Thursday, January 21, 2016

கோபல்ல கிராமத்தில் ஒரு கதை !

அக்கையா சொன்னதாக கி.ரா சொன்னது : 
"ஒரு ஊர்லெ ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மகன், கல்யாணம் ஆகவேண்டிய வயசு. கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். பொண்ணு ரெண்டு. அக்கா தங்கை. அதுகளும் ராஜகுமாரத்திகதான். கல்யாணம் தடபுடலாய் நடந்து முடிஞ்சது.

முதல் நாள் ராத்திரி. மாடியிலெ ரெண்டு அறைகள். அந்த அறைகள் எப்படி அமைஞ்சிருந்ததுண்ணா.. ஒரு அறை மேலே; இன்னொன்னு கீழே. ரெண்டுக்கும் போக ஏணிப்படிகள்.

கீழ் அறையிலெ தங்கச்சிக்காரி இருநா. மேலே அக்காக்காரி. கல்யாணமான ராஜகுமாரன் வந்தான்.

இந்த நேரத்துலெ ஒரு திருடன் அரண்மனையிலெ களவாங்க உடும்புலெ கயத்தைக்கட்டி மேலேவீசி அந்த கயிறு வழியா மேலேஏறி அந்த இடத்துக்கே வந்திட்டான். ராஜகுமாரன் அந்த அறையில் ஏதாவது ஒண்ணுக்குள்ளே போயி கதவைப் பூட்டிக்கிட்டதும் இவன் வேலையை இவன் ஆரம்பிக்கலாம்ண்ணு காத்துக்கிட்டிருந்தான்...

ராஜகுமாரன் ஏணிப்படி வழியாய் ஏறி முதல் அறையைக் கடந்து மேலே உள்ள அறைக்குப் போகப்  போனான். வாசலில் காத்திருந்த இளையவள் அவனுடைய காலைப் பிடிச்சிக்கிட்டா.

"எங்கே போறீர் என்னைக் கடந்து; முதல்லெ நான் இருக்கிறது தெரியலையா?"ண்ணு கேட்டா.

சரீண்ணு சொல்லி அவன் ஒருபடி கிழே இறங்கக் கால் வச்சான் அவகிட்டெ போறதுக்கு. இதுக்குள்ளே மேலேயுள்ள அறைவாசல்லெ காத்திருந்த மூத்தவள் அவன் கழுத்தைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு "என்ன அர்த்தம் இது? முதல்லெ தாலிகட்டினது என்னைத்தானே; இங்கெ வந்திட்டுப் பிறகுதான் அங்கே போகணும், நா விடமாட்டேன் ஆமா"ண்ணு சொல்லிட்டா!

ராஜகுமாரன் சொன்னான் "அவ சின்னவ; குழந்தைக்குச் சமானம். மூத்தவள் நீ; இளையவளுக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே? அதோடு அவ வாய்திறந்து கேட்டுட்டா" என்று சமாதானம் சொல்லிப் பாத்தான். மூத்தவள் அவனை விடுறதாய் இல்லை.

ராஜகுமாரன், காலைப் பிடித்துக்கொண்ட இளையவளிடம் "உன் அக்கா சொல்றதும் நியாயம்தானே, முதல்லெ முறைப்படி நடந்துகொள்றதுதான் முறை. காலை விட்டுரு"ண்ணு கேட்டுப் பார்த்தான்.

"மூத்தவர்களுக்குத்தான் பொறுமை வேணும். நானோ வெக்கத்தைவிட்டு வாய்திறந்து கேட்டுட்டேன்; விட்டுக் கொடுத்தாத்தா என்ன? அவ எப்பவும் இப்படித்தான்" என்றாள் இளையவள்.

"ஓஹோ, முறைதவறி நடந்துக்கிட்டதுமில்லமே வாய் வேறயா? முடியாது. இங்கெதான் முதல்லெ வரணும்" என்று முரண்டு பிடித்தாள் மூத்தவள். அவன் கழுத்தில் போட்ட பிடியை விடாதது மட்டுமில்லெ, பிடியை இறுக்கினாள்.

இளையவளோ காலைப்பிடித்த பிடியை விடவே இல்லை. கீழ்நோக்கி அவனை இழுத்தாள்.

இப்படி அவனை அவர்கள் பாடாய்ப் படுத்தி, அந்த ரெண்டு உடன்பிறப்புகளும் நீயாச்சி நானாச்சி என்று சண்டைபோட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அரமணைக்குள் வந்த கள்ளன் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். 'பாப்போம்; இது எப்படித்தான் முடியுது' என்று.

ராஜகுமாரன் அந்த ரெண்டு பொண்களையும் எப்படியாவது சமாதானப்படுத்திரலாம்ண்ணு முயற்சி செய்து பாத்தான். நடக்கலை. என்ன செய்யிறதுண்ணும் தெரியலை.

'ரெண்டு பேர்ட்டேயும் நா வரலை; விட்டுருங்க என்னை' என்று கோபமாய்த் திமிறிப் பாத்தான். கட்டியிருந்த வேட்டி அவுந்து போச்சி! அவர்கள் வகையான பிடியைப் பிடித்துக் கொண்டார்கள்!
**

.... மீதிப் பகுதியை வாசகர்கள் இங்கிருந்து பிடித்துக் கொள்ளவும்!

*

No comments:

Post a Comment