Thursday, May 9, 2013

குழந்தைகள் - கஹ்லீல் கிப்ரான்

a Chapter from Kahlil Gibran's book ' The Prophet'. அபூர்வ தமிழாக்கம் :அரூப சௌந் ப்ரேமீள் (81-ல் வெளியான படிமம் சிற்றிதழிலிருந்து..)

***

குழந்தைகள் - جبران خليل جبران‎

பின்பு தனது குழந்தையை மார்புடன் அணைத்தபடி நின்றிருந்த ஒரு பெண் "எங்களுக்கு குழந்தைகளைப் பற்றி சொல்லுங்கள்" என்றாள்.

அதற்கு தீர்க்கதரிசி கூறினான் :

உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை,

வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின்
மகனும் மகளுமாக ஜனித்தவை

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள்
எண்ணங்களை அல்ல. ஏனெனில்

சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்,
உயிருக்கு அல்ல. ஏனெனில்,

உங்கள் கனவில் கூட நீங்கள் அடைய முடியாத எதிர்காலம்தான்
அவர்களது உயிர் உறையும் வீடு.

நீங்கள் அவர்களைப் போல ஆவதற்காக கடின முயற்சி செய்யலாம்.
ஆனால் உங்களைப் போல அவர்களையும் ஆக்கி விடக் கூடாது. ஏனெனில்,

வாழ்வு பின்னடித்துச் செல்வதில்லை. நேற்றைய நாட்களில்
சுணங்குவதுமில்லை.

உயிருள்ள அம்புகளாக உங்களிடமிருந்தே எய்யப்படும்
குழதைகளுக்கு நீங்கள் வில்லுகள்.

வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து , தனது
அம்புகள் அதிவேகத்துடன் தொலைதூரம் செல்லும்படி உங்களைத்
தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆநந்திக்கட்டும்.
ஏனெனில்,

பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற
வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.


 

1 comment:

  1. தீர்க்கதரிசி என்ற பேயரில் புயரசு மொழிபெயர்த்ததைப் படித்திருக்கிறேன்.. கலில் கிப்ரானின் எழுத்துகள் வாழ்க்கைக்கான கையேடு..

    ReplyDelete