Sunday, April 9, 2017

பூரானும் ஆமையும்

'செய்வதற்கு எதுவும் இல்லாதவன் தீங்குகளைச் செய்ய ஆரம்பிப்பான்' என்று சொல்லும் யொஸ்டைன் கார்டெர் எழுதிய 'சோஃபியின் உலகம்' நூலிலிருந்து...!
*
தன்னுடைய நூறு கால்களாலும் அழகாக நடனமாடும் பூரான் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அந்தப் பூரான் நடனமாடும்போதெல்லாம் காட்டிலிருந்த எல்லா விலங்குகளும் திரண்டு வந்து அதனுடைய நேர்த்தியான அசைவுகளைப் பார்த்து ரசித்தன. ஆனால், ஒரே ஒரு உயிரினம் மட்டும் பூரான் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு விரும்பவில்லை - அது ஒரு ஆமை.

பூரான் நடனமாடுவதை எப்படி நிறுத்துவது என்று ஆமை யோசித்தது. அந்த நடனம் தனக்குப் பிடிக்கவில்லை என்று அதனால் சொல்ல முடியாது. பூரானைவிடத் தான் நன்றாக நடனமாட முடியும் என்றும் அதனால் சொல்ல முடியாது; ஏனென்றால், அது நிச்சயமாகப் பொய்யாகத்தான் இருக்கும். எனவே அது ஒரு கொடூரமான திட்டத்தை வகுத்தது.

அது உட்கார்ந்து பூரானுக்குக் கடிதம் ஒன்றை எழுதியது: ஓ, ஈடு இணையற்ற பூரானே, உன்னுடைய நேர்த்தியான நடனத்துக்கு நான் ஒரு தீவிர ரசிகன். நீ நடனமாடும்போது அசைவுகளை எப்படிக் கையாள்கிறாய் என்பது எனக்குத் தெரிய வேண்டும். நீ முதலில் உன்னுடைய இடதுபுறக் கால் எண் 28ஐத் தூக்கியபிறகு வலதுபுறக் கால் எண் 39ஐத் தூக்குகிறாஅயா? அல்லது, உன்னுடைய இடதுபுறக் கால் எண் 44ஐத் தூக்குவதற்கு முன்பாக உன்னுடைய வலதுபுறக் கால் எண் 17ஐத் தூக்குவதன் மூலம் நடனத்தை ஆரம்பிக்கிறாயா? மூச்சுவிட மறந்து உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். உண்மையுடன் , ஆமை.

பூரான் கடிதத்தைப் படித்தபிறகு, தான் நடனமாடும்போது உண்மையில் என்ன செய்தோம் என்று உடனடியாக யோசிக்க ஆரம்பித்தது.  எந்தக் காலை அது முதலில் தூக்கியது? அடுத்தது எந்தக் கால்? கடைசியில் என்ன நடந்தது? 

அதற்குப் பிறகு பூரான் ஒருபோதும் நடனமாடவில்லை.

பகுத்தறிவின் ஆராய்ச்சி கற்பனையின் கழுத்தை நெரிக்கும்போது அதுதான் நடக்கும்.
----
நன்றி : காலச்சுவடு, ஆர். சிவகுமார் , சென்ஷி
Dancing centipede and the jealous Tortoise. - story from Jostein Gaarder’s novel, Sophie’s World : https://justalchemy.com/2012/07/16/the-dancing-centipede-and-the-jealous-tortoise/
----
இந்தப் பிரபஞ்சம், இந்தப் பூமி, இந்த வாழ்க்கை எல்லாம் எப்படி வந்து சேர்ந்தன என்ற கேள்வி, போன ஒலிம்பிக் போட்டியில் யார்  அதிகத் தங்கப் பதக்கங்களை வென்றார்கள் என்ற கேள்வியைவிடப் பெரியதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒன்று. - Jostein Gaarder , சோஃபியின் உலகம் (p.30) :  

---
தொடர்புடைய சுட்டி :