காலச்சுவடு வெளியீடான 'ஆத்மாநாம் படைப்புகள்' புத்தகத்திலிருந்து...
பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் குறிப்பு : * இந்தச் சுய அறிமுகக் கட்டுரையை ஆத்மாநாம் தனது 25வது வயதில் எழுதியிருக்கிறார். அமைப்பியல் கவனப்படுத்திய Reader Reception Theoryயை அன்றே (1976) முன்னோக்கி இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. 1981ஆம் ஆண்டு திரு யேசுராஜா, திரு சுந்தர ராமசாமி இவர்களுடனான சந்திப்பில் Crea-Aவில் இதே விஷயத்தை உறுதிபடுத்திப் பேசியதாக என்னிடம் பேசியிருக்கிறார். அதாவது கவிதை எழுதப்பட்ட பின்பு கவிஞனுக்கே புரியாமல்கூடப் போகலாம். ஆனால் கூர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் கவிதையை அணுகிவிட முடியும்.
***
ஆத்மாநாமைப் பற்றியும் கவிதையைப் பற்றியும் ஆத்மாநாம் ஐ
சமீபகாலமாகக் கவிதை எழுதிவரும் 25 வயது இளைஞர். தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உலகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி, தனிமனிதனின் அவலங்கள் , வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றிக் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தும் முயற்சியில் சுதந்திரம் முதலியன தற்காலக் கவிதைக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கியமான வசதி. இதன் மூலம் விரிவான ஆன்மீக, தத்துவ, அரசியல், சமூக ஆராய்ச்சிகளுக்கான வழிகள் பல உண்டு. இலக்கண அறிவு இல்லாதவர் தற்காலப் பேச்சு வழக்கே கவிதை வெளியீட்டிற்கு ஏற்றதாகக் கருதுபவர். இதன் எளிமை கவிதையைச் சமகாலத்தினர் எல்லோரும் புரிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது. பேச்சு வழக்கு பிற்கால மொழியிலாளருக்கு உதவி செய்யும். கலாச்சார மதிப்பீட்டிற்கும் உரிய பார்வைக்கும் சொற்செட்டுக்கும் மேற்பட்ட ஒன்றுதான் கவிதை. மக்களிடமிருந்து வரும் கவிதை மீண்டும் மக்களிடம் செல்லும்போது ஒவ்வொரு கவிஞனுக்கும் உள்ள ஒரு 'தொனி'யுடன் செல்கிறது. அது எவ்வளவு தூரம் ஆழமானதாகவும் வலுவுள்ளதாகவும் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது மக்களைத் தாக்கும். பிரசுர சாதனங்களும் சமூகத்தில் உள்ள பொருளாதார வேறுபாடுகளும்தான் கவிதை சிலரிடையே மட்டும் புழங்குவதற்கு காரணமாயிருக்கின்றன. கொள்கைகளைப் பற்றிய அதிகப்படிப்பு இவருக்கு இல்லாததால் வாழ்வில் சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே கவிதை எழுதுகிறார். ஒவ்வொரு கவிதையும் புதிதாகப் பிறக்கும் பச்சைக் குழந்தையைப் போல. அதனால் கவிதைகளைக் குத்திக் கிளறிப் பார்க்காமல் ஆர்வத்தோடு நாசூக்காக ஏன் எப்படி எவ்வாறு என்று கேள்விகளுடன் அணுகி வந்தால் அதன் முழு வர்ணங்களும் தெரிய வரும். படிப்பவனின் அறிவுநிலைக்கேற்ப கவிஞனுக்கே தெரியாத சில அர்த்தங்கள் பிடிபடும்*. கவிதையில் உள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று. இலக்கிய தொடர்பின் காரணமாகவே வாழ்க்கை வாழத்தகுதியுள்ளதாக நினைக்கும் இவர் இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்றும் அஞ்சுகிறார்.
ஆச்சரியம் நிறைந்த குழந்தையின் பார்வை வாயிலாகத் தெரியும் மனநிலை தொடர்ந்து இருக்க விருப்பபடுகிறார். ஒரு கணத்தில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள வெவ்வேறு மனிதர்களின் செயல்களை நினைக்கும்போது உண்டாகும் பிரமிப்பு, கரையில் நின்றபடி நீலக்கடலை வானம் தொடும் இடம்வரை பார்ப்பதில் உள்ள இன்பம் தன்னைமறக்கச் செய்யும். ஒவ்வொரு மலையையும் அதன் உச்சியை அடைய நினைக்கும் மனம் ஆகியவற்றில் மனம் இழக்கிறார். உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர். கோவிலுக்கு அதிகம் வழிபடப் போகாதவர். மனித சக்திக்கு மீறிய ஒன்று மனிதனிடம்தான் உள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். கவிதைகளின் வெற்றி தோல்வி பற்றிய விவாதம் அபத்தம் என்று நினைக்கிறார். தன்னிலிருந்து தானே விடுபடும்போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான். இவை கவிதைகள் என்றால் கவிதைகள்தான். கவிதைகள் இல்லை என்றால் என்ன செய்வது? ஆத்மாநாமைப் பொறுத்தவரை இந்த வரையறையில்தான் ஆத்மாநாமுக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு தெரிகிறது. இருவருக்கு இடையே உள்ள மெல்லிய கண்ணாடித் திரையை உடைக்கப் பார்க்கும்போது அவை தடித்த இரும்புச் சுவர்களாகி விடுகின்றன. இது அறிவு என்றால் இது கவிதை.
***
நன்றி : பிரம்மராஜன் , காலச்சுவடு பதிப்பகம்
No comments:
Post a Comment