Saturday, March 9, 2013

காவல் வேட்டை - மேலாண்மை பொன்னுச்சாமி

குமுதம் சிறுகதை சிறப்பிதழில் (14/11/2012) வெளியானது. மஜீத், சபராளியின் பயம் வேறு, விவசாயியின் பயம் வேறு...! -  ஆபிதீன்
 
***


காவல் வேட்டை 

மேலாண்மை பொன்னுச்சாமி

முத்துச்சாமிக்கு இருட்டு என்றால்... கொஞ்சம் பயம். கொஞ்சமென்ன கொஞ்சம், நிறையவே பயப்படுவான். இருட்டில் பேய்கள் சுதந்திரமாக - மானவாரியாக - நடமாடும் என்று எப்போதோ சின்ன வயசில் கேள்விப்பட்டது. அது அப்படியே மனசின் ஆழத்தில் தழும்பாக வேரடித்து விட்டது.
 
நடுச்சாமத்தில் ஒண்ணுக்கு இருப்பதற்கு வீட்டுக்கு வெளியே வரவே குலைநடுங்குவான். பண்டம் பாத்திரங்கள் போட்டு மினுக்கி கழுவுகிற ஒரு இடத்தில் ஒண்ணுக்கு உட்கார்ந்து அடித்து விடுவான்,. ஒரு செம்புக்கு மூன்று செம்பு தண்ணீரை ஊற்றி விட்டு வருவான்.
 
மறுநாள் விடிந்தும் விடியாத வைகறைப் பொழுதில் அவனது பெண்சாதி வறுத்தெடுத்து கொட்டிவிடுவாள். கருந்தேளாக இருட்டுக்குப் பய்ந்து, ’இப்படி’ எத்தனையோ தடவைகள் வாங்கிக்கட்டியிருக்கிறான்.
 
ஊருக்குள் பேயடித்துச் செத்தவர்களைப் பற்றிய கதைகள் வண்டி வண்டியாக உண்டு. முதுகில் அஞ்சு விரல் தடயமும், கைத்தடமும் அப்படியே பதிந்திருந்ததை கண்ணால் கண்டதாக கையிலடித்துச் சத்தியம் செய்வார்கள்.
மூக்கிலும் காதிலும் ரத்தம் வழிந்து கிடக்கும், வாயிலும் வழிந்த ரத்தம் உறைந்து கிடக்கும் என்றெல்லாம் சாதிப்பார்கள்.
 
முத்துச்சாமி இருட்டுக்குப் பயப்படுவான் என்பது ஊரெல்லாம் அறிந்த ரகசியம். இதில் யாதொரு சந்தேகமுமில்லை.
 
மார்கழி பிறந்து விட்டது. வேதக் கோயிலில் அடிக்கடி ஜெபப்பாடல்கள்
முழுங்குகின்றன. பனி ஊற்றோ ஊற்று என்று ஊற்றுகிறது. எலும்பெல்லாம், பாய்ந்து பனி நடுங்க வைக்கிறது. ஆறரை மணிக்கெல்லாம் -
 
உள்வீட்டுக்குள் சமுக்காளத்தை இழுத்து மூடிப்படுத்திருக்கிறான் முத்துச்சாமி. செண்பகம் இறுகலாக உறுமினாள்.
 
“என்ன.. அதுக்குள்ளே முடக்கியாச்சா?”
 
“கூதல் கிடுகிடுன்னு நடுக்குதுலே?”
 
“கூதலுக்கு மொடங்குறவன் காடுகரை வெள்ளாமை வைக்கலாமா? கலியாணம் முடிக்கலாமா? கட்டிப்படுக்கலாமா? புள்ளே பெறலாமா? காவி கட்டிக்கிட்டு, ஓடு ஏந்திக்கிட்டு வீதி வீதியா அலைய வேண்டியதுதானே?”
 
“ஆங்காரமெடுத்துப்போய் என்னத்துக்கு இந்தப் பேய்க் கூப்பாடு போடுதே? என்ன சங்கதி?”
 
“மணக்காட்லே வெளைஞ்ச கடலை அப்படியப்படியே கெடக்குது. நாலுகால் நரிக, ரெண்டுகால் நரிக மேய்ச்சல் மேய்ஞ்சு நாசக்காடு பண்ணுது? வெளஞ்ச வெள்ளைமையை வீடு கொண்டார்ற வரைக்கும் கண்ணும் கருத்துமா காப்பாத்த வேண்டாமா? இழுத்து மூடிப்படுக்குற ஆம்பளைக்கு அந்த அறிவும் சுரணையும் வேண்டாம்?”
 
செண்பகம் ‘தஸ்ஸு புஸ்’ஸென்று இளைத்தாள். கோபத்தில் காட்டுக்கத்து கத்தினாள். வீட்டு மூலையில் கிடந்த அகத்திக் கொழைகளை அள்ளிக்கொண்டு தக்தக்தக்கென்று தரையதிர நடந்தாள். தொழுவுக்குள் நுழைந்தாள். ஆடுகளுக்கும் கிடாய்களுக்கு கயிற்றில் கட்டித் தொங்க விட்டாள். படப்பிலிருந்து உருவி வைத்திருந்த நாற்றுக் கூளத்தை அள்ளி பசு மாடுகளுக்கும், காளைமாடுகளுக்கும் பகிர்ந்து போட்டாள்.
 
பாயைவிட்டு எழுந்து திண்ணையில் உட்கார்ந்த முத்துச்சாமி முகத்தில் யோசனை தீவிரம்.
 
“மாடுகன்னுகளை - ஆடு குட்டிகளை நா பாத்துகிடுதேன். காடுகரைகளை நீங்கதான் பாத்தாகணும்.”
 
”சரிசரி.. நா..ம் போறேன்மா. பனியும் கூதலும்தாம் பயங்காட்டுது”
 
“இருட்டும் பயங்காட்டும்” அவளது உதடுகளில் ஏளனக் குறுநகை.
 
அவனது ரகசியக் கோழைத்தனத்தை குத்திக்காட்டுகிறாள். வெட்கமும் கூச்சமுமாக இருக்கிறது. “ச்சேய்” என்று வருகிறது. அவனுக்கு அவன் மேலேயே காறித்துப்பணும் போலிருக்கிறது.
 
ஊருக்கே வடக்கே மணல் நிரம்பிய செவல்காடு. ஒட்டினாற்போல் பனந்தோப்பு காவல்சுவராய் நிற்கிறது. பனந்தோப்புக்குள் மயில்களில் கூவல்காடு. பனந்தோப்புக்கு கிழக்கே ஒட்டினாற்போல் மயானக்கரை. இடுகாடு. குழிதோண்டிப் புதைக்கிற மயானம்.
 
குழிமேடுகளை நினைத்தாலே குலை பதறும். உள் புதைந்த பிரேதங்களெல்லாம் பேய்களாக வெளியே வந்து தோற்றமில்லாமல் உலாவுவதாக ஒரு பிரமை.
 
அதற்குப் பக்கத்தில்தான் முத்துச்சாமிக்கு முக்கால் குறுக்கம் மணல்காடு. நாற்சதுரமான காடு. ஆடிப்பட்டத்துக்கு மழை பெய்யவில்லை. மலட்டுக் காற்றாக மேல்காற்று புழுதியை அள்ளியிறைத்தது.
 
‘விதைக்கடலை வீட்லே. வெறும் புஞ்சயா காட்லே ஒழவு’ என்று வருத்த நினைவுகள் நெருஞ்சி முள்ளாக உறுத்துகின்றன. மழைக்கு ஏங்குகிற மயில்களாக இவனது மனக் கெக்கரிப்பு.
 
ஆவணியும் பிறந்து, தேதிகள் பத்து மாயமான பின்பு.. திடுதிப்பென்று ஒரு மழை. எப்படியோ தப்பிவிலகிவந்த ஓர் ஓட்டைமேகம் ஒழுகி விட்டது. பெரும்பாட்டமாய் ரெண்டு பாட்டம் மழை.
 
ஈர உழவு போட்டுப் புரட்டி, மறு உழவு போடும்போதே கடலையை விதைத்துவிட்டான். ஊடு பட்டங்களாக தட்டாம் பயறும், பாசிப்பயறும் ஒழுகவிட்டான், விரலிடுக்கில்.
 
அப்புறம், மழை கண்ணில் தட்டவில்லை. முளைத்து நாலு இலை விட்டுவிட்டன. மறு தண்ணீருக்கு மழை ஒன்று பெய்தால் போதும். உயிர்பிடித்து வேர்படர்ந்து செடி எழுந்துவிடும்.
 
ஆவணி பூராவும் மழை பேச்சு மூச்சில்லை. புரட்டாசியில் வரட்டாடு கூட புழுக்கை போடவில்லை. காய்ந்து உலர்கிற மாசம். கடலைச் செடிகள் முகம் செத்துவிட்டன. வாடிக்கருகுகின்றன. வேர்களில் மட்டும் துடிக்கிற உயிர்த்துளிகள்.
 
புஞ்சையை சுற்றிச் சுற்றி வந்து புலம்புகிற முத்துச்சாமி. வாடிய செடி கண்டு வாடிக் கதறுகிற சம்சாரி மனசின் சோகம்.
 
ஐப்பசியில் பெய்த மழை உசுர்த் தண்ணீர் போன்ற மழை. வாடிக் கிடந்த செடிகள் சுதாரித்து எழுந்தன. உரம்போட்ட மாதிரி மழைத் தண்ணீர்... கடலை விளைந்து விட்டது.
 
வேதக்கோயிலே பண்டிகை வைப்பாக. அது முடிஞ்ச மறுவாரம் கடலைவெட்டு ஆரம்பிச்சிரலாம். அதுவரைக்கும் காப்பாத்தியாகணும். இடுகாடு பக்கத்துலே புஞ்சை. இருட்டு மார்கழி மாசப்பனி. எப்படிச் சமாளிக்க? என்ன செய்ய? ஏது செய்ய? ஒண்ணும் செய்யாம முடங்கியிருக்கவும் முடியாது. என்ன செய்ய? எப்படிச் செய்ய?
 
முத்துச்சாமிக்குள் எலும்பு வரை துளைக்கிற பனிக் கூதலாக யோசனைகள்.
செண்பகம் செருமுகிற சத்தம் கேட்டு நிமிர்ந்தான். செண்பகம் முகத்தில் ஒரு பரிகாசத் தொனியிலான புன்முறுவல்.
 
“என்ன.. யோசனை பலமாயிருக்கு?”
 
“சும்மாதான்.”
 
“கோணக்காலு மாரியும் குருசாமியும் வருவாக. ஆடுமேய்ச்சித் திரிஞ்ச அனுபவம் உள்ளவுக... நீங்க சாக்குகளை விரிச்சு.. சாக்குகளை மூடி படுத்து ஒறங்குங்க.. அவுகரெண்டு பேரு காவலு காப்பாக.. போதுமா?”
 
ஆச்சரிய மகிழ்ச்சியாய் முகம் விரிய அவளைப் பார்த்தான். “எல்லாம் யோசிச்சு..ஏற்பாடு பண்ணி வைச்சுட்டுத்தான்.. எனக்கு இந்த பே(ய்)க்கூப்பாடா?
அரண்டு போய் முழிச்சுட்டேன் தெரியுமா?’
 
“நீங்க எதுக்குத்தான் அரண்டு போகலே..? நம்ம கலியாணம் மூஞ்ச அன்னிக்கு ராத்திரியும் அரண்டு போய்த்தானே நின்னீக..?
 
வெட்கத்தால் கோணிக்குறுகிய முகக்கோணலுடன் நெளிகிற முத்துச்சாமி “ச்சும்மா இரு செம்பு” என்று குழைந்தான். வார்த்தை வெளிவராமல் மிழற்றினான்.
 
ஊர் களைகட்டி உயிர்ப்போடு இருந்தது. ஏழு மணி ஆகியிருக்கும். கடைகண்ணிகளில் ஏவாரக் கூட்டம். மடத்துத் திண்ணையில் பேச்சுக்கூட்டம். ஒரே இரைச்சல். எட்டாகி விட்டால், தொடர்களில் உட்கார்ந்து உறைந்துவிடும் ஊர்ஜனம். ஊரே வெறிச்சோடி, கப், சிப்பென்று அமைதியாகிவிடும்.
 
ஆடுகுட்டிகளை.. மாடு கன்றுகளை அவிழ்த்துக்கொண்டு போனால்கூட, கவனிக்க.. தெருவில் ஒரு சுடுகுஞ்சு கூட இருக்காது.
 
உண்டு முடித்துவிட்டு சாக்குச்சுருட்டுடன் புறப்பட்டு விட்டான் முத்துச்சாமி. செண்பகம் ஈயச்சட்டி, கிளாஸ்கள், கருப்பட்டி தேயிலைப்பொட்டணம், காரச்சேவு, பார்சல் எல்லாம் ஒரு பையில் போட்டு நீட்டினாள்.
 
“இது என்னத்துக்கு?”
 
“அது மாரிக்கும் குருசாமிக்கும் தெரியும். நீங்க மகாராசா கணக்கா படுத்தெந்திரிச்சி வாங்க..”
 
தெருவில் இறங்கினான்.
 
“நாலுகால் நரிக ரெண்டுகால் நரிக.. மேய்ச்சல் மேய்ஞ்சு நாசக்காடு பண்ணுதுக” செண்பகம் அங்கலாய்த்தது சத்தியத்திலும் சத்தியம்.
 
இன்னும் மனிதர்களிடம் ஆதிகாலத்து வேட்டை குணம் பம்மிக்கிடக்கிறது.
தெறித்த விடலைப் பயல்கள் வாலிபப் பையல்கச்ள் வேட்டைக்கு சாமக்காட்டில் கிளம்பி விடுவார்கள். விளைந்து கிடக்கிற கடலைச் செடிகளை பாதத்தால் தடவி, இனம் கண்டு கொள்வார்கள். செடியின் தூரைச்சுற்றிலும் குதிகாலால் நாலு மிதிகள். பொதுபொதுத்த மணல் தரை நெகிழ்ந்து விடும். செடியில் தலையை வளைத்துப் பிடித்து தூக்கினால்.. அப்படி கடலைகள் தொங்கும். பறித்து வேட்டி மடிப்புக்குள் போட்டுக் கொள்வார்கள்.
 
அப்புறம்.. ஒரே உல்லாசம்தான். வேட்டை மாமிசத்தைப் பகிர்ந்து தின்கிற காட்டு ருசி. சம்சாரிக்கு அழிமானம். சண்டியர்களுக்கு வேட்டை..
 
அதனால் சாக்குச் சுருட்டுடன் திருவில் நடக்கிற போது... வழியில் போகிற வருகிறவர்களுடனெல்லாம் வம்புப் பேச்சுபேசுகிற முத்துச்சாமி.
 
“என்னப்பா.. சாக்குச் சுருட்டு? களவுக்கா, காவலுக்கா?”
 
“மணக்காடு, கடலைக்காவலுக்கு..”
 
“நீயாப்பா? நீதான் இருட்டுன்னா.. கெடந்து கழிஞ்சிருவியே..”
 
“என்ன செய்ய? பயந்தா முடியுமா? வெள்ளாமை வெளைச்சலை சிந்த விடாமல் சிதறவிடாம வீடு கொணாந்து சேக்கணும்லே?”
 
இதெல்லாம் ஒரு தந்திரம். சத்தமில்லாத பிரகடனம், நா காவலுக்குப் போறேன். நான் காவலுக்குப் போறேன், என்று சவுண்டு கொடுத்துக் கொண்டே போனால், வேட்டைக்குக் கிளம்புகிற விடலைகள் அந்தப் புஞ்சையை தவிர்த்துவிட்டு வேறிடம் பார்ப்பார்கள்.
 
ஊரின் எல்லையில் கோணக்கால் மாரியும், குருசாமியும் கூடச் சேர்ந்துகொண்டார்கள்.
 
ஊரைக் கடந்தவுடன் சுற்றி வளைத்து அமுக்கிக் கொண்ட இருட்டில் இறுகலான பிடி. முத்துச்சாமிக்குள் பயமும் பதற்றமும். குருசாமியை முன்னாடி போகச்சொல்லி, மாரியை பின்னாடி வரச்ச்சொல்லி, நடுவிலேயே நடந்த முத்துச்சாமிக்கு அந்தப் பனியிலும் வியர்த்தது அச்சவியர்வை.
 
செடிசெத்தை அசைகிற சத்தம் எழுந்தால் கூட, குடல் பதறி கூப்பாடு போடுவான்.
 
பின்னால் வருகிற மாரிக்குள் பேய் புகுந்துவிட்டால்..? முன்னால் போகிற குருசாமிக்குக்ள் பேய் இறங்கிவிட்டால்..?
 
விபரீதக் கற்பனைகள் அவனுடைய வியர்வையை ஊற்றெடுக்க வைத்தன. புஞ்சைபோனவுடன்.. நடுமையத்தில் தட்டைப்பயறுச் செடிக்கடியில் சாக்குகளை விரித்து படுத்து விட்டான்.
 
“ஏலேய் மாரி.. விடிய விடிய முழிச்சு எச்சரிக்கையா இருக்கணும்டா”
 
தூரத்தில் நரிகளின் நீளமான ஊளைச் சத்தங்கள். சிமிண்டாலைக் குழாயிலிருந்து புகைபோகிற கரிய அடையாளம். சிமிண்டாலைச் சங்குச்சத்தங்கள்.
 
முத்துச்சாமி ஒரு பாதுகாப்பு உணர்வுடன் உறங்கிவிட்டான். நன்றாக விடிந்த பிறகு...
 
இவனாகவே எழுந்தான். கொட்டாவி  விட்டு, நெட்டி முறித்துக் கொண்டான். மாரியும் குருசாமியும் ரத்தம் கோதிய கண்களில் சோர்வு பொங்க நின்றனர். வயிறு உப்பியிருந்தது. இவனைச் சுற்றிலும் அவித்து உரித்துத்தின்ற கடலைத்
தொலிகள். தட்டப்பயிறு தொலிகள், பாசிப்பயிறு தொலிகள். கடலையை பறி கொடுத்த வெற்றுவேர்களுடன் கடலைச் செடிகள்.
 
“என்னடா... இது?”
 
“விடிய விடிய முழிச்சிருக்கணும்லே? பசிக்குதுல்லே? புடுங்கி அவிச்சுச்தின்னோம். வேறு என்ன செய்ய?”
 
“எங்கடா புடுங்குனீங்க? நம்ம புஞ்சையிலேயா?”
 
“நம்ம புஞ்சையிலே புடுங்குவமா, காவலுக்கு வந்துட்டு? மத்தவுக புஞ்சைகள்லே வேட்டை நடத்துனோம்...”
 
மாரி விட்ட ஏப்பத்தில் வயிற்றின் நிறைவு தெரிந்தது.
 
“என்னடா.. காவலுக்கு வந்தமா? களவுக்கு வந்தமா?”
 
“நம்ம புஞ்சை காவலுக்கு வந்துட்டா.. வேட்டைக்குப் போகக் கூடாதுன்னு சட்டமா போட்டுக்கு?” குருசாமியின் குரலில் நியாயத்தை முன் வைக்கிற வைராக்கியம்.
 
“ஆதி மனுசங்க ரத்தத்துலே ஊறுன பழக்கம். வேட்டை.. ஒம் பொஞ்சை, எம்புஞ்சைன்னு பாத்யதைக வந்த பெறவு.. இடையிலே வந்ததுதான் இந்தக் காவலு..”
 
“புஞ்சையோ.. சொந்த மண்ணோ இல்லாத எங்களுக்கு வேட்டைதான் நெரந்தரம். புஞ்சைக்காரரான நீங்கதான் காவலு கம்புன்னு தூக்கிட்டுத் திரியணும்..” என்கிற ஆட்டுக்கார குருசாமியின் கம்மிய குரலின் சோகத்தை உணர்கிற முத்துச்சாமி நிலம் வைத்திருப்பதற்காக ஏனோ குற்ற உணர்வில் உள்ளுக்குள் குன்றினான். பசித்தவர்கள் பார்வையில் பஞ்சாமிர்தம் சாப்பிடுகிற மன உறுத்தல்.
***


 
நன்றி : மேலாண்மை பொன்னுச்சாமி , குமுதம்

1 comment:

  1. பயத்தைவிட குற்றவுணர்வால் முத்துசாமிக்கு வரும் மனஉறுத்தல்தான் பயமுறுத்துகிறது

    ReplyDelete