரது வருத்தம், இப்படி அவர் உண்மை விளிம்ப சரியான காரணமாக தோன்றவில்லை. அவரது தேர்ந்த வியாபார சாதுர்த்தியத்தை பின்புலமாககொண்டு இதனை கணிக்கலாமென்றால், அது அத்தனைக்கு எளிதல்ல. எப்படியோ அதனூடே உள்நுழைந்து முற்படாலும் 
வெளியேறுவதென்பது கஷ்டம். வியாபார மகாத்மியங்கள் அப்படி! சந்து பொந்துகளுக்கும் குறைவிருக்காது. அப்துல்லா அல்-ரவ்விடம் பணியெடுக்கும் இந்திய லேபர்களுக்கான கேம்ப் ஒன்று, ரியாத்தின் மேற்கு பார்க்க மக்கா ரோட்டில் இருக்கிறது. மிகப்பெரிய கேம்ப்! அதற்கு, எங்களது பால்பவுடரை தொடர்ந்து சப்ளைசெய்ய ஜெம் கருதியிருக்கலாம். அதற்காக அவனிடம் சினேகம் கொண்டாட அவர், அவனுக்கு சாதகமாக பேசியிருக்கலாம்! இந்த என் யூகம். எனக்கு சரியே என்று பட்டாலும், அதற்காக இத்தனைக்கு உண்மைவிளிம்பி அவதாரம் அதிகம். எத்தனைக்கு 
அனுமானித்தாலும், கணிப்பு எங்கோ இடித்தது.

"உன் மச்சான், ஏனாம் இன்றைக்குப் பார்த்து அதனையெல்லாம் சொல்லணுமாம்?" என்று ஜமாலிடம் கேட்டேன். "அது ஏன்ணு முழுசா புரியலைபாய்! அரபி கஸிமிலிருந்து காலையில வந்திருக்கான். வீட்டில் தங்ஙளை காணோம். வழக்கத்தைமீறி பரபரப்பா அவரை தேடியிருக்கான். அவரு கிடைக்கல. அப்புறமா கேரள முஸ்லிம் நலசங்கத்தை விசாரிச்சிருக்கான், அவர்களும் பயந்துகொண்டு 'தெரியாதென' கையை 
விரிச்சிட்டாங்களாம். பிறகு அவன் நம்ம டமாம்ஹெட் ஆபிஸுக்கு போன்செய்து, உங்க ரியாத் ஆளுங்களோடு பேசனுமுன்ணு தொல்லை படுத்தியிருக்கான். ஜெனரல்மேனேஜர் லெபனானி, நம்ம ஆளுக்கிட்ட அரபி நம்பரைகொடுத்து பேசசொல்லியிருக்கார். தவிர்க்கமுடியாமல் இவரும்பேசியிருக்கார். ஆனா, ஜெம் ஏன் பல உண்மைகளை அரபியிடம், கொட்டினாரென புரியலை பாய்!" என்றான். "சரி, அதான் பேசிட்டான்ல? பின்னே ஏன்... அரபி இங்கே வரானாம்?" கேட்டேன். "தங்ஙளுக்கான செய்தி ஒண்ணு இருக்காம், அதை நேரில்வந்து சொல்றதா சொன்னானாம். இவரும் இரவு ஏழுமணிக்குமேல் வரசொல்லியிருக்கிறார். நம்மை கார் பார்க்கிங் திடலில் எதிர்நோக்கி நில்லுங்கள் என்றும், அரபியை பிளாட்டுக்கு அழைத்து வாருங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்!" என்றான்.

பின்னர் திடுமென நினைத்து கொண்டவனாக, "இன்னொரு செய்தியை உங்ககிட்ட சொல்ல விட்டுட்டேன் பாய்." என்றான். என்ன என்பது போல் அவனது முகத்தை நோக்கினோம்.

"மதியம் என் மச்சான் அரபிகிட்டே பேசிக் கொண்டிருக்கிறபோது, நான், மாலைப்பொழுதுக்கான இன்வாஸ்களை பெற்றுவர அக்கெளண்ட்டண்ட் எஜிப்ஷியனிடம் பேசிக்கொண்டு நின்றேன். அப்போ அவன்கேட்டான், 'தங்ஙள் இந்தியாவுக்கு போய்விட்டாரா?' என்று. நானும் 'ம்..' என்றேன். 'தங்ஙளுக்கு கொடுத்ததென்று மூவாயிரம் டாலர் கணக்காகிவிட்டபடியால், தங்ஙள் ஊர் போய்விட்டதை கன்ஃபார்ம் செய்துகொள்ள' கேட்டதாக சொன்னான். செய்தி புதிதாகயிருந்ததால் குழம்பிப் போனேன். நான் குழம்பியதை கண்டவன், 'ரியாத் பிரான்ஞ் சேல்ஸ் அதிகரிக்க, ஒரு இந்திய மந்திரவாதியைவைத்து மந்திரம் செய்யப்போவதாக ஜெம் ஹெட்டாபீஸில் பர்மிஸன் வாங்கியது உனக்குதெரியாதா?' என்றான். நான் சுதாரித்துக்கொண்டு 'தெரியும்' என்றவனாக இன்வாஸ்களை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்!" என்றான். நான் சிரித்துகொண்டேன். இதெல்லாம் ஜெம்முக்கு சாதாரணம்! அவரது வியாபார நுட்பத்தை நாலாபக்கமும் பயன்படுத்தக் கூடியவர்!

அவர் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்திலிருந்துதானே.. அவர் எடுத்துகொள்கிறார்! அதற்கு ஏதோவொரு காரணம் சொல்கிறார்! அவ்வளவுதான்! இதில் எனக்கு எந்தவொரு மனத்தாங்கலும் எப்பொழும் எழுந்ததில்லை. ஆனால், ஜமாலுக்கு உண்டு. 'அவருக்காக உழைக்கும் நம்மையும் கவனிக்க வேண்டாமா?' என்பது அவன் கட்சி.
 
அப்துல்லா அல்-ரவ், இன்றைக்கு இங்கு வருவதின் சஸ்பென்ஸ் விளங்காமல், வேலையை முடித்துவிட்டு இருப்பிடம் எதிரும்பிய நாங்கள், சீக்கிரமாக குளித்து விட்டு அவனது வருகையில் ஆர்வமானோம். தங்ஙளுக்கு அப்படியென்ன விசேஷ தகவலை வந்திங்கே சொல்லப்போகிறானாம்!? என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை, ரியாத்தைவிட்டு தங்ஙள் ஊர்போய் சேர்ந்தப் பிறகும், இன்னும் அவர் எங்களைச் சுற்றிச்சுற்றி வலம்வந்து கொண்டுதான் இருக்கிறார்!

***
அப்துல்லா அல்-ரவ்வின் கார், எங்களருகில் வந்துநின்றது. கார் கண்ணாடியை இறக்கி, சாலாம் சொல்லிவிட்டு, பார்க்கிங் திடலில் கொண்டுபோய் காரை நிறுத்தியவர், எங்களிடம் சிரித்தபடியே வந்து கேட்டார், "வேர் ஈஸ் தங்ஙள்?" நாங்களும் சிரித்தபடிக்கு அப்பாவியாக "தெரியாது" என்றோம்.  அவன் சிரிப்பு குறையாமல், "ஓ.கே., வேர் ஈஸ் மிஸ்டர்.ஜெம்?" என்றான். "எஸ்... பிளீஸ்" என்று அவனை மேனேஜரின் பிளாட்டுக்கு அழைத்துபோனோம். ஜெம் அப்போதுதான்  வெளியிலிருந்து வந்து கோட்டைக் கழட்டாமல் அமர்ந்திருந்தார். அரபி வாசலில் நிற்கும் செய்தியைச் சொன்னதும், உடனே வெளிவந்த ஜெம், அவனுக்கு சலாம் கூறி, கை குலுக்கி, அரபியன் ஸ்டைலில் அவனோடு முத்தமிட்டுக் கொண்டவராக, வீட்டினுள் அழைத்துப் போனார். இருவரும் நெடுங்காலம் பழக்கம் கொண்டவர்கள் போன்று பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர். தொடர்ந்து ஜெம், அவனுடைய லேபர் கேம்ப் பற்றி பேச்சைத் தொடங்கினார்.

எத்தனை பேர்கள் அங்கே இருக்கின்றார்கள் எனபதைப்பற்றி கேட்டுகொண்டேவந்தவர், 'உங்களது லேபர் கேம்ப்பிற்கு எங்களது பால்பவுடரை நீங்கள் டிரை பண்ணிப் பார்க்கலாமே' என வியாபார 
நிமிர்த்தமாக பேசஆரம்பித்தார். 'அது குறித்து நிச்சயம்பேசுவோம்' என்றான் அப்துல்லா அல்-ரவ். எங்க மேனேஜரின் சரளமான ஆங்கிலத்துக்கு ஈடாக, அவனும் பிசிறில்லா ஆங்கிலத்தில் பேசினான்.

பால்பவுடர் வியாபார நிமித்தமாக ஜெம் பேசத்துவங்கிய போது, எனக்கு சிரிப்பு வந்தது. நம்மக ணக்கு தப்பவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இடையே என்னையும் ஜமாலையும் கவனித்த ஜெம், ஜாடை காட்டினார். அவரது ஜாடைகளின் அர்த்தங்கள் அத்தனையையும் நாங்கள் கற்றவர்கள் ஆகையால், உடனே உள்ளே போய் அவரது மனைவி தயாராக வைத்திருந்த குக்கீஸ் பிளேட்டை கொண்டுவந்து அரபி முன்னிருந்த 'டீபாயில்' வைத்தோம். அடுத்து ஸ்வீட் வாட்டர் பாட்டிலும், டீ யும்! அப்துல்லா அல்-ரவ் எங்களைப் பார்த்து இப்பவும் சிரித்தவனாக, "ரஃபீக்... வேரிஸ் தங்ஙள்?" நாங்கள் பதிலேதும் கூறாமல், புன்னகைத்து அவன் சிரிப்பை அவனுக்கே தந்தவர்களாக, உள்ளே நகர்ந்தோம். எங்கள் துகளை மட்டும் அங்கே மறக்காமல் விட்டபடிக்கு.

ஜெம்மின் முகம் பார்த்து, நேருக்கு நேர் அவரை அப்துல்லா அல்-ரவ் புகழ்ந்தான். நாங்கள் உள்ளிருந்தபடிக்கு சப்தம் காட்டாது சிரித்தோம். எங்களைப் பார்த்து அவரது மனைவியும் சிரித்தது. 

அடுத்து, உணர்ச்சி வயப்பட்டவனாக தங்ஙளை 'கிரேட்' என்றான். 'அவரது மலையாள நண்பர்கள்தான் அவர் மனதை சலனப் படுத்திவிட்டார்கள்' என்றான். 'எஸ் எஸ்' என்றவராக ஜெம் தலையாட்டிக் கொண்டிருந்தார். நான் ஊரில் இல்லாதபோது, தங்ஙளை அவர்கள் இந்தியா அனுப்பி வைத்தது தவறு என்றான். ஜெம் அதற்கு கூடுதல் அழுத்ததில் 'எஸ்' சொன்னார். திரும்பவும் தங்ஙளை 'கிரேட்' என்றவன், டீயை எடுத்து அருந்தியவனாக, "ரியாத்திற்கு தங்ஙளை ஏன் அழைத்து வந்தேனென்று தெரியுமா ஜெம்?" என்றான்.

ஜெம் புன்னகை பூத்தவராய் 'தெரியும்' என்று தலையாட்டினார்.

"'எஸ் ஜெம், யூ ஆர் ரைட், என் நூரா எனக்கு வேண்டும். அது கைக்கூடத்தான்... அதற்கான உதவிக்குதான் அவரை அழைத்துவந்தேன். என் இளம்பிராயத்திலிருந்தே அவள்மீது எனக்கு அப்படியொரு காதல்! என் முதல்மனைவியாக அவளை அடைய நினைத்திருந்தேன். அது நடக்கவில்லை. ஆனாலும், அவள் மீதான காதல் என்னிடம் அத்துப் போகவில்லை. அவளுக்கு திருமனம் ஆனபோதே அவளை நான் மறந்திருக்கவேண்டும். அது முடியலை ஜெம்." என்றான்.

மீண்டும் டீயை எடுத்து குடித்துவிட்டு பேசத்துவங்கினான், "அவளை மனைவியாக அடைய நினைத்த தருணத்தில், அதற்குரிய ஆயத்தத்தோடே இருந்தேன். அவளுக்காக, நான் கட்டிய பங்களா காஸ்ட்லியானது! அதன் தரைகள் இத்தாலியன் மார்பல்ஸால் பரப்பப்பட்டது. சுவர்களிலும் அப்படித்தான்... அது சிரித்துக் கொண்டே இருக்கும். அங்கே போடப்பட்டிருக்கும் பர்னிச்சர்கள் துர்க்கி நாட்டு இஸ்லாமிய கிளாசிக் வகையை சார்ந்தது. அங்குகாணும், ஃபிரான்ஸ் கிச்சன் ஐட்டங்கள் விலைமதிப்பற்றவை! அந்த பங்களா, இப்பவும் யாரும் உபயோகப்படுத்தாதுதான் இருக்கிறது! அவளை அன்றைக்கு அடையமுடியாது போனபோது, நான் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டேன். ஆனால், நூராவுக்காக கட்டிய அந்த பங்களாவை நான் உபயோகப்படுத்தவில்லை! நான் நூராவோடுவாழ கட்டியதல்லவா அது! அங்கே காணும் அத்தனை பொருட்களும் என்னை மாதிரியே அவளது வருகைக்காக ஒவ்வொருநாளும் காத்திருக்க விட்டுவிட்டேன். இது 
அத்தனையும் என் மாமா அறிவார். என்நூராவும் அறிவாள். அறிந்து என்னசெய்ய ஜெம்?"

ஜெம், நெளியத் துவங்கினார். அவனது சங்கடமான ஒரு தலைக்காதலையும் அவன் அதற்கு தரும் அழுத்தத்தையும் அவர் அறிய விரும்பவில்லை என்று தோணியது. இப்படி அசூயை பார்க்காமல் மூன்றாம் நபரிடம் தன்னை கவிழ்த்துக் கொட்டுவேன் என்று ஒருவன் நின்றால் எப்படி? இதுவொரு மாதிரியான பைத்திய லட்சணம் கொண்ட மனநிலை! அவனது மாமன் மகள் நூரா, இவனைத் தவிர்த்தது ஒதுக்கியதிலும், தங்ஙள் இவனிடமிருந்து தப்பித்தோடியதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

அவனது செய்திகளிடமிருந்து தப்பிக்கும் விதமாக, ஜெம் பேச்சை மாற்றினார், "யா ஷேக், அன்றைக்கு நூரா யாரை திருமணம் செய்துகொண்டாள்?" "அவளது ஊரான கஸீமில் வாழ்ந்த பிரபலமான ஃபுட்பால் விளையாட்டு வீரன் ஒருவனுக்கு, அப்போது மூன்றாம் மனைவியாகிப் போனாள்! எங்க நாட்டு ஃபுட்பால் கிரேஸியை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்! அந்த விளையாட்டின்மீது அவளுக்கு அப்படியொரு ஈர்ப்பிருந்திருக்கிறது. அதனாலென்னவோ அவள் எதனையும் யோசிக்காமல் அவனை திருமணம் செய்துகொண்டாள். அவள் விரும்பி நடந்த 
திருமணம் அது!"

இடையில் சற்று பேச்சை நிறுத்திய அப்துல்லா அல்-ரவ் மீண்டும் தொடர்ந்தான், "அவளை திருமணம் செய்து கொள்ளவிருந்த ஆர்வத்தில், அன்றைக்கு அதிகத்திற்கும் உழைத்தேன். இறைவன் எனக்கு லாபத்தை கொட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தான். இன்றைக்கு இந்த ரியாத்தில் எனது கிளினிங் காண்ட்ராக்ட் கம்பெனிதான் மிகப் பெரிசு! ஜித்தா, மக்கா, மதினாவிலும் இதன் கிளைகள் இருக்கிறது! இது தவிர, சௌதி முழுமைக்குமான 'Sony' ஏஜென்ஸி என்னிடம்தான் இருக்கிறது! எது இருந்து என்னசெய்ய ஜெம்? என நூரா எனக்கு அப்போ கிடைக்காமல்தானே 
போய்விட்டாள்! என்றாலும், இறைவன் என் பக்கம்தான் இருந்தான்! ஆறுமாதத்திற்கு முன், அந்த ஆட்டக்காரனிடமிருந்து அவள் மணவிலக்கு பெற்றாள். அது அறிந்து என்னிடம் மகிழ்ச்சி துளிர்விட தொடங்கியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவளை அடையும் முயற்சிகளில் இறங்கினேன். இப்போதேனும் அவளை திருமணம் செய்துகொண்டே தீருவது என்கிற எண்ணம் நாளுக்குநாள் என்னிடம் வலுபெற்ற தொடங்கியது. பம்பாய் போகுமுன் என் மாமாவிடம் நூராவை திருமணம் செய்துகொள்கிற என்விருப்பத்தை முறைப்படிக்கு தெரிவித்தேன். 'பொறுபார்க்கலாம்' என்றுவிட்டு சிரித்தாரே தவிர, அப்போது எனக்கவர் சம்மதம் சொல்லவில்லை."

"நீங்கள் அந்தப் பெண்ணை நெடுங்காலமாக விரும்புகின்றீர்கள். அந்தப் பெண்ணுக்காக பேலஸ் கூட கட்டிவைத்திருக்கின்றீர்கள். அந்தஸ்த்துக்கும் குறைவில்லை. இப்போது நீங்களொரு மில்லியனர்! பிறகு ஏன் உங்கள் மாமா சம்மதம் சொல்வதில் இத்தனை தயக்கம்?" நான் வியந்து துணுக்குறும் அளவுக்கு, ஜெம் அவனிடம் மிகச் சரியாகவே கேட்டார்.

அப்துல்லா அல்-ரவ் எச்சிலை விழுங்கியவராக, மெல்லப் பேசத் துவங்கினான். கஸீம் பக்கமுள்ள, பிரின்ஸ் வம்சத்து பையனொருவன், நூரா அழகை கேள்விப்பட்டு, அவளை தன் நாலாம் மனைவியாக திருமணம்செய்து கொள்ள விரும்பினானாம். தகவல் அறியவந்த என் மாமா, அதனை விரும்பவும் செய்தார். அவருக்கு வேறுவழியுமில்லை. பிரின்ஸ் வம்சத்துக்காரர்களின் கோரிக்கையை எவரும் தவிர்க்கமுடியாது. அது கூடவும்கூடாது. அதனாலேயே, அதனை எதிர்ப்பார்த்தவராக எனக்கு அவர் சம்மதம் சொல்லவில்லை." என்றான்.

"ஓ...." ஜெம் நீட்டி முழங்கி, அவனுக்கான அனுதாபத்தை வெளிப்படுத்தினார்!

"எஸ்.. ஜெம், அதன் பிறகுதான் நான் ரொம்பவும் குழம்பிப்போனேன். இப்போதும் எனக்கவள் கிடைக்காமல் போய்விடுவாளோ என்கிற பயம் கூடுதலாகிப் போனது. அதன்பொருட்டுதான் தங்ஙளின் உதவி கட்டாயம் என்றுபட்டது. அவரை ஒரு நண்பன் உதவியோடு சம்மதிக்க செய்து அழைத்தும் வந்தேன். தங்ஙளும் எனக்காக மிகுந்த ஈடுபாடுகளோடு காரியம் ஆற்றினார். 'நூராவின் மனம் என்னை நாடவும், அவளை நாடிய ராஜவம்சத்து விருப்பம் அறுபடவும்' அவர் பலஇரவுகள் கண்விழித்து மாந்திரீகம் செய்ததை நான் அறிவேன். என் இடுப்பில் அவர்கட்டிய 
தாயத்தின் சக்தியை, அப்போது நான் அவ்வளவாக உணராது போனாலும் பின்னர் முழுமையாக உணர்ந்தேன். அந்த தாயத்துதான் எத்தனை சக்தி வாய்ந்தது! அவர்தான் எத்தனை சக்தி வாய்ந்தவர்!"

***
அப்துல்லா அல்-ரவ் கொஞ்சநேரத்திற்கு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கிளாஸ் டம்ளரில் ஜெம் தந்த தண்ணீரை அருந்தியவராக, "நேற்றும் அதற்கு முந்தியநாளும் நான் கஸீம் போயிருந்ததை ஜெம் அறிந்திருக்கக்கூடும்.

அடுத்தகட்ட மாந்திரீகம் பொருட்டு, தங்ஙள் என்னிடம் நூராவின் தலைமுடி சிலவும், அவளது காலடிமண் கொஞ்சமும் கேட்டிருருந்தார். எப்படியாவது அதனை கொண்டுவர வேண்டும் என்கிற நோக்கத்துடன் மட்டும்தான் சென்றிருந்தேன்.

என் மாமா வீட்டிற்கு நான் சென்ற போது, சற்றும் எதிர்பாராதவிதமா என் மாமாவும், நூராவும் என்னை வரவேற்றார்கள். சகஜமாக பேசவும் செய்தார்கள். முந்தியப் பொழுதெல்லாம் நான் கஸீம்சென்று அவர்களை காண்கிறபோது கிட்டாத வரவேற்பு அது! அவர்கள் என்னோடு சகஜமாகப் பேசிய பேச்சும் அப்படிப் பட்டதுதான்! அந்தநிமிடங்களில் தங்ஙள்தான் என்கண்முன் தோன்றினார். என் இடுப்பில் அவர் கட்டிய தாயத்தை தொட்டுப்பார்த்தேன்! தங்ஙளிட்ட தாயத்துக்கு இத்தனை மகிமையா? யோசித்துகொண்டிருந்த போது, இன்னொரு மகின்மையும் நடந்தது ஜெம்!"

வியந்தவராக தன்னைக் காட்டிகொண்டு "அப்படியா? என்ன அது?" என்றார் ஜெம்.

"என்மாமா என்னை தனியே அழைத்துப் போய், "நூரா உனக்குத்தான் என்றார். என்மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல்போனது. கண்களில் கண்ணீர்கூட வந்து விட்டது. இறைவனுக்கு நன்றி கூறியவனாய், தங்ஙளுக்கும் நன்றி சொல்லி நெகிழ்ந்தேன். அன்றுமாலை கஸீம் கடைவீதிக்கு நூராவை அழைத்துபோய், அவள் விரும்பிய ஆபரணங்கள் அனைத்தையும், கூடுதலாக, விலையுயர்ந்த ஆடைகளையும் வாங்கிக் கொடுத்தேன். ஒரு பெரிய தொகையினை செக் எழுதி என் மாமாவிடம் பணிவுடன் தந்துநின்று, நூராவுக்கும் எனக்குமான திருமணத்தை உறுதிசெய்துவிட்டு வந்திருக்கிறேன் ஜெம்."

மிகுந்த உற்சாகம்கொண்டு உரத்தக்குரலில் வாழ்த்திய ஜெம், "யா சேக், நூராவை மணக்கவிரும்பிய அந்த பிரின்ஸ் என்னவானான்? தொடர்ந்தும் அவன் முயலவில்லையா என்ன?" மீண்டும் எங்க ஜெம்மின் சரியான கேள்வி!

அப்துல்லா அல்-ரவ் பலமாகச் சிரித்தான், சிரித்துவிட்டுசொன்னான், "அதான் முன்னமேயே சொன்னேனே! அவன் பிரின்ஸாக இருந்தாலும், இறைவன் என் பக்கம்தான் என்று! நான் சொன்னால் மிஸ்டர் ஜெம் நம்புவீர்களாயென்று தெரியாது, தங்ஙள் எனக்கு தாயத்துகட்டிய அதே நாளில்தான் அந்தப் பிரின்ஸ் துனிஸியாவில் ஒரு மாடல் அழகியை திருமணம் முடித்திருக்கிறான். இப்போ கஸீம் போயிருந்தபோதுதான் இச்செய்தியை அறியவந்தேன்" என்றான்.

எங்க மேனேஜர் கலகலவென சிரித்தபடி, அப்துல்லா அல்-ரவ்விற்கு கைகொடுத்து, மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொன்னார். ஒரு பெரிய வியாபாரம் படியப்போகிறது என்று மனதில் தோன்றினால்தான் எங்க மேனேஜர் இத்தனை தாராள சிரிப்பைச் செலவிடுவார். அவர் கணக்கு தப்பியதும் இல்லை. ஒரு பெரிய ஆர்டர் கிட்டிவிடும் என்று என் பட்சியும் சொன்னது. 

சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்த அப்துல்லா அல்-ரவ், இன்னொரு கப் டீ கேட்டான். அவனது ஆர்வமான பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. 

அவனுக்கு டீ எடுத்துபோன நான், அப்துல்லா அல்-ரவ்வை நேர் பார்த்து வாழ்த்து சொன்னேன். அவன் சிரித்துகொண்டே என்னை தட்டிக் கொடுத்தான். எல்லோருக்கும் அவன் சார்ந்த இறுக்கம் தளர்ந்த மாதிரி இருந்தது.
***
தனது இடது கரத்தை திருப்பி பார்த்தவனாக, அப்துல்லா அல்-ரவ் சொன்னான், "எனக்கு இன்னொரு வேலை இருக்கிறது. போயாகணும்; ஜெம் , நான் கஸீமிலிருந்து எத்தனை மகிழ்ச்சியில் வந்திருப்பேன் என்பதை உங்களால் இப்போது புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன். தங்ஙளிடம் கஸீம் செய்திகளை சொல்லவும்தான் எத்தனை ஆர்வம் கொண்டிருப்பேன்! அந்த நேரத்தில் தங்ஙள் இங்கே இல்லாது போனதில் நான் கொண்ட தவிப்புகள் கொஞ்சமல்ல! அதனால்தான் என்னவோ அத்தனை செய்திகளையும் ஜெம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். 

என்னிடம் எல்லா உண்மைகளையும்  ஜெம் சொல்லவில்லை யென்றால், நான் இன்னும் தங்ஙளைத் தேடியவனாகவே இருந்திருப்பேன். அவரை நேரில் பார்த்து நன்றி கூறி மரியாதை 

செய்யவேண்டுமென கஸீமிலிருந்தே நினைத்துகொண்டு வந்தவன் நான்! ஓ.கே. மிஸ்டர் ஜெம், தங்ஙளுக்கான என் நன்றியாக, நான்கொஞ்சம் பணம்தருகிறேன். அதனை அவருக்கு 

அனுப்பிவைத்து விடுங்கள் என்று கூறியபடி, ஆயிரம் ரியால் நோட்டுக்கத்தை ஒன்றை தன் ஹேண்ட்பேக்கிலிருந்து எடுத்து ஜெம்மிடம் தந்தான். கலகலவென சிரித்தபடி ஜெம், அந்தப் பணத்தை தன் கோட் உள்பாக்கெட்டில் திணித்துக் கொண்டவராக, இதனை 'உண்டியலில்' நான் நாளை தங்ஙளுக்கு அனுப்பிவைப்பேன் என கூறியபடி, உள்பாக்கெட்டை அலட்சியமாக தொட்டுப் பார்த்துக்கொண்டார்.

"சந்தோஷம் ஜெம்" என்று சிரித்தப்படிக்கு எழுந்தவன், மீண்டும் அமர்ந்து, பேக்கை திறந்து, செக் புக்கை எடுத்து, அதில் செக் ஸ்லிப் ஒன்றினைக் கிழித்து, அதில் கையெழுத்துமிட்டு எங்க மேனேஜரிடம் தந்தான். 'எதற்கு இதுவென?' முகம் பூத்த ஜெம், கண்களால் கேட்டார்! "நூத்திஐம்பது மில்க் பவுடர் கார்ட்டூன்களுக்கான தொகையை நிரப்பிக்கொள்ளச் சொன்னவனாக, கேம்ப் இருக்குமிடத்தின் விபரம் சொல்லத் தொடங்கினான் அப்துல்லா அல்-ரவ். 'அதனை நான் அறிவேன்' என்றேன். 'ஓ.கே.' என்றவனாக எல்லோரிடமும் விடைபெற்றபடி காரை நோக்கி விரைந்தான். 

நானும் ஜமாலும் மரியாதை நிமித்தமாக அவனோடு சென்று, கார் கதவை திறந்து விட்டவர்களாக வழியனுப்ப நின்றோம். காரிலேறி அமர்ந்தவன், எங்கள் இருவரையும் அழைத்து, ஆயிரம் ரியால் நோட்டு இரரண்டை தந்து சிரித்தான். கல்யாண சந்தோஷம் அவன் மேனியெல்லாம் புரண்டது. பெற்றுக்கொண்ட நாங்கள், அவனுக்கு நன்றி கூறியவர்களாக கையசைக்க, அவன் கார் புறப்பட்டது.

கார் பார்க்கிங் ஏரியாவில் நானும் ஜமாலும், 'அப்பாடா'வென ஓய்ந்து நின்றபடிக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். தலைக்கு மேலே நிலவு, பௌர்ணமியாக ஜொலித்தது! அந்த ஏரியாவே ஒளியால் நிரம்பி மிளிர்ந்தது. ஜெம் பிளாட்டின் வாசல் கொள்ளா ஒளி வெள்ளம். எங்கள் கைகளில் இருந்த ரியாலை பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டவர்களாக, தங்ஙளின் மாந்திரீக கீர்த்தியை மெச்சியபடியும், வியந்தபடியும் முகம்கொள்ளாத சிரிப்போடு இருப்பிடம் நோக்கி நடந்தோம்.
***
நன்றி : தாஜ் | satajdeen@gmail.com

Saturday, April 19, 2014

அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும் 2 - ஹமீது ஜாஃபர்

ஆவ்வ்வ்...! முதல் பகுதி இங்கே :  http://abedheen.blogspot.com/2013/12/blog-post_12.html

**


பாக்தாதில் தோன்றிய அராபிய அறிவின் எழுச்சியும் வீழ்ச்சியும்                      
The Raise and Fall of Arabian Wisdom in Baghdad.


பாகம் - 2
அப்பாஸிய கலிஃபாக்கள் மலர்ச்சி


நீண்ட காலமாகவே உமையாக்களின் ஆட்சியை விரும்பாதிருந்தனர் ஒரு பகுதியினர். அவர்களது விருப்பமெல்லாம் அலி(ரலி) வழிதோன்றல்களின் ஆட்சி நடக்கவேண்டும் என்பதே. காரிஜிக்கள் மோசூலில் கிளர்ச்சி செய்யத்தொடங்கினர். இதை கட்டுப்படுத்த உமையா கலிஃபா இரண்டாம் மார்வானால் முடியவில்லை. இதற்கிடையில் அரேபியாவிலும் காரிஜிக்களின் கிளர்ச்சி தொடங்கியதால் அதனைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சிரியா பாதுகாப்பானதாக இல்லை. இன்னொரு பக்கம் ஷியாக்கள்  கொரஸானில் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். கலிஃபாவால் இதனையும் கட்டுப்படுத்த முடியவில்லை. முடிவில் ஜெப் நதிக்கரையில் நடந்த சண்டையில் ஹாஷிமி வம்சத்தை சேர்ந்த அபுல் அப்பாஸிடம் தோல்வியுற்றார். இந்த சண்டையில் 300 க்கும் மேற்பட்ட உமையா வம்சத்தினர் கொல்லப்பட்டு உமையாக்கள் ஆட்சி முடிவுற்று அப்பாஸிய ஆட்சி தொடங்கியது. இச்சண்டையில் தப்பித்த வாரிசுகளான உபைதுல்லா மற்றும் அப்துல்லா எத்தியோப்பியாவுக்குத் தப்பிச் சென்றனர். அப்துல் ரஹ்மான் ஸ்பெயினுக்குத் தப்பிச்சென்று அங்கு உமையாக்கள் ஆட்சியை உருவாக்கினார்.

உமையா வம்சத்தின் தோல்வி இஸ்லாமிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை எனலாம். அப்பாஸியர்கள் பாரசீகத்தினருடன் ஒன்றினைந்திருந்தனர். அவர்கள் அங்கு திருமண உறவுகள் ஏற்படுத்திக் கொண்டிருந்ததால்  கல்வி, கலாச்சாரம் பாரசீகத்துடன் இணைந்துக்கொண்டது. அப்பாஸிய ஆட்சி மலர பாரசீகர்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. எனவே ஆட்சி பொறுப்பில் முக்கிய பங்கு வகுத்தனர் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள்.

பாக்தாதின் தோற்றம்

மார்வானை வென்றபின் முதல் அப்பாஸிய கலிஃபா அபுல் அப்பாஸ் யூப்ரட்டீஸ் நதிக்கரையிலிருந்த அல் அன்பார் என்ற இடத்தில் தலைநகரை அமைத்தார். அவருக்குப் பின் வந்த அவரது சகோதரர் அல்மன்சூர் தலைநகர் அமைக்கப் பல இடங்களை ஆய்வு மேற்கொண்டபின் பாபிலோனியர்களின்  பழமை நகரமான 'இறைவனின் தோட்டம்' என்று பாரசீக மொழியில் பொருள்தரும் பக்-தா-து என்றழைக்கப்பட்ட இடத்தை தெரிவு செய்தார். மந்திரியாய் பணிபுரிந்த காலித் பின் பர்மக் என்ற பாரசீகரின் ஆலோசனைப்படி அடிக்கல் நட்டுவதற்கான இடமும், நேரமும் தெரிவு செய்ய  நவ்பக் என்ற பாரசீகரும்,  மஷல்லா பின் அதரி என்ற பாரசீக யூத சோதிடரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடைய ஆலோசனைப்படி கலிஃபா அல் மன்சூர் அவர்களால் தலைநகருக்கான அடிக்கல் கிபி. 762 இறுதியில் நாட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் அது ஒரு வணிக நகரமாக உருவாகியது. கூஃபா, பஸரா, மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ளவர்கள் இங்கு குடியேறினர்.

இஸ்லாமிய உலகில் இது ஒரு சிறந்த தலைநகராக வேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருந்தார். அறிஞர்கள், குர்ஆன் விற்பன்னர்கள், ஹதீஸ் நிபுனர்கள், இலக்கிய மேதைகள், சொற்பொழிவாளர்கள் என பல்வேறு கல்வியாளர்கள் பஸரா மற்றும் கூஃபாவிலிருந்து  வரவழைக்கப்பட்டு குர்ஆன், ஹதீஸ், மற்றும் கலாச்சார அறிவுகள் போதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் சில பழமைவாதிகள், இன உணர்வு கொண்டவர்கள் எதிர்க்கவும் செய்தனர்.

 அப்பாஸிய புரட்சியில்  பாரசீகர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தனர். பின்னர் அவர்கள் மேற்கே குடியேறி ஆட்சி பொறுப்பில் பங்கேற்றனர்.  அவர்களில் பர்மகி குடும்பத்தைச் சேர்ந்த காலித் பின் பர்மக் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார், பின்னர் மெஸபடோமியாவின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரது மகன் யஹ்யா, கலிஃபா மஹ்திக்கு (775-85) நம்பிக்கைக்குரியவராகவும், அர்மேனியாவின் கவர்னராகவும் இருந்தார்.

பர்மிகிட் இனம் கிரேக்க அறிவில் அதிக ஆர்வம் கொண்டிருந்தது ஒருபக்கம் இருந்தாலும் நெஸ்தோரியர்கள் கிரேக்க ஞானத்தில் சிறந்து விளங்கினர். கலிஃபா மன்சூரின் இறுதி காலத்தில் ஜுந்திஷாப்பூரிலிருந்து ஜிர்ஜிஸ் பின் புக்தியிஷு என்ற நெஸ்தோரிய மருத்துவர் வரவழைக்கப்பட்டு பின் அரசு வைத்தியராக இருந்தார். இது அப்பாசியர்களிடம் கிரேக்க அறிவு புக ஒரு காரணமாக இருந்தது.

ஹாரூன் அல் ரஷீத் ( 786-809)

762ல் பாக்தாத் நிறுவப்பட்ட பிறகு 786ல் ஹாரூன் அல் ரஷீத் பதவி ஏற்றார். யஹ்யாவிடம் பயின்ற கல்வி பாரசீக முறையில் அமைந்திருந்ததால் அவர் பாரசீக சிந்தனை உடையவராக இருந்தார். பதவி ஏற்றபின் யஹ்யாவுக்கு பிரதமர் பொறுப்பையும் அனைத்து அதிகாரங்களையும் வழங்கினார். யஹ்யாவின் மகன்களில் ஒருவரான ஃபஜல் குரஸானிலும் பின்னர் எகிப்திலும் கவர்னராக நியமிக்கப்பட்டார். மற்றொரு மகன் ஜாஃபர் தந்தைக்குப் பின் அவரது பதவியை வகித்தார். அன்றைய காலகட்டத்தில் செல்வத்திலும், அதிகாரத்திலும் உச்சத்திலிருந்த யஹ்யா 806ல் சிறையில் மரணமடைந்தார் என்ற தகவல் மட்டுமே கிடைக்கிறது காரணத்திற்கான தெளிவு இல்லை.

ஹாரூன் அல் ரஷீதின் பங்கு
ஹாரூன் ரஷீத் சிறந்த ஆட்சியாளராக மட்டும் இருக்கவில்லை, அறிவியலிலும் இலக்கியத்திலும் பேரார்வம் கொண்டிருந்தார். சிறந்த அறிவாளிகளை ஊக்குவிக்கவும் செய்தார். அறிஞர்களை அனுப்பி ரோமப் பேரரசிலிருந்து கிரேக்க நூல்களை வாங்கிவரச் செய்து அவற்றை மொழிபெயர்க்கச் செய்தார். ஜுந்திஷாப்பூர் மருத்துவர்களுக்கு சிரியாக் மொழியில் வல்லுனர்களாக இருந்தமையால் மருத்துவ நூல்கள் ஆரம்பத்தில் சிரியாக்கில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. மார்க்கம், அறிவியல், கலாச்சாரம், கலை, இசை முதலான அறிவுகள் மலரத் தொடங்கின. சிந்துபாத், அலிபாபாவும் 40 திருடர்களும், அலாவுதீனும் அற்புதவிளக்கும் அடங்கிய ஆயிரத்தோர் இரவு  கதைகளும் இவர்காலத்தில் எழுதப்பட்டது.

                     
அறிவின் மலர்ச்சி  

அறிவின் பயணத்துக்கு நூலகம் தேவைப்பட்டது. அதன் காரணமாக  பைத் அல் ஹிக்மா என்ற பெயரில் நூலகம் ஹாரூன் ரஷீது காலத்தில் தொடங்கப்பட்டாலும் அவர் மகன் கலிஃபா மாமூன் (813-833) காலத்தில் முழு வேகத்தில் செயல்படத் தொடங்கியது. (பைத் அல் ஹிக்மா கலிஃபா மாஃமூனால் நிறுவப்பட்டதாக சிலரின் கூற்று) பாக்தாதில் நிறுவப்பட்ட பைத் அல் ஹிக்மா 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டுவரை பல அறிஞர்களை உருவாக்கியது, பல்வேறு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன, பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள், புதிய கொள்கைகள் வெளிவரத்தொடங்கின.

அரிஸ்டாட்டிலிய தத்துவம் சிரியாக்கில் மொழியாக்கப்பட்டிருந்தது. ஹாரூன் அல் ரஷீதின் மரணத்திற்கு சில காலத்துக்குப் பின்னரே அறிஞர்களின் கடும் முயற்சியால் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. கணிதமும், வானவியலும் கிரேக்க மொழியிலிருந்து நேரடியாக அரபிக்கு கொண்டுவரப்பட்டதாக அறியமுடிகிறது. சில காலத்துக்கு முன்பே 'சிந்துஹிந்த்' என்ற இந்திய ஆய்விலிருந்து வானவியலுடன் சேர்ந்த கணிதமும் அரபிக்கு வந்திருந்தது. ஒருவேலை இது பார்ஸியிலிருந்துகூட வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை இப்றாஹிம் அல் ஃபஜரி மற்றும் யாக்கூப் பின் தாரிக்  என்ற இரு அறிஞர்களால் அரபிக்கு கொண்டுவரப்பட்டது. இப்றாஹிம் அல் ஃபஜரி வான்வெளிஇயல், நட்சத்திரம், சோதிடம் ஆகியவைப் பற்றிய ஆய்வுக்  கவிதைகளும் அதன் பயனால் கலிஃபா மன்சூரின் நட்பும் குறிப்பிடத்தக்கது என்கிறார் அவரது நண்பர் மசூதி. Astrolabe உருவாக்கிய  முதல் இஸ்லாமியர் என்று மேலும் குறிப்பிடுகிறார். அவரது மகன் முஹம்மது இப்னு இப்றாஹிம் அல் ஃபஜரி, தானும் மொழிபெயர்ப்பு செய்ததுடன் தந்தைக்கும் உதவியாக இருந்திருக்கிறார். ஆனால் அதன் விவரம் ஒன்றும் கிடைக்கவில்லை

யாக்கூப் பின் தாரிக் தலைச்சிறந்த கணிதவியலார். ஆர்கிமிடிஸ், வட்டத்தை 96 அலகுகளாகப் பிரித்திருந்ததைப் பின்பற்றி கணித அட்டவணையும் sphere, arc பற்றி ஆய்வை வெளியிட்டார். சிந்த்ஹிந்த், கலிஃபா மன்சூர் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது  ஐயப்பாடுள்ள செய்தி, ஆனால் ஐம்பதாண்டுகளுக்குப் பின் அதனை ஆதாரமாக வைத்து கணித அட்டவணையை உருவாக்கிய  அல் குவாரிஜிமி நன்றாக புரிந்துவைத்திருந்தார் என்ற செய்தியும் கிடைக்கிறது. என்றாலும் கலிஃபா மஃமூன் காலத்தில் அறிஞர்கள் குழு மொழிபெயர்ப்பில் ஈடுபட்டனர் என்பது மறுக்கமுடியாத செய்தி.

அறிவின் வளர்ச்சியில் பைத் அல் ஹிக்மா வின் பங்கு

கலிஃபா ஹாரூன் அல் ரஷீதினால் தொடங்கப்பட்டாலும் அவருக்குப் பின் பட்டத்துக்கு வந்த கலிஃபா மாஃமூன் பின் ரஷீது காலத்தில் பொலிவுப்பெற்றது. 9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை அதன் பங்களிப்பு மகத்தானது. இஸ்லாமிய அறிஞர்களுடன் பாரசீகர்கள், கிறுஸ்துவர்கள், நெஸ்தோரியர்கள் என பல்வேறு தரப்பு அறிஞர்கள் பணியாற்றினர். அறிவியல் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், வரலாற்றாசிரியர், வேத விற்பன்னர், எழுத்தர்(scribes), நகல் எடுப்பவர் என பல அறிஞர்கள் பணிபுரிந்தனர். கூடவே பல்வேறு பாடங்கள், கையெழுத்துப் பிரதிகள் பற்றிய கலந்தாய்வுகளும் நடந்தேறின.

இது ஆய்வு சாலையாக மட்டுமில்லாமல், கல்விக்கூடமாகவும், சிறந்த நூலகமாகவும் விளங்கியது. கலிஃபா மாமூன் காலத்தில் ஈடற்ற கல்வி மையமாக விளங்கியது. கணிதம், வான்இயல், மருத்துவம், வேதியல், ரசவாதம்(alchemy), விலங்கியல், புவிஇயல், வரைபடஇயல் (cartography), இந்திய ஓவியக்கலை, இன்னும் பல்வேறு அறிவியல் துறைகள் ஆய்வு செய்யப்பட்டன.     

பைத் அல் ஹிக்மாவுக்கு தினமும் வருவதும் அங்குள்ள அறிஞர்கள் குழுவுடன் கலந்துரையாடுவது அவர்களின் பணி எவ்வகையில் நடக்கிறது என்பதை கேட்டறிவதும் கலிஃபா மஃமூனின் தினசரி பணியாக இருந்தது. அறிவின் வளர்ச்சிக்கு தன்னையே தியாகம் செய்தார் என்றுகூட சொல்லலாம். சிசிலியில் பெரிய நூலகம் இருப்பதை கேள்வியுற்ற கலிஃபா, சிசிலி மன்னருக்கு ஓலை அனுப்பி நூல்களின் விபரம் அறிந்தார். பைசாந்திய பேரரசருக்கு தகவல் அனுப்பி அங்கிருக்கும் நூல்களில் சிலவற்றை மொழிபெயர்ப்பதற்காக அறிஞர்கள் சிலரை அனுப்ப அனுமதி கோறியிருந்தார். சாதகமான பதில் கிடைத்ததும் இங்கிருந்து ஹஜ்ஜாஜ் இப்னு மத்தார், இப்னு அல் பத்ரீக், சஹல் பின் ஹாரூன், யஹுன்னா பின் மஸாவிஹ், ஹுனைன் பின் இஸ்ஹாக் ஆகிய அறிஞர்கள் குழுவை அனுப்பி அங்கிருந்த கிரேக்க நூல்களை மொழிபெயர்த்து கொண்டுவரச் செய்தார். கொராஸானிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட  ஒட்டகங்களில் நூல்களை தருவித்தார்.

கலிஃபா மாஃமூன் அரபியிலும் பார்சியிலும் (தாயார் பாரசீகர், குரஸானை சேர்ந்தவர்) புலமைப் பெற்றிருந்ததால் அறிஞர்கள் மத்தியில் பல்வேறு பிரிவுகளில் விவாதங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தினார். முந்தைய கலிஃபாக்கள் சேகரித்திருந்த நூல்களை அவரவர்கள் பெயரில் தனித்தனி நூலகமாகப் பிரித்துவைத்திருந்தார்.

பாரசீகப் புலவரும் சோதிட நிபுணருமான சஹல் பின் ஹாரூன் என்பவர் பைத் அல் ஹிக்மாவின் தலமை நூலகத்தராக இருந்தார். ஹுனைன் பின் இஸ்ஹாக் மொழி பெயர்ப்பு (திவான் அல் தர்ஜுமா) பிரிவின் தலைவராக இருந்தார். அல் குவாரிஜ்மி, ஜரிர் பின் அல் தாப்ரி, மஸூதி, அபுமூஸா சகோதர்கள், தாபித் பின் குர்றா என பல்வேறு  துறை சார்ந்த அறிஞர்கள் குழு அங்கு பணியாற்றியது. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் உலகின் மிகப் பெரிய புத்தகக் களஞ்சியமாக பைத் அல் ஹிக்மா விளங்கியது. தவிர கிரேக்க ரோமானிய அறிஞர்களின் நூல்கள் நேரடியாக அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஏற்கனவே சிரியாக், ஹிப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட  நூல்களும் அரபிக்கு கொண்டுவரப்பட்டன. இந்திய தத்துவங்களும் கணிதமும் சமஸ்கிருதத்திலிருந்து அரபிக்கு வந்தன. கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் அங்கு தங்கி கற்கவும், ஆய்வு செய்யவும், நூல்களை நகல் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர். 

Equlid ன் எலிமெண்ட்டும், தாலமியின் அல்மாகெஸ்ட்டும் (Megále Sýntaxis) நேரடியாக அரபிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. கி பி. 803ல் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் பின் மத்தார்   அரபியில் மொழிபெயர்த்தார். இன்றைய உஸ்பெகிஸ்தானில் பிறந்து இளம் வயதிலேயே பாக்தாதுக்குப் புலம் பெயர்ந்த அல் குவாரிஜ்மி வானவியலிலும், புவிஇயலிலும் சிறந்து விளங்கினாலும் கணிதத் துறையில் ஆற்றிய பங்கு மிக மகத்தானது. பல பிரிவுகள் இவரது அடிப்படைக் கொள்கை (basic concept) மற்ற கணிதவியல் நிபுணர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. கணிதத்தைப் பொறுத்தவரை சில இடங்களில் யூக்கலிட்/ தாலமியின் கொள்கை ஏற்புடையதாக இல்லாததால் இந்திய கணித முறையை இவர் பின்பற்றினார். ஆரியபட்டாவினால் கண்டுபிடிக்கப்பட்ட "0" பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ((‘The number used throughout the world today as called “Arabic” because they were taken by the Arabs from ancient Indian Sanskrit developed into system and then passed on to the rest of the world.’)) அல்ஜிப்ராவும், அலாகிரிதமும் இவர் பெயரை தன்னுள் அடக்கி இன்றும் பறை சாற்றிக்கொண்டிருக்கின்றன. கணிதத்துறைக்கு அளித்த  ‘அல் கித்தாப் அல் முக்தசர் ஃபி ஹிசாப் அல் ஜபர் வல் முக்காப்லா’ (The Compendius Book on Calculation and Balancing);  கித்தாப் அல் ஜமா வல் தஃப்ரீக் பி ஹிஸாப் அல் ஹிந்த் (“The Book of Addition and Subtraction According to the Hindu Calculation”); zij al-Sindhind (ﺰﻳﺝ “astronomical tables of Sind and Hind”) ஆகியவை நூல்கள் பிரசித்தி வாய்ந்தவை.  பனு மூஸா சகோதரர்களுடன் சேர்ந்து பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பனு மூஸா சகோதரர்கள் அடங்கிய மூத்த கணித அறிஞர்கள் குழுவின் கடும் முயற்சிகளின் மூலம் கிடைத்த பலன் இஸ்லாமிய நாகரிகத்தின் எடுத்துக்காட்டாக இருந்தது. அவர்களின் புகழ் வாய்ந்த ஆய்வான 'கித்தாப் மஃரிஃபா மஸாஹத் அல் அஷ்கால் அல் பஸிதா வல் ஃகுரியா' (The Book of Measurement of Plane and Spherical Figures) என்ற நூல் வருங்கால கணிதத்துறைக்கு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. கலிஃபா மாஃமூனின் வேண்டுகோளுக்கிணங்க மெஸபடோமியாவின் பாலைப் பகுதியை ஆய்வு செய்வதற்காக நில நேர்கோட்டின் அலகை (degree of earth latitude) கண்டுபிடித்ததும், பகுதாதில் காணப்படும் சூரிய, சந்திர நிலைகளை ஆய்வு செய்து ஒரு வருடத்துக்கு 365 நாள் 6 மணி நேரம் என்பதை கண்டறிந்து சாற்றிய பெருமை பனு மூஸா சகோதரர்களை சாரும்.

அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் தாபித் பின் குர்றா ஹெர்ரானில் வாழ்ந்த சாபியின் பிரிவைச் சேர்ந்த இவ்வறிஞரை பைத் அல் ஹிக்மா மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பனு மூஸா சகோதரர்களின் ஒருவரான முஹம்மது பின் மூஸாவை சாரும். கிரேக்க, சிரியாக், அரபி, பார்ஸி மொழிகளில் தேர்ச்சிப் பெற்றிருந்த இவர் ஹுனைன் பின் இஸ்ஹாக்குடன் சேர்ந்து பல நூல்களை அரபிக்கு கொண்டுவந்தார். கேலனுடைய 22 நூல்களை சிரியாக்கில் மொழியிலும் 14 ஆய்வுகளை அரபியிலும் மொழிபெயர்த்தார். சுமார் நூற்றுக்கு மேலான நூல்கள் எழுதியுள்ளதாக இப்னு அல் நதீம் கூறுகிறார். கணிதத்துறையில் இவரது பங்கு மிக குறிப்பிடத்தக்கது. பிதகோரஸ், யுகலிட்ஸுக்குப் பிறகு கணிதவியலின் கண்டுபிடிப்புகள் இவர் வெகுவாக ஆய்வு செய்தார்நேர்ம மெய் எண் (positive real number), ஒருங்கிணைந்த நுண்கணிதம்(integral calculus) கோள கோணவியல் கோட்பாடு (theorem in spherical trigonometry), பகுமுறை வரைகணிதம்(analytic geometry), non-Ecuclidean geometry என கணிதத்துறையிலும், வானவியலில் தாலமியின் முறையை சீரமைவு செய்ததோடு இயந்திரவியலின் நிலைப்பண்பை(static) உருவாக்கினார். ஒரு வருடத்தின் சூரிய நாள் 365 நாள் 6 மணித்துளி என்பதை பனுமூஸா சகோதரர்கள் வெளிப்படுத்தினார்கள் என்றால் அதே காலகட்டத்தில் வாழ்ந்த தாபித் பின் குர்றா 365 நாள், 6 மணி, 12 வினாடி (வித்தியாசம் 2வினாடி) என்று துல்லியமாக வெளிப்படுத்தினார்.

பைத் அல் ஹிக்மாவின் வளர்ச்சியோடு தன் பணியை கலிஃபா மாஃமூன் நிறுத்திக் கொள்ளவில்லை. பாக்தாதில் ஷம்மாசியா என்ற பகுதியில் வான் ஆய்வகம் ஒன்றை நிறுவினார். கலிஃபாவின் பிரத்தியேக வான்வியல் அறிஞரான சானாத் பின் அலி யஹூதி என்பவரை அதன் தலமைப் பொறுப்பாளராக நியமணம் செய்து யஹ்யா பின் அபி மன்சூர் மற்றும் காலித் பின் அப்தில் மலக் என்பார்களை உதவியாளராக நியமித்தார். விளைவாக சானாதின் 'ஜீஜ் - Zeej' (Table of calculated positions of the celestial object at regular intervals throughout a period) என்ற நூல் உலகுக்கு கிடைக்கப்பெற்றது.

கலிஃபா மாஃமூனுக்குப் பிறகு வந்த அவரது சகோதரர் அல் முஃதஸிம் (r.833-842) அவரது மகன் அல்வத்திக் (r.842-847) காலத்தில் பைத் அல் ஹிக்மா பொலிவுபெற்றது. பிறகு வந்த கலிஃபா அல் முத்தவக்கில் (r.847-861) அறிவியல், தத்துவங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கிரேக்க தத்துவம் இஸ்லாத்திற்கு புறம்பானது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். மாறாக குர்ஆன், ஹதீஸுக்கு விளக்கம் அளிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார்.c

கலிஃபா மஃமூன் கொரஸானில் பெரிய கல்லூரியை நிறுவி பல பாகங்களிலிருந்தும் சிறந்த கல்வியாளர்களை பணியில் அமர்த்தினார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த சகோதரர் மகன் கலிஃபா முத்தவக்கில் தொடர்ந்து அப்பணியை செய்துவந்தார். கிபி. 995ல் எகிப்தில் ஆட்சிபுரிந்த ஃபாத்திமியக் கலிஃபா அல் ஹக்கிம் கெய்ரோவில் பைத் அல் ஹிக்மாவைப் போல் மஜ்லிஸ் அல் ஹிக்மா என்ற பெயரில் ஓர் அறிவாலயத்தைத் தொடங்கினார். அங்கு மருத்துவக் கல்லூரி மற்றும் பல பிரிவுகளில் கல்லூரி, வான் ஆய்வகம், நூலகம் இவைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மற்றொரு கலிஃபாவான அஜீஜ் பில்லாஹ் இன்னும் பல கல்விச்சாலைகளை நிறுவி அதன் பணியாளர்களுக்கு மட்டுமல்ல அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஊதியம் கொடுத்தார் என்கிறார் மவ்லானா ஷிப்லி நுஃமானி.


பாரசீகத்தை ஆண்டுக்கொண்டிருந்த துருக்கி சல்ஜிக் வம்ச சுல்தானான மாலிக் ஷா சல்ஜிக்கிடம் பிரதமராக இருந்த நிஜாமுல் முல்க் தூஸி (இயற்பெயர் அபு அலி ஹசன் இப்னு அலி இப்னு இஸ்ஹாக் அல் தூஸி) கிபி. 1066ல் பாக்தாதில் உயர்கல்விக்காக நிஜாமியா மதரஸாவை (பல்கலைக்கழகம்) நிறுவினார். அங்கு திறமைவாய்ந்த ஆசிரியர் குழுக்களும், பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு காண்பிக்கப்படாமல் எல்லா தரப்பு மாணவர்களுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட்டது. ஏழை மாணவர்களின் செலவுகளை மதரஸாவே ஏற்றுக்கொண்டது. அபு இஸ்ஹாக் சிராஜி முதல் முதல்வராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1091 முதல் 95வரை இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் முதல்வராக இருந்தார். இமாம் அவர்கள் மதரஸாவை விட்டு வெளிவரும்போது 3000  மாணவர்கள் பயின்று கொண்டிருந்தனர். இமாம் அவர்களுக்குப் பிறகு முஹம்மது அல் சஹரஸ்தானியும் அவருக்குப் பின் சலாஹுதீன் அய்யூபியின்  வரலாற்றாசிரியரான பஹாவுத்தீனும் முதல்வர்களாக இருந்தனர். பாரசீகக் கவிஞர் சஅதி அவர்கள் இக்கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சார்புள்ள மற்ற கல்வி நிலையங்கள் நிஷாப்பூர், அமுல், மோசூல், ஹெராத், திமிஷ்க், பஸராவில் நிறுவப்பட்டது. அவை தலைசிறந்த கல்வியாளர்களை உருவாக்கின.  பதினொன்றாம் நூற்றாண்டில் இன்றைய ஈரான் முதல் சிரியா வரை கல்வி பரவி நின்றது. இதன் அனைத்து பெருமையும் நிஜாமுல் முல்க்கையே சாரும். மவ்லானா ஷிப்லி நுஃமனி கூற்றுபடி இஸ்லாமிய உலகில் இதுவே உயர்கல்விக்கான முதல் பல்கலைக்கழகமாகும். அதன் பின் அப்பாஸிய கலிஃபா முஸ்தன்சிர் தன் பெயரில் பாக்தாதின் டைக்ரிஸ் நதியின் இடது கரையில் முஸ்தன்சிரியாபல்கலைக்கழகத்தை நிறுவினார். பாக்தாதில் கல்வியின் வளர்ச்சி பதிமூன்றாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை நீடித்திருந்தது.

(இன்னும் வரும்......)

***


நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com