Sunday, February 10, 2013

புலவர் மாமா பட்டாசு வறுத்த கதை

எனக்கென்னமோ ஹனீபாக்காதான் புலவர்மாமாவாக வருகிறார் என்று படுகிறது... என்று கெளப்பினேன் , டவுட்ட. ’டே  தம்பி , சத்தியமா புலவர் மாமாட கூத்துத்தான்டா இதெல்லாம். அடுத்த கதை புலவர் மாமா நாய்க்குத் தயிரும் சோறும் ஊட்டிய கதை’ என்று பதில் தந்திருக்கிறார் காக்கா. தமாஷ் செய்வதெல்லாம் சரி..  ஸ்கைப்-ல் என்னுடன் உரையாட ஆசைப்பட்டவரிடம் ‘அதெல்லாம் முடியாது.. தினம் அஸ்மாவ பார்த்து ஓடுவதோடு சரி.. நேரில்தான் இந்த வருடத்திற்குள் உங்களை பார்க்கப்போகிறேனே..’ என்று எழுதியதற்கு,  ’உனக்காக உசிரைப் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்’ என்று.பதில் தந்து அழவும் வைக்கிறார்....   டாக்டர் முருகானந்தம் அவர்களின் புகழுரையை இங்கே பாருங்கள்.. எவ்வளவு பெரியவர் நம்ம காக்கா!  இவர் என் மேல் வைத்திருக்கும் பிரியத்தைப் பார்த்தால் நல்லவனாக மாறினாலும் மாறிவிடுவேன் போலிருக்கிறது! - ஆபிதீன்
***

புலவர் மாமா பட்டாசு வறுத்த கதை

அப்பொழுது புலவர் மாமாவுக்கு ஐம்பது வயதிருக்கும். ஆனை வணங்கி எனுமிடத்தில் ஐந்து ஏக்கர் மேட்டு நிலத்தில் மாமா சேனைப்பயிர் செய்தார். சோளன், குரக்கன், இறுங்கு, நிலக்கடலை என்று சேனைப்பயிர் செழித்துக் கிடந்தது. குடலைப் பருவத்தில் பன்றிகள், ஆனைகளின் தொல்லை மாமாவைக் கலங்கடித்தது. இரவு பகல் விழித்திருந்து காவல் காத்தார். மாமாவுக்குத் துணையாக எலிக்கு உணவாக வாளை வழங்கிய மாமாவின் தவப்புதல்வன் முகம்மது இஸ்மாயிலும் துணைக்கு நின்றான்.

மாமாவினதும் மகனினதும் கூக்குரலுக்கு பன்றியும் ஆனையும் மசியவில்லை. ஊருக்கு வந்த மாமா நான்கு பெட்டி சீனப் பட்டாசுகளுடன் வாடிக்குச் சென்றார். வரும் வழியில் பட்டாசுப் பெட்டிகள் மழையில் நனைந்து விட்டன. அன்றிரவு ஆனை, பன்றிகள் வரும் திக்கில் பட்டாசைக் கொழுத்திக் கொழுத்தி வீச ஒரு பட்டாசும் வெடிக்காமல் அடம் பிடித்தது. அந்த நேரம் பார்த்து மாமாவின் ஞானம் ஏடா கூடமாக செயல் படத் தொடங்கியது. மகனை அழைத்து, ரொட்டி சுடும் மண்ணோட்டை அடுப்பில் வைத்து நெருப்பு மூட்டச் சொன்னார். பட்டாசுப் பெட்டியை ஓட்டில் கொட்டி அகப்பையை எடுத்து வறுக்கத் தொடங்கினார். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டாசு ஓட்டில் கிடந்து வெடிக்கத் தொடங்கியது. மாமாவும் மகனும் அலறியடித்துக் கொண்டு சோளக்காட்டுக்குள் ஓடி விட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின் வந்தால், பட்டாசு அனைத்தும் பற்றி, வாடியில் கிடந்த பொருட்களும் பற்றி எல்லாமே புகைக் காடாகவும் கரிக்காடாகவும் கிடந்தன.

மாமாவின் ஞானத்தை என்னவென்பது?

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா | மின்னஞ்சல் : slmhanifa22@gmail.com

***

முந்தைய புலவர்மாமா கதைகள் :

குழந்தப் பிள்ள போல..!

வண்டிச் சில்லுக்குக் காத்துப் பத்தாது!

புலவர் மாமா கதைகள்

No comments:

Post a Comment