Monday, February 25, 2013

நாய்ப் புணையலுக்குச் சோறூட்டிய கதை


வெளில தெரியிற வாலப்பழம் இவ்ளோ பெருசுன்னா உள்ள இரிக்கிறது எவ்ளோ பெருசா இரிக்கும்? கடைக்கி உள்ளே இரிக்கிறத சொல்றேன் காக்கா...! - ஆபிதீன்


***

அன்புள்ள ஆபிதீன்,

இங்கே புலவர் மாமாவின் அருமை மகனாரின் படத்தை அனுப்புகிறேன். எண்பத்து ஏழு வயதில் வபாத்தாப்போன புலவர் மாமாவுக்கு ஏழு பிள்ளைகள், நாலு பெண்களும் மூன்று ஆண்களும். புலவர் மாமா போல் ஞானவான்கள் ரொம்பக் குறைவுதான். புலவர் மாமாவின் முழுப்பெயர் அஹமது லெப்பை மரைகார் இப்ரா லெப்பை. இங்கே புலவர் மாமாவின் மகன் உமர் லெப்பை இப்பொழுது வாழைப்பழ வியாபாரியாக இருக்கிறார். ஒரு காலத்தில் வாப்பாவுக்கு நிகராக பகிடி விட்டவர். இப்பொழுது வாயே திறக்க மாட்டேன் என்கிறான். அன்று வாப்பாவின் வாளை எலிக்குச் சாப்பிடக் கொடுத்த அருமை மைந்தன் உமர் லெப்பை இன்று வாழைப்பழத்தை எலிக்குச் சாப்பிடக் கொடுக்கிறார்.

எஸ்.எல்.எம். ஹனிபா

***

நாய்ப் புணையலுக்குச் சோறூட்டிய கதை

மாமா சோளக்காட்டுச் சேனைக்கு காவலுக்காக இரண்டு கடுவன் நாய்க்குட்டிகளைப் பிடித்து வளர்த்தார். நாய்க்குட்டிகள் இரண்டு மாதப் பருவமடைந்ததும் மாமாவின் வாடிக்குப் பக்கத்திலிருந்த குறவர் இனத்தைச் சேர்ந்தவரைக் கொண்டு நாய்க்குட்டிகளின் விதைகளை அகற்றி விட்டார். (அந்தக் காலத்தில் இளவரசிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆண்களுக்கு நடந்த அதே கதிதான்)

இந்த நாய்கள் இரண்டுக்கும் எவ்வளவு சாப்பாடு கொடுத்தாலும் எப்பொழுதும் மாமாவைப் பார்த்து அழுது கொண்டே கிடக்குமாம். இதுகளின் பசியைப் போக்க வேண்டுமென்று நினைத்த மாமா, ஒரு நாள், பழைய சோற்றுடன் நன்றாகத் தயிரையும் குழைத்து ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு நாய்களை அவிழ்த்துக் கொண்டு அவருடைய வாடியின் மேற்குப் புறமாக இருந்த ஆற்றங்கரைக்குச் சென்றார்.

ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு சிறிய பானையளவு குழியை தோண்டி நீர் மெதுவாக ஊறி வரும் வேளையில் சோற்று வாளியைக் கொட்டினார். நீர் ஊறிக் கொண்டே இருந்தது. நாய்கள் இரண்டும் தயிரும் சோறும் கலந்த குழையலை நீருடன் சேர்த்துக் குடித்துக் கொண்டேயிருந்தன. தயிர், சோறு, ஊறும் நீர் என்று வயிறு முட்ட வயிறு முட்ட அன்றெல்லாம் எழுந்து நின்றும் படுத்துக் கிடந்தும் நாய்கள் குடித்துக் கொண்டேயிருந்தன.

இதிலுள்ள சங்கதியென்னவென்றால், ஊறும் நீரில் தயிரும் மெதுவாக மெதுவாக மணத்துக் கொண்டே இருந்ததுதான். அந்த மணத்தின் மயக்கத்தில் நாய்கள் குடித்து குடித்துக் களைத்துப் போனதுதான் கண்ட பலன். நாய்க்கு மாமாவால் சாப்பாடு கொடுக்க முடியவில்லை. நாய்தான் மாமாவை ஏமாற்றிப் போட்டது.

***


நன்றி : பலாப்பழத்துக்கு...

No comments:

Post a Comment