சே, 'அல்லயன்ஸ்' வெளியீடான 'ஸ்மைல் ப்ளீஸ்' நூலிலிருந்து சத்யாவின் இந்தக் கட்டுரையை சிரித்துக்கொண்டே டைப் செய்துவிட்டு சிறிதுநேரம் இணையத்தை செக் செய்தால் இது அப்புசாமி டாட் காமில் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது! புத்தி. 'சர்வம் காமெடி மயம்' பகுதிகளையும் சாக்கிரதையாக இனி வெளியிட வேண்டும். ஸ்மைல் ப்ளீஸ்...
***
ஒரிஜினல் ஜாக்கிரதை - சத்யா
நான் இயற்கையாகவே சற்று சந்தேகப் பேர்வழி. இந்தப் போலி சாமியார் விவகாரங்களைக் கேள்விப்பட்ட பிறகு, என் சந்தேகப் புத்தி அளவில்லாமல் வளர்ந்து விட்டது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தவன், எல்லாப் புற்றிலும் பாம்புகள் இருப்பது உறுதி என்று நம்ப ஆரம்பித்து விட்டேன்.
அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாமல் நான் குழம்பிய குழப்பம் கொஞ்சநஞ்சமல்ல. உடனடியாக டாக்டரிடம் சொல்லிக் கொள்ளாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த மருத்துவமனை. மனோதத்துவ டாகடர் மாணிக்கவாசகம் என்னை ஏற இறங்கப் பார்த்தார். அவர் பார்வையே ஒரு தினுசாக இருந்தது.
இந்த ஆள் அசல் டாக்டர்தானா? என்ற சந்தேகம் என் மனதில் ஒரு கணம் நிழலாடி மறைந்தது.
"என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு வேலை இல்லையா?"
ஏன் இப்படி எரிந்து விழுகிறார்? பேஷண்டுகளைக் கவனிப்பதைவிட இவருக்கு வேறென்ன வேலை இருக்கமுடியும்? கள்ளக்கடத்தல், கிள்ளக் கடத்தல் செய்கிறாரா?
"வந்து.. டாக்டர் இருக்காரா?"
"ஏன், என்னைப் பார்த்தா டாக்டராத் தெரியலையா?"
"ஸ்டெதாஸ்கோப்பைக் காணோமேன்னு பார்த்தேன்.."
"நான் மனோதத்துவ டாக்டர்யா! உடம்பு வியாதியைத் தீர்க்கிற டாக்டர்தான் ஸ்டெதாஸ்கோப்பு வெச்சிருப்பாரு. சரி.. உங்களுக்கு என்ன பிரச்னை?"
என் வியாதியை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. எப்படி அதை டாக்டரிடம் சொல்லுல்வது? சொல்லுவதா வேண்டாமா?
"இங்கே யாரும் இல்லையே டாக்டர்?"
"என்ன கேள்வி இது? நாம ரெண்டு பேரும் இங்கேதானே இருக்கோம்!"
"நம்மைத் தவிர வேற யாரும் இல்லையே?"
"ஊஹூம். நாம்பளும் வெளியே போயிட்டா இங்கே யாரும் இருக்க மாட்டாங்க."
நான் மடத்தனமாகக் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் மெனக்கெட்டு பதில் சொல்கிறாரே. இவரும் கிறுக்குதானா?
"என்கிட்டே சொல்லலாம்னா சொல்லுங்க.."
டாக்டரின் காதில் கிசுகிசுத்தேன். அவருக்குக் கோபமே வந்து விட்டது.
"என்னதான் ரகசியாம இருந்தாலும் குறைந்த பட்சம் என் காதுலேயாவது விழணும் இல்லையா? இவ்வளவு மெதுவாச் சொன்னா எப்படி?"
"இன்னும் நான் சொல்லவெ ஆரம்பிக்கல டாக்டர். உங்க காதுகிட்டே வாயை வெச்சுக்கிட்டு, சொல்லலாமா வேண்டாமான்னு யோசிட்டிருந்தேன்."
"நாசமாய்ப் போச்சு. கதவைச் சாத்திட்டு வரேன். இப்பவாவது சொல்லுங்க."
ஐயையோ! பட்டப்பகலில் கதவைச் சாத்துகிறாரே விபரீதமான ஆளா இருப்பாரோ?
'சீச்சி.. இருக்காது..'
ஒரு வழியாக டாக்டரிடம் என் வியாதியை விவரித்தவுடன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.
“இதுக்கா இவ்வளவு அமர்க்களம் பண்ணினீங்க? இந்தச் சந்தேக வியாதி இப்ப நிறையப் பேருக்கு வர ஆரம்பிச்சிருக்கு.”
“நிறையப் பேருக்கு இந்த வியாதி இருக்கா? நம்பவே முடியலையே! வியாதி தீரலைன்னா கூடப் பரவாயில்லை. மத்தவங்களுக்கும் அந்த வியாதி இருக்குங்கறதே பெரிய ஆறுதலாயிருக்கு டாக்டர்!”
“அசல் எது போலி எதுனு தெரியாம குழம்பறீங்க. அதானே? கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தினா சுலபமாக கண்டு பிடிச்சிடலாம்”
திடீரென்று இப்படி ஒரு நிபந்தனையைப் போடுகிறாரே!
“அதைத் தவிர வேறு வழியே இல்லையா டாக்டர்?”
“இப்போ.. சினிமாவிலே நூறு அடி உயரத்திலே இருந்து ஹீரோ குதிக்கிற காட்சியைப் பார்க்கிறீங்க இல்லையா?”
“ஆமா”
“ஆனா உண்மையா ஹீரோ குதிக்கறதில்லே. உண்மையாகக் குதிக்கிறவன் டூப். குதிக்கிற மாதிரி ஆக்ட் பண்றவன்தான் ஹீரோ. அதே தத்துவம்தான் மத்த இடங்களிலேயும்..”
“எப்படி டாக்டர்?”
“புரியும்படி சொல்றேன். பஸ்லே போறீங்க. கண்டக்டர் அசலா போலியான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?”
“தயவு செஞ்சு சொல்லுங்க டாக்டர். காலையிலே கூட எனக்கு அந்தச் சந்தேகம் வந்தது.”
“மிச்ச சில்லறையைக் கொடுக்காதவர்தான் ஒரிஜினல். பாக்கி சில்லறையைத் திருப்பிக் கொடுத்தார்னா எதுக்கு நீங்க உஷாராவே இருங்க.”
“சரி சரி.”
“போகிற இடத்துக்கு குத்து மதிப்பா ரேட் சொன்னா அசல் ஆட்டோ டிரைவர். மீட்டர்படி குடு ஸார்னு கேட்டா ஜாக்கிரதையா இரு க்க. மீட்டருக்கு சூடு வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாரு.”
“மீட்டருக்கு மேலே பணம் கேட்டா சூடு வெக்கலைன்னு அர்த்தம்.”
“கரெக்ட் புரிஞ்சிக்கிட்டீங்களே.. ரோடு போட்டு ஒரே மாசத்திலே நாசமாப் போச்சுன்னா அவர்தான் ஒரிஜினல் காண்ட்ராக்டர். அவர்தான் எல்லோருக்கும் நாணயாம கமிஷன் கொடுத்திருப்பார்.”
“ஓஹோ!”
“கவர்மெண்ட் ஆபீஸ¤க்கு போறீங்க. நீங்க என்ன கேட்டாலும் அலட்சியமாப் பதில் சொல்றாரே அவர்தான் ஒரிஜினல் அரசு ஊழியர். அக்கறையா பொறுப்போட பதில் சொன்னா எச்சரிக்கையா இருங்க.”
“புரியுது டாக்டர்.”
“அவ்வளவு ஏன்? ஊழல் புகாருக்கு ஆளாகிறவர்தான் அசல் மந்திரி. மத்தவங்களையெல்லாம் முதல்வரே நம்ப மாட்டாரு.”
டாக்டர் எனக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருக்கும்போதே கதவை யாரோ தடதடவெனத் தட்டும் சப்தம் கேட்க, “ஐயோ” என்று அலறிக் கொண்டே பின்பக்க வழியாக வெளியே ஓடினார் டாக்டர். திடுக்கிட்டுத் திரும்பினேன். பரபரப்போடு கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
“எங்கே அவன்? ஓடிட்டானா? என்னைக்கு இருந்தாலும் அவனைப் பிடிக்காம விட மாட்டேன்!” என்று கறுவியபடியே திரும்பிச் சென்று விட்டார்.
இவ்வளவு நேரம் போலி டாக்டரிடமா பேசிக் கொண்டிருதேன்? நான் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டதே. நல்ல காலம், ·பீஸ் கொடுப்பதற்குள் உண்மை தெரிந்து விட்டது.
சிறிது நேரத்தில் மீண்டும் உள்ளே வந்தார் டாக்டர். ‘போலீஸ்’ என்று கத்த நினைத்தபோது தடுத்துக் கூறினார்.
“பயந்துட்டீங்களா? இப்ப வந்துட்டுப் போனானே அவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இல்லை. நம்ம ஏரியா ரவுடி ரத்தினம்தான். போலீஸூக்குப் பயந்து இன்ஸ்பெக்டர் வேஷம் போட்டுக்கிட்டுத் திரியறான்.”
“போலீஸூக்குப் பயந்து இன்ஸ்பெக்டர் வேஷமா?”
“ஆமா இந்த ஏரியாவிலே இருக்கிற எல்லாக் கடைகளுக்கும் வந்து அப்பப்ப பணம் பிடிங்குவான். அவன் தொல்லை தாங்க முடியலை. அதான் வெளியே ஓடிட்டேன்.”
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே சந்தேக வியாதி. இன்ஸ்பெக்டர் வேஷத்தில் ரவுடி வந்தால்...?
சிரிது நேரத்தில் மீண்டும் வெளியே சப்தம். நானும் டாக்டரும் வெளியே பாய்ந்தோம். ஆபத்து என்னவென்று தெரியாவிட்டாலும் ஓடுவதற்கு தயாராகவே இருந்தேன்.
வாசலில் சற்று முன் மிரட்டி விட்டுப்போன போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒரு ரவுடி கிடுக்கிப்பிடி போட்டு அமுக்கி இருந்தான்.
“ஏண்டா, ரத்தினம், எத்தனை நாள் மாமூல்கூட கொடுக்காம ஓடியிருக்கே நீ? உன்னைப் பிடிக்கிறதுக்காகத்தான் ஒரிஜினல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நான் ரவுடி வேஷம் போட்டுக்கிட்டேன். மரியாதையா கணக்குப் பாத்து செட்டில் பண்னு!” என்று இழுத்துக்கொண்டு போனான்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.
அசல் என்றும் போலி என்றும் இரண்டு வகை இல்லவே இல்லை. போலிகள் மட்டுமே அசல் என்றும் போலி என்றும் இரு வகையாகப் பிரிந்திருக்கிறார்கள். யார் ஒரிஜினல் யார்.. போலி என்ற குழப்பம் மட்டுமே இப்போது நீடிக்கிறது.
நன்றி : சத்யா, அல்லயன்ஸ், அப்புசாமி[டாட்]காம்
:) போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என போலிப் பொருட்களிலேயே எழுதி இருப்பதுபோல...
ReplyDeleteshall i publish this in my health care magazine?
ReplyDeleteஓ, தாராளமாக. சத்யாவிற்கு நன்றி சொல்லிவிடுங்கள்.
Delete