Saturday, January 16, 2016

சொல்ல மறையும் தீவு - பிரேம்


பாறைகளின் உட்குழிவுகளில் பதுங்கியிருந்தவை
அலைகளின் நுரைப்பரப்பில் இரைந்து கிடந்தவை
சுடர் ஒடுங்கிப் புகைவிரியும் நிறக்கோட்டில் நெளிந்தலைந்தவை
ஓட்டினைக் கொத்தி உள்ளிருந்து வெளிக் கிளம்பும்
அலகின் நுனியில் ஒட்டியிருந்தவை
எனத் தாம் கண்டெடுத்தவைகளை
சொற்களாக்கி வைத்திருப்பவர்களுக்கு
இந்த உலகின் அத்தனைக் கனவுகளும் சொந்தமாகட்டும்.
தம்மைத் தவிர வேறு எதையெதையோ
சொல்லித் திரியும் பாசாங்கும்
தன்னை மற்றொன்றில் ஓயாமல் மறைத்துக் கொள்ளும்
மாறுவேடத் தந்திரமும் கொண்ட
சொற்களிடமிருந்து தப்பிக்க
அறிந்தவர்கள் யாரோ அவர்களுக்கு
இந்த உலகின் அத்தனை இசையும் சொந்தமாகட்டும்.
கேட்கவும் சொல்லவும் யாருமற்ற தனிமையில்
தற்கொலை செய்து மடிந்த நெடிய வாசகங்கள்
விட்டுச் சென்ற சொற்களின்
ஓயாத முணகல்களைக் கேட்கத் தெரிந்தவர்களுக்கு
இந்த உலகின் அத்தனைக் கவிதைகளும் சொந்தமாகட்டும்.
(வேறு)
கனவும் இசையும் கவிதைகளும் அற்ற
ஒரு அதிசயத் தீவிலிருந்து
எனக்குக் கிடைத்தன இச்சொற்கள்
உச்சரிக்கும் போதே
கனவால் இசையால் கவிதையால் நிரம்பிவிடும்
இவற்றிடமிருந்து
ஒருநாளும் அறிந்து கொள்ள முடியாது
உங்களால்
அந்தத் தீவின் ரகசியத்தை.
*
நன்றி : பிரேம்

No comments:

Post a Comment