Thursday, August 15, 2013

பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1 - தாஜ்

எனக்கும்தான். ஃபேஸ்புக்கில் சின்னதொரு தொடரை ஆரம்பித்திருக்கிற இந்த சீர்காழி பைத்தியத்தை ரொம்பவே பிடிக்கும்! மறுமொழிகளை அவசியம் படியுங்கள். முக்கியமாக சமீம் ஜாவேதின் மறுமொழியை. கண் கலங்கிவிடும்.  துபாய் பைத்தியம்
***

 பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1 

-தாஜ்

பைத்தியம் என்று நான் முதலில் கண்டது
ஒரு பெண் பைத்தியத்தைத்தான்.
பெண் பைத்தியம் என்று தீர்மானமாக
கூறிவிட முடியாது.
அம்மா பைத்தியம்
அல்லது
பைத்தியக்கார அம்மா என்பதுவே
சரியாக இருக்கும்.

என் ஆரம்ப தொடக்கப் பள்ளிக் கூடம்
வீட்டில் இருந்து
ஒரு மைல் தூர அளவில் இருந்தது.

எங்கள் மகல்லாவில் இருந்த
சின்னக் கடைத் தெருவை தாண்டி
தாடாளம் பெருமாள் கோவில்
தேர் ஓரமாய்
கொள்ளிடம் முக்குட்டு
பெரிய கடை வீதி
மணிக்கூண்டை கடந்துப் போனால்...
தேர் மேற்கு வீதி மையத்தில்
பள்ளிக்கூடம்.

காலையில் போவதும்
மத்திய உணக்கு வருவதும்
உணவு முடித்து போவதும்
மாலை வீடு திரும்புவதெல்லாம்
நடந்தேதான்!

இப்படி போகவும் வரவுமான நேரத்தில்
தாடளான் பெருமாள் கோவில் தேரடிக்கு
எதிர்புறம் உள்ள பெருமாள் கோவில் தெரு அருகில்
அந்தப் பைத்தியக்கார அம்மாவை
அடிக்கடி பார்க்க நேரும்.
பகலில் எந்த நேரமும்
தானே பேசியப்படி
சதா இப்படியும் அப்படியும்
பெருமாள் கோவில் தெருவுக்கும்
மெயின் ரோட்டிற்கும் என்று
விரைவாய் அலையும்!
அந்த அம்மாவை சந்திக்காமல்
அந்த இடத்தை நான் கடந்தது இல்லை.

அதன் உறவினர்கள்
பெருமாள் கோவில் தெருவில் இருப்பதாகவும்
அந்த அம்மா வாழ்ந்த வீடும் கூட
அதே தெருவில் இருப்பதாகவும்
அந்த அம்மாவுக்கு கிறுக்குப் பிடித்துவிட்டது என்று
புருஷன்காரனே அடித்து துரத்திவிட்டுவிட்டு
வேறொருத்தியோடு குடும்பம் நடத்துவதாகவும்
அந்த தெருவாசிகளான
என் பள்ளிக்கூட நண்பர்கள் சிலர்
சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அந்த அம்மாவின்
புருஷன் பெயர் கூட
ராஜகோபாலன் என்பார்கள்.
எனக்கு அவர் யார்யென்றெல்லாம் தெரியாது.

புருஷன் சேர்த்துக் கொண்ட
சக்களத்தியை கண்டமேனிக்கு திட்டியப்படிதான்
அந்தப் பைத்தியக்கார அம்மாவும்
அலைப்பாய அலைந்து திரியும்.
வெயில் காலமென்றால் சொல்லவே வேண்டாம்.

பைத்தியக்கார அம்மாவைப் பார்த்து
என்னையொத்த சிறுவர்கள்
'ராஜகோபாலன்' என்று கூறி விட்டு
வேகமாக ஓடுவார்கள்.
சிறுவர்களுக்கு
தினமும் சளிக்காத விளையாட்டு அது.

புருஷனின் பெயரை கேட்ட மாத்திரத்தில்
அந்தப் பைத்தியக்கார அம்மா
சில நேரம் வெட்கம் தாளாமல்
நாணிக் கோணி சிரிக்கும்.
சில நேரங்களில் முறைத்து சிடுக்கவும் செய்யும்.

சில நேரங்களிலோ
தன் புருஷன் பெயரை
எப்படி மரியாதை இல்லாமல்
இந்தப் பொடியர்கள் சொல்லலாம் என்கிறபடிக்கு
விரட்டிக் கொண்டு அடிக்கவும் வரும்.
பொடியன்கள் ஓட்டமாய் ஓடவும்
தாடாளன் கோவில் எல்லைவரைத்தான்
அந்த அம்மா விரட்டும்.
சற்றைய நாழிகெல்லாம்,
தனக்கான
தனது தெருவருகேயே திரும்பியும் விடும்.

ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கூடத்தில் இருந்து
ஹைஸ்கூலில் எட்டாவது போகும் வரை
நாள் தப்பாமல் கண்ட
அதே இடத்தில் வைத்து
'பைத்தியத்தை சுமந்து திரிந்த'
அந்த அம்மாவை கண்டதாக ஞாபகம்...
பசுமை.
பிறகு....? அந்த அம்மா....????

அந்த அம்மா பெற்ற பிள்ளையொருவன்
படித்து வளர்ந்து
பட்டணத்துக்கு வேலைக்கு போன நேரம்,
தன் தாயையும் அழைத்துப் போய்
உடன் வைத்துக் கொண்டதாக
நம்பகமான ஒரு தகவல்.
மனதுக்கும்
நிம்மதியாக இருந்தது அப்போது.

***

மறுமொழிகள் :

Saleemadilsath Kajakaja பைத்தியம் என்ற வரிகளை படிக்கும் போதே மனதளவில் கலங்குகிறது. மனநிலை சரியில்லாதவர்.. எங்கள் ஊரில் முடுக்குதெருவில் இப்படி மனநலம் சரியில்லாத ஒரு அம்மா இன்றும் இருந்தாங்க. எக்கச்சக்க சொத்து சொந்த உறவுகளே ஏமாற்றி இப்படி இந்தநிலை.. அவங்களுக்கு பாத்ரூம் அறைமட்டுமே தெருவில் கடக்கும்போதே தெரியும் ஒரு பழைய தட்டு, தண்ணீர் செம்பு. மனசு கலங்கி கண்ணீரே வந்துவிடும். அவங்க பக்கதில் சோரு குப்பை தொட்டி போல இரைஞ்சிகிடக்கும் .. ஊட்டிவிட்டு பாதுகாக்க ஆளில்லை. வேடிக்கைபார்த்துவிட்டு வேதனைபட்டு என்வீடு வருவதை தவிற வேறு வழி எனக்கு தெரியலை.. அருகில் சென்றாலே அடித்துவிடுவார்களோ என்ற பயம்..

T.n. Gopalan தாஜ் எனக்கும் பைத்தியக்காரர்கள் பலர் மீது ஈர்ப்பிருந்ததுண்டு...ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கிய ஒரு முதியவர் அவ்வ்ப்போது தன் பிள்ளைகளுடன் சில நாட்கள் இருந்துவிட்டுப் போவார் பின்னர் தெருவில் அலைவார். என் பெற்றோரின் எச்சரிக்க்கைகளை மீறி ஷெல்லி ஷேக்ஸ்பியர் என்று ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும் அவருடன் பேச்சு கொடுப்பேன்...அதிகம் பேசாத மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் நண்பன் ஒருவனின் உறவினர் அவரை தெருவில் எங்கு பார்த்தாலும் நின்று சில வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் போவேன்...இன்னும் ஒருவரிடம் கொஞ்சம் உரிமை எடுத்து ஏதோ அறிவுரை சொன்னதில் கோபம் வந்து அந்த நபர் என்னுடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்..அதன் பிறகு சில மாதங்களிலோ என்னவோ இறந்துவிட்டார்...அவர்களின் மன நிலை குறித்து என் மண்டையை உடைத்துக்கொள்வேன் ஒன்றும் விடை கிடைக்காது...ஆனால் அத்தகைய மனிதர்களை ஏளனமி செய்யும் எவரைக்கண்டாலும், சிறுவர்களாயினும் சரி எனக்குக் கடுங்க்கோபம் வரும்...எளியோரை இகழ்வதுதானே நம் சமுதாயம்

Taj Deen ஐய்யா நீங்கள், நிறைய எழுத வேண்டிய / கட்டாயம் எழுத வேண்டிய / சங்கதிகளை கொஞ்சம் போல தொட்டுக் காமித்துவிட்டு போய்விட்டீர்கள். நான் எழுத இருக்கிற தொடர்ச்சியில் அதுவும் உண்டு. எனக்குத் தெரிந்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர், நீங்கள் குறிப்பிடும் ரகம்தான். அதுமாதிரியே காப்பகத்திற்கு போகாமல் நான் சார்ந்த நவீன இலக்கிய வட்டத்தில் கூட நபர்கள் உண்டு. ஒருவன் நிறையவே பேசினால்.. நாம் கண்னை மூடிக்கொண்டு 'டிக்' செய்துவிடலாம். அவர்களேதான்.

Taj Deen சகோதரி சலீமாதில்ஷாத், நீங்கள் குறிப்பிட்டிருப்பது அத்தனையும் உண்மை. ஊருக்கு ஊர் அவர்களின் இருப்பு உண்டு. மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் கவனித்து கனிவு கொண்டிருக்கின்றீர்களே அதுதான் இங்கே பெரிசு. இந்த மாதிரியான அவதானிப்புதான் நம்மை நமக்கு காட்டித்தரும். வாழ்த்துக்கள்.

Taj Deen சகோதரி சலீமாதில்ஷாத், உங்களது இந்தக் கருத்துப் பதிவை, T.n.Gopalan, தனதுப் பதிவில்... அதாவது என் பதிவை ஷேர் செது அதில் உங்களது கருத்தை முக்கியம்தந்துப் பதிந்திருக்கிறார். ஐயாவுக்கு நன்றி சொல்லுங்கள்.

Saleemadilsath Kajakaja எளியோரை இகழ்வது தானே நம் சமுதாயம்.. உண்மைதான் அண்ணா... நன்றிகள்

Taj Deen அறியாமல் செய்யும் அவர்களது தவறுகளை புரிந்துக் கொள்வோம். மன்னிப்போம். சரிதானே சகோதரி.

Sameem Javeed எங்கள் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்.
மகன் பெரிய டீக்கடை வைத்திருந்தார்.
பெரியவரோ மகன் கடைக்கு எதிரில் நின்று
வருவோர் போவோரிடம் எல்லாம்

கை நீட்டி காசு கேட்பார்.

மகனுக்கு இது அவமானமாக இருக்கும்.
தந்தையைத் திட்டுவார்.
அடிக்கக்கூடப் போயிருக்கிறார்.

நான் அப்போது சின்ன பையன். ஓரமாக நின்று
அந்தப் பெரியவரை நினைத்து
அழுதுகொண்டிருப்பேன்.
இப்போதும்கூட தனிமையில் அழுகிறேன்.
அந்தப் பெரியவர் என் தந்தைதான்
 
 

Taj Deen சமீம்..., எனக்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை. வாழ்க்கை இப்படித்தான் கதளி ஆடும். உங்களின் பதிவுக்கும், நிஜத்தின் பக்கம் நின்று தயங்காமல் சொன்னதற்கும் என் பிரியம் கொண்ட மகத்தான நன்றி.

Saleemadilsath Kajakaja சமீம்.. சகோ என்ன சொல்வதென்றே தெரியல. hat's off- அதுவும் ஒருவகை மனநோய் தான் சகோ. எங்கள் பெரியப்பா உறவுமுறை. அவரும் இப்படிதான் 4மகன்கள் நல்ல வசதி வீடுவாசல் என. ஆனாலும் அவர் மதரஸாவில் பலரிடம் கையேந்திபிச்சை கேட்பார் பிள்ளைகள் பேத்தி பேரன்கள் சொல்லிபார்த்து கேக்கலை, தொழுதுவிட்டு வரும் மகன்களிடமே பிச்சைகேப்பார். அவர்போக்கில் விட்டு விட்டனர். பிறரிடம் வாங்கும் பணத்தைகொண்டு தினம் டாக்டரிடம் ஊசி போடசொல்லி தொல்லைகொடுப்பதே அவர்வாடிக்கை. ஒவ்வொரு டாக்டரிடம் ஒரு ஒரு வியாதி சொல்லி பணத்தை கொடுப்பார். உங்களுக்கு ஒன்றுமில்லை நான் ஊசி போடமாட்டேன் என யாராவது சொல்லிவிட்டால் ஒப்பாரி வச்சி அழுவார், அங்கே கூட்டம் கூடி விடும். இதற்கு பயந்தே நர்ஸ் அவருக்கு சத்து ஊசி போட்டு பணத்தை வாங்கி கொள்ளும்.இப்ப அவர் உயிரோடு இல்லை, 2வருஷமாகுது, உங்க போஸ்ட் பார்த்தும் அவர் நினைப்பு வந்துவிட்டது,

***

நன்றி : தாஜ்

2 comments:

  1. அப்போது நான் சின்னப் பிள்ளை எலிமெண்டரி ஸ்கூல் வயசு, ஒருவர் சோறு கேட்டு வருவார், அவரை கப்பக்காடை என்று அழைப்பார்கள். அசல் பெயர் யாருக்கும் தெரியாது. சரியாக பகல் 12 மணிக்கு வருவார் அம்மா இல்லேன்னா தங்கச்சி "சோறு சோறு" என்பார். கொடுத்தால் வாங்கிக்கொள்வார். "இல்லே"ன்னு சொன்னா "கறி கறி" என்பார். "இல்லேன்னா போய்விடுவார்.

    கையில் பாத்திரமெல்லாம் கிடையாது. கர்சிப்பில்தான் சோறு கறி எல்லாத்தையும் வாங்கிக்கொள்வார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். அவர் பின்னனி என்ன யாருக்கும் தெரியாது. நான் வெளியூரில் இருந்தபோது இறந்துட்டார். அவரை பைத்தியம் என்று சொல்வதா? பித்தன் என்று சொல்வதா? தெரியவில்லை.

    எம் ஏ படித்த பெண். என்னை ஒத்த வயது கன்னியாகுமரி பக்கம் ஊர். எங்களூரில் அடைக்கலமாகியது. கொஞ்ச நாள் முதலியார் தெருவில் சுற்றிக்கொண்டிருந்தது, பின்பு எதிர்வீட்டில் (என் நண்பர் வீடு) அடைக்கலமாகியது.
    எதேதோ பேசும். ஒருமுறை துபையிலிருந்து ஊர் சென்றிருந்தபோது அதை காணோம் விசாரித்ததில் செத்துப்போய்விட்டதாக சொன்னார்கள்.

    ஓவ்வொரு பைத்தியத்திற்கு பின்னால் ஒவ்வொரு ஆழமான அல்லது சோகமான கதை இருக்கும். எங்கள் ஹஜ்ரத் சொல்வார்கள் "சல்புன் நிஃமத்" யாருக்கும் வரக்கூடாது. சல்புன் நிஃமத் என்றால் கொடுக்கப்பட்ட அருள் பறிக்கப்படுவது. ஆம் எந்த செல்வம் பறிக்கப்பாட்டாலும் மீட்டுவிடலாம். ஆனால் அறிவு என்ற செல்வம் பறிக்கப்படுமேயானால் அதனை மீட்பது இயலாத காறியம்.

    ReplyDelete
  2. பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 2
    https://www.facebook.com/tajdeen.sa/posts/528905593845855

    ReplyDelete