Sunday, January 24, 2016

சூஃபி ஞானி செய்யது ஆசியா உம்மாள்

அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய 'முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்' எனும் நூலிலிருந்து பதிவிடுகிறேன். ஏற்கனவே இந்நூலிலிருந்து இறசூல் பீவி , கச்சிப்பிள்ளையம்மாள் என்ற இரண்டு பெண் புலவர் ஞானிகளைப் பதிவிட்டிருக்கிறேன். கடைசியாக இருந்தது கீழக்கரை ஆசியா உம்மாள் அவர்கள்தான். 'தமிழ்நாட்டில் வேறு யாரும் 'பொம்பள அவுலியா' உள்ளார்களா சீதேவி?' என்று  ஹானரபிள் செக்ரட்டரி அஸ்மாவிடம் அடக்கமுடன் கேட்டேன். நாகூர் மியான்தெருவில் ஒருவர் தற்போது வாழ்ந்து வருவதாகவும் பெயர் பிறகு சொல்வதாகவும் சொன்னார். அறியவும் ! - ஆபிதீன்

*

செய்யது ஆசியா உம்மாள்

இவரின் பாரம்பரியமோ பெருமையுடையது. வள்ளல் சீதக்காதியின் இளவல் பட்டத்து மரைக்காயர் என்னும் முகம்மது அப்துல் காதிர் மரைக்காயரின் மகன் முகம்மது அபூபக்கர் மரைக்காயருக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மகள் சாறா உம்மாவுக்கும் பிறந்த வள்ளல் அவ்வாக்காறு மரைக்காயர் எனப் புகழ்பெற்ற அப்துல் காதிர் மரைக்காயர். இவரே கீழக்கரை ஜூம்ஆப் பள்ளிவாயிலையும் காயல்பட்டணம் புதுப்பள்ளிவாயிலையும் கட்டுவித்தவர். அவரின் மகள் வயிற்றுப் பேரரே இரண்டாம் சீதக்காதி என் அழைக்கப்பெறும் ஹபீபுஅரசர் எனப் பீடும்புகழும் பெற்ற  ஹபீபு முஹம்மது மரைக்காயர். அவரின் வள்ளன்மையின் நறுமணம் இந்நாட்டில் மட்டுமின்றி அரபுநாட்டிலும் பரிமளித்துக் கமழ்ந்தது. அங்குள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் அறிஞர்களுக்கும் வாரி வழங்கியதோடல்லாது புனித யாத்திரிகர்களின் வசதிக்காக ஜித்தாவுக்கும் மக்காவுக்கும் இடையில் கிணறுகளும் தோண்டுவித்தார் அவர். அவரின் இளவல் அப்துல் காதிர் மரைக்காயரின் வழிவந்த ஹபீபு முஹம்மது மரைக்காயரின் அருந்தவத்துத் திருமகளே செய்யிது ஆசியா உம்மாள்.

கருவிலே திருவாய்க்கப் பெற்ற அம்மங்கை நல்லார் இளமையிலேயே தனித்திருந்து இறைநேசச் செல்வர்களின் துதிப்பாடல்களை மனனம் செய்து பாடிக்கொண்டிருக்கும் இயல்பினைப் பெற்றிருந்தார். இறைத் தியானத்திலேயே இலயித்து இன்புற்று அவற்றைப் பாடிப் பரவினார். பிறரிடம் அதிகமாகப் பேசாது தம் இல்லத்தின் மேல்மாடியில் தம் பெரும்பாலான நேரத்தைக் கழிந்துவந்ததன் காரணமாக 'மேல் வீட்டுப் பிள்ளை' என்று அழைக்கப்பெற்ற அவர் அக்காலை தாமாகவே பல பாடல்களைப் பாடினார். அத்துடன் நில்லாது அக்காலை கீழைமாநகரின் ஆன்மீகச் செங்கோலோச்சி வந்த இறைநேசச் செல்வர் கல்வத்துநாயகம் அவர்களை அணுகி அவர்களிடம் தீட்சை பெற்றுச் சீடருமானார். அவர் கி.பி. 1948-ஆம் ஆண்டில் தம் எண்பதாவது வயதில் கீழக்கரையில் காலமானர்.

அவர் பாடிய பாடல்கள், 'மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம்' 'மாலிகா இரத்தினம்' என இரு பகுதிகளாக இருக்கின்றன. அவற்றில் இறைவனைப் பற்றியும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் பற்பல இறைநேசச் செல்வர்களைப் பற்றியும் அவர் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தும் அரபுத் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

அவற்றில்,

'சர்க்குரு உயர்குதுபாம் சையிது அப்துல்காதிர்
பொற்பாதம் போற்றி நிதம் புண்ணியமாய்ப் புகழ்வேன்'

என்று கல்வத்துநாயகம் சையிது அப்துல் காதிர் (ரஹ்) அவர்களைப் போற்றிப் புகழும் அவர் பின்னர்,

வல்லான் ஹபீபுமுஹ ம்மதுசதக்கத் துல்லாவென்னும்
பல்லாக் கொலியை நிதம்பண்பாக நான் புகழ்வேன்

என்று பல்லாக்குவலி அவர்கள் மீது புகழ்ப்பா பாடுகிறார்.

அவர் ஷாஹ¤ல் ஹமீது நாயகம் அவர்களின் வரலாற்றையும் தம் மூதாதையான ஹபீபரசர் வரலாற்றையும் கவிதையிலேயே மொழிவது கவிதைப் பொழிவாகவே உள்ளது.

அவர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் மீது பாடிய இன்னிசையில் அவர்கள் ஓர் இறந்த உடலத்தை நோக்கி, 'என் உத்திரவால் எழு!' என்று கூற,

'சொன்னவுடன் மையித்து சுணங்கா தெழுந்திடவே
விண்ணவரும் மண்ணவரும் மேன்மையுடன் புகழ்ந்தார்'

என்று பாடுகின்றார்.

அவர் தொண்டியில் அடங்கப் பெற்றுள்ள ஷைகு அபூபக்கர் வலி அவர்கள் மீது பாடிய ஒரு பாட்டில்

சிந்தையும் நாவையும் ஜெயிக்க முடியவில்லை
ஜெயிக்க வலி தாரும் வலியே!
சித்தி ஆனந்தமெனும் சிவராஜ யோகமென்னில்
தெளிவாக்க அருளும் வலியே!

விந்தையாய் வந்ததொரு வேதாந்த தீபமெனும்
வெளிச்ச முள்ளருளும் வலியே!
வேதாவே நல்லஉயர் நாதாவே உன்றன்உயிர்
தாதாவே அருளும் வலியே!

எந்தனுயிர் உந்தனுயிர் என்நிலைஉன் முன்னிலையாய்
ஏகநிலை அருளும் வலியே!
எல்லாம் அறிந்தவரே! ஏகாந்த மெல்லாமுன்
இலங்கிவர வருளும் வலியே!

சந்ததமாய் நிற்பவரே! தான்தானு மானவரே!
சதானந்தம் அருளும் வலியே!
சிந்தைபுகும் தொண்டியர்என் ஜத்தான குத்பேநல்
ஷைகு அபூபக்ரு வலியே!

என்று பாடியிருப்பதிலிருந்து ஷைகு அபூபக்ரு வலி அவரின் மூதாதையர்களில் ஒருவர் என்பது பெறப்படுகிறது.

அவர் தம் மற்றொரு மூதாதையான சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மீது பாடிய கண்ணிகளில் அவர்களின் அருள் வேண்டி இறைஞ்சும் கண்ணிகள் அற்புதமாக அமைந்துள்ளன. அவை வருமாறு :

எந்தனுக் குள்ளே  இலங்கும்உயர் சூட்சியத்தை
விந்தையுடன் காட்டியருள் வேதா சதக்வலியே!
பேசமுடி யாதஉயர்  பேரின்ப சாகரத்துள்
ஆசையுடன் முழுக அருளும் சதக்வலியே!
திறமான இல்முல்யகீன் தெளிவுடைய ஐனுல்யகீன்
தரமான ஹக்குல்யகீன் தவமருள் சதக்வலியே!

இவ்வாறு தம் பாட்டனாரின் அருள்வேண்டி இறைஞ்சும் அவர், இறைவனை நோக்கி,

தன்னை அறிந்துணர சதானந்த நிஷ்டையருள்
என்னை உன்னில் சேர்த்தே ஏகபராபரனே
ஆவி அகலுமுன்னே ஆண்டவனே உன்னருளை
ஏவி என்னில் வரச்செய் ஏகபரி பூரணனே!
என்னை உற்றுணர்ந்தேன் ஏதுமில்லை உன்னையன்றி
என்ன கதிதருவாய் ஏகபரி பூரணனே!

என்று பாடுகின்றார்.

மற்றொருவகைக் கண்ணியில்,

என்னிலே நீயன்றி எவருண்டும் ஒன்றுமில்லை
என்னை ஆராயவேண்டாம் இறை யே கப் பாரானவனே!
ஆவி கலங்குதையோ ஆதரிப்பார் நீயன்றிஇல்லை
பாவிஎன்றே தள்ளாதென்னைப் பாரு, கப் பாரானவனே!
இச்சமய மேசமயம் ஏகாந்த முத்திதர
பட்சம்வைத்து சேர்த்தருள்தா பரனே, கப்பாரனவனே!

என்று அவர் பாடி இறைஞ்சுவது நம் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது.

இறைவனிடம் இவ்விதம் பாடி இறைஞ்சும் அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வேண்டி,

சீமான் தனத்துடைய செல்வர் முஹம்மதென்னுள்
ஈமானைத் தான் நிரப்பும் இறசூல்நபி நாயகமே!
ஈமான் தனை நிரப்பி என்றென்றும் உம்முடைய
கார்மான மாக்கிஎன்னைக் காரும்நபி நாயகமே!

என்று பாடி அவர்கள் மீது,

மர்ஹபா யாமர் ஹபா முஹம்மதர்க்கே மர்ஹபாவே
மர்ஹபா யாமர் ஹபா முஸ்தபாக்கே மர்ஹபாவே
மர்ஹபா யாமர் ஹபா ஹாமிதர்க்கே மர்ஹபாவே
மர்ஹபா யாமர் ஹபா அஹ்மதர்க்கே மர்ஹபாவே

என்று சுபசோபனம் சொரியும்போது நம் உள்ளமெல்லாம் பரவசமுறுகிறது.

*

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

No comments:

Post a Comment