Thursday, August 1, 2013

குளச்சல் மு. யூசுபின் உரை (வாசிக்காமல் விட்டது!)

அன்புள்ள தாஜ்,

உள்ளூர் விருது பெறும் விழாவில் வாசிப்பதற்காக இந்தக் கட்டுரையைத் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால்,அங்கே கூடியிருந்தவர்களில் பலரும்  இதை உள்வாங்குகிற அளவுக்கு ஆரோக்கியமான மனநிலையில் இருப்பதாக எனக்குப் படவில்லை. பெருந்தனக்காரர்களின் கூட்டம் அது. நான் மிக எளிமையாகக் காட்சியளிப்பதாகவும் சிலாகித்தார்கள்.  இது, இயல்பான தோற்றம் என்பதைக் கூட அவர்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. கல்வித்தகுதியைப் பற்றியெல்லாம் கூட விசாரித்தார்கள். இந்த அப்பாவிப் பெருமக்களை ஏமாற்ற எனக்கு மனமில்லை என்பதாலும்தான் கட்டுரையை வாசிக்காமல் விட்டேன். (அவார்ட் தொகை பற்றிய கட்டுரை பிறகு எப்போதாவது....)


 குளச்சல் மு. யூசுப் 

***

அனைவருக்கும் வணக்கம்.

மகாகவி உள்ளூர் பரமேஸ்வரஐயர் நினைவு விருதுக்கு என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. திருவாளர்கள்: பத்மநாபன்தம்பி, திருவல்லம் பாஸ்கரன்நாயர், ரமேஷன்நாயர், கே.எம். ஜார்ஜ், நீலபத்மநாபன், மாதவன்,
ஐயப்பப்பணிக்கர், சிற்பி பாலசுப்ரமணியம், பேராசிரியர் நாச்சிமுத்து, நகுலன், கவிஞர் சுகுமாரன் போன்ற படைப்பாளிகள், கல்வியாளர்கள், இப்போது, பேராசிரியர் பாலமோகன்தம்பி உட்பட பலர் பெற்று பெருமைப் படுத்திய விருதால் நான் இன்று பெருமை பெற்றிருக்கிறேன்.

இது வழக்கமாகச் சொல்லும் தன்னடக்கம் அல்ல!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், திருவனந்தபுரத்தில் நான் வாழ்ந்த  மிகக்குறுகிய காலத்தில், “அச்சாறுக் கச்சவடமும் ஐலண்ட் எக்ஸ்பிரஸும்” என்றொரு கதை எழுதினேன். இதன் பின்னணி, கேட்பவர்களுக்கு சுவாரஸ் யமாக இருக்கலாம். ஆனால், அதன் அப்போதைய அனுபவ நிலையை விவரிக்க எந்த எழுதுகோலாலும் இயலாது. இந்தக் கதையை எழுதிய பிறகு, பத்துக்கும் அதிகமான வீடுகள் மாறியிருக்கிறேன். ஆகவே, அந்தக் கதையும் தற்போது என்னிடமில்லை. காகிதக் கட்டுகளையும் புத்தகங்களையும் வீடு வீடாகச் சுமந்துத்திரிய இயலாதென்பதால், புத்தகங்களை மட்டும் வாசிப்பு ஆர்வமுள்ள நண்பர்களிடம் கொடுத்து விட்டு, எழுதியவற்றை சேர்த்து வைத்து, ஒரு தகப்பன் ஸ்தானத்தில் நின்று, எரியூட்டிவிடுவது வழக்கம். குலவழக்கப்படி, என்னுடைய படைப்புகள், அடக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கான, காணி நிலமோ இடங்ஙழி மண்ணோ சொந்தமாக இல்லை. ஆக, எனது எழுத்தில் சோகசுத்தி செய்துகொள்ளும் நோக்கமிருந்ததே தவிர பிரசுர ஆர்வம் இருக்கவில்லை.

வாசிப்பதிலும் எழுதுவதிலும் எந்த அளவுக்கு ஆர்வமிருந்ததோ அதேஅளவில் வெறுப்புமிருந்தது. ஒரு குடி நோயாளியின் அதே மனோபாவம். விடவும் முடியவில்லை; விடாமலும் முடியாது. குறிப்பிட்ட அந்தக் கதைக்கான தளம், சாட்சாத் அச்சாறுக் கச்சவடம்தான். 1988 இல் திருவனந்தபுரம், அட்டக்குளங் கரையில் நான் ஒரு சிறு பலசரக்குக் கடை விரித்தேன். கொள்வாரும் இருந்தனர். ஆனால், கடையைத் திறந்து, வேலையாளிடம் ஒப்படைத்து விட்டு நான் ஏதாவது வாசிப்புசாலைக்குப் போய்விடுவேன். தமிழின் ஓயாத வாசகனாகிய நான், மலையாள படைப்புகள் பரிச்சயமானதும் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் நுழைந்தது போலானேன். மலையாள மொழியை நான் எப்படிக் கற்றுக்கொண்டேன் என்று கேட்டால், தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. தமிழ் மொழியை எப்படிக் கற்றேனோ அதுபோல்தான் என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஒன்பதே மாதத்தில் கடை திவாலானது. என்னுடைய சேமிப்பும் மனைவியின் நகைகளுமாக நயாபைசா மிச்சமில்லாமல் ஆரம்பித்த கடை அது. பிழைக்க வேறு வழியுமில்லை. தைக்காடு, கன்னேட்டு முக்குப் பகுதிகளில் முட்டை வியாபாரியாக பல நாட்களும் பீமாபள்ளி பகுதியில் துணி வியாபாரியாக பல நாட்களும் திருவல்லம் பகுதிகளில் தீப்பட்டி வியாபாரியாக பல நாட்களும் எதை யெல்லாமோ செய்து பார்த்து விட்டு கடைசியில் ஊறுகாய் வியாபாரம் ஆரம்பித்தேன். சைக்கிளில் ஒரு பெட்டியைக் கட்டி வைத்து ஒவ்வொரு கடை யாகச் செல்ல வேண்டும். அதிகமும் கரமன, கிள்ளிப்பாலம் பகுதிகள்தான்.

இதே தமிழ்ச்சங்க வாசலில் பலமுறை நின்று இளைப்பாறியிருக்கிறேன். சிறு கடைகளில்தான் அட்டை ஊறுகாய் விற்பனையாகும். அப்போது, ஷாப்பிங் மால்களெல்லாம் இல்லை. கடைகள், ஒன்று அதல பாதாளத்திலும் மற்றொன்று பூமியின் உச்சியிலும் இருக்கும். சைக்கிள் மிதித்துச் செல்வதற் கான உடல்வலுவில்லை. இரண்டு நாட்கள் அலைந்து திரிந்தும் சைக்கிளுக்கு வாடகை கொடுப்பதற்குக்கூட விற்பனையாகவில்லை. ஏதாவதொன்று கை
கொடுக்கவில்லையென்றால் விட்டு விடுதலையாகி விடும் குணம் ஏற்கனவே வாய்த்திருந்தது. ரூமில் போய் உட்கார்ந்து யோசித்தேன். யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. முடிவு செய்தேன். ஊறுகாய் வியாபாரத்தையும் தலை முழுகி விட வேண்டியதுதான். ஊறுகாய் அட்டைகளின் லேபிள்களைக் கிழித் தெறிந்து விட்டு, பண்டலாகக் கட்டி, சைக்கிளில் வைத்து, தம்பானூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்றேன். ஏதோ ஒரு டிரெயின் நின்றது. அதில் தூக்கி வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விட்டேன். அது ஐலண்ட் எக்ஸ்பிரஸ்தானா என்று இப்போது சந்தேகம் இருக்கிறது. திரும்பி ரூமுக்கு வந்து எழுதிய கதைதான் ”அச்சாறுக் கச்சவடமும் ஐலண்ட் எக்ஸ்பிரஸும்.” நேராக திரும்பி வந்து, இயந்திரத்தனமாக எழுதி விடுகிற அனுபவமல்ல அது. ஒருவாறாக மனதைத் தேற்றி விட்டு பிறகு எழுதினேன். அனுபவங்களுக்காக  வாழ்ந்தால் அதை மிக எளிதில் படைப்பாக மாற்றி விட இயலும். தவிர்க்கவே இயலாத அவல வாழ்க்கையை எழுதுவதன் மூலம் மீண்டும் வாழ்ந்து பார்ப்பதென்பது மிகப் பெரிய மனத்தொந்தரவான விஷயம். அனுபவம் சார்ந்த படைப்பிலக்கியம் மனதுக்குப் பிடித்தமானதாக இருந்தாலும் அது தரும் மனத்தொந்தரவு மிகச்சிரமமாகவும் இருந்தது. திருவனந்தபுரத்திலுள்ள எனது இந்த அனுபவங்கள் மொத்தம் ஒன்றரை வருட காலம் மட்டும்தான்.

இப்படியான, விளிம்புநிலை வாழ்க்கையிலிருந்து இலக்கியப் பாதையில் அதுவும் மொழிபெயர்ப்பை நோக்கித் திரும்பியது, எதிர்பாராத நிகழ்வோ திட்டமிட்ட நிகழ்வோ அல்ல. வாழ்க்கை அவலங்களினூடே எழுத்தும் வாசிப்பும் தொடர்ந்துகொண்டிருந்தது. தமிழில் வந்த மொழிபெயர்ப்பு நூல்களை வாசிப்பதும் வாசிப்புக்குத் தடங்கலாக இருக்கும் இடங்களில் திருத்தங்கள் செய்துபார்ப்பதும் வழக்கமாக இருந்தது.  மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளின் மொழியாக்கங்களைக்கூட இப்படி திருத்தம் செய்து உள்ளூர மகிழ்ந் திருக்கிறேன். இந்த மகிழ்ச்சி, மனித இயல்புதான். இப்படியான அனுபவங் களை வைத்து, சில மொழிபெயர்ப்புகளையும் செய்து பார்த்தேன். வைக்கம் முகம்மதுபஷீரின் பால்யகால சகி, பாத்தும்மாடெ ஆடு, உப்புப்பாக்கொரான உண்டாயிருந்நு, சப்தங்ஙள், மதிலுகள்போன்ற மிகமுக்கியப் படைப்புகளைப் பலமுறை மொழிபெயர்த்திருக்கிறேன். புதிதாக வீடு மாறும்போது பழையன கழிந்து விடும். இவ்வளவு சாதனங்களினிடையே கொஞ்சம் பேப்பர் இருந்தால் என்னவாகிவிடப்போகிறது என்று சொல்லி தடுக்கும் மனைவியையும் மீறி. அப்போதெல்லாம், பதிப்பகங்களோ கல்வியாளர்களோ படைப்பாளிகளோ யாருமே என் நட்பு வளையத்தில் கிடையாது. இப்படியாக நான் மொழியாக்கம் செய்ததுதான் ஸ்மாரஹ ஸிலகள். இது புத்தகமாக வெளிவந்ததுகூட எதிர் பாராத நிகழ்வுதான். இப்படியாக மொழிபெயர்ப்புப் பக்கம் வந்தேன்.

திரைப்படங்களின் சிடி வடிவமும், எழுத முடியாமல் தோள் பட்டையில்  வலியும் ஏககாலத்தில் வந்தன. கடன் சம்பந்தமான முன்னனுபவங்கள் பல இருந்தும், துணிந்து கடனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். மெல்ல விழுந்தெழுந்து சுயமாகவே, கம்ப்யூட்டர் படித்தேன். பழைய மலையாளத் திரைப் படங்களை கம்ப்யூட்டரில் பார்க்க  ஆரம்பித்தேன். ஐம்பது அறுபதுகளில் வெளிவந்த மலையாளத் திரைப்படப் பாடல்கள் என்னுள் மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தூண்டின.

அப்படியே தமிழ் லிபியில் எழுதினால் எந்தத் தடையுமில்லாமல் தமிழர்களால் புரிந்து கொள்ள இயலும் விதமாக அந்தப்  பாடல்கள் அமைந்திருந்தன. ஒரே மொழியை இரண்டு விதமாக உச்சரிப்பது போல் தோன்றியது. இந்த உற்சாகத்தில் தமிழிலிருந்து மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சங்க இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். பண்டித மொழிக்கும் வெகுஜனங்களின் புரிதலுக்குமிடையே  இருக்கும் மிகப்பெரிய இடைவெளிகள் தெரிய வந்தன.

மலையாளத்திற்கும் தமிழுக்கும் பொதுவானதும் வழக்கிலுள்ளதுமான சொற்களைக்கூட தவிர்த்து விட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தியிருப்பதாக உணர்ந்தேன். இயல்பாகவே இது, கவித்துவத்தை இல்லாமல் செய்திருந்தது.  இது குறித்த  போதாமை, சமஸ்கிருதக் கலப்பை குறைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை மலையாளத்தில் மொழியாக்கம் செய்ய என்னைத் தூண்டியது. இதற்கு வசதியாக, முதலில் சித்தர் பாடல்களை எடுத்துக்கொண்டேன்.

இதில் சிலவற்றை மொழியாக்கம் மலையாளிகளான நண்பர்களிடமும் உறவினர் களிடம் வாசிக்கக் கொடுத்தபோது அவர்களால் மிக எளிதாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சமஸ்கிருதம் கலந்த மலையாளத்தைச் சிரமத்துடன் வாசித்தவர்கள் இதை மிக எளிதாக வாசித்தார்கள். மலையாள நாவுகள் சமஸ்கிருதத்திற்கு வழங்க மறுக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. இப்படியாக, நாலடியாரை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன்.

இதை, பிழை திருத்தித் தருவதாகக் கேட்டு வாங்கிய ஒரு மலையாளி நண்பர், தன்னுடைய பெயரில் வெளியிட்டது தனிக்கதை.

அனுபவங்களின் வெளிச்சத்தில் ஒருவன், நல்ல படைப்பாளியாக வருவதை யாருமே மறுக்க மாட்டார்கள். ஆனால் வெறும் அனுபவ வெளிச்சத்தில் மொழிசார்ந்த சிந்தனைகள் உருவாவதை மொழியியல் ஆய்வாளர்களால் ஒருபோதும் ஏற்க இயலாது என்று நினைக்கிறேன். மொழியென்பது வெகு ஜனங்களுக்குரிய கருவி. ஆகவே, அனுபங்கள் சார்ந்த மொழியியல் சிந்தனை களை முன்வைத்து ஆய்வுகள் நிகழ்வதுதான் சரியாக இருக்க முடியுமென்பது என்னுடைய கருத்து.

இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும், குறிப்பாக, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மு. முத்துராமன்; செயலாளர் திரு. க. வானமாமலை; சிறப்புரையாளர் முனைவர் திரு. மா. நயினார்; நன்றியுரை வழங்கும் திரு. ஜி. மாணிக்கம் மற்றும் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விமர்சனங்கள் மூலம் என்னை மெருகேற்றிய  எழுத்தாளர் சி. சொக்கலிங்கம் அண்ணன், கவிஞர் எச்.ஜி. ரசூல் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தோழர்களையும் என்னுடைய முதல் நூல் உட்பட பெரும்பாலான நூல்களை வெளியிட்ட காலச்சுவடு நிறுவனத்தையும் நன்றியுடன் இந்நேரம் நினைவு கூர்கிறேன்.

நன்றி வணக்கம்.

***
நன்றி : குளச்சல் மு. யூசுப் ( http://www.facebook.com/KulachalMuYoosuf ) , தாஜ்
***

தொடர்புடையவை..



No comments:

Post a Comment