Sunday, February 3, 2013

'வைக்கம்' அறைந்த அறை - தாஜ்

வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை படித்துவிட்டு நண்பர் தாஜ்  நேற்று எனக்கு அனுப்பிய மெயில் இது. 'என்ன மயிர் எழுத்து எழுதுகிறேன் நான்!' என்று தனக்குள் புழுங்கிக்கொள்கிறார் நண்பர். என்னை நான் கேட்பது போலவே இருக்கிறது! - ஆபிதீன்

***



 

 ’குளச்சல்’
மொழிமாற்றத்தில் வந்துள்ள
வைக்கம் முகம்மது பஷீரின்
'உலகப் புகழ்பெற்ற மூக்கு' எனும்
சிறுகதைத் தொகுப்பை
சில நாட்களாக
வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிப்பிலான என் வேகம்
நீங்கள் அறியாததல்ல.
சாதாரண வேகமா அது!
ஆமையின் வேகம்!
வாசிப்புக்கு
ஏதோவோர் வேகம்
வேண்டித்தானே இருக்கிறது!?

முன்பெல்லாம்...
தேர்ந்த படைப்பாளிகளின்
படைப்புகளை வாசிக்க,
எனக்கு
ரூல்தடியும் பென்சிலும்
இன்றியமையாதது.

இஷ்டமான வரிகளையும்
சிலாகிக்க வைக்கும்
நுட்பமான கிளர்ச்சிகளையும்
அடிக்கோடிட்டுக் கொண்டே
வாசிப்பவன் நான்!
வாசிப்பில்,
வாசிப்பைவிட
அதுவே முக்கியமெனக்கு!.

குறிப்பிடத் தகுந்த
சில படைப்பாளிகளின்
படைப்புகளை வாசிக்கும் போது
அப் புத்தகத்தின் வரிகள் பூராவும்
நான் கிழிக்கும் அடிக்கோடுகள்
தவிர்க்க முடியாமல் போனதுண்டு!

நன்றாக ஞாபகம் இருக்கிறது
80 - களில் வெளிவந்த,
ஒன்றை விரல் அளவிலான
தடிமனே கொண்ட
சுந்தர ராமசாமியின்
'ஜே.ஜே. சில குறிப்புகள்'
மூன்று விரல் அளவில்
தடிமனாகிப் போனதை
மறக்கவே முடியாது!
நாவலான படைப்பு
காவிய தடிமனாகிப் போனதில்
பல நேரம் சிரித்திருக்கிறேன்.

வாசிப்பில் என் குணாதிசயம்
அடிக் கோடோடு நின்றுவிடுவதில்லை.
படைப்பின் வரிகளினூடே
அதன் அர்த்தபாவ சுவடுகளைப் பிடித்து
அடிமேல் அடியெடுத்தபடிக்கு
வாசிப்பவன் நான்.

என் வாசிப்பின்
இத்தனை வினோத அழகையும்
நீங்கள் அறிவீர்கள்.
சிரித்து,
முகம் சுளித்தும் இருக்கின்றீர்கள்.

அந்தச் சிரிப்பும், அந்த முகச்சுளிப்பும்
அடிக்கோடிடும்
என் சிறுப்பிள்ளைத் தனத்திற்காக மட்டுமல்ல
புதிய புத்தகத்தை இன்னும் புதிசாக
வைத்துக் கொள்ள வேண்டாமா? என்கிற
பரிசுத்த
அழகியல் சார்ந்ததென அறிவேன்.

நாமெல்லாம் கல்யாணமாகி
ஒன்றுக்கு இரண்டு
குழந்தை பெற்றவர்கள் என்பது
நினைவுக்கு வந்து தொலைய
எனக்குள் நான்...
சிரித்து கொள்வேன்.

இப்போது
என் வாசிப்பில் சிறிது முன்னேற்றம்.
அந்த வேகத்தை
குறைக்கவில்லையென்றாலும்
அடிக்கோடிடும் கவித்துவத்தை
தொடராது நான் விட்டுவிட்டேன்.

இது,
என் வாசிப்பின் முன்னேற்றமென்றோ,
கதை நெளிவுகளின் நுட்பங்களும்
புரியாமை வரிகளும்
இப்போதெல்லாம்,
உடனே புரிந்துவிடுகிறதென்றோ அர்த்தமல்ல.
அடிக் கோடிடுவதை
அழகு குறையாமல் செய்யும்
காலத்தை விழுங்கும் நேரம்...
இப்போது கஷ்டமாகிப் போனது.
வாழ்வோடான
எதிரோட்டக் குடைச்சலுக்கு
ஒரு தலை காணமாட்டேன் என்கிறது.
ஆபிதீன்...
அங்கே எங்காவது
எனக்கு பொருந்துகிற மாதிரி
எக்ஸ்ட்ரா தலை கிடைக்குமா?

எங்கே மறந்துவிட்டேனோவென
வருடா வருடம் வயதுவேறு
என்னை வருத்தி நினைவுறுத்துகிறது,
அந்த அடிக் கோடுகள்
என்னதான் கவிதையென்றாலும்
ரூல் தடியும் பென்சிலும்
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறதென்றாலும்
சாதுர்யம் பிசகாமல்
இயக்க வேண்டிய ஒன்று!
அது ஆவதில்லை இப்போது.
சிரிப்பீர்கள், சிரித்துவிட்டுப் போங்கள்.
ஆனால்...
மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

இந்தக் கழிவை
இங்கே கொட்ட
எழுதப்படுகிற கடிதமல்ல இது!
பேத்தல் எப்பவும்
நம்மை மீறிவிடும் ஒன்று!
அதுவாகவே ஆஜர் கொடுத்துவிட்டது.

வைக்கம் முகம்மதுவின்
1945 -ம், வருடத்தின்
இரண்டு கதைகளை
இந்தத் தொகுப்பில்
தீர வாசித்தேன்.
ஒன்று. 'உலகப் புகழ்பெற்ற மூக்கு'
இரண்டு. 'ஜென்ம தினம்'
தவிர, அந்தத் தொகுப்பை
இன்னும் முடிக்கவில்லை என்பது
வேறு செய்தி.

அந்த இரண்டு சிறுகதைகளின் ஊடே...
இத்தனை நாளும்...
நான் எழுதிக் கொண்டிருக்கிற
என் 'பீத்த' எழுத்திற்காக
வைக்கம் அறைந்த அறை
வலுவானது!
ஒருவகையில் சரியானது!

1945 - மகரம் (தை) மாதத்தின்
ஓர் நாளிலிருந்து
இந்த 2013 - தை மாதத்தின் ஓர் நாளில்...
என்னை பதம்பார்த்த அந்த அறை...
எதிர்பாராத சுளீர்......!
68 - வருடம் நீண்ட
அந்தக் கரம்...
இன்னும் என் வியப்பில்!

எழுத்தாளராக மட்டுமல்லாது
ஒரு கால கட்டத்தில்
குஸ்தி பயில்வானகவும் அறியப்படும்
வைக்கத்தின் அறை
அத்தனை வலு
கொண்டிருந்திருந்ததோ என்னவோ!

வீசப்பட்டு தூர விழுந்த
இடத்திலிருந்து யோசித்தேன்.
அவர் அறைந்ததில் கொஞ்சம் வருத்தமில்லை.
இன்னும் கூட அவர் என்னை
பொறிகலங்க அறைந்திருக்கலாம்.
கன்னம் சிவந்ததெல்லாம் போதாது
மூளைப் பழுதிருக்க வேண்டும்.

'என்ன மயிர் எழுத்து எழுதுகிறேன் நான்!'
அவர் அப்படி அறைந்து
வீசியெறிந்தப் பிறகேதானே
யோசிக்கிறேன் நான்!
இனியேனும் திருந்துவேனா!
இயலுமா...?
முயன்றாலும்
சாத்தியப்படக் கூடியதா எழுத்து?
வேண்டுமானால்...
நாய் வாலை நிமிர்த்தலாம்.
இயலவும் இயலும்!

இந்த இரண்டு கதைகளில்
ஜென்ம தினம்
அறைந்த அறைதான்
வலுவான வலி கொண்டது!
அந்தக் கதையில்
நிறையவும் கவிதைவரிகள் இருப்பது
நினைவுக்கு வர...
குளச்சலுக்கு போன் போட்டேன்.

''நான்...
வைக்கம் முகம்மது பசீரின்
சிறுகதைத் தொகுப்புகள் இரண்டும்
நாவல் இரண்டும்
இருபது வருடங்களுக்கு முன்னமே
படித்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மொழிமாற்றச் சேவையில்
நீங்கள் ஈடுபட நினைத்தே இருக்காத நேரம்!
அன்றைய அந்த மொழி பெயர்ப்பாளர்கள்
ஆக்கித் தந்த வைக்கமின் மொழி
இன்னொரு சாதாரண மொழி!
படித்தேன்...,
வைக்கமை படித்தாகிவிட்டது
என்பதோடு
மறந்தேன்... அவ்வளவுதான்.

இன்றைக்கு
சிலாகிக்கும் இந்தக் கதைகளைக் கூட
முன்பு நான் வாசித்திருக்கக் கூடும்!
அன்றைக்கில்லாது
இன்றைக்கு இப்படி
இந்த இரண்டு கதைகளும்
என்னை வசீகரிக்க
என்ன காரணமாக இருக்கும்?
உங்களது மொழிபெயர்ப்பில்
இன்றைய
உங்களது மொழி
கூடுதல் வித்தைக் காண்பித்திருக்கிறதா?"
வெளிப்படையாகவே கேட்டேன்.

குளச்சல் சிரித்தார்..
"கேரளா முழுமைக்கும்
இன்றைக்கும் கூட வைக்கமை
தூக்கிவைத்துக் கொண்டாடுவது
இதனால்தான் தாஜ்!" என்றார்.

நம் இஸ்லாமிய படைப்பாளிகளில்
உண்மையை
பெரும் அளவில் முன்வைக்கும் எழுத்தை
உங்களிடம்தான்
நான் அதிகமும் வாசித்திருக்கிறேன்.
இப்போது
இன்னொருவராய்
வைக்கம் முகம்மது பஷீர்!

நீங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
கோலமிடுவீர்கள் என்றால்...
அவர் அதே கோலத்தை
விரிந்த எல்லையில்
அசாத்திய லாவகதோடு
வரைந்தெடுப்பவராக தெரிகிறார்!

1945 - கேரளத்து
அரசியல் மாய்மாலங்களை...
'உலக புகழ்ப் பெற்ற மூக்கு'இல்
பின் நவீனத்துவப் பின்னலில்
அதிகத்திற்கும்
அதிரடித்திருக்கிறார்!

சுதந்திரத்துக்கு முன்னாலான
காலம் அது!
அனேகமாக
இடைக்கால அரசு
அங்கே நடந்தேறியிருக்கலாம்.
அப்பவே தொடங்கிவிட்டதாக
அறிய முடிகிறது
மலையாளிகளின் இன்றைய அரசியல்!
அந்த மக்கள்
கெட்டிக்காரர்கள் என்பது
திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கப்படுகிறது!

அதே ஆண்டில் எழுதப்பட்டிருக்கும்
'ஜென்ம தினம்'
ஒரு நாள் சம்பவமாக....
வலுவான
சிறுகதையாகியிருக்கிறது!

ஜென்ம தினமென்றால்...
பிறந்த நாளாம்
அவரது பிறந்த நாளில்
அவர் எதிர்கொள்ளும்
யதார்த்த,
வாழ்வின் எதிர்மறையான நிகழ்வுகளை...
விழிப்பில் இருந்து
தூங்கப் போகும்வரையிலான
அந்த அரைநாளின் சம்பவ அடுக்குகளை
சரளமாகப் பதிவு செய்திருக்கிறார்.

வாழ்க்கை / நண்பர்கள்/  இல்லாமை / பசி/
அரசியல்/ புரட்சி குறித்த விமர்சனம்/
நாகரீக முரண்/ கடன்பட நேரிடும் இறுக்கம்/
கழிவிரக்கம் கொள்ளவைக்கும் களவு/
கவிதை தாக்கம்...
இப்படி
அத்தனை வளையத்திற்குள்ளும்
வளைய வந்து 
அரிய எழுத்தாக
இக்கதையினைப் பதிவு செய்திருக்கிறார்!

1945-ல்
தமிழக இலக்கிய வட்டத்தில் 
மணிக்கொடி காலம் பிரசித்தம்.
மௌனியும், புதுமைப் பித்தனும்
ஆட்சி செய்த தருணம்.
மௌனி பெருமளவில்
மனவெளியைப் பதிவு செய்பரென்றால்...
புதுமைப்பித்தன்
மேலை நாட்டை கீழை நாட்டிற்கு
இறக்குமதி செய்து பெயர் போட்டவர்!
இன்னுமான
தனித்துவமிக்கப்
புதுமைகளையும் காண்பித்தவர்.
இவர்கள் இருவருமே
அரசியல் தொட்டு
எழுதியதாக நினைவில்லை.

அந்த ஆண்டுகளில்..
இன்றைக்கும் காணும்
வாழும் அரசியல் மாய்மாலத்தை
'உலகப் புகழ்ப் பெற்ற மூக்கு'-ல்
1945 - வாக்கிலேயே
பின்னியெடுத்திருக்கிறார் வைக்கம்!

இங்கே நான் சுட்டும்...
'ஜென்ம தினம்' ஒட்டிய
சரளமான கதையும் கூட
அன்றைக்கு
தமிழில்
அபூர்வமாகத்தான் இருந்திருக்க முடியும்.

இரண்டாயிரத்தாண்டு
வெளிவந்து பார்த்த
'பாரதி'யில்
ஓர் வசனம்
என்னால் மறக்க முடியாதது.
வெளியில் தங்கியிருக்கும் பாரதிக்கு
குடும்பதிலிருந்து ஒரு செய்தி வரும்...
'குழந்தைக்கு உடல் நலமில்லை
வைத்தியத்திற்கு பணம் வேண்டும்' என்று
பாரதி கையிழந்த நிலையில் புலம்புவார்
'காலையிலேயே
இன்றைக்கு...,
இல்லாமை கஷ்டம்
தலைவிரித்தாடுகிறது' என்பார்
அந்த இல்லாமை தரும்
விவரிக்க முடியாத வருத்தத்தை
நான் பலமுறை
எதிர்கொண்டதாலோ என்னவோ
அதையே
வேறொரு மண்ணில் பேசும்
வைக்கம் முகம்மது பஷீரின்
இந்தக் கதை
பெரிதினும் பெரிதாகத் தெரிகிறது.
தவிர,
வைக்கம் முகம்மது பஷீர்
குளச்சல் மு. யூசூப் கூட்டணி
என் இலக்கிய மனதையும்
பேதலிக்க வைத்துவிட்டார்கள்!


-தாஜ்

***
நன்றி: தாஜ், குளச்சல் மு. யூசூப் , காலச்சுவடு பதிப்பகம்

***

சிறுகதைகள்...

ஜென்ம தினம் - பஷீர் (மொழிபெயர்ப்பு : குளச்சல் மு.யூசுப்)

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு -  பஷீர் (மொழிபெயர்ப்பு : நாகூர் ரூமி), வேறு சில முக்கியமான இணைப்புகளுடன்...

மற்றும்..

ஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணலும் சில பத்திகளும்
வறட்டுச் சொறி - பஷீரின் கடிதம்
பஷீரின் உண்மையும் பொய்யும் (கேள்வி பதில்)

No comments:

Post a Comment