கவலை வேண்டாம், இணையத்தில் - ஆபிதீனையும் சேர்த்து - அங்குமிங்கும் குதிக்கும் ‘மனிதர்கள்’ பற்றிய கதை அல்ல இது (சில 'ஹாரிபிள் ஹஜ்ரத்’களுக்கு முன் வாலே முப்பது மீட்டர் இருக்கும்!). வெரியர் எல்வின் தொகுத்த 'When the world was young ’ (உலகம் குழந்தையாக இருந்தபோது' நூலில் இருக்கும் பழைய நாட்டுப்புறக் கதை இது. தமிழில் பிரிஜிட்டா ஜெயசீலன். சித்திரம் : அமினா ஜெயல். வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட்.
***
மலைவாழ் மக்கள் மனிதன் தோன்றியது குறித்துப் பல்வேறு அபிப்பிரயங்கள் கொண்டுள்ளனர். சிலர், கடவுள் தம் கைகளினால் முதல் மனிதனைக் களிமண் கொண்டு உருவாக்கினார் எனக் கூறுகிறார்கள். சிலர் ஆதிமனிதன் பெரிய முட்டையிலிருந்து வெளிவந்ததாக நம்புகிறார்கள். வேறு சிலர், பூமித்தாயின் குழந்தையாய் பூமி பிளந்து மனிதன் வெளிவந்ததாய்க் கூறுகிறார்கள். சிலர் ஒரு தேவதைக்கு மகனாகப் பிறந்தவனே ஆதி மனிதன் எனவும், இன்னும் சிலர் விலங்கிலிருந்து பிறந்தவனே ஆதி மனிதன் எனவும் சொல்கின்றனர். ஆனால் எல்லாரும் ஒத்துக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு; ஆதி மனிதன், தற்காலம் மனிதனைவிடத் தோற்றத்தில் நிறைய மாறுபட்டிருந்தான். இந்த ஒத்த கருத்தைப் பின்வரும் கதை மூலம் அறியலாம். ஒரிஸாவைச் சேர்ந்த சாரோக்கர்கள் ஆதிமனிதர்களுக்கு வால் இருந்ததாக நம்புகின்றனர்.
மனிதர்களுக்கு வால் இருந்த பழங்காலத்தில் அவர்களுடைய வால்கள் தரையைத் தொடுமளவுக்கு நீண்டிருந்தன. ஜனத்தொகை பெருகவே, விசேஷ காலங்களில், கல்யாணக் கூட்டங்களில், சாவுக் கூட்டங்களில் ஒருவருடைய வாலை மற்றவர் மிதித்தனர்; தடுக்கி விழுந்தனர். இது மிகுந்த வேடிக்கையாக இருந்தது.
ஒருமுறை கிட்டுங் எனும் கடவுள் சந்தைக்குப் போனபோது வழக்கம்போல் அங்கு ஒரே கூட்டம். நல்ல புகையிலைக்காக கடைகடையாக தேடி அலைந்தபோது யாரோ ஒருவர் வாலினால் தடுக்கிவிட, நிலைகுலைந்து விழுந்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக கல்லின் மேல் விழுந்ததால் முன்வரிசைப் பற்கள் இரண்டு கீழே விழுந்தன. சந்தை முழுதும் சிரிக்க, கிட்டுங்குக்குக் கோபம் வந்தது. இத்தனைக்கும் காரணமான வாலைப் பிடுங்கித் தூர எறிந்தார். பிற வால்கள் இதைப் பார்த்ததும் பயந்துபோய்த் தாமே உடலிலிருந்து கழட்டிக்கொண்டு ஓடின. கிட்டுங்குவின் வால் பனைமரம் ஆனது. பிறவால்கள் புற்களாகி இப்போது துடைப்பம் செய்ய பயன்படுகின்றன.
***
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி பிக்சர்ஸ் (ஷார்ஜா)
கிட்டுங் கொஞ்சம் அவசரப்பட்டுட்டார்னு நெனக்கிறேன்..
ReplyDeleteபேசாம ஒரு வரத்தைக் கொடுத்திருக்கலாம்...
யாருக்கும் எதுவும் வேணாம்னா கழட்டி வச்சிரலாம்னு...
இப்ப வளைகுடா பேச்சிலர்களுக்கு ரொம்ப ஒத்தாசையா இருந்துருக்கும்....