Sunday, February 5, 2012

பஷீரின் உண்மையும் பொய்யும் (கேள்வி பதில்)

’வயசு ஏற ஏற லூசுத்தனங்களும் கூடும். இன்றை இளைஞர்களுக்கு எங்களைப் போன்ற லூசுகள் அறவே பிடிக்காது. ’ என்று சொல்லிக்கொண்டே உலக மகா லூசுக்கு ஒரு மெயில் அனுப்பினால் அது என்ன செய்யும்? உடனே பதிவிடும்; அவ்வளவுதான்.

முதலில் வருவது ஹனிபாக்காவின் மெயில். ’பஷீரும் எழுத்தாளர், நாமளும் எழுத்தாளர் ; இதென்ன அநியாயம்டா!’ என்று கேட்கிறார். மிகவும் ரசித்தேன் - வாசகனாக. எழுத்தாளன் நான் என்று என்னைக்கு சொன்னேன் காக்கா? - ஆபிதீன்

***


என்ட தங்க மகன் ஆபிதீனுக்கு,

நீங்க நம்மட நாதர் நானிலம் போற்றும் வைக்கம் முஹம்மது பஷீரின் உண்மையும் பொய்யும் படித்ததுண்டா? அனார் மேடம் புத்தகச் சந்தையில் எனக்காக கொள்முதல் செய்த நூல்களில் அதுதான் அற்புதம், வைரம், வைடூரியம். அவரும் எழுத்தாளர், நாமளும் எழுத்தாளர் இதென்ன அநியாயம்டா.

அவர் பொன்னார் மேனி, நாம சக்களத்தி. அவரின் "பாத்திமாவுடைய ஆடும்", "இளம்பருவத்துத் தோழியும்" எங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது இரண்டு புத்தகங்களையும் எனது பதினேழு வயதில் படித்திருப்பேன்.

எங்கட ஊரைப் பற்றி எழுதியமாதிரித்தான் அன்றும் இருந்தது. ஐம்பது வருடங்களின் பின் இன்றும் அப்படியே. படித்துப் படித்து மாய்ந்து போன நாட்கள். அதே மாய்தல், அதே பரவசம் இந்த உண்மையும் பொய்யும் படித்த போது. நெஞ்சு முட்டி அலை மோதுகிறது. நெஞ்சு வலி, கண்களின் கோளாறு எல்லாம் புத்தகத்தைப் புரட்டிய போது போன இடம் தெரியவில்லை. எழுத்துக்கு இவ்வளவு பெரிய மகத்துவமடா மன.

நண்பன் குளைச்சல் மு. யூசுப் அருமையாக மொழிமாற்றம் செய்திருக்கிறார். நமது பள்ளிவாசல்களில் கொஞ்சக்காலமாவது இஷாத் தொழுகைக்குப் பிறகு, பஷீர் அவர்களின் உண்மையும் பொய்யும் வாசிக்கச் செய்தால், நம்மட முஸல்மான்களெல்லாம் மனிதமான்களாவது உண்மையிலும் உண்மை.

பஷீரைப் படிப்பதும், பிறரைப் படிக்கத் தூண்டுவதும் ஆயிரம் ஒட்டகங்களை அறுத்து குர்பான் கொடுத்த நன்மை கிட்டும். (அட பாவி, ஆயிரம் ஒட்டகங்களை அறுப்பதை பஷீர் பொறுக்க மாட்டாரே, யாரோ புறுபுறுக்கும் சத்தம் கேட்கிறது) என நான் முன்மொழிகிறேன். ஆபிதீனோ, அருமைத் தம்பி தாஜோ இதை வழிமொழிந்தால் சரி.

246 பக்கங்களில் ’உண்மையும் பொய்யும்’ அற்புதம் கொண்டுள்ளது. முஸல்மான் கவிஞர்கள், எழுத்தாளர்களாகக் கோலம் போடும் நமது ஜோனகர்களுக்காக. முதலில் கேள்வி பதில் அனுப்புகிறேன்.

இப்படிக்கு

ஹனீபா காக்கா.

***திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த மைத்திரியில் எழுதிய கேள்வி பதில்கள்:

1) இறைவிசுவாசிதானா நீங்கள்? பள்ளிவாசலுக்குப் போவதுண்டா? தொழும் பழக்கமுண்டா? - அப்துல் சேர்த்தலை தெற்கு.

எல்லைகளில்லாப் பிரார்த்தனையே வாழ்க்கை

2) நீங்கள் முதலில் எழுதி பிரசுரமான கதை எது? அதற்கு பிரதிபலன் ஏதாவது கிடைத்ததா? - உலகன்னான் ஏலூர்

"தங்கம்" பிரதிபலனாக பதினொண்ணரை அணா ரொக்கமாகக் கிடைத்தது. (அதாவது பத்திரிகை அலுவலகத்தின் எதிரிலிருந்த சிறு ஓட்டலில் நான் பாக்கி வைத்திருந்த இந்தத் தொகை பத்திரிகை அதிபர் கொடுத்தார்)

3) பெண் விடுதலைக்கெதிராக நீங்கள் பேசியதாக அறிந்தேன். உண்மைதானா?

4) நாடு முழுதும் படர்ந்து பிடித்திருக்கும் சைக்கிள் போட்டியில் பெண்களுக்கான இடமில்லாதது ஏன்? - சே.ஜி. மாதவி குட்டி பெரும்பாவூர்

பெண் விடுதலைக்கெதிராக அப்படி நான் பேசவே இல்லை. சிந்திக்கவும் இல்லை, கனவு கூடக் கண்டதில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், பெண்விடுதலைக்காக வீரதீரத்துடன் போராடும் ஒரு முன்னணி வீரன் நான், சென்ற புதன்கிழமை, மணி பத்து, பெண் விடுதலைக்கெதிரான இருவர் என்னிடம் வாதம் செய்தார். நான் உடனே கொந்தளித்துப் போய் அவர்களை துவந்த யுத்தத்திற்கு அழைத்தேன். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்னை அழைத்தார்கள். எனது விலாப்புறத்திலிருந்த ஒரு எலும்பு உடைந்தது. தலையின் இடது சரிவுப் பிரதேசத்திலிருந்து ஒரு கொத்து மயிர்களையும் பிடுங்கினார்கள். நான் சொல்வது உண்மைதான். மிச்சமிருக்கும் எனது ஒவ்வொரு முடியையும் எலும்பையும் பெண் விடுதலைக்காக இழந்து விடவும் அதாவது அர்ப்பணிக்கவும் சித்தம் செய்திருக்கிறேன். பெண் விடுதலைக்காக இனி யார் என்ன சொன்னாலும் சரி, உடனே நான் துவந்த யுத்தம் நடத்த அறைகூவல் விடுவேன்.
அப்புறம் சைக்கிள் போட்டி, பெண்களுக்குத் தோதுப்படாது, பேச்சுப் போட்டி என்றால் பரவாயில்லை. அதன் சாம்பிள் பத்திரிகைச் செய்தி எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? நாடு முழுவதும் படர்ந்து வியாபித்திருக்கும் சைக்கிள் போட்டியை பெண்கள் வெறுப்புடன் உற்று நோக்குகிறார்கள் என்பதற்கான ஒரு நல்ல உதாரணம்தான், பெரும்பாவூரில் நடந்த கே.ஜி. மாதவிக்குட்டியின் பேச்சுப்போட்டி. மேற்கண்ட வீரப்பெண்மணி நூற்றியெட்டு மணிநேரம் வாய்மூடாமல் பேசிக் கொண்டிருந்தார். ஆகார, நீராகாதிகளைக் கூட அவர் பேசிக் கொண்டேதான் மேற்கொண்டார். மாதவிக் குட்டிக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்தன. சட்டி, பானை, அகப்பை, ஈர்க்கோரி போன்றவற்றுடன் ஒரு கன்றுக்குட்டியும் மாதவிக்குட்டிக்குக் கிடைத்தது. இந்த நூற்றியெட்டு மணி நேரச் சாதனை ஒரு உலக சாதனை என்பதாக பெரும்பாவூர்க்காரர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.  இது போல் அழுகைப் போட்டியிலும் பெண்கள் ஈடுபடக்கூடும். சிறு அசைவுகளைச் சொல்லிக் கூட பெண்களால் அழ முடிகிறதல்லவா. அப்புறம் பேன் பார்க்கும் போட்டி, பொய் சொல்லும் போட்டி, தொண்டை தழுதழுக்கும் போட்டி, பெருமூச்சு விடும் போட்டி, இப்படியான போட்டிகள் நிறைய இருக்கின்றன. மாதவிக்குட்டிக்கு பிடித்தமான போட்டி எது?

5) வழக்கமாக பஷீரின் உண்மையும் பொய்யும் ரசனையுடன் வாசிக்கும் 60 வயதைக் கடந்த என் பாட்டிக்கு ஒரு சந்தேகம். "ஏ... புள்ளெ, அந்தாளு பேரென்ன, பசிருன்னா? அந்தாளு ஏன் பரிசையெல்லாம் ஜோனோப் பிள்ளைகளுக்கே கொடுக்கிறான். சொந்த ஜாதி பாத்துத்தானோ" இது குறித்து தங்களின் பதிலென்ன பஷீர்? - எம்.கே. சிவனம்மா,  நாயரம்பலம்

ஜோனகப் பெண்ணாகிய மதிப்புக்குரிய பாட்டி, நான் முழு நிரபராதி. பரிசு கொடுப்பவன் நானல்ல! இந்த விஷயத்தில் குற்றவாளி நர்மதா பத்திரிகையின் உரிமையாளர் ஆர்ட்டிஸ்ட் ராகவன் நாயர்தான். அவரது மனைவியின் பெயர் மட்டும்தான் நாயர், உண்மையில் அந்தப் பெண் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும. அவர் சொல்லித்தான் இவர் கொடுக்கிறாராக்கும். பாட்டிக்கு என் மீது பிணக்கம் வேண்டாம்.

6) தொண்ணாறாம் கோழி முட்டையிடுகிற அழகாட்டம் குந்திக்கினு உக்காந்து மாத்ருபூமியில எயிதிக் குவிக்கிற அந்த உறுப்பாய் ஆருண்ணா? நெஜமாலுமே நீங்கொ சரியான வாப்பாவோட மவனாங்காட்டி அந்த ஆளோட பேரைச் சொல்லுங்கோ பாக்கலாம்? - சலீம். கே.ஏ. போர்ட், கொச்சி

என் தங்கக் கொழுந்தே சலிமே, நீ விளையாடி விளையாடி உன் வாப்பாவையும் தொட்டு விளையாடுதியா மவனே?  ஒங்கண்ணுலே உள்ள சில்வரைப் பேத்துருவேண்டா பேமானி ஒன் வாப்பா பெரிய மனிஷனா இருக்கலாம்? ஆனா நான் ஓன் கேள்விக்கு என்ன பதிலெச் சொல்ல, அந்த ஆளு ஒரு காபிரு. உறூபு, அவரோட உண்மையான பேரு குட்டி கிருஷ்ணமாரார்னு தோணுது. நீ, அந்த என்.வி. கிருஷ்ணவாரியாருக்கு எழுதிக் கேளேன். அந்த ஆளு சரியான வாப்பாவுக்கு பிறந்தவராயிருந்தா உனக்குப் பதில் எழுதுவாரு. அஸ்ஸலாமு அலைக்கும்.

7) சமீபத்தில் ஒரு பத்திரிகையில் தங்களுக்கு பைத்தியம் தொடங்கி விட்டதாகவும் பல சிகிச்சைகள் செய்த பிறகும் குணமாகாததால், உடனடியாக ஊளம்பாறை பைத்திய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லவிருப்பதாகப் படித்தேன். இது உண்மைதானா? - ஏ.பி. இராமன், பொய்யா, பூப்பத்தி

காவல் துறையினரின் உடனடிக் கவனத்திற்கு, நீங்கள் சென்ற வருடம், பொய்யாவிலிருந்து பிடித்துக் கொண்டு போய், ஊளம்பாறை லாக்கப்பில் போட்டிருந்த கிறுக்கன் குஞ்சிராமன் எனும் ஏ.பி. ராமன் எப்படியோ ஊளம்பாறையை ஏமாற்றி தப்பித்து பொய்யாவில் போய் சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேற்படியானை உடனடியாக சுற்றிவளைத்து குதிரை வட்டத்திற்கு அனுப்பி வைக்கவும்.

8) தாங்கள் ஒரு இறுக்கமான கம்யூனிஸ்ட் பிற்போக்கு வாதி என்பதாக கேள்விப்பட்டேனே சரிதானா? - எம் முஹம்மது, நீலிமங்கலம்

பிற்போக்குவாதிதான், ஆனால் கம்யூனிஸ்ட் அல்ல

9) டி.சி. கிழக்கெமுறி பூஷணத்தில் ஆண்களின் விஷயத்தில் தன்னை ஒரு ஆண் என்று ஸ்தாபிப்பதற்கு முயற்சித்திருக்கிறார். கூடவே இருந்த நானும் நீங்களும் உயிருடனிருக்கும் போது இதை ஒப்புக்கொள்ள முடியுமா? இனிமேலும் டிசி இதை நிறுவிக்காட்ட முயற்சி செய்தால் அவருடைய எலும்பை உடைத்து விடுவோமா? - சாமுவேல், நாகர்கோவில்

அன்புள்ள சாமுவேல், விஷயம் ரொம்பக் கேவலமானது தெரியுமல்லவா? ரகசியமாக இருக்கட்டும் டிசி ஆண்தான் என்று முட்டாள் உலகம் நம்பிவிட்டுப் போகட்டும். அதுதானே நல்லது.

10) என்னுடைய பஷீர் சாரே, எங்கள் ஊர்க் கோவிலில் சந்தனம் அரைக்கும் சாணைக்கல் உடைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக தங்களின் வழுக்கைத் தலை கிடைத்தால், வசதியாக இருக்கும். என்ன சொல்கிறீர்கள்? - எம்.என். மேனோன் , குழூர்

கோவிலில் பிரதிஷ்டிக்கப்பட்டிருப்பவர் யார், சிவனாக இருந்தால் தயவு செய்து என்னைக் கூப்பிடாதீர்கள். ஏதாவது பெண் தெய்வங்களா இருந்தால் மட்டும் வருகிறேன்.

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com ) , காலச்சுவடு பதிப்பகம், குளச்சல் மு. யூசுப்

2 comments:

 1. வம்புக்கு இழுக்கும் கேள்வி பந்துகளை சிக்ஸராக விளாசும் சமர்த்து,

  /எல்லைகளில்லாப் பிரார்த்தனையே வாழ்க்கை/ என்ற நுட்பமான பதில். இப்படியெல்லாம் அருமை மிகும் பஷீரால் தான் சொல்ல முடியும். காக்காவுக்கும், நானாவுக்கும் நன்றி!

  ReplyDelete
 2. ஹனிபாக்கா ஒரு ஜக்குல இருக்குறதை ஒரு வடிகட்டில ஊத்துறதும், ஆபிதீன் நானா ‘கொழந்த’ வாய்ல ஒரு புனலை வச்சு மடக்கிப் புடிச்சுக்கிற மாதிரி ஒரு காட்சி தெரியுது.


  ஜக்குல இருக்குற வஸ்து கசப்பு மருந்தில்ல, அது பிழிந்தெடுத்த இனிப்பு ரசம்னு குழந்தைகளுக்கும் தெரியணும்.

  எப்படியும் தெரிஞ்சிரும் - இன்ஷா அல்லாஹ்

  அதுவரைக்கும் ரெண்டுபேரும் ஊத்திக்கிட்டே இருங்க

  ReplyDelete