இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள். 'காக்கைச் சிறகினிலே’ இதழிலிருந்து... (ஜூன்2013) இன்குலாப் அவர்களின் வாழ்க்கைத் தடத்தைப் பதிவிடுகிறேன், நன்றியுடன்.. - ஆபிதீன்
***
வெளிநடப்புச் செய்தவர்
..... ..... ......
வைத்தியர் சீனிமுகமது ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டவர். அவரைப் பற்றி நான் நினைவு கூறும்போதெல்லாம் அவர் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்குச் செல்லும் கோலந்தான் நினைவுக்கு வரும். ஒரு வேளை தொழுகையை விட்டவரல்லர். அந்தத் தொழுகைக்கெல்லாம் கைவைத்த பனியன், வெள்ளை லுங்கியுடன் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளி வாசலுக்கே சென்று திரும்புவார். கோடை கொளுத்தும் நாட்களில் பள்ளிவாசலை ஒட்டியுள்ள சேகப்பா தர்காவிலே பகல் (லுஹர்) தொழுகையை முடித்துவிட்டு ஒரு தூக்கமும் போட்டுவிட்டு மதியம் வீட்டுக்குச் சாப்பிட வருவார். காலையிலும் மாலையிலும் அவர் நடத்தி வந்த சித்த மருத்துவமனைக்கு (பஹீறா ஹோம் ஆஸ்பத்திரி என்று பெயர் வைத்திருந்தார்) சென்று விடுவார். சில சமயங்களில் நள்ளிரவுகளில் நான் விழித்துப் பார்க்கும்போது, சித்தர்கள் வைத்திருக்கும் கைத்தடி ஒன்றில் கை ஊன்றியபடி ‘தசுவ’ மணி மாலையை உருட்டிக் கொண்டு தியான நிலையில் இருப்பார். தர்கா தைக்காவிலே படுக்கும்போதும் ஓய்ந்திருக்கும் பிறநேரங்களிலும் படிப்பதற்கு ஏதாவது ஒரு நூல் அவர் தலையணை ஓரத்திலோ மருத்துவமனை மேசையிலோ இருக்கும். அது மௌலானா ரூமியின் மஸ்னவி ஷரிபின் தமிழாக்கமாக இருக்கலாம்; யோகி சுத்தானந்த பாரதியின் மொழிப்பெயர்ப்பு நூலான ‘இளிச்சவாயானகவும்’ இருக்கலாம். இதழ்கள் என்றால் தாவூத்பாஷாவின் ‘தாருல் இஸ்லாமாக’ இருக்கலாம். அல்லது கல்கி வார இதழாகவும் இருக்கலாம்.
வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் போகும்போது அரைக்கைப் பனியனுக்கு மேல் வெள்ளைக் கமிஸ் அணிந்துகொள்வார்; லுங்கிக்குப் பதிலாக பைஜாமா போட்டுக்கொள்வார். பிடரிவரை தொங்கும் தலைமுடியை மக்கத்துத் தொப்பி அரைவட்டமாக மறைந்திருக்கும். அவருடைய நண்பர் அன்பளிப்பாகக் கொடுத்த மஞ்சள் நிற மக்கத்து சால்வை சட்டைக்குப் பின்புறம் முக்கோணவடிவத்தில் அமையுமாறு முன்பக்கத்தை ஜிப்பாவுக்குள் வைத்துக் கட்டி இருப்பார். ஒரு பெருநாளின் கொண்டாட்ட உணர்வு கொண்டவராகத் தோன்றுவார். அன்று மதியம் கறியும் சோறும். ஆனால் ஜும்மாத் தொழுகைக்கு நான் போகாமல் சாப்பாடு கிடையாது. ஒழுங்காக ஜூம்மாவுக்குப் போய் வருவேன்.
கடவுளை மறுக்காத எந்த மதத்தவரும் அவருக்குக் ‘காஃபிர்’ இல்லை. நாத்திகன் மட்டுமே காஃபிர்.
‘ஜூம்மா’ தொழுகை முடிந்தவுடன் பல சமயங்களில் சொற்பொழிவாற்ற தொழுகையின் முதல் வரிசைக்குச் சற்று முன் சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சலாம் சொல்லுவார். இறை நம்பிக்கையின் ஆழத்தை வலியுறுத்துவார். சூஃபி ஞானிகளின் தர்காக்களுக்க்ச் செல்வது தவறாகாது; ஆனால் பிரார்த்தனை செய்வதுதான் தவறென்பார். பில்லி, சூனியம், பேய்பிடித்தாடுவது, பேய்விரட்டுவது முதலியவற்றைக் கண்டிப்பார். கீழக்கரையில் இன்றுவரை நீடிக்கும் ‘கைக்கூலி’க் கொடுமையைக் கடுமையாகக் கண்டனம் செய்வார்.
சொன்னபடி வாழமுயன்ற மனிதர் அவர். கைம் பெண்ணாக இருந்த அம்மாவைத்தான் தம் பதின் வயதில் மணந்தார். என் தாய் தன் பதின்மூன்றாவது வயதிற்குள்ளேயே முதல் திருமணம் செய்விக்கப்பட்டு ஒரு குழந்தையைப் பெற்று அதைச் சாகவும் கொடுத்தார். என் தாயும் தந்தையும் இயல்பாக வாழ்ந்து என்னை ஒன்பதாவது பிள்ளையாகப் பெற்றனர். இசுலாமிய மார்க்கம் கைம்பெண் திருமணத்தை இயல்பான ஒரு வாழ்க்கை முறையாக்கியது. எனினும் பால்ய மணத்தைத் தடைசெய்யவில்லை. இன்றளவும் இளம்பிள்ளைத் திருமணத்தைச் சரியானது என்றுதான் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் வாதிடுகின்றனர். என் தந்தையும் இளம் பிள்ளைத் திருமணத்தை எதிர்த்துப் பேசியது இல்லை.
மற்றபடி இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் மூடத்தனங்களையும் கைக்கூலிக் கொடுமைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவந்தார். (கைக்கூலி என்பது மணமகனுக்க்கு மணமகள் வீட்டார் தரும் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள். மாப்பிளையுடைய தகுதிக்கு ஏற்ப கூடும் குறையும். பல சமயங்களில் இத்தொகை சில இலட்சங்களைத் தாண்டும்).
அன்றைய ஜூம்மாவுக்குப் பிறகு அவர் கைக்கூலிப்பிரச்சனையைப் பற்றிக் கடுமையாகச் சாடினார். ஜூம்மா முடிந்து பள்ளிவாசலிலிருந்து அவர் தெருவில் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைச் சூழப் பலர் அவர் பேசியது குறித்துக் கருத்துக் கூறியபடி வந்தனர். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு பள்ளிவாசல் இருந்தாலும் ஜூம்மா தொழுகை என்பது ஊர் கூடித் தொழுவது. அது நடுத்தெருவில் உள்ள குத்பா பள்ளிவாசலில் மட்டும்தான் நடைபெரும். அந்த பள்ளிவாசல் அழகிய வெலைப்பாடு அமைந்தது. பூ வேலைப்பாடு செய்யப்பட்ட வலிய தூண்களால் தாங்கப்படுவது. வள்ளல் சீதக்காதிதான் அந்தப் பள்ளிவாசலைக் கட்டியவர்.
அந்த நடுத்தெருவில் தான் அன்று அந்த நிகழ்ச்சி நடந்தது. தந்தையைச் சூழவந்த பலருள் என் அண்ணனும் இருந்தார். அவரை ஒட்டியபடி நான் வந்துகொண்டிருந்தேன். அப்படி நாங்கள் வந்தபோது வேற்றுத்தெருவைச் சேர்ந்த ஒருவர் என் தந்தையைப் பார்த்துத் தகாத சொற்களால் ஏதேதோ பேசினார். என்ன பேசினார் என்று என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ‘ஜூம்மா முடிந்தபின் இவற்றையெல்லாம் பேசுவதற்கு நீ யார்?’ என்பதுதான் அவர் கூச்சலிட்டதன் சாரம்சம். என் தந்தை அமைதியாக பதில் சொல்ல முயன்றார். ஒரு மருத்துவக் குடியில் பிறந்த ஒருவர் கைக்கூலிப் பழக்கத்தையெல்லாம் கண்டிக்க முன்வரலாமா? என்பதுதான் அவரின் கோபத்திற்குக் காரணம்., ‘வைத்தியத்தை ஒழுங்காகப் பாரும்’ என்று கத்தியதாக நினைவு. அங்கு வந்தவர்கள் சமாதானப்படுத்தி பிரிந்து விட்டார்கள்.
வீடு வந்த தந்தை எங்களிடம் இயல்பாகப் பேசினாலும் அந்த நிகழ்ச்சி அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது, என்னதான் சமமாகப் பழகினாலும் பிரச்சினை என்று வந்துவிட்டால் பிறந்த குடியையே இழிவுபடுத்தும் சூழல் அவர் நம்பிக்கைகளைத் தோற்கடித்தது என்று கருதுகிறேன். என் தந்தை, என் அண்ணன், நான் என்று இந்தச் சமூக இழிவை ஏதோ ஒரு வகையில் கடந்து வந்தவர்கள்தாம்.
வைத்தியம் நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி ‘சமூகப் பிரச்சனைகளில் நீ தலையிடாதே’ என்று எச்சரிப்பதாக இருந்தது. அவர் மனதில் பலவகையான சிந்தனைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன போலும். ஒருநாள் தமது சித்த மருத்துவமனையை உத்தரசோசமங்கைக்கு மாற்றப்போவதாகச் சொன்னார். சுற்றியுள்ள கிராமங்களில் அவர் மருத்துவத் திறனைப் பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள். உத்தரசோசமங்கையும் அத்தகைய கிராமங்களால் சூழப்பட்ட பகுதிதான். அதனால் அங்கு அவர் தொழில் தொடங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
திருஉத்தரசோசமங்கை மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற தலம். அப்பொழுது அந்த ஊரில் ஒரு முசுலிம் வீடு கூடக் கிடையாது. அங்கு அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோர் போய்விட்டனர். தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த என் தாத்தா ஒருவர். கை தேர்ந்த சித்த மருத்துவர். அவரும் தந்தையுடன் போய் சேர்ந்துகொண்டார். சித்த மருத்துவமனை சிறப்பாக செயல்படத் தொடங்கியது. களரி, பூக்குளம், எக்ககுடி, சிக்கல் என்று தொடங்கி முதுகுளத்தூர் வரையிலும் உள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மருத்துவமனக்கு வந்தார்கள்.
நான் கீழக்கரையில் அரசினர் அமீதியா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். மூத்த அக்காள் வீட்டில் தங்கியிருந்தேன். அக்காள் கணவரும் சித்த மருத்துவர்தான். மூத்த அக்காளைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். தொடக்க காலத்தில் எனது பிடிவாதமான பேச்சுகள் அக்காளுக்கு எரிச்சல் மூட்டும். என்னை எப்பொழுதும் கண்டித்தபடி இருப்பாள். நானும் சண்டை போடுவேன். ஆனால் மிக அருமையான பாடகி. இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். எங்கள் அண்னன் திரைப்பட மெட்டில் பாட்டுக்கள் எழுதிப் பாடச்சொல்வார். அக்காவின் இனிமையான குரலில் அந்தப் பாடல் எங்கள் வீட்டு வாசற்கூடத்தில் அரங்கேறும். அதைப் பார்த்துக்கொண்டிருந்த நானும் திரைப்பட மெட்டில் பாட்டு எழுதி பாடச் சொல்வேன். சின்னப்பயல் என்று அலட்சியப்படுத்தாமல் நான் எழுதியதையும் அழகாகப் பாடிக்காட்டிவிடுவார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் நான் தீவிரமாக பங்கேற்பது என் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. அஞ்சினார். ஒருமுறை ‘இவன் இப்படிப் போறானே’ என்று அக்காவிடம் அம்மா சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது அக்கா சொன்னது நினைவிலிருக்கிறது இன்னும்:
"இவன் உனக்குப் பொறக்கிற புள்ள இல்லை. எனக்குப் பொறக்க வேண்டியவன்.”
பள்ளி விடுமுறை நாட்களில் உத்தரசோசமங்கைக்குப் போய்வருவேன். அந்த ஊர் எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. குறிப்பாக ஊரிலுள்ள ஏரி. நாள்தோறும் நீந்தி விளையாடுவேன். அண்ணன்தான் நீச்சல் கற்றுத் தந்தார். மாலையில் அங்குள்ள இளைஞர்களுடன் எனக்கும் சிலம்பம் கற்றுத் தருவார். கோயிலைச் சுற்றிப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். அந்த ஊரில் மாடுமேய்க்கும் சிறுமி என்னைவிட மூத்தவள். எனக்குக் கோயிலை சுற்றிக் காட்டுவாள். கோயில் கோபுரத்தில் உள்ள படிகளில் ஏறி உச்சிக் கோபுரம் வரை என்னை அழைத்துச் சென்று காட்டினாள். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஏரியும் குளங்களும் வயல்வெளிகளுமாய்ப் பார்த்து வியந்து நின்றேன்.
தந்தை திருஉத்தரசோசமங்கை கோயிலிலும் இரண்டொரு முறை சித்தர் பாடல்களைப் பற்றிப் பேசினார். அன்று எனக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தளத்தில் ஒரு இசுலாமிய சித்த மருத்துவரை அழைத்துப் பேசவைத்துக் கேட்ட அம்மக்களின் பெருந்தன்மை, மதச்சகிப்புணர்வு முதலியவற்றை இன்று நினைத்துப் பார்த்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
கீழக்கரையிலிருந்து என் தந்தை வெளியேறியதன் பொருளை ,சித்தர் பாடல்கள் பற்றி கைலாசபதி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தபோதுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கட்டுரையில் கைலாசபதி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.
‘நமக்குப் பிடிக்காத சபையிலிருந்தும் நாம் எழுந்து போய்விடுவது போல நமக்குப் பிடிக்காத சமூகத்திலிருந்து ஒதுங்கி தனி வாழ்வு நடத்தினர் தாவோயிகள். நீதாம் கூறுவதுபோல அவர்கள் அவ்வாறு விலக்கிகொண்டதே ஆட்சேபத்தைத் தெரிவித்ததற்குச் சமானமாகும்’
தம் இறுதி மூச்சுள்ளவரை என் தந்தை ஆழ்ந்த மதநம்பிக்கையுள்ளவராக இருந்தார். நான் புதுமுக வகுப்பு படிக்கும்போது அவர் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அவர் இறப்பிற்கு திருஉத்தரசோசமங்கை கிராமம் முழுக்கடைப்புச் செய்து கீழக்கரையில் எங்கள் வீட்டில் குழுமிவிட்டது.
***
நன்றி : இன்குலாப், 'காக்கைச் சிறகினிலே’ இதழ் (ஜூன்2013), இதழ் தந்த நண்பர் எச். பீர்முஹம்மது. கட்டுரையை தேர்வு செய்து என்னை 'டைப்' செய்யவும் வைத்த சாதிக்கிற்கு ஸ்பெஷல் நன்றி.
சாதிக்குக்கு இன்னோரு நன்றி...
ReplyDeleteமனித வாழ்வு, சிறுமைகள் கொண்ட, இன்னும் என்னென்னவோகளும் கூடிய மகத்துவமானது. இன்றைய தினத்தில் ஒரு பெரியவரைப் பற்றி அறியவந்ததில் ஆபிதீனுக்கு நன்றி.
ReplyDeleteஇன்குலாபை கண்டு பேசி இருக்கிறேன். நியூ காலேஜில் அவர் தமிழ்ப் பிரிவில் பணியாற்றிய நேரம். நாயகம் பிறந்த நாள்தொட்டு பேச அழைக்கப் போய்யிருந்தேன். அவரை அவரது வீட்டில் (காலணி தொகுப்பு ஒன்றில் இருந்தார்) மாலை ஆறு மணிக்கு மேல் கண்டு உரையாற்றிவந்தேன். நிகழ்ச்சிக்கு அவரால் வரமுடியாமல் போனது. நான் அவரோடு பேசிய போது அவர் ஒரு கவிஞர், இஸ்லாமிய மேடைகளில் பேசக் கூடியவர் என்று மட்டும்தான் தெரியும். அவர் ஒரு முஸ்லீம் என்றோ, இடது சாரி என்றோ, அவருக்கு பரந்துப்பட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழகத்தில் உண்டென்றோ அன்றைக்கு எனக்குத் தெரியாது. அவரை கவனத்தில் வைத்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறேன். அவரது கவிதைகளைத் தவிர(இடதுசாரி கருத்துக்கள் கொண்ட பக்கா வெளிப்படையான கவிதைகள் அவை - அதாவது நான் முன்பு கணித்தவரை) மற்றப்படிக்கு... என்றைக்கும் அவர் உயர்ந்த இடதுசாரியாகவே வாழ்வதை அறிவேன்.
நண்பர் விமலாதித்த மாமல்லனின் பதிவு :
ReplyDeletehttp://www.maamallan.com/2013/08/blog-post_18.html