Thursday, March 21, 2013

குரங்குகள் பெண்கள் சென்ஷிகள்

ஆபிதின் அண்ணே,  வெரியர் எல்வின் தொகுத்த ‘உலகம் குழந்தையாக இருந்தபோது' நூலிலுள்ள பிடித்த கதை ஒன்று. செயல்களைக் காணும் சமயம் மனுசத்தனமென்பது எதுவென்பதில் சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு விசயத்தில் சந்தேகம் இல்லை. அது பெண்களுக்கு குரங்குகளின் மீது இருக்கும் காதல்.. :) . குரங்கின் வரைந்த ஓவியத்தை புத்தகத்தின் 40ம் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். - சென்ஷி
 
- நேற்று வந்த மெயில். குரங்கு கதை என்றாலே ஏன்தான் எனக்கு அனுப்புகிறாரோ என்று முனகிக்கொண்டே அமினா ஜெயல் தீட்டிய ஓவியத்தைப் பார்த்தேன். சரிதான், அச்சாக என்னைப்போலவே இருக்கிறது அந்தக் குரங்கு. கதையைப் படிப்பவர்கள் தங்கள் பின்பக்கத்தை அவசியம் - ஒருமுறையாவது-  பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் - ஆபிதீன்

***



ஆதிக் குரங்குகள்
...

கடபா எனும் இனத்தவர் பழங்காலத்தில் குரங்குகள் பழகிய விதம் பற்றிப் பல கதைகள் கூறுகின்றனர். ஒரு சாயங்காலம், மக்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, தலைப்பாகை, சட்டை அணிந்த குரங்கு ஒன்று வந்து அவர்கள் மத்தியிலிருந்த கல் ஒன்றில் அமர்ந்தது. பிடில் வாத்தியம் ஒன்றைக் கையில் கொண்டு, மிகவும் திறமையாக அதை வாசிக்க ஆரம்பித்தது. இசைத்த சங்கீதம் இனிமையாக இருக்கவே, வாசித்தது ஒரு குரங்கு என்பது யாருக்கும் தெரியாமற் போயிற்று. பெண்கள் மனமகிழ்ந்து சங்கீதத்திற்குத் தக்க நடனம் ஆடினர்.

ஒவ்வொரு இரவும் இது நடந்தது. சீக்கிரமே அனைத்துப் பெண்களும் இசைக் குரங்கிடம் மனதைப் பறி கொடுத்தனர். ஒரு பெண் ஒரு மோதிரத்தையும், ஒரு பெண் சுவையான உணவையும், மற்றொரு பெண் அரிசியிலிருந்து தயாரித்த ஒரு வகை பானத்தையும் அன்பளிப்பாக அளித்தனர்.

அங்கிருந்த இளைஞர்களுக்குப் பெண்களின் இந்தப் போக்குப் பிடிக்கவில்லை. இயற்கைதானே! அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். “யாருக்குமே இந்தப் புது இளைஞன் யார் என்றே தெரியவில்லை. எங்கிருந்து வந்தவன் இவன்? யார் இவன்?” ஓர் இரவில் ஒளிந்திருந்து அவன் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தனர். குரங்கில் வால் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். “ஆஹா, இது குரங்குதான்! வாலை கம்பு என்று தவறாக நினைத்து விட்டோம்!” என்று உண்மையைக் கண்டுபிடித்துவிட்ட ஆனந்தத்தில் களித்தனர். அந்த இரவில் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டனர். நடனத்தைத் தொடர்ந்தனர். நடனத்தை முடித்தபின் தம் வீடு திரும்பினர். குரங்கு மரத்திற்குத் திரும்பியது.
 
மறுநாள் இளைஞர்கள், குரங்கு வழக்கமாக அமரும் கல்லைச் சுற்றிலும் மரத்துண்டுகளை அடுக்கித் தீ வைத்துவிட்டனர். நன்றாகச் சுட்டதும், அந்த இடத்தைச் சுத்தமாக்கித் தீயின் அடிச்சுவடே தெரியாமல் வைத்தனர். வழக்கப்படி, பாட்டும், ஆட்டமும் தொடர்ந்தன. குரங்கும் எந்தவிதச் சந்தேகமும் எழாததால் கீழே வந்து பிடிலுடன் வழக்கமாக அமரும் அதே கல்லில் உட்கார்ந்தது. அந்தக்கல் சூடாக இருக்கவே, குரங்கின் தோல் வெந்து உரிந்தது. இளைஞர்களுக்கு ஒரே சிரிப்பு! பெண்களைக் கேலி செய்தனர். ஒரு குரங்கின் காதலைப் பெறவா பொருட்களை அன்பளிப்பாகப் பெண்கள் அளித்தனர்! நாணமுற்றனர் பெண்கள்! அன்றுமுதல் குரங்கின் வெந்துபோன பகுதி சிவப்பாகவே காட்சியளிக்கிறது.
***


 
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

2 comments:

  1. மறுபடியுமா...........?
    கருணை புரியுங்கள் தலைவா....
    தயைகூருங்கள் முனிவா.....

    தாங்கல..
    கண்ணாடியப் பாத்து தலசீவ முடியல...
    உக்காந்தா எரிறமாரி இருக்கு....

    ReplyDelete
  2. இரண்டாவது குரங்கு சொல்லிக் கொள்வது...
    அந்தச் சூடு
    எனக்கும் என்றானது.
    மனிதர்கள் குதூகளிக்க
    இசையாய் வாசித்தும்தான் என்னச் செய்ய?
    -தாஜ்

    ReplyDelete